kaakasaaras

காகசாரஸ்

ராஜிக்கு இந்த நாள் மிகவும் கடினமாகத் தொடங்குகிறது. முதலில், ஒரு காகம் அவளது பஜ்ஜியை விழுங்கி விடுகிறது. பிறகு, அது அவளது சிறந்த நண்பனான சலீமை சாப்பிட முயற்சி செய்கிறது! பின்னர், அதைவிட மோசமாக ஒன்று நடக்கிறது, நிறைவாக, எல்லாம் நன்மையில் முடிகிறது.

- Praba Ram,Sheela Preuitt

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ராஜி ஒரு மரத்தின் கீழே நிம்மதியாக உட்கார்ந்து, பஜ்ஜியைத் தின்றபடி புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தாள். அப்போது, ஒரு காகம் அவளருகே நடந்து வந்தது.

"ஹாய், காக்கா!" என்றாள் ராஜி.

பஜ்ஜியைக் கடிக்க ராஜி வாயைத் திறந்தாள்.

அப்போது, காகம் அந்த

பஜ்ஜியை அவளிடமிருந்து பறித்துக்கொண்டு,

பறந்துவிட்டது.

ராஜி சட்டென்று எழுந்தாள். சுற்றுச் சுவரைத் தாண்டிக் குதித்து சாலையில் ஓடத் தொடங்கினாள்.

"உணவைத் திருடும் உதவாக்கரையான

முட்டாள் காக்காவே! என் பஜ்ஜியைக் கொடு!" என்று ராஜி கத்தினாள்.

காகம் மெதுவாகப் பறந்தது.

அதன் உடல் பெரிதாகவும் கனமாகவும் ஆகத் தொடங்கியது.

அதன் இறக்கைகள் சிறியதாகத்  தொடங்கின.

ஆனால், ராஜி பயப்படவில்லை,

"உன்னை விரைவில் பிடித்து விடுவேன் பார்!" என்றாள்.

அப்போது, சலீம் சாலையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வந்தான்.

சோர்வான காகம் தொப் என்று சலீம் மீதும் அவனுடைய சைக்கிள் மீதும் விழுந்தது: படால்!

ராஜி அவர்களை நோக்கி   ஓடினாள்.

சலீம் தனது சைக்கிளுடன் தரையில் விழுந்திருந்தான். அவனது தலையில் ஒரு வித்தியாசமான உயிரினம், இறக்கையை விரித்து அடித்துக் கொண்டிருந்தது. அது பெரிதாகவும் வலுவாகவும் தென்பட்டது. அதன் வாயில் பற்கள் இருந்தன. அது சலீமைக் கடித்தது.

நறுக்!

"ஆ! அய்யோ!" சலீம் கத்தினான். "உன்னுடைய காக்கா என்னை விழுங்கப்போகிறது!"

"அது என் காக்கா இல்லை," ராஜி கூறினாள்.

"உண்மையில், அது ஒரு காக்காவே இல்லை."

அவர்கள் அந்த காகம்-அல்லாத உயிரினத்தை உற்றுப்பார்த்தார்கள்.

"நீ  சொல்வது சரிதான். அது ஒரு டைனோசர்!" சலீம் அலறினான்.

காக-டைனோசர் இறக்கைகளைப் பரப்பிக்கொண்டு கடைத்தெருவை  நோக்கி ஓடியது.

"அது யாரையாவது கடித்துவிடுமோ" என்று பதறினாள் ராஜி. "இப்போது நாம் என்ன செய்வது?" என்று கேட்டாள்.

"நாம் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்," என்று சலீம் பதிலளித்தான்.

காக-டைனோசர் கா-க்ரா என்று கத்தியபடியே கடைத்தெருவுக்குள் ஓடியது. அந்தக் காட்சி, வெண்கலக்கடையில் யானை புகுந்தாற்போலிருந்தது.

பேராசிரியர் அத்தை ஆச்சரியமாகப் பார்த்தார்

"என்ன… என்ன அது…? என் மூளை கலங்கி விட்டதா?

அது ஓர் உண்மையான உயிருள்ள ’தெரோபாட்’டா என்ன?"

"பேராசிரியர் அத்தை, நீங்கள் அதைப் பார்த்தீர்களா?" ராஜியும் சலீமும் கேட்டார்கள்.

"ஒரு பறவை-டைனோசர் தானே? ஆமாம் பார்த்தேன்" என்றார் அவர்.

"அது உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? அவை ஏற்கெனவே அழிந்துவிட்டன என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்! அந்த டைனோசர்களை என் வாழ்க்கை முழுதும் படித்து ஆராய்ச்சி செய்திருக்கிறேன். ஆனால், நேரில் பார்த்ததில்லை. நான் பார்த்ததெல்லாம் பழைய எலும்புக்கூடுகள்தான்" என்று அவர் சொன்னார்.

முன்னாள்-காகம் கடைத்தெருவை விட்டு வெளியே சென்றது.

ராஜி, சலீம், மற்றும் பேராசிரியர் அத்தை மூவரும் அதைத் தொடர்ந்து சென்றனர்.

ராஜி படுவேகமாக ஓடிச்சென்று அதன்மீது தாவினாள்.

"பிடித்துவிட்டேன்!"

ராஜி காக-டைனோசரை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்.

"அது ஒரு டி-ரெக்ஸ் ஆக மாறுகிறது பார்!" என்றான் சலீம்.

"அவைகள்... ஒ... ஒ... ஒரே... கு... குடும்பம் தான்," பேராசிரியர் அத்தை மூச்சு வாங்கியபடி கூறினார்.

"பறவைகளும் டைனோசர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவைதான். இந்தக் காக-டைனோசர் எப்படியோ பரிணாம வளர்ச்சியில் பின்னோக்கிச் செல்கிறது."

அப்போது, ஒரு பல்லி அந்த வழியாக ஓடிவந்தது, அந்த டைனோசர் அதைக் கடிக்கப் பார்த்தது. "அடடா, அருவருப்பான தன்னினந்தின்னியே!" என்று கடிந்துரைத்தாள் ராஜி.

"உன்னுடைய இனத்தை நீயே சாப்பிடலாமா? அது தவறில்லையா? இது நான் என் சொந்தத் தங்கையைச் சாப்பிடுவது போலல்லவா இருக்கிறது!" என்றான் சலீம்.

"இல்லை, இல்லை," என்றார் பேராசிரியர் அத்தை. "பறவைகள் டைனோசர்களிலிருந்து வந்தவையாகும். எனவே அவைகள் பரிணாம ரீதியில் முதலைகளுடன்   ஓரளவு நெருக்கமானவை. ஆனால், பல்லிகள் முற்றிலும் வேறுபட்ட ஓர் வகை, அதன் பெயர், ஊர்வன."

காக-டைனோசர்  தரையில் சுருண்டு படுத்துக்கொண்டு ஒரு சோகமான சத்தம் போட்டது: க்ரா-க்ரூம்ப்.

"இனி பறக்க முடியாதே என்று வருந்துகிறதுபோல" என்றான் சலீம்.

ராஜி அதன் நீள்மூக்குப் பகுதியைத் தடவிக்கொடுத்தாள்.

அவர்கள் பேராசிரியர் அத்தை வீட்டுக்குச் சென்றனர். அங்கே மேஜையில் ஒரு தட்டு நிறைய பஜ்ஜி இருந்தது.

"ம்ம்ம், பஜ்ஜிகள்!" என்று சப்புக்கொட்டினாள் ராஜி.

"க்ரா!" என்றது டைனோசர். மறுகணம், அது பேராசிரியர் அத்தை உயரத்துக்கு நீண்டது, பஜ்ஜிகள் இருந்த முழுத் தட்டையும் சாப்பிட்டுவிட்டது. பஜ்ஜிகளை மட்டுமல்ல, எஃகுத் தட்டையும் தின்று விட்டது.

பின்னர் அது பலமாக ஓர் ஏப்பம் விட்டது.

தனது பற்களைக் காட்டிக்கொண்டு சந்தோஷமாகச் சிரித்தது: கா-கா!!

ராஜியும் சலீமும் பல்லிளித்த வண்ணம் ஒன்றாகக் கூறினர்: "காகசாரஸ் ரெக்ஸ்!"

பறவைகள் தெரோபாட் எனப்படும் டைனோசர் குடும்பத்திலிருந்து வந்தவையாகும்.

அவை ’வாழும் டைனோசர்கள்’ என்றுகூட அழைக்கப்படுகின்றன. ஒரு சில வேறுபாடுகளைத்  தவிர்த்துவிட்டுப் பார்த்தால், பறவைகளும்   டைனோசர்களும்   பரிணாம ரீதியில் கிட்டத்தட்ட ஒரேமாதிரியானவைதான்.

பறவைகள்

* குறுகிய, சிறிய வால்

* பறப்பதற்கு மிருதுவான, நீள இறகுகள்,     கால்களிலும், சில சமயம் கழுத்திலும் செதில்கள்

* பல்லற்ற அலகு

* பரந்து விரிந்த பெரிய இறக்கைகள்

* இலேசான உள்ளீடற்ற எலும்புகள்

டைனோசர்கள்

* நீளமான வால்

* செதில்கள், குறுகிய, மிருதுவான இறகுகள்

* நீள்மூக்கு, நிறைய பற்கள்

* சிறிய இறக்கைகள், பறக்க முடியாதவை

* கனமான எலும்புகள்

ஒரு பறவை-னோசர் செய்யலாமா?

முந்தைய பக்கத்தில் உள்ள எலும்பு வடிவங்களை உங்கள் நோட்டுப்புத்தகத்தில் நகலெடுங்கள்; ஒரு கத்திரிக்கோல் கொண்டு அந்த எலும்பு வடிவங்களை வெட்டி எடுங்கள்; பின்னர் அவற்றை ஒன்றாகச் சேர்த்து அமைத்தால் நீங்கள் ஒரு டைனோசர் அல்லது ஒரு பறவையைச் செய்ய முடியும்! அல்லது இரண்டையும் செய்ய முடியும்!!