kaanamalpona nilaa

காணாமல் போன நிலா

ஒரு நாள் இரவு, நிலா கடலிலிருந்து எழும்பவில்லை. மைஷாவும் அவளது நண்பனான பறக்கும் மீன் உச்லியும், நிலாவைத் தேடத் தொடங்குகின்றனர்.. ஆனால், வெளிச்சமே இல்லாமல் எப்படி நிலாவைத் தேட முடியும்?

- Rajam Anand

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு நாள் பின்னிரவில், மைஷாவின் அம்மாவும் அப்பாவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர் . அப்போது, மைஷா தனது காப்புக் கண்ணாடியை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு, அவர்கள் அறியாதபடி மெல்லப் பதுங்கி வெளியே போனாள். இரவு நேரத்தில் கடற்கரையைக் காண மைஷாவிற்கு மிகவும் பிடிக்கும்; மேலும் அவளது உயிர் நண்பன் ஒருவனும் கடலில்தான் வசிக்கிறான்.

மைஷா, அவர்கள் கடற்கரையில் வழக்கமாகச் சந்திக்கும் இடத்திற்குச் சென்று தனது தோழனைக் கூப்பிட்டாள்.

“உச்லி! நீ இங்கே இருக்கிறாயா?”

அங்கே மணிக்கணக்காக அமர்ந்து கொண்டு,  நீருக்கு உள்ளேயும், வெளியேயும் பறந்து செல்லும் உச்லியை பார்த்து ரசிப்பது அவளது வழக்கம். பறக்கும் மீனான உச்லிக்கு, தனது குறும்பான விளையாட்டு வித்தைகளைக் காண்பிப்பது மிகவும் பிடிக்கும்.

ஆனால், இன்று ஏனோ உச்லி கவலையாகக் காணப்பட்டான்.

“என்ன விஷயம்? ஏன் வருத்தமாக இருக்கிறாய்?” என்று கேட்டாள் மைஷா.

“நீ கவனிக்கவில்லையா? நிலாவைக் காணவில்லை!” என்றான் உச்லி.

எங்கே நிலா?

உச்லி சொல்வது சரிதான் - அன்று இரவு அவர்களது தோழியை வானத்தில் காணவில்லை. சரியாகச் சொல்ல வேண்டுமானால், அவள் இருக்குமிடத்தில் ஒரு பெரிய ஓட்டைதான் தென்பட்டது.

“ஆனால், அவளை நாம் நேற்றிரவு பார்த்தோமே!” என்று அங்கலாய்த்தாள் மைஷா. “இங்கேதான் நமக்கு எதிரில் அவள் கடலிலிருந்து எழும்பினாளே! அவள் கடலில் மூழ்கிப்போயிருப்பாள் என்று நீ நினைக்கிறாயா?”

“நாம் அவளைக் கண்டுபிடிக்க வேண்டும்!” என்றான் உச்லி.

“ஆனால், நாம் இரவில் நிலாவின் வெளிச்சம் இல்லாமல் எதையும் பார்க்க முடியாதே?” என்றாள் மைஷா.

அப்போது, உச்லி கடல் நீரில் எதையோ கவனித்தான்.

தூரத்தில், ஒவ்வொரு முறை அலை எழும்பும்போதும் சிறுசிறு வெளிச்சத்துளிகள் மீண்டும் மீண்டும் தோன்றுவதும் மறைவதுமாக இருந்தன.

“மைஷா!” என்று ஆவலோடு கூப்பிட்ட உச்லி, “எனக்கு ஒன்று தோன்றுகிறது! என்னுடைய முதுகில் ஏறிக்கொள்.நாம் அந்த அலைகளின் அருகே போவோம்!” என்றான்.

அவர்கள் அந்த வெளிச்சத்துளிகளை நெருங்கியபோது, மைஷா மூச்சை நன்கு இழுத்து பிடித்துக்கொண்டு உச்லியை இறுகப் பற்றிக்கொண்டாள்.

மைஷாவுக்கு மூச்சுத் திணறியது. நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தில் மிதப்பது போல உணர்ந்தாள்! சின்னஞ்சிறு உயிரிகள் பல அவளைச் சுற்றிலும் மின்னின.

“ஆஹா! யார் இவர்கள்?” என்று உச்லியின் காதில் கிசுகிசுத்தாள்.

“அவை மிதக்கும் நுண்ணுயிர்கள்(planktons).   கடலில் நமக்கு வழிகாட்ட அவை வெளிச்சமூட்டி உதவலாம்” என்றான் உச்லி.

“நிலாவைக் காணவில்லை! அவளைக் கண்டுபிடிக்க எங்களுக்கு வெளிச்சம் தேவை. நீங்கள் உங்கள் வெளிச்சத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்களா?” என்று அந்த மிதவைஉயிரி ஒருவரிடம் மைஷா கேட்டாள்.

“உங்களுக்கு எனது வெளிச்சம் மட்டும் போதாது. என்னுடைய நண்பர்களும் உதவுவார்களா எனக் கேட்கிறேன்” என்றார் அவர்.

சீக்கிரமே  மின்னும் வெளிச்சங்கள் கொண்ட சிறிய உயிரிகளின் படை ஒன்று உச்லியுடனும் மைஷாவுடனும் இணைந்து கொண்டது.

“நிலா எங்கேதான் போயிருக்கக்கூடும்?” என்று வியந்தாள் மைஷா.

“நான் உனக்கு உதவ முடியும்” என்று ஒரு கனத்த பெரிய குரல் அவள் காதருகே கேட்டது. அவள் சுழன்று திரும்பினாள். ஒரு மின்மினிக் கணவாயின் (firefly squid) எட்டு கைகள் அவளை நோக்கி ஒளிர்ந்தன.

அவன் உடல் முழுதும் நியான் போன்ற நீலவண்ணத்தில் ஒளிர்ந்தது.

“சிறிது நேரம் முன்பு, நிலா இந்த வழியாகப் போவதை நான் பார்த்தேன்” என்றான்.

முதலில், கணவாயின் நீளமான கொடுக்குகளைக் கண்டு மைஷா பயந்திருந்தாள். ஆனால், மின்மினிக் கணவாயின் வெளிச்சம் நீருக்குள் தெளிவாகப் பார்க்க உதவும் என்று அறிவாள்.

“சரி! வழி காட்டு!” என்றாள் மைஷா.

கணவாய் தனது ஒரு கொடுக்கை மைஷாவின் விரலில் சுற்றி, “கெட்டியாகப் பிடித்துக் கொள்” என்றான்.

மைஷா, உச்லி, மிதவை நுண்ணுயிர்கள் மற்றும் மின்மினிக் கணவாய் அனைவரும் ஒன்றாக கீழ்நோக்கி நீந்தினர்.

கீழே, செல்லச் செல்ல கடல்நீர் மேலும் இருட்டாய் இருந்தது. ஆனால், மிதவை நுண்ணுயிர்கள் மேலும் ஒளிர்ந்தன; மின்மினிக் கணவாயும் தனது ஒளியை வீசினான். என்றாலும் நிலா மட்டும் தென்படவேயில்லை.

அப்போது, அவர்கள் இரை தேடிக் கொண்டிருந்த தூண்டில் மீன்(angler fish) ஒன்றைக் கண்டனர். அவளது பற்கள் கூராக இருந்தன. ஆனால், மைஷாவுக்கு இனி எதன்மீதும் பயமில்லை.

“வணக்கம்! நாங்கள் நிலாவைத் தேடிக் கொண்டிருக்கிறோம். அவளை எங்கேயாவது பார்த்தீர்களா?” என்று மைஷா வினவினாள்.

“ஆமாம். நான் சில மணிநேரங்களுக்கு முன் அவள் சில கண்ணாடிக் கரேல் மீன்களுடன்(Moonfish) நீந்திச் செல்வதைப் பார்த்தேன். என் பின்னால் வாருங்கள்!” என்றாள் தூண்டில் மீன்.

மைஷா, உச்லி, கணவாய் மற்றும் மிதவை நுண்ணுயிர்கள் எல்லோரும் தூண்டில் மீனின் ஈர்க்கும் பச்சைநிற ஒளியைப் பின்பற்றிச் சென்றனர்.

ஒளிரும் விலங்குகள் அனைவரிடமிருந்தும் வந்த வெளிச்சம், ஒரு விளக்கு வட்டம் போல் ஆழ்கடலின் தளத்தில் விழுந்தது.

திடீரென்று, மைஷா ஒரு பாறையின் அடியில் ஏதோ பளீரென்று தெரிவதைக் கண்டாள்.

அது நிலாவேதான்!

“உதவி, உதவி! நான் இங்கே மாட்டிக்கொண்டிருக்கிறேன்!” என்று கீச்சிட்டாள் நிலா.

கணவாய் தனது கொடுக்குகளால் பாறையை நகர்த்தினான்.

வெளிறிய நிலா மெதுவாக வெளியே வந்தாள்.

“ஹையா!” என்று எல்லோரும் மகிழ்ச்சியில் கூவினர்!

“என்ன நடந்தது?” என்று உச்லி கேட்டான்.

“எனது உறவினர்களான கண்ணாடிக் கரேல் மீன்களை சந்திக்க வந்தேன். திரும்பி வருகையில், எனது ஒளி மங்கத் தொடங்கியதால் வழி தவறிவிட்டேன். பின்னர், இந்தப் பாறையின் அடியில் மாட்டிக் கொண்டேன். என்னைத் தேடி வந்ததற்காக மிக்க நன்றி!” என்றாள் நிலா.

“அப்படியானால், நீ வானில் இல்லாதபோது இங்குதான் இருப்பாயா?” என்றாள் மைஷா.

நிலா புன்னகைத்துவிட்டு, நீரின் மேற்பரப்பை நோக்கி நீந்திச் சென்றாள்.

பின்னர், வானத்திற்குத் தாவி ஏறினாள்.

உச்லியும், மைஷாவும் தங்கள் புதிய நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, நிலா வெளிச்சத்தில் கடற்கரையை நோக்கி நீந்திவந்தனர்.

கடலுக்கடியில் இருந்த நட்சத்திரங்கள் அந்த இரவு முழுவதும் தொடர்ந்து மின்னிக்கொண்டிருந்தன.

ஒளிரிகளைச் சந்தியுங்கள்!

நீரினுள்ளும், நீருக்கு வெளியிலும் வாழும் பல உயிரினங்கள் தாமாகவே ஒளிரும் திறன் படைத்தவை என்று உங்களுக்குத் தெரியுமா?

மைஷாவும், உச்லியும் சந்தித்த மிதவை நுண்ணுயிர்கள் ஒளிர்வது தன்னை உண்ணவரும் பிராணிகளை பயமுறுத்தவே ஆகும். நீரில் ஏதாவது நகர்வது போல் உணர்ந்தால், அவை உடனே பளீரென ஒளிர்ந்து எச்சரிக்கை செய்யும். சில நேரங்களில், அலைகளும் படகுகளும் கூட அவை ஒளிரக் காரணமாகும். மிதவை நுண்ணுயிர்களிடம் உள்ள ஒரு வேதிப் பொருள், அவை ஒளிர உதவுகிறது. மின்மினிக் கணவாயிடம் உள்ள சிறப்பு அங்கங்களான ஒளிக்கால்கள்(Photophores) ஒளி உருவாக்குகின்றன.

இரையை ஈர்க்கவோ, துணையை வசீகரிக்கவோ அல்லது வேட்டையாடும் விலங்குகளைக் குழப்பவோ மின்மினிக் கணவாயின் உடலிலுள்ள ஆயிரக்கணக்கான ஒளிக்கால்கள் ஒளியை வீசுகின்றன.

தூண்டில்மீனின் ஈர்க்கும் ஒளி அதன் உடலில் வசிக்கும் பாக்டீரியாக்களில் இருந்து வருகிறது.

மின்மினிப் பூச்சிகள், சிலவகைக் காளான்கள் போன்ற நீரின் வெளியே வாழும் பல தாவரங்களும் விலங்குகளும்கூட ஒளிருகின்றன. ஏன் நீங்களும் கூட சிறிதளவு ஒளியை ஒவ்வொரு நாளும் வெளியிடுகிறீர்கள்!