"ஸ்வாமி! இந்தக் கட்டை கேட்கிறதேயென்று வித்தியாசமாய் நினைக்க வேண்டாம்; ஸ்வாமியின் மனத்தில் சாந்தி ஏற்படவில்லையென்று இந்த ஜடத்துக்குத் தோன்றுகிறது. ஒரு வேளை இது தவறாயிருந்தாலும் இருக்கலாம். அப்படி ஏதாவது ஸ்வாமி மனத்தில் இருந்தால் இந்தக் கட்டையிடம் சொல்ல யோசிக்க வேண்டாம்" என்று பெரிய ஸ்வாமியார் சின்ன ஸ்வாமியாரிடம் சொன்னார். "ஸ்வாமி சொல்வது நிஜம்; இந்தக் கட்டைக்கு இன்னும் மனச் சாந்தி ஏற்படவில்லை. இதன் மனத்திலே ஒரு பந்தம் இருக்கிறது; ஒரு தாபம் இருக்கிறது. அது இந்தக் கட்டையுடனேதான் தீருமோ, என்னவோ தெரியாது" என்றார் சின்ன ஸ்வாமியார்.
தன்னுடைய எல்லைக்குள்ளே உயிரை விடுவோர் அவ்வளவு பேரையும் மோக்ஷத்துக்கு அனுப்பக்கூடிய மகிமை வாய்ந்த ஸ்ரீகாசி க்ஷேத்திரத்தில் தமிழ்நாட்டுப் பெரிய மடங்களுக்குச் சொந்தமான கிளை மடங்கள் பல இருக்கின்றன. அந்த மடங்களில் ஒன்றிலேதான், மேலே கூறியவாறு இரு ஸ்வாமியார்களுக்குள் சம்பாஷணை ஆரம்பித்தது. அவர்களில் ஒருவர் கொஞ்சம் வயதானவர்; ஐம்பது ஐம்பத்தைந்து இருக்கலாம். அவருடைய திரு மார்பை நீண்டு வளர்ந்த தாடி மறைத்திருந்தது. முகத்தில் ரோமத்தினால் மறைக்கப்படாதிருந்த பாகமெல்லாம் அம்மைத் தழும்பு நிறைந்து கோரமாய்க் காணப்பட்டது. ஆனாலும் அவர் முகம் பார்ப்பதற்கு அருவருப்பு அளிக்கவில்லை. அந்த கோரத்திலும் ஒரு திவ்ய களை இருந்தது. அவரது ஆழ்ந்த கண்களில் சாந்தி குடிகொண்டு விளங்கிற்று. இந்தப் பெரிய ஸ்வாமியார் பல வருஷ காலமாக மேற்படி கிளை மடத்தில் தலைவராயிருந்து வருபவர். தென்னாட்டிலிருந்து காசிக்கு வரும் தமிழர்களில் அநேகர் இந்த மடத்தில் வந்து தங்குவதுண்டு. அவர்களுக்கெல்லாம் வேண்டிய சௌகரியங்கள் செய்து கொடுப்பார். இதனாலெல்லாம், ஸ்வாமி பிரணவானந்தரின் புகழ் விஸ்தாரமாய்ப் பரவியிருந்தது.
இந்த மடத்துக்குக் கொஞ்ச நாளைக்கு முன் ஸ்ரீகுமாரானந்தர் என்னும் மற்றொரு தமிழ் ஸ்வாமி வந்து சேர்ந்தார். இவருக்குப் பிராயம் சுமார் 35க்கு மேல் 40க்குள் இருக்கலாம். இவர் ஜடை, தாடி முதலியவை வளர்க்காமல் நன்றாய்த் தலையை மொட்டையடித்து முக க்ஷவரமும் செய்து கொண்டிருந்தார். பெரிய ஸ்வாமியார் இவரை அன்புடன் வரவேற்று, வேண்டிய சௌகரியங்கள் செய்து கொடுத்தார். குமாரானந்தரிடம் ஒரு விசேஷத்தைப் பெரிய ஸ்வாமியார் கண்டார். குடும்பஸ்தன் ஒருவனைவிட அதிகமாக அவருக்கு உலக விவகாரங்களில் சம்பந்தம் இருந்தது. கடிதப் போக்கு வரவு அவருக்கு அசாத்தியம். முக்கியமாய், தமிழ்நாட்டுப் பத்திரிகைகளுடன் அவருக்கு அதிக உறவு இருந்தது. ஓயாமல், ஏதாவது கட்டுரைகள் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்புவார். பத்திரிகைக்காரர்களிடமிருந்து அவருக்கு ஐந்து ரூபாய், மூன்று ரூபாய், ஒன்றேகால் ரூபாய் இப்படிச் சின்னத் தொகைகளாக மணியார்டர்கள் வரும். அத்தொகைகளை அவர் வாங்கிக் கொண்டு தாம் ஒரு விலாசத்துக்கு 15 அல்லது 20 ரூபாய் மணியார்டர் செய்வார். ஒரு மாதத்தில் சரியானபடி மணியார்டர்கள் வராவிட்டால், கோபம் வந்துவிடும். தமிழ்ப் பத்திரிகை நடத்துவோர்களைக் கண்டபடி திட்டுவார்.
இவற்றையெல்லாம் கவனித்துத்தான் பெரிய ஸ்வாமியார், தலைப்பில் கண்டவாறு சம்பாஷணை துவக்கினார். அவர் மேலும் கூறியதாவது:
"எத்தனையோ பேர் தங்களுடைய மனக் கவலைகளை இந்த ஜடத்திடம் சொல்லியிருக்கிறார்கள். இந்தக் கட்டை அவர்களுக்குத் தக்க உபதேசம் செய்து, மனச் சாந்தி உண்டாக்கியிருக்கிறது. ஸ்வாமியும் மனத்திலிருப்பதைச் சொன்னால், அதை நிவர்த்திக்க முடியுமா என்று பார்க்கலாம்."
குமரானந்தர் மோன வெளியில் கலந்திருந்தார். எனவே பிரணவானந்தர் மறுபடியும் கூறியதாவது:
"ஒரு வேளை ஸ்வாமிக்குப் பூர்வாசிரமத்திலே குழந்தைகள் இருந்து எங்கேயாவது விட்டு வந்திருக்கிறதோ? அப்படியிருக்கும் பட்சத்தில் அதற்குத் தக்க ஏற்பாடு செய்து விடலாமே!"
குமாரானந்தர் இப்போது வாய் திறந்தார். அவர் சொன்னதாவது: "ஸ்வாமி ஊகித்தது பாதி வாஸ்தவம். ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால் அது இந்த ஜடத்தின் குழந்தையல்ல. வேறொருவரின் குழந்தை. இந்த ஜடத்தின் கழுத்தில் அதை கட்டியிருக்கிறது. அதனால் தான் துளிக்கூட இந்தக் கட்டைக்கு மனச் சாந்தி இல்லாமல் போகிறது. தலைவிதி! தலைவிதி!" என்று படீர் படீரென்று மொட்டைத் தலையில் போட்டுக் கொண்டார்.
பெரிய ஸ்வாமியார் அவரைச் சாந்தப்படுத்தி ஆதியோடந்தமாய் அவருடைய வரலாற்றை விவரமாகச் சொல்லும்படி கேட்கவே குமாரானந்தர் அவ்வாறே கூறத் தொடங்கினார். அவர் கூறியபடியே ஸ்வாமியார்களின் பரிபாஷையை மட்டும் நீக்கிவிட்டு, இங்கே எழுதுகிறேன்:
பூர்வாசிரமத்தில் எனக்கு விருத்தாசலம் என்று பெயர். என் பெற்றோர்களுக்கு நான் ஒரே பிள்ளை. என் தகப்பனார் சர்க்கார் உத்தியோகஸ்தர். அவர் இருந்த வரையில் பணக் கஷ்டம் என்றால் இன்னதென்று தெரியாதவனாயிருந்தேன். திடீரென்று ஒருநாள் அவர் இறந்துபோனபோது நானும் என் தாயாரும் தரித்திரத்தின் கொடுமையை உணரத் தொடங்கினோம். அப்போது நான் பட்டணத்தில் காலேஜில் படித்துக் கொண்டிருந்தபடியால், என் தாயார், என் அம்மான் ஊரில் அவர் வீட்டிலேயே வசித்து வந்தாள். நல்ல வேளையாய் என் தகப்பனார் இன்ஷியூர் செய்திருந்தார். இன்ஷியூரன்ஸ் கம்பெனியார் கொடுத்த பணந்தான் என் படிப்புச் செலவுக்கு உதவிற்று. மற்றபடி எங்களுக்கு வீடு, வாசல், சொத்து, சுதந்திரம் ஒன்றுமேயில்லை. விடுமுறை நாட்களில் என் அம்மான் ஊருக்கு நான் போவதுண்டு. அந்தப் பட்டிக்காட்டில் யாருடனும் அதிகமாய்ப் பேசுவதற்கு எனக்குப் பிடிக்காது. சாயங்கால வேளைகளில் குளத்தங்கரை அல்லது ஆற்றங்கரையில் தனிமையான இடத்தைத் தேடிச் சென்று ஏதாவது புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். அப்போதெல்லாம் வருங்காலத்தைப் பற்றி எனக்குச் சிந்தனையே கிடையாது. பி.ஏ. பாஸ் செய்து விட்டு ஏதேனும் உத்தியோகத்துக்குப் போக வேண்டுமென்று தான் எண்ணியிருந்தேன்.
ஒருநாள் வழக்கம் போல் சாயங்காலம் ஐந்து மணி சுமாருக்கு நான் குளக்கரைக்குச் சென்றேன். அங்கே புதிதாய்த் தளிர்விட்டு மாலைச் சூரிய கிரணங்களால் தகதகவென்று பொன்மயமாய்த் திகழ்ந்து கொண்டிருந்த அரச மரத்தடியில் உட்கார்ந்து, நான் சாவகாசமாய்ப் புத்தகம் படிப்பது வழக்கம். அன்றும் அந்த அரசமரத்தடிக்குச் சென்றேன். அங்கே உட்கார்ந்து படிக்கத் தொடங்கியதும் 'களுக்' என்ற சிரிப்பின் ஒலி கேட்டு, குளத்தின் பக்கம் திரும்பிப் பார்த்தேன். குளத்தில் ஒரு விநோதமான காட்சி புலப்பட்டது. இளம் பெண் ஒருத்தி குளித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தேகமெல்லாம் நீரில் மூழ்கி இருந்தது. முகம்மட்டும் ஆகாயத்தை நோக்கி அண்ணாந்து பார்த்த வண்ணம் வெளியில் தெரிந்தது. பெண்களின் முகங்களைத் தாமரை மலருக்கு ஒப்பிடுகிறார்களே, அதன் பொருத்தம் அப்போதுதான் எனக்கு நன்றாய்த் தெரியவந்தது.
அந்தப் பெண் ஒருவித விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் வாயிலிருந்து ஜலத்தை ஆகாயத்தை நோக்கிக் கொப்புளிப்பாள். அது திரும்பி வருவதற்குள் சடக்கென்று தண்ணீரில் முழுகிவிடுவாள். சில சமயம் கொப்புளித்த ஜலம் அவள் முழுகுவதற்குள் அவள் முகத்திலே விழுந்துவிடும். அப்படி விழும் போதெல்லாம் அவள் 'களுக்' என்று சிரிப்பாள்.
இந்த அசட்டு விளையாட்டு அப்போது என் மனத்தை ஏன் அவ்வளவு தூரம் கவர்ந்தது என்பதைச் சொல்ல முடியாது. குளத்தில் இறங்கி அம்மாதிரி நானும் விளையாட வேண்டுமென்று ஆசையுண்டாயிற்று. ஆனால் இதற்குள் அவ்வளவு தூரம் நான் புத்தி இழந்துவிடவில்லை. அந்தப் பெண் விளையாடும் காட்சியைச் சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருமுறை தற்செயலாய் அவள் கரைப் பக்கம் திரும்பியபோது என்னைப் பார்த்து விட்டாள். நான் அவள் விளையாட்டைக் கவனித்துக் கொண்டிருந்ததையும் அவள் அறிந்திருக்க வேண்டும். வெட்கம் தாங்க முடியாமல் தண்ணீரில் முழுகியவள் வெகுநேரம் எழுந்திருக்கவேயில்லை. "இதென்ன? இந்தப் பெண்ணுக்கு மூச்சுப் போய்விடப் போகிறதே?" என்றுகூட எனக்குக் கவலையாய்ப் போயிற்று. அவள் வெளியே தலையை எடுத்ததும், இனிமேல் அங்கு நிற்பது உசிதமாயிராதென்று நினைத்து விரைந்து சென்றேன்.
இதற்குப் பிறகு, அந்தப் பெண்ணை வீதியிலும் குளக்கரையிலும் இரண்டு மூன்று தடவை சந்தித்தேன். என்னைப் பார்த்தபோதெல்லாம் அவள் வெட்கத்தினால் தலை குனிந்து கொள்வாள். அவள் முகத்தில் புன்சிரிப்பு உண்டாகும். உடனே யாராவது பார்த்துவிடப் போகிறார்களே என்ற பயத்தினால் நாலு புறமும் மிரண்டு நோக்குவாள். ஐயோ! இந்தப் பெண் ஏன் இப்படி அவஸ்தைப்படுகிறாள்! நல்லவேளை நாம் சீக்கிரமாக இந்த ஊரைவிட்டுப் போகிறோம்" என்று எண்ணிக் கொண்டேன்.
காலேஜ் திறக்கும் நாள் சமீபித்துவிட்டபடியால் சீக்கிரத்தில் கிளம்பிச் சென்னைக்குச் சென்றேன். ஆனால் என்ன பிரயோசனம்? அவளுடைய முகமும் என்னைப் பின் தொடர்ந்து வந்தது. ஏதாவது புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று அந்த முகம் - தண்ணீரில் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த அவ்வழகிய முகம் - என் மனக்கண்ணில் தோன்றும். மாலை வேளையில் கடற்கரைக்குச் சென்று நீலக்கடலைப் பார்த்தேனாயின், திடீரென்று அங்கே அலைகளுக்கு மத்தியில் அந்த முகம் மிதப்பது போல் பிரமையுண்டாகும். வானத்தில் கருமேகம் சூழ்ந்திருக்கும்போது ஆகாயத்தை நோக்கினால் அங்கேயும் அந்த முகந்தான் தோன்றும். பளிச்சென்று நிலவு வீசிக்கொண்டிருக்கும் இரவில் சந்திரனைத் தற்செயலாக நோக்கினால், நீலவானமே குளம் என்றும், சந்திரனே அவளுடைய வதனம் என்றும் பிரமை உண்டாகும். வீதியில் என்னைக் கண்டதும் வெட்கத்தினால் குனிந்து புன்சிரிப்புத் தவழ்ந்து கொண்டிருக்கும் அவள் முகமும் சில சமயம் இடையிடையே என் மனக்கண்முன் தோன்றும்.
எப்படியோ ஒரு வருஷம் சென்றது. அவ்வருஷ முடிவில் நான் பி.ஏ. பரீட்சை எழுதினேன். பின்னர் கிராமத்திற்குச் சென்றேன்.
கிராமத்தைச் சேர்ந்த அன்றைய சாயங்காலம் வழக்கம் போல் கையில் புத்தகத்துடன் குளத்தங்கரைக்குப் போனேன். ஆனால் என் மனம் என்னவோ, புத்தகத்தில் இல்லை. அந்தப் பெண்ணைச் சந்திப்போமா என்னும் எண்ணமே மேலோங்கியிருந்தது. அவ்வெண்ணத்திலே மகிழ்ச்சியும் வேதனையும் பிரிக்க முடியாதபடி கலந்திருந்தன.
நான் குளத்தங்கரை சென்றபோது அவள் ஸ்நானம் செய்துவிட்டு இடுப்பில் குடத்துடன் கரையேறி வந்து கொண்டிருந்தாள். என்னைப் பார்த்தாள். ஆனால் இம்முறை அவள் தலைகுனியவுமில்லை; புன்சிரிப்புக் கொள்ளவுமில்லை. இரண்டாவது தடவை என்னைத் திரும்பிப் பார்க்கவுமில்லை. விர்ரென்று போய்விட்டாள். ஆனால் அவளுடைய அந்த ஒரு பார்வையே என் இருதயத்தில் ஊடுருவிப் பாய்ந்து விட்டது. அதன் பொருள் முழுதும் நான் அப்போது அறிந்து கொள்ளவில்லையானாலும், அதில் நிந்தையும் கோபமும் நிறைந்திருந்தது மட்டும் என் உணர்வுக்குத் தெரிந்தது. சொல்ல முடியாத மனவேதனை கொண்டேன்.
அப்போதுதான் 'கலியாணம்' என்னும் யோசனை, முதல் முதலில் என் உள்ளத்தில் உதித்தது. ஆனால் என்ன பைத்தியக்காரத்தனம்! எனக்கு வீடு இல்லை, வாசலில்லை. சொத்து நிலம் ஒன்றும் கிடையாது. பரீட்சை பாஸ் ஆனால், ஏதாவது உத்தியோகம் தேடிச் சம்பாதித்துக் காலட்சேபம் நடத்தலாம். அதற்குள்ளாக இப்போது கலியாணம் எப்படிச் செய்து கொள்வது?
இவ்வாறு குழம்பிய உள்ளத்துடன் வீடு திரும்பினேன். அந்தப் பெண்ணைப் பற்றி - என்னுடைய மனோநிலையைக் காட்டிக் கொள்ளாமல் - மெதுவாக விசாரித்தேன். கிராமாந்தரத்தில் இத்தகைய விஷயங்கள் சுலபமாய்த் தெரிந்து கொள்ளலாமல்லவா? அவள் பெயர் காந்திமதி என்றும், ஏழைப் பெண் என்றும், அவளுடைய தாயார் வாயு ரோகத்தினால் கஷ்டப்படுகிறவள் என்றும், எப்படியாவது தான் கண் மூடுவதற்குள் தன் பெண்ணுக்குக் கலியாணம் செய்து வைத்துவிட வேண்டுமென்று அவள் பெரிதும் கவலைப்படுகிறாள் என்றும் தெரிந்து கொண்டேன்.
இவ்வளவு அழகும் புத்திசாலித்தனமும் வாய்ந்த பெண்ணைக் கலியாணம் பண்ணிக்கொள்ள நான் முந்தி, நீ முந்தி என்று போட்டியிட்டுக் கொண்டு வாலிபர்கள் முன் வரவில்லையென்னும் விஷயம் எனக்கு மிகவும் வியப்பளித்தது. இது நம்முடைய அதிர்ஷ்டத்தினால்தான் என்று எண்ணிக் கொண்டேன்.
ஆனாலும் இப்போது கலியாணத்தைப் பற்றிப் பிரஸ்தாபிக்க எனக்கு மிகவும் வெட்கமாயிருந்தது. கலியாணம் செய்து கொண்டால் பெண்ணை உடனே அழைத்துப் போக வேண்டுமல்லவா? எங்கே அழைத்துப் போவது? இவ்வருஷம் பரீட்சையில் தேறாவிட்டால், இன்னும் ஒரு வருஷம் படிக்க வேண்டிவரும். அப்போது அவளை எங்கே விடுவது? என் தாயாரையே வைத்துக் காப்பாற்ற முடியாமல், மாமன் வீட்டில் விட்டு வைத்திருக்கும் நான், கலியாணம் பண்ணிக் கொள்கிறேன் என்றால் கேட்டவர்கள் எல்லாரும் சிரிக்க மாட்டார்களா?
என்னவெல்லாமோ யோசித்து, கடைசியில் உடனே பட்டணத்துக்குத் திரும்புவதென்றும், பரீட்சை தேறியிருந்தாலும் தேறியிராவிட்டாலும் ஏதாவது உத்தியோகத்துக்கு முயற்சி செய்வதென்றும், உத்தியோகம் கிடைத்ததும் ஊருக்குத் திரும்பி வந்து காந்திமதியைக் கலியாணம் செய்து கொள்வதென்றும் முடிவுக்கு வந்தேன். அவ்வாறே சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றேன்.
என்னுடைய தகப்பனாருடைய சிநேகிதர் ஒருவர் அப்போது சைதாப்பேட்டையில் டிபுடி கலெக்டராயிருந்தார். தம்முடைய ஆபீஸில் ஓர் ஆக்டிங் குமாஸ்தா வேலை காலியிருப்பதாகவும், இப்போதைக்கு அந்த வேலையில் என்னை நியமிப்பதாகவும், பிறகு சென்னை ஸெக்ரடேரியட் ஆபீஸில் உத்தியோகத்துக்குச் சிபாரிசு செய்வதாகவும் சொன்னார். சாதாரணமாய் உத்தியோகம் கிடைப்பதனால் ஏற்படக்கூடிய சந்தோஷத்தைக் காட்டிலும் எனக்குப் பத்து மடங்கு அதிக சந்தோஷம் உண்டாயிற்று. இதற்குள் பரீட்சையில் நான் முதல் வகுப்பில் தேறிய செய்தியும் கிடைத்தது. மறுபடியும் ஊருக்குத் திரும்பிப் போனேன்.
தாயாரிடம் மேற்கூரிய விவரங்களைச் சொல்லிவிட்டுக் காந்திமதியைப் பற்றிப் பிரஸ்தாபித்தேன். அவள் 'ஐயோ பைத்தியக்காரா! முன்னமே சொல்லியிருக்கக் கூடாதா? அந்தப் பெண்ணின் தாயார் கூட 'உன் பிள்ளைக்குக் காந்திமதியைக் கலியாணம் செய்துகொள்கிறாயா?' என்று கேட்டாளே? நான் தானே 'இவனெல்லாம் இங்கிலீஷ் படித்துவிட்டானல்லவா? பட்டிக்காட்டுப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ளமாட்டான்' என்று சொல்லிவிட்டேன். இப்போது காரியம் மிஞ்சி விட்டதே. யாரோ பெரிய உத்தியோகஸ்தன் வந்து பெண்ணைக் கொண்டுபோய் விட்டானே! நகைகளாகச் செய்து இழைத்திருக்கிறான். காந்திமதியின் அதிர்ஷ்டத்தைப் பற்றி ஊரெல்லாம் பேசுகிறார்களே!" என்றாள்.
இதைக் கேட்டதும் என்னுடைய ஆகாசக் கோட்டை அப்படியே பொலபொலவென்று உதிர்ந்து விழுந்துவிட்டது. வாழ்க்கையிலேயே ருசியின்றிப் போயிற்று. இந்தச் சோக சாகரத்திலிருந்து தப்புவதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டென்று நினைத்தேன். அது, ஏதாவது தீவிரமான வேலையில் மனத்தை ஈடுபடுத்துதல்தான். எனவே, சீக்கிரமாகவே சைதாப்பேட்டைக்குத் திரும்பிச் சென்று உத்தியோகத்தை ஒப்புக் கொண்டேன்.
இவ்வாறு இரண்டு வருஷங்கள் சென்றன. ஸெக்ரடேரியட் ஆபீஸில் எனக்கு உத்தியோகமும் கிடைத்தது. இதற்குள் ஒருவாறு காந்திமதியை மறந்திருந்தேன். வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வதைப் பற்றிக்கூட யோசிக்கலானேன்.
ஸெக்ரடேரியட்டில் என்னுடைய ஸெக்ஷனுக்கு ஒரு தலைமை உத்தியோகஸ்தர் இருந்தார். அவர் பெயர் காமாட்சிநாதன். அவருக்குச் சுமார் 40 வயதிருக்கலாம். ஆரம்ப முதலே எங்களுக்கு ஒருவரையொருவர் பிடித்துப் போயிற்று. பரம யோக்கியர். வேதாந்தத்தில் அதிகப் பற்றுள்ளவர். அவரைப் பார்த்தவுடன், "சம்சாரத்தில் தாமரை இலையில் தண்ணீர் போல் வாழவேண்டும்" என்பார்களே, அதற்கு உதாரண புருஷர் இவர்தான் என்று தோன்றும்.
எனக்கும் இளம் பிராயம் முதலே வேதாந்த விஷயங்களில் பற்று உண்டு; அடிக்கடி நாங்கள் பாரமார்த்திக தத்துவங்களைப் பற்றிப் பேசுவோம். ஒரு சமயம் அவர், "என் வீட்டில் அருமையான வேதாந்த புத்தகங்கள் பல வைத்திருக்கிறேன். நீ ஒரு நாள் வந்தால் பார்க்கலாம்" என்றார்.
அவ்வாறே அடுத்த ஞாயிற்றுக்கிழமை அவர் வீட்டுக்குச் சென்றேன். நானும் அவரும் பேசிக் கொண்டிருக்கையில், அவருடைய மனைவி எங்களுக்குச் சிற்றுண்டி கொண்டு வந்தாள். அவளும் நானும் ஏக காலத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தோம். என்னுடைய நெஞ்சு ஒரு கணம் ஸ்தம்பித்துவிட்டது. உடம்பிலிருந்த ரோமங்களெல்லாம் குத்திட நின்றன. தேகமெல்லாம் வியர்வை துளித்தது. அவளுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். உடனே முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். அன்றியும் கொண்டு வந்த தட்டுக்களை வைத்துவிட்டு விரைந்து உள்ளே சென்றாள். டம்ளர்களில் ஜலம் எடுத்துக்கொண்டு அவள் திரும்பி வருவதற்கு ஐந்து நிமிஷம் பிடித்தது.
அதற்குள் என் மனத்தை ஒருவாறு சாந்தப்படுத்திக் கொண்டேன். மறுபடி அவள் வந்ததும், "இவள்தான் என் மனைவி" என்று காமாட்சிநாதன் தெரிவித்து என்னையும் அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவள் விஷயத்தில் இவருக்கு ரொம்பவும் பெருமை என்பது நன்றாக வெளியாயிற்று.
எனக்கு அவர் மனைவியை முன்னமேயே தெரியும் என்று நான் சொல்லவில்லை. எப்படிச் சொல்வது? என்ன சொல்வது? உண்மையிலேயே நாங்கள் பேசிப் பழகியிருந்தோமானால் சொல்லலாம். "குளக்கரையிலும், வீதியிலும் நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்திருக்கிறோம்; கண்களினால் பேசிக் கொண்டிருக்கிறோம்" என்று சொல்லமுடியுமா? ஆகையாலேயே அதைப்பற்றி நான் பிரஸ்தாபிக்கவில்லை. ஒருவேளை அப்போதே அதைச் சொல்லியிருந்தால், பின்னால் அவ்வளவு துன்பங்களுக்காளாகியிருக்க வேண்டாமோ, என்னவோ?
'உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில் உள்ள நிறைவாமோ?'
என்ற கவியின் வாக்கு என் விஷயத்தில் உண்மையாயிற்று.
அதன் பிறகு அவருடைய வீட்டுக்கு நான் அடிக்கடி போகத் தொடங்கினேன். என் மனத்திலோ ஒரு பெரிய போராட்டம் நடந்து கொண்டிருந்தது. "அவர் வீட்டுக்குப் போகாதே; போவதனால் கஷ்டந்தான் ஏற்படும்" என்று ஒரு புத்தி சொல்லிற்று. ஆனால் அதை மீறிக்கொண்டு, "அங்கே போகவேண்டும்; போக வேண்டும்" என்ற ஆவல் கட்டுக்கடங்காமல் பொங்கி எழுந்து கொண்டிருந்தது.
"போகவேண்டாம்" என்ற கட்சி நாளடைவில் மங்கி மறைந்தது. அடிக்கடி போகத் தொடங்கினேன். அதனால் காமாட்சிநாதனும் அதிக சந்தோஷமடைந்ததாகத் தெரிந்தது. முதன்முதலில் நானும் அவர் மனைவியும் சந்தித்தபோது, எங்களுக்கு ஏற்பட்ட மனக்கலக்கத்தை அவர் கவனித்தாரா என்றாவது, பின்னால் என்னை அவர் வீட்டுக்கு அடிக்கடி கவர்ந்திழுத்த காரணம் இன்னதென்று அவர் ஊகித்தாரா என்றாவது இன்றுவரை நான் அறியேன். இதெல்லாம் தெரிந்தவராக அவர் சிறிதும் காட்டிக் கொள்ளவில்லை.
ஒரு நாள் அவர் வீட்டுக்குப் போனபோது, இவர் வெளியில் போயிருந்தார். "உட்காருங்கள், வந்துவிடுவார்" என்று காந்திமதி சொன்னாள். சற்று நேரம் இருவரும் சும்மா இருந்தோம். ஏதாவது பேசாவிட்டால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போல் தோன்றிற்று. "என்னைப் போல் துர்ப்பாக்கியசாலி இந்த உலகத்திலே கிடையாது" என்றேன். நான் யோசித்துப் பேசினேன் என்று சொல்ல முடியாது. அந்த வார்த்தைகள் தாமே வெளிவந்தன என்றே சொல்லலாம்.
"நீங்கள் இங்கே வரவேண்டாமென்று சொல்வதற்கிருந்தேன். பாழும் மனம் கேட்கமாட்டேனென்கிறது" என்றாள் காந்திமதி.
அப்போது எனக்கு மயிர் சிலிர்த்தது. உடம்பு முழுதும் படபடவென்று அடித்துக் கொண்டது.
இவ்வாறு நாங்கள் தனிமையில் பேசத் தொடங்கினோம். குளக்கரையில் என்னைச் சந்தித்ததிலிருந்து அவளுக்கு என்னுடைய ஞாபகமாகவே இருந்ததாகவும், சீக்கிரம் வந்து தன்னைக் கலியாணம் செய்துகொள்வேனென்று ஆசை வைத்திருந்ததாகவும் ஒரு வருஷம் வரையில் பேச்சுமூச்சு இல்லாமலிருக்கவே மனம் வெறுத்துப் போனதாகவும், அந்த நிலைமையில் காமாட்சிநாதன் வந்து கலியாணம் பண்ணிக் கொள்வதாகச் சொல்லவே அவருடைய நல்ல குணத்தைக் கண்டு, வயதாகியிருந்தாலும் பரவாயில்லையென்று சம்மதித்ததாகவும் கூறினாள்.
ஒரு மாதம் அவள் பொறுத்திருந்தால் நான் வந்து கலியாணம் செய்து கொண்டிருப்பேனே என்று தெரிவித்தேன். "ஒரு வார்த்தை என்னிடம் சொல்லியிருந்தால் ஒரு மாதமல்ல, ஒரு யுகம் வேண்டுமானாலும் காத்திருந்திருப்பேனே" என்று அவள் கூறினாள்.
"தலைவிதி இப்படிப் பண்ணிவிட்டது" என்று இரண்டு பேரும் சேர்ந்து முடிவுக்கு வந்தோம்.
அதன் பிறகு, எப்போது காந்திமதியிடம் பேசலாம் என்றே சிந்தனை செய்யலானேன். காமாட்சிநாதன் வீட்டில் இல்லாத சமயங்களை ஆராய்ந்து பார்த்துப் போகத் தொடங்கினேன். இது பிசகு என்று நன்கு தெரிந்திருந்தது. ஆயினும் என்ன பயன்? ஒருவனுக்குச் செங்குத்தான மலைப் பாறையில் கால் நழுவிவிடுகிறது. கீழே விழத் தொடங்குகிறான். அப்படியே போனால் இன்னும் சில நிமிஷத்தில் கீழே அதலபாதாளத்தைச் சேரவேண்டியதுதான் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அவன் தன்னைத் தடுத்து நிறுத்திக் கொள்ள முடிவதில்லை. மலைச்சரிவில் விழுந்து கொண்டேயிருக்கிறான் - என்னுடைய நிலையும் அதுபோல் தான் இருந்தது.
கடைசியாக, இத்தகைய வாழ்க்கையைச் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்ற தீர்மானத்துக்கு வந்தோம். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவராகவே படைக்கப் பட்டவர்களென்றும், கடவுள் முன்னிலையில் கல்யாணம் செய்து கொண்ட சதிபதிகளேயென்றும் முடிவு செய்தோம். ஆனால் இந்த முட்டாள் உலகம் - கொடிய ஜன சமூகம் - அதை ஒத்துக் கொள்ளாது. ஆகவே, இந்தச் சமூகத்தை விட்டு எங்கேயாவது கண்காணாத இடத்துக்குப் போய்ச் சந்தோஷமாய் வாழ்க்கை நடத்துவதுதான் சரி; பணத்தைப் பற்றியாவது, மற்ற உலக சௌகரியங்களைப் பற்றியாவது நாங்கள் சிறிதும் கவலைப்படவில்லை. எங்களுடைய காதல் ஒன்றே எங்களுக்கு அரிய செல்வம். மற்றவையெல்லாம் யாருக்கு வேண்டும்?
காமாட்சிநாதன் சமீபத்தில் அவருடைய கிராமத்துக்கு ஒரு காரியமாகப் போக உத்தேசித்திருந்தார். அச்சமயம் காந்திமதி அவருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு என்னுடன் கிளம்பி வந்துவிடுவதென்றும், நாங்கள் கல்கத்தா சென்று அங்கே கப்பலேறிப் பர்மாவுக்குப் போய்விடுவதென்றும் தீர்மானம் செய்து கொண்டோம்.
[இடையில் குறுக்கிடாமல் பெரிய ஸ்வாமியார் கதையைக் கேட்டுக் கொண்டு வந்தார். அவருடைய கண்கள் பாதி மூடியிருந்தன. ஆனால் அவர் தூங்கவுமில்லை; யோகத்தில் ஆழ்ந்து விடவுமில்லை சின்ன ஸ்வாமி நிறுத்தும் போதெல்லாம் அவர் கண்களைக் கொஞ்சம் அதிகம் திறந்து, "அப்புறம்?" என்பார். குமாரானந்தர் மேலே சொல்கிறார்:]
காமாட்சிநாதன் ஊருக்குப் போகவேண்டிய நாள் நெருங்கிற்று. ஒரு நாள் அவர் அதைப்பற்றிப் பேசுகையில், தமது மனைவியையும் அழைத்துக் கொண்டு போக உத்தேசித்திருப்பதாகச் சொன்னார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவர் அவ்வாறு செய்தால், நாங்கள் பேசித் தீர்மானித்திருந்தபடி செய்ய முடியாது.
என்னுடைய மனக்கலக்கத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல், "போனால் எப்போது திரும்பி வருவீர்களோ?" என்று கேட்டேன்.
"காரியம் ஆனதும் திரும்ப வேண்டியதுதான். மூன்று நாளைக்கு மேல் ஆகாது" என்றார்.
அதற்குள் காந்திமதி, "இரண்டு மூன்று நாளைக்காக நான் ஏன் வரவேண்டும்? வீண் அலைச்சல் தானே? இங்கேயே இருந்து விடுகிறேனே?" என்றாள்.
"எனக்கு ஆட்சேபணையில்லை. உனக்குத் தனியாயிருக்கப் பயமில்லையென்றால் பேஷாக இரு" என்றார்.
இப்படி லவலேசமும் சந்தேகமில்லாத சாதுவை நாம் ஏமாற்றப் போகிறோமே என்று ஒரு நிமிஷம் எனக்குப் பச்சாத்தாபம் உண்டாயிற்று. ஆனால் அடுத்த நிமிஷத்தில், "நான் என்ன இவரை ஏமாற்றுவது? இவரல்லவா என்னை மோசம் செய்தவர்? இவரை யார் வந்து காந்திமதியைக் கலியாணம் செய்துகொள்ளச் சொன்னது? தெய்வீகமான காதலினால் இருதய ஒற்றுமை பெற்ற எங்களுக்கு நடுவே இவரல்லவா சாபக்கேடாக வந்து சேர்ந்தார்?" என்று எண்ணி நெஞ்சை உறுதி செய்து கொண்டேன்.
குறிப்பிட்ட தினம் இரவு காமாட்சிநாதன் ஊருக்குப் போனார். மறுநாள் காலையில் நான் காந்திமதியின் வீட்டுக்குச் சென்று அவளைச் சந்தித்தேன். எங்களுடைய பயணத்தைப் பற்றிப் பேசி முடிவு செய்தோம். அதன்படி அன்று சாயங்காலம் காந்திமதி வீட்டிலிருந்து புறப்பட்டு நான் வசித்த அறைக்கு வந்துவிட வேண்டியது. அங்கிருந்து சேர்ந்தாற்போல் நாங்கள் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்க் கல்கத்தாவுக்கு ரயில் ஏறவேண்டியது. காமாட்சிநாதன் செய்துபோட்ட நகைகள் ஒன்றையும் அவள் எடுத்து வரக்கூடாது. அவற்றை இரும்புப் பெட்டியில் வைத்து, அத்துடன் ஒரு கடிதம் எழுதி வைக்க வேண்டியது. இரும்புப் பெட்டிச் சாவி ஒன்று காமாட்சிநாதனிடம் இருப்பதால் அவர் வந்ததும் திறந்து பார்த்துக் கொள்வார். வீட்டில் ஒரு சமையற்காரியும், ஒரு வேலைக்காரப் பையனும் இருந்தார்கள். அவர்களிடம் காந்திமதி புரசவாக்கத்தில் உள்ள ஒரு சிநேகிதியின் வீட்டுக்குப் போவதாகவும், திரும்புவதற்கு இரண்டு மூன்று நாள் ஆகலாம் என்றும் சொல்லிவிட்டு வரவேண்டியது.
இந்த ஏற்பாடுகள் பேசி முடிந்ததும், காந்திமதி ஒரு கடிதம் எழுதிக் காட்டினாள். அதில், அவள் தன்னிடம் காட்டிய விசுவாசத்திற்கும் தனக்குச் செய்த நன்மைகளுக்கும் மிகவும் நன்றியுடையவளாயிருப்பதாகவும், ஆனால் அதற்கெல்லாம் தான் பாத்திரமானவள் அல்லவென்றும், கலியாணத்திற்கு முன்பே தன்னுடைய இருதயத்தை ஒருவருக்குப் பறி கொடுத்துவிட்டதாகவும், விதிவசத்தால் அவரை மறுபடி சந்தித்தாகவும், அவரைப் பிரிந்து தன்னால் உயிர் வாழ முடியாதென்று அறிந்து அவருடன் போவதாகவும், தன்னை மன்னித்து மறந்து விட வேண்டுமென்றும் எழுதியிருந்தாள்.
அன்று சாயங்காலம் நான் பிரயாணத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டு, காந்திமதியின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தேன். நேரம் ஆக ஆக என் நெஞ்சுத் துடிப்பு அதிகமாயிற்று. 'ஒருவேளை வராமல் இருந்துவிடுவாளோ?' என்று எண்ணிய போது இருதயத்தில் சம்மட்டியால் அடித்தது போன்ற வேதனை ஏற்பட்டது - ஸ்வாமி! தங்களிடம் உள்ளது உள்ளபடி சொல்வதாகச் சங்கல்பம் செய்துகொண்டேனல்லவா? அந்த இருதய வேதனையில் ஒரு சந்தோஷம் இருந்ததென்பதையும் சொல்லிவிடுகிறேன். உண்மையென்னவென்றால், நான் கோழையாகி விட்டேன். அபாயங்கள் நிறைந்த கரைகாணாத சமுத்திரத்தில் பிரயாணம் செய்வதற்காக ஒருவன் தயாராகிறான். ஆனால் பிரயாணம் புறப்பட வேண்டிய சமயத்தில் ஏதாவது ஒரு தடை வந்து குறுக்கிடாதா, அதைச் சாக்காக வைத்துக் கொண்டு கிளம்பாமல் இருந்து விடலாமே என்று அவனுக்குத் தோன்றுகிறது. என்னுடைய மனோநிலை அப்படித்தான் இருந்தது. ஆனால் அதை நானே அப்போது தெளிவாக உணரவில்லை.
வாசலில் வண்டி வந்து நின்று, காந்திமதி மாடிப்படியேறி என்னுடைய அறைக்குள் வந்தபோது என்னுடைய இருதயநிலை எப்படியிருந்ததென்பதை என்னாலேயே விவரிக்க முடியாது. அதில் அதிகமாயிருந்தது இன்பமா துன்பமா என்று எனக்கே தெரியவில்லை.
அவள் வந்ததும், இன்னின்ன சொல்லி, இவ்விதமாக வரவேற்க வேண்டுமென்றெல்லாம் மனத்தில் எண்ணியிருந்தேன். ஆனால் அதெல்லாம் இப்போது அடியோடு மறந்து போயிற்று. ஒரு வார்த்தை கூட வரவில்லை. அவளுடைய கரங்களைப் பிடித்து உட்கார வைத்தேன். அப்போது அவளுடைய தேகமெல்லாம் நடுங்குவதை அறிந்தேன். என் மனத்தில் மற்ற உணர்ச்சியெல்லாம் போய்ப் பரிதாப உணர்ச்சி பொங்கி எழுந்தது.
"இதோ பார், காந்தி! உன் உடம்பு நடுங்குகிறது. உன் மனத்தில் கொஞ்சமாவது தயக்கம் இருந்தால் நாம் இந்தக் காரியம் செய்ய வேண்டாம்" என்றேன்.
"தயக்கமிருந்தால் வருவேனா? நீங்கள் என்னைக் கட்டாயப்படுத்தினீர்களா? என் மனப்பூர்வமான விருப்பத்தினாலேயே வருகிறேன்" என்றாள் காந்தி.
"அது வாஸ்தவந்தான். ஆனாலும் என்னுடைய சுயநலத்துக்காக உன்னைத் துன்பத்துக்குள்ளாக்குகிறேனோ என்று தான் என் மனம் தவிக்கிறது. உனக்கு, வீடு, வாசல், செல்வம், சௌக்கியம் எல்லாம் அவர் அளித்திருக்கிறார். நானோ இவையொன்றும் உனக்குத் தர முடியாது..."
"அதனாலேயேதான் நான் அவரை விட்டுச் செல்வது அவசியம். அவர் எனக்கு எல்லாம் அளித்திருக்கிறர்; நானோ அவருக்கு என் வெறும் இருதயத்தைக் கூட அளிக்க முடியவில்லை. அதைத் தாங்கள் ஏற்கனவே கவர்ந்து விட்டீர்கள். நான் என்ன செய்யலாம்?"
"என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட பாக்கியம் எனக்குக் கிடைக்குமென்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. உன்னுடைய காதலுக்கும் நீ என்னிடம் வைக்கும் நம்பிக்கைக்கும் நான் தகுதியுள்ளவனா என்று தான் சந்தேகமாயிருக்கிறது."
"இந்த யோசனையெல்லாம் அன்று அரசமரத்தடியிலேயே உங்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும்" என்றாள் காந்தி.
"சரி, சரி; நம்முடைய பேச்சிலே ரயிலை மறந்து விடப் போகிறோம். இனிமேல் தான் தினம் 24 மணி நேரமும் பேசப் போகிறோமே. இப்போது கிளம்பலாம்" என்றேன்.
"கிளம்புவதற்கு முன் இன்னும் ஒரு விஷயம் உங்களுக்குச் சொல்லி விட வேண்டும். அது அவருக்குக் கூடத் தெரியாது" என்றாள் காந்தி. அப்போது அவள் முகத்திலே சிறிது வெட்கத்தின் அறிகுறி காணப்பட்டது. இதழ்களில் சிறுநகை உண்டாயிற்று.
அவள் சொல்லப் போவது என்னவாயிருக்கலாமென்று சற்று யோசித்தேன். ஒன்றும் தெரியாமல் "என்ன சொன்னாலும் கேட்கத் தயாராயிருக்கிறேன்" என்றேன். "மூன்று மாதமாய் எனக்கு உடம்புக்கு ஒரு மாதிரியாயிருக்கிறது. மாதஸ்நானம் செய்யவில்லை. நாம் போகுமிடத்தில் இது ஒரு சிரமம் இருக்கிறது" என்றாள்.
இதன் பொருள் எனக்கு நன்றாக விளங்க ஒரு நிமிஷம் பிடித்தது. அது விளங்கியதும் ஒரு பெரிய ஆறுதல் உண்டாயிற்று. அபாயம் நிறைந்த கடற்பிரயாணம் தொடங்குவதற்கு அசட்டுத் தைரியத்துடன் தீர்மானித்துவிட்டு அதற்கு ஏதாவது இடையூறு நேராதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, உண்மையிலேயே ஓர் இடையூறு இப்போது தென்பட்டது.
சற்று நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். "என்ன இவ்வளவு ஆழ்ந்த யோசனை?" என்று காந்திமதி கேட்டாள்.
"காந்தி! இந்த ஜன்மத்தில் நம்முடைய காதல் நிறைவேறுவது பகவானுக்கு இஷ்டமில்லை. கடவுள் சித்தமிருந்தால் நீ இன்னும் ஒரு மாதம் கலியாணம் ஆகாமல் இருந்திருக்கமாட்டாயா?" என்றேன்.
"இதுதானா உங்கள் காதல்? இவ்வளவு தானா உங்கள் தைரியம்?" என்றாள் காந்தி.
"ஆமாம்; உன் வாழ்க்கையைப் பாழாக்குவதற்கு எனக்குத் தைரியமில்லைதான். அவர் உனக்களிக்கும் வாழ்க்கைச் சௌகரியங்களுக்குப் பதில் நீ அவருக்கு ஒன்றும் கொடுக்க முடியவில்லையென்று கூறினாய். அது தவறு. அவற்றுக்கெல்லாம் மேலானதை - சந்தான பாக்கியத்தை - அவருக்கு நீ அளிக்க முடியும். இந்த ஜன்மத்தில் நீ அவரைச் சேர்ந்தவள். அடுத்த ஜன்மத்திலாவது நம்மை ஒன்று சேர்க்கும்படி பகவானைப் பிரார்த்திப்போம்" என்றேன்.
"அவர் தான் வேதாந்தி என்று நினைத்துக் கொண்டிருந்தேன்; நீங்களும் ஒரு குட்டி வேதாந்தி என்பது தெரியாமல் போயிற்று" என்றாள் காந்தி. அடுத்த நிமிஷம் வேறு வார்த்தை பேசாமல் எழுந்து சென்றாள்.
கீழே காத்திருந்த ஜட்கா வண்டி கடகடவென்று சென்றது. அந்த வண்டியின் சக்கரங்கள் என் இதயத்தின் மேல் ஓடுவது போல் இருந்தது.
காந்திமதி இறங்குவதற்கிருந்த பெரிய துன்பக் குழியிலிருந்து அவளைக் காப்பாற்றிக் கரை சேர்த்ததாக நினைத்தேன். ஆனால் என்னுடைய வாழ்க்கை என்னவோ பாழாயிற்று. இனிமேல் அது வெறும் பாலைவனந்தான்.
அன்றிரவு ஒரு கண நேரமும் நான் தூங்கவில்லை. இன்னும் சில நாள் அப்படியே இருந்தால் சித்தம் பேதலித்து விடும் என்று தோன்றிற்று. எனவே, மறுநாள் அதிகாலையில் திருக்கோவிலூரை நோக்கிப் பிரயாணமானேன்.
திருக்கோவிலூர் மடத்தைப் பற்றித் தாங்கள் அறிந்திருப்பீர்கள். அப்போது அம்மடத்தின் தலைவராயிருந்த ஸ்வாமியை எனக்கு ஏற்கனவே தெரியும். அவர் சிறந்த கல்விப் பயிற்சியும், ஒழுக்கமும் விசால புத்தியும், கருணையும் உள்ளவர். அவரிடம் சென்று நான் சந்நியாசியாக விரும்புவதாகவும், அவருடைய சீடனாக என்னை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தேன். ஸ்வாமிகளும் அருள் புரிந்து என்னை ஏற்றுக் கொண்டார்.
ஐந்து வருஷங்களுக்குப் பிறகு, என்னுடைய குருநாதரைச் சென்னையிலிருந்த ஒரு பக்தர் அழைத்தார். அவருடன் நானும் சென்றேன். ஒரு நாள் கோவிலில் உபந்நியாசம் நடந்தது. ஸ்வாமிகள் வழக்கம் போல் அரிய பெரிய சமய தத்துவங்களைச் சரமாரியாகப் பொழிந்து கொண்டிருந்தார். ஆனால் என்னுடைய மனம் என்னவோ, அன்று உபந்நியாசத்தில் ஈடுபடவில்லை.
உண்மையில், சென்னைக்கு வந்ததிலிருந்தே என் உள்ளம் சரியான நிலைமையில் இல்லை. தியானத்தில் மனம் குவிதல் மிகவும் கடினமாயிற்று. அடிக்கடி காந்திமதியின் நினைவு வந்தது. "புலன்களை அடக்கி வெற்றி பெற்ற நாம் இப்போது காந்திமதியைப் பார்த்தாலென்ன?" என்று தோன்றிற்று. "அவளை நம் சிஷ்யையாய்க் கொள்ளலாம்" என்ற ஆசை கூட உண்டாயிற்று.
கோவிலில் ஸ்வாமிகள் உபந்நியாசம் செய்து கொண்டிருந்தபோது, மனம் அதில் ஈடுபடாமல் பெரிதும் சலித்துக் கொண்டிருக்கவே, நான் கோவிலைச் சுற்றி வரலாமென்று எண்ணி எழுந்து சென்றேன். ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு அம்மன் சந்நிதிக்குச் சென்றேன். அங்கே கர்ப்பக்கிருஹத்தில் அர்ச்சகர் பூஜைக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். வெளி மண்டபத்தில் ஒரு சிறு பெண் கை கூப்பிய வண்ணம் நின்று கொண்டிருந்தாள். அங்கு வேறு யாரும் இல்லை.
அந்தக் குழந்தைக்கு வயது ஐந்துக்குள் தான் இருக்கும். அவள் வாய்க்குள்ளே ஏதோ முணுமுணுத்துப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள். அவள் என்ன பிரார்த்திக்கிறாள் என்று தெரிந்துகொள்ள ஆவள் உண்டாகவே அருகில் நெருங்கி உற்றுக் கேட்டேன்.
"அம்பிகே! தாயே! என் அம்மாவைக் காப்பாற்று. நாங்கள் திக்கற்றவர்கள்; உன்னைத் தவிர எங்களுக்குக் கதி கிடையாது..."
என் உடம்பெல்லாம் ஒரு குலுங்குக் குலுங்கிற்று. அந்தப் பரிதாபமான குரலையும், பிரார்த்தனையையும் என்னால் சகிக்க முடியவில்லை. இன்னும் அருகில் சென்று "குழந்தாய்! நீ யாரம்மா? உன் தாயாருக்கு என்ன அம்மா?" என்று கேட்டேன்.
குழந்தை முதலில் கொஞ்சம் வெகுண்ட கண்களுடன் என்னைப் பார்த்தாள். அப்புறம் அவள் முகம் சற்று மலர்ந்தது.
"அம்மாவுக்கு உடம்பு சரியாயில்லை. வீட்டிலே அரிசி வாங்கப் பணம் கிடையாது...!" என்றாள்.
"உனக்கு அப்பா இல்லையா, அம்மா?"
"அப்பா நான் பிறப்பதற்கு முன்னமே போய் விட்டார். எங்களுக்கு வேறு திக்கில்லை. தெய்வந்தான் எங்களுக்குத் துணை."
இந்தக் குழந்தையின் மழலைச் சொற்கள் எல்லாம் அவளுடைய தாயார் அடிக்கடி சொல்லிக் கேட்டவை என்று ஊகித்துக் கொண்டேன். என் உள்ளம் உருகிற்று.
"உன் பெயர் என்ன அம்மா?" என்று கேட்டேன்.
"என் பெயர் ஸௌபாக்கியம்."
"உன் அம்மாவின் பெயர்?"
"காந்திமதி."
என்னைத் தொடர்ந்து அவர்களுடைய வீட்டுக்கு வருவதற்கு அந்தக் குழந்தை ஓடவேண்டியிருந்தது. அவ்வளவு விரைவில் என் கால்கள் என்னை அங்கே கொண்டு சேர்த்தன.
ஒரு பழைய வீட்டின் சின்ன அறை ஒன்றில் வெறுந்தரையில் எலும்புந் தோலுமாய்ப் படுத்துக் கொண்டிருந்த காந்திமதியைக் கண்டேன். அவள் முகத்திலே மட்டும் நான் முன்னே பார்த்தைவிட அதிகமான தேஜஸ் இருந்தது.
வெகு நேரம் நாங்கள் ஒன்றும் பேசவில்லை. ஒருவரையொருவர் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தோம்.
அவளுக்கு உடம்பு சரிப்படாததற்குக் காரணம் பட்டினிதான் என்று பார்த்த உடனேயே எனக்குத் தெரிந்து போயிற்று. பக்கத்துக் கடையிலிருந்து கொஞ்சம் பழங்கள் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து இருவரையும் சாப்பிடச் செய்தேன்.
"நான் சாவதற்குள் உங்களை மறுபடி பார்ப்பேன் என்று மட்டும் ஒரு நம்பிக்கை எனக்கு இருந்தது. நேற்றிரவு ஒரு கனவு கண்டேன். ஒரு வாய்க்காலுக்கு அந்தக் கரையில் நீங்கள் நிற்கிறீர்கள். அங்கிருந்து கையை நீட்டி என்னையும் அந்தக் கரையில் சேர்க்க முயல்கிறீர்கள். அப்போது நான் வாய்க்காலில் விழுந்து விடுகிறேன். வெள்ளம் அடித்துக் கொண்டு போகிறது. அப்புறம் வெகு நேரம் நினைவே இல்லாமல் இருக்கிறது. பிறகு, சமுத்திரத்தில் ஒரு படகில் இருப்பதாகத் தோன்றுகிறது. நீங்கள் படகு ஓட்டுகிறீர்கள். 'இது நம்முடைய மறு ஜன்மம்' என்று சொல்லுகிறீர்கள்.
'விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு - முன்னே விட்ட குறை வந்து தொட்டாச்சு'
என்ற நந்தன் சரித்திரக் கும்மி நான் பாடுகிறேன். அப்போது திடீரென்று ஒரு புயற் காற்று வந்து படகைக் கவிழ்த்து விடுகிறது. இப்படியெல்லாம் ஏதேதோ சொப்பனம் கண்டு கொண்டிருந்தேன்" என்று காந்திமதி கூறினாள்.
எங்களுடைய சம்பாஷணை ஒரு தொடர்ச்சியில்லாமல் ஒரே குழப்பமாயிருந்தபடியால், அதை அப்படியே என்னால் இப்போது சொல்ல முடியாது. என்னை விட்டுப் பிரிந்த பின் அவளுக்கு நேர்ந்ததைப் பற்றி நான் கேட்டுத் தெரிந்து கொண்டதை மட்டும் சொல்கிறேன்.
காந்திமதி வீடு சேர்ந்ததும், அங்கே வேலைக்காரப் பையன் மட்டும் பெரிதும் மனக் குழப்பத்துடன் உட்கார்ந்திருப்பதைக் கண்டாள். அன்று சாயங்காலம் அவள் வீட்டை விட்டுச் சென்றபின் ஊருக்குப் போயிருந்ததாக நினைத்த எஜமான் வந்ததாகவும், அம்மாள் வெளியில் போயிருக்கிறாள் என்று அறிந்ததும் அவர் ஒன்றும் சொல்லாமல் திரும்பிப் போய்விட்டதாகவும் அவன் தெரிவித்தான். அன்றியும் எஜமான் வந்து சென்றபின் சமையற்காரி இரும்புப் பெட்டி இருந்த அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு ஏதோ குடைந்து கொண்டிருந்ததாகவும், பிறகு அவளும் ஒன்றும் சொல்லாமல் வெளியே போய்விட்டதாகவும் கூறினான். காந்திமதி பதைபதைப்புடன் இரும்புப்பெட்டியைப் போய்ப் பார்த்தாள். பெட்டி திறந்திருந்தது. சாவிக் கொத்து கீழே கிடந்தது. பெட்டிக்குள் நகைகள் இல்லை. தான் எழுதி வைத்திருந்த கடிதம் மட்டும் இருந்தது. அதை எடுத்துக் கிழித்துத் தீயில் போட்டு எரித்தாள்.
நகைகளைச் சமையற்காரி எடுத்துப் போயிருக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றிற்று. காமாட்சிநாதன் அவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்து மறுபடி போனதைப் பற்றி நினைக்க நினைக்க அவளுக்குக் கவலையாயிருந்தது. அவர் இரும்புப் பெட்டி இருந்த அறைக்குள் போகவில்லையென்பதைப் பையனை நன்றாய் விசாரித்துத் தெரிந்து கொண்டாள். ஆகையால் கடிதத்தைப் பார்த்திருக்கமாட்டார். எனவே, எப்படியும் அவர் சீக்கிரம் வருவாரென்று எதிர்பார்த்தாள். நகைகள் எல்லாவற்றையும் கழற்றிப் பெட்டியில் வைத்ததைப்பற்றி அவருக்கு என்ன காரணம் சொல்வதென்று கலக்கத்துடன் யோசித்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் அத்தகைய காரணம் சொல்வதற்கு வேண்டிய பிரமேயம் அவளுக்கு ஏற்படவேயில்லை. ஏனென்றால், காமாட்சிநாதன் திரும்பி வரவேயில்லை! ஒரு வாரம், இரண்டு வாரம் ஆகியும் அவர் வரவில்லை. அவருக்கு சமையற்காரிக்கும் வெகு நாளாக காதல் உண்டென்றும், அவளை அழைத்துக் கொண்டு அவர் ஓடிவிட்டாரென்றும் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் சொன்னார்கள். காந்திமதியிடம் வந்து துக்கம் விசாரித்தார்கள். ஆனால் ஒருவராவது எவ்வித ஒத்தாசையும் செய்ய முன்வரவில்லை.
காந்திமதியின் தாயார் முன்னமே காலஞ்சென்றுவிட்டாள். வேறு உற்றார் உறவினர் யாருமில்லை. சொந்தக் கிராமத்துக்குப் போக அவளுக்கு இஷ்டமும் இல்லை. நல்ல வேளையாய்ப் பாங்கியில் கொஞ்சம் பணம் இருந்தது. அதை வைத்துக் கொண்டு பட்டணத்திலேயே வசிக்கத் தீர்மானித்தாள். அதே தெருவில் சமீபத்திலிருந்த ஒரு வீட்டில் இரண்டு அறைகள் மட்டும் வாடகைக்கு வாங்கிக் கொண்டு வசிக்கலானாள். அந்த வீட்டில் மற்றொரு குடித்தனம் இருந்த தம்பதிகள் மிகவும் நல்ல மாதிரி. குழந்தைகளைப் படிக்க வைப்பதற்காகவே அவர்கள் பட்டணத்துக்கு வந்தவர்கள்.
எப்படியும் காமாட்சிநாதன் ஒரு நாள் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுடன் காந்திமதி காலங் கழிக்கலானாள். உரிய காலத்தில் இந்தப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை வளர்ப்பதில் அவள் பொழுதில் பெரும் பகுதி போயிற்று. செட்டாகக் குடித்தனம் செய்து எப்படியோ இத்தனை நாள் கழித்தாள். கடைசியாக, பாங்கியிலிருந்த பணம் முழுதும் தீர்ந்து பரம தரித்திரம் நேரிட்டது. உணவுப் பொருள் வாங்கவும் பணம் இல்லாத நிலைமை ஏற்பட்டது.
இதையெல்லாம் அவள் சொல்லக் கேட்கக் கேட்க எனக்கு என் மீதிலேயே வந்த கோபத்துக்கு அளவில்லாமல் போயிற்று. "பாவி என்னாலல்லவா உனக்கு இந்தத் துயரமெல்லாம் நேரிட்டது? சமயத்தில் நான் கோழையாகி உன்னைத் திரும்பிப் போகச் சொன்னேனே?" என்று கதறினேன்.
"நான் திரும்பிப் போனதற்குக் காரணம் நீங்கள் மட்டுந்தான் என்று நினைக்கிறீர்களா? இல்லை. இல்லை. உண்மையில் என்னுடைய தைரியக் குறைவுதான் உங்களையும் பாதித்தது. என் தேகம் நடுங்கியதை அப்போது நீங்கள் அறியவில்லையா? நான் போய் விட்டேனென்று தெரிந்ததும் அவருடைய மனம் என்ன பாடுபடுமென்று எண்ணிப் பார்த்த போது என்னுடைய உறுதியெல்லாம் போய்விட்டது. அதனால் தான் நீங்கள் கொஞ்சம் தயக்கம் காட்டியதும் நான் திரும்பி விட்டேன்" என்றாள்.
"அதை நினைத்தால்தான் வயிற்றெரிச்சல் அதிகமாகிறது. பிரமாதமான வேதாந்தம் விசாரம் செய்து விட்டுக் கடைசியில் ஒரு சமையற்காரியை இழுத்துக் கொண்டு போன மனுஷ்யனுக்காக நம்முடைய வாழ்க்கை இன்பத்தையெல்லாம் தியாகம் செய்தோமே! நீ இப்படிப் பட்டினி கிடந்து எலும்புந் தோலுமாகும்படி ஆயிற்றே! இந்தக் கண்கள் என்ன பாவம் செய்தன?" என்று சொல்லி முகத்தில் அடித்துக் கொண்டேன்.
"தாங்கள் அந்த அவதூறை நம்புகிறீர்களா, என்ன? ஊரார் சொன்னார்களென்றால், அது நிஜமா? அவரிடம் நான் காதல் கொள்ள முடியவில்லை என்பது உண்மையே; ஆனால் அவருடைய குணத்தை நான் நன்றாய் அறிவேன். ஒரு நாளும் அப்படி நேர்ந்திராது" என்றாள் காந்திமதி.
"பின் ஏன் அந்த மனுஷர் திரும்பி வரவில்லை? உன்னை இந்தக் கதிக்கு ஆளாக்கிவிட்டு அவர் ஏன் போக வேண்டும்?"
"அதென்னவோ, நான் அறியேன். சந்தர்ப்பங்கள் எல்லாம் ஊரார் சொல்வதற்குப் பொருத்தமாய்த்தான் இருந்தன. ஆனால் என் அந்தரங்கத்தில் நான் அதை நம்ப முடியவில்லை; இனியும் நம்பமாட்டேன்" என்றாள்.
அவளுடைய உத்தம குணத்தை நினைக்க நினைக்க எனக்கு என் பேரிலும், அவள் புருஷன் பேரிலும் பதின் மடங்கு கோபம் பொங்கிற்று. இன்னொரு ஸ்திரீக்கு இத்தகைய கஷ்டம் நேர்ந்திருந்தால், எவ்வளவு மனம் கசந்து போயிருப்பாள்? எப்படி எல்லாரையும் துவேஷிக்கத் தொடங்கியிருப்பாள்?
மறுபடியும் நாளைக்கு வருவதாகச் சொல்லிவிட்டு என் குருநாதர் தங்கியிருந்த வீட்டுக்குத் திரும்பினேன். "எங்கே போயிருந்தாய்?" என்று அவர் கேட்டதற்கு, "பழைய சிநேகிதர் ஒருவரைச் சந்தித்தேன்; அவர் வீட்டுக்குப் போயிருந்தேன்" என்றேன். இனி என்ன செய்வதென்பதைப்பற்றித் திடமான முடிவு செய்து கொண்டு அவரிடம் முழு விவரத்தையும் தெரிவிக்க வேண்டுமென்று நினைத்தேன். உண்மையில், சந்நியாஸாசிரமத்திலிருந்து விடுதலை கோரும்படியாகவே நேருமோ என்று கூட என் உள்ளம் நினைத்தது.
ஆனால் அத்தகைய தர்ம சங்கடத்துக்கு என்னைக் காந்திமதி ஆளாக்கவில்லை. மறுநாள் காலையில் நான் அவள் வீடு சென்றபோது காந்திமதி குழந்தையை அணைத்துக் கொண்டு, 'ஸௌபா! உன்னை நான் பிரியுங்காலம் வந்து விட்டது. ஆனால் நீ வருத்தப் படாதே. பகவான் என்னை அடியோடு கைவிட்டு விடவில்லை. நேற்று உன்னோடு வந்த ஸ்வாமியார் உன்னைக் காப்பாற்றுவார்' என்று மெலிந்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
சற்று நேரத்துக்கெல்லாம் என்னையும் அந்தக் குழந்தையையும் கோவென்று கதற விட்டுவிட்டுக் காந்திமதி பரலோகம் சென்றாள்.
இப்படிச் செல்லி வந்த குமாரானந்தரின் கண்களில் கண்ணீர் ததும்பிற்று. ஆனால் பெரிய ஸ்வாமியாரோ சாந்தஸ்வரூபியாய் உட்கார்ந்திருந்தார். கடைசியில், குழந்தையைப் பற்றிச் சொன்னபோது மட்டும் அவருடைய மூச்சு வழக்கத்தைவிடச் சிறிது பெரிதாக வந்தது.
"இப்போது ஸ்வாமி அடிக்கடி பணம் அனுப்பி வருவதெல்லாம் அந்தக் குழந்தைக்குத்தானோ?" என்று கேட்டார்.
"ஆமாம்; அன்றைய தினமே நான் என் குருநாதரிடம் சென்று, உண்மை முழுவதையும் சொல்லி, இனிக் கொஞ்ச காலம் என் மனத்தில் சாந்தி இராதென்றும், ஒரே இடத்தில் இருக்க முடியாதென்றும் தெரிவித்து க்ஷேத்திர யாத்திரை செய்ய அநுமதி பெற்றேன். சில நாள் வரை நான் போகுமிடமெல்லாம் ஸௌபாவையும் அழைத்துக் கொண்டு போனேன். கொஞ்சம் அவளுக்கு வயதானதும் சென்னையில் இளம் பெண்களுக்கு உணவு வசதியுடன் கல்வியும் அளிக்கும் ஒரு ஸ்தாபனத்தில் சேர்த்தேன். இப்போது அவளுக்கு பதினைந்து வயதாகிறது. அவளிடம் எனக்கு இருப்பது துவேஷமா வாத்ஸல்யமா என்றே சில சமயம் தெரிவதில்லை. 'இந்தப் பெண்ணால் அல்லவா இன்னும் நான் விடுதலை பெறாமல் உலக பந்தத்தில் ஆழ்ந்திருக்கிறேன்?' என்று நினைக்கும்போது அவளிடம் கோபம் உண்டாகிறது. அடுத்த நிமிஷம், 'அந்தக் குழந்தையின் நல்வாழ்வுக்காக மோட்சத்தை இழந்து நகரத்துக்கும் போகலாம்' என்று தோன்றுகிறது..."
"ஸ்வாமிக்குப் பந்தத்திலிருந்து விடுதலை வேண்டுமானால் இப்போது அடையலாம். ஸௌபாக்கியத்தைக் காப்பாற்றும் பொறுப்பை இந்தக் கட்டை ஏற்றுக் கொள்ளும்" என்றார் பிராணவானந்தர்.
"ஓ! அதெப்படி முடியும்? காந்திமதி அளித்த பொறுப்பை நான் எப்படி இன்னொருவரிடம் கொடுப்பேன்? ஸ்வாமி! சொல்லுங்கள்! இந்த உலகத்தில் துன்பமும் தீமையும் ஏன் இருக்கின்றன? சமையற்காரியை இழுத்துச் சென்ற ஒரு தூர்த்தனுக்காக எங்கள் வாழ்க்கை பாழானது ஏன்? காந்திமதி பட்டினியால் உயிர் துறக்கும்படி நேர்ந்தது ஏன்? இதையெல்லாம் நினைக்கும் போது எனக்குக் கடவுளிடத்திலேயே அவநம்பிக்கை உண்டாகிவிடுகிறது. அப்போதெல்லாம் என் சந்நியாசக் கோலத்தைப் பார்த்து நானே சிரித்துக் கொள்கிறேன்."
"ஸ்வாமி! பகவானுடைய சிருஷ்டியில் ஏன் தீமையும் துன்பமும் இருக்கின்றன என்று ஆதிகாலத்திலிருந்து நம் பெரியோர்கள் ஆராய்ச்சி செய்தார்கள்..."
"அந்த ஆராய்ச்சியில் அவர்கள் கண்டுபிடித்தது என்ன?"
"அதுதான் நமக்குத் தெரியாது. ஏனெனில், அந்த இரகசியத்தைக் கண்டு பிடித்தவர்கள் யாரும் அதை வெளியிடவில்லை. கடவுளின் சாந்நித்யத்தைப் போலவே அவருடைய திருவிளையாடலின் இரகசியமும் விவரிக்க முடியாதது என்றார்கள். அதனால் தான் 'கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்' என்னும் வாக்கியம் எழுந்தது."
"பின், மனிதன் சாந்தி பெறுவதுதான் எப்படி?"
"மனச்சாட்சிக்குச் சரியென்று தோன்றுவதைச் செய்வதும், பலன்களைப் பகவானுக்கு அர்ப்பணம் செய்வதுந்தான் சாந்தி அடையும் உபாயம். உதாரணமாக காந்திமதியின் கணவன், அவள் வேறொருவனைக் காதலித்திருக்கையில் தான் அவளை மணம் புரிந்தது பிசகு என்று அறிந்தபோது, அவளை விட்டுச் செல்வதே சரியென்று எண்ணி அவ்வாறு செய்தான். கடமையென்று கருதியதைச் செய்தபடியால், அதன் விளைவுகள் விபரீதமாய்ப் போய்விட்டதை இப்போது அறிந்து கொண்ட போதிலும் அவன் சற்றும் மனங் கலங்கவில்லை."
சின்ன ஸ்வாமியாருக்குத் துணுக்கென்றது. "ஸ்வாமி! என்ன சொல்கிறீர்கள்? காமாட்சிநாதனைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?" என்றார்.
"ஆமாம்; அவனைப்பற்றி இந்தக் கட்டைக்கு நன்றாய்த் தெரியும். ஸ்வாமி கருதியதுபோல் அவன் சமையற்காரியுடன் போகவில்லை. காந்திமதியும் அவள் காதலனும் சந்தோஷமாயிருக்கட்டும் என்றுதான் போனான். அதைப் பற்றி நிச்சயமாய்த் தெரிந்து கொள்வதற்காகவே அவன் ஊரிலிருந்து மறுநாளே திரும்பி வந்தது. காந்திமதி வீட்டில் இல்லாமல், அவளுடைய காதலன் அறையில் இருக்கக் கண்டதும் நிச்சயம் பெற்றுச் சந்நியாசியாகி வடநாட்டுக்குச் சென்றான். அவன் வீட்டிலே விட்டுச் சென்ற சாவிக்கொத்தைக் கொண்டு சமையற்காரி பெட்டியைத் திறந்து நகைகளைத் திருடிச் சென்றிருக்க வேண்டும்."
"ஸ்வாமி! ஸ்வாமி! இதெல்லாம் தங்களுக்கு எப்படித் தெரியும்? தாங்கள் யார்?"
"பூர்வாசிரமத்தில் இந்தக் கட்டையைக் காமாட்சிநாதன் என்று சொல்வார்கள்!"