kadaigalin nagaram

கதைகளின் நகரம்

அந்த நகரத்தில் யாருக்கும் கதை சொல்ல நேரமில்லை. அக்காவும் ஒரு சிறுமியும் பேரலைகளைப்போலக் கதைகள் சொல்ல ஆரம்பித்ததும் எல்லாரும் அதில் மூழ்கிவிட்டனர். ஒரு நகரத்தைக் கதைகளின் நகரமாக மாற்றிய இந்த அற்புதமான கதையை நீங்களும் படியுங்கள்.

- S. Jayaraman

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

உலகத்திலேயே மிகப் பெரிய, மிகப் பரபரப்பான நகரம் ஒன்றில் ஒரு சிறுமி வசித்து வந்தாள்.

கதைகள் என்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவளுக்கு தெரிந்தவர்கள் யாருக்கும் கதை சொல்ல நேரமில்லை.

"எனக்கு ஏகப்பட்ட வேலைகள் உள்ளன" என்றாள் அம்மா.

அப்பாவோ, "நான் செய்தித்தாள் படிக்கிறேன்" என்றார்.

"நான் கிரிக்கெட் விளையாடுவது உனக்குத் தெரியவில்லையா?" என்றான் அண்ணன்.

பக்கத்து வீட்டுக்காரரோ, "பொருள்கள் வாங்க நான் சந்தைக்குச் செல்லவேண்டும்" என்றார்.

பள்ளி ஆசிரியர் "கதைகள் எதற்கு? முதலில் கணக்குகளைப் போடுவோம்" என்றார்.

எல்லாரும் பரபரப்பாக இருந்தார்கள். எல்லாரும் நேரத்தைத் துரத்திக்கொண்டிருந்-தார்கள்.

பலர் எப்பொழுதும் சோர்வாகவும் எரிச்சலுடனும் இருந்தார்கள். கதைகள் சொல்லமட்டும் யாருக்குமே நேரம் இருக்கவில்லை.

ஒருநாள் அந்தச் சிறுமியின் பள்ளிக்கு ஓர் அக்கா வந்தார்.

அவர் ஆசிரியை அல்ல, மாணவியும் அல்ல. மாணவிகளைவிடப் பெரியவர், ஆசிரியர்களைவிடச் சிறியவர். அவருடைய கண்களில் கனிவும் கத்தில் புன்னகையும் இருந்தது.

குழந்தைகளுக்கெல்லாம் அவர் ஒரு தோழியாகத் தெரிந்தார், ஆசிரியர்களுக்கும்தான்!

அவருக்குக் கதைகள் ஏதேனும் தெரிந்திருக்குமோ என்று அந்தச் சிறுமி யோசித்தாள்.

அக்காவின் அருகில் சென்று, "நீங்கள் எனக்கு ஒரு கதை சொல்வீர்களா? உங்களுக்கு நேரம் இருக்குமா?" என்று வெட்கத்துடன் கேட்டாள்.

அக்கா அந்தச் சிறுமியை உற்றுப்பார்த்து, "நிச்சயமாக" என்றார்.

"நான் உனக்குக் கதை சொல்கிறேன்.

உனக்கு எப்படிப்பட்ட கதை வேண்டும்?"

எதிர்பார்ப்புடன் சிறுமி கண்களை விரித்து, "எனக்குச் சிங்கக் கதை வேண்டும்" என்றாள்.

அக்கா பள்ளியின் வராண்டாவில் உட்கார்ந்துகொண்டு, காட்டில் தொலைந்துபோன ஒரு சிறு சிங்கத்தைப்பற்றிய கதையை அந்தச் சிறுமிக்குச் சொல்ல ஆரம்பித்தார்.

சிறுமி ஆடாமல் அசையாமல் ஆர்வத்துடன் கதையைக் கேட்டாள்.

அக்கா மிகவும் விரிவாகக் கதை சொன்னார். காட்டில் மிகப் பெரிய மரங்களின் கிளைகளினூடே காற்று செல்வதையும், உயரமான புற்கள் காற்றில் அசையும் மென்மையான ஒலிகளையும், சின்ன சிங்கக்குட்டியின் மென்மையான தோலின் மெத்தென்ற ஸ்பரிசத்தையும்கூட அந்தச் சிறுமியால் உணர முடிந்தது.

அக்கா கதை சொல்வதைக் கேட்டு, அருகில் விளையாடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமியின் நண்பர்களும் அங்கே வந்து அமர்ந்தார்கள்.

சற்று நேரத்தில் அவர்களும் கதையில் மூழ்கிவிட்டார்கள்.

சிறிது நேரத்தில் சிறுமியின் வகுப்பு மொத்தம் அங்கே சேர்ந்தது. கதையை கேட்டதோடு, அதை அவரவர் மனத்திலும் கற்பனை செய்து பார்த்தார்கள். "இன்னும் கதைகள் வேண்டும்" என்று கேட்டார்கள்.

அக்காவுக்கு நிறைய கதைகள் தெரியும் என்பது அந்தச் சிறுமிக்கும் அவளது வகுப்புத் தோழர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விரைவில் புரிந்தது.

அக்காவுக்குக் குரங்குகள், பறவைகள் கதை தெரியும்.

ஆக்ரோஷமான நாய்கள், அநியாயம் செய்யும் பூனைகள்,

நீல நதிகள், ஆழமான கடல்களில் உள்ள மீன்கள்,

உயரமான மலைகள், பசுமையான பள்ளத்தாக்குகள்,

பெரிய நகரங்களில் வசிக்கும் குழந்தைகள், கிராமங்களில் வாழும் குழந்தைகளைப்பற்றிய கதைகள், சாகசங்கள், மர்மங்கள் நிறைந்த கதைகள், கம்பீரமான அரசர்கள், அழகான ராணிகளைப்பற்றிய கதைகள், பயமாக இருந்தால் என்ன செய்யவேண்டும், வருத்தம் வந்தால் என்ன செய்யவேண்டும், தொலைந்த புதையல்களைக் கண்டுபிடிப்பது எப்படி, அற்புதமான ரகசியங்களைத் தெரிந்துகொள்வது என்று பலவிதமான விஷயங்களும்

அக்காவுக்குத் தெரிந்திருந்தது.

தினம் அந்தச் சிறுமியும் அவளது நண்பர்களும் அக்காவிடம் உட்கார்ந்து கதை கேட்டார்கள்.

மற்ற வகுப்புகளிலிருந்தும் குழந்தைகள் வந்தார்கள்.

அந்தப் பள்ளியின் ஆசிரியர்களும் வந்தார்கள்.

அக்கம்பக்கத்திலுள்ள பள்ளிகளிலிருந்தும்

கதை கேட்கக் குழந்தைகள் வந்தார்கள்.

பள்ளியில் படிக்காத குழந்தைகளும் கதை கேட்க வந்தார்கள். பள்ளியை விட்டு விலகிச் சென்ற குழந்தைகளும் வந்தார்கள். பள்ளிக்குச் செல்ல வயதாகாத சிறு குழந்தைகளும் வந்தார்கள்.

சிலர் உட்கார்ந்துகொண்டு கதை கேட்டார்கள்.

சிலர் நின்றபடி கதை கேட்டார்கள்.

சிறு குழந்தைகள் குப்புறப்படுத்தபடி, இரு கைகளால் முகத்தைத் தாங்கியபடி கதை கேட்டார்கள்.

கதை சொல்வதைக் கேட்டுக் கேட்டு எப்படிக் கதை சொல்வது என்று அவர்கள் கற்றுக்கொண்டார்கள்.

கதைகளை எப்படிக் கட்டுவது,கதைகளை எப்படித் திரிப்பது, கதைகளை எப்படி நெய்வது, அதற்கு எப்படி வேலைப்பாடு செய்வது, எப்படிக் கதைகளைச் சமைப்பது, எப்படிக் கதைகளை அகன்ற நீல வானத்தில் பட்டம்போலப் பறக்கவிடுவது என்றெல்லாம் அவர்கள் தெரிந்துகொண்டார்கள்.

அதன்மூலம், கதை கேட்பவர்கள் கண்ணைச் சிமிட்டாமல், ஆடாமல், அசையாமல் கதை முடியும்வரை வசியம் செய்ததுபோல இருக்கும்படி எவ்வாறு கதை சொல்வது என அவர்கள் எல்லாரும் கற்றுக்கொண்டார்கள்.

மெதுவாக அக்கா, அந்தச் சிறுமி, குழந்தைகள் மூலமாகக் கதைகள் நகரம்ழுவதும் பரவத் தொடங்கின. எல்லாரும் கதைகள் கேட்க ஆரம்பித்தார்கள். எல்லாரும் கதைகள் சொல்லவும் ஆரம்பித்தார்கள்.

தாய்மார்கள் வேலை செய்வதை நிறுத்திவிட்டார்கள். அப்பாக்கள் செய்தித்தாள்களைப் படிப்பதை நிறுத்தினார்கள். ஆசிரியர்கள் கணிதப் புத்தகத்தைத் தள்ளிவைத்தார்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் கடைக்குப் போவதை நிறுத்திவிட்டார்கள்.

எல்லாருமே கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அண்ணன்கள் கிரிக்கெட் விளையாடவில்லை. தங்கைகள் ஸ்கிப்பிங் விளையாடுவதை நிறுத்தினார்கள். எல்லாருமே கதை கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

பஸ் ஓட்டுநர் பஸ்ஸை விட்டு இறங்கிக் கதை கேட்க வந்தார். நடத்துநரோ டிக்கெட் பையையும் பணத்தையும் பஸ்ஸிலேயே மறந்துவிட்டார். பயணிகளுக்குக் கதை சொல்வதில் அவருக்கு அத்தனை அவசரம்.

நகரத்தில் ரயில்களும் ஓடவில்லை. ஓட்டுநர்கள் கதை கேட்பதிலேயே மூழ்கியிருந்தார்கள். செய்தித்தாள்கள் அச்சடிக்கப்படவில்லை. கட்டடங்கள் கட்டப்படவில்லை. மேம்பால வேலைகள் முடிக்கப்படவில்லை.

உணவகங்களில் இட்லி, தோசை கிடைக்கவில்லை. பஜ்ஜி, பக்கோடா கிடைக்கவில்லை. மீனவர்கள் மீன் பிடிக்கப் போகவில்லை. கதை சொல்வது அல்லது கதைகளைக் கேட்பதுதவிர எதையும் செய்ய யாருக்குமே ஆர்வமில்லை.

தபால்காரர்கள் கதைகளைக் கேட்பதில் நேரத்தைக் கழித்ததால், தபால்கள் யாருக்கும் சென்று சேரவில்லை.

போக்குவரத்துக் காவலர் பரபரப்பான சாலைகளின் நடுவே இருந்தபடி வாகன ஓட்டுநர்களுக்குக் கதை சொல்லிக்கொண்டிருந்தார்.மக்கள் எல்லாருமே கதை கேட்பதில் மூழ்கிவிட்டதால், நகரத்தில் தொலைக்காட்சிகள் இயங்கவில்லை.

ஆக, ஒட்டுமொத்த நகரமும் முழுமையாக உறைந்துபோனது.

நகர மேயருக்குக் கவலை ஏற்பட்டது. கடல் பக்கமாக இருந்த தன்னுடைய பெரிய வீட்டின் ஓர் அறையில் அவர் அங்கும் இங்கும் நடந்தபடி தனது மந்திரிகள் குழுவிடம் கேட்டார், "இப்பொழுது நாம் என்ன செய்வது?"

"யாருமே வேலை செய்வதில்லை.

நகரத்தில் எதுவுமே நடப்பதாகத் தெரியவில்லை" என்றார் மேயர்.

மந்திரிகள் குழு தீவிரமாக உழைத்துத் திட்டங்களைத் தீட்டியது, யுக்திகளை வகுத்தது. ஆனால் பலன் ஏதுமில்லை. யாரும் சொன்ன பேச்சைக் கேட்கவில்லை.

இதனால், அக்காவும் அந்தச் சிறுமியும் மேயரின் மாளிகைக்கு அழைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும்தான் கடலளவு கதைகளைச் சொல்லி நகரம் ழுவதையும் மூழ்கவைத்ததாக மந்திரிகள் குழுவிடம் யாரோ சொன்னார்கள்.மிக உயரமான தூண்களையும் மிக உயரத்தில் கூரையையும் கொண்டிருந்த அந்தப் பெரிய அறையில்,

அந்தச் சிறுமி இன்னும் சிறியதாகத் தெரிந்தாள். அக்காவின் கையை இறுகப் பற்றியிருந்தாள் அவள். பருமனான, உயரமான ஆண்களும் பெண்களும் கொண்ட மந்திரிகள் குழுவின் நடுவே அக்காவும் சிறியதாகத் தெரிந்தாள். யார் முகத்திலுமே சிரிப்பு இல்லை. எல்லார் முகத்திலும் கோபமும் சிடுசிடுப்பும் தெரிந்தது.

மேயர் தன்னுடைய அதிகாரக் குரலில், "உங்களுடைய கதைகள் இந்த நகரத்தையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. இப்பொழுது என்ன செய்வது?" என்றார்.

யாரும் பதில் சொல்லவில்லை. அறை நிசப்தமாக இருந்தது. எங்கோ தொலைவில் மேயரின் தோட்டக்காரன், மேயரின் மெய்க்காப்பாளருக்கு ஏதோ கதை சொல்வதுமட்டும் மெலிதாகக் கேட்டது. சிறுமி அக்காவின் கையை இன்னும் இறுகப் பற்றிக்கொண்டாள்.

அக்கா மேயரை நேராக உற்றுப் பார்த்தார். அவரது குரல் தெளிவாக இருந்தது. "தினம் காலையில் ஒரு கதை, மாலையில் ஒரு கதை என்று இருக்கட்டும்" என்றார். "இப்படிச் செய்தால் எல்லாருக்கும் கதைகள் கிடைக்கும். வேலைகளும் நடக்கும்."

"அருமையான திட்டம்!" என்றார்

முழு நகரம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. அன்று முதல் அந்த நகரத்தில் தினம் காலையில் ஒரு கதை, இரவு தூங்கப்

போகுன் ஒரு கதை சொல்லப்படுகிறது.

பெரிய, பரபரப்பான

அந்த நகரம் "கதைகளின் நகரம்" என்றே அழைக்கப்பட்டது.

Dedication by Rukmini Banerji

For all the young people of Pratham who work with children.

Dedication by Bindia Thapar

Especially for Nui. Also for Smitu, Amma, Tariq, Suvir and Amit. And... for Maow.

Acknowledgements by Bindia Thapar

For Manisha, Sampurna and Rinki, for waiting and believing.