kadaladiyal or arputha ulagam

கடலடியில் ஓர் அற்புத உலகம்!

எங்களுடன் கடலுக்கு வாருங்கள், பவளப்பாறைகளின் அற்புத உலகத்தைக் காணலாம், சில விநோதமான, அழகிய கடல் பிராணிகளைக் கண்டு மகிழலாம்!

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நீல வானம், அமைதியான நீர்ப்பரப்பு. ஆஹா! கடலுக்குள் மூழ்கிப்பார்ப்பதற்கு ஏற்ற சூழ்நிலை! நாங்கள் ஒரு சிறிய படகில் புறப்பட்டோம். பெரிய சாகசங்களுக்குத் தயாரானோம்!

நாங்கள் கடலுக்குள் பாய்வதற்கு ஏற்ற ஓர் இடத்தை நெருங்கினோம். எங்களுடைய சாதனங்கள் அனைத்தும் சரியாக இருக்கின்றனவா என்று கவனமாகப் பார்த்தோம். காலில் துடுப்புகளையும் முகத்தில் முகமூடியையும் அணிந்துகொண்டோம்.

தொபீர்! நாங்கள் தண்ணீருக்குள் குதித்தோம்! உடனடியாக, மஞ்சள் பின்பகுதியைக் கொண்ட ஃப்யூசிலையர் மீன்கூட்டம் ஒன்று எங்களை வரவேற்றது.

இந்தப் பெரிய டேபிள் கோரல் பவளப்பாறையில் பலவகை உயிரினங்கள் இருந்தன: ஓரியன்டல் ஸ்வீட்லிப்ஸ், பேரட்ஃபிஷ், பேட்ஃபிஷ், அழகிய வடிவம்கொண்ட ஒரு ந்யூடிப்ராங்க் கூட இருந்தது.

தடிமனான எழுத்துகளில் உள்ள உயிரினங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, இந்தப் புத்தகத்தின் கடைசி பக்கங்களுக்கு வாருங்கள்.

இங்கே பாருங்கள்! ஒரு ட்ரம்பெட்ஃபிஷ் வகை மீன், தன் நிறத்தை மாற்றிக்கொண்டு மஞ்சள் டேங்க் வகை மீன்களோடு கலந்துவிட்டது. ஆனால், உங்களை ஏமாற்றமுடியுமா? நீங்கள் அதை எளிதாகக் கண்டுபிடித்து விடுவீர்கள்தானே?

ஆ! லயன்ஃபிஷ்! நல்லவேளை அதை நெருங்காமல் விலகிவந்துவிட்டோம். அதன் முதுகில் இருக்கும் முட்களில் விஷம் உண்டு!

இந்த க்ளௌன்ஃபிஷ்கள் தங்களுடைய வீடான கடல் அனெமொனிகளை கவனமாகப் பாதுகாக்கின்றன.  ஆனால், சிறிதுநேரம்  கழித்து, என்னை அருகே வந்து சில படங்களை எடுக்கவிட்டன.

நாங்கள் ஒரு ஹனிகோம்ப் மொரெ ஈல் மீனைப் பார்த்தோம். அதன் பற்களை

க்ளீனர் ராசெஸ்கள் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தன. 'உங்கள் பல்லையும்   சுத்தப்படுத்தலாமா?' என்று அந்த மீன்கள் எங்களிடம் கேட்டன.

அதன்பிறகு, நாங்கள் சில ட்ரிக்கர்ஃபிஷ்கள், ஸீ அர்ச்சின்களைப் பார்த்தோம். ஒரு கோரல் க்ரூப்பரும் ஒரு ரீஃப் ஆக்டோபஸும் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்ததைப் பார்த்தோம்!

அந்த விளையாட்டில் ஜெயித்தது ஆக்டோபஸ்தான். கண்ணாமூச்சி விளையாடுவதில் அதை யாராலும் வெல்ல முடியாது! ஆக்டோபஸ் போலவே, பைப்ஃபிஷ்களும் நன்றாக ஒளிந்து விளையாடும். இதோ, இந்தப் படத்தில்கூட இரண்டு கோஸ்ட் பைப்ஃபிஷ்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

கடலின் அடிப்பகுதியில் சில வொய்ட்டிப் ரீஃப் சுறாக்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. சுறா என்றதும் பயப்படாதீர்கள். அவை ஆபத்தானவை அல்ல, நாங்கள் அவற்றை நன்றாக நெருங்கிப் பார்த்தோம்.

நாங்கள் இந்த ஹாக்ஸ்பில் ஆமையை சிறிது தூரம் பின்தொடர்ந்தோம். அது பாறைகளின் மீது தன்னுடைய மதிய உணவுக்காக ஒரு நல்ல கடற்பாசியைத் தேடிக்கொண்டிருந்தது.

நாங்கள் படகுக்குத் திரும்பத் தீர்மானித்தோம். அப்போது, ஒரு மேன்ட்டா ரே மீன் எங்களைக் கடந்து பறந்தது. அதைப் பார்த்து நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம். அந்த மீனின் மீது இரண்டு ரீமோரா மீன்களும் சவாரி செய்துகொண்டிருந்தன!

அவ்வளவுதான், படகுக்குத் திரும்பிவிடலாம் என்று நினைத்தநேரத்தில், நாங்கள் இன்னோர் அற்புதமான காட்சியைக் கண்டோம். அங்கே ஒரு டுகாங்க் கடல்புல்லைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது!

ஆஹா, என்ன ஒரு அருமையான அனுபவம்! மறுபடி எப்போது டைவிங் செல்லலாம் என்று எனக்கு ஆசையாக உள்ளது!

பவளப்பாறைகள் என்பவை, ஒருவிதத்தில் தாவரங்கள்; இன்னொரு விதத்தில் பிராணிகள். பவளப்பாறைகளுக்குள் வாழும் ஆயிரக்கணக்கான சிறு பாசிகள் அவை வளர ஊட்டமளிக்கின்றன. பவளப்பாறைகளின் வெளி ஓடு கடினமானது. அவை பல்வேறு வடிவங்களில் வளர்கின்றன.

ப்ளாங்க்டன் என்பவை பாசிகள், பாக்டீரியாக்கள், பெரிய பிராணிகளின் முட்டைகள், லார்வாக்கள் மற்றும் சிறு பிராணிகள் ஆகியவற்றின் கலவை ஆகும். இவை கடல்நீர் ஓட்டத்தில் மிதந்து கொண்டிருக்கும். பல கடல்வாழ் உயிரினங்களுக்கு இவையே முக்கிய உணவு.

ஃபெதர் ஸ்டார்ஸ் பார்ப்பதற்குச் செடிகளைப்போலவே இருக்கும். ஆனால், உண்மையில் இவை பிராணிகள்தான். இவை தங்களது இறக்கைபோன்ற கைகளைப் பயன்படுத்தி மிதக்கும் ப்ளாங்க்டன்களைப் பிடித்துச் சாப்பிடும்.

பேரட்ஃபிஷ்களுக்கு கிளிமூக்கு போன்ற ஒரு வாய்ப்பகுதியில் வலுவான பற்கள் உண்டு. இதைப் பயன்படுத்தி, வலுவான பவளப்பாறையிலிருந்து பாசிகளைச் சுரண்டிச் சாப்பிடுகின்றன. பேரட்ஃபிஷ்களின் சில வகைகள் பவளப்பாறைத் துண்டுகளைக்கூடச் சாப்பிடும். பின்னர் இவை ஒரு மென்மையான மணலை வெளிவிடுகின்றன. இந்த மணல் கரைக்குத் தள்ளப்பட்டு, அழகிய வெள்ளைமணல் கடற்கரைகள் உருவாகின்றன.

க்ளௌன்ஃபிஷ் மற்றும் கடல் அனெமொனிகள் சேர்ந்து வாழ்கின்றன. ஒன்றுக்கொன்று உதவிக் கொள்கின்றன. உதாரணமாக, க்ளௌன்ஃபிஷ்கள் அனெமொனிகளின் விழுதுகளைச் சுத்தப்படுத்துகின்றன. மற்ற மீன்களை அருகே அழைத்துவந்து அனெமொனிகளுக்கு உணவாக்குகின்றன. பதிலுக்கு, அனெமொனிகள் தங்களுடைய விஷம் நிறைந்த விழுதுகளுக்குள் க்ளௌன்ஃபிஷ்கள் பாதுகாப்பாக வாழ அனுமதிக்கின்றன, அவற்றைக் கொட்டுவதில்லை.

க்ளீனர் ராசெஸ்கள் என்பவை சின்னஞ்சிறு மீன்கள். இவை பெரிய மீன்களின் உடலில் ஒட்டியிருக்கிற பிராணிகளையும் அவற்றின் இறந்த தோலையும் சாப்பிட்டு, அவற்றைச் சுத்தப்படுத்துகின்றன. இவற்றின் நிறத்தையும் நடனம்போல் இவை நகரும் தன்மையையும் வைத்து, பெரிய மீன்கள் இவற்றை அடையாளம் காண்கின்றன.

ரீஃப் ஆக்டோபஸ் தன்னுடைய நிறத்தையும் தோலின் அமைப்பையும் மாற்றிக்கொண்டு ஆங்காங்கே ஒளிந்துகொள்ளும். பவளப்பாறைகளில் உள்ள ஓட்டைகளில் அல்லது மணலுக்குள் தன்னைப் புதைத்துக்கொண்டு வாழ்கிறது.

கோஸ்ட் பைப்ஃபிஷ்கள் ஜோடியாகத்தான் தென்படும். இவை தங்களுடைய தலையைக் கீழே வைத்துக்கொண்டு, கடல் புல், பவளப்பாறைகள் அல்லது ஃபெதர் ஸ்டார்களுக்குள் மறைந்தபடி மிதக்கும். ரீஃப் ஆக்டோபஸ் போல, இவையும் நிறத்தை மாற்றிக்கொண்டு சூழலுடன் ஒன்றாகக் கலந்துவிடும்.

வொய்ட்டிப் ரீஃப் ஷார்க் மெலிதான உடல், அகன்ற தலை, முதுகுப்பக்கத்தில் வெள்ளை முனை, வாலில் துடுப்பு கொண்டது. இவ்வகை மீன்கள் இரவுநேரத்தில் வேட்டையாடும். பகல்நேரத்தில் பெரும்பாலும் உறங்கிக்கொண்டிருக்கும்.

ஹாக்ஸ்பில் ஆமையின் உடல் தட்டையானது, அதன் ஓடு கூர்மையான விளிம்புகளைக் கொண்டிருக்கும். அதன் கூரான, வளைந்த வாய், பருந்தின் அலகுபோலத் தோன்றும்.

மேன்ட்டா ரேக்கள் பெரிய மீன்கள். இவற்றின் பக்கங்களில் உள்ள துடுப்புகள் இறகுபோல் தோன்றும். அவற்றைப் பயன்படுத்தி இவை நளினமாக நீரில் நீந்திச் செல்லும். சில மேன்ட்டா ரேக்கள் மிகப் பெரியவை. அவற்றின் நீளம், ஓர் இறக்கை முனையிலிருந்து இன்னோர் இறக்கை முனைவரை 23 அடிகூட இருக்கலாம்!

டுகாங்க் என்பது கடலில் வாழும் ஒரு சைவப் பாலூட்டி. இதற்குப் பிடித்த உணவு, கடல் புல். இதைச் சாப்பிடுவதற்காகவே இதற்கு விசேஷ வடிவ மூக்குப்பகுதி உண்டு. டுகாங்க்கை கடல் பசு என்றும் அழைப்பார்கள்.