kadalai thediya thavalai

கடலைத் தேடிய தவளை

மரத்தில் வாழும் தவளையான தாமு விரிந்து, பரந்த நீலக் கடலைப் பார்க்க விரும்புகிறான். நீங்களும் அவனோடு மேற்கு மலைத் தொடருக்கு ஒரு நடைப் பயணம் போகலாமே! அங்கே ஏராளமான வேடிக்கையான, குண்டான, மனத்தை வசீகரிக்கும் பலவிதமான உயிரினங்கள் உண்டு. இயற்கையின் சிறப்பம்சங்களை நகைச்சுவையுடன் சுவாரசியமான கதைமூலம் சொல்கிறது இந்தப் புத்தகம்.

- K. R. Lenin

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஃபிலௌடஸ், மரத்திலேயே வாழும் தவளை

தாமு என்று நண்பர்களால் அழைக்கப்பட்ட அவன், ஃபிலௌடஸ் எனும் மரத்திலேயே வாழும் தவளை இனத்தைச் சேர்ந்தவன். தான் வாழும் அந்தப் பெரிய மரத்தை விட்டு அவன் எப்போதும் கீழே தரைக்கு இறங்கியதே கிடையாது. தாமு என்ன, அவனுடைய அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, முப்பாட்டன், யாருமே அந்த மரத்தை விட்டுக் கீழே இறங்கியதாகச் சரித்திரமே கிடையாது. அவர்கள் எல்லாரும் பரம்பரை பரம்பரையாக அந்த மரத்திலேயே வாழ்நாளைக் கழித்தார்கள். தாமு பிறந்ததும் அப்பெரிய மரத்தின் ஒரு பொந்திலேதான்.

சிறு வயதில் மழைக்காலங்களில் மரத்தின் பொந்துகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் நீந்தி விளையாடியிருக்கிறான். தாமுவின் அப்பாவும் சிறு வயதில் அதுபோல நீந்தி விளையாடியிருக்கிறாராம்.

வேறு இனத்தைச் சேர்ந்த தவளைகள்

“நீ தலைப் பிரட்டையாக இருந்ததே

இல்லையே” என்று தாமுவைச் சீண்டுவதுண்டு.

ஆனால், தாமுவுக்குத் தன் இனத்தைப் பற்றிப் பெருமிதம்தான்.

அந்தப் பெரிய மரம் ஓர் இருண்ட, அடர்ந்த, சூரிய வெளிச்சமே எட்டாமல், இருள் சூழ்ந்து, பனிநீரால் பாசி படர்ந்திருந்த ஷோலா வனப் பிரதேசத்தின் நடுவே இருந்தது.

இதமான ஷோலா வனங்களும் கடுமையான புல்வெளிகளும்

அந்த ஷோலா வனம் மலைப் பள்ளத்தாக்கில் அமைந்திருந்தது. சுற்றிலும் புல்வெளி நிறைந்த மலைகள். மழைநீர் ஓடையாக மலைச் சரிவில் வளைந்து நெளிந்து ஓடி வரும் வழியெங்கும், குறுகிய, நீண்ட ஷோலா வனம் காணப்பட்டது. கோடைக் காலத்தின் வெப்பம் புல்வெளியில் சுட்டெரிக்கும்போதும் ஷோலா வனத்துக்குள் குளிர்ச்சியாக இருக்கும்.

புல்வெளி வாழ்வதற்கு ஏற்ற இடமல்ல. பகலில் கடும் வெப்பமும் இரவில்

கடுங்குளிருமாக இருக்கும். ஆனால், ஷோலா வனத்துக்குள் பகலிலும் இரவிலும் எப்போதும் இதமாக இருக்கும். ஆகையால், “நீ ஒருபோதும் இந்த மரத்தைவிட்டுப் புல்வெளிக்குப் போய்விடக்கூடாது,” என்று தாமுவின்

அப்பா அவனுக்குச் சொல்லியிருக்கிறார்.

தாமுவும் நண்பர்களும் தங்கள் உலகைப்பற்றி விவாதிக்கிறார்கள்

பவானி, பங்கிடப்பல், சிஸ்பாரா, நடுகனி, மடுப்புமலை ஷோலா என்கிற இடங்களைப்பற்றியெல்லாம் தாமு கேள்விப்பட்டிருக்கிறான்.

ஆனால், அந்த இடங்களைப்பற்றித் தெளிவாக ஒன்றும் அவனுக்குத் தெரியாது. வெளியுலகத்தை ஓரளவு சுற்றிப் பார்த்த சில நண்பர்கள் அவனுக்கு இருந்தார்கள். கதிர்க்குருவி இமயமலைத் தொடரிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் குளிர் காலத்தில் தெற்கு நோக்கிப் பறந்துவரும், அதற்கு மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளைப்பற்றி நன்கு தெரியும். மேற்குத்தொடர்ச்சி மலைப் பரப்பில் நீலகிரி ஒரு பகுதி. முக்குருத்தி நீலகிரியின் ஒரு பிரிவு. அந்தப் பிரிவுக்குள் அடங்கியது சிஸ்பாரா.  அந்த சிஸ்பாராவில்தான் தாமு வாழும் அந்தப் பெரிய மரம் இருந்தது.

தாமு உலகைக் காணத் தீர்மானிக்கிறான்

தாமுவின் நண்பர்கள் அவனுக்குப் பெரிய, நீலக் கடலைப்பற்றிச் சொன்னார்கள். அதைக் கேள்விப்பட்ட தாமு, தான் அந்தக் கடலைப் பார்த்தாகவேண்டும் எனத் தீர்மானித்தான். அவனுடைய நண்பர்கள் அவன் முடிவைக்கேட்டு அவனைக் கேலி செய்தார்கள். கதிர்க்குருவி, தான் கண்ட பல கடல்களோடு ஒப்பிடும்போது மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அடுத்துள்ள கடல் மிகவும் சிறியது என்றது.

தாமு கடலைப் பார்க்கவேண்டும் என்கிற தன் தீர்மானத்தில் உறுதியாக இருந்தான். ஒருநாள் காலை, அப்பெரிய மரத்திலிருந்து கிளைக்குக் கிளை தாவி, கால் விரல்களால் கிளைகளை இறுகப் பற்றிக்கொண்டு மெதுவாக இறங்கித் தரைக்கு வந்தான். ஈரமான நிலத்தில் எங்கும் உதிர்ந்த இலைகள் கிடந்தன. அவனைத் தாண்டி ஒரு மூஞ்சூறு ஓடியது. நத்தைகளும் புழுக்களும் ஊர்ந்து சென்றுகொண்டிருந்தன.

தாமு தயங்கினான். திரும்பவும் மரத்தின்மீதே ஏறிக்கொள்ளலாமா

என்று நினைத்தான். பின்னர் மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு

ஷோலா வனத்தின் எல்லையை நோக்கித் தாவித்

தாவிச் சென்றான்.

வெளியுலகம்

தாமு கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்துக்கு வந்தான். அவன் நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது. அவன் காணப்போவது என்ன? உலகத்தின் விளிம்பா? ஏகப்பட்ட உணவு கிடைக்கும் தவளைகளின் சொர்க்கமா?

முடிவில் அவன் வந்து சேர்ந்த இடம் பனிப்படலத்தால் மூடியிருந்த புல்வெளி. தாமுவால் பனிப்படலத்தினூடே எதையும் பார்க்க இயலவில்லை. வெகு தூரத்தில் தவளைகளின் குரல் கேட்டது. அவன் மெதுவாக முன்னால் சென்று, புல்வெளியில் முதன்முறையாகக் கால் வைத்தான். அங்கு நிலவிய குளிர் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. காற்றும் நிலமும் ‘சில்’ லென்று இருந்தன. இதமான இலைச்சருகுகள் இல்லாமல் எங்கும் புல்மட்டுமே.

கொஞ்சம் பனிப்படலம் விலகியது. எதிரே விரிந்த காட்சி தாமுவை ஆச்சரியப்படவைத்தது. எதிரே நீல மலை, மலை முழுவதும் கம்பளம் விரித்தாற்போலக் குறிஞ்சிப் பூக்கள். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைமட்டுமே பூக்கும் அரிய செடி அது. ஷோலா வனப்பிரதேசத்தின் எல்லைகளில் ரோடோடென்ட்ரான் செடிகள் சிவப்பு நிறப் பூக்களுடன் காணப்பட்டன.

புஃபோவுடன் சந்திப்பு

தாமு மலைச்சரிவில் தாவித் தாவி இறங்கிக்கொண்டிருந்தான். தண்ணீர் சலசலவென்று ஓடும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் தாமு மலைச்சரிவில் பாய்ந்து ஓடும் ஒரு நீரோடையின் கரைக்கு வந்தான். ஆங்காங்கே சிறிய பாறைகள் கரையை அலங்கரித்தன. ஒரு பாறையில் தாமு ஒரு மிகப் பெரிய தவளையைக் கண்டான். அத்தனை பெரிய தவளையை அவன் இதுவரை பார்த்ததேயில்லை.

புஃபோ, கொழுத்து செழிப்புடன் ஒரு கவலையும் இல்லாத முகபாவத்துடன் உட்கார்ந்திருந்தது. கொத்துக்கொத்தாக முட்டைகள் நீரில் மிதந்துகொண்டிருந்தன. சில நாள்களில் அந்த முட்டைகள் சிறு சிறு புஃபோ தலைப்பிரட்டைகளாக மாறிவிடும். புஃபோவின் உறவினர்கள் நாடுமுழுவதும் இருந்தார்கள், வயல் வெளி, காடு, நகரம் என எல்லா இடங்களிலும் புஃபோவைக் காணலாம்.

“ஓ, ராட்சதத் தவளையாரே! நீங்க இந்தச் சேற்று

நிலத்தில வாழறவரா?” என்று தாமு கேட்டான்.

“பொடிப்பயலே, நான் ஒரு தேரை, நான் எல்லா இடங்களிலும்

வாழறவன்.” என்று புஃபோ மிகப் பெருமிதத்துடன் சொன்னது.

சாலி, புல்வெளி நிலப் பச்சோந்தி

சாலி புல்வெளி நிலப் பரப்பில் வாழும் ஒரு பச்சோந்தி. தோட்டங்களில் வாழும் பச்சோந்திகளைப்போலவே இதுவும் நினைத்தபோது தன் உடல் நிறத்தை மாற்றிக்கொள்ளும். தாமு அதன் அருகில் சென்றதும், அது தன் நிறத்தைப் பழுப்பு கலந்த பச்சையாக மாற்றிக்கொண்டு, நிறத்தால் புல்வெளியுடன் ஒன்றிப்போனது. சிறிது நேரத்தில் இந்தச் சின்னத் தவளையால் தனக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று புரிந்துகொண்டு தன் பழைய நிறத்துக்கு வந்தது.

“வணக்கம், நான் தாமு, மரத்தில் வாழும் தவளை. எனக்கு நீலக் கடலைப் பார்க்கணும். உதவி செய்வீங்களா?” என்று தாமு கேட்டான்.

“என்கூட வா, வழி காட்டுறேன்.” என்று சொல்லிவிட்டு சாலி வேகமாக மலை உச்சிக்குச் சென்றது. தாமுவும் அதன் பின்னால் தத்தித் தத்திப் போனான்.

“மலை உச்சியை எட்டியதும், அந்த மலைச் சரிவில இறங்கி, அடுத்த மலையில ஏறிக்கோ, அங்கிருந்து இறங்கி, அங்கே பாயும் ஆற்றங்கரை ஓரமாப் போ. அங்க இருக்கற ஒரு சின்ன மலையைத் தாண்டினா நீலக் கடலை நீ பாக்கலாம்.” என்றது சாலி.

அஹேடுல்லா, புல்வெளி நிலப் பாம்பு

தாமு பங்கிடப்பல் என்னும் பள்ளத்தாக்கை நோக்கி ஒரு குறுகிய பாதை வழியாக தத்தித் தத்தி வேகமாக இறங்கினான். புல் புதர்களில் குதித்தும் பாசி படர்ந்த பாறைகளில் சறுக்கியும் பள்ளத்தாக்கின் நடுவே வந்து சேர்ந்தான். பனிப்படலம் மூடிய மலைகளின் நடுவே நிற்கும்போது அவன் தன் தனிமையை உணர்ந்தான். சட்டென்று தலையை உயர்த்திப் பார்த்தவன் திடுக்கிட்டான். அவனெதிரே இருந்தது, தவளைகள் பார்க்கவே பயப்படும் ஓர் உயிரினம்.

பிளவுபட்ட நாக்கு துடிதுடிக்க அந்தப் பாம்பு தாமுவின் கண்களை நேரிட்டு நோக்கியது. தாமு பயத்தில் உறைந்துபோனான். ஆனால், அஹேடுல்லா அப்போதுதான் ஒரு தேரையை விழுங்கியிருந்தான். இன்னும் ஒரு வாரத்துக்கு அவனுக்குத் தீனி தேவையில்லை. மெதுவாக தாமுவின் அருகே வந்து “ஏதேனும் உதவி தேவையா?” என்று கேட்டான்.

தாமு தான் நீலக் கடலைத் தேடி வந்திருப்பதைப்பற்றிச் சொன்னான். அஹேடுல்லா, தாமு தன்னோடு மலையேறி வந்தால் அங்கிருந்துகடலுக்குச் செல்லும் பாதையைக் காட்டுவதாகச்சொல்லி உடன் அழைத்துச் சென்றான்.

பெரிய, நீலக் கடல்

மலைமீதிருந்து தாமு நிமிர்ந்து பார்த்தபோது பள்ளத்தாக்கில் அதைக் கண்டான், அவன் தேடி வந்த நீலக் கடல்! அது மிகப் பெரிதாக பல மலைகளைத் தொட்டுக்கொண்டு பரவியிருந்தது. அவன் அதைப் பிரமிப்புடன் பார்த்தான், கண்ணுக்கெட்டிய தூரம்வரை நீலக் கடல் விரிந்து வெகு தூரத்தில் அடிவானத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது.

தாமுவால் தன் கண்களை நம்பமுடியவில்லை. இது நிஜமா, அல்லது, காற்றும் பனியும் சூரிய ஒளியும் காட்டும் மாயையா என்று சந்தேகப்பட்டான்.

அவன் தத்தித் தத்திக் கடற்கரையை நெருங்கினான். தயக்கத்துடன் தண்ணீரில் ஒரு காலை வைத்தான், ஏதோ கடல் அவனை விழுங்கிவிடக்கூடும் என்பதுபோல! கடல் நீர் சில்லென்று இதமாக இருந்தது.

அவன் முன்பு பார்த்த நீர்நிலைகள் போலல்லாமல் சலனமின்றி அமைதியாக இருந்தது. மலை ஓடைகள் சத்தத்துடன் பாய்ந்து, கொப்பளித்து, ஆரவாரிப்பதைத் தாமு பார்த்திருக்கிறான். இதுபோல அமைதியான நீர்ப் பரப்பை அவன் பார்த்ததே இல்லை.

இன்னும் பெரிய கடல்

மரத்தில் வாழும் தவளைகளுக்கு மரப் பொந்துகளில் தேங்கும்

சிறிதளவு மழை நீரே மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அப்படிப் பொந்துகளிலும் கிளைகளுக்கு இடையே உள்ள இடைவெளிகளிலும் தேங்கும் கையளவு நீரோடு ஒப்பிட்டால் இந்தக் கடலை ஒரு பிரபஞ்சம் என்றே சொல்லலாம்.

“அடுத்து எங்கே போகப்போறே?” என்று கேட்டான் அஹேடுல்லா.

“தெரியல” என்றான் தாமு. “கடலப் பார்க்கணும்னு வந்தேன். பாத்துட்டேன். இனிமே வீட்டுக்குப் போகவேண்டியதுதான்!”

“ஆனா, பார்க்கவேண்டியது இன்னும் நிறைய இருக்கே” என்றான் அஹேடுல்லா. அவனுடைய மூதாதையர்கள் மேற்குத் திசையிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள். “இது ஒரு சின்ன ஏரிதான். மலையடிவாரத்தில் இதைவிடப் பெரிய கடல் இருக்கு, சூரியன் மறையற இடம் அதுதான்.”

“இதவிடப் பெரிய கடலா? நிஜமாவா?” நம்பமுடியாமல் கேட்டான் தாமு.

இன்னும் மேலே

இருவரும் மலைமேல் ஏறினார்கள். வளைவான பாதையில் அஹேடுல்லா வளைந்து, நெளிந்து ஏறினான். தாமுவும் அவன் பின்னால் போய்க்கொண்டிருந்தான். இருவரும் அந்த மலையிலிருந்த சிறிய ஷோலா வனப்பிரதேசத்தைக் கடந்து சென்றார்கள். லவங்கத்தின் மணம் அவனை எதிர்கொண்டது. அங்கு நிலவிய இதமான வெப்பம், ஈரம், வாசனைகள் எல்லாமே அவனுக்குப் பரிச்சயமானவை.

ஷோலா வனப் பிரதேசம் பஞ்சுபோன்ற தன்மையுடையது. பெரு மழையையும் தன்னுள் ஈர்த்துக்கொண்டு ஒவ்வொரு பிளவிலும் பள்ளத்திலும் சேற்றிலும் பாறைகளிலும் தேக்கிவைத்துக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக ஓடைகளாக வெளிவிடுகிறது.

அஹேடுல்லா நின்றான். அவன்முன்னால் ஒரு பாறை இருந்தது. ஆனால் அது மென்மையாகவும் இளஞ்சூட்டுடனும் இருந்தது. அதன் வாசனையே விசித்திரமாக இருந்தது.

“யானை!” என்றான் அஹேடுல்லா.

“இதுதான் யானையா?” என்றான் தாமு, அவன் நினைத்த அளவு அது சிறப்பானதாக இல்லாதது அவனுக்கு ஏமாற்றமளித்தது.

“சேச்சே, இது யானையோட சாணிதான்” என்றான் அஹேடுல்லா, “உண்மையான யானைகள் உன்னவிட ஆயிரம் மடங்கு, லட்சம் மடங்கு பெரிசா இருக்கும்.”

“ஆனா, யானையால எப்படி மலைமேல ஏறி வரமுடியுது?”

“யானையால எங்க வேணும்னாலும் போகமுடியும்” என்று சொல்லிக்கொண்டே அஹேடுல்லா மறுபடியும் ஏறத் தொடங்கினான்.

மலை உச்சியில்

மழை பெய்யத் தொடங்கியது. மழை நீர் குடம்

குடமாகக் கொட்டி ஓடையாகப் பெருக்கெடுத்து

புல்வெளி நிலப்பரப்பில் பாயத் தொடங்கியது.

“இங்கே மாதக்கணக்கில்கூட மழை பெய்யலாம்”

என்று மழைச் சத்தத்துக்குமேல் உரக்கக் கத்தினான்

அஹேடுல்லா. “தெரியும்” என்றான் தாமு.

தாமுவுக்கு மழை மிகவும் பிடிக்கும். ஆனால், புல்வேளிப் பிரதேசத்தில் மழைச் சகதியில் போவது கடினமாக இருந்தது. எந்த மரத்தின்மீதும் அவன் சமாளித்து விடுவான், ஆனால் புல்லிலும் சேற்றிலும் சிரமமாக இருந்தது. வெகு நேரம் கழித்து அவர்கள் ஒருவாறு மலை உச்சியைச் சென்றடைந்தார்கள்.

அங்கு கனத்த பனித்திரை மூடியிருந்தது. தாமுவுக்கு ஏமாற்றமாக இருந்தது. இது தேவையற்ற, முட்டாள்தனமான முயற்சியோ எனத் தோன்றியது. ஆனால், சீக்கிரமே பனித்திரை விலகியது.

மலையுச்சிக் காட்சி

பனித்திரை விலகியதும் அவர்கள் முன்னால் பிரமாண்டமான காட்சி தென்பட்டது. இதுவரை தாமு பார்த்த மரம், கடல், குறிஞ்சிப் பூக்கள் எல்லாம் இந்த அற்புதக் காட்சிக்கு ஈடாகாது. தாமுவும் அஹேடுல்லாவும் ஏறியிருந்த மலையைச்சுற்றி மூன்று செங்குத்தான பாறைகளைக்கொண்ட குன்றுகள் இருந்தன. ஆயிரம் அடி ஆழத்துக்குக் கீழே, தெற்கில் பீடபூமியும், வடக்கில் பசுமை நிறைந்த, சிறியதும் பெரியதுமான வரிசையான குன்றுகளும் இருந்தன.

வல்லூறுப் (Kestrel) பறவைகள் கத்திக் கொண்டே வட்டமிட்டுக்

கொண்டிருந்தன. மேற்கில் சூரியன் மறையவும் வானம் செவ்வண்ணம்

கொண்டு அந்நிலப்பரப்பு முழுவதும் காண்பதற்கு இதமான ஒளி பரவியது. மாலை நேரம் மாறி அந்திப்பொழுது வந்தது. மெல்ல

இருள் சூழத் தொடங்கியது. இருவரும் மேற்குத் திசையில் விரிந்த வர்ணஜாலத்தை மௌனமாக ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

வெகுதொலைவில் அடிவானத்தில் ஓர் ஒளிக் கீற்று தெரிந்தது.

“அந்த வெளிச்சத்துக்குப் பக்கத்துலதான் கடல் இருக்கு”

என்றான் அஹேடுல்லா. “கடல் நீண்டு போய்க்கொண்டே இருக்கும், உலகத்தின் விளிம்புவரை.”

அமைதிப் பள்ளத்தாக்கை நோக்கி

தாமு அந்தப் பெரிய கடலைப் பார்த்துவிடுவது என்று தீர்மானித்தான். ஆனால், அஹேடுல்லா அதற்குமேல் செல்லத் தயாராக இல்லை. அவன் தாமுவுக்கு சைலன்ட் பள்ளத்தாக்குக்குப் போகும் வழியைக்காட்டினான்.

அந்தப் பள்ளத்தாக்குக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்று தாமுவுக்கு முதலில் விளங்கவில்லை. ஆனால், அங்கு வந்த சிறிது நேரத்துக்குப்பிறகு அதைப் புரிந்துகொண்டான்.  அமைதி என்றால் மயான அமைதி. ஷோலாவனங்களைப்போல் இல்லாமல் இங்கு மரங்கள் உயரமாக இருந்தன. பள்ளத்தாக்கில் கீழே இறங்க இறங்க மரங்களின் உயரம் அதிகமாகிக்கொண்டிருந்தது.

இது ஒரு மாயாஜால பூமியேதான்.

இருவாயன் (ஹார்ன்பில்), ஃப்ராக்மௌத், ஆந்தை போன்ற விசித்திரமான பறவைகளும், அதைவிட விசித்திரமான மிருகங்களும் இங்கே வாழ்கின்றனவே! நீலகிரிக் கருமந்திகளும் சிங்க வால்

குரங்குகளும் போட்ட கூப்பாடு காட்டில்

எதிரொலித்தது. இவற்றால் மாலை

நேரத்தில் பற்பலவிதமான ஒலிகள் காடெங்கும் கேட்டன.

சில புதிய தவளை நண்பர்கள்

மரங்களின் உச்சியிலிருந்து சில பறவைகளின் சத்தம் தாமுவுக்குக் கேட்டது. அவன் வாழும் பெரிய மரத்தைச் சுற்றி அவை பறப்பதை அவன் பார்த்திருக்கிறான். நிக்டியைப்போல பல தவளைகளையும் இங்கே பார்த்தான் தாமு. நிக்டி இனத் தவளைகள் வேகமான நீரோட்டங்களில் இருக்கும் பாறைகளில் வாழ்பவை. வேகமாக வரும் நீர் பாறைகளில் மோதும்போது அவை பாறைகளை இறுகப் பிடித்துக்கொள்ளும். பாறை வெடிப்புகளிலிருந்து அவை குரல் கொடுக்கும். நீரோடைகளுக்கு மேலே தொங்கும் கிளைகளிலிருக்கும் நனைந்த இலைகளில் அவை முட்டையிடும்.

அப்போது அவன் இதற்குமுன் கேட்டிராத ஒரு விசித்திரமான ஒலியைக் கேட்டான். அந்தச் சத்தம் பூமியின் மிக ஆழமான பகுதியிலிருந்து கேட்பதுபோலிருந்தது. ஆனால், அப்படி இருக்குமா என்ன? அது ஒரு தவளையின் குரல்போலிருந்தது. தவளையாக இருக்கமுடியாதென்றும் அவனுக்குத் தோன்றியது.

பலூன் தவளையுடன் சந்திப்பு

தாமு இதற்குமுன் பார்த்திராத ஒரு விசித்திரமான பிராணி அவனை நோக்கி அசைந்து அசைந்து வந்துகொண்டிருந்தது. ஊதா நிறத்தில், உருவமே இல்லாமல் மக்கிப்போன எருவால் பிடித்ததுபோல இருந்தது.

அது நடப்பதைப்போலவோ குதிப்பதைப்போலவோ இல்லை, சேறு உயிர் பெற்று விசித்திரமான தவளை உருவில் வழிந்துவருவதுபோலிருந்தது. பன்றியின் நீண்ட மூக்குபோன்ற உறுப்பைத்தவிர வேறு எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.

தாமு உட்கார்ந்திருந்த மர வேரின் பாதுகாப்பிலிருந்து குரல் கொடுத்தான். கலவரமடைந்த அப்பிராணி பலூனைப்போலத் தன் உடலை உப்பிக்கொண்டு தன் சிறிய, வட்டமான, ஒளிரும் கண்களால் தாமுவின் பக்கம் பார்த்தது.

“ஐயா, நீங்க யாரு?” என்று தாமு கேட்டான்.

அந்த உருவம் தாமுவைக் கவனமாகப் பார்த்தபடி “நான்தான் இந்தக் காட்டிலேயே மிகவும் மூத்த தவளை. எனது மூதாதையர்கள்தான் இந்தக் காட்டில் முதன்முதலில் குடியேறியவர்கள். என் பெயர் நசிகா. நான் பெரும்பாலும் பூமியின் ஆழமான இடத்தில் வசிப்பேன்” என்று பதிலளித்தது.

“இருட்டிலே தன்னந்தனியா இருக்க பயமாயில்லையா?” தாமு கேட்டான்.

நசிகா புன்முறுவலுடன் பதில் சொன்னாள், “கீழே நான் தனியா இருக்கேன்னு யார் சொன்னாங்க? அங்கே மண்புழுக்கள், பூச்சிகள், வண்டுகள், சிலந்திகள், கரப்பான் பூச்சிகள், தேள்கள், ஏன் பாம்புகள்கூட இருக்கு.”

“பாம்புகூட இருக்கா?” தாமு ஆச்சரியத்துடன் கேட்டான்.

“ஆமா, அழகான, பளபளப்பான பாம்புகள். அதுங்களுக்கு வால் நுனியில சின்னக் கவசம்போல ஓர் அமைப்பு இருக்கும்.

அதால மண்ணைத் தோண்டும்” என்றாள் நசிகா,

“அது சரி, சின்னப் பையா, நீ எங்கிருந்து வர்றே?”

“நான் மலைமேல மரத்துல வாழறவன்” என்றான் தாமு.

“நீ மரம் ஏறுவியா?” நசிகா

ஆச்சரியத்தோடு கேட்டாள்.

பறக்கும் தவளைகள், பல்லிகள், பாம்புகள்

தாமு ஒரு மரத்தின் மேலேறி சுத்தமான, புதிய காற்றைச் சுவாசித்துக்கொண்டே அடுத்து எங்கே போவது என்பதைத் தீர்மானிக்க நினைத்தான். ஒரு மரத்தில் ஏறி அதன் உச்சியை அடைந்தான். பள்ளத்தாக்கின்மேல் மேகம் சூழ்ந்து மரங்களின்மீது புகைபோலக் காட்சியளித்தது. வாடிய மரங்கள்மேல் மேகம் சிறு வட்டங்களாகத் தென்பட்டது.

வண்ணக் கோடுகள் பறப்பதைப்போன்ற ஒரு தோற்றம் தாமுவின் சிந்தனையைக் கலைத்தது. அவை ஏதோ பறவைகளாக இருக்கும் என்று அவன் நினைத்தான். திடீரென ஒரு தவளை தாமுவின் அருகே வந்து உட்கார்ந்தது.

தாமு அந்தப் பறக்கும் தவளையைப் பார்த்து அதிசயப்பட்டான்.

“நான் ராகோ” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டது

அந்தப் பறக்கும் தவளை. சற்று நேரத்தில், ராகோவின்

நண்பர்களான டிராகோ என்னும் பறக்கும் பல்லி, க்ரிசொபீலியா

என்னும் பறக்கும் பாம்பும் அங்கே வந்து சேர்ந்தன. எல்லாம்

சேர்ந்துகொண்டு குதித்தும் பறந்தும் கும்மாளம் போட்டன.

விஷப் பாம்புகள்

தாமு மிதமான விஷமுள்ள பேம்பூ பாம்பையும் பின்னர் ஓர் இளவயது சாரைப்

பாம்பையும் சந்தித்தான். அந்தச் சாரைப் பாம்பு பழுப்பு நிறத்தில், இலைகளினூடே

வந்த சூரிய ஒளியில் பளபளத்தது.  அப்போது, திடீரென யாரும் எதிர்பாராதவிதத்தில் ஹன்னா என்னும் வீரிய விஷம் கொண்ட பாம்பு அந்தச் சாரைப்பாம்பின் தலையைக் கவ்விக்கொண்டு அதை முழுவதுமாக விழுங்கிவிட்டது.

மற்ற பாம்புகளை விழுங்கும் பாம்பு! தாமு ஹன்னாவை ஒருவித அச்சத்துடனும் அதிசயத்துடனும் பார்த்தான். மஞ்சள், கறுப்புப் பட்டைகள்

அதன் நீளமான  உடல்முழுவதும் இருந்தன.

ராணாவின் கொள்கை

கடலைக் காண இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டியிருக்குமோ என்று தாமு யோசித்தான். காட்டின் எல்லையில் எல்லாமே விசித்திரமாக இருந்தது. காட்டின் பசுமை குறைந்து இரைச்சல், ஜனநடமாட்டம் மிகுந்திருந்தது. ஒரு வயல் ஓரத்தில் புஃபோவைவிடப் பெரிய, ஆனால் இனிய சுபாவம் கொண்ட ஒரு தவளையைச் சந்தித்தான் தாமு.

“நீ என்னை ராணா என்று கூப்பிடலாம்,” என்ற அந்தத் தவளை தாமுவை அணைத்துக்கொண்டது. “அது என்னோட நிஜப்பேர் இல்லை, அது ரொம்ப நீளம், உனக்கு அதைச் சொல்லக் கஷ்டமா இருக்கும்.”

“கடலுக்கு இன்னும் ரொம்ப தூரம் போகணும், வழியில ஆபத்துகள் அதிகம்” என்றான் ராணா. “போற வழியில மரங்களும் கிடையாது. காடு இருந்த இடமெல்லாம் இப்ப விளைநிலங்களும் நகரங்களும்தான் இருக்கு. பெரிய கடலும் அங்கபோற வழியும் தவளைகளுக்கு அனுகூலமா இருக்காது. நாம வாழற இடத்தில இருக்கற சின்னக் கடலும் வெளி உலகத்தில இருக்கற பெரிய கடல்மாதிரி கம்பீரமானதுதான்.”

தாமுவுக்கு இதுவரை கிடைத்த அனுபவங்கள் போதும், அவன் இப்போது வீட்டுக்குத் திரும்பிப் போகவேண்டும் என ராணா உபதேசம் செய்தான்.

வீடு திரும்புதல்

வெளி உலகம் விசித்திரமானது, ஆபத்துகள் நிறைந்தது என்பதைத் தாமு புரிந்துகொண்டுவிட்டான். நிக்டி வாழும் வேகமான நீரோடை அவனுக்குப் பிடிக்கவில்லை. நசிகாவைப்போல் பூமிக்கடியில் வாழவும் அவன் விரும்பவில்லை. மலைமேல் மரங்களில் வாழவே அவன் விரும்பினான். அவன் இப்போது தன் இடத்துக்குத் திரும்பிப்போகவேண்டும்.

தாமு உலகைச் சுற்றி வரவில்லை. ஆனால், அந்தப் பெரிய மரத்தில் வாழ்ந்த அந்தத் தவளைக்கு இதுவே பெரிய விஷயம்தான். தாமு தன் நண்பர்களும் குடும்பமும் வாழும் அந்தப் பெரிய மரத்தை நோக்கிப் புறப்பட்டான்.

தெரிந்துகொள்ளுங்கள்

மேற்குத் தொடர்ச்சி மலை: இந்தியத் தீபகற்பத்தின் தெற்கு முனையிலிருந்து மகாராஷ்டிராவில் பாயும் தப்தி ஆறுவரை, மேற்குக் கடற்கரையோரம் பல மலைகள் அடுத்தடுத்து சங்கிலித் தொடர்போல அமைந்திருக்கின்றன.

ஷோலாவும் புல்வெளிகளும்: மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தென் பகுதியில் தனிச்சிறப்புடைய உயிர்வாழிடம் உள்ளது. அங்கு சமவெளிப் புல்வெளிகளும், இடையிடையே சிறு பரப்புகளில் ஷோலா எனப்படும், குட்டையான மரங்கள் வளரும் பசுமை மாறாக் காடுகளும் உண்டு.

தவளைகளும் தேரைகளும்: தேரையும் ஒரு வகையான தவளையே. தேரைகளின் தோல் உலர்ந்து, சொரசொரப்பாக இருக்கும். இவை நிலத்தில் வாழ்பவை, ஆனால், நீரில் முட்டையிடும்.

அறிவியல் பெயர்கள்: தாவரங்களும் மிருகங்களும் அறிவியல் பெயர்களால் அறியப்படுகின்றன. இப்பெயர்கள் ஜீனஸ், ஸ்பீஷீஸ் எனும் இரு பகுதிகளைக் கொண்டவை. (உதாரணமாக: மனிதனின் அறிவியல் பெயர் ஹோமோ சேப்பியன்ஸ்) சிலசமயங்களில், பரிணாம வளர்ச்சி, அமைப்பு இவற்றில் நிகழும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப அறிவியல் பெயர்கள் மாறும்.

கதாபாத்திரங்கள் (கதையில் வரும் வரிசைப்படி)

தாமு: ஃபிலௌடஸ் (Philautus): என்ற வகையைச் சேர்ந்தது, இந்தியாவிலும் இலங்கையிலும் தென் கிழக்கு ஆசியாவிலும் காணப்படும் மரம் வாழ் தவளைகள், புதர் வாழ் தவளைகளின் குழுமம். மற்ற தவளைகளைப்போலன்றி இவை முட்டையிலிருந்து நேராக வெளியே வந்துவிடுகின்றன. அதாவது, தலைப்பிரட்டை நிலை கிடையாது, சிறிய தவளைக் குஞ்சுகள் முட்டையிலிருந்து வருகின்றன. மேற்கு மலைத் தொடரில் காணப்படும் அநேக புதர்வாழ்த் தவளைகள் இப்போது ரோர்செஸ்டிஸ் (Raorchestes) எனும் ஜீனஸ்க்கு மாற்றப்பட்டுள்ளன.

புஃபோ: புஃபோ (Bufo) என்பது தேரைகளுள் ஒரு ஜீனஸ் பெயர். சாதாரணமாக எங்கும் தென்படும் தேரை, வெகுகாலமாக புஃபோ மெலானோஸ்டிக்டஸ் (Bufo melanostictus) என்ற அறிவியல் பெயரில் அறியப்பட்டுவந்தது. தற்போது டுட்டாஃப்ரினஸ் மெலானோஸ்டிக்டஸ் (Duttaphrynus melanostictus) என்று பெயரிடப்பட்டுள்ளது.

சாலி: சாலியே (Salea) என்பவை அகாமிட் (agamid) பல்லிகள். இவையும் ஓணான்களும் கலோடிஸ் (Calotes) எனும் குடும்பத்தைச் சேர்ந்தவை.

அஹேடுல்லா: அஹேடுல்லா (Ahaetulla) புல்வெளிப் பாம்புகளில் ஒரு ஜீனஸ். இந்தியாமுழுவதும் காணப்படும் பச்சைப் பாம்பும் இந்த ஜீனசைச் சேர்ந்ததே.

நசிகா: நசிகபட்ராகஸ் சஹயாட்ரென்சிஸ் (‡Nasikabatracus Sahyadrensis) எனும் அறிவியல் பெயர் கொண்ட தவளை சில ஆண்டுகளுக்குமுன்புதான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் நீண்ட நெடுங்காலமாக இருந்துவருவது. அதாவது, 100 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்துவந்திருக்கிறது. இதன் நெருங்கிய உறவினர்களை சேய்ஷெலெஸ்ஸில் (Seychelles) காணலாம்.

நிக்டி: நிக்டிபட்ராகஸ் (‡Nyctibatrachus) என்பவை அதிவேகமாக ஓடும் நீரோடைகளில் வாழும் தவளைகள். மேற்கு மலைத் தொடரில் வேகமான நீரோடைகளில் வாழ்கின்றன.

ராகோ: ராகோஃபோரஸ் (Rhacophorus) என்பவை மரம் வாழ் தவளைகள். இவ்வினத்தில் சில தவளைகள் உயரத்திலிருந்து குதிக்கும்போது கால் விரல்களுக்கிடையே உள்ள தோலை விரித்து காற்றில் மிதந்து வரும். நீர்நிலைகளுக்கு மேல் தொங்கும் இலைகளில் நுரையால் கூடு கட்டும்.

டிராகோ: டிராகோ (Draco) ஒரு பல்லி, க்ரிசொபீலியா (Chrysopelea) ஒரு பாம்பு, இரண்டும் காற்றில் மிதந்து வரும் திறமை பெற்றவை.

ஹன்னா: ஒஃபியோஃபாகஸ் ஹன்னா (ˆOphiophagus Hannah) என்பது கருநாகத்தின் பெயர். உலகத்திலேயே மிக நீளமான விஷப் பாம்பு. மற்ற பாம்புகளையே தன் உணவாகக் கொள்கிறது.

பேம்பூ பாம்பு: இது மிதமான விஷம் கொண்டது, இதன் முழுப் பெயர் பேம்பூ பிட் வைப்பர் (Bamboo Pit Viper)

ராணா: ராணா (Rana) தவளைகளுள் ஒரு ஜீனஸ். தற்போது பல வித்தியாசமான பெயர்களால் அறியப்படுகிறது. ராணா டைகரினா (Rana Tigerina) என்ற பெருந்தவளைக்கு இப்போது ஹாப்லோபட்ராகஸ் டைகரினஸ் (Hoplobatrachus Tigerinus) என்று பெயர். இது இந்தியாவிலேயே மிகப் பெரிய தவளை.