kadarkaraiyil keyaavin mudhal naal

கடற்கரையில் கேயாவின் முதல் நாள்

சிப்பாய் நண்டு கேயா அவள் அம்மாவுடன் கடற்கரைக்குப் புறப்பட்டு வந்து பலவகை நண்டுகளைச் சந்திக்கிறாள். நீங்களும் அவளுடன் சேர்ந்து கொள்ளுங்கள்!

- Anitha Ramkumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

கேயா, வெளி உலகத்துடன் உறவாட தன் வளையிலிருந்து முதல் முறையாக

எட்டிப் பார்க்கிறாள். கடல், அவள் வளையிலிருந்து மிகத் தொலைவில் இருக்கிறது.

“அம்மா! நாம தண்ணில விளையாடலாமா?”

"வேண்டாம்... வேண்டாம்! நமக்கு இன்னிக்கு நெறைய வேலை இருக்குது" என்று அம்மா சொன்னார்.

“சீக்கிரம் கேயா! சாப்பிடுற வேளை வந்திடுச்சு. மண்ணுல நமக்கு ருசிருசியா நெறைய தீனி இருக்குது. நீ உன் பாட்டுக்கு ஊர் சுத்தப் போயிராதே, கண்ணு!” என்றார் அம்மா.

“அம்மா, அது யாரு?” என்று கேட்டாள் கேயா. “அவசரம் அவசரமா எல்லாரையும் இடிச்சு தள்ளிட்டுப் போற அந்த நண்டு?”

“அது சிப்பாய் நண்டு. பார்க்க நம்மள மாதிரியே இருக்காளே, கவனிச்சயா? நாமளும் இப்படி வீறுநடை போடுவமே, லெப்ட்... ரைட்... லெப்ட்...” என்றார் அம்மா.

“அம்மா, அது யாரு?” என்று கேட்டாள் கேயா. ‘‘அட.. இப்போ தான் அந்த நண்டு

இங்க இருந்திச்சு. அதுக்குள்ள மாயமாயிடுச்சு!’’

“ஆ! நல்லா உத்துப் பாரு. நிறையக் கண்கள் உன்னை முறைச்சுப் பார்க்கறது தெரியும். அது தான் பிசாசு நண்டு.”

“அம்மா, அது யாரும்மா? அதோ, நமக்கு கையாட்டுற நண்டு” என்று கேட்டாள் கேயா.

“வணக்கம், வண்ணான் நண்டு!” என்று அம்மா பதிலுக்கு கையாட்டிக் கொண்டே, “அவனுக்கு தன்னுடைய பெரிய வளைநகத்தை எல்லாருக்கும் காட்டப் பிடிக்கும்” என்றார்.

“அம்மா, அது யாரு?” என்று கேட்டாள் கேயா. “ஆ! அந்த நண்டு டக்குனு மணல்ல ஒளிஞ்சிக்கிச்சே!”

“ஐயய்யோ! அதுக்கெல்லாம் நிலா நண்டுன்னு பேரு! மதிய உணவுக்கு உன்னைச் சாப்பிட்டுடும்!” என்று அம்மா எச்சரித்தார்.

“அம்மா! இப்போ நாம தண்ணிக்கு ரொம்பப் பக்கத்தில வந்துட்டோம் போல இருக்கே,” என்றாள் கேயா. “ஏய்! கடல் பொங்கி வருது. சீக்கிரமா இந்தக் கடற்கரையையே முழுங்கிடும்,” என்று எச்சரித்தார் அம்மா.

கேயாவுக்கு ஒரே வருத்தம்! வளைக்குத் திரும்பிப் போகும் நேரம் ஆகிவிட்டது!

“வளைக்கு வெளியில இருக்கற உலகம் ரொம்ப ரொம்பப் பெரிசு” என்று நினைத்தாள் கேயா. “மறுபடி வெளியில் போக நாளை வரைக்கும் காத்திருக்கணுமா?”

நடந்து நடந்து சோர்ந்து போன பத்துக் கால்களுடன் கேயா மெல்லத் தூங்கிப் போனாள்.

மறுபடியும் கடற்கரைக்குப் போவது போல

கனவு காண்கிறாள் கேயா.

லெப்ட், ரைட், லெப்ட்!

மணலின் மேலே... லெப்ட், ரைட், லெப்ட்!

அலைகளின் மேலே... லெப்ட், ரைட், லெப்ட்!

லெப்ட், ரைட், லெப்ட் ...

கனவில் வீறுநடை போட்டபடியே

தூங்கினாள் கேயா.

நண்டுக் கூட்டம்

கடற்கரைக்குச் சென்று கேயாவையும் அவள் நண்பர்களையும் சந்திக்கலாமா? பல நண்டுகள் பக்கவாட்டில் நடக்கவும், நீந்தவும் செய்யும். ஒரு கூட்டமாக வரும் நண்டுகளை காஸ்ட்(cast) என்பார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

சிப்பாய் நண்டுகள்:  ஆயிரக்கணக்கான சிப்பாய் நண்டுகள் கடற்கரை அருகில் உள்ள சதுப்பு நிலக் காடுகளின் எல்லையில் கூட்டமாக வாழும். இவைகள் அளவில் சிறியவை. அதனால், இவை கரையோரம் வாழும் பறவைகளுக்கு சுலபமாக இரையாகி விடுகின்றன. இவை மணலைச் சலித்து தேவையானதைச் சாப்பிட்டு விட்டு, மிச்சத்தை சிறு உருண்டைகளாக உருட்டி எறிந்து விடும்!

பிசாசு நண்டுகள்: தலைப் பகுதியில் ஒரு தண்டின் மேல் இதன் கண்கள் அமைந்துள்ளதால், இந்த நண்டுகளால் சுற்றியும் பார்க்க முடியும். ஆனால் இவைகளால் தங்களது தலைக்கு மேல் இருப்பதைப் பார்க்க இயலாது! இவை, பூமியிலேயே மிக வேகமாக ஓடக்கூடிய உயிரினங்களில் ஒன்றாகும். இவை மணலின் நிறத்திலேயே இருப்பதால், கடற்கரையில் விரைந்து ஓடும் போது இவற்றை நம்மால் சுலபமாகப் பார்க்க முடியாது.

வண்ணான் நண்டுகள்: ஆண் வண்ணான் நண்டுகளுக்கு ஒரு பெரிய வளை நகம் உண்டு. இந்த நகத்தைக் கொண்டு இவை தங்களின் பலத்தை காட்டிக் கொள்ளும். துணி துவைப்பதைப் போல் இவை தங்கள் நகத்தை மேலும் கீழும் ஆட்டுவதால் இவைகளுக்கு வண்ணான் நண்டு என்று பெயர்.

நிலா நண்டுகள்: நிலா நண்டுகளுக்கு, நீந்தவும் தோண்டவும் வசதியாக, துடுப்பு போன்ற தட்டையான கால்கள் உண்டு. இவை, பிற சிறிய நண்டுகள் மற்றும் மீன்களைச் சாப்பிடும். இவற்றை பயமுறுத்தினால், தம் கால்களை ஓட்டினுள் இழுத்துக் கொண்டு இறந்தது போல நடிக்கும்.

சிப்பாய் நண்டுகள் - Soldier Crabs;

பிசாசு நண்டுகள் – Ghost Crabs;

நிலா நண்டுகள் – Moon Crabs;

வண்ணான் நண்டுகள் - Fiddler crabs

நண்டைக் கண்டுபிடி!

கேயா இருக்கும் கடற்கரையில் பல நண்டுகள் ஒளிந்து கொண்டு இருக்கின்றன.

உன்னால் அவைகள்   அனைத்தையும்  கண்டுபிடிக்க முடியுமா?

6 சிப்பாய் நண்டுகள், 4 பிசாசு நண்டுகள், 2 வண்ணான் நண்டுகள், 3 நிலா நண்டுகள்