kadavuchol

கடவுச்சொல்

மஞ்சுவுக்கு தன் அக்கா ரிஜுவின் கைபேசியில் விளையாடப் பிடிக்கும். ஆனால், அது ஒரு கடவுச்சொல்லால் பூட்டப்பட்டுள்ளது! பூட்டுக்குச் சாவி போல, தகவல்களைப் பாதுகாக்கக் கடவுச்சொற்கள் எப்படி உதவுகின்றன என்பதை இந்தப் புத்தகம் எளிமையாக விளக்குகிறது. திறவுங்கள், படியுங்கள்... இந்தப் புத்தகத்தைத் திறக்க எந்தக் கடவுச்சொல்லும் தேவையில்லை!

- Raam Suresh

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மஞ்சுவுக்கு பூட்டுகள் மற்றும் சாவிகள் என்றாலே தனிப் பிரியம். சாவி நுழைந்து பூட்டைத் திறக்கும் சத்தத்தின் இனிமையை ரசிப்பாள். அவளுடைய மிகப் பிரியமான விளையாட்டுப் பொருளே அம்மாவின் சேலையில் சொருகப்பட்டுத் தொங்கும் சாவிக்கொத்துதான்.

மஞ்சு, பூட்டின் சாவித்துளைக்குள்ளே அடங்கியிருக்கும் ரகசியத்தை அறிய விரும்பினாள்.

அவள் அன்றாடம் பள்ளிக்குச் செல்லும் வழியில் ரஞ்சித் மாமாவின் கடையைக் கடந்து செல்வாள். அந்த கிராமத்தில், அவர்தான் பூட்டுக்குச் சாவி தயாரிப்பவர். அவர் புதுச்சாவி செய்யும்போது அவரது கைக்கருவிகள் உராய்ந்து கிளப்பும் சப்தத்தை மஞ்சு மிகவும் இரசிப்பாள்.

ஒரு நாள் மஞ்சுவின் அம்மாவின் அலமாரிக்கு புதிதாக இன்னொரு சாவி தேவைப்பட்டது.  அம்மாவுடன் மஞ்சுவும் ரஞ்சித் மாமாவின் கடைக்குச் சென்றாள். ரஞ்சித் மாமா ஒரு சிறு உலோகப் பட்டையை எடுத்தார். “இது என்ன?” என்று கேட்டாள் மஞ்சு.

‘‘இது ஒரு வெற்றுச் சாவி” என்றார் ரஞ்சித் மாமா.

பழைய சாவியைக் காட்டி, “இந்தச் சாவியில் மேடும் பள்ளமுமாக இருக்கிறதைக் கவனித்தாயா?மேடுகளை மலை என்றும் பள்ளங்களை பள்ளத்தாக்கு என்றும் சொல்லலாமா? அலமாரியின் பூட்டுக்குள்ளும், மலைகளும் பள்ளத்தாக்குகளும் இருக்கும். இந்தச் சாவியில் உள்ள மலை, பள்ளத்தாக்குகள் பூட்டில் உள்ளபள்ளத்தாக்கு, மலைகளுடன் பொருந்தும் போது, நீ சாவியைத் திருப்பினால் பூட்டு திறந்துகொள்கிறது. இப்போது நான் பழைய சாவியிலுள்ள மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் இந்த வெற்றுச் சாவியில் படி எடுத்து புதிய சாவி செய்யப்போகிறேன். பிறகு, இந்தப் புதுச் சாவியும் அலமாரியைத் திறக்கும்!” என்றார்.

வீட்டுக்குத் திரும்பி வந்தும் மஞ்சுவால் சாவி செய்பவரைப் பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை. பக்கத்து வீட்டில் வசிக்கும் தன் மாமியிடம் சொன்னாள்; தன் பூனையிடம் கூடச் சொன்னாள். அதுவும் தன் முகத்தை நக்குவதை அரை நிமிடம் நிறுத்திவிட்டு சுவாரசியமின்றிப் பார்த்தது.

அன்று மாலையில் வீட்டுக்கு வந்த தன் பெரியப்பா மகள் ரிஜுவிடமும் சொன்னாள். ரிஜு பொறியியல் கல்லூரியில் படிக்கிறாள்.

“உனக்குத் தெரியுமா, ரிஜு அக்கா? புதுச்சாவி தயாரிக்க, வெற்றுச் சாவியில், பழைய சாவியின் மலைகளையும்பள்ளத்தாக்குகளையும் படி எடுக்க வேண்டும் என்று.’’

“ஓ! அப்படியா? அம்மா, சாவிகளை யார் கையிலும் படாமல் பத்திரமாக வைப்பது நல்லதுதான். இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் சாவியைப் படி எடுத்து, அதைக்கொண்டு ஒரு புதிய சாவியை உருவாக்கி, நமது பொருட்களைத் திருடிவிடலாமே?” என்றாள் ரிஜு.

“உண்மைதான்” என்றாள் மஞ்சு.  “நான் படிப்பதும் ஏறத்தாழ இதேதான்” என்றாள் ரிஜு.

“என்ன? சாவி செய்யவா படிக்கிறாய்?” என்று மஞ்சு கேட்டாள்.

“நாம் விரும்பும் பொருட்களைப் பூட்டித் தானே வைக்கிறோம், நம்முடைய புடவைகளை அலமாரியில் வைத்துப் பூட்டுவது போல. சரிதானே?’’ என்று கேட்டாள் ரிஜு. மஞ்சு ஆமோதித்தாள்.

“அதே போல் தகவல்களைப் பத்திரமாக வைக்க வேண்டும் என்றால்?” என்று கேட்டாள் ரிஜு. “எந்த மாதிரி தகவலைச் சொல்கிறாய் ரிஜுக்கா?” என்று மஞ்சு குழப்பத்துடன் கேட்டாள்.

“நமக்கு எந்த வங்கியில் எவ்வளவு பணம் இருக்கிறது அல்லது உன் தோழி உனக்கு அனுப்பும் ரகசியக் கடிதம் அல்லது உன் பாட்டி அம்மாவுக்குச் சொல்லிக் கொடுத்த சமையல் குறிப்புகள் எழுதப்பட்ட நோட்டுப் புத்தகம், இப்படி எந்தத் தகவலாக இருந்தாலும்!” என்றாள் ரிஜு.

“ஆமாம்! அவற்றையும் நாம் பாதுகாப்பாகத்தான் வைக்க வேண்டும்” என்று மஞ்சு ஒப்புக்கொண்டாள்.

“இத்தகைய தகவல்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றால், அதை நம்பகமான இடத்தில் வைத்துப் பூட்டிவிட வேண்டும். அத்தகைய இடங்கள் நிறையவே இருக்கின்றன. என் கணினி ஒரு எடுத்துக்காட்டு. என் கல்லூரிப் பாடங்கள் சம்பந்தப்பட்டக் குறிப்புகளை நான் இதில்தான் வைக்கிறேன்” என்றாள் ரிஜு.

ரிஜு தன் மடிக்கணினியைத் திறந்தாள். “நான் பதிவு செய்திருக்கும் தகவலைப் பார்க்கவேண்டும் என்றால், இங்கே ஒரு கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்!” என்றாள்.

“கடவுச்சொல்லா? அது என்ன?” என்ற மஞ்சுவுக்கு ஆர்வம் அதிகமானது.

“கடவுச்சொல்லும் ஒரு சாவி போலத்தான்! அலமாரிக் கதவு எப்போது திறக்கிறது? பூட்டின் மலை, பள்ளத்தாக்குகளுடன் சாவியின் பள்ளத்தாக்கு, மலைகள் பொருந்தும் போதுதானே? ‘ஜிக்ஸா’ புதிர்(jigsaw puzzle) விளையாட்டு தெரியுமில்லையா? அதே போலத்தான். நான் முன்னமேயே பதிவு செய்துவைத்த அதே கடவுச்சொல்லை உள்ளிட்டால் மட்டுந்தான் கணினி திறக்கும். இந்தக் கடவுச்சொல்லை யாரிடமாவது நான் சொல்லிவிட்டால், அவர்களும் இந்தக் கணினியைத் திறக்க முடியும். அதனால்தான், யாரிடம் சொல்கிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டும்” என்று ரிஜு விளக்கினாள்.

“நான் ஒரு கணினியைப் பெறும்போது, அதில் கடவுச்சொல்லாக எதை வைக்கலாம்?” என்று மஞ்சு கேட்டாள்.

“பிறந்த தேதி, செல்லப் பிராணியின் பெயர், தெருப் பெயர் போன்றவற்றை கடவுச்சொல்லாக வைத்திருந்தால், அவற்றை மிகவும் சுலபமாக யூகித்துவிட முடியும். சிறந்த கடவுச்சொல் என்பது யூகிக்க முடியாததாக இருக்கவேண்டும். கடவுச்சொல், நீளம் அதிகமானதாக இருந்தால் யூகிப்பது கடினமாகும். எழுத்துகளையும் எண்களையும் கலந்து கடவுச்சொல்லை வைத்தால், இன்னும் சிறந்தது. நாம் வைக்கும் கடவுச்சொல் நமக்கே மறந்து போகாத வகையில் இருக்க வேண்டும்” என்றாள் ரிஜு. அப்போது, மஞ்சுவின் அம்மா ரிஜுவைக் கூப்பிட, ரிஜு அவருடன் உரையாடச் சென்றாள். அதே சமயம் ரிஜுவின் கைபேசியில் இருந்து “டிங்” என்றொரு சத்தம் கேட்டது.

‘என்னவாக இருக்கும்? புது விளையாட்டா?’ ரிஜுவிடம் பலவகையான நல்ல விளையாட்டுகள் இருக்கும். மஞ்சு, எத்தனையோ முறை விளையாடுவதற்காகக் கைபேசியைத் தரச்சொல்லி ரிஜுவிடம் நச்சரித்திருக்கிறாள். ‘இன்று கேட்கவே வேண்டாம்! தாராளமாக விளையாடலாம்!’

மஞ்சு, ரிஜுவின் கைபேசியின் பொத்தானை அழுத்தினாள். அதன் திரை உயிர்பெற்று, எண்களைக் காட்டிற்று. இப்போது, கைபேசி கடவுச்சொல்லை உள்ளிடக் கேட்டது!

மஞ்சு, ‘1234’ என்பதை ஒற்றினாள். ‘தவறான கடவுச்சொல்’ என்று காட்டியது கைபேசி. பிறகு ‘0000’ என்பதை ஒற்றினாள். ம்ஹூம்! கைபேசி திறக்கவில்லை. பிறகு ரிஜுவின் பிறந்தநாளான ‘10-10-97’ என்பதை ஒற்றினாள்.

“ஏய்! என்ன செய்கிறாய்?” என்று கேட்ட ரிஜு அருகில் நின்றுகொண்டிருந்தாள்.

“என் கைபேசியை கடவுச்சொல் வைத்துப் பூட்டி இருக்கிறேன்” என்று சிரித்த ரிஜு, “விஷமக்காரச் சிறுமிகளுக்கு எல்லாம் என் கைபேசியைத் தருவதில்லை” என்றாள்.

மஞ்சு நாக்கைத் துருத்தி அழகு காட்டினாள்.

“இப்போது கடவுச்சொல்லின் முக்கியத்துவம் புரிகிறதா, மஞ்சு? அது நம் ரகசியங்களுக்கான சாவி!” என்றாள் ரிஜு.

“சரிக்கா! நான் விளையாடத்தான் எடுத்தேன்” என்றாள் மஞ்சு.

“அதற்கு என்னிடம் முதலில் கேட்க வேண்டும், இல்லையா?” என்ற ரிஜு, தன் கடவுச்சொல்லைப் உள்ளிட்டு கைபேசியைத் திறந்தாள். பின்னர், “வா! நாம் ஒரு புது விளையாட்டு விளையாடலாம் - கடவுச்சொல்லை யூகிப்போம்!” என்றாள்.

மஞ்சுவுடன் விளையாட வாருங்கள்! சில கடவுச்சொற்களுக்கானக் குறிப்புகள் கீழே உள்ளன. யூகிக்க முடியுமா, பாருங்கள்.கைபேசி கடவுச்சொற்கள் 1. மஞ்சு ரிஜுவைவிட 9 ஆண்டுகள் இளையவள். அவள் தன் பிறந்த ஆண்டைக் கடவுச்சொல்லாக வைத்தால், அந்த கடவுச்சொல் என்ன?

2. ரிஜு தன் பிறந்த தேதியைத் திருப்பி எழுதி, அதைத் தன் கடவுச்சொல்லாக வைத்தால், அது என்ன?

3. மஞ்சு முயற்சி செய்த முதல் கடவுச்சொல் நினைவிருக்கிறதா? அதைத் திருப்பி எழுதி, அதைத் தன் கடவுச்சொல்லாக வைத்தால்,அது என்ன?

விடைகள்: 1. 2006  2. 790101 3. 4321

விடைகளைக் கண்டுபிடித்தீர்களா? நினைவில் கொள்ளுங்கள் — உங்களால் யூகிக்க முடிந்தால் மற்றவர்களாலும் யூகிக்க முடியும். கடவுச்சொல்லை எப்படி வைப்பது, எப்படி வைக்கக்கூடாது என்பதற்கான சில எளிய குறிப்புகள்:

1. மிகவும் சிறியதான கடவுச்சொல் வைக்காதீர்கள். (123, xyz, abcd போன்றவை எளிதாக யூகித்துவிடக்கூடியவை.)

2. உங்கள் கடவுச்சொல்லை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், எங்கும் எழுதிவைக்க வேண்டியதில்லை. எழுதிவைத்தால் யார் கையிலும் கிடைக்கலாம்.

3. பெரிய மற்றும் சிறிய எழுத்துகளைக் கலந்தாற்போல் உபயோகிக்கலாம். (ComPUteR போன்றவை).

4. எளிதாக யூகித்துவிடக்கூடிய வார்த்தைகளைக் கடவுச்சொல்லாக பயன்படுத்த வேண்டாம். (தெருப்பெயர், பள்ளிப்பெயர், ஊர்ப்பெயர் போன்றவை)

கடவுச்சொற்கள் பலவகைப் பூட்டுகளைத் திறக்க உதவுகின்றன. நம் கைபேசிகள், கணினிகள். இணையதளத்திலுள்ள நம் கணக்குகள், வங்கிகளில் உள்ள பாதுகாப்புப் பெட்டகங்கள்! போன்ற இன்னும் பலவற்றைத் திறக்க உதவுகின்றன.

கைவிரல் ரேகைகள், கண்கள் ஆகியவையும் சில இடங்களில் கடவுச்சொல்லாக பயன்படுத்தப்படுகின்றன. இவை ‘பயோ-மெட்ரிக்(Biometric) கடவுச்சொல்’ என்று அழைக்கப்படுகின்றன.

இப்படத்தில் காட்டியுள்ளபடி, கைபேசிகளில் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை வரைவதையும் கடவுச்சொல்லாக உபயோகிக்கலாம்.