arrow_back

கல்லுவின் உலகம் 2 மேடையில் குரங்குத்தனம்!

கஜூரியா கிராமம்முழுவதும் ஜுரம் பிடித்திருந்தது. ராம்லீலா ஜுரம்!

இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. கல்லு சொல்வதைப்போல் ஒவ்வொரு வருஷமும் இந்த ஜுரம் அவர்களைப் பிடித்துக்கொள்கிறது.

சாதாரணமாக ராம்லீலா ஜுரம் தசராவுக்கு ஒரு மாதம் முன்பாகத் தொடங்கும். மழைக்காலக் கருமேகங்கள் விலகிச் சென்று வானம்முழுவதும் பளபளக்கும் நீல நிறம் பரவியபிறகு ஊரில் கொண்டாட்டக் களை தொற்றிக்கொள்ளும். எல்லார் வாயிலும் மாஸ்டர்ஜியைப்பற்றியும் அவர் நடத்தப்போகிற ‘ராம்லீலா’ வைப்பற்றியும்தான் பேச்சு.

தரம்பாலின் டீக்கடை, காய்கறி வயல்கள், மளிகைக்கடை, மோதி தாதியின் வீட்டு முற்றம், கிணறு என்று கிராமத்தில் எங்கே பார்த்தாலும் ஒரே ஒரு கேள்விதான் சுற்றிக்கொண்டிருக்கும்: "இந்த வருஷம் மாஸ்டர்ஜி என்ன புதுசா செய்யப்போறார்?"