கஜூரியா கிராமம்முழுவதும் ஜுரம் பிடித்திருந்தது. ராம்லீலா ஜுரம்!
இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. கல்லு சொல்வதைப்போல் ஒவ்வொரு வருஷமும் இந்த ஜுரம் அவர்களைப் பிடித்துக்கொள்கிறது.
சாதாரணமாக ராம்லீலா ஜுரம் தசராவுக்கு ஒரு மாதம் முன்பாகத் தொடங்கும். மழைக்காலக் கருமேகங்கள் விலகிச் சென்று வானம்முழுவதும் பளபளக்கும் நீல நிறம் பரவியபிறகு ஊரில் கொண்டாட்டக் களை தொற்றிக்கொள்ளும். எல்லார் வாயிலும் மாஸ்டர்ஜியைப்பற்றியும் அவர் நடத்தப்போகிற ‘ராம்லீலா’ வைப்பற்றியும்தான் பேச்சு.
தரம்பாலின் டீக்கடை, காய்கறி வயல்கள், மளிகைக்கடை, மோதி தாதியின் வீட்டு முற்றம், கிணறு என்று கிராமத்தில் எங்கே பார்த்தாலும் ஒரே ஒரு கேள்விதான் சுற்றிக்கொண்டிருக்கும்: "இந்த வருஷம் மாஸ்டர்ஜி என்ன புதுசா செய்யப்போறார்?"
கல்லு பிரமிப்போடு சொல்லுவான். "மாஸ்டர்ஜிதான் இந்த ராம்லீலா நாடகத்தோட தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர், இசையமைப்பாளர், எல்லாமே... அவர் இந்த வருஷம் என்ன செய்யப்போறார்ன்னு அவருக்குமட்டும்தான் தெரியும்!"மாஸ்டர்ஜி உள்ளூர்ப் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர். அவர் ‘கஜூரியா ராம்லீலா பார்ட்டி’ என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவும் வைத்திருந்தார். அந்தக் குழுவினர் ஒவ்வொரு வருடமும் அந்தக் கிராமத்தையே அசரடிக்கும்படி ஒரு பிரமாதமான நிகழ்ச்சியை நடத்திவந்தார்கள்.முழு ராமாயணத்தையும் நடித்துக்காட்டுவது அவர்களால் முடியாத விஷயம். காரணம், அது ரொம்பப் பெரிய கதை. அதை முழுவதையும் நடிக்கிற அளவுக்குக் கஜூரியாவில் போதுமான நடிகர்கள் இல்லை.
ஆகவே மாஸ்டர்ஜி ராமாயணத்தின் சில முக்கியமான காட்சிகளுக்குமட்டும் வசனம் எழுதியிருந்தார். அவரே அதற்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பார். எல்லாரும் சேர்ந்து ஒத்திகை பார்ப்பார்கள். தசராவுக்கு ஒரு வாரம்முன்பாக நாடகத்தை அரங்கேற்றுவார்கள்.இதனால் அந்த வருட ராம்லீலா நாடகத்தில் எந்தெந்தக் காட்சிகள் இடம்பெறும் என்று கஜூரியா மக்களுக்குத் தெரியவே தெரியாது.
உள்ளூர் மாட்டுக்காரர் பத்ரி தன்னுடைய எருமைமாடுகளைக் கட்டிவைக்கிற மைதானத்தின் ஓர் ஓரத்தில் ஒரு கூடாரம்அமைக்கப்படும். அதற்குள் ஜாய் பகவானுடைய கடையிலிருந்து வாங்கிவந்த மேஜைகளை வைத்து ஒரு நாடக மேடை உருவாகும். பார்வையாளர்கள் கீழே ஜமுக்காளத்தில் உட்கார்வார்கள்.
இப்போது கஜூரியாவுக்கு மின்சாரம் வந்துவிட்டதால், சாதாரண விளக்குகளோடு மின் விளக்குகளும் மேடையை வெளிச்சமாக்கும்.
பள்ளியில் ராம்லீலா ஒத்திகைகள் தொடங்கிய முதல் நாளிலிருந்தே கல்லுவும் அவனுடைய தோழர்களும் அந்த இடத்தையே சுற்றிச் சுற்றி வந்தார்கள். மாஸ்டர்ஜி தங்களுக்கும் ஏதாவது ஒரு வேலை கொடுக்கமாட்டாரா என்று அவர்களுக்கு ஆசை.
கல்லுவின் கோஷ்டியில் மொத்தம் ஐந்து பேர் - கல்லு, அவனுடைய தங்கை முனியா, தம்பி ஷப்போ, நண்பன் தாமு மற்றும் தாமுவின் சகோதரி சாரு!
இந்த ஐந்து பேரும் தினந்தோறும் ராம்லீலா ஒத்திகையை வேடிக்கை பார்த்தார்கள். இதனால் எல்லா வசனங்களும் அவர்களுக்கு மனப்பாடமாகிவிட்டன.
மாஸ்டர்ஜி ஒவ்வொரு வருடமும் சீதா சுயம்வரக் காட்சியைத் தவறாமல் தேர்ந்தெடுப்பார். அங்கேதான் ராமர் பெரிய வில்லை உடைப்பார். அப்புறம் கைகேயி, மந்தரை சேர்ந்து ராமரைக் காட்டுக்கு அனுப்பத் திட்டம் போடுவார்கள், தசரதர் அழுதுகொண்டே இறந்துபோவார்.
முனியாவுக்கு மிகவும் பிடித்த காட்சி, லட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுப்பது. அதன்பிறகு ராவணன் சீதையைக் கடத்துவான், ஹனுமான் இலங்கைக்குத் தீ வைப்பார், கடைசியாக ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் எல்லாரும் சேர்ந்து ராமர், லட்சுமணர், ஹனுமான், வானர சேனையோடு போரிடுவார்கள்.
இந்த வருடம் கல்லு கோஷ்டியின் கெஞ்சலுக்குப் பலன் கிடைத்திருந்தது. மாஸ்டர்ஜி கல்லு, தாமு, ஷப்போ மூவரையும் நாடகத்தில் சேர்த்துக்கொண்டார் - அவர்கள் கடைசி யுத்தக் காட்சியில் வானர சேனையைச் சேர்ந்த குரங்குகளாக நடிக்கவேண்டும். அவர்களுக்குக் குட்டையான அரை டிராயர், முகத்தில் குரங்கு வேஷம், நீளமான வால் எல்லாம் உண்டு. கையில் தகரக் கத்தி, கதையை வைத்துக்கொண்டு துள்ளிக் குதிக்கவேண்டும். செம ஜாலி!
இதைப் பார்த்த முனியாவுக்கும் சாருவுக்கும் பொறாமை. அவர்கள் ஒருநாள் காலை பள்ளிக்குச் சென்றுகொண்டிருக்கும்போது சாரு இதனை வெளிப்படையாகவே சொன்னாள். "பசங்களா, நாடகத்தில நடிக்க வாய்ப்புக் கிடைச்சுதுன்னு ரொம்ப அலட்டாதீங்க."
அப்புறம் அவளுக்கு ஒரு சந்தேகம். "பெண்கள் ஏன் ராம்லீலாவில நடிக்கக்கூடாது?"“சீதையா நடிக்கறானே, அந்தப் பையனைப் பார்த்தியா?" என்றாள் முனியா. "அவன் நம்ம கல்லு அண்ணன் க்ளாஸ்லதான் படிக்கறான். அவனுக்கு மீசையெல்லாம் வந்துடுச்சு. மீசை வெச்ச சீதையைப் பார்த்தா எனக்குச் சிரிப்புசிரிப்பா வருது.""அதுமட்டுமில்லை. அவனோட குரல் ஒருமாதிரி உடைஞ்சுபோய் கேனத்தனமா இருக்கு" என்று சிரித்தாள் சாரு. “நம்ம பில்லு மாமிதான் சீதா வேஷத்துக்குப் பொருத்தமானவங்கன்னு எனக்குத் தோணுது."
"ஆமா, பில்லு மாமியோட வீட்டுக்காரர் தரம் மாமா ராமரா நடிக்கும்போது, அவங்க சீதாவா நடிச்சா என்ன தப்பு?"
"அவங்க மாஸ்டர்ஜியைக் கேட்டாங்க. ஆனா நிஜப் பெண்களை ராம்லீலாவில நடிக்கவெச்சா கஜூரியா பஞ்சாயத்து நாடகத்தையே நிறுத்திவெச்சுடும்ன்னு மாஸ்டர்ஜி சொல்லிட்டார். ச்சே!" அருவருப்போடு தலையை ஆட்டினாள் சாரு.
"அது போகட்டும். இன்னிக்கு ராத்திரி பத்ரி அண்ணாவோட முக்கியமான சீன்!" உற்சாகமாகச் சிரித்தபடி துள்ளினாள் முனியா. "எனக்கு அதை உடனே பார்க்கணும்போல இருக்கு."
கல்லு, அவனுடைய கோஷ்டியைப் பொறுத்தவரை இந்த நாடகத்திலேயே மிகச் சிறந்த நடிகர் பத்ரிதான். உள்ளூர் மாட்டுக்காரரான அவர் குள்ளமானவர், குண்டானவர், ஏகப்பட்ட தலைமுடி, புதர் மீசை, பெரிய உருண்டைக் கண்கள், கம்பீரமான குரல்.
இதனால், பத்ரிக்கு எப்போதும் ஹனுமான் வேஷம்தான். அவர் மேடையேறி வசனம் பேச ஆரம்பித்துவிட்டால் ராமரும் லட்சுமணரும்கூடப் பின்னணியில் காணாமல்போய்விடுவார்கள்.
குறிப்பாக ஹனுமான் ராவணனோடு நேருக்கு நேர் பேசி, அவனை அவமானப்படுத்தி, இலங்கைக்குத் தீ மூட்டும் காட்சிதான் கல்லு கோஷ்டிக்கு ரொம்பப் பிடித்த ‘சூப்பர் ஹிட்’ சீன்.
அந்தக் காட்சிக்காக மாஸ்டர்ஜி அற்புதமான வசனங்களை எழுதியிருந்தார். ராவணனும் ஹனுமானும் அதைப் பேசி நடிக்கும்போது மக்கள் மூச்சுவிட மறந்து, திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருப்பார்கள்.
அன்று மாலை கல்லு கோஷ்டி ரொம்பச் சீக்கிரமாகவே கூடாரத்துக்கு வந்துவிட்டார்கள். பத்ரியின் எருமைமாடுகள் பக்கத்தில் கட்டப்பட்டிருந்தன. "தினமும் இந்த எருமைச் சாணியைத் தாண்டிக் குதிச்சுதான் நாடகத்துக்குப் போகவேண்டியிருக்கு" என்று சலித்துக்கொண்டான் தாமு.
"முன்னாடியிருந்து ரெண்டாவது வரிசை, அதுக்கு நடுவுல ஒரு சீட். பிரமாதம்!" என்றான் ஷப்போ. உற்சாகப் பெருமூச்சோடு ஜமுக்காளத்தில் உட்கார்ந்தான்.
"நாளைக்கு நாம சீட் தேடவேண்டியதில்லை" குறும்பாகச் சிரித்தபடி முனியா, சாருவைப் பார்த்தான் கல்லு. “நாமதான் மேடையில இருப்போமே!"“அடடா!" முனியா தன்னுடைய சுருட்டைமுடித் தலையைக் கிண்டலாக ஆட்டிக் காண்பித்தாள். “நீங்க என்ன பெரிசா நடிக்கப்போறீங்க? சும்மா கேனத்தனமா மேடையில அங்கயும் இங்கயும் குதிச்சுகிட்டிருப்பீங்க. உங்களுக்கு ஒரு வசனம்கூடக் கிடையாது."“அதுமட்டுமில்லை, ஷப்போவை இந்திரஜித் கொன்னுடுவான். அதுக்கப்புறம் அவன் மரக்கட்டைமாதிரி கீழேயே விழுந்து கிடக்கவேண்டியதுதான்" என்று சிரித்தாள் சாரு.“செத்துப்போனமாதிரி நடிக்கறதுக்குதான் ரொம்பத் திறமை வேணும். தெரியுமா?" ஆவேசமாகக் கேட்டான் ஷப்போ.
"நான் ரொம்ப ரொம்ப மெதுவா மூச்சு விடணும். கண்களை இறுக்கமா மூடிகிட்டிருக்கணும்."
"ஆமாமா! உன்னோட நடிப்புத் திறமையைப் பாராட்டி கஜூரியாவிலயே ரொம்பச் சிறந்த குரங்கு-ங்கற அவார்ட் கொடுக்கப்போறாங்களாம்" தாமு விழுந்து விழுந்து சிரித்தான்.
ஒருவழியாக சூரியன் மறைந்தது. கூடாரத்தில் மக்கள் கூட்டம் நிறையத் தொடங்கியது.
அதே நேரம், மேடைக்குப் பின்னால் ஒரே அல்லோலகல்லோலம். எல்லாரும் அவர்களுடைய உடைகளை அணிந்துகொண்டு ஒப்பனைகளை அப்பிக்கொண்டிருந்தார்கள்.
இன்றைக்கு மேடையில் ராமர் தோன்றுவதில்லை. ஆகவே ராமராக நடிக்கிற தரம்பாலுக்கு வேலை எதுவும் இல்லை. அவர் பத்ரி முகத்தில் ஹனுமான் வேஷம் போட்டுக்கொண்டிருந்தார்.
"பத்ரி, நீ இந்த மீசையை எடுத்துடேன்" என்றார் தரம்பால். "இதைப் பார்க்கறதுக்கு ரொம்ப விநோதமா இருக்கு. டிவியிலயும் படங்கள்லயும் வர்ற ஹனுமானுக்கு மீசையே கிடையாது. தெரியுமா?"
"மீசைக்கு நல்லா பழுப்புக் கலர் அடிச்சுடு. யாருக்கும் தெரியாது" என்றார் பத்ரி. "நீங்க ஆயிரம்தான் சொன்னாலும் நான் மீசையை எடுக்கமாட்டேன்."
பிறகு பத்ரி தன்னிடமிருந்த வசனச் சீட்டுகளை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். அவர் முகத்தில் லேசான கடுப்பு. "இந்த மாஸ்டர்ஜி ஏன் ஒவ்வொரு வருஷமும் வசனங்களை மாத்திகிட்டே இருக்கார்?"
"அவர் ஒரு கலைஞராச்சே" என்று சிரித்தார் தரம்பால். "இந்தக் கலைஞருங்கல்லாம் எந்த நேரத்தில என்ன செய்வாங்கன்னு யாராலயும் சொல்லமுடியாது."
"இந்த வருஷம் ராமரும் பரதனும் சந்திக்கிற காட்சியில அவர் ஒரு பாட்டு எழுதியிருக்கார். தெரியுமா?"
"பாட்டா?"
"ஆமா. அண்ணன் தம்பி பாசம் என்றும் நிலைத்து நிற்கட்டும்-ன்னு ஏதோ பாட்டு."
"ஆனா, உனக்குதான் பாடத் தெரியாதே?"
உண்மைதான். பரதனா நடிக்கிற லாட்டுவுக்கும்கூடப் பாடத் தெரியாது!" என்றார் தரம்பால். "மாஸ்டர்ஜி ரெண்டு நாள் ரொம்பக் கஷ்டப்பட்டு எங்களைப் பாடவைக்க முயற்சி செஞ்சார். கடைசியில வேணாம்ன்னு விட்டுட்டார். நல்லவேளை!"
சட்டென்று பத்ரி எழுந்து உட்கார்ந்தார். சத்தமாகக் கத்தினார். "மாஸ்டர்ஜி, மாஸ்டர்ஜி!""என்னாச்சு?" பதறியபடி ஓடிவந்தார் மாஸ்டர்ஜி."நீங்க ராமருக்கு ஒரு பாட்டு எழுதியிருக்கீங்க. ஆனா ஹனுமானுக்கு எழுதலையே. இது என்ன நியாயம்?" என்றார் பத்ரி. "எனக்குதான் நல்லாப் பாட வருமே. எனக்கு ஒரு பாட்டு கொடுங்க. பிரமாதப்படுத்திடறேன்!""யோவ் பத்ரி’ செல்லமாகத் திட்டியபடி வாய்க்குள் வெற்றிலையைத் திணித்தார் மாஸ்டர்ஜி. “ஹனுமான் பாட்டெல்லாம் பாடக்கூடாது."“அதானே? ஹனுமான் எப்படிப் பாடமுடியும்?" என்றபடி தரம்பாலின் மூக்குக்குச் சிவப்பு வண்ணம் அடித்தார் தரம்பால்.
"நீ என்ன பாடுவே? ஹனுமான் - ராவணனோட சண்டைஎன்றும் நிலைத்து நிற்கட்டும்-ன்னா?"‘ஹாஹாஹாஹாஹாஹா’ சிரித்தபடி மாஸ்டர்ஜி விலகிச் சென்றார். அவருடைய வெற்றிலைச் சாறு எல்லாத் திசைகளிலும் தெறித்தது.
தரம்பால் பத்ரியின் மஞ்சள் டிராயருக்குப் பின்னால் ஒரு வாலை ஒட்டவைக்கத் தொடங்கினார். அப்போது பத்ரி ஹனுமானின் முகத்தில் தோன்றிய சிந்தனையை யாரும் கவனிக்கவில்லை.
ஒரு மணி நேரம் கழித்து, திரை விலகியது. மேடையில் ராவணனின் அரச சபை தோன்றியது. அருமையான கம்பளங்கள், திரைச்சீலைகள், நாற்காலிகள், கொள்ளை அழகு. எல்லாம் கும்பகர்ணனாக நடிக்கும் ஜாய் பகவானின் கடையிலிருந்து வந்தவை.
ஜாய் பகவான் கும்பகர்ணனாக நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன் தெரியுமா? அந்தக் கிராமத்திலேயே ரொம்பக் குண்டான மனிதர் அவர்தான்!
மேடையில் ராவணன் அதகளம் பண்ணிக்கொண்டிருந்தான். மக்களும் அதை ஆர்வமாக ரசித்தார்கள்.
ராவணனாக நடிப்பது உள்ளூர் மல்யுத்தக்காரரான சோட்டே லால். மண்டோதரியாக பத்தாங்கிளாஸ் படிக்கும் நரேன், அவனுக்கு ரோஜா, மற்றும் தங்க வண்ணத்தில் ஒரு புடவை அணிவித்திருந்தார்கள்.
சோட்டேலாலின் கம்பீரமான உடல்வாகும், பெரிய புருவங்களும், முறுக்கு மீசையும், பெரிய கண்களும் எல்லோரையும் பயமுறுத்தின.
ஒரே பிரச்னை, அவரால் வசனங்களைச் சரியாக ஞாபகம் வைத்துக்கொள்ளமுடியாது.
"சோட்டேவுக்கு வசனம் சொல்லித்தர்றதுக்கு மாஸ்டர்ஜி ரொம்பக் கஷ்டப்பட்டார்" என்று கிசுகிசுத்தான் தாமு. "அவர் எல்லா வசனத்தையும் மாத்திச் சொல்லிக் குழப்பிடுவார்."
"அப்புறம், மாஸ்டர்ஜி இந்தப் பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வு கண்டுபிடிச்சார்" என்று
சிரித்தான் கல்லு.
எல்லோரும் அவனை ஆர்வத்தோடு பார்த்தார்கள். "எப்படி?"
"மண்டோதரியா நடிக்கற நரேனோட உதட்டைக் கவனிங்க, அவன்தான் சோட்டேவுக்கு எல்லா வசனத்தையும் ஞாபகப்படுத்தறான்" என்றான் கல்லு.
"ராவணன், மண்டோதரி ரெண்டு பேரோட வசனத்தையும் நரேனுக்குச் சொல்லிக்கொடுத்துட்டார் மாஸ்டர்ஜி!"“அடடா! ரொம்பப் பிரமாதம்.""இதோ பாருங்க. ஹனுமான் வந்துட்டார்" உற்சாகமாகச் சொன்னாள் சாரு.மேடையில் ஹனுமான் ராட்சஸர்களால் இழுத்துவரப்பட்டார். எல்லோரும் ஹனுமானையே ஆவலுடன் பார்த்தார்கள்.ஹனுமானின் உடல்முழுவதும் தடிமனான கயிறுகளால் கட்டப்பட்டிருந்தது. ஆனால் அவர் கம்பீரமாக நிமிர்ந்து நின்று ராவணனைக் கோபமாகப் பார்த்தார்.
"யார் இது?" மண்டோதரி சோட்டேவிடம் கிசுகிசுத்தாள்.
‘ம்ம்ம்ம்’ ராவணன் தன் தலையை அவள் பக்கமாகச் சாய்த்து வசனத்தைக் கேட்டுக்கொண்டான். பிறகு அதைச் சத்தமாகத் திருப்பிச் சொன்னான். "யார் இது?"ஒரு ராட்சஸன் முன்னால் வந்தான். "இவன் அசோகவனத்தில் சீதா தேவியுடன் பேசிக்கொண்டிருந்தான். அங்கிருந்து இவனைப் பிடித்துக் கொண்டுவந்தோம்."
"என்னது?" மண்டோதரி ராவணனுக்கு வசனம் சொல்லிக்கொடுத்தாள்.
“என்னது?” துள்ளி எழுந்தபடி கத்திய ராவணனுக்கு மீதி வசனங்கள் ஞாபகம் வந்துவிட்டன.
“இவன் எப்படி உள்ளே வந்தான்? அங்கே அவன் என்ன செய்துகொண்டிருந்தான்?” ஆவேசமாகக் கத்திக்கொண்டே கைகளைச் சுழற்றினான் ராவணன்.
முனியா மெல்லச் சிரித்தாள். மற்றவர்களும் சிரிக்க ஆரம்பித்தார்கள்.காரணம், ராவணன் கைகளைச் சுழற்றியபோது அவனுடைய பொய் மீசை விலகித் தொங்கிக்கொண்டிருந்தது. இப்போது அதைப் பார்ப்பதற்கு ஒரு பெரிய கம்பளிப்பூச்சிமாதிரி இருந்தது.கல்லு மாஸ்டர்ஜியைப் பார்த்தான். அவர் பதற்றத்துடன் ராவணனுக்கு முகத்தைத் தொட்டுக்காட்டிக்கொண்டிருந்தார்.
இப்போது ஹனுமான் பேசவேண்டும். அவர் கீழே உட்கார்ந்திருந்த பார்வையாளர்களைப் பார்த்தார். “இது ரொம்ப சீரியஸான காட்சியாச்சே. இவங்க ஏன் சிரிக்கறாங்க?"“என்னாச்சு?" கீழே பார்த்துக் கேட்டார் ஹனுமான். “ஏன் சிரிக்கறீங்க?"
“ராவணனோட மீசையைப் பாருங்க," பின்னாலிருந்து யாரோ கத்தினார்கள்.‘அச்சச்சோ’ என்று பதறிய ராவணன் சட்டென்று மீசையைச் சரி செய்துகொண்டான். மண்டோதரியைத் திரும்பிப் பார்த்து “இப்ப நான் என்ன சொல்லணும்?" என்று கேட்டான்.பதற்றத்தில் அவன் கிசுகிசுப்பாகப் பேச மறந்துபோயிருந்தான்.
ராவணன் மண்டோதரியிடம் உதவி கேட்பதைப் பார்த்து எல்லோரும் மறுபடி சிரிக்க ஆரம்பித்தார்கள்.மேடையோரமாக மாஸ்டர்ஜி கோபத்தின் உச்சத்தில் இருந்தார். அவர் இன்னும் இன்னும் வேகமாக வெற்றிலை மெல்லத் தொடங்கியிருந்தார்.
மண்டோதரி கிசுகிசுத்தாள். "திருட்டுக் குரங்கே, நீ யார்-ன்னு கேளு!"
"என்னது?" ராவணன் லேசாகக் குழம்பினான். பிறகு, "சரி! திருட்டுக் குரங்கே, நீ யார் என்று சொல்" என உறுமிவிட்டு ஹனுமான் பக்கம் திரும்பினான். "நீ எங்கிருந்து வந்தாய்?"
‘ஆஹா!’ என்றபடி நிமிர்ந்து உட்கார்ந்தான் ஷப்போ. "இதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்ச வசனம்!"
ஹனுமான் தன்னை ராவணனிடம் அறிமுகப்படுத்திக்கொள்கிற காட்சியை மாஸ்டர்ஜி மிகப் பிரமாதமாக அலங்கரித்திருந்தார். அவ்வளவு அற்புதமான வசனங்களை ஷப்போ அதற்குமுன் எப்போதும் கேட்டதில்லை. பத்ரியும் அதை அட்டகாசமாக நடித்து அசத்துவார்.
ஹனுமான் கம்பீரமாக நிமிர்ந்து நின்று மார்தட்டியபடி, “திருட்டுக் குரங்கா? என்னை அப்படிக் கூப்பிடுவதற்கு நீ யார்?” என்பார். “நான் யார் என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டபடி பார்வையாளர்களை நோக்கித் திரும்பிப் பார்ப்பார். ஷப்போவுக்கு நன்றாக மனப்பாடமாகிவிட்ட அந்த வரிகளைச் சொல்ல ஆரம்பிப்பார்!
“நான்தான் ராமருடைய தூதன், நான்தான் ஹனுமான்! ராவணா, நீ பெரிய பலவான், ஆனால் உனக்கும் மேலே நான்!" இந்த வரிகளைச் சொல்லிவிட்டு ஒரு சின்ன இடைவெளிகொடுப்பார் ஹனுமான். பிறகு மீண்டும் மார்தட்டிக்கொண்டபடி "நான்தான் வாயு புத்திரன் ஹனுமான்!" என்பார்.
ஹனுமானின் அற்புதமான அந்த நடிப்பைப் பார்ப்பதற்காகக் கல்லு கோஷ்டி ஆவலுடன் காத்திருந்தது.
பத்ரி ஹனுமான் ராவணனைப் பார்த்துக் கத்தினார். "நான் யார் தெரியுமா?" பார்வையாளர்களை நோக்கித் திரும்பினார். தொண்டையை ஒருமுறை செருமிக்கொண்டார். திடீரென்று சத்தமாக இட்டுக்கட்டிப் பாட ஆரம்பித்தார்.
"நான்தான்ன்ன்ன்ன்ன் ராமரின்ன்ன்ன்ன் தூதன்ன்ன்ன்ன்."சாருவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. "அவர் பாடறாரா என்ன?""நான்தான்ன்ன்ன்ன்ன் ஹனுமான்ன்ன்ன்ன்.""ஆமா!" கல்லு மகிழ்ச்சியோடு சிரித்தான். "பத்ரி அண்ணன் குரல்ரொம்ப நல்லா இருக்கு."
"நான்தான்ன்ன்ன்ன்ன் ராமரின்ன்ன்ன்ன் தூதன்ன்ன்ன்ன்."சாருவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. "அவர் பாடறாரா என்ன?""நான்தான்ன்ன்ன்ன்ன் ஹனுமான்ன்ன்ன்ன்.""ஆமா!" கல்லு மகிழ்ச்சியோடு சிரித்தான். "பத்ரி அண்ணன் குரல்ரொம்ப நல்லா இருக்கு."
மேடையோரத்தில் மாஸ்டர்ஜி இடி விழுந்ததுபோல் உறைந்துபோய் நின்றிருந்தார். பத்ரி பாடுவதைக் கேட்ட அதிர்ச்சியில் அவர் வெற்றிலை மெல்லுவதைக்கூட மறந்திருந்தார்.
பத்ரி கூரையைப் பார்த்தபடி தொடர்ந்து பாடினார். அவ்வப்போது சினிமா நாயகர்களைப்போல கையையும் ஆட்டிக்கொண்டார். அவர் பாடுகிற மெட்டும் பிரமாதமாக இருந்தது.
கூட்டம் அசந்துபோய்க் கைதட்ட ஆரம்பித்தது. மண்டோதரி நரேன் தான் மேடையில் இருப்பதைக்கூட மறந்து அந்தக் கைதட்டலில் சேர்ந்துகொண்டான். ராட்சஸர்களில் ஒருவன் இடுப்பை அசைத்து நடனம் ஆட ஆரம்பித்தான்.
பத்ரிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. புன்னகை செய்தபடி தலையை ஆட்டினார். மொத்தப் பாடலையும் மறுபடி பாட ஆரம்பித்தார்.
ஹனுமான் கடைசி வரிக்கு வரும்போது கூட்டத்தைப் பார்த்துக் கை அசைத்தார். "நான்தான்ன்ன்ன்ன்ன் வாயு புத்திரன்" என்று அவர் சொல்லி நிறுத்தியவுடன் அவர்களும் அவரோடு சேர்ந்து சத்தமாகப் பாடினார்கள். ‘ஹனுமான்ன்ன்ன்ன்ன்ன்.’அதே நேரம் வெளியே மைதானத்தில் இருந்த பத்ரியின் எருமை மாடுகளும் இந்தக் கூச்சலில் கலந்துகொண்டன. "ம்மாஆஆஆஆஆஆஆஆ."நாடகம் முடிந்து எல்லாரும் களைப்பாக வீடு திரும்பியபோது கல்லு ஒரு பெரிய மகிழ்ச்சிப் பெருமூச்சோடு சொன்னான். "இந்த வருஷம் ராம்லீலா ரொம்பப் பிரமாதம்!"