பள்ளிச் சுவரில் ஓட்டியிருந்த அந்த பெரிய சுவரொட்டியை கல்லு நெற்றியை சுருக்கிக் கொண்டு பார்த்தான்.
"மதன் முராரி தேவ் மஹராஜ் வருகிறார்" சத்தமாக படித்தான். ஜோதிட விற்பன்னர், "ஜாதகப் புலி, தந்திர வல்லுனர்..." படித்து கொண்டே வந்தவன் பின்னால் நின்று கொண்டிருந்த அவனுடைய நண்பன் தாமுவின் பக்கம் திரும்பி "குண்டலினி என்றால் என்ன?" என்று கேட்டான்.
தாமு காதை தடவிக் கொண்டே "சரியாக தெரியவில்லை. முதுகு தண்டில் மேலும் கீழும் ஓடும் சமாச்சாரம்.."
"அது என்ன செய்யும்?"
"ஒரு மாதிரியான மின்சாரத்தை தரும்"
"அடடா! அப்படீன்னா நம்ம பவர் கட் பிரச்னையை அவரால் தீர்க்க முடியும்" என்றான் கல்லு.
"சரியாச் சொன்னே! நாம எல்லோரும் நம்ம குண்டலினியை வச்சு வயல்லே தண்ணீர் பம்ப்பை ஓட்டலாம்" சொல்லி விட்டு சிரித்தான் தாமு.
அந்த சமயம் கல்லுவின் தம்பி ஷப்புவும் அங்கே வந்து சேர்ந்தான். சுவரொட்டியில் பருமனான, தாடி வைத்திருந்த, சிவப்பு தலைப்பகை அணிந்திருந்த உருவத்தின் கீழ் இருந்த "மதன் முராரி தேவ் மஹராஜ்" என்ற பெயரை படித்துவிட்டு,"நீளமான பெயர்" என்றான் ஷப்பு.
"அது சரி, நீளமான பெயர்தான். ஆனால் அவரால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று பார். ஜோசியம், ஜாதகம், எண் கணிதம், முகம் பார்த்து பலன் சொல்லுதல், கைரேகை..." தாமு சொன்னான்.
அங்கிருந்து அவர்கள் அகன்ற போது, கடைசி கணக்கு பரீட்சையில் நான்கு மார்க் வாங்கியிருந்த ஷப்பு "அவராலே நாளை வகுப்பு கணக்கு பரீட்சையில் என்ன கேள்விகள் வருமென்று சொல்ல முடியுமா?" என்று ஆர்வத்துடன் கேட்டான்.
ஜோதிடர் வரும் விஷயம் கஜூரியா கிராமம் முழுவதும் விரைவில் பரவிவிட்டது. தாமுவின் பாட்டி மோத்தி சொன்னாள் "முராரி தேவ் ஒருவருடைய கண்களைப் பார்த்து ஒரு மந்திரம் சொன்னால் அவருடைய கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் மொத்தமும் அப்படியே முராரி தேவின் மனதுக்குள் மாயாஜாலம் போல போய்விடுமாம்."
"அப்படியானால் நீ பில்லு மாமியிடம் கடன் வாங்கி திருப்பி கொடுக்காமல் இருக்கும் போர்வை பற்றி இப்பொழுது அவருக்கு தெரியுமா?" என்று புன்முறுவலுடன் கேட்டாள் தாமுவின் சகோதரி சரூ.
"முட்டாள்த்தனமாக பேசாதே. அது தேவையில்லாத விஷயம்" மோத்தி பாட்டி சொன்னாள்.
"ஆனால் அது பில்லு மாமிக்கு முக்கியமானது" சரூவின் தோழி முனியா சொன்னாள். இது மோத்தி பாட்டிக்கு கோபத்தைத் தந்தது. இரண்டு பெண்களையும் அங்கிருந்து துரத்தினாள்.
கல்லுவும் அவன் குழுவும், ஜோதிட விற்பன்னர், ஜாதகப் புலி, தந்திர வல்லுனர்- எதிர்காலம் சொல்பவர் - எண்கணித மேதை மதன் முராரி தேவ் மஹராஜை சோதித்து பார்க்க முடிவு செய்தது.
அந்த குழுவில் கல்லுவும் தாமுவும் ஒன்பதாம் வகுப்பிலும், சரூவும் முனியாவும் எட்டாம் வகுப்பிலும், அவர்களில் சிறியவனான ஷப்பு ஏழாம் வகுப்பிலும் படித்தனர்.
பள்ளி பதிவேட்டில், கல்லுவின் பெயர் கல்லன், தாமுவோ தாமோதர், முனியாவோ முனிரா, சரூவோ சரஸ்வதி மற்றும் ஷப்பீர்தான் ஷப்பு. ஆனால் பள்ளி தலைமையாசிரியர் மாஸ்டர்ஜிக்குக் கூட அவர்களின் உண்மையான பெயர்கள் இப்போது நினவில் இல்லை.
மாலையில் இந்த நால்வர் குழு கிளம்பியது. கிராமத்து நாட்டாமை ரகு சிங் வீட்டில் ஜோதிடர் தங்கியிருந்தார். அவர் வீட்டுக்கு செல்லும் வழியில் ஹனுமார் கோயிலைத் தாண்டி செல்லும் போது விசித்திரமான காட்சி கண்ணில் பட்டது.
யில் பூசாரி லட்டு மிஷ்ரா கோயில் வெளியே முழங்கால்களை மடித்து அதன்மீது தாடையை வைத்துக் கொண்டு சோகமாக வானவெளியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
சாதாரணமாக எப்பொழுதும் சந்தோஷத்துடன் காணப்படும் லட்டு யாரைப் பார்த்தாலும் புன்னகையோடு பேசுவார். அவருடைய கனிவான முகம், அதில் எப்போதும் மெலிதான புன்னகை. இதைப் பார்த்துவிட்டுதான் மாஸ்டர்ஜி கிராமத்து ராம்லீலா நாடகத்தில் அவருக்கு பரதன் வேஷம் கொடுத்தார்.
"லட்டு அண்ணா, என்ன விஷயம்? உடம்பு சரியில்லையா?" என்று முனிரா அருகில் ஓடிச் சென்று கவலையுடன் கேட்டாள்.
லட்டு முகத்தில் வாட்டத்துடன், இல்லை என்று தலையை அசைத்துவிட்டு பின்னால் இருந்த கோவிலைப் பார்த்துவிட்டு "பார்த்தீர்களா? இன்று செவ்வாய்க்கிழமை. ஆனாலும் கோயில் காலியாக இருக்கிறது" என்றார். அவர்களும் காலியாக இருந்த கோயிலை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
செவ்வாய் கிழமைகளில் நாள் முழுவதும் கூட்டம் இருக்கும். மந்திரங்கள் சொல்வதும், மணியடிப்பதுமாக, லட்டு ஹனுமான்ஜி முன்னால் பூஜை,
ஆரத்தி என்று பரபரப்பாக இருப்பார். "எல்லோரும் எங்கே போய்விட்டார்கள்?" என்று தாமு வியப்புடன் கேட்டான். "வேறு எங்கே?" "ரகுசிங்கின் வீட்டிற்குத்தான். அந்த ஜோசியன் என்று ஊருக்கு வந்து தொழிலைத் தொடங்கினானோ அன்றிலிருந்து யாருக்குமே ஹனுமான்ஜியை பார்க்க நேரம் இல்லை
"நீங்கள் அவரைப் பார்த்தீர்களா?"
"ஆமாம். நானும் பார்த்தேன் அவனை பற்றி எனக்கு எல்லாம் தெரியும். டவுனில் ஒரு சமயம் இனிப்புக் கடை வைத்திருந்தான். பெயர் முராரி லால். எல்லோரும் அவனை குண்டு முராரி என்றுதான் அழைப்பார்கள். அத்தனை குண்டு. பிறகு ஒரு தாடியை வளர்த்துக் கொண்டு, மதன் என்னமோ மஹராஜ் ஆகி விட்டான். சில மந்திர வித்தைகளைக் கற்றுக்கொண்டு, முழு கிராமத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்."
கல்லு சிந்தனையுடன் சொன்னான், "கேரளாவில் உள்ள மந்திரவாதிகளுக்கான பள்ளி ஒன்றைப் பற்றி நான் பேப்பரில் படித்தேன். அதன் தலைவர் அந்த பள்ளியில் படித்த பாதி மாணவர்கள், போலி ஜோதிடர்களாகவும், போலி
சாமியார்களும் ஆகி விட்டதாக சொல்லியிருந்தார்."
"இவரும் அங்கே போயிருக்கலாம்" என்று சொன்ன லட்டு, அவர்கள் எல்லோரும் நல்ல ஆடைகளை அணிந்திருப்பதையும், சுத்தமாக சீராக இருப்பதையும் பார்த்து விட்டு,
"நீங்களும் அங்கே போகிறீர்களா?" என்று வருத்தத்துடன் கேட்டார். சரூ உடனே, "லட்டு அண்ணா, சும்மாதான் பார்க்கப் போகிறோம். சீக்கிரம் திரும்பி வந்துவிடுவோம்" என்றாள்.
அவர்கள் அனைவரும், ரகு சிங்கின் வீட்டிற்குள் நுழைந்த போது, முன்னால் போட்டிருந்த பெரிய பந்தலும், அதற்குப் பின்னால் ஒரு சிறிய பந்தலும் கண்ணில் பட்டது. சமையல் செய்வதற்கு இருந்த அந்த சின்ன பந்தலில், இரண்டு சமையல்காரர்கள் அடுப்பில் இருந்த பெரிய பாத்திரத்தில் எதையோ கிளறிக் கொண்டிருந்தார்கள்.
தாமு விரைவாக உள்ளே சென்று ஒரு பார்வை பார்த்து விட்டு, திரும்பி வந்தான். கண்களில் சந்தோஷம் தெரிந்தது. பெரிய பந்தலுக்குள் எட்டிப் பார்த்தால் கூட்டம் நிரம்பி வழிந்தது. முண்டியடித்து உள்ளே நுழைந்த அவர்கள், சுற்றிலும் பார்த்தார்கள். முழு கிராமமும் அங்கேதான் இருந்தது.
ராம்லீலா நாடகத்தில் ராமராக நடித்த டீக்கடை முதலாளி தர்மபால் மாமா அங்கே இருந்தார். அவரது அழகிய மனைவி பில்லு மாமியும் இருந்தார். மளிகைக்கடைக்காரர் கிஷன்பிரசாத், அவருக்கு பீடா கொடுத்து கொண்டிருந்த மாஸ்டர்ஜியிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.
மாங்காய் தோட்டக்காரர் மங்கு கூட ஒரு ஓரமாக வழக்கமான ஏளனப் புன்னகையுடன் அமர்ந்திருந்தார்.
பைத்தியக்கார எருமை மாட்டுக்காரர் பத்ரி முன்னால் உட்கார்ந்திருந்தார். இவர்களை திரும்பிப் பார்த்து ‘புசுபுசு’ வென்ற மீசையின் பின் மஞ்சள் பற்கள் பளிச்சிட புன்முறுவல் பூத்தவாறு, "சமையலறையை பார்த்தீங்களா?" என்று கேட்டார்.
"ஆமாம், பார்த்தேன்" தாமு சிரித்தபடி சொன்னான். சாப்பாடு போன்ற முக்கியமான விஷயங்களை தாமு தவற விடுவதே இல்லை. "அவர்கள் அல்வாவும் பூரியும் அசல் நெய்யில் செய்கிறார்கள்" என்றான்.
பத்ரி இதைக் கேட்டு மெய் மறந்த இன்பத்தில் கண்களை சுழற்றினார்.
தோட்டக்கார மங்கு கடுகடு முகத்துடன்,"ரகுசிங் ஒரு முட்டாள். எல்லோருக்கும் சோறு போட்டு காசை வீணாக்குகிறான்" என்றார்.
மடக்கு மேஜைகளை வைத்து மேடை ஒன்று உருவாகியிருந்தது. உயரமான ஒல்லியான மனிதன் ஒருவன் அதில் மெத்தைகளைப் பரப்பி, அதனை வெள்ளைத்துணியால் போர்த்தி, சாய்ந்து உட்கார சில திண்டுகளையும் வைத்தான். ஊதுபத்திகளை ஏற்றி, அவைகளை காற்றில் சுழற்றினான்.
"யாரது?" முனியா தெரிந்து கொள்ள விரும்பினாள்.
"அவன் பெயர் பல்டன் பாண்டே" என்றான் ஷப்பு. அந்த ஒல்லியான ஆள், மைக்கை பொருத்தினான். "நான் அவனையே கேட்டேன். தான் மகாராஜாவின் முதல் உதவியாள்" என்று சொன்னான்.
"இரண்டாவது யார்?" என்று கேட்டபடி கல்லு சுற்றும் முற்றும் பார்த்தான்.
"அப்படி யாருமே இல்லை என்று
நினைக்கிறேன்" தாமு சொல்லி சிரித்தான்.
‘இங்கு வந்திருப்பவர்கள் எல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை கொடுத்து, விட்டு ஜாதகம் பார்த்துக் கொள்ளப் போகிறார்களா? இல்லை நம்மை மாதிரி அசல் நெய்யிலான அல்வா-பூரி பிரசாதத்திற்காக வந்திருக்கிறார்களா?’ என்று கல்லு யோசித்தான்.
மதன் முராரி தேவ் மகராஜ் இன்னும் வரவில்லை. எல்லோரும் பொறுமை இழந்து கொண்டிருந்தார்கள். வருகிறாரா என்று வாசல் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தனர். சில குழந்தைகள் அழ ஆரம்பித்தார்கள். மோத்தி பாட்டிக்கு அடக்க முடியாமல் இருமல் வந்தது.
சரூ வெளியே சென்று ஒரு கிளாஸ் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். பில்லு மாமி அதிக நேரம் காத்திருக்கவும் தயாராக வந்திருந்தார். அதற்குள் பின்னிக் கொண்டிருந்த ஸ்வெட்டரில், கை பாகத்தை முடித்து விட்டார். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதைப் பார்த்து பல்டன் பாண்டே ஹார்மோனியத்துடன் உட்கார்ந்து, அபஸ்வரத்தில் ஒரு பஜனை பாடத் தொடங்கினான்.
எல்லோரும் உற்சாகமில்லாமல், ஒருவித சோர்வில் இருந்தபோது, அவர்கள் எல்லாம் திகைக்கும்படி பல்டன் திடீரென்று எழுந்து கைகளை காற்றில் விரித்து, "ஜெய் முராரி தேவ்!" என்று கூவியது எல்லோரையும் எழுப்பியது.
எல்லோரும் சேர்ந்து சொல்ல வேண்டுமென்ற அவனது எதிர்பார்ப்பின்படி எல்லோரும் சேர்ந்து கோஷம் எழுப்பினார்கள். சும்மா இருப்பதைவிட எதையாவது செய்வது நல்லதல்லவா! எல்லோரும் கைகளை காற்றில் வீசி "ஜெய் முராரி தேவ்!" என்று முழங்கினார்கள்.
கல்லு மற்றும் அவனது ஐவர் குழு, ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டு, உச்சக்குரலில், "ஜெய் கபில்தேவ், ஜெய் கபில்தேவ்" என்று கூவியது. அவர்கள் மூன்றாம் முறை கபில் பேரை முழங்க, சில பெரியவர்கள் அவர்களைப் பார்த்து முறைக்க, அவர்கள் வாயை மூடிக் கொண்டனர்.
"அடேங்கப்பா, பயங்கர குண்டு. சுவரில் பார்த்த படம் ரொம்ப பழசு போல!" சரூ மெதுவாக சொன்னாள்.
முராரி தேவ் ரொம்ப குள்ளமாக இருந்தார். கழுத்திலிருந்து கால்வரை மறைக்கும் நல்ல சிவப்புநிற பட்டு உடை அணிந்திருந்தார். பல வண்ணங்களிலான மணிகள் கோர்த்த, ஏராளமான மாலைகளை அணிந்திருந்தார். அவரது நீண்ட நரைத்த தாடி, அவரது பெரிய தொப்பைவரை நீண்டிருந்தது. தலை முழுவதும் வழுக்கை. முன் நெற்றியில் சிவப்பு திலகம். மாலை நேரமாக இருந்தாலும், எல்லோரும் அதிசயப்படும்படி விலையுயர்ந்த கருப்பு கண்ணாடி அணிந்திருந்தார்.
"கருப்பு கண்ணாடி? சூரியன் எங்கே?" தாமு சுற்றிலும் பார்த்தான்.
முராரி தேவ் அவர்களை கடந்து சென்றார். அவர் போட்டிருந்த வாசனை திரவிய நறுமணம், அவர்களது மூக்கைத் துளைத்து சென்றது. கல்லு இதை கவனித்து விட்டு,
"அடடா! கருப்பு கண்ணாடி, கலர் மணிமாலைகள், செண்ட், பாலிவுட்டிலிருந்து நேரே வந்த ஜாதகம் பார்க்கும் ஹீரோ" என்றான். முனியா பல்டனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். "எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது" என்றாள்.
"சொல்லட்டுமா? சஃபாரி சூட் மட்டும் மாட்டிவிட்டால், அவர் நம்ம பெட்ரோல் பம்ப் ராம் லோசன் மாதிரியே இருப்பார்" என்றான் ஷப்பு சிரித்துக் கொண்டே.
"சரியா சொன்னே!" எல்லோரும் ஒன்றாக சொன்னார்கள். பத்ரி திரும்பிப் பார்த்து முறைத்துவிட்டு, "சத்தம் போடாதீர்கள்" என்றார். ஆனாலும் முனியா மற்றும் சரூவால் பொங்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஜோசியம் என்பது இவ்வளவு தமாஷாக இருக்குமென்று அவர்கள் நினைக்கவில்லை. இதற்குள் முராரி தேவ் ஒரு திண்டின் மீது சாய்ந்து அமர்ந்தார். இதற்கே மூச்சு வாங்கியது. முகத்தை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார். பல்டன் ஒரு குவளை தண்ணீருடன் அவரை நெருங்கினான்.
ரகு சிங் மேஜை விசிறியை சுழல விட்டார். முராரி தேவ் தொண்டையை சரி செய்துக் கொண்டு, கைகடிகாரத்தை பார்த்து விட்டு மைக்கை தன் பக்கம் இழுத்தார்.
"சீக்கிரம் ஆரம்பியுங்கள்! அல்வா ஆறி போகுது" முணுமுணுத்தான் தாமு. ஷப்பு தன் தலையை கைகளின் மேல் வைத்திருந்தான். தூங்குவது போல தெரிந்தது. ஒரு கம்பீரமான நிதானத்துடன் முராரி தேவ் எழுந்து மேடையின் நுனி வரை நடந்து வந்து, தன் கைகளை காற்றில் ஆட்டினார்.உலர்ந்த திராட்சையும், பாதாம் பருப்பும் கூட்டத்தினர் மீது மழை போல பொழிந்தது.
ஜோதிடருக்கு பின்னே பல்டன் ஹார்மோனியத்தில் ஒரு ராகத்தை வாசித்தான். முராரி தேவ் அதற்கேற்ப தன் கைகளை மீண்டும் மீண்டும் ஆட்டினார். மேலும் திராட்சை, பாதாம் மழை பொழிந்தது.
"இது நிஜமானது தான்" சரூ சுவைத்துக் கொண்டே சொன்னாள்.
"கிஷன் பிரசாதின் மளிகைக் கடையிலிருந்து வாங்கி வந்திருக்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டே தாமு அவைகளை மேலும் சேகரித்தான். நால்வர் குழு அமர்ந்தது.
அறிமுகக் காட்சி முடிந்தது என்று தோன்றியது. முக்கிய காட்சி துவங்கியது. பல்டன் எழுந்து "முராரி தேவ் எதிர்காலத்தை கணித்து கூறுவதோடு, மனதில் உள்ளதை படித்துக் கூறுவார்" என்று மைக்கில்அறிவித்தான்.
கல்லுவின் குழு நிமிர்ந்து உட்கார்ந்தது. பிறகு பல்டன் கையில் சின்ன துண்டுச் சீட்டுகளுடன் கூட்டத்தினரின் நடுவே வந்தான். ஒருவர் சீட்டில் ஏதேனும் ஒரு எண்ணை எழுதுவார். அதனை ஒரு உறையில் போட்டு ஒட்டி ஜோதிடரிடம் எடுத்து செல்வார்கள். அவர் அதை தொட்டு விட்டு ஒரு மந்திரத்தை முணுமுணுத்து, அந்த எண்ணை சரியாக கூறுவார்.
பல்டனும், ரகு சிங்கும் முராரிதேவை தேடினார்கள். "மஹாராஜ் எங்கே இருக்கிறீர்கள்? மஹாராஜ் எங்கே இருக்கிறீர்கள்?" என்று மோத்தி பாட்டி பெருங்குரலில் அழுதபடி கேட்டாள்.
மாஸ்டர்ஜி கல்லு மற்றும் அவன் நண்பர்களைப் பார்த்து, ஒரு டார்ச் லைட்டை எடுத்து வரும்படி சத்தம் போட்டு கூறினார். இத்தனை களேபரத்திற்கும் நடுவே, பத்ரியும், மங்குவும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
எல்லோருக்கும் நிம்மதி தரும் வகையில் முராரி தேவ் மேடையின் அடியிலிருந்து தவழ்ந்து வெளியே வந்தார். பல்டனும், ரகுசிங்கும் அவருக்கு உதவ விரைந்து சென்றனர்.
தட்டு தடுமாறி எழுந்து நின்றார் முராரி தேவ். விலையுயர்ந்த கருப்புக் கண்ணாடி நசுங்கி முகத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. தாடியில் சிலந்தி வலைகள்.
பட்டாடை முழுவதும் ஒரே தூசி."என்ன ஆயிற்று?" குழப்பத்துடன் தாமு கேட்டான்.
"ஏதோ மறையும் வித்தை செய்கிறார் என்று நான் நினைத்தேன்" என்றான் கல்லு. இந்த மர்மம் விளங்குவதற்கு கொஞ்ச நேரம் ஆயிற்று.
மேடை அமைக்க உபயோகித்த மூன்று மடக்கு மரமேஜைகளில் ஒரு மேஜையின் காலொன்று முறிந்து விட்டது.
பருமனான முராரி நின்று நடனம் ஆடியதில் அது பாரம் தாங்காமல் முறிந்து அவரோடு கீழே படுத்துவிட்டது. இப்பொழுது மூச்சிரைக்க நாற்காலியில் உட்கார்ந்திருந்த
முராரி தேவ் ஆடைகள் குலைந்து, முகம் சோர்ந்து வருத்தத்துடன் இருந்தார்.
இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான தருணத்தில் ஜோசியருக்கு முன்னால் வந்து நின்று கொண்டு, முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு, சரூ பேசினாள். எல்லா சத்தங்களுக்கும் மேலே தெளிவாக கேட்கும்படி, "முராரிஜி, எனக்கு இது புரியவில்லை" என்றாள். குண்டு ஜோசியர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.
அவளை முறைத்துப் பார்த்தார்.
"உங்களால் எண்களை சரியாக சொல்ல முடிந்தது. பாதாம் பருப்பை காற்றில் பறிக்க முடிந்தது. அனைவரின் எதிர்காலத்தை சொல்ல முடிந்தது. மேஜையின் கால் முறியப்போவது மட்டும் ஏன் உங்களுக்கு தெரியவில்லை?" என்று கேட்டாள்.
சுற்றிலும் ஆழ்ந்த மௌனம். முராரி தேவ் சரூவை உற்று நோக்கினார். கல்லுவின் கூட்டணி அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்தது. முகத்தில் கோபத்துடன் எழுந்து அவர் பந்தலை விட்டு வேகமாக வெளியேறினார்.
எல்லோரும் சிரித்தனர். மோத்தி பாட்டிக்கும் அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. சிரித்த சிரிப்பில் திரும்பவும் இருமல் அவருக்கு. நடந்தது ஒரு அற்புதமான சம்பவம் என்று அனைவரும் ஒப்புக் கொண்டனர்.