kannamoochi re re

கண்ணாமூச்சி ரே ரே!

சானியாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், எல்லா சிறுவர்களும் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடுகிறார்கள். தேனீக்கள், பூனைகள், நாய்களும் அந்த ஆட்டத்தில் கலந்துகொண்டதால், ஒரே கலாட்டாதான்! பின்னர் என்ன ஆனது? சானியா ஒளிந்திருக்கும் தன் நண்பர்கள் எல்லாரையும் கண்டுபிடித்தாளா? வாருங்கள், நாமும் அவளோடு சேர்ந்து எண்ணுவோம்.

- Karthigeyan Sivaraj

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சானியா உற்சாகமாக இருந்தாள். இன்று அவளுடைய ஆறாவது பிறந்தநாள்.

அவளுடைய அப்பா அவளுக்குப்  பிடித்த பாவ் பாஜி செய்துகொண்டிருந்தார். மேலும், சானியாவின் நெருங்கிய நண்பர்களான  அமன், ஜோயா, ஹர்ப்ரீத், ஜுட், கரண், மரியா, (அதிகாரம் பண்ணக்கூடிய) பிரியா, ரோஹன் மற்றும் ஷான் ஆகியோர் அவளது பிறந்தநாள் விழாவிற்கு வருவதாக இருந்தார்கள்.

டக்க்!டக்க்! அது மரியா. அவள் பெரிய்ய்ய பரிசு ஒன்றைக் கொண்டுவந்தாள். ஓ!

டக்க்! டக்க்! டக்க்! டக்க்!

"நாம் கண்ணாமூச்சி  விளையாடுவோம்!" என்றாள் சானியா.சானியாவுக்குக் கண்ணாமூச்சி  விளையாடுவது ரொம்பப் பிடிக்கும். விளையாடும்போது எப்படி சத்தமில்லாமல் இருக்க வேண்டும் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். மரியா ஒரு முறை எவ்வளவு தேடியும் சானியாவை ஒரு மணி நேரம் வரைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை!"பிறந்தநாள் கொண்டாடும் சானியாதான் எண்ண வேண்டும்!" என்று கத்தினாள் பிரியா (மிகவும் அதிகாரமாக).

டக்க்!டக்க்! இப்போ வருவது யார்?அது ஜூடின் அப்பா, பார்ப்பதற்கு நன்றாக இருந்தார். அவர் ஒரு பெரிய ஹோட்டலில் கார் ஓட்டுநராக வேலைசெய்பவர். "எனக்கு வேலைக்குச் செல்ல அழைப்பு வந்துள்ளது. ஜுடை  அவனது தங்கைப் பாப்பாவிடம் கொண்டுபோய் விடவேண்டும். மன்னித்துக்கொள், ஜுட்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், சானியா!" என்று சொல்லிவிட்டு ஜுடைக் கூட்டிக்கொண்டு சென்றார்.

மிகவும் வருத்தத்தோடு ஜுட் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். சானியாவும் மிகவும் வருத்தப்பட்டாள். இப்போது பிறந்தநாள் விழாவில் எட்டு விருந்தினர்கள் மட்டுமே இருந்தனர்.

"வாருங்கள். நம்முடைய விளையாட்டை ஆரம்பிப்போம்!" என்று கத்தினாள் பிரியா (மிகவும் அதிகாரமாக).

சானியா அவளைப் பார்த்து முறைத்தாள். ஆனாலும், கண்களை மூடிக்கொண்டு எண்ணத் தொடங்கினாள்.

"ஒன்று... இரண்டு… மூன்று..." என்றவுடன் கரண் ஒரு பாய்க்குள் சுருண்டு படுத்துக்கொண்டான்."நான்கு... ஐந்து... ஆறு…"

என்றவுடன் பிரியா பரண் மீது ஏறிக்கொண்டாள்."ஏழு... எட்டு... ஒன்பது…" ஹர்ப்ரீத் வீட்டுக்கு வெளியே ஓடிவிட்டாள்."பத்து!” என்று சொல்லி முடித்தாள் சானியா. “நீங்கள் தயாராக இருக்கிறீர்களோ இல்லையோ, உங்களைக் கண்டுபிடிப்பதற்கு இதோ வருகிறேன்!”

எட்டு பேரைக் கண்டுபிடிக்கவேண்டும். சானியா பித்துப் பிடித்தவள் போல அறை முழுவதும் ஓடினாள். சுருண்டு கிடந்த பாய் தடுக்கியது.

"அம்மா!" என்றாள் சானியா.

"அம்மா!" என்றது பாய்.

"நான் கரணைக் கண்டு பிடித்துவிட்டேன்!" என்று மகிழ்ச்சியில் பாடினாள் சானியா. பாவம் கரண்!

இன்னும் எத்தனை பேர் மீதம் உள்ளனர்?    ஏழு!

"பவ்!பவ்!பவ்!" சானியாவின் நாய் ராஜா ஒரு பிங்க் நிறத் துப்பட்டாவைக் கவ்விக்கொண்டு அறைக்குள் நுழைந்தது. ஜோயாவும் நாயைத் துரத்திக் கொண்டே வந்தாள். "கெட்ட நாய்! இது ஒரு குறும்புக்கார நாய்!" என்று கத்திக்கொண்டே வந்தாள்."நான் ஜோயாவை கண்டு பிடித்துவிட்டேன்!" என்று சானியா சிரித்தாள். இந்த ஒன்று சுலபமாக முடிந்துவிட்டது!இன்னும் எத்தனை பேர் மீதம்? ஆறு!

சானியா வேகமாகப் படுக்கையறைக்குள் நுழைந்தாள்.

அங்கு மெத்தைக்குப் பின்னாலும் எவரும் இல்லை,

டிரங்குப்பெட்டிக்குப் பின்னாலும் எவரும் இல்லை.

"அச்!" என்று அலமாரி தும்மியது.

சானியா அலமாரியின் கதவை உடனே திறந்தாள். மீண்டும் ரோஹன் "அச்!" என்று தும்மினான். "இங்கு பயங்கர தூசி!" என்று முனகினான் அமன்.

"நான் ரோஹனையும் அமனையும்  கண்டு பிடித்துவிட்டேன்!" என்று சொன்னபடி கைதட்டினாள் சானியா.

இன்னும் எத்தனை பேர் மீதம் உள்ளனர்? நான்கு!

சானியா வீட்டின் கூரை மீது ஏறினாள். ஏதோ ஒன்று தண்ணீர்த் தொட்டிக்குப் பின்னால் நகர்வது போலத் தென்பட்டது. சானியா மெல்ல நகர்ந்து சென்றாள்.

"ஹிஸ்ஸ்!" பூனை தாவி நேராக துணிக்கொடியின் மேல் விழுந்தது.

"யாஆஆ!" என்று அங்கு காயப்போட்டிருந்த அம்மாவின் சேலை பயத்தோடு கத்திக்கொண்டே கீழே விழுந்தது.

"நான் ஷானைக் கண்டுபிடித்துவிட்டேன்!" என்று குதூகலப்பட்டாள் சானியா.

இன்னும் எத்தனை பேர் மீதம் உள்ளனர்? மூன்று!

"ச்சே! போ போ!"என்னவாயிற்று? சானியா உடனே பின்புற தோட்டத்திற்கு ஓடிச் சென்றாள். அங்கே செம்பருத்திச் செடிகளுக்குப் பின்னால், பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகளையும் ஒரு குண்டுத் தேனீயையும் பார்த்தாள்."நான் ஹர்ப்ரீத்தைக் கண்டு பிடித்துவிட்டேன்!" என்று சொன்னபடி தேனீயிடம் இருந்து ஓடிச்சென்றாள் "மரியாவையும்தான்!"இன்னும் எத்தனை பேர் மீதம் உள்ளனர்? ஒன்று!

அப்பா செய்து கொண்டிருந்த மிகப் பிரத்யேகமான அந்த பாவ் பாஜியின் வாசனை வீட்டையே நிரப்பியது. சானியாவின் வயிறு பசியால் உறும ஆரம்பித்தது."கேக் வெட்டும் நேரம் வந்துவிட்டது சானியா!" என்றழைத்தாள் அம்மா. "நாங்கள் எல்லாரும் காத்துக்கொண்டிருக்கிறோம்!""இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!" என்று அனைவரும் பாடினார்கள்."ஹலோ!" என்றது ஒரு கோபமான குரல்.

"நீ இன்னும் என்னைக் கண்டுபிடிக்கவேயில்லை!"

"நான் பிரியாவைக் கண்டுபிடித்துவிட்டேன்!" என்றபடி சிரிப்பை அடக்கப் பார்த்தாள் சானியா. "கேக் வேண்டுமா?"ஹர்ப்ரீத் இளித்தாள். ஜோயா தனக்குள்ளேயே மெதுவாகச் சிரித்தாள்."என்ன தைரியம் இருந்தால், என்னைப் பார்த்துச் சிரிப்பாய்" என்று பிரியா கோபத்தோடு வந்தாள். தொப்! என்று பரணின் கீழே குவிக்கப்பட்டிருந்த தலையணைகளில் விழுந்தாள்.

சானியா சிரிக்கவில்லை. அவள் பிரியா எழுவதற்கு உதவினாள்.

ஒரு பெரிய கேக் துண்டை அவளுக்கு வெட்டிக் கொடுத்தாள்.பிரியா "நன்றி!" என்றாள், ஆனால் அதை அதிகாரமாகச் சொல்லவில்லை. "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், சானியா!"அதைக் கேட்டு சானியா புன்னகைத்தாள். இன்னும் எத்தனை பேரைக் கண்டுபிடிக்கவேண்டும்?

பூஜ்ஜியம்!

எடுத்தல்

சானியாவின் ஒன்பது நண்பர்கள் பிறந்தநாள் விழாவிற்கு வந்தார்கள். ஜூட் சென்றபின், எட்டு நண்பர்கள் மீதம் இருந்தார்கள்; அதாவது ஒன்பதில் ஒருவர் குறைந்தார். ஒரு நண்பன் கூட்டத்தில் இருந்து ‘எடுக்கப்பட்டான்’. இதை நாம் இப்படி எழுதலாம்:

9 (நண்பர்கள்) - 1 (ஜூட்) = 8 நண்பர்கள் மீதம்.

ஆறு நண்பர்களைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று இருந்தபோது, சானியா ரோஹன் மற்றும் அமனைக் கண்டுபிடித்தாள். இப்போது கண்டுபிடிப்பதற்கு நண்பர்களில் ஆறில் இரண்டு பேர் குறைந்தார்கள். இரண்டு நண்பர்கள் நீக்கப்பட்டார்கள், அல்லது எடுக்கப்பட்டார்கள். இதை நாம் இப்படி எழுதலாம்:6 (நண்பர்கள்) - 2 (ரோஹன் மற்றும் அமன்) = 4 நண்பர்கள் மீதம்.இப்படி ஒரு பெரிய எண்ணிலிருந்து ஒரு சிறிய எண் ‘எடுக்கப்படுவதை’க் 'கழித்தல்’ என்கிறோம். ஆனால், நண்பர்களை மட்டுமல்ல, எதை வேண்டுமானாலும் நாம் கழிக்கலாம்.

ராஜ்மா விதைகளை வைத்தும் கழித்தல் கணக்குப் போடலாம்.9 ராஜ்மா விதைகளில் இருந்து மூன்றை எடுத்துவிட்டால், எத்தனை மீதம் இருக்கும்?9 (விதைகள்) - 3 (விதைகள்) = _____________  (விதைகள் மீதம்)நாணயங்களை வைத்தும் கழித்தல் கணக்குப் போடலாம்.

8 ஒரு ரூபாய் நாணயங்கள் அடுக்கி வைக்கப்பட்டு, அதிலிருந்து 4 ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்துவிட்டால், எத்தனை மீதம் இருக்கும்?8 (ஒரு ரூபாய்) - 4 (ஒரு ரூபாய்) = _____________  (ஒரு ரூபாய்  மீதம்)அருமை, இல்லையா?