ஆர்னவ், தனிஷா இருவருக்குமே கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடப் பிடிக்கும். அன்றாடம் மாலையில் அவர்கள் தங்களது நண்பர்களுடன் இதையே விளையாடினர். ஒரு நாள், ஆர்னவ் தனிஷாவிடம், “விளையாடும் போது, நான் யார் கண்ணுக்கும் தெரியாமல் மாயமாக மறைந்துவிட்டால் இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் எவ்வளவு வேடிக்கையாக இருக்கும்!” என்று சொன்னான். ‘உண்மையிலேயே அப்படி ஒருவர் யார் கண்ணுக்கும் தெரியாமல் மாயமாக முடியுமா?’ என்று அவர்களுக்குச் சந்தேகமாய் இருந்தது. அதைப் பற்றித் தங்கள் அம்மா, அப்பாவிடம் கேட்க முடிவு செய்தனர்.
அப்பா புன்னகைத்தவாறே, “இது ஏதோ ஒரு அறிவியல் புனைகதை போல் உள்ளதே!” என்றார்.
அம்மா, வீடுகளில் பயன்படுத்தப்படும் திரைச்சீலைகள் மற்றும் குஷன் உறைகளை வடிவமைத்துத் தருபவர். அதனால் துணிகளின் வகைகளைப் பற்றி அறிந்திருந்தார். “அணிபவரை மாயமாக மறையச் செய்யும் துணி வகைகளைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முயன்று வருகிறார்கள் என்று நினைக்கிறேன்” என்று அம்மா சொன்னார்.
“ஓ! அவை உண்மையாகவே நம்மை மறையச் செய்யும் மேலங்கிகளாக இருக்குமா?” என்று கேட்டாள் தனிஷா.
குழந்தைகள் இருவரும் நூலகத்துக்குச் சென்று நவீனகாலத் துணி வகைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தீர்மானித்தார்கள்.
துணிகளின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள ஆர்னவும், தனிஷாவும் நூலகத்தின் அனைத்து அலமாரிகளிலும் சம்பந்தப்பட்ட புத்தகங்களைத் தேடிப் படித்தனர். துணி நெய்யப் பயன்பட்ட பழமையான இழை ‘லினன்’ என்றும், அது ஃபிளாக்ஸ்(flax) என்ற தாவரத்தின் தண்டிலிருந்து பெறப்படுகிறது என்றும் கண்டறிந்தனர்.
பருத்தித் துணி கூட ஒரு பழமையான துணியே. லினன் போலவே இதுவும் ஒரு தாவரத்திலிருந்தே பெறப்படுகிறது.
அவர்கள் சில புத்தகங்களை இரவலாகப் பெற்றுக்கொண்டு வீட்டுக்குச் சென்றனர்.
பருத்தி
ஃபிளாக்ஸ் செடி
வீட்டில், ஆர்னவ் தனது உடைகளைக் கவனித்தான். “அம்மா! என் கால்சராய் தடிமனாக உள்ளது; எனது மேல்சட்டை மெல்லியதாக உள்ளது. ஆனால் இவை இரண்டும் பருத்தி ஆடைகள்தானே?” என்று கேட்டான்.
“நல்ல கேள்வி ஆர்னவ்” என்ற அம்மா, “ஒரு துணியின் தடிமன், அதை நெய்வதற்குப் பயன்படும் நூலிழையின் தன்மையைப் பொறுத்தது” என்றார்.
“மற்றும் துணி நெய்யப்படும் முறையையும் பொறுத்தது!” என்றார் அப்பா.
“வேறு ஏதேனும் தாவர நூலிழைகள் உள்ளனவா?” என்று தனிஷா கேட்டாள்.
“ஆம்! தென்னை, மூங்கில், சணல் ஆகியவை அவற்றுள் சில” என்றார் அம்மா.
“விலங்குகளிடமிருந்தும், புழுக்களிடமிருந்தும் கிடைக்கும் நூலிழைகள் கூட உள்ளன. செம்மறி ஆடுகளிலிருந்து கம்பளியும், பட்டுப்புழுக்களிலிருந்து பட்டும் பெறுகிறோம்’’ என்றான் ஆர்னவ்.
“அம்மா! நீங்கள் பட்டுப்புடவை கட்டிக்கொண்டிருக்கிறீர்கள்; அப்பாவின் சட்டை லினன் துணியால் ஆனது; என்னுடைய மஃப்ளர், கம்பளியால் ஆனது என்று எனக்குத் தெரியும் ஆனால், என்னுடைய பாவாடை எந்தத் துணியால் ஆனது?” என்று தனிஷா கேட்டாள்,
“அது பாலியஸ்டர் என்னும் ஒரு செயற்கை நூலிழையால் ஆனது. அது செடியிலிருந்தோ விலங்கிடமிருந்தோ பெறப்படுவதல்ல. அது ஆய்வகத்தில் நெய்யப்படுவது” என்றார் அம்மா.
துணிகள் ஆய்வகங்களிலும் உருவாக்கப்படுகின்றன என்பதைக் கேட்ட சகோதரனும் சகோதரியும் மகிழ்ந்தார்கள், தாங்கள் எடுத்து வந்த புத்தகத்தில் செயற்கை நூலிழைகளைப் பற்றிக் கூறும் அத்தியாயங்களைத் தேடினர். சில நூலிழைகள் மீள்தன்மை கொண்டவை என்று தெரிந்து கொண்டனர். விளையாட்டு வீரர்கள் அணியும் ‘ட்ரேக் பேண்ட்ஸ்’(track pants) போன்றவை, நீண்டு சுருங்கும் தன்மை கொண்ட ‘ஸ்பாண்டெக்ஸ்’(spandex) என்ற நூலிழையைக் கொண்டு செய்யப்படுகின்றன.
விஞ்ஞானிகள் மேம்பட்ட செயல்பாடுடைய நூலிழைகளை எவ்விதம் உருவாக்கினார்கள் என்பதை அவர்கள் படித்தனர். “அவை வெப்பம், மின்சாரம் மற்றும் வேதிப்பொருட்களின் தாக்கத்தைத் தடுக்கும் திறனுள்ளவை. சில புதிய வகை நூலிழைகள் அதிர்ச்சியைத் தாங்கும் திறன் கொண்டவை. அவை காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினருக்கு பயன்படுபவை. சில நூலிழைகள் எளிதில் தீப்பிடிக்காதவை. இவை தீயணைப்பு வீரர்களுக்கு மிகவும் உதவும்” என்று தனிஷா உரக்க வாசித்தாள்.
அப்போது, அங்கே வந்த அம்மா சொன்னார், “ஆர்னவ், தனிஷா! இங்கே பாருங்கள், நீங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்த நூலகப் புத்தகங்கள் ஒன்றில் நான் என்ன கண்டேன் என்று!’’ அவர் காட்டிய புத்தகம்உயர் தொழில்நுட்ப இழைகளைப் பற்றியதாகும்.
அம்மா, அதிலிருந்து ‘நானோ நூலிழைகளை‘ப் பற்றிய ஒரு சுவையான பகுதியைக் காட்டினார். ‘கார்பனி’லிருந்து உருவாக்கப்படும் இந்த நானோ நூலிழைகளை(nano fibres) ‘நுண்ணறிவு நூலிழைகள்’(smart fibres) என்றும் அழைப்பார்கள். இவை வெப்பநிலை, அழுத்தம் மற்றும்கதிர்வீச்சுகளை உணர்ந்து அறியக்கூடியவை.
“நானோ நூலிழை என்றால் என்ன? அவற்றை ஏன் அந்தப் பெயரில் அழைக்கிறார்கள்?” என வினவினான் ஆர்னவ்.
“நானோ நூலிழைகள் என்பவை மிகவும் மெல்லிய நூலிழைகள். நீ ஒரு மீட்டரை நூறு கோடியால் வகுத்தால் உனக்கு ஒரு ‘நானோமீட்டர்’ கிடைக்கும். நானோ நூலிழைகள் ஒரு சில நானோமீட்டர்கள் விட்டமே உள்ளவை” என்று அப்பா விளக்கினார்.
1 மீட்டர் / 1,00,00,00,000 = 1 நானோமீட்டர்
ஆர்னவும் தனிஷாவும் தம்மிடமிருந்த புத்தகக் குவியலில் தேடிப் படித்ததில், நுண்ணறிவு நூலிழையிலிருந்து நெய்யப்பட்ட துணி, ‘விவேகத் துணி’(intelligent material) அல்லது ‘ஈ-டெக்ஸ்டைல்’ என்று அழைக்கப்படுவதைத் தெரிந்து கொண்டார்கள்.
இது ‘ஆரோக்கிய உடுப்பு’(health wear)களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த உடுப்புகளின் நூலிழைகளில் மிகச்சிறிய உணர்கருவிகள்(sensors) உள்ளன. இவை நோயாளியின் சுவாசம், இதயத் துடிப்பு மற்றும் உடலின் வெப்ப நிலை ஆகியவற்றை உணரக் கூடியவை. இந்தத் தகவல்களை தானாகவேமருத்துவருக்கு அனுப்பிவிடும். நோயாளி வீட்டிலேயே தங்கியிருக்கலாம்.
“இப்பொழுது உன்னுடைய முதல் கேள்விக்கு வருவோம் - யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து விடுவது சாத்தியமா?” என்றார் அம்மா. அவர் அப்பொழுதுதான் ஒரு அறிவியல் புத்தகத்தில் ஒரு கட்டுரையைப் படித்திருந்தார். அந்தக் கட்டுரையின்படி, ஒரு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு புதுமையான மேலங்கியைத் உருவாக்கியுள்ளனர். இந்த மேலங்கி, அதை அணிந்தவரை மறைந்துவிடச் செய்யும். அது80 நானோமீட்டர்கள் விட்டம் கொண்ட நூலிழையால் நெய்யப்பட்டது.
அவர் ஒரு படத்தைக் காட்டி விளக்கினார், “நாம் ஒரு பொருளைப் பார்க்கிறோம் – எடுத்துக்காட்டாக, ஒரு சிவப்புக் கண்ணாடி அல்லது கரும்பலகையைப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அது தன் மேல் விழும் வெளிச்சத்தை சிறிதளவேனும் பிரதிபலிப்பதால்தான் நாம் அதைப் பார்க்க முடிகிறது. ஆனால் இந்தப் புதிய ‘மாயத்துணி’ வெளிச்சத்தைப் பிரதிபலிக்காது. மாறாக, இதன் நூலிழைகள் தன் மீது படும் ஒளிக்கதிர்களைச் சிறிதே வளைத்துத் தன்னைச் சுற்றிச் செல்லுமாறு செய்கிறது. அதனால் நீ இந்த மேலங்கியையோ அல்லது அதனடியிலுள்ள எதையுமோ பார்க்க முடியாது.”
“அந்தத் துணியில் செய்த ஒரு சட்டை எனக்குக் கிடைக்குமா?" என்று ஆர்னவ் ஆசையுடன் கேட்டான். அப்படியொரு சட்டையை அவன் அணிந்தால்அவனுடைய தலையும், கால்களும் மட்டும் தனித்தனியே நகருவதைக் கண்டு அவனது நண்பர்கள் பயந்து போவார்கள்; அவர்கள் முகபாவம் அவனுக்கு மிகுந்த சிரிப்பை மூட்டும்.
“விஞ்ஞானிகளும் தயாரிப்பாளர்களும் இந்த யோசனையைச் செயலாற்ற முயன்று வருகிறார்கள் என்று செய்தித்தாள் அறிக்கைகள் அறிவிக்கின்றன. அத்தகைய மேலங்கிகள் சில நாடுகளில் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவை இன்னும் மக்களிடையே புழக்கத்திற்கு வரவில்லை” என்றார் அம்மா.
“பிறர் கண்ணுக்குத் தெரியாமல் நம்மை மறையச் செய்யும் ஓர் மேலங்கியை அணிந்துகொண்டு கண்ணாமூச்சி விளையாடுவது மிக்க வேடிக்கையாக இருக்கும்!” என்று சிரித்தாள் தனிஷா. “ஆனால், பெரியவர்கள் இந்த ‘மாய ஆடை’யைப் பயன்படுத்தி முக்கியமான ஏதாவது செய்ய இயலுமா?”
“ஆம், இராணுவத்தினர் எதிரிகளோடு போரிடும் போது இதனை அணியலாம்” என்றார் அப்பா. “அத்துடன், எனக்கு வேலை இருக்கும் போது நீங்கள் என்னை விளையாட அழைத்தால், அப்போது நான் இந்த ஆடைக்குள் ஒளிந்து கொண்டு உங்களிடமிருந்து தப்பிவிடலாம்” என்றார் வேடிக்கையாக.
பள்ளியில், ஆர்னவும் தனிஷாவும் நுண்ணறிவு நூலிழைகளைப் பற்றிய எல்லா விவரங்களையும் தங்கள் நண்பர்களுக்கு சொன்னார்கள்.
“எனக்கு ஒரு யோசனை! கேல்கர் சார் இன்னும் வகுப்புக்கு வரவில்லை. நாம் ஆய்வகத்துக்குச் சென்று சில விறுவிறுப்பான ஆய்வுகளைச் செய்தால் என்ன?” என்று கண்களில் குறும்பு மின்னக் கேட்டாள் தனிஷா.
“கொஞ்சம் பொறு! ஒருவேளை, அவர் ஏற்கெனவே இங்கே வந்திருந்தால்...? தன்னை மறையச் செய்யும் மாய ஆடைக்குள்ளே ஒளிந்து கொண்டு, நாம் என்ன செய்கிறோம் என்று அவர் உளவு பார்க்கிறாரோ என்னவோ!” என்று கிசுகிசுத்தான் ஆர்னவ்.
விவேகத்துணி நூலிழைகள் - சில உண்மைகள்
சில நுண்ணறிவு நூலிழைகள், மூக்குக்கண்ணாடிகளின் லென்ஸ்கள், கண்ணாடிகள் மற்றும் நகைகளைச் சுத்தம் செய்யப் பயன்படும் துணிகளை நெய்யப் பயன்படுத்தப்படுகின்றன.
வெடிபொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்கிறவர்கள் வெப்பத்தைத் தாங்கும் இழைகளாலான ஆடைகளை அணிகிறார்கள்.
சில இழைகள் உள்ளீடற்றவை(hollow). அவற்றில் நறுமணத் திரவங்களைச் சேமிக்கலாம். இவை மெத்தை, தலையணை உறைகளுக்கானத் துணிகளை நெய்யப் பயன்படுத்தப்படுகின்றன.
உங்களிடம் யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைக்கும் மாய ஆடை மேலங்கி இருந்தால் என்ன செய்வீர்கள்?
ஆர்னவ், தனிஷா என்ன செய்யத் திட்டமிட்டுள்ளார்கள் என்று பார்ப்போம்!
1. யாராவது பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலைத் தூக்கி எறிந்தால், மாய ஆடை அணிந்து, அதை எடுத்துக்கொண்டு அவர்கள் முன்னால் நடந்திடுங்கள். கண் முன்னால் ஒரு பாட்டில் நகர்ந்து செல்வதைப் பார்த்து அவர்கள் எப்படி மிரண்டு போவார்கள் என்று கற்பனை செய்யுங்கள்.
2. மாய ஆடையைக் கொண்டு, மேசை மேல் இருக்கும் உங்களுடைய ஆசிரியரின் மூக்குக்கண்ணாடியை மறைத்துவிடுங்கள். ஆசிரியர் அவரது கண்ணாடியைக் கண்டுபிடிக்கவே முடியாது! ஆகையினால் வகுப்புகளுக்கு விடுமுறை!
3. இடைவேளை மணியை முன்கூட்டியே 'டாண் டாண் டாண்' என்று அடியுங்கள்!