காரிருளில் ஒரு மின்னல்
அமரர் கல்கி
ஆரம்பிக்கும்போது, என் கதையை நீங்கள் நம்புவீர்களோ என்ற சந்தேகம் உண்டாகிறது. வேறு யாராவது இத்தகைய சம்பவம் தங்கள் வாழ்க்கையில் நடந்தது என்று சொன்னால் எனக்கும் அவநம்பிக்கைதான் பிறக்கும். கைதேர்ந்த கதாசிரியர்களைப் போல் அசாத்தியமான விஷயங்களையும் நடந்தது போல் நம்பச் செய்யும்படி எழுதும் சக்தியும் எனக்கில்லை. எழுதும் பழக்கம் எனக்கு அதிகம் கிடையாது. ஒரே ஒரு தடவை கிறுக்குப் பிடித்துப் போய் ஒரு நாவல் எழுதுவதென்று தொடங்கினேன். காமா சோமாவென்று அதை எழுதி முடித்தும் விட்டேன். ஆனால் அதை அப்புறம் ஒரு முறை படித்தபோது சுத்த மோசமென்று தோன்றியபடியால் அதை அச்சிடும் முயற்சி எதுவும் செய்யவில்லை. சிநேகிதர் ஒருவர் ஒரு தடவை என் வீட்டிற்கு வந்திருந்த போது அந்த கையெழுத்துப் பிரதியைப் பார்த்துவிட்டு, அதைப் படிக்க வேணுமென்று சொல்லி எடுத்துக் கொண்டு போனார். அதை அவர் திருப்பிக் கொடுக்கவுமில்லை; நான் அதைப்பற்றிக் கவலைப்படவும் இல்லை.