Kartsuvargal

கற்சுவர்கள்

1960-க்கும் 75-க்கும் இடைப்பட்ட காலத்தில் சமஸ்தானங்களாக முன்பு இருந்த பழைமையான ஊர்கள், பழைமையான குடும்பங்கள் பிரதேசங்களைக் கவனித்த போது இந்தக் கதை என் மனதில் உருவாகத் தொடங்கியது. ‘கற்சுவர்கள்’ என்ற தலைப்பை ‘ஸிம்பாலிக்’ ஆகக் கொடுத்திருக்கின்றேன். முதலில் இதை ஒரு சிறுகதையாக எழுதினேன். கதைக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

- நா. பார்த்தசாரதி

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

பொருளடக்கம்

முன்னுரை

1960-க்கும் 75-க்கும் இடைப்பட்ட காலத்தில் சமஸ்தானங்களாக முன்பு இருந்த பழைமையான ஊர்கள், பழைமையான குடும்பங்கள் பிரதேசங்களைக் கவனித்த போது இந்தக் கதை என் மனதில் உருவாகத் தொடங்கியது. ‘கற்சுவர்கள்’ என்ற தலைப்பை ‘ஸிம்பாலிக்’ ஆகக் கொடுத்திருக்கின்றேன். முதலில் இதை ஒரு சிறுகதையாக எழுதினேன். கதைக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

ராஜமான்யம், சமஸ்தான அந்தஸ்து, எல்லாம் பறி போன பிறகு ‘அரச குடும்பம்’ - என்ற அர்த்தமில்லாத - ஆனால் வெறும் வழக்கமாகிப் போய்விட்ட ஒரு பழைய பெயரை வைத்துக் கொண்டு இப்படிக் குடும்பங்கள் பெரிய கால வழுவாகச் (Anachronism) சிரமப்பட்டிருக்கின்றன.

பழைய பணச் செழிப்பான காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட பழக்க வழக்கங்களைப் புதிய பண நெருக்கடிக் காலத்தில் விட முடியாமல் திணறிய சமஸ்தானங்கள், குதிரைப் பந்தயம், குடி, சூதாட்டம், பெண்கள் நட்புக்காகச் சொத்துக்களைப் படிப்படியாக விற்ற சமஸ்தானங்கள், கிடைத்த ராஜமான்யத் தொகையில் எஸ்டேட்டுகள் வாங்கியும், சினிமாப் படம் எடுத்தும், தொழில் நிறுவனங்கள் தொடங்கியும், ரேஸ் குதிரைகள் வளர்த்தும் புதிதாகப் பிழைக்கக் கற்றுக் கொண்ட கெட்டிக்காரச் சமஸ்தானங்கள், என்று விதம் விதமான சமஸ்தானங்களையும் அவற்றை ஆண்ட குடும்பங்களையும் பல ஆண்டுகளாகக் கூர்ந்து நோக்கியிருக்கிறேன். அழகான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆனால் மூடி தொலைந்து போன ஒரு பழைய காலி ஒயின் பாட்டிலைப் போல் இப்படிச் சமஸ்தானங்கள் - இன்று எனக்குத் தோன்றின. காலி பாட்டிலுக்குப் - பெருங்காய டப்பாவுக்குப் பழம் பெருமைதான் மீதமிருக்கும். ஒவ்வொரு சமஸ்தானத்திலும் முன்பு சேர்ந்துவிட்ட பலதுறை வேலை ஆட்களை இன்று கணக்குத் தீர்த்து அனுப்புகிற போது எத்தனையோ மனவுணர்ச்சிப் பிரச்னைகள், ஸெண்டிமெண்டுகள் எல்லாம் ஏற்பட்டிருக்கின்றன. ஊதாரித்தனங்களையும், ஊழல் மயமான செலவினங்களையும் விடவும் முடியாமல், வைத்துக் கொள்ளவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவித்திருக்கிறார்கள் சமஸ்தானமாக இருந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்த நாவலில் மேற்படி பிரச்னைகள் அனைத்தையும் இணைத்துக் கதாபாத்திரங்கள் வருகிறார்கள். கதை நிகழ்கிறது. டம்பத்துக்கும் ஜம்பங்களுக்கும் ஊழலுக்கும், ஊதாரித்தனத்துக்கும் இருப்பிடமான ஒரு பழந் தலைமுறைக் கதாபாத்திரமும் வருகிறது. பரந்த நல்லெண்ணமும் முற்போக்குச் சிந்தனையும் உள்ள புதிய தலைமுறைக் கதாபாத்திரமும் வருகிறது. சமஸ்தானமாக இருந்த குடும்பங்களிலேயே ‘ஜெனரேஷன் கேப்’ எப்படி எல்லாம் இருந்தது என்பதைக் காண்பிக்கிற நிகழ்ச்சிகள் கதையில் இடம் பெறுகின்றன.

கதையின் தொடக்கத்திலேயே இறந்து போகிற பெரிய ராஜா தாம் செய்துவிட்டுச் சென்ற செயல்கள் மூலமாகக் கதை முடிவு வரை ஒரு கதாபாத்திரமாக நினைவுக்கு வருகிறார். ஒரு தலைமுறையில் அழிவும் மற்றொரு தலைமுறையின் ஆரம்பமும் நாவலில் வருகிறது. மனப்பான்மை மாறுதல்கள் கதாபாத்திரங்கள் மூலமாகவே புலப்படுத்தப்பட்டுள்ளன. மனப்பான்மை முரண்டுகளையும் கதாபாத்திரங்களே காட்டுகிறார்கள்.

ஒவ்வொரு சமஸ்தானமும் ஒரு பெரிய ‘எஸ்டாபிளிஷ்மெண்ட்’ ஆக இருந்திருக்கிறது. ‘எஸ்டாபிளிஷ்மெண்ட்’ - அழியும் போது - அல்லது சிதறும் போது ஏற்படும் குழப்பங்கள் - மனிதர்கள் சம்பந்தமான பிரச்னைகள், புலம்பல்கள், கழிவிரக்கங்கள் எல்லாம் இந்தக் கதையில் வருகின்றன.

இந்நாவல் புதிய இந்திய சமூக அமைப்பில் - ராஜமான்ய ஒழிப்பு அவசியமே என்று நியாயப்படுத்தும் ஒரு கதையை வழங்குகிறது. ஒரு கதையோடு சேர்த்து நிரூபணமாகிற தத்துவங்கள் வலுப்படும் என்பது உறுதி. சமஸ்தான ஒழிப்பு, ராஜமான்ய நிறுத்தம் ஆகிய கடந்த பத்துப் பதினைந்தாண்டுக்காலப் பிரச்னைகள் - முற்போக்கான சமூக அமைப்புக்குத் தேவையான விதத்தில் இதில் பார்க்கப்படுகிறது என்பதுதான் முக்கியம். கதையில் வரும் ‘பீமநாதபுரம் சமஸ்தானம்’ - இதை விளக்குவதற்கான ஒரு கற்பனைக் களமே.

இதை முதலில் நாவலாக வேண்டி வெளியிட்ட மலேயா தமிழ் நேசன் தினசரியின் வாரப் பதிப்பிற்கும் இப்போது சிறந்த முறையில் புத்தக வடிவில் வெளியிடும் சென்னை தமிழ்ப் புத்தகாலயத்தாருக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நா.பார்த்தசாரதி தீபம், 21-9-76

அத்தியாயம் - 1

பீமநாதபுரம் நகரம் என்று சொல்லிவிட முடிந்த அதிக வசதிகள் உள்ளதும் அல்ல; வசதிகளே இல்லாத குக்கிராமமும் அல்ல; சமஸ்தானமாக இருந்த காலத்தில் அந்த ஊருக்குத் தனி அடையாளங்களும் தனிச் சிறப்புகளும் இருந்தன. நவராத்திரி விழா, புலவர்களின் கவி மழைகள், இசை, நடனம், சதிர், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை, வாண வேடிக்கை எல்லாம் இருந்தன. இவை ஆண்டுக்கு ஆண்டு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தன. அரண்மனையையும், சமஸ்தானத்தையும் மையமாகக் கொண்டிருந்த ஊரின் முக்கியத்துவங்கள் அங்கிருந்து விலகி இடம் மாறின. ஊரின் முக்கால்வாசி இடம் அரண்மனை; மலைப் பாம்பு போல் வளைந்து கிடந்த கற்கோட்டைக்குள் காடாய் அடர்ந்த நந்தவனங்கள், பூங்காக்கள், மரக் கூட்டங்களுக்குள்ளே நடுவாக அரண்மனை இருந்தது. ஊரின் வளர்ச்சி, தளர்ச்சி, கடைவீதி வியாபாரம், போக்குவரத்து எல்லாம் ஒரு காலத்தில் அரண்மனையைப் பொறுத்துத்தான் இருந்தன. இன்று அது மாறிவிட்டது. வேறு சூழ்நிலைகளும் வேறு முக்கியத்துவங்களும் ஊருக்குள்ளே உருவாகிவிட்டன. பீமநாதபுரம் சமஸ்தானத்தின் ராஜமான்யமாகக் கிடைத்து வந்த ஆண்டுக்கு ஏழு லட்சத்து எண்பதாயிரம் ரூபாயும், பின்வழித் தோன்றல்களுக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட ஆறு லட்சத்து இருபதினாயிரம் ரூபாய்களும் நிறுத்தப்பட்ட பின் அதே கவலையில் 1972-ம் வருடம் டிசம்பர் மாதம் பனி அதிகமாக இருந்த ஒரு பின்னிரவில் மாரடைப்பினால் காலமாகிவிட்டார் அதன் மகாராஜாவாக இருந்த பீமநாத ராஜ சேகர பூபதி.

அதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் பெரிய மகாராஜா பீமநாத ராஜ சேகர பூபதியுடன் ஏதோ ஒரு மனஸ்தாபம் ஏற்பட்டுத் தன் தாய்வழி மாமன் ஒருவருக்கு மலேசியாவில் இருந்த ரப்பர்த் தோட்டத்துக்கு மானேஜராகப் போய்விட்ட ராஜாவின் ஒரே மூத்த மகன் திரும்பி வருவதற்காக அந்திமக் கிரியைகள் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

மூத்தமகன் விமானத்தில் புறப்பட்டு வருவதாகத் தகவலும் வந்துவிட்டது. தனசேகரன் வருவானா மாட்டானா என்று கூட அந்த ராஜ குடும்பத்தில் ஒரு சர்ச்சை இருந்தது. அவன் வருவதாகக் கேபிள் கிடைத்ததும் தான் அந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அவன் வருவது பற்றிப் பலரும் பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள்.

“ரெண்டு வருசமா எட்டிப் பார்க்காம இருந்த புள்ளையாண்டானுக்கு அப்பன் இறந்ததும் சொத்துச் சுகம், வாரிசு உரிமை எல்லாம் என்ன ஆகுமோன்னு பயம் வந்திருக்கும். அதான் ப்ளேன்ல பறந்து ஓடியாரான்.”

“சே! சே! அப்பிடிச் சொல்லிடாதீங்க. சொத்து சுகத்தை எல்லாம் தனசேகரன் என்னிக்குமே இலட்சியம் பண்ணினதில்லே. அப்படி எல்லாம் இலட்சியம் பண்ணியிருந்தா அவன் மலேசியாவுக்கே போயிருக்க வேண்டியதில்லியே?”

“எப்படியோ? இப்போ அவன் புறப்பட்டு வந்தால் எல்லாம் தானே தெரியுது? பெரிய ராஜா போயாச்சு. இனிமே எப்படியும் அண்ணன் தம்பி தங்கைகளுக்குள்ளே சொத்துச் சுகம் பற்றின தகராறுகளோ பேச்சு வார்த்தைகளோ ஏற்படாம இருக்கிறது சாத்தியமில்லே! தகராறு எப்படியும் வந்துதான் தீரும்.”

“அண்ணன் தம்பி தங்கைங்கிற பேச்சுக்கே இடமில்லே. முறையான வாரிசு தனசேகரன் ஒருத்தன் தான். மற்றவங்கள்ளாம் இளையராணிகளுக்குப் பிறந்தவங்கதானே?”

இப்படி எல்லாம் ஊரில் பலவிதமாகப் பேச்சு எழுந்தது. சமஸ்தானத்து உறவு முறைகளின்படி அண்ணன் தம்பிகள் அக்கா தங்கைகள் என்ற பெயரில் வெளியூர்களில் இருந்த எல்லாருக்கும் தந்திகள் பறந்தன. காலஞ்சென்ற பீமநாத ராஜ சேகர பூபதிக்கு ஏராளமான வாரிசுகள். மனைவியைத் தவிரவும் - அதாவது முறைப்படி ராணி என்று அரண்மனை வேலைக்காரர்கள் அழைத்து மரியாதை செய்து வந்த தர்மபத்தினியைத் தவிரவும் அந்தப்புரத்துக் காமக் கிழத்தியர் வேறு பலர் இருந்தனர். அவர்களுடைய குழந்தைகளும் மகாராஜாவின் வாரிசுகளாகவே கருதப்பட்டனர். இரண்டு வருஷங்களுக்கு முன் பெரிய ராஜாவின் போக்குகள் பிடிக்காமல் அவரை திருத்தவும் முடியாமல் தான் தனசேகரனே மலேசியாவுக்குப் புறப்பட்டுப் போயிருந்தான். அவன் மலேசியா புறப்படுவதற்கு ஆறு மாதத்திற்கு முன்புதான் அவன் அன்னையும் பட்டத்து ராணியுமான வடிவுடைய நாச்சியாரம்மாள் காலமாகியிருந்தாள். தனசேகரனுக்குத் தந்தையிடம் ஒட்டுதலே இல்லாததோடு தாயிடம் தான் நிறைய ஒட்டுதலும் பாசமும் இருந்தன. தாய் இறந்த சில மாதங்களுக்குள் தந்தை செய்த சில காரியங்கள் அவனுக்கு அறவே பிடிக்கவில்லை. தாயும் தனசேகரனும் தான் பெரிய மகாராஜாவைத் தவறான வழிகளில் செல்லாமல் இழுத்துப் பிடித்து நிறுத்துகிற தடுப்புச் சக்தியாக இருந்தார்கள். அவர்கள் இரண்டு பேருக்கும் தான் அவர் கொஞ்சம் பயப்பட்டார். மற்றவர்கள் எல்லாருமே அவரிடம் எதிரே நின்று பேசுவதற்கே அஞ்சுகிறவர்களாக இருந்தார்கள். தாய் போனதும் தனசேகரனுக்கும் மகாராஜாவுக்கும் இடையே இருந்த இணைப்புச் சக்தி போய்விட்டது. மகாராஜா தான்தோன்றித்தனமாக நடக்க ஆரம்பித்து விட்டார்.

தனசேகரனின் அன்னையும் பீமநாதபுரம் சமஸ்தானத்தின் மூத்த ராணியுமான வடிவுடைய நாச்சியாரம்மாள் காலமானவுடன் திடீரென்று ஏற்பட்ட சபலங்களாலும், சகவாச தோஷத்தினாலும் கேட்பார் பேச்சை கேட்டுக் கொண்டும் சினிமாத் தயாரிப்பில் இறங்கினார் மகாராஜா. அதற்காக ‘பீமா புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பெயரில் சென்னையில் ஒரு சினிமாக் கம்பெனியும் திறக்கப்பட்டது.

சினிமாக் கம்பெனி திறக்கப்பட்டதையொட்டிச் சில நடிகைகளோடு அவருக்கு அதிகத் தொடர்பு ஏற்பட்டது. அவர்களில் சில அழகான இளம் நடிகைகள் ‘வீக் என்ட்’ எண்டர்டெயின்மெண்டுக்காகப் பீமநாதபுரம் அரண்மனைக்கே பெரிய பெரிய ‘சவர்லே’ இம்பாலா கார்களில் தேடி வரத் தொடங்கினார்கள். ஜெயநளினி என்ற ஒரு புதிய கதாநாயகிக்கு லட்ச ரூபாய் செலவழித்து அடையாற்றில் ஒரு பங்களா வாங்கிக் கொடுத்தார் மகாராஜா. இந்த மாதிரிப் போக்கில் அதிருப்தியும் கசப்பும் அடைந்த பின்பே தாய்வழி மாமன் ஒருவருக்கு மலேசிய நாட்டில் ஈப்போவில் வியாபாரமும், பக்கத்தில் ரப்பர் எஸ்டேட்டுகளும் இருக்கவே - அவரோடு மலேசியா புறப்பட்டுவிட்டான். மகாராஜாவின் மூத்த மகனும் இளையராஜாப் பட்டம் பெற வேண்டியவனுமான தனசேகர பாண்டிய பூபதி என்ற முழுப் பெயரையுடைய தனசேகரன்.

சமஸ்தானத்துக்கு ‘ப்ரீவிபர்ஸ்’ என்னும் ராஜமான்யத் தொகை வருவது நிற்கிற வரை பெரிய மகாராஜா, கூத்து, குடி, ரேஸ், சினிமாத் தயாரிப்பு என்ற பெயரில் நடிகைகளோடு லீலை எல்லாவற்றையும் தாராளமாக நடத்த முடிந்தது.

ராஜமான்யம் நின்றதுமே அவரது இதயமும் நின்று போய்விட்டது. விவரம் தெரியாத காரணத்தால் சினிமாத் தயாரிப்பில் அவரை நிறைய ஏமாற்றிவிட்டார்கள். அவரது படங்கள் வெற்றியோ வசூலோ ஆகவில்லை. அவ்வளவேன்? சில படங்கள் தயாராகவே இல்லை. பணத்தை மட்டும் லட்ச லட்சமாக முழுங்கின. நிறைய நஷ்டப்பட்டும் நடிகைகள் மேலுள்ள நைப்பாசையால் அவர் சாகிறவரை சினிமாவை விடவில்லை. சினிமாக் கவர்ச்சிகளும் சாகடிக்காமல் அவரை விட்டு விலகிப் போய்விடவில்லை.

சமஸ்தானங்கள் ஒழிக்கப்பட்டு ராஜமான்யம் வரத் தொடங்கியதும், இந்திய மகா ராஜாக்களில் பலர் ரேஸ் குதிரைகள் வளர்ப்பது, சினிமா எடுப்பது, ஆடம்பர ஹோட்டல்கள் நடத்துவது, காபி எஸ்டேட், டீ எஸ்டேட், டெக்ஸ்டைல் மில் எனப் பலவிதமான தொழில்களில் இறங்கினர். அவர்களில் பலர் கடந்த கால டாம்பீக உணர்வுகளை விட முடியாமல் சிரமப்பட்டனர். பழைய பழகிய ஆடம்பரங்களுக்கும், புதிய நிர்பந்தமான பணப்பற்றாக்குறைக்கும் ஒரு போராட்டமே அப்படிப்பட்டவர்கள் வாழ்வில் ஆரம்பமாகியிருந்தது. அந்தப் போராட்டத்தில் தோற்றுப் போய்த்தான் மகாராஜா பீமநாத ராஜ சேகர பூபதி மாண்டு போயிருந்தார்.

பீமநாதபுரம் சமஸ்தானமாக இருந்தவரை திவான் தனி இராணுவம், தனிப் போலீஸ், தனிக்கொடி, தனி ராஜ மரியாதைகள் எல்லாம் இருந்தன. கஜானாவில் தங்கமும் வைரமும் குவிந்து கிடந்தன. கடைசி திவானாயிருந்து ஓய்வு பெற்ற சர்.டி.ராகவாச்சாரியர் காலம் வரை அரண்மனையும் சமஸ்தானமும் செல்வச் செழிப்பில் தான் மிதந்தன. சமஸ்தான அந்தஸ்து ஒழிவதற்கு முந்திய கடைசி நவராத்திரி வித்வத் சதஸின் போது கூட மன்னரை வாழ்த்திய தமிழ்ப் புலவர்களுக்கும், சங்கீதக் கச்சேரி செய்த இசை வித்வான்களுக்கும், நாட்டியமாடிய நடனக்காரிகளுக்கும் தங்கச் சவரன்களாகத்தான் சன்மானங்கள் எண்ணி வழங்கப்பட்டன. பட்டுப் பீதாம்பரங்களும் விலையுயர்ந்த காஷ்மீர் சால்வைகளும் போர்த்தப்பட்டன.

சமஸ்தான திவான் சர்.டி.ராகவாச்சாரி ஓய்வு பெறுகிற நேரமும் சமஸ்தானங்கள் அந்தஸ்தை இழக்கிற காலமும் சரியாக நெருங்கி வந்ததினால் ‘மாதம் மூவாயிரம் ரூபாய் சம்பளத்தில் இனிமேல் நமக்கு ஒரு திவான் அவசியமில்லை’ என்ற முடிவுடன் திவானைக் கௌரவமாக ஓய்வு பெறச் செய்து ஒரு பெரிய விடையளிப்பு விருந்தும் கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார் பீமநாத ராஜ சேகர பூபதி. ராஜமான்யமாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சில லட்ச ரூபாய்களுக்குள்ளேயே இனிமேல் சமஸ்தானச் செலவுகளையும் சொந்தச் செலவுகளையும், குறுக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. திவான் இல்லை என்றாலும் திடீர் என்று அவர் கவனித்து வந்த ஏராளமான வேலைகளையும், பொறுப்புக்களையும், யாராவது கவனித்தே ஆக வேண்டியிருந்தது. காரியஸ்தர் என்ற புதுப் பெயரில் ஒரு பழைய காலத்து வக்கீலை ராஜா நியமித்திருந்தார். அரண்மனைக் காரியஸ்தர் என்ற பெயரை ஏற்று உத்தியோகம் பார்த்து வந்த அவருக்குக் கீழே இரண்டு கிளார்க், ஒரு டைபிஸ்ட், ஓர் அகௌண்ட்டெண்ட், ஒரு கேஷியர், ஒரு அட்டெண்டர், ஒரு மெஸஞ்சர் ஆகிய ஆறு ஏழு பேர் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

பெரிய மகாராஜா மாரடைப்பால் காலமானவுடனே அப்போது மலேசியாவில் ஈப்போவில் இருந்த அவருடைய மூத்த குமாரன் தனசேகரனுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசியதே அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வைதான்! தனசேகரன் உடனே வருவதாகத் தெரிவித்ததுடன் காரியஸ்தரைப் பீமநாதபுரத்திலிருந்து காரோடு மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வரச் சொல்லியும் வேண்டிக் கொண்டிருந்தான்.

தனசேகரன் வருவதோடு அவனுடன் காலஞ்சென்ற மகாராஜாவின் மைத்துனரும் தனசேகரனின் மாமாவான டத்தோ தங்கப் பாண்டியனும் மலேயாவிலிருந்து கூடவே புறப்பட்டு வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நேரே கோலாலம்பூரிலிருந்து சென்னை வருகிற ‘பிளைட்டில்’ இருவருக்கும் இடம் கிடைக்காததால் ஆஸ்திரேலியாவிலிருந்து கோலாலம்பூர் வந்து அங்கிருந்து கொழும்பு செல்லுகிற ஒரு வெளிநாட்டு விமானத்தில் இடம் பிடித்துக் கொழும்பிலிருந்து சென்னை வந்து விடுவதாகத் தனசேகரனே மறுபடி டெலிபோனில் கூப்பிட்டு அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையிடம் வருகையை உறுதிபடுத்திச் சொல்லி விட்டான். அந்த வருகைச் செய்தி பீமநாதபுரம் நகரிலும் முழுமையாகப் பரவிவிட்டது. பீமநாதபுரம் அரண்மனைகளின் முகப்பிலேயே இருந்த ராஜராகேஸ்வரி விலாசஹாலில் காலஞ்சென்ற மகாராஜாவின் உடல் ஐஸ்கட்டிகள் அடுக்கப்பட்டு வாசனைத் தைலங்கள் தடவப்பட்டுப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. நகரில் பரவலாகத் துக்க தினம் அநுஷ்டிக்கப்பட்டது. கடைவீதிகளில் பெரும்பாலான கடைகள் துக்கத்தைக் காட்டும் அடையாள நிகழ்ச்சியாக மூடப்பட்டு விட்டன. அரசியல் கட்சிகள் என்ற பெயரில் எத்தனை கட்சிகளுக்குப் பீமநாதபுரம் தெருக்களிலும் நாற்சந்திகளிலும், முச்சந்திகளிலும் கொடிக் கம்பங்கள் இருந்தனவோ அத்தனை கொடிக் கம்பங்களிலும் கொடிகள் பாதி அளவு கீழே இறங்கிப் பறந்தன. பொது நிறுவனங்களுக்கும் கல்விக் கூடங்களுக்கும் மறுநாள் காலையே விடுமுறை விடப்பட்டன. மகாராஜாவின் சடலத்தைக் கடைசியாக ஒருமுறை பார்ப்பதற்கு நகரிலிருந்தும் அக்கம் பக்கத்துக் கிராமங்களிலிருந்தும் மக்கள் அரண்மனை முகப்பில் கூடி விட்டனர். எவ்வளவு தான் கெட்ட பெயர் எடுத்திருந்தாலும் எவ்வளவுதான் தாறுமாறாக வாழ்ந்திருந்தாலும் ஜனங்களுக்கு ராஜா என்ற பிரமையும், மயக்கமும் இருக்கத்தான் செய்தன. முறையாக வாழ்ந்தவர்களைப் பார்ப்பதை விடத் தாறுமாறாக வாழ்ந்தவர்களைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. கடைசிக் காலத்தில் அவர் சினிமாத் தயாரிப்பாளராக இருந்தார் என்ற தொடர்பினாலும் நிறைய நடிகைகளோடு அவருக்குத் தொடர்பிருந்ததனாலும் மரணம் நேர்ந்த இரவுக்கு மறுதினம் காலையிலேயே இரவோடிரவாகச் சென்னையிலிருந்தே காரில் புறப்பட்டும் திருச்சி வரை ரயிலில் வந்து பின்பு காரில் சவாரி செய்தும் பல நடிகைகளும், நடிகர்களும், தயாரிப்பாளர்களும் அஞ்சலி செலுத்துவதற்குப் பீமநாதபுரம் வந்து விட்டார்கள். அந்த மாதிரி வந்திருந்த சினிமா நட்சத்திரங்களைப் பார்க்கவும் வேறு அரண்மனை முகப்பில் மக்கள் கூட்டம் அதிகமாகி விட்டது. நட்சத்திரங்கள் ஒரு மகாராஜாவின் பிரேதத்தைப் பார்த்துத் தங்கள் கடைசி மரியாதையைச் செலுத்திவிட்டுப் போக வந்திருந்தார்கள். மக்களோ நட்சத்திரங்களுக்குத் தங்களுடைய மரியாதையைச் செலுத்தத் திரளாகக் கூடிவிட்டனர்.

யாருக்குக் காலஞ்சென்ற மகாராஜா லட்ச ரூபா செலவில் சென்னை அடையாற்றில் ஒரு பங்களா வாங்கிக் கொடுத்ததாகப் பரவலாக ஒரு வதந்தி நாடு முழுவதும் பரவியிருந்ததோ அந்தக் கட்டழகு நடிகை ஜெயநளினி ஒரு முழுக்கறுப்பு நிறப் பட்டுப்புடவையை அணிந்து துக்கம் கொண்டாடுகிற பாவனையில் வந்த போது கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு பார்த்ததாலும் பரபரப்பும் அதிகமாகிவிட்டன.

“மனுஷன் மண்டையைப் போடறதுக்கு முன்னே அவ்வளவு பணத்தையும் இவ காலடியிலே கொண்டு போய்த்தான் குவிச்சாரு!”

“அதுக்காவது விசுவாசம் காண்பிக்க வேண்டாமா? அதுனாலேதான் கறுப்புப் புடவை கட்டிக்கிட்டுத் துக்கம் கொண்டாட வந்திருக்கா இவ. வாங்கின காசுக்காவது நன்றியிருக்கணுமில்லியா?”

“பெரிய மகாராணி போனப்புறமே அவரு தாறுமாறா ஆயிட்டாரு. அப்புறம் கண்ட்ரோல் பண்ண ஆளு யாரும் இல்லே. அதுக்கேத்தாப்ல மூத்த புள்ளையாண்டானும் கோபிச்சுகிட்டு மலேசியாவுக்குப் போயாச்சு.”

“ஏதோ மனுஷன் போய்ச் சேர்ந்தாச்சு! சமஸ்தானமா இருக்கறப்பவே போயிருந்தாலும் ராஜ மரியாதை கிடைச்சிருக்கும். இப்போ அதுவும் இல்லே. வெறும் சினிமாக்காரங்க மட்டும் தேடி வர்ற மரியாதைதான்.”

இப்படிப் பலவிதமான உரையாடல்களை அரண்மனை முகப்பில் கூடியிருந்த பொதுமக்களின் கூட்டத்திடையே சர்வசாதாரணமாகக் கேட்க முடிந்தது.

மகாராஜா காலமான மறுநாள் இரவு ஏழே முக்கால் மணியளவில் தான் தனசேகரனும் அவன் மாமாவும் சென்னை வரமுடியும் என்றிருந்ததால் அடுத்த நாள் இரவையும் விட்டு மூன்றாம் நாள் அதிகாலையில் தான் காலஞ்சென்ற ராஜாவின் இறுதிச் சடங்குகளைச் செய்வதென்று முடிவாகி இருந்தது.

பீமநாதபுரம் நகரின் மேற்குக் கோடியில் அரச குடும்பத்துக்குச் சொந்தமான தனி மயானம் ஒன்று அடர்ந்த தோட்டமாகக் காடு மண்டியிருந்தது. சமஸ்தானத்தின் வம்ச பரம்பரை முழுவதும் அந்த மயானத்தில் தான் இறுதி யாத்திரையை முடித்துச் சாம்பலாகியிருந்தது. அங்கே தான் அரண்மனை வெட்டியான்கள் காட்டைச் செதுக்கி இறந்து போன மகாராஜாவின் சடலத்துக்கு எரியூட்ட இறுதியிடம் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். சமஸ்தானத்துக்குச் சொந்தமான காட்டிலிருந்தே சந்தனக் கட்டைகள் கொண்டு வந்து அடுக்கப்பட்டிருந்தன. மகாராஜாவின் இறுதி யாத்திரையில் சடலத்துக்குப் பின்னால் தூவிக் கொண்டு வருவதற்காக ஒரு லாரி நிறைய ரோஜாப் பூக்களும், மல்லிகைப் பூக்களும் வேறு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன.

இறுதி யாத்திரையை எந்தெந்த வீதிகள் வழியாக வைத்துக் கொள்வது என்பது பற்றிப் போலீஸ் அதிகாரிகளுக்கு ரூட் விவரம் சொல்லுவதற்கு முன்னால் அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வைக்கும் ராஜ குடும்பத்தினருக்கும் அது பற்றிப் பல்வேறு அபிப்பிராய பேதங்கள் இருந்தன.

‘நாலு ரத வீதிகளிலும் நாலு ராஜ வீதிகளிலும் சுற்றி வந்து அப்புறம் மயானத்திற்கான சாலையில் போக வேண்டும்’ என்பதாக ராஜ குடும்பத்தினர் அபிப்பிராயப்பட்டனர். மேல ராஜ வீதி, கீழ ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, அதை அடுத்து அதே போல் நான்கு ரத வீதிகள் ஆகிய எட்டு வீதிகளுக்கு ஒரே சமயத்தில் பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்து தருவது உள்ளூர்ப் போலீஸ்காரர்கள் தங்களுக்குச் சிரமமாக இருக்குமென்று சொன்னார்கள். நான்கு ராஜ வீதிகள் மட்டும் போதும் என்று போலீஸ் அதிகாரிகள் யோசனை சொன்னார்கள். அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையும் அந்த யோசனையை அப்படியே ஏற்றுக் கொண்டார். ராஜ குடும்பத்தினர் மட்டும் எட்டு வீதிகளையும் கண்டிப்பாக வற்புறுத்தினார்கள்.

மறுநாள் பகல் பதினொரு மணிக்கே அரண்மனைக்குச் சொந்தமான ‘சவர்லே’ கார் ஒன்று சென்னை விமான நிலையம் சென்று மலேசியாவிலிருந்து இலங்கை வழியாக வரப்போகும் தனசேகரனையும் அவன் மாமா டத்தோ தங்கப் பாண்டியனையும் அழைத்து வரப் புறப்பட்டது. முதலில் பெரிய கருப்பன் சேர்வையே அந்தக் காரில் சென்னை போய் விமான நிலையத்திலிருந்து அவர்களை அழைத்து வருவதாக இருந்தார். ஆனால் அரண்மனைக் காரியஸ்தர் என்ற முறையில் மகாராஜாவின் இறுதிக் கிரியைகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கவனிப்பதற்கு அவர் பீமநாதபுரத்தில் இருந்தே ஆகவேண்டும் என்று தோன்றியதால் காரை மட்டும் டிரைவரோடு குறித்த நேரத்திற்கு ஒரு மணிக்காலம் முன்னதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருக்கும்படி அனுப்பி வைத்தார். கார் புறப்பட்டுப் போனதுமே அரண்மனையில் ஒரு முக்கியமான பிரச்னை காரியஸ்தரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. காலஞ்சென்ற பீமநாத ராஜசேகர பூபதிக்கு முறைப்படி பட்டத்து ராணியாயிருந்த வடிவுடைய நாச்சியாரம்மாளுக்குத் தான் தனசேகரன் ஒரே பிள்ளையே தவிர அந்தப்புரப் பெண்களான இளைய ராணிகள் மூலம் நிறையப் பிள்ளைகள் பெண்கள் பிறந்து அவர்களில் சிலருக்குத் திருமணமாகிப் பெரிய மகா ராஜாவுக்கு ஏதோ ஒரு வகையில் பேரன் பேத்திகள் கூட இருந்தனர். அப்படி ஏற்பட்ட பேரன்மார்களில் சிலர் மகாராஜாவின் சடலத்தருகே நெய்ப்பந்தம் பிடிக்க வேண்டும் என்றார்கள்.

காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வைக்கு இந்த நெய்ப்பந்தப் பிரச்னையில் சில தர்மசங்கடங்கள் ஏற்பட்டன. அவர் காரியஸ்தராகப் பதவி ஏற்ற பின் அந்த அரண்மனையில் ஏற்பட்ட முதல் பெரிய சாவு இதுதான். அதனால் பல விஷயங்களை எப்படிச் செய்வது என்பதில் அவருக்கு முன் அனுபவம் எதுவும் கிடையாது. நெய்ப்பந்த விஷயம் பின்னால் சொத்து வகையில் ஏதாவது தகராறுகளைக் கிளப்பிவிடுமோ என்று அவர் பயந்தார். தனசேகரனும் அவனுடைய தாய்வழி மாமாவும் வந்த பிறகு அவர்களைக் கேட்டுக் கொண்ட பின் நெய்ப்பந்த விஷயம் பற்றி முடிவு சொல்லலாமா இப்போதே சொல்லலாமா என்று அவர் தயங்கினார். ஏனென்றால் இறுதிக் கிரியைகளில் ஒவ்வொரு பகுதிக்கும் மகாராஜாவின் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடுவதிலும் தொடர்பு இருந்தது. ‘என் பேர நெய்ப்பந்தம் பிடித்தான். அதனால் அவனுக்கு இன்ன சொத்து சேர்ந்தாக வேண்டும்’ என்று பின்னால் ஒவ்வோர் இளைய ராணியும் இதைச் சுட்டிக் காட்டி உரிமை கொண்டாட வந்துவிடக் கூடாதே என்று பயமாக இருந்தது பெரிய கருப்பன் சேர்வைக்கு. அதனால் தானே நெய்ப் பந்தத்தை மறுத்ததாக இருக்கக் கூடாதென்று அதற்குப் போலீஸ் அதிகாரிகளின் உதவியை நாடினார் அவர்.

“நீங்கள் முதல்லே இறுதி ஊர்வலத்துக்கு எட்டு வீதி கிடையாது. நாலு ராஜ வீதி மட்டும்தான்னு முடிவு பண்ணுங்க. அப்புறம் நெய்ப்பந்த விஷயத்தைக் கவனிக்கலாம்” என்றார் அதிகார்.

போலீஸ் அதிகாரிகளின் பெயரைப் பயன்படுத்தி, “எட்டு ராஜவீதி கிடையாது, நாலு ராஜ வீதி தான். நெய்ப்பந்தத்துக்கு அனுமதி இல்லை” என்று இரண்டையும் தடுத்து விட்டார் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை.

மகாராஜாவின் அந்தரங்க அறைகள், இரும்புப் பெட்டிகள் எல்லாவற்றையும் பூட்டி உடனே ‘சீல்’ வைக்க வேண்டிய அவசரமும் அவசியமும் வேறு அப்போது ஏற்பட்டது.

இளையராணிகள் என்ற பெயரில் அரண்மனை அந்தப்புரத்தில் அடைந்து கிடந்த பல பெண்கள் காலஞ்சென்ற மகாராஜாவின் அறைகளில் புகுந்து அவரவர்களுக்கு அகப்பட்டதைச் சுருட்டும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகக் காரியஸ்தருக்குத் தகவல் கிடைத்த போது பிற்பகல் இரண்டு மணி. எப்படிப் போய் யாரைக் கண்டிப்பது, யாரைத் தடுப்பது என்று முதலில் அவருக்குத் தயக்கமாக இருந்தது. எல்லாமே கொள்ளை போய்விட்டால் அப்புறம் தனசேகரனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் தான் பதில் சொல்லியாக வேண்டியிருக்குமோ என்ற கவலையும், பயமும் வேறு பிடித்தன. போலீஸ் அதிகாரிகளின் உதவியோடு மகாராஜாவின் தனி அறைகள், பீரோக்கள், இரும்புப் பெட்டிகள் இருந்த பகுதிகளைப் பூட்டி சீல் வைத்தார் காரியஸ்தர். மகாராஜா அலங்கரித்துக் கொள்ளும் அறையிலும் பாத்ரூமிலும் இருந்து பல கைக்கடிகாரங்கள், ஐந்தாறு மோதிரங்கள், அதற்குள் களவு போய் விட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. மகாராஜாவின் பெர்ஸனல் கலெக்‌ஷன்ஸ் என்ற வகையில் பலரக ரிஸ்ட் வாட்சுகள், அலாரம், டைம்பீசுகள், காமிராக்கள், டேப்ரெகார்டர்கள், காஸெட்டுகள் எல்லாம் இருந்தன. மோதிரங்களையும், செயின்களையும் குளியலறையில் கழற்றி வைத்துவிட்டு அதை ஒட்டியிருந்த படுக்கை அறையினுள்ளே தான் திடீரென்று அவர் மாரடைப்பில் காலமானார்.

அவர் காலமான அதிர்ச்சியிலிருந்து மீண்டு எச்சரிக்கை உணர்வோடு உடைமைகளைப் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யுமுன் அரண்மனைக்குள்ளேயே திருடர்கள் திருடிகள் உருவாகி அவரவர்களால் முடிந்த பொருள்களைத் திருடி ஒளித்து விட்டனர்.

ராஜமான்யம் நிறுத்தப்பட்ட சில மாதங்களில் அந்த அரண்மனையில் ஏற்பட்ட பணக் கஷ்டம் சொல்லி மாளாது. அந்தப் பணக் கஷ்டத்தில் மகாராஜாவே சில வேளைகளில் தம்முடைய பொருள்களையே யாருக்கும் தெரியாமல் ஒளிவு மறைவாக எடுத்துச் சென்று விற்றுப் பணம் பண்ண நேர்ந்திருக்கிறது. இளைய ராணிகள், அவர்களுடைய புதல்வர்கள், மகாராஜாவின் அந்தரங்க ஊழியர்கள் எல்லாருமே அவரவர்கள் பங்குக்கு அரண்மனைப் பித்தளைப் பாத்திரம் முதல் விறகுக் கட்டை வரை பலவற்றை இரகசியமாக விற்றுப் பணம் தேடிக் கொள்வது என்பது வழக்கமாகி இருந்தது.

பெண்கள் ஃபேஸ் பவுடரும், ஷாம்புவும் வாசனைச் சோப்பும் செண்ட்டு ஸ்நோவும், ஹேர் ஆயிலும் வாங்கப் பணம் கிடைக்காமல், டைனிங் டேபிள் சில்வர் வெஸல்ஸ் ஸெட்டுகளிலிருந்து வெள்ளித் தட்டு ஸ்பூன்கள், டம்ளர்கள் என்பது வரை வேலைக்காரிகள் மூலம் உள்ளூர் வெள்ளிக் கடைகளுக்குக் கொடுத்தனுப்பி விற்பது ஓர் இரகசிய வழக்கமாக ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி இருந்தது.

சட்டப்படி இவற்றை எல்லாம் கண்காணிக்க வேண்டிய அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வைக்குத் தர்மசங்கடமாக இருந்தது. பொருள்களைத் திருடுகிறவர்கள், ஒளித்து வைக்கிறவர்கள், வெளியே இருந்து வந்ததால் போலீஸில் பிடித்துக் கொடுத்து அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கலாம். உள்ளேயே இருக்கிற இரகசியத் திருடர்களை என்ன செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை. இந்தப் பிரச்சனையைக் கையாளுவதில் அரண்மனையின் கௌரவம் வேறு சம்பந்தப்பட்டிருந்தது. விஷயத்தைப் பகிரங்கமாக்கி எல்லாரிடமும் புகார் செய்தால் அரண்மனையின் கௌரவம் மரியாதை உறவுமுறை எல்லாம் கெட்டுப் போய்விடும். ஒன்றும் செய்யாமலிருந்தாலோ உள்ளே இருந்தவர்களாலேயே தொடர்ந்தும் திட்டமிட்டும் நடத்தப்பட்ட சில்லறைத் திருட்டுக்களால் பொருள்கள் ஒவ்வொன்றாகப் பறிபோய்விடும் போலிருந்தது.

அரண்மனைக்குள்ளே இருந்த ராஜகுடும்பத்தினரிடமும், அந்தரங்க விசுவாச ஊழியர்களிடமும் இதைப் பற்றிக் கூப்பிட்டுப் பேசவும் முடியாமல் விசாரிக்கவும் முடியாமல் பெரியகருப்பன் சேர்வையின் தாட்சண்ய சுபாவம் வேறு அவரைத் தடுத்தது.

வேறு எந்த நாளிலும் எந்தச் சமயத்திலும் திருட்டுப் போனதை விடப் பெரிய மகாராஜா இறந்த சில மணி நேரங்களில் காரியஸ்தர் உஷாராவதற்குள்ளே பல திருட்டுக்கள் அரண்மனையின் பல பகுதிகளில் நடந்து விட்டன. இதைத் தடுக்கப் போலீஸ் வருவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைமை ஏற்பட்ட பின்னரே போலீஸாரை உள்ளே கூப்பிட்டு அவர்கள் உதவியினால் முக்கிய அறைகளைப் பூட்டி ‘சீல்’ வைக்க நேர்ந்தது.

தனசேகரனும், அவன் மாமாவும் வந்து சேர்ந்து இறந்த மகாராஜாவின் காரியங்கள் எல்லாம் முடிந்ததும் “இந்தா! உன் சொத்து. இனிமேல் இவற்றை நீதான் கவனித்துக் கொள்ள வேண்டும். எனக்கு வயசாச்சு. என்னாலே முடியலை. தவிரவும் ராஜமானியமும் நின்னு போனப்புறம் அரண்மனைச் செலவுகள் மிகவும் சிரம ஜீவனமாகப் போச்சு. காரியஸ்தன்னு என்னை மாதிரி ஒருத்தருக்கு மாதச் சம்பளம் கொடுக்கிறது இன்னிக்கி இந்த அரண்மனை கஜானா இருக்கிற சிரமதசையிலே இனிமே சாத்தியமில்லே. நான் விலகிக் கொள்கிறேன்” என்று கௌரவமாகச் சொல்லிவிட்டே விலகிக் கொள்ளலாமென்று நினைத்தார் பெரியகருப்பன் சேர்வை. மகாராஜாவின் உயில் விவரம் எல்லாம் வேறு ஏற்கெனவே ஒரு வருஷத்துக்கு முன்னால் அவருக்கு முதல் ‘ஹார்ட் அட்டாக்’ வந்த போது எழுதினவை. ‘சீல்’ செய்யப்பட்ட உறைகளில் பெரிய கருப்பன் சேர்வையிடம் பத்திரமாக இருந்தன. போக இச்சையினாலும், சமஸ்தானமாக இருந்த காலத்து வழக்கப்படியும் அப்போதிருந்த செல்வச் செழிப்பு என்கிற மதிப்பினாலும் இளையராணிகள் என்கிற நாசூக்கான பெயரில் காலஞ்சென்ற மகாராஜா அரண்மனைக்குள் சேர்த்துக் கொண்ட எண்ணற்ற வைப்பாட்டிகள் கூட்டமும் அவர்கள் வாரிசுகளும் பேரன் பேத்திகளும் காரியஸ்தருக்கு அரண்மனை நிர்வாகத்துக்கும் பெரிய தலைவலியாயிருந்தார்கள். பின் நாட்களில் மகாராஜாவுக்குச் சினிமா நட்சத்திரங்களின் மேல் கவனம் விழுந்து விட்டதால் அந்தப்புரத்துப் பெண்கள் பக்கம் அவர் திரும்பிப் பார்ப்பதே இல்லை. அரண்மனை வருமானம் குறையக் குறைய இந்த அந்தப்புரப் பெண்களும், இவர்களுடைய வாரிசுக் கூட்டமும் தேவையில்லாத, ஆனால் கைவிடவும் முடியாத பெரிய சுமைகளைப் போல அரண்மனை நிர்வாகத்தை உறுத்தினார்கள். அவர்களுக்கு ஆடம்பரத் தேவைகள் இருந்தன. ஒவ்வொருத்தியும் ஒரு புடவையை நானூறு, ஐநூறு ரூபாய்க்குக் குறைவில்லாத வகையில் தான் கட்ட விரும்பினாள். விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் தவிர வேறு மலிவான துணிப் புடைவைகளை அவர்கள் தொடுவதேயில்லை. சோப்பு, வாசனைப் பவுடர், ஷாம்பு இவையெல்லாம் அந்த அரண்மனை எல்லைக்குள்ளேயே ஒரு சூப்பர் மார்க்கெட் இருந்தால் கூடப் போதாது என்கிற அளவிற்குச் செலவழிந்தன. ராஜமானியம் நின்று பணத்தட்டுப்பாடு வந்த பின்னர் முதல் முறையாகக் கடந்த நாலைந்து மாதங்களில் பீமநாதபுரம் பஜாரில் உள்ள பெரிய ஜவுளிக்கடை, பெரிய நகைக் கடை, பெரிய ஷாப் எல்லாவற்றிலும் அரண்மனைக் கணக்கில் ஆயிரம் ஆயிரமாகக் கடன் பாக்கி நிற்கத் தொடங்கியது.

ஓர் எல்லைக்கு மேல் போகவே கடைக்காரர்கள் மேற்கொண்டு கடன் தருவதற்குக் கூடத் தயங்கினார்கள். துணிந்த சிலர் மகாராஜாவையே நேரில் போய்ப் பார்த்துத் தயங்கித் தயங்கி, “பாக்கி ரொம்ப நிற்குதுங்க. ஏதாவது கொஞ்சமாச்சும் கொடுத்தால் தான் மேற்கொண்டு கடன் தரலாம்” என்று கேட்கக் கூட ஆரம்பித்து விட்டார்கள்.

பீமநாதபுரம் மகாராஜா மாரடைப்பால் காலமான மறுதினம் பகலில் சென்னை விமான நிலையத்துக்குக் கார் அனுப்பி விட்டு அரண்மனை அலுவலகத்தில் அமர்ந்திருந்த போது பெரிய கருப்பன் சேர்வை இந்தப் பிரச்னைகளை எல்லாம் மாற்றி மாற்றி நினைவு கூர்ந்தார். மகாராஜாவின் முறையான வாரிசும் ஒரே புதல்வருமான தனசேகரன் இவற்றையெல்லாம் எப்படிச் சமாளிக்கப் போகிறானோ என்று அவருக்குக் கவலையாக இருந்தது. கவலையில்லாமல் தாய்மாமனுடைய அரவணைப்பில் ஈபோவில் இருந்த அவன் இனிமேல் இங்கு வந்து படவேண்டிய கவலைகளை எண்ணி அவன் மேல் பெரிய கருப்பன் சேர்வைக்கு அனுதாபம் கூட ஏற்பட்டது.

“பிணத்துக்குப் பின்னாலே மயானம் வரை காசு வாரி இறைக்கணும். அது இந்த சமஸ்தானத்தில் வழக்கம். மூணு தலைமுறைக்கு முன்னே இவரோட அப்பாவுக்கு அப்பா காலமானப்போ நாலு ராஜ வீதியிலேயும் பொற் காசுகளை வாரி எறைச்சாங்களாம். இப்போ அது முடியாட்டியும் ரெண்டு நயா பைசா ஒரு நயா பைசாவாவது மாற்றி இறைச்சாகணும்” என்று காரியஸ்தரை உள்ளே கூப்பிட்டுத் தகவல் சொன்னாள் அங்கிருந்தவர்களில் சற்றே வயது மூத்த ஓர் இளையராணி.

“ராத்திரி இளையராஜா தனசேகரனும் அவங்க மாமாவும் வந்துடறாங்க. எல்லாத்தையும் அவங்கள்ளாம் வந்தப்புறம் அவங்ககிட்டவே சொல்லுங்க. அவங்க இஷ்டப்படி எது தோதோ அதைச் செய்யட்டும்” என்றார் காரியஸ்தர்.

அந்த அரண்மனை முகப்பில் மகாராஜாவின் பிரேதத்தை மட்டும் மக்களின் பார்வைக்காக வைத்திருந்தார்கள். ஆனால் பார்வைக்குத் தெரியாமல் அரண்மனையின் பெரிய மதில்களுக்குள்ளே இருந்த கடன் பத்திரை நகல்களும், கடைகளின் நினைவூட்டும் கடிதங்களும் ஏராளமாக இருந்தன. பல செலவுகளைச் சமாளிப்பதற்கே தனசேகரனும், மாமாவும் வந்த பின்பு அவர்களைக் கேட்டுத்தான் வழி செய்ய வேண்டும் என்று பெரிய கருப்பன் சேர்வை காத்துக் கொண்டிருந்தார். வந்ததும் வராததுமாகத் தனசேகரனிடமும் அவனுடைய தாய்வழி மாமனிடமும் அரண்மனை ஏறக்குறையத் திவாலான நிலைமையில் இருப்பதைச் சொல்வதற்கு நேர்கிறதே என்பதை எண்ணிய போது காரியஸ்தரின் மனதுக்குக் கஷ்டமாகவும் தயக்கமாகவும் தான் இருந்தது. இன்று இந்த அரண்மனை இப்படிப் பண வறட்சியில் சிக்கியதற்குக் காலஞ்சென்ற மகாராஜாவும், அவருடைய துர்ப்போதனையாளர்களும் தான் முழுக்க முழுக்கக் காரணமே ஒழியத் தனசேகரன் காரணமில்லை. இந்த விஷயத்தில் அவன் மேல் அப்பழுக்குச் சொல்ல முடியாது என்பது எல்லாம் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வைக்கு நன்கு தெரிந்துதான் இருந்தது. ஒரு வேளை தனசேகரன் மலேசியாவுக்குப் புறப்பட்டுப் போகாமல் இங்கேயே உடனிருந்து பெரிய மகாராஜாவையும், அரண்மனைச் செலவுகளையும் கட்டுப்படுத்திக் கண்காணித்திருந்தால் இவ்வளவு மோசமாகி இருக்காதோ என்னவோ என்று கூடக் காரியஸ்தருக்குத் தோன்றியது. தனசேகரனுக்கு வீண் டாம்பீகமும், ஆடம்பரச் செலவுகளையும் பிடிக்காது என்பது காரியஸ்தருக்குத் தெரியும். தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடே அதில் தான் ஆரம்பமாகி முற்றியது என்று கூட அவர் அறிந்திருந்தார். சமஸ்தானாதிபதியின் மூத்த மகன், இளையராஜா என்றெல்லாம் பேர்கள் தடபுடலாக இருந்த போதிலும் தனசேகரன் மலேசியா புறப்படுவதற்கு முந்திய தினம் வரை இரயிலில் சாதாரண இரண்டாம் வகுப்பில் தான் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். பீமநாதபுரம் ஊருக்குள் கடை வீதிக்கோ, லைப்ரரிக்கோ - அவை மிக அருகிலிருக்கின்றன என்ற காரணத்தால் நடந்து தான் போய்க் கொண்டிருந்தான். மகாராஜா எத்தனையோ முறை நேரில் கூப்பிட்டுத் திட்டியும், இரைந்து கண்டித்தும், அவன் அதைக் கேட்கவில்லை.

“நமக்கு ஒரு ஸ்டேட்டஸ் இருக்குடா! ‘இன்ன சமஸ்தானத்து யுவராஜா காசில்லாமே ஸெக்கண்ட் கிளாஸ்ல போறான். தெருவிலே அநாதைப் பயல் மாதிரி நடந்து போறான்’னெல்லாம் நான் உயிரோட இருக்கிறப்பவே உன்னைப் பற்றி என் காதிலே விழப்படாது” என்று தனசேகரனைச் சத்தம் போட்டும் இருக்கிறார். ஆனால் அந்தச் சத்தத்தையும் கூப்பாட்டையும் தனசேகரன் பொருட்படுத்தியதே இல்லை. சமஸ்தான அந்தஸ்துப் போன பிறகும் மகாராஜா செய்த ஆடம்பரங்கள் அவனுக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாகக் கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டு தந்தை சினிமா எடுக்கக் கிளம்பியது அவனுக்கு அறவே பிடிக்கவில்லை.

சொல்லிப் பார்த்து அவரை ஒன்றும் திருத்தி விட முடியாது என்று தோன்றவே தனசேகரன் தன்னளவில் ஒதுங்கி விட முயன்றான். அந்தச் சமயம் பார்த்து மலேயாவிலிருந்து ஊர் வந்திருந்த அவனுடைய தாய்வழி மாமன் தன்னோடு அக்கரைச் சீமைக்கு அவனைக் கூப்பிடவே அவனும் மறு பேச்சுப் பேசாமல் அவரோடு புறப்பட்டு விட்டான்.

அதன் பின்னால் இரண்டாண்டுகள் வரை அவன் ஊர்ப்பக்கமாக எட்டிக் கூடப் பார்க்கவில்லை. இப்போதுதான் தந்தை காலமான பின் முதன் முதலாக ஊர் திரும்பினான் தனசேகரன்.

இரவு எட்டு மணிக்குச் சென்னையிலிருந்து காரியஸ்தருக்கு ஃபோன் வந்தது. தனசேகரனும் மாமாவும் மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து காரில் ஊருக்குப் புறப்பட்டுவிட்டதாகத் தகவல் தெரிவித்தார்கள் வேண்டியவர்கள். அவர்கள் கார் நள்ளிரவு ஒன்றரை அல்லது இரண்டு மணிக்குப் பீமநாதபுரம் வரும் என்று எதிர்பார்க்கப் பட்டது.

அத்தியாயம் - 2

தனசேகரனும், மாமா தங்கபாண்டியனும் கோலாலம்பூரிலுள்ள சுபாங் இண்டர் நேஷனல் விமான நிலையத்தில் புறப்பட்டு கொழும்பு கட்டுநாயக விமான நிலையத்தில் வந்து இறங்கும் போது மாலை 4 மணி. கொழும்பிலிருந்து இந்தியாவுக்குப் புறப்படும் விமான நிலையமாகிய இரத்மலானை விமான நிலையமோ நகரின் மற்றொரு கோடியில் இருந்தது. சர்வதேச விமான நிலையமாகிய கட்டுநாயகவில் இருந்து ஒரு டாக்சியில் ‘இரத்மலான்’வுக்கு விரைந்து, அங்கிருந்து அவசர அவசரமாகச் சென்னை செல்லும் விமானத்தைப் பிடித்துப் புறப்பட்டிருந்தார்கள் அவர்கள்.

கொழும்பில் விமானம் வேலெழுந்து பறந்த போது ஏதோ குடும்ப விஷயத்தைப் பற்றி தனசேகரனிடம் பேச ஆரம்பித்தார் மாமா.

“கடைசி ரெண்டு வருசத்திலே உங்கப்பா இருந்த சவரணையைப் பார்த்தா அநேகமாச் சமஸ்தானத்துச் சொத்தை எல்லாம் சீரழிச்சிருப்பாரு. சும்மாக் கெடக்காம காலங் கெட்ட காலத்திலே அவருக்குச் சினிமாப் படம் எடுக்கற பைத்தியக்கார ஆசை வேற வந்து தொலைச்சிருந்தது.”

“நீங்க சொல்றதுதான் சரியாயிருக்கும் மாமா! உருப்படியா ஒண்ணும் இருக்காது. அரண்மனைக் கோட்டை மதில் சுவரைத் தவிரப் பாக்கி அத்தனையையும் வித்திருப்பாரு. அல்லது அடகு வச்சிருப்பாரு. எதுக்கும் இப்போது நீங்க என் கூடப் புறப்பட்டு வந்ததாலே எனக்கு நிம்மதி...”

“வந்துதானே ஆகணும் தம்பீ! உயிரோட இருந்தப்ப எனக்கும் அவருக்கும் ஒத்துக்காதுன்னாலும் சொந்த மச்சினரு சாவுக்குக் கூட வரலேன்னு நாளைக்கு ஒருத்தன் குறை சொல்ல இடம் வச்சுடப் பிடாது பாரு. ஆயிரம் மனஸ்தாபம் இருக்கலாம். உங்கப்பா கெட்டவராவே இருந்திருக்கலாம். குடும்பத்துக்குள்ளார ஒருத்தொருக்கொருத்தர் விட்டுக் கொடுக்கப்படுமா?” என்றார் மாமா தங்க பாண்டியன். அவரும் அவனும் பேச ஆரம்பித்த குடும்ப விஷயங்கள் ஒரு முடிவுக்கு வராமல் அநுமார் வால் மாதிரி நீண்டு கொண்டு போகவே விமானம் அதற்குள் சென்னை மீனம்பாக்கம் நிலையத்தில் தரையிறங்கிவிட்டது.

தனசேகரனிடமும் சரி, அவனுடைய மாமா தங்க பாண்டியனிடமும் சரி, ஆளுக்கு ஒரு ‘சூட்கேஸ்’ மட்டுமே லக்கேஜ் என்ற பெயரில் இருந்தன. அதனால் பாஸ்போர்ட் எண்ட்ரி, கஸ்டம்ஸ் செக்கிங் ஆகிய காரியங்கள் மிகச் சுருங்கிய நேரத்திலேயே முடிந்து விட்டன.

அவர்கள் விமான நிலையத்தில் சர்வதேசப் பரிசோதனைப் பிரிவிலிருந்து லவுஞ்ஜுக்கு வரும் முதல் வாயிலில் அடி எடுத்து வைத்ததுமே சில உறவினர்களும் பீமநாதபுரத்திலிருந்து காருடன் தயாராக வந்து காத்திருந்த டிரைவரும் அவர்களை எதிர்கொண்டார்கள்.

யாருடனும் நின்று பேச அவர்களுக்கு நேரமில்லை. வந்திருந்த உறவினர்களிடம் சொல்லி உடனே பீமநாதபுரத்துக்கு டெலிஃபோன் மூலம் தாங்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து ஊருக்குக் காரில் புறப்பட்டு விட்டதாகத் தகவல் தெரிவிக்கச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்கள் அவர்கள். கார் செங்கல்பட்டைக் கடக்கும் போது இரவு மணி எட்டேமுக்கால்.

“பசிக்குதா தம்பி? ஏதாவது சாப்பிடறியா? நாளைக் காலையிலே பத்துப் பன்னிரண்டு மணி கூட ஆகும். மயானத்திலிருந்து அரண்மனைக்குத் திரும்பற வரை பச்சைத் தண்ணி கூட வாயிலே ஊத்த முடியாது” என்று மாமா ஆறுதலான குரலில் தனசேகரனை விசாரித்தார்.

“மனசு சரியாயில்லே, ஒண்ணுமே வேண்டாம் மாமா.”

“அடச் சீ!... போன மனுஷன் ஒண்ணும் நீ பட்டினியிருக்கேங்கிறதுக்காகத் திரும்பி வந்து சேர்ந்துடப் போறதில்லே. வயித்தைக் காயப் போடாதே. எனக்குத் தெரியாதா உன் சங்கதி? எத்தினி ராத்திரி ஈபோவிலேயிருந்து பினாங்குக்கோ, கோலாலம்பூருக்கோ போயிட்டுத் திரும்பறப்போ, வழியிலே ரெண்டு மூணு சீனன் கடையிலாவது காரை நிறுத்தி மீ கோரேங்கையும், கருப்புத் தேத்தண்ணியும் குடிச்சாத்தான் ஆச்சுன்னு பிடிவாதம் பிடிச்சிருக்கே நீ? இன்னிக்கு மட்டும் பசிக்காமப் போயிடுமா என்ன? ஏய் டிரைவர்! வண்டியை ஓரமா நிறுத்திப் போட்டுக் கொஞ்சம் ‘பிரட்’டும் பிஸ்கட்டும் வாழைப்பழமும் வாங்கிட்டு வா சொல்றேன்” என்று தனசேகரின் பதிலுக்குக் காத்திராமலே தானாகவே கார் டிரைவருக்கு உத்தரவிட்டார் மாமா தங்கபாண்டியன்.

டிரைவர் அவர் சொன்னபடி காரை மெயின் ரோட்டில் இடது பக்கம் ஓரமாக நிறுத்தி விட்டு ரொட்டி, பிஸ்கட், வாழைப்பழத்தோடு சொல்லாவிட்டாலும் இருக்கட்டும் என்று தமிழில் இரண்டும், ஆங்கிலத்தில் ஒன்றுமாகச் சாயங்கால நியூஸ் பேப்பர்கள் மூன்றையும் வாங்கிக் கொண்டு வந்தான்.

“சபாஷ்! நியூஸ்பேப்பர் வேற வாங்கியாரச் சொல்லணும்னு நினைச்சேன். சொல்றப்ப மறந்துட்டேன். நீயாவே வாங்கியாந்துட்டே. நல்ல காரியம் பண்ணினே அப்பா” என்று டிரைவரைப் பாராட்டிக் கொண்டே பத்திரிகைகளை வாங்கிக் கொண்டார் மாமா.

“தம்பீ! பிரட்-பிஸ்கட் வாழைப்பழம் எல்லாம் வாங்கி வண்டியிலே வச்சிருக்கேன். பசிக்கிறப்போ சொல்லு, சாப்பிடலாம்” என்று தனசேகரனிடம் கூறிவிட்டு நியூஸ் பேப்பரின் கொட்டை எழுத்துத் தலைப்புக்களை மட்டும் காரின் உட்புறமிருந்த விளைக்கைப் போட்டுக் கொண்டு அந்த வெளிச்சத்தில் படிக்க முயன்றார் மாமா.

தமிழ் மாலைத் தினசரிகளில் எல்லாம் முதல் பக்கத்திலேயே தலைப்பில் இல்லாவிட்டாலும் சற்று கீழே தள்ளி ‘பீமநாதபுரம் ராஜா மாரடைப்பில் காலமானார்’ என்று பெரிதாகத் தலைப்புக் கொடுத்துப் படத்துடன் பிரசுரித்திருந்தார்கள். ஆங்கிலத் தினசரியில் மட்டும் அதை மூன்றாம் பக்கத்தில் கீழ்க்கோடியில் மரண அறிவிப்புப் பகுதியில் முதல் அயிட்டமாக வெளியிட்டு இருந்தார்கள்.

தமிழ்ப் பத்திரிகைகளில் அந்தக் கார் வெளிச்சத்தில் படிக்க முடிந்த மாதிரி இருந்த பெரிய எழுத்துச் செய்திகளையும் தலைப்புக்களையும் வாய்விட்டுப் படித்துக் கொண்டிருந்த மாமா, ‘நடிகர்களும் நடிகைகளும் திரைப்பட முக்கியஸ்தர்களும் முதுபெரும் டைரக்டர் கோமளீஸ்வரன் தலைமையில் பீமநாதபுரம் விரைகிறார்கள்’ என்று படித்துவிட்டு அவ்வளவில் அந்தப் பேப்பரைப் படிப்பதை நிறுத்திவிட்டுத் தனசேகரன் பக்கமாகத் திரும்பி, “தம்பி! இந்தக் கோமளீஸ்வரன் யாரு தெரியுமில்லே? நான் இவன் பேரை வேணும்னே உங்கப்பா கிட்டப் பேசறப்பக் கூடக் கோமாளீஸ்வரன்னுதான் சொல்வேன். இவன் தான் உங்கப்பாவைச் சினிமா லயன்லே கொண்டு போய்க் கவுத்து விட்ட பயல். இவன் பேச்சைக் கேட்டுக்கிட்டுத்தான் அவரு உங்கம்மா செத்து ஒரு வருஷம் முடியறதுக்குள்ளே அந்த ஜெயநளினி பேருக்கு லட்ச ரூபாயிலே அடையாறிலே வீடு வாங்கி வச்சாரு... இந்த பயலைப் பார்த்தா அரண்மனைத் தோட்டத்திலே ஒரு தென்னை மரத்திலே கட்டி வச்சு உதை உதைன்னு உதைக்கணும், அப்பத்தான் என் கோபம் எல்லாம் ஆறும்” என்றார்.

“இவரு, தானா வலுவிலே போயிக் காஞ்ச மாடு கம்புலே விழுந்த கதையாக் கெட்டுப் போனாருன்னா அதுக்கு அவன் என்ன பண்ணுவான் மாமா? அவனைப் போல் இருக்கிறவன் கொடுக்கிறதுக்கு யாராவது பசையுள்ள ஆள் சிக்கறானா இல்லியான்னு தேடிக்கிட்டுத்தான் இருப்பான். கெட்டுப் போகிறவன் மேலே கொஞ்சங் கூடக் கோபிக்காம கெடுக்கிறவனைக் கட்டிவச்சு உதைக்கப் போறேன்கிறது என்ன நியாயம்?”

“அது சரி தம்பி, ஆனால் கெட்டுப்போனவருதான் இப்போ உலகத்தை விட்டே புறப்பட்டுப் போயிட்டாரே? அவரை இனிமே என்னா செய்யமுடியும்?”

“அவரு காலம் முடியற வரை அவர் யார் சொல்லியும் திருந்தத் தயாராயில்லே. நீங்க கூடத்தான் எவ்வளவோ சொன்னீங்க. மீதமிருக்கிறதைக் கன்ஸாலிடேட் பண்ணி ஊட்டியிலியோ, கொடைக்கானலிலேயோ அல்லது மைசூர் ஸ்டேட்ல சிக்மகலூரிலேயோ எஸ்டேட் வாங்கிப் போடலாம்னீங்க. அவரு எங்கே கேட்டாரு? சமஸ்தானம், சமஸ்தானம்னு ராஜாப் பட்டம் போட்டு அழைக்கிற சோம்பேறிகளை எல்லாம் நம்பியே குட்டிச் சுவராப் போனாரு!”

“அதுமட்டுமில்லே! நான் எவ்வளவோ தலையிலே அடிச்சுக்கிட்டேன். உங்க காலம் மாதிரி எல்லாம் இனிமே எதிர்காலம் இருக்காது. அந்தப்புரத்திலே மந்தை மாதிரி இளையராணிங்கங்கற பேர்ல அடைச்சுப் போட்டிருக்கிற பொம்பளைங்களை வெளியே பத்தி விட்டுடுங்க. இல்லாட்டி அவங்க மக்கள், பேரன், பேத்திகள் எல்லாரையும் கட்டி மேய்ச்சுப் படிக்க வச்சுத் துணிமணி வாங்கிக் குடுக்க இந்த அரண்மனையைப் போலப் பத்து அரண்மனையை வித்தாக் கூடக் காணாதுன்னேன், கேட்கலை. இப்போ அவங்களையும் அவங்க வம்சாவளிங்களையும் பத்தி விடறதுக்கும் துரத்தறதுக்கும் வீணாகச் சின்னப் பையன் நீ சங்கடப்படணும்...”

“நாம எங்கே அவங்களைத் துரத்திவிடறது? அவங்க நம்மைத் துரத்தி விடாமே இருக்கணுமேங்கறதுதான் மாமா இப்போ என் கவலை?” என்றான் தனசேகரன். கார் டிரைவர் தங்கள் உரையாடலை எல்லாம் கேட்டுக் கொண்டு வருகிறான் என்பதை இருவருமே நினைவு வைத்துக் கொண்டுதான் இருந்தார்கள். காலஞ்சென்ற மகாராஜாவை மதித்ததை விட அந்த டிரைவர் தன்னையும் தனசேகரனையும் அதிகமாக மதிப்பது மாமா தங்கபாண்டியனுக்கு நன்றாகத் தெரியும். கடைசிக் காலங்களில் அவன் மகாராஜாவின் நடத்தைகள் பிடிக்காமல், “சமஸ்தான வேலைன்னா கௌரவம்கிற காலம் மலையேறிப் போச்சுங்க. இவரு கண்ட சினிமாக்காரிங்க வீட்டிலே எல்லாம் போய்க் காத்துக் கிடக்க ஆரம்பிச்சுட்டாருங்க. நானும் உங்க கூட மலேசியாவுக்கே வந்துடறேனுங்க. அங்கே எஸ்டேட்லே ஏதாவது டிரைவர் வேலை போட்டுக் கொடுங்க போதும். மானமாப் பிழைக்கலாம்” என்று தங்க பாண்டியன் ஊர்ப்பக்கம் வந்து திரும்பும் போதெல்லாம் அவரிடம் இந்த டிரைவர் பலமுறை கெஞ்சியிருக்கிறான். அதனால் சிறிது நேர உரையாடலுக்குப் பின் இந்த டிரைவரையே தங்கள் பேச்சில் கலந்து கொள்ளச் சொல்கிறார் போன்ற கேள்வி ஒன்றை அவனிடமே கேட்டார் மாமா தங்க பாண்டியன்.

“என்ன ஆவுடையப்பன்? நாங்க பேசிக்கிறதை எல்லாம் கேட்டுக்கிட்டுத்தானே வர்றே? மகாராஜா காலமானப்போ அரண்மனை நெலைமை எப்படி? கஜானா நிலைமை எப்படி? காரியஸ்தர் சேர்வை என்ன சொல்றாரு?”

“எல்லாம் கேட்டுக் கிட்டுத்தான் வரேன் சார்? வந்து இறங்கினதும் இறங்காததுமா உங்க மனசையும் சின்ன ராஜா மனசையும் கஷ்டப்படுத்தற மாதிரி விஷயமாச் சொல்ல வேண்டியிருக்கேன்னு தான் வருத்தமா யிருக்குங்க...”

“அதுக்கு நீ என்னப்பா பண்ணுவே? நடந்திருக்கிற விஷயத்தைத் தானேப்பா நீ சொல்ல முடியும்? எங்க மனசு கஷ்டப்படாமே இருக்கணும்கிறதுக்காக நடக்காதைதை இட்டுக் கட்டிச் சொல்லவா முடியும். செத்துப் போன மகாராஜா பிழைச்சு உயிரோட வந்துட்டதாகச் சொல்லுவியா? அல்லது அரண்மனை கஜானாவிலே ஐம்பது கோடி ரூபாய் எப்பிடிச் செலவழிக்கிறதுன்னு தெரியாமக் குவிஞ்சு கெடக்கு சார்னு பொய் சொல்வியா? நிஜமா நடந்ததைத் தானே நீ சொல்ல முடியும்? நிஜமா நடந்தது எல்லாம் கசப்பாவும் கஷ்டமாவுந்தான் இருக்கும். நீ பயப்படாமே நடந்ததைச் சொல்லிகிட்டு வா ஆவுடையப்பன்! எங்க மனசு ஒண்ணும் அதைக் கேட்டுக் கஷ்டப்பட்டுடாது. மனசுக்கு நல்ல ‘ஷாக் அப்ஸார்பர்’ போட்டு ஆடாம அதிராம வச்சுக்கிட்டிருக்கோம் நாங்க. கவலைப்படாமச் சொல்லு நீ” என்றார் மாமா.

“மகாராஜா காலமான அன்னிக்கே அரண்மனைக் குள்ளாரப் பலதும் பலவிதமா நடந்து போச்சுங்க. அரண்மனைக் காரியஸ்தர் உஷாராகிச் சுதாரிச்சுக்கிட்டுப் பெரிய ராஜாவோட டிரஸ்ஸிங் ரூம், படுக்கை அறை, அலமாரிகள், பீரோக்கள் எல்லாத்தையும் பூட்டி சீல் வைக்கிறதுக்குள்ளேயே நிறையத் திருட்டுப் போயிட்டதுங்க. கடைசியிலே கூட அரண்மனைக்குள்ளாரப் போலீஸைக் கூட்டியாந்துதான் சேர்வைக்காரரு எல்லாத்தையும் பூட்ட முடிஞ்சிச்சு!”

“திருடினவங்க யாரா இருக்கும்னு நெனைக்கிறே ஆவுடையப்பன்?”

“வேற யாரு? வெளியில் இருந்தா அரண்மனைக்குள்ளாரத் திருடிப் போட்டுப் போகணும்னு ஆட்கள் வரப் போறாங்க? எல்லாம் உள்ளேயே இருக்கிறவங்க செஞ்ச வேலை தான். அகப்பட்ட வரை சுருட்டிக்கிட்டது மிச்சம்னு சுருட்டிக்கிட்டாங்க. பெரிய ராஜாவோட பிரதேதத்தை முகப்பிலே ராஜராஜேஸ்வரி ஹால்லே கொண்டாந்து ஐஸ் அடுக்கிப் பொதுமக்களோட பார்வைக்கு வச்சிட்டுக் காரியஸ்தர் மறுபடி உள்ளே திரும்பிப் போறதுக்கு முன்னே ஒரு பெரிய தீவட்டிக் கொள்ளையே அடிச்ச மாதிரி சாமான்கள் பறிபோயுடிச்சி...”

“உங்க பெரிய ராஜா ஏதாச்சும் கொஞ்சமாவது வச்சிட்டுப் போயிருக்காரா ஆவுடையப்பன்?”

“என்னத்தை வச்சிருக்க விட்டிருக்கப் போறாங்க? எல்லாத்தையுந்தான் சினிமாக்காரிகள் உறிஞ்சியிருப்பாங்களே! நிறையக் கடனைத்தான் வச்சிருப்பாரு!”

“கேட்டுக்கோ தம்பி! உனக்குத்தான், உங்கப்பா எதைச் சேர்த்து வச்சிருக்கார்ன்னு கேட்டியில்லே?”

“ஆவுடையப்பனைக் கேட்டு விசாரிச்சுத்தான் இதைத் தெரிஞ்சுக்கணுமா மாமா? நமக்கே தெரிஞ்சுருக்கிற விஷயம் தானே இது?”

“ப்ரீவீ பர்ஸ் நின்னப்புறம் கூட அவரோட ஊதாரிச் செலவுகளை அவர் நிறுத்தலேன்னு தெரியறது. நல்ல மனுஷனா இருந்தா ராஜமான்யம் நிறுத்தப்பட்டதுக்குப் பின்னாடியாவது திருந்தியிருக்கணும். இவர் அப்பவும் திருந்தலே...”

“இவர் திருந்த மாட்டார் என்ற ஏக்கத்திலேதான் அம்மாவே ஏங்கி ஏங்கிச் செத்துப் போனாங்கங்கறதை மறந்துட்டீங்களா மாமா?”

கார் மதுராந்தகத்தைக் கடந்து திண்டிவனத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

“பெட்ரோ பங்க்லே கடன் சொல்லித்தான் டாங்க ஃபுல் பண்ணிக்கிட்டுப் புறப்பட்டேன் சார். சேர்வை காரரே பெட்ரோல் பங்குக்கு ஃபோன் பண்ணிக் கெஞ்ச வேண்டியதாப் போச்சு. வேறொரு சமயமா இருந்தா அவனும் நிர்த்தாட்சண்யமா மாட்டேன்னிருப்பான். சாவு காரியம்கிறதுனாலே போனாப் போகுதுன்னு சம்மதிச்சான். ஊர்லே ஜவுளிக்கடை, பலசரக்குக் கடை, பூக்கடை, பழக்கடை எல்லாத்திலியும் அரண்மனைக் கணக்கிலே கழுத்து முட்டக் கடன் இருக்கு.”

“அப்போ மகாராஜா, தம்பிக்குக் கழுத்து முட்டக் கடனைத்தான் சேர்த்து வச்சிட்டுப் போயிருக்காருன்னு சொல்லு!”

“நான் சொல்லித்தான் தெரியணுமா என்ன? எல்லாருக்கும் ஏற்கெனவே தெரிஞ்ச விஷயந்தானுங்களே?”

“கடைசிக் காலத்திலே வீடு வாங்கி வச்சுக் குலாவினாரே; அந்த சினிமாக்காரி அவ இப்போ இங்கே அழ வந்திருக்காளா அப்பா?”

“வராமேயா, பின்னே? அதுதான் சித்தே முந்திப் பேப்பர்லே படிச்சீங்களே; ‘டைரக்டர் கோமளீஸ்வரன் தலைமையிலே நட்சத்திரங்கள் பீமநாதபுரம் விரைகிறார்கள்’னு. எல்லோரும் வந்து ‘கஸ்ட் ஹவுஸ்’ நிறைய டேரா அடிச்சிருக்காங்க சார்.”

“உங்க தாத்தா விஜய மார்த்தாண்ட பீமநாத பூபதி காலமானப்போ பிரிட்டிஷ் கவர்மெண்ட்டோட பிரதிநிதியா டில்லியிலேருந்து வைசிராய் வந்து மலர் வளையம் வச்சாரு. அப்போ நான் சின்னப் பையன். உங்க அப்பா தலையெழுத்து - சினிமாக்காரிகளும், பட்டணத்து நடுத்தெரு புரோக்கர்களும் வந்து மலர் வளையம் வைக்கணும்னு தான் இருக்கு. மரியாதை கௌரவம் இதுக்கெல்லாம் கூடக் கொடுத்து வச்சிருக்கணும் தம்பீ! இவரு கொடுத்து வச்சது இவ்வளவுதான் போலிருக்கு.”

இதற்கு தனசேகரன், பதில் எதுவும் சொல்லவில்லை. அவன் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான். மாமா சிறிது நேரம் கண்ணயர்ந்தார். கார் எவ்வளவு வேகமாகப் போனாலும் ஸீட்டில் சாய்ந்தபடி உட்கார்ந்த நிலையிலேயே கூட நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்க அவரால் முடியும். தனசேகரனால் அப்படித் தூங்க முடியாது. சுற்றுப்புறத்தில் சிறிய ஓசை ஒளிகளால் பாதிக்கப்பட்டால் கூட அவனுக்குத் தூக்கம் வராது. அவன் தன்னை ராஜபரம்பரை என்றோ பீமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய ராஜா என்றோ நினைப்பது கூட இல்லை. என்றாலும் பல விஷயங்களில் ராஜ துல்லிய குணம் என்று சொல்வார்களே அந்தத் தன்மை அவனிடம் அமைந்திருந்தது. எந்த விஷயத்திலும் அவன் செய்வது, தெரிவிப்பது, தெரிந்து கொள்ளுவது எல்லாம் துல்லியமாக இருக்கும்.

தாய்வழி மாமா தங்கபாண்டியனுக்கு தனசேகரன் மேல் அளவற்ற பிரியம். தன் அக்கா மகன் என்ற உறவு முறையையும் பீமநாதபுரம் சமஸ்தானத்தின் நேரடியான ராஜ வாரிசு என்ற கௌரவத்தையும் விட அவனுடைய கம்பீரமான தோற்றமும் எதிலும் அற்பத்தனமே இல்லாத பெருங்குணமும் அவரைக் கவர்ந்திருந்தன. நல்ல பழகும் முறைகளும் சிரித்த முகமும் தனசேகரனின் இயல்புகளாக இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாகத் தனசேகரனின் தன்னடக்கத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். யார் யாரோ புதுப்பணக்காரர் விட்டுப் பிள்ளைகள் எல்லாம் பணத் திமிரினாலும் செருக்காலும் மண்டைக் கனம் பிடித்து அலைகிற இந்த நாளில் தனசேகரின் தன்னடக்கம் பலரை ஆச்சரியப்பட வைத்தது.

மாமா தங்கபாண்டியன் பீமநாதபுரம் சமஸ்தானாதிபதியை விடப் பெரிய பணக்காரர் என்பதும் மலேசியாவில் ‘டத்தோ’ சிறப்புப் பட்டம் கொடுத்துக் கௌரவிக்கப்பட்ட பொது வாழ்க்கைப் பிரமுகர் என்பதும் அவரோடு வந்து தங்கியிருந்த மருமகன் தனசேகரனுக்கும் செல்வாக்கை அளிக்கத்தான் செய்தன, என்றாலும் அப்படி ஒரு செல்வாக்கைத் தான் அண்டியிருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் எல்லாரிடமும் எளிமையாகவும் வித்தியாசமின்றியும் மலர்ந்த முகத்தோடும் பழகினான் தனசேகரன்.

டத்தோ தங்கபாண்டியன் தம்முடைய மூத்த மகளைத் தனசேகரனுக்குத் திருமணம் செய்து கொடுப்பதாகத் தம் அக்காவும் காலஞ்சென்ற பீமநாதபுரம் மூத்த ராணியுமான வடிவுடைய நாச்சியாரம்மாளுக்கும் வாக்குக் கொடுத்திருக்கிறார். ஒருவேளை காலஞ்சென்ற பீமநாதபுரம் மகாராணிக்கு அப்படி ஒரு வாக்கைக் கொடுத்திரா விட்டாலும் கூடத் தம்முடைய மகளுக்குத் தனசேகரனை விடப் பொருத்தமான வேறு ஒரு மாப்பிள்ளையை டத்தோ தங்கபாண்டியனால் தேர்ந்தெடுக்க முடியப் போவதில்லை.

விழுப்புரம் தாண்டியதும் மாமா தங்கபாண்டியன் தூக்கம் கலைந்து காரில் கண் விழித்தார்.

“ஏனப்பா ஆவுடையப்பன், வண்டியிலே கூஜா நிரையக் குடிதண்ணீர் எப்பவும் வச்சிருப்பியே; இருக்கா?”

“இருக்குங்க! பின்னாடி உங்க காலடியிலே ஒரு பிளாஸ்டிக் கூடையிலே கூஜா நிறையப் பச்சைத் தண்ணி, பிளாஸ்கிலே வெந்நீர் எல்லாம் இருக்கு சார்!”

“என்ன தம்பீ! இன்னுமா உனக்குப் பசிக்கலே? ஊர் எல்லைக்குள்ளார நுழைஞ்சிட்டா நீ சாப்பிட முடியாது. இப்பவே ஏதாச்சும் சாப்பிட்டோம்னு பேர் பண்ணிட்டாத்தான் நல்லது தம்பி! இந்தா, எடுத்துக்க...” என்று ரொட்டிப் பொட்டலத்தில் ஒரு பகுதியையும், இரண்டு வாழைப் பழங்களையும் தனசேகரிடம் எடுத்து நீட்டினார் மாமா தங்கபாண்டியன்.

கார் போய்க் கொண்டிருக்கும் போதே பத்து நிமிஷத்தில் அவர்கள் உணவு முடிந்து விட்டது. மீது ரொட்டியையும் பிஸ்கட்களையும் வாழைப்பழங்களையும் எடுத்து டிரைவரிடம் கொடுத்து, “இன்னிக்கி நீயும் இதைத் தான் சாப்பிடு ஆவுடையப்பா! வேறே எதாச்சும் ‘ஹெவியா’ சாப்பிட்டா தூக்கம் வந்தாலும் வந்துடும். அகாலத்தில் காரை ஓட்டிக்கிட்டு ‘லாங் டிஸ்டன்ஸ்’ போறப்பக் குறைவாச் சாப்பிடுறதுதான் நல்லது” என்றார் தங்கபாண்டியன்.

“ஒண்ணும் சாப்பிடாட்டிக் கூட பரவாயில்லீங்க. எல்லாரும் எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருப்பாங்க. உங்க ரெண்டு பேரையும் சீக்கிரமா ஊர்லே கொண்டு போய்ச் சேர்த்துடணும்.”

“அப்படிச் சொல்லாதே! முதல்லே சாப்பிட்டுக்கோ. ஓரமா வண்டியை நிறுத்தி வவுத்துப் பாட்டை முடி. அப்புறம் போகலாம்” என்று தங்கபாண்டியன் அவனைச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினார்.

டிரைவர் ஆவுடையப்பன் ரொட்டி, பிஸ்கட், வாழைப்பழம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சாப்பிடுவதற்காகக் கீழே இறங்கப் போனான்.

“இந்த இருட்டிலே நீ எங்கே இறங்கிப் போய்ச் சாப்பிடப் போறே? சும்மா முன் சீட்டிலேயே உட்கார்ந்து சாப்பிடுப்பா” என்றான் தனசேகரன்.

“இல்லீங்க... உங்க முன்னாடி எல்லாம் உட்கார்ந்து சாப்பிடறதுக்குக் கூச்சமா இருக்குமுங்க. என்னை என் இஷ்டப்படி விட்டுடுங்க” என்று கீழேயே இறங்கிப் போய் விட்டான் டிரைவர்.

“உங்கப்பாகிட்ட இத்தனை வருஷமா வேலை பார்த்தும் அவரோட கெட்ட குணம் எதுவும் தனக்கு வந்துடாமேயும், தன்னோட நல்ல குணம் எதுவும் அவராலே கெட்டுப் போயிடாதபடியும் தப்பினவன் இவன் ஒருத்தன் தான் தம்பி... இவனைக் கூட அவர் நல்லபடியா வச்சுக்கலே. நடுநடுவே நான் ஊர் வந்து திரும்பறப்ப எல்லாம் இவன் என்னைப் பார்த்து நானும் உங்க கூட மலேசியாவுக்கு வந்திடறேன் சார்னு சொல்லிக்கிட்டிருந்தான். நான் தான் ‘தெரிஞ்சவங்களுக்குள்ளே வீண் மனஸ்தாபம் வேண்டாமப்பா! நீ இங்கேயே இரு. செலவுக்கு வேணா அப்பப்போ ஏதாவது வாங்கிக்கோ’ன்னு நூறு அம்பதுன்னு குடுத்துக்கிட்டிருந்தேன்” என்றார் மாமா.

“எங்கப்பாவுக்கு விசுவாசம், நன்றி எல்லாம் பிடிக்கும். ஆனால் அது பணச் செலவில்லாமே கிடைக்கிற விசுவாசமா இருக்கணும். அவரு யாருக்காகப் பணத்தைத் தண்ணியா வாரி இறைச்சாரோ அவங்களெல்லாம் நன்றி விசுவாசமில்லாதவங்களா இருப்பாங்க. இதோ இந்த ஆவுடையப்பனைப் போல விசுவாசமுள்ள ஏழை எளியவங்களுக்கு அவர் ஒண்ணுமே பண்ணியிருக்க மாட்டாரு மாமா. அதுதான் அவர் வழக்கம்.”

டிரைவர் சாப்பிட்டுவிட்டு வந்து சேர்ந்தான். நிறைய இடங்களில் நெடுஞ்சாலையில் பாலங்கள், ரோடுகளில் ரிப்பேர் இருந்ததால் கரடுமுரடான மாற்று வழிகளில் கீழே இறங்கிக் கார் செல்ல வேண்டியிருந்தது. ஆகவே விரைந்து செல்வது தடைப்பட்டது.

முதலில் நினைத்திருந்தபடி நடு இரவு ஒன்றே முக்கால் அல்லது இரண்டு மணிக்கு அவர்கள் பீமநாதபுரம் போய்ச் சேர்ந்துவிடலாம் என்பது சாத்தியமாகவில்லை. ஊருக்குள் அவர்கள் கார் நுழையும் போது மணி இரண்டே முக்கால். அரண்மனையின் பிரதான வாயிலில் நுழையும் போது மணி மூன்று. எங்கோ கோழி கூடக் கூவி விட்டது. விடியப் போவதற்கு முந்திய குளிர்ந்த காற்றுக் கூட மெல்ல வீசத் தொடங்கி விட்டது. கார், நேரே அரண்மனை இராஜ ராஜேஸ்வரி விலாச ஹாலில் முகப்பில் போய் நின்றது.

எங்கும் ஒரே அமைதி. ஒரே இருட்டு. அங்கங்கே அரண்மனை விளக்குகள் மரங்கள் செடி கொடிகளின் கனமான அடர்த்தியினிடையே மின்மினிகளாய் மினுக்கிக் கொண்டிருந்தன. தொடர்ந்து இரண்டு இராத்திரிகள் கண் விழிப்பு என்பதனால் அங்கங்கே நின்றபடியேயும் உட்கார்ந்தபடியேயும், தூண்களில், சுவர்களில் சாய்ந்தபடியேயும் தூங்கத் தொடங்கியிருந்தார்கள். முகப்பில் கார் வந்து நின்ற ஓசையைக் கேட்டு முதலில் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையும் அவரைத் தொடர்ந்து அரண்மனை ஊழியர்களும், முக்கியஸ்தர்களும், உறவினர்களும் ஒவ்வொருவராகக் கண்களைக் கசக்கிக் கொண்டு வந்து நின்றார்கள். அவர்களில் மிகச் சிலர் காலஞ்சென்ற பெரிய ராஜாவின் மேல் தங்களுக்கு இருந்த விசுவாசத்தைக் காட்டுவதற்காகச் சின்னராஜாவையும் தாய் மாமனையும் பார்த்தவுடன் சிறுபிள்ளைகளைப் போலக் கோவென்று கதறி அழத் தொடங்கியிருந்தனர். தனசேகரனுக்கும் மனசை ஏதேதோ உணர்ச்சிகள் தொட்டன. வருத்தின. ஆனால் அழுகை மட்டும் வரவில்லை. அம்மா இறந்த ஞாபகமும் அதை ஒட்டிய துயர ஞாபகங்களும் தான் மீண்டும் மனத்தில் மேலாக வந்து எழுந்து மிதந்தன.

மாமா தங்கபாண்டியன் மகாராஜாவின் சடலத்தருகே இரண்டு நிமிஷம் நின்று பார்த்துவிட்டு, “இந்தாங்க மிஸ்டர் பெரிய கருப்பன் சேர்வை! இப்பிடி வாங்க, உங்ககிட்டத் தனியாகக் கொஞ்சம் பேசணும், ஏற்பாடெல்லாம் எப்படி? என்னென்ன நிலைமை? காலையிலே விடிஞ்சதும் நேரே மயானத்துக்குப் புறப்பட்டுட வேண்டியதுதானே? நாளைக்கு என்ன கிழமை? ராகு குளிகன் பார்த்து எடுக்கிற நேரத்தை முடிவு பண்ணியாச்சா?” என்று சுறுசுறுப்பாக மேலே நடக்க வேண்டிய காரியங்களை விசாரிக்கத் தொடங்கினார்.

சிறிது தொலைவு தனியே சென்றதும் அக்கம் பக்கத்தில் வேறு யாரும் நின்று கேட்டுக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதி செய்தபின் குரலைத் தணித்துக் கொண்டு “அரண்மனைக் கஜானாவிலே ரொக்கமா எதுவும் இல்லீங்க. ‘அன்று மறுநாள்’ காரியத்துக்கே பணம் கிடையாது. நீங்க வந்ததும் உங்க கிட்டவும் சின்ன ராஜா கிட்டவும் ஒரு வார்த்தை கேட்டுக்கிட்டுத் தங்க நகைகள் எதையாவது கொண்டு போய் வச்சுப் பணம் பெற்றுக் கொள்ள அனுமதி வாங்கிச் செய்யலாம்னு இருந்தேன்” என்றார் பெரிய கருப்பன் சேர்வை.

“அது அவசியமில்லே! என்னோட மெட்ராஸ் ஆபீஸ் ஆட்களை நானே டெலிபோன்லே சொல்லி மீனம்பாக்கம் ஏர்ப்போர்ட்டுக்கு ‘கேஷோட’ வரச் சொல்லியிருந்தேன். அவங்க வந்திருந்தாங்க. பணம் என்ன வேணுமோ எங்கிட்டக் கேளுங்க. நான் தரேன். செலவுலே ஒண்ணும் கஞ்சத்தனம் வேண்டாம். குறைவில்லாமே எல்லாம் நடக்கட்டும். பூமி தானம், கோதானம், சுவர்ணதானம் எதுவுமே விடாமச் செஞ்சுடுங்க. தனசேகரன் சின்னப் பையன். அவனுக்கு ரொம்ப நேரம் பசி தாங்காது. பகல் பன்னிரண்டு மணிக்குள்ளார வாச்சும் எல்லாம் முடிஞ்சிட்டா நல்லது.”

“அதுக்குள்ளே முடிஞ்சிடும்னு நினைக்கிறேன். இந்தப் பொம்பிளைங்க தான், நாலு ராஜவீதி மட்டும் போதாது, நாலு ரதவீதியையும் சேர்த்து எட்டு வீதியும் சுத்தினப்புறம் தான் பிரேதத்தை மயானத்துக்குக் கொண்டு போகணும்னு கலாட்டா பண்றாங்க. பேரப்பிள்ளைங்கன்னு ஒரு பெரிய பட்டாளத்தைக் கூட்டியாந்து, இவங்க அத்தினி பேரும் நெய்ப்பந்தம் பிடிக்கணும்னு தொந்தரவு பண்றாங்க. நான் சொன்னாக் கேட்க மாட்டேங்கறாங்க...”

“அவங்களை நான் பார்த்துக்கிறேன். நீங்க ஆக வேண்டிய காரியத்தைப் பாருங்க. முதல்லே நாளை மத்தா நாளு அத்தினி பேரையும் அடிச்சுப் பத்தி வெளியிலே துரத்தி அரண்மனையை ‘டெட்டால்’ தெளிச்சு சுத்தப் படுத்தியாகணும், என்ன சொல்றீங்க...?”

“அதைப் பெரிய மகாராஜா எப்பவோ செஞ்சிருக்கணுங்க. செஞ்சிருந்தார்னா இன்னிக்கி இந்த அரண்மனை கடன்பட்டு இப்பிடித் திவால் ஆகிற நிலைமைக்கு வந்திருக்காது. நாங்கள்ளாம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம்... அவர் கேட்கலை” என்றார் சேர்வை. சேர்வையிடம் ரொக்கமாக அவர் கேட்ட தொகைக்கு ஒரு ரூபாய்களாகவும் இரண்டு, ஐந்து, பத்து, நூறு ரூபாய்களாகவும் சில்லறைக் காசுகளாகவும் பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டுத் தனசேகரனையும் உடனழைத்துக் கொண்டு அரண்மனையின் உட்பகுதிக்குச் சென்றார் தங்கபாண்டியன். அரண்மனை நகைகள் உள்ள கருவூல அறை, மகாராஜாவின் உடைகள் உள்ள அறை, கஜானா அறை, முக்கியமான தஸ்தாவேஜுகள் உள்ள ‘டாக்குமெண்ட்ஸ்’ ரூம், வெள்ளிப் பாத்திரங்கள், பாத்திரங்கள் எல்லாம் உள்ள ஸ்டோர் ரூம் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தன.

லைப்ரரி, ஐம்பொன் சிலைகள், புராதன ஓவியங்கள், வாகனங்கள் எல்லாம் உள்ள கண்காட்சி சாலை மட்டும் சீல் வைக்காமல் சும்மா பூட்டப்பட்டிருந்தது.

பெண்கள் பகுதியான அந்தப்புரத்திற்குள் அவர்கள் போகவில்லை. ஆனாலும் கண்விழித்து அவர்கள் அரண்மனைக்குள் வருவதை அந்தப்புரத்தில் ஏதோ ஒரு ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்துவிட்ட யாரோ ஓர் இளையராணி தூங்கிக் கொண்டிருந்த அத்தனை பேரையும், ‘சின்னராஜாவும் அவரு தாய் மாமனும் வராங்க’ என்று பரபரப்புச் சேதி சொல்லி எழுப்பி விட்டு விட்டாள்.

ஒரு பெரிய பெண் கூட்டம் பல்வேறு வயதுகளில் குழந்தை குட்டிகளுடன் வந்து சூழ்ந்து கொண்டது. சிலர் மகாராஜா இறந்ததற்காக அழுதனர். இன்னும் சிலர் தங்கள் எதிர் காலம் என்ன ஆகுமோ என்று அழுதனர். அவ்வளவு பேரும் தன் தந்தையின் விதவைகளைப் போல் காட்டிக் கொள்ள முயன்றாலும் அவர்கள் மனம் அப்படி எதையும், யாரையும் இழந்து விட்டது போன்ற நிலைமையில் இல்லை என்பது தனசேகரனுக்குத் தெரிந்தது. தங்களை இளையராஜாவுக்குப் பிடிக்காது என்று அதில் பலருக்குத் தெரிந்தே இருந்தது. ஆனாலும் சித்திமுறை கொண்டாடித் தனசேகரனைக் கட்டி அழ வந்த சிலரை மாமா தங்கபாண்டியன் குறுக்கிட்டுத் தடுத்துவிட்டார். “அவன் இந்தக் காலத்துப் பையன்! இந்தக் கட்டியழறதெல்லாம் அவனுக்குப் பிடிக்காது. தெரியவும் தெரியாது. தயவு பண்ணி அவனை விட்டுடுங்க” என்று அந்தப் பெண் பிள்ளைக் கும்பலிலிருந்து அவனை விடுவித்து மீட்டுக் கொண்டு வந்தார் மாமா.

“நல்ல வேளை மாமா! நீங்க கூட வந்ததாலே பிழைச்சேன்” என்றான் தனசேகரன்.

“சித்தியாவது ஒண்ணாவது? அதிலே பலபேருக்கு உனக்கு அக்கா தங்கை இருந்தாங்கன்னா அவங்களுக்கு ஆகியிருக்கிற வயசு கூட இருக்காது. சும்மா பாவலாப் பண்றாங்க. ரொம்ப ஆபத்தான கூட்டம் இது. அப்பா காரியம் முடிஞ்சதும் தலைக்கு ஏதோ ஆயிரம், இரண்டாயிரம் குடுத்தாலும் சரி இவர்களை வெளியே அனுப்பிச்சு வச்சிடனும். இல்லாட்டித் தாங்க முடியாது.”

“அப்பா திவாலானதே இளையராணி இளையராணின்னு இப்படி ஒரு மந்தையை அரண்மனைக்குள்ளே சேர்த்ததாலே தான் மாமா.”

“விட்டுத்தள்ளு தம்பீ! செத்துப் போனவங்க யாரானாலும் அவங்க தெய்வத்துக்குச் சமானம்பாங்க. நல்லவரோ கெட்டவரோ உங்கப்பா போயிட்டாரு. போன மனுஷனோட குறைகளைப் பத்திச் சொல்லிக்கிட்டே இருக்கிறதிலே அர்த்தமில்லே. இதை எல்லாம்பத்தி நீயும் நானும் நாட்கணக்கா, வாரக்கணக்கா, மாதக்கணக்கா, வருஷக்கணக்காகப் பேசி அலுத்தாச்சு. இனிமே நடக்க வேண்டியதைக் கவனிப்போம் வா. நடந்த கதைகளைப் பேசிக்கிறதாலே ஒரு சல்லிக்குக் கூட பிரயோசனமில்லை தம்பி!”

அவர்கள் இருவரும் அரண்மனையிலிருந்து வெளியேறிக் ‘கஸ்ட் ஹவுஸ்’ முகப்பிற்கு வந்ததும் மின்னுகிற சில்க் ஜிப்பாவும் வெற்றிலைச் சிவப்பேறிய உதடுகளுமாக ஓர் இரட்டை நாடி மனிதர் பெரிய கும்பிடாகப் போட்டுக் கொண்டே எதிரே வந்தார்.

“இதோ எதிரே வர்ரானே, இவன் தான் டைரக்டர் கோமாளீஸ்வரன்! தெரியுமில்லே?”

“தெரியும் மாமா! ஒரு தடவை பார்த்திருக்கேன்.”

கோமளீஸ்வரன் அருகே வந்ததும் மகாராஜாவின் மறைவிற்காக அவர்கள் இருவரிடமும் துக்கம் கேட்டான். அவர்கள் எப்போது, எந்த விமானம் மூலம் சென்னை வந்து பீமநாதபுரத்தை அடைந்தார்கள் என்பதை விசாரித்தான். அப்புறம் சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு, “காரியங்கள்ளாம் ஆனதும், ‘அவங்க’ சின்ன ராஜாவையும் உங்களையும் ரெண்டு நிமிஷம் தனியே பார்த்துப் பேசணும்னாங்க” என்றான். உடனே மாமாவுக்கு முகம் கடுகடுப்பாக மாறியது.

“அவங்கன்னா யாரு? எனக்குப் புரியலியே?”

“அதான் மகாராஜாவோட ‘இவங்க’, அடையாறிலே இருக்காங்களே...”

“எனக்கு புரியிறாப்ல சொல்லித் தொலைப்பா.”

“ஜெயநளினி அம்மா வந்திருக்காங்க சார்! அவங்க தான் காரியங்கள் முடிஞ்சதும் ரெண்டு நிமிஷம் உங்களைப் பார்க்கணும்னாங்க.”

“எனக்கு அப்பிடி யாரையும் தெரியாதேப்பா” என்றார் மாமா தங்கபாண்டியன்.

அத்தியாயம் - 3

சினிமா டைரக்டர் கோமளீஸ்வரன் எவ்வளவோ முயன்று சொல்லியும் அவன் கூறிய சினிமா நடிகை ஜெயநளினியைத் தமக்குத் தெரியாதென்று மாமா தங்கபாண்டியன் ஒரேயடியாக மறுத்துவிட்டார்.

“என்னங்க இப்படிச் சொல்றீங்க? நீங்களே இப்படிச் சொல்லலாமா? நீங்களே இப்படிச் சொன்னா என்ன செய்யறதுங்க?” என்று கோமளீஸ்வரன் மேலும் இழுத்த போது மாமா டத்தோ தங்கபாண்டியன், “அட போப்பா நீ! இப்போ எங்களுக்கு இதுதானா வேலை? வேற வேலை இல்லாமலா இப்போ நாங்க சும்மா சுத்திக்கிட்டிருக்கோம். உனக்குக் கட்டாயம் ஏதாவது சொல்லியாகணும்னு இருந்தா நாளைக்கிச் சாயங்காலமா வந்து பேசிக்கோ” என்று கறாராகச் சொல்லிவிட்டார். தனசேகரன் அந்தக் கோமளீஸ்வரனோடு பேசவே இல்லை. மாமாவுடைய கோபத்தைக் கண்டு பயந்து கோமளீஸ்வரன் மெல்ல விலகிப் போய்விட்டான். அவன் தலை அந்தப் பக்கம் மறைந்ததும், “கொஞ்சம் இடங் கொடுத்தோமோ அட்டை உறிஞ்சற மாதிரி இரத்தத்தை உறிஞ்சிப்பிடுவாங்க கொலைகாரப் பசங்க” என்றார் மாமா.

“அவங்க என்ன பண்ணுவாங்க? எல்லாம் அப்பா கொடுத்த இடம் தானே,” என்று தனசேகரன் சொன்னான்.

“சரி வா தம்பி! எங்கேயாவது கொஞ்ச நேரம் தூங்கலாம். காரியஸ்தர் கிட்டச் சொல்லி அந்த வசந்த மண்டபம் கஸ்ட் ஹவுஸ் சாவியைக் கொண்டாரச் சொல்லலாம். அங்கே தான் கொஞ்சம் வெளித் தொந்தரவு இல்லாமே நிம்மதியா இருக்கும்” என்று சொல்லியபடியே அங்கே தென்பட்ட அரண்மனைக் காவலாளி ஒருவனைக் கைதட்டி அருகே கூப்பிட்டார் மாமா. அவன் பயபக்தியோடு அருகே வந்து ஏழடி விலகி நின்று கைகட்டி வாய் பொத்திக் கேட்கலானான்.

“சின்னராஜாவும் அவங்க மாமாவும் கொஞ்ச நேரம் தூங்கணும்னாங்கன்னு அந்த வசந்த மண்டபம் கஸ்ட ஹவுஸ் சாவியைக் காரியஸ்தர் கிட்டக் கேட்டு வாங்கிட்டு வாப்பா” என்று மாமா அவனுக்கு உத்திரவு போட்டார். அவன் சாவியை வாங்கிக் கொண்டு வருவதற்காகக் காரியஸ்தரைத் தேடிக் கொண்டு ஓடினான். சாவி வருவதற்காக வசந்த மண்டபம் ‘கஸ்ட் ஹவுஸ்’ முகப்பில் போய் நின்றார்கள் அவர்கள் இருவரும். அந்த அரண்மனை எல்லைக்குள்ளேயே மிகவும் சுகமானதும், ஓர் அழகிய ஏரிக்கு நடுவில் மைய மண்டபம் போல மரஞ் செடி கொடி சூழ தோட்டத்தினிடையே அமைந்திருப்பதுமான ‘வசந்தகால விருந்தினர் விடுதி’ தான் சிறப்பானது. முதல் தரமானது. ஏரிக்கு நடுப்பகுதியில் உள்ள அந்த மாளிகை வாயில் வரை நடந்து செல்வதற்கும், கார், வாகனங்கள் செல்வதற்கும் பாலம் போல அழகான சிமெண்டுச் சாலை ஒன்றும் இருந்தது. அந்தச் சாலை வழியே பேசிக் கொண்டே நடந்து தான் மாமா தங்கபாண்டியனும், தனசேகரனும் அப்போது அங்கே வந்திருந்தார்கள்.

பனி நிறைந்த அந்தப் பின்னிரவில் எழுதி வைத்த சித்திரம் போல அந்த வசந்த மண்டப விருந்தினர் விடுதி அமைதியாக இருந்தது.

“சங்கதியைக் கேட்டியா தம்பீ? நீயும் நானும் மலேசியாவிலிருந்து புறப்பட்டு வரலேன்னா ஏதாவது பாத்திரம், பண்டம், நகை நட்டுக்களை அடகு வச்சுத்தான் உங்கப்பாவோட காரியமே நடக்கணும்னாரு சேர்வைக்காரரு. அப்புறம் நான் தான் மெட்ராஸ்லே ஏர்போர்ட்டுக்குக் கொண்டாரச் சொல்லி வாங்கியாந்த எமவுண்ட்லேருந்து கொஞ்சம் கேஷ் எடுத்துக் குடுத்திருக்கேன்” என்று மாமா உள்ள நிலைமையைத் தனசேகரனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

“மாமா! எதுக்கும் கொஞ்ச சிக்கனமாகவே செலவுக்குக் குடுங்க. தாராளம் காண்பிச்சீங்கன்னா எல்லாருமாச் சேர்ந்து ஆளை முழுங்கிடுவாங்க” என்று தனசேகரன் அவரை எச்சரித்தான்.

“இதிலே என்ன தம்பீ சிக்கனம் பார்க்க முடியும்? செத்துப் போனவருக்குச் செய்யிற காரியங்களில் ஒண்ணும் குறைவு வைக்க வேண்டாம்னு பார்க்கிறேன். அந்தக் காரியங்கள்ளாம் முடிஞ்சப்புறம் தான் நீயும் நானும் இங்கே பல பேரை விரோதிச்சுக்கிட்டாலும் பரவாயில்லேன்னு நாம ‘போல்டா’ பலதைச் செய்ய வேண்டியிருக்கும். சில விஷயங்களை முடிவு கட்டவே வேண்டியிருக்கும். அதுக்கெல்லாம் நிறைய எதிர்ப்பு வரும்.”

மாமா பேச்சை முடிப்பதற்குள் அரண்மனைக் காவல்காரன் ஒருவன் வசந்த மண்டபத்துச் சாவியோடு வந்து கதவைத் திறந்து விட்டான்.

“வேறே ஏதாச்சும் வேணுங்களா?”

“ஒண்ணும் வேண்டாம்ப்பா! குடிக்கத் தண்ணி மட்டும் கொஞ்சம் கொண்டாந்து வை... போதும்.”

காவல்காரன் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சொல்லிக் கொண்டு போனான்.

அப்புறம் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. தூங்கி விட்டார்கள்.

விடிகாலை ஐந்து மணிக்குக் காரியஸ்தர் வந்து அவர்களை எழுப்பினார். ஒரு பெரிய ‘பிளாஸ்க்’ நிறையக் கள்ளிச் சொட்டாக அருமையான காபியும் கொண்டு வந்திருந்தார்.

“எத்தனை மணியாகுமோ, என்னவோ, அங்கே ராஜ ராஜேஸ்வரி விலாசத்துக்கு வந்துட்டீங்கன்னா அப்புறம் சாப்பிட ஒண்ணும் கிடையாது. அதான் அரண்மனை வாசல்லே இருக்கிற அம்பிகா பவன் ஹோட்டல் ஐயருகிட்டச் சின்னராஜாவுக்குன்னு, ‘ஸ்பெஷலா’ச் சொல்லி வாங்கியாந்துட்டேன்.”

மாமாவும் தனசேகரனும் அந்த அதிகாலையில் காபியை எதிர்பார்க்கவில்லை என்றாலும் மறுக்காமல் அதை ஏற்றுக் கொண்டார்கள். பல்விளக்கி முகங்கழுவிக் கொண்டு இருவரும் காபியருந்தி முடிக்கவும் டிரைவர் ஆவுடையப்பன் வசந்த மண்டபத்து வாசலில் சர்ரென்று காரைக் கொண்டு வந்து நிறுத்தவும் சரியாயிருந்தது. “ஏன்ய்யா பெரிய கருப்பன் சேர்வை! இங்கே அரண்மனைக்குள்ளாரப் போறதுக்கும் வர்றதுக்கும் கார் எதுக்கு? நடந்தே போய்க்கலாமே?” என்று கேட்டார் மாமா.

“இல்லீங்க. நான் ஒரு காரணத்தோடதான் சொல்றேன். அங்கங்கே ஆளுங்க நின்னுக்கிட்டும், உட்கார்ந்து பேசிக்கிட்டும் இருக்காங்க. நீங்க நடந்தே வந்தீங்கன்னாச் சில ஆளுங்க முறை தெரியாமே மரியாதை இல்லாமே நடுவழியிலேயே உங்களை நிறுத்தி வச்சுத் துஷ்டி விசாரிப்பாங்க. அதைத் தவிர்க்கலாம்னுதான் காரைக் கொண்டாரச் சொன்னேன்” என்பதாகப் பெரிய கருப்பன் சேர்வை சொல்லி விளக்கிய பின்பு மாமாவுக்கும் அவர் சொன்ன யோசனை சரியென்றே தோன்றியது.

“ஏன் நடந்தே போகலாமே? அதிலே என்ன தப்பு?” என்று தனசேகரன் வேறு ஆரம்பித்தான்.

“இல்லே தம்பீ! அவர் சொல்றதுதான் மொறை. போறப்ப வர்றப்ப நடுவழியிலே நிறுத்தித் துஷ்டி கேட்கிறது நல்லா இருக்காது. அதுக்கு நாமே எடங் கொடுத்திடக் கூடாது” என்று மாமா அடித்துச் சொன்னார். தனசேகரன், அதற்கப்புறம் நடந்து போவதை வற்புறுத்தவில்லை.

முன் ஸீட்டில் காரியஸ்தரும், பின் ஸீட்டில் மாமாவும், தனசேகரனும் அமர்ந்த பின் டிரைவர் ஆவுடையப்பன் காரை ஸ்டார்ட் பண்ணினான். கார் அடுத்த நிமிஷமே கூட்டம் கூடியிருந்த ராஜ ராஜேஸ்வரி விலாச ஹால் முகப்பில் போய் நின்றது. காரை சூழ்ந்து கொண்டு வந்து ஒரு பெருங் கூட்டம் மொய்த்தது. ‘சின்னராஜாவும் அவங்க மலேயா மாமாவும் வர்றாங்க’ என்று பல குரல்கள் ஒரே சமயத்தில் முணுமுணுத்து ஓய்ந்தன. மகாராஜாவின் சடலத்தைச் சுற்றிலும் மொய்த்திருந்த முக்கியஸ்தர்களும், பிரமுகர்களும் விலகி வழி விட்டனர்.

ஜில்லா கலெக்டர், போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், டிஸ்ட்ரிக் ஜட்ஜ் எல்லாரும் நன்றாக விடிந்த பின் ஏழு ஏழரை மணிக்கு வந்து துக்கம் விசாரித்தார்கள். “இந்தச் சினிமா ஸ்டார்ஸுங்க கொஞ்சம் பேர் மெட்ராஸ்லேருந்து வந்திருக்காங்க. தயவு செய்து பிரேத ஊர்வலத்திலே அவங்க நடந்தோ காரிலோ பின்னால் வரவேண்டாம்னு நீங்களே கண்டிச்சுச் சொல்லிடுங்க மிஸ்டர் தனசேகரன்! அவங்க வேணும்னா ஃப்யூனரல் புரொஸஷன் புறப்படறத்துக்கு முன்னாடியே அவங்க தகன கட்டடத்துக்குக் கார்லே போயிடட்டும். அவங்கள்ளாம் புரொஸஷன்ல வந்தா கூட்டம் கண்ட்ரோல் பண்ண முடியாமல் போயிடும். அப்புறம், போலீஸ் அரேன்ஜ்மெண்ட் சரியில்லேன்னு நீங்க என்னைக் குறை சொல்லப்பிடாது” என்று சர்க்கிள் தனசேகரனிடம் வந்து வேண்டிக் கொண்டார்.

“நீங்க கவலைப்படாதீங்க! நான் பார்த்துக்கறேன். ஸினி ஸ்டார்ஸ் யாரும் ஃப்யூனரல் புரொஸஷன்லே வரக்கூடாதுன்னு சொல்லி நானே தடுத்திடறேன். அவர்கள்ளாம் முன்னாலேயே தகன கட்டடத்துக்குப் போயிடட்டும்” என்று மாமா தங்கபாண்டியன் சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்குத் தனசேகரன் சார்பில் உத்திரவாதம் அளித்தார்.

அடுத்துப் பேரன்மார்கள் என்று சொல்லிக் கொண்டவர்களின் நெய்ப்பந்தம் பிடிக்கும் பிரச்னை மீண்டும் பூதாகரமாக உருவெடுத்தது.

“அதெல்லாம் முடியாது! நிஜமாகவே அவருக்கு நெய்ப்பந்தம் பிடிக்கணும்னாத் தனசேகரனுக்குக் கலியாணமாகிப் பையன்கள் இருந்தால் தான் சாத்தியம். தனசேகரனுக்கு இன்னும் கலியாணமாகலே. அதுனாலே நெய்ப்பந்தம் பிடிக்கிறதுக்குப் பாத்தியதை உள்ள அசல் வாரிசு யாரும் இப்போ கிடையாது” என்று மாமாவே உரத்த குரலில் முரட்டடியாக அடித்துப் பேசி அந்தப் பிரச்னையையும் உடனே தீர்த்து வைத்தார்.

மீசை, தலைமுடி எல்லாம் தும்பைப் பூவாக வெளுத்த எண்பது வயதுக் கிழவர் ஒருத்தர், “அரண்மனைப் பரியாறி வந்தாச்சா? தனசேகரனை மொட்டை போட்டுக்கிட்டு வரச் சொல்லுங்க. பிரேதத்தைக் குளுப்பாட்ட முறைப்படி அரண்மனை வசந்த மண்டபத்துக் குளத்திலே தான் தண்ணி எடுக்கணும். தண்ணி எடுக்கப் போறதுக்கு முன்னாடியே மொட்டை போட்டாயிடணும்” என்று கர்ம சிரத்தையாக முன் வந்து வற்புறுத்திச் சொன்னார்.

மாமா தங்கபாண்டியனுக்கு அந்த நரைத்த தலைக் கிழவர் மேல் கோபம் கோபமாக வந்தது. கருகருவென்று சுருள் சுருளாகக் கர்லிங் விழுந்திருந்த தனசேகரனின் அந்த அழகிய கிராப்புத் தலையையும் நரைத்த தலைக் கிழவரையும் மாறி மாறிப் பார்த்தார் மாமா. தனசேகரன் மேல் மிகவும் அனுதாபமாக இருந்தது மாமாவுக்கு.

“இந்தக் காலத்துப் புள்ளைங்களை ரொம்பத்தான் சோதனை பண்ணாதீங்க பாட்டையா! கொஞ்சம், காலத்தை அனுசரிச்சு வழக்கங்களை விட்டுக் கொடுங்க. பாவம்! தனசேகரன் ‘பிரில் கிரீம்’ போட்டு ரொம்ப அழகா முடி வளர்த்திருக்கான். ஒரே நிமிஷத்திலே அதைத் தொலைச்சுடப் பார்க்கிறீர்களே?” என்று தனசேகரன் சார்பில் அந்தக் கிழவரிடம் தானே அப்பீல் செய்து பார்த்தார் மாமா. ஆனால் கிழவர் படு பிடிவாதக்காரராக இருந்தார். “அதெப்படி விட்டுட முடியும்? முறையின்னு ஒண்ணு இருக்கறப்ப நமக்குத் தோணுனபடியா செய்யிறது?” என்று மீண்டும் வற்புறுத்தினார் கிழவர். அந்த நிலையில் தன் பொருட்டு ஒரு வீணான சர்ச்சை அங்கே எழுவதை விரும்பாத தனசேகரன், “எது முறையோ அப்படியே நடக்கட்டும். நான் மொட்டை போட்டுக்கத் தயார். ஆளைக் கூப்பிடுங்க” என்றான். அந்தச் சமயத்திலே பெரிய கருப்பன் சேர்வை அவசர அவசரமாக மாமா தங்கப்பாண்டியனைத் தேடிக் கொண்டு வந்தார்.

“உங்க கிட்டத் தனியா ஒரு விஷயம் கன்ஸல்ட் பண்ணணுமே?”

“என்ன? இப்படி இங்கே வந்துதான் சொல்லுங்களேன்” என்று காரியஸ்தரை அங்கிருந்த ஒரு தூண் மறைவுக்குத் தனியா அழைத்துக் கொண்டு சென்றார் மாமா.

“பகல் சாப்பாடு எத்தினி பேருக்கு ஏற்பாடு செய்யணும்? இன்னிக்கிப் பகல் ரெண்டு மணிவரை உள் கோட்டையிலே அரண்மனைக்குள்ளார அடுப்பு எதுவும் புகையப்பிடாது. வெளிக் கோட்டையிலே வடக்கு ராஜ வீதியிலே சிவன் கோவிலுக்குப் பக்கத்திலே இருக்கிற தேவார மடத்திலே சமைக்கச் சொல்லி ஏற்பாடு பண்ணித் தவசிப் பிள்ளைங்களை உடனே அணுப்பணும், சொல்லுங்க.”

“என்ன சேர்வைக்காரரே! இதெல்லாமா எங்கிட்டக் கேட்கணும், சமையலுக்குச் சொல்ல வேண்டியதுதானே?”

“எப்படிச் சொல்றதுன்னுதான் தெரியலே. கூட்டத்தைப் பார்த்தாப் பயமாயிருக்கு. எரியூட்டு முடிஞ்சதும் நாலாயிரம் ஐயாயிரம் பேர் அப்படியே சாப்பாட்டுக்கு நுழைஞ்சிட்டாங்கன்னா அரண்மனைக் களஞ்சியத்தை பூரா திறந்து விட்டாலும் பத்தாது. அதான் என்ன செய்யறதுன்னு உங்ககிட்ட யோசனை கேட்க வந்தேன்.”

“இதிலே என்ன யோசனை வேண்டிக் கிடக்கு? சாப்பாட்டு விஷயத்திலே போயிக் கஞ்சத்தனம் எதுக்கு? இன்னும் வேணும்னாக் கொஞ்சம் பணம் தர்றேன், வந்தவங்க யாரும் எரியூட்டு முடிஞ்சதும் வயிற்றுப் பசியோட திரும்பப்பிடாதுங்கறது தான்முக்கியம்.”

“இப்போ நீங்க சொல்லிட்டீங்க. இனிமே எனக்குக் கவலை இல்லை, ஏற்பாடு பண்ணிடுவேன். உங்ககிட்ட ஒரு வார்த்தை வந்துடக் கூடாதுங்கிறதுதான் என் பயம்.”

“இதிலே என்ன பயம்? பார்த்து ஏற்பாடு பண்ணுங்க! திங்கிற சோத்துலே போயிக் கணக்குப் பார்த்துக்கிட்டு...?”

பெரிய கருப்பன் சேர்வை புறப்பட்டுப் போனார். அரண்மனைப் புரோகிதர் தம் சகாக்களுடன் வந்து ஏதேதோ ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார். தனசேகரன் உறவினர்கள் பின் தொடர மொட்டையடித்துக் கொள்ளப் போனான். கொள்ளிச் சட்டியை வைத்துத் தூக்கிக் கொண்டு போக ‘உறி’ போல ஒன்று கயிறுகளாலும் மூங்கில் சட்டங்களாலும் கட்டிக் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தது. கீழே மரத்தடியில் மகாராஜாவின் அந்திம யாத்திரைக்காகப் ‘பூச்சப்பரம்’ ஒன்றை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள்.

“என்னப்பாது...? கொள்ளிச் சட்டியைக் கையிலே தூக்கிட்டுப் போறதுதானே மொறை! மைனர்ப் பையங்க சின்னஞ்சிறுசுகள் தூக்க முடியாதுன்னுதான் உறி கட்டுவாங்க. வயசானவங்க தூக்கிக்கிட்டுப் போறதுக்கு எதுக்கு உறி” என்று மீண்டும் அந்த நரைத்த தலைக் கிழவர் தொணதொணக்க ஆரம்பித்தார். சமயாசமயங்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்த வயதானவர்கள் எப்படிப் பெரிய முட்டுக்கட்டையாக இருந்து கழுத்தறுப்பார்களோ அப்படிக் கழுத்தறுத்துக் கோண்டிருந்தார் அந்தக் கிழவர். அவரைச் சமாளிக்க மாமாவுக்கு ஒரே வழிதான் புலப்பட்டது. மாமா தங்கபாண்டியன் அந்தக் கிழவருக்குப் பக்கத்திலே போய் உட்கார்ந்து அங்கு நடந்து கொண்டிருந்தவற்றிலிருந்து அவருடைய கவனத்தைத் திசை திருப்புவதற்காக வேறு பழைய கால விஷயங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார். தங்கபாண்டியனின் உபாயம் பலித்தது. கிழவர் சுலபமாகத் தங்கபாண்டியனிடம் சிக்கிக் கொண்டார். சமஸ்தானத்தின் பழைய நவராத்திரி விழாவைப் பற்றியும் ஒன்பது நாட்களும் ஊர் ஜனங்களுக்கு அரண்மனையில் வடை, பாயாசத்தோடு சாப்பாடு போட்டதைப் பற்றியும் கிழவரிடம் விவரமாக விசாரித்துக் கேட்கத் தொடங்கி அவருடைய கவனத்தை எதிரே நடந்து கொண்டிருந்தவற்றின் மேல் சொல்லவிடாமல் தடுத்து விட்டார் மாமா. இல்லாவிட்டால் அந்தக் கிழவர் அப்போது விடாமல் எதையாவது தொணதொணவென்று சொல்லிக் கொண்டிருப்பார் போலத் தோன்றியது. மகாராஜாவின் பிரேதத்தைச் சுற்றிக் குவிந்துவிட்ட மாலைகளையும் மலர்வளையங்களையும் அந்தக் கூடத்தின் வராந்தாவில் இரண்டு பெரிய அம்பாரங்களாகக் கொண்டு போய் அள்ளிக் கொட்டியிருந்தார்கள்.

தனசேகரனைப் பின்பற்றி அரண்மனையைச் சேர்ந்தவர்கள் நிறைய பேர் மொட்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரென்று மழுங்கச் சிரைத்த மொட்டைத் தலையோடு தனசேகரனை எதிரே பார்த்த போது மாமாவுக்கே முதலில் அடையாளம் புரிவது சிரமமாக இருந்தது. கருகருவென்று சுருண்ட அழகிய கிராப்புத் தலையோடு கூடிய தனசேகரனின் முகம் தான் அவருக்குப் பரிச்சயமாகியிருந்த முகம். இந்தப் புதுமொட்டைத் தலை முகம் உடனே அடையாளம் தெரிந்து மனத்தில் பதியச் சில விநாடிகள் பிடித்தன.

மகாராஜாவின் பிரேதத்தைப் பூச்சப்பரத்தில் எடுத்து வைக்கும் போது காலை எட்டே கால் மணி. முன்பு ஒரு காலத்தில் அரண்மனைப் பாண்டு வாத்திய கோஷ்டி என்ற பெயரில் மாதச் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்து விட்டு அப்புறம் வெளியே தனியாகக் கல்யாண ஊர்வலங்களை நம்பிக் கடை வைத்து விட்ட ஒரு பாண்டு வாத்திய கோஷ்டிக்காரன் சோக கீதங்களை இசைத்துக் கொண்டிருந்தான். அதிர் வேட்டுக்கள் போடுவோர், தாரை தப்பட்டை வாத்தியக்காரர்கள், புலி வேஷக்காரர்கள் எல்லோரும் மகாராஜாவின் அந்திம ஊர்வலத்தில் குறைவின்றி இருந்தார்கள்.

வெளிக் கோட்டையில் நாலு ராஜ வீதியிலும் தெருக் கொள்ளாமல் கூட்டம் நிரம்பி வழிந்தது. வீடுகள், திண்ணைகள், மாடி, பால்கனிகள், மொட்டை மாடிகள், தெருவிலிருந்த மரக்கிளைகள் எல்லாவற்றிலும் ஜனக் கூட்டம் நெரிசல்பட்டுப் பிதுங்கி வழிந்தது. பிரேதத்துக்குப் பின்னால் பூக்களையும் காசுகளையும், வாரி இறைத்துக் கொண்டு வந்ததால் இறைக்கப்பட்ட காசுகளைப் பொறுக்குவதற்காக வேறு கூட்டம் முண்டியடித்தது. தனசேகரன் சிறிது நேரம் கொள்ளிச் சட்டியோடு பூச்சப்பரத்துக்குப் பின்னால் நடந்து பார்த்தான். கூட்டத்தின் நெரிசலில் அவனையும் கொள்ளிச் சட்டியையும் கீழே தள்ளிவிடுவார்கள் போலிருந்தது. முன்னால் திறந்த ஜீப்பில் அரண்மனைக் காரியஸ்தரோடு நின்றவாறே ஏற்பாடுகளைக் கவனித்தபடி வழி விலகிச் சென்று கொண்டிருந்த மாமா தனசேகரன் கூட்டத்தில் சிக்கித் தள்ளாடித் திணறுவதைக் கவனித்து விட்டார். வேறு வழியில்லாததால் ஜீப்பை நிறுத்தித் தனசேகரனையும் அதிலேயே ஏற்றி நிற்கச் செய்துவிட்டார் அவர். கொள்ளிச் சட்டியைத் தாங்கிய உறியைப் பிடித்துக் கொண்டு தனசேகரனும் ஜீப்பிலேயே நின்று கொண்டு பூச்சப்பரத்துக்கு முன்னால் சென்றான்.

அந்த அந்திம ஊர்வலம் அரச குடும்பத்து மயானத்துக்குப் போய்ச் சேரும் போது பகல் பன்னிரெண்டே கால் மணி ஆகிவிட்டிருந்தது. இளைய ராணிகள் என்ற பெயரில் அந்தப்புரத்தில் அடைந்து கிடந்தவர்களில் பலர் ஏற்கெனவே திருட்டு வேலைகளில் இறங்கியிருந்தார்கள் என்று கேள்விப்பட்டிருந்ததினால் அந்திம ஊர்வலம் புறப்படுவதற்கு முன்னர் மாமாவும் காரியஸ்தரும் அரண்மனையில் காவல் ஏற்பாடுகளைச் சரியான முறையில் செய்து விட்டே புறப்பட்டிருந்தனர்.

மயானத்துக் காரியங்கள் ஒரு மணிக்குள் முடிந்து விட்டன. உறவினர்களும், அரண்மனை முக்கியஸ்தர்களும் நீராடித் தலை முழுகிய பின் தேவார மடத்துக்குச் சாப்பிட வந்தார்கள். கோமளீஸ்வரனும் இன்னும் யாரோ நாலைந்து சினிமா ஆசாமிகளும் அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையை வழிமறித்து, “என்ன ஏற்பாடுன்னு பண்ணினீங்க? காலையிலே ஸ்டாருங்களுக்கு ஒரு காபி கொடுக்கக் கூட ஆளு இல்லே. ராஜா இருந்தப்பக் கலைஞர்கள்னா உயிரை விடுவாரு. நீங்க என்னடான்னா...” என்று ஏதோ இரைந்து கொண்டிருந்தார்கள். அதைப் பக்கத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த மாமா தங்கபாண்டியன் பொறுமையை இழந்து ஆத்திரமடைந்தார்.

“இந்தாய்யா கோமளீஸ்வரன்! அவரிட்ட ஏனய்யா சத்தம் போடறே? உன்னையும் உன் ஸ்டார்சுங்களையும் கவனிக்கிறதைத் தவிர, இங்கே அரண்மனையிலே அவங்களுக்கு வேற வேலையே கிடையாதுன்னு நினைச்சியா? இது எழவு வீடுன்னு நினைச்சியா? அல்லது உங்களை எல்லாம் கவனிச்சு விருந்துபசாரம் பண்றதுக்குக் கலியாண வீடுன்னு நினைச்சுக்கிட்டியா?” என்று மாமா தங்க பாண்டியன் கூப்பாடு போட்ட பின்புதான் டைரக்டர் கோமளீஸ்வரன் ஓய்ந்தான். அடுத்து உள்ளூர்ப் பத்திரிகை நிருபர்கள் நாலைந்து பேர் தனசேகரனைச் சூழ்ந்து கொண்டு அரண்மனையின் எதிர்காலம், மகாராஜாவின் உயில் பற்றி எல்லாம் ஏதேதோ கேள்விகளைக் கேட்டுத் துளைத்தார்கள். தனசேகரன் சுருக்கமாகவும், அடக்கமாகவும் பதில்களைச் சொன்னான்.

“நீங்கள் இனிமேல் தொடர்ந்து இங்கே பீமநாதபுரத்தில் இருப்பதாக உத்தேசமா அல்லது மறுபடியும் உங்கள் மாமாவோடு மலேசியாவுக்கே புறப்பட்டுப் போய் விடுவீர்களா?” என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, “இன்னும் அது பற்றி எல்லாம் முடிவு எதுவும் செய்யவில்லை” என்று தனசேகரனிடமிருந்து பதில் கிடைத்தது.

“உங்கள் தகப்பனார் தொடங்கிய சினிமாப் புரொடக்‌ஷன் கம்பெனியைத் தொடர்ந்து நடத்துவீர்களா?” என்று சினிமாவில் அதிக அக்கறையுள்ள ஒரு நிருபர் மெல்லச் சிரித்துக் கொண்டே கேட்டதற்குத் தனசேகரன் பதில் சொல்வதற்கு முன்பே மாமா தங்கபாண்டியன் குறுக்கிட்டு, “என்னப்பா விவரம் தெரியாத ஆளுகளா இருக்கீங்க? எந்த நேரத்தில் எதைக் கேட்கறதுன்னு தெரியலியே? அவரு காலையிலேருந்து பட்டினி. அலைச்சல் வேறே. இப்பப் போயி உசிரை எடுக்காதீங்கப்பா” என்று அந்த நிருபர்கள் கூட்டத்தை மெதுவாகக் கத்தரித்து விட்டார். “நீ வா தம்பீ! முதல்லே ஜீப்பிலே ஏறி உட்காரு. போகலாம். இங்கே நின்னுக்கிட்டிருந்தா இப்பிடியே யாராவது வந்து ஏதாவது கேட்டுக்கிட்டே இருப்பாங்க” என்று உடனே தனசேகரனை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்படச் செய்யவும் தயாரானார். நிருபர்கள் அப்போதும் விடவில்லை. “ப்ளீஸ்... அப்படியே உங்க மாமாவோட கொஞ்சம் நில்லுங்க. ஒரே ஒரு படம் எடுக்கிறோம்” என்று புகைப்படம் பிடித்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.

“நீங்கள்ளாம் நட்சத்திரேயனோட அவதாரம்பா” என்றார் தங்கபாண்டியன்.

“தங்கள் பெண்ணை இளையராஜாவுக்குத் திருமணம் செய்து கொடுக்கப் போவதாக ஒரு வதந்தி அடிபடுகிறதே?”

“அட சரிதான் போய்யா. அடியும்படலே. உதையும் படலே. கலியாணப் பத்திரிகையிலே போட வேண்டியதை எல்லாம் நியூஸ் பேப்பரிலே போடறேன்னா எப்படிப்பா?”

பத்திரிகை நிருபர்கள் சிரித்துக் கொண்டே போய் விட்டார்கள். அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையையும், வேறு இரண்டொரு முக்கியஸ்தர்களையும் ஏற்றிக் கொண்ட பின் ஜீப் அரண்மனைக்குப் புறப்பட்டது.

“தம்பீ! வசந்த மண்டபத்திலே போய்க் குளிச்சு உடை மாத்திக்கிட்டு அங்கேயே சாப்பாட்டைக் கொண்டாரச் சொல்லிடட்டுமா? இல்லாட்டி நாமளும் தேவார மடத்திலேயே போய்ச் சாப்பாட்டை முடிச்சிட்டு வந்திரலாமா?”

“நாம இங்கே வசந்த மண்டபத்திலே நாலு அஞ்சு பேருக்குச் சாப்பாடு மாத்தியாறச் சொன்னா அங்கே அரண்மனையிலே யாராவது நாற்பது பேருக்கு மாத்திக்கிட்டு வரச் சொல்லுவாங்க. வீணா ஆளுங்க அங்கேயும் இங்கேயுமா அலைய வேண்டியிருக்கும். தேவார மடத்துலே போயே ஒரு மூலையில் உட்கார்ந்து நாமும் ஒருவாய் சாப்பிட்டோம்னு பேர் பண்ணிட்டு வந்துடலாம் மாமா” என்றான் தனசேகரன். மாமாவும் சம்மதித்தார்.

ஜீப் வசந்த மண்டபத்து விருந்தினர் மாளிகை வாயிலில் போய் நின்றதுமே தனசேகரனும் மாமாவும் உள்ளே போய் நீராடச் சென்றார்கள். “எனக்குப் பச்சைத் தண்ணி ஒத்துக்காது. நா கூட வீட்டுக்குப் போயி வெந்நீரிலே தலைமுழுகிட்டு வந்துடறேங்க” என்றார் காரியஸ்தர்.

“எங்கே பார்த்தாலும் ஒரே ஜனநெரிசலா இருக்கு. ஜீப்பிலேயே போயிட்டு வந்திடுங்க” என்று மாமா காரியஸ்தரை ஜீப்பிலே போகச் சொல்லி வற்புறுத்தினார்.

“இல்லீங்க. நான் நடந்தே போயிட்டு வந்துடறேன்” என்று மறுபடியும் தயங்கிய காரியஸ்தரை, “அது முடியிற காரியமில்லே. நான் சொல்றபடி கேளுங்க. ஜீப்பிலேயே போயிட்டு வாங்க” என்று கண்டித்துச் சொல்லி ஜீப்பில் அனுப்பி வைத்தார் தங்கபாண்டியன்.

அன்று மாலை ஐந்து ஐந்தரை மணி வரை தேவார மடத்தில் சாப்பாட்டுப் பந்திகள் ஓயவில்லை. அக்கம் பக்கத்துக் கிராம மக்கள் நிறைய வந்திருந்தார்கள். காரியஸ்தர் அவ்வளவு பேருக்கும் சாப்பாடு போட விரும்பவில்லை. அப்போது அந்த சமஸ்தானம் இருந்த பொருளாதார வறட்சி நிலையில் அது கட்டாது என்ற பயம் தான் காரணம். “சாப்பாட்டிலே போய்க் கணக்குப் பார்க்க வேண்டாம்” என்று தங்கபாண்டியன் சொல்லியதால் தான் “நமக்கென்ன வந்தது” என்று சற்றே தாராளமாக விட்டிருந்தார் காரியஸ்தர்.

அன்று பிற்பகலில் மாமா தங்கபாண்டியனும், தனசேகரனும் இரண்டு மூன்று மணி நேரம் அயர்ந்து தூங்கினார்கள். மறுபடி அவர்கள் கண் விழித்த போது ஆறு மணி. காபியருந்தி விட்டுக் காரியஸ்தரைக் கூப்பிட்டு அனுப்பினார்கள் அவர்கள்.

காரியஸ்தர் வரும்போது அவரோடு டைரக்டர் கோமளீஸ்வரனும் வரவே மாமாவுக்கும் தனசேகரனுக்கும் பொறுத்துக் கொள்ள முடியாத ஆத்திரமே மூண்டது.

“இந்தப் பயல் கோமளீஸ்வரன் ஏன் ஒட்ட வச்ச வால் கணக்கா இன்னும் விடாமே சுத்திக்கிட்டிருக்கான்? இவன் ஏன் இன்னும் ஊருக்குத் திரும்பிப் போகலே? இங்கே இவனுக்கு என்னா வச்சிருக்கு?”

“அதுதான் எனக்கும் புரிய மாட்டேங்குது மாமா?”

நல்ல வேளையாக அப்போது காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையே அவர்கள் மனநிலை புரிந்தோ என்னவோ கோமளீஸ்வரனை வாசலிலேயே நிறுத்தி வைத்துவிட்டுத் தான் மட்டும் தனியாக உள்ளே வந்தார்.

“உட்காருங்க மிஸ்டர் பெரிய கருப்பன் சேர்வை! உங்ககிட்ட நானும் தம்பியும் கொஞ்சம் தனியாப் பேசறத்துக்காகத்தான் இப்போ கூப்பிட்டோம்.”

பெரிய கருப்பன் சேர்வை எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். மாமா தங்கபாண்டியனும், தனசேகரனும் என்ன சொல்லப் போகிறார்களோ என்று அவர்கள் இருவர் முகத்தையுமே மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். முதலில் தனசேகரன் தான் பேசினான்:-

“சமஸ்தானச் சொத்துக்கள் - கடன்கள் எல்லாத்துக்கும் கம்ப்ளீட்டா அஸெட்ஸ் அண்ட் லயபிலிட்டீஸ் ஒண்ணு தயார்ப் பண்ணியாகணும். அரண்மனை அந்தப்புரத்திலே இளையராணீங்கன்னும் அவங்களோட வம்சாவளீன்னும் அடைஞ்சு கிடக்கிறாங்களே அதுக்கும் ஒரு லிஸ்ட் வேணும். இப்போ அரண்மனையிலே ஆற செலவு அயிட்டங்களைப் பத்தியும் உத்தியோகம் பார்க்கிறவங்களைப் பத்தியும் கூட விவரம் வேணும்” தனசேகரன் இப்படிச் சொல்லியதும் பெரிய கருப்பன் சேர்வை,

“ரெண்டு நாள் டயம் குடுங்க, எல்லாம் விவரமாத் தயார்ப் பண்ணித் தந்துடறேன். அதோட இன்னொரு விஷயம். இளையராணிங்க லிஸ்டிலே மெட்ராஸ்ல இருந்து வந்திருக்காங்களே அந்த சினிமா நட்சத்திரம் ஜெய நளினியைக் கூடச் சேர்த்துக்கணும் போலிருக்கே? அந்த நட்சத்திரத்துப் பேருக்கு ‘உயில்’ ஏதாச்சும் இருக்கான்னு நச்சரிச்சுக் காலைலேருந்து என் உயிரை எடுத்துக்கிட்டிருக்கான் இந்தக் கோமளீஸ்வரன். அவன் தான் இந்த நட்சத்திரத்தைப் பெரிய மகாராஜாவுக்கு அறிமுகப்படுத்தி வச்சானாம். அதுக்கப்புறம் திருத்தணிக் கோயில்லியோ எங்கேயோ மாலை மாத்தி அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் கூடப் பண்ணிக்கிட்டாங்களாம். அந்தப் போட்டோ கூட அவன் கிட்டே இருக்காம்” என்றார் பெரிய கருப்பன் சேர்வை.

“இதென்ன? சுத்த பிளாக் மெயிலா இருக்கே?” என்று மாமா இரைந்தார்.

“என்ன கண்றாவியோ? இந்தக் கோமளீஸ்வரனும் இவனோட வந்த சினிமா ஆட்களும் அந்த ஜெய நளினியும் ஒரு முழு கஸ்ட் ஹவுஸ் நிறைய அடைஞ்சுக்கிட்டுத் தொந்தரவு பண்றாங்க. அவங்களை எப்படி வெளியே அனுப்பறதுன்னே தெரியலே?” என்றார் காரியஸ்தர். தனசேகரன் கேட்டான்:

“உண்மையிலேயே அந்தச் சினிமாக்காரி பேருக்கு உயில் ஏதாவது இருக்கா?”

“உங்க பேருக்குத்தான் உயில் எல்லாம் இருக்கு. வேற எதுவும் இருக்கிறதா எனக்கு ஞாபகம் இல்லே.”

“முதல்லே அந்தக் கோமளீசுவரனை உள்ளே கூப்பிடுங்க சொல்றேன்.”

பெரிய கருப்பன் சேர்வை எழுந்து சென்று வெளியே வராந்தாவில் உட்கார்ந்திருந்த கோமளீஸ்வரனை உள்ளே அழைத்து வந்தார். அவனை உட்காரும்படி கூட ச் சொல்லாமல் மிகவும் கண்டிப்பான குரலில் மாமா பேசினார். யாரும் எதிர்பாராத விதமாக அவர்கள் அங்கே எவளை மையமாக வைத்துப் பேசிக் கொண்டிருந்தார்களோ அந்த ஜெய நளினியே திடும் பிரவேசமாக உள்ளே நுழைந்தாள். ஒயிலாக அபிநயம் பிடிப்பது போல் மாமாவுக்கும் தனசேகரனுக்கும், காரியஸ்தருக்கும் தனித்தனியாக வணக்கம் செலுத்தினாள். அழகு கொஞ்சும் அந்த எழில் வடிவத்தைத் தங்களிடையே தோன்றக் கண்டதும் அவர்கள் அனைவருமே சமாளித்துக் கொள்வதற்குச் சில கணங்கள் பிடித்தன. மாமா தங்கபாண்டியன் தான் முதலில் சுதாரித்துக் கொண்டு அவளிடம் நேருக்கு நேர் கேட்டார்:

“ஏன்ம்மா? காலமான பெரியராஜா உங்களுக்காக எவ்வளவோ செலவழிச்சிருக்காரு. நீங்களும் அதை மறந்திருக்க மாட்டீங்க. அடையாறிலே அந்தப் பங்களா- அதான் - இப்ப நீங்க இருக்கீங்களே அதை உங்களுக்கு வாங்கி வைக்கணும்கிறதுக்காக அவர் இங்கே ஊர்லே அயனான தஞ்சை நிலங்களைப் பல ஏக்கர் வந்த விலைக்கு அவசர அவசரமாக வித்தாரு. எங்களுக்கெல்லாம் கூட அது பிடிக்கலே. ஆனா இப்போ இன்னமும் நீங்க ஏதோ கிளெய்ம் பண்ற மாதிரிக் கோமளீஸ்வரன் சொல்றானே?”

“நோ... நோ... அப்படி ஒண்ணுமில்லே. அவரு உயில்லே என் சம்பந்தமா ஏதாவது இருக்கான்னு எனக்குத் தெரியணும். அவ்வளவுதான்...”

“இருக்கிறதாத் தெரியல. அப்படி இருந்தால் அந்த விவரம் முறைப்படி உங்களுக்கு ‘ரெஜிஸ்தர்’ தபால்லே வந்து சேரும். நீங்க வீணா ஏன் இங்கே வந்து தங்கிக் கஷ்டப்படணும்னு தான் எனக்குப் புரியலே...”

“எப்படி இருந்தாலும் நாங்க இன்னிக்கிச் சாயங்காலம் கார்லே புறப்படறோம். அதான் உங்க ரெண்டு பேரிட்டவுமே நேர்லே சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்” என்று சொல்லிக் கொண்டு புறப்படத் தயாராகி விட்டாள் அவள்.

“என்னமோ எங்களையெல்லாம் மறந்துடாதீங்க. மகாராஜா மெட்ராஸ் ‘கேம்ப்’னா நான் இராப்பகலா வீடு வாசலை மறந்து அவரோட சுத்தியிருக்கேன்! என்னையெல்லாம் வெறுங்கையோட அனுப்பறது உங்களுக்கு நல்லா இருந்தாச் சரிதான்” என்று கோமளீஸ்வரன் ஏதோ பணத்துக்கு அடி போட்டான். ஆனால் அதற்குள் ஜெய நளினி அங்கிருந்து வெளியேறிச் சிறிது தொலைவு போய்விட்டாள். மாமாவுக்கு வந்த கோபத்தில் என்ன செய்து விடுவாரோ என்று பயந்தான் தனசேகரன்.

“ஏம்பா, நீயெல்லாம் மனுஷன் தானா? செத்துப் போனவருக்குத் தரகு கேட்டுக்கிட்டு இப்போ வந்து நிக்கிறியே! நீ செஞ்சிருக்கிற மானக் கேடான காரியங்களாலே இந்தச் சமஸ்தானமே சீரழிஞ்சு போயிருக்கு. இன்னும் உனக்குத் திமிர் அடங்கலியே?”

விநாடிக்கு விநாடி மாமாவின் குரலில் சூடேறுவதைக் கேட்டுக் கோமளீஸ்வரன் மெதுவாக அந்த இடத்திலிருந்து நழுவி நடிகை ஜெய நளினியைப் பின் தொடர்ந்து சென்றான்.

அத்தியாயம் - 4

தனசேகரனையும் அரண்மனைக் காரியஸ்தரையும் மிரட்டி ஏதாவது பணம் பறித்துக் கொண்டு போகலாம் என்று எண்ணிய சினிமா டைரக்டர் கோமளீஸ்வரன் விவகாரஸ்தரும், கறாரானவரும் ஆகிய தனசேகரனின் தாய் மாமன் தங்கபாண்டியன் உடனிருந்த காரணத்தால் பயந்து ஒடுங்கிப் பேசாமல் சென்னைக்குத் திரும்ப வேண்டி யதாயிற்று.

பீமநாதபுரம் அரண்மனை எல்லைக்குள்ளிருந்த ஒரு பெரிய விருந்தினர் விடுதியை முற்றிலும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நட்சத்திரக் கும்பல் வெளியேறி ஊர் திரும்பியதுமே, அரண்மனையில் வெளியிலிருந்து வேடிக்கை பார்க்க வரும் அநாவசியமான கூட்டம் குறைந்து விட்டது.

பெரிய மகாராஜாவை எரியூட்டிய தினத்தன்று இரவே நெருங்கிய உறவினர்களையும் அரண்மனைக் காரியஸ்தரையும் கலந்து கொண்டு தனசேகரனை அருகில் வைத்துப் பல பிரச்னைகளுக்கு ஒரு முடிவு கட்டிவிட்டார் மாமா. அடித்துப் பேசி வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக விஷயங்களை அவரால் முடிக்க முடிந்தது. சுபாவத்திலேயே இளகிய மனமும் எளிமையும், பிறர் முகம் வாடப் பேசிப், பழக்கப்படாத இயல்பும் உள்ளவனாக இருந்த தனசேகரன், மாமா பிரச்னைகளை ஒவ்வொன்றாகத் தீர்த்து வைத்த, வேகத்தைப் பார்த்து வியந்தான். மாமாவின் விவகார ஞானம் அதிசயிக்கத்தக்கதாயிருந்தது.

கடைசியாக மாமா இளையராணிகள் பிரச்னையைப் பற்றி ஆரம்பித்த போது காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை தம் மனத்திலிருந்த சில விஷயங்களை வெளிப்படையாகச் சொன்னார். அவை மிக மிகக் கசப்பானவையாக இருந்தன.

“நீங்க இந்தப் பிரச்னையை எப்படித் தீர்த்துக்கட்டிக் சண்டை சச்சரவு இல்லாமே சுமுகமா அவங்களை வெளியே அனுப்பப் போறீங்கன்னு எனக்குப் புரியவே இல்லை. அவங்க விஷயம் வரவரப் பெரிய நியூஸன்ஸாப் போச்சு. அரண்மனைப் பாத்திரங்களிலே இருந்து தோட்டத்து விறகுக்கட்டை வரை எதை எடுத்தும் விலைக்கு வித்துப் புடறாங்க, வாசனைச் சோப்பு, ஃபேஸ்பவுடர், ஷாம்பூன்னு அவங்க அத்தனை பேருக்கும் பொழுது விடிஞ்சாப் பொழுது போனா எத்தினி எத்தினியோ செலவுக்குப் பணம் தேவைப்படுது. கைக்கு அகப்பட்டதை எடுத்து வித்துடறாங்க. பஜார்லே அரண்மனை முத்திரையோட கூடின பண்டங்கள் ‘ஸெகண்ட்ஹேண்ட்’ விற்பனைக்குப் போறதுங்கிறது இப்பல்லாம் சர்வ சாதாரணமான விஷயமாப் போச்சு. அந்த மாதிரி வெளியிலே விற்பனைக்குப் போற பண்டங்களிலே சிலது போலீஸ் ஸ்டேஷன் வரைச் சிரிப்பாய்ச் சிரிச்சுக் காரியஸ்தர்ங்கிற முறையிலே என்னைக் கூப்பிட்டு வேறே, ‘இது உங்க அரண்மனைப் பண்டம்தானான்னு’ கேள்வி கேட்கிறாங்க.”

“இவ்வளவு குறை சொல்றீங்களே, அரண்மனைப் பண்டங்கள் ஒரு துரும்பு கூட வெளியிலே போக விடாமத் தடுக்கிறதுக்கு வாட்ச்மேன், கூர்க்கா மூலமா ஏற்பாடு பண்ணலாமே! அதை நீங்க ஏன் செய்யலே சேர்வைகாரரே?”

“அரண்மனை மதில் சுவர்லே மொத்தம் நாலு வாசல் இருக்கு. அதைத் தவிர அங்கங்கே கல்லைப் பேத்து ஒரு நாலைஞ்சு வாசல் இவங்களாகப் புதுசா உண்டாக்கியிருக்காங்க. அது போதாதுன்னு மதில்சுவருக்கு வெளியிலே ஆட்களை நிறுத்தி வச்சு உள்ளேயிருந்து சாமான்களை வெளியே வீசி எறிஞ்சு கடத்திட்டுப் போற பழக்கமும் இருக்கு. இதிலே எதுக்குன்னு வாட்ச்மேனும் கூர்க்காவும் போட்டுக் கட்டிக் காக்க முடியும்? வெளியே போக உள்ளே வர ஒரே ஒரு வாசலா இருந்தாலாவது வாட்சிமேனோ கூர்க்காவோ போட்டு ஏதாவது கட்டுக் காவல் ஏற்பாடு செய்யலாம்.”

“நீங்க சொல்றதும் ஒரு விதத்திலே சரிதான் சேர்வைகாரரே! இனிமேலாவது எல்லா வாசலையும் கல்லை வச்சு அடைச்சிட்டு உள்ளே வர - வெளியே போக எல்லாத்துக்குமா ஒரே ஒரு வாசலாப் பண்ணிடுங்களேன்.”

“கார்கள் வரப்போக ‘இன் கேட்’ ‘அவுட் கேட்’னு ரெண்டு கேட்டாவது வேணுமே?”

“வேண்டியதில்லே! மதிலைக் கொஞ்சம் இடிச்சாவது ஒரே கேட்டை ரெண்டு மடங்கு அகலமாக்கி அதையே உள்ளே வரதுக்கும், வெளியே போகறத்துக்குமாப் பிரிச்சு விடலாமே?” என்று பதில் சொன்னார் மாமா. மாமா தங்க பாண்டியன் கூறிய யோசனையை அப்படியே ஏற்றுக் கொண்டு, “நாளைக்கே ஏற்பாடு பண்ணிடறேங்க” என்று மறுமொழி கூறினார் காரியஸ்தர் பெரியகருப்பன் சேர்வை.

“அரண்மனையிலேருந்து வெளியே கொண்டு போற சாமான்களுக்கு அனுமதிச் சீட்டுக் கொடுத்தால் தான் வெளியே கொண்டு போக முடியும்னு கேட்டிலே இருக்கிற கூர்க்காவுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கலாம்” என்றான் தனசேகரன்,

இளையராணிகள் பிரச்னை வந்த போது “அவங்கள்ளாம் பெரிய சண்டைக்காரிங்களா இருப்பாங்கபோல் இருக்கு. ‘வெளியிலே போறது தான் போறோம். எவ்வளவு அதிகமாப் பணம் கறக்க முடியுமோ அவ்வளவு அதிகமாப் பணம் கறக்கணும்’னு தான் பார்ப்பாங்க. நீங்க வேணும்னா யாராவது ரெண்டு பேரைக் கூப்பிட்டுப் பேசிப் பாருங்களேன். ஒருவேளை உங்க வார்த்தைக்குக் கட்டுப்பட்டாலும் கட்டுப்படுவாங்க” என்று தனசேகரனையும் மாமாவையும் பார்த்துக் கூறினார் பெரியகருப்பன் சேர்வை.

“நியாயமா என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுக்கலாம். நாம் யார் வயிற்றுலேயும் அடிக்கக் கூடாது. ஆனா அதே சமயத்திலே இன்னிக்கி இந்த சமஸ்தான நிதி நிலைமையையும் யோசிச்சுத்தான் எதையும் செய்ய முடியும்” என்றான் தனசேகரன்.

“இவ்வளவு பெரிய வைப்பாட்டிப் பட்டாளத்தைக் கூட்டி வச்சிட்டுப் போறவரு அவங்களுக்குத் தலைக்குக் கொஞ்சமாப் பிரிச்சுக் கொடுக்கிறத்துக்குன்னாவது ஏதாச்சும் சொத்து மீதம் வச்சிருக்கணும். சொத்தை எல்லாம் தாறுமாறா வித்தும் அடமானம் வச்சும் தாம் தூம்னு செலவழிச்சிட்டாரு” என்று தங்கபாண்டியன் பெரிய ராஜாவைப்பற்றி வருத்தப்பட்டார். பெரிய கருப்பன் சேர்வை சொன்னார்:

“எனக்கு நினைவு தெரிஞ்சி பெரிய ராஜாவோட இன்ஷுரன்ஸ் பணம்தான் அப்பிடியே வரும். அதுக்கு எல்லா ஃபார்மாலிட்டீஸும் டாக்டர் சர்ட்டிஃபிகேட்டும் கொடுத்தா உருப்படியாப் பத்துலட்ச ரூபாய் வரை கிடைக்கலாம். ஆனா கொடுக்க வேண்டிய கடன் அதுக்கு மேலேயும் இருக்கும் போலத் தெரியுது.”

“கடனாளின்னு பேரெடுக்கிறதைப் போல அவமானம் வேற இல்லே காரியஸ்தரே! எங்கப்பா சொத்தோ அரண்மனைக் காசோ எனக்கு ஒரு சல்லி வேண்டாம். கடனைத் தீர்த்தால் போதும். நான் படிச்சிருக்கேன். என்னாலே ஏதோ உத்தியோகம் பார்த்துச் சம்பாதிச்சுக்க முடியும். எனக்கு மீத்துத் தரணும்னு இங்கே யாரும் கவலைப்பட வேண்டியதில்லே” என்றான் தனசேகரன். அவன் திடீரென்று அவசரப்பட்டு அப்படிச் சொல்லியது மாமாவுக்குப் பிடிக்கவில்லை. “கொஞ்சம் பொறு தம்பி! அவசரப்படாதே! நீ பாட்டுக்கு அவசரப்பட்டு எதையாவது சொல்லி வச்சேன்னா அதுக்குக் கையும் காலும் வச்சு, ‘இளையராஜா அரண்மனைச் சொத்துலே ஒரு துரும்பு கூடத் தனக்கு வேண்டாம்னுட்டாராம்’னு சேதியைப் பரப்பிடுவாங்க. நீ இப்போ இங்கே சொன்னதிலே தப்பில்லே. நம்ம காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை ரொம்ப தன்மையான மனுஷர். அவர் கிட்டேருந்து சமாசாரம் எதுவும் வெளியிலே போகாது. பொது இடங்களிலே பெருந்தன்மையா இருக்கிறதைக் கூட மறைச்சு இரகசியமா வச்சுக்கணும். நமது பெருந்தன்மையோ தியாகமோ அளவுக்கதிகமாக விளம்பரமாகி விட்டால் அப்புறம் நம்ம தான் அதனாலே ரொம்ப சிரமப்பட வேண்டியிருக்கும்!”

“கடைசி நாலஞ்சு மாசங்கள்ளே மகாராஜா செஞ்ச சில காரியங்கள் எனக்கே பிடிக்கலீங்க. ‘ப்ரீவி பர்ஸ்’ நின்னப்புறம் அவரு கரஸ்பாண்டண்டா இருந்த பீமநாதபுரம் மகாராஜாஸ் ஹைஸ்கூல், கல்லூரி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் சம்பளத்திலே கூடத் தலைக்கு இருபது இருபத்தஞ்சுன்னு பிடிச்சு முழுச் சம்பளத்துக்கும் கையெழுத்துப் போடச் சொல்வி அவங்களை நிர்ப்பந்தப் படுத்தி வாங்கி எடுத்துக்கிட்டாரு. முழுத் தொகைக்கும் அவங்க கையெழுத்துப் போட்டு முடிச்சப்புறம் பணத்தைக் குடுக்கிறப்போ இப்படி எடுத்துக்கிட்டுக் கொடுத்ததிலே பல வாத்தியாருங்களுக்கு ஒரே கோபம். ‘எதுக்காக இந்தப் பிடித்தம்’னு சில பேர் ஸ்கூல் ரைட்டரிட்டவே கோபமாக் கேட்டிருக்காங்க. ஏதோ ஸ்கூல் வெல்பேர் ஃபண்டு அது இதுன்னு ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமாப் பதில் சொல்லிச் சமாளிச்சிருக்காரு ரைட்டர்.”

“ஒண்ணும் கேக்கறதுக்கே நல்லா இல்லையே சேர்வை காரரே! படிப்புச் சொல்லிக் கொடுக்கிற வாத்தியாருங்க வாயிலே மண்ணைப் போட்டுப் பணம் தண்டினா நல்லாவா இருக்கு? மகாராஜாவுக்கு ஏன் தான் இப்படிப் புத்தி கெட்டுப் போச்சோ? ரொம்ப அசிங்கமாவில்லே நடந்திருக்கு?” என்று மாமா தங்கபாண்டியன் துயரம் தோய்ந்த குரலில் பதில் சொன்னார்.

“பீமநாதபுரம் அரண்மனையிலே பணத்துக்குத் தட்டுப்பாடு வரலாம் ஆனால் பெருந்தன்மைக்கும் தாராள மனப்பான்மைக்கும் தட்டுப்பாடு வரக்கூடாது. நீங்க சொல்றதெல்லாம் கேக்கறப்போ ரொம்பத் தலைகுனிவா இருக்குது சேர்வைகாரரே!” என்றான் தனசேகரன்.

“அடுத்த மாசம் ஸ்கூல்லே, காலேஜ்லே சம்பளம் போடறப்போ அவங்கவங்க எந்தெந்தத் தொகைக்குக் கையெழுத்துப் போடறாங்களோ அந்தந்தத் தொகையிலே ஒரு தம்பிடி கூடக் குறையாமே ஒழுங்காகக் கொடுத்துடணும்னு ரைட்டரிட்டச் சொல்லிடுங்க. அது மட்டுமல்ல. ஏற் கெனவே பிடிச்சிருக்கிற தொகையைக் கூடப் படிப்படியாக திருப்பிக் கொடுத்துடணும்னு சின்னராஜா உத்தரவு போட்டிருக்காருன்னும் ஒரலா. அவங்ககிட்டச் சொல்லிடச் சொல்லுங்க” என்றார் மாமா. அப்போது தனசேகரன் குறுக்கிட்டு. மாமா! நீங்க சொன்னதெல் லாம் சரிதான். ஆனால் இந்தச் ‘சின்னராஜா உத்தரவு, கட்டளை’ இது மாதிரி வார்த்தைங்களைக் கேட்டாலே எனக்குப் பத்திக்கிட்டு வருது. சும்மா ‘தனசேகரன் சொல்லுறான்’னு சொல்லுங்களேன் போதும், எதுக்கு இந்த அரண்மனை ஜம்பமெல்லாம்? இந்த ஜம்பங்களிலேயும், ஜபர்தஸ்துக்களிலேயும் அப்பா ஒருத்தர் சீரழிஞ்சது போதாதா? என் பெயரையும் ஏன் கெடுக்கறீங்க?”

தனசேகரனின் இந்தக் கோபமும் கழிவிரக்கமும் நியாயமானவை என்றே மாமாவுக்குத் தோன்றின. ஆனாலும் “அட சும்மா இரு தம்பீ! உனக்கு ‘சின்னராஜா’ அது இதுன்னு மரியாதை குடுத்துக் கூப்பிடறது எல்லாம் பிடிக்க லேன்னாலும் மத்தவங்க உன்னை அப்படிக் கூப்பிடறதையோ பேசறதையோ நீ எப்பிடி வேண்டாம்னு சொல்ல முடியும்? அதெல்லாம் வழக்கத்தை அத்தினி சுலபமா நீ மாத்திப்பிட முடியாது' என்று அவனுடைய அதி தீவிர வேகத்தைக் கட்டுப்படுத்தினார் அவர்.

அன்றிரவு காரியஸ்தரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மாமா தங்கபாண்டியனும் தனசேகரனும் விளக்கை அணைத்துப் படுக்கச் சென்றபோது இரவு இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது. காரியஸ்தர் சென்றபின் மாமா தனிமையில் தனசேகரனுக்குப் பல அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் செய்தார்.

“சமஸ்தானங்களுக்கு இனிமே இந்த நாட்டிலே மதிப்பு இல்லை. அதை ஆண்டவங்களோட பழம் பெருமை எல்லாம் பெருங்காயம் வச்சிருந்த டப்பா மாதிரி ஆகிப் போச்சுங்கிறதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், நீ இவ்வளவு வெளிப்படையாகவும் எளிமையாகவும் உன் மனசிலே நினைக்கிறதை எல்லாம் வாய்விட்டு திறந்து வைக்கிறாப் போலப் பேசிடப்படாது தம்பி! சில நல்ல காரியங்களைச் செய்யறத்துக்குக் கூட கொஞ்சம் ரிஸர்வேஷனும் அடக்கமும் வேண்டியிருக்கும்! பெரிய கருப்பன் சேர்வை ஒண்ணும் கெட்ட மனுஷன் இல்லே. அதனாலே அவரை வச்சுக் கிட்டு எதுவும் பேசலாம்; ஆனால் பொது விலே நீ அப்பிடிப் பேசிடப்படாது.”

“நீங்க சொல்றீங்க மாமா! ஆனா இங்கே உள்ள பல நிலைமைகளை மாத்தறதோ திருத்தறதோ ரொம்பக் கஷ்டம்னு தெளிவாத் தெரிஞ்சிக்கிட்டதாலேதான் அப்பா காலம் வரை இங்கே இருக்கப் பிடிக்காமே நான் உங்க கூட மலேசியாவுக்குப் புறப்பட்டு வந்தேன். இனிமேலும் மெத்தனமா இருந்தால் அப்பாவை விட நாம மோசம்னு ஆயிடும். பல விஷயங்களை உடனே மாத்தியாகணும். நாம் ஒரு பழம் பெருமை உள்ள சோம்பேறிக் கூட்டத்தின் வாரிசு இல்லே. நமக்கு உழைக்கத் தெரியும்னு காட்டணும். வீண் ஆடம்பரங்களை உடனே ஒழிக்கணும். இந்த அரண்மனைக்குள்ளே ஆறு, நந்தவனம் இருக்கு. ஆறிலேயும் வெறும் ஆடம்பரப் பூந்தொட்டிகள் குரோட்டன்ஸ், மல்லிகை, ரோஜாப்பூன்னு வெச்சிருக்காங்க. பூவுக்காக ஒரே ஒரு நந்தவனத்தை மட்டும் ஒதுக்கிட்டு மத்த அஞ்சு நந்தவனத்திலேயும் காய்கறி பயிரிட்டால் அரண்மனை உபயோகத்துக்குப் போக நாளொண்ணுக்கு நூறு ரூபாய்க்குக் காய்கறி விற்கலாம்னு நான் மலேசியா வர்றத்துக்கு முன்னாடி ஒரு நாள் அப்பாவுக்கு உருப்படியா யோசனை சொன்னேன். அதைக் கேட்டு அப்பாவுக்கு என் மேலே தாங்க முடியாத கோபம் வந்திடிச்சி. ‘நீ உருப்படவே போறதில்லே. இங்கே சாமி படங்களுக்கும் இளைய ராணிமார்களுக்கும் பூ வேணுமே? அங்கெல்லாம் காய்கறி போட்டால் அப்புறம் பூவுக்கு எங்கேடா போறது?’ன்னு என்னைக் கோபமாக் கேட்டாரு. ‘பூவுக்குத்தான் தனியா ஒரு நந்தவனத்தை ஒதுக்கிடப் போறோமே’ன்னேன். ‘நீ சின்னப் பையன். உனக்கு ஒண்னும் தெரியாது போ’ன்னுட்டாரு. இன்னொரு சமயம், ‘ஓர் அரண்மனைன்னா பூ, சந்தனம், வாசனை செண்ட் எல்லாம் கமகமக்கணும்டா அதுதான் அரண்மனைக்கு அடையாளம்!’னு வறட்டுக் கர்வத்தோட எங்கிட்ட வாதம் பண்ணினாரு. அவரு சொன்ன தத்துவப்படி பார்த்தா சோறு இல்லாமே காஞ்சாக் கூடப் பரவாயில்லே -பூவும், சத்தனமும் இல்லாமே அரண்மனை காயக்கூடாது. இது தான் அவரோட ஆசை மாமா?”

“நடந்ததை விட்டுத்தள்ளு. இனிமே உன் திட்டப்படி நீ ஆறு நந்தவனத்திலேயும் கூடக் காய்கறி போடலாம். கவலைப்படாதே. அதோட இன்னும் ஒரு வார காலத்துக்குள்ளே இந்த அரண்மனையிலே ‘எகானமி டிரைவ்’ங்கற நிலைமையை விளக்கி ஒரு சிக்கன உணர்வை அமுல் நடத்திப்பிடணும். ஒரு காசு கூட அர்த்தம் இல்லாத வீண் செலவுக்கு விடக்கூடாது. அரண்மனையிலேயும் ஊருக்குள்ளேவும் இருக்கிற சமஸ்தானத்து இடங்களை நியாயமான விலைக்குப் ‘பிளாட் பிளாட்டா’ப் பிரிச்சு வித்துடணும். பழைய நவராத்திரி தசரா ஸெலபரேஷன்ஸ்லே ஆயிரம் பேர் ஐநூறு பேருக்குச் சோறு வடிச்சுக் கொட்ட சாம்பார் வைக்கன்னு பூதம் பூதமாப் பித்தளைப் பாத்திரங்களும் செம்பு அண்டாக்களுமா, ரெண்டு பெரிய கொட்டாரம் நிறைய இங்கே அரண்மனையிலே அடைஞ்சு கிடக்கே அதை எல்லாம் விற்று டிஸ்போஸ் பண்ணிடனும். ஜூவல்ஸ், கோல்ட். அது இதெல்லாம் கூடக் குறைந்த பட்சம் கையிலே வச்சுக்கிட்டு மீதியைக் கொடுத்துட வேண்டியதுதான். பொதி சுமக்கிற மாதிரிக் கனத்திலே தங்கக் காசு மாலை, இடியாக் கணக்கிற ஒட்டியாணம், அரைக் கிலோகிராம் கனத்துக்குப் பாம்படம், இதெல்லாம் இனிமே வருங்காலத்திலே யார் போட்டுக்கப் போறாங்க?" என்று மாமாவே சில யோசனைகளை மேலும் சொன்னார்.

“இங்கே நீங்க சொன்ன யோசனைகளோட இன்னும் சிலதையும் சேர்த்துக்கணும் மாமா. ஒரு வேலையும் இல்லாம தண்ட சோற்றுத் தடிராமனாப் பல பேரு அரண்மனைச் சம்பளத்தை வாங்கிக்கிட்டுச் சோம்பேறியாத் தூங்கிக் கிட்டிருக்காங்க. அப்படி ஆளுங்களை உடனே ‘ரெட் ரெஞ்ச் பண்ணி அனுப்பணும். எங்கப்பாரு மட்டும் இப்பச் சாகாமே இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு போயிருந்தார்னா இன்னும் ரெண்டு 'இளையராணி'ங்களைக் கட்டிக் கிட்டிருப்பாரு, இன்னும் கொஞ்சம் விளையாடியிருப்பாரு. இன்னும் நிறையச் சீரழிச்சிருப்பாரு. நல்ல வேளையா இப்பப் போய்ச் சேர்ந்தாரு.”

“தம்பீ! உன் கோபம் எனக்குத் தெரியுது. ஆனா இனிமே இப்பிடி வேற யாரிட்டவும் மறந்து போய்க் கூடச் சொல்லிடாதே. எங்கிட்டச் சொன்னதிலே தப்பு இல்லே. ஆனா வேற எவனாவது வெளிமனுஷன் கேட்டான்னா, ‘அப்பா போனது நல்லது. இன்னும் கொஞ்ச நாள் இருந்தாருன்னா அரண்மனைச் சொத்தை நிறையச் சீரழிச்சுக் கெடுத்திருப்பாரு’ன்னு தனசேகரனே சொல்றாருன்னு வெளியிலே கண்டமானைக்கித் துஷ்பிரச்சாரம் பண்ணிடுவாங்க...”

“இப்ப நீங்க சொல்றது சரிதான் மாமா! இங்கே இந்த அர்த்த ராத்திரியிலே வேற யாரு இருக்காங்க? நீங்களும் நானும் தானே தனியாப் பேசிக்கிட்டிருக்கோம்; அதான் மனசிலே பட்டதைச் சொன்னேன்.”

“ஏன் தம்பீ? இன்னொரு விஷயம் மறந்தே போச்சே; இங்கே அரண்மனைக்குள்ளே ‘பீமவிலாசம் பிரிண்டிங் பிரஸ்’னு ஒரு பிரஸ் இருந்திச்சே? அது என்னாச்சு?”

“இருக்கு மாமா! ஆனா பிரஸ் ஓடலைன்னு நினைக்கிறேன். சும்மா இழுத்துப்பூட்டி அடைச்சுப் போட்டிருக் காங்க போல்ருக்கு?”

“ரொம்ப நாளைக்கு முன்னாடி அந்தப் பிரஸ்லேருத்து பெரும் புலவர் பீமநகர், நாகநாதனார்னு ஒருத்தரு ‘ராஜ குல திலகம்’னு ‘அரண்மனை கெஸட்’ மாதிரி ஒரு பத்திரிகை வேற நடத்திக்கிட்டிருந்தாரில்லே?”

“ஆமாம்! ராஜமான்யம் நின்னுபோனதும் அப்பாவே அதை நிறுத்திப்பிட்டாரு. ராஜமான்யம் வந்தவரை செலவுக் கணக்கு எழுத அதெல்லாம் வேண்டியிருந்துச்சு. ‘ராஜகுல திலகம்’ என்கிற பத்திரிகைப் பெயரை விட கெளரவ ஆசிரியர், ஹிஸ் ஹைனெஸ் பீமநாத ராஜசேகர பூபதி மகாராஜா என்கிற பேர்தான் பெரிய எழுத்துக்களிலே அச்சிடப்பட்டிருக்கும். அதுக்குக் கீழே சிறப்பாசிரியர் பெரும்புலவர் பீமநகர் நாகநாதனார்னு போட்டிருக்கும். அந்தப் பத்திரிகைப் போட்ட முப்பத்திரண்டு பக்கத்திலே முப்பத்தொரு பக்கம் வரை அப்பாவோட வீர தீரப் பிரதாபங்கள்தான் இருக்கும். அவருடைய வெளியூர்ப் பிரயாணங்கள், திரும்பி வந்த தேதி, அரண்மனைக்கு வந்து போகும் முக்கியஸ்தர்களோடு நின்று அப்பா எடுத்துக் கொண்ட போட்டோ எல்லாம் அதில் வரும்.”

“சரி தம்பி! நீ அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்ப்பா. இப்போ அந்தப் பிரஸ் ரன்னிங் கன்டிஷன்லே இருக்கா, இல்லியான்னு மட்டும் காரியஸ்தரை நாளைக்கே விசாரிக்கணும். ரன்னிங் கன்டிஷன்லே இருந்தா ஊர்லே ‘ஜாப் ஒர்க்ஸ்’ எடுத்து நாமே நல்ல ஆளுங்களா போட்டு அதைத் தொடர்ந்து நடத்தலாம். ரன்னிங் கண்டிஷன்லே இல்லேன்னா நல்ல பார்ட்டியாய் பார்த்து உடனே விலை பேசி வித்துப்பிடலாம்.”

“ஊரிலேயிருந்து ரொம்பத் தள்ளியிருக்கிற இந்த இடத்துக்குள்ளே இவ்வளவு பெரிய தோட்டத்தைக் கடந்து அரண்மனைக்குத் தேடிவந்து பிரஸ்ஸுக்குக் கஸ்டமர்ஸை எதிர்பார்க்க முடியாது மாமா. அப்படி நாம பிரஸ்ஸைத் தொடர்ந்து நடத்தறதா இருந்தா டவுனுக்குள்ளே ஷிப்ட் பண்ணிடனும். இல்லாட்டிக் கஷ்டம் மாமா.

“முதல்லே பிரஸ் இருக்கான்னு தெரிஞ்சுக்கப்பா! அப்புறம் மத்ததை யோசனை பண்ணுவோம்” என்றார் மாமா.

முதல் நான் இரவு தாமதமாகத் தூங்கச் சென்றதால் மறு நாள் காலை மாமாவும் தனசேகரனும் எழுந்திருப்பதற்கே விடிந்து எட்டரை மணிக்கு மேலாகி விட்டது. ஏழு மணிக்கே காரியஸ்தர் பெரியகருப்பன் சேர்வை வந்துவிட்டார். அவர்கள் இருவரும் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து எழுந்திருக்கிற வரை வேறு காரியத்தைக் கவனிக்கலாம் என்றால் அரண்மனை ஆபீஸிலும் இப்போது யாரும் வரவில்லை. எல்லா அறைகளிலும் மின்விசிறி இருந்தாலும் பல ஆண்டுகளுக்கு முன்பாக முதல் திவான் காலத்தில் பொருத்திய பழைய பங்கா ஒன்று இன்றும் அப்படியே தொங்கிக்கொண்டிருந்தது. மூன்று நான்கு தினங்களுக்குள் சமஸ்தானத்தின் ‘அஸட்ஸ் அண்ட் லயபிலிட்டீஸுக்கு’ ஒரு பட்டியல் தயாரித்தாக வேண்டும் என்று மேஜை மேல் ஒரு நோட் எழுதி வைத்தார் காரியஸ்தர். மறுபடி அவர் வசந்த மண்டபத்து விருந்தினர் மாளிகைக்குத் திரும்பி வந்தபோது மாமாவும் தனசேகரனும் தூக்கம் கலைந்து விழித்திருந்தார்கள். காபி குடித்துக் கொண்டிருந்த மாமா வெள்ளித் தம்ளரில் பாதிக் காப்பியைக் குடித்த பின் மீதிக் காபியோடு அப்படியே தம்ளரில் வைத்துவிட்டு, “ஏன் சேர்வைக்காரரே! பிரிண்டிங் பிரஸ் ஒண்ணு இருந்திச்சே, அது இருக்கா? இல்லே வித்தாச்சா?” என்று காரியஸ்தரை வினவினார்.

அத்தியாயம் - 5

“இருக்குங்க! ஆனால் பழைய மகாராஜா அந்த மெஷினரீஸ் மேல ஏதோ பேங்க் லோன் வாங்கியிருக்காருங்க. அதனாலே அந்த பிரமிஸ்ஸைப் பூட்டிப் பேங்க்காரங்க ஸீல் வச்சு அவங்களோட கஸ்டடியிலே எடுத்துக் கிட்டிருக்காங்க.”

“என்னென்ன மெஷினரீஸ் இருக்கு? டைப்ஸ் எவ்வளவு இருக்கு?”

“ஞாபகத்திலே இருந்து சொல்றேன். ஒரு ஹைடில்பர்க் ஆட்டோமாடிக் ஸிலிண்டர் - அதே ஹைடில்பர்க் கலர் பிரிண்டிங் மிஷன். ஒரு ஆட்டோமாட்டிக் கட்டிங் மிஷின், தமிழிலேயும், இங்கிலீஷ்லேயுமா, ஏராளமா டைப்ஸ் எல்லாம் இருக்கிறதா ஞாபகம்.”

“அப்போ ஒண்னு செய்யுங்க சேர்வைகாரரே! பிரஸ் பேரிலே பேங்க்லே லோன் வாங்கறப்ப மகாராஜா ‘ஸைன்’ பண்ணின பேப்பர் காப்பீஸ்லாம் அரண்மனை ஆபீஸ் ஃபைல்லே வச்சிருப்பீங்களே? அதையெல்லாம் தேடி எடுங்க. அப்புறம் மேலே என்ன செய்யறதுன்னு முடிவு பண்ணுவோம்.”

மாமா தங்கபாண்டியன் இவ்வாறு கூறியதுமே அந்த விருந்தினர் விடுதியிலிருந்த டெலிஃபோனிலேயே அரண்மனை அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு பிரஸ் சம்பந்தமான ஃபைல்களைத் தேடி எடுக்குமாறு அங்குள்ளவர்களைக் கேட்டுக் கொண்டார் காரியஸ்தர்.

உடனே அப்போதுதான் ஞாபகம் வந்தவரைப் போல் மாமா டெலிபோன்களைப் பற்றி விசாரித்தார். “சமஸ்தானச் செலவிலே மொத்தம் எத்தனை டெலிபோன் இருக்கு? எத்தனை எக்ஸ்டென்ஷன்ஸ் இருக்கு? அதிலே எதெது கண்டிப்பாக இருந்தாகணும்; ஏதெதை உடனே ரிமூவ் பண்ணச் சொல்லிடலாங்கிற அளவுக்கு அநாவசியம்?”

“கணக்கு எடுத்து இன்னிக்குச் சாயங்காலத்துக் குள்ளார உங்க கிட்ட ஒரு லிஸ்ட் போட்டுத் தந்துடறேன். எது அவசியம் இருக்கணும். ஏதெதை உடனே எடுத்துடலாம்கிறதை நீங்களும் சின்ன ராஜாவுமா முடிவு பண்ணிச் சொல்லிடுங்க” என்றார் பெரிய கருப்பன் சேர்வை.

“சமஸ்தானத்துக் கோவில்கள் நிலைமை என்ன? பசு மடம் எங்கெங்கே இருக்கு? தேவாரப் பாடசாலை, வேத பாடசாலை எல்லாம் எப்படி எப்படி இருக்கு? இந்த நாளிலே அதுக்கெல்லாம் படிக்கிறதுக்குப் பையன்கள் தேடி வராங்களா இல்லியா...?”

“அரசநாத மங்கலம் வேதபாடசாலையியே நாலே நாலு பையன்கள் மட்டும் படிக்கிறாங்க. குணவேதி நாடு சிவலாயத்தை ஒட்டி இருக்கிற தேவாரப் பாடசாலையிலே பன்னிரண்டு பிள்ளைகள் இருக்காங்க. அங்கே மூணு ஓதுவார் மூர்த்திகள் தேவாரம் சொல்லிக் கொடுக்கிறாங்க. வேத பாடசாலை, தேவார பாடசாலை எல்லாத்திலேயும் பையன்களுக்குச் சாப்பாடு போட்டு மாதம் எட்டு ரூபாய் ‘ஸ்டைபண்ட்’ வேறே கொடுத்திட்டிருந்தோம். ராஜ மான்யம் நின்ன வருஷமே பெரிய மகாராஜா என்னைக் கூப்பிட்டு, ‘இனிமே ‘ஸ்டைபண்ட்’ கிடையாதுன்னு ஸர்குலர் அனுப்பிடுங்க, சாப்பாடு மட்டும் போதும்’ னுட்டாரு.”

“பாடசாலைச் செலவு, கோவில்களோட வருமானத்திலே இருந்து செய்யறிங்களா... அல்லது சமஸ்தானத்திலே வேற வருமானத்திலே இருந்து செய்யறிங்களா?”

“அந்த ‘எக்ஸ்பெண்டிச்சர்’ எல்லாமே ‘டெம்பிள்ஸ் அண்ட் சாரிட்டீஸ்’ங்கிற ஹெட்லே தான் வரும். கோவில் வருமானங்களுக்குச் செலவு கணக்குக் காட்ட இப்படி ஏதாச்சும் ரெண்டு மூணு இருக்கட்டும்னுதான் மகாராஜா இதெல்லாம் மூடாமே விட்டு வச்சிருந்தாரு. எங்கிட்டவே ஒருவாட்டி அதை அவரே வாய்விட்டுச் சொல்லக் கூடச் சொல்லியிருந்தாரு” என்றார் பெரிய கருப்பன் சேர்வை.

அப்போது தனசேகரன் குறுக்கிட்டுக் கேட்டான். “நாலு பையன்களுக்கும் ஐந்தாறு பையன்களுக்குமா இவ்வளவு செலவழிச்சுப் பாடசாலைங்க எதுக்கு?”

“ஒரேயடியா அப்படிச் சொல்லிடப்படாது தம்பி. கல்சர். ரெலிஜன், டிரடிஷன் இதை எல்லாம் நாலு பேரா. அஞ்சு பேரான்னு எண்ணிக்கையை வச்சுப் பார்க்கக் கூடாது. எந்த எண்ணிக்கைக்கு குறைவாயிருந்தாலும் அந்த எண்ணிக்கையிலேயே வச்சு ‘அப்ஸ்ர்வ்’ பண்ணனும். அதுதான் முறை” என்று மாமா தனசேகரனுடைய அபிப்பிராயத்துக்குத் திருத்தம் கூறினார். அதில் மாமாவுக்கு இருந்த பிடிவாதத்தைப் பார்த்துத் தனசேகரனே ஆச்சரியப்பட்டுப் போனான்.

மாமாவிடம் பல நேர்மாறான குணங்கள் இணைத்திருந்தன. சிக்கன உணர்வும் இருந்தது. தாராள மனப்பான்மையும் இருந்தது. எதில் சிக்கனமாக இருக்கவேண்டும் எதில் சிக்கனமாக இருக்கக் கூடாது, எதில் தாராளமாக இருக்கவேண்டும், எதில் தாராளமாக இருக்கக்கூடாது என் பதில் எல்லாம் ஒரு தெளிவான தாரதம்மியமும், அபிப்பிராயமும் அவருக்கு இருந்தன. தனசேகரனுக்கு மாமா அருகில் இருந்தது பல பிரச்னைகளில் வழவழா என்று இழு படாமல் முடிவு செய்யப் பெரிதும் உதவியாக இருந்தது. அந்த அரண்மனை அதன் வரையறுக்கப்பட்ட பொறுப்புக்கள், வருமானங்கள், செலவுகள், சொத்துக்கள், பிரச்னைகள் எல்லாவற்றையும் பற்றி அதன் ஒரே வாரிசாகிய தனசேகரனுக்குத் தெரிந்திருந்த விவரங்களை விடத் தாய் மாமனாகிய தங்கபாண்டியனுக்கு அதிகம் தெரிந்திருந்தது.

அன்று பகல் சாப்பாடு முடிந்ததும் காரியஸ்தரையும் தனசேகரனையும் உடனழைத்துக் கொண்டு மகாராஜாவின் இளையராணிமார்கள் அடைந்து கிடந்த அந்தப்புரப் பகுதிக்குள் சென்றார் மாமா தங்கபாண்டியன்.

“சேர்வைகாரரே! எதுக்கும் நாம இந்தப் பொம்பளைங்களோட அறைக்குள்ளாரப் போக வேண்டாம். முன் ஹால்லேயே ஒரு பெரிய ஜமுக்காளத்தை கொண்டாந்து விரிச்சு அவங்களை எல்லாம் வந்து உட்காரச் சொல்லுங்க. அவங்க யோசனையை அவங்க சொல்லட்டும். நம்ம யோசனையை நாம சொல்லுவோம். வீண் சண்டை சச்சரவுக வந்து ஒருத் தருக்கொருத்தர் வார்த்தை தடிக்காமல் பார்த்துக்கணுக்கிறதுதான் இதிலே முக்கியம்” என்று அந்தப்புரத்திற்குள் நுழைகிற போதே சேர்வைகாரரிடம் எச்சரிக்கையாகச் சொல்லி வைத்தார் மாமா.

எந்த இடத்தில் நடந்து போய்க் கொண்டிருந்த போது மாமா இப்படிச் சொல்லியிருந்தாரோ அந்த இடத்திலேயே காரிஸ்தர் பெரியகருப்பன் சேர்வை உடனே தயங்கி நின்றார். பின்பு அக்கம்பக்கம் பார்த்துவிட்டுக் குரலைத் தனித்துக் கொண்டு “இவங்களிலே முக்கால் வாசிப்பேர் மகாராஜாவுக்குப் பொட்டுக்கட்டிக் கிட்டவங்கதான். மத்த ரெண்டொருத்தருக்குத்தான் அக்கம்பக்கத்து ஊர்லியும் உள்ளுர்லியும் உறவுக்காரங்க இருக்காங்க. பொட்டுக் கட்டிக்கிட்டவங்களைப் பொறுத்து ஒரு பிரச்னையும் இருக்காதுங்க. மத்தவங்கதான் நீங்க என்ன பேசி முடிவு பண்ணனும்னாலும் உறவுக்காரங்களையும் கூட வச்சுக்கிட்டுத்தான் அதெல்லாம் பேசி முடிவு பண்ணனும்னு முரண்டு பிடிப்பாங்க. அந்த ரெண்டொருத்தருகிட்டப் பேசி முடிவு பண்றதுதான் ரொம்பச் சிரமப்படும். மத்ததெல்லாம் சுலபமா முடிஞ்சு போயிடும். வீடு கட்டிக்கிறத்துக்கு ஒரு எடமும் கையிலே கொஞ்சம் ரொக்கமும் கொடுக்கறதாயிருந்தா இவங்களிலே பலர் திருப்தியா இங்கேருந்து வெளியேறிடுவாங்க.”

“சரி, கூப்பிடுங்க பார்க்கலாம்! அவங்ககிட்டவே பேசலாமே? இதுலெ ஒளிவு மறைவு என்ன வேண்டிக் கிடக்கு?” என்றார் மாமா. ஆனால் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையே அந்தப்புரத்திற்கு உள்ளே போகத், தயங்கினார்.

“முன்னாலே பெரிய ராஜா இருக்கிறப்பவே நான் இந்த இடத்து வரைகூட அவரோடவே ஏதாவது பேசிக்கிட்டுத்தான் வந்திருக்கிறேனே ஒழியத் தனியா வந்தது. இல்லே.”

“அதுனாலே என்ன? வேலைக்காரிங்க யாராச்சும். இருந்தாங்கன்னாக் கூப்பிடுங்களேன். அவங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லி அனுப்பலாம்.”

பீமநாதபுரம் அரண்மனையின் அந்தப்புரம் அந்த வேளையில் கண்ணுக்கெட்டிய தூரம் ஆளரவமற்று வெறிச்சோடிக் கிடந்தது. ஒரு பெரிய பனைமரத்தைக் கொண்டு வந்து அப்படியே உள்ளே நிறுத்தினால் கூடத் தாங்கும்போல அவ்வளவு உயரமான அந்தக் கட்டிடத்தில் ஆதாகாரமான காரைத் தூண்கள் தனித்தனியே நின்று கொண்டிருந்தன. மேல் விதானத்தில் சில இடங்களிலே வௌவால்கள் சிரசாசனம் செய்து கொண்டிருந்தன். வெள்ளையடிக்கவோ, காவி பூசவோ, வர்ணம் பூசவோ. காரை உப்புப் படிந்த இடங்களைச் செப்பனிடவோ வசதி இல்லாததால் கட்டிடத்தின் பழைமையும் பழுதுபட்ட நிலைமையும் முதற் பார்வையிலேயே விட்டுத் தெரியும்படி தான் இருந்தன. வெளவால் புழுக்கை நாற்றம் வேண்டிய மட்டும் இருந்தது. காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை அந்தப்புரம் இருந்த பக்கமாக இன்னும் சில கெஜ தூரம் துணிந்து முன்னேறி நடந்து சென்று, “யாரங்கே...?” என்று குரல் கொடுத்தபடி இரு கைகளையும் இணைத்து நன்றாக ஓசை எழும்படி பலமாகத் தட்டினார். இரண்டு மூன்று முறை அப்படிக் கை தட்டிக் கூப்பிட்ட பின் தலை, பாதி நரையும் பாதி கருமையுமாக இருந்த ஒரு வேலைக்காரி மெல்ல எட்டிப் பார்த்தாள். அவளை ஜாடை செய்து அருகே கூப்பிட்டார் பெரிய கருப்பன் சேர்வை. அவள் அருகே வந்தாள். காரியஸ்தர் ஏதோ சொல்வதற்கு முயன்றார். அந்த வேலைக்காரி டமாரச் செவிடு என்பது புரிந்தது. குரலை மேலும் பெரிதாக்கிக் கொண்டு சொல்லிப் பார்த்தார் சேர்வைகாரர். அவர் என்ன சொல்கிறார் என்பதை அந்தக் கிழவி புரிந்து கொள்ளவில்லை. பெரிய கருப்பன் சேர்வை தொண்டைத் தண்ணீர் வற்றியது தான் மீதம்.

“சும்மா நீங்களே உள்ளே போய்ச் சொல்லுங்க... இதென்ன அல்லி ராஜ்யமா? ஆம்பளைங்க நுழையக் கூடாதுங்கிறதுக்கு! இந்த வேலைக்காரக் கிழவியோட நீங்களே உள்ளாரப் போங்க சொல்றேன்” என்றார் மாமா.

“உங்களுக்குப் போறத்துக்குத் தயக்கமா இருந்தா நானும் வேணும்னாக்கூட வரேன், சேர்வைகாரரே...” என்று சேர்ந்து கொண்ட தனசேகரனை, “நீ போக வேண் டாம் தம்பி... நீ உள்ளே போயிட்டேன்னா சின்னராஜா வந்தாச்சு. இங்கேயே விஷயத்தைப் பேசிடலாமேன்னு அங்கே வச்சே அவங்க பிரச்னையை எல்லாம் ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சிடுவாங்க” என்று மாமா குறுக்கிட்டுத், தனசேகரனைத் தடுத்தார்.

“அவரு சொல்றதுதான் சரி. நீங்க வரவேண்டாம். நானே போயிட்டு வாரேன்” என்று காரியஸ்தரும் மாமா கூறியதை ஆமோதித்தார். வந்த வேலைக்காரியையும் உடனழைத்துக் கொண்டு அரண்மனைக்குள் முன்னேறினார் அவர். மாமாவும் தனசேகரனும் முன் கூடத்திலேயே நின்று கொண்டார்கள்.

“சேர்வைக்காரர் வக்கீலுக்குப் படிச்சிருக்காரே தவிர வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா நடந்துக்க மாட்டேங்கறாரே? ரொம்பத்தான் தாட்சண்யப்பட்டுக்கிறாரு. நிர்வாகத்திலே இருக்கிறவங்க இவ்வளவு தூரம் தாட்சண்யப்பட்டா எந்த நல்ல மாறுதலையும் வேகமா நினைச்சபடி பண்ணிட முடியாது தம்பி” என்று மாமா தங்க பாண்டியன் தனசேகரனிடம் வருத்தப்பட்டுக் கொண்டார்.

“அதில்லே மாமா! பொதுவிலே இங்கேயே காரியஸ்தரா இருந்து எல்லாரிட்டவும் சுமுகமாப் பழகியிருக்காரு. திடீர்னு முகத்தை முறிச்சுக்கத் தயங்கறாரு, அவ்வளவு தான்.”

இங்கே அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே அந்தப்புரத்தின் டமாரச் செவிடான வேலைக்காரியோடு உள்ளே போயிருந்த காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை மட்டும் தனியே திரும்பி வந்தார். மாமா வினவினார்:

“ஏன்? என்ன சொல்றாங்க அவங்க இங்கே வரமாட்டாங்களாமா?”

“வரமாட்டோம்னு நேரடியாச் சொல்லலே. அந்த மூணுமாவடி இளையராணிதான் தைரியமா வந்து எதிர்த்துக் கேட்டாங்க. தனசேகரனுக்கு நாங்க அந்நியமானவங்களா என்ன? அவனுக்கு நாங்கள்ளாம் சித்தி முறை தானே வேணும்? அவனே இங்கே வந்து எங்ககிட்டப் பேசப் பிடாதா? வரச் சொல்லுங்களேன்னு அவங்க சொல்றாங்க.”

“அதுக்கு நீங்க என்ன பதில் சொன்னீங்க சேர்வைகாரரே?”

“நான் என்ன பதில் சொல்ல முடியும்? நீங்க சொன்னதை அவங்க கிட்டக் கட்டாயம் சொல்றேன்னு சொல்லி விட்டு வந்தேன்.”

“அப்போ நாம் இங்கே காத்துக்கிட்டிருக்கிறதிலே அர்த்தமில்லேன்னு சொல்லுங்க. அவங்க யாரும் இங்கே வரமாட்டாங்கன்னு தெரியுது.”

“நான் வேணா உள்ளே போயி நறுக்குன்னு சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டும் வந்துடட்டுமா மாமா? என்ன சொல்றீங்க?” என்று தனசேகரன் தங்கபாண்டியனைக் கேட்டான். தங்கபாண்டியன் ‘வேண்டாம்’ என்பது போல் தலையை ஆட்டினார். மாமா தங்கபாண்டியனின் முகத்தில் மலர்ச்சி மறைந்து கடுமை படர்ந்தது. அவர் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையை நோக்கி, “இந்தப் பொம்பிளைங்கள்ளாம் இங்கே அரண்மனைக்கு வந்த தேதி, ராஜாவோட அவங்களுக்குத் தொடுப்பு சம்பந்தப்பட்ட வருஷம் இதெல்லாம் பற்றி ‘ஆபீஸ் ரெக் கார்டிலே’ ஏதாச்சும் விவரம் இருக்குமா? தெளிவாகச் சொல்லுங்க” என்று கேட்டார்.

“அதெல்லாம் எதுவும் கிடையாதுங்க. இந்த மாதிரி, வைப்பு விவகாரங்களுக்கும் அரண்மனை ஆபீஸுக்கும் சம்பந்தமே கிடையாது. அது ராஜாவோட சொந்த விவகாரம்னு விட்டுடறதுதான் வழக்கம். அந்தப்புரத்திலே எத்தினிப் பேர் இருக்காங்கங்கிற எண்ணிக்கையே அதிகாரபூர்வமா எங்களுக்குத் தெரியாது. நாங்களாத் தனிப்பட்ட முறையிலே தெரிஞ்சுகிட்ட எண்ணிக்கையைத்தான் நீங்க விசாரிச்சபோதுகூட நான் சொன்னேன்.”

“செத்துப் போனதுதான் போனாரு. இத்தினி தலை வேதனையையுமா வெச்சுப்போட்டுப் போகனும்?”

“இது ஒரு ‘டெலிகேட்’ ப்ராப்ளம். கொஞ்சம் நிதானமாப் பார்த்துத்தான் இதை முடிவு பண்ணனும். மத்ததை முதல்லே கவனிக்கலாம்” என்று சேர்வைகாரர் சொன்ன போது,

“நீங்க சொல்றதும் ஒரு விதத்திலே சரிதான். ஆனால் சத்திரம் மாதிரி நாற்பது அம்பது பேருக்கு எத்தினி நாள் சாப்பாடு போட்டுக்கிட்டிருக்க முடியும்? எவிக்ஷன் நோட்டீஸ் குடுத்தாவது காலி பண்ணாட்டித் தனசேகரன் மாசா மாசம் ஐயாயிரம், பத்தாயிரம்னு எங்கேயாவது கடன் வாங்கித்தான் இனிமே இந்த அரண்மனையைக் காப்பாத்த முடியும். இல்லாட்டித் திருவோட்டை ஏந்திக் கிட்டுப் பிச்சை எடுக்கப் போக வேண்டியதுதான்” என்று மாமா தமது அபிப்பிராயத்தைக் காரியஸ்தரிடம் தெரிவித்தார்.

இளைஞன் தனசேகரனுக்குக் காலஞ்சென்ற தன் தந்தை மேல் கோபம் கோபமாக வந்தது. ‘இவ்வளவு பிரச்னைகளையும், கடன்களையும் சுமைகளையும் வைத்ததோடல்லாமல் தன்னைத் தொல்லைகளிலும் சிக்க வைத்து விட்டுப் போய்விட்டாரே’ என்ற நினைப்பு மனத்தில் உறுத்தியது. தான் கடைசி நாட்களில் அவரை விட்டுப் பிரிந்து அக்கறைச் சீமையில் இருந்துவிட்டு வந்திருந்தாலும் அவர் சேர்த்து வைத்திருந்த பாவமூட்டைகளும், கடன் சுமைகளும், பிரச்னைத் தொல்லைகளும் விலாசம் தவறாமல் தன்னையே வந்தடைந்திருப்பதை அவன் கண்டான்.

புறப்படும் போது எவ்வளவு வேகமாக அவர்கள் மூவரும் அந்தப்புரத்திற்குள் புறப்பட்டு வந்திருந்தார்களோ அவ்வளவு வேகமாக எதையுமே அங்கே சாதிக்க முடியாமல் ஏமாற்றத்தோடுதான் திரும்பினார்கள்.

“நவீன முறைகள், நவீன சிந்தனைகள் எதனாலும் இந்த அரண்மனையிலுள்ள பழைய பிரச்னைகளை வேகமாகவும் துணிந்தும் தீர்த்துவிடமுடியும் என்று என்னால் நம்ப முடியவில்லை மாமா” என்றான். தனசேகரன்.

“ஓடவும் முடியாமே நிற்கவும் இடமில்லாமே இரண்டுங் கெட்டானாக வச்சிருக்காங்க எல்லாத்தையும். நம்ம வேகத்துக்கு இங்கேயிருக்கிற ஆளுங்களோ பிரச்னைகளோ ஒத்துவர மாதிரித் தெரியலே தனசேகரன்?” என்று மாமாவும் அதை ஆமோதித்தபோது காரியஸ்தர் குறுக்கிட்டு, “பல நூற்றாண்டு விஷயங்களைச் சில நிமிஷங்கள்ளே ‘வைண்ட்-அப்’ பண்றதுன்னாக் கஷ்டம்தான்” என்றார். அதன்பின் இரண்டு மூன்று வாரங்கள் பீமநாதபுரத்தில் நிமிஷமாக ஓடிப்போய் விட்டன.

அதற்கப்புறம் ஒரு வார காலம் சமஸ்தானத்துக்கு உட்பட்ட கோவில்கள், சொத்துக்கள், தேவாரப் பாடசாலைகள், கல்வி நிலையங்கள், நிலங்கள், தோட்டங்கள் இருந்த கிராமங்களுக்கு அவர்கள் ஒரு ஜீப்பில் பிரயாணம் செய்தார்கள். காரியஸ்தர், இளையராஜா தனசேகரன், மாமா தங்க பாண்டியன் மூவரும் அந்தப் பிரயாணத்தை மேற்கொண்ட போது மேலும் பல புது விஷயங்கள் தெரிய வந்தன. அதனால் குழப்பங்கள் அதிகமாயினவே ஒழியக் குறைய வில்லை.

பழைய பீமநாதபுரம் சமஸ்தானத்துக்குள் முன்பு அடங்கியிருந்த பரிமேய்ந்த நல்லூர் என்ற கிராமத்தில் போய் அவர்கள் தங்கி இருந்தபோது சில புது விவரங்கள் தெரிய வந்து அவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தின. புராணச் சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் மிகுந்த அந்த ஊரில் சமஸ்தானத்துக்குச் சொந்தமான ஒரு பெரிய பாடல் பெற்ற கோவில் இருந்தது. தேவதாசிகள் அந்தக் கோவிலில் சதிர் ஆடுவதற்கு என்று மூன்று தலைமுறைக்கு முன்பு நியமிக்கப்பட்டு சமஸ்தான மானியங்களும் கோவில் ஸ்தானிகமும், மரியாதைகளும் வழங்கப்பட்டிருந்தன. சமஸ்தான ஆளுகைக்குட்பட்ட தேவதாசிகளில் மிகவும் அழகும் கலைத்திறனும், நளினமும் உள்ளவர்கள் இந்தப் பரிமேய்ந்த நல்லூர்ப் பெண்கள்தான் என்று பல சமயங்களில் பலர் கூறிக்கொள்ளக் கேட்டிருக்கிறான் தனசேகரன். மாணிக்கவாசக சுவாமிகள் அமைச்சராக இருந்து பாண்டிய மன்னனுக்குக் குதிரைகள் வாங்குவதாகச் சொல்லி அந்தப் பொருளை ஆலயப் பணிக்குச் செலவழித்துவிட்டு அகப் பட்டுக்கொண்ட போது இறைவன் அருளால் குதிரைகள் கூட்டம் கூட்டமாக வந்தபோது தெய்வீகத் திருவுடைய குதிரைப் பாகர்களும் இறைவனும் முதன் முதலில் குதிரைகளை மேயவிட்ட இடம் இதுதான் என்று ஓர் ஐதீகம் இருந்தது. அந்த ஐதீகத்தின்படிதான் ‘பரிமேய்ந்த நல்லூர்’ என்னும் பெயரே அந்த ஊருக்கு ஏற்பட்டிருந்தது. ஆறு கால பூஜையும் ஆண்டிற்கு மூன்று பிரம்மோற்சவங்களும் உள்ள சிறந்த திருத்தலமாக அது விளங்கி வந்தது. சமஸ்தான அந்தஸ்து, ராஜமான்யம் எல்லாம் போன பின்னரும் கூடக் கோவில்களும், தர்ம ஸ்தாபனங்களும், அரச குடும்பத்தின் பொறுப்பிலும் பராமரிப்பிலுமே தொடர்ந்து இருந்தன. கோவிலுக்கு உண்டியல்கள் மூலமும் காணிக்கைகள், பிரார்த்தனைகள் நேர்த்திக் கடன்கள் மூலமும் நிறைய வருமானம் இருந்தது. நிலங்கரைகள், நகைகள், எல்லாம் ஏராளமாக இருந்தன. ஆண்டின் எல்லா மாதங்களிலுமே தரிசனம் செய்வதற்கு நிறையப் பெருமக்கள் அங்கே வந்து போய்க் கொண்டிருந்தனர். பரிமேய்ந்த நல்லூர் பீமநாத புரம் சமஸ்தானத்தின் இரண்டாவது பெரிய ஊராகியிருந்ததன் காரணமாக அங்கே பழைய நாளிலிருந்தே சின்ன அரண்மனை போல ஒரு நவீன வசதிகள் உள்ள விருந்தினர் விடுதி இருந்தது.

பரிமேய்ந்த நல்லூருக்கு வந்ததும் மாமாவும் தனசேகரனும், காரியஸ்தரும் ஆலயத்துக்குப் போய் சுவாமி தரிசனமும் அர்ச்சனையும் செய்தார்கள். சமஸ்தானத்தின் கீழ் நியமிக்கப்பட்டிருந்த ஆலய நிர்வாக அதிகாரி காரியஸ்தர் பெரியகருப்பன் சேர்வையிடம் தனியாகச் சில நிமிஷங்கள் பேச வேண்டும் என்று வந்ததிலிருந்து பறந்து கொண்டிருந்தார்.

“தனியா எங்கிட்ட மட்டும் என்ன ஐயா பேசக் கிடக்கு? எல்லாருக்கும் முன்னாடியே அதைப் பேசலாமே? கோவில் வரவு - செலவு விஷயத்திலே இரகசியம் என்ன ஐயா வேண்டிக் கெடக்கு?” என்று நிர்வாகியை இரைந்தார் காரியஸ்தர்.

“இல்லீங்க, நீங்க தயவு செய்து என்னை மன்னிக்கணும்... இது பெரிய ராஜா சம்பந்தப்பட்ட விஷயம். உங்க கிட்டச் சொல்லலேன்னா இப்போ நான் தலை தப்ப முடியாது. உடனே சொல்லியாகணும். நான் குழந்தை குட்டிக்காரன். என்னை நீங்கதான் காப்பாத்தணும்...”

முதலில் காரியஸ்தருக்குக் கோபம் வந்தது.

ஆனால் அந்த நிர்வாகி திரும்பத் திரும்பப் புலம்பியதைக் கேட்டதும் காரியஸ்தருக்கு மனத்தில் ஏதோ சந்தேகம் தட்டியது. இது ஏதோ பெரிய விவகாரமாயிருக்க வேண்டும் என்று பட்டது. சமஸ்தானத்து உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சம்பள விஷயத்தில் கூடக் கடைசிக் காலத்தில் பெரிய மகாராஜா அற்பத்தனமாக நடந்து கொண்டது நினைவு வந்தது. அதைப் போலவே இந்தக் கோவில் விஷயத்தில் இங்கும் ஏதோ குழப்பம் நடந்திருக்கிறது என்று தெரிந்தது.

“சரி! அப்போ மதியம் தனியாப் பேசலாம். பகல் சாப்பாடு முடிஞ்சதும் இளையராஜாவும், மாமாவும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குவாங்க, அந்த நேரத்திலே நாம் பேசலாம். நீங்க என்னைத் தேடிவர வேண்டாம். நானே தேவஸ்தான ஆபீஸுக்கு வரேன்! நீங்க. அங்கே இருங்க போதும்” என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரியிடம் கூறினார் காரியஸ்தர். நிர்வாக அதிகாரி இதற்கப்புறம்தான் நிம்மதி அடைந்தார்.

அன்றைக்குப் பகல் உணவு முடிந்ததும் காரியஸ்தர் எதிர்பார்த்தபடியே தனசேகரனும் மாமா தங்கபாண்டியனும் சிறிது நேரம் ஒய்வு எடுத்துக் கொள்ளப் போய்விட் டார்கள். காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை தேவஸ்தான அலுவலகத்துக்குப் போய் நிர்வாக அதிகாரியைச் சந்தித்தார். காரியஸ்தர் வந்ததும் நிர்வாக அதிகாரி முதல் வேலையாகத் தமது அறைக் கதவை அடைத்து உட்புறமாகத் தாழிட்டார். அந்த விஷயத்தில் நிர்வாகஸ்தர் ஏன் அவ்வளவு பதறுகிறார் என்பது காரியஸ்தருக்கு வியப்பாக இருந்தது. ஆனாலும் தம்முடைய வியப்பை அடக்கிக் கொண்டு பொறுமையாகக் காத்திருந்தார் அவர். நிர்வாக அதிகாரி விவரங்களைக் கூறத் தொடங்கினார். நிர்வாக அதிகாரி கூறியதிலிருந்து மகாராஜாவே ஏராளமான தங்க நகைகளைக் கோவிலிலிருந்து எடுத்து விற்றுவிட்டுப் பதிலுக்குக் ‘கில்ட்’ நகைகளை வைத்திருப்பது தெரிய வந்தது. மகாராஜா அப்படிச் செய்திருக்கக் கூடும் என்பது பெரிய கருப்பன் சேர்வைக்குத் தெரிந்துதான் இருந்தது.

அத்தியாயம் - 6

மாமாவும் தனசேகரனும் ‘ஸ்டாக் டேக்கிங்’கோ ‘ஆடிட்டோ’ செய்யவில்லை என்றாலும் அதை விடக் கடுமையாக எல்லாவற்றையும் பரிசோதனை செய்து விட்டார்கள். காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை, இந்தப் பரிமேய்ந்த நல்லூர்த் தேவஸ்தான விஷயமாய்ப் பெரியராஜா எல்லாமே கவனிச்சதாலே இங்கே இந்தப் ஃபைல்களிலே எதையும் அவர் அரண்மனை ஆபீஸுக்கு அனுப்பிச்சதில்லே. அதுனாலே இங்கே என்ன என்ன சரியா இருக்கு. என்னென்ன தப்பா இருக்குங்கறதைக் கூட எங்களாலே பிரிச்சுக் கண்டு பிடிக்க முடியாது என்று முதலிலேயே அந்தத் தேவஸ்தானக் கணக்குகளிலிருந்து தம்மை விலக்கிக் கொண்டு விட்டார். அவர் சொல்லியது நியாயமாகப் படவே அவரிடமிருந்து மேற்கொண்டு எதுவும் விசாரிக்க வழி இல்லாமல் போய்விட்டது. தனசேகரன் அலுத்துக் கொண்டான்.

“பாழாய்ப் போன சமஸ்தானமும் சொத்துக்களும் எக்கேடும் கெட்டுப் போகட்டும்னு பேசாமே இப்படியே விட்டுட்டுப் போயிடறதுதான் நிம்மதியா இருக்கும் போல இருக்கு மாமா! ஒரே தலைவேதனையாப் போச்சு. எங்கே போனாலும் ஊழலா இருக்கு. கணக்கு வழக்கு சரியா இல்லே. எதிலேயும் தலையும் புரியலே. வாலும் புரியலே.”

“அதுக்குள்ளாரப் பதறாதே! அப்படித்தான் இருக்கும். போகப் போக எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா ஒழுங்கு படுத்திடலாம்” என்றார் மாமா.

தனசேகரனுக்குக் காலஞ்சென்ற தன் தந்தையைப் பற்றி நினைக்கும் போதே அருவருப்பாகவும் தலைகுனிவாகவும் இருந்தது. பள்ளிக்கூடம் தொடங்கிக் கோயில் சொத்து வரை எல்லாவற்றிலும் கையாடல் செய்து செலவழிக்கும் அளவுக்குத் தந்தை ஊதாரியாக இருந்திருக்கிறார் என்பதை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. குடும்பப் பெருமை, எல்லாவற்றையும் முட்டை கட்டி வைத்து விட்டுத் தன் தந்தையின் ஊழல்களைப் பற்றித் தானே பட்டியல் போட்டுக் கணக்கு எடுத்துத் துண்டுப் பிரசுரம் அச்சிட்டு வெளியிட்டு விடலாம் போல அவ்வளவு ஆத்திரம் ஆத்திரமாக இருந்தது. தனசேகரனுக்கு வந்த கோபத்தில் என்னென்னவோ செய்யத் தோன்றியது. மாமா அருகிலிருந்து சமாதானப் படுத்தியிருக்கா விட்டால் அவன் எப்பொழுதோ பொறுமையிழந்து போயிருப்பான். மறுநாள் கோவில் நிலத்தைக் கவனித்து வந்த குத்தகைதாரர்களைக் கூப்பிட்டுப் பேசியபோதும் அவர்களில் பலரிடம் காலஞ்சென்ற மகாராஜா ரசீதுகளே கொடுக்காமல் தனித் தனியாகப் பெருந்தொகை ரொக்கமாகப் பணம் வாங்கியிருப்பது தெரியவந்தது. சிலரிடம் நிறையப் பணம் வாங்கிக் கொண்டு பெறுமானத்தை விடக் குறைந்த தொகைக்கு நிலங்களைக் குத்தகை பேசி விட்டிருந்தார். தனசேகரன் இந்த ஊழல்களையெல்லாம் பார்த்துக் குழம்பினாலும் மாமா பொறுமையாகவும் நிதானமாகவும் ஒவ்வொன்றையும் எப்படிச் சரிப்படுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

கோவில் நிலக் குத்தகைதாரர்களைச் சந்தித்துப் பேசி முடித்ததும் பரிமேய்ந்த நல்லூர்த் தேவஸ்தானத்து நகைகளைப் பழைய நிலையில் உருவாக்கி வைப்பதாக மாமாவும், தனசேகரனும், குருக்களுக்கும், தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கும் வாக்குறுதி அளித்தார்கள். அடுத்து ஆவிதானிப்பட்டி என்ற ஊருக்கு அவர்கள் சென்றார்கள். அந்த ஆவிதானிப்பட்டி சமஸ்தானத்தின் பழம் புலவர்கள் நிறைந்திருந்த ஊர். பழைய ராஜாக்கள் நாளிலேயே அந்த ஊருக்கு ‘இண்டலெக்சுவல் டவுன் ஆஃப் தி ஸ்டேட்’ என்று ஒரு பேரே உண்டு. அந்த ஊரில் ஒரு புராதனமான மாரியம்மன் கோயிலும், ஒரு பெரிய வாசகசாலையும், அந்த வாசகசாலையின் மற்றோர் அங்கமாகிய ‘மானுஸ் கிரிப்ட்ஸ் லைப்ரர்’ எனப்படும் ஏட்டுச் சுவடிகள் நூல் நிலைய நிர்வாகமும், மாரியம்மன் கோவில் நிர்வாகமும் கூட ஓரளவு ஊழல் மயமாக ஆக்கப்பட்டிருக்கும் போலத் தெரிந்தது. இந்த ஆவிதானிப்பட்டியில் அரண்மனைக்குச் சொந்தமான விருந்தினர் விடுதி எதுவும் இல்லையாகையால் பி.டபிள்யூ.டி, இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் மாமாவும். தனசேகரனும் தங்கிக் கொண்டார்கள். பெரிய கருப்பன் சேர்வை யாரோ உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டார். புலவர்கள் பரம்பரையில் சமஸ்தான மானியத்தை அனுபவித்துக் கொண்டிருந்த சிலரும் அப்போது அந்த ஊரில் இருந்தார்கள். இந்த ஊரில் உள்ள பிரபந்தங்களையும், பழைய ஏட்டுச் சுவடிகளையும் சமஸ்தான செலவில் அச்சிட்டு நூலாக வெளியிட வேண்டும் என்று தனசேகரன் ஆசைப்பட்டதுண்டு. அரண்மனை உட் கோட்டையிலுள்ள அச்சகத்தையும் இதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று தனசேகரன் முன்பு விரும்பியிருந்தான். ஆனால் காலஞ்சென்ற மகாராஜாவும் அவன் தத்தையு மான பீமநாத ராஜசேகர பூபதியுடன் அவனுக்கு ஒத்து வராததால் அவன் ஆசைப்பட்டபடி அப்போது எதையும் செய்ய முடியவில்லை. இதனால் தனசேகரன் இப்போது ஆவிதானிப்பட்டிக்கு வரும்போது சிறப்பான அக்கறையும் மகிழ்ச்சியும் கொண்டு வந்திருந்தான். சமஸ்தானத்துக்குப் பெருமை தேடித் தரக்கூடிய தமிழ்க் கவிதைகளும் பிரபந் தங்களும், காவியங்களும், உருவாகிய ஊர் என்ற பெருமிதத்தோடுதான் அவன் அந்த ஊருக்குள் நுழைந்திருந்தான். மாமா தங்கபாண்டியனுக்கு இவற்றுள் எல்லாம் பெரிய ஈடுபாடு எதுவும் கிடையாது. தொழில்கள், லாபங்கள் வர்த்தக பேரங்களை வெற்றிகரமாக நடத்துவதில் மட்டுமே அவர் நிபுணர். இலக்கியம், கலைகள், பொழுது போக்கு அம்சங்களில் பிரமாதமான ஈடுபாடும் அவருக்குக் கிடையாது, எதிர்ப்பும் கிடையாது.

இந்த ஆவிதானிப்பட்டியில் சமஸ்தானமாக இருந்த காலத்துப் புலவர்கள் சிலர் இன்னும் உயிரோடு இருந்தார்கள். அவர்களில் சமஸ்தானத்து மானியமாக நிலம் பெற்றவர்களும் இருந்தார்கள். சிலேடை பாடுவதில் வல்லவராகிய சிலேடைப் புலி சின்னச்சாமிப் பாவலர் என்ற ஒருவர் ஆவிதானிப்பட்டியில் தோன்றித் தமிழ்நாடு முழுவதும் பெயர் சொல்லிய அளவில் தெரியும்படி புகழ் பெற்றிருந்தார். அவருடைய சிலேடை வெண்பாக்கள் புத்தகங்களாக வந்து சிறப்புப் பெற்றிருந்தன. மாம்பழத்துக்கும், மங்கைப் பருவத்துப் பெண்ணுக்கும் சிலேடை, வெண்ணெய்க்கும் மகாவிஷ்ணுவுக்கும் சிலேடை என்று விதவிதமாகப் பாடித் தள்ளியிருந்தார் சிலேடைப் புலி சின்னசாமிப் பாவலர்.

சமஸ்தானத்து நவராத்திரி விழாவும் அதில் வித்வத் சதஸ் என்ற புலவர்களைச் சன்மானம் அளித்துக் கெளரவித்தல் போன்ற வழக்கமும் நின்று போனபின் மேற்படி புலவர்களில் பலர் ஆவிதானிப்பட்டியிலிருந்து பீமநாதபுரத்துக்கு வந்து போவது கூட நின்று போயிருந்தது. வித்வத் சதஸ் செலவுகள் என்று கணக்கு எழுதி விட்டுப் பின்னாளில் தன் தந்தை மனம் போன படி அந்தத் தொகையை வேறு காரியங்களுக்குச் செலவிடத் தொடங்கியது, தனசேகரனுக்கே தெரியும். சொத்து சுகம் ராஜமான்யம் எல்லாம் போய் விட்டாலும் பீமநாதபுரம் கலாசாரத்தையும் வரலாற்று இலக்கியப் பெருமைகளையும் கட்டிக்காத்து நற்பெயர் வாங்கவேண்டும் என்ற ஆசை தனசேகரனுக்கு இன்னும் இருந்தது.

மாமா தங்கபாண்டியனுக்கோ மருமகனைச் சமஸ்தான விவகாரங்களிலிருந்து கட்டிக்காத்து நீலகிரியிலோ ஏற்க்காட்டிலோ ஏதாவது எஸ்டேட் வாங்கி விடச் செய்தால்தான் எதிர்கால நலனுக்கு உகந்தது என்ற எண்ணம் இருந்தது. அவர்கள் இருவரும் ஆவிதானிப்பட்டியில் வந்து தங்கிய தினத்தன்று இரவில் துரங்கப் போகுமுன் இதுபற்றி இருவருக்கும் ஒரு சர்ச்சையேகூட ஏற்பட்டுவிட்டது. ஆனால் சர்ச்சை சண்டையாக மாறிவிடவில்லை.

“இந்தாப்பா தனசேகரன்! இந்த இலக்கியம், கவிதை புஸ்தகம் அச்சுப்போடறது இதெல்லாம் எதுவும் நடை முறையிலே லாபம் தர்ற காரியமில்லே. இந்த ஆவிதானிப்பட்டிப் புலவனுக பாடினதை எல்லாம் அச்சுப்போட்டு முடிக்கிறதுன்னா இப்போ விற்கிற பேப்பர் விலை மை விலையிலே இது மாதிரி ரெண்டு சமஸ்தானத்துச் சொத்தை வித்தாக் கூடப் போதாது” என்று அவனைக் கேலி செய்தார் மாமா.

இப்படியே கேலியாக ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்துவிட்டு மாமா சிறிது நேரத்தில் உறங்கப்போய் விட்டார். தனசேகரனுக்கு உறக்கம் வரவில்லை. படிப்பதற்கு ஏதாவது புத்தகம் கிடைத்தால் சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்து விட்டுத் தூங்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது. தங்கியிருந்த இடத்தில் ஒரு ஜன்னலோரமாகச் சில பழைய வாரப் பத்திரிகைகளும் அவற்றின் சிறப்பு மலர்களும் கிடந்தன. அவற்றில் தூசி படிந்திருந்தது. அவற்றில் ஒன்றை எடுத்துத் தூசியைத் தட்டிப் படிக்கத் தொடங்கினான் தனசேகரன். அந்தப் பத்திரிகையில் வெளிவந்திருந்த ஒரு சிறுகதை அவனை வியப்பில் ஆழ்த்தியதோடு மட்டுகின்றி வெகுவாக அவனுடைய கவனத்தையும் உடனே கவர்ந்தது. தன்னுடைய சமஸ்தானத்தையும் குடும்பத்தையுமே கூர்ந்து கவனித்து யாரோ அதை எழுதியிருப்பதுபோல் அவனுக்குப்பட்டது. கதையின் தலைப்பே அவன் கவனத்தை உடனே கவர்ந்து இழுப்பதாக அமைந்திருந்தது.

“ஒர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது!”

“இளைய ராஜாவை மெட்ராஸ்லேருந்து யாரோ பார்க்கணும்னு வந்திருக்காங்க” என்ற குரலைக் கேட்டு ஆத்திரத்தோடு தலைநிமிர்ந்து திரும்பிய ரகுநாதபாண்டிய ராஜபூபதி என்ற ஆர்.பி. பூபதி,

“இந்தா. மருதமுத்து உனக்கு எத்தினிவாட்டி சொல்லியிருக்கேன்? இளையராஜா அந்த ராஜா இந்த ராஜா எல்லாம் கூடாது. சும்மா ‘ஐயா’ன்னு கூப்பிட்டாப் போதும்னு” என்று வேலைக்காரனைக் கண்டித்து இரைந்தான்.

அப்படி இரைந்தபோது அவனுடைய முகத்தில் கடுங் கோபம் தெரிந்தது. வேலைக்காரன் மருதமுத்து ‘விலிட்டிங் கார்டு’ ஒன்றைப் பூபதியிடம் நீட்டிக் கொண்டே கூறினான்:

“நீங்க வேண்டாம்னாலும் வளமுறையை எப்பிடி விட்டுட முடியும் இளையராஜா?”

“பார்த்தியா, பார்த்தியா? மறுபடியும் இளையராஜா தானா? அதானே வேணாம்னு இவ்வளவு நேரமாத் தொண்டைத் தண்ணி வத்தினேன்? ஆயிரத்தித் தொளாயிரத்தி எழுபத்து மூணாம் வருஷத்திலே... போயி... இதெல்லாம் என்ன பைத்தியக்காரத்தனம்? நம்மை நாமே ஏமாத்திக்கலாம்னா இப்பிடி எல்லாம் ராஜா சக்ரவர்த்தி அது இதுன்னு பொய்யாக் கூப்பிட்டுச் சந்தோஷப் பட்டுக்கலாம்.”

“அப்பிடியில்லீங்க!... வந்து...?”

“வந்தாவது, போயாவது இங்கே, இந்த அரண்மனைக் கோட்டை மதில் சுவருங்க இருக்கே. இதை வெளி உலகமே நம்ம கண்ணுக்குத் தெரியாதபடி அந்தக் காலத்திலே ரொம்ப உயரமாத் தூக்கிக் கட்டிப்பிட்டாங்க, அதான் உங்களுக்கெல்லாம் வெளி உலகமே தெரியலே. காலம் வேகமா ஓடிக்கிட்டுருக்குங்கறதும் தெரியலே. நீங்கள்ளாம் இன்னும் நூறு வருசத்துக்குப் பின்னாடி கடந்த காலத்திலேயே வாழ்ந்துக்கிட்டு இருக்கீங்க. சொப்பனத்துலேயே கூட வாழறீங்க. சமஸ்தானமும் ராஜாப் பட்டமும் அஸ்தமிச்சு எத்தினியோ வருஷம் ஆகப்போகுது. அதெல்லாம் ஏற்கெனவே அஸ்தமிச்சுப் போச்சுங்கறது அரண்மனை வெளிப்புறத்து மதில்களைத் தாண்டி இன்னும் இங்கே உள்ளே உங்களுக்கெல்லாம் தெரியலே. அதான் கோளாறு. முதல்லே இந்த மதில் சுவர்களை இடிச்சு தள்ளணும். அப்பத்தான் வெளி உலகத்திலே என்ன நடக்குதுன்னு இங்கே உள்ளார இருக்கிறவங்களுக்குத் தெரியும்.”

“வந்திருக்கிறவரு ரொம்ப நேரமா வெளியே காத்துக் கிட்டிருக்காரு...”

“சரி உள்ளே வரச் சொல்லு.”

வேலைக்காரன், தேடி வந்திருப்பவரை உள்ளே அழைத்து வருவதற்காகச் சென்றான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் எடுப்பாகவும் மிடுக்காகவும் உடையணிந்த நடுத்தர வயது மனிதர் ஒருவர் உள்ளே வந்து முகமலர்ந்து கைகூப்பினார்.

“ஹைனெஸ்ஸை இவ்வளவு சீக்கிரமாச் சந்திக்கிற பாக்கியம் கிடைக்கும்னு இந்த ஏழை நினைக்கலே...” என்று பவ்யமாக வணங்கிய அந்த நடுத்தர வயது மனிதர் நாலைந்து ஹைனெஸ், இரண்டு மூன்று யுவர் எக்ஸ்லென்ஸி எல்லாம் போட்டுப் பேசவே அதைக் கேட்டுப் பூபதி எரிச்சலடைந்தான்.

“ஐயாம் பூபதி! ப்ளீஸ் ஸே மிஸ்டர் பூபதி. தட் இஸ் எனஃப்” என்று அவரைப் பதிலுக்கு மடக்கிக் கோபத்தோடு இரைந்தான் பூபதி.

“நான் ஒரு வாரத்துக்கு முன்னே பெரிய ராஜாவைப் பெங்களூர் ரேஸிலே சந்திச்சுப் பேசற பாக்கியம் கிடைச்சுது.”

“மிஸ்டர்!... உங்க பேரென்ன? சாமிநாதனா? சாமிநாதன்! இதோ பாருங்க. சுற்றி வளைக்காமே வந்த காரியத்தை ஸ்ட்ரெயிட்டா சிம்பிளா எங்கிட்டச் சொல்லுங்க... போதும். இப்ப இந்த இடம் சமஸ்தானமும் இல்லே. எங்கப்பா பெரிய ராஜாவும் இல்லே. நான் சின்ன ராஜா வும் இல்லே. எல்லோரையும் போல நாங்களும் சாதாரண ஜனங்கதான். இதில் மதில் சுவர், கோட்டை, நந்தவனம் இதை எல்லாம் விட்டுவிட்டு வேறே வீடு புதுசாக் கட்டறத் துக்கு வசதி இல்லாததாலேதான் இன்னும் நாங்க இதிலேயே குடி இருக்கோம். இதிலேயே தொடர்ந்து இருக்கிறதுனாலே நாங்க ராஜாக்கள் ஆயிடமாட்டோம். நாங்க ராஜாவா இருந்ததை நாங்களே மறக்க ஆசைப்படறப்போ நீங்க அதை நினைப்பு மூட்டிவிடறீங்களே, அதிலே உங்களுக்கு என்ன அத்தினி சந்தோஷம்...?”

“தப்பா நான் ஏதாவது பேசியிருந்தால் இளையராஜா இந்த ஏழையை மன்னிக்கணும்.”

“இன்னமும் இளையராஜா இளையராஜான்னு தப்பா தானே நீங்க பேசிக்கிட்டிருக்கீங்க மிஸ்டர் சாமிநாதன்? போகட்டும். வந்த காரியத்தையாவது சிம்பிளா சொல்லுங்க...”

“அந்த மோகினி பெயிண்டிங்க்ஸ் விஷயமா பெரிய ராஜாகிட்டப் பேசினேன்.”

“என்ன பேசினீங்க...?”

“அந்த பிரஞ்சுக்காரன் இந்த ‘சீரிஸ்’ முழுவதையும் பதினையாயிரம் ரூபாய்க்குக் கேட்கிறான்...”

“மிஸ்டர் சாமிநாதன்! முதலில் உங்களுக்கு நான் சில உண்மைகளைச் சொல்லுகிறேன். எங்க ஃபாதரோட நீங்க ரொம்ப நாளாப் பழகறீங்க. அதனாலே, அவரோட எல்லா ‘வீக்னஸ்ஸும்’ உங்களுக்குத் தெரியும், அவருடைய புத்திர பாக்கியங்களிலே என்னைத் தவிர மீதி மூணு பேரும் காலேஜிலே, ஸ்கூல்லே படிச்சிக்கிட்டிருக்காங்க. ஒவ்வொ ருத்தனுக்கும் மாசம் பிறந்தா எழுநூறு ரூபாய்க்குக் குறையாமே ‘பேங்க் டிராஃப்ட்’ எடுத்து மெட்ராஸுக்கு அனுப்பியாக வேண்டியிருக்கு. சாதாரணமா மத்தக் குடியானவங்க வீட்டுப் பையன் இதே படிப்பை மாதா மாதம் முந்நூறு ரூபாய்க்கும் குறைவாகச் செலவழித்துப் படித்து விடுவான். ‘சமஸ்தானத்து யுவராஜா’ என்கிற பொய்யான பிரமையினாலே என் தம்பிகள் டம்பத்துக்காகவும், ஜம்பத்துக்காக வும் அதிகமாகச் செலவழிக்கிறாங்க. எத்தனையோ வீண் செலவுகளைத் தாறுமாறாப் பண்றாங்க! அரண்மனைங்கிற இந்தப் பெரிய மாளிகைக்குள்ளே இன்னும் கலியாணங் கட்டிக் கொடுக்க வேண்டிய பெண்கள் ஒரு டஜன் எண்ணிக்கைக்குக் குறையாம இருக்காங்க. எங்க ஃபாதரோ அன்னிக்குப் பிரிட்டிஷ்காரன் காலத்திலே எப்படி ஜபர்தஸ்தா இருந்தாரோ அப்படியே இன்னும் ஜபர்தஸ்தா இருக்காரு. அவரோட பழகறவங்களும் சிநேகிதங்களும் கூட அதே மாதிரிதான் இருக்காங்க. ஃபாதரோட கிளப் மெம்பர்ஷிப் பில்களே மாசம் மூவாயிரம் ரூபாய்க்கு மேலே வந்திடுது. ஸ்பென்சர் சுருட்டு, ஸ்காட்ச் விஸ்கி, ரேஸ், சீட்டாட்டம் எதையுமே விடமாட்டேங்கறாரு, இந்த வீட்டு வரவு செலவு நிர்வாகம் இப்போ என் தலையிலே விழுந்திருக்கு. மாசா மாசம் பணக் கஷ்டம் தாங்க முடியலே! சமஸ்தானத்துக்கோ வருமானமே இல்லை. எதையெதையோ விற்று எப்படியெப்படியோ நான் சமாளிக்கிறேன். அப்படியும் பட்ஜட் துண்டு விழுது. எங்கப்பாவிலேயிருந்து இந்த மாளிகையிலே சின்னராணிகள் என்ற பேரிலும், இளைய ராணிகள் என்ற பேரிலும், ராஜகுமாரிகள் என்ற பேரிலும், ராஜகுமாரர்கள் என்ற பேரிலும், சின்ன ராஜாக்கள் என்ற பேரிலும் அடைந்து கிடக்கிற யாருக்கும் இங்கே உள்ள அசல் வறுமைகள், சிரமங்கள் எதுவுமே தெரியாது. இன்னும் பழைய சமஸ்தான காலத்து மிதப்பிலேயே இருக்காங்க. யாருமே ரியாலிட்டியை ஃபேஸ் பண்ண எப்பவுமே தயாராயில்லை. வாழ்க்கைச் சிரமங்கள் தெரியாமல் எங்க வீட்டிலே இருக்கிற ஒவ்வொருத்தரும், சீமநாதபுரம் ராஜா, சீமநாதபுரம் யுவராஜா, சீமநாதபுரம் ராணி, சீமநாதபுரம் சின்னராணிங்களெல்லாம் தாங்களே கூப்பிட்டுக் கொண்டும், பிறரைக் கூப்பிடச் சொல்லியும், எழுதியும், எழுதச் சொல்லியும், போலியாகப் பெருமைப்பட்டுக் கிட்டிருக்காங்க. சுதந்திர இந்தியாவில் ஜமீன்களும், சமஸ்தானங்களும் இல்லாத புதிய இந்தியாவில் நாம் வாழ்கிறோம் என்ற ஞாபகமோ பிரக்ஞையோ அவர்களுக்கு இன்று ஒரு சிறிதும் இல்லை.”

“அதெல்லாம் சரி இளையராஜா! இப்போ நான் சொல்ல வந்தது என்னன்னு கேட்டா...”

“பார்த்தீங்களா? பார்த்தீங்களா? மறுபடியும் இளையராஜா தானா? நான் தான் என்னை அப்படிக் கூப்பிடாதீங்கன்னு முதல்லேயே சொல்லிவிட்டேனே! கொஞ்சம் நான் சொல்லப் போறதை நீங்க பொறுமையாகக் கேட்டால் தான் அப்புறம் நீங்க சொல்லப் போறதை பொறுமையாகக் கேட்க முடியும் மிஸ்டர் சாமிநாதன்!”

ஆவிதானிப்பட்டியில் தங்கியிருந்த இடத்தில் கிடைத்த பழைய வாரப் பத்திரிகையில் தற்செயலாக அகப்பட்ட ஓர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது என்ற இந்தச் சிறு கதையில் மேலே கண்ட பகுதி வரை படித்த தனசேகரனுக்கு மனத்தில் தீவிரமாகச் சந்தேகம் தட்டத் தொடங்கியது.

அந்தச் சிறுகதை தங்களையும் தங்கள் சமஸ்தானத்தையும் நன்றாக அறிந்த யாரோ ஒருவரால்தான் எழுதப் பட்டிருக்கிறது என்று புரிந்தது. தந்தையோடு கருத்து வேறுபாடு கொண்டு முரண்பட்டுத் தான் மாமாவின் தயவை நாடி மலேசியாவுக்குப் புறப்பட்ட காலத்தைப் பின்னணியாகக் கொண்டு அந்தச் சிறுகதை உருவாக்கப்பட்டிருப்பது தனசேகரனுக்கு நன்கு புரிந்தது. சும்மா ஒரு கண் துடைப்புக்காகவோ மாறுதலுக்காகவோ ‘பீமநாதபுரம்’ என்ற பெயரைச் ‘சீமநாதபுரம்’ என்று மாற்றி விட்டால் போதுமென்று அந்தச் சிறுகதையின் எழுத்தாளர் எண்ணியிருக்கவேண்டும். அல்லது சட்டப்படி தம் எழுத்தின் மேல் நடவடிக்கை எதுவும் எடுத்து விடாமல் தடுத்துத் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அந்தப் பெயர் மாற்றத்தை அவர் மேற்கொண்டிருக்க வேண்டும். பீமநாதபுரம் பெரிய ராஜாவான காலஞ்சென்ற தன் தந்தையையும், தன்னையும். தங்கள் சமஸ்தான நிலைமைகளையும் அந்தச் சிறுகதையின் எழுத்தாளர் எப்படி அவ்வளவு துல்லியமாகப் படம் பிடித்தார் என்பதை நினைக்க ஆச்சரியமாக இருந்தது தனசேகரனுக்கு. அப்போதே மாமா தங்கபாண்டியனைத். தூக்கத்திலிருந்து எழுப்பி அந்தக் கதையை உடனே அவரிடம் படிக்கச் சொல்லவேண்டும் என்று தனசேகரனுக்கு ஆவலாயிருந்தும் மாமாவின் இயல்பை அறிந்து தன் ஆவலை அவன் அப்போது அடக்கிக் கொள்ள வேண்டிய தாயிற்று.

நல்ல தூக்கத்தில் எழுப்பினால் மாமாவுக்குப் பேய்க் கோபம் வரும் என்பது தனசேகரனுக்கு நன்கு தெரியும். எனவே மாமாவைத் தூக்கத்திலிருந்து எழுப்புகிற அசாத்தியமான எண்ணத்தைக் கைவிட்டு விட்டுக் கதையை மேலே படிக்கத் தொடங்கினான். தனசேகரன்:

“கேட்கிறேன், சொல்லுங்கோ, பெரிய ராஜாவைப் பெங்களூர் ரேஸிலே சந்திச்சதைப்பத்தி நான் சொன்னேன்” என்று ஞாபக மூட்டினார் சாமிநாதன்.

“பெங்களூர் ரேஸ்லே மட்டுமென்ன? எங்கே ரேஸ் நடத்தாலும் எங்க ஃபாதரை நீங்க அங்கே சந்திக்கலாம் மிஸ்டர் சாமிநாதன்! அதாவது தமிழிலே ஏதோ ஒரு வசனம் சொல்லுவாங்களே, ‘கழுதை கெட்டால் குட்டிச் சுவர்னு’....”

“நோ நோ... பெரியவங்களை அப்படியெல்லாம் சொல்லப்படாது...”

“பெரியவங்க உண்மையிலேயே பெரியவங்களா நடந்துக்கிட்டாவில்லே அதெல்லாம் பார்க்கணும்...”

இந்த இடத்தைப் படிக்கிறபோது தனசேகரனுக்கு மறுபடியும் அடக்க முடியாத சிரிப்பு மூண்டது. தனக்குத் தானே எங்கே பைத்தியம் போல இரைந்து சிரித்து விடுவோமோ என்று அவனுக்குப் பயமாயிருந்தது. நடுராத்திரியில் அவன் தனக்குத் தானே சிரித்துக்கொள்வதை மாமா எங்கே எழுந்து பார்த்துவிட நேருமோ என்று வேறு தயக்கமாயிருந்தது. பீமநாதபுரம் சமஸ்தானத்து நிலைமைகளை அப்படி அப்படியே படம் தீட்டி வைத்ததுபோல இருந்த அந்தச் சிறுகதையின் ஆசிரியனைத் தேடித் துப்பற்றிய விரும்பினான் தனசேகரன்.

அத்தியாயம் - 7

அந்தச் சிறுகதையை விட்ட இடத்திலிருந்து தனசேகரன் மேலே படித்தான்.

வந்து எதிரே உட்கார்ந்திருந்த சாமிநாதனிடம் இளையராஜா பூபதி மேலும் மேலும் கூறத் தொடங்கினான்:

“எங்க ஃபாதர் உண்மையிலேயே ஒரு பெரிய மனுஷன் மாதிரியா நடந்துக்கிறாரு? இப்பத்தான் திடீர்ப் பணக்காரன் ஆன மாதிரி எதிலேயும் ஜம்பம் கொண்டாடறாரு. இங்கேருந்து மெட்ராசுக்கு முதல் வகுப்பு ரெயில் டிக்கட் வாங்கினாலும் ரிஸர்வேஷன் சார்ட்லேயும் முதல் வகுப்புலே பெட்டியின் வெளிப்புறம் ஒட்டற ஸ்லிப்பிலேயும் இடச் சுருக்கத்துக்காக வி.ஆர்.பி.பூபதின்னு போட்டாக் கூட எங்கப்பா கோபிக்கிறாரு. ‘ராஜா விஜய ராஜேந்திர சீமநாத பூபதி’ன்னு கெஜ நீளத்துக்கு முழுப் பெயரையும் போடணும்னு வற்புறுத்தறாரு. அப்படிப் போடாட்டி அந்த ரெயிலில் ஏறிப் போக மாட்டேங்கறாரு. ரயில்வே புக்கிங் கிளார்க் மேலே புகார் செய்து கடிதம் அனுப்பச் சொல்றாரு.

ஆனால் அதே சமயத்திலே அவருக்காக வாங்கற அந்த முதல் வகுப்பு இரயில்வே டிக்கட்டை நான் எப்படி வாங்கறேன். எதை விலைக்கு விற்று வாங்கறேன்னு தெரிஞ்சாலாவது அவருக்குத் தன்னுடைய உண்மைப் பொருளாதார நிலைமை ஓரளவு புரியும். நல்ல வேளையா இந்த அரண் மனையிலே பழைய விலைக்கு எடை பேசிப் போடவும், விற்கவும் இன்னும் நிறையத் தட்டுமுட்டுச் சாமான்களும், கண்டான் முண்டான் பண்டங்களும், பாத்திரங்களும் ஏராளமாக மீதமிருக்கின்றன. அந்தக் காலத்திலே நவராத்திரி சதஸ், மன்னர் பிறந்த நாள் அன்னதானம், வனபோஜனம் என்று பல விசேஷ வைபவங்களில் ஆயிரம் பேர் இரண்டாயிரம் பேருக்கு ஒரே சமயத்தில் சோறு வடிக்க சாம்பார் வைக்க என்கிற உபயோகங்களுக்காக ஏராளமான அண்டாக்கள், குண்டாக்கள், தூக்கு வாளிகள், பாத்திரங்கள் எல்லாம் இங்கே ஒரு கட்டிடம் நிறைய அடைஞ்சு கிடைக்குது. இப்போதெல்லாம் இந்த விட்டின் மாதாந்திர வரவு - செலவுகளே அப்படிப் பாத்திரம் பண்டங் கள், பழைய தட்டுமுட்டுச் சாமான்களை விற்றுத்தான் நடக்கிறது. கீழவெளி வீதியிலே உள்ள சோமநாத நாடார் பாத்திரக் கடையிலே பின் பக்கமாப் போய் நீங்க நுழைஞ்சா அங்கே எங்க பாத்திரங்களை அடிச்சு உடைச்சு நொறுக்கிப் புதுப்புதுப் பாத்திரமா மாத்தறதுக்காக உருக்கிக் கொண்டிருப்பாங்க. அந்தப் பழைய காலத்துப் பெரிய பாத்திரங்களிலே ரெண்டு மூணு ஆள் கூட உள்ளாரப் புகுந்து உட்காரலாம். எல்லாம் அந்தக் காலத்துப் வார்ப்படம். இப்ப விற்கிற காப்பர் விலை, பித்தளை விலையிலே அதை எல்லாம் நல்லா விற்க முடியுது. பழைய பாத்திரங்களிலே கண் பார்வைக்கு நல்லாப் படறாப்பிலே, ‘பாலஸ் சீமநாதபுரம்’னு பேர் வெட்டியிருக்காங்க. கடைக்காரரு அந்தப் பாத்திரங்களை எங்ககிட்டேருந்து பழைய விலைக்கு வாங்கி அடிச்சு உடைச்சு நொறுக்கி உருக்கறப்போ எப்படி அந்தப் பேர்கள் அழிஞ்சு போயிடுமோ அப்பிடியே எங்களைக் குறித்த காலத்துக்கும், மணிபர்ஸுக்கும் ஒத்து வராத டம்பங்களும், ஆடம்பரங்களும், இன்றும் இனி மேலும் என்றும் அழிந்துவிட வேண்டும் என்று தான் நானே ஆசைப்படுகிறேன்.

இந்த அரண்மனையும் இதன் ஜம்பங்களும், டம்பங்களும் இன்று ஒரு பெரிய ‘அனக்ரானிஸம்’ - அதாவது கால வழுவைப் போலாகிவிட்டன. இந்த நான்கு மதிற் சுவர்களுக்கும் உள்ளே இவ்வளவு பெரிய மாளிகையிலே இன்று மொத்தம் எட்டுநூறு பல்புகளும் நூற்றைம்பதுக்கு மேற்பட்ட டியூப் லைட்டுகளும், இருநூற்று எழுபது மின்சார விசிறிகளும், நாலு கார்களும், இரண்டு ஜீப்களும், நாலு வேன்களும், ஏழு ஃப்ரிஜிடேர்களும், ஆறு ஏர்க்கண்டிஷன் பிளாண்ட்களும் இருக்கு. இதற்கெல்லாமாக மாசாமாசம் எலெக்ட்ரிக் பில்லே ஆயிரம் ரெண்டாயிரம் ரூபாய் ஆகுது.

இங்கே இந்த மதில் சுவர்களுக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கிற சமஸ்தானக் கோவில்களின் சிப்பந்திகள், அலுவலக ஊழியர்கள்ம், டிரைவர்கள், காவலாளிகள், வேலைக்காரர்கள் எல்லோருமாகச் சேர்ந்து மொத்தம் பல பேர் இங்கே மாசச் சம்பளத்துக்கு வேலை பார்க்கிறாங்க, அவங்களோட சம்பளம், அலவன்ஸ், விசேஷ கால போனஸ் வகையறாக்கள் மட்டுமே மாசம் கால் லட்ச ரூபாய்க்குக் கிட்டத்தட்ட வருது.”

“இப்படி எல்லாம் கஷ்டங்கள் இருக்குங்கறதுனாலே தான் வருமானத்துக்கு வழி செய்யறாப்ல நான் அருமையான ஐடியா ஒண்ணோட வந்திருக்கேன்” என்று சாமிநாதன் குறுக்கிட்டுச் சொன்னார்.

“அடாடா! இந்த அவசரந்தானே வேண்டாங்கறேன். வருமானத்துக்கு வழிதேடி நான் இதை எல்லாம் உங்க கிட்டச் சொல்லலே மிஸ்டர் சாமிநாதன்! முழுக்க கேட்டிங்கன்னா நான் இதெல்லாம் எதுக்காகச் சொல்ல வந்தேன்னு புரியும்.”

“சொல்லுங்கோ... கேட்கிறேன்.”

“சமஸ்தான ஜம்பம், ப்ரீவி பர்ஸ் வருமானம் எல்லாம் அறவே நின்னு போனப்புறமும் பழைய வேலையாட்களிலே யாரையும் வேலையிலிருந்து நிறுத்தறத்துக்கு ஃபாதர் சம்மதிக்க மாட்டேங்கறாரு. இந்த வீட்டோட இன்னிக்குள்ள வரவு செலவு கஷ்ட நஷ்டங்கள் எனக்குத் தான் பச்சையாய்த் தெரியும். எதை எதையோ விற்று, எப்பிடி எப்பிடியோ நிரந்து ஒவ்வொரு மாசத்தையும் ஒட்டிக்கிட்டிருக்கேன் நான். ஆனால் சிரமங்கள் கொஞ்சமும் புரியாமே மத்தவங்க எல்லாமே இன்னும் பழைய ராஜா ராணி மனப்பான்மையிலேயே இருக்காங்க, ஒருத்தரும் ஒரு செளகரியத்தையும் குறைச்சுக்கத் தயாராயில்லே. எதுக்குச் சொல்ல வந்தேன்னா இங்கே உள்ள இந்தக் கஷ்ட நெலமைகள் எப்பிடியோ மெட்ராஸுக்கு உங்க காது வரை கூட எட்டியிருக்குன்னு தெரியிது, அது தெரிஞ்சுதான் வசதியுள்ள வெளிநாடுகளுக்குச் சிலைகள், ஓவியங்கள், சிற்பங்கள், புராதனப் பொருள்களை ஏற்றுமதி செய்கிற ‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ கம்பெனியை வைத்து நடத்துகிற நீங்க என்னையும் ஃபாதரையும் தேடி அடிக்கடி சுற்றிச் சுற்றி வர்ரிங்க, இல்லையா?”

“நோ... நோ... உங்களுக்கு இஷ்டமில்லேன்னா நான் ஒண்ணும் வற்புறுத்தலே... நல்ல விலை வருது. அதான் தேடி வந்தேன். இதுலே எனக்குன்னு தனியா என்ன வந்தது?”

“அவசரப்படாதீங்க மிஸ்டர் சாமிநாதன்! நான் சொல்றதை முழுக்கக் கேளுங்க...!”

“எனக்கென்ன அவசரம்? சொல்லுங்கோ...”

“போனவாரம் ஒரு ஈவினிங்கிலே இந்த ஊர்ப் போலீஸ் இன்ஸ்பெக்டர் திடீர்னு என்னைத் தேடி இங்கே அரண்மனைக்கு வந்தாரு. ஒரு வெள்ளிச் சந்தனக் கும்பாவை எடுத்துக்காட்டி அதிலே எங்க குடும்ப பரம்பரையான அரண்மனை முத்திரை இருந்ததையும் என் கவனத்துக்குக் கொண்டு வந்து, ‘இதை உங்க அரண்மனை வேலைக்காரி ஒருத்தி வெள்ளிக் கடையிலே பழைய விலைக்கு நிறுத்துப் போட வந்திருக்கா. அரண்மனை முத்திரை இருக்கிறதைப் பார்த்திட்டு கடைக்காரர் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் அனுப்பிச்சிட்டாரு. நாங்க உடனே அந்த வெள்ளிக் கடைக்குப் போயி வேலைக்காரியை லாக்கப்பிலே வச்சிட்டு இங்கே உங்களைத் தேடி வந்திருக்கோம். தயவு செய்து இதுபற்றி மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதைத் தெரிவியுங்கள்’ என்றார்.

நான் உடனே, ‘அந்த வேலைக்காரியை நான் பார்த்தால்தான் அவள் இங்கே வேலை பார்க்கிறவளா இல்லையா என்பது எனக்குத் தெரியும். முதல்லே நான் அவளைப் பார்க்கணும். இப்பவே உங்களோட போலீஸ் ஸ்டேஷனுக்கு வரேன்’னேன்.

‘நீங்க வர வேண்டாம். நானே அவளை இங்கே கூட்டிக்கிட்டு வரச் சொல்றேன்’னு இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்கு ஃபோன் பண்ணினாரு. கால்மணி நேரத்துக் கெல்லாம் ஒரு கான்ஸ்டேபிள் அந்த வேலைக்காரியை இங்கே அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். அவளை நான் விசாரித்தேன்:

‘ஏம்மா நீயா இந்த வெள்ளிப் பாத்திரத்தைக் கடைக்கு விற்கக் கொண்டு போனியா? அல்லது இங்கே அரண்மனையிலே இருந்தே உன் மூலம் யாராவது விற்கக் கொடுத்தனுப்பினாங்களா? உள்ளதைச் சொல்லிவிடு.’

அவள் பதில் சொல்லத் தயங்கினாள். கண்களைக் கசக்கிக் கொண்டு அழுதாள். நான் பொறுமை இழக்காமல் அவளை மேலும் தூண்டினேன்.

‘சொல்லும்மா! பயப்படாதே. என்னாலே உனக்கு ஒரு கெடுதலும் வராது.’

மீண்டும் அவள் தயங்கினாள். நான் அவளிடமிருந்து எப்படியாவது நிஜத்தை வரவழைத்து விடலாமென்று முயன்று கொண்டிருந்தேன். கடைசியில் சிறிது நேரக் கண்ணிர் அழுகை பாசாங்குகளுக்கிடையே அவள் உண்மையைக் கூறினாள்,

‘நான் ஒரு பாவமும் செய்யலிங்க. என் மேலே எந்தத் தப்பும் கிடையாது. சோப்பு. ஷாம்பு, ப்பேஸ் பவுடர், ஹேர் ஆயில் எல்லாம் வாங்கப் பணம் இல்லேன்னு சின்ன ராணி பத்மாம்பாள்தான் இதைக் கொண்டுபோய் வெள்ளிக் கடையிலே நிறுத்துப் போட்டு வரச் சொன்னாங்க. நீங்க இதை ராணிக்கிட்டச் சொல்லி என்னைக் காட்டிக் கொடுத்திங்கன்னாக் கொலை விழும் அல்லது என் வேலை போயிடும்’னு கதறினாள் அந்த வேலைக்காரி. நான் அவளைச் சமாதானப்படுத்தி அவள் வேலைக்கு ஒர் ஆபத்தும் வராதென்று ஆறுதல் கூறிவிட்டு, ‘இதில் திருட்டு ஒன்றுமில்லை. குடும்ப விஷயம். போலீஸ் தலையீடு அவசிய மில்லேன்னு நினைக்கிறேன்’ என்று இன்ஸ்பெக்டரை நோக்கிக் கூறினேன். நான் கூறியதை இன்ஸ்பெக்டர் ஏற்றுக் கொண்டார். இன்ஸ்பெக்டர் என்னிடம் வருத்தம் தெரிவித்துவிட்டுப் போய்ச் சேர்ந்தார். வேலைக்காரியைக் காப்பாற்றுவதற்காக நானே வெள்ளிப் பாத்திரத்தை வாங்கி வைத்துக்கொண்டு சின்ன ராணிக்காகச் சோப்பு, சீப்பு, ஹேர் ஆயில், ஷாம்பு எல்லாம் வாங்க அவளிடம் என் கையிலிருந்து ரூபாய் கொடுத்தனுப்பினேன்.

“இதையெல்லாம் எதுக்குச் சொல்ல வந்தேன்னா ராயல் ஃபேமிலி அது இதுன்னு எங்க மேலே உங்களைப் போலொத்தவங்க வச்சிக்கிட்டிருக்கிற வீண் பிரமையை எல்லாம் இனிமேலாவது நீங்க விட்டுடணும். இனிமே எல்லோரையும் போல நாங்களும் சாதாரண மனுஷங்க தான், எங்களுக்கும் ஏழைமையும், தேவைகளும், வறுமைகளும் உண்டு. அர்த்தமுள்ள வறுமைகளும் உண்டு. ப்பேஸ் பவுடருக்காக வெள்ளிப் பாத்திரத்தை விற்கிற மாதிரி அர்த்தமில்லாத வறுமைகளும் உண்டு. அதை எல்லாம் இனி மேலாவது உங்களை மாதிரி ஆட்கள் தெரிஞ்சுக்கணும்.”

“ஐ ட்டு ரியலைஸ் இட் யுவர் எக்ஸ்லென்ஸி.”

“பார்த்தீங்களா? பார்த்தீங்களா? இந்த ‘யுவர் எக்ஸ்லென்ஸி’தானே வேணாங்கறேன்.”

“சரி இனிமேல் அதெல்லாம் சொல்லலே, நீங்களே பிரியப்படலேங்கறபோது வீணா அதெல்லாம் எதுக்கு? அரண்மனையிலே இது மாதிரிப் பணக்கஷ்டங்கள் சிரமங்கள் எல்லாம் இருக்குன்னு ஜாடைமாடையா எனக்கே தெரிஞ்சதுனாலேதான் அந்த பிரஞ்சுக்காரனோட ஆஃபரை ஒத்துக்கலாமான்னு உங்ககிட்டக் கேட்க வந்திருக்கிறேன்.”

“வந்துட்டீங்க. வந்தவரை சரிதான். ஆனால் இதுக்கெல்லாம் கிளியர் கட்டா உங்களுக்கு ஒரு பதில் சொல்லப் போகிறேன் மிஸ்டர் சாமிநாதன்! இந்த அரண்மனைங்கிற பெரிய சத்திரத்தைக் கட்டிக் காக்க நாங்கள் எதை எதையோ தெரிஞ்சும் தெரியாமலும் வெளியிலே விற்கிறோம். சோப்புச் சீப்புக்காகப் பழைய வெள்ளிப் பாத்திரத்தை ரகசியமா விற்கிறவங்க, ஒரு பாக்கெட் ஸ்பென்ஸர் சுருட்டுக்காக அரண்மனைக் கருவூலத்திலிருந்து பழைய தங்க நகையை எடுத்து விற்கிறவங்க, முதல் வகுப்பு ரெயில் டிக்கெட்டுக்காக அரண்மனைப் பழையப் பாத்திரங்களை எடைக்கு எடை நிறுத்துப் போடறவங்க எல்லாரும் இன்னிக்கி இந்த உயரமான மதிற்சுவர்களுக்குள்ளே இருக்கோம். எங்க மான அவமானங்கள் கஷ்ட நஷ்டங்களை வெளியே உள்ளவர்களுக்குத் தெரிய விடாமல் இந்த மதிற் சுவர்கள் மறைத்து விடுகிறாற்போல அவ்வளவு உயரமாக - அந்தக் காலத்திலேயே முன்னோர்கள் இதைக் கட்டி வைத் திருக்கிறார்கள். இதெல்லாம் இந்த அரண்மனைக்குள்ளே நடக்கலாம். உயரமான கற்சுவர்களின் மறைப்பையும் மீறி வெளியே உள்ள உங்களைப் போன்றவர்களுக்கும் இங்கே நடப்பவை தெரிந்து விடலாம். ஆனால் நீங்கள் எவ்வளவு பெரிய விலை பேசினாலும் என்ன செய்தாலும் சிலவற்றை நான் இங்கிருந்து விற்கவிட மாட்டேன்.

இங்கே அரண்மனைக்குள்ளே இருக்கும் ரேர் புக்ஸ் அடங்கியப் பெரிய லைப்ரரி; மோகினி பெயிண்டிங்ஸ் உள்பட அருமையான ஓவியங்கள் அடங்கிய சித்திரசாலை, பிரமாதமான கலைப் பொருட்கள், பஞ்சலோகச் சிலைகள் அடங்கிய மியூஸியம் இவை மூன்றை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் எந்த விலைக்கும் விற்கமாட்டேன். என் உடலில் உயிர் இருக்கிற வரை மற்றவர்களை விற்க விடவும் மாட்டேன். இவை இந்தக் குடும்பத்தில் என்றோ ஒரு தலைமுறையில் ‘இண்டெலக்சுவல்ஸ்’ இருந்திருக்கிறார்கள் என்பதற்கும் மிகச் சிறந்த கலாரசிகர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கும் இன்றைய அடையாளங்கள் அல்லது சாட்சியங்கள். என் கண் முன்னே என்னை மீறி இவற்றிலிருந்து ஒரு துரும்பு விற்கப்பட்டாலும் நான் தூக்குப் போட்டுக் கொண்டு செத்து விடுவேன் மிஸ்டர் சாமிநாதன். இதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்ப தற்காகத்தான் இவ்வளவு விரிவாகச் சொல்லுகிறேன். என் தாத்தா பாஸ்கர பூபதி பெரிய கலாரசிகர். அவர் சீமநாதபுரம் ராஜாவாக இருந்தவர் என்பதைவிட மாபெரும் கலா ரசிகராக வாழ்ந்தவர் என்பதற்காகவே நான் பெருமைப்படுகிறேன். அந்தப் பெருமையை நான் எந்த அந்நிய நாட்டானுக்கும் விலைபேசி விற்க மாட்டேன். பேரம் பேச மாட்டேன். இங்கே உள்ள ஓவியங்களிலேயே அந்த மோகினி பெயிண்டிங்க்ஸ்தான் மிக அருமையான கலெக்ஷன். அதை என்னிடம் பேரம் பேச இப்போது நீங்கள் வந்திருக்கிறீர்கள் இல்லையா...”

“ஐயாம் வெரி ஸாரி! உங்களுக்கு விருப்பமில்லை என்றால் வேண்டாம். பெரிய ராஜா பெயிண்டிங்க்ஸை விலைக்குக் கொடுத்து விடலாம் என்பது போல்தான் என்னிடம் சொன்னார். அதனால்தான் இங்கே தேடி வந்தேன்.”

“தேடி வந்ததற்கு ரொம்ப நன்றி! ஆனால் இந்த விஷயமாக இனிமேல் இங்கே தேடி வராதீர்கள்.”

சாமிநாதன் புறப்படுவதற்காக எழத் தொடங்கினார்.

“ஒரு நிமிஷம் இருங்கள். குடிப்பதற்கு என்ன கொண்டு வரச் சொல்லட்டும்? காபியா? டீயா? ‘எகானமி டிரைவ்’ காரணமாக இப்போதெல்லாம் இங்கே தேடி வருகிறவர்களுக்கு நான் குடிக்க எதுவுமே தருவதில்லை. ஆனால் இன்று உங்களை நான் அதிக நேரம் காத்திருக்கும்படி செய்து விட்டேன்.”

“பரவாயில்லை. எனக்கு ஒன்றுமே வேண்டாம். நான் போய் வருகிறேன்.”

“சரி! உங்கள் இஷ்டம்.”

அவரை மேலும் அதிகமாக வற்புறுத்தாமல் எழுந்து கைகூப்பி அவருக்கு விடைகொடுத்தான் பூபதி. வந்தவர் திரும்பிப் போனதும் உடனே வேலையாள் மருதமுத்துவைக் கூப்பிட்டு,

“இந்தா மருதமுத்து காரியஸ்தர் நாகராஜ சேர்வையிடம் போய் அரண்மனை லைப்ரரி, கலைக்கூடம், சிற்ப சாலை, மூணுக்கும் உள்ள சாவிக் கொத்துக்களை உடனே வாங்கிக்கிட்டு வா. இனிமே அந்தச் சாவிங்க எங்கிட்டத் தான் இருக்கணும். இல்லாட்டி எனக்குத் தெரியாமலே சுருட்டுக்கும் விஸ்கிக்கும் ரேஸுக்குமாக ஒண்ணொண்ணா வித்துச் சாப்பிட்டுடுவாங்க” என்று அவனிடம் இரைந்து உத்தரவு போட்டான் பூபதி.

பத்து நிமிஷங்களுக்குப் பின் வேலைக்காரன் மருதமுத்து மூன்று சாவிக் கொத்துக்களைப் பூபதியிடம் கொண்டு வந்து ஒப்படைத்துவிட்டுப் போனான்.

அந்த அரண்மனையில் பூபதி மேல் எல்லாருக்கும் தனி மரியாதை உண்டு. பெரிய ராஜாவுக்கு இருந்த மரியாதையை விட அவனுக்குத்தான் அங்கே அந்த மரியாதையும் கெளரவமும் காட்டினார்கள். அதற்குக் காரணம் அவனுடைய எளிமையும் பொறுப்புணர்ச்சியும் தான். வாசனைச் சோப்பு விலையுயர்ந்த ‘செண்ட்’, சில்க் ஜிப்பா, புலிநகம் பதித்த தங்கச் சங்கிலி என்றெல்லாம் மினுக்கும் அரச குடும்பத்து இளைஞர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எளிய நடை உடை பாவனைகளும் பழக்க வழக்கங்களும் கொண்டிருந்ததால் பூபதி புகழ் பெற்றிருந்தான். ஆடம்பரங்களில் வெறுப்பு, எளிமையில் பற்று, காந்திய நம்பிக்கை என்று முக்கால் துறவியாக வாழ்ந்தான் அவன். அவன் தந்தையாகிய பெரிய ராஜாவிடமிருந்த போலித்தனம் எதுவும் அவனிடம் இல்லாமல் இருந்தது.

ராஜாவின் எட்டாவது வைப்பாட்டியின் மூன்றாவது பெண்கூட அந்த மாளிகையின் எல்லையிலிருந்து வெளியே போகக் கார் இல்லாமல் நடந்து போகத் தயங்கும் போது பூபதி நடந்தே வெளியில் உலாவச் செல்வான். அரண்மனைக்குள்ளும், அரண்மனைக்கு வெளியிலும் எல்லாரிடமும் அன்பாகவும் சகஜமாகவும் பழகுவான். ராஜ குடும்பத்து வாரிசு என்ற செருக்கையோ கர்வத்தையோ அவனிடம் எள்ளளவு கூடக் காண முடியாது. சோம்பல் இல்லாமல் நன்றாக உழைப்பான் அவன். அவனைக் கண்டால் அவனுடைய தந்தையும் பெரிய ராஜாவுமாகிய விஜயராஜேந்திர சீமநாத பூபதிக்குக் கூடப் பயம்தான். “எங்க அப்பாவைப் போல் படுசோம்பேறிகள் ஒழிந்தால் தான் நாடு உருப்படும்” என்று பூபதியே தன் நண்பர்களிடம் தந்தையைப் பற்றிக் கிண்டல் செய்து பேசுவதும் உண்டு. தந்தையும் மகனும் ஒரே ரயிலில் ஒரே ஊருக்குப் போகும் போது கூடத் தந்தை ஏ.ஸி. வகுப்பு அல்லது முதல் வகுப்பிலும் மகன் மூன்றாவது வகுப்பிலும்தான் போவதும் வழக்கம்; அந்த அளவிற்கு மகன் தீவிரவாதி; சிக்கனமானவன். தண்டச் செலவுகளைத் தவிர்ப்பவன். சுயப் பிரக்ஞை உள்ளவன்.

இந்த இடங்களை எல்லாம் படிக்கிறபோது தனசேகரனுக்குப் பெருமை பிடிபடவில்லை. தன்னைப் பற்றியே வேறு பெயரில் யாரோ எதிரே வந்து புகழ்ந்து பேசுவது போலிருந்தது. பீமநாதபுரம் சமஸ்தானத்தைப்பற்றி விவரம் தெரிந்த யாரோதான் இந்த வாரப் பத்திரிகைச் சிறு கதையை எழுதியிருக்க வேண்டும் என்றும் பட்டது. பல இடங்களையும் சில வாக்கியங்களையும் ஒரு முறைக்கு இரு முறையாகத் திரும்பத் திரும்பப் படித்தான் அவன். தன் கொள்கைகள் சரி என்பதைப் பலபேர் தனக்கு முன்பாகவே வந்து கரகோஷம் செய்து ஒப்புக்கொண்டாற் போலிருந்தது தனசேகரனுக்கு. காலையில் மாமா தங்க பாண்டியன் தூக்கத்திலிருந்து விழித்ததும் முதல் வேலையாக அவரிடமும் அந்தச் சிறுகதையைக் கொடுத்துப் படிக்கச் சொல்லிவிடவேண்டும் என்று தனக்குள் முடிவு செய்து கொண்டு விட்டிருந்தான் அவன். கதையை எழுதியிருக்கும் ஆசிரியன் தங்கள் சமஸ்தான எல்லைக்குள் நன்கு பழகிக் கவனித்த யாரோ ஓர் ஆள்தான் என்பதில் இப்போது அவனுக்கு எள்ளளவும் சந்தேகம் இருக்கவில்லை.

அத்தியாயம் - 8

‘ஓர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது’ என்ற கதையை எழுதியவரைப் பற்றித் தனக்குள் ஏற்பட்ட சந்தேகத்தோடு மேற்பகுதிகளைப் படிக்கலானான் தனசேகரன். தன்னையும் தன்னைச் சுற்றியும் பீமநாதபுரம் அரண்மனையில் இருப்பவர்களை அப்படியே படம் பிடித்தாற்போல இருந்தது அந்தச் சிறுகதை.

பூபதி இருக்கிறவரை சீமநாதபுரம் அரண்மனையின் புகழ்பெற்ற புராதனமான ஓவியங்கள், பஞ்சலோகச் சிலைகள் எதையுமே மலிவான விலைக்கு வாங்கி அந்நிய நாடுகளுக்கு அனுப்பிப் பணம் பண்ண முடியாதென்று எண்ணி, ‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ உரிமையாளர் சாமிநாதன் அவற்றை அடையத் தந்திரமாக வேறு குறுக்கு வழி முயற்சிகளில் இறங்கினார்.

சாமிநாதன் பக்கா வியாபாரி. அவரிடம் ஏஜெண்டுகளாகத் தமிழ்நாடு முழுவதும் ஓடியாடித் திருடிக் கொண்டு வந்து சேர்க்கக் கூடிய நாகரிகமான சிலத் திருடர்கள் பலர் இருந்தனர். அவர்கள் அவருடைய கையாட்களாக எல்லா இடங்களிலும் செயல் பட்டார்கள். சீமநாதபுரம் பெரிய ராஜாவோ பலவீனங்களும் பணக் கஷ்டங்களும் நிறைந்தவராக இருந்தார். எனவே ‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ சாமிநாதன் அவருக்கு வகையாக வலை விரிக்க முடிந்திருந்தது.

அவ்வப்போது சீமநாதபுரம் பெரிய ராஜாவாகிய விஜயராஜேந்திர சீமநாத பூபதியைச் சந்தித்து ஐயாயிரம், பத்தாயிரம் என்று கடன் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்படிக் கொடுக்கும் கடன்களுக்கு அவ்வப்போது மகா ராஜாவிடமிருந்து பிராமிசரி நோட்டும் எழுதி வாங்கிக் கொண்டு வந்தார்.

பணம் கிடைத்தால் போதும் என்ற தவிப்பில் இருந்த பெரிய ராஜா நோட்டின்மேல் நோட்டாக எழுதிக் கையெழுத்துப் போட்டுச் சாமிநாதனிடம் கொடுத்துக் கொண்டே இருந்தார். அவரால் செலவுகளைச் சுருக்கிக் கொள்ள முடியவில்லை. ‘சோழியன் குடுமி சும்மா ஆடாது’ என்பதுபோல் சாமிநாதனும் ஏதோ உள் நோக்கத்தை வைத்துக் கொண்டு தான் கேட்ட போதெல்லாம் ராஜாவுக்குக் கடன் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்தக் கடனுக்குப் பதிலாக அங்கே சீமநாதபுரம் அரண்மனையில் நிறைந்து கிடக்கும் கலைச் செல்வங்கள் எல்லாம் கிடைத்தால் அவற்றின் மூலம் பத்து லட்ச ரூபாய்க்கும் மேலாக லாபம் சம்பாதிக்கலாம் என்று தனக்குத் தானே கனக்குப் போட்டுப் பார்த்து ஒரு மதிப்பீடு வைத்திருந்தார் அவர். பெரிய ராஜாவோ தம் மகன் பூபதிக்குத் தெரியாமலே சாமிநாதனிடம் அவ்வப்போது பெருந்தொகை கடன் வாங்கி வந்தார். கழுத்தளவுக்குக் கடன் ஏறிவிட்ட நிலைமை.

அந்த ஆண்டின் இறுதிக்குள் பெரிய ராஜா ‘ஏன்ஷி யண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ சாமிநாதனிடம் வாங்கிய கடன் பன்னிரண்டு லட்ச ரூபாய் வரை ஆகிவிட்டது, சாமிநாதனின் கூட்டுறவோடும் ஒழுங்கில்லாத ஒரு சில கெட்ட நண்பர்களின் தூண்டுதலாலும் பெரிய ராஜா ‘சீம நாத் புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில் தாம் ஒரு புதிய சினிமாத் தயாரிப்புக் கம்பெனியை வேறு ஆரம்பித்துத் தொலைத்திருந்தார். அது ஒரு காசும் லாபம் தராமல் பணத்தைக் கபளீகரம் செய்து கொண்டிருந்தது. ஒரு படமும் தயாரித்து ரிலீசாகாமல், நாளுக்கு நாள் அந்தக் கம்பெனி நஷ்டத்தைத் தேடித் தந்து கொண்டிருந்தது. சினிமாக் கம்பெனி தொடங்கியதனால் பெரிய ராஜாவுக்குச் சில அழகிய நடிகைகளின் சகவாசமும் பழக்கமும் சுகமும் கிடைத்தது தான் மிச்சமே ஒழிய உருப்படியாக வேறெதுவும் நடக்க வில்லை.

அவரோ வாங்கியிருந்த எல்லாக் கடன்களையும் அரண்மனை மேல்தான் வாங்கியிருந்தார். அரண்மனையிலுள்ள சிலைகள், ஓவியங்கள், மியூஸியம், லைப்ரரி எல்லாவற்றையும் சுருட்டி விடலாம் என்ற திட்டத்தோடுதான் சாமிநாதன் அந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார்.

இந்த விஷயம் மகன் பூபதிக்குத் தெரிய வந்த சமயத்தில் நிலைமை கட்டு மீறிப்போய் அரண்மனை ஜப்திக்கு வந்து விட்டது. பத்திரிகைகளில் ஏல நோட்டீஸ் கூடப் பிரசுரமாகி விட்டது. அரண்மனை மதிற்கவர்களிலும் நான்கு புறத்துக் கோட்டைக் கதவுகளிலும் ஏல நோட்டீசை எல்லாரும் காணும்படி அச்சிட்டு ஒட்டியிருந்தார்கள்.

ஊரெல்லாம் இதைப் பற்றியே பேச்சாகி இருந்தது. பூபதிக்கு ஒரே கோபம். தன் கோபத்தை யார் மேல் காட்டுவதென்றே அவனுக்குப் புரியவில்லை.

பணம் கட்டி ஏலத்தைத் தடுப்பதென்றாலும் ஒரே நாளில் பத்துப் பன்னிரண்டு லட்ச ரூபாயை எப்படித் திரட்டுவதென்று மலைப்பாக இருந்தது. தந்தையோ ஊரில் இல்லை. சென்னையில் குடிபோதையோடு ஏதாவது ஒரு சினிமா நடிகையின் மடியில் அவர் புரண்டு கொண்டிருக்கக்கூடும். அவர் ஓடி வந்து இந்த ஏலத்தைத் தடுப்பார் என்று எதிர்பார்ப்பது பயனற்றது. என்ன செய்வது எப்படி இதைத் தடுக்கலாம் என்று பூபதி யோசிப்பதற்குள் காரியம் கை மீறிப் போய்விட்டது.

அரண்மனை வாசலில் பொருள்களும் கட்டிடமும் ஏலத்துக்கு வந்தபோது சாமிநாதன் தன்னுடைய கையாட்களையே பணத்துடன் நிறுத்தி வைத்திருந்து லைப்ரரி ஓவியங்கள், சிற்பங்கள் எல்லாவற்றையும் கூடிய வரை மலிவான விலைக்கு ஏலத்தில் எடுத்து விட்டார். அரண்மனையும் அதைச் சுற்றி இருந்த காலி இடங்களும் கூட ஏலத்துக்குப் போய் விற்று விட்டன. பூபதிக்கு ஏற்பட்ட மன வேதனை சொல்லி முடியாது. அரண்மனை வாசலில் ஏலத்தை வேடிக்கை பார்க்க ஊர் ஜனங்களின் பெருங் கூட்டம் கூடிவிட்டது. சிலர் அனுதாபப்பட்டார்கள். வேறு சிலர், “இந்த அரண்மனைவாசிகளுக்கு நன்றாக வேண்டும். இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்” என்று ஆத்திரத்தோடு கருவிக் கொண்டு போனார்கள்.

வேறு சிலர் தங்கள் ஊரின் பரம்பரையான பெருமைகளை யாரோ பட்டினத்து வியாபாரி வந்து ஏலம் எடுப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் குமுறி மனம் வருந்தினார்கள். அப்படி மனம் வருந்திய உள்ளூர்ப் பிரமுகர் ஒருவர் ஓர் ஒரமாக அரண்மனை வாசலில் ஒதுங்கி நின்ற பூபதியின் அருகே வந்து அனுதாபம் நிறைந்த குரவில் “ரொம்ப வருத்தப்படறேன் இளையராஜா! உங்கள் தந்தையார் பெரியராஜா இப்படி எல்லாம் கடன் வாராப்பில பண்ணியிருக்க வேண்டாம். எல்லாம் காலக் கோளாறு, உங்க பொறுப்பிலே இருந்தாலாவது நீங்க இதெல்லாம் ஆகாமல் ஜாக்கிரதையா இருந்திருப்பிங்க...” என்றார்.

“நீங்க வருத்தப்படற மாதிரி இந்த ஏலம் நடக்கிறதுக்காக நான் வருத்தப்படலே. இதுக்கப்புறமாவது எங்கப்பாவுக்குப் புத்தி வந்து அவருடைய ஆஷாட பூதித்தனங்கள் தெளிந்தால் பரவாயில்லை. இந்த உயரமான கல் மதிற்சுவர்களுக்கு வெளியே தெருவில் தூக்கியெறியப்பட்ட பிறகாவது இனிமேல் இங்குள்ளவர்களுக்கு அசல் வாழ்க்கை எத்தகையது என்பது புரியவேண்டும். இந்த அரண்மனை ஏலம் போவதில் எனக்கு மனக் கஷ்டமே இல்லை. இது போகும் போதாவது எங்கள் குடும்பத்தைப் பிடித்த பீடைகளான சோம்பல், வறட்டுக் கவுரவம், டம்பம் எல்லாம் தொலைந்தால் சரிதான். இன்று நான் வருந்துவது எல்லாம் இங்கேயிருந்த அறிவு நூல்கள், சிற்பங்கள், ஓவியங்கள். அருங்கலைப் பொருட்கள் எல்லாம் அந்நிய நாடுகளுக்குச் சோரம் போகின்றனவே என்பதற்காகத்தான். அவை அவ்வாறு இங்கிருந்து வெளியேற்றப்படுவது எனக்கும், உங்களுக்கும் இவ்வூர் மக்களுக்கும் மிகப் பெரிய அவமானம். அந்தப் பொருட்களை ஏலத்துக்கு விடாமல் இங்குள்ள மற்றப் பண்டங்களை மட்டும் ஏலத்துக்கு விட்டே அவர்கள் என் தந்தைக்குக் கொடுத்த கடனை அடைத்துக் கொள்ள முடியும். ஆனால் கடன் கொடுத்தவர்களின் பேராசை காரணமாக இங்கு எல்லாமே ஏலத்துக்கு விடப்பட்டிருக்கின்றன. நமது கலைப்பொருட்களும் நூல்களும் சிலைகளும் சிற்பங்களும் அந்நிய நாடுகளுக்குப் போவதை மறியல் செய்தாவது தடுத்தாக வேண்டும். அரசாங்கமே இவற்றை மீட்டு இவ்வூரில் ஒரு மியூஸியமும் லைப்ரரியும் கட்டி அதைப் பொது மக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் ஊர்வலமாகச் சென்று மனுக்கொடுப்போம். அதுவரை சாமிநாதன் இதில் ஒரு சிறு துரும்பு கூட எடுத்துச் செல்ல முடியாமல் ஊர்மக்கள் பார்த்துக் கொள்ளவேண்டும். வெகுஜன அபிப்பிராயத்தையோ ஊர் மக்களின் ஏகோபித்த விருப்பத்தையோ கலெக்டர் புறக்கணித்து விட முடியாது. எப்படியும் இந்தக் காரியத்தை நாம் சாதித்தே ஆக வேண்டும்.”

நிதானமாகவும் திட்டமிட்டும் இந்த வார்த்தைகளைச் சொன்னான் பூபதி. அவனிடம் வருத்தப் பட்டுக்கொண்டிருந்த பெரியவரும் இந்த யோசனையை ஒப்புக்கொண்டு வரவேற்றார். வேறு சிலரும் அந்தச் சூழ்நிலையில் அதைத் தவிர வேறு வழி இல்லை என்றார்கள் அப்படிச் செய்வதை வரவேற்றார்கள்.

அடுத்த கணமே பூபதியும் அவனுடைய நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொண்ட ஊர்ப் பிரமுகர்களும் மறியலுக்குக் கூட்டம் சேர்க்க ஏற்பாடு செய்தார்கள்.

காலதாமதமின்றி உடனே அது நடந்தது. அந்தக் கூட்டத்தைப் பூபதியாலும், மற்றவர்களாலும் மிகக் குறுகிய நேரத்துக்குள்ளாகவே சேர்த்து விட முடிந்தது. மறியலுக்கு வந்த கூட்டத்தைப் பார்த்து ஏலம் எடுத்த சாமிநாதனே மிரண்டு போனார்.

“சிலைத் திருடர்கள் ஒழிக! சொந்த நாட்டுக் கலைப் பொருள்களை அந்நிய நாடுகளில் விற்றுச் சோரம் போகாதே!” என்ற கோஷங்களோடு லைப்ரரியிலும், கலைக்கூடத்திலும் இருந்து பண்டங்களை ஏற்றி எடுத்துச் செல்ல வந்த ‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸாரின்’ லாரிகளை வழி மறித்தார்கள் அவர்கள். உள்ளூரின் எல்லா அரசியல் கட்சிகளும் இதில் பூபதியோடு ஒத்துழைத்தன. சிற்பங்களையும் ஒவியங்களையும், அரும்பொருள்களையும் அவர்கள் அரண்மனையின் தனிச் சொத்தாக மட்டும் நினைக்கவில்லை, மக்களின் பொதுச் சொத்தாக நினைத்தார்கள். அவை ஏலம் போவதை ஊரின் இழப்பாக, நாட்டின் இழப்பாக, அவர்கள் நினைத்தார்கள்.

“ஒரு தனிப்பட்ட நபருக்கு நான் கடன் கொடுத்திருக்கிறேன். அதைச் சரிக்கட்ட அந்தத் தனிப்பட்ட நபரின் தனிச் சொத்துக்களை ஜப்தி செய்து ஏலம் போட்டு என் கடனை அடைத்துக் கொள்கிறேன். இதில் நீங்கள் கோஷம் போடவோ மனம் குமுறவோ, ஊர்வலம் விடவோ என்ன இருக்கிறது?” என்று சாமிநாதன் பூபதியையும் மற்றவர்களையும் பார்த்து ஆத்திரத்தோடு கேட்டார்.

“அரண்மனைக்குத் தனிச் சொத்து என்று எதுவும் கிடையாது. எல்லாம் மக்களின் வரிப்பணத்திலே வாங்கிச் சேர்த்ததுதான். இந்தச் சிலைகள், இந்த நூல் நிலையம், இந்தப் பொது ஓவியங்கள் எல்லாம் இவ்வூரில் இனி மக்களுக்குப் பயன்படும் காட்சிச் சாலைகளில் வைக்கப்பட வேண்டும்” என்றார்கள் அவர்கள்.

‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ சாமிநாதனின் நிலைமை பரிதாபகரமானதாக இருந்தது. அவரால் ஊர்க்காரர்களையும் மக்களையும் மீறிக் கொண்டு எதையும் செய்ய முடியவில்லை.

அரண்மனையிலிருந்த பழைய கார்கள், ஏர்க்கண்டிஷன் பிளாண்ட்கள், ரெஃப்ரிஜிரேட்டர்கள் போன்றவற்றை ஏலம் எடுத்தவர்கள் வேறு விதமாகவும், லாரிகளிலும் எடுத்துச் சென்றபோது மறியல் செய்தவர்கள் தடுக்கவில்லை. விட்டு விட்டார்கள். ஆனால் லைப்ரரி, மியூஸியம், சித்திரச்சாலை, சிற்பக் கூடங்களிலிருந்து எதையும் ஏலம் எடுத்தவர்களைத் தொடக்கூட விடவில்லை. ஒருநாள் இரண்டு நாள் அல்ல... ஆறு மாதங்கள் வரை இந்தப் போராட்டமும் மறியலும் நீடித்தன.

பத்திரிகைகளில் தொடர்ந்து இந்தப் போராட்டம் பற்றிய செய்திகள் நாள் தோறும் இருந்தன.

‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ சாமிநாதன் எத்தனையோ விதமான செல்வாக்குகளைப் பயன்படுத்திச் சிற்பங்களையும் ஓவியங்களையும் சீமநாதபுரத்திலிருந்து கடத்திக் கொண்டு போக முயன்றும் முடியவில்லை.

பெரிய ராஜாவின் ஒத்துழைப்புக் கிடைத்தும்கூட அவரால் எதுவும் செய்ய இயலவில்லை. மறியல்காரர்கள் இராப் பகலாக முறை வைத்துக் கொண்டு லைப்ரரியையும், சிற்பச் சாலையையும், சித்திரச்சாலையையும், மியூஸியத்தையும் யாரும் அண்டவிடாமல் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள்.

முடிவில் மறியல்காரர்களுக்குத் தான் வெற்றி கிடைத்தது. மியூஸியம், சிற்பக்கூடம், சித்திரச்சாலை ஆகியவற்றை ஏலம் எடுத்தவரிடம் இருந்து மீட்டு அரசாங்கப் பழம்பொருள் பாதுகாப்பு இலாகா தன் பொறுப்பில் ஏற்க முன் வந்தது. உரியதும் நியாயமானதுமாகிய காம்பன் சேஷனை ஏலம் எடுத்தவர்களுக்கு அரசாங்கம் தருவதற்கு ஒப்புக் கொண்டது. உள்ளூரிலேயே ஊருக்கு மையமான ஓரிடத்தில் புதிய கட்டிடங்களை நிர்மாணித்த பின் மியூஸியத்தையும், சித்திர சிற்பக் கூடங்களையும் அந்தப் புதுக் கட்டிடங்களுக்கு மாற்றிக் கலெக்டர் பொறுப்பில் கொண்டு வருவது என்று ஏற்பாடாகிவிட்டது.

‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ சாமிநாதனும் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழி எதுவும் இருக்கவில்லை.

பூபதிக்கு இந்த வெற்றி பெரும் மனத்திருப்தியை அளித்தது. ‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ சாமிநாதன் மட்டும் ரொம்ப நாள் வரை தன்னுடைய நெருங்கிய சிநேகிதர் களிடம் அந்தச் சீமநாதபுரம் ‘பேலஸ் ஆக்ஷன்’ பற்றி பேச்சு வரும் போதெல்லாம், “என்னுடைய அத்தனை திட்டமும் சீமநாதபுரம் இளையராஜா பூபதியாலேதான் கெட்டுப் போச்சு. அவன் சாமர்த்தியசாலி. பெரிய கலகக்காரன். கடைசியிலே தான் நினைச்சதைச் சாதிச்சு முடிச்சுட்டான். வெறும் கட்டிடத்துக்காகவும், காலி நிலத்துக்காகவும், பழைய கார்களுக்காகவும் ஃபிரிஜிரேடருக்காகவும், ஓட்டை உடைசல் ஏர்க்கண்டிஷன் பிளாண்ட்டுக்காகவுமா நான் அவ்வளவு சிரமப்பட்டுப் பெரிய ராஜாவுக்குக் கேட்ட போதெல்லாம் கடன் கொடுத்து அந்த அரண்மனையை ஏலத்துக்குக் கொண்டு வந்தேன்? லட்சம் லட்சமா விலைக்குப் போகிற பிரமாதமான சிலைகள், ஓவியங்கள், மியூசியம், ரேர்புக்ஸ் எல்லாம் கிடைக்கும்னு ஆசைப்பட்டுத்தான் குடிகாரரும் காமலோலனும் ஆகிய பெரிய ராஜாவை குளிப்பாட்டி, ரூபாய்களாலே அவரை அபிஷேகம் பண்ணி நோட்டு எழுதி வாங்கினேன். இந்தப் பூபதி என்னோட எல்லாப் பிளானையும் பாழாக்கி விட்டான். கலெக்டர் கவர்மெண்ட் வரை விஷயத்தை எட்டவிட்டு அதை ஒரு பொதுப் பிரச்னையாக்கி அரசாங்கமே புதுசா மியூசியம் கட்டி எல்லாத்தையும் வைக்கிற அளவுக்குப் பண்ணியாச்சு. பூபதி என்னை ஏமாத்திப்பிட்டான்” என்று வாய் ஓயாமல் பூபதியின் மேல் வசைமாரி பாடிக் கொண்டிருந் தார். சாமிநாதனின் ஆத்திரமெல்லாம் பூபதி மேல்தான் இருந்தது.

ஆனால் பூபதியோ அதற்கு நேர்மாறாக சாமிநாதனைப் புகழ்ந்து கொண்டிருந்தான். அரண்மனை என்ற வெள்ளை யானை அபாயத்திலிருந்து மீட்டுத் தங்கள் குடும்பத்தைக் கோட்டையின் கற்சுவர்களுக்கு வெளியே அனுப்பி வைத்ததற்காகச் சாமிநாதனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தான். அவரை வாயார வாழ்த்திப் புகழ்ந்து கொண்டிருந்தான். உலகின் கஷ்ட நஷ்டங்கள் தெரியுமாறு தங்களை ஆக்கிய பொறுப்பு சாமிநாதனுக்கு உரியது என்று உண்மையாகவே அவன் நம்பினான். அரண்மனை ஏலத்துக்கு மட்டும் வந்திராவிட்டால் தன் தந்தை உட்படப் பலருக்கு வெளி உலகின் அசல் வாழ்க்கை தெரியாமல் அவர்கள் தங்களது பழைய தந்தக் கோபுர நிலையிலேயே இருந்து இருப்பார்கள் என்று தோன்றியது அவனுக்கு.

இந்த அருமையான சிறுகதையைப் படித்து முடிக்கும் போது இரவு மணி ஒன்று. படிக்கத் தொடங்கும்போது தூக்கம் வந்துவிடும் போலக் கண்ணைச் சுழற்றியது உண்மை. ஆனால் படித்து முடித்த பின்போ மனத்தைப் பல அழுத்தமான சிந்தனைகள் ஆக்கிரமித்துக் கொண்டதன் காரணமாகத் தூக்கம் போய்விட்டது.

தனசேகரன் அந்தப் பழைய வாரப் பத்திரிகையை மறுபடியும் முலையில் தூக்கிப் போட்டு விடாமல் பத்திரமாக தன் படுக்கையின் தலைப்பக்கமாக மடித்து வைத்துக் கொண்டான்.

பீமநாதபுரத்துக்கும், கதையில் வந்த சீமநாதபுரத்துக்கும் ஒரே ஓர் எழுத்துத்தான் வித்தியாசமாக இருந்தது. அதைத் தவிர மற்றொரு வித்தியாசம் அதில் பழைய ராஜா உயிரோடிருந்தார். இங்கே பீமநாதபுரத்தில் தவறுகளையும் ஊழல்களையும் செய்த பழைய ராஜா இறந்து போய்விட்டார். அந்த கதையில் வந்த இளைய ராஜா பூபதியின் நிலையிலேயே இங்கே தானும் இருப்பது தனசேகரனுக்கும் புரிந்தது, இந்த சமஸ்தானமும் இதன் உடைமைகளும் இன்னும் ஏலத்துக்குப் போகிற அவ்வளவு நிலைமைக்குக் கெட்டு விடவில்லை என்றாலும் இங்கே தன் தந்தையும் கணிசமான அளவுக்கு வெளியே கடன் வாங்கி வைத்து விட்டுப் போயிருக்கிறார் என்பது தனசேகரனுக்கு நினைவு வந்தது.

கதை தனசேகரனின் நினைவுகளைத் தூண்டி விட்டு விட்டது. கதையில் வந்த இளையராஜா பூபதியின் கலாசாரப்பற்று தனசேகரனுக்கும் இருந்தது. அதுவும் இந்தச் சிறுகதையைப் படித்த இடம் பீமநாதபுரம் சமஸ் தானத்தின் ‘இண்டலெக்சுவல் நகரம்’ எனப் புகழ் பெற்ற ஆவிதானிப்பட்டியாக இருந்ததனால் அந்த உணர்வுகள் மேலும் பெருகின. வளர்ந்திருந்தன. இதயத்தில் நின்றன. மனம் ஒருவிதமான உருக்கத்தில் இலயித்துப் போயிருந்தது.

மறுநாள் காலையில் எழுந்ததும் காபி குடித்துக் கொண்டே மாமா தங்கபாண்டியனிடம் அந்த சிறுகதையை பற்றிப் பேச்சுக் கொடுத்தான் தனசேகரன்.

“காரியத்தைக் கவனிக்காமே சும்மா கதையையும், நாவலையும் படிச்சுக்கிட்டிருக்கிறதிலே என்ன பிரயோஜனம்? இந்த ஊர்லே நமக்கு நிறைய வேலை இருக்கு. ஒரு வாரத்துக்குள்ளே நான் மட்டுமாவது மலேசியாவுக்குத் திரும்பியாகணும். ஹாங்காங்குக்கு ரப்பர் எக்ஸ்போர்ட் விஷயமா ஒரு எக்ரிமெண்ட் பெண்டிங்கிலே இருக்கு” என்று பதில் கூறினார் மாமா.

அவன் சொல்லிய கதையைப் பற்றி அவர் கவனம் திரும்பவில்லை. அவனே அவர் கவனத்தை ஈர்த்து அந்த வாரப் பத்திரிகையையும் எடுத்துக் காட்டிக் கதைச் சுருக்கத்தையும் அவருக்குச் சொன்னான். முழுவதும் கேட்ட பின் “யாரோ நம்ம சமஸ்தானத்து உள் நிலவரம் எல்லாம் தெரிஞ்சவன் தான் எழுதியிருக்கான். விட்டுத் தள்ளு. இது யாருன்னு கண்டுபிடிச்சு இப்போ என்ன ஆகப்போகுது?” என்று சுலபமாகப் பதில் சொல்லி விட்டார் மாமா!

காலை பத்து மணிக்கு அவர்கள் தங்கியிருந்த ஆவிதானிப்பட்டி பி.டபிள்யூ.டி. இன்ஸ்பெக்ஷன் பங்களாவுக்கு ஐந்தாறு தமிழ்ப் புலவர்கள் தேடி வந்திருந்தார்கள். மாமா அவர்களைப் பார்க்கவே தயங்கினார். தனசேகரனோ அவர்களைச் சந்திக்கத்தான் வேண்டும் என்றான்.

“சந்திக்கணும்னு நீ விரும்பினால் தாராளமாகச் சந்தித்துப் பேசு. எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை, ஆனால் இந்தப் புலவங்க ஏதாவது மான்யம் நின்னு போனது பத்தித்தான் உங்கிட்ட வந்து குறை சொல்லப் போறாங்க. சமஸ்தானத்தை உங்கப்பாரு இப்ப வச்சிட்டுப் போயிருக்கிற கஷ்ட நிலையிலே யாருக்கும் எதுவும் செய்யிறாப்லே இல்லை. அதை மட்டும் நல்லா ஞாபகத் திலே வச்சுக்கோ’’ என்றார் மாமா.

மாமாவை உள்ளேயே விட்டுவிட்டு வெளி வராந்தாவுக்குப் போய் அந்தப் புலவர்களோடு அமர்ந்து பேசினான் தனசேகரன். தேடி வந்து விட்டவர்களை முகத்தில் அடித்தாற் போல் திருப்பி அனுப்ப அவனுக்கு விருப்பம் இல்லை. எல்லாருக்கும் பருகுவதற்குக் காபி வரவழைத்துக் கொடுத்து உபசரித்தபின் அவன் கனிவாக உரையாடத் தொடங்கினான்.

வந்திருந்த அந்தப் புலவர்கள் மறுபடி சமஸ்தானத்தில் வருஷா வருஷம் நவராத்திரி விழாவையும், தமிழ்ப் புலவர்களின் வித்வத் சதஸையும் நடத்தவேண்டும் என்றும், அப்படி நடத்தினால்தான் பீமநாதபுரத்தைப் பிடித்திருக்கிற வறுமைகளும், கடன் கஷ்டங்களும், பீடைகளும் விலகும் - மழை நன்றாகப் பெய்யும் என்றும் யோசனை கூறி னார்கள். அவர்களுடைய மனம் புண்பட்டு விடாமல் தனசேகரன் அதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டான்.

“சமஸ்தானமே ஆவிதானிப்பட்டிப் புலவர்களின் பிரபந்தங்களை எல்லாம் வெளியிட வேண்டும்” என்றார் மற்றொரு புலவர். தனசேகரன் எதையும் நேருக்கு நேர் மறுத்து விடாமல் கேட்டுக் கொண்டான். சிறிது நேரம் கழித்து அவர்களை வாயில்வரை உடன் சென்று வழியனுப்பிவிட்டு உள்ளே திரும்பியதும் மாமா வேறொரு முக்கியமான விஷயத்தைத் தனசேகரனிடம் ஆரம்பித்தார்.

அத்தியாயம் - 9

தனசேகரனின் மனத்தில் அப்போதிருந்த விஷயத்திற்கும், மாமா தங்கபாண்டின் பேசத் தொடங்கிய விஷயத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. அவன் அப்போ திருந்த இனிய உன்னதமான மனநிலையை அவர் பேச்சு ஒரளவு கலைத்து விட்டது என்று கூடச் சொல்ல வேண்டும். அவன் சமஸ்தானத்தின் கலாசாரப் பெருமைகளை யும் புலமைச் செல்வங்களையும் பற்றி நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த போது அவர் அவனுடைய கல்யாணத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

“இனிமேல் நீ உன் குடும்பப் பொறுப்புக்களையும், சமஸ்தானப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பெரிய ராஜா, அதான் உங்கப்பாவோட உனக்கு ஒத்து வரலேன்னுதான் நீ மலேசியாவுக்கு வந்து என்னோட இருக்கும்படியாச்சு. இனிமேல் அந்தப் பிரச்னை இல்லை. கல்யாணத்தை முடிச்சுக்கிட்டு நீ ஊரோட வாசலோட இருந்திட வேண்டியதுதான். ஏற்கனவே நீயும் நானும் காலஞ்சென்ற உங்கம்மாவுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறபடி நீ என்னோட மூத்த மகளைக் கட்டிக்கிறே” - திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டவர் போல் அவர் இந்தப் பேச்சை ஆரம்பித்திருந்தார்.

“அதுக்கெல்லாம் இப்ப என்ன மாமா அவசரம்? ஏற்கெனவே பேசி முடிச்ச விஷயம்தானே?” என்று சற்றே தலைகுனிந்து சிரித்தபடி முகம் சிவக்கப் பதில் சொன்னான் தனசேகரன். சற்று முன் தான் படித்திருந்த சிறுகதையின் விளைவாகத் தன் தந்தையை மாமா பெரிய ராஜா என்று கூப்பிட்டதைக் கூட அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஏதோ காலங்கடத்து போன ஒரு வார்த்தையை அவர் உபயோகப்படுத்தியது போல அவன் உணர்ந்தான். அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது கிராமத்தின் கர்ணம், கிராம முன்சீஃப் ஆகியோருடன் அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை வந்து சேர்ந்தார். நிலங்கள் பற்றிப் பேச அவர்களை அவர் அழைத்து அந்திருக்கவேண்டும்.

காரியஸ்தர் வந்ததும் வராததுமாகக் காலையில் கொடுக்கப்பட்ட காபி டிஃபன் மிகவும் மட்டமாக இருந்த தென்று மாமா புகார் செய்தார். ஒரு சின்ன கிராமத்தின் பி.டபிள்யூ.டி. இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் இதைவிட நல்ல காபியையும், டிஃபனையும் எதிர்பார்க்க முடியாது என்பதைத் தனசேகரன் உணர்ந்திருந்தான். அதற்காகக் காரியஸ்தரைக் கண்டித்துப் பயனில்லை என்பதையும் அவன் அறிவான். பொதுவில் நகரங்களைவிடக் கிராமங்களில் தான் காபி, சிற்றுண்டி உணவுப் பண்டங்கள் எல்லாம் சுத்தமாகவும் சுவையாகவும், கலப்படமில்லாமலும் இருக் கும் என்கிற காலம் மலையேறிக் கிராமங்களும் லாபம் சம்பாதிக்கக் கற்றுக் கொண்டிருப்பது புரிந்தது. நகரங்களின் சூதுவாதுகள், வஞ்சகங்கள் எல்லாம் கிராமங்களுக்கும் மெல்ல மெல்லப் பரவிக் கொண்டிருந்தது. பல வருடங்களாக மலேசியாவில் எஸ்டேட் உரிமையாளராகச் செல்வச் செழிப்பிலும், சுகபோகங்களிலும் மிதந்து கொண்டிருந்த மாமாவினால் ஒரு சாதாரண தென்னிந்திய கிராமத்தின் மூன்றாந்தரச் சிற்றுண்டி விடுதி ஒன்றின் மட்டரக உணவைப் பொறுத்துக் கொள்ள முடியாததில் வியப்பில்லை. அவருக்கு வழக்கப்படி காலையில் சுடசுடப் பாலும் ‘கார்ன் ஃப்ளேக்கும்’ வேண்டும். ஆவிதானிப்பட்டியில் உள்ளவர்களுக்குக் ‘கார்ன்ஃப்ளேக்’ என்றால் என்னவென்றே தெரியாது.

காரியஸ்தரை மாமாவின் கோபத்திலிருந்து மீட்பதற்காகத் தனசேகரன் உடனடியாக ஒரு தந்திரம் செய்தான். உடனே பேச்சை நிலபுலங்களைப் பற்றித் திருப்பிவிட்டான். நிறைய நிலங்களை ஏற்கெனவே தன் தந்தை விற்றிருந்தார் என்பதை அவன் அறிவான். எனினும் பட்டா மாறுதல் பற்றிய விவரங்களோடு கிராம அதிகாரிகள் வாயிலிருந்தே அது வரட்டும் என்று காத்திருந்தான். தன்னுடைய தந்தை குடி, கூத்து, குதிரைப்பந்தயம், வைப்பாட்டி முதலிய ஊதாரிச் செலவுகளின் உடனடித் தேவைக்காகச் சமஸ்தானத்துச் சொத்துக்களை அப்போதைக்கப்போது வாரி இறைத்திருந்தாலும் ஜனங்களுக்கு என்னவோ அதன் காரணமாக இன்னும் அவர் மேல் கோபம் எதுவும் வரவில்லை என்பது தனசேகரனுக்குப் புரிந்தது. ராஜா என்கிற மரியாதை மக்களுக்கு இருந்தது. ‘யானை இருந் தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பது போல்தான் மக்கள் இன்னும் பேசிக் கொண்டிருந்தனர். மாமாவும் தானும் மட்டுமே காலஞ்சென்ற தன் தந்தையின் குறைகளை எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதாக அவனுக்குப் பட்டது.

மக்களுக்கு ஏதாவது ஒருவர் மேல் அல்லது ஒன்றின் மேல் பக்தியோ பிரமையோ ஏற்பட்டு விட்டால் அதை இலேசில் போக்கிவிட முடியாது என்றும் தோன்றியது தனசேகரனுக்கு. ‘ஓர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது’ என்ற கதையைப் படித்ததன் காரணமாகத் தன் தந்தையின் மேலும், சமஸ்தானத்தின் ஊழல்கள் மேலும் தனக்கு ஏற்பட்டிருக்கும் உணர்வுகள் மற்றவர்களுக்கு ஏற்பட்டிருக்க நியாயமில்லை என்பது அப்போது அவனுக்கே தெரிந்தது. மாமா நிலங்கரைகளையும் கரைந்து போனவை தவிர எஞ்சிய சமஸ்தானத்துச் சொத்துச் சுகங்களையும் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். அவனோ ஏட்டுச் சுவடி களையும், ஓவியங்களையும், புத்தகங்களையும் சிற்பங்களையும் காப்பாற்றுவதற்கு அதிக அக்கறை எடுத்தவனாகக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான்.

காலஞ்சென்ற அவன் தந்தை பரிமேய்ந்த நல்லூரில் செய்தது போல்தான் இங்கும் செய்திருந்தார். நிலங்களை அடமானமாக வைத்துக் குத்தகைக்காரர்களிடமிருந்து அதிகப் பணம் வாங்கியிருந்தார். கணக்குகள் எல்லாம் ஒரே குழப்பமாயிருந்தன. எதுவும் தெளிவாக இல்லை.

“நீங்கதானே காரியஸ்தராக இருந்தீங்க மிஸ்டர் சேர்வை? உங்களுக்குக் கூடத் தெரியாமல் எதுவும் நடந் திருக்க முடியாதே! ஒண்ணுமே இல்லாமே துடைச்சி ஒழிச்சி வச்சிட்டுப் போயிருக்கணும். அல்லது நிறையச் சேர்த்து வச்சிட்டுப் போயிருக்கணும், இப்படி ரெண்டுங் கெட்டானா வச்சுக் கழுத்தறுக்கப்பிடாது” என்று காரியஸ் தரை நோக்கிச் சத்தம் போட்டார் மாமா. தனசேகரனுக்கு அந்தக் கோபம் அநாவசியமாகப்பட்டது.

“பண விஷயங்களிலே பெரிய ராஜா தாறுமாறாகத் தோணினபடி எல்லாம் வரவு செலவு பண்ணியிருக்கார். ரசீது கிடையாது. வவுச்சர் கிடையாது. கணக்குக் கிடையாது. எங்கே எதற்காக வாங்கினோம் என்றும் விவரம் கிடையாது. தப்பு என்மேலே இல்லை. பெரிய ராஜா செய்ததை எல்லாம் பார்த்துப் பல சமயங்களிலே நான் என் வேலையையே விட்டுவிட்டுப் போயிடலாம்னு நினைத்தது உண்டு. காரியஸ்தனா இருந்த என்னைக் கலந்து கொள்ளாமலும் எனக்குத் தெரிவிக்காமலுமே மகாராஜா எத்தனையோ வரவு செலவு பண்ணினதை நான் தடுக்க முயன்றும் முடிஞ்சதில்லை, நான் சொல்லாமலே பெரிய ராஜா குணம் உங்களுக்குத் தெரியும். என் நிலைமையிலே நீங்க இருந்திருந்தா என்ன செய்ய முடியும்னு யோசனைப் பண்ணிப் பாருங்க... போதும்” என்று கோபப்படாமல் நிதானமாகப் பதில் கூறினார் பெரிய கருப்பன் சேர்வை. மாமாவால் பதில் பேச முடியவில்லை.

ஆவிதானிப்பட்டி நிலங்கள் சம்பந்தமான கணக்கு வழக்குகளை ஒழுங்கு செய்ய மேலும் இரண்டு நாட்கள் பிடித்தன. அந்த இரண்டு நாட்களில் சில பரம்பரைப் புலவர்களின் வீட்டுக்குச் சென்று பரண்களில் இருந்த அரிய ஏட்டுச் சுவடிகளையும் பழம் பிரபந்தங்களையும் பார்த்தான் தனசேகரன். அந்த ஊரில் பழஞ்சுவடிகள், பிரபந்தங்கள், புலவர்களின் படங்கள், அவர்கள் வாழ்நாளில் உபயோகித்த பண்டங்கள் அடங்கிய பொருட்காட்சி ஒன்றை ஏற்படுத்துவது சம்பந்தமாகவும் சிலரைக் கலந்து பேசினான். கணக்கு வழக்கு, கடன், பற்று வரவு விவகாரங்களில் சிறிதும் பட்டுக் கொள்ளாதவன் போல் ஒதுங்கி அவன் சுவடிகளையும் புலவர்களையும் காணப் போனது மாமாவுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அதற்காக அவரால் அன்னைக் கடிந்து கொள்ளவோ கண்டிக்கவோ முடியவில்லை.

பிரியத்திற்குரிய செல்ல மருமகன் என்ற உறவு ஒரு புறமும், வருங்காலத்தில் தன் சொந்த மகளை மணந்து கொள்ளப் போகிற மரியாதைக்குரிய மாப்பிள்ளை என்ற வருங்கால உறவு ஒரு புறமுமாக அவரைப் பற்றிக்கொண்டு தனசேகரனை ஒரு சிறிதும் கண்டிக்க முடியாமல் அவரைத் தடுத்து விட்டன.

ஆவிதானிப்பட்டி வேலைகள் முடிந்ததும் அவர்கள் மூவரும் சமஸ்தானத்தின் தலைநகருக்குத் திரும்பி விட் டார்கள். தலைநகரில் நிறைய வேலைகள் அரைகுறையாக இருந்தன. அரண்மனைக் கருவூலத்தைத் திறந்து என்னென்ன இருக்கிறது, என்னென்ன இல்லை என்று பார்க்க வேண்டிய நிலையில் அவர்கள் இருந்தார்கள். கருவூலத்தின் பட்டியல் அடங்கிய புராதனமான நோட்டுப் புத்தகத்தைத் திவான்கள் பதவி வகித்த பழங்காலத்தில் அவர்கள் வைத்திருப்பது வழக்கம். திவான்களிடம் இருக்கும் அதே பட்டியலின் நகல் ஒன்று ராஜாவிடமும் இருக்கும். ராஜாவிடம் இருக்கும் பட்டியல் தொடர்ந்து வாரிசுப்படி கை மாறிக் கொண்டிருப்பதும், திவான்களிடம் இருக்கும் பட்டியல் அடுத்தடுத்துப் பதவிக்கு வருகிற திவானிடம் கைமாறிக் கொண்டிருப்பதும் வழக்கம். திவான்களின் காலம் முடிந்து அந்தப் பதவி ஒழிக்கப்பட்ட பின்னர் இரண்டு பட்டியலுமே மகாராஜாவின் கைக்குப் போய்விட்டதாகவும் தன்னிடம் அந்த மாதிரிப் பட்டியல் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பதாகவும் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை கூறினார். பழைய ஏற்பாட்டின்படி திவானுக்குத் தெரியாமல் ராஜா எதுவும் செய்ய முடியாது. பணத்தட்டுப்பாடு காரணமாகத் திவான் பதவி போனதும் காலஞ்சென்ற பெரிய ராஜாவுக்குத் தட்டிக் கேட்க ஆளில்லாத நிலைமை ஏற்பட்டது. இஷ்டம் போல் எதையும் வாங்கினார். தோன்றியபடி அரண்மனைச் சொத்துக்களை விற்றார் அவர்.

“எதற்கும் காலஞ்சென்ற பெரிய ராஜாவின் அந்தரங்க அறையில் தேடிப்பார்க்கலாமே? ஒருவேளை அந்தப் பட்டியல் அங்கே அகப்பட்டாலும் அகப்படலாம். பட்டியல், கிடைத்தால் எதெது மீதமிருக்கிறது எதெது பறிபோயிருக்கிறது என்றாவது கண்டு பிடிக்கலாம். இல்லாவிட்டால் எதெது எல்லாம் முன்பு இருந்தன, எதெது எல்லாம் இப்போது இல்லை என்பதைப் பிரித்துக் கண்டுபிடிக்கவே முடியாது. என்ன? நான் சொல்வது புரிகிறதா மிஸ்டர் சேர்வை?...”

பெரிய கருப்பன் சேர்வை புரிகிறது என்பதற்கு அடையாளமாக மாமாவை நோக்கித் தலையை ஆட்டினார்.

“அரண்மனை லைப்ரரி, ஐம்பொன் சிலைகள் அடங்கிய விக்ரக சாலை, வாகனங்கள் உள்ள வாகன சாலை எல்லாம் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறது. அதைப்பற்றி ஏதாவது சொல்லுங்களேன் காரியஸ்தரே?” என்றான் தனசேகரன்.

“மன்னிக்க வேண்டும்! பெரியவர் இந்த அரண்மனையை விட்டுவிட்டுப் போயிருக்கிற நிலையில் எதைப் பற்றியும் இப்போது எதுவும் சொல்லுகிறாற் போல், இல்லை. எங்கே எதை எந்த அவசரத் தேவைக்காக விற்றிருப்பாங்கன்னு ஒண்ணும் சொல்ல முடியாது. இந்தக் கால கட்டத்திலே ஒரு சமஸ்தானத்தோட காரியஸ்தரா, மாட்டிக்கிட்டிருக்கக் கூடாதுன்னு நானே பல தடவை என் வேலையை விட்டுட நினைச்சிருக்கேன். பெரிய ராஜா எதையாவது எனக்குத் தெரிஞ்சோ தெரியாமலோ யாருக் காவது விற்றால் அதை நான் ஏன்னும் எதற்குன்னும் தட்டிக் கேட்க முடியாது” என்று குறைப்பட்டுக் கொண்டார் காரியஸ்தர்.

அவர் அதைச் சொல்லிய விதம், ‘என்னைப்போய்த் தொந்தரவு செய்கிறீர்களே? நான் என்ன செய்வேன்?’ என்பது போல இருந்தது. தனசேகரன் மேற்கொண்டு அப்போது அவரை எதுவும் கேட்க விரும்பவில்லை. இரண்டு நாள் ஒரு வேலையுமின்றி மெளனத்தில் கழிந்து போயின.

இதற்கிடையில் ஒரு நாள் காலைத் தபாலில் சென்னையிலிருந்து நடிகை ஜெயநளினி தனசேகரனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தாள். அந்த ரிஜிஸ்தரைக் கையெழுத்திட்டு வாங்கிய சுவட்டோடு அதைக் கொண்டு வந்து மாமாவிடமும் தனசேகரனிடமும் படித்துக் காண்பித்தார் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை.

“அவளுக்கு ஒரு எழவும் தெரியாது. இதெல்லாம் செய்யச் சொல்லி அந்தக் காலிப்பயல் கோமளீஸ்வரன்தான் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். முடிந்த மட்டில் பணம் பறித்துவிட வேண்டும் என்று பார்க்கிறார்கள். ஏற்கனவே இந்தச் சமஸ்தானச் சொத்தில் முக்கால்வாசி பிடுங்கித் தின்றாயிற்று. இன்னும் கொள்ளையடிக்க என்ன குறையிருக்கிறதோ?” என்று கடுமையான குரலில் இரைந்தார் மாமா தங்கபாண்டியன்.

காலஞ்சென்ற பட்டத்து ராணிக்குப் பின் தானே பீமநாத ராஜசேகரபூபதியின் முறையான மனைவி ஸ்தானத்தில் இருந்து வந்ததாகவும் அதற்குச் சான்றாக் மகாராஜாவின் பல கடிதங்கள் தன்னிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டு அவருடைய சொத்தில் தனக்கு சேர வேண்டிய பகுதியைத் தன்னிடம் ஒப்படைக்கக் கோர்ட்டாரவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வழக்குத் தொடுத்திருந்தாள் அந்த நடிகை.

“திவாலாகிப்போன இந்தச் சமஸ்தானத்தில் என்ன என்ன மீதமிருக்கிறது என்று நினைத்துக்கொண்டு இப்படி எல்லாம் அதைப் பிரித்துக் கொடு, இதைப் பிரித்துக்கொடு, என்று நோட்டீஸ் விட்டுக் கொண்டிருக்கிறார்களோ? எங்கப்பா வைத்து விட்டுப் போயிருக்கிற கடன் பளுவை வேண்டுமானால் அந்தப் பணக்கார நடிகையிடம் கொஞ்சம் பிரித்து கொடுக்கலாம்” என்று சிரித்துக்கொண்டே கூறினான் தனசேகரன்.

“இப்போ யாரு சமஸ்தான வக்கீல்? அவரைக் கூப்பிட்டு யோசனை கேட்கலாமே? அப்பத்தான் இந்த நோட்டீஸுக்கு என்ன பதில் எழுதறதுன்னு தெரியும்?”

“வக்கீல் முன்னே இருந்தாங்க! அவங்களுக்கு மாசச் சம்பளம் கூடக் கொடுக்கிறதா அரண்மனை ரெக்கார்ட்ஸிலே இருக்கு. இப்போ அப்படியெல்லாம் அந்தப் பெயரிலே யாரும் கிடையாது. இந்த ஊர்லே பழைய திவான் ஒருத்தரோட பேரன் வக்கீலா ப்ராக்டிஸ் பண்றார். அவசர ஆத்திரத்திற்கு அவரைத்தான் கூப்பிட்டனுப்பறது வழக்கம். முக்கியமான ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் விஷயம்னா மெட்ராஸ்லே அடையார்லே ஒரு வக்கீல் இருக்கார். அவரிட்டப் போவோம்...”

“சரி! இப்போ இந்த திவானோட பேரனைத்தான் கூப்பிட்டனுப்பு மேன். சும்மா ஒரு யோசனை கேட்கத் தானே?” என்று மாமா சொன்னார். உடனே காரியஸ்தர் டெலிஃபோன் நம்பரைத் தேடிக் கூப்பிட்டார். வக்கீல் ஊரில் இல்லை என்றும் சென்னை சென்றிருக்கிறார் என்பதாகவும் பதில் வந்தது.

உடனே அவர்கள் மூவருமாக வக்கீல் சம்பந்தப்பட்ட வேலையை அப்புறமாகக் கவனித்துக் கொள்ளலாம் என்று ஒத்தி வைத்துவிட்டு ஸீல் வைத்துப் பூட்டப்பட்டிருத்த மகாராஜாவின் அந்தரங்க அறையைத் திறப்பதற்குச் சென்றார்கள்.

பெரிய ராஜா இறந்த தினத்தன்று சில பொருள்கள் திருடு போகத் தொடங்கியதை முன்னிட்டு அவருடைய சடலத்தை வேறு இடத்திற்கு எடுத்துச் சென்றதுமே இந்த அறையைப் பூட்டிச் சீல் வைத்திருந்தார்கள். இப்போது கடன்கள், வரவு செலவு நிலவரங்கள், அரண்மனைக் கருவூலம் பற்றிய பட்டியல்கள் இவற்றைத் தேடுவதற்காக அந்த அறையை மறுபடியும் அவர்களே திறக்க நேர்ந்தது.

பல உண்மைகளை அறிந்து கொள்வதற்குக் காலஞ் சென்ற பெரிய ராஜா, அவர் கைப்படவே எழுதிய டைரிகள் தேவைப்பட்டன. தனசேகரன் மட்டுமே அந்த டைரிகளைப் படிக்கும் உரிமையுடையவன் என்றும் கணக்கு வழக்குகளைச் சரி செய்வதற்கும் வரவு செலவு பற்றிய நிலவரங்களை அறிவதற்கும், அந்த டைரிகளிலிருந்து தனசேகரன் ஏதாவது விவரங்களைக் கூற முடியுமானால் உபகாரமாக இருக்குமென்றும் மாமாவும் காரியஸ்தரும் அபிப்பிராயப் பட்டார்கள். தனசேகரனும் அதற்கு இணங்கியிருந்தான். அவர்கள் பெரிய ராஜாவின் அந்தரங்க அறையைத் திறந்தபோது பிற்பகல் மூன்றேகால் மணி. பகலுணவுக்குப் பின் சிறிது நேரம் ஒய்வு கொண்ட பிறகு ஆளுக்கு ஒரு கப் காபியும் அருந்திவிட்டு அவர்கள் அந்த வேலையைத் தொடங்கியிருந்தார்கள்.

அங்கே இரண்டு மூன்று அலமாரிகள் நிறையக் காலியான ஸ்காட்ச் பாட்டில்களும், ஜின் பாட்டில்களும், ரம் பாட்டில்களும் அடைத்துக் கொண்டு கிடந்தன. ஓர் அலமாரியில் இன்னும் ஸீல் உடைக்காத அந்நிய நாட்டு விஸ்கி பாட்டில்களும் பிறவும் இருந்தன. இன்னோர் அலமாரி நிறையப் பழைய ப்ளேபாய் மேகஸின்களும் வேறு சில நிர்வாணப் படப் பத்திரிகைகளும் நிரம்பிக் கிடந்தன. அப்பாவின் குணச்சித்திரத்தை விளக்கும் உருவங்களாக இவை தனசேகரனுக்குத் தோன்றின. ஒரு வேளை தம்முடைய அந்தரங்க அறையில் அவர் மீதம் வைத்துவிட்டுப் போயிருக்கும் சொத்துக்களே இந்தக் காலி பாட்டில்களும், பழைய பத்திரிகைகளும் மட்டும் தானோ என்றுகூடத் தனசேகரனுக்குச் சந்தேகமாயிருந்தது.

“ராஜா இறந்து போன இரண்டு மூன்று மணி நேரத்திலேயே அருகே வந்து அழுது ஒப்பாரி வைக்கிற சாக்கில் இளைய ராணிகள் அகப்பட்டதைச் சுருட்டியாச்சு சார்!” என்றார் காரியஸ்தர்.

“அப்படியே சுருட்டியிருந்தாலும் எங்கே கொண்டு போயிருக்கப் போறாங்க? இங்கே அரண்மனைக்குள்ளாரத் தானே வச்சிக்கிட்டிருக்கணும். ஒரு சோதனை போட்டா எல்லாம் தானே வெளியே வருது” என்றார் மாமா.

“அதெல்லாம் எங்கே தேடினாலும் உங்களுக்கு ஒரு துரும்பு கூடக் கிடைக்காது. எல்லாம் இதுக்குள்ளார நூறு மைல் இருநூறு மைல் கூடத் தாண்டிப்போயிருக்கும்” என்று சிரித்துக் கொண்டே நிதானமாக மாமாவுக்குப் பதில் சொன்னார் காரியஸ்தர்.

பெட்டிகள், சூட்கேஸ்கள் கைப்பைகள் எல்லாவற்றையும் குடைந்து பார்த்துக் கடைசியில் அரண்மனைக் கருவூலத்தில் உள்ள பண்டங்களின் பட்டியல் அடங்கிய ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பல டைரிகளையும் எடுத்து விட்டார் மாமா. கருவூலப் பட்டியல் புத்தகத்தில் நடுவே பல பக்கங்கள் அங்கங்கே கிழிக்கப் பட்டிருந்தன. சில பக்கங்கள் பயங்கரமான முறையில் மையால் அடிக்கப்பட்டும் திருத்தப்பட்டும் இருந்தன. எல்லாம் அப்பாவின் வேலை யாகத்தான் இருக்க வேண்டும் என்பது யாரும் சொல்லாமலே தனசேகரனுக்குப் புரிந்தது. மாமா மிகவும் கோபமாகக் காணப்பட்டார், அரண்மனைச் சொத்துக்களின் எந்தப் பகுதியையும், எந்தப் பிரிவையும் அப்பா சீரழிக்காமல் விட்டு வைக்கவில்லை என்பது இப்போதும் தெரிந்தது.

“நீர் என்னய்யா காரியஸ்தர்? வேலை பார்த்த இடத்தின் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைப் பார்த்த பின்பும் சும்மா இருந்திருக்கிறீரே? இதை எல்லாம் உமது உத்தியோகக் கடமையாக நீர் செய்திருக்க வேண்டாமா?” என்று காரியஸ்தரைக் கேட்டார் மாமா.

“வேலியே பயிரை மேயத் தொடங்கினால் யார் தான் சார் அதைத் தடுத்துக் கட்டிக்காக்க முடியும் என் நிலைமையிலே நீங்க இருந்திருந்தால்தான் இதை எல்லாம் நீங்க புரிஞ்சுக்க முடியும்? நான் சம்பளம் வாங்குகிற உத்தியோகஸ்தன். எனக்குச் சம்பளம் கொடுக்கிற மகாராஜா ஒரு பொருளைத் திருட்டுத்தனமாக விற்கிறப்பவோ, சீரழிக்கிறப்பவோ, அவரு எங்கிட்டச் சொல்லிட்டுத்தான் அதை செய்யணும்னு என்ன அவசியம்? அப்படி மகாராஜாவே அதை எல்லாம் துணிஞ்சு செய்யறப்போ அதைத் தட்டிக் கேட்க எனக்கு என்ன அதிகாரம் இருக்கு? இதை எல்லாம் கொஞ்சங்கூட யோசிச்சுப் பார்க்காமே நீங்கத் திரும்பத் திரும்ப என்னைக் கேள்விக் கேட்டுப் பிரயோஜனம் இல்லை” என்று சேர்வைகாரரும் கொஞ்சம் அழுத்தமாகவே மாமாவுக்குப் பதில் சொன்னார்.

வைரங்களும், வைடூரியங்களும், ரத்தினங்களும், மரகதங்களும், தங்கம் வெள்ளிப் பண்டங்களும் நிறைந்ததென்று ஊரறிய உலகறியப் புகழப்பட்டிருந்த பீமநாதபுரம் கருவூலத்தை அநேகமாகக் காலி செய்து துடைத்து வைத்திருந்தார் காலஞ்சென்ற மகாராஜா. சில விலையுயர்ந்த வைர நகைகளுக்குப் பதில் கில்ட் நகைகள் பேருக்கு அதனதன் இடத்தில் வைக்கப்பட்டிருந்தன. அரண்மனை எல்லைக்குள்ளேயே இருந்த குலதெய்வத்தின் கோயில் நகைகள் கூடக் களவாடப்பட்டிருந்தன. காவலாளியே திருடிய திருட்டை யாரிடம் போய் முறையிடுவது என்று அவர்களுக்குப் புரியவில்லை. சில பெரிய பெரிய வெள்ளிப் பாத்திரங்கள், கோவிலுக்குச் சொந்தமான ஒரு பெரிய தங்கக்குடம், சில சிறிய தங்கப் பாத்திரங்கள் ஆகியவை தான் மீதமிருந்தன. அப்பா இவற்றை மட்டும் எப்படி மீதம் விட்டார் என்று தனசேகரனுக்கே ஆச்சரியமாக இருந்தது.

“நிலவரம் ஒண்ணும் திருப்தியா இல்லே தனசேகரன்! மேலே மேலே தேடிப் பார்த்தோம்னாக் குழப்பம் தான் மிஞ்சும் போல இருக்கு. எப்படியும் இந்த அரண்மனை விவகாரங்களை, இன்னும் ஒரு வாரத்திலேயோ பத்து நாளிலேயோ செட்டில் பண்ணி, உங்கிட்ட விட்டுட்டு நான் ஊருக்கு ப்ளேன் ஏறலாம்னு பார்க்கிறேன். நீ இந்த டைரிகளைச் சீக்கிரம் படிச்சுப் பார்த்து உங்கப்பாவோட வரவு செலவுகளைச் சரி பாரு. அவர் வாங்கின கடனையும் டைரியிலே எழுதி இருக்கணும். திருப்பிக் கொடுத்த கடனையும் கொடுக்க வேண்டிய கடனையும் டைரியிலே எழுதியிருக்கணும்” மாமா தாம் கண்டுபிடித்த டைரிகளைத் திரட்டி எடுத்துத் தனசேகரனிடம் நீட்டினார். “நான்தான் படிக்கணும்கிறது இல்லே மாமா! நீங்களே இதையெல்லாம் படிச்சுக் கண்டுபிடிச்சு எழுதினாலும் பரவாயில்லே. மாமா இதைப் பார்த்தால் எனக்கும் தருப்திதான்.”

“அது முறையில்லே தனசேகரன்! ஒரு தகப்பனோட அந்தரங்கக் குறிப்புக்களை மகன் பார்க்கிறதே கூடச் சரி இல்லை. ஆனால் காரியம் ஆகணுமேங்கறதுக்காகத்தான் இதை உன்னைப் பார்க்கச் சொல்றேன் நான். நீயே பாரு! நான் பார்க்க வேண்டாம்” என்று மாமா மறுத்துவிட்டார். தனசேகரன் அப்பாவின் டைரிகளை எல்லாம் வாங்கிக் கொண்டு தன் அறைக்குச் சென்றான். ஏற்கெனவே ஆவிதானிப்பட்டி பி.டபிள்யூ.டி. இன்ஸ்பெக்ஷன் பங்களாவிலிருந்து எடுத்து வந்த அந்தச் சிறுகதை அடங்கிய பழைய வாரப் பத்திரிகையும் அவன் அறையில் பத்திரமாக இருந்தது.

அத்தியாயம் - 10

தந்தையின் நாட்குறிப்புக்கள் அடங்கிய டைரிகளைப் படிப்பதற்கு முன் அவற்றைத் தனசேகரன் இரண்டு வகையாகப் பிரித்து வைத்துக் கொண்டான். ராஜமான்யம் ஒழிக்கப்படுவதற்கு முந்திய காலத்து நாட்குறிப்புக்கள் அடங்கிய டைரிகள். ராஜமான்யம் ஒழிக்கப்பட்ட பின் எழுதப்பட்ட நாட்குறிப்புகள் அடங்கிய டைரிகள் என்று அவற்றைப் பகுத்துக் கொண்டால் தான் நிலைமைகளைக் கண்டறிய ஏற்றபடி இருக்கும் என்று அவன் மனத்தில் பட்டது. ராஜமான்யம் கிடைத்தவரை சமஸ்தானத்தில் அவ்வளவு பணக்கஷ்டம் இருந்திருக்க முடியாது. வரவு செலவுகளில் அதிகமான குழப்பமும் இருந்திருக்காது. பணத்தட்டுப்பாடு வந்த பின்னால்தான் இந்த வரவு செலவுச் சிக்கல்கள் எல்லாம் வந்திருக்க வேண்டும் என்று கூடத் தோன்றியது.

அந்நியர்களான பிரிட்டிஷ்காரர்களின் தொடர்பும் பிரிட்டிஷ் நாகரீகத்தை இமிடேட் செய்வதும் பெருமையாகக் கருதப்பட்டு வந்த தலைமுறையைச் சேர்ந்தவராகையினால் அரைகுறையாக ஆங்கிலம் தெரிந்திருந்தும் தன் டைரிகளை எல்லாம் தப்புத் தப்பான ஆங்கிலத்திலேயே எழுதியிருந்தார் தந்தை. அந்த அரைகுறை ஆங்கிலத்தைப் பார்த்துத் தனசேகரன் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான். வெள்ளைக்காரர்கள் செய்ததை எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே இமிடேட் செய்த இந்திய சமஸ்தானாதிபதிகள் தாங்கள் அந்நியர்களிடம் இருந்து இமிடேட் செய்பவை எல்லாம், இந்தியச் சூழ்நிலைக்கு, எந்த அளவு ஏற்கும், எந்த அளவு ஏற்காது, என்றெல்லாம் கூடச் சிந்தித்துப் பார்க்கவில்லை. வெள்ளைக்காரர்கள் செய்பவை எல்லாமே பெருமைக்குரியவையாகத்தான் இருக்கவேண்டும் என்று குருட்டுத்தனமாக எண்ணுகிற மனப்பான்மைதான் அன்று எல்லா இந்திய ராஜாக்களையும் பிடித்திருந்தது. அடிமைத்தனம் என்பது கேவலமாகவும், வெட்கப்படுவதற்குரியதாகவும் கருதப்படுவதற்குப் பதில் ஒரு கெளரவமாகவும், நாகரீகமாகவுமே கருதிப்பட்டு அநுசரிக்கப்பட்ட காலத்தைப் பற்றிய நாட் குறிப்புக்களைத் தான் அப்போது தான் புரட்டிக் கொண்டிருப்பதாகத் தனசேகரனுக்குத் தோன்றியது. தன் தந்தை மட்டுமல்ல: எல்லா இந்திய மன்னர்களும் சமஸ்தானாதிபதிகளுமே அந்தக் காலகட்டத்தில் அப்படித்தான் அந்நிய அடிவருடிகளாக இருந்திருக்கிறார்கள் என்பது தனகேகரனுக்குத் தெளிவாகப் புரிந்தது. பீமநாதபுரத்தின் கலாசாரப் பெருமையை இந்த ஆங்கில அடிமை மனப்பான்மை அதிகம் பாதித்து விடவில்லை, என்றாலும் தன்மானத்தை நிறையப் பாதித்திருந்தது. தன் தந்தையைப் பற்றியும் அவருடைய குணங்களைப் பற்றியும், இனிமேல் புதிதாகத் தெரிந்து கொண்டு. ஆகவேண்டியது எதுவும் இல்லை என்றாலும் அவருடைய டைரிகளைப் படிக்கத் தொடங்கிய பின்னர் தனசேகரனுக்கு அவர் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் மேலும் மேலும் குறைந்து கொண்டே வந்தது. டைரிகளில் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லா விஷயங்களையும் எழுதி வைத்திருந்தார் அவர். ஒரு தந்தையைப் பற்றி மகன் தெரிந்து கொள்ள அவசியமில்லாத - தெரிந்து கொள்ளக்கூடாத - தெரிந்து கொள்ள வேண்டாத பல விஷயங்கள் கூட அந்த நாட்குறிப்புக்களில் இருந்தன. நாட் குறிப்புக்களைப் படிக்கப் படிக்கத் தாயின் மேல் அதிக மரியாதையும் தந்தையின் மேல் படிப்படியாக வெறுப்பும் அவனுள்ளே வளர்ந்தன.

தன் தாயின் சகோதரரும் தன் மாமனுமாகிய தங்க பாண்டியன் அந்த டைரிகளைப் படிக்காதது கூட ஒரு வகையில் நல்லதாய்ப் போயிற்று என்று தனக்குத் தானே இப்போது நினைத்துக் கொண்டான் தனசேகரன்.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் பீமநாதபுரம் சமஸ்தானத்தில் அடிக்கடி வெள்ளைக்கார கவர்னர்களுக்கும். அதிகாரிகளுக்கும் பிரமுகர்களுக்கும் விருந்துபசாரங்கள் நடப்பது என்பது சர்வசகஜம். தனசேகரன் அவைகளைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தான். சமஸ்தானத்துப் புலவர்கள் பாடியிருந்த பழங்காலத் தனிப் பாடல்கள் பலவற்றைப் புரட்டினால்கூட அவர்கள் தமிழே தெரியாத எல்லிசுத் துரை மேலும் ஆல்பர்ட்டுத் துரை மீதும் ஜான்சன் துரை மீதும், வெண்பாக்களையும் விருத்தங்களையும் பாடிப் புகழ்ந்து தள்ளியிருந்தார்கள். அவற்றில் சிலவற்றைப் பற்றி நினைத்தால் தனசேகரனுக்கு இப்போது கூடச் சிரிப்பு வந்துவிடும். எல்லீசுத்துரை மீதும் ஆல்பர்ட்டுத் துரை மீதும் மயங்கிய தமிழ்ப் பெண்கள் வசமிழந்து நிலைகுலைந்து போய் மானையும், மயிலையும், கிளியையும், குயிலையும் அந்தத் துரைகளிடம் தூதுசெல்வதற்கு அனுப்புவதாக எல்லாம் கூடப் பாடித் தள்ளி இருந்தார்கள். தமிழ்ப் பெண்கள் உண்மையில் அப்படி எல்லாம் நினைத்தார்களோ இல்லையோ, தமிழ்ப் பெண்களை வெள்ளைக்காரத் துரைகளோடு சம்பந்தப்படுத்திப் புலவர்கள் இப்படி எல்லாம் எண்ணித் தங்களையும் தங்கள் எஜமானர்களாகிய சமஸ்தானாதிபதிகளையும், அவர்களின் அபிமானத்துக்குரிய வெள்ளைக்கார விருந்தினர்களையும் திருப்திபடுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றியது. அந்தக் காலக்கட்டத்து டைரிகளைப் படித்துக் கொண்டு வந்த போது தந்தை எழுதியிருந்த சில குறிப்புக்கள் தனசேகரனுடைய மனத்தைப் பெரிதும் புண்படுத்தின.

வெள்ளைக்கார கவர்னர் ஒருவன் தன் மனைவியோடு, ஒய்வெடுப்பதற்காகவும், பீமநாதபுரம் சமஸ்தானத்தைச் சுற்றி இருந்த காடுகளில் வேட்டையாடுவதற்காகவும் ஒரு வாரகாலம் சமஸ்தானத்தில் வந்து கெளரவ விருந்தினனாக தங்கி இருந்த காலத்தில் அந்த நாட்குறிப்புக்கள் எழுதப்பட்டிருந்தன. பொதுவாக எழுத்தில் வடிப்பதற்குக் கூச வேண்டிய அந்த விஷயத்தைத் தன் தந்தை எப்படி மனம் அருவருப்பு அடையாமல், கைகூசாமல் எழுதினார் என்பதே தனசேகரனுக்கு ஆச்சரியமாக இருந்தது. எதன் காரணமாகத் தொடக்க முதலே தன்னுடைய தாய்க்கும் தந்தைக்கும் ஒத்துப் போகவில்லை என்பது இப்போது தனசேகரனுக்கு ஒரளவு புரியத் தொடங்கியது.

பழைய நாட்குறிப்பில் தந்தை பின்வருமாறு எழுதியிருந்தார்:

‘ஏற்கெனவே கடித மூலமாக அறிவித்திருந்தபடி எல்லிசுத்துரை தன் அழகிய இளம் மனைவியோடு பீமநாதபுரம் வந்து முகாம் செய்து விட்டான். அவனையும் அவன் மனைவியையும் நன்றாக உபசரிக்க வேண்டும்; அவர்களை முறைப்படி உபசரிப்பதற்கு என் மனைவியும் பட்டத்து ராணியுமாகிய வடிவு பெரிய இடையூறாக இருக்கிறாள். வட இந்திய சமஸ்தானாதிபதிகளில் சிலர் செய்திருப்பது போல் லண்டனில் இரண்டு மாதம் தங்கி யாராவது ஒரு வெள்ளைக்காரக் குட்டியை நானும் கூட இழுத்துக் கொண்டு வந்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும் போலி ருக்கிறது. இங்கே சமஸ்தானத்தின் பட்டத்து ராணி என்ற பெயரில் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிற பத்தாம் பசலிக்கு ஓர் இழவும் தெரியவில்லை. துரைக்கும் துரைச்சாணிக்கும் முன்னால் இந்த நாட்டுப் புறத்துக் கட்டையை வைத்துக் கொண்டு நான் வீணே தலைகுனிய வேண்டியிருக்கிறது. இவளுக்கு அவர்களோடு ஒரு வார்த்தை அரை வார்த்தை பேசுவதற்குக் கூட இங்கிலீஷ் அறவே தெரியவில்லை. டேபிள் மேனர்ஸ் பூஜ்யம். துரை ஆசையோடு அருகே வந்து கை குலுக்குவதற்குக் கையை நீட்டினால் பயந்து கூசி நடுநடுங்கிக் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு பத்தடி பின் வாங்கி நடந்து சென்று கைகூப்புகிறாள் இவள். துரையின் மனைவி என்னோடு கைகுலுக்கிவிட்டு என் பக்கத்தில் அமர்ந்து குஷாலாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும்போது இவள் பதிலுக்குத் துரையின் பக்கத்தில் அமர்ந்து அப்படிப் பேசிக் கொண்டிருந்தால்தான் நன்றாகவும், மரியாதையாகவும், முறையாகவும் இருக்கும். இவளோ படிதாண்டாப் பத்தினியாக நடந்து கொள்கிறாள். எல்லாரும் குடித்துக் கொண்டிருக்கும்போது இவள் சும்மா உட்கார்ந்து கொண்டிருக் கிறாள். விஸ்கி வாடையே இவளுக்கு ஆவதில்லை. சரி! விஸ்கி தான் வேண்டாம், தொலையட்டும். ஒரு மரியாதைக்கு ‘டோஸ்ட்’ சொல்லி ‘சீர்ஸ்’ கூறிக் கொண்டு கிளாஸ்களை நெருக்கிப் பிடிக்கும் போது கூடப் பிடிப்பதற்காக ஒரு கிளாசில் கொஞ்சம் பீரையோ, ஒயினையோ ஊற்றிக் கொண்டு உட்காரச் சொன்னால் கூட அதற்கும் மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறாள். துரை ஆசைப் படுகிறானே என்று நான் முயல் கறியும், மான் கறியும் பண்ணச் சொல்லி டைனிங் டேபிளில் வைத்தால் அன்றைக்குப் பார்த்து ‘இன்னிக்குச் சோமவார விரதம்’ எனக்குத் தனியாக அவல் உப்புமா பண்ணச் சொல்லியிருக்கிறேன் என்கிறாள். இந்த நாட்டுப்புறத்தைக் கட்டிக் கொண்டு என்ன பண்ணித் தொலைப்பது? இந்த நிலைமை புரியாமல் துரை என்னை உயிரை எடுக்கிறான். நேற்றிரவு கூடச் சீட்டாடிக் கொண்டிருக்கும் போது நமக்குள் என்ன வித்தியாசம்? இருவரும் மிகவும் நெருங்கிப் பழகி விட்டோம். எனக்கு என் மனைவியின் முகத்தையே தினம் பார்த்து அலுத்துப் போயிற்று. அதேபோல உனக்கும் உன் மனைவியின் முகம். உடல் எல்லாம் தினம் பழகிப் பழகி அலுத்துப் போயிருக்கலாம். இரண்டு பேருக்குமே ஒரு புதுவிதமான சுகானுபவமாக இருக்கட்டுமே? இன்றிரவு மட்டுமே இந்த ஏற்பாடு, உன் மனைவி என்னோடு உறங்கட்டும். என் மனைவி உன்னோடு உறங்கட்டும். எனக்கு ஓர் ‘இந்தியப் பெண்ணின் சுகம் கிடைக்கட்டும், உனக்கு ஓர் ஆங்கிலேயப் பெண்ணிடம் சுகம் கிடைக்கட்டும்’ என்று ஆசையோடு குழைந்து கெஞ்சிக் கேட்டான். எனக்குப் பூரண சம்மதம். துரையின் மனைவியைப் பற்றி நீறுபூத்த நெருப்பு மாதிரி என்னுள்ளே அவளைப் பார்த்த மறுகணத்திலிருந்து இப்படி ஓர் ஆசைத் தீ மனத்தில் பற்றி எரிகிறது. அந்த வெள்ளைக்காரியின் ரோஜா இதழ்களை அப்படியே கடித்து முழுங்கி விடத் தவிக்கிறேன் நான். தன் மனைவிக்கு இந்த ஏற்பாட்டில் முழு உடன்பாடு உண்டு என்றும் இது அவளுக்கு வழக்கம்தான் என்றும் துரை என்னிடம் உத்தர வாதம் அளிக்கிறான். அவர்கள் இருவருமே ஃப்ரீமேலான் கிளப்புகளில் எல்லாம் உறுப்பினர்களாம். இம்மாதிரிப் பழக்கம் அவர்களுக்கு ஒன்றும் புதுமை இல்லையாம். ஆனால் இதையெல்லாம் இங்கே என் பட்டத்து ராணி என்ற பெயரில் உட்கார்ந்து கொண்டிருக்கிற கோட்டானிடம் எப்படி நான் எடுத்துச் சொல்லி விளக்குவது?”

-இந்த இடத்தைப் படிக்கும்போது தனசேகரனுக்கு இரத்தம் கொதித்தது. தந்தை மட்டும் இப்போது உயிரோடு இருந்திருப்பாரேயானால் அவனே ஓடிப்போய் அவர் கழுத்தை நெரித்துத் திருகி அவரைக் கொலை செய்திருப்பான். ஆனால் அவர் ஏற்கனவே செத்துப் போய்த் தொலைந்திருந்தார். தாங்க முடியாத எரிச்சலோடு இரண்டு தினங்கள் தள்ளி அந்த டைரியை மறுபடி புரட்டினான் தனசேகரன்.

“துரையின் ஆசையையும், என் ஆசையையும் ஒருசேர நிறைவேற்றிக் கொள்ள இன்று சரியான வழி புலப்பட்டு விட்டது. பீமநாதபுரம் சமஸ்தானத்தில் இந்த சோமவார விரதக்காரி ராணியாக இருந்து தொலைக்கிறவரை இந்த ஊர் எல்லையில் அது மாதிரி எதுவும் நடக்க முடியாது. காதும் காதும் வைத்தாற்போலத் துரையையும், துரையின் மனைவியையும் நம் சமஸ்தானத்தைச் சேர்ந்த பரிமேய்ந்த நல்லூருக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டால் இந்த ஆசை நிறைவேறிவிடும். பரிமேய்ந்த நல்லூரில் நமக்கு வைப்பாட்டி முறையாக வேண்டிய நம் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அடங்கின தேவதாசிக் குடும்பங்கள் பல உள்ளன. அதில் மிக அழகிய உடற்கட்டுள்ள ஒருத்தியை இரவு டின்னருக்கு அழைத்துத் துரைக்கு முன்னாலேயே ஒரு டான்ஸும் ஆடச்சொல்லி அவனோடு படுக்கையறைக்குள் தள்ளி விட்டுவிட்டு இந்தப் பக்கம் நாம் துரை அம்மாளைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போக வேண்டியது தான். இதை மிகவும் சாமார்த்தியமாகச் செய்து முடிக்க வேண்டும்.

துரைக்கு இதில் ஒரு சிறிதும் சந்தேகம் வந்து விடக் கூடாது. பரிமேய்ந்த நல்லூர்த் தேவதாசி தன் அந்தஸ்துக்குக் குறைவான ஜோடியோ என்று துரை நினைத்து விடாமல், ‘அவர்களும் எனக்கு இளையராணிகள் முறைத் தான் ஆகவேண்டும்!’ என்று துரையிடம் இன்றிலிருந்தே பீடிகை போட்டுச் சொல்லி அவனை அந்த ஏற்பாட்டுக்குத் தயாரான மனநிலையில் கொண்டு வந்து வைத்துவிட வேண்டும். அதைச் செய்வதில் சிரமம் ஒன்றும் இராது என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் ஒரு வெள்ளைக் காரியின் உடலுக்காக எவ்வளவு காய்ந்து போய்த் தவிக்கிறேனோ அதைவிட அதிகமாக ஓர் இந்தியப் பெண்ணின் கறுப்பு உடலுக்காகத் துரை தவித்து உருகிக் கொண்டிருக்கிறான் என்பதை அவனுடைய அன்றாடப் பேச்சுக்களிலிருந்தே நான் தெரிந்துகொள்ள முடிகிறது.”

தன் தந்தையின் அந்தரங்க நாட்குறிப்புக்களைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு அறவே விலகிப்போய் மிகமட்டமான பெண் தரகன் ஒருவனுடைய கீழ்த்தரமான வாழ்க்கை வரலாற்றை ஏதோ ஒரு வகை, நிர்ப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டுப் படித்துக் கொண்டிருக்கிறோமோ என்று எண்ணுகிற மனநிலைக்கு இப்போது வந்திருந்தான் தனசேகரன். இவையெல்லாம் ஜாடை மாடையாகத் தெரிந்து அல்லது இப்படிப்பட்ட விவரங்களும் இந்த நாட் குறிப்புக்களில் இருக்கக்கூடும் என்று எதிர்பார்த்து அநுமானம் செய்து கொண்டு தான் மாமா இவற்றைத் தன்னை மட்டும் படிக்கச் சொன்னாரா அல்லது சாதாரணமாகத்தான் தன்னை இதைச் செய்யச் சொன்னாரா என்று புரிந்து கொள்ள முடியாமல் இப்போது அவனே திணறினான்.

குடும்பப் பாங்கான நெற்றியில் இளங்கீற்றாகத் திருநீறும் குங்குமமும் துலங்கும் தன் தாயின் லட்சுமீகரமான முகம் இப்போது தனசேகரனின் மனக்கண்ணில் தெரிந்தது. ஏனோ அதையடுத்து உடனிகழ்ச்சியாக அவனுக்கு மதுரை மீனாட்சி அம்மனின் முகமண்டலம் ஞாபகம் வந்தது. அப்போது அப்பாவின் முகம் அகப்படுமானால் அதில் உடனே காறித் துப்பவேண்டும் போலவும் ஆத்திரமாக இருந்தது அவனுக்கு. அவருடைய ஆரம்பகால நாட் குறிப்புகளில் இவ்வாறு பல ஆபாசமான விவரங்கள் நிறைய இருந்தன. பின்னால் வரவர இதே விஷயங்கள் சினிமா உ ல கத்தோடு சம்பந்தப்பட்டவையாக எழுதப் பட்டிருந்தன.

சென்னைப் பட்டணத்தில் அவ்வப்போது பிரபலமாக இருந்த ஒவ்வொரு சினிமாக்காரிக்கும் ஒரு நாகரிகத் தரகன் மூலம் அறிமுகம் கிடைத்து அவர்களோடு இவர் சரசமாடிய லீலைகள் எல்லாம் இருந்தன. தன் தாயை அவர் எவ்வளவு தூரம் படிப்படியாக ஓசைப்படாமல் அவமானப்படுத்திக் கொன்றிருக்கிறார் என்பது அந்த நாட்குறிப்புக்களிலிருந்து அவனுக்குப் புரிந்தது. இவ்வளவு மனவேதனைகளையும், குறைகளையும், பச்சைத் துரோகங்களையும் மனத்திற்குள்ளேயே வைத்துக்கொண்டு மறுகி உள்ளேயே வேதனையால் வெந்துதான் தன் அன்னை மரணமடைந்திருக்க வேண்டும் என்பதை அவன் உணர்ந்தான். ஆனால் அவள் உயிரோடிருந்தவரை என்றும் எந்த விநாடியிலும், எவர் முன்னிலையிலும் தன் தந்தையைக் குறைத்தோ குலைந்தோ பேசியிருக்கவில்லை என்பதையும் அவன் அறிவான். தாயின் அந்தத் தியாகம், அந்த விட்டுக் கொடுக்காத பெருந்தன்மை எல்லாம் இப்போது அவனுக்கு நினைவு வந்தன. டைரிகளை வைத்துவிட்டு அவன் தன் மணிபர்விலிருந்த சிறிய அளவிலான தாயின் புகைப் படத்தைத் தேடி வெளியே எடுத்தான். அவன் கண்களில் நீர் அரும்பியிருந்தது. உள்ளம் உணர்வுகளால் குமுறியது. அவனால் அப்போது உணர்வு மயமாவதைத் தடுக்க முடியவில்லை.

அத்தியாயம் - 11

தனசேகரனுக்கு அப்போது தன் தாயின் மேல் ஏற்பட்ட பரிதாப உணர்வில் மேலே எந்த வேலையையும் செய்வதற்கு ஓடவில்லை. மாமா எதற்காக அந்த டைரிகளைப் படிப்பதற்கு உட்கார்த்தியிருந்தாரோ அந்த நோக்கமே கூட அவனுக்கு மறந்து போயிற்று. அவன் முற்றிலும் புதிய உணர்வுகளில் ஆழ்ந்து போய்விட்டான், தந்தையின் டைரிகளைப் படித்தபின் அவனுடைய உணர்வுகள் திசை திருப்பப்பட்டுவிட்டன. தந்தையின் மேல் இந்த விஷயங்களெல்லாம் தெரிவற்கு முன்பு அவனுக்கு இருந்த வெறுப்பு இப்போது இன்னும் பல மடங்கு அதிகமாகி விட்டிருந்தது. அவருடைய பக்தி, கெளரவ நோக்கு, பெரிய மனிதத் தன்மை ஆகிய விசேஷங்களை ஒவ்வொன்றாகக் கலைத்துக் குற்றவாளியாகத் தன் முன் நிறுத்தினாற் போலிருந்தது. பசுத்தோல் நன்றாக விலகிக் கண்ணெதிரே புலி தெரிவது போல் ஒரு பிரமை உண்டாயிற்று. என்றாலும் அந்தப் புலி செய்கிற அட்டுழியங்களை யெல்லாம் செய்துவிட்டுத் தானே மூத்துத் தளர்ந்து இப்போது செத்துப் போய் விட்டது என்பதும் ஞாபகம் வந்தது.

ஆனால் மறுநாள் விடிந்த போது மாமா அவனிடம் அரண்மனை வரவு செலவுக் கணக்கு விவரங்கள் பற்றி டைரிகளிலிருந்து அவன் ஏதாவது தெரிந்து கொள்ள முடிந்ததா என்று ஆவலோடு விசாரித்தார்.

தனசேகரனோ அவருக்கு அப்போது உடனடியாக எந்தப் பதிலையும் சொல்கிற நிலைமையில் இல்லை. அவன் பார்த்து முடித்திருந்த வரவு செலவுக் கணக்குகளோ முற்றிலும் வேறானவை. தந்தையின் ஒழுக்கம் சம்பந்தமான வரவு செலவுக் கணக்கில் அவர் எவ்வளவு நஷ்டப்பட்டுப் போயிருந்தார் என்பதை மட்டுமே அவன் பார்த்து முடித்திருந்தான். அதை அவன் மாமாவிடம் கூட சொல்ல முடியாமல் இருந்தது. குளித்து உடை மாற்றிக் கொண்டு வெறும் காபி மட்டும் அருந்தினான். அரண்மனைத் தவசிப் பிள்ளை எவ்வளவோ கெஞ்சி உபசரித்துச் சிற்றுண்டி சாப்பிட அவன் மறுத்து விட்டான். அவனுடைய மனநிலை முந்திய இரவில் தந்தையின் நாட்குறிப்பில் படித்தவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுப் போயிருந்தது. அரண்மனை எல்லைக்குள்ளேயே இருந்த இராஜ ராஜேஸ்வரி கோவி லுக்குப் போய் மன நிம்மதி ஏற்படுகிற வரை அம்மனையும், நவக்கிரகத்தையும் பிரதட்சணம் செய்தான் அவன்.

கோவில் பரம்பரை அர்ச்சக ஸ்தானிகராகிய தட்சிணா மூர்த்திக் குருக்கள் அவனுக்கு விசேஷமான மரியாதைகளோடு தீபாரதனை செய்து கற்பூர ஆரத்தி எடுத்து அம்மனைத் தரிசனம் பண்ணி வைத்தார். ஒழுக்கமுள்ளவராகவும் ஆசாரசீலராகவும் ஆகாரக் கட்டுப்பாடு உள்ளவராகவும் இருந்ததால் வயது எழுபது ஆகியும் குருக்கள் திடகாத்திரமாகவே தோன்றினார். தனசேகரன் அவரையும் தன் தந்தையும் ஒப்பிட்டுப் பார்த்தான். தன் தந்தைக்கும் குருக்களுக்கும் அதிகமான வயது வித்தியாசம் இல்லை என்றாலும் இந்த குருக்கள் வாழ்ந்திருக்கும் கட்டுப்பாடான ஒழுக்கம் நிறைந்த ஆரோக்கிய வாழ்வைத் தன் தந்தையால் வாழ முடியாததற்கு என்ன காரணம் என்று தனசேகரன் யோசித்தான். தேவைக்கதிகமான பணவசதி தான் மனிதர்கள் கெட்டுப்போவதற்கு முக்கியமான காரணமோ என்று கூட அவனுக்குத் தோன்றியது. அதிக ஈரத்தில் பண்டங்கள் அழுகிக் கெட்டுப் போய் நாறுவதைப் போல் அதிகமான பணச் செழிப்பில் மனிதர்களும் கெட்டுப் போய் அழுகி நாறுகிறார்களோ என்று சிந்தித்தான் அவன்.

அப்போது அவனுக்குச் செய்ய வேண்டிய கோயில் மரியாதைகளை எல்லாம் செய்து முடித்தவுடன் குருக்களே அவனருகே வந்து பேசத் தொடங்கினார்:

“சின்னராஜா இன்னமே மலேசியாவிலே போய் இருக்கிறது சாத்தியமில்லே. இங்கேயே ஊரிலே தங்கி அரண்மனையோட இருந்து பொறுப்புக்களைக் கவனிக்க வேண்டியது தான். பெரியவர் அநேகமா ஒண்ணும் மீதம் விட்டு வைக்கலே. எல்லாச் சொத்துச் சுகங்களையும் சீரழிச்சுட்டார், இனிமே நீங்க தலையெடுத்து இந்தச் சமஸ்தானத்திலேயே ஏதாவது மீதப்படுத்தினால்தான் உண்டு.”

“எனக்கு உங்க பேரன் வயதுகூட ஆகலியே குருக்களே? எதுக்கு இந்தச் சின்னராஜா, பெரியராஜாப் பட்டம் எல்லாம்? சும்மா ‘தனசேகரா’ன்னு என்னைப் பேர்ச் சொல்லிக் கூப்பிடுங்க சாமி! ராஜாவாவது, கூஜாவாவது? அதெல்லாம் இப்பக் கிடையாது. மரியாதை வேறே, பிரியம் வேறே. மரியாதை மட்டுமே காண்பிச்சிங்கன்னா நீங்க என்னை இன்னும் அந்நியமாகத்தான் நினைக்கிறீங்கன்னு அர்த்தம். பிரியம் காமிச்சிங்கன்னாத்தான் நீங்க என் மேலே உண்மையா அன்பு செலுத்தறிங்கன்னு அர்த்தம். எனக்கு உங்க மரியாதையைவிட உள்ளன்புதான் முக்கியமா இப்போ வேணும் சாமி! எங்கப்பா சங்கதி வேறே, அவருக்குப் பணம்தான் கடவுள். பணம் தான் உலகம். மானம், மரியாதை, கெளரவம் எல்லாமே பணம்தான் அவருக்கு. ஆனால் அந்தப் பண ஆதிக்கக் காலம் அவரோடு முடிந்து போய் விட்டது.”

குருக்கள் நெருங்கிக் காதருகே வந்து நின்று கொண்டு தணிந்த குரலில், “கோவில் நகை நட்டுகளை எல்லாம் கூட வித்து சாப்பிட்டாச்சு; என்னைப் போலொத்தவங்க, எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் உங்கப்பா கேட்கலே” என்று தனசேகரனிடம் சொன்னார்.

“தெரியும் சாமி! இந்தக் கோவில்லே மட்டுமில்லே. இது தெய்வ சந்நிதானம், இங்கே நான் நிஜத்தைத் தான் பேசணும். எங்கப்பாவாச்சேன்னு பொய் சொல்லப் படாது. அவரோட ஆதிக்கத்திலே இருந்த எல்லாக் கோவில்லேயும் இதுதான் நடந்திருக்கு. ராஜ மான்யம் தொலைஞ்ச பிறகு தான் ராஜமான்யம் கிடைச்ச காலத்துலே செஞ்சதை விட அதிகமான ஊதாரிச் செலவுகளை அவர் செய்ய ஆரம்பிச்சிருக்காரு. அப்புறம் எப்படி உருப்படறது?”

“செத்தவாளைக் குறை சொல்லி என்ன பிரயோஜனம். நடந்ததை எல்லாம் நீங்க தான் இனிமே எப்பிடியாவது சரி பண்ணனும், பண்ணுங்கோ, உங்களாலே அது முடியும். நீங்க உங்க அப்பாவைக் கொண்டு பிறக்கலே, உங்க அம்மாவைக் கொண்டு பிறந்திருக்கீங்க. உங்கம்மா சுபாவம் தான் உங்ககிட்ட நிறைய இருக்கு.”

தனசேகரனுக்கு இந்த வார்த்தைகள் மிகவும் ஆறுதலாக இருந்தன. குருக்கள் இன்னும் சிறிது நேரம் கூடத் தன் அன்னையைப் புகழ்ந்து ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால் நன்றாக இருக்கும் போலத் தோன்றியது. அவனுக்கு குருக்களிடம் அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அரண்மனை அந்தப்புரத்தைச் சேர்ந்த இளைய ராணி ஒருத்தி தரிசனத்துக்காக அங்கே வந்து சேர்ந்திருந்தாள். தனசேகரன், அப்போது அங்கே நின்று கொண்டிருந்ததால் தவிர்த்த முடியாமல் அவளை அங்கே சந்திக்கும்படி நேர்ந்துவிட்டது. அவன் நின்ற இடத்திலிருந்து நாலைந்தடி தூரம் நின்று குனிந்த தலை நிமிராமல் “சின்ன ராஜாவைக் கொஞ்சம் தனியே சந்திச்சுப் பேசணும், எப்ப முடியும்னு தெரிஞ்சா நல்லது” என்றாள் அவள்.

சங்கீதம் போன்ற இனிய குரல், தங்கப் பதுமைபோல் அழகிய தோற்றம். இப்படிப் பேசும் பொற்சித்திரங்களைப் போன்ற இளையராணிகளை வைத்துக் கொண்டா தந்தை சினிமாக்காரிகளில் ஜிகினாப்பூச்சு அழகுகளைத் தேடிக் கொண்டு சென்னைக்கு ஓடினார் என்று தனசேகரனாலேயே நம்ப முடியாமல் இருந்தது. இப்படிப் பல பெண்களின் அழகிய இளமை வாழ்க்கையையும் பாழாக்கி விட்டுத் தான் தந்தை இறந்து போயிருக்கிறார் என்பது அவன் மனத்தில் பொறுத்துக் கொள்ள முடியாத கோபத்தை உண்டாக்கி இருந்தது.

“சின்னராஜா இன்னும் என் கேள்விக்குப் பதில் சொல்லலியே?”

“அதுக்கென்ன? எப்ப வேணும்னாலும் பார்க்கலாம்!”

“சரி! நான் எப்போ எங்கே வந்து பார்க்கணும்னு சொன்னால் தேவலை.”

“நீங்க வரவேண்டாம்! அது முறையும் இல்லை. நானே அங்கே வந்து எல்லா இளைய ராணிகளையும் சந்திச்சுப் பேசணும்னுதான் நினைச்சிருக்கேன், அப்படிப் பேசறதுக்கு வர்றப்ப நிச்சயமா உங்களையும் பார்ப்பேன்.”

தனசேகரனின் பொதுவான பதில் அந்த இளைய ராணிக்குத் திருப்தி அளிக்கவில்லை என்று அவள் முகத்திலிருந்து தோன்றியது. அவள் முகபாவத்திலிருந்தே அதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. தனசேகரனோ, வேண்டு மென்றேதான் பதிலைப் பொதுப்படையாக்கிச் சொல்லிருந் தான். மாமா அவனை இது விஷயமாக முன்பே எச்சரித்து வைத்திருந்தார்.

“வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பிவிடாதே. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று தெரிந்து கொள்ள முடியாது. யாரையும் எதற்காகவும் தனித் தனியாகச் சந்திக்காதே. ஊர் வாய் பொல்லாதது, கண்டபடி பேசுவார்கள். அவர்களைத் தனித் தனியாகச் சந்திப்பதால் வேறு புதிய பிரச்னைகள் உண்டாகும். ‘என்னிடம் அப்படிச் சொன்னான்’ ‘இப்படிச் சொன்னான்’ என்று இல்லாததையும் பொல்லாததையும் அவர்களே பேசிக்கொள்வார்கள். ஜாக்கிரதையாயிரு” என்று மாமா சொல்லியிருந்தது சமயசஞ்சீவியாக ஞாபகம் வரவேதான் அவன் அப்போது அந்த இளையராணிக்குப் பொதுப்படையான மறுமொழியைக் கூறியிருந்தான்.

“என் நிலைமை எல்லா இளையராணிகளையும் போல இல்லே. மத்தவங்களை விட நான் வயசிலே ரொம்பச் சின்னவ. அவங்கள்ளாம் அவர் இருக்கிறப்பவும் சரி, போனப்புறமும் சரி, நிறையச் சேர்த்து வச்சிக்கிட்டிருக்காங்க. இன்னமும் உங்ககிட்டப் பேரம் பேசி நிறையக் கேட்டு வாங்கிடணும்னு இருக்காங்க. என் நிலைமைதான் பரிதாபம். நான் உங்ககிட்ட எனக்காகன்னு எதுவும் கேட்கப் போறதில்லே. என் வேண்டுகோளை நீங்க மட்டும் பொறுமையாகக் கேட்கணும். கேட்டிங்கன்னா அப்புறம் உங்களுக்கு என் மேலேயே இரக்கமாக இருக்கும்.”

“கேட்கிறதைப் பத்தி எனக்கொண்ணும் ஆட்சேபணை இல்லேம்மா! ஆனால் அதை நீங்களும் நானும் தனியாத் தான் பேசணும்னு என்ன கட்டாயம்? நீங்க சொல்லப் போறதை எல்லோருக்கும் நடுவிலே நீங்க சொல்றதாலேயோ, அல்லது நான் கேட்கிறதாலேயோ எனக்கு உங்க மேலே இரக்கம் வராமப் போயிடுமோன்னு நீங்க ஏன் சந்தேகப்படறீங்க? அது தான் எனக்குப் புரியமாட்டேங்குது?’’

“உங்களுக்கு அது இப்போ புரியாது. என் கதையை முழுக்கக் கேட்டால்தான் புரியும். தயவு செய்து நீங்க முதல்லே அதுக்குச் சம்மதிக்கணும். நான் நிஷ்களங்கமா தெய்வ சந்நிதானத்துலே வச்சு இப்போ உங்ககிட்ட வேண்டிக்கிறேன்.”

“தெய்வ சந்நிதானத்திலே மனிதர்களை வேண்டிக் கொள்வதைவிட தெய்வத்தையே அதிகமாக வேண்டிக் கொள்ள வேண்டும். அதுதான் முறை. இந்த இடத்தில் எல்லா மனிதர்களுமே சக்தியற்று அகங்காரமற்று போய் விடுகிறார்கள்.“

“தெய்வத்தையும் வேண்டிக் கொள்ளத்தான் போகிறேன். இப்போது உங்களையும் வேண்டிக் கொள்கிறேன். அவ்வளவுதான். முன்னதை நான் தினந்தோறும் வேண்டிக் கொண்டு தான் இருக்கிறேன். உங்களை இன்று தான் தனியாகச் சந்திக்கிறேன். அதனால் உங்களிடமும் ஒரு வார்த்தை கேட்டேன். இணங்குவதும் இணங்காததும் உங்கள் இஷ்டத்தைப் பொறுத்த விஷயம், நான் உங்களை வற்புறுத்தவில்லை. உங்களை மட்டும் என்ன? என் தலை எழுத்தை மாற்றிவிடச் சொல்லித் தெய்வத்தைக்கூட நான் அதிகமாக வற்புறுத்த மாட்டேன்.”

“எந்த வேண்டுதலும் வற்புறுத்தல் ஆகாது. வற்புறுத்த முடியாதவற்றைத்தான் நாம் வேண்டிக் கொள்கிறோம்.”

“அப்படி இல்லை யுவராஜா! திரும்பத் திரும்ப முறை யிட்டால் வேண்டுதல்கள் கூட வற்புறுத்தல் ஆகிவிடுகின்றன” என்று அவள் சிரித்துக்கொண்டே கூறியபோது அந்தச் சிரிப்பு மிக மிக நயமாகவும், நளினமாகவும் வெளிப்பட்டு மறைந்தது.

“நீங்கள் என்னைத் தனசேகரன் என்று கூப்பிட்டால் போதும் அம்மா! முறைப்படி பார்த்தால் கூட நான் உங்களுக்கு மகன் முறைதான் ஆக வேண்டும்” என்று தனசேகரன் அவள் தன்னை யுவராஜாப் பட்டம் சூட்டிக் கூப்பிட்டதை நாசூக்காக மீண்டும் மறுத்தான்.

இப்போது குருக்கள் மெல்ல நடுவே குறுக்கிட்டார்: “சின்னராணி என்ன சொல்றாங்கன்னுதான் அப்புறமாக் கேளுங்களேன். இவங்க எல்லாரையும் போல இல்லே. ரொம்ப நல்ல மாதிரி சுபாவம். பணத்தாசை கொஞ்சமும் கிடையாது.”

குருக்கள் இதை தெரிவித்ததிலிருந்து மறைமுகமாக, அவளுக்காக ஒரளவு பரிந்து பேசியிருக்கிறார் என்றே தனசேகரனுக்குப் புரிந்தது. அவனும் அவருடைய இந்த வார்த்தைகளை நல்ல விதத்திலேயே எடுத்துக் கொண்டான். கடைசியாக அவன் அவளை அதிகம் சோதிக்க விரும்பவில்லை.

“சரி! பார்க்கலாம்” என்று பொதுவாகச் சம்மதித்து வைத்தான், அவளும் அதை அவனுடைய சாதகமான பதிலாகவே புரிந்துகொண்டு அவனுக்கு நன்றி சொல்லி விட்டு ஆலயத்துக்குள்ளே தரிசனத்துக்குப் போய்ச் சேர்ந்தாள்.

அவள் உள்ளே போன பின் குருக்கள், “இவ ரொம்ப நல்ல பொண்ணு! உங்கப்பாவோட பலவீனமான, வேளைகளிலேகூட அவரை வற்புறுத்தியோ ஏமாற்றியோ பணம் பறிக்காத சின்ன ராணி யாராவது இருக்க முடியும்னா அது இந்த அரண்மனையிலே இவ ஒருத்தி தான்” என்று மேலும் அதைத் தெளிவாக்கினார். தனசேகரனுக்கு இப்போது அவள் மேல் முழுமையாக நம்பிக்கை ஏற்பட்டது.

ஒரு நம்பிக்கை ஏற்பட்டாலொழிய தட்சிணாமூர்த்திக் குருக்கள் இவ்வளவு தூரம் புகழமாட்டார் என்பது அவனுக்கு மிக நன்றாகத் தெரியும். குருக்கள் சாதாரணமாக ஒருவரைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொண்டாலொழியப் புகழ்ந்து சொல்ல மாட்டார் என்பது பல முன் அநுபவங்களால் நிரூபணம் ஆகியிருந்தது.

இங்கு அவன் இவ்வாறு கோயில் முகப்பில் குருக்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது அரண்மனையிலிருந்து வில்லையணிந்த சேவகன் ஒருவன் கோவிலுக்கே தேடிக் கொண்டு வந்து விட்டான். மரியாதையாக ஏழடி, விலகி நின்று தலைகுனிந்து உடம்பை வளைத்து வணங்கியபடி ஒரு கையால் வாய் புதைத்து வந்த விஷயத்தைத் தனிந்த குரலில் தனசேகரனிடம் தெரிவிக்கத் தொடங்கினான் அந்தச் சேவகன்.

“காரியஸ்தரும் மாமாவும் காத்துக்கிட்டிருக்கோம்னு உங்ககிட்டத் தெரிவிக்கச் சொல்லி அனுப்பிச்சாங்க.”

“பத்து நிமிஷத்திலே வரேன்னு போய்ச் சொல்லு...” என்றான் தனசேகரன். சேவகன் புறப்பட்டுச் சென்றான். குருக்களிடம் சொல்லி விடை பெற்றுக்கொண்டு தனசேகரன் திரும்பினான். கோவிலுக்கும் அரண்மனைப் பாதைக்கும் நடுவிலே இருந்த புல்வெளியிலே டிரைவர் ஆவுடையப்பன் எதிர்ப்பட்டான். அவன் தற்செயலாக எதிரே வருகிறானா அல்லது தன்னைப் பார்ப்பதற்கென்றே தான் அங்கிருப்பதைத் தெரிந்து கொண்டு வருகிறானா என்று முதலில் தனசேகரனால் விளங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது. ஆவுடையப்பனோ எதிரே தனசேகரன் நடந்து வந்து கொண்டிருப்பதைக் கண்டதுமே தான் அப்படியே நின்றிருந்த இடத்திலேயே நின்று. விட்டான்.

“என்னங்க யுவராஜா இப்படி யாருமே கூடத் துணையில்லாமே தனியா நடந்து வரலாமா?”

“பின்னே என்ன? குடிபடைகள் புடைசூழப் பரிவாரம், யானை, குதிரை, தேர், ஒட்டகத்தோட நடந்து வரணுங்கிறியா? அதெல்லாம் இப்போ இந்த அரண்மனையிலே கிடையாது ஆவுடையப்பன்! நான் ஏதாவது பரிவாரத்தோடுதான் நடந்து வரணும்னு நீ ஆசைப்பட்டால் எங்கப்பா ஒரே ஒரு பரிவாரத்தைத்தான் எனக்கென்று மீதம் வைத்து விட்டுப் போயிருக்கிறார். அதுதான் அவருக்குக் கடன் கொடுத்திருக்கிறவர்களின் பெரிய கூட்டம். அவர்களை எல்லாம் தகவல் சொல்லி இங்கே வரவழைத்து எனக்குப் பின்னால் அணிவகுத்து நிற்கச் சொல்லி அழைத்துக் கொண்டு போனால் அந்தப் பரிவாரம் ரொம்பப் பெரிசா இருக்கும்.”

டிரைவர் ஆவுடையப்பன் இதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் இதில் பட்டுக் கொள்ளாமல் மெளனமாக இருந்துவிட்டான். சின்ன ராஜா அவருக்கேயுரிய சகஜமான சுபாவத்தின் காரணமாகவும் தந்தையின் மேலுள்ள, வெறுப்பின் காரணமாகவும் குடும்பக் கடன் விஷயமாகத் தன்னிடம் பேசினாலும் தான் அதைக் கேட்டுக் கொள்ளவோ அதில் கலந்து கொள்ளவோ கூடாது என்பதில் ஆவுடையப்பன் ஜாக்கிரதையாக இருந்தான். தன் நிலைமைக்குத் தன்னிடம் இதைப்பற்றி எல்லாம் அவர் பேசாமல் இருப்பதே உத்தமம் என்றுகூட அவனுக்குத் தோன்றியது.

“என்ன ஆவுடையப்பன் பதில் சொல்ல மாட்டேங்கறே? நான் சொன்னது சரிதானே?”

தனசேகரனின் இந்தக் கேள்விக்குப் பதில் எதுவும் சொல்லாமல், “சின்னராஜா கோவிலுக்குப் போகணும்னு சொல்லியிருந்தா நானே கூட வந்திருப்பேனே?” என்று மீண்டும் பழைய விஷயத்திற்கே வந்தான் ஆவுடையப்பன். அவனுடைய முன்னெச்சரிக்கையையும் தற்காப்பு உணர்வையும் புரிந்து கொண்டு தனசேகரன் தனக்குள் தானே சிரித்துக் கொண்டான். ஆனால், ‘இவனைப் போன்றவர்கள் அளிக்கத் தயாராயிருக்கும் இந்த மரியாதைக்கும் கெளரவத்திற்கும் நாகரிகத்திற்கும் கூடத் தன் தந்தை தகுதியுள்ளவர்தானா’ என்ற சந்தேகம் தனசேகரனுக்கு ஏற்பட்டது.

ஆவுடையப்பன் பின் தொடர அரண்மனையை நோக்கி நடந்தான் அவன். கோவில் அரண்மனை எல்லாமே. கோட்டைச் சுவர்களுக்கு நடுவே உள்கோட்டைப் பகுதியில் இருந்தாலும் சில நிமிஷங்கள் நடக்க வேண்டிய தொலைவிலிருந்தது.

உள்ளூர்ப் பொதுமக்கள் கோட்டைக்குள்ளே இருப்பவற்றுக்கு உள் பட்டணம் என்றும் வெளியே இருப்பவற்றுக்கு வெளிப் பட்டணம் என்றும் பெயர் சொல்லி அழைத்துக் கொண்டிருந்தார்கள்.

தனசேகரன் அரண்மனைக்குள்ளே போய்ச் சேர்ந்த போது மாமாவும் காரியஸ்தரும் இளைய ராணிகள் சம்பந்தமான காம்பன்ஸேஷன், வாரிசு, பற்றிய ஃபைல்களை வைத்து ஏதேதோ கணக்குகளைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். தனசேகரனைப் பார்த்தவுடனேயே அவனிடம்,

“இந்தக் கூலிபட்டாளத்துக்குப் பணத்தைக் கொடுத்து வெளியே அனுப்பறவரை நமக்கு ஒரு வேலையும் ஓடாது. இதை முதல்லே முடிச்சாகணும்” என்றார் மாமா.

“ஒரு நாள் பொறுத்துக்குங்க, நாளைக்கு அல்லது நாளைக் கழித்து மறுநாள் இதை முடித்துவிடலாம். நானும் அதுக்குள்ளே மீதமுள்ள டைரிகளைப் படிச்சு முடிச்சிடறேன்” என்றான் தனசேகரன்.

மாமாவுக்கும் காரியஸ்தருக்கும் தனசேகரனின் இந்த மறுமொழி ஆச்சரியத்தை உண்டாக்கியது. தங்களைப் போலவே இதில் மிகவும் அவசரம் காட்டிய தனசேகரன் இப்போது ஏன், பின்வாங்கி ஒத்திப்போடுகிறான் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. தனசேகரனோ டைரிகளைப் பார்க்க வேண்டும் என்று சாக்குபோக்காகச் சொல்லியிருந்தாலும் உண்மையில் அவன் மனதுக்குள் இருந்தது என்னவோ கோவிலில் சந்தித்த இந்த இளையராணியின் சந்திப்பு முடிவதற்கு முன் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டாம் என்பதுதான். அவள்மேல் அவனுக்கு ஏற்பட்டிருந்த கருணைதான் இந்தப் பிரச்னையை மேலும் இரண்டு நாட்களுக்குத் தள்ளிப் போட வைத்திருந்தது.

அத்தியாயம் - 12

மாமா சிறிதளவு மன்றாடிக் கூடப் பார்த்தார். “என்னப்பாது? திடீர்னு எல்லா ஏற்பாட்டையுமே மாத்தறியே. அரண்மனை கஜானாவிலே செப்பாலடிச்ச சல்லி இல்லாம இருந்தும் கூட நான் என்னோட சொந்தக் காசை மாத்தில் வச்சுக்கிட்டு உன் பிரச்னைகளைத் தீர்க்கலாம்னு பார்த்தா அதையும் ஒத்திப் போடறியே? ஒரு நாளைக்கு இவங்க தீனிச் செலவு என்ன ஆகும்னு பார்த்தாக் கூட இவர்களை அரண்மனையிலே வச்சுக் கட்டிக்காக்கிற ஒவ்வொரு நிமிஷமும் தண்டச் செலவுதான்னு நீயே புரிஞ்சுக்குவே தனசேகரன்!”

“நீங்க சொல்றதை அப்படியே நூற்றுக்கு நூறு ஒத்துக்கறேன் மாமா. ஆனாக் கொஞ்சம் பொறுத்துக்குங்க. இந்த டைரிகளைத் தேடிப் பிடிச்சுக் கண்டெடுத்துப் படிக்கச் சொன்னதே நீங்க தான். படிக்கத் தொடங்கினதோ தொடங்கியாச்சு... முழுக்கப் படிச்சு முடிச்சாச்சுன்னா இந்த இளையராணிகள் பிரச்னையைப் பற்றியே ஏதாச்சும் முடிவு தெரியலாம். அதுக்குத்தான் சொன்னேன்” என்று தனசேகரன் பதற்றமின்றி நிதானமாக விஷயத்தை விளக்கியதும் மாமா வழிக்கு வந்தார்.

காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை மாமனுக்கும் மருமகனுக்கும் இடையே நடந்த இந்த விவாதத்தில் குறுக்கிட விரும்பவில்லை. சும்மா அதைக் கவனித்துக் கொண்டு மட்டும் இருந்தார். தனசேகரன் கோவிலில் சந்தித்த இளையராணியைப் பற்றி மாமாவிடம் பிரஸ்தாபிக்க விரும்பவில்லை. அதன் மூலம் அவருக்கும் தனக்கும் இடையில் வீண் விவாதமும் வம்புப் பேச்சும் தான் வளரும் என்று நினைத்தான் அவன். ஆனால் எப்படியும் அன்று மாலைக்குள் அந்த இளையராணியை சந்தித்து அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதைக் கேட்டுவிட மனத்துக்குள் தீர்மானித்துக் கொண்டான். மாமா மேலே எதுவும் விவாதம் வைத்துக் கொள்ளாமல் அவனை உடனே திருப்பி அனுப்பி விட்டார்.

“சரி? அப்படியானால் நீ எதுவும் செய்ய வேண்டாம். முதல்லே போய் முழு மூச்சா உட்கார்ந்து அந்த டைரிகளை எல்லாம் படிச்சு முடி. மத்ததை எல்லாம் பின்னாலே பார்த்துக்கலாம்” என்று அவரே கூறி விட்டதனால் அவன் அங்கிருந்து புறப்படுவது சுலபமாயிற்று. அவன் அரண்மனை அலுவலகத்திலிருந்து வெளியேறிய போது வெளியே காத்திருந்த டிரைவர் ஆவுடையப்பன், “எங்கேயாவது போகணுமா சின்ன ராஜா? காரை எடுக்கட்டுமா?” என்று கேட்டான்.

“இப்போ எனக்குக் கார் எதுவும் வேண்டாம் ஆவுடையப்பன்! நான் எங்கேயும் போகப் போறதில்லை. எதுக்கும் நீ இங்கேயே இரு, ஒரு வேளை மாமாவும் காரியஸ்தரும் எங்கேயாவது வெளியே போறதுக்குக் கார் தேவைப் படலாம்.”

இதைக் கேட்டு ஆவுடையப்பன் அங்கேயே தங்கிக் கொண்டான். தனசேகரன் தனியே தன் அறைக்குச் சென்றான்.

கோவிவில் சந்தித்த அந்த அநுதாபத்திற்குரிய இளைய ராணியை எங்கே எப்படிச் சந்தித்துப் பேசுவது என்ற பிரச்னை இப்போது அவன் மண்டையைக் குடையத் தொடங்கியது. இளையராணிகளின் அந்தப்புரத்திற்கே போய் அவளை மட்டும் தனியே வரவழைத்துப் பேசுவதென்பது அவனுக்குச் சரியாகப்படவில்லை. மற்ற இளைய ராணிகள் வீண் வம்புப் பேச்சுப் பேசுவதற்கு இடங் கொடுக்கிறாற்போல அவன் நடந்து கொள்ள விரும்பவில்லை. மிகவும் அழகியாகவும் இளைய வயதினளாகவும் தோன்றக் கூடிய இந்த இளைய ராணியை அவன் சந்திப்பதே ஓர் அபவாதத்துக்குரிய விஷயமாகிக் காட்டுத் தீப் போலப் பரவிவிடக் கூடும். அரண்மனை எல்லையில் அடைந்து கிடக்கிற எல்லா இளையராணிகளுமே வீம்புக்காரிகள். அவர்கள் நாக்கில் நரம்பில்லாமல் வம்பு பேசக் கூடியவர்கள். அதுவும் அவர்கள் எல்லோருமே தன்னைச் சந்தித்துப் பேச விரும்புவதாகக் கூறி முயன்று தானோ மாமாவோ அதற்குத் தயாராயில்லை என்று மறுத்தபின் அவர்களில் ஒருத்திக்கு மட்டும் விசேஷச் சலுகை காட்டித் தான் தேடிப் போய்ச் சந்திப்பது என்பது பெரிய பிரச்சினையாகி விடக்கூடும் என்பதையும் அவனால் முன்கூட்டியே அனுமானித்துக் கொள்ள முடிந்தது. தீவிரமாக நினைத்துப் பார்த்தால் அவளைச் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டது, ஒரு விதத்தில் தன் தவறோ என்று கூட அவனுக்கு இப்போது தோன்றியது. எப்படி எந்த விதத்தில், எங்கே அந்தச் சந்திப்பு நடக்க முடியும் என்று அவனும் தன்னால் ஆன வரை சிந்தித்துப் பார்த்தான்; ஒன்றுமே தோன்றவில்லை. பிற்பகலில் உள்பட்டணத்தில் கோவிலுக்கு அருகிலேயே உள்ள குருக்கள் வீட்டிற்குப்போய் “இந்தச் சந்திப்பு சாத்தியமில்லை. தயவு செய்து மன்னியுங்கள்...” என்று அவரிடமே மறுத்துச் சொல்லிவிடலாமா என்றுகூட நினைத்தான் அவன்.

பழைய சமஸ்தான முறைகள், சம்பிரதாயங்களின்படி நடப்பதானால் குருக்கள் வீட்டுக்கு அவன் தேடிப் போவதைக்கூட அனுமதிக்க மாட்டார்கள். சொல்லியனுப்பினால் குருக்களே அரண்மனைக்குத் தேடி வந்து காத்திருந்து அவனைச் சந்திப்பார். ஆனால் அந்த முறைகளை அவன் அப்படி அனுசரிக்காவிட்டால் ஏனென்றும் எதற்கென்றும் தட்டிக் கேட்பவர்கள் இப்போது யாருமில்லை.

திவான்கள் வேலை பார்த்தவரை இந்த முறைகள் சம்பிரதாயங்களை எல்லாம் அவர்கள் அக்கறை எடுத்துக் கொண்டு வற்புறுத்தி வந்தார்கள். கடைசி நாட்களில் ராஜமான்யம் போன பின்னரும் தன் தந்தை இவற்றை எல்லாம் ஓர் அங்குலம் கூட விட்டுக் கொடுக்காமல் குறைத்துக் கொள்ளாமல் கடைப்பிடித்து வந்தார் என்பது தனசேகரனுக்கு ஞாபகம் வந்தது. ஆனால் தன்னை இந்த மாதிரிக் காரியங்களை எல்லாம் செய்யுமாறு காரியஸ்தரோ, மாமாவோ இந்த விநாடி வரை தூண்டவில்லை என்பதை அவன் நினைவு கூர்ந்தான். ஆனால் டிரைவர் ஆவுடையப்பன் போன்றவர்கள் சுபாவத்தில் நல்லவர்களே ஆனாலும் இளையராஜா என்ற முறையில்தான் பழைய ஜபர்தஸ்துக்களை எல்லாம் கடைபிடிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள் என்று அவனுக்குப் புரிந்தது.

தன் குடும்பத்தினரைத் தவிர உட்கோட்டையில் குடியிருந்தவர்களில் எல்லாராலும் மதிக்கப்படுகிற பிரமுகரான் தட்சிணாமூர்த்திக் குருக்களைத் தான் வீடு தேடிப் போய் பார்க்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது. தன் தந்தை எதை எதை எல்லாம் சம்பிரதாயம் என்று முரண்டுடன் கடைப்பிடித்து வந்தாரோ அவற்றை எல்லாமே தன் காலத்தில் உடைத்து விடவேண்டும் என்ற வெறி வேறு அப்போது அவனுள் மூண்டிருந்தது. யார் என்ன நினைத்தாலும் நினைத்துக் கொள்ளட்டும். தட்சிணாமூர்த்திக் குருக்கள் வீட்டுக்கு அன்று தான் போயே தீருவது என்ற முடிவுக்கு வந்தான் அவன்.

திட்டப்படி மாலையில் அவன் குருக்கள் வீட்டுக்குப் போய்த் தன் கருத்தைத் தெரிவித்தான். ஆனால் குருக்கள் அவன் சொல்லியதை அப்படியே ஏற்றுக் கொள்ள வில்லை.

“சின்னராஜா என்ன நினைத்தாலும் சரி! இந்த அப்பாவிப் பெண்ணுக்கு வாக்கு கொடுத்ததை மறந்துடக் கூடாது; கொடுத்த வாக்கைக் காப்பாற்றணும்கிறதுதான் என்னோட விருப்பம். சின்னராஜாவுக்கு அம்மா மேலே இருக்கிற பிரியமும், மரியாதையும் எனக்கு நன்றாகத் தெரியும். உங்கம்மாவுக்கு அடுத்தபடி எந்தப் பெண்ணுக்காவது இந்த அரண்மனையிலே நீங்க மரியாதை செலுத்த முடியும்னா அது இந்தப் பெண்ணாகத்தான் இருக்க முடியும். மத்த எல்லா இளைய ராணிகளும் உங்க அம்மாவுக்கு எதிராப் பெரியராஜாகிட்ட தூபம் போட்டுத் தூண்டி விட்டுக்கிட்டிருந்த காலத்திலேயே துணிஞ்சு உங்கம்மாவுக்கு ஆதரவாகவும், அநுசரணையாகவும் ராஜா கிட்டப் பேசிக்கிட்டிருந்த ஒரே இளையராணி இவதான். உங்கம்மாவைத் தன் மூத்த சகோதரியாக நினைத்து மரியாதை செலுத்தினவள் இவள். ராஜாகிட்ட எல்லோரும் பணம் பறிச்ச காலத்திலேயே பணத்தாசை இல்லாமே இருந்தவ இவ. இன்னிக்கும் அதே மாதிரிதான் இருக்கா. தயவு பண்ணி இவளை ஏமாற்றிவிடக் கூடாது” என்றார். குருக்கள்.

தனசேகரனுக்கு அவரிடம் அப்போது என்ன பதில் சொல்லுவதென்றே தெரியவில்லை. இந்த இளையராணி தன் தாயின் மேல் நிரம்ப மரியாதை உள்ளவள் என்பது தெரிந்தபின் இவள் மேல் தனசேகரனின் அனுதாபம் அதிகமாயிற்று, நிர்த்தாட்சண்யமாக, ‘இவளைச் சந்திக்க மாட்டேன்’ என்று கண்டிப்பாக அவனால் இப்போது சொல்ல முடியவில்லை. அதே சமயம் எப்படி, எங்கே சந்திப்பதென்று தான் புரியவில்லை. தன் சந்தேகத்தை அவன் குருக்களிடமே நேரடியாகக் கேட்டுவிட்டான்.

“சரி! நீங்க சொல்றதை எல்லாம் அப்படியே ஒத்துக்கிறேன். எனக்கும் இவங்கமேல அநுதாபமாகத்தான் இருக்கு. பார்க்கமாட்டேன் பேச மாட்டேன்னு மறுத்துச் சொல்லத் தயங்கிக்கிட்டேதான் இதை உங்ககிட்டச் சொல்றேன் குருக்களே! ஆனா நான் இவங்களை எங்கே எப்படிச் சந்திக்க முடியும்? ஊர் வாய் பொல்லாதது. அரண் மனையிலேயே சந்திக்கலாம்னா மற்ற இளைய ராணிங்கள்ளாம் சேர்ந்து அநாவசியமா என் தலையை உருட்டுவாங்க. அம்மா, மகன்னு கூட உறவுமுறையைப் பார்க்கமாட்டாங்க. வெறுப்பிலே இல்லாத பொல்லாத கதை எல்லாம் கட்டி விட்டுடுவாங்க. அதுக்குத்தான் பயப்படறேன். ஒருவேளை எனக்காக நீங்களென் சார்பில் இந்த இளைய ராணி கிட்டப் பேசி என்ன விஷயம்னு தெரிஞ்சு எங்கிட்டச் சொல்லிவிட்டாலும் சரிதான். அது என்னாலே செய்ய முடிஞ்ச காரியமாக இருந்தால் கட்டாயம் உங்களுக்காக அதைச் செய்து கொடுப்பேன்.”

“அது நால்லா இருக்காது யுவராஜா! உங்களை நேரில் சந்தித்துப் பேசணும்னு அந்த ராணி சொல்றப்போ ‘எங்கிட்டப் பேசினாலே போதும். நான் எல்லாத்தையும் யுவராஜாகிட்டச் சொல்லிடுவேன்’னு நான் போய் அவங்களை கேட்கிறது சரியில்லே. உங்களுக்கு ஆட்சேபணையில்லேன்னா தயவு பண்ணி இன்னும் அரைமணி நேரம் மட்டும் நீங்க தாமதிச்சால்கூட இங்கேயே நான் அவங்களை வரச் சொல்லிடுவேன். இங்கே வந்து சந்திக்கிறதிலே யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லே! இந்த இளையராணி ஜோசியம், நாள், நட்சத்திரம் பார்க்க இங்கே எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து போறது வழக்கம்தான்.”

அப்போது தனசேகரனுக்கும் குருக்கள் சொல்லிய யோசனை சரி என்றே பட்டது. அவரிடம் சரி என்று சம்மதித்தபின், “ஆனால் ஒன்று அந்த இளைய ராணியோடு பேசி முடித்தபின் நான் இங்கிருந்து வெளியேறிச் சென்ற பிறகு அரைமணி நேரமோ, முக்கால் மணி நேரமோ இடைவெளி விட்டுத் தாமதித்துப் பின்தங்கித்தான் அவர்கள் இங்கிருந்து வெளியேறிச் செல்லவேண்டும். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது. நான் தற்செயலாக இங்கே வந்து போனது போல இருக்க வேண்டும். அவங்களும் தற்செயலாக இங்கே வந்து போனது போல இருக்கவேண்டும்” என்றான் தனசேகரன்.

குருக்கள் அதற்குச் சம்மதித்தார். அரண்மனை அந்தப்புரத்திற்கும் குருக்கள் வீட்டிற்கும் சகஜமாக வந்து போகிற வேலைக்காரி ஒருத்தி மூலமாக உடனே தகவல் சொல்லியனுப்பப்பட்டது. அந்த வேலைக்காரி நம்பகமானவள் என்றும் விஷயம் பரம ரகசியமாக இருக்கும் என்றும் குருக்கள் உத்தரவாதம் அளித்தார். அவர் சொல்லி அனுப்பியபடியே அந்த இளையராணியை அழைத்துக் கொண்டு வேலைக்காரி பத்தே நிமிஷங்களில், குருக்கள் விட்டுக்கு வந்துவிட்டாள்.

அடிக்கடி ஜோஸியம், நாள், நட்சத்திரம், சோமவாரம், கார்த்திகை விரதம் பற்றி அறிய அந்த இளையராணி தன் வீட்டுக்கு இப்படி வந்து போவது வழக்கம் என்பதால் இதில் யாருக்கும் சந்தேகம் வராது என்று குருக்கள் மீண்டும் மீண்டும் உத்தரவாதம் அளித்தார். பேசும்போது குருக்களும் கூட இருக்க வேண்டும் என்று தனசேரன் அவரிடம் வற்புறுத்தினான்.

“ரொம்ப நல்லதாப் போச்சு! இதில் அவருக்குத் தெரியக் கூடாத இரகசியம் ஒன்றும் இல்லை. அவர் தாராளமாக இருக்கலாம்” என்றாள் அவள்.

அவர்கள் பேச்சு அரைமணி நேரத்தில் முடிந்துவிட்டது. கான்வெண்ட் பள்ளிகளின் வழக்கமான ஸ்கூல் யூனிஃபாரம் அணிந்த கோலத்தில் ஓர் எட்டு வயதுச் சிறுவனின் அழகிய சிறு புகைப்படம் ஒன்றை எடுத்துத் தனசேகரனிடம் காண்பித்தாள் அந்த இளையராணி. அந்தச் சிறுவன் துறு துறு வென்று மிகவும் அழகாகத் தோன்றினான். அவன் கண்கள் ஒளி நிறைந்திருந்தன.

“இவன் உங்கள் தம்பி! இவனுக்கு ஒன்பது வயதாகிறது. ராஜாவுக்கு என்னிடம் பிறந்த குழந்தை. அரண்மனைச் செலவில் கொடைக்கானலில் உள்ள ஓர் ஆங்கில ரெசிடென்ஷியல் ஸ்கூலில் தங்கிப் படித்துக்கொண்டிருக்கிறான். இவனைத் தவிர இந்த உலகில் எனக்கு ஆறுதல் அளிப்பவர் இப்போது வேறு யாருமில்லை. நான் உயிர் வாழ்வதே இவனுக்காகத்தான். ராஜாவிடம் காலில் விழுந்து கெஞ்சிக் கதறி இவனைக் கொடைக்கானலில் சேர்த்துப் படிக்க வைத்திருக்கிறேன். நீங்கள் இங்கிருந்து எல்லா இளையராணிகளையும் பணம் கொடுத்து வெளியேற்றப் போவதாகப் பேச்சுக் காதில் விழுகிறது. என்னைப் பொறுத்தவரை நான் இங்கிருந்து வெளியேறினால் பிச்சை எடுத்தால்கூட மானமாகப் பிழைத்துக்கொள்வேன். எனக்கு நீங்கள் பணம் கொடுக்கா விட்டால் கூடப் பரவாயில்லை. ஆனால் இந்தப் பிள்ளையினுடைய படிப்புக் கெடக்கூடாது. யாராவது ஏதாவது, “உனக்கென்ன்டா கான்வெண்ட் படிப்பு வேண்டிக் கிடக்கிறது. ராஜாவோட வைப்பாட்டி மகனை எல்லாம் கான்வெண்டில் படிக்க வைத்துக் கட்டுப்படி ஆகாது. போடா வெளியே!” என்பதுபோலப் பேசி இந்தச் சின்னஞ்சிறு மனசைச் சலனப் படுத்தி விடக்கூடாது. இந்த வாக்குறுதியை உங்களிடம் கேட்கவே நான் உங்களைத் தனியே சந்திக்க விரும்பினேன். இவன் கல்லூரிப் படிப்புக்குத் தயாராகி நினைவு தெரிகிற வரை இங்கே யாரும் இவனுக்குத் தாழ்வு மனப்பான்மை வரும்படி புண்படுத்திப் பேசவோ, குறைவுபடுத்திப் பேசவோ கூடாது. எந்த விதமான தடையும் இன்றி இவன் தன் படிப்பைத் தொடருவதற்கு எப்போதும் போல அரண்மனை உதவி கிடைத்து வரவேண்டும். அதே சமயம் அரண்மனையிலிருந்து தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தவித உதவியும் வேண்டியதில்லை. நான் இந்தக் கோவிலில் தெளித்துப் பெருக்கிக் கோலம் போட்டாவது வயிற்றைக் கழுவிக் கொள்வேன். அரண்மனையிலிருந்து நீங்கள் மற்ற எல்லா இளையராணிகளையும் வெளியேற்றும்போது என்னையும் நிர்த்தாட்சண்யமாக வெளியேற்றி விடலாம்.”

இதைச் சொல்லும்போது அவள் குரல் கரக்ரத்தது. கண்களில் நீர் மல்கியது. தனசேகரன் மனநிலையோ மிக மிக உருக்கமாக இருந்தது. மாமாவைப் போல ஒரு கறார்ப் பேர்வழியையும், காரியஸ்தரைப்போல அரண்மனை உள் விவகாரங்களைத் தெரிந்த ஒருவரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஏற்கெனவே பொதுவாகத் தீர்மானித்துவிட்ட ஒரு முடிவுக்குப் புறம்பாக இவள் பையனுக்கு மட்டும் எப்படி ஒரு தனிச்சலுகையை வழங்குவது என்று தனசேகரன் யோசிக்கத் தொடங்கினான். அவன் யோசிப்பதையும் தயங்குவதையும் கண்டு அவள், “உங்கள் உடம்பில் எந்த இரத்தம் ஓடுகிறதோ அதே ராஜ குடும்பத்து இரத்தம் தான் இவன் உடம்பிலும் ஓடுகிறது. பெரிய ராணி - அதாவது உங்கம்மாவும் நானும் இந்த அரண்மனையிலே அக்கா தங்கை மாதிரிப் பழகினோமே தவிர, ராணியும் சக்களத்தியுமாகப் பழகலை. அதே போல நீங்களும் அண்ணன் தம்பி மாதிரிப் பழகணும்கிறது என் ஆசை. உங்கம்மா உடம்பு செளகரியமில்லாமப் படுத்திருந்த போதெல்லாம் நான் நர்ஸ்போல இருந்து என் உடம்பை அவங்களுக்குச் செருப்பாத் தைச்சுப் போட்ட மாதிரி உழைச்சிருக்கேன். மலம், மூத்திரம்லாக்கூட அருவருப்பு இல்லாமே இந்தக் கையாலே அள்ளிப் போட்டிருக்கேன். எனக்கு நீங்க இந்த உபகாரத்தைச் செஞ்சுதான் ஆகணும்” என்று கெஞ்சத் தொடங்கினாள்.

அவளுடைய வேண்டுகோளில் தாய்மையின் நிஷ்களங்கமான கனிவு தொனித்தது. சுபாவத்தில் நல்லவனான தனசேகரனுக்கு அதில் எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. ஆனால் அவளுக்கு மட்டும் ஒரு விதிவிலக்காக ஒரு சலுகையை எப்படிச் செய்ய முடியும் என்றுதான் அவன் இப்போது யோசித்தான்.

“தட்டிச் சொல்லாமல் நீங்க இந்த உபகாரத்தைப் பண்ணனும்னுதான் நானும் ஆசைப்படறேன் யுவராஜா!” என்று குருக்களும் உரையாடலில் கலந்து கொண்டார். கடைசியில் தனசேகரனுக்கு ஒரே ஒரு வழிதான் புலப்பட்டது. சத்தியமான உணர்வுகள் உள்ள ஒரு நல்ல தாய்க்காக அப்படி ஒரு பொய்க்கூடச் சொல்லலாம் என்றுதுணிந்தான் அவன். இந்த ஒரு பையனின் படிப்பு முதலிய செலவுகளை அரண்மனையிலிருந்தே தந்தாக வேண்டும் என்று காலஞ்சென்ற தந்தையின் டைரியில் இவனைக் கொடைக்கானல் பள்ளியில் சேர்த்த தினத்தன்று எழுதப்பட்டிருப்பதாகத் தானே மாமாவிடமும் காரியஸ்தரிடமும் ஒரு பொய்யைச் சொல்லிவிட வேண்டும் என்று மனதுக்குள் முடிவு செய்து கொண்டான் அவன். ஆனால் இந்த முடிவை. அவர்களிடம் அவன் அப்போது விவரிக்கவில்லை. “எங்கே, டைரியைப் பிரித்து அந்தப் பக்கத்தை என்னிடம் காட்டு பார்க்கலாம்” என்று மாமா தன்னிடம் ஒருபோதும் கேட்க மாட்டார் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. இந்த விஷயத்தில் மாமாவின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் பற்றி அவ்னுக்கு நன்கு தெரியும்.

“கவலைப்பட வேண்டாம்! நீங்கள் எனக்குச் சின்னம்மா மாதிரி. உங்கள் கோரிக்கையைக் கட்டாயம் நிறைவேற்றுவேன். இந்தக் குருக்கள் அதற்குச் சாட்சி. ஆனால் நீங்கள் இதற்காக என்னைச் சந்தித்ததோ வேண்டிக் கொண்டதோ தெரியக் கூடாது” என்று தனசேகரன் கூறியதும். அவள் முகம் மலர்ந்து புன்முறுவல் பூத்தாள். அவள் அவனைக் கையெடுத்துக் கும்பிட்டாள். “மகன்தான் தாயைக் கும்பிட வேண்டுமே ஒழியத் தாய் மகனைக் கும்பிடுவது வழக்கமில்லை” என்று சொல்லிச் சிரித்தான் தனசேகரன். குருக்களும் சிரித்தார்.

அத்தியாயம் - 13

தட்சிணாமூர்த்திக் குருக்கள் வீட்டில் இளைய ராணிக்கு வாக்குக் கொடுத்து விட்டாலும் தனிப்பட்ட முறையில் அவள் ஒருத்திக்கு மட்டும் சலுகை காட்டியதாகத் தன்மேல் கெட்ட பேர் வந்துவிடுமோ என்ற தயக்கம் தனசேகரனுக்கு மனத்தில் இருந்தது. அந்த இளையராணியின் கோரிக்கை நியாயமானதாக அவனுக்குப் புரிந்த போதிலும் இந்தத் தயக்கத்தையும் முன்னெச்சரிக்கையையும் அவனால் விட்டுவிட முடியவில்லை. பல காரணங்களை முன்னிட்டு அவன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருந்தது.

இதற்கு மறுநாள் காலைத் தபாலில் தந்தை உயிரோடிருந்தபோது அங்கம் வகித்த சென்னை ஜாலிஜில் கிளப், கால்ஃப் கிளப், உறுப்பினர் கட்டணம் ஆண்டுக் கணக்கில் பாக்கி இருந்ததைக் கேட்டு அவர்கள் எழுதி இருந்த கடிதங்கள் வந்திருந்தன. பழைய பாக்கிகளைக் கட்டி விட்டு உறுப்பினர் உரிமையைத் தனசேகரன் பெயருக்கு மாற்றிக்கொள்ளும்படியும் அவர்கள் கோரியிருந்தார்கள். தந்தை பாக்கி வைத்திருந்த சில பட்டுப் புடவைக் கடைகள் நகைக் கடைகளின் உரிமையாளர்களிடமிருந்தும் அவனுக்கு வக்கீல் தோட்டீஸ்கள் வந்திருந்தன. தந்தையின் பொறுப்பின்மையால் தனசேகரன் அந்த அரண்மனையின் கோட்டைச் சுவர்களுக்கிடையே சிறை வைக்கப்பட்டதைப் போன்ற உணர்வை அடைந்திருந்தான், அவனால் நிம்மதியாயிருக்க முடியவில்லை. தனக்கு மட்டுமின்றிப் பெரிய கருப்பன் சேர்வை போன்றவர்களுக்கும் இனி அந்த அரண்மனையில் பணி புரிவதில் நிம்மதியோ நிறைவோ இல்லை என்பது அவனுக்குப் புரிந்தது. இரண்டு மூன்று தடவை தனியே சந்தித்துத் தன்னை அரண்மனைக் காரியஸ்தர் வேலையிலிருந்து விலகிக் கொள்ள அனுமதிக்குமாறு அவனை அவர் கேட்டிருந்தார்.

வியாபாரம், வரவு, செலவு, லாப நஷ்டங்களில் நல்ல தேர்ச்சியுள்ள மாமா தங்கபாண்டியனோ அரண்மனைச் செலவுகளைச் சிக்கனமாக்க வேண்டும் என்பதில் அளவு கடந்த வேகம் காட்டினார். தனசேகரன் சற்றே நிதானமாக இருந்தான். மாமாவின் வேகத்துக்கும் தனசேகரனின் நிதானத்துக்கும் நடுவே சிக்கிக் கொண்டு காரியஸ்தர்தான் அங்கே அதிகம் சிரமப்பட வேண்டியிருந்தது.

இந்த வேகத்துக்கும், நிதானத்துக்கும் நடுவே சிக்கிக் கொண்டு பல விஷயங்களில் ஒரு முடிவுக்கு வர முடியாமல் அவர் சிரமப்பட நேர்ந்திருக்கிறது என்பதை நேரடியாக இல்லாவிட்டாலும் ஜாடைமாடையாகத் தனசேகரன் புரிந்து கொண்டிருந்தான். உண்மையிலேயே இன்னும் சிறிது காலத்தில் இந்தச் சமஸ்தானத்துக்குக் காரியஸ்தர் என்று ஒருவர் தேவையில்லாமலே போய்விடலாம். ஆனால், தந்தை காலமான பின் அரைகுறையாக இருக்கும் பல பிரச்னைகள் முடிவதற்கு முன் பெரிய கருப்பன் சேர்வை, பொறுப்பிலிருந்து விலகுவதை அவன் விரும்பவில்லை. தாங்கள் ஓர் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள், அரண்மனையில் வாழ்ந்தவர்கள், அரச போகத்தை அநுபவித்தவர்கள், என்பதை எல்லாம் எவ்வளவு விரைவில் மறக்க முடியுமோ அவ்வளவு விரைவில் மறக்கவேண்டும் என்று எண்ணினான் அவன். புதிய சமூக அமைப்பில் ஒரு கால வழுவாக நீடிக்க அவன் விரும்பவில்லை. சாதாரண மக்களையும் தங்களையும் வேறுபடுத்திக் காட்டும் இடைவெளியாக அரண்மனையில் கற்சுவர்கள் உயர்ந்து நிற்பதை அவன் அடிக்கடி சிந்தித்தான். அந்தச் சுவர்களும் மதில்களும் ஆதிக்க உணர்வின் அடையாளங்களாக அவனுக்குத் தோன்றின. ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களிடையே இருந்து தங்களைத் தனியே பிரித்தும், உயர்த்தியும் காட்டிக் கொள்ளவே அந்த மதிற்சுவர்கள் எழுப்பப்பட்டிருப்பதாக அவனுக்குப்பட்டது. சொப்பனம் முடிந்த பிறகும் கடன்பட்டாவது அதைத் தொடர்ந்து காண விரும்பினார் அவன் தந்தை, அவனோ அரச வாழ்வு, அரண்மனைச் சுகங்கள் என்ற சொப்பனங்களையே வெறுத்தான். அதிலிருந்து விடுபட விரைந்து விரும்பினான்.

“தம்பி! உங்கப்பாவுக்கு முத்தின தலைமுறையிலே பெரியவங்க கலைகள், புலவர்களையாவது வளர்த்தாங்க. உங்கப்பா அதைக்கூடச் செய்யலே. வெறும் ரேஸ் குதிரைகளைத்தான் வளர்த்தாரு. சினிமா எடுக்கறேன்கிற பேரிலே, பொம்பிளைங்கள்னு அலைஞ்சாரு. காசை வாரி இறைச்சாரு. இப்படிப்பட்ட சமஸ்தானாதிபதிகளையும், சமஸ்தானங்களையும் விட்டு வைக்கிறதை விட ஒழிச்சதே நல்லதுதான். ஒரு பணக்காரச் சோம்பேறிக் கூட்டம் யாருக்கும் பயன்படாமே நாட்டிலே வீணா வாழறதுலே என்ன பிரயோசனம்?” என்று மாமாவே ஒரு நாள் அவனிடம் ஆத்திரமாகப் பேசியிருந்தார்.

தொழில் செய்து உழைத்து லாபம் சம்பாதிப்பது மாமாவுக்குப் பிடிக்கும். ஆனால் பணம் முடக்கப்பட்டுச் சோம்பிக் கிடப்பதோ அவருக்கு அறவே பிடிக்காது. பணமோ, முதலீடோ மூலதனமோ பயனின்றித் துருப்பிடிக்கக் கூடாது என்ற கருத்து உடையவர் அவர். அவருடைய இந்த எண்ணம் தனசேகரனுக்கும் உடன்பாடுதான். இதில் மாமாவோடு அவனுக்கு இரண்டு அபிப்பிராயமில்லை. அரண்மனையையும் சமஸ்தானத்தையும் உடனே கலைத்து விடுவதால் யார் யார் பாதிக்கப்படுவார்கள் என்று சிந்தித்தபோது அதிலும் சில மனிதாபிமானப் பிரச்னைகள் குறுக்கிட்டன. தயவு தாட்சண்யங்கள் வந்தன.

அங்கிருந்து வேலையை விட்டுக் கணக்குத் தீர்த்து அனுப்புகிறவர்களைப் பற்றிய பிரச்னை வந்தபோதுதான் மாமாவுக்கும் தனசேகரனுக்கும் பலத்த வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. சொத்து மதிப்பீட்டையும், கடன் மதிப்பீட்டையும் தனித்தனியே கணக்கெடுக்குமாறு இருவருமே காரியஸ்தரிடம் தெரிவித்தார்கள். “ராஜமான்யம் நிறுத்தப்பட்ட தினத்திலிருந்தே அவர்கள் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டிருக்கவேண்டும் என்பதால் அரண்மனையோடு சம்பந்தப்பட்ட பணியாளர்கள் பலர் இதுவரை அவர்களை வேலைகளில் தொடர்ந்து தங்கவிட்டதற்காகவே நன்றி செலுத்தவேண்டும்” என்றார் மாமா. அவர்கள் பிரச்னையை அவ்வளவு கறாராகவும் நிர்த்தாட்சண்யமாகவும் அணுகுவது சரியில்லை என்றான் தனசேகரன். சட்டப்படி அவர்களில் பலருக்கு நாம் காம்பென்சேஷன் தருவதற்குக் கடமைப்பட்டிருக்கவில்லை என்றார் மாமா. இதைச் சட்டப்படி அணுகுவதை விட மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் அணுகுவதுதான் சரியாயிருக்கும் என்றான் தனசேகரன். மாமாவின் நோக்கங்களில் தனக்கோ தன் குடும்பத்தினருக்கோ பாதகமான எதுவும் இருக்க முடியாது என்பது தனசேகரனுக்குப் புரிந்திருந்தாலும் சமஸ்தானப் பணிகளில் இருந்த அப்பாவிகள் யாரும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் அவன் கவனமாக இருந்தான், தந்தையின் ஊதாரிக் குணங்கள் அவனுக்கு அறவே இல்லை என்றாலும், குடும்பத்தின் பரம்பரையான பெருந்தன்மைக் குணம் வேண்டிய மட்டும் இருந்தது.

இளையராணிகளைத் தவிரச் சம்பளத்துக்கும் மானியத்துக்கும் வேலை பார்க்கிற அனைவரையும் தனித்தனியே வரச் சொல்லி அவரவர் அபிப்ராயங்களை நேரிலேயே கேட்டு முடிவு செய்து விடவேண்டும் என்பது தனசேகரனின் அபிப்பிராயமாக இருந்தது.

“இதேல்லாம் காதும் காதும் வச்சாப்போல இரகசியமாக முடிய வேண்டிய விஷயம். பேச்சு வார்த்தைகள்னு தொடங்கிட்டா நாள் கணக்கிலே மட்டுமில்லே, மாதக் கணக்கிலே எல்லாம் ஜவ்வு மாதிரி இழுபடும்” என்றார் மாமா.

“சரியோ, தப்போ, இந்த அரண்மனையையும் சமஸ் தானத்தையுமே நம்பிப் பரம்பரை பரம்பரையா இங்கே இருந்திட்டவங்களைத் திடீர்னு கணக்குத் தீர்த்து வீட்டுக்கு அனுப்பறது நல்லதில்லை. அவங்க எதிர்கால வாழ்க்கையைப்பற்றி நாம் கொஞ்சம் கவலைப்பட்டுத்தான் ஆகணும் என்று தனசேகரன் வற்புறுத்தினான்.

“அவசியமில்லாத தயவுகளும் கருணைகளும் பல சமயங்களில் நிர்வாகத்துக்கு இடைஞ்சலான விஷயங்கள் தனசேகரன்! நீ ரப்பர் எஸ்டேட் மானேஜரா இருந்த போதும் உன்னோட தயவுகள், கருணைகள் எல்லாம் உனக்கு அங்கே நிர்வாக இடையூறுகளாக இருந்ததை நான் கவனிச்சிருக்கேன். இப்போ அரண்மனை விஷயத்திலேயும் அதே கஷ்டம்தான். நிர்வாகம்கிறது கூரான தராசு முள் மாதிரி. நேராக நிமிர்ந்து நிற்கும் கூரான தராசு முள் மேலே வேறே எதுவும் தங்கி நிற்க முடியாது. நிறுக்கப்பட வேண்டிய விஷயங்கள் கீழே தட்டில்தான் இருக்கவேண்டும். நீயோ நிறுக்கிற முள் மேலேயே பாரத்தை ஏற்றிக் கொண்டு நிறுப்பதற்கே சிரமப்படுகிறாய். நிர்வாகி என்பவன் கறாராக இருக்க வேண்டும். இளகிய உள்ளமும், தயங்கிய எண்ணமும் நிர்வாகத்திற்குப் பெரிய இடையூறுகள். இதை நீ திருத்திக் கொள்ளாவிட்டால் வாழ்க்கையில் பின்னால் ரொம்பக் கஷ்டப்பட வேண்டியிருக்கும்” என்று மாமா விசனப்பட்டார்.

தனசேகரன் மனப்பான்மையினால் மிக மிக முற்போக்காகவும் அரண்மனை விஷயங்களில் படு செண்டிமெண்டலாகவும் இருந்தான். காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையும் அதே மன நிலையில்தான் இருந்தார். மாமா தங்க பாண்டியனோ அரண்மனை விவகாரங்களை வெட்டு ஒன்று துண்டு இரண்டாக முடித்துவிட்டுத் தனசேகரனின் கல்யாண ஏற்பாடுகளை உடனே தொடர்ந்து செய்ய விரும்பினார். அரண்மனை வரவு செலவுகள், விவகாரங்கள் முடிந்ததும் மலேசியாவுக்குக் கேபிள் கொடுத்துக் குடும்பத்தினரையும் மகளையும் வரவழைத்துத் திருமணத்தை இந்தியா விலேயே முடித்து விட்டு ஒரு வரவேற்பு வைபவத்தை மட்டும் மலேயாவில் போய் வைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்தார். நாட்கள் தள்ளிப்போய் வீண் கால தாமதம் ஏற்படாமல் எல்லாவற்றையும் விரைந்து முடிக்க எண்ணினார் அவர். மாமாவின் அவசரத்தினால் அந்த அரண்மனையில் முகம் தெரிந்து நன்கு பழகிய பலருக்கு விரோதியாகி விடுவோமோ என்றுதான் காரியஸ்தர் பயந்தார். அவர் அங்கிருந்து விலகிவிட விரும்பிய காரணமே அதுதான். தனசேகரனுக்கும் அது ஒரளவு புரிந்திருந்தது. இதற்கு நடுவே தங்கள் எதிர்கால நலனைப் பாதுகாக்க விரும்பிய விவரம் தெரிந்த சிலர் ‘பாலஸ் வொர்க்கர்ஸ் யூனியன் பீமநாதபுரம்’ என்ற பெயரில் ஒரு டிரேட் யூனியன் அமைப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் அவர்களுக்குத் தெரிந்தது. இதைக் கேட்டதும், மாமா காரியஸ்தர் இருவருமே யூனியன் அமைத்திருப்பவர்கள் மேல் கோபப்பட்டார்கள்.

“விசுவாசம்கிறதே போயிட்டுது. உப்பைத் தின்னுருக்கோம்கிற எண்ணமே இல்லையே?” என்றார் மாமா.

“நீங்க சொல்றது தப்பு மாமா! விசுவாசமாயிருக்கணும்கிறது வேலை செய்யறவனுக்கு மட்டுமே வேணும்னு நீங்க நினைக்கிறீங்க. அது வேலைக்கு அமர்த்திக்கிறவனுக்கும் கூட அவசியம் வேணும். உப்பைத் தின்னதாலே என்ன கஷ்டம்னாலும் பொறுத்துக்கிட்டு மாடா உழைச்சிக்கிட்டே இருக்கணும்கிறது சுத்த மூட நம்பிக்கை. பரம்பரையாச் சுரண்டிச் சுரண்டிப் பழக்கப்பட்டவங்க ஏற்படுத்தின வாதம் அது. இனிமே அதெல்லாம் செல்லுபடி ஆகாது” என்று சிரித்தபடியே அவருக்குப் பதில் சொன்னான் தனசேகரன்.

“அவர்களைச் சொல்வானேன்? நீயே புதுசு புதுசா என்னென்னமோ தர்க்கம்லாம் பேசறே. சுரண்டல் அது இதுன்னெல்லாம் கூடப் புதுசு புதுசாப் பேசறியே?”

“ஒண்ணும் புதுசு இல்லே. எல்லாம் உள்ளதைத்தான் சொல்றேன்.”

அங்கே பீமநாதபுரத்துக்கு வந்த புதிதில் அரண்மனையின் அநாவசியச் செலவுகளையும் ஊதாரித்தனமான வழக்கங்களையும் ஒழிக்க வேண்டும் என்பதில் தன்னைவிடத் தீவிரங் காட்டிய தனசேகரன் இப்போது புதியவிதமாகப் பேசுவதேன் என்று மாமா உள்ளுர யோசித்தார்.

ஆவிதானிப்பட்டி பி.டபிள்யூ.டி. இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் அந்தச் சிறுகதையைப் படித்ததாக அவன் பிரஸ்தாபித்ததிலிருந்து இந்த மாறுதல் அவனிடம் இருப்பதை மாமா கவனித்திருந்தார், பெரிய ராஜாவின் டைரிகளைப் படிக்கத் தொடங்கிய பின்பும் இந்த மாறுதல் அவனிடம் வந்திருக்கலாமோ என்று தோன்றியது.

பெரிய ராஜாவுடைய எரியூட்டு முடிந்ததும் தேவாரி மடத்தில் சாப்பிடுகிறவர்களுடைய எண்ணிக்கை கூடச் சிக்கனமாக இருக்கவேண்டும் என்று வாதாடிய அதே தனசேகரன் தானா இன்று இப்படிப் பேசுகிறான் என்று யோசித்தார் அவர். தன்னிடம் எதைப் பற்றியும் எதிர்த்துப் பேசாத வாதாடாத அளவு பயமும் தயக்கமும் கொண்டிருந்த தனசேகரன் இப்போது ஒரளவு துணிந்து முன் நின்று விஷயங்களைப் பேசுவதுபோல் அவருக்குத்தோன்றியது.

ஆனால் அதே சமயத்தில் மாமாவும் தனசேகரனைக் கலந்து கொள்ளாமல் கூடத் தாமாகவே பல சிக்கன நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.

அரண்மனை எல்லைக்குள் மொத்தம் ஆறு டெலிபோன்கள் இருந்தன. அவற்றில் நாலு ஃபோன்களை எடுக்கச் சொல்லி விட்டு இரண்டு மட்டுமே போதும் என்றிருந்தார். அரண்மனை அலுவலகத்தில் குமாஸ்தாக்களின் எண்ணிக்கையைக் குறைத்திருந்தார். தேவாரப் பாடசாலை வேத பாடசாலைகள் தனித்தனியே நடப்பதைத் தவிர்த்து இரண்டையும் இணைத்து இரண்டிற்குமாச் சேர்த்து ஒரே பொது ஹாஸ்டலோடு ஓரிடத்தில் நடத்த ஏற்பாடு பண்ணியிருந்தார். இப்படி எல்லாம் நடப்பதை எதிர்பார்த்துத்தான் அரண்மனை ஒர்க்கர்ஸ் யூனியனும் தோன்றியிருந்தது.

இதற்கிடையே ஒவ்வொரு மாத நாலாவது வாரத்திலும் அரண்மனை வாரிசு வகையறாக்கள் என்ற பெயரில் வெளியே சென்று படிக்கிற பிள்ளைகளுக்குப் போகிற மணியார்டர், டிராஃப்ட் வகையறாக்கள் அம்மாதம் திருத்தத்துக்கு ஆளாகியிருப்பதுபோல் தனசேகரனிடம் குறிப்பாகத் தெரிவித்தார் காரியஸ்தர். பர்மிங்ஹாம், மிக்ஸிகன், ஹைடில்பர்க் என்று எங்கெங்கோ தொலைதூர தேசத்து ஊர்களில் போய்ப் படித்துக் கொண்டிருந்த இளையராணிகளின் புதல்வர்களுக்குப் பணம் அனுப்புவதை நிறுத்தினால் கூடப் பரவாயில்லை. ஆனால் மாமா தனது வாக்குறுதியைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் கொடைக்கானலில் படிக்கிற சிறுவனுக்கும் பணத்தை நிறுத்திவிடப் போகிறாரே என்று பயந்தான் தனசேகரன். இந்தப் பயத்தினால் அரண்மனை அலுவலகத்துக்கு அவனே சிரத்தையாக நேரிலே புறப்பட்டுச் சென்று தலைமைக் குமாஸ்தாவையும் கேஷியரையும் விசாரித்தான். பணம் அனுப்புவது அறவே நிறுத்தப்பட்டிருந்தது. எந்த வித வித்தியாசமும் இன்றி வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் எல்லாருக்கும் இப்போதுள்ள பணக் கஷ்டத்தில் பெரிய ராஜா இறந்த பின் இனிமேல் யாருக்கும் எதுவும் அனுப்ப இயலாது. அவரவர்கள் அங்கங்கே ஓய்வு நேரத்தில் முடிந்த மட்டும் உழைத்துச் சம்பாதித்து அதைக் கொண்டு மேற்படிப்பை முடித்துக்கொள்ள வேண்டியது தான். வேறு வழி இல்லை-என்பது போல் தலைமைக் குமாஸ்தாவின் கையொப்பத்துடன் சுற்றறிக்கையைப் போல் ஒரு கடிதமும் அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டிருந்தார் மாமா.

கொடைக்கானலில் ரெஸிடென்ஷியல் பள்ளியில் படிக்கும் அந்தச் சிறுவனின் பெயரை மட்டும் சுட்டிக் காட்டி, “இந்தப் பையனுக்கு மட்டும் இப்படிக் கடிதம் அனுப்பவேண்டாம்! வழக்கம் போல் பணத்தை அனுப்பி விடுங்கள். மாமா கேட்டால் நான் வந்து சொன்ன விவரத்தைக் கூறுங்கள்” என்று தனசேகரன் தலைமைக் குமாஸ்தாவிடம் தெரிவித்தான்.

“உத்தரவுங்க! நீங்க சொன்னபடியே செய்கிறேன்” என்று குமாஸ்தா அதை ஒப்புக்கொண்டார். தனது இந்தச் செய்கையின் மூலம் மாமாவின் சிக்கன நடவடிக்கை களில் குறுக்கிட்டுத் தான் ஒரு சர்ச்சைக்கு வழி வகுக்கிறோம் என்று தனசேகரனுக்குத் தோன்றினாலும், சம்மந்தப்பட்ட இளையராணியிடமும் தட்சிணாமூர்த்திக் குருக்களிடமும் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டோம் என்று அவனுக்குத் திருப்தியாயிருந்தது. தலைமைக் குமாஸ்தாவோ அரண்மனை அலுவலகத்தினரோ தனசேகரன் அந்த ஒரு தனிக் காரியத்தில் மட்டும் அக்கறை காட்டி அங்கே தேடி வந்ததைத் தவறாக நினைக்கவோ சந்தேகப்படவோ இல்லை. சின்ன ராஜாவே பொறுப்போடு தேடி வந்திருக்கிறார் என்று பெருமையாகத்தான் நினைத்தார்கள். மரியாதையாகவும் நடந்து கொண்டார்கள். அவன் கேட்காமலே வேறு சில ஃபைல்களையும் அவனிடம் காண்பித்து அவை சம்பந்தமாக என்ன முடிவு எடுப்பது என்றும் விசாரித்தார்கள். அவனும் தான் தேடி வந்தது பொதுப்படையாக இருக்கட்டும் என்று காண்பித்துக் கொள்ள விரும்புகிறவனைப் போல அந்த ஃபைல்களையும் பார்த்தான். அரை மணி நேரத்துக்கு மேல் அரண்மனை அலுவலகத்தில் செலவழித்துவிட்டு வந்தான். தன் தாய்க்கு உதவியாகவும் அனுசரணையாகவும் இருந்த இளையராணிக்குத் தான் இப்படிப் பதிலுக்கு உதவ முடிந்ததில் அவனுக்குப் பெருமையாக இருந்தது. தூண்டித் துளைத்து ஆதியோடு அந்தமாக விசாரிக்காவிட் டாலும் மாமா பின்னால் இந்தக் கொடைக்கானவில் படிக்கும் பையனுக்கு மட்டும் தான் விதிவிலக்கு அளித்திருப்பதைப் பற்றி விசாரிப்பார் என்று தனசேகரன் எண்ணினான். அவன் நினைத்தது சரியாக இருந்தது. அவன் அரண்மனைக் காரியாலயத்துக்குப் போய் விட்டுத் திரும்பிய சிறிது நேரத்திற்கெல்லாம் மாமா அங்கே போயிருப்பார் போலிருக்கிறது. அரண்மனை அலுவலகத்தினரிடமும் தலைமைக் குமாஸ்தாவிடமும் அவர் விசாரித்தபோது தனசேகரன் வந்ததையும் கொடைக்கானல் ரெஸிடென்ஷியல் ஸ்கூலில் படிக்கும் ஒரு பையனுக்கு மட்டும் வழக்கம்போல் மணியார்டரை அனுப்பி விடச் சொல்லி அவன் உத்திர விட்டதையும் அவர்கள் சொல்லி இருக்கவேண்டும். மாமா அடுத்த சிலமணி நேரங்களில் அவனைச் சந்தித்தபோது நேரடியாக உடனே இதைப் பற்றிக் கேட்கவில்லை என்றாலும் பெரிய ராஜாவின் இன்ஷூரன்ஸ் தொகையைக் கேட்டுப் பெறவேண்டும் என்பதைக் கூறிவிட்டு வேறு பல விஷயங்களைப் பற்றியும் விசாரித்த பின் சுற்றி வளைத்து இந்த விஷயத்துக்கு வந்தார். இறுதியில் தனசேகரனிடம் நேரிடையாகவே அவர் கேட்டார்.

“ஆமாம்! அதென்ன யாரோ ஒரே ஒரு பையனுக்கு மட்டும் கண்டிப்பாகப் பணம் அனுப்பனும்னு அரண்மனை. ஆபீஸ்லே சொல்லிவிட்டு வந்தியாமே! கடன் தீர்க்க வேண்டிய பாக்கிகள் நிறைய இருக்கு. பணக் கஷ்டமோ சொல்லி முடியாது. வந்து இறங்கின நிமிஷத்திலிருந்து எல்லாச் செலவுக்கும் என் கைப் பணத்தைச் செலவு பண்றேங்கிறது உனக்கே தெரியும். நீயும் நானும் நமக்குள்ளே கணக்குப் பார்க்கிறவங்க இல்லை. நீ செலவழிச்சாலும் ஒண்ணுதான். ஆனாலும் இந்த அரண்மனை நிலவரங்களைக் கட்டுப்படுத்தணும்னா உடனடியாகப் பல செலவுகளைக் குறைச்சே ஆகணும்! கருணையோ, தயவு தாட்சண்யமோ காட்டிப் பிரயோசனம் இல்லை!”

“நீங்க சொல்றதெல்லாம் வாஸ்தவம்தான் மாமா! ஆனா இந்தப் பையன் விஷயம் ஜெனியுன் கேஸ். அப்பாவோட டைரிகளைப் படிச்சதிலேயிருந்து இவன் ஒருவனுடைய படிப்புக்கான செலவை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தக் கூடாதுன்னு பட்டுது! அதனாலே தான் அதை மட்டும் அனுப்பச் சொன்னேன். இந்தப் பையனோட அம்மா ஒருத்தி மாத்திரம்தான் உங்க சிஸ்டர் அதாவது எங்கம்மா உயிரோட இருந்தவரை, அவளுக்கு ரொம்ப ஒத்தாசையா இருந்திருக்காங்க. மத்த இளைய ராணிக்ளெல்லாம் அம்மாகிட்ட அசல் சக்களத்திமார்கள் மாதிரியே பழகியிருக்காங்க. இவங்க மட்டும் ரொம்ப மரியாதையாகவும் கருணையாகவும் பழகியிருக்காங்க.”

“நினைச்சேன்... ஏதாவது சரியான காரணம் இருந்தாலொழிய நீ இதை இவ்வளவு அவசரம் அவசரமாகச் செஞ்சிருக்க மாட்டேன்னு பட்டுது! உனக்கு நியாயம்னு தோணி நீ செய்திருந்தால் சரிதான். அதைப்பற்றி நான் மேலே பேசலே!” என்று ஒப்புக் கொண்டு விட்டார் மாமா.

சிறிது நேரம் மாமாவும் அவனும் தங்களுக்குள்ளே பேச விஷயம் எதுவும் இல்லாததுபோல மெளனமாக அமர்ந்திருந்தார்கள். அப்புறம் மாமாதான் முதலில் அந்த மெளனத்தைக் கலைத்தார்.

“தனசேகரன்! என்னால் இனி மேலும் காலதாமதம் செய்ய முடியாது. முந்தா நாள் சிலாங்கூர் சுல்தான் பிறந்த நாள் விருந்துக்கு நான் கோலாலம்பூரிலே இருந்திருக்கணும்! உனக்காகத்தான் நான் இங்கே தங்க நேர்ந்திடுச்சு. ஒண்ணு, நீயே இருந்து தனியா எல்லாம் செட்டில் பண்ணிக் கொண்டு வந்து சேரணும். அல்லது நான் கூட இருக்கணும்னா ஒரு பத்துப் பதினஞ்சு நாளிலே எல்லாம் முடியணும், அதுக்கப்பறம் எனக்கு உங்க கல்யாண ஏற்பாடுகள் வேற இருக்கு” என்று கண்டிப்பாகப் பேசினார் மாமா.

“நீங்க சொல்றது சரிதான். நாளையிலே இருந்து எல்லாம் வேகமாகப் பண்ணிடலாம்” என்றான் தனசேகரன்.

அத்தியாயம் - 14

மாமாவும் தனசேகரனும் கலந்து பேசி முடிவாக ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தார்கள். தந்தைக்கு இருந்தது போல் ராஜபரம்பரை என்ற ஜம்பமும் டாம்பீகமும் இல்லாத காரணத்தால் தனசேகரன் இந்த விஷயத்தில் உடனே ஒரு முடிவுக்கு வர வசதியாயிருந்தது. சட்டங்களின் படியும் சமூக மாறுதலின்படியும் சமஸ்தானம், அரண்மனை எல்லாம் இனி இல்லை என்று ஆகிவிட்டாலும் வீண் பெருமையடித்துக் கொள்வதற்காகத் தந்தை அந்தப் பழம் பெயர்களை வைத்துக் கொண்டு செய்த எதையும் தொடர்ந்து செய்யத் தனசேகரன் தயாராயில்லை.

அரண்மனை சமஸ்தானம் என்ற ஏற்பாடுகளை உடனே கலைத்து விட முடிவு செய்திருந்தார்கள் அவர்கள். தனசேகரன் அதற்குச் சம்மதித்திருந்தான் என்பதை விட அதிகமாக அதில் மிகவும் தீவிரமாக இருந்தான் என்று சொல்லலாம் போலிருந்தது. தந்தையின் இன்ஷூரன்ஸ் கிளெய்ம் தொடங்கி வரவு வகைகளுக்கு ஒரு கணக்கு எடுத்தார்கள். அதன் பின்னர் தர வேண்டிய கடன், அரண்மனைப் பணியாளர்களின் காம்பன்சேஷன் முதலிய செலவு வகைகளுக்கு ஒரு கணக்கு எடுத்தார்கள், அரண்மனை சமஸ்தான சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பு ஊழியர்களையும் சந்தித்துப் பேசுவதற்கும் உரிய நாட்களைக் குறித்தார்கள். இளையராணிகளைச் சந்தித்துப் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டது, சிலவற்றில் மாமாவுக்கும் தனசேகரனுக்குமே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

மாமா பல விஷயங்களில் அசல் வியாபாரக் கண்ணோட்டம் மட்டுமே உடையவராக இருந்தார், தனசேகரன் கலை, கலாசாரம், மனிதாபிமான விஷயங்களில் சற்றே அதிக அக்கறை காட்டினான். அப்படி விஷயங்களில் நஷ்டம் வந்தால் கூட. அதைப் பொறுத்துக் கொள்ள அவன் தயாராக இருந்தான் கருத்து வேறுபட்டாலும் தன்னுடைய செல்ல மருமகன் என்ற காரணத்தாலும், தன் வருங்கால மாப்பிள்ளை என்ற காரணத்தாலும் மாமா பலவற்றை அவனுக்கு விட்டுக் கொடுத்து நடந்துகொண்டார். இந்த உறவு எல்லையில் மாமா தங்கபாண்டியனின் பிடிவாத குணம் கூடத் தளர்ந்து போயிற்று. அரண்மனை ஊழியர்கள் சம்பந்தமான செல்வுகளைக் குறைப்பது பற்றிப் பேச்சு வந்த போது மாமா தனசேகரன் இருவர் முன்னிலையிலுமே, “இப்பவே நான் அவசரப்பட்டுச் சொல்றதுக்காக மன்னிக்கணுங்க! இந்த ஏற்பாடுகளைக் கவனிக்கறதுக்காகத் தான் நான் கூட இருக்கேன். இதெல்லாம் முடிஞ்சதுமே என்னைகூட நீங்க ரிலீவ் பண்ணிடனும், பழைய நிலவரத்தைப் பற்றிய விவரங்கள் உங்க ரெண்டு பேருக்குமே தெரியாது. திடீர்னு நான் விலகிட்டா உங்களுக்குக் கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்ட மாதிரி இருக்குமேன்னுதான் நான் உடனே விலகலே. இல்லாட்டி நான் உடனே விலகிக்கத் தான் விரும்புவேன்” என்று காரியஸ்தரும் தாம் பலமுறை இருவரிடம் தனித்தனியே சொல்லி வந்ததை இப்போது இருவரிடமும் சேர்ந்தே நேருக்கு நேர் சொல்லிவிட்டார்.

“அவசரப்படாதீங்க சேர்வைக்காரரே! எப்போ போகணும்கிறது உங்களுக்கும் தெரியும். உங்களை எப்போ அனுப்பணும்கிறது எங்களுக்கும் தெரியும். யோசிச்சு நிதானமா செய்யலாம் பொறுத்துக்குங்க” என்று மாமா, பெரிய கருப்பன் சேர்வைக்கு மறுமொழி கூறினார்.

கோவில்கள், அறக்கட்டளைகள் என்ற பெயரில் இருந்த சமஸ்தானத்துக்குரிய தர்ம ஸ்தாபனங்களைத் தொடர்ந்து நிர்வகிப்பதா அல்லது பொதுவில் விட்டு விடுவதா என்ற பிரச்னை எழுந்தது.

எச்.ஆர்.இ.வி.யிலிருந்து இரண்டு மூன்று முறை விசாரணை வந்திருப்பதாகவும் அவற்றை அவர்களிடமே (இந்து அற நிலையப் பாதுகாப்புத்துறை.) விட்டுவிடலாம் என்றும் காரியஸ்தர் தம் கருத்தைக் கூறினார். ஆனால் அப்படி விட்டுவிடுவதற்கு முன் பழைய ராஜா கோவில் நகைகள் விஷயத்திலும், நிலங்களின் விஷயத்திலும் செய்திருக்கும் ஊழல்களை நேர் செய்து விட வேண்டும் என்றும் வற்புறுத்தினார் காரியஸ்தர். அரண்மனையின் கருவூலத்தில் அங்கும் இங்குமாகத் திரட்டிய தங்கத்தைக் கொண்டு பெரிய ராஜா திருடியிருந்த கோயில் நகைகள் மறுபடி ஒழுங்காகச் செய்து கொடுக்கப் பெற்றன. தம்முடைய உல்லாசச் செலவுகளுக்காகப் பெரிய ராஜா கண்ட கண்ட மனிதர்களிடம் அடகு வைத்திருந்த கோயில் நிலங்களை எல்லாம் மீட்டுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மாமாவும் தனசேகரனும் செய்தார்கள். வேலைகள் துரிதமாக நடந்தன.

மிகவும் வசதி படைத்த ஒரு பெரிய பணக்கார மிராசுதாரிடம் தந்தை அடகு வைத்திருந்த கோவில் நிலங்களை மட்டும் அவர் திருப்பித்தர தயங்கினார்.

“கல்லும் முள்ளுமாகக் கிடந்த மேட்டாங்காட்டை அவரு எங்கிட்ட அடமானம் வச்சாரு. அடமானப் பத்திரத்திலே குறிச்ச வருஷம்லாம் கூடக் கடந்து போச்சு. நான் என் சொந்தச் செலவிலே மேட்டைத் திருத்திச் செப்பனிட்டுச் சமமாக்கிக் கிணறுகள் வெட்டி - மின்சார மோட்டார் போட்டுப் பாசன வசதி பண்ணி முன்னே கிடைச்சதை விட நாலு மடங்கு மகசூல் கிடைக்கிற அசல் நஞ்சை நிலமா அதை இப்போ மாத்தியிருக்கேன். இப்போ போயி நீங்க அதைத் திருப்பிக் கேட்டா எப்படி?”

மாமா விட்டு விடவில்லை. “சரி! நீங்க சொல்றபடியே செஞ்சிருக்கீங்கன்னு வச்சுக்கலாம். ‘டெவலப் மெண்டுக்காக’ நீங்க கையிலேருந்து செலவழிச்சிருக்கிற தொகைக்கும் ஒரு கணக்குக் கொடுங்க. அடமானத் தொகை, வட்டி, உங்க சொந்தச் செலவு எல்லாத்துக்குமா நாங்க பணம் திருப்பிக் கொடுத்துடறோம். நிலத்துக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்துடுங்க.”

“அதெப்படிங்க? இத்தினி வருஷம் கழிச்சு?” என்று இழுத்தார் மிராசுதார்.

“ஒழுங்காத் திருப்பிக் கொடுக்கிறதா இருந்தால் உங்களுக்குச் சேர வேண்டியதை வாங்கிக்கிட்டுக் கொடுங்க. இல்லாட்டி கோர்ட் மூலமாச் செய்ய வேண்டியதைச் செய்துக்கும். நானும் விவகாரஸ்தன். சுலபமா விட்டுட மாட்டேன்” என்றார் மாமா.

கடைசியில் அந்த மிராசுதார் வழிக்கு வந்தார். கோவில் நிலங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டன. பெரிய ராஜாவின் இன்ஷ்யூரன்ஸ் தொகை மொத்தம் பத்து லட்சத்து எழுபதாயிரம் ரூபாய் வந்தது. மாமாவைப் பொறுத்த வரை பத்து லட்சத்து எழுபதாயிரம் என்பது ஒரு பெரிய தொகையே இல்லை. சொந்த முயற்சியால் உழைத்து முன்னேறிப் பல லட்சங்களைச் சம்பாதிக்கவும் செலவழிக்கவும் சகஜமாக பழகியிருந்தார் அவர். பத்து லட்சத்து எழுபதாயிரம் ரூபாயில் கொஞ்சம்கூட மீதப்படுத்த வேண்டும் என்ற ஆசையே இல்லாமல் தந்தையின் கடன்களை அடைப்பதிலும் ஊழல்களை ஒழுங்கு செய்வதிலும் அக்கறையாக இருந்த தனசேகரனின் கடமையுணர்வு காரியஸ்தருக்கே வியப்பை அளித்தது. பெரிய ராஜாவையும், அவர் மகனான தனசேகரனையும் தனக்குள் ஒப்பிட்டுப் பார்த்தார் காரியஸ்தர். இவ்வளவு பெருந்தொதை ஒரே சமயத்தில் கிடைத்தால் காலஞ்சென்ற பெரிய ராஜா உடனடியாக என்னென்ன ஊதாரித்தனமான செலவுகளை எல்லாம் செய்வார் என்பதைச் சிந்தித்தார் அவர். இப்போது தனசேகரன் அந்தத் தொகையை எவ்வளவு பொறுப்பாகவும் கட்டுப்பாடாகவும் செலவு செய்கிறான் என்பதையும் அவரே பார்த்தார்.

இளைய ராணிகள் பிரச்னை விவாதத்துக்கு வந்த போதும் தனசேகரன் தாராளமாக நடந்து கொண்டான். கணக்கு வழக்குப் பார்க்கவில்லை. முன்னால் தயங்கியது போலத் தயங்கிக் கூசிக் கொண்டிருக்காமல் தனசேகரனும் மாமாவும், காரியஸ்தரும் இளைய ராணிகளின் சகோதரர்கள், பெற்றோர், உறவினர்கள் என்ற வகையில் வெளியே இருந்து கடிதம் எழுதி வரவழைக்கப்பட்டிருந்த சிலருமாக அரண்மனை அந்தப்புரத்திற்கே சென்று விஷயங்களைப் பேசி முடித்தார்கள்.

வயதில் இளையவர்களும், மூத்தவர்களும், நடுத்தரப் பருவத்தினருமாகப் பல பெண்களை ஒரு சேர உட்கார்த்தி வைத்து அவர்களிடையே பேசி முடிவு செய்வது பெரும்பாடாக இருந்தது. காரியஸ்தர் ஓர் அதிகாரிபோல மட்டுமே நடந்து கொண்டார். அதற்கு மேல் அதிகமாக தனசேகரனின், குடும்ப விஷயங்களிலோ, அரண்மனை அந்தப்புரத்துப் பெண்கள் விஷயத்திலோ அவர் நெருங்கி வந்து தலையிடத் தயாராயில்லை. அந்தப் பேச்சு வார்த்தைகளில் எல்லாருடைய அபிப்ராயமும் விட்டுப் போகாமல் குறிப்பெடுத்துக் கொள்வதற்காக ஸ்டெனோகிராபர் ஒருவரும் வரவழைக்கப்பட்டிருந்தார், அரண்மனை நிர்வாகத்தினரின் சார்பில் தொகுத்துச் சொல்ல வேண்டியவற்றை அவர்களிடம் தான் சொல்லுவதா அல்லது மாமாவைச் சோல்ல விடுவதா என்று யோசித்தான் தனசேகரன். மாமாவைப் பேசவிட்டால் அங்கிருப்பவர்களின் மனம் புண்படும்படி அவர் வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசி விடுவாரோ என்ற தயக்கமும் அவனுள் இருந்தது. முடிவில் மாமாவிடம் கேட்காமல் அவனே அந்த விஷயத்தை அவர்களிடம் கோர்வையாகவும், நிதானமாகவும் தொகுத்துச் சொல்லலானான்.

“புகழ் பெற்ற இந்தச் சமஸ்தானம் இன்றும் இனி மேலும் சமஸ்தானமாக இயங்க வசதிகளற்றதாகி விட்டது. இனி அப்படி இயங்க வேண்டிய அவசியமும் இல்லை. சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப மாறுவதற்கு நாம் தான் தயாராக வேண்டும். அரண்மனை, அந்தஸ்து, ராஜயோகம் இவைகளை எல்லாம் மறந்து சமூகத்தில் மக்களோடு மக்களாகக் கலந்து விடுவதற்கு இனி நீங்களோ நானோ தயங்கினால் நாம் இருக்குமிடத்திலேயே நம்மை மியூஸியமாக்கி விடுவார்கள் ஜனங்கள். என்னைப் பொறுத்தவரை நான் இனிமேல் இந்தச் சமஸ்தானத்தைக் கட்டி ஆளுகிற உத்தேசமில்லை. கட்டி ஆள்வதற்கும் எதுவும் இங்கு இல்லை, நாளையோ அல்லது வெகு விரைவிலோ இந்தப் பெரிய மாளிகை என்பது ஒரு வரலாற்று நினைவுச் சின்னமாகி விடலாம். அப்படி நினைவுச் சின்னமாகிற போது உங்களையும் என்னையும் போன்ற உயிருள்ள மனிதர்களும் இதற்குள்ளே இருக்க முடியாது ஏனெனில் நாம் நினைவுச் சின்னங்களாகவே இருந்துவிட முடியாது. வாழவேண்டும். உங்களை எல்லாம் அப்படி அப்படியே புறப்பட்டுப் போய் விடும்படி நான் சொல்லி விடவில்லை. எங்களால் முடிந்த ஒரு தொகையை நஷ்ட ஈடாகவோ உதவித் தொகையாகவோ உங்களுக்குத் தந்து விட எண்ணியிருக்கிறோம். அதைப் பெற்றபின் உங்கள் எதிர்காலத்தை நீங்கள்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். இதுவரை அவசியமாகவோ, அல்லது அவசியமின்றியோ இந்த அரண்மனையின் ஓர் அங்கமாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள். என்னுடைய குடும்பத்தின் சார்பில் இதற்காக மனப்பூர்வமாக உங்களுக்கு நான் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன். எங்கள் முடிவை நான் சொல்லிவிட்டேன். இனி நீங்களோ உங்களுக்கு வேண்டியவர்களோ ஏதாவது சொல்ல விரும்பினால் தாராளமாகச் சொல்லலாம்.”

இப்படித் தனசேகரன் சொல்லி முடித்த சில விநாடிகளிலேயே பல்வேறு விதமான கேள்விக்கணைகள் அவனை நோக்கிக் கிளம்பின.

“ஏதோ நஷ்ட ஈடுன்னிங்களே? அது எவ்வளவுன்னு, சொல்லலியே? அதை முதல்லே சொல்லுங்கோ?”

“வெறும் நஷ்ட ஈட்டுத்தொகை மட்டும் போதாது. எங்களிலே பலருக்கு ஒண்டக்கூட இடம் கிடையாது. அரண்மனைக்கு அக்கம் பக்கத்திலேயேயும் இந்த ஊரைச் சுத்தியும் நிறையக் காலி மனைகள் இருக்கு. எங்களுக்கு, வீடு கட்டிக்க ஏதாவது மனை கொடுத்தால்தான் உதவியா இருக்கும்.”

தனசேகரன் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தான். மாமா முகத்தைச் சுளிக்கலானார். காரியஸ்தர் பட்டுக் கொள்ளாமல் நின்றார். ‘காலஞ்சென்ற பெரிய ராஜாவுக்கு இருந்த பலவீனம் காரணமாக அரண்மனையில் சேர்ந்துவிட்ட ஒரு கூட்டம், இடம் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கப் பார்க்கிறதே?’ என்று எரிச்சல் எரிச்சலாக வந்தது மாமாவுக்கு.

நாட்டியம், பாட்டு என்று தொழில்களில் இருந்து பின்னால் பெரிய ராஜாவின் ஆசைக்கிழத்திகளாக வந்து அந்த அரண்மனையில் தங்கிவிட்ட சில பெண்கள். “நாங்க நாலு காசு சம்பாதிக்க முடிஞ்ச காலத்திலே இங்கே வந்து இவங்களுக்குத் தலையை நீட்டிட்டோம். இப்போ வயசாச்சு; வெளியேறிப் போனாலும் ஆடியோ பாடியோ சம்பாதிக்க முடியாது. நீங்களா எங்க நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு நல்லவிதமா மரியாதை பண்ணி அனுப்பினாத்தான் உண்டு” என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார்கள்.

அப்போது அவர்களது குறைகள், முறையீடுகள், வேண்டுதல்கள் எல்லாவற்றையும் கேட்டு முடித்த பின் தனசேகரன் ஒவ்வொருவருக்கும் தாங்கள் கொடுக்க முடிவு செய்திருக்கும் தொகையின் அளவை வெளியிட்டான். இரண்டொருவர் அந்தத் தொகையைப் போதாது என்று காரசாரமாக வாதிட்டார்கள்.

“இவ்வளவுதான் நீங்கள் பெற முடியும் என்று நாங்கள் உங்களைப் பற்றிக் கணித்துவிட்டதாக நினைக்காதீர்கள். இதைவிட அதிகமாக உங்களுக்குக் கொடுத்தனுப்ப வேண்டும் என்று நினைத்தும் இந்த அரண்மனையில் இன்று அதற்கேற்ற வசதியில்லை. வீடுகட்டிக் கொள்ள மனை வேண்டும் என்று கேட்கிறீர்கள். அதைப் பற்றி யோசித்து விரைவில் ஒரு சாதகமான முடிவு சொல்ல முயலுகிறேன்” என்றான் தனசேகரன்.

தனசேகரன் கூறியதுபோல் நிதானமாக ஆற அமர எதையும் சொல்லுகிற மனநிலையில் மாமா இல்லை. மிகவும் சூடாக இருந்தார் அவர். என்றாலும் அது தனசேகரனின் குடும்ப விஷயம் என்பது அவரைப் பேசுவதிலிருந்து தடுத்தது. இருந்தாலும் அவர் அறவே ஒதுங்கி இருந்துவிட விரும்பவில்லை. தனசேகரனின் காதருகே நெருங்கி, “பணம் கொடுக்கிறது போதாதா? காலி மனை வேறு எதற்கு? மனை விஷயமா இப்பவே அவங்களுக்கு இடம் கொடுத்தாப்பிலே பதில் சொல்றியே? கொஞ்சம் ‘கெத்தாவே’ பேசு இல்லாட்டி ஆளை முழுங்கிப் புடுவாங்க” என்றார். தனசேகரன் வயது மூத்தவரான அவர் சொல்லியதை மறுக்காமல் கேட்டுக்கொண்டான்.

இளைய ராணிகள் சார்பில் இன்னொரு கோரிக்கையும் விடப்பட்டது. “நஷ்டத் தொகையைக் கொடுத்த மறுநாளே எங்களையெல்லாம் உடனே அரண்மனையைவிட்டு வெளியேறுங்கன்னு விரட்டக் கூடாது. கொஞ்சம் டயம் குடுக்கணும்.”

“டயம் குடுக்கிறதைப் பற்றி எங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லை. ஆனா இங்கே உங்களையெல்லாம் தங்கவச்சுக் காப்பாற்ற வழி இல்லேன்னுதானே இந்த ஏற்பாடெல்லாம் செய்யிறோம். அப்புறமும் நீங்க இங்கேயே இருப்போம்னா எப்பிடி முடியும்? தவசிப்பிள்ளைங்க, ஸ்டோர் வேலை மணியம், களஞ்சியக் கணக்கப்பிள்ளை எல்லோரையுமே ஒவ்வொருத்தரா வேலையைவிட்டு அனுப்பப் போறோம். நீங்க மட்டும் தனியா ரெண்டு மாசம், மூணு மாசம்னு இங்கே இருந்து என்ன பண்ணப் போறீங்க?"

“அதெப்படி..? சின்ன ராஜா சொல்றதைப் பார்த்தா அரண்மனையையே காலி பண்ணி ஒழிச்சு விட்டுடப்போற மாதிரியில்ல தெரியுது?”

“மாதிரி என்ன உண்மையே இதுதான். அப்படி எல்லாம் செய்யப் போறதுக்கு முன்னே நீங்க சிரமப் படாமே வெளியேறிடணும்கிறதைத்தான் இவ்வளவு நேரம் சொன்னேன். ஒரு வாரம், ரெண்டு வாரம் இங்கே தாமசிக்கலாம். அதுக்கு மேலேயானாச் சிரமப்படும்.”

உடனே இந்தப் பிரச்னையை விட்டுவிட்டு வெளிநாடுகளிலும், உள் நாடுகளிலுமாகப் படிக்கும் தங்கள் மக்களுக்குப் படிப்பு முடிகிறவரையாவது அரண்மனையிலிருந்து கிடைத்துவரும் உதவித் தொகை தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதைச் சிலர் வற்புறுத்தத் தொடங்கினார்கள். இன்னும் சிலர் மிகத் துணிச்சலோடு “அவர்களும் நீங்க எப்படியோ அப்படியே பெரிய ராஜாவோட மக்கள். தானே? அவங்களை மட்டும் ஏன் வித்தியாசமா நடத்தணும்?” என்றே தனசேகரனிடம் நேருக்கு நேர் கேட்டார்கள்.

“எங்கப்பா சொத்திலே ஒரு பைசா எனக்கு மீதம் கிடையாது. அதுக்கு நான் ஆசைப்படவுமில்லை. சொல்லப் போனால் உங்களை எல்லாம் வெறுங்கையோட அனுப்பக் கூடாதேன்னு எங்க மாமாகிட்டப் பணம் வாங்கிச் செலவழிக்கிறேன். இது உங்களுக்குத் தெரியணும்கிறதுக்காகத் தான் சொல்றேன். பட்டத்து ராணிக்குப் பிறந்த மகன்கிறத்துக்காக நான் எந்தத் தனி வசதியையும் அநுபவிக்கலே” என்று அவன் அவர்களுக்கு உடனே விரைந்து மறுமொழி கூறினான். காலத்துக்குப் பொருந்தாமல், சோம்பேறித்தனமாகக் கட்டி வளர்க்கப்பட்ட ஓர் அரண்மனையைத் திடீரென்று இழுத்து மூடிக் காலி செய்வது எவ்வளவு சிரமமான காரியம் என்பது அப்போதுதான் தனசேகரனுக்குப் பிரத்யட்சமாகப் புரிந்தது.

அத்தியாயம் - 15

மறுநாள் அரண்மனை உட்கோட்டை ஊழியர்கள், சமையற்காரர்கள், எடுபிடி ஆட்கள், குதிரைப்பாகர்கள், யானைப் பாகர்கள், ஆகியோர்களிடம் பேசிக் கணக்கு வழக்குத் தீர்க்க வேண்டியிருந்தது.

தனசேகரனும், காரியஸ்தரும் ஒவ்வொன்றாய் நிதானமாக ஆராய்ந்த போதிலும் மாமா பக்கத்தில் நின்று தூண்டுதல் போட்டு வேகப்படுத்தினார். பணம் எல்லாருக்கும் ‘செக்’ ஆகவே கொடுக்கப்பட்டது. செக் கொடுத்ததும் ஏற்கெனவே தயாராக டைப் செய்து வைக்கப்பட்டிருந்த தாள்களில் கையெழுத்தும் வாங்கிக் கொள்ளப்பட்டது.

அங்கே அரண்மனையிலிருந்த யானைகள் இரண்டையும், குதிரைகள் பன்னிரண்டையும், கிளிகள், புறாக்கள், மயில்கள், பல்வேறு வகைப் பறவைகள் இருபது முப்பது, மான் வகைகள் ஐம்பது, ஒட்டகங்கள் இரண்டு எல்லாவற்றையும் கோவில்களுக்குப் பிரித்துக் கொடுத்து விடலாம் அல்லது ஏலம் போட்டு விடலாம் என்றார் மாமா.

ஆனால் தனசேகரன் அதற்கு இணங்கவில்லை. குழந்தைகளுக்கான ஒரு சிறிய மிருகக்காட்சிசாலையாக அவற்றை அமைத்துப் பீமநாதபுரம் நகர நிர்வாகத்தின் கீழ், ஒரு பூங்காவோடு சேர்த்து வைப்பதற்கு ஒப்படைத்து விடலாம் என்றான்.

ஊர் நலனில் அவனுக்கு அக்கறை இருந்தது புலப்பட்டது. அரண்மனையில் கடத்த சில ஆண்டுகளில் படிப்படியாகச் சமையற்காரர்களும், தவசிப்பிள்ளைகளும் குறைக்கப்பட்டிருந்தாலும் இப்போதுகூட அவர்களின் எண்ணிக்கை ஒரு டஜனுக்கு மேல் இருந்தது. அவர்களில் பலர் கணக்குத் தீர்த்துக்கொண்டு போக மனமின்றி ஸெண்டிமெண்டலாகத் தயங்கி நின்றார்கள்.

“சின்னராஜா மெட்ராஸ்லே படிச்சுக்கிட்டிருந்தப்போ லீவுக்கு வருவீங்க. மல்லிகைப்பூ மல்லிகைப்பூவா இட்லியும் வெங்காயச் சட்னியும் வேணும்னு ஆசைப்படுவீங்க. இந்தக் கையாலேதான் அதை எல்லாம் படைச்சிருக்கேன். அதுக் குள்ளே அதெல்லாம் மறந்திடிச்சா?” என்றான் தலைமைத் தவசிப்பிள்ளை மாரியப்பன். “எதுவும் மறந்துடலே மாரியப்பன்! இப்போ கூட நாங்க கணக்குத் தீர்த்து உனக்குக் கொடுக்கப்போற பணத்தை வச்சு நீ கீழ ரத விதியிலேயோ மேலரத வீதியிலேயோ ஒரு இட்லிக்கடை போட்டா அதுக்கு நானும் ஒரு நிரந்தர வாடிக்கைக்காரனா இருப்பேன். உன்னைப் போலத் தரமான உழைப்பாளிக்கு என் ஆதரவு நிக்சயமா உண்டு” என்று மலர்ந்த முகத்தோடு பதில் கூறினான் தனசேகரன்.

“பெரிய ராஜாவைப் போல நீங்களும் சீரும் சிறப்புமா இந்தச் சமஸ்தானத்தைத் தொடர்ந்து ஆளுவீங்கன்னு நினைச்சோம்” என்றார் மற்றொரு முதியவர். தனசேகரனுக்குச் சிரிப்பு வந்தது, அதே சமயத்தில் அத்தனை பேருக்கும் முன்னிலையில் தந்தையை விட்டுக் கொடுத்துப் பேசுவது மாமாவுக்குப் பிடிக்காது என்றும் தோன்றியது. பொதுவாக மறுமொழி கூறினான் அவன்.

“நீங்கள்ளாம் நியூஸ்பேப்பர் படிக்கிறீங்களா இல்லியான்னே தெரியலே. உங்களுக்கு எல்லா விஷயமும் நானே அனா ஆவன்னாவிலேருந்து தொடங்கிச் சொல்ல வேண்டியிருக்கு. இப்போ மட்டும் இல்லே, இதுக்கு ரொம்ப வருஷங்களுக்கு முன்னாலேயே சமஸ்தானம்னு எதுவும் கிடையாது. அரசாங்கம் சமஸ்தானங்களை நீக்கிச் சட்டம் போட்டாச்சு. கவர்மெண்ட் கொடுத்த உதவித் தொகையை வச்சுக்கிட்டு எங்கப்பா தானாகச் சமஸ்தானம்கிற வெள்ளை யானையை இத்தனை நாள் கட்டி மேச்சுக்கிட்டிருந்தாரு காஷ்மீரத்திலே இருந்து கன்யாகுமாரி வரைக்கும் இந்த தேசத்தை இப்போ அரசாங்கம்தான் ஆட்சி செய்யிது. எந்தச் சமஸ்தானமும், ஜமீனும், தனி ராஜாங்கமும் இதிலே கிடையாது. இதை நீங்க முதல்லே புரிஞ்சுக்கணும். கடன் வாங்கி ராஜா வேஷம் போடறதை விடத் தொழில் செய்து ஏழையா மானமாப் பிழைக்கலாம். இனிமே நாங்க உங்களையும் ஏமாத்தப்பிடாது எங்களையும் ஏமாத்திக்கக் கூடாது” இவ்வாறு தனசேகரன் கூறிய விளக்கத்தைச் சிலர் மிகவும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் “சின்னராஜா ரொம்பத்தான் சிக்கனமா எல்லாத்தையும் மிச்சம் பிடிக்கப் பார்க்கிறாரு. செலவு செய்ய மனசு ஆகலே” என்று புது விதமாகத் தங்களுக்குள்ளே வியாக்கியானம் செய்யத் தலைப்பட்டார்கள். வேறு சிலர், “சின்னராஜா தங்கமானவர். அவருக்கு இளகின மனசு. இதற்கெல்லாம் அந்த மலேயாக்காரருதான் துண்டுதல். அவரு பக்கா வியாபாரி. அரண்மனையையே காலி பண்ணி வித்துடச் சொல்லி அவருதான் யோசனை சொல்லிக், கொடுத்திருக்காரு” என்று பேசிக் கொண்டார்கள்.

குதிரைக்கார ரஹிமத்துல்லா கையெழுத்துப் போட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டு, அதோடு திருப்தி அடைந்து விடாமல், “நம்பளுக்கு இரண்டு குதிரை கொடுங்க. ஜட்கா வண்டி விட்டாவது பிழைச்சுக்கலாம்னு பார்க்கிறேனுங்க” என்று வேண்டியபோது தனசேகரனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. முதல் முறையாக மாமா குறுக்கிட்டார். “ஏம்ப்பா? இப்படியே ஒவ்வொருத்தரும் கேட்டா என்ன ஆகும்? தவசிப்பிள்ளை எனக்குப் பத்துப் பன்னிரண்டு பாத்திரம் கொடுங்க. சமைச்சுப் பிழைக்கறோம்பாரு. ஹெட்கிளார்க் டைப் டைரட்டிங் மிஷினைக் குடும்பாரு. யானையைக் குடுத்திடணும்பான். நீ கேட்கிறது உனக்கே நல்லா இருக்கா?”

குதிரைக்காரன் சிரித்துக்கொண்டே போய்ச் சேர்ந்தான். அரண்மனை ஊழியர் யூனியன் தனசேகரனை எதிர்க்கவில்லை. ஏனெனில் தனசேகரனே நியாயமான நஷ்டஈட்டுத் தொகையைக் கொடுக்க முடிவு செய்திருந்தான். அவனுடைய பெருந்தன்மையும் பரந்த மனப்பான்மையும் அவர்கள் தகராறுக்கு வழி இல்லாமல் செய்து விட்டது. நஷ்டஈட்டுத் தொகையைத் தவிர இரண்டு மாதச் சம்பளத்தையும் கையில் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தான் தனசேகரன். மாமாவுக்கும் அவனுக்குமே இதில் கருத்து வேறுபாடு இருந்தது. மாமா சொன்னது இதுதான்.

“தம்பீ! சட்டப்படி கணக்குத் தீர்த்து அனுப்பறதுக்கு இது ஒண்ணும் ஹோட்டலோ, லிமிடெட் கம்பெனியோ இல்லை. ஒரு பெரிய வீட்டிலே வேலைக்கு வச்சிருந்தவங்களை நீக்கி அனுப்பறோம். அவ்வளவுதானே? இரண்டு மாசச் சம்பளம் மட்டுமே கொடுத்தால் கூடப் போதுமே?”

“பணத்தைத் தலையிலேயா சுமந்திட்டுப் போகப் போறோம் மாமா? இத்தினி வருஷமா இங்கே வேலைக்கு இருந்தவங்க வெளியிலே போறப்ப வயிறெரிஞ்சுக்கிட்டுப் போகறது நல்லா இருக்காது.”

“சரி! நீ நினைக்கிறபடிதான் செய்யேன். நான் ஒண்ணும் இதில் தலையிடலே” என்று அதை அவன் போக்கில் விட்டு விட்டார் மாமா. ஆனால் அவன் போக்கில் முற்றிலும் விட்டு விடாமல் தாமே பொறுப்பு எடுத்துக்கொண்டு அவர் வேறோர் ஏற்பாட்டைச் செவ்வனே செய்து வந்தார். அது தான் தனசேகரனின் திருமண ஏற்பாடு. அந்த அரண்மனை எல்லையில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மங்கல வைபவமாக அது இருக்கட்டும் என்று நினைத்தார் அவர். இனி எதிர்காலத்தில் அந்த அரண்மனை எல்லையில் இப்படிப் பெரிய ராஜா வைபவங்கள் என்று எதுவும் நடைபெறுவதற்கில்லை என்பது அவருக்குப் புரிந்துதான் இருந்தது. தன் சகோதரிக்கும் காலஞ்சென்ற மகாராஜாவுக்கும் திருமணம் நிகழ்ந்த காலத்தில் இந்த அரண்மனையும். இந்த ஊரும் இதன் சுற்றுப்புறங்களும் திருவிழாக்கோலம் பூண்டிருந்ததையும் அதை ஒட்டிய கோலாகலங்களையும் மாமா நினைவு கூர்ந்தார். கலகலவென்று இருந்த ஓர் அரண்மனை நாளா வட்டத்தில் எப்படி ஆகி விட்டது என்பதை எண்ணிய போது பல உணர்வுகள் மனத்தைப் பிசைந்தன. அவர் ஓரளவு முந்திய தலைமுறையைச் சேர்ந்தவராக இருந்தமையால் வைபவங்கள், விழாக்கள். கோலாகலங்கள் இவற்றைப் பற்றிய அவருடைய எண்ணங்கள், எதிர்பார்த்தல்கள் எல்லாமே அந்தப் பழைய தலைமுறைக்கு ஏற்றபடி இருந்தன. பழைய இனிய நினைவுகளில் ஆழ்வதையும் கழிவிரக்கப்படுவதையும் தவிர்க்க முடியாமல் சிரமப்பட்டார் அவர். பணக்கஷ்டமும் தந்தை வைத்துவிட்டுப் போன கடன்களுமாகத் தனசேகரன் சிரமப்படுவது பொறுக்க முடியாமல் தான் அவர் அரண்மனையையும் சமஸ்தானத்தையும் கலைத்துவிட உடன்பட்டாரே ஒழிய மனப்பூர்வமாக இசைந்திருக்கவில்லை.

தன் மகளுக்கும் அவனுக்கும் திருமணம் நடக்கிறவரையாவது அரண்மனை சமஸ்தானம் என்ற அலங்கார ஏற்பாடுகள் தொடரவேண்டும் என்ற நினைவு அந்தரங்கமாக அவருக்குள்ளே இருந்தது. ஆனால் தனசேகரனுக்காக அவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

பாங்கில் அடமானம் வைத்திருந்த பீமவிலாசம் பிரிண்டிங் பிரஸ் விஷயம் அடுத்து அவர்கள் கவனத்துக்கு வந்தது. பாங்குகாரர்களையே பிரஸ்ஸை ஏலத்துக்கு விடச் சொல்லி அவர்களுக்குச் சேரவேண்டியதை எடுத்துக் கொண்டு மீதத்தைத் தரச் சொல்லிக் கேட்கலாம் என்றார்.

“பிரஸ் எனக்குத் தேவையாயிருக்கும் என்று தோன்றுகிறது மாமா? நாமே கடனையும் வட்டியையும் திருப்பிக் கொடுத்துவிட்டுப் பிரஸ்ஸை மீட்டுவிடலாமென்று நினைக்கிறேன், அருமையான மிஷின்களும். அச்சகச் சாதனங்களும் அதில் அடங்கியிருக்கின்றன. அவற்றை இறக்குமதி செய்ய நினைத்தால்கூட இனிமேல் முடியாது” என்றான் தனசேகரன். மாமா வேறு மாதிரி நினைத்தாலும் அவன் அப்போது சொன்னதைத் தட்டி அவர் சொல்லவில்லை.

முதலும் வட்டியும் கொடுத்துப் பிரஸ் மீட்கப்பட்டது. பீமநாதபுரம் கலாசார வரலாற்றை முறைப்படி எழுதுவதற்காக எல்லா விவரங்களையும் நன்றாக அறிந்த ஆவிதானிப்பட்டிப் புலவர் ஒருவரை அழைத்து ஏற்பாடு செய்தான் தனசேகரன். பீமநாதபுரத்திலும், சுற்றுப் புறங்களிலும் டூரிஸ்டுகள் பார்க்க வேண்டியவற்றை விவரித்தும் விளக்கியும் நவீனமுறை கைடு ஒன்று அச்சிட ஏற்பாடு செய்யப்பட்டது. சமயற்காரர்களையும், தவசிப்பிள்ளைகளையும் போகச் சொல்லி விட்டதால் கடைசியில் மாமாவும் தனசேகரனுமே வெளிக்கோட்டையில் ராஜா வீதியிலிருந்து ஹோட்டல் எடுப்புச் சாப்பாடு வரவழைத்தார்கள். இளைய ராணிகள் விஷயத்தில் அவர்களது இரண்டாவது கோரிக்கையையும் அவன் ஏற்றுக் கொண்டு சாதகமாகவே முடிவு எடுத்தான். நகரின் ஒரு பகுதியில் அரண்மனைச் சொத்தாக இருந்த மனையில் தலைக்கு ஒரு கிரவுண்டு வீதம் வருமாறு பிரித்து வீடு கட்டிக் கொள்ள அவர்களுக்கு இடமும் கொடுத்துவிட்டான்.

அரண்மனையில் சமையல், சாப்பாடு ஏற்பாடுகள் நின்று போகவே இளையராணிகள் ஒவ்வொருவராகச் சொல்லிக் கொண்டு போய்விட்டார்கள். அந்த கோடைக்கானல் பையனின் தாய் மட்டும் உட்கோட்டையில் தட்சிணாமூர்த்திக் குருக்கள் வீட்டில் தங்கிக் கொண்டு தனசேகரனைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி அனுப்பினாள். தனசேகரன் அவள் சொல்லி அனுப்பிய பின்புகூட இரண்டு நாள் வரை அவளைச் சந்திக்கச் செல்ல முடியாமல் போய்விட்டது. எல்லா இளைய ராணிகளுக்கும் கொடுத்ததைப் போல் அவளுக்கும் ஒரு செக் கொடுத்தாகி விட்டது. காலி மனைக்குப் பத்திரமும் எழுதிக் கொடுத்தாகி விட்டது. மற்றவர்களுக்குச் செய்யாத அதிகப்படி உதவியாக அவள் பையனின் படிப்புச் செலவுகளையும் தொடர்ந்து ஏற்பதற்கு இணங்கியாயிற்று. இவ்வளவுக்குப் பிறகும் தன்னைச் சந்தித்துப் பேச என்ன மீதமிருக்கும் என்று தனசேகரனுக்குப் புரியவில்லை. ஆனால் அவளைச் சந்திக்காமல் விட்டுவிடவும் துணிய முடியவில்லை.

மாமாவும் காரியஸ்தரும் வெளியே அனுப்பியது போக எஞ்சிய அரண்மனை அலுவலர்களும், பிறரும் சிலைகள், கலைப் பொருள்கள், அபூர்வப் பண்டங்கள் ஆகியவற்றுக்கு பட்டியல் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அரண்மனை மியூஸியம், நூல் நிலையம், ஏட்டுச் சுவடிகள், நவராத்திரி விழா அலங்கார ஊர்வலத்துக்கான வாகனங்கள், இவை எல்லாவற்றையும் பற்றி விரிவான பட்டியல் வேண்டும் என்று தனசேகரன் கேட்டிருந்தான். மாமா இந்த பட்டியல் அவற்றின் விற்பனைக்காக என்று நினைத்துக் கொண்டிருந்தார். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இப்படிப்பட்ட இந்தியப் பழம் பொருள்களுக்கு மதிப்பு மிகுதி; விலையும் அதிகம் என்று அவருக்குத் தெரியும். உதக மண்டலத்திலோ மூணாறிலோ, மைசூரருகே சிக்மகளூரிலோ பெரிய எஸ்டேட்டுகள் வாங்கிப் போடுவதற்குரிய பெருந்தொகை இவற்றை விற்பதன் மூலமாகக் கிடைக்கும் என்று முடிவு செய்துகொண்டு தமக்குத் தெரிந்த இரண்டொரு எஸ்டேட் புரோக்கர்களிடமும் கூட இரகசியமாகச் சொல்லி வைத்திருந்தார் மாமா. மலேயாவில் தாம் தோட்டத் தொழிலில் வளர்ந்து செழித்ததைப் போலத் தனசேகரன் தமிழ் நாட்டில் தோட்டத் தொழிலில் இறங்கி வளர்ந்து செழிக்க வேண்டும் என்று நினைத்தார் அவர். அதற்காக மேற் செலவு செய்ய வேண்டும் என்றாலும் அதைத் தன் கையிலிருந்து செலவழிக்க அவர் தயாராக இருந்தார், தட்சிணா மூர்த்திக் குருக்களைத் தேடிச் சென்று கலியாணத்திற்கு நாள் பார்த்து வைத்துக் கொண்டு மலேயாவிலிருந்து குடும்பத்தினரைப் புறப்பட்டு வருமாறு கடிதம் எழுதினார். மற்ற உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தார். திருப்பூட்டு நாள் முடிவானதும் குருக்களோடு அப்படியே நேரே கோவிலுக்குச் சென்று ஓர் அர்ச்சனை செய்து பிரசாதத்தை வாங்கிக் கொண்டார்.

“நிம்மதியா இருங்கோ? அம்மன் வரப்பிரசாதி எல்லாம் நல்லபடி முடியும். சின்னராஜா கொடுத்து வச்சவர்” என்று குருக்கள் முன் கூட்டியே ஆசீர்வாதம் செய்தார். அந்த நிமிஷத்திலிருந்து கலியாணச் சமையலுக்கு யாரை ஏற்பாடு செய்வது, கச்சேரிக்கும் நாதஸ்வரத்திற்கும் யார் யாரை ஏற்பாடு செய்வது என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கினார் மாமா. அவருடைய மனம் கனவுகளில் மிதக்கத் தொடங்கியது, தன் சகோதரியும் இறந்துபோன மகாராணியுமான தனசேகரனின் அன்னை என்ன வாக்கு வாங்கிக் கொண்டாளோ அது நிறைவேறப் போகும் காலம் நெருங்குகிறது என்று மகிழ்ச்சியடைந்தார் அவர். கலைப் பொருட்கள், வாகனங்கள், சிலைகள் எல்லாம் பட்டியல் போட்டு முடிந்ததும் அரண்மனை என்ற பிரம்மாண்டமான மரளிகையில் அவற்றை ஒரு பெரிய பொருட்காட்சியாக வைப்பதற்குத் தனசேகரன் முயற்சி மேற்கொண்டபோது தான் அவன் அவற்றை விற்கப் போவதில்லை என்பது மாமாவுக்குப் புரிந்தது. இரண்டே மாதங்களில் அவற்றை ஒழுங்குபடுத்தி வைப்பதற்குப் புதைபொருள் இலாகாவில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற ஒருவரையும், இண்டீரியர் டெகரேஷனில் கெட்டிக்காரியான பட்டதாரிப் பெண்மணி ஒருத்தியையும் அவன் நியமித்த போது தான் அவசர அவசரமாக அவன் அரண்மனையைக் காலி செய்த வேகத்திற்கான காரணத்தைத் தாமாகவே புரிந்து தொண்டார்.

மியூசியம், ஆர்ட் காலரி, நூல் நிலையம் என்று அரண்மனைப் புொருள்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து மாளிகையின் முதல் பகுதியில் மியூஸியத்தையும் இரண்டாவது மாடியில் ஓவியங்களையும், மூன்றாவது மாடியில் சுவடிகள், அச்சிட்ட புத்தகங்கள் என்று இரு பிரிவுகள் அடங்கிய நூல் நிலையத்தையும் குடியேற்றுவது என்று திட்டமிடப்பட்டிருந்தது.

“நூல் நிலையமும், சுவடிகளும் வேண்டுமானால் இருக்கட்டும், மற்றவற்றை நல்ல விலைக்கு விற்றால் ஏதாவது தொழிலில் முதலீடு செய்ய வசதியாயிருக்கும். மியூஸியத்துக்கு டிக்கெட் வைத்தால் கூட உன்னுடைய முதலீட்டுக்கு வட்டியே கட்டாது. நான் சொல்றதைச் சொல்லியாச்சு... அப்புறம் உன் இஷ்டப்படி செய்” என்று மாமா குறுக்கிட்டுச் சொன்னதைத் தனசேகரன் ஏற்கவில்லை. உறுதியாக மறுத்துப் பதில் சொல்லி விட்டான்.

“இந்த மாபெரும் காட்சிச் சாலையின் மூலம் எங்கள் பரம்பரை வரலாற்றின் பெருமை மிக்க பகுதிகளை நான் உலகறிய அறிவிக்கிறேன். இதில் முதலீடாகிற தொகை பயனுள்ளது ஆகும்” என்றான் அவன். மியூசியம் அமைப்பதற்குக் கால் லட்ச ரூபாய் மரச்சாமான், கண்ணாடி அலமாரிகள், விளக்கு, மின்விசிறி ஏற்பாடுகளுக்கே ஆகும் என்று தெரிந்தது.

இவை தவிர ஆட்கள் சம்பளம் வேறு இருந்தது. அரண்மனையின் மூன்று தளங்களையும் மியூசியம் அமைக்க விட்டு விட்ட தினத்தன்றே மாமாவும் தனசேகரனும் தங்கள் குடியிருப்பை வசந்த மண்டபத்து விருந்தினர் விடுதிக்கு மாற்றிக் கொண்டார்கள், மியூசியம் அமைப்பது என்ற வேலையில் தச்சர்களும் மேஸ்திரிகளுமாகப் பலர் இரவு பகலாய் ஈடுபட்டிருந்தனர்.

“இது அநாவசியமான புதிய முதலீடு. பயன்தராத முதலீடு. புரொடக்டிவ் எக்ஸ்பெண்டிச்சர் இல்லே” என்றார் மாமா.

தனசேகரனோ ‘ஓர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது’ என்ற கதையில் படித்த கதாநாயகனின் மனநிலையில் அப்போது இருந்தான். அவனுடைய இலட்சியத்தில் அந்த அரண்மனையின் எதிர்காலம் பற்றிய ஒரு முடிவு ஏற்பட்டிருந்தது. அதை அவன் மெல்ல மெல்ல முயன்று உருவாக்கிச் சாதனை செய்து கொண்டிருந்தான்.

அத்தியாயம் - 16

அத்த இளையராணியைச் சந்திப்பதற்காகத் தனசேகரன் தட்சிணாமூர்த்திக் குருக்கள் வீட்டுக்கு என்றைக்குச் செல்ல முடிவு செய்திருந்தானோ அன்று மாமாவே அங்கு வந்துவிட்டதால் குருக்கள் தனசேகரனை அன்று தன் இல்லத்துக்கு வரவேண்டாம் என்று சொல்லி அனுப்பி விட்டார். மாமா கல்யாண முகூர்த்தம் அமைக்கும் வேலையாகத் தட்சிணாமூர்த்திக் குருக்களிடம் போயிருந்தார்.

அதற்கு அடுத்த நாள் காலையில் கோயிலுக்குத் தரிசனத்துக்குப் போவதுபோல் போய்விட்டுக் குருக்கள் வீட்டிற்குச் சென்றான் தனசேகரன்.

அந்த இளையராணி தன் மகனுக்குப் பணம் நின்று போகாமல் தொடர்ந்து அனுப்ப ஏற்பாடு செய்ததற்காக முதலில் அவனுக்கு நன்றி சொன்னாள். அப்புறம் தனக்கு வழங்கப்பட்ட செக்கையும் வீடு கட்டிக் கொள்வதற்கான மனையையும் பற்றி அவனிடம் பிரஸ்தாபித்தாள் அவள்.

எல்லார் முன்னிலையிலும் எல்லாருக்கும் கொடுத்தாற் போன்ற செக்கையும். நிலப் பட்டாவையும் எனக்கும் கொடுத்துக் கணக்குத் தீர்த்து விட்டீர்கள். மற்றவர்களுக்கு முன்னால் உங்களை விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளக் கூடாதே என்றுதான் அவற்றை நான் வாங்கிக் கொண்டேன். கணக்குத் தீர்த்துப் பணமும் வீட்டுமனையும் கொடுத்துவிட்டீர்கள். கணக்குத் தீர்த்துப் பணமும், விட்டு மனையும் வாங்கிக்கொண்டு இங்கிருந்து போய்விட வேண்டும் என்று நான் தவிக்கவில்லை. இந்த அரண்மனையில் பெரியராஜாவுக்கு அம்மி மிதித்து அருந்ததி பார்த்து வாழ்க்கைப்பட்டவளைப் போல்தான் நான் நடந்துகொண்டிருக்கிறேன். இனிமேலும் அப்படித்தான் நடப்பேன். இந்தாருங்கள், உங்களுடைய செக்கும் நிலப்பட்டாவும் தயவுசெய்து திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். என்னை உங்கள் சின்னம்மாவாகவும், ராஜசேகரனை அதாவது என் மகனை உங்கள் இளைய சகோதரனாகவும் மட்டும் நடத்துங்கள், போதும். இதை எல்லாம் எடுத்துக் கொண்டு நான் எங்கும் போகப் போவதில்லை. எனக்குப் போக்கிடம் ஏது? சாகிறவரை இங்கேதான் விழுந்து கிடப்பேன். இங்கே தான் சாவேன்.”

இந்தச் சொற்களைச் சொல்லும்போது அவள் ஏறக்குறைய அழுகிற நிலைக்கு வந்து விட்டாள். அவள் கண்கள் நெகிழ்ந்து சரம் பளபளத்தன. இந்த உணர்ச்சி மயமான நிலையை எப்படி எதிர் கொள்வதென்று ஒரிரு கணங்கள் தனசேகரனுக்குப் புரியவில்லை. சிறிது தயக்கத்திற்குப் பின் அவன் சொன்னான்:

“உங்கள் மனநிலையை நான் மதிக்கிறேன் அம்மா. அதனால் தான் விதிவிலக்காக உங்கள் மகன் ராஜசேகரனுடைய படிப்புக்கு மட்டும் தொடர்ந்து பனம் அனுப்பச் சொல்லி ஏற்பாடு செய்தேன். அதற்காக என் மாமாவிடமும் காரியஸ்தரிடமும் நான் பொய்கூடச் சொல்லும் படி நேரிட்டது. என் தந்தையின் டைரியில் உங்களைப் பற்றி மட்டும் விசேஷமாக எழுதியிருந்தது என்று சொல்லிச் சமாளித்திருக்கிறேன். உங்களுக்காக இதை எல்லாம் மனப் பூர்வமாகத்தான் நான் செய்திருக்கிறேன். ஆனால் அதற்காக வெளிப்படையாய் உங்களை மட்டும் தனியாய் நடத்தித் தனிமரியாதை செலுத்த முடியாத நிலையில் நான் இருப்பதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். அம்மா! அப்படி நடத்துவதற்கும் மரியாதை செலுத்து வதற்கும் நீங்கள் தகுந்தவராகவே இருந்த போதிலும்கூட என்னால் அதைச் செய்ய முடியாமல் இருக்கிறது. காரணம் நமது பொது மக்கள், சுற்றியிருப்பவர்கள், எல்லாருமே, எதைப் பற்றியும் சுலபமாகக் கைகால்களை ஒட்ட வைத்துக் கதைகட்டி விடுவார்கள், தராதரம் பார்க்க மாட்டார்கள். உறவுகளின் உயர்வுகளைப் பார்க்க மாட் டார்கள். மனிதர்களின் பெருந்தன்மைகளைப் பார்க்க மாட்டார்கள். எதையும் பேசிவிடுவார்கள். ஊர் வாய் மிகவும் பொல்லாதது.”

“நீங்கள் சொல்வது மிகவும் உண்மை. அது எனக்குப் புரிகிறது.”

தனசேகரன் சொல்லியதை அந்த இளையராணி சகஜமாக எடுத்துக் கொண்டதனால் நிலைமை சுலபமாயிற்று. மறுபடியும் வற்புறுத்தி அந்தச் கையும் வீடு கட்டுகிற மனைக்கான பத்திரத்தையும் அவனிடமே திருப்பியளிக்க அவள் முயன்றாள்.

“அம்மா! இவற்றை நீங்கள் இப்படியெல்லாம் திருப்பியளிக்கக் கூடாது. ‘தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு’ என்ற பழமொழி உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் உடனடியாக வீடு கட்டிக் கொள்கிறீர்களோ இல்லையோ, பட்டாவையும் பத்திரத்தையும் வைத்துக் கொள்ளுங்கள். செக்கை ஏதாவது ஒரு பாங்கில் கணக்கு வைத்துப் போட்டுக் கொள் ளலாம். அது பின்னால் உங்கள் பையனின் மேற்படிப்புக்கு பயன்படும். என்னிடம் இவற்றைத் திருப்பிக் கொடுத்து விடுவதன் மூலம் நீங்கள் யாருக்காகவும் எந்த விதமான தியாகத்தையும் செய்துவிடவில்லை என்பதை உணருங்கள். வேறு எங்கும் போக விரும்பாத பட்சத்தில் தொடர்ந்து தாங்கள் இங்கேயே குருக்கள் வீட்டில் இருக்கலாம். ஆனால், அடிக்கடி என்னைக் கூப்பிட்டனுப்பவோ, அல்லது தேடி வந்து சத்திக்கவோ முயலாதீர்கள். இருவர் நன்மைக்காகவுமே இதை நான் சொல்கிறேன்.

தனசேகரன் இதைச் சொல்லி விடைபெற்றுக்கொண்டு மறுபடி கோவிலுக்கு வந்து குருக்களிடமும் தகவல் கூறி விட்டு வசந்த மண்டபத்து மாளிகைக்கு வந்தான். அவன் உள்ளே நுழைந்த போது, மாளிகை முகப்பில் மாமா குறுக்கும் நெடுக்கு மாக நடைபோட்டுக் கொண்டிருந்தார். அவனைப் பார்த்ததுமே அவர் உடனடியாகக் கேட்டார்:

“ஏன் தம்பி? உன்னைத்தானே? ஷா அண்ட் படேல் என்ஜீனியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்காரனுக்கு நீ ஏதாவது அணைக்கட்டுக்குக் கல் சப்ளை பண்றதாகச் சொல்லியிருந்தியா? இங்கே பக்கத்திலே நூறு மைல் தொலைவிலேயே ஏதோ அணை கட்டறாங்களாமில்லே! இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னே அவுங்க இங்கே ஃபோன் பண்ணினாங்க. கல்லைப் பார்க்கறதுக்கு நாளைக்கு என்ஜீனியரோட வர்றாங்களாம். தயாரா இருக்கச் சொன்னாங்க. ஆமாம் எந்தக் கல்லை அவங்களுக்கு விற்கப்போறே நீ? யாரையும் கலந்துக்காமே நீ பாட்டுக்கு அவங்களோட பேசிட்டியே? சமயத்திலே உன்னைப் புரிஞ்சுக்கவே முடியலேப்பா?”

“நாளைக் காலையிலே தானே வரேன்னாங்க? வரட்டுமே!”

“நான் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லலியே? எந்தக் கல்லை அவங்களுக்குக் கொடுக்கப் போறே? அணை கட்டறத்துக்குக் கல் சப்ளைப் பண்றதுன்னா ரெண்டு சின்ன நிலையை உடைச்சாக்கூடப் போதாதே அப்பா?”

“இந்த அரண்மனையைச் சுற்றி இருக்கிற கல் மதில் சுவர்கள் இரண்டு மலைகளைவிட அதிகமா இருக்கும்னு நினைக்கிறேன் மாமா!”

“சரி அப்படியே இருக்கும்னு வச்சுக்குவோம். அரண்மனை மதிலுக்கும் அணைக்கட்டுக்கும் என்னப்பா சம்பந்தம்?”

“மதிலை உடைக்கச் சொல்லித்தான் அணைக்கட்டுக்குக் கல் விற்கப் போகிறேன். அதுக்காகத்தான் அவங்களை வரச்சொல்லியிருக்கேன் மாமா!”

“உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கா என்ன? கல் மதிலை எதுக்காக உடைக்கிறது? ஆகாக் காரியம்லாம் வேண்டாம்பா. ஊரையும் அரண்மனையையும் பிரிப்பதே கற்சுவர்கள்தான். அதை உடைச்சாச்சுன்னா ஊருக்கும் அரண்மனைக்கும் நடுவே ஒரு தடுப்பும் இல்லாமலே போயிடும். பழைய காலத்திலே எதிரிகள், கொள்ளைக்காரங்ககிட்ட இருந்தெல்லாம் இந்த அரண்மனையை அந்தச் சுவர்கள்தான் காப்பாத்தியிருக்கு. அதைப் போய் யாராவது உடைப்பாங்களா?”

“ஊருக்கும் அரண்மனைக்கும் நடுவே தடுப்பு எதுவும் இனிமே இருக்கக் கூடாதுங்கறதுக்காகத்தானே இந்தச் சுவர்களை எல்லாம் உடைக்கச் சொல்றேன். இந்தச் சுவர்கள் வெளியே இருந்து இதற்குள்ளே திருடர்கள் வராமல் பாதுகாத்தது என்பதை விட உள்ளே இருந்த திருடர்களை வெளியே வசித்தவர்களிடமிருந்து, அதாவது பறி கொடுத்தவர்களிடமிருந்து பறித்தவர்களைக் காப்பாற்றியிருக்கிறது என்பதே இப்போது சரியான வாதம் மாமா! சுரண்டப்பட்ட மக்களிடமிருந்து சுரண்டிய வர்க்கத்தைப் பிரித்துத் தனியே பாதுகாத்து வைத்த சுவர்கள் இவை. வெளியே என்ன நடக்கிறது என்பதை உள்ளே உழைக்காமல் சுகபோகங்களில் மிதந்து கொண்டிருந்தவர்களுக்கும், உள்ளே என்ன நடக்கிறது என்பதை வெளியே சிரமப்பட்டுக் கொண்டிருந்த பல லட்சம் மக்களுக்கும் தெரிய விடாமல் உயர்த்திக் கட்டப்பட்ட உறுதியான சுயநலச் சுவர்கள் இவை. பழமையையும் சுரண்டுகிறவர்களின் சொந்த நலனையும் பாதுகாக்க இப்படி ஆயிரம் ஆயிரம் கற்சுவர்கள் இந்நாட்டில் எங்கெங்கோ எது எதற்கோ போடப்பட்டிருக்கின்றன். இன்றும், இனி என்றும், அந்தச் சுவர்களுக்கு அவசியமில்லை. திருடுபவர்களும் காவல் புரிகிறவர்களும் இல்லாத ஒரு புதிய சமூகம் உருவாக இப்படிச் சுவர்களே தடையாக இருக்கின்றன. இவற்றை உடைத்தால் சமூகத்தை அணையிட்டுத் தடுக்கும் பாத்திகளும் வரப்புக்களும் வர்க்க பேதங்களும் உடைக்கப்படுவதாக நான் நினைப்பேன்.”

“இந்தக் கற்சுவர்களுக்குள்ளே இருந்து ஆண்ட அனைவருமே கெட்டவர்களாகவும், திருடர்களாகவும் இருந்தார்கள் என்றா நீ சொல்கிறாய்? இந்த மதிற் சுவர்கள் உன் தந்தை காலத்துக்கும் முன்பாகப் பல நூற்றாண்டுக் காலம் முந்திக் கட்டப்பட்டவை...”

“என்றைக்கானால் என்ன? எப்போது அகழிகள் தோண்டிச் சுவர்கள் எடுத்துச் சமூகத்திலிருந்து தங்களைப் பிரித்து உயர்த்தி வேறுபடுத்திக் கொண்டார்களோ அப்போதே திருட்டு ஆரம்பமாகிவிட்டது. நாட்பட்ட திருட்டுக்கள் இங்கே சாஸ்திரோக்தமாகி விடுகின்றன. நாட்பட்ட தவறுகளே சில சமயங்களில் சம்பிரதாயமாகவும் சட்டங்களாகவும் ஆகிவிடுகின்றன. பின்பு அதைப் புகழவும் போற்றவும் ராஜ விசுவாசிகள் என்ற பெயரில் ஒரு பரிவாரம், குடிபடைகள், புலவர்கள், பிரதானிகள் எல்லாரும் ஏற்பட்டு விடுகிறார்கள். ஏழையின் திருட்டு உடனே கண்டு பிடிக்கப்படுகிறது. பணக்காரர்களின் திருட்டு கண்டு பிடிக்கப்படுவதில்லை. மாறாக அவை சம்பிரதாயங்களாக நியாயப் படுத்தப்பட்டு விடுகின்றன. அரண்மனைகளில் விசுவாசத்துக்கு ஒரு காலும் ஒருகையுமே இருக்கின்றன. விசுவாசம் முடமாக்கப் பட்டிருக்கிறது. விசுவாசம் ஒரு வழிப் பாதையாக்கப் பட்டிருக்கிறது.”

தனசேகரனின் உணர்வுகள் கட்டுப்பாடற்றுப் பொங்கின. மாமாவுக்கு இந்தக் கருத்துக்களை முற்றிலும் ஜீரணிக்க முடியவில்லை என்றாலும் இதில் கொஞ்சம் நிஜம் இருப்பது போலவும் பட்டது.

“அந்த மதிற்கூசுவரின் மொத்தச் சுற்றளவுக்குள் எட்டுக் கோவில்கள் இருக்கின்றனவே; அவற்றை என்ன செய்யப் போகிறாய்?” என்று புதுச் சந்தேகத்தைக் கிளப்பினார் அவர்.

“ஜனங்கள் விரும்பினால் அவற்றை விட்டுவிடலாம். அவை பெரிய பிரச்னை இல்லை. மரத்தடி, மதிற் சுவர். திறந்த வெளி எல்லாவற்றையுமே இந்நாட்டில் கோவிலாக்கி விடுகிறார்கள். அதனால் எங்கும் எதுவும் செய்ய முடியாமற் போகிறது மாமா.”

தந்தையின் நாட்குறிப்புக்கள் அவனை இப்படி மாற்றினவா? அல்லது அவன் படித்த வேறு புத்தகங்கள் அவனை இப்படி மாற்றினவா? என்பது மாமாவுக்குப் பெரிய புதிராக இருந்தது.

அவன் பேசிய விதத்திலிருந்து மதிற்சுவர்களை எடுத்து விட்டு அரண்மனையை ஊர்ப் பொதுச் சொத்தாக்க உத்தேசித்திருப்பது போலப்பட்டது. மாமா அதை எதிர்த்து வாதிடவில்லை.

மறுநாள் காலையில் ஷா அண்ட் படேல் இன்ஜினியரிங் கம்பெனி ஆட்கள் வந்தார்கள். அவர்களுக்கு மதிற்சுவர்களைச் சுற்றிக் காட்டினான் தனசேகரன். தாங்கள் விரும்பிய ஒரிடத்தில் மதிற்சுவரிலிருந்து சில கருங்கற்களை உடைத்துப் பார்த்துக் கொண்டார்கள் அவர்கள், அணைக் கட்டுக்கு என்று புதிதாக ஒரு மலையைத் தேடிப் போய் வெடி மருந்துக்கும் வேலை ஆட்களுக்கும் செலவழித்துக் கொண்டிருப்பதை விட இந்தக் கற்சுவர்களையே பிரித்து உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என்று அந்தக் கம்பெனியின் இன்ஜீனியர்கள் இணக்கமான ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

அன்று காலை தனசேகரன் அவர்களை அழைத்துக் கொண்டு அரண்மனை மதிற்சவர்களைச் சுற்றிக் காட்டுவதற்குப் புறப்பட்டபோது மாமா அவர்களோடு உடன் செல்லவில்லை.

காரியஸ்தருக்கும் அது பிடிக்கவில்லை என்றாலும் உத்தியோகம் கருதி அவர் உடன் செல்ல வேண்டியிருந்தது. விரைவில் பேசி முடிவு செய்யலாம் என்று கற்களை விற்க இருந்தவர்களும் வாங்க இருந்தவர்களும் தீர்மானித்தனர். சுவர்களைப் பிரித்துக் கற்களைச் சேகரித்துக் கொள்ளும் வேலையைக் கம்பெனியாரே செய்து கொள்ள வேண்டும். தன்னால் அது நிச்சயமாக முடியாது என்று தனசேகரன் கூறிவிட்டான்.

சுற்றுப்புறத்து ஏழை விவசாயிகளின் பல லட்சம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதி செய்து தரக்கூடிய ஓர் அணைக்கட்டுக்கு அந்தக் கற்கள் உபயோகமாகப் போகின்றன என்று எண்ணியபோது தனசேகரனுக்குப் பெருமையாக இருந்தது. மதில்களை உடைக்கத் தொடங்குவதற்கு நாள் குறித்தாகிவிட்டது. கற்களுக்கு விலையாக ஒரு பெருந்தொகை தருவது என்றும் உடன்படிக்கை செய்து கொண்டாயிற்று.

உடன்படிக்கையில் இருவருமே எழுதிக் கொள்ள மறந்து விட்ட ஒரு பிரச்னை முதல் நாளே வந்து குறுக்கிட்டது. தோண்டத் தொடங்கிய முதல் இடத்திலேயே பழைய தங்க நாணயங்கள் நகைகள் அடங்கிய ஒரு பெரிய பித்தளைக் குடம் புதையலாகக் கிடைத்தது.

என்ஜீனியரிங் கம்பெனியார் அது தங்களுக்குத்தான் சொந்தம் என்றார்கள். மாமாவும் காரியஸ்தரும் நிச்சயமாக அது அரண்மனைச் சொத்தாகையால் தனசேகரனைத் தான் சேரும் என்றார்கள்.

தகவல் படிப்படியாகப் பரவித் தோண்டி எடுத்த இடத்தில் ஒரு பெருங்கூட்டமே கூடிவிட்டது. பத்திரிகைகளிலும் செய்திகள் படத்துடன் பிரசுரமாகிவிட்டன. இன்னும் பல இடங்களில் தோண்டும்போது இப்படியே மேலும் பல புதையல்கள் கிடைக்கக்கூடும் என்று ஜனங்கள் பேசிக் கொள்ளத் தொடங்கி இருந்தார்கள். தனசேகரன் அந்தப் பிரச்னையை எப்படி முடிவு செய்கிறான் என்பதை அறிவதில் எல்லாருமே ஆவல் காட்டினார்கள்.

அத்தியாயம் - 17

தனசேகரனிடம் அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்ட போது அவன் எந்தவிதமான பரபரப்பும் அடையவில்லை. மாவட்டக் கலெக்டருக்கு அதைப் பற்றித் தகவல் தெரிவிக்குமாறு காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையை வேண்டிக் கொண்டான் அவன்.

சேர்வைகாரர் கொஞ்சம் தயங்கியது போலத் தோன்றியது. “காண்ட்ராக்ட்காரங்க கிட்டப் பேசி அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமே...? இதைப் போயி கவர்மென்ட்கிட்டச் சொல்லணுமா?” என்று வாய் திறந்தே அவனைக் கேட்கவும் செய்தார் அவர். தனசேகரன் சொன்னான்:

“முறைப்படி அவங்களுக்குத் தகவல் சொல்லிவிட்டு அப்புறம் புதையலை நம்ம மியூசியத்திலே வச்சிக்க அனுமதி கேட்கலாம்.”

“கவர்மெண்டிலே ஒண்ணை நீங்களாப் போயி வலுவிலே சொல்லிட்டீங்கன்னா அப்புறம் எல்லாத்துக்குமே அவங்க வந்து நின்னுடுவாங்க. எதையும் அவங்ககிட்டவே ஒப்படைச்சாகணும்.”

“வரட்டுமே? அதனாலே என்ன தப்பு? நல்லதுதானே? அவங்களுக்குத் தெரியாமே நாம எதுவும் பண்ணணும்னு நெனைக்கலியே? நமக்கு எதுக்குப் பொதுச் சொத்து?"

காரியஸ்தர் கலெக்டருக்குத் தகவல் தெரிவிக்கச் சென்றார். அரண்மனை எல்லைக்குள்ளே கிடைத்த ஒரு புதையலைப் போப் இளையராஜா அரசாங்கத்துக்குத் தெரிவிக்கச் சொல்கிறாரே என்று காரியஸ்தருக்குச் சடைவாகத்தான் இருந்தது. அணைக்கட்டுக்காகக் கல் எடுத்துக் கொள்ளும் இன்ஜீனியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியுடன் செய்து கொண்ட உடன்படிக்கையில் சுவரை அழித்துக் கற்களை மட்டுமே அவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று தான் தெளிவாக இருந்தது.

உடன்படிக்கையின்படி புதையலை அவர்கள் எடுத்துக் கொள்வது என்பது சாத்தியமே இல்லை. அது தனசேகரனுக்கும் தெரியும். அரசாங்கத்துக்குத் தெரிவித்துவிட்டு மியூசியத்தில் அந்தப் புதையலில் அடங்கிய பொருள்களை வைக்கலாம் என்று தனசேகரன் கூறியதுதான் காரியஸ்தருக்குப் புரியவில்லை.

மியூஸியத்தில் வைப்பதால் தனசேகரனுக்கு ஒரு பிரயோசனமும் இல்லையே என்றுதான் அவர் யோசித்தார். மியூஸியத்தில் வைத்து விடுகின்ற தங்கத்தை மறுபடி எடுக்க முடியாதே என்று தயங்கினார் அவர். கற்சுவர் ஓரிடத்தில் தகர்க்கப்பட்டு அந்த இடைவெளியின் வழியாக ஊர் தெரிந்ததும் எதையோ வேண்டாததைத் தகர்த்து வேண்டியதைப் பார்த்து விட்டதுபோல் தனசேகரனுக்குத் திருப்தியாக இருந்தது. மதிற்சுவர்களை ஒட்டியிருக்கும் கட்டிடத்தோடு கூடிய கோவில்களையும் திறந்த வெளிக் கோவில்களையும் எந்தச் சேதத்துக்கும் இடமின்றி அப்படியே பத்திரமாக விட்டுவிட வேண்டும் என்று அணைக்கட்டுக் குத்தகைதாரர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்களும் அதற்கு இசைந்திருந்தார்கள். அந்த விஷயத்தில் உள்ளூர்ப் பொது மக்களின் மன உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்க விரும்பினான் தனசேகரன்.

அந்த அரண்மனையின் கற்சுவர்கள் நூற்றுக்கணக்கான வேலையாட்கள் மூலம் நாலாபுறமும் இடிக்கப்படுகிற அவசரத்தைப் பற்றிப் பொதுமக்கள் பலரும் பலவிதமாகப் பேசத் தொடங்கியிருந்தார்கள். சுவர்களை இடித்துவிட்டு அந்த இடத்தை அப்படியே ஒரு பெரிய ஹோட்டலாக மாற்றிவிடப் போவதாகச் சிலர் பேசிக் கொண்டார்கள். கட்டிடங்களையும் மாளிகைகளையும் தகர்த்துவிட்டு ‘பீமநாதநகர்’ என்ற பெயரில் ஒரு வீடு கட்டும் திட்டத்தை இளையராஜா தொடங்கப் போவதாக மற்றும் சிலர் பேசிக் கொண்டார்கள். விவரம் தெரிந்து தனசேகரனின் மனப் போக்கையும் நன்கு புரிந்து கொண்ட சிலர்தான் அங்கே ஒரு பெரிய மியூஸியமும் நூல் நிலையமும் வர இருக்கின்றன என்பதை உண்மையாகவே உணர்ந்திருந்தனர்.

வதந்திகள் செழித்துப் படர்வதற்கு இந்திய நாட்டு நடுத்தர ஊர்களில் எந்த உரமும் போட வேண்டியதில்லை. அவை தாமாகவே வளர முடியும். தாமாகவே பரவ முடியும். பீமநாதபுரமும் இதற்கு விதிவிலக்காக இல்லை.

சிலருடைய கற்பனை ஓர் எல்லையே இல்லாத அளவிற்கு வளர்ந்து படர்ந்திருந்தது. பெரிய ராஜா பட்டனத்தில் நடத்தத் தொடங்கித் தோற்றுப் போயிருந்த சினிமாக் கம்பெனியை அரண்மனைக் கட்டிடத்துக்குக் கொண்டு வந்து அதையே சினிமா ஸ்டூடியோவாகவும், புரொடக்ஷன் செண்டராகவும் தனசேகரன் மாற்றப் போகிறான் என்று கூட ஒரு செய்தி ஊர் மக்களிடையே பரவி இருந்தது. அதற்காகத்தான் மதிற்சுவர்கள் இடிக்கப் படுகின்றன என்றும் அப்படிப்பட்டவர்கள் காரணம் கற்பித்தார்கள்.

மாமா தங்கபாண்டியனுக்கும், காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வைக்கும், தனசேகரனின் சில செய்திகள் பற்றித் தயக்கங்கள் இருந்த போதிலும் வெளிப்படையாக முரண்பட்டு அவர்கள் அவனை மறுக்கவில்லை. அரண்மனையைப் பற்றிய எந்த விவகாரத்திலும் முடிவெடுக்கத் தனசேகரனுக்கு முழு உரிமையும் இருக்கிறது என்பதை அவர்கள் நம்பினார்கள். தனசேகரன் செய்த காரியங்கள் சிலவற்றில் அவர்களுக்கு உடன்பாடில்லை என்றாலும் அவன் நியாயமாகவும், ஒளிவு மறைவின்றியும் இருக்கிறான் என்பது அவர்களுக்குப் பிடித்திருந்தது. புதையலை அரசாங்கத்திடம் சொல்ல வேண்டியதுதான் முறை என்று தனசேகரன் பிடிவாதமாக இருந்ததைக் கூட அவர்கள் விரும்பவில்லை! எனினும் சொத்துச் சேர்க்க வேண்டும் என்ற ஆசையோ, பேராசையோ அவனுக்கு இல்லாதது அவர்களுக்கு அவன் மேல் மிகுந்த நன்மதிப்பை உண்டாக்கியது.

மறுநாள் அரசாங்கப் புதைபொருள் இலாகா இயக்குநரும், அதிகாரிகளும் பீமநாதபுரம் வந்து சேர்ந்தார்கள். புதையலில் அடங்கிய தங்க நாணயங்களில் பீமநாதபுரம் அரண்மனை முத்திரை இருந்தது. புதையல் பானை திறக்கப்பட்டு அதிகாரிகள் முன்னிலையிலும் தனசேகரன் முன்னிலையிலுமாகப் பரிசோதிக்கப்பட்டது. அதிகாரிகள் புதையல்களைப் பற்றிய நடைமுறைகளைத் தெரிவித்தார்கள்.

“எல்லாப் புதையல்களும் அரசாங்கத்துக்குத்தான் சொந்தம்! இதில் விதிவிலக்கு எதுவும் கிடையாது.”

“எனக்கு ஆட்சேபணை இல்லை. தங்கத்துக்கு ஆசைப்பட்டோ, ‘எங்கள் அரண்மனை எல்லையில் கிடைத்த சொத்து’ என்று உரிமை கோரியோ நான் இந்தப் புதையலைக் கேட்கவில்லை. பீமநாதபுரம் அரண்மனையையே நான் ஒரு மியூஸியமாக மாற்றப் போகிறேன். இந்தத் தங்கக் காசுகளை அப்படியே அந்த மியூஸியத்தில் வைக்கலாம் என்பதுதான் என் நோக்கம். எங்கே எப்போது கிடைத்த காசுகள் என்ற விவரத்தை எழுதி வைத்துவிட்டால் இது வரலாற்றின் ஒரு சின்னமாக இருக்கும்” என்றான் தனசேகரன்.

அதிகாரிகள் கொள்கை அளவில் அதை ஏற்றுக் கொண்டார்கள். அதோடு ஒரு சிறிய ஆட்சேபணையையும் தெரிவித்தார்கள். “மியூஸியத்தில் வைக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கையை ஏற்கிறோம். ஆனால் ஒரே மாதிரி உருவ அமைப்புள்ள ஒரு குடம் தங்கக் காசுகளையும் எதற்காக மியூஸியத்தில் வைக்க வேண்டும் மாதிரிக்கு ஒன்றோ இரண்டோ வைத்தால் போதுமே? முழுக் குடத்தையுமே வைப்பதற்கு அரசாங்க அநுமதி கிடைப்பது கஷ்டம். ஒரு காசு இரண்டு காசுகளை வைப்பதற்கு வேண்டுமானால் மேலே இலாகாவுக்கு எழுதி அநுமதி வாங்கித் தருகிறேன்” என்றார் அதிகாரி.

தனசேகரன் அதற்கு இசைந்தான். புதையல் காசுகள் வைக்கப்பட்டு இருந்த குடத்தையும் மாதிரிக்கு ஒன்றிரண்டு தங்கக் காசுகளையும் கொடுத்தால் போதுமானது என்று தனசேகரன் இசைந்தது அதிகாரிக்கு ஆச்சரியத்தை அளித்தது. வீண் முரண்டும், டாம்பீகமும், எதற்கும் விட்டுக் கொடுக்காத இயல்பும் உள்ள மன்னர் குடும்பங்களில் இப்படிச் சுபாவமான மனிதர்களும் இருக்கிறார்களே என்பதுதான் அதிகாரியினுடைய ஆச்சரியத்துக்குக் காரணமாயிருந்தது.

அரசாங்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டபடி பீமநாதபுரம் அரண்மனைக்கும், அரச குடும்பத்துக்கும் வாரிசு என்ற முறையில் தனசேகரன் புதையலின் மாதிரிகள் சிலவற்றை மியூஸியத்தில் வைப்பதற்காகத் திருப்பித் தர வேண்டும் என்று அரசாங்கத்தை வேண்டிக் கொள்கிற மனு ஒன்றை எழுதிக் கொடுத்தான்.

மேலேயிருந்து உத்தரவு கிடைத்ததும் சில காசுகளையும் பிறவற்றையும் உடனே திரும்பக் கிடைக்கச் செய்வதாகக் கூறிவிட்டுப் புதையலை ஸீல் செய்து எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள் அதிகாரிகள்.

புதையல் சம்மந்தமான அதிகாரிகள் அரண்மனைக்கு வந்து விட்டுத் திரும்பிப்போன மறுநாள் காலையில் யாரும் எதிர்பாராத விதமாகக் கோமளீஸ்வரன் சென்னையிலிருந்து புறப்பட்டு வந்து சேர்ந்தான். அவன் வந்த தினத்தன்று மாமாவும், காரியஸ்தருமாகப் பரிமேய்ந்த நல்லூர்க் கோவிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும். புதிதாகச் செய்த ஒரிஜினல் தங்க நகைகளைச் சார்த்துவதற்காகப் புறப்பட்டுப் போயிருந்தார்கள். அதிகாலை ஐந்து மணிக்கே காரில் இருவரும் பரிமேய்ந்த நல்லூருக்கு நல்லநேரம் பார்த்துப் பயணப்பட்டிருந்ததால் பீமநாதபுரம் அரண்மனையில் தனசேகரன் மட்டும்தான் இருந்தான். புதிய மியூஸியத்தையும் அதன் இண்டீரியர் டெகரேஷன் ஏற்பாடுகளையும் அன்று பகலில் சுற்றிப் பார்ப்பதற்குத் திட்டமிட்டிருந்ததால் தனசேகரன் பரிமேய்ந்த நல்லூருக்குப் போகவில்லை. கோவில் விஷயம் என்பதனால் வயதும் அநுபவமும் மிக்க மாமாவும், காரியஸ்தரும் போனாலே போதும் என்று தனசேகரன் நினைத்திருந்தான். இந்த நிலையில்தான் சென்னையிலிருந்து கோமாளிஸ்வரன் என்று மாமா கேலியாக அழைக்கும் கோமளீஸ்வரன் அன்று காலை விடிந்ததும் விடியாததுமாக வந்து சேர்ந்திருந்தான். கப்பலைப் போல, நீளமான ஒரு பெரிய காரில் தனி ஆளாக வந்து இறங்கியதனால் அரண்மனை ஊழியர்கள் மருண்டு போய் அவனை உள்ளே விட்டு விடத் தயங்கவில்லை. கோமளிஸ்வரனும் அரண்மனையில் உள்ளவர்களைத் தந்திரமாக அணுகினான்:

“சென்னையிலிருந்து சினிமா டைரக்டர் கோமளிஸ்வரன் சந்திக்க வந்திருக்கிறார்” என்று சொல்லி அனுப்பினால் தனசேகரன் எங்கே சத்திக்க மறுத்து விடுவானோ என்று பயந்து, “மெட்ராஸ்லே இருந்து பெரிய ராஜாவின் பழைய நண்பர் ஒருத்தர் தேடி வந்திருக்கார்னு சொல்லுங்க” என்பதாகத்தான் உள்ளே தனசேகரனுக்குத் தகவல் சொல்லி அனுப்பினான் அவன்.

‘மாமாவும் காரியஸ்தரும் ஊரில் இல்லை. பரிமேய்ந்த நல்லூர் போயிருக்கிறார்கள்’ என்பதை வந்தவுடன் விசாரித்துத் தெரிந்து கொண்டிருந்த கோமளிஸ்வரன், அபாரமான துணிச்சலை அடைத்திருந்தான். பெரியகாரில் வந்திறங்குகிறவர்கள் பெரிய மனிதர்களாகத் தான் இருக்க வேண்டும் என்கிற பாமர எண்ணம் அரண்மனை ஆட்களுக்கு இருந்ததால் அவர்கள் சில உள் விஷயங்களை, மிகவும் நம்பிக்கையோடும் மதிப்போடும் கோமளிஸ்வரனிடம் சொல்லியிருந்தார்கள்.

நடிகை ஜெயநளினியிடம் சொல்லிப் பீமநாதபுரம் அரச குடும்பத்து வாரிசான தனசேகரனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிட்டு அவனை நேரில் பார்த்துப் பேரம் பேசவும் வந்திருந்தான் கோமளிஸ்வரன். வக்கீல் நோட்டீஸ் அனுப்பச் செய்ததுமே தனசேகரன் மிரண்டு போய் ராசி பேசுவதற்கு வந்து தாங்கள் கேட்கிற பணத்தைக் கொடுத்து விட்டுப் போய் விடுவான் என்று கோமளிஸ்வரன் எதிர்பார்த்ததற்கு மாறாக அரண்மனைத் தரப்பில் பதில் வக்கீல் ஏற்பாடு செய்யப்பட்டு வழக்கை எதிர்கொண்டது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனவேதான் மறுபடியும் நேரில் வந்து நயமாகவும் பயமாகவும் பேசி எதையாவது பணம் பறிக்கலாம் என்று நினைத்திருந்தான் அவன், உண்மையில் தேடி வந்திருப்பது அவன்தான் என்று தெரிந்திருந்தால் தனசேகரன் அவனைச் சந்தித்திருக்கவே மாட்டான். சாமர்த்தியமாக உள்ளே நுழைந்து தனசேகரனுக்குப் பெரிய கும்பிடாக ஒரு கும்பிடு போட்டான் கோமளிஸ்வரன்.

“அடடே! நீங்கதானா? வேறே யாரோன்னில்லே நினைச்சேன்” என்று தனசேகரன் சுவாரஸ்யமற்றுப் போன குரலில் சொன்னான்.

“சின்னராஜாவை எப்படியாவது தனியாகப் பார்க்கணும்னு மெட்ராஸ்லேருந்து கார்லியே புறப்பட்டு வந்திருக்கேனுங்க. நான் ஆசைப்பட்டாப்லியே உங்க தரிசனம் கிடைச்சிரிச்சு. ரொம்ப சந்தோஷம். எப்பவும் போல இந்த அரண்மனையோட கிருபை எங்களுக்கு இருக்கணும். நாங்கள்ளாம் இந்த அரண்மனை உப்பைத் தின்னு வளர்ந்தவங்க. சின்னராஜாகிட்டத் தனியா இதைச் சொல்லி விட்டுப் போகணும்னுதான் வந்தேன்.”

“அப்படியா இதுக்காகவா இத்தனை சிரமப்பட்டு இவ்வளவு தூரம் வந்தீங்க? இப்போ இனிமேல் இங்கே அரண்மனையும் கிடையாது, ராஜாவும் இல்லே. உங்க விசுவாசத்துக்கும் அவசியம் இல்லே. அதுக்கப்புறம் சொத்திலே உரிமை கோரி வக்கீல் நோட்டிஸ் விடவேண்டிய அவசியமும் இருக்காது” என்று தனசேகரன் பதில் சொல்லியதும் அவன் இன்னும் கோபமாகத்தான் இருக்கிறான் என்பது கோமளிஸ்வரனுக்குப் புரிந்தது.

“உங்க கோபத்துக்குக் காரணம் இப்போ புரியுது சின்னராஜா! ஜெயநளினி யாரோ தூண்டிவிட்டு நோட்டீஸை அனுப்பிவிட்டு அப்புறம் தவியாக்கெடந்து தவிக்குது. மனசு கேட்கலே. சின்னராஜா அத்தனை தங்கமான மனசு உள்ளவரு. அவருக்கா நோட்டீஸ் அனுப்பினோம்னு வேதனைப்படுது. அது விஷயமாகத்தான் நானே இப்போ இங்கே புறப்பட்டு வந்தேன்.”

“வக்கில் நோட்டீஸ் அனுப்பினப்புறம் எதுக்காக வேதனைப்படனும்? எல்லாம் கோர்ட்டிலே வந்து பார்த்துக்க வேண்டியதுதானே?”

“அப்படிச் சொல்லிடப்படாது. தயவு பண்ணிச் சின்னராஜா கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கணும். நளினிக்குக் குழந்தை மாதிரி மனசு. அது உங்க மேலேயும் ராஜா குடுமபத்து மேலேயும் கொள்ளைப் பிரியம் வச்சிருக்கு.”

“இங்கே யாரும் யாரோட பிரியத்துக்காகவும் தவிச்சுக் கிடக்கலே. இந்த மாதிரிப் பிரியங்களுக்கு எல்லாம் விலை கொடுக்கிற வசதியும் இப்போ எங்களுக்கு இல்லே.”

“சின்னராஜா இப்படி எடுத்தெறிஞ்சுப் பேசிடப்படாது. ராஜா குடும்பத்தார் ஜெயநளினி மேலேயும் ஜெய நளினி ராஜா குடும்பத்தார் மேலேயும் எவ்வளவு பிரியமா இருந்திருக்காங்கன்னு இந்த ஆல்பத்தைப் பார்த்தீங்கன்னாத் தெரியும். பெரிய மகாராஜா இந்த ஜெயநளினி மேலே உயிரையே வச்சிருந்தாங்க” என்று சொல்லிக் கொண்டே ஒரு பெரிய ஆல்பத்தை எடுத்து நீட்டினான் கோமளீஸ்வரன்.

தனசேகரன் முதலில் அதை வாங்குவதற்கே தயங்கினான். அப்புறம் வழக்குக்குத் தேவையான எதுவும் அதில் இருக்குமோ என்ற யோசனை வரவே வேண்டா வெறுப்பாக அதை வாங்கினான்.

கோமளீஸ்வரன் வாயெல்லாம் பல்லாக அருகே நின்று ஆல்பத்திலிருந்து ஒவ்வொரு படத்துக்கும் விளக்கம் கூறத் தொடங்கி விட்டான். படங்களைப் பார்க்கப் பார்க்கத் தனசேகரனுக்கு வயிற்றெரிச்சலாக இருந்தது. ஆல்பத்தில் பல படங்கள் பிளாக்மெயில் செய்ய முயல்வது போலிருந்தன. பெரிய ராஜா நடிகை ஜெயநளினியின் கழுத்தில் முத்துமாலை அணிவது போல் ஒரு படம். அது பெரிய ராஜா அவளுக்குப் பின்புறமாக நின்று அவளைத் தழுவினாற்போல முத்துமாலையை அவள் கழுத்தில் பூட்டுகிறாற் போல எடுக்கப்பட்டிருந்தது. கொஞ்சம் நெருக்கமாகவே இருந்தது. ஆல்பத்தை மேற்கொண்டு பார்ப்பதை அப்படியே நிறுத்திக் கொண்டு, “என்னய்யா கோமளீஸ்வரன்! இந்தப் படங்களையெல்லாம் காண்பிச்சு என்னை மிரட்டிப் பார்க்கலாம்னு புறப்பட்டு வந்தீரா?” என்று தனசேகரன் கோமளிஸ்வரனைக் கேட்டான். இப்போது அவன் குரலில் சூடேறி இருந்தது.

“சிவசிவா! நீங்களே இப்படிச் சொல்லலாமா? சின்ன ராஜா தயவு வேணும்னு நான் புறப்பட்டு வந்திருக்கேன். நீங்கதான் தயவு பண்ணனும்.”

தனசேகரன் கோமளீஸ்வரனை நிமிர்ந்து பார்த்தான். இந்த வார்த்தைகளை அவன் உண்மையிலேயே விநயமாகத்தான் சொல்கிறானா அல்லது வஞ்சமாகச் சொல்கிறானா என்பதை ஊடுருவி அறிய முயன்றான் தனசேகரன். கோமளீஸ்வரனோ கெஞ்சினான்.

அந்த ஆல்பத்தை மேற்கொண்டு பார்க்கப் பார்க்கத் தனசேகரனுக்கு அருவருப்பு ஏற்பட்டது. தன் தந்தையோடு கூட இருந்த படங்கள் முடிந்து ஜெயநளினி தனியே ஜாக்கெட்டோடு, அரை டிராயரோடு, பனியனோடு, ப்ராவோடு எடுக்கப்பட்ட கவர்ச்சிப் படங்களே அதில் நிறைய இருந்தன. அந்தப் படங்களைப் பார்த்துத் தனசேகரன் முகம் சுளிப்பதைக் கண்டு, “தப்பா நினைக்காதிங்க. உங்க அம்மா மாதிரி நல்ல மனசு அவங்களுக்கு” என்றான் கோமளிஸ்வரன்.

“தப்பா நினைக்காமே பின்னே எப்படி ஐயா நினைக்கிறது? எங்கம்மா மாதிரீன்னு சொல்லி எங்கம்மாவை நீர் அவமானப்படுத்தக் கூடாது. எங்கம்மா தெய்வம் ஐயா! இப்படிக் கோலத்திலே எல்லாம் எங்கம்மா மட்டுமில்லே உலகத்திலேயே எந்த அம்மாவும் தோன்ற மாட்டாங்க.”

“கலை அம்சத்தை மட்டும் பார்த்தா எதுவும் தப்பாத் தெரியாதுங்க.”

“ஒகோ! கலை அம்சத்தைப் பற்றி நீர் பாடம் சொல்லிக் கொடுத்துத்தான் நான் இனிமேல் தெரிஞ்சுக்கணுமாக்கும்.”

“இல்லீங்க. ஜெயநளினி தங்கமான பொண்ணு. பெரியவரு மாதிரியே எப்பவும் போல நீங்களும் அங்கே வந்து போயிட்டிருக்கணும்னு ஆசைப்படுதுங்க. உங்க கிருபை வேணும்னு நினைக்குதுங்க.”

கோமளிஸ்வரன் இதைச் சொல்லிய வீதம் மிகவும் கொச்சையாயிருந்தது. எப்போதோ எங்கோ மிகவும் அரட்டைக்காரனாக சம வயது இளைஞன் ஒருவனிடம் கேட்டிருந்த, ‘அப்பன் வருவான் அதன் பின் மகன் வருவான், தப்பென்று கொள்ளாதே’ என்ற பழம் பிரபந்தப் பாடல் வரிகள் இப்போது தனசேகரனுக்கு மீண்டும் நினைவு வந்தன. உடல் அருவருப்பு உணர்ச்சியால் சிலிர்த்து நடுங்கி ஓய்ந்தது. சினிமா உலகத்தின் பை-புராடெக்ட் ஆக விபசாரம் வளர்ந்து வருவது தனசேகரனுக்குப் புரிந்தது. விபசாரத்திற்காக தரகர்கள் எங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள். கொஞ்சம் கூட வெட்கமின்றி நாகரிகமான உரையாடலுடன் ஆடம்பரமான கார்களில் வந்து இறங்கி ஒரே பெண்ணைத் தந்தைக்கென்றும், மகனுக்கு என்றும் அடுத்தடுத்துப் பேரம் பேசுகிற தரகர்கள் நாட்டில் பெருகி விட்டது கண்டு தனசேகரனுக்கு வருத்தமாக இருந்தது.

கடைசியில், “சின்னராஜாவாப் பார்த்து ஏதாச்சும் போட்டுக் குடுத் தீங்கன்னாக் கேஸை வாபஸ் வாங்கச் சொல்லிடலாம். வீண் மனஸ்தாபம் வேண்டியதில்லே” என்று ஆரம்பித்தான் கோமளிஸ்வரன்.

“யாருக்கு யார் என்ன கொடுப்பதற்கு இருக்கிறது? நீரு உம்ம வேலையைப் பார்த்திட்டுப் போய்ச் சேரும். எதை எப்படிச் சமாளிக்கிறதுன்னு எனக்குத் தெரியும்” என்று தனசேகரன் கடுமையாகப் பதில் கூறிய பின்னும் கோமளீஸ்வரன் போகவில்லை. சொல்லத் தொடங்கினான்:

“நீங்க அப்படிச் சொல்லிடப்படாது. பணமா பெரிசு? அவங்களுக்கும் உங்களுக்கும் சிநேகிதம் நீடிக்கணும். நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கிறதை எங்கண்ணாலே பார்க்கணும்.”

“அடச்சீ! போய்யா... அசிங்கம் பிடிச்சாப்ல உளறிக்கிட்டிருக்கே. யாரிட்ட என்ன பேசறதுன்னே மரியாதை இல்லாமப் போயிரிச்சு” என்று தனசேகரன் இரைந்தபோது கோமளீஸ்வரனை அந்த வினாடி வரை அழைத்துக் கொண்டிருந்த பன்மை மரியாதை கூட நழுவி விட்டது. “தயவு பண்ணுங்க” என்று மறுபடி கோமளிஸ்வரன் குழைந்த போது “ஒரு தயவும் இல்லே! நீ பார்க்க வேண்டியதைக் கோர்ட்டிலே பார்த்துக்க” என்று கூறிவிட்டு ஆல்பத்தை அவன் மேல் வீசி எறிந்தான் தனசேகரன். அந்த அவமானத்தையும் தாங்கிக் கொண்டு மேலே ஏதோ சொல்ல முயன்றான் கோமளீஸ்வரன், ஆனால் தனசேகரன் அதற்குள் எழுந்து போய் விட்டான். வேறு வழி இல்லாத காரணத்தால் ஆல்பத்தை எடுத்துக் கொண்டு ஊர் திரும்பினான் கோமளீஸ்வரன்.

அத்தியாயம் - 18

‘எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் - என்ற பாணியில் கோமளிஸ்வரனும், அவனைச் சேர்ந்தவர்களும் நடந்து கொண்டதைத் தனசேகரன் வெறுத்தான். இதற்கு முந்திய சந்தர்ப்பங்களில் கோமளிஸ்வரனோ, ஜெயநளினியோ வந்தால் அவர்களிடம் பேசிச் சமாளித்து அனுப்புகிற பொறுப்பை மாமாவிடம் விட்டு விடுகிற வழக்கமுடைய அவன் இன்று தானே எதிர் கொண்டு பேசிச் சமாளிக்க நேர்ந்திருந்தது. அந்தப் பக்கம் கோர்ட்டிலே கேஸ் போட்டு விஷயத்தைப் பயமுறுத்தலுக்கு உரியதாக மாற்றிவிட்டு இந்தப் பக்கம் நேரேயும் வந்து சந்தித்துப் பணம் பறிக்க முயன்ற கோமளீஸ்வரனின் சாகஸம் தனசேகரனுக்கு எரிச்சலூட்டியது. ராஜதர்பாரின் வேஷங்களாலும், வீண் ஜம்பங்களாலும் தந்தை வாழ்ந்துவிட்டுப் போயிருந்த தாறுமாறான வாழ்க்கை இன்று தனசேகரனைப் பெரிதும் பாதித்தது.

‘ஓர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது’ என்ற கதையில் வந்த கதாநாயகனைப் போல் தான் ஒரு புதிய தலைமுறை இளைஞனாக நடந்துகொள்ள வேண்டும் என்ற முனைப்பு தனசேகரனுக்கு வந்திருந்தது. பீமநாதபுரத்தில் அரச குடும்பத்துக்குச் சொந்தமான காலிமனைகள், தோட்டங்கள், நிலங்கள் நிறைய இருந்தன. அவற்றின் மொத்த அளவு பற்றிய விவரங்களுக்குக் காரியஸ்தரைக் கேட்டிருந்தான் அவன். பரம்பரை பரம்பரையாக அரண்மனைச் சேவையில் ஈடுபட்டிருந்த அரிஜனக் குடும்பங்கள் பத்துப் பன்னிரண்டு ஊரின் தெற்குக் கோடியில் குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருந்தன. அந்தக் குடிசைகள் இருந்த நிலமும் அரண்மனைக்குச் சொந்தம்தான். பீமநாதபுரத்தில் அது சமஸ்தானமாக இருந்த காலத்தில் முக்கால் வாசிக் கட்டிடங்கள், காலி மனைகள் எல்லாம் அரண்மனைக்குச் சொந்தமானவையாகத்தான் இருந்தன. பெரிய ராஜா காலத்தில் பல கட்டிடங்கள், வீடுகள், விற்கப்பட்டும், அடமானம் வைக்கப்பட்டும் பாழாகி இருந்தன. அவருக்குத் தேவைப்பட்ட போதெல்லாம் சொத்துக்களை விற்பதற்குக் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போட்டிருந்தார் அவர். தனசேகரனுக்குத் தெரிந்து நடந்த விற்பனைகள், அடமானங்கள் தவிரத் தெரியாமலேயும் பல விற்பனைகள், அடமானங்கள் நடந்திருந்தன. அவற்றைப் பற்றிய விவரங்களை மிகவும் சிரமப்பட்டுத்தான் சேகரிக்க முடிந்தது. எஞ்சியுள்ள நிலங்களைப் பங்கிட்டு நிலங்களே இல்லாத, ஏழை மக்களுக்கு வழங்கிவிட இப்போது முடிவு செய்திருந்தான் அவன்.

திடீரென்று கோமளீஸ்வரன் சென்னையிலிருந்து வந்து போனதால் தனசேகரன் அன்று செய்வதற்குத் திட்டமிட்டிருந்த பல வேலைகள் செய்ய முடியாமற் போயிருந்தன. பிற்பகலில் அவன் பிரதான அரண்மனையை மாற்றியும், புதுப்பித்தும் ஏற்பாடு செய்திருந்த மியூசியம், லைப்ரரிகளை எல்லாம் சுற்றிப் பார்க்கச் சென்றான். அரண்மனையின் மிகப் பெரிய கூடங்கள், மாடிப் பகுதிகள், அனைத்தையும் ஒழித்துப் புதிதாகப் பெயிண்ட் செய்த பின் நல்ல பார்வை இருந்தது. கீழ்ப்பகுதிகள் பொருட்காட்சியும், ஓவியக்காட்சி மாடிப் பகுதியிலும், மற்றொரு மாடிப் பகுதியிலேயே ஏட்டுச் சுவடிகளும் புத்தகங்களும் அடங்கிய நூல் நிலையமும் இருந்தன.

அந்த இண்டீரியர் டெகரேஷன், மியூசிய அமைப்பு ஆகியவற்றுக்காகத் தனசேகரன் வெளியூர்களிலிருந்து வரவழைத்திருந்த ஆட்கள் அதைச் சிறப்பாகச் செய்து முடித்திருந்தார்கள். தனசேகரனுக்கு அதையெல்லாம் பார்க்கும் போது திருப்தியாக இருந்தது. மறுபடியும் கவனித்துக் கவனித்து ஒவ்வொரு மாறுதலாகச் செய்தான் அவன்.

‘பீமநாதபுரம் அரண்மனை மியூசியமாக மாறுகிறது. இளைய ராஜா தனசேகரனின் புரட்சிகரமான முடிவு’ என்று அவனைப் பற்றிப் பத்திரிகைகளில் எல்லாம் செய்திகள் பிரசுரமாயின. ‘ஓர் அரச குடும்பம் முன் மாதிரியாகிறது’ என்று கூடச் சில பத்திரிகைகள் தலைப்புக் கொடுத்திருந்தன. ராஜமான்ய ஒழிப்பை எதிர்த்த பல வட இந்திய அரச குடும்பங்கள் அதே மனத்தாங்கலுடன் ராஜமான்யம் ஒழிந்த பின் எதிர்க்கட்சிகள் சிலவற்றுக்குப் பண உதவி செய்து நாட்டில் மறைமுகமான அரசியல் கிளர்ச்சிகளுக்கும் ஐந்தாம்படை வேலைகளுக்கும் தூண்டுதல் செய்து கொண்டிருந்தன. நாட்டின் பெருவாரியான மக்களுக்குப் பயன்படும் முற்போக்குத் திட்டங்களுக்குக் குறுக்கே நிற்கிற பிற்போக்குச் சக்திகளை ஊக்கப் படுத்துவதற்கு அவர்கள் தங்கள் பணத்தை செலவிட்டார்கள்.

அதனால் இந்தச் சூழ்நிலையில் தனசேகரன் பீமநாதபுரத்தில் செய்த முற்போக்கான செயல்களும், மாறுதல்களும் பத்திரிகைகளில் முக்கியத்துவம் பெற்றன. தனசேகரன் விளம்பரத்தை விரும்பி இவற்றை எல்லாம் செய்யவில்லை என்றாலும் இவை தற்செயலாக விளம்பரம் பெற்றன. புகழைத் தேடித் தந்தன.

அரண்மனையைச் சுற்றி ஏற்கெனவே இருந்த பூங்காவும் தோட்டமும் நவீனமாக்கப்பட்டன. அது பொது மக்களின் உபயோகத்துக்கான அழகிய பூங்காவாக மாற்றப்பட்டது. ஒரு சிறிய மிருகக் காட்சி சாலையும் அதில் ஏற்படுத்தப் பட்டிருந்தது. அரண்மனைக்குச் சொந்தமான யானை, குதிரை, ஒட்டகம், மயில்கள், மான்கள், பறவைகள் அதில் இடம் பெற்றிருந்தன.

பீமநாதபுரம் பரம்பரையின் வரலாறு, கலாச்சாரச் சின்னங்கள், இலக்கியங்கள், சுவடிகளை மட்டுமே அவன் பொருட்காட்சியின் மூலம் பாதுகாக்க விரும்பினானே ஒழிய அந்த அரச குடும்பத்தின் ஜபர்தஸ்துக்கள், டம்பங்கள், ஜம்பங்களை அறவே தான் மறந்ததோடு மற்றவர்களையும் மறக்கச் செய்து விட விரும்பினான். அரண்மனையைச் சுற்றியிருந்த பிரம்மாண்டமான கற்சுவர்கள் முக்கால்பகுதி மறைந்து தரை மட்டமாகிவிட்டிருந்தன. அவற்றிலிருந்த பெரிய கற்கள் பக்கத்திலிருந்த அணைக்கட்டுக்கு இரவு பகலாய் லாரிகளில் ஏற்றப்பட்டுப் போய்க் கொண்டிருந்தன. ஏகாதிபத்தியத்தின் ஒரு சின்னமாக மக்களிலிருந்து அரசர்கள் தங்களையும் தங்கள் சுகங்களையும் தனியே வைத்துக் கொள்ளும் ஓர் எல்லையாக இருந்த அந்த மதில் சுவர்களின் கற்கள் மக்களுக்குப் பயன்படும் ஒரு பெரிய அணைக்கட்டுக்காகப் போய்ச் சேர்ந்ததில் தனசேகரனுக்கு ஏற்பட்ட திருப்தி பெரிதாக இருந்தது.

அந்த வார இறுதியில் சுவர்கள் அறவே நீக்கப்பட்டு ஊரின் எந்தப் பகுதியிலிருந்து பார்த்தாலும் அரண்மனை தெரிந்தது. கோவில்களை விட்டு விட்டுச் சுவர்கள் முற்றிலும் இடிக்கப்பட்டு விட்டிருந்தன. பழையது எதுவும் அழிக்கப் படக்கூடாது என்ற ஊர்ப் பொதுமக்களில் சிலர்,

“ஊரில் ஏற்கெனவே காலந்தப்பாமல் பெய்த மழை கொஞ்ச காலமாக நின்னு போயிருக்கு. இந்தப் புராதனமான கோட்டைச் சுவரை வேறே இப்போ இடிச்சிட்டாங்க. என்ன ஆகப்போகுதோ? இதெல்லாம் நல்லதுக் கில்லே” என்று பேசிக் கொள்ளத் தொடங்கினார்கள்.

“அரண்மனைக் கோட்டைச் சுவரை இடிச்சு இப்போ என்ன பெரிய காரியத்தைச் சாதிச்சாகணும்? வேலை மெனக்கெட்டு இதைப்போய் இடிப்பாங்களோ?” என்றும் சிலர் பேசிக்கொண்டார்கள்.

“ஊரே அருள் இல்லாமப் போச்சு. எத்தனையோ காலமாக ஊருக்கு லட்சணமா இருந்த மதிற்சுவரைப் போயா இடிக்கனும்?”

கண் காண இருந்த ஒன்றை இழப்பதில் மக்களுக்குள்ள பிரமைகளும் மூடநம்பிக்கைகளுமே இந்தப் பேச்சில் வெளிப்பட்டன. மதிலோரத்தில் வெளியே தெருப் பக்கமாகப் பூக்கடைகள், பழக்கடைகள் வைத்திருந்தவர்கள் எல்லாம் சேர்ந்து மதிற் சுவரை இடிப்பதை எதிர்த்துக் கேஸ் போட்டு ‘ஸ்டே’ கேட்டு ஏற்கெனவே கோர்ட் அதைத் தள்ளுபடி செய்திருந்தது. மதில்களை இடிப்பதால் தங்களுக்கு ஏற்படக் கூடிய வியாபார நஷ்டத்தை மட்டுமே மனத்திற் கொண்டு அவர்கள் கோர்ட்டுக்குப் போயிருந்தார்கள். அது பலிக்கவில்லை என்றானதும் அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியிருந்தது. மனத்திற் கறுவிக் கொண்டிருந்தனர்.

சினிமா நடிகை ஜெயநளினி காலஞ்சென்ற பெரிய ராஜாவின் விதவை தானே என்று சொல்லித் தனசேகரன் மேல் தொடுத்திருந்த வழக்கு விசாரணைக்கு வந்த தினத்தன்று தனசேகரனும் மாமாவும் சென்னைக்குப் போயிருந்தனர். சென்னையில் வழக்கு வேலையாகவும் வேறு சில காரியங்களுக்காகவும் இரண்டு மூன்று நாட்கள் அவர்கள் தங்க நேரிட்டது. அந்த இரண்டு மூன்று நாட்களில் தந்தை உயிரோடிருந்த காலத்தில் அவர் உறுப்பினராக இருந்த ‘ஜாலி ஜில் கிளப்’ போன்ற நவநாகரிக ‘கிளப்’களின் பழைய பாக்கிகளை எல்லாம் தீர்த்து உறுப்பினர் பதவியையும் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்தான் தனசேகரன். உறுப்பினர் பதவியை விட்டு நீங்காமல் தந்தையை அடுத்து அவருடைய வாரிசாகத் தனசேகரன் தொடர வேண்டும் என்று அந்தந்த கிளப்புகளின் முக்கியஸ்தர்கள் எல்லாரும் டெலிபோன் மூலமும் நேரிலும் வந்து வற்புறுத்தினார்கள்.

“நீங்க மெம்பரா இருக்கிறது எங்களுக்கெல்லாம் ஒரு பிரெஸ்டிஜ் ‘பீமநாதபுரம் பிரின்ஸ் எங்க கிளப்பிலே மெம்பர்’னு சொல்லிக் கொள்கிற வாய்ப்பாவது எங்களுக்கு இருக்கணும்.”

“தயவு செய்து நீங்கள்ளாம் என்னை மன்னிக்கணும். பீமநாதபுரம் இப்போ சமஸ்தானமும் இல்லே. நான் அதுக்குப் பிரின்ஸும் இல்லே. இந்த மாதிரி கிளப் மெம்பர்ஷிப்புக்குச் செலவழிக்கிற அத்தனை பண வசதியும் எனக்கு இல்லை. நானே என் குடும்பத்தையும் என்னையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டியதற்கே இனிமேல் உழைத்துத்தான் சம்பாதிக்க வேண்டும்” என்று திடமாகவும் தீர்மானமாகவும் அவர்களுக்கு மறுமொழி கூறி அனுப்பினான் தனசேகரன்.

மாமா கூட எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். “பணத்துக்கென்னப்பா பஞ்சம்? இந்த சமஸ்தானத்தை நம்பியா நாம் இருக்கோம். ‘சோஷல் லைப்லே’ ஒரு பிடிப்புக்கு இதெல்லாம் தேவைப்படும். ரெண்டொரு கிளப் மெம்பர்ஷிப்பையாவது தொடர்ந்து வச்சுக்கிறதுதான் நல்லது. நாளைக்கே கல்யாணம் முடிஞ்சதும் நீ இங்கேயே இந்தியாவிலே தொழில் தொடங்கி நடத்தறேன்னு வச்சுக்குவோம். உன்னைத் தேடி ஒரு வெளிநாட்டு விருந்தாளி வரான்னு வச்சுகிட்டா அவனைக் கூட்டிக்கிட்டுப் போய் ஒரு பார்ட்டி கீர்ட்டி குடுக்கறதுக்காவது ஒரு கிளப் வேணுமே?”

“அதெல்லாம் பார்த்துக்கலாம் மாமா! அப்படி வந்தாலும் இப்போது இதெல்லாம் ஒண்னும் அவசியமில்லே” என்று மறுத்துவிட்டான் அவன். அடுத்து அவன் செய்த முக்கியமான காரியம் தந்தை பைத்தியக்காரத்தனமாக ஏற்பாடு செய்து ஏராளமாகப் பணத்தைக் கோட்டை விட்டுக் கொண்டிருந்த ‘பீமநாதா புரொடக்ஷன்ஸ்’ என்னும் சினிமாக் கம்பெனியைக் கலைத்துக் கணக்குத் தீர்த்து மூடியது ஆகும்.

ஒரு படமும் உருப்படியாக வெளிவராமல் வருஷா வருஷம் நஷ்டக் கணக்கில் ஏராளமானப் பணத்தை வீணடித்திருந்தது அந்த சினிமாக் கம்பெனி. ஈவு, இரக்கம், பற்று, பாசம், உறவு எல்லாமே இல்லாதபடி தன் தந்தை இன்னும் சிறிது காலம் உயிரோடிருந்திருந்தால் நிறைய சீரழிவுகளைச் செய்திருப்பார் என்று தனசேகரனுக்குத் தோன்றியது. குடும்பத்திற்கு நாணயமாகவோ பீமநாதபுரம் என்ற புகழ், பெற்ற வம்சத்திற்கு நாணயமாகவோ மனசாட்சிக்கு நாணயமாகவோ அவர் வாழவில்லை என்பது முற்றாகத் தெரிந்தபோது தனசேகரனால் அதை எந்த விதத்திலும் பொறுத்துக் கொள்ளவோ சமாதானப்படுத்திக் கொள்ளவோ முடியவில்லை. ஒரு புகழ்பெற்ற வம்சத்தின் பழைய இறந்த காலச் செல்வாக்கையும் நிகழ்கால வருமானத்தையும் எதிர்கால நற்பெயரையும் அவர் முடிந்த வரையிலே விரயமாக்கித் தொலைத்துக் கெடுத்து விட்டுப் போயிருப்பதாகத் தோன்றியது. இப்படி பெரிய விரயங்கள் தொடர்ந்து தேசம் முழுவதும் நிகழாமல் தக்க சமயத்தில் மன்னர்கள் மானிய ஒழிப்பு என்ற சட்டத்தின் மூலமாக அரசாங்கம் தடுத்தது மிகமிகச் சரியான செயல் என்று அவன் நினைப்பதற்கு அவன் தந்தையே சரியான நிரூபணமாக இருந்தார் என்று சொல்லலாம்.

நீண்டகாலமாகச் சென்னையிலிருந்த ‘ராயல் மியூசிக் சொஸைடி’ என்ற ஒரு சங்கீத சபை அந்த ஆண்டில் தன் தந்தையின் முழு உருவப் படத்தைத் தனது ஹாலில் திறந்து வைக்கப் போவதாக வந்து தெரிவித்த போது கூடத் தனசேகரன் அதில் அவ்வளவாக உற்சாகம் காட்டவில்லை.

“உங்கப்பா ரொம்பக் காலமாக இதிலே பேட்ரனாக இருந்திருக்கிறார். அவர் நினைவா ஒரு படம் திறந்து வைக்கணும்னு எங்களுக்கெல்லாம் ஆசை. நீங்களே அரண்மனையிலேயிருந்து ஒரு நல்ல படமாக் குடுத்தீங்கன்னா செளகர்யமா இருக்கும். உங்கப்பா பெரிய கலா ரசிகர், சங்கீத அபிமானி. எங்க சொஸைடி அவராலே நிறையப் பிரயோஜனம் அடைஞ்சிருக்கு. அவர் படம் இல்லாதது எங்களுக்குப் பெரிய மனக்குறைதான்.”

“அதெல்லாம் எதுக்குங்க? காந்தி படம் நேரு படம்னு தேசப் பெரியவங்க படமாப் பார்த்துத் திறந்து வையுங்க போதும்” என்று தனசேகரன் மெல்லத் தட்டிக் கழித்துவிட முயன்றான். அவர்கள் விடவில்லை. அவன் சொல்லியதை அவர்கள் அவன் மிகவும் தன்னடக்கமாகப் பேசுவதாக எடுத்துக் கொண்டு விட்டார்கள். அவனோ உண்மையிலேயே தன் தந்தையின் மேலிருந்த கசப்பு உணர்ச்சி தாளாமல் அதைத் தட்டிக் கழித்து விடும் நோக்குடன் பேசிக் கொண்டிருந்தான். அவர்களோ அதை வேறு விதமாகப் புரிந்து கொண்டு விடாப்பிடியாக மன்றாடினார்கள்.

“நீங்க அப்படிச் சொல்லிடப்படாது. தன்னடக்கம்கிறது உங்க குடும்பத்துக்குப் பரம்பரைக் குணம். உங்கப்பா படத்தை நாங்க திறந்து வைக்கப் போறோம்கிறது உறுதி. அதுக்கு நீங்க ஒரு நல்ல படமாகத் தேர்ந்தெடுத்துத் தர்ரதோட நின்னுடப்படாது! தொடர்ந்து நீங்களும் சொஸைட்டிக்குப் பேட்ரனா இருக்கணும்” என்றார்கள் அவர்கள்.

தனசேகரனுக்குப் பொறுமை பறிபோய்க் கொண்டிருந்தது. அவன் எங்கே ஆத்திரத்தில் அவர்களிடம் காலஞ் சென்ற பெரிய ராஜாவை விட்டுக் கொடுத்துப் பேசிவிடப் போகிறானோ என்ற தயக்கத்தோடு உடனிருந்த மாமா தங்கபாண்டியனே முந்திக் கொண்டு, “அதெல்லாம் பார்த்துச் செய்யச் சொல்றேன், போங்க! இப்போ என்ன அவசரம்?” என்று வந்திருந்தவர்களுக்கு இதமாகச் சொல்லி அனுப்பி வைத்தார். அவர்கள் விடை பெற்றுக்கொண்டு போய்ச் சேர்ந்தபின் தனசேகரன் மாமாவிடம் சொல்லலானான்:

“மாமா! எங்கப்பா போய்ச் சேர்ந்துட்டாலும் அவர் வச்சுட்டுப் போயிருக்கிற மிச்சம் சொச்சங்கள், பந்தபாசங்கள் லேசிலே விடாது போலேயிருக்கு. இன்னும் அரண்மனை, சமஸ்தானம்னு சொல்லி யாராவது வந்திட்டே இருக்காங்க. பணக்காரனா வாழ சட்டம் அனுமதிக்கலே, ஏழையா வாழறதை ஜனங்க அனுமதிக்கவோ ஏத்துக்கவோ தயாராயில்லே. படத்திறப்பு தர்ம பரிபாலனம் நன்கொடைன்னு எவனாவது இன்னும் என்னைத் தேடி வந்துக்கிட்டேயிருக்கானே?”

“கொஞ்ச நாளைக்கு அப்படித்தாம்பா இருக்கும்! அப்புறம் எல்லாம் சரியாப்போயிடும். ராஜமானியம் போயிட்டாலும் ராஜாங்கிற எண்ணம் ஜனங்க கிட்டேயிருந்து இன்னும் போகலியே? அதான் இப்படி எல்லாம் தேடிவராங்க!” என்றார் மாமா.

ஜெயநளினி கேஸ் முதல் நாள் விசாரணை அன்றே ஒத்திப் போடப்பட்டு விட்டது. தனசேகரன் தரப்பு வக்கீல் வாய்தா கேட்டு வாங்கி விட்டார். மாமாவும் தனசேகரனும் ஊருக்குத் திரும்புவதற்கு முன் பீமநாதபுரம் அரச குடும்பத்துக்கு மிகவும் வேண்டிய சேதுராஜன் சேர்வை என்பவர் அவர்களை ஒரு விருந்துக்கு அழைத்திருந்தார். தனசேகரன் மட்டும் தனியாகச் சென்னைக்கு வந்திருந்தால் இப்படிப்பட்ட விருந்துகளுக்கு எல்லாம் அவன் ஒப்புக் கொண்டிருக்க மாட்டான். மாமா, வேண்டியவர்களையும், உறவினர்களையும், குடும்ப நண்பர்களையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார். ஆகவே அவர் அந்த விருந்துக்கு இணங்கியிருந்தார்.

உறவினர் சேதுராசன் சேர்வை சினிமா விநியோகஸ்தர். மதுரை, ராமநாதபுரம் ஜில்லாக்களுக்கு சினிமா விநியோக உரிமைகளை வாங்கித் தியேட்டர்களில் படங்களைத் திரையிட்டு லாபம் சம்பாதிக்கும் பெரிய வியாபாரி அவர். அப்பாவின் வாழ்க்கை கடைசி நாட்களில் சினிமா சம்பந்தத்தால் சீரழிந்தது என்ற காரணத்தினால் தனசேகரனுக்குச் சினிமா சம்பந்தம் உடைய ஆள் என்றாலே குமட்டிக் கொண்டு வந்தது.

ஒழுக்கமும், நாணயமும், நேர்மையும், பெருவாரியாகப் பலியிடப்படுகிற ஒரு தொழில் என்பதால் அதைப் பற்றியும் அதோடு தொடர்புடைய ஆட்களைப் பற்றியும் ஓர் எச்சரிக்கை உணர்வும் அவனுக்கு வந்திருந்தது.

“அட! நீ ஒருத்தன். எதை எடுத்தாலும் சந்தேகப்பட்டு மனுஷங்க முகத்தை முறிச்சிக்கிட்டா எப்படி? நம்ப குடும்ப வகையிலே உறவுக்காரங்கன்னு இந்தச் சேதுராசன் சேர்வை செல்வாக்கா இருக்கான். உங்கப்பா தப்பு வியாபாரம் பண்ணிச் சினிமாவிலே நொடிச்சிப் போனாருன்னா அதுக்கு ஊர்லே இருக்கிற சினிமாக்காரங்களை எல்லாம் விரோதிச்சுக்கிட்டுப் பிரயோஜனமில்லே. நாளை பின்னே உறவு மனுஷங்க வேணுமா, இல்லியா?” என்று தனசேகரனுக்கு மாமா சமாதானம் சொல்லியிருந்தார்.

தன்னுடைய மாமா இவ்வளவு தூரம் வற்புறுத்தியிரா விட்டால் தனசேகரன் அந்தச் சேதுராசன் சேர்வை வீட்டு விருந்துக்குப் போயிருக்க மாட்டான். மாமாவுக்காகத்தான் அங்கே போனான்.

விருந்துக்கு எல்லா சினிமா நட்சத்திரங்களும் டைரக்டர்களும், சேதுராசன் சேர்வையின் சக விநியோகஸ்தர்களும் வந்திருந்தார்கள். மாமாவோ தனசேகரனோ முற்றிலும் எதிர்பாராத விதமாக நடிகை ஜெயநளினியும் கோமளீஸ்வரனும் கூட வந்திருந்தார்கள். ஜெயநளினி மிக மிகக் கவர்ச்சியாகவும் வசீகரமாகவும் சிங்காரித்துக் கொண்டு வந்திருந்தாள். எல்லோர் கவனமும் அவள் பக்கமே இருந்தன. விருந்தே அவளுக்காகத்தான் ஏற்பாடு செய்தது போலிருந்தது. சேதுராசன் சேர்வை அவளை எல்லார் முன்னிலையிலும் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவது கலகலப்பாகச் சிரித்துப் பேசுவது என்று பரபரப்பாக ஓடியாடிக் கொண்டிருந்தார். தனசேகரனும் மாமாவும் பட்டும் படாமலும் நடந்து கொண்டார்கள். ஜெயநளினி, சேதுராசன் சேர்வை, தனசேகரன், மாமா, நால்வரும் ஒரே டேபிளில் விருந்து அருந்திய போதிலும் பரஸ்பரம் ‘ஹலோ’ என்பதற்கு அதிகமாக ஒரு வார்த்தை கூடப் பேசிக்கொள்ளவில்லை. விருந்து முடிந்ததும் எல்லாரும் விடை பெற்றுச் சென்ற பிறகு தனசேகரன், மாமா, ஜெயநளினி மூவரையும் வைத்துக் கொண்டு, “கொஞ்சம் இருங்க! நாம் தனியே பேச வேண்டிய விஷயம் ஒண்னு இருக்கு” என்று ஆரம்பித்தார் சேதுராசன் சேர்வை. ஜெயநளினி மாமாவிடம் ஏதோ சிரித்துப் பேசத் தொடங்கியிருந்தாள். தனசேகரன் மனத்தில் அதைப் பற்றிக் கொஞ்சம் சந்தேகம் தட்டியது. தாங்க முடியாத கோபமும் வந்தது.

அத்தியாயம் - 19

சேதுராசன் சேர்வை விருந்துக்குக் கூப்பிட்டது வேறு எதற்காகவோ தான் இருக்கும் என்று தனசேகரனுக்குள்ளே ஒரு சந்தேகம் ஏற்பட்டது சரியாகிவிட்டது. மாமா தங்கபாண்டியன் அதை முற்றிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. தனசேகரனோ ஓரளவு எதிர்பார்த்திருந்தான். விருந்திலே நடிகை ஜெயநளினியையும், தண்டச் சோற்றுப் பேர்வழியாக டைரக்டர் என்ற பேரிலே சுற்றிக் கொண்டிருக்கும் கோமளீசுவரனையும் பார்த்ததுமே தான் நினைத்துக் கொண்டு வந்தது சரிதான் என்று தனசேகரனுக்குத் தோன்றி விட்டது. தன் தந்தைக்குச் சினிமா உலகத்தின் சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்ததே சேதுராசன் சேர்வையாகத்தான் இருக்க வேண்டும் என்றுகூட உள்ளூற அவனுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதனால்தான் வந்தது முதற்கொண்டே அந்த விருந்தில் முழு மனநிறைவோடு அவனால் அமர்ந்திருக்க முடியவில்லை.

ஆனால் மாமாவுக்கோ நேரம் ஆக ஆகத்தான் அது புரிந்தது. ஜெயநளினியையும் தன்னையும் பக்கத்தில் பக்கத்தில் உட்கார வைத்து சேதுராசன் சேர்வை மெல்ல மெல்ல எதற்கு முயலுகிறார் என்று தெரிந்ததும் அவரும் ஆத்திரப்படத் தொடங்கி இருந்தார். விருந்து முடிந்ததும் சேதுராசன் சேர்வை தங்களைத் தனியே கூப்பிட்டபோது தனசேகரன் மாமாவை உறுத்துப் பார்த்தான். அநாவசியமாகத் தனசேகரன் தன்மேல் எதற்குக் கோபப்படுகிறான் என்று மாமாவுக்கே முதலில் புரியவில்லை. தனசேகரனுக்கோ மாமா ஜெயநளினியிடம் கலகலப்பாகச் சிரித்துப் பேசியதே பிடிக்கவில்லை. ‘சேதுராசன் சேர்வைக்குத் தான் இதே தொழில். மாமாவுக்கு என்ன கேடு வந்தது. அவர் ஏன் சிரித்துப் பேசி நேரத்தைக் கடத்துகிறார்? இவளிடம் அவருக்கு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது?’ என்று உள்ளூற மனம் கொதித்துக் கொண்டிருந்தான் தனசேகரன்.

“தனி என்ன தனி? இப்போ இங்கே வேறே யாரு இருக்காங்க? நாம நாலு பேர் மட்டும்தானே இருக்கோம்? என்ன சொல்லணுமோ அதை இங்கேதான் சொல்லுங்களேன். எங்களுக்கும் நேரமாச்சு. போகணும், நாங்க மெட்ராஸ்லே இருக்கறதுக்குள்ள இன்னும் பார்க்க வேண்டிய காரியம் நிறைய இருக்கு” என்று மாமாவே சேதுராசன் சேர்வையைத் துரிதப்படுத்தினார்.

“இப்போ என்ன அவசரம்? மெட்ராஸுக்கு வந்துட்டு உடனே திரும்பிப் போகணும்னு பறக்கிற ஒரு பெரிய மனுஷனை நான் இப்பத்தான் முதன் முதலாப் பார்க்கிறேன். பல தொழிலதிபருங்க, வசதியுள்ளவங்க எல்லாம் சினிமா நட்சத்திரங்க இருக்கிற எடத்தைத் தேடிக்கிட்டுப் போயி ஒரு நாள், ரெண்டு நாள் அவங்களோட உல்லாசமாத் தங்கிட்டுப் போகணும்னு ஆசைப்படறாங்க. இங்கேயோ நட்சத்திரங்களே உங்களைத் தேடி வந்திருக்காங்க. அப்படி இருந்தும் நீங்க அவசரப்படலாமா?” என்று சொல்லியபடி குறும்புத்தனமாகக் கண் சிமிட்டிச் சிரித்தார் சேர்வை.

மாமாவும் தனசேகரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சேதுராசன் சேர்வைக்கு அவர்கள் பதிலே சொல்லவில்லை. ஆனால் சேதுராசன் சேர்வை விடாமல் தொற்றினார்.

“பெரியவர் இருந்தப்போ இங்கே ஒரு விருந்துன்னு வந்தார்னா நிதானமா இருந்து எல்லாரிட்டவும் பேசிப் பழகிட்டுத்தான் போவார். ஏன், இதோ இந்த ஜெய நளினியே இப்படி ஒரு விருந்திலேதான் முதன் முதலா அவருக்குப் பழக்கமானாள். இப்போ நான் உங்ககிட்டப் பேசணும்னது கூட இவ விஷயமாத்தான். ஏதோ ரெண்டு தரப்பும் பழகியாச்சு. கோர்ட், கேஸுன்னு போயி நேரத்தையும் பணத்தையும் வீணாக்கி வக்கீலுக்கு அழறதுலே என்ன பிரயோசனம்? ஏதாவது கொடுக்கிறதைக் கொடுத்து முடியுங்க...!”

“இந்த அட்வைஸை நீங்க எனக்கோ மாமாவுக்கோ சொல்ல வேண்டியதில்லை மிஸ்டர் சேர்வை! நாங்க முதல்லே கோர்ட்டுக்குப் போகலே. இப்போ இவங்க கோர்ட்டுக்குப் போயிருக்கிறதாலே எங்களுக்குத்தான் நல்லது” என்றான் தனசேகரன். சேர்வை விடவில்லை, தொடர்ந்து வினவினார்.

“அதெப்படி? கேஸ்னு வந்துட்டா அப்புறம் ரெண்டு பேருக்கும்தானே அது சிரமம்?”

“அது தான் இல்லேன்னேன். யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கிற மாதிரி இப்போ இவங்க போட்டிருக்கிற கேஸினாலே ஏற்கெனவே எங்கப்பா இவங்களுக்கு எழுதி வச்சிருக்கிற சொத்துக்களைக்கூட இனிமே நாங்களே திரும்பி வாங்கிக்க வழி பிறக்கப்போகுது. கேஸ் முடிஞ்சதும் விவரமா எல்லாம் நீங்களே தெரிஞ்சுக்குவீங்க” என்று தனசேகரன் பேசத் தொடங்கியபோது ஜெயநளினியின் முகத்தில் சற்றே கலவரக்குறி தோன்றியது.

அடுத்த பகுதியில் சற்றே விலகினாற்போல நின்று கொண்டிருந்த கோமளீஸ்வரன் அப்போதுதான் உள்ளே தலையைக் காட்டினான். தானும், மாமாவும், ஜெயநளினியும் சினிமா விநியோகஸ்தர் சேதுராசன் சேர்வையும் மட்டும்தான் அங்கே இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்த தனசேகரனுக்கு இப்போதுதான் டைரக்டர் கோமளீஸ்வரனும் அங்கே நுழைந்து நின்று கொண்டிருக்கிறான் என்பது தெரிந்தது. அவர்கள் வாய்மொழியாகவே விஷயங்களை வரவழைப்பதற்காகத் தான் தனசேகரன் அப்படிப் பேசியிருந்தான்.

சேதுராசன் சேர்வை கொஞ்சம் அழுத்தமாக இருந்தார். அவருக்குத் தனசேகரனின் பேச்சைக் கேட்டு உடனே கோபமோ ஆத்திரமோ எதுவும் வந்துவிடவில்லை. கோமளீஸ்வரன் ஒரேயடியாகத் துள்ளினான்.

“நளினிக்கு அந்த அடையாறு வீட்டை அவரே பிரியப்பட்டு வாங்கிக் குடுத்தாரு. இப்போ அரண்மனைச் சொத்திலே பாகம் குடுன்னு அவ கேட்டா அதுக்காக அடையாறு வீட்டை காட்டிப் பயமுறுத்தறது நியாயமில்லே!”

“அடையாறு வீடு ஒண்ணும் ஆகாசத்திலே இருந்து குதிச்சிடலே. அதுவும் பீமநாதபுரம் அரண்மனைச் சொத்தை வித்து வாங்கினதுதான், ஞாபகம் இருக்கட்டும். ‘கேஸ்’னு வந்தாச்சுன்னா அப்புறம் எல்லாத்தையும் சந்தியிலே இழுத்துத்தான் தீரணும்.”

தனசேகரன் இவ்வாறு கூறி முடித்ததும், “ஒழுங்கா முறையாக கேஸை வாபஸ் வாங்கிட்டா ஏற்கெனவே நீங்க ராஜா மூலமாச் சேர்த்து வச்சுக்கிட்டிருக்கிற சொத்தாவது மிஞ்சும். இல்லாட்டா அதுக்கும் ஆபத்துதான்” என்று மாமாவும் உரையாடலில் சேர்ந்து கொண்டார்.

இப்போது சேதுராசன் சேர்வை தம்முடைய மெளனத்தைக் கலைத்துவிட்டுத் தாமே மெல்லப் பேசத் தொடங்கினார்.

“நான் ஒருத்தன் நடுவிலே மத்தியஸ்தன் இருக்கிறேன்னு நினைக்காமே நீங்களாகவே பேசிக்கிட்டா எப்படி? எல்லா விஷயமும் தெரிஞ்சவன் நான். சொல்லப் போனால் பெரிய ராஜாவுக்கும், நளினிக்கும் சம்பந்தம் ஏற்படறத்துக்குக் காரணமா இருந்தவனே நான்தான். இதிலே என்னைக் கலந்துக்காமல் ராஜாவும் ஒண்ணும் பண்ணினதில்லே. நளினியும் ஒண்ணும் பண்ணினதில்லே. நான் உங்க ரெண்டு பேருக்குமே நியாயமா இப்போ ஒருவழி சொல்ல முடியும்னு நினைக்கிறேன். வக்கீலுங்களுக்கும் கோர்ட்டுக்கும், கேசுக்கும் கொட்டி அழறதுனாலே பணம் தான் வீணா விரயமாகும். உறவுக்குள்ளே நம்ம மனுஷாளுக்குள்ளே அதெல்லாம் வேண்டாம்! நாமே பார்த்துப் பேசி முடிவு பண்ணிக்கலாம்!”

“உறவாவது ஒண்ணாவது? யாருக்கும் உறவு ஒண்ணும் கிடையாது. சும்மா அதைச் சொல்லிப் பயமுறுத்தாதீங்க” என்று தனசேகரன் குறுக்கிட்டுச் சொன்னான்.

இதைக் கேட்டுச் சேதுராசன் சேர்வையின் முகத்தில் சுமுகபாவம் மாறியது. தனசேகரனைச் சற்றே உறுத்துப் பார்த்தார் அவர்.

“உறவு இருக்கிறதும் இல்லாததும் உங்களுக்கு எப்படித் தெரியும் தம்பி? அதுக்கெல்லாம் கண்கண்ட சாட்சியா நான் ஒருத்தன் இருக்கேனே?”

“உங்களுக்கு இந்த மாதிரி வேலை எல்லாம் கூட உண்டுன்னு இப்பத்தானே தெரியுது?”

“இந்தா தனசேகரன் போதும்! நிறுத்திக்கோ. இவரோட நமக்கு வீண் பேச்சு வேண்டியதில்லே. பார்க்க வேண்டியதைக் கோர்ட்டிலே பார்த்துக்கலாம்” என்று நடுவே புகுந்து கண்டிப்பான குரலில் சொன்னார் மாமா. நிலைமை கடுமையாகியது.

கடைசியில் சேதுராசன் சேர்வையும் மற்றவர்களும் இறங்கி வழிக்கு வந்தார்கள். பலமணி நேரப் பேச்சுக்கும், வாக்குவாதத்துக்குப் பின்னால் ஜெயநளினி கேஸை உடனே கோர்ட்டிலிருந்து வாபஸ் வாங்கிக் கொள்வதென்றும் ஏற்கெனவே மகாராஜா அவளுக்குக் கொடுத்து அவள் வசமிருக்கும் பங்களா, நகைகள், எதையும் அவளே தொடர்ந்து வைத்துக் கொள்வதென்றும் புதிதாக மேற்கொண்டு எதையும் கேட்கக் கூடாதென்றும் சமரச முடிவு ஆயிற்று.

கோமளீஸ்வரனுக்கு ஏமாற்றந்தான். ஆனால் முரண்டு பிடித்தால் இருக்கிற சொத்தும் போய்விடுமோ என்று பயந்துதான் அவன் அதற்கு ஒப்புக்கொண்டாக வேண்டியிருந்தது.

மாமாவும் தனசேகரனும் எதற்கும் மயங்கக் கூடியவர்களாக இல்லை. பச்சையாக வாய்விட்டுச் சொல்லாதது தான் குறையே ஒழிய அப்போது சேதுராசன் சேர்வை, மாமா தங்கபாண்டியனை ஜெயநளினியிடம் வகையாக மாட்டி வைத்து விட ஆன மட்டும் முயன்று பார்த்தார். அதில் அவருக்கு நாணமோ கூச்சமோ தயக்கமோ சிறிதும் இருக்கவில்லை.

பெரிய ராஜாவின் காமக் கிழத்தியாக இருந்த ஒருவரை அவருடைய மைத்துனனாகிய மாமாவிடமே காமக்கிழத்தியாகச் சிபாரிசு செய்து பார்க்கவும் சேதுராசன் சேர்வை தயங்கவில்லை. மாமாவும் தனசேகரனும் விழிப்புள்ளவர்களாக இருந்ததனால்தான் தப்ப முடிந்தது. கேஸ் போட்டு மிரட்டியோ இழுத்தடித்தோ பணம் பறிக்க இவர்கள் ஒன்றும் இளித்தவாயர்கள் அல்ல என்பது ஜெயநளினிக்கும் புரிந்து விட்டது. கோமளீஸ்வரன் சேதுராசன் சேர்வை ஆகியோருக்கும் புரிந்துவிட்டது. அந்தக் கேஸ் வாபஸ் வாங்கப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறவரை மாமாவும் தனசேகரனும் சென்னையில் தங்கினார்கள். வக்கீலை மத்தியஸ்தம் வைத்து ஜெயநளினியிடம் ஓர் உடன்படிக்கை போல எழுதி வாங்கினார்கள்.

“காலஞ்சென்ற மகாராஜா பீமநாத ராஜசேர பூபதியின் குடும்பச் சொத்துக்களில் இனி தனக்கு எந்த பாத்தியதையும் இல்லையென்றும் தன்னோடு அவர் நெருங்கிப் பழகிய வகையில் தனக்குக் கட்டிக் கொடுத்த வீடு வாசல் நகை நட்டுக்களைக் கொண்டே தான் திருப்தியடைவதாகவும்” அவள் கைப்பட எழுதிச் சாட்சிக் கையெழுத்துடன் வாங்கி வைத்துக் கொண்டான் தனசேகரன்.

“ஒரு பிரச்னை முடிந்தது மாமா! இனிமே பீமநாதபுரத்திலே நம்ம மியூஸியத் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யணும். அதற்கு ஏற்பாடு செய்யாமே மெட்ராஸ்லேருந்து திரும்பக்கூடாது.”

உடனே மாமா, “சரி, யாராவது மந்திரியைக் கூப்பிடலாம்” என்றார். தனசேகரன் அவர் சொன்னதற்குச் சம்மதிக்கவில்லை.

“பேருக்கு ஒரு நல்ல குணவானான மந்திரியைக் கூப்பிடலாம். ஆனால் ஒரு சிறந்த புதைபொருள் ஆராய்ச்சி நிபுணர் இங்கே இருக்கிறார். அவரையும் கூப்பிடப் போறேன்” என்றான் தனசேகரன்.

“நீ அந்த வேலையைக் கவனி. நான் கல்யாணப் பத்திரிகை வேலையைக் கவனிக்கிறேன். கேபிள் கொடுத்தாச்சு, மலேயாவிலேருந்து, எல்லாரும் இந்த வாரக் கடைசிக்குள்ளே வந்திடுவாங்க...”

“எப்படி அதெல்லாம் உடனே முடியும்? கொஞ்சம் பொறுத்துச் செய்யலாமே மாமா? இப்போ என்ன அவசரம்? எங்கே ஓடிப்போறோம்? பரஸ்பரம் ஒருத்தருக் கொருத்தர் சத்தியம் பண்ணிக் கொடுத்த கல்யாணம் தானே? நீங்களும் நானுமா முடிவு பண்ணினோம்? எங்கம்மாவே முடிவு பண்ணிக்கிட்டுப் போன கல்யாணம் தானே மாமா இது?”

“வாஸ்தவம்தான்! ஆனா அதை நிறைவேற்றவும் இதுதான் காலம். மறுபடி மலேயாவுக்கு விமானம் ஏறித் திரும்பறப்போ நீ என் மருமகனாகவும் நான் உன் தாய்வழி மாமனாகவும் திரும்பறதை விட மாப்பிள்ளையாகவும் மாமனாராகவுமே திரும்பறதுன்னு நான் முடிவு பண்ணியாச்சு” என்றார் மாமா.

தனசேகரன் நாணினாற் போலச் சிறிது நேரம் தலைகுனிந்து சும்மா இருந்தான். மாமா புன்னகை பூத்தார்.

“எனக்குப் பயமாகவேயிருக்குத் தம்பி! எங்கே பார்த்தாலும் சினிமா நட்சத்திரங்கள் வாடகை மனைவிமார்களாகவும் தற்காலிக மனைவிமார்களாகவும் ரொம்ப மலிவாகக் கிடைக்கிறாங்க. இந்தச் சூழ்நிலையிலே வயசு வந்த எந்த ஆம்பிளையையும் தனியா விடமுடியலே.”

“எங்கப்பாவெப் பத்தித்தான் நீங்க இப்படி எல்லாம் பயப்படனும் மாமா! என்னைப்பத்திப் பயப்பட வேண்டாம்! நான் அத்தனை சுலபமாக ஏமாந்துட மாட்டேன்!”

“சேதுராசன் சேர்வை எனக்கே தற்காலிக மனைவி ஏற்பாடு பண்றேன்னு வலை விரிக்கிறானே? அரச பரம்பரையான உன்னை விட்டு விடுவானா தம்பி?”

“நான் ஏமாந்தால்தானே அவரு வலை விரிக்க முடியும்? அரசன், அரச பரம்பரை, இளவரசர் அதெல்லாம் இருந்தால் தான் பீடை மாதிரி இந்த விஷயங்களெல்லாம் நம்மை வந்து பீடிக்குமென்று பயந்து தானே அதிலே இருந்து தனியா விலகியிருக்கேன்! என்னை எந்தக் கெடுதலும் அணுக முடியாது மாமா...”

“சரி தம்பீ! அதெல்லாம் புரியுது. உன்னைப் பாராட்டறேன். உங்கப்பாவுக்கு என் சகோதரியைக் கொடுத்தேன். அவரு ஒழுங்கா நடத்துக்கலே! அவளும் பாதியிலே செத்துப் போயிட்டா! அடுத்த தலைமுறையிலே நீ நல்லா இருக்கே. உன்னை யாருமே கெடுத்திட முடியாது. உனக்கு என் மகளைக் கொடுக்கிறேன். அதிலே தாமதம் எதுக்கு? உடனே அடுத்த முகூர்த்தத்திலே கலியாணம் நடக்கணும்கிறது என் ஆசை. நீ என்ன சொல்றே?”

“சரி! உங்க இஷ்டம் போலச் செய்யுங்க மாமா ஆனா...”

“ஆனால் என்ன? அதையும் முழுக்கச் சொல்லு.”

“ஒண்ணுமில்லே! என் கல்யாணம் எளிமையா நடக்ககணும். சமஸ்தானத்து ஜபர்தஸ்தெல்லாம் அதிலே கூடாது. உங்க பணச் செழிப்பையும் அதிலே காட்டக்கூடாது. என் குடும்ப அந்தஸ்துங்கிற பேரிலேயும் டாம்பீகச் செலவு கூடாது. உங்க குடும்ப அந்தஸ்து என்கிற பேரிலேயும் டாம்பீகம் கூடாது.”

“நீ இப்படி நிபந்தனை போடுவேன்னு எனக்கு முன் கூட்டியே தெரியும். அதனாலேதான் நானே பரிமேய்ந்த நல்லூர்க் கோவிலிலே எளிமையான கல்யாணம்னு ஏற்பாடு பண்ணியிருக்கேன்.”

“ரொம்ப சரி. கல்யாணச் செலவை மிச்சப்படுத்தி நான் இரண்டு லட்சம், நீங்க ரெண்டு லட்சம் பணம் போட்டுப் பீமநாதபுரத்திலே ஒரு பெண்கள் கல்லூரி ஏற்படுத்தணும். நீங்க சம்மதிச்சா இது சுலபமா நடக்கும் மாமா! பீமநாதபுரம் வட்டாரத்திலே பெண்கள் கல்லூரியே கிடையாது. வயசு வந்த பெண்கள் அனாவசியமா நூறு மைல், இருநூறு மைல் தள்ளியிருக்கிற, நகரங்களிலே தனியாய் போய்ப் படிக்க வேண்டியிருக்கு. எங்கம்மா பேரிலே அந்த காலேஜைத் தொடங்குவோம்!”

“ஓ எஸ்...! கண்டிப்பாகச் செய்யலாம் தம்பீ! இதெல்லாம் எங்கிட்ட நிபந்தனை போட்டுத்தான் உனக்கு நான் செய்யனுமா? என் பெண்ணைக் கட்டிக்கிட்டா இந்தச் சொத்தெல்லாம் உன் நிர்வாகத்தின் கீழேதானே வரப் போகுது?”

காலேஜ் வைப்பதற்கு மாமா சம்மதித்ததும் தனசேகரன் திருமணத்திற்கு முழு மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டான். மாமா திருமணப் பத்திரிகை அச்சடிக்க ஏற்பாடு செய்யப் போனார். தனசேகரன் மியூஸியம் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப் போனான். மியூஸியம் திறப்பு விழா அழைப்பிதழும் தனசேகரனுடைய திருமண அழைப்பிதழும் ஒரே சமயத்தில் ஒரே அச்சகத்தில் அச்சாகி முடிந்ததும் அவற்றை எடுத்துக் கொண்டு இருவரும் ஊருக்குப் புறப்பட்டார்கள்.

பீமநாதபுரம் ஊரே மாறிவிட்டாற்போல் அந்த மியூசியம் ஊர் நடுவே ஒளிவு மறைவின்றிக் காட்சியளித்தது.

கற்சுவர்கள் இல்லாமல் பூங்காக்களோடு கூடிய கம்பீரமான அரண்மனை இப்போது புதுப்பொலிவோடு தோன்றியது.

முகத்திரை நீக்கிய புதுமணப்பெண் போல அரண்மனை அழகுற இலங்கிற்று இப்போது. மியூசியத்திற்கு 2 ரூபாய் நுழைவுக் கட்டணம் வைக்கவேண்டும் என்று மாமா சொன்னார்.

“ஏழை எளியவர்கள் அவ்வளவு தர முடியாது. இருபத்தைந்து காசுகள் கட்டணமாக நியமித்தால் போதும்” என்று கூறினான் தனசேகரன்.

மாமா ஒப்புக் கொண்டார். தனசேகரனின் பரந்த மனப்பான்மை அவரை ஆச்சரியப்பட வைத்தது. பீமநாதபுரம் மியூசியத் திறப்பன்று எல்லாப் பெரிய ஆங்கிலத் தினசரிகளிலும் தமிழ்த் தினசரிகளிலும் சிறப்பு அனுபந்தங்கள் வெளியிட ஏற்பாடு செய்தான் தனசேகரன். ‘ஓர் அரண்மனை மியூசியமாக மாறுகிறது’ என்பதுதான் அனு பந்தத்தின் தலைப்பாக இருந்தது. மியூசியத்தின் சிறப்புக்கள் அநுபந்தத்திலே விவரிக்கப்பட்டிருந்தன. படங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

அத்தியாயம் - 20

பீமநாதபுரத்தின் அரச வரலாறு முடிந்து கலாசாரப் பெருமை என்ற வரலாறு மட்டும் புதிதாகத் தொடங்கியிருந்தது. புகழும் பழியும் நிறைந்த பழைய சகாப்தம் முடிந்திருந்தன. தனசேகரன் தன்னுடைய பெருந்தன்மையாலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையாலும் புதிய சகாப்தத்தைத் தொடங்கி இருந்தான். பீமநாதபுரம் அரண்மனையும், அதன் ஆட்சியும், சொத்துச் சுகங்களின் நிர்வாகமும் தந்தையின் காலத்தில் தாறுமாறாகவும், ஊழல் மயமாகவும் மாறி இருந்தாலும் சீரழிந்திருந்தாலும் தனசேகரன் பழைய தவறுகளை எல்லாம் ஒழுங்கு செய்திருந்தான். இன்ஷூரன்ஸ் பணமும் வேறு சில வரவுகளும் ஊழலைச் சரி செய்ய உதவியிருந்தன.

தந்தை ராஜமான்யத்தையும், சொத்துச் சுகங்களையும் துறப்பதற்கே அஞ்சி, தயங்கி மேலும் மேலும் பல தவறுகளை செய்தார். தனசேகரனோ அவற்றை எல்லாம் துறந்து சொத்துச் சுகங்களைத் தாராளமாக விட்டுக்கொடுத்து இப்போது மக்களிடத்தில் நல்ல பெயர் எடுத்திருந்தான்.

பழைய காலமுதல் அரண்மனை அந்தப்புரத்தில் இளைய ராணிகள் என்ற பெயரில் சேர்ந்துவிட்ட தண்டச்சோற்றுக் கூட்டத்தை யாராலும் கலைத்து அனுப்ப முடியாதென்று தான் எல்லாரும் நினைத்திருந்தார்கள். தனசேகரன் அதையும் செய்து முடித்திருந்தான். யாருக்கும் எந்தக் குறைபாடும் இன்றி அரண்மனை சமஸ்தானம் என்ற ஏற்பாடுகள் தீர்மானமாகக் கலைத்து விடப்பட்டிருந்தன. அரண்மனை நிர்வாகத்கிலே அடங்கி இருந்த கல்லூரி, உயர்நிலைப்பள்ளி, தேவாரப் பாடசாலை, வேத பாட சாலை, ஆலய நிர்வாகங்கள் எல்லாம் ஊழல் களையப் பெற்றுச் செம்மையாகி இருந்தன. அரண்மனையில் குறைந்த சம்பளத்தில் வேலைக்கிருந்த அரிஜனங்கள். தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு இப்போது உபரி நிலங்கள் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டிருந்தன. ஊரையும் அரண்மனையையும் எல்லையாக இருந்து தனித்தனியே வேறு வேறு வர்க்கங்களாகப் பிரித்துக் காட்டிக் கொண்டிருந்த கற்சுவர்கள் அகற்றப்பட்டு அரண்மனையை மறைத்துக் கொண்டிருந்த மறைப்புக்கள் நீக்கப்பட்டிருந்தன. சிலருக்கு இது மனக்குறைவாக இருந்தாலும் பெரும்பாலோர் இதை வரவேற்றார்கள். ஊரில் எல்லாருக்கும் எல்லாமும் கிடைப்பது போல் நிலைமை மாறி உயர்வு தாழ்வுகளும் தடைகளும் தவறுகளும் வித்தியாசங்களும் நீங்கியிருந்தன.

தன்னுடைய திருமணத்துக்காகத் தன் தரப்பிலிருந்தும் மாமாவின் தரப்பிலிருந்தும் செலவாவதற்கு இருந்த அநாவசியமான செலவுகளைத் தவிர்த்து, ஆளுக்கு இரண்டரை லட்ச ரூபாய் வீதம் நன்கொடையாகப் போட்டு ஐந்து லட்ச ரூபாய்க்கு ஒரு பெண்கள் கல்லூரியைத் தன் தாயின் பெயரில் தொடங்குவதற்கு இருந்தான் தனசேகரன்.

‘வடிவுடைய நாச்சியார் மகளிர் கல்லூரி டிரஸ்ட்’ என்ற பெயரில் அந்தப் பெருந்தொகை ஒதுக்கப்பட்டது. பல்கலைக் கழகத்தில் கல்லூரி தொடங்குவதற்கான அனுமதி கோரப்பட்டது. மாமா தங்கபாண்டியன் திருமண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த அதே வேளையில் தனசேகரன் பொது காரியங்களுக்கான வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

அதுவரை சமஸ்தானம், அரண்மனை என்ற பெயரில் ஒரு சிலர் மட்டுமே அடைய முடிந்திருந்த நன்மைகளை இனி எல்லா மக்களும் அடையும்படி தனசேகரன் செய்திருத்த பல மாறுதல்களை ஊர் மக்கள் வரவேற்றனர். மகிழ்ச்சியோடு பேசினார்கள்! தனசேகரனைப் பாராட்டினார்கள்.

அந்த வாரத்தில் பீமநாதபுரம் விழாக்கோலம் பூண்டது. மியூசியத் திறப்பு விழா, தனசேகரன் திருமணம் இரண்டும் பக்கத்துப் பக்கத்து ஊர்களில் நடைபெற இருந்தாலும் இரண்டு ஊர்களிலுமே கலகலப்பும் கோலாகலமும் மிகுந்திருந்தன. கோலாலம்பூரிலிருந்தும், மலேசியாவின் பிற பகுதிகளிலிருந்தும், மாமா தங்கபாண்டியனின் குடும்பத்தினர், வேண்டியவர்கள், உறவினர்கள், எல்லாரும் வந்திருந்தனர். உள்நாட்டு நண்பர்களும், உறவினர்களும் கூட நான்கு தினங்களுக்கு முன்பே பீமநாதபுரம் வந்து சேர்ந்து விட்டனர். ஒரு வயதான மூத்த பெரியவர் மாமாவிடம் திருமண அழைப்பிதழ் அச்சிட்டிருந்த முறை பற்றிக் குறைப்பட்டு விவாதிக்கத் தொடங்கினார்.

“பத்திரிகையிலே எந்த இடத்திலேயாவது மாப்பிள்ளை பீமநாதபுரம் அரச குடும்பத்து ‘வாரிசு’ன்னு, குறிப்பிட்டிருக்க வேணாமா? இவ்வளவு தூரம் விவரம் தெரிஞ்ச நீங்க பத்திரிகை அச்சடிச்சப்போ அதை எப்படித் தவறவிட்டீங்கன்னே தெரியலியே?”

“நானாக அதை விடலே, மாப்பிள்ளையே வேண்டாம்னு அபிப்ராயப்பட்டதாலே தான் விட்டேன். என்ன காரணத்தாலேயோ தனசேகரன் அதை எல்லாம் போடறத்துக்குப் பிரியப்படலே பாட்டையா! வேண்டாம்னுட்டான்.”

“அவருதான் சின்னப்புள்ளையாண்டான். வேண்டாம்னாலும் நீர் விவரந்தெரிஞ்ச மனுஷன் அதை விடலாமோ? குடும்பப் பெருமை, ராஜ வம்சம் இதெல்லாம் எல்லாருக்குமா கிடைச்சுட முடியும்?” என்று விடாமல் தொண தொணத்தார் அந்த முதியவர்.

இப்படிப் பல முனைகளிலிருந்து பல வினாக்களை மாமா எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதையெல்லாம் கேள்விப் பட்டபோது தனசேகரன் சிரித்துக்கொண்டே சொன்னான்:

“நான் இனிமே அரசனும் இல்லை. அரசவம்சமும் இல்லை. சாதாரண மனிதன்தான்னு சொன்னா ஜனங்க கேட்க மாட்டேங்கிறாங்க. நான் அரச வம்சம்தான்னு சொன்னா அதை அரசாங்கமும் சட்டமும் ஒப்புக்கொள்ளத் தயாராயில்லே. இனிமே என்னதான் செய்ய முடியும்னு புரியலே.”

இந்த விதமான தனசேகரனின் விளக்கம் கேள்வி கேட்டவர்களைத் திருப்திப்படுத்தவில்லை. ஆனாலும் அவர்களை மேலும் முணுமுணுக்க விடாமல் வாயை அடைக்கப் பயன்பட்டது.

எளிமையையும், அன்பையும், பண்பையும் கொண்டாடுகிற மனிதனைவிட விண் பெருமைகளையும், டம்பங்களையும், ஜபர்தஸ்துக்களையும் கொண்டாடுகிற மனிதர்கள் தான் உலகில் அதிகம் இருந்தார்கள். எளிமையும் பண்பும் இலக்கியங்களிலும் எழுத்துக்களிலுமே கொண்டாடப் பட்டன. வாழ்வில் நிலைமை என்னவோ முற்றிலும் வேறாகத்தான் இருந்தது. டாம்பீகமே மதிக்கப்பட்டது. ஜம்பமே பெருமைப்படுத்தப் பட்டது. பெருவாரியான மக்களுக்கு எளிமையின் அருமையைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பே இன்று இந்நாட்டில் இல்லை என்று தெரிந்தது. மக்களின் இந்த மனநிலை தனசேகரனுக்கு நன்கு விளங்கியிருந்தது.

‘ஓர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது’ என்ற சிறுகதையில் தான் படித்த இளவரசன் கூடத் தன் எளிமைப் பண்பை மக்களுக்குப் புரிய வைக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது என்பதை தனசேகரன் நினைவூட்டிக் கொண்டு பார்த்தான்.

நான்கு ரத வீதிகளிலும் எட்டுக் குதிரைகள் பூட்டிய பழமையான அரண்மனைச் சாரட்டில் மணமகனான தனசேகரன் ஊர்வலமாக அழைத்து வரப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் பீமநாதபுரம் நகரப் பொதுமக்கள்.

தனசேகரனோ அந்தப் புராதனமான சாரட்டையே மியூசியத்தில் கொண்டு போய் நிறுத்தி வைத்திருந்தான்.

தனசேகரனின் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக மூன்று முக்கியமான திறப்பு விழாக்கள் பீமநாதபுரம் வட்டாரத்தில் நடைபெற்றன. பீமநாதபுரம் அரண்மனை மியூசியத் திறப்பு விழா, வடிவுடைய நாச்சியார் பெண்கள் கல்லூரித் திறப்பு விழா, நீர்ப்பாசன வசதிக்குப் புதிதாகக் கட்டப்பட்டிருந்த அணைக்கட்டுத் திறப்பு விழா மூன்றும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. முதலில் கல்லூரிக்காக அரண்மனைக்குச் சொந்தமான சில ஏக்கர் நிலத்தை மட்டும் எழுதி வைக்கலாம் என்றெண்ணி யிருந்தார்கள் மாமாவும், தனசேகரனும். பின்னால் யோசித்த வேளையில் பழைய நவராத்திரி விழாவின் போது பயன்படுத்திய மாளிகைகளும் கட்டிடங்களும் விருந்தினர் தங்கும் விடுதிகளும் பயனின்றி இருப்பது நினைவுக்கு வந்தது. அந்தக் கட்டிடங்களையும் அவற்றைச் சுற்றி இருக்கும் காலி நிலங்களையும் இப்போது புதிய பெண்கள் கல்லூரிக்கு அப்படியே பயன்படுத்தலாம் என்று தோன்றியது. சில மாறுதல்களோடு அந்தப் பெரிய கட்டிடங்களை அப்படியே கல்லூரியாக மாற்றினார்கள். திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்தார்கள்.

அரண்மனை இடங்களில் வசந்தமண்டபத்து விருந்தினர் மாளிகையையும் அதைச் சுற்றியிருந்த தோட்டத்தையும் மட்டுமே தன் குடியிருப்பு உபயோகத்துக்கு என்று வைத்துக் கொண்டிருந்தான் தனசேகரன். மற்ற எல்லா இடங்களும் பொதுக் காரியங்களுக்காக அல்லது பொதுஉபயோகங்களுக்காக எழுதி வைக்கப்பட்டு விட்டிருந்தன.

ஒரு பெரிய சமஸ்தானாதிபதி தன் உடைமைகளை எல்லாமே பொதுமக்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டுத் தன் அளவில் ஒரு சாதாரணக் குடிமகனாகி விட்டது போன்று இந்த மகத்தான மாறுதல் நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது; விளம்பரமாயிற்று; பத்திரிகைகள் எல்லாம் தலையங்கங்கள் எழுதின. அகில இந்தியாவில் இருந்தும் ஏராளமான பெரிய பத்திரிகை நிருபர்கள் பீமநாதபுரத்தைத் தேடி வந்து முற்றுகையிட்டனர். தனசேகரனின் படமும் பேட்டிகளும் பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கியிருந்தன. ‘ராஜமான்ய ஒழிப்புக்குப் பின்னர் மக்களுக்கு முன் உதாரணம் ஆகும் ஓர் இளவரசர்’ என்ற தலைப்புடன் பல பத்திரிகைகள் தனசேகரனைப் புகழ்ந்து எழுதியிருந்தன. சில பிரிட்டிஷ், அமெரிக்கப் பத்திரிகைகளின் நிருபர்கள் கூடப் புகைப்படக் கருவிகளுடனும், டெலிவிஷன், சினிமா, படப்பிடிப்புக்கான சாதனங்களுடனும் பீமநாதபுரத்துக்கு வந்திருந்தனர். பிரதமரும் முக்கியத் தலைவர்களும் தனசேகரனை வாழ்த்தித் தந்திகள் அனுப்பியிருந்தனர். சரித்திரத்தில் ஒரு மாறுதலை உண்டாக்கும் இந்த நிகழ்ச்சிகளைப் படம் பிடித்து மக்களுக்குக் காட்டுவதற்கு மத்திய, மாநில அரசாங்கங்களின் செய்திப் படப் பிரிவினர் பீமநாதபுரத்தில் வந்து முகாம் இட்டிருந்தனர்.

முறையின்மை, ஒழுக்கக்கேடு, ஊழல், ஆகியவற்றினால் தன் தந்தை இழந்திருந்த நற்பெயரைத் தனசேகரன் மீட்டான். கெட்ட பெயரைப் போக்க முயன்றான், பழைய ராஜாவின் ஊழல்கள் பீமநாதபுரத்தின் புகழுக்கே களங்கம் உண்டாக்கியிருந்தன. இப்போது தனசேகரன் தன் செய்கைகளால் அந்தப் புகழையும், பெயரையும் மீட்டுக்கொண்டிருந்தான்.

அரண்மனையும் சுற்றியிருந்த அழகிய மிகப் பெரிய பூங்காவும். சிறுவர்க்கான மிருகக்காட்சி சாலையாகவும். மியூசியமாகவும் பொதுமக்கள் உபயோகத்துக்கான பார்க்காகவும் மாற்றப்பட்ட செய்தி அகில இந்தியாவையுமே கவர்ந்திருந்தது. ‘ஒரு சமஸ்தானம் மக்கள் உடைமை ஆகிறது’ என்றும் ‘ஒரு சமஸ்தானச் செல்வங்கள் மக்களுக்குப் பங்கிடப்படுகிறது’ என்றும் பத்திரிகைகள் விதம் விதமாகத் தலைப்பிட்டு புகழ்ந்து எழுதத் தொடங்கியிருந்தன.

பீமநாதபுரம் அகில இந்தியாவிலுமுள்ள பத்திரிகைகளால் கூர்ந்து கவனிக்கப்பட்டது. மியூசியத் திறப்பு விழாவின் போது வந்திருந்த அமைச்சர், விழா மேடை மீது தனக்கும் தனசேகரனின் மாமாவுக்கும், தனசேகரனுக்கும் மேற்புறம் இருக்கைகள் போடப்பட்டிருந்ததைக் கண்டு, “உங்கள் வருங்கால மனைவியை மட்டும் ஏன் கீழே அமரச் செய்து விட்டீர்கள்? அந்தப் பெண்ணைக் கூப்பிடுங்கள். அவர்களும் இங்கேயே அமரட்டும்” என்றார்.

தனசேகரன் தன் மாமன் மகளும் நாளைய மனைவியுமாகிய பெரியநாயகியிடம் சகஜமாகச் சிரித்துப் பேசிப் பழகுவதுண்டு என்றாலும் ‘கல்யாணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும்போது அப்படி எல்லாம் பேசினால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ’ என்று தயங்கியபடி திரும்பி மாமாவின் பக்கம் பார்த்தான்.

“ஏன் நீயே கூப்பிடேன். பெரியநாயகியோட நீ பேச மாட்டியா?” என்று சிரித்தபடி அவனைக் கேட்டார் மாமா.

தனசேகரன் உடனே கீழே முதல் வரிசையிலே அமர்ந்திருந்த பெரியநாயகியைப் பார்த்து மேலே மேடையிலே வந்து அமருமாறு சைகை செய்தான். அவன் அப்படி மணமகளைச் சைகை செய்து அழைப்பதைப் பார்த்துக் கூட்டத்தில் எல்லோரும் ‘கொல்’லென்று வாய்விட்டுச் சிரித்தார்கள். தனசேகரனுக்கு வெட்கமாகப் போயிற்று பெரியநாயகி நாணப் புன்னகையோடு மேடை மீது வந்தமர்ந்தாள்.

“இந்த மியூசியம் - அருமையான கலைப்பொருட்களையும் ஒரு சமஸ்தானத்து அரச குடும்பத்து வரலாற்றையும் மட்டுமே உங்களுக்கு எடுத்துக்காட்டவில்லை. ஓர் இதயத்தின் பெருந்தன்மையையும் சேர்த்தே எடுத்துக் காட்டுகிறது. தனக்கு உரிமையான இந்த அழகிய அரண்மனையையும் கலைப்பொருட்களையும் ஊருக்கு உரிமையாக்கியிருக்கிறார் திருவாளர் தனசேகரன். அவருடைய மனைவியாகும் இந்த இளம் பெண்ணுக்கு நான் ஒன்றைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் கணவர் உங்களுக்கு அரச குடும்பத்துச் சொத்துக்கள் எதையும் கொண்டு வரவில்லை. ஆனால் தன்னையே ஒர் அரும் பெரும் ஐசுவரியமாக உங்களுக்குக் கொண்டு வந்து தரப்போகிறார். இந்த பீமநாதபுரத்தின் வரலாற்றில் கிடைத்த மிகப்பெரிய செல்வம் அல்லது சொத்து நம் நண்பர் தனசேகரன்தான் என்பதை உங்களுக்குப் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பொருட்காட்சித் திறப்பு விழாவில் அமைச்சர் பலத்த கரகோஷத்துக் கிடையே பேசினார்.

திருவிழாக் கூட்டம்போல மியூசியத்தைப் பார்ப்பதற்குக் கூட்டம் சேர்ந்திருந்தது. மைல் நீளத்திற்கு மேல் நீளமாக உள்ளே நுழைய கியூ நின்றது. பெண்கள் கல்லூரித் திறப்பு விழாவும் அணைக்கட்டுத் திறப்பு விழாவும் அடுத்தடுத்த நாட்களில் நிகழ்ந்தன. திருமணத்திற்காக வந்திருந்தவர்கள் அனைவரும் இந்த விழாக்களுக்கும் வந்திருந்தனர். திருமணம் பரிமேய்ந்த நல்லூர்க் கோவிலில் எளிமையாக நிகழ இருந்தது. தனசேகரன் எப்படி விரும்பினாலும் பெரிய ரப்பர் எஸ்டேட் உரிமையாளரான மாமா அதை அத்தனை எளிமையாக நடத்தச் சம்மதித்திருக்கக் கூடாது என்றார்கள் அவரது வியாபார நண்பர்கள். கோலாலம்பூரில் மெர்லின் ஹோட்டலில் ஒரு பெரிய வரவேற்புக்கும் விருந்துக்கும் ஏற்பாடு செய்துவிடலாம் என்றார் மாமா தங்கபாண்டியன். பரிமேய்ந்த நல்லூரில் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் தங்குவதற்கு இடம், வசதிகள் எதுவும் இல்லை. பலர் பீமநாதபுரத்தில் தங்கித் திருமண நாளன்று விடிந்ததும் காரில் பரிமேய்ந்த நல்லூருக்குச் சென்றார்கள். சிலர் ஆவிதானிப்பட்டியில் தங்கியிருந்து கொண்டு காலையில் முகூர்த்த நேரத்திற்குப் பரிமேய்ந்த நல்லூர் வந்து சேர்ந்தார்கள்.

இந்தத் திருமணத்திற்கு முந்திய நாளன்று இரவில் ஓர் உருக்கமான நிகழ்ச்சியைத் தனசேகரன் எதிர்கொள்ள நேர்ந்தது. முன்பு அரண்மனைக் கோவிலிலும் தட்சிணா மூர்த்திக் குருக்கள் வீட்டிலுமாகத் தான் சந்தித்திருந்த அதே இளையராணி தன்னை மீண்டும் அன்று அந்த இரவு வேளையில் தேடி வந்தபோது தனசேகரனுக்கு வியப்பாக இருந்தது.

“எதுக்கும் கவலைப்படாதீங்கம்மா! உங்க மகன் கொடைக்கானல் பள்ளிக்கூடத்தில் படிக்கிற காலம்வரை மட்டுமில்லே, அது முடிந்தபின் கல்லூரிப் படிப்புக்குக்கூட நான் உதவி செய்யிறேன்” என்றான் தனசேகரன்.

“நான் இப்போ சின்னராஜாகிட்ட எந்த உதவியையும் எதிர்பார்த்து இங்கே வரலே. அந்த நாளிலே உங்கம்மா பெரியராணி பிரியமாகத் தன் காதிலே அணிந்திருந்த வைரத்தோடு ரெண்டையும் எனக்குக் கொடுத்திட்டுப் போனாங்க. எனக்கு வேண்டாம்னு நான் எவ்வளவோ சொல்லியும், அவங்க கேட்கலை. இப்போ நான் அதைச் சின்னராணி அதாவது உங்க மனைவி பெரியநாயகிக்குக் கொடுத்திட்டுப் போகலாம்னு வந்தேன்.”

“இந்தக் காலத்துப் பெண்கள் தோடு கீடு எல்லாம் எங்கே போட்டுக்கப் போறாங்க? பெரியநாயகிக்கு இதெல்லாம் எதுக்கு? உங்ககிட்டவே இருக்கட்டுமே.”

“இல்லே! சின்னராஜா அப்படிச் சொல்லப்படாது. உங்கம்மா சொத்து உங்க மனைவி கிட்டத்தான் இருக்கணும். நான் சொல்வதை நீங்க தட்டக்கூடாது. தயவு செய்து பெரியநாயகியை ஒரு நிமிஷம் தனியாகக் கூப்பிடுங்க. உங்கம்மா சார்பிலே ஆசீர்வாதத்தோட நானே இதை அவகாதிலே போட்டுவிடணும். நீங்க இதுக்கு ஆட்சேபணை சொல்லவே கூடாது” என்றாள் அவள்.

தனசேகரனால் அவளுடைய அந்த வேண்டுகோளை மறுக்க முடியவில்லை. பெரியநாயகியைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து அவள் முன்னால் நிறுத்தி அறிமுகப்படுத்தினான். அவள் தனக்கு சின்னம்மா முறையாக வேண்டும் என்றும், தன் அம்மாவுக்கு மிகவும் வேண்டியவள் என்றும் பெரியநாயகியிடம் தனசேகரன் பெருமையாகச் சொன்னான். தோடுகளைப் பெரியநாயகிக்கு அணிவித்துத் திருஷ்டி கழித்து வாழ்த்தினாள் அவள்.

“இங்கே நாளைக் காலையில் திருமண நேரத்தில் நான் நேரில் வந்து வாழ்த்த முடியுமோ, இல்லையோ, இப்போதே வாழ்த்தி விடுகிறேன்.”

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? நாளைக் காலையில் திருமணத்துக்கும் நீங்கள் இருந்துவிட்டுத்தான் போக வேண்டும்.”

அவள் விடைபெற்றுக் கொண்டு போய்ச் சேர்ந்தாள்! தனசேகரன் பெரிய நாயகியிடம் அவளைப் பற்றி மிகவும் சிலாகித்துச் சொன்னான். தன் தாய்க்கு அவள் உடல்நலமின்றிப் படுத்த படுக்கையாயிருந்த காலத்தில் இந்த இளையராணி பெரிதும் உதவியாயிருந்ததை எல்லாம் விவரித்தான். அவள் மகன் கொடைக்கானலில் படிப்பது பற்றியும் குறிப்பிட்டான்.

மறுநாள் பொழுதும் விடிந்தது. திருமணச் சடங்கும் முடிந்தது. திருமண விருந்து என்று எதுவும் பரிமேய்ந்த நல்லூரில் ஏற்பாடு செய்யப்படவில்லை. பீமநாதபுரத்தில் தான் சிறிய அளவில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வசந்த மண்டப மாளிகை தனசேகரனின் வீடாக மாறியிருந்ததால் அங்கேயே எளிய விருந்தும் நடந்தது. திருமணம் முடிந்ததுமே அனைவரும் கார்களில் பீமநாதபுரம் திரும்பி விட்டனர். மாலையில் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பில் கூட எளிமையே கடைப்பிடிக்கப்பட்டது. தனசேகரன் அதில் கண்டிப்பாக இருந்தான். திருமணத்திற்கு மறுநாள் அரண்மனையின் பழைய ஊழியர்களுக்குத் தனியே அவனும் அவன் மனைவியும் விருந்தளித்தனர். விருந்தின் முடிவில் தனசேகரன் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டான்.

“உங்களுக்கெல்லாம் எங்களது பரம்பரையின் சார்பில் நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். இனி இந்த ஊரில் உட்கோட்டை வெளிக்கோட்டை என்று பெயர்களுக்கு அர்த்தமே இல்லை. எப்போது மதில்களை இடித்தாயிற்றோ அப்போதே பேதாபேதங்கள் போய் விட்டன. மதில்கள் இருந்தவரைதான் உட்கோட்டைவாசி, வெளிக்கோட்டைவாசி என்ற வேறுபாடு இருந்தது. இனி வேறுபாடுகள் இல்லை. ஊரை - அந்தஸ்து, வாழ்க்கைத் தரம் எல்லாவற்றாலும் இரண்டாகப் பிரித்துக் கொண்டிருந்த சுவர்கள் இப்போது தகர்க்கப்பட்டுவிட்டன. அரண்மனை பொது இடமாக மாற்றப்பட்டு விட்டது. அரச வம்ச உபயோகத்துக்கான இடம், பொதுமக்கள் உபயோகத்துக்கான இடம் என்று ஊரை இரண்டாகப் பிரித்த உயரமான கற்சுவர்களை நீக்கியாயிற்று. இனி ஊர் ஒன்று, மனப் பான்மையும் ஒன்று. நான் இங்கிருந்து சமஸ்தானத்தை நடத்தவோ, சமஸ்தானாதிபதி என்ற பெருமை கொண்டாடவோ தயாராயில்லை. இனி எல்லோரையும் போல, நானும் இவ்வூர்க் குடிமக்களில் ஒருவனாக வாழ்வேன். ‘நாம் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நாம் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள்’ என்ற மனப்பான்மைதான் உண்மையான பெரிய கற்சுவர். வெளியே இருக்கிற கற்சுவர்கள், கதவுகள், பூட்டுக்கள். அந்தஸ்தைப் பாதுகாக்கும் அடையாளங்கள் எல்லாவற்றையும் விட மனத்துக்குள் இருக்கும் கற்சுவர்களாகிய நினைப்புக்கள் தான் கடுமையானவை. என் தந்தையின் மனத்தில், அப்படி ராஜ வம்சம் என்ற கற்சுவர் பெரிய கர்வமாக எழும்பி உலகை மறைத்துக் கொண்டு இருந்தது. என் மனதில், அப்படி எதுவும் இல்லாததால்தான் நான் வெளியே ஊரை இரண்டாக்கிக் கொண்டிருந்த மதிற்சுவர்களையும் நீக்கினேன். உள்ளத்துக் கற்சுவர்களாகிய இறுமாப்பு ஜம்பங்களையும் நீக்கினேன். ஊர் ஒற்றுமையை இனி நீங்களெல்லாரும் சேர்ந்துதான் பாதுகாக்க வேண்டும். திருட்டும் காவலும் இல்லாத புதிய சமூகம் ஒன்று நம்மிடையே உருவாக வேண்டும். அந்தஸ்து வாழ்க்கைத் தரங்களால் மக்கள் பிளவுபடாத சமத்துவம் வேண்டும். இப்போது என் மாமாவின் தோட்டத் தொழிலை உடனிருந்து கவனிப்பதற்காக நான் மலேசியாவுக்குச் சென்றாலும் விரைவில் இங்கேதான் திரும்பி வருவேன். இப்போது நான் சில மாதங்கள் அங்கே போவதுகூட நீங்கள் சமஸ்தானம், அரசர், அரச குடும்பம் என்ற வார்த்தைகளையும், உறவுகளையும் விரைந்து மறக்க வேண்டும் என்பதற்காகத்தான்! நான் இங்கிருந்து இதே இடத்தில் வசிக்கத் தொடங்கினால் நீங்கள் பழைய வழக்கத்தை விட முடியாமல் மறுபடியும் சமஸ்தான மரியாதைகளை எனக்குச் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். உங்களுக்கு அதெல்லாம் மறக்கவேண்டும் என்பதற்காகவே நான் சில காலம் இங்கிருந்து தொலைவில் சென்று வசிக்க எண்ணுகிறேன். எனக்கும், என் மனைவிக்கும், மாமாவுக்கும் நீங்கள் இப்போது தற்காலிகமாக விடைகொடுக்க வேண்டும்” என்றான் தனசேகரன்.

அந்த வேண்டுகோளும் விடைபெறுதலும் மிகமிக உருக்கமாக இருந்தன. காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை, மாமா தங்கபாண்டியன் எல்லாரும் அப்போது உடனிருந்தார்கள், ஒரு பத்திரிகை நிருபர் எழுந்திருந்து “அரண்மனையையும் ஊரையும் பிரித்த கற்சுவர்களை நீக்கி விட்டீர்கள். இனி நீங்கள் இங்கேயே தங்கி ஊருக்கு நன்மைகள் செய்ய வேண்டாமா? மாமன் மகளைக் கட்டிக் கொண்டு அவரோடு மலேசியாவுக்கு விமானம் ஏறிப் போகப் பார்ப்பது என்ன நியாயம்?” என்று கேட்டார்.

“நான் எங்கும் ஓடிப் போகப் போவதில்லை. திருமன வரவேற்புக்கு அங்கே அழைக்கின்றார் மாமா. போய்விட்டுச் சில மாதங்கள் கழித்து நானும் என் மனைவியும் இங்கே வந்துவிடுவோம். இங்கே புதிதாகத் தொடங்கியிருக்கும் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கென்று பல வேலைகளை செய்ய வேண்டும். எப்படியும் ஒரு வருஷத்துக்குள்ளே திரும்பி வந்துவிடத் திட்டம் போட்டிருக்கிறேன்.”

“வரும்போது நீங்களும் உங்கள் மனைவியும் மட்டும் தனியே வரக்கூடாது. பின் எப்படி வரவேண்டும்?”

“எங்களையெல்லாம் ஏமாற்றி விடாமல் பீமநாதபுரம் அரச குடும்பத்துக்கு வாரிசாக ஒரு மகனையோ, மகளையோ பெற்றுக் கொண்டு வரவேண்டும். இது எங்கள் அன்புக் கட்டளை.”

“உங்கள் அன்புக் கட்டளைக்கு ஒரு சிறு திருத்தத்துடனே நன்றி. எங்கள் மாமாவுக்கும் மாமிக்கும் ஒரு பேரனோ பேத்தியோ கிடைக்க வேண்டுமே ஒழிய பீமநாதபுரத்தை ஆள என்று நாங்கள் எந்த வாரிசும் பெறப்போவதில்லை. எங்கள் குழந்தை அரச வம்சத்து வாரிசாக இருக்காது. எங்கள் குழந்தையாகவும் எங்கள் பெற்றோர்களின் பேரனாகவோ பேத்தியாகவோ மட்டுமே இருக்கும். இனி பீமநாதபுரத்தில் அரசர், மக்கள் என்ற பிரிவுகள் இல்லை என்பதை நிரூபிக்கும் அடையாள நீக்கமாகத்தான் பழைய கற்சுவர்களை நீக்கினேன். பல நூறு வருஷத்து வரலாற்றை ஒருவிதமான அடக்குதல் ஆளுகையின் சின்னத்தை தரை மட்டமாக்கி நீர்த்தேக்கம் கட்டுவதற்குக் கற்களை விற்றதன் நோக்கமே அதுதான். பல நூற்றாண்டுகளாக அதிகார வெப்பத்தில் சூடேறிய அந்த மதிற்கற்கள் இனி மேலாவது, காலம் காலமாக நீர்த்தேக்கத்தின் குளிர்ச்சியில் ஆறுதல் பெறட்டும் என்பதுதான் என் ஆசை.”

தனசேகரனின் இந்தச் சொற்களைக் கேட்டுக் கூட்டம் கரகோஷம் செய்தது. அந்தக் கரகோஷமும் வாழ்த்தொலிகளும் ஓய்வதற்குச் சில வினாடிகள் ஆயின.