இணையம் ஒரு மகத்தான வலைப்பின்னல். பல்வேறு விசயங்களுக்காக நாம் இணையத்தைப் பயன்படுத்துகிறோம்.
இணையத்தில் ஒரு காணொளியைப் பார்க்கும்போதும், செய்திகளை அனுப்பும்போதும், உங்கள் கணிணி அல்லது கைபேசி தரவுகளை அனுப்பவும் பெறவும் செய்கிறது.
உங்களுடைய தரவு என்பது உங்களைப் பற்றிய எந்த தகவலாகவும் இருக்கலாம். பிடித்தமான ஐஸ்கிரீமின் சுவை, பிறந்த தேதி, மின்னஞ்சல் கடவுச்சொல் அல்லது வங்கிக்கணக்கு எண் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
கடவுச்சொற்கள் மற்றும் தனிநபர் தகவல்கள் போன்றவை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய தரவுகள் ஆகும். அவற்றை இரகசியமாக வைத்திருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
ஏனென்றால், இணையத்தில் இருக்கும் சிலர் அவற்றைத் திருடிவிடக் கூடும்.
தரவுகளைத் திருட முயற்சிப்பவர்களை இணைய ஊடுருவி அல்லது ஹேக்கர் என்பார்கள். இணைய ஊடுருவிகள் பல காரணங்களுக்காகத் தரவுகளைத் திருடுவார்கள்.
இவர்தான் கேப்டன் கறுப்பு. இவர் ஒரு கறுப்புத் தொப்பி ஊடுருவி.
கறுப்புத் தொப்பி ஊடுருவிகள் சொந்த ஆதாயத்திற்காகவோ அல்லது பிறருக்குத் தீங்கு விளைவிப்பதற்காகவோ தரவுகளைத் திருடுவார்கள்.
கேப்டன் கறுப்பு, உங்களுடைய மின்னஞ்சல் கடவுச்சொல்லைத் திருடி,போலி மின்னஞ்சல்களை அனுப்பக்கூடும்.
புதிய மின்னஞ்சல்
பெறுநர்: பொருள்:
சிசி I பிசிசி
வாழ்த்துக்கள்! நீங்கள் 50,000 ரூபாய் பரிசு வென்றிருக்கிறீர்கள்! பணத்தைப் பெற இந்த மின்னஞ்சலுக்கு பதிலளிக்கவும்.
பதிலளி
உங்களுடைய வங்கிக் கணக்கு விபரங்களைத் திருடி, வங்கியிலிருக்கும் உங்களுடைய பணத்தையும் எடுத்துவிடலாம்.
அட, அங்கே மதில் மேலே யார்? இவர்தான் கேப்டன் சாம்பல். இவர் ஒரு சாம்பல் தொப்பி ஊடுருவி. சாம்பல் தொப்பி ஊடுருவிகளும் தரவுகளைத் திருடுவார்கள். ஆனால், எல்லா நேரமும் நமக்கு தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செயல்படமாட்டார்கள்.
அவர்கள் முதலில் உங்கள் தரவுகளைத் திருடுவார்கள். பிறகு தரவுகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி என்று காண்பிப்பதற்காக உங்களிடம் பணம் கேட்பார்கள். நீங்கள் ஒத்துக்கொள்ளாவிட்டால் அந்தத் தரவுகளை வைத்து உங்களை மிரட்டுவார்கள்.
ஆனால், கவலைப்படாதீர்கள்! இணையத்தில் உலா வரும் ஊடுருவிகளிடம் இருந்து உங்களைக் காப்பாற்றுவதற்காக வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள். இவர்தான் கேப்டன் வெள்ளை. இவர் ஒரு வெள்ளைத் தொப்பி ஊடுருவி.
இவர் நம்முடைய தரவுகளைப் பாதுகாக்கும் அமைப்புகளின் மீது ‘தாக்குதல்’ நடத்திப் பரிசோதிப்பார். பாதுகாப்பில் ஏதாவது பலவீனங்கள் இருந்தால், அவற்றைக் கண்டுபிடித்து சரிசெய்வார்.
கிளிக்!!
கிளிக்!!
இவ்வாறெல்லாம் செய்து, கேப்டன் வெள்ளையும் அவரைப் போன்ற வெள்ளைத் தொப்பி ஊடுருவிகளும் நம் தரவுகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறார்கள்.
இணையத்தை எல்லோருக்கும் பாதுகாப்பான இடமாக ஆக்குகிறார்கள்.
வெள்ளைத் தொப்பிகள் இணையத்தில் உங்களைப் பாதுகாக்க நீங்களும் உதவலாம்
• உங்கள் பெயர், முகவரி, கடவுச்சொல், பள்ளியின் பெயர், குடும்பத்தினரின் விபரங்களைப் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
• இணையத்தில் முன்பின் அறிமுகமில்லாத நபர்களிடம் பேசாதீர்கள். தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்ளாதீர்கள்.
• பெற்றோர் அல்லது பெரியவர்களின் அனுமதி இல்லாமல் எந்த சமூக வலைதளத்திலும் சேராதீர்கள்.
• சம்பந்தமில்லாத விஷயங்களை இணையத்தில் யாராவது உங்களுக்கு அனுப்பினால் பெற்றோர், குடும்பத்தினர் அல்லது ஆசிரியர் போன்ற நம்பிக்கைக்குரிய பெரியவர்களிடம் தெரிவியுங்கள்.
• பெற்றோரின் அனுமதி இல்லாமல் உங்கள் புகைப்படங்கள் எதையும் இணையத்தில் பகிராதீர்கள்.
• பெற்றோரின் அனுமதி இல்லாமல் எதையும் தரவிறக்கம் செய்யவோ உங்கள் கணினியில் நிறுவவோ செய்யாதீர்கள்.
• இணையத்தில் வாசித்தவற்றைக் குறித்து உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால், உடனடியாக உங்கள் பெற்றோரிடமோ உங்கள் பாதுகாவலரிடமோ கேளுங்கள்.
• இணையத்தில் உங்களோடு பேசிக்கொண்டிருக்கும் நபர் உங்களை சங்கடப்படுத்தினால், நீங்கள் தொடர்ந்து அவருக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயமில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.