கவர்னர் விஜயம்
அமரர் கல்கி
ஸ்ரீமான் சிவகுருநாதஞ் செட்டியார் மத்தியான போஜனம் ஆன பின்னர், வழக்கம்போல் சாய்வு நாற்காலியில் படுத்துக் கொண்டு பத்திரிகையைப் பிரித்துப் புரட்டினார். தலைப்புகளை மட்டும் பார்த்துக் கொண்டே போன அவர், "பொய்கையாற்றுத் தேக்கம்" "கவர்னர் அஸ்த்திவாரக்கல் நாட்டுவார்" என்னும் தலைப்புகளைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனார். செட்டியாருக்கு மயிர் கூச்சல் உண்டாயிற்று. மார்பு சிறிது நேரம் 'பட்' 'பட்' என்று அடித்துக் கொண்டது. சற்று சமாளித்துக் கொண்டு அத்தலைப்புகளின் கீழ் இருந்த செய்தியை முற்றும் படித்தார். அம்மாதம் 20ம் நாள் காலை 7 மணிக்கு கவர்னர் துரை.... ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிப் பொய்கையற்றுத் தேக்கத்துக்கு மோட்டாரில் செல்வாரென்பதும், மற்றும் பலவிவரங்களும் இருந்தன. செட்டியார் உடனே தமது பிரதம காரியஸ்தர் ஜெயராமையரைக் கூப்பிட்டனுப்பினார். காரியஸ்தர் வந்து சேர்ந்ததும், "ஐயரே, சங்கதி தெரியுமா?" என்றார்.