kazhipparayin kathai

கழிப்பறையின் கதை

ஒன்றாயிருந்தாலும் இரண்டாயிருந்தாலும் அவை பெரிய பிரச்சனைகள்தான்! பழங்காலத்தில் கழிப்பறைகள் எப்படி இருந்தன என்று நீங்கள் யோசித்ததுண்டா? மற்ற நாடுகளில் அவை மாறுபட்டு இருந்தனவா? இடங்கள், காலங்களைக் கடந்து கழிப்பறைகளைப் பற்றி அறிந்துகொள்ள இங்கே எட்டிப்பாருங்கள்.

- S. Jayaraman

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இது ஒரு பெரிய வேலை. மிக முக்கியமான ஒன்று. "இரண்டு" கூட முக்கியமானதுதான். ஏனென்றால் இயற்கையின் அழைப்பை நாம் அலட்சியப்படுத்தவே முடியாது. போகவேண்டும் என்றால் போய்த்தான் ஆகவேண்டும்.

சிலருக்கு இந்த வேலையை வீட்டுக்குள்ளேயே செய்ய முடியும். சிலருக்கோ வெளியே செல்லத்தான் வேண்டும். வேலை முடிந்தபின் சிலர் நீரை ஊற்றுவார்கள். சிலருக்கு அந்த முறையின் தேவை இருக்காது. உலகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இதில் எத்தனையோ விதங்கள். வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களிலும், இது விதவிதமாகத்தான் இருந்திருக்கிறது.

கடந்தகாலக் கழிப்பறைகள்

மிக நீண்டகாலத்திற்கு முன்பு, ஏறக்குறைய 3,000 ஆண்டுகளுக்கு முன், சிந்து சமவெளி மக்களுடைய அழகான வீடுகளினுள்ளே கழிப்பறைகள் இருந்தன. மக்கள் தங்கள் வேலையை அந்தரங்கமாக முடித்துவிட்டு அதில் ஒரு வாளி தண்ணீரை ஊற்றினால், அது கழிவுகளை ஒரு வடிகால் அமைப்பு மூலம் வெளியேற்றும். இந்த வழியில் அவர்கள் தங்கள் வீடுகளையும் தெருக்களையும் சுத்தமாக வைத்திருந்தார்கள்.

இன்றைய பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் அமைந்துள்ள சிந்து

சமவெளி நமக்குத் தெரிந்த வரையில் மிகப் பழமையான மூன்று நாகரிகங்களுள் ஒன்று. மற்ற இரண்டு நாகரிகங்கள், பண்டைய எகிப்து மற்றும் மெஸபொடோமியா. சிந்து சமவெளியின் இன்றைய இடிபாடுகளை வைத்துப் பார்க்கும்போது, சிந்து சமவெளி மக்கள் கட்டடம் கட்டுவதில் திறன் பெற்றிருந்ததும், உலோகம் மற்றும் பீங்கான் பொருட்கள் செய்வதில் தேர்ச்சி பெற்றிருந்ததும் புலப்படுகிறது. அவர்கள் நகரம் முழுவதும் வடிகால் அமைப்புகளை மிகவும் விரிவாகத் திட்டமிட்டிருந்தார்கள்.

இதே காலகட்டத்தில், இதனை ஒத்த கழிப்பறை ஏற்பாடுகள் உலகின் மற்ற பகுதிகளிலும் இருந்தன. எகிப்து, பாபிலோனியாவில், உள்ளேயே கழிப்பறைகளுடன் கட்டப்பட்ட வீடுகள் இருந்தன. ஸ்காட்லாந்தின் ஸ்காராப்ரே மற்றும் மத்திய தரைக் கடல் பகுதியின் மினோவன் கிரீட் பகுதிகளில் உள்ள இடிபாடுகளில், வீட்டிலிருந்து வெளிப்புறமாக செல்லும் பல குழாய்களின் அமைப்பைப் பார்க்க முடிகிறது. இது அவர்களுடைய வீட்டுக்குள் கழிப்பறைகள் இருந்ததை உறுதி செய்கிறது.

சிறிது காலத்திற்குப் பின், சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பாக, ரோம் நகரில் மக்கள் பொதுக் கழிப்பறைகளை உபயோகித்தார்கள். அங்கு ஒரு நீண்ட கல் பலகையில், இடைவெளிகள் விட்டு ஆங்காங்கே சாவித்துவார வடிவில், வெட்டியிருப்பார்கள். மக்கள் அந்தத் திறப்புகளில் உட்கார்ந்து, தங்கள் கழிப்பறை வேலையை செய்வார்கள் அப்போது தங்களுக்குப் பக்கத்தில் உட்காரும் நபருடன் நட்போடு பேசுவதும் உண்டு. அதனால்தான் அதைப் “பொதுக் கழிப்பறை” என்று சொன்னேன்.

அவர்கள் எப்படித் தங்களை சுத்தம் செய்து கொண்டார்கள் என்று வியக்கிறீர்களா? அதை நான் சொன்னால், ஏன்தான் கேட்டோம் என்று நினைப்பீர்கள்.

அவர்கள் ஒரு முனையில் நீர் உறிஞ்சும் பஞ்சு வைத்துக் கட்டிய ஒரு நீண்ட குச்சியை எடுத்து, அதன் பஞ்சுப்பகுதியை நீரில் நனைத்துத் தங்களுடைய பின்புறத்தை சுத்தம் செய்து கொள்வார்கள். தாங்கள் சுத்தமாக உணர்ந்த பிறகு, அந்தக் குச்சியை அடுத்த நபரிடம் கொடுப்பார்கள். அவர் அதனை நீரில் நனைத்து மீண்டும் உபயோகிப்பார். உங்களுக்கு நட்புமுறையில் ஓர் அறிவுரை சொல்கிறேன். இந்த மாதிரி இடத்தில் நீங்கள் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் முதல் இருக்கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்.

ரோம் நகரில் எல்லோருக்கும் பொதுக்கழிப்பறையை உபயோகிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. நீங்கள் பெரிய செல்வந்தராக இருந்தால், வீட்டிலேயே தனியறையில் கழிவுப்பானையை உபயோகித்து உங்கள் வேலையை முடிக்கலாம். வேலையை முடித்தவுடன் அந்தக் கழிவை வெளியே தெருவில் கொட்டிவிட்டால் போதும். அந்த நேரம் பார்த்து யாராவது உங்கள் வீட்டைக் கடந்து சென்றால், அது அவர்களுடைய போதாத காலம்.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன், இங்கிலாந்து அரசி எலிசபெத்தின் வீட்டிற்கு உள்ளேயே ஒரு கழிப்பறை கட்டப்பட்டது. அங்கிருந்து கழிவு நீர் ஒரு குழாய் வழியே வெளியே இருக்கும் குழிக்கு செல்லும். ஆனால் இங்கிலாந்து ராணி அந்தக் கழிப்பறையை அதிகம் பயன்படுத்தவில்லை. காரணம், வெளிக்குழாயிலிருந்து வரும் துர்நாற்றம் அந்தக் கழிப்பறையை நிரப்பியதால், அவரால் சுவாசிக்கக்கூட முடியவில்லை. எனவே, அவர் மீண்டும் தனியறைப் பானை அமைப்பை நாடிச் சென்றார்.

இன்றைய கழிப்பறைகள்

இந்தக் காலத்தில் கழிப்பறைகளில் நாற்றம் இருப்பதில்லை. இது எப்படி சாத்தியமாயிற்று?

ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளரான அலெக்ஸாண்டர் கம்மிங், 1775ஆம் ஆண்டு, இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடித்தார். கழிப்பறையை, கழிவு நீர்க் குழாயோடு இணைப்பதற்கான நேரான குழாயை அவர் மாற்றினார். அதற்கு பதிலாக, ஒரு ’S’ வடிவ குழாயைப் பயன்படுத்தினார். இந்த அமைப்பில் மலம், சிறுநீர் மற்றும் தண்ணீர் கழிவுநீர்க் குழாயில் வடிந்து கீழே செல்லும். ஆனால், எந்த நாற்றமும் மேலே வராது. கழிப்பறையில், கழிவை அகற்றத் தண்ணீர் உபயோகித்தபின் அங்கே சிறிது நீர் தேங்கியிருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? இதுதான் ஒரு 'மூடி' போல் செயல்பட்டு, வடிகாலிலிருந்து நாற்றம் அறைக்குள் வருவதைத் தடுக்கிறது.

பழைய நாட்களைப் போலவே இன்றும் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பல வகையான கழிப்பறைகள் உள்ளன.

விமானத்தில் இருப்பது போல, தண்ணீர் உபயோகிக்கத் தேவையில்லாத கழிப்பறைகளும் உண்டு. விமானத்தின் குலுக்கலால் கழிப்பறைக் கிண்ணத்தில் தண்ணீர் இருப்பது நல்லதல்ல. அதற்கு பதிலாக, சக்திவாய்ந்த வெற்றிடத்தை உருவாக்கி கழிவு உறிஞ்சப்பட்டு, கீழே உள்ள தொட்டிக்குச் செலுத்தப்படும். விமானம் தரையிறங்கிய பின் கழிவுகள் அங்கிருந்து அகற்றப்படும்.

நிலப்பரப்பிலும் தண்ணீர் உபயோகிக்காத கழிப்பறைகள் உண்டு. எடுத்துக்காட்டாக தமிழ்நாடு, மஹாராஷ்டிராவில் உள்ள பின்தங்கிய கிராமங்களில், தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களுக்காக இத்தகைய கழிப்பறைகள் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன. இவை சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. எல்லா இடங்களிலும் இப்படிப்பட்ட கழிப்பறைகளை உருவாக்குவது ஒரு நல்ல திட்டம் அல்லவா? குறைந்த அளவு நீர் உபயோகிப்பதால் கழிவு நீரின் அளவு குறையும். இது பூமிக்கும் நல்லது. சரிதானே!

எதிர்காலக் கழிப்பறைகள்

தண்ணீர் தேவைப்படாத கழிப்பறையை உருவாக்குவது எப்படி?

முதலில், மலமும் சிறுநீரும் கலக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது நீங்கள் நினைப்பது போல் சிரமமில்லை. கழிப்பறைப் பானையைப் புத்திசாலித்தனமாக வடிவமைத்தால் போதும். ஒரு சாய்வான மூங்கில் பாயைச் சல்லடை போல உபயோகிப்பதன் மூலம், இது சாத்தியமாகும். இந்த சல்லடையின் வழியே கழிவு நீர் வடிந்துவிடும். மேலே தங்கும் மலம் வேறொரு குழிக்குச் செல்லும்.

சிறுநீரால் நேரடியாக எவ்வித பாதிப்பும் இல்லை (திறந்த வெளியில் சிறுநீரில் சேரும் பாக்டீரியாக்கள்தான் நாற்றத்தையும் தீங்கையும் ஏற்படுத்தும்). ஆகவே, சிறுநீரைப் பாதுகாப்பாக நிலத்தினுள் வடியவிடலாம் அல்லது உபயோகமானதாகவும் மாற்றலாம். சிறுநீரிலிருந்து ஹைட்ரஜனைப் பிரித்து, அதனை ஒரு ஜெனரேட்டருக்கு எரிபொருளாகப் பயன்படுத்த முடியும்.

சிறுநீரில் உள்ள நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவை உரங்கள் தயாரிப்பில் மிகவும் உபயோகமாகும் மூலப்பொருட்கள்.

சிறுநீரால் எழும் பிரச்சனையைத் தீர்த்துவிட்டோம். அடுத்து திடக்கழிவை என்ன செய்வது? அதை சாம்பல் மற்றும் புல்லுடன் சரியான விகிதத்தில் கலந்து, ஒரு குழிக்குள் சேமித்து மூடி வைத்தால் போதும். பல லட்சம் பாக்டீரியாக்கள் அதோடு வினைபுரிந்து, அதனை விவசாயத்துக்கு பயன்படும் உரமாக மாற்றிவிடும்.

இந்தக் கழிப்பறைகள், கழிவுகளே இல்லாத ஓர் உலகத்தை உருவாக்க உதவும். அதாவது ’கழிவுகள்’ இங்கு உபயோகமான பொருட்களாக மாற்றப்படுகின்றன.

நகரங்களில் எல்லா வீடுகளிலும் இப்படிப்பட்ட கழிப்பறைகள் இருந்தால், கழிவுநீர் வெளிவராது. அதிகச் செலவில் கட்டப்படும் கழிவுநீர்ச் சுத்திகரிப்பு ஆலைகள் தேவைப்படாது. அதோடு கழிவுநீர் வடிகால் வழியே பாய்ந்து, ஏரிகள், குளங்களில் கலக்காது. என்ன ஒரு அருமையான எதிர்காலம் எல்லோருக்கும்!

18ஆம் பக்கத்தில் ஒரு பலகை விளையாட்டு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குச் சில நண்பர்களும் ஒரு பகடையும் தேவை. நீங்கள் இந்தக் கட்டங்களுக்குள் வர நேர்ந்தால் செய்ய வேண்டியது என்ன?

3ஆம் கட்டம்:

அரசியின் கழிவுப்பானை:

அரசியின் கழிவுப்பானையைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியுள்ளீர்கள். தண்டனை: 2 சுற்றுகளுக்கு அவருடைய கழிப்பறைக்குள் இருக்கவேண்டியதுதான்.

6ஆம் கட்டம்:

ரோமன் கழிப்பறையில் முதல் இருக்கை.  நல்லதாகப் போயிற்று. பஞ்சை முதலில் உபயோகிப்பது நீங்கள்தான்... 7 கட்டங்கள் முன்னேறுங்கள்.

9ஆம் கட்டம்: கழிப்பறை வரிசையில் சிக்கி விட்டீர்கள். இரண்டோ நான்கோ விழுந்தால் மட்டுமே நகர முடியும்.

12ஆம் கட்டம்: ரோமன் கழிப்பறையின் கடைசி இருக்கை. ச்ச்சீ... பஞ்சை உபயோகிக்கப் பிடிக்கவில்லையா? சரி! கொஞ்சம் காலம் கடத்த அனுமதி உண்டு. ஒரு ஆட்டம் இல்லை.

15ஆம் கட்டம் :மொஹெஞ்சதாரோ:

வாழ்த்துகள்! எல்லாக் காலகட்டங்களிலும் சிறந்த கழிப்பறைகளில் ஒன்றுள் நுழைந்துள்ளீர்கள். எனவே பகடையை இன்னொரு முறை உருட்ட வாய்ப்பு. 2, 4, 6 போட்டால் அதற்கு ஈடான கட்டங்கள் முன்னேறலாம். 1, 3, 5 போட்டால் இன்னொருவருடைய காயை அத்தனை கட்டங்கள் பின்னோக்கி நகர்த்தலாம்.

19ஆம் கட்டம்: அடடா, கழிப்பறையை அசிங்கமாக்கி விட்டீர்கள். 3 கட்டம் பின்னோக்கிச் செல்லவும்.

21ஆம் கட்டம்: நீரற்ற கழிப்பறை. வாழ்த்துகள். நீங்கள் ஒரு நீரற்ற கழிப்பறையை உபயோகித்துள்ளீர்கள். குறுக்கு வழியில் செல்லவும்.

23ஆம் கட்டம்: பறக்கும் கழிவு. அடடா! பறக்கும் கழிவு உங்கள் மேலா? 1 அல்லது 6 போட்டால் மட்டுமே நகர முடியும்.