keezhae irangu rocky

கீழே இறங்கு ராக்கி!

ஒரு தேவாலயத்தின் மேற்கூரையில் சிக்கிக்கொண்டது ராக்கி. ரோஸின் குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தினரும் ராக்கியை எப்படியாவது கீழே கொண்டுவரப் பார்க்கிறார்கள். அவர்களால் ராக்கியைக் காப்பாற்ற முடியுமா?

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

“இந்த ஆட்டை யாருப்பா வெளியே விட்டது?” என்று இளநீர் விற்கும் ரமேஷ் கத்தினார்.

ஆம், மீண்டும் ராக்கி வம்பில் மாட்டிக்கொண்டது!

“ராக்கி! அங்கிருந்து கீழே இறங்கு” என்று கத்தினாள் ரோஸ்.

“ம்மே… முட்டாள் மனிதர்கள்!” என்று ராக்கி கத்தியது.

பின்னே, இத்தனை உயரமான தேவாலயக் கூரையிலிருந்து ராக்கியால் எப்படிக் கீழே குதிக்கமுடியும்! ராக்கி என்ன சூப்பர் ஆடா?

“ராக்கி எப்படி அங்கே போனது?” என்று கேட்டார் ரோஸின் அப்பா.

“அது அந்தக் கோழியை சாப்பிட முயற்சி செய்துகொண்டிருந்தது” என்றாள் ரோஸ்.

“அது கோழி இல்லை, சேவல்!” என்று திருத்தினார் அம்மா.

“ஆனால், அது உண்மையான சேவல்கூட இல்லை” என்றார் அப்பா.

“முதலில் ராக்கியை எப்படியாவது கீழே கொண்டுவரப் பார்க்கலாமா? ப்ளீஸ்!” என்று கெஞ்சினாள் ரோஸ்.

“எனக்கு ஒரு யோசனை!” என்றார் வாழை இலை விற்கும் ஜெயா.

ஆனால், ராக்கி வாழை இலைகளைத் தின்னப் பார்த்தது.

“என்னிடம் இன்னொரு நல்ல யோசனை இருக்கிறது” என்றார் கடைக்காரர் மணி.

ஆனால், ராக்கி பெட்டிகளையும் தின்னப் பார்த்தது.

“என்னிடம் இன்னொரு நல்ல யோசனை இருக்கிறது” என்றார் தச்சர் பீட்டர்.

“பார்த்து கவனமாக வா, ராக்கி!” என்று கத்தினாள் ரோஸ்.

சொய்ங்ங்!

ராக்கி சறுக்கியபடியே கீழே இறங்கியது.

“ராக்கி, திரும்பவும் அந்த சேவலை சாப்பிட முயற்சிக்காதே!” என்று சிரித்தாள் ரோஸ்.

ஆனால், அவளுடைய அம்மா, அப்பா, இளநீர் விற்பவர், வாழை இலை விற்பவர், கடைக்காரர், தச்சர் எல்லோரும் சொன்ன ஒரே விஷயம் என்ன தெரியுமா?

“ரோஸ், திரும்பவும் ராக்கியை இப்படி வெளியே விடாதே!”