kodaikala mathiyangal

கோடைக்கால மதியங்கள்

நீண்ட கோடைக்கால மதியவேளைகள் பிக்கூவுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், ஒருநாள் பிக்கூவுக்கு கதை படிக்க யாருமே இல்லை. அவனுடைய மதிய வேளைகளும் இருண்டன. பிக்கூவின் புத்தகங்கள் படிக்கப்படாமலே போய்விடுமா?

- Praba Ram,Sheela Preuitt

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பிக்கூவுக்கு கோடைக்கால மதியங்கள் என்றால் அவ்வளவு பிரியம். ஜன்னலோரத்தில் தூங்கும் பூனைகளுடன் விளையாடுவான். பால்கனியில் சிட்டுக்குருவிகளைத் துரத்துவான். மாமரத்து அணில்களுக்கு உணவளிப்பான். ஆனால், எல்லாவற்றையும் விட படுக்கையில் அம்மா படிக்கும் கதைகள் பிக்கூவுக்கு மிகவும் பிடிக்கும்.

வெயிலில் பூனைகள் பந்துபோல் சுருண்டு கொள்ளும். சிட்டுக்குருவிகள் கூடுகளுக்குள் ஒண்டிக்கொள்ளும். அணில்கள் இலைகளில் மறைந்துகொள்ளும். சிலநேரம், அம்மா கதை முடியும் முன்பே தூங்கிவிடுவார். ஆனால் பிக்கூவோ, அம்மாவின் கொர்ர்ர் க்ர்ர்ர் கொர்ர்ர் குறட்டையைக் கேட்டபடி விழித்துக் கொண்டிருப்பான்.

நிழல்கள் சுவரில் பயங்கரமான முகங்களைக் காட்டும்போது கண்களை மூடிக்கொள்வான்.

இவையெல்லாம், மாலையில் குளிர்க் காற்று மெல்ல வீசத்தொடங்கும் வரைதான்...

ஆனால், பிக்கூவிற்கு கோடைக்கால மாலைகளை

பிடிக்கவே பிடிக்காது. எப்போது தெரியுமா?

...மின்விளக்குகள் பட் என்று அணையும்போது.

அவன் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் கடுப்புடன் கணக்குகளைச் செய்வான். கொசுக்கள் குய்ங் குய்ங் குய்ங் என்று பாடும். பல்லிகள் டுட் டுட் டுட் என்று ஓடும். சிள்வண்டுகள் கர் கர் கர் என்று கூப்பிடும்.

சிலசமயம், பரந்த கருப்பு வானத்தைப் பார்க்க அவன் அப்பாவுடன் மொட்டை மாடிக்குச் செல்வான். மினுமினுக்கும் விண்மீன்களை எண்ணியபடி, அவற்றில் ஒளிந்திருக்கும் கரடியையும் நாயையும் அவர்கள் கண்டுபிடிப்பார்கள்.

மின்சாரம் திரும்ப வந்ததும் எல்லோரும் அப்பாடா என்றனர்.

திடீரென்று ஒருநாள் அம்மா போய்விட்டார்.

பள்ளியிலிருந்து திரும்பி வந்த பிக்கூ, “அம்மா எங்கே தெரியுமா?” என்று பூனைகளைக் கேட்டான். அவை அவனது கையை நக்கியபடி மென்மையாக உறுமின.

சிட்டுக்குருவிகளைக் கேட்டான். அவை கீச்சிட்டபடியே பறந்து போயின.

அணில்களைக் கேட்டான். அவை கத்தியபடியே ஓடிப்போயின.

பிக்கூ, “அம்மா எங்கே?” என்று அப்பாவைக் கேட்டான். அம்மா வெகுதூரம் சென்றிருக்கிறார், இப்போதைக்கு வரமாட்டார் என்று அப்பா சொன்னார்.

அம்மாவை எதிர்பார்த்து தினமும் காத்திருந்தான் பிக்கூ. மதியங்கள் முழுக்க பூனைகளுடனும் குருவிகளுடனும் அணில்களுடனும் விளையாடினான். ஆனால் யாரும் அவனுக்கு கதை படிக்கவில்லை. நிழல்கள் சுவரில் முகங்களைக் காட்டி பயமுறுத்தின.

இரவில், பரந்த கருப்பு வானத்தின் விண்மீன்களை எண்ணினான். நிழல்கள் அவனது கனவுகளில் சிலந்திகளையும் கரப்பான் பூச்சிகளையும் எறும்புகளையும் நிரப்பின.

ஒருநாள் மதியம் பிக்கூ ஒரு புத்தகத்தை எடுத்து அதில் ஒரு பக்கத்தைத் திருப்பினான்.

அட!

அரசர்களும் அரசிகளும் தேவதைகளும் சூனியக்காரிகளும்உயிர்பெற்று வந்தனர். சொற்கள்அவர்களை சிரிக்க வைத்தன, அழவைத்தன, ஆடிப்பாட வைத்தன.

அதிலிருந்து, தினம் தூங்கும் முன் பிக்கூ ஒரு புதுக் கதை படித்தான். பூனைகள் தங்களது பாதங்களை நக்கியபடி கதை கேட்க வந்தன. அவனது கனவுகள் மறுபடியும் புசுபுசு கரடிப் பொம்மைகளையும் குட்டி முயல்களையும் போல ஆறுதலாக இருந்தன. சிலசமயம், அம்மாவின் பிரகாசமான புன்னகையும் அவனது கனவுகளில் வெளிச்சமூட்டியது.