arrow_back

கூபே

மந்திரி தம்முடைய தனி உதவியாளரைக் கூப்பிட்டு மிகவும் அக்கறையாக விசாரித்தார்.

"முதல் வகுப்பில் கூபே கம்பார்ட்மெண்ட் கிடைத்தால் தான் இன்று ரயிலில் பயணம். இல்லையானால் இரயில் பயணத்தைக் கேன்ஸல் செய்துவிட்டு பிளேனில் டிக்கட் வாங்குங்கள்!"

"கண்டிப்பாக 'கூபே' கிடைத்துவிடும் சார்! எப்படியும் எமர்ஜன்ஸி கோட்டா ரிலீஸ் செய்யப் போகிறார்கள். இன்னிக்குக் 'கூபே'க்கு ஏகப்பட்ட டிமாண்ட் என்கிறார்கள். ஆனாலும் நமக்கு உறுதியாகக் கிடைக்கும்."

"கூபே கிடைக்காவிட்டால் பிரயாணமே இல்லை! ஞாபகமிருக்கட்டும்."

"கவலையே வேண்டாம்; பிரயாரிட்டி இருக்கிறது. கட்டாயம் கிடைத்துவிடும்."

"அவசரமாகப் பார்ப்பதற்கு ஏகப்பட்ட ஃபைல் எல்லாம் கட்டி வைத்திருக்கிறது. எல்லாமே அவசரம். பொது முதல் வகுப்புப் பெட்டியில் வைத்து ஃபைல் பார்க்க முடியாது. கூபேயானால் தூக்கம் வருகிற வரை உங்கள் உதவியோடு ஃபைல்களை 'டிஸ்போஸ்' செய்துவிட முடியும்."

"நீங்கள் வற்புறுத்திச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. பெண்டிங் பேப்பர்ஸ் எல்லாம் டிஸ்போஸ் ஆக வேண்டும் என்பதில் எனக்கே அதிக அக்கறைதான் சார்."

"சிரமமாயிருந்தால் நானே இரயில்வே டிவிஷனல் ஆபீஸருக்கோ சூப்பிரண்டெண்ட்டுக்கோ ஃபோன் செய்யத் தயார்."

"ஏற்கெனவே உங்கள் பெயரைச் சொல்லி அவர்களுக்கெல்லாம் நானே டெலிஃபோன் செய்தாயிற்று."

"சீஃப் செகரட்டரி மூலமாகவும் சொல்லலாம்."

"அவரும் பிரஷர் கொடுத்திருக்கிறார்."

"சுலபமா காலையிலே பிளேனில் போயிடலாம். ஓவர் நைட் ஜர்னி எல்லாம் நான் ரயிலிலேயே வைத்துக் கொள்வதற்கு ஒரே காரணம், பெண்டிங் ஃபைல் டிஸ்போஸ் செய்யலாம் என்பதுதான். வீட்டிலானாலும் செகரடேரியட்டிலானாலும் பார்க்க வருகிறவர்களின் கூட்டம் மொய்க்கிறது. ஒரு வேலை நடப்பதில்லை. பிளேனில் ஃபைல் பார்க்க முடியாது."

உதவியாளருக்கு மந்திரியின் சுபாவம் நன்கு தெரியும். முக்கியமான ஃபைல்களும், பெண்டிங் பேப்பர்களும் இரயில் பயணத்தின் போது தான் தீர்மானமாகும். பயணத்துக்கு எப்படியும் 'கூபே' கம்பார்ட்மெண்ட் ஏற்பாடு செய்தாக வேண்டும். இல்லாவிட்டால் தொலைந்தது. மந்திரி எதை வேண்டுமானாலும் தியாகம் செய்து விடுவார். இரயிலில் பயணம் செய்ய நேரும்போது 'கூபே'யை மட்டும் அவரால் தியாகம் செய்ய முடியாது; தியாகம் செய்ய விரும்பவும் மாட்டார்.

அன்றோ எக்கச்சக்கமான நிலைமை. கவர்ன்மெண்ட் கோட்டா ஏறக்குறைய தீர்ந்து போய் விட்டிருந்தது. அவரது அந்தஸ்திலுள்ள வேறு பல பிரமுகர்களும், வி.ஐ.பி.களும் அதே இரயிலில் பயணம் செய்தார்கள். மொத்த இரயிலிலும் கூபே இணைத்த பெட்டிகள் ஒன்றோ இரண்டோ தான் இருந்தன.

கூபே அலாட் ஆகவில்லை என்றால் இரயில்வே பிளாட்பாரத்திலேயே இரைந்து கூப்பாடு போட்டுவிட்டுப் பயணத்தை இரத்து செய்து வீடு திரும்பவும் அவர் தயங்க மாட்டார் என்பது பி.ஏ.க்கும் செக்யூரிட்டி அதிகாரிக்கும் நன்கு தெரியும். பலமுறை அப்படித்தான் நடந்திருக்கிறது.