koottu Kunchugal

கூட்டுக் குஞ்சுகள்

1979ம் ஆண்டு உலகச் சிறுவர் ஆண்டாகக் கொண்டாடப் பெற்றது. இந்த ஓராண்டுக் காலத்தில் உலகு தழுவிய வகையில் சிறுவர் நலன், கல்வி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட பல அமைப்புக்கள் உருவாயின. நம் நாட்டிலும் அரசைச் சார்ந்ததும், தனிப்பட்ட முறையிலும் சிறுவர் நல வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டுவது பற்றியும், சமுதாயத்தின் பின் தங்கிய பகுதிகளின் பிரச்சினைக்குரிய சிறுவர் நிலை பற்றியும் ஆராய்வதற்கான பல குழுக்கள் அமைந்தன. அத்தகைய குழுக்களில் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. இந்த வாய்ப்பு எனக்கு உழைக்கும் சிறுவர் தொடர்பான உண்மை நிலைகளைப் பரிச்சயம் செய்து கொள்ள உதவியது.

- ராஜம் கிருஷ்ணன்

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

பொருளடக்கம்

முன்னுரை

1979ம் ஆண்டு உலகச் சிறுவர் ஆண்டாகக் கொண்டாடப் பெற்றது. இந்த ஓராண்டுக் காலத்தில் உலகு தழுவிய வகையில் சிறுவர் நலன், கல்வி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட பல அமைப்புக்கள் உருவாயின. நம் நாட்டிலும் அரசைச் சார்ந்ததும், தனிப்பட்ட முறையிலும் சிறுவர் நல வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டுவது பற்றியும், சமுதாயத்தின் பின் தங்கிய பகுதிகளின் பிரச்சினைக்குரிய சிறுவர் நிலை பற்றியும் ஆராய்வதற்கான பல குழுக்கள் அமைந்தன. அத்தகைய குழுக்களில் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. இந்த வாய்ப்பு எனக்கு உழைக்கும் சிறுவர் தொடர்பான உண்மை நிலைகளைப் பரிச்சயம் செய்து கொள்ள உதவியது.

எனது மனதைப் பெருமளவில் பாதித்த பல விஷயங்களே நான் இந்த நாவலை எழுதத் தூண்டுகோலாக அமைந்தன எனலாம். ஒரு இலக்கியப் படைப்பாளருக்கு தன்னைச் சுற்றிய உலகில் நிகழும் நிகழ்ச்சிகளும் அது சம்பந்தமான பாதிப்புகளும் சிந்தையைத் தாக்கும் போது கற்பனையாக ஓர் மாதிரியைப் புனைந்து, கருத்துக்களை வெளியிடும் ஆர்வம் உந்தித் தள்ளுகிறது.

இந்தக் கதை முழுவதும், கற்பனையே. உண்மையான வாழ்வில் தனிப்பட்ட யாரையும் குறிக்கும் வகையில் பாத்திரங்கள் உருவாக்கப் பெறவில்லை. ஆயினும், இக்கற்பனைக் கதையின் வாயிலாக, எனது சிந்தனையைப் பாதித்த சில சமுதாய - தொழில் சம்பந்தப்பட்ட வாழ்வுப் பிரச்சனையைத் தொட்டுக் காட்டத் துணிந்திருக்கிறேன்.

இலக்கியப் படைப்புக்கள் வாசகர் மனங்களை ஈர்த்து ஒருமுகப்படுத்தி வாழ்வின் பிரச்சினைகளை எதிர்நோக்கும் துணிவையும், சுயநலமற்ற மனிதாபிமான நம்பிக்கையையும் ஊட்ட வல்லவையாக அமையும் போது தான் இலக்கியம் பயனுடையதாகிறது.

கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக எழுத்துத்துறை அமைக்கும் தடத்தில் ஓடி வந்திருந்தாலும், இன்றும் ஒவ்வொரு படைப்பிலும் ஈடுபடும் போதும் புதிய பரபரப்பும், புதிய அச்சமும், புதிய துணிவுமாக இயங்கும் அனுபவம் மாறாமலிருக்கிறது. அத்தகைய உணர்வுடன், இப்படைப்பு நூலாக உருவாகும் இந்நாளில் என் எழுத்தின்பால் அளப்பறிய ஆர்வமும் அபிமானமும் காட்டி என்னை ஊக்குவிக்கும் நண்பர் பலரையும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். எனது ஒவ்வொரு படைப்பையும் நல்ல முறையில் அச்சிட்டு நூலாக்கி வெளியிட்டு எனக்கு ஆதரவளிப்பதன் வாயிலாக வாசக உலகின் தொடர்பை என்றும் நவிலா இளமைப் பொலிவுடன் பேணி வர உதவும் தாகம் பதிப்பகத்தாருக்கு எனது மனமார்ந்த நன்றியுணர்வைப் புலப்படுத்திக் கொள்கிறேன். வாசகப் பெருமக்கள் எப்போதும் போல் இப்படைப்பினை ஏற்று, எனது கருத்தின் வெற்றி தோல்வியைக் கணிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

ராஜம் கிருஷ்ணன்

அத்தியாயம் - 1

மாலைக் கதிரவன் தன் பொன்மயக் கிரணங்களால் அந்தத் தகரக் கொட்டகைத் தொழிலகங்களை முழுக்காட்டியவாறு யாருக்காகவோ காத்துக் கிடப்பது போல் தங்கியிருக்கிறான். வெண்மைச் சூட்டை மாற்றிக் கொண்டு மஞ்சட் குளித்து, அதுவும் மாறப் பொன்னாடை பூண்டு அத்தொழிலக வாயிலுள் எட்டி எட்டிப் பார்க்கிறான். நிழல்கள் நீண்டு விழுவதை வேடிக்கைப் பார்ப்பதில் பொழுது கரைகிறது. காத்துக் காத்துச் சோர்ந்த விழிகள் சுருங்குவது போல, பொன்னும் முறுகுகிறது. கதிரவன் இன்னும் அத்தொழிலக வாயிலிலேயே கண்ணாக இருக்கிறான்.

அத்தொழிலகங்களுள், இந்த மண்ணின் தொழில் மய வளர்ச்சியில் பங்கு பெற்றிருக்கும் பிஞ்சு முகங்களைப் பார்க்கத்தான் கதிரவனுக்கு ஆவல் போலும். அதிகாலை உதயத்தில் சின்னப்பட்டி கிராமத்துக் குடிசைகளைக் கண் விழித்துப் பார்க்கையிலும் அந்த இளசுகளைக் காண்பதற்கில்லை. 'தொழிற்சாலை வண்டி வந்து போய்விட்டதே?' என்று பூமித்தாய் தன் மீது படிந்துவிட்ட சுவடுகளைக் காட்டிக் கொண்டு காட்சி தருவாள். இந்த மண்ணில் சூரியனுக்கு ஆண்டின் முக்காலே மூன்று வீசம் பகுதியும் செல்வாக்குப் பெற்றிருக்கும் பெருமை உண்டு. பூமித்தாயின் உள்ளீரத்தைக் கூடத் தன் கதிர்களால் உறிஞ்சிக் கொள்வான். 'இப்படி வறட்டி எடுத்து மக்களைப் பட்டினி போடுகிறாயே' என்று மண் அன்னை குற்றம் சாட்ட முடியாது.

இவன் புகழ் பாடிக் கொண்டு இயங்க, இந்த மண்ணில் தொழில் வர்க்கங்களைப் படைத்து விட்ட பெருமைக்கும் இவன் உரியவன் தான். ஈரம் கொண்டு தான் மக்கள் வண்மை காண முடியும் என்ற கூற்றை இங்கே இவன் பொய்யாக்கி விட்டான். ஈரமில்லாத வண்மையைப் படைத்துக் காட்டுவேன் என்று அறைகூவுவது போன்று இந்த வறண்ட கரிசல் மண்ணின் தொழில்களனைத்துக்கும் கதிரவன் தன் வெம்மையை, வன்மையை, வண்மைக் கொடையாக்கிக் கொண்டிருக்கிறான். இதனால் பூமியன்னை இங்கே எப்போதும் வெய்துயிர்த்துக் கொண்டிருக்கிறாள். பகலானாலும் இரவானாலும், புறச்சூடும் உட்சூடுமாகப் பொடிந்து பொடிந்து புழுதிப் படலமாய்ச் சாலைகள் விம்மித் திணறுகின்றன. மாலை மங்கிவிட்டால் சாலைகளின் நெருக்கடி சொல்லத்தரமன்று. தொழில் வண்மை விரிக்கும் காட்சிகள் மாலை நேரச் சந்தைகளிலும், சந்தடிகளிலும், ரூபாய் நோட்டுக்களின் புழக்கத்தில் உயிர்த்துவம் கொண்டு கலகலக்கும். நகரின் மையமான சாலை நெடுகிலும் வயிற்றுப்பசி அவிக்கும் தீனிக் கடைகள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்குகின்றன. வயிற்றுப் பசிக்கு மட்டும் தான் கடைகளா? புலன்களின் தேவைகளுக்கெல்லாம் தீனிகள் கிடைக்கும் இடங்கள் இந்த நெரிசலில் வண்மை கொழிக்கின்றன.

சினிமாக் கொட்டகைகளும் சிறு தீனிக் கடைகளும் பெற்றிருக்கும் முக்கியத்துவத்தைப் போல், கோயில் வாயில்களும் மக்களைக் கவர்ந்திழுக்கின்றன. அங்கும் வெளிச்சங்கள், ஒலிபெருக்கிப் பாடல் கவர்ச்சிகளுக்குப் பஞ்சமில்லை.

தொழில் நகரின் சாலைகளிலும் தெருக்களிலும் மக்கள் ஈக்கூட்டங்களாய் மொய்க்கத் தொடங்கிய பின்னரும், அத்தொழிலகத்திலுள்ள பிஞ்சு முகங்களைக் கதிரவனால் வெளியே காண இயலவில்லை. அவன் காத்துச் சலித்து மேற்கே மறைந்து போகிறான். மாசி மாதத்தின் பனி படரும் குளிர்ச்சியுடன் இருள் தனது துகிலை விரிக்கிறது.

தொழிலகத்துள் கட்டுக் கோப்பாய் இயங்கிய மனிதத் துளிகளனைத்தும் பகுதிபகுதியாகக் கழற்றி விட்ட இயந்திரங்கள் போன்று, தொழிலகத்துக்கு வெளியே தெரியத் தொடங்குகின்றன. வளைவு வாயிலில், 'இளைய சேரன் திப்பெட்டித் தொழிலகம்' என்ற எழுத்துக்களுக்கு வெளிச்சம் காட்டும் குழல் விளக்கின் முன் பறக்கும் பூச்சிகளைப் போல் பொட்டு பொடிகளாய்க் குழந்தைகள் வந்து நிற்கின்றனர். அரைச்சராய் சட்டைகள், அழுக்குக் கிழிசல்கள், தோள்பட்டை நழுவும் கவுன்கள், பாவாடைகள், பிரிந்து விழும் முடிகள், உலகத்துச் சிருஷ்டி இரகசியங்கள் புரிந்து விட்டதால் ஏற்பட்ட நாண முகிழ்ப்புக்களின் அடங்கி விட்ட சுவடில்லா முகங்கள், துடுக்குத்தனங்களை அமுக்கிக் கொண்டு அச்சம் மருவிக் கிடக்கும் சாயல்கள் என்று பளிச்சென்று தெரியாத பல வண்ணங்கள், சோர்வும் அலுப்புமான சரங்களில் கோர்க்கப்பட்ட உயிர்த்துவம் மங்கிய புள்ளிகள். கைகளை அலங்கரிக்கும் அலுமினியத் தூக்குகள்; சிறு தகர டப்பிகள். முன் விளக்கொளியை அவர்கள் மீது பாய்ச்சிக் கொண்டு பஸ் வருகிறது.

"ஏத்தா, இத பசு வந்திடிச்சி, ஒறங்காதே...!"

"வாங்க... மோட்டாரு வந்திடிச்சு...!"

சிறுவர் சிறுமியர் ஏறத் தயாராகின்றனர். இந்த உழைக்கும் பிஞ்சுகளுக்கும், இளசுகளுக்கும் பஸ்ஸில் ஏறிச் செல்வதும் திரும்புவதுமாகிய இரு பொழுதுகளே இவர்களுடைய வாழ்க்கையின் சொர்க்கானுபவ நேரங்கள். இந்தப் புது நகரின் முதுகெலும்பாய் ஓடும் பொதுச் சாலையில் வடக்கே எட்டுக்கல் தொலவில் உள்ள கூடமங்கலத்துக்கப்பால் மேற்கே இன்னும் மூன்று கல் தொலவுக்குப் பிரிந்து எங்கோ கரிசல் காட்டில் பதுங்கிக் கிடக்கும் சின்னப்பட்டியையும் பெரியபட்டியையும் அந்த ஊர்தி தொட்டிணைக்கிறது. சுற்று வட்ட ஊர்களிலுள்ள பெரிய தனக்காரரின் சற்றே வசதியுள்ள நிலங்களை அண்டியோ, வேறு வழி ஏதுமில்லாமலோ, கால் கஞ்சியும் முக்கால் பட்டினியுமாக முடங்கிய சிறுகுடி மக்களாகிய அவர்கள் மீது பெருங்கருணை கொண்ட தொழிலக அதிபர்கள் கப்பிச் சாலைகளால் அந்தப் பட்டி தொட்டிகளைப் பெரிய சாலையுடன் இணையச் செய்து விட்டார்கள். பஸ்... நீல வண்ண மயிலைப் போல் ஒளியை உமிழ்ந்து கொண்டு வருகிறது.

பெரியபட்டியைச் சேர்ந்த செயா, பாலமணி, சந்திரா இவர்கள் முதல் உரிமைப் பெற்றவர்களைப் போல ஏறுகின்றனர். சின்னப்பட்டிச் சிறிசுகளில் சிலரும் உள்ளே அடித்துப் பிடித்துக் கொண்டு ஏற முயலுகின்றனர். 'சாதிகள் இல்லையடி பாப்பா. குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்' என்ற வரிகளைப் பற்றி இவர்களுக்கென்ன தெரியும்? அரசு இந்த நோக்கில் கம்பம் கம்பமாக, சுவர் சுவராக, கண்களும் மூக்குமாகப் பொம்மை போட்டு, தீண்டாமை கொடியது என்று விளம்பரம் செய்திருப்பதைப் பற்றியும் தான் இவர்கள் கண்டார்களா?

"ஏண்டி புழுக்கச்சி? மொழங்கையால இடிக்கிற" என்று பாலமணி அழகாயியின் ஏழு வயசுத் தங்கச்சியின் முகத்தில் தனது அலுமினியத் தூக்கினால் மொத்துகிறாள். அந்த மொத்தலில், பித்தளை மூக்குத்தியின் அடித்திருகு பிஞ்சு நாசியின் இடைச்சுவரைக் கூழாக்கிவிடக் குருதி கொப்பளிக்கிறது. அப்போது, சின்னப்பட்டிக்காரனான பன்னிரண்டு பிராயத்துக் காத்தமுத்து, விடுவிடென்று உள்ளே சென்று 'பண்டல்' அடுக்குவதைச் சரிபார்த்துக் கொண்டிருக்கும் மாரிசாமியிடம் இக்கொடுமைக்குக் குரல் கொடுக்கிறான்.

"அண்ணாச்சி! ஓடி வாங்க! பெரியபட்டிப் புள்ள சின்னப்பட்டி லட்சுமி மூக்க ஒடச்சிடிச்சி! நெத்தம் கொட்டுது!"

மாரிசாமி ஓடி வரு முன் அந்த வண்டியுடன் செல்லும் இரத்தினம் அங்கே நியாயம் கேட்க வந்து விடுகிறான்.

"அண்ணாச்சி, பாருங்க! மொழங்கையால் வேணுன்னு இடிக்கிறா!"

"....."

"நாங்க ஒண்ணும் இடிக்கல. அவ சீல முந்தி அதுவா வுளுந்திச்சி, தள்ளிவிட்டே..." என்று அழகாயி கீச்சுக் குரலில் பதில் கொடுக்கிறாள், பாலமணிக்கு.

காத்தமுத்து விடவில்லை.

"அதுக்குன்னு டிப்பன் பாக்ஸால மொத்திச்சி... பாருங்க நத்தம்..." ஏழுவயசு லச்சுமி மூக்கு வலிக்குக் குரலை வீசி அழக்கூடச் சக்தியற்று, கண்ணீரும் கம்பலையுமாகக் காட்சியளிக்கிறது.

மாரிசாமி, ஓரெட்டு முன்வந்து, "அண்ணாச்சி, பெரியபட்டிப் புள்ளகள நீங்க கொஞ்சம் அடக்கி வய்க்கிறது நல்லது!" என்று கூறுகிறான். மினுமினுச் சட்டையும் கைக்கடியாரமுமாகப் பளபளக்கும் இரத்தினம் மாரிசாமியை உறுத்துப் பார்க்கிறான். "பண்டல் ரூமிலிருந்தவ, இங்க எதுக்கு ஓடி வார மாரிசாமி! இந்த வெவகாரத்துக்கு நீ வர வேண்டியது அநாவசியம்!"

மாரிசாமியும் இரத்தினத்தைப் போன்ற நிலையில் ஒரு தொழிலாளிதான். 'கைபார்க்கும்' கணக்கப்பிள்ளை என்ற நிலையில் இருப்பவன். அவன் பிரிவிலுள்ள சிறுவர் சிறுமியரிடம் வேலை வாங்கி, கூலிக்கணக்குப் போட்டு, அன்றாட உற்பத்தியில் அவன் பங்கைக் கணக்காக்க வேண்டும். இரத்தினம் 'ஏசன்ட்' என்ற பெயரைப் பெற்று, இந்த இளந் தொழிலாளிகளைக் கூட்டி வந்து கொண்டு விடுவதுடன், தொழிலகத்தின் ஒரு பிரிவிலும் மேற்பார்வை செய்கிறான். இவன் மானேசர் சாமியப்பனுக்கு மிக வேண்டிய, நெருக்கமான ஆள். மானேசர், முதலாளியின் குடும்பத்துக்கு மிக வேண்டிய வட்டத்தில் ஒருவர். எனவே இரத்தினத்தின் செல்வாக்கு தொழிலகத்தில் பணிபுரியும் யாவரும் அறிந்ததாகும். மாரிசாமிக்கு மீசை துடிக்கிறது. உதட்டைக் கடித்துக் கொண்டு நிற்கிறான்.

"என்னடி தவராறு? இந்தச் சின்னபட்டிச் செறுக்கியள, பெரியபட்டிக்காரிய உக்கார்ந்த பெறகு போங்கன்னு சொன்னா கேக்குறதில்ல? என்ன அடாவடித்தனம்?" என்று சாடுகிறான் இரத்தினம்.

"வேணுன்னே வந்து இடிக்கிறா அண்ணாச்சி! பறப்பன்னி!" காத்தமுத்து குறுக்கே பாய்கிறான். "ஏ புள்ள ரொம்பத் துள்ளாத! ஆரடி பன்னிண்ணு சொல்ற! நீதா... பன்னி!"

இரத்தினம் இப்போது கையிலுள்ள குச்சியடுக்கும் சட்டத்திலுள்ள கட்டையினால் அவன் முதுகிலும் தோள்களிலும் போடுகிறான்.

"யார்ரா புழுக்கப்பய அவங்களுக்கு எடயில வர?" என்று அசிங்கமாக வசை பொழிகிறான்.

காத்தமுத்து ஊளையிடும் குரலில் அழுகிறான்; திருப்பி வசை பொழிகிறான்.

மாரிசாமி அவனருகில் வந்து தட்டிக் கொடுக்கிறான்.

"அழுவாத, சின்னப்பட்டிக்காரங்கல்லாம் நீளத்து சீட்டில உக்காருங்கன்னு சொல்லிருக்கையில ஏன்ல எடயில வார?"

"மாரிசாமி, நீ எடயில வராம போ இப்ப!"

இரத்தினம் அடுத்து ஓர் அதட்டல் போடுகிறான் "எல்லாம் ஒளுங்கா அவியவிய எடத்தில போயி உக்காருங்க!"

சிறிது நேரத்தில் பஸ் நிரம்பி விடுகிறது. மணி எட்டடிக்கப் போகிறது. இரவு பெரியப்பட்டியிலேயே இரத்தினம் தங்கிவிடுவான். ஓட்டிவரும் தங்கவேலு புது நகரத்தான் என்றாலும், அதிகாலையில் மூன்றரை மணிக்கே பஸ்ஸை எடுக்க வேண்டியிருப்பதால், அவனும் அங்கே தங்கிக் கொள்வதுண்டு. புது நகரத்தின் எல்லை கடக்கும் வரையிலும் பெரிய சாலையில் நீலக்குழல் விளக்குகள், 'ஆ'வென்று வாயைப் பிளந்து கொண்டிருக்கும் தொழிற்சாலைகள், காவற்காரர்கள், வளைவு எழுத்துக்கள் என்ற பழக்கமான காட்சிகள் தாம். ஓரத்தில் முகத்தில் குளிர்ந்த காற்று வந்து படிவது ஒன்று தான் எரிச்சலுக்கு இதமாக இருக்கிறது. ஒட்டிய வயிறுகளும், நாவுகளும் நெஞ்சங்களும் தான் அதிகம். எனவே, பலருக்கும் கண்களும் ஒட்டிக் கொள்கின்றன.

'சர்வீஸ்' பஸ்ஸானால், வழி நெடுகிலும் ஊர்ப் பெயரைச் சொல்லிக் கொண்டு பயணிகள் இறங்குவார்கள்.

சேவித்தான் பட்டி, கிள்ளியங்காவாய், பாண்டியன் கொடை,... என்று ஊர்களைக் கடந்து செல்கையில் காத்தமுத்து, குமுறிக் கொந்தளிக்கும் குமரப்பருவப் பொங்கெழுச்சியுடன் துடித்துக் கொண்டிருக்கிறான். இரத்தினத்தையும் பெரியபட்டிக்காரிகளான சில திமிர் பிடித்த குமரிப் பெண்களையும் அமுக்கிக் குப்புற வீழ்த்தி விட வேண்டும் போல் கைகள் பரபரக்கின்றன.

கூடமங்கலத்துக்கு முன்பான ராசாத்தியோடையின் குறுக்கே இறங்கி பஸ் ஏறும் போது, கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் சிறுமியர் குலுங்கிக் கண் விழிக்கத் தூக்கிப் போடுகிறது. குடல் வாய்க்கு வந்துவிடுவது போன்ற இக்குலுக்களுக்கு, லச்சுமி சிரிக்கும். இன்று சிரிக்க முடியவில்லை. ராசாத்தியோடை, அங்கே சாலைக்கருகே இணைபோல் வரும் அரசன் ஆற்றிலே கலந்து விடும். ஆறும் ஓடையும் கலப்பதற்குச் சாட்சி போல, அங்கே சாமி கோயிலும் இருக்கிறது. இந்த மாதத்தில் இங்கு திருவிழா வரும். ஆற்றிலும், ஓடையிலும் எப்போதோ ஐப்பசி கார்த்திகை மாதங்களில் எங்கோ மலை மீது மழை பொழிந்ததற்கு அடையாளமாகத் தண்ணீர் குப்புற அடித்துக் கொண்டு வரும். மற்ற நாட்களில் இப்படிப் பஸ் இறங்கி ஏறிச் சர்க்கஸ் வித்தை பயிற்றுவித்துக் கொண்டு வரும்.

வறண்ட கரிசல் காட்டுப் பொட்டலின் குடிசை ஊர்களுக்கிடையே சுதந்திர இந்தியாவின் மாண்புகளை அங்க அங்கமாகக் காட்டிக் கொண்டு குழல் விளக்கு ஒளியாய்ச் சிரிக்கும் கூடமங்கலம் வந்துவிட்டது. பகலில் சர்வீஸ் பஸ்களில் செல்லும் பயணியர், குடும்ப நலத் திட்டத்தைக் கைக்கொள்ள வேண்டி விழையும் தாய் சேய் நல விடுதி, தீவிர குடிநீர்த் திட்டம் என்று அறிவித்துக் கொண்டு காட்சி தரும் புள்ளி விவரங்கள் அடங்கிய பலகை ஆகிய அனைத்தையும் காண்பர். ஆனால், தீப்பெட்டித் தொழிலகச் சிறுவர் சிறுமியருக்கு, இங்கே ஊரைக்கடந்து குறுக்கே செல்லும் கப்பிச் சாலையின் ஓர்புறம் அமைந்திருக்கும் ஆறுமுகத்தின் தேநீர்க்கடை தான் நன்றாகத் தெரியும். அங்கு பஸ்ஸை நிறுத்திவிட்டு, தங்கவேலுவும் இரத்தினமும் இறங்கிச் செல்கின்றனர். இரத்தினம் கீழிறங்குமுன் கதவை அழுத்தச் சாத்திவிட்டு, "எல்லாம் மூச்சுப் பிரியாம உக்காந்திருக்கணும்!" என்று ஓர் ஆணையையும் விதித்துவிட்டுப் போகிறான்.

மூச்சுப் பிரியாமல் எப்படி அமர்ந்திருக்க முடியும்? பாலமணியும் சந்திராவும் டீக்கடை முன்பு தட்டியிலிருக்கும் சினிமா விளம்பரத்தை இனம் கண்டு பேசத் தொடங்குகின்றனர்.

காத்தமுத்து, நேராக முன்னேறிச் சென்று, பாலமணியின் சடைப்பின்னலை அடிமுடியிலிருந்து பற்றி இழுக்கிறான்.

"யாரடி பன்னின்னே?..." என்று தொடங்கி அவன் உலுக்க முற்படுவது, திடீர்த் தாக்குதலாக இருக்கிறது.

"ஐயோ, ஐயோ" என்று பாலமணி கூக்குரலிட்டுக் காத்தமுத்துவின் தாய் தலைமுறைகளை 'புழுத்த நாய் குறுக்கே' செல்லா வசைகள் கொண்டு ஏச, பஸ் மொத்தமும் "அண்ணாச்சி அண்ணாச்சி!" என்று அபயக் குரல் கொடுக்கிறது.

அத்தியாயம் - 2

பெரியபட்டிப் பஞ்சாயத்து ரேடியோ ஓய்ந்து விட்டது போலிருக்கிறது; சத்தமே கேட்கவில்லை. பெரியபட்டிக்கும் சின்னப்பட்டிக்கும் இடையே இரண்டு கல் தொலைவு தானிருக்கும். தீப்பெட்டித் தொழிற்சாலை வண்டி வருவதற்கென்று மூன்றாண்டுகளுக்கு முன்போட்ட கப்பிச்சாலை அது. அதற்கு முன்பு குண்டும் குழியுமாக ஒரு வண்டிப் பாதைதான் உண்டு. ஆனால் கூடமங்கலத்துக்கும் பெரியபட்டிக்கும் இடையே இணைப்புப் பாதை வந்து வெகு நாட்களாகிவிட்டன. பெரியபட்டியில் தான் புது நகரத்து வண்மைத் தொழில்களான வண்ண அச்சகங்கள், பட்டாசு, வெடி உற்பத்திச் சாலைகள், தீப்பெட்டித் தொழிற்சாலைகள் ஆகிய பல நிறுவனங்களுக்குரியதோர் குடும்பத்தின் மூதாதையர் வீடு இருக்கிறது. எனவே கார் வந்து செல்ல நல்ல பாதை பல ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டது. மேலும், சொந்த ஊரில் அவர்கள் நிறுவிய உயர்நிலைப் பள்ளியும் இடம் பெற்றிருக்கிறது. குல தேவதையான அம்மன் கோயிலும், கறுப்பண்ணசாமி கோயிலும், வழிபாடுகளுடன் சிறந்து விளங்குகின்றன. சின்னப்பட்டி மக்கள் முக்கால் வாசிப் பேரும் பெரியபட்டிக்காரர்களையும் கூடமங்கலத்துப் பெரியதனக்காரர்களையும் அண்டி வாழும் அரிசன மக்கள். பெரியபட்டிப் பாதை தொடங்குமிடத்தில் சற்றே உட்தள்ளிக் காட்சியளிக்கும் நாலைந்து ஓட்டு வீடுகளைத் தவிர, ஏனைய வீடுகள் அனைத்தும் சின்னப்பட்டியில் எளிய குடில்களே.

குட்டிச் சுவர்களும் பிரிந்த கூரைகளும் கவிழ்ந்த கூடைகள் போன்ற ஆட்டுக் குடில்களும் இடை இடையே முட்செடிகளும் குப்பை கழிவு மேடுகளுமான சின்னப்பட்டியில் சுமார் அறுபது குடும்பங்கள் இடம் பெற்றிருக்கின்றன. மழை விழுந்து மண் பசைக்கும் நாட்களில் தான் காட்டு வேலை; கஞ்சிக்குத் தானியம் கிடைக்கும். ஏனைய நாட்களில் வேலிக்கருவை வெட்டிச் சுமந்தோ, ஆடுகள் மேய்த்தோ, பிழைப்பதைத் தவிர வருவாய்க்கு வழியில்லை. நாலைந்தாண்டுகளாக, இளஞ்சேரன் தீப்பெட்டித் தொழிற்சாலை வண்டி வந்து, இங்கே மண்ணை அளைந்து கொண்டும், சண்டை போட்டுக் கொண்டும் பசி பசி என்று பிடுங்கி எடுத்துக் கொண்டுமிருந்த சிறுவர் சிறுமியரைக் கொண்டு செல்கிறது. வாரா வாரம் சனிக்கிழமைகளில், காசைக் கண்களால் பார்க்கின்றனர்; ஆசைகள் குமிழியிட்டுக் கொப்புளிக்கின்றன.

இடுப்புப்பிள்ளை, கைப்பிள்ளை, வயிற்றுப்பிள்ளை சகிதமாகப் பல பெண்கள் தொழிற்சாலை வண்டியை எதிர்பார்த்துப் பாதையோரத்து வேல மரத்தின் கீழ் நிற்கின்றனர். அங்கிருந்து நேராகக் கூடமங்கலம் செல்லும் ஒற்றைத் தடத்தில் முரட்டு மிதியடிகளின் ஓசை கேட்க, யாரேனும் வருவதைத் தவிர, வண்டி வரும் அறிகுறியே காணவில்லை.

“எந் நேரமாச்சி! உருமத்துல உசுப்பிக் கூட்டிப் போறா. இன்னுங் காணாம்...” என்று இடுப்புப் பிள்ளைக்காரி ஒருத்தி மங்கலான அரை நிலவில் இன்னொருத்தியை இனங் கண்டவாறு அலுத்துக் கொள்கிறாள்.

“ஆரது சுரும்பாயியா?... மம்முட்டியான் பெரியபட்டில நிப்பானில்ல? அவங் கூட்டியாந்திடுவா!”

சந்தனக் குடும்பனின் மச்சான் மம்முட்டியான் சின்னப்பட்டிப் பிள்ளைகளைக் காலையில் எழுப்பி வண்டிக்குக் கொண்டு வரும் ஆள். இந்தப் பணிக்கு அவனுக்கு முப்பது ரூபாய் சம்பளம். மாலையில் அவன் பிள்ளைகளைக் கூட்டி வர வேண்டும் என்ற விதிமுறை எல்லாம் கிடையாது. ஆனால் மம்முட்டியானுக்குப் பெரியபட்டியின் கோயில் அரசமரத்தின் முன் நின்று, வண்டி வந்ததும் அதில் ஏறிக் கொண்டு வருவதில் ஒரு ஆர்வம். சின்னப்பட்டியில் இறங்கிப் பிள்ளைகளை அவரவர் வீட்டில் சேர்ப்பான்.

“பசு நிண்ணு போயிடிச்சோ என்னமோ, ஒக்கிட்டுப் போயி! காசு குடுத்து சர்விசு பஸ்ஸில அனுப்பிச்சி வச்சா, அங்கிட்டிருந்து நடந்தில்ல வரணும்?...” என்று கவலைப்படுகிறாள் ராமக்கா.

“நேத்தே எங்க புள்ள சிலும்பிச்சி. அந்த ஏசன்டு முட்டில அடிச்சிப் போட்டா, நாம் போவ மாட்டேன்னா... அதாரு? மம்புட்டியாம் போல இருக்கு?” நிலவொளியில் தொலைவில் தெரியும் உருவத்தைக் கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டு பார்க்கின்றனர்.

மம்முட்டியானும் அவனைச் சுற்றியும் முன்னும் பின்னுமாகக் காணப்படும் நிழலுருவங்களும் முன்னேறி வருகின்றனர். தூக்குப் பாத்திரங்களின் கிலுங்கொலிகள் கேட்கின்றன.

“பேராச்சி! லச்சுமி! அழவாயி? பச்ச...” குரல்கள் பேரார்வமாக ஒலிக்கின்றன.

“பஸ்ஸு கோயிலாண்ட வந்து நின்னு போச்சி... பெரிய வட்டி புள்ளங்களோட இதுங்களையும் எறக்கி விட்டு போட்டா... எல்லா அவியவிய பிள்ளியளப் பாத்துப் பத்திட்டுப் போங்க!”

“இத பாரு! ஆருது சிட்டப் புத்தகம் கீளவுளுந்திருச்சி?” குடும்பன் எடுத்துக் கொடுக்கிறான்.

“இத, இந்தக்களுததா. துப்பில்லாத புள்ள, ஒரு சாமானம் பத்திரம் கிடையாது? ந்தா, தூங்கி வளியிற? நட...” என்று இடுப்புப் பிள்ளைக்காரி ராமக்கா தன் எட்டு வயசுப் பேராச்சியை இழுத்துச் செல்கிறாள்.

எல்லோரும் கலையும் அந்த நேரத்தில், சதுரக் கள்ளிப் புதருக்கப்பாலிருந்து ஒரு தனிக்குரல் ஒலிக்கிறது.

“காத்தமுத்து...! காத்தமுத்து வரக் காணம்?”

மம்முட்டியான் சிறிது திகைக்கிறான். “எங்க அந்தப்பய வண்டியில வரக் காணம்?”

“காங்கல...? காலம உசிப்பிட்டுப் போனபய எங்கிட்டுப் போயிருப்பே? பஸ்ஸிலதான வருவா?”

யாரும் அவள் கேள்விக்கு அங்கு பதில் கூறுவாரில்லை. பாதையிலே பார்த்துக் கொண்டு அந்தத் தாய் தீனமாக நிற்கிறாள். பாதையில் ஈ குஞ்சு கூடத் தெரியாமல் விறிச்சிட்டுக் கிடக்கிறது. சந்தனக் குடும்பனுக்கு வாய்த்திருக்கும் மனைவி கைப்பிள்ளையும் வயிற்றுப் பிள்ளையுமாகக் குடும்பத்து மக்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்குச் சளைக்காதவள். அழவாயிதான் மூத்தவ. அவள் வயசுக்கு வந்து ஒரு வருசமாகிறது. தீப்பெட்டித் தொழிலகத்து வண்டி அங்கே வரத் தொடங்கிய நாட்களாக அவள் வேலைக்குச் செல்கிறாள். சட்டத்தில் வெற்றுக் குச்சியடுக்கிக் கொண்டிருந்தவள், இப்போது சில மாதங்களாகப் பெட்டிக்குள் மருந்து முக்கிய குச்சிகளை அடைத்து மூடும் பிரிவில் குரோசுக்கு இருபது பைசா என்று கூலி பெறுகிறாள். அழவாயிக்கு அடுத்த பையன் சுப்பிரமணி; உள்ளூர் பஞ்சாயத்துத் தொடக்கப் பள்ளியில் மூன்று வருடங்களாக இரண்டாவதில் படித்துக் கொண்டிருக்கிறான். சுப்பிரமணிக்குப் பிறகு ஒரு பிள்ளை இறந்து போய்விட்டது. அடுத்து லச்சுமி, தீப்பெட்டி 'ஆபீசில்' குச்சியடுக்கப் போகிறாள். ஒரு கட்டை (சட்டம்)க்குப் பதின்மூன்று பைசாக் கூலி. ஒரு நாளைக்கு பத்துக்கட்டைதான் அடுக்குவாள். லச்சுமிக்கு அடுத்தவன் முருகன், அவனும் பள்ளிக்கூடம் போக முரண்டு பிடிக்கிறான். தீப்பெட்டி அலுவலக பஸ்ஸில் போக ஆசைப்படுகிறான். முருகனுக்கு கீழ் கறுப்பி, ராமாயி, இருவர் இருக்கின்றனர். இப்போது நிறைமாதமாக இருக்கிறாள். அழகாயி உள்ளே வரும் போதே “காத்தமுத்துவ ஏசன்டு நல்லா அடிச்சிட்டா. பாலமணியல்ல, பெரியபட்டிப்புள்ள? அது லச்சுமிய ஏனத்தால மொத்திச்சு. தபாரு, மூக்குல...!” என்கிறாள்.

முணுக்முணுக்கென்றெரியும் விளக்கொளியில் மூக்குத் தண்டில் சிவப்பும் கறுப்புமாக அடைத்திருக்கிறது.

“காத்தமுத்து ரகள பண்ணினா, பாலமணி சடயத் தொட்டிளுத்தா. ஏசன்டு வந்து அடிக்கவும் எறங்கி ஓடிட்டா!”

“அந்தப்பய ஓரிடத்தில் ஒளுங்கா வேலை செய்யிறதில்லை. மின்ன புதுநகரத்துக்கு ஓடிப்போயி ரங்கராஜி தீப்பெட்டி ஆபீசில் சேந்தா. அங்கிட்டிருந்து இங்ஙன ஓடி வந்தா. அடுவான்ஸ் வாங்கிட்டு மூணு மாசம் ஆவல, மறுக்க ஓடிட்டா, நாளாக்கி ஏசன்டு பைய வரலன்னா மென்னில கைய வய்ப்பா!” என்று மம்முட்டியான் தனது பிரச்னையை நினைத்து புலம்புகிறான்.

“பெரிய வட்டிப் புள்ளிங்க நெதம் இந்த வாக்குல சண்ட போடுதுங்க! கைபட்டா ஒட்டிக்கிடுமா?” என்று வருந்துகிறாள் தாய் மன்னம்மா. வீட்டுக்குள் சுப்பிரமணி, கருப்பி, ராமாயி எல்லோரும் உறங்கிவிட்டனர்.

“எல்லாம் சோறு தின்னிட்டுப் படுத்து ஒறங்குங்க!” என்று கூறும் மம்முட்டியான் சோற்றுக்குக் குந்துகிறான். இவன் தான் அழவாயியைக் கட்டப் போகிறான்.

மன்னம்மா பானையில் சூடாறாமல் இருக்கும் சோற்றை வட்டியில் எடுத்து வந்து அவர்களுக்கு முன் வைக்கிறாள். அந்தச் சிம்னியின் மஞ்சள் ஒளியில் அரிசிச் சோறு, வெள்ளை வெளேரென்று இருக்கிறது. புது நகரத்துக் கடையில் வாங்கி வந்த உயர்ந்த ரக அரிசி, கிலோ இரண்டரை ரூபாய். பருப்பும் புளியும் மிளகாயும் கூட்டி, கடுகும் பூண்டும் அரைத்துச் சேர்த்த ரசத்தை அந்தச் சோற்றில் ஊற்றிக் கலக்கிறாள். லச்சுமி தூங்கி வழிகிறது.

“ஏவுள்ள, என்னடி அதுக்குள்ளாற ஒறக்கம்?...” என்று அவளை மம்முட்டியான் உலுக்கி விடுகிறான். அலுமினியம் ஏனங்களில் வைத்த சோற்றை அழகாயியும் மம்முட்டியானும் உண்ணுகையில் தூக்குப் பாத்திரத்தைக் கழுவி மறுநாளைக்குச் சோறு போட்டு வைக்க மன்னம்மா திறந்து பார்க்கிறாள். அடியில் கொழ கொழவென்று புளித்த சோறு...

“ஏண்டி? சோறு அப்பிடியே இருக்கு?”

“தே, இவதே. கொய கொயன்னிருக்குன்னு வச்சிட்டா!” என்று தங்கச்சியைக் குற்றம் சாட்டுகிறாள் அழகாயி.

மன்னம்மா மோந்து பார்க்கிறாள். “நெல்லாதான் இருக்கு? ரெண்டரை ரூபா குடுத்து அரிசி வாங்குறம். வாரா வாரம் அரிசிக்கே இருபத்தஞ்சி ரூவாயாகுது. வார வட்டிக் கடன் எடுத்திருக்கிறம். அவ இப்பிடி சண்டித்தனம் பண்றாகாலமேயும் இவள உசுப்பி மோட்டாருக்குக் கூட்டிப் போகயில அப்பிடியே எந்திரிச்சி அனுப்பிடறம். ஒடம்புல என்ன வலமிருக்கும்? சவண்டு வுழுறா!” அப்பன் அப்போது, மாடப் புரையில் வைத்திருக்கும் இரு சிட்டைப் புத்தகங்களை எடுத்துப் பிரித்துப் பார்க்கிறான். அவனுக்கும் எண்ணோ எழுத்தோ புரியாது. முக்கால்வாசிச் சிறுவர் சிறுமியருக்கும் புரியாது. ஒவ்வொரு குரோசு, அல்லது குச்சி அடுக்கானால், சட்டம் ஒன்றுக்கு இவ்வளவு காசு என்று கணக்கு. அந்தக் கணக்குக்கு அலுமினியம் வில்லைகளைக் கணக்குப்பிள்ளை கொடுப்பான். அதுதான் சில்லு. அதை வைத்துக் கொள்வதற்குரிய சிறு தகரப் பெட்டிதான் ‘சில்லுப் பெட்டி!’ பின்னர், நாளின் இறுதியில் ‘சில்லு’களைக் கணக்காக்கி சிறு புத்தகமாகிய சிட்டையில் பதிந்து விடுவான். அந்தக் கணக்குக்கு சனிக்கிழமை தோறும் கூலி கிடைக்கும்.

சிட்டையைப் பிரித்து வைத்துக் கொண்டு சந்தனக் குடும்பன், “எம்புட்டுக் கட்ட அடுக்கினா அவ?” என்று விசாரிக்கிறான்.

“எட்டுக்கட்டதா அடுக்கிச்சின்னு, பேராச்சி சொல்லிச்சி. பேராச்சி பதினஞ்சு கட்ட அடுக்கிச்சாம்!”

“அது சொடியான புள்ள, இதுக்கு ரொம்பத் திமிரு. பராக்குப் பார்த்திட்டுக் குந்திருக்கும். கணக்கவுள்ள கண்டிப்பாயிருக்க மாட்டா. மாரிசாமில்ல கணக்கவுள்ள?...”

“ஆமா, அந்தண்ணாச்சி சும்மா சத்தம் போடுவா, அடிக்கமாட்டா.”

“ஐயோ, எங்கவக்கம்... அங்ஙன இங்கன திரும்பினாப் போச்சி” என்று அழகாயி விவரிக்கிறாள்.

“நீ எம்புட்டுக் குரோசு போட்ட?”

“பதினேழு...”

“ஏ? நேத்து பதினெட்டுப் போட்ட, இன்னிக்கி ஒண்ணு கொறஞ்சி போச்சு?”

அழகாயி பதிலேதும் கூறவில்லை. அவளுக்கும் அப்போது தான் எண்ணிக்கை பாடமாயிருக்கிறது. அவள் பள்ளிக்கூடமே சென்றிருக்கவில்லை. தினம் போல் விரைவாகத்தான் குச்சி அடைத்திருக்கிறாள். எப்படிக் குறைவாயிற்றென்று புரியவில்லை.

லச்சுமி சோற்றை விரலால் அளைகிறது.

“ஏண்டி சோத்த வச்சிட்டுக் கொழப்புற?...” என்று வயிற்றுச் சுமையோடு சோற்றை எடுத்து அவள் கையில் கொடுக்கிறாள் மன்னம்மா.

மறு கையைக் கழுத்துப் பக்கம் வைத்துப் பார்க்கிறாள்.

“இதுக்கு ஒடம்பு காங்கயா இருக்கு, சோறுண்டால்ல குளுமையா இருக்கும்?”

ஒரு வழியாகச் சோறுண்டதும் கழுவிக் கொள்ளும் அவசரத்தோடு, மூலையில் சாக்குச் சுருணையில் போய் முடங்கிக் கொள்கிறது, லச்சுமி. அழகாயிக்கும் அலுப்பாகத்தானிருக்கிறது. மம்முட்டியான் பீடி புகைத்துக் கொண்டு, தனது தடித்த போர்வை, தடி செருப்புடன் வெளியே திண்ணைக்குச் செல்கிறான். கீழே மூங்கிற் கூடைக் குடிலுக்குள் ஆடும் இரு குட்டிகளும் அடைந்திருக்கின்றன. திண்ணை ஓரம் சிவப்பு நாய் படுத்திருக்கிறது. தானியம் தீட்டும் குந்தாணி ஓர் புறம் வீற்றிருக்கிறது.

திடீரென்று நாய் குரைப்புச் சத்தம் அந்த வீட்டுக்கு வரும் சந்தில் கேட்கிறது. டார்ச் விளக்கை வீசிக் கொண்டு பள்ளிக்கூட வாத்தியார் வருகிறார். “என்னல, மம்முட்டியா? காத்தமுத்துப் பயலக் காணம், அவாத்தா அழுவுறா...?”

“ஆமா வாத்தியாரையா... அவெ பஸ்ஸில பெரியவட்டிப் புள்ளங்ககூட தடித்தனமா நடந்திட்டானாம். அந்தப் பயலுக்குக் கொஞ்சம் கூட வணக்கமில்ல. இவம் போயி அதுஞ் சடயப் புடிச்சி இழுத்து உலுக்கினானாம்...”

“அது சரி, அவெ ஏ அப்பிடிச் செஞ்சான்னு கேக்கவாணா? அதுக்குன்னு முட்டியப் பேத்து எறக்கி வுட்டுடறதா?”

“அப்பிடி எல்லாமில்ல வாத்தியாரையா? டீக்குடிக்கப் போயிருந்தவ வரான்னதும் பைய எறங்கி இருட்டில ஓடிட்டானாம்! எங்கே போவா? நாளக்கித் தன்னால வருவா!”

“சரி, சரி... ஒளுங்கா படிச்சிட்டிருந்த பயல, படிப்ப நிறுத்திப் போட்டு பஸ் வருதுன்னு அனுப்பிச்சில்ல...?” என்று அந்தத் தாயைக் கேட்டுக் கொண்டு திரும்பிச் செல்கிறார் வாத்தியார்.

மம்முட்டியான் பீடிச் சுகத்தில் தனது பிரச்னையை மறக்க முயலுகிறான்.

அத்தியாயம் - 3

பெரியபட்டியிலிருந்து வரும் சாலையின் இடதுபுறத்தில் உட்தள்ளி முதலில் தெரியும் ஓட்டுக் கட்டிடம் தான் பஞ்சாயத்துத் துவக்கப் பள்ளி. அதற்கு முன் துப்புரவாகக் காணப்படும் இடம் விளையாட்டு மைதானம். பள்ளியின் ஓர் பக்கத்தில் அடிகுழாய் இருக்கிறது.

பள்ளியை அடுத்து, ஒரு மொட்டைப் புளிய மரம். ஆட்டுக்குக் குழை ஒடித்தே அந்த இளமரம் மொட்டையாகி விட்டது. அந்த மரத்துக்கு நேராக நாலைந்து ஓட்டு வீடுகள் பகலில் சாலையில் வருபவர் கண்களுக்குத் தெரியும். அந்த வீடுகள் பகலில் சாலையில் வருபவர் கண்களுக்குத் தெரியும். அந்த வீடுகள் வரிசையாகத் தெருவென்ற ஒழுங்கைத் தோற்றுவிக்கும் வண்ணம் அமைந்திருக்கவில்லை. நாலைந்து வீடுகளில் ஒன்று பாழடைந்து, பன்றியும், நாயும், சலவைக்காரச் சிங்காரத்தின் கழுதையும் ஒண்டியிருக்க இடமளிக்கிறது. வாத்தியார் சிவகணேசனின் வீடு ஒன்று. அஞ்சல் அலுவலகத்து ரன்னர் பராங்குச நாயுடு ஒரு வீட்டில் குடியிருக்கிறார். இன்னொரு வீடுதான் சாலையிலிருந்தும், பள்ளியிலிருந்தும் பார்க்கப் பளிச்சென்று இருக்கிறது. வீடு நாகரிகமான பக்கத்துக்குப் பார்வையாக இருந்தாலும், இதன் வாயில் அரிசன மக்களின் குடிசைகளைப் பார்த்த வண்ணமே அமைந்திருக்கிறது. பழைய நாளைய ஓட்டுவில்லைக் கூரையமைந்த திண்ணைகள் இரண்டும் சுத்தமாக விளங்குவது தெரிய, முன் வாயிலில் ஒரு மின்விளக்கு எரிகிறது.

திண்ணையொன்றில் அந்த இரவு நேரத்தில் யாருக்காகவோ காத்திருப்பது போல் வெள்ளைச் சீலையும், அள்ளிச் செருகிய நரை கண்ட முடியும், ஒரு காலத்தில் பாம்படம் பூண்டதை விளக்கும் காதுகளுமாக ஒரு மூதாட்டி உட்கார்ந்திருக்கிறாள்.

உட்புறம் தெரியும் நிலைப்படியில், அந்த இரவுச் சூழலின் கனவுக் காட்சி போல் விஜயம் நிற்கிறாள். பழைய நாளைய குறுகிய வாசற்படி தலையில் இடிக்கும் என்பதை எடுத்துக் காட்டிக் கொண்டு சற்றே முன் தள்ளி நிற்கும் அவள், ஆச்சிக்கு இரண்டாம் தலைமுறைக்காரி என்பதும் தெரிகிறது. கத்தரிப்பூ வண்ணத்தில் அகலமாகப் பூக்கரை போட்ட நூல் சேலை உடுத்து, அதற்கிசைந்த எடுப்பான சோளியும் அணிந்து இருக்கும் அவளும் வாயிலில் யாரையோ எதிர்பார்த்திருப்பதாகவே தெரிகிறது.

“ஐயாம்மா, இன்னிக்கு மாட்ச் ஃபாக்டரி வண்டி வந்திச்சோ?...”

“எல்லாம் ரோட்டில நின்னிட்டுக் கெடந்திச்சிங்க. வந்திருக்கும், நாம உள்ளாற கவனிக்காம இருந்திருப்பம்...” என்று திரும்பிப் பார்க்கும் முதியவள், “அலமேலு கனகாம்பரம் கொண்டாந்து குடுத்தா, அத்த வச்சிக்கல?” என்று கேட்கிறாள்.

“மல்லிதா வாசனையா வச்சிருக்கிறேனே, அது போதும் ஐயாம்மா!” என்று தலையில் தொங்க விட்டாற் போல் சூடிக் கொண்டிருக்கும் மல்லிகையிலிருந்து ஒன்றை எடுத்து முகர்ந்து பார்க்கிறாள். பெரிய கண்கள், எடுப்பான நாசி, நெற்றி சற்றே குறுகலாக இருப்பது தெரியாமல் கூந்தலைத் தூக்கி வாரிப் பிடரியில் சுருளாகப் புரளும்படி தழையத் தழையப் பின்னல் போட்டிருக்கிறாள். காதுகளில் சிறு தங்கத்தோடும், கழுத்தில் மெல்லிய இழையும், ஒற்றை வளையலும் தான் பொன்னாபரணங்கள்.

“ஏன் நிக்கிற? உள்ளாற நாக்காலி இருக்குதே, கொண்டாந்து போட்டிட்டு உக்காந்துக்க...”

அப்போது, வாத்தியார் சிவகணேசன் அந்தப் பக்கம் வருகிறார்.

பெரியபட்டிப் பள்ளியை ஒட்டி அரிசன மாணவர் விடுதி இருக்கிறது. இரவு நேரங்களில் வாத்தியார் விடுதிப் பிள்ளைகளுக்குப் பாடம் கற்பித்து விட்டு, அந்நேரத்தில் திரும்பி வருவார். ஆச்சி வெளியில் உட்கார்ந்திருந்தால் ஏதேனும் பேசாமல் போக மாட்டார்.

“வணக்கம், விஜிம்மா! நீங்க வந்திருக்கிறீங்கன்னு சாமிநாதன் சொன்னான். பெரியபட்டிக்கு வந்திருக்கிறதா நினைச்சேன். வாங்க! வாங்க!” என்று வரவேற்புரை கூறுகிறார்.

“மாட்ச் வொர்க்ஸ் பஸ் வந்தாச்சா?”

“அத்தையேன் கேக்கறீங்க, விஜிம்மா? நீங்க முதலாளி வீட்டம்மாவாப் போயிட்டீங்க, ஆனா நமக்கு வேண்டியவங்க. மூணரைக்குக் காலம வந்து இதுங்களைக் கூட்டிப் போறான். ஏழரை எட்டரையாகுது திரும்பி வர. இன்னிக்கு ஒம்பதும் ஆயிப் போச்சு. பெரியபட்டி வரயிலும் வந்திருக்கு. பிறகு என்னமோ கெட்டுப் போச்சாம். மம்முட்டியான் தானிருக்கிறானே, பத்திக்கிட்டு வந்திட்டான்.”

“காலம மூணரைக்கா வருவாங்க?”

“என்ன விஜிம்மா, தெரியாதது போலக் கேக்குறிங்களே? எட்டி இருக்கிற ஊருங்களுக்கு மொதல்ல வண்டி வந்திடும். இப்பிடியே முதல்ல கொண்டாந்து விடுகிறதாத்தா சொல்றா. ஆனா, இருட்டுக்கு முன்ன ஒரு நாள் கூடப் புள்ளங்க வந்ததா நினைப்பு இல்ல...”

“முன்ன நா லீவுக்கு வந்திருக்கயில பஸ் வரும் போகும் பார்த்திருக்கிறேன். ஆனா, இவ்வளவுக்குக் கவனிச்சதில்ல. மூணரை மணிக்குன்னா, வேலை எப்ப ஆரம்பிக்கிறாங்க?...”

“விஜிம்மா. இதெல்லா உங்க மாப்பிளகிட்டக் கேக்கணும்னு நா தயவா தெரிவிச்சிக்கிறேன். அஞ்சு மணிக்கு ஃபாக்டரில வேலை ஆரம்பிச்சிடுவா. நாலரைக்கேன்னும் சொல்றா... டிமான்ட் அதிகம் இருக்கிறப்ப கூடுதலா வேலை வாங்குறா. சாயங்காலம் ஆறு மணி வரையிலும் வேலன்னு வச்சாக்கூடக் கணக்குப் பாருங்க!”

“பதிமூன்று, பதிநாலு மணி நேர வேலையா?...”

“அதுதா. மாப்பிள்ளையும் பைக்கில வந்ததாச் சொன்னானே சாமிநாதன்? பெரியபட்டியில இருக்கிறாரா?”

“இவ சைவிள எடுத்திட்டு டுர்ருனு வந்திட்டா. மாப்பிள இங்க வந்து கூட்டிட்டுப் போறன்னு சொன்னாராம். அதான் பாத்திட்டு நிக்கிறம். பால் வாங்கி வச்சி, பகடா போட்டு வச்சி...” விஜிக்கு முகம் சிவப்பேறுவது தெரிகிறது.

“என்ன ஐயாம்மா, இதெல்லாம் போய்ச் சொல்லிட்டு?”

“என்ன சொல்லிப்பிட்டேன் இப்ப, ஊரு ஒலவத்தில இல்லாததை?” என்று பாட்டி முக்காலும் போய் எஞ்சியிருக்கும் ஒன்றிரண்டு பற்கள் தெரியச் சிரிக்கிறாள்.

மம்முட்டியான் இங்கே விளக்கெரிவது கண்டு வந்து ஒதுங்கி நிற்கிறான். பட்டணத்திலிருந்து சிற்றப்பன் மக்களுடன் விஜி கோடை விடுமுறைக்கு வரும்போதெல்லாம் நடந்து ஆற்றுக்கரை வரையிலும் போவார்கள். இவர்களுக்குச் சொந்தமாகப் பத்து சென்டு நிலம் உண்டு. மழை விழுந்தால் மம்முட்டியானும் மாமனும் தான் இதில் பாடுபட்டு விதைப்பார்கள். விஜியம்மா கபடம் தெரியாமல் அவர்களுடன் ஊர்க்கதை பேசுவாள். அவனும் மற்ற விடலைகளும் ‘வெறுவு’ வேட்டைக்குச் செல்வதைப் பற்றிய கதைகளைச் சுவாரசியமாகக் கேட்பாள். இந்த விஜியம்மா மலையவ்வளவு உயரத்துக்குப் போய், அவர்களுக்குப் படியளக்கும் தீப்பெட்டி ஆபீசு முதலாளியின் பெண்சாதியாகி விட்டாள்...

“மம்முட்டியான் தானே? எப்படி இருக்கிற?” என்று விசாரிக்கிறாள் விஜி.

“அவனுக்கென்ன? புள்ளங்கள உசுப்பிவிட நாற்பது ரூபாய் சம்பளம். அழவாயியக் கட்டப் போறான்!”

“யாரு, இவக்கா மக, சின்னதா இருக்குமே!”

“சின்னதென்ன? சமஞ்சி ஒரு வருசமாச்சில்ல? மூணு வருசமாத் தீப்பெட்டி ஆபீசுக்குப் போறாளே?”

“இந்த ஊரிலேந்து எத்தினி பேர் போறாங்க?” என்று விஜி வினவுகிறாள்.

“இந்த ஊரு உருப்படி எல்லாம் இளஞ்சேரன் மாட்ச் வொர்க்ஸுக்குத்தான் போகுதுங்க; முப்பதுக்குக் குறையாது. ஏண்டா, காத்தமுத்துப்பய வரலியே?”

“இல்லீங்க வாத்தியாரையா. கவலிப்பாயிருக்கு. மாடசாமி டைவர் மக சடயப் புடிச்சி இளுத்தானாம். ஏசன்டு அடிச்சிட்டான்னு அளவாயி, இன்னும் புள்ளங்கல்லாம் சொல்லுதுங்க...” என்று அவன் விவரிக்கிறான்.

“ஆரு மாடசாமி, பெரிய வீட்டில் பெரிய இன்ஜின் வண்டி ஓட்டுறான், அவன் மவளா?” என்று கேட்கிறாள் பாட்டி.

“ஆமாங்க. வெளுப்பா, துடிப்பா ஒரு புள்ள...”

“அவங்கல்லாமா தீப்பெட்டி ஆபீசுக்குப் புள்ளைய அனுப்பறாங்க?”

வாத்தியார் குறுக்கிடுகிறார். “அட, துட்டு வந்தா ஆருதா விடுவா? இரத்தினம் பய, பெரியபட்டி முச்சூடும் குடும்பம் குடும்பமா வளச்சிட்டு, பொம்பிளப் புள்ளியள குச்சியடய்க்க, லேபில் ஒட்டன்னு கூட்டுட்டுப் போறா. வயசுப் புள்ளிகள... என்னயென்னவோதாஞ் சொல்லிக்கிறா!”

“ஆமா. சமஞ்சிட்டா வீட்ட விட்டு அந்தக் காலத்துல பொம்பிளப் புள்ளிய தலை நீட்டுமா? இப்ப ஆணும் பெண்ணும் பாடுபட்டு உழச்சாலும், அகாத வெல விக்கிது? அதுல மானம், அச்சம், ஈனாயம், ஈனாயமில்லாதது எல்லாம் அவிஞ்சி போவுது.”

பாட்டியின் பேச்சுக்கு வாத்தியார் ஒத்துப் போகிறார்.

“ரொம்ப வாஸ்தவமான பேச்சு ஆச்சிம்மா! இந்தத் தொழிலுக்கு வர்ற முன்னல்லாம் பட்டினி கெடந்தோம். இப்ப அரவயித்துக்கஞ்சி குடிக்கிறமின்னு இந்த மொத்த ஊரிலும் பேசிக்கிறானுவ. பசி இருந்திச்சி; வேல இல்ல; சரி, ஒப்புக்கிறேன். ஆனா இப்ப நாலு வருசமா இந்த ஊரு அசலூருக்கள்ளாமிருந்து மொத்தப் பிள்ளைங்களும் தொழிலுக்குப் போவுதுங்க. என்ன முன்னேறிடிச்சி? என்ன முன்னேறியிருக்காங்கன்னு கேக்குறேன்?”

வாத்தியார் விஜிக்குப் புதியவரல்ல. வெண்மை மாறாத வேட்டியும் அரைக்கைச் சட்டையும் மேல் ஒரு துண்டுமாக, ஒல்லியும் சுமாரான உயரமுமாக அவரை அந்த ஊரில் நினைவு தெரிந்த நாளாகப் பார்க்கிறான். சின்னப்பட்டியில் பள்ளி துவங்கப் பெற்ற போது, அவரும் அவருடைய இளம் மனைவியுமாக அங்கே ஆசிரிய தம்பதியாக வந்தார்களாம். அவருடைய மனைவி பார்வதி வெளுப்பாக நிறைய முடியுடன் அழகாக, புளுப்போல் இருப்பாளென்று ஐயாம்மா சொல்வாள். வந்த சுருக்கில் கருவுண்டாகி, பிள்ளை பெற முடியாமல் மருத்துவ வசதி இல்லாமல் இறந்து போனாளாம். அதற்குப் பிறகு இங்கு ஆசிரியர்களாக வந்தவர்கள்தாம் அருள்தாசும், அவன் மனைவியும். அவர்கள் பெரிய பட்டியில் வீடு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிவகணபதி சாரை, இது வரையிலும் அறிந்திராததொரு கோணத்தில் பார்க்கிறாள் விஜி.

கேள்வியைக் கேட்டுவிட்டு அவரே பதிலையும் கூறிக் கொள்கிறார். “என்ன முன்னேத்தம்? அதே அறியாமை, அதே அடிதடி, சண்டைச் சச்சரவு. தெனமும் பெரியப்பட்டிப் புள்ளங்க, சின்னப்பட்டிப் புள்ளங்க முந்திய இடிச்சாங்க, முழங்கைய இடிச்சாங்கன்னு பஸ்ஸில சண்ட போட்டு அடிச்சிப் போடுதுங்க. இங்க யாருன்னாலும் இதப்பத்திக் கேக்கிறாங்களா? ஆறுமுகத்தின் டீக்கடயில தனிக்கிளாசு வச்சிருக்கிறான். மம்முட்டியான் போனா, தானே எடுத்துக் கழுவி டீ வாங்கிக் குடிச்சிட்டுக் கழுவி வய்க்கிறான்... உண்டா இல்லையா கேளுங்க?” விஜி விழிகள் நிலைக்கப் பார்க்கிறாள்.

“யாரு, நம்ம ஆறுமுகத்தின் டீக்கடையிலா? இப்பவும் அப்பா அங்கே தங்குவாரு, அங்கேந்து சைகிள் எடுத்திட்டு முன்னெல்லாம் நான் வருவேனே? இதைக் கவனிச்சதில்ல?”

“நீங்க இதுக்காவன்னாலும் போயிப் பாருங்க!”

ஆச்சிக்கு அந்தப் பேச்சுப் பிடிக்கவில்லை.

“வாத்தியாரு இத்தயெல்லாம் எதுக்கு இப்பச் சொல்றிய? ஆதிநாள்ளேந்து காந்தி சொன்னாருன்னு எல்லாரும் அரிசனம் அரிசனம்னுதா தூக்கி வச்சிருக்கா. அததுக்கு ரத்தத்திலே வரணும். நீங்க ஆயிரம் கரடியாக கத்தினாலும் அதெல்லாம் வராது.” பாட்டி இவ்வாறு தீர்க்குமுன் நாய் குலைப்பது கேட்கிறது. இடுப்பில் பிள்ளையுடன் சடச்சிதான்.

“வாத்தியாரையா, ஆச்சிம்மா, எம் புள்ளயக் கொல செஞ்சி போட்டாங்களோன்னு பயமாயிருக்கு... ஏசன்டு மண்டயில அடிச்சான்னு அந்தவுள்ள பச்ச சொல்லுது...” என்று அழுகிறாள்... வாத்தியாருக்குக் கோபம் வருகிறது.

“ஏ அழுவுற? அளுதிட்டாப்பல எல்லாம் ஆயிப் போகுமா? ஒளுங்கா படிச்சிட்டிருந்த பையன். நல்லாப் படிப்பு வந்திட்டிருந்திச்சி. பெரியபட்டி ஸ்கூல்ல சேத்து விடறேன். புஸ்தகம், சாப்பாடு எல்லாம் சர்க்காரு ஏத்துக்குதுன்னு கெஞ்சினே, கேட்டியா? இப்ப எட்டாவது முடிச்சிருப்பா! இந்த மாட்ச் வொர்க் ஏசன்டுகிட்ட அட்வான்ஸ் பணத்தை வாங்கிட்டு, புத்தி சொல்ல வந்த என்ன வெரட்டியடிச்சீங்க, வெத நெல்லுன்னு பாராம அட்வான்சு குடுக்கிறவனுக்கு வித்துப் போடுறிய. அவன் பொறி பொறிக்கிறா; அவுலிடிக்கிறா. இப்ப புள்ள புள்ளன்னு மாயுற! எல்லாம் வருவா. இவனவிட்டா இன்னொரு தீப்பெட்டி ஆபீசு பஸ்ஸில புடிச்சிப் போட்டுப்பா. நா வரேன் ஆச்சி, விஜிம்மா, வாரன்...” வாத்தியார் சொல்லிவிட்டுப் போகிறார்.

“சரி, மம்முட்டியா எதுக்கு நிக்கிற? காலம புள்ளியள உசுப்பிப் போகணுமில்ல போ!...”

விஜி உள்ளே சென்று தான் கழற்றி வைத்திருக்கும் கடிகாரத்தில் மணி பார்க்கிறாள்.

மணி பத்தே கால்.

பாட்டி வாசல் விளக்கை அணைத்துக் கதவையும் சாத்துகிறாள்.

அத்தியாயம் - 4

“மாப்பிள வரக்காணம். ஆம்பிள வாரமுன்னுவா மறந்திடுவா. நீ அங்க பெரியபட்டி வீட்டில அத்தகிட்டச் சொல்லிட்டு வந்திருக்கயில்ல?” என்று பாட்டி கவலையுடன் விசாரிக்கிறாள்.

“அங்கிருந்துதான் சைக்கிள் எடுத்திட்டு வந்தேன். மருதை வந்து சைக்கிளை திருப்பி எடுத்திட்டுப் போயிருக்கிறான். அவுங்களுக்குத் தெரியும் நான் இங்கே வருவேன்னு. ஆனா எனக்குத் தெரியும், இன்னிக்கு ராத்திரி வரமாட்டாருன்னு...” விஜி எங்கோ சுவரைப் பார்த்துக் கொண்டு பேசுகிறாள். பெரிய இடத்தில் திருமணமாகி முதன்முதலாகத் தனியாகப் பேரப் பெண் வந்திருக்கிறாள். தீபாவளிக்கு முன்புதான் கல்யாணம் நடந்திருக்கிறது. அதற்குப் பிறகு புதுநகரத்துப் பங்களாவிலிருந்து காரில் பெரியபட்டிக்கு அவர்கள் சாமி கும்பிடுவதற்கும் பெரியவரான பாட்டனாரைப் பார்ப்பதற்கும் இரண்டு மூன்று முறைகள் வந்திருக்கிறார்கள். ஒரே ஒரு தடவை இங்கும் எட்டிப் பார்த்துவிட்டுப் போனாள். இரண்டு நிமிடங்கள் கூடத் தங்கவில்லை. காப்பி குடிக்கவுமில்லை. காரில் திரும்பி விட்டார்கள். பாட்டிக்கு அதுவே கொள்ளாத பெருமையாக இருந்தது. இப்போது... விஜியின் முகத்தில் உற்சாகமோ, பூரிப்போ தெரியவில்லை; கருமை நிழலாடுகிறது.

“ஏண்டி, இருளாச் சமஞ்சிட்ட? ஆம்பிள, ஆயிரம் இருக்கும், வர முடியாம போயிருக்கும். காலம காரெடுத்திட்டோ, பேக்கெடுத்திட்டோ வருவா!” என்று ஆறுதல் கூறுகிறாள்.

விஜிக்குப் பாட்டியின் அறியாமையை நினைத்து இரக்கம் தோன்றுகிறது. தாலத்தில் சோறு போட்டுப் பாலை ஊற்றுகிறாள். முரமுரப்பாக இருக்கும் பகோடாவை அவளுக்கு வைத்துவிட்டுத் தானும் முன் பல்லால் அதை மெதுவாகக் கடித்துக் கொறிக்கிறாள்.

விஜி எதுவும் பேசாமல் சாப்பிட்டுவிட்டுத் தட்டைக் கழுவி வைக்கிறாள்.

பனைநார்க் கட்டிலில் சமக்காளத்தையும் தலையணையையும் பேத்திக்கு வைத்துவிட்டு, தான் ஒரு பாயையும் சீலையையும் கீழே போட்டுக் கொள்கிறாள்.

விளக்கை அணைத்ததும் கொசுக்கள் பாடுகின்றன. விஜிக்கு முகத்தை மூடிக் கொள்ளப் பிடிக்காது. முகத்தில் கொசு வந்து குந்துகிறது. போர்வையால் மூடிக் கொள்வதும் திறந்து கொண்டு கொசு அடிப்பதுமாக அவள் சிலும்புவது கண்டு பாட்டி, “ஒறக்கமில்லாம கொசுச் சனியம் தொல்ல குடுக்கும்... மாப்பிள வந்திருந்தா பைக்கில வச்சிட்டுக் கூட்டிப் போயிருப்பா. முன்னெல்லாம் ஐயம்மா வீட்டுக்கு வந்தா மத்தியானமெல்லாம் ஆடீட்டு வந்து சோறு தின்னதும் படுத்து ஒறங்கிடுவிய” என்று நினைப்பூட்டுகிறாள்.

விஜிக்கு அந்த நினைப்பே இப்போது சங்கடமாக இருக்கிறது. “ஐயாம்மா, பெரியபட்டில இருக்கும் கெழவனாருக்கு நம்ம ஐயாப்பாவைத் தெரியுமா?”

“கெழவனாரா அவுரு. உம் மாப்பிளக்கி அப்பாவோட சித்தப்பா அவுரு. ஒனக்கும் தாத்தா மொறையாகணும். அவுரோட தாதாரிக்கார மகதா உங்கம்மா...” என்று அறிவுறுத்துகிறாள் பாட்டி.

“அந்த ஒறமொறயெல்லாம் ஆருக்குத் தெரியும்? நா இத்தினி வருசமா இங்க வந்திட்டுப் போயிருக்கிற, அந்த அத்தையோ, தாத்தாவோ ஆரும் என்னையோ அப்பாவையோ இல்லாட்ட தங்கச்சியையோ சொந்தமாக் கூப்பிட்டுப் பேசலயே ஐயாம்மா!”

“சொந்த பந்தமெல்லாம் போயி வந்து கொண்டாடிட்டாத்தான் இருக்கும். உன் அம்மா இருக்கையிலேயே அப்பன் கத்திரிச்சிட்டான் அப்பவே. ஆனா, அதுதான் இப்ப வட்டி போட்டாப்பில, அந்த வீட்டுப் பையனக்குத்தான் வாக்கப்பட்டிருக்கே? இப்ப இங்கவுட சொந்தம் அங்கதான வருது? காருல வரிய, புசுக்குனு வந்திட்டுப் போயிடுறிய!” பாட்டிக்குக் குரலில் மகிழ்ச்சியும் பெருமையும் பொங்கி வழிகிறது.

விஜி சிறிது நேரம் எதுவும் பேசவில்லை.

“ஏண்டி, உம் மாமியா நாத்தூனெல்லாம் எப்படி இருக்கா? தவிசுப்பிள்ள, எடுபிடி ஆளுவ, தோட்டக்கார எல்லாம் இருக்கா, கும்புக்குள்ளாற கொடைக்கானல் போல குளுகுளுப்பா இருக்க மிசின் வச்சிருக்கா, வேனலொண்ணும் தெரியாதுன்னெல்லாம் பஞ்சநத மாமன் வந்து எல்லாம் சொன்னப்ப மனசு நெறஞ்சிருந்திச்சி. உங்கப்பன்தா தலெலெழுத்து நல்லால்லாம எப்படியோ இருக்கிறான். ரெண்டும் பொண்ணா இருக்குதுங்களே. எப்படிக் காசு பணம் செலவு பண்ணப்போறா? பி.ஏ.எம்.ஏ.ன்னு படிக்கவுட்டிருக்கிறனேன்னு கவலப்பட்டேன். தெய்வத்தையும், சாமியயும் மனசோடு வேண்டாத நாளில்ல. ஏதோ கண் தொறந்து பாத்தாரு. இல்லாட்டி, உங்கப்பன் இருக்கிற இருப்புக்கு நினைச்சிக் கூட பார்க்க முடியுமா?”

விஜிக்கு இந்தப் பேச்சே பிடிக்கவில்லை.

“நாங்கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லலியே? ஐயாப்பா பெரியபட்டிலதான கட வச்சிருந்தான்னு சொல்லுவிய? அப்பவே அவுங்கல்லாம் அதா அந்தத் தாத்தா வீட்டில பணக்காரங்கதானா?”

“ஏது? நம்மப் போலக்கூட இல்ல. கூடமங்கலத்தில சின்னக்கடை வச்சிருந்தா. உங்கப்பாவ நா பெத்திருந்தப்ப, அரசனாத்துல வெள்ளம் ஓடிச்சி பாரு! அந்த வருசம் இந்த ஊருல்ல... மொத்த ஊரிலும் வெள்ளக்காடு, காவேரிப்பாலமெல்லாம் ஒடஞ்சி போச்சின்னா... சின்னப்பட்டியில இந்தக் குடிசயெல்லாம் பொறவு வந்திச்சு. இந்த நாலஞ்சி வீடுங்க... ஒண்ணு எங்க மாமனாருக்குத் தம்பி குடும்பம். அவுகல்லாம் அப்பவே மதுர போயி, பிள்ளங்கல்லாம் படிச்சி எங்கெங்கோ வேலயாப் போயிட்டா! பாளடஞ்சி கெடக்கு பாரு, அது பஞ்சநாத மாமனுக்கு அக்கா வீடு. அவுங்களும் ஊர் விட்டுப் போயிட்டா. அப்பல்லாம் பெரியபட்டிச் செவங் கோயில்ல நாம கூட சாமி கும்பிடப் போகக் கூடாது. திருவிழாவுக்குப் படி குடுக்கணும். ஆனா உள்ளாற போகக் கூடாது. மீறினா நாடாருக்கும் தேவமாருக்கும் வெட்டுப்பழி குத்துப்பழி. மேல் சாதிக்காரங்கன்னு தேவமார் தங்களச் சொல்லிக்கிடுவா. அப்பல்லாம் ஒங்க ஐயாப்பாவும், பெரியபட்டித் தாத்தாவும் ஒரே பிடியா நின்னாங்க. அடிதடி லகளயாச்சு. இவுங்க கடயில சாமானம் வாங்கக் கூடாதுன்னு ஊர்க்கட்டுக் கொண்டாந்தா. அப்பதா பிழைக்க வழியில்லாம ரொம்பக் கஷ்டம். ஐயாப்பா போறப்ப உங்கப்பாவுக்கப்ப பதினஞ்சு வயசு. மதுரையில சித்தப்பாரு வீட்டிலேந்து படிச்சா. மகமை பண்டுல ஒத்தாசை செஞ்சா. ஆனா, பி.ஏ. படிக்கறப்ப காந்தி கட்சில சேந்திட்டான். செயிலுக்குப் போனான். உன் மாமனும் அப்ப கூட்டாளி. மதுரயில தான் அவுங்களுக்கு வெல்லமண்டி வியாபாரம். தங்கச்சிய அந்த நெருக்கத்தில் கட்டிக் குடுத்தான். அப்பவே அவ அப்பா எறந்து போயிட்டாரு... சொதந்தரம் வந்த பெறகு மாப்பிள காங்கிரசில பெரிய ஆளா பதவிக்கு வருவான்னு நெனச்சா. இவந்தலையெழுத்து வேரயாயிடிச்சி. முன்னயும் செயில் பின்னயும் செயில்னு வேற கட்சியாப் போயிட்டா. நீ பொறந்தப்புறந்தா பிரஸ்ஸில வேல பாக்குறன்னு புது நகரத்துக்கு வந்து குடும்பம் வச்சான்...”

“அம்மா பிறந்த வீட்டுக்கே போக மாட்டாங்களாமே?”

“ஆமா... மகா ரோசக்காரி. பிறந்தவன் மாப்பிளய ஏதோ பொறவா ஏசுனான்னு திரும்பிக் கூடப் பாக்கலியே? இப்பவும் என்னென்னமோ, தீப்பெட்டி ஆபீசுக பயராபீசுக வச்சிருக்கிறாங்க. புது நத்தம் ரோடில இப்பக்கூட குச்சி சீவுற பாட்டரி ஒண்ணு புதுசா வந்திருக்கு. உன் மாமனுடைய மக வயித்துப் பேரன்னு ஒரு சிறு பயல உங்க கலியாணத்தின் போது கூட்டியாந்துக் காட்டினான். அப்ப உங்கப்பாவுக்கும் ஒரு ஃபாட்டரி வச்சித்தாரமின்னா உங்க மாமன். அப்பவே அவனுக்கு சக்கர வியாதி, உடம்பு முடியாம இருந்தான். இங்க இந்த வீட்டில் எங்கிட்ட வந்து சொன்னான். ‘இதெல்லாம் எதுக்கு சின்னம்மா, அவனுக்கு ஒரு பெண் குழந்தையிருக்கு; அவன் புத்திக்கும் சத்திக்கும் எப்பிடியோ இருக்கலாமே! நா எந்தங்கச்சி நல்லபடியா வாழணுமின்னு பாக்குறேன். வீட்டுக்குப் போனா அருக்கோ மேப்பொட்டி, அடிப்பொட்டி ஒட்டிக் குடுக்கிறா. இவனே தொழில் தொடங்கினா நல்லபடியா இருக்கலாம். நீங்க புத்தி சொல்லுங்க’ன்னு முதநா வந்து சொல்லிட்டுப் போனா. அடுத்தாப்பலெ சீனாக்காரன் சண்டை வந்து, இவனப் புடிச்சிட்டுப் போயிட்டா!” என்று பாட்டி மூச்சுவிட நிறுத்துகிறாள்.

“எங்கப்பா மேல கொற சொல்றதுன்னா எப்பவும் உங்களுக்குப் பிடிக்கும். ஆனா ஐயாம்மா, அவுரப் பார்க்காம நீங்க ஒரு மாசம் கூட இருக்கமாட்டீங்க! அதுனாலதா நீங்க இந்த ஊரவுட்டு நகராம இருக்கிறீங்க!”

“ஆமா, இவ ஒருத்தன் தான் பஷ்டாப் படிச்சிட்டு வந்தான். அந்தக் காலத்துல எம்புட்டோ மேன்மையாயிருக்கப் போறம்னு நினைச்சேன். உங்க சித்தப்பன் ரெண்டு பேரும் பத்துக்கூடத் தாண்டல; எப்பிடியோ புழச்சிக்கிறம்னு மொதல்ல சங்கரலிங்கம் போனான். பிறகு கட வய்க்கிறன்னதும், உங்கம்மாதான் கழுத்தில கெடந்த பத்துப்பவன் அட்டியலையும், அஞ்சுபவன் முத்துமாலையையும் கொண்டாந்து குடுத்தா. உங்கப்பாவுக்குக் கூட அது மொதல்ல தெரியாது. சுமதியா உண்டாயிருக்கிறது கூட அப்ப எனக்குத் தெரியாது. அப்பத்தா இந்த வேலம்மாள வேற வீட்டோட கொண்டு வந்திட்டிருக்கிறா. என்னமோ கத, குடுத்த நேரம், கட்டம் நல்லாயிருக்கு வேல செஞ்சிச்சி, எதோ நல்லாயிருக்கிறா. அந்த விசுவாசம் ராசுவுக்கு ரொம்ப, அதனால தா, விஜிக்கு ஒசந்த எடத்துல கலியாண்ம்ன்னவும், முப்பது பவனானும் போடுவேன்னு கொண்டு வந்தா. நீ என்னடான்னா ஒத்த வரியோட வந்து நிக்கிற! நகை எல்லாம் பத்திரமா வச்சிருக்கியாடி?”

விஜி நிதானமாகப் பதிலளிக்கிறாள். “அப்பாகிட்டக் குடுத்து வச்சிருக்கிறேன். சுமதிக்குப் போட வேண்டாமா ஐயாம்மா?”

“அடி புத்தி கெட்ட பொண்ணே? அவளுக்கு வேணுன்னா அவஞ் செஞ்சி போடுறா. நீ ஏண்டி உன்னுதக் கொடுக்கணும்? உன் மாப்பிள, அவம்மா எல்லாம் ஏசமாட்டா?”

“எனக்கு தங்க நகையும் வாணாம்; வயிரமும் வாணாம். அந்தக் காலத்துல பொண்ணுங்களுக்குப் படிப்பு, சுயமாக நிற்கும் தயிரியம் இதெல்லாம் இல்ல. சொத்துக்குப் பாத்தியதை கிடையாது. ஏதோ பவுனப் போட்டு ஈடு கட்டினா. இப்ப என்னாலெ தனிச்சி நிற்க முடியும். நகையைப் போட்டுக்கிட்டா, இப்ப பவுன் விக்கிற விலையில், அதுவே வெலங்கு மாதிரி...” பாட்டிக்கு இந்தக் கூற்று அதிசயமாக இருக்கிறது.

“ஏண்டி விஜி, ஒங்கப்பன் போலத்தா பேசுற, எனக்குன்னு பாட்டரி வச்சிட்டா, நானும் பணம் பணம்ன்னு அடுத்தவனை வளரவிடாம கொள்ளையடிக்கும் புத்தி வந்திடும். ஆருக்குமே சொத்துன்னு இருக்கக்கூடாது. எல்லோருக்கும் எல்லாம் வாரணும்பா. அது எப்பிடி முடியும்? போகாத ஊருக்கு வழி சொல்லிட்டு அலஞ்சிட்டிருக்கா. ஒரு நல்ல சோறுண்டா, சுகமுண்டா?... இத பாரு, உன் மாப்பிள, மாமியா எல்லோரிடமும் நல்லபடியா நடந்திட்டு நீ மேம்யா இருக்கணும். உங்கப்பங்கிட்ட எதுக்குடி அத்தயெல்லாம் குடுத்தே? பெறந்த வீட்டிலேந்து ஒத்த சங்கிலியோட வந்தான்னு அவங்க ஏசுனா அது நம்மவளுக்குக் கொறவில்ல?”

“நமக்கென்ன கொறவு? ஏசறவங்கதா கொறயானவங்க. ஒரு பொண்ணுன்னா அவளுக்குன்னு சொந்தமா விருப்பம் பிடிச்சது, பிடிக்காததுன்னு இருக்கக் கூடாதா என்ன!...”

“அது சரி, பிடிச்சிருக்குன்னு சொல்லித்தா உன்ன அவனும் கட்டிக்கிறேன்னு மாமனத் தூதனுப்பிச்சா. ஏதோ உனக்கும் நல்ல புத்தியிருந்து சம்மதிச்சிக் கட்டியிருக்கீங்க. நீ செய்யிறது உம்மாப்பிளக்கி மாமியாளுக்குப் புடிச்சிருக்கையில, நா ஏண்டி குறுக்க பேசற?”

விஜிக்குச் சொற்கள் எழும்பிக் குதித்து விடும் போல் உதறல் ஏற்படுகிறது. அடக்கிக் கொள்கிறாள்.

மாப்பிள்ளைக்கும் மாமியாருக்கும் இது பிடிக்கவில்லை என்பதை எப்படிச் சொல்வாள்? மாமியார் பேச்சுக்குப் பேச்சு தன் மூத்தமகனை லட்ச ரூபாய் கொடுத்து, டாக்டர் மாப்பிள்ளைக்குக் கல்யாணம் செய்திருப்பதையும், அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி செலவு செய்திருப்பதையும், செட்டு செட்டாக நகை போட்டிருப்பதையும் சொல்வதை எப்படித் தெரிவிப்பாள்? இளையவள் செல்வி கல்லூரியில் இரண்டாவது ஆண்டோடு நின்று விட்டாள். அவளுக்கும் பெரிய இடமாகச் சம்மந்தம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

“செல்வி ஏன் படிக்காம நின்னுட்டே? சும்மா இருக்கலாமா இந்த வயசில்?” என்றாள் ஒருநாள்.

“படிச்சென்ன செய்யணும்? கட்டிட்டுப் போனபிறகு வேணும்னா படிச்சிக்கிறா! மாப்பிள மேல படிக்கையில, இப்ப பிரேமாவும் ஏதோ அமெரிக்காவில படிக்கிதாம். அப்பிடி வேணுன்னா பொழுது போக என்னத்தையோ கத்துக்கிட்டுப் போறா. இப்ப அவளென்ன படிச்சி சம்பாதனைக்கா போகணும்?” என்றால் மாமியார் பதிலுக்கு.

“சம்பாதிக்கத்தான் படிப்புங்கறது சரியில்ல அத்தே. அப்படியே வச்சிட்டாலும், மாப்பிளக்கிக் கட்டிக் குடுக்கிறதுங்கறதே சரியில்ல. அந்த நாளுல பொண்ணுங்களுக்கு ஒண்ணும் இல்ல. மாப்பிளக்கிக் கட்டிக் குடுக்கப் பணம் வேண்டியிருந்தது. இப்ப அப்பிடியா?” என்று விவாதம் செய்தாள் விஜி.

மாமியாருக்கு இவள் போக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.

“நீ நூலப் போட்டு மலையக் கட்டி இழுத்திட்ட, அப்பிடி எங்க பொண்ணுக்குச் சாமர்த்தியம் கிடையாது!” என்றாள். விஜிக்குச் சுருக்கென்று தைத்தது.

இன்னொரு சமயத்தில், சில உறவினர் வந்திருக்கையில் மாமியார் பிரேமாவின் பச்சைக்கல் மாலையையும் வளையலையும் கொண்டு வந்து கொடுத்து அணிந்து கொள்ளச் சொன்னாள். விஜி மறுத்தாள்.

“நான் இதெல்லாம் போட்டுக் கொள்ள மாட்டேன். எனக்கு வேண்டாம்...” என்றாள் பிடிவாதமாக.

“ஏண்டி வந்திருக்கிறவங்க முன்னால மூக்கறுக்கிற? ஒத்தவரிச் செயினோடா பொண்ணக் கட்டிட்டு வந்திருக்கான்னு ஏசுவாடீ! மேப்பெட்டி அடிப்பெட்டி செஞ்சி பிழைக்கிறவங்க கூட இந்தக் காலத்துல பொண்ணுங்களுக்கு எப்பிடியோ இருவத்தஞ்சு சவரன் இல்லாம கட்டுறதில்ல. என்னமோ புடிச்சிருக்கு, அவளத்தான் கட்டுவேன்னு ஒத்தக் கால்ல நின்னா, பெரியய்யாவும் சரின்னா, முடிஞ்சிச்சி. பய்யன் சந்தோசம்னு தலக்குறவெல்லாம் பொறுத்திட்டேன். இப்ப ஒரு நாலு பேர் பெரியவங்க, கலியாணம் நல்லது பொல்லாதுன்னு வரும்போது, நீ கையில கழுத்தில ஒண்ணில்லாம இருந்தா எங்களுக்கு என்ன மதிப்பு?” என்று கடித்தாள்.

விஜி விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக இருந்தாள். அன்றிரவு அவன் அவளைச் செல்லமாகச் சீண்ட வந்த போது அவள், “உங்கம்மா சவரன் சவரன்னு சொல்லிட்டேயிருக்கிறாங்க. எனக்குக் கஷ்டமாக இருக்கு...” என்றாள்.

“நாலு பேர் பாக்கவரப்ப கேப்பாங்க. நீ உன் கண்ணக் காட்டி வல விரிச்சி இழுத்திட்டேன்னு அவுங்களுக்குப் புரியுமா?” என்று அவள் உதட்டைப் பிடித்துக் கன்னத்தைக் கிள்ளிச் சேட்டை செய்த போது அவளுக்கு வெறுப்பாக இருந்தது.

வெறுப்பை அடக்கிக் கொண்டு அவள் சில நாட்களாகவே போராடத் தொடங்கிவிட்டாள்.

வெறுப்பு, மாமியார் மற்றும் உறவினரின் கருத்து முரண்பாடு, நகை விஷயங்களினால் கிளர்ந்ததுதானா? இல்லை, அது திருமணம் முடிந்து, அவர்களை நெருக்கமாகப் பிணைக்கத் தொடங்கிய காலத்திலேயே கவர்ச்சித் திரைகள் கழன்று விழுந்துவிட்டன. தான் ஒரு சொப்பனம் கண்டு கலைந்த நிலையில் இருப்பதாக உணர்ந்தாள்... சொப்பனமாக இப்போது தோன்றும் அந்த நாட்கள்...!

கல்லூரியில் படித்த நாட்களில் கூட தான் சராசரி மாணவிகளிலிருந்து மாறுபட்டவள் என்று நினைத்துக் கொண்டிருந்தவள். முற்போக்கு மாணவியர் இயக்கம் என்ற அமைப்புக்கு முதுகெலும்பாக நின்று கல்லூரி அரங்கங்களிலே புதுமைப் பெண்ணைப் பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றி பரிசுகள் பல பெற்றிருக்கிறாள். மற்றவர் இவளுக்குப் பட்டப் பெயர் சூட்டிக் கிண்டலும் கேலியுமாகப் பேசியதை இவள் பொருட்படுத்தியதில்லை. அரசியலும் பொருளியலும் பாடங்களாகக் கொண்டு எம்.ஏ. படித்த போது கூட, இவளுக்கென்று அந்தரங்கமான தோழியர் இல்லை. ஆனால், வீட்டில், சிற்றப்பன், சின்னம்மாக்களும், அவர்களுடைய செல்வங்களும், விஜிக்காக ஓர் அன்புலகை நிறுவி இருந்தனர். அடுத்த தெருவில் ஒன்றுவிட்ட அத்தை இருந்தாள். விஜி உயர்ந்த படிப்புப் படிப்பதில், அவர்களுக்கெல்லாம் மட்டில்லாத பெருமை. படிப்பு, உயர்குலப் பெருமை என்ற சாய்மானப் பின்புலம் இல்லாத குடும்பம் வியாபார நாணயத்திலும் நகரவாழ்வின் நயமான நாகரிகங்களிலும் முன்னேறி விட்டதற்கு விஜியின் உயர்ந்த கல்வி ஓர் வலுவான அந்தஸ்தைக் கூட்டிவிட்டதாகச் சிற்றப்பன்மார் கருதினார்கள். அவர்கள் வீட்டில் ஒரு இழிவான வசைச் சொல்லைக் கூட யாரும் பேச மாட்டார்கள். கடையில் வேலை செய்யும் ஆட்கள் எட்டுப் பேரும் அந்தப் பக்கத்துக் கிராமங்களிலிருந்து சென்றவர்களே. அவர்கள் அனைவரும் அந்த வீட்டின் மாடியிலேயே கொட்டகையில் தங்குவார்கள். இரு சின்னம்மாக்களும் அடுப்பு வேலை செய்வார்கள். மாறி மாறிப் பாத்திரம் துலக்குவார்கள். கடைப் பையன்களில் ஓரிருவர் வீடு கூட்டிச் சுத்தம் செய்வார்கள். பன்னிரண்டு வயசிலிருந்து இரண்டு வயசு வரையிலும் உள்ள இருவருடைய குழந்தைகளையும் விஜி பார்த்துக் கொண்டிருக்கிறாள். தன்னுடைய பாடம் எப்படி இருந்தாலும் ராமுவுக்கும் லதாவுக்கும் சுகந்திக்கும் பாடம் சொல்லிக் கொடுப்பாள்; உடை உடுத்தி, கொஞ்சிச் சீராட்டி உலாவ அழைத்துச் சென்று, கதை சொல்லி, அவர்களுடன் ஒன்றிப் போனவள். ஒரு சிற்றப்பாவுக்கு மாமியார் வீடு ஆறுமுகநேரிப் பக்கம். இளையவருக்கு, திருச்செந்தூர் பெண்ணெடுத்த ஊர். விஜி ராமுவையும் லதாவையும் சுகந்தியையும் யார் வந்தாலும் வராவிட்டாலும் தன்னுடன் கூட்டி வருவாள், கோடை விடுமுறைக்கு. அவர்களுடன் சில நாட்கள் சின்னப்பட்டியில் தங்கிவிட்டு, அவர்களை திருச்செந்தூரில் கொண்டு விடுவாள். பின்னர் அவள் புது நகரத்துக்குச் சென்று தந்தையுடனும் சில நாட்கள் தங்கிவிட்டுத் திரும்புவாள். எதிர்காலத்தைப் பற்றி அவளுக்குச் சிந்தனைகள் இருந்திராமல் இல்லை. புத்திலக்கியங்களும் பழங்காப்பியங்களும், திரையரங்குகளும் போற்றும் காதலைப் பற்றியும் சிந்தித்திராமலில்லை. காதல் என்பது இலக்கியங்களுக்காகச் சிறிது மிகைப்படுத்தப் பட்டிருப்பதாக அவளுடைய சிந்தனைகள் சென்றதுண்டு. தெய்வீகக் காதல் ஏழேழு பிறவிகளுக்கும் தொடர்பானது என்ற தொடர்களில் அவளுக்கு நம்பிக்கை விழுந்ததில்லை. தன்னை மணக்க இருப்பவன், தன்னை நன்றாகப் புரிந்து கொண்டு குடும்பம் என்பது இருபாலரும் ஒருவரை ஒருவர் மதித்து, விட்டுக் கொடுத்து அன்பு செலுத்தி, உழைப்பில் பங்கு கொண்டு பொது வாழ்விலும் ஒன்றுபட வேண்டும் என்று கருதுபவனாக இருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தாள். அத்தகைய முன்னேற்றமுடைய ஆடவன் ஒருவன் தன்னை மணக்க வருவான் என்று நம்பியிருந்தாலும், இல்லை எனின் திருமணம் வாழ்வில் இரண்டாம் பட்சம் என்று உறுதியாக நிற்கும் இலட்சியமும் அவளுள் உருப்பெற்றிருந்தது. பட்டப் படிப்பை முடித்த பின், ஆசிரியப் பயிற்சி பெற்று, ஆசிரியத் தொழில் செய்ய வேண்டும் என்ற நோக்கும் அவளுக்கு இருந்தது. ஆனால்... அதெல்லாம் அறிவை மீறி வந்துவிட்டதோர் மாயையில் நிறம் மங்கிப் போய்விட்டனவே!

விஜி உறக்கம் கொள்ளாமல் விழித்திருக்கையில் வாசல் திண்ணையில் யாரோ ஏறும் அரவம் கேட்கிறது.

நாய் ஏதானுமா? இல்லையேல் வண்டி ஏதும் வந்த ஓசை கேட்கவில்லையே? விஜி கட்டிலிலிருந்து குனிந்து பாட்டியை தொட்டெழுப்புகிறாள்.

“ஐயாம்மா?... வாசல்ல ஆரோ வந்தாப்பல ஓசை கேக்கல்ல?”

பாட்டி விழித்துக் கொண்டு உன்னிப்பாகச் செவி கொடுக்கிறாள்.

“ஆரு? நாயுடு சிலப்ப முன்னெல்லாம் அலமேலுகிட்ட சண்ட போட்டுட்டுத் திண்ணைக்கு வருவா. ஆனா இப்பல்லாம் சண்ட போடறதில்ல. சண்டக்கிக் காரணமாயிருந்த அக்காக்காரி கோதயூருக்குப் போயிட்டா. அதுவும் அலமேலு முழுவாம வேற இருக்கா. ஏதாவது...” ஆச்சி விளக்கைப் போடுகிறாள் எழுந்து.

“ஆரது?...”

எதிரொலி எதுமில்லை. வாசல் விளக்குக்கு சுவிச்சு உள்ளேயேதான் இருக்கிறது. அதைப் போட்டுவிட்டுக் கதவைத் திறக்கிறாள்.

“விஜி, இத வந்து பாரு...!”

விஜி பரபரப்புடன் வெளியே எட்டிப் பார்க்கிறாள்.

அத்தியாயம் - 5

காத்தமுத்து...

முழங்கால் இரண்டிலிருந்தும் இரத்தம் ஒழுகிக் காய்ந்திருந்தாலும் இன்னும் பொசிவு நிற்கவில்லை. அரைச்சராய் பட்டியோடு கிழிந்து சிறிதே ஒட்டிக் கொண்டு பின்புறச்சந்தின் சிராய்ப்புகளை நன்றாகக் காட்டுகிறது.

விஜிக்கு குரலே எழும்பவில்லை. “...யாரிந்தப் பையன்?”

“இவந்தே காத்தமுத்து. ஏண்டா? எங்கனாலும் விழுந்திட்டியா?”

“ஒரு துணி கொடுங்க ஆச்சியம்மா, நெத்தத்தத் துடச்சிக்கிற...”

வழிந்திருக்கும் கோடுகளைப் பார்த்துப் பாட்டி திடுக்கிட்டுப் போகிறாள்.

“ஏண்டா பாவிப்பயல? எங்க வுழுந்த? நாயிகீயி கடிச்சிச்சா இல்லாட்டி?”

“நாயில்ல. அந்தக் கொளுப்பெடுத்த ஏசன்டுதா கட்டயால அடிச்சா. ஒரு கய்யால புடிச்சிட்டு அடிச்சா...”

அழுகை உந்துகிறது. புறங்கையால் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறான்.

“நீ ஏண்டா அவங்க கூட மோதுற? உன் சோலியப் பாத்திட்டு வரவேண்டியது தானே?...”

“அந்தக் கொளுப்பெடுத்தவ எப்பவும் அந்தப் புள்ளகளுக்குப் பரிஞ்சிட்டு, எங்க கை அவங்க மேல பட்டிச்சி, துணி பட்டிச்சின்னு அடிக்கிறா. மாரிசாமி அண்ணாச்சியக் கூட திட்டுறா. அதனாலதா நானே புள்ளய வேணுன்னு தொட்டே!”

“அட கிறுக்குப் பயலே? உங்காத்தா, கரஞ்சிட்டுக் கெடக்கா. சீக்குக்கார ஆம்புள. நாலு குஞ்சுக. காட்டு வேலக்கிப் போயிட்டு வந்தா அரைக்கஞ்சி, அம்புட்டும் கடன்...”

பாட்டி பிரலாபிக்கையில் விஜி உள்ளே சென்று பாட்டியின் பழைய சீலைத் துணியொன்றும் சிறிது நீரும் கொண்டு வருகிறாள்.

முழங்கால் காயங்களைக் கழுவி, அந்தத் துணியால் கட்டுப் போடுகிறாள்.

“விடிஞ்சி கூடமங்கலம் ஆசுபத்திரிக்குப் போயி, டிடன்னஸ் ஊசி போடச் சொல்லணும்...”

“ஆசுபத்திரி காலம தொறக்காதுங்க. அதுக்குள்ளாற மம்முட்டியா உசுப்ப வந்திடுவா. பஸ்ஸு அலாரம் அடிச்சிட்டு வந்திடும்...”

“எங்க வீட்டில அந்தாளு வேலைக்கிப் போகாட்டி அடிச்சிக் கொல்லுவா! எங்கம்மா எதுனாலும் பேசுனா, அத்தையிம் அடிப்பே குடிச்சிப் போட்டு!”

“வீட்டுக்குப் போக வாணாம். இங்கேயே படுத்துக்க...” என்று பாட்டி சொல்லுகிறாள்.

“எதுனாலும் சாப்பிட்டியா?”

“காலையில் அம்மா சோறோண்ணும் குடுக்கல. நாலணா காசிருந்திச்சி. கெளங்கு வாங்கித் தின்னே. மாரிசாமி அண்ணாச்சி டீ வாங்கிக் குடுத்தா...”

எண்ணெய் காணாத முடி புழுதி படிந்திருக்கிறது. ஊட்டமில்லாததனால் குச்சியாகிவிட்ட உடலானாலும், குமரப்பருவம் கிளர்ந்து வரும் வீச்சின் முனைப்பை அறிவிக்கும் கண்கள்.

முழங்கால்களிரண்டிலும் கட்டுடன் திண்ணையிலேறி உட்கார்ந்து கொள்கிறான்.

விஜி உள்ளே செல்கிறாள். பாட்டி பானைச் சோற்றில் நீரூற்றி வைத்திருக்கிறாள். அதில் உப்புக் கல்லைப் போட்டு ஒரு ஏனத்தில் எடுத்துக் கொண்டு, மாப்பிள்ளைக்காகப் போட்டு வைத்த பகடாவையும் கையில் எடுத்துக் கொண்டு வருகிறாள்.

பையன் கை முகம் கழுவிக் கொள்ள நீரும் ஊற்றுகிறாள்.

கலத்திடு முன் சோறும் துணையான பண்டமும் உள்ளே சென்ற வேகத்தைக் கவனிக்கையில் பசித்தீயின் உக்கிரம் மனசை வருடுகிறது. பகடா முழுவதையும் ஆவலுடன் சுத்தமாகப் பொட்டுப் பொடி விடாமல் உண்டு விடுகிறான்.

“அக்கா, ரொம்ப நல்லாருக்கு!” என்று கூறும் போது கண்கள் காவியம் பாடுகின்றன.

அவனை உள்ளே வந்து படுக்கச் சொல்கிறாள் விஜி. பாட்டிக்கு அதில் உடன்பாடு இல்லை. அதற்காகவே வீ அவனை உள்ளே வரும்படி வற்புறுத்துகிறாள். அவனோ மறுத்து விடுகிறான்.

“நா இங்கியே படுத்துக்கிறேன் அக்கா” என்று அவன் திண்ணையில் முழங்காலைச் சரித்து மடித்துக் கொண்டு இரு கைகளையும் கால்களுக்கிடையில் கூட்டி வைத்துக் கொண்டு படுத்து விடுகிறான். விஜி கட்டுக் கட்டக் கிழிந்த சேலைத் துண்டத்தைக் கொண்டு வந்து அவன் மீது போர்த்துகிறாள்.

பிறகு கதவை அடைத்து, விளக்கை அணைக்கிறார்கள். பாட்டி ஒரு கொட்டாவி விட்டுவிட்டுப் படுக்கிறாள். விஜியும் தலை சாய்க்கிறாள். சற்றைக்கெல்லாம் பாட்டியின் மெல்லிய குறட்டையொலி கேட்கிறது. விஜிக்கு மட்டும் உறக்கம் கொள்ளவில்லை.

அவள் இப்போது, ‘இளஞ்சேரன் மாட்ச் வொர்க்ஸ்’ அதிபனான மயிலேசனின் மனைவி. தொழிற்சாலையின் வண்டிகள் கருணை மிகுந்து குழந்தைகளைச் சென்று கூட்டி வந்து மீண்டும் கொண்டு விடுவது பற்றிப் பெருமையாகப் புதுநகரம் முழுவதும் பேசிக் கொள்வார்கள். ஆனால், அந்த வண்டிக்குள் இந்தப் பிஞ்சுப் பருவத்தினரிடமும் இத்தகைய அடிதடி சண்டைகள் வருமென்று யாரேனும் நினைப்பார்களா? மயிலேசனுக்குத் தெரியுமா, அவனுடைய தமையனான, கெட்டிக்கார, புகழ்பெற்ற பெரிய முதலாளி ரங்கேசனுக்குத் தெரியுமா? இதை எல்லாம் விசாரித்து, இந்தச் சிறுவர்களின் குரலாய் அவள் தன் கணவனிடம் நியாயம் கேட்டால், என்ன நடக்கும்?

என்ன நடக்கும்...?

புரண்டு புரண்டு படுக்கிறாள்.

“இத பாரு, உனக்கு இதிலெல்லாம் தலையிட அதிகாரமில்ல. தெரிஞ்சிச்சா?” என்று சிகரெட் நுனியின் சாம்பலைத் தட்டிக் கொண்டு அவளை உறுத்துப் பார்ப்பது போன்றதோர் பிரமையில் உடலில் குளிர் சிலிர்ப்பு தோன்றுகிறது. தன்னுடைய மனப்பாங்குக்கும், அவனுடைய மனப்போக்கு, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றுக்கும் இடையே, சிறிதும் ஒட்டிப் போக இயலாத வேற்றுமைகள் இருக்கக்கூடும் என்று இயற்கையான உணர்வு கூட அவனைச் சந்தித்த அன்றும் பிறகும் தோன்றவில்லையே? மிக அதிசயமாக அன்று அவனையே நினைத்துக் கொண்டிருந்தாள். ‘நான் ஏன் மாறி விட்டேன்’ என்று உள்ளூற நாணம் கொண்டாள். காரணம் புரியாமலேயே மனம் ஆனந்த வெளியில் சிறகடித்துக் கொண்டிருந்தது.

சென்ற கோடை காலத்து மாலையில் விடுமுறைக்காக வந்திருந்த போது, சிற்றப்பா மகன் பதினொரு வயது ராமுவும் அவளும் தான் அரசனாற்றுக்கரை மணலைத் தேடி வந்திருந்தனர். மம்முட்டியானும் அப்போது கருப்பண்ணசாமி கோயிலின் பின்புறமிருந்து வந்தான்.

“ஆலமரத்துப் பக்கம் போவாதிய அங்க பாம்பு இருக்கு!” என்றான்.

“இந்த ஓடை எங்கிருந்து வருதுன்னு மம்முட்டியானுக்குத் தெரியுமா?” என்று கேட்டாள் அவள்.

“அந்தால மலப்பக்கத்திலேந்து வருது...”

அப்போது, சாலையில் வந்த மோட்டார் பைக் ஒன்று ஓடைப் பள்ளத்திலிறங்கி, மேலே ஏறிற்று. கறுப்புக் கண்ணாடியும், வாயில் புகையுமாக ஒரு இளைஞன் அதை ஓட்டி வந்தான்.

மம்முட்டியான் சட்டென்று கைகட்டி வாய் மூடியவனாக நின்றான்.

“ஆரது?”

“தெரியாதா விஜிம்மா? இவருதா சின்ன மொதலாளி!”

அவளுடைய சிற்றப்பன்மாரைக் கடைப் பையன்கள் சின்ன மொதலாளி, பெரிய மொதலாளி என்று குறிப்பிடுவது அவள் நினைவுக்கு வந்தது, சிரிப்பு வந்தது.

“எந்தூரு சின்ன மொதலாளி?”

“அதாம்மா, சின்னபட்டி பெரியபட்டி எல்லாம் பிள்ளங்கள அழச்சிட்டுப் போவுதே இளஞ்சேரன், அந்த மாட்ச் வொர்க்ஸ் மொதலாளி அவிய தாத்தா, பெரிய வூடில்ல. பெரிய பட்டில? அவுரு மொதல்ல பஞ்சாயத்து பிரசன்டா இருந்தா, இப்பங்கூட பிரசன்ட் வூடுன்னுதான் சொல்லுறா. அவரு மகனுக்கு மகெ இவுரு. இவப்பாரு மூணு கட்டினா, மூணா சம்சாரத்து மகெ. கடோசி மகெ...”

அவன் சொல்லி முடிக்குமுன் ஓசைப்படாமல், கையில் கறுப்புக் கண்ணாடியைத் தட்டிக் கொண்டே அவன் அவர்களருகில் வந்து நின்றதை அவள் பார்த்து விட்டாள். மம்முட்டியான் திடுக்கிட்டாற் போல பின் வாங்கினான். அவளைப் பார்த்து அவன் புன்னகை செய்தான்.

முள்முடி சுருளாகக் காற்றில் நெற்றியை வருடிக் கொண்டு நடமிட்டது. நல்ல உயரம். சிவந்த மேனி. பெண்மைச் சாயல் தெரியும் முகம். அதை மறைப்பதற்குத்தான் போலும் அரும்பாக மீசை வைத்திருந்தான். பிடரி முடிப் பாஷனில்லை.

அவளை நேராகப் பார்த்துவிட்டு மீண்டும் புன்னகை செய்தான்.

“குடீவினிங், நான்... மயிலேஷ். எனக்கு இந்தத் தாத்தாவின் பெயர்தான்...” என்று அறிமுகம் செய்து கொண்டான். தொடர்ந்து, “இந்த இடத்தில், இவ்வளவு ஸொஃபிஸ்டிகேட்டாகத் தென்படுவது யார்னு பாக்கத்தான் வந்தேன்... ஒரு க்யூரியாஸிட்டியினால... இப்ப தான் புரிஞ்சிச்சி...” என்றான்.

அவளும் தன்னையறியாமலே முகமலர்ந்தாள். “ஐ, ஸீ... நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?...”

“நல்லாத் தெரியும். சண்முக மாமா பொண்ணு... அம் ஐ ரைட்?”

“மன்னிக்கணும், நீங்க தெரிஞ்சு வச்சுருக்கிற அளவு நான் தெரிஞ்சி வச்சுக்கல...”

“பெரியவங்க வந்து போயிட்டிருந்தா தெரிஞ்சிருக்கும். அதனாலென்ன...! ஒரு சமயம், சம்பகம் அத்தை, சாமி கும்பிட பெரியபட்டிக் கோயிலில கூட்டிட்டு வந்தாங்க. உங்களுக்கு நெனப்பு இருக்கணும்...”

“ஓ, அஞ்சாறு வருசம் முன்ன... தாத்தா பாக்கணும்னு நா ஆறுமுகத்தின் கடையில சைகிளுக்கு நிக்கையில் தவிசுப்பிள்ளை வந்து கூட்டிட்டுப் போனான். அப்ப... நீங்க இருந்தீங்களா?...”

“ஆமாம். நாங்கூட எம்.ஸி.ஸி.லதா பி.காம் முடிச்சேன். பெறகு அங்கேயே எம்.ஏ. பண்ணினேன். உங்களப்பத்திக் கேள்விப்பட்டிருக்கிறேன்...” என்று புன்னகைகளினாலேயே அவளைக் கவர்ந்தான். அதுவரையிலும் எந்த இளைஞனும் தன்னைப் பார்த்து அவ்வளவு சக்தி வாய்ந்த புன்னகையுடன் நெருங்கவில்லை என்று தோன்றிற்று.

“ஓ, எந்த வருஷம்...?”

“எழுபத்திரண்டில நான் மெட்றாஸில இருந்தேன். ஸ்டூடன்ட் ஃபெடரேஷனில கூட அப்ப இருந்தேன்...” மந்திரச் சொல் போல் அவள் கண்களை அகலச் செய்தது அது.

“அப்படியா?... எனக்கும் கூட அது போன்ற ஈடுபாடுகள் உண்டு” என்று புன்னகை முகிழ்த்தாள்.

“பைத பை. எனக்கு உங்க தைரியம் ரொம்பப் பாராட்டக் கூடியதாக இருக்கு. எதுக்குச் சொல்றேன்னா, அப்பவே, ஆறுமுகத்தின் கடையில நீங்க சைகிள் வாங்கிட்டுச் சின்னப்பட்டிக்குத் தைரியமாப் போறதப் பாத்திருக்கிறேன்...”

“எனக்கு இந்த ஆற்றுக் கரை ரொம்பப் பிடிக்கும். ஆத்துல தண்ணீர் வந்து மட்டும் நான் பாத்ததே இல்ல. எப்படின்னாலும் ஆறு ஆறு தான். தண்ணி இல்லாட்டிக் கூட மணலே கவர்ச்சியாயிருக்கு.”

“ஆமாம் எப்போதோ அப்பிசி கார்த்திகை மழை நாளில ஓடத் தண்ணிகள்ளாம் ஓடி வரும்... இதுலதான் போர் போட்டு கூட மங்கலத்துக்குத் தண்ணி கொண்டிட்டுப் போறா?... இதப் பெரியபட்டி சின்னப்பட்டிக்கெல்லாம் கூட எக்ஸ்டெண்ட் பண்ணணும்...”

“இந்த ஆத்துல தண்ணீர் அடிச்சிட்டுப் போயிப் பார்க்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை!”

“தண்ணி வரும், ஆம் நீங்க மட்றாஸிலிருந்து வாரதுக்கு முன்ன அடிச்சிட்டுப் போயிடும் ஓடயில தண்ணி போகும். வண்டி ஒண்ணும் போக முடியாமக் கூடப் போகும். ஆனா, செத்த நிப்பாட்டிக் கிட்டா, ஒரு மணில சாதுவா வடிஞ்சி போகும்...”

“அதான் காட்டாறு போல இருக்கு!”

“ஆமாம். அது வர்ற வேகம்... முன்ன பின்னத் தெரியாம வரும். அப்ப பாக்க ரொம்ப அழகாயிருக்கும். காட்டாத்து வெள்ளம் போலங்கறதுக்கு அத்தப்பாத்தாதான் முழுப் பொருளும் புரியும்! ஆனா, எங்க ஐயாப்பா இதுல ஆனைய அடிச்சிட்டுப் போறாப்பல தண்ணி வந்து ஆத்தில நாலஞ்சி மாசம் வடியாம இருக்கும்னு சொல்வாரு. நான் புரளிம்பேன். ஓடயில் வந்து வடிஞ்சிடும். கால்காலா ஆத்து மணல் நடுப்பில சீலயப் போட்டாப்பல தண்ணி போகும்.”

“நீங்க, பி.காம். படிச்சிட்டு ஏன் எம்.ஏ. பண்ணினீங்க?” என்று சட்டென்று கேட்டாள் அவள்.

“என்னமோ லிட்ரேச்சர்ல ஒரு இன்ட்ரெஸ்ட்; பண்ணினேன்...”

“அதான், நீங்க பேசுறப்பவே தெரியிது...”

“என்ன தெரிஞ்சிச்சி?...”

மீண்டும் புன்னகைகள்; மகிழ்ச்சிப் பொங்கல்கள்.

“நீங்களும் லிட்ரேச்சரா?...”

“இல்ல, பொலிடிகல் சயன்ஸ், எகனாமிக்ஸ் ஹிஸ்டரி...”

“ஓ, லா படிக்கிற உத்தேசமா?...”

“அப்படி ஒண்ணும் திட்டம் இல்ல, ஆனா, எனக்கு டீச்சிங்னா ரொம்ப விருப்பம்.”

“நான் ஊகிச்சதத்தான் சொல்றீங்க...”

“எப்படி?”

“எப்படிங்கறத இப்ப சொல்லமாட்டேன்” என்றவனுக்குக் கை பரபரத்துச் சிகரெட்டுக்காக இடுப்புக் கீழ் பையில் சென்றதும் நினைவு வந்தாற் போல், “நான்... ஸ்மோக் பண்ணலாமா? உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே?” என்று கேட்டான் மரியாதையாக.

வழியிலே எங்கோ செல்பவன் குறுக்கே வந்து இதை எதற்குக் கேட்க வேண்டும் என்று அப்போது அவளுக்குத் தோன்றிற்றா? இல்லை.

“...ம்...? என்னைக் கேட்டதற்கு நன்றி? உங்களைக் கூடாது என்று சொல்லி உரிமையில் தலையிடுவதாக நினைக்க வேண்டாம். நீங்கள் அப்பால் சென்று புகை பிடிப்பதில் எனக்கு ஒரு தடையும் இல்லை.” அவன் சிரித்துக் கொண்டே பையிலிருந்த கையை வெறுமையாக எடுத்து விட்டான். “ஏன், நீங்க... என் உரிமையில் தலையிடுவதாக இருந்தால் நான் இதை விட்டு விடுகிறேன். விடணும்னுதான் ஆசை...” என்றான் குறும்பாக.

அப்போது, தனது வாய்ச்சொல்லே தன்னை எங்கோ பிணிக்கிறது என்ற தெளிவு ஏதுமில்லை. சில சமயங்களில் தன்னறிவை மீறிச் சொற்கள் குதித்து விடுகின்றன. இதைத்தான் விதி, பிராப்தம் என்றெல்லாம் சொல்கிறார்களோ!

அன்று ஆறுமுகத்தின் கடையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு அவளும் ராமுவும் திரும்பிய போது, அவனும் மோட்டார் பைக்கில் அவர்களுக்குப் பின்னே மெதுவாக விட்டுச் சென்றான். பெரியபட்டி வீட்டைக் கடந்து சின்னப்பட்டிச் சாலையில் சிறிது தூரம் தொடர்ந்ததாகக் கூட நினைவு.

இந்த முதல் சந்திப்பு, அடுத்துப் பல சந்தர்ப்பங்களைக் கொண்டு வந்தன. பெரியபட்டிப் பாட்டனார் அவளைக் கூட்டி வரச் சொன்னதாகக் காரில் அங்கிருக்கும் கணக்குப் பிள்ளை வந்தான். பாட்டி அவளை அழைத்துக் கொண்டு போனாள். மேக விளிம்புகள் சரிகை சரிகையாக மின்னலாயின. பாட்டி ஆகாயத்தில் பறந்தாள்.

“அம்புட்டுப் படிப்பும் கொணமும் தான் இப்படி உச்சாணிக்கு ஏத்தியிருக்கு” என்று வாய்க்கு வாய் புகழ்ந்தாள். அவளைச் சந்தித்துப் பேசுவதற்கான சந்தர்ப்பங்களை அவன் ஏற்படுத்திக் கொண்டான். ஆற்றுக்கரை மணலில், கோயிலின் முன், அவர்களைக் காண்பது கிராமத்தாருக்குப் புதிய காட்சிகளாயிருந்தாலும் பேச்சொன்றும் எழும்பவில்லை.

இவள் என்னதான் எதிர்பார்ப்பாள் என்பதை உணர்ந்து கொண்டாற் போன்று முன்கூட்டியே பேசி விடுவான் அவன்.

“பெண்களைப் பத்தி எனக்கு ப்ரொகிரஸிவ் வ்யூஸ் உண்டு. இப்ப எங்க மயினிதா இருக்காங்க. அவங்களும் கிராஜுவேட் தான். பிறந்த வீடு நாகர்கோயில் பக்கம். ஆனாலும் ஒரு இடத்துக்குத் தைரியமாகத் தனியே போகமாட்டா. எங்க செல்வி கூட அப்பிடித்தான். பிரேமா கூட அப்படித்தானிருந்தா. இப்ப மாறியிருக்கும்னு நினைக்கிறேன். எனக்கு உன்னை அதனாலேயே பிடிச்சிருக்கு. சைக்கிளெடுத்திட்டு வந்திடறே...” என்றெல்லாம் பாராட்டினான்.

“தன்னைத்தானே நிமிர்ந்து நிற்க, எதிலும் ஒரு நிச்சயமான முடிவு எடுத்துக்கிட்டு வேலை செய்ய, முடியாதுங்கற நினைப்பே ‘க்ரிப்பிள்’ போல பல பெண்களை ஆக்கிடுதுன்னு எனக்கு ஒரு கருத்து உண்டு. எனக்கு ஒரு சிநேகிதி. என்னை விடப் பெரியவள். பையன்களும் பெண்களும் படிக்கும் ஒரு ஸ்கூலில் அவள் வேலை பார்க்கிறாள். தலைமை ஆசிரியர் பதவி இவளுக்கு வந்தது. ஏற்றுக் கொள்ளாமல், ‘வேணாம், என்னால் இந்தப் பொறுப்பைக் கட்டி மேய்க்க முடியாது. நான் வெறும் ஆசிரியையாகவே இருக்கிறேன்னு’ சொல்லிட்டா. பிறகு வேறு ஒரு ஆண் தான் அங்கே வந்திருக்கிறார் பொறுப்பு ஏற்க... நான் சண்டை போட்டேன் அவளிடம்” என்றெல்லாம் அவளும் தன்னை வெளியிட்டுக் கொண்டிருக்கிறாள்.

“பிஸினஸ் விஷயமா நான் பாதி நாள் வெளியூர் போயிடுவேன். அண்ணனும் நானும் கூட்டாக எல்லாம் பார்த்துக் கொண்டாலும், வெளியூர் டீலிங்க்ஸுக்கு அநேகமாக நான் போவதுன்னுதான் இரண்டு வருஷமா வழக்கமாயிருக்கு. அப்படி இருக்கையில, எல்லாத்துக்கும் நான் வந்தால் தான் முடியும்னா எப்படி? நீ மேல்பெட்டி அடிப்பெட்டி ஒட்டினால் கூட நான் கோவிக்க மாட்டேன். அது ஒரு சுய நம்பிக்கையைக் கொடுக்குதும்பேன்” என்றெல்லாம் அவளை வளைத்துவிட்டான்.

இப்போது இந்தச் சொற்கள், நிகழ்ச்சிகளைத் திரும்பிப் பார்க்கையில் மனம் ஐயோ என்று வீழ்கிறது.

திருமணம் என்பது திருப்பி வைக்க முடியாத கருத்தில் நிலையூன்றியிருக்கிறது என்று அவளுக்கு யாருமே அப்போது நினைப்பூட்டவில்லை. திருக்குற்றாலத்து வீழ்ச்சி அருவியாக ஓடி வரும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஒருமுறை நீருக்கடியில் கிடக்கும் மணிக்கற்களின் கவர்ச்சியில் மனம் கொடுத்து அவற்றைப் பொறுக்கினாள். நீரிலிருந்து வெளியே எடுத்ததும் அந்தக் கவர்ச்சி மாய்ந்து விட்டது. வெறும் சாதாரணக் கற்களாகத் தோன்றின. வீசியெறிந்து விட்டு நடந்தாள்.

இப்போது...

அத்தியாயம் - 6

மம்முட்டியானின் செருப்பொலி கட்டியம் கூறுமுன் ஒவ்வொரு குடிசையிலும் நாய் குரைக்கிறது.

“ஏ மாரி... முனிம்மா, எந்திரிங்க... பஸ்வந்திடிச்சி!...”

மூடியிருக்கும் கதவில் கைத்தடியால் ஒரு தட்டு...

“பச்ச, பேராச்சி...! எந்திரிங்க! பஸ் அலாரம் குடுத்திட்டா!” ஆழ்கடலில் மத்தைவிட்டுக் கலக்கும் சலனங்கள் அவை. ஆழ்ந்த உறக்கத்தில் துள்ளும் மீன்கள், மின்னும் சிறகுகள், பூக்களின் குளிர்ச்சிகள் தோற்றுவிக்கும் இனிய சுக உணர்வுகளெல்லாம் அந்தக் கலக்கலில் தலைகுப்புறக் கவிழ்ந்து போகின்றன.

“ஏவுள்ள? கனாக்காணுற? எந்திரிச்சி மூஞ்சி கழுவிக்க, பசு வந்திடிச்சாம். மம்முட்டியாங் கொரல் குடுக்க வந்திட்டாம் பாரு!”

விஜியும் கூட அந்த நேரத்தில் ஆழ்ந்துதான் போயிருக்கிறாள். அந்த ஆழத்திலிருந்து வண்டியின் குழலொலி தான் அவளைத் தூண்டில் போட்டு உணர்த்தி விட்டது. கண்கள் சட்டென்று விடுபடுகின்றன. இன்னும் லேசான பனிக் குளிர் இருக்கிறது. கதவைத் திறந்து விட்டு வெளியே வருகிறாள். காத்தமுத்து உட்கார்ந்திருக்கிறான். விடியற்காலம் கலகலப்பாக, இன்னும் இருள் பிரியவில்லை. இருளிலே முகம் தெரியாக் குரலொலிகள்.

“...காத்தமுத்துப் பயலாடா? இங்கிட்டு ஒக்காந்திருக்க! எந்திரிடா!”

மம்முட்டியான் விஜி கதவு திறந்து உள்ளே நிற்பது அறியாமல் அதட்டுகிறான்.

“மம்முட்டியானா?... நாந்தாம்பா காயத்துக்கு கட்டுப் போட்டுப் படுக்கச் சொன்னேன் இங்க.”

விஜியின் குரல் கேட்டதும் அவன் துணுக்குற்றாப் போல் சமாளிக்கிறான். “கும்பிடுறேம்மா. தெரியாம கேட்டுட்டே...”

இதற்குள் இருளில் ஒவ்வொரு புள்ளியாகச் சேர்வது புலனாகிறது. குரல்கள் ஒலிக்கின்றன.

“தங்கச்சிய பாத்துக்க? ரசம் சோறு நல்லாப் பெனஞ்சி வச்சிருக்கே. கீள கொட்டாம உண்டுக்கணம்...”

“சிட்டையப் பதனமா வச்சிக்க!”

“சண்ட போடாதிய!”

“ஒறங்கி வுழாதடீ! முளிச்சிக்க...”

விஜி உள்ளிருந்து விளக்கைப் போட்டுவிட்டுப் படியிறங்குகிறாள். எட்டி, சாலை முனையில் மரத்தடியில் பஸ் நிற்கிறது.

“ஆரு, ஏஜண்டு? கூப்பிடு அவரை...” என்று மம்முட்டியானிடம் பணிக்கிறாள்.

சற்றைக்கெல்லாம் இரத்தினம் மிகப் பணிவாக அங்கே வந்து நிற்கிறான்.

“வணக்கம்மா... நீங்க இங்கிட்டு வந்திருக்கியன்னு இப்பதாந் தெரியும்...”

“பரவாயில்ல. இந்தப் பய்யன ஏனிப்படி அடிச்சுருக்கீங்க? நேத்து இந்த ஊருப் பிள்ளைகள வழியிலேயே இறக்கி விட்டுட்டீங்க போல இருக்கு?”

“வண்டி... இன்ஜின் கோளாறாயிட்டுதுங்க. எதிர்பாராம நேந்து போச்சி. பெரியபட்டி தாண்டி இங்ஙனதா நிறுத்திட்டு மம்முட்டியாங்கிட்ட சொல்லிப் பதனமாக் கூட்டிப் போகச் சொன்னே. அப்பிடில்லாம் இறக்கிப் போட மாட்டம்மா!”

“நிதம் இத்தினி காலயிலா கூட்டிட்டுப் போறிய? வரப்பவும் ஒம்பதாவது போல இருக்கு?”

“பிள்ளங்க எந்திரிக்கவே நேரமாகும்மா. இப்பிடித்தான் அங்கேந்தும் அஞ்சு மணிக்குக் கிளப்பிடுவே, நேத்துத்தா நேரமாச்சி! வண்டி தொலவா இருக்கிற ஊருலேந்து முதல்ல கூட்டிக்கிட்டுப் போயி முதல்ல கொண்டு விட்டுடும்...”

“அது சரி. இந்தப் பய்யன எதுக்காக இப்பிடி அடிச்சிருக்காங்க? ஆரடிச்சது?”

“ஐயோ, அத்த ஏம்மா கேக்குறிய? இந்தப் புள்ளங்க ஒண்ணுக்கொண்ணு சண்ட போட்டுக்கிட்டு வெட்டி மடியிதுங்க. இதுங்க சண்டய வெலக்குறதுதா... ரொம்பக் கஷ்டமாப் போகுது...”

“முழங்கால்லேந்து ரத்தமாக் கொட்டிருந்திச்சி. நான் சும்மாத் துணியச் சுத்திக் கட்டுப் போட்டிருக்கே. இவன ஆசுபத்திரிக்குக் கூட்டிப் போயி, டிடனஸ் ஊசி போடணும்...”

“புது நகரந்தாம்மா போகணும். இங்க கூடமங்கலத்துல ஊசில்லாம் போட மாட்டாங்க!” “வண்டில ஏத்திட்டுப் போ. ஏ, காத்தமுத்து, போய் ஏறிக்க!”

இவ்வாறு பணித்தவள், சற்றே நிற்கிறாள்.

பிறகு திடீரென்று முடிவுக்கு வந்தாற் போல், “இருங்க...” என்று உள்ளே விரைகிறாள்.

பாட்டியைத் தட்டி எழுப்புகிறாள்.

உறக்கக் கலக்கம் தெளியாமல் பாட்டி கண்களைக் கசக்கிக் கொள்கிறாள். “தீட்டி ஆபீசு பஸ் வந்திரிச்சா? மணி என்ன ஆச்சி?”

“ஆமா, நாலேகாலாகுது. ஐயாம்மா, நா இந்த பஸ்ஸில ஏறிப் போயிடறேன். அப்பாவப் பாத்திட்டுப் போகலான்னிருக்கிறேன். ஒருக்க, மாப்பிள, பைக்க எடுத்திட்டு வந்தா நான் அப்பா வீட்டுக்குப் போயிருக்கிறன்னு சொல்லிடுங்க!”

“பெரிய பட்டிக்கா போற?”

“இல்ல, புதுநகரம். சுமதியையும் அப்பாவையும் பாக்கப் போறேன். மாப்பிள வீட்டுக்குப் போகல!”

அவள் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிக் கொள்கிறாள். தலையை சீப்பால் ஒதுக்கிக் கொண்டு, கைப்பையுடன் கிளம்பி விடுகிறாள். அவள் அந்த வண்டியில் ஏறத் தயாராக வருகையில் இரத்தினம், விக்கித்தாற் போல் பார்க்கிறான்.

பஸ்ஸில் ஏறக் கூடி நிற்கும் கூட்டத்தை விலக்கி, தன் கையில் உள்ள டார்ச்சைக் காட்டி ஒளியடித்து “வாங்கம்மா... முன்னால வந்திடுங்க!” என்று மரியாதையாக வழி காட்டுகிறான்.

அவள் முதல் வரிசையின் ஓரத்தில் அமர்ந்து கொள்கிறாள். வழக்கம் போல் பெரியப்பட்டிச் சிறுவர்களுக்கு இடம் விட்டு ஓரத்துக் கடைசியில் இவர்களை உட்காரச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் குரல் ஒலிக்கவில்லை. விஜி ஓரத்தை ஒரு சிறுமிக்கு விட்டு, தன்னருகில் இன்னொரு பொடிசைக் கூப்பிட்டு அமர்த்திக் கொள்கிறாள்.

பூ மலரும் மொட்டை முரட்டுக் கையால் பிரித்தாற் போல் உறக்கம் இறுகத் தழுவும் இமையிதழ்களைக் கசக்கிப் பிரித்துக் கொண்டு வந்திருக்கின்றனர்.

விஜிக்கு இரவுத் தூக்கம் இயல்பாக இருந்திராததால் விழிகள் எரிச்சலில் குளித்தாற் போலிருக்கின்றன. இந்தச் சிறுவர் நாள்தோறும் இப்படி வருகின்றனர். ஆவியிலிருந்து எடுத்த இட்டிலியும் துணியுமாகப் பல பூவிழிகள் ஒட்டிவிட, வண்டிக்குள்ளும் சாய்ந்து விழுகின்றன.

பேருந்து வண்டி, மெல்ல நகர்ந்த சாலையிலுள்ள மேடு பள்ளங்களைப் பதம் பார்ப்பதைக் குலுக்கல்களுடன் அறிவித்துக் கொண்டு செல்கிறது. கரையா இருளில் வானத்துத் தாரகைகள் மினுக் மினுக்கென்று சிமிட்டுகின்றன.

விஜிக்கு அப்போது, நகரங்களில் தெருவுக்குத் தெருவாகத் தோன்றியிருக்கும் குழந்தைப் பள்ளிகளின் நினைவு வருகிறது. சின்னஞ்சிறு மலர்களின் கொத்துக் குவியல்கள் போல் அப்பள்ளிகளில் ‘ட்விங்கில் ட்விங்கில் லிட்டில் ஸ்டார்’ பாடும் குழந்தைகள் இவ்வாறு இந்நேரத்தில் மினுக்கும் ஆகாயத் தாரகைகளைக் கண்டிருப்பார்களோ? இங்கே இந்தக் குழந்தைகள் இந்தத் தாரகைகள் இருக்கும் நேரங்களில் மட்டுமே கூடுகளை விட்டு வெளியேறுகின்றன. ஆனால் ‘வானக் காட்சிகளைக் காண்பீரோ’ என்று கேட்டுக் கொண்டு உறக்கம் கண்ணிதழ்களை வருடிவிட, அவர்கள் இவ்வுலக நினைப்பை விட்டு நழுவி விடுகின்றனர்.

பெரியபட்டியில் பெரிய வீடுகளை அவளால் இனம் கண்டு கொள்ள முடிகிறது. இங்கும் ஊர்க்கோடியில் சாலையில் சிறுவர் சிறுமியர் காத்திருக்கின்றனர். இரத்தினம் முதலில் கீழே இறங்கிக் கொள்கிறான். கசமுசவென்று எழும்பிய பேச்சொலிகள், பொங்கும் பாலில் நீர் தெளித்தாற் போன்று கப்பென்று அடங்கி விடுகின்றன. அடங்கிய குரலில் முண முணப்புகள்.

சின்ன மொதலாளி... பெரிய வீட்டு மருமகள்...

வரிசைகள் கலந்து விடுகின்றன. பாலமணி, தங்கம், வெங்கடேசன் என்ற பெயர்களைச் சொல்லி, “உக்காரு... உக்காருங்க அங்கதான்!” என்று இரத்தினம் வழக்கமில்லாத மாறுதலை மெல்லிய குரலில் அறிவிக்கிறான். முதலில் உட்கார்ந்து விட்டவர்களை எழுப்பிப் பின் வரிசைக்குப் போகச் சொல்லவில்லை.

அழகாயியின் அருகில் தங்கம் உட்கார வேண்டியிருக்கிறது. தங்கம் அழகாகத் தலைசீவிப் பவுடர் போட்டுக் கொண்டிருக்கிறாள். பெரிய பூப்போட்ட நைலக்ஸ் சேலையும், ஃபிட்டான மினுப்பு ரவிக்கையும் அணிந்திருக்கிறாள். உலிஉலி சீலை, புருசோ சீலை என்று பெயர் சொல்லி வகை வகையாகச் சீலை உடுத்துபவள் தங்கம். இவள் கொஞ்சம் வாயாடி. ஏசண்டு சொன்ன இடத்தில் உட்கார்ந்து விடுவாளா?

இன்று மூச்சுப் பிரியவில்லை; ஒரு சொல் ஒலிக்கவில்லை. காரணம் அழகாயிக்குப் புரியாமலில்லை. பெரிய ஆச்சி பேத்தி விஜிம்மா, மாட்ச் வொர்க்ஸ் முதலாளியைக் கல்யாணம் கட்டியிருக்கிறாள். பெரியபட்டிப் பெரிய வீட்டில் தான் கல்யாணம் நடந்தது. அன்று எத்தனை கார்கள் வந்திருந்தன! அவர்களுக்கெல்லாம் இனிப்புடன் சாப்பாட்டுப் பொட்டலம் கொடுத்தார்கள்.

இவர்களுக்கெல்லாம் முதலாளி வீட்டின் வேறு பெண்கள் யாரையும் தெரியாது. ஆனால்... விஜியம்மா ரொம்ப நல்லவள்...

பேராச்சி தூக்க மயக்கத்தில் ருக்குவின் மீது சாய்கிறாள்.

கூடமங்கலத்து ஆஸ்பத்திரிச் சுவரின் குடும்ப நலத்திட்ட விளம்பரங்கள் இருளிலும் புரிகின்றன. ராசாத்தி ஓடையில் இறங்கிச் செல்லும் குலுக்கலில் உறக்கங்கள் உசுப்பப்படுகின்றன.

விடியற்காலைக் காற்று, மிகச் சுகமாக, இதமாக முகத்தில் வந்து படிகிறது. கிராமங்களைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு வண்டி விரைகையில் வழியில் ஓர் டீக்கடை வாசலில் கும்பல் கூடினாற் போல் சிலர் நிற்கின்றனர். அவர்கள் இந்த வண்டிக்காகக் காத்திருப்பார்களோ என்ற ஐயத்தை உறுதிப்படுத்தும் வண்ணம் இரத்தினம் வாயிலில் நின்று, “போ... ரெய்ட்!” என்று கொடி காட்டிவிடுகிறான்.

“ஆரோ... பெரியவங்க போறாப்பல இருக்கு!”

“பாக்கல...”

காற்றுவாக்கில் வந்து செவியில் விழும் ஒலிகள் விஜிக்கு அவள் வருவது அசாதாரணம் என்று அறிவுறுத்துகிறது.

புதுநகரத்தில் இரவு என்பது மிகக் குறுகிய பொழுதாகும். தேநீர்க் கடைகள் பல சுறுசுறுப்பாக இயங்குகின்றன. இன்னும் பாயிலர்கள் புகைகின்றன. தெருவில் சைக்கிள்களின் ஒலிகள் கேட்கத் தொடங்கிவிட்டன.

இரவின் நெடுநேர விழிப்பின் பின் ஓய்ந்த புரோட்டாக் கடைப் பெஞ்சுகளில் ஆழ்ந்துறங்கும் ஆட்கள் கண்களில் படுகின்றனர்.

இரவு பகல், உறக்கம் விழிப்பு நேரங்கள் என்பதை பார்த்துக் கொண்டிருந்தால் தொழிலும் பொருளும் முடங்கிக் கிடக்காதா என்று அந்த நகரம் கேட்பது போலிருக்கிறது. முன்னே ஒரு லாரியும், அதற்கு முன் குழந்தைகளைக் கொண்டு செல்லும் இன்னொரு தொழிலக வண்டியும், எதிரே வரும் ஒரு பாரவண்டிக்காக நிற்கின்றன.

அப்போது அவளருகில் வரும் இரத்தினம் பணிவாக, “முதல்ல பங்களாக்குப் போயிடலாமா?” என்று வினவுகிறான்.

“நான் பங்களாவுக்குப் போகல. எங்கப்பா வீட்டுக்குப் போகிறேன். வீடு தெரியுமில்லையா? தேவி விலாஸ் ஓட்டல் பக்கம் ரோட்டில் வண்டிய நிறுத்திட்டாப் போதும்; நான் போயிடுவேன். குறுக்குத் தெருவில் பஸ் வரவேண்டாம்.”

“அப்ப பாக்டரில பிள்ளங்கள இறக்கி விட்டிடலாமில்லியா?”

“விடலாம். நானும் ஃபாக்டரிக்குள்ள பாக்கிறேன்!”

இது ஏதோ விபரீதம் என்று இரத்தினத்துக்குத் தோன்றுகிறது. இந்த வண்டியில் இவர்களை ஏற அனுமதித்திருக்கக் கூடாதோ என்று கருதுகிறான். இதுவரையிலும், முதலாளி வீட்டைச் சார்ந்தவர்கள் யாரும் தொழிற்சாலைக்குள் வந்திருக்கவில்லை. மற்றவர் யார் வருவதாக இருந்தாலும் அலுவலகத்தில் மானேஜர் அனுமதி பெற்ற பின் தான் உள்ளே விடுவது வழக்கம். மேலும் இந்த இருட்டு நேரக்காலையில் இவளை அனுமதிக்கலாமா என்றே புரியவில்லை. இந்தச் சின்னம்மாளின் தந்தை, தொழில் சங்கத்துக்காரர். புதுநகரத்துத் தொழிலகங்களில் வலுவான தொழிற்சங்கத்தைத் தொழிலதிபர்களுக்கு எதிராகத் தோற்றுவிக்க ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொள்கிறார் என்றும் தெரியும். இது பெரிய விவகாரம்; பெரிய இடத்து விவகாரமும் கூட.

“இல்லையே? உங்கள முதல்ல வீட்டுப்பக்கம் விட்டுப் போட்டு வண்டி வரலாங்க!”

“வேண்டாம், வேண்டாம். தொழிற்சாலைக்கே போகட்டும்!”

வண்டி பெரிய மதில் சுவருக்கு வெளியே நிற்கிறது.

குறுக்கே சட்டங்கள் போட்ட பெரிய வாயிற்கதவைத் திறக்கிறான் காவலாளி.

சிறுவர் சிறுமியர் இறங்கும் போது, இரத்தினம் எதுவும் சொல்ல நாவெழாமல் நிற்கும் போது, அவன் இறங்குமுன் காத்தமுத்துவின் கையைப் பற்றி மெள்ள இறக்குகிறாள்.

வாயிலுக்கு அங்கு முன்பே வந்திருக்கும் கணக்குப்பிள்ளைகள் வருகின்றனர். மாரிசாமி அவள் கண்களில் படுகிறான். “மாரிசாமி! மாரிசாமி!” என்று அவள் கூப்பிடுகிறாள். இதற்குள் இரத்தினம் வெளியே வரும் இன்னொரு ஆளின் காதில் ஏதோ கேட்கிறான். பிறகு உள்ளே விரைகிறான்.

சிறுவர் சிறுமியர் தூக்குப் பாத்திரங்களுடன் உள்ளே செல்ல நிற்கின்றனர்.

“அட... விஜியம்மாவா?...” என்று வியப்புக் குரலில் அடக்கமாகக் கூவும் மாரிசாமி, “இந்த நேரத்தில், ஊரிலேந்து வாரீங்களாம்மா?” என்று விசாரிக்கிறான்.

“ஆமாம். இந்தப்பய காத்தமுத்துவை உனக்குத் தெரிஞ்சிருக்குமே? இவனக் கூட்டிட்டு ஆசுபத்திரிக்குப் போயி மருந்து போட்டு, ஒரு டிடனஸ் ஊசி போடச் சொல்லணும்... ஃபண்டாசுபத்திரிக்குப் போகலாமில்ல?”

“போவலாம். எட்டு மணிக்கித்தா ஆசுபத்திரி திறப்பா.”

இதற்குள் மானேசர் சாமியப்பன் விரைந்து வருகிறார். கன்னங்கள் உப்பி, கட்டைக் குட்டையாக இருக்கிறார். கல்யாணத்தில் பெரியபட்டி வீட்டில் பார்த்திருக்கிறாள்.

“வணக்கம்மா, இந்தக் காலையில...”

“ஒண்ணில்ல, அந்தப் பய்யன் ஏதோ அடிதடி சண்டன்னு முழங்கால உடச்சிட்டு வந்தான், ராத்திரி எங்க வூட்டுப் பக்கம். அவன ஆஸிபத்திரிக்கு அனுப்பிச்சி ஊசி போட்டுக் கட்டுப்போட்டு வரச் சொன்னேன். அப்படியே பாத்திட்டுப் போகலான்னு...”

“ரொம்ப சந்தோசம்மா...”

குச்சியடுக்கும் இடத்தில் தான் குழந்தைகள் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏற்கெனவே வேறு இடங்களிலிருந்து வந்திருக்கும் குழந்தைகள் அவர்கள். மெழுகு முக்குபவர் ஆறு மணிக்குத்தான் வருவாராம்.

பிள்ளைகள் சாப்பிடும் இடம், தண்ணீர்க் குழாய், கழிவு அறை எல்லாவற்றையும் காட்டுகிறான் சாமியப்பன். அலுவலக அறையில் நல்ல காபி வரவழைத்து வைத்திருக்கிறான்.

“தினமும் இப்படி ஐந்து மணிக்கே வந்துடுவீங்களா நீங்களும்?”

“ஆமாம்மா, கணக்கப் பிள்ளைகளும் வந்திடுவா. ஏழரை மணிக்குத் திரும்ப வீட்டுக்குப் போய் காலை வேலையெல்லாம் முடிச்சிட்டு ஒம்பது மணிக்கு வருவோம் மறுபடி.”

“பிள்ளைங்க?”

“அதுங்களும் எந்திரிச்சி முகம் கழுவிட்டு எதனாலும் சாப்பிடும். உள்ளாற டீக்காரன் வருவான். சில பேருங்க டீ வாங்கிக் குடிப்பாங்க. சிலதுங்க பத்து மணி வரையிலும் அடுக்கிட்டுச் சோறு தின்னும்... பட்டினி கிடையாது!”

“ஏழுக்கெல்லாம் ரங்கேஷ் வந்து பார்த்திட்டுப் போவாரு. போன் பண்ணி நடராசுவ வண்டி எடுத்திட்டு வரச் சொல்றேன்...”

“வேணாம் ஒரு ரிக்‌ஷா கொண்டாரச் சொல்லுங்க. எங்க வீட்டுக்குப் போறேன்...”

சாமியப்பன் அவள் கூடவே வெளியில் வருகிறான்.

மெழுகு முக்கும் ஆள், மருந்து தோய்க்கும் ஆள், கட்டை சரி பண்ணும் தொழிலாளி என்று வந்த வண்ணமிருக்கின்றனர். முற்றத்தில் வெளுப்புத் தெரிகிறது. அவள் வண்டியில் ஏறிக் கொள்கிறாள். அது புதுநகரத்தின் சாக்கடைத் தெருக்களைத் தாண்டிச் செல்கிறது. புது நகரத்தின் பழைய பகுதிகளின் நெருக்கமான வீடுகள். வாசல் தெளித்துக் கொண்டும் பெருக்கிக் கொண்டும் இருக்கும் பெண்கள் ரிக்‌ஷாவில் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று பார்க்கின்றனர். வீட்டு வாசலில் வேலம்மா கோலமிட்டுக் கொண்டிருக்கிறாள். அப்போது ரிக்‌ஷா வந்து நின்றது.

அத்தியாயம் - 7

சாக்கடை மேல் போட்ட பாலத்தில் உயர்ந்த வாயில்படிகள். இரு பக்கமும் உயர்ந்த திண்ணைகள். வலப்பக்கத்துத் திண்ணையில் வாயில். அந்த வாயிலில் ஒரு கதவு திறந்திருக்கிறது. அப்பா இருக்கிறார் என்று பொருள்.

“விஜி, வாம்மா! இந்தக் காலையில ரிக்சா வருதேன்னு பார்த்தேன்...” என்று வேலம்மாவின் வரவேற்புக் குரல் அவரை வாயிலில் எட்டிப் பார்க்கச் செய்தது.

“ஐயா! விஜி வந்திருக்கு! சுமதி! அக்கா வந்திருக்கு பாரு!” சுமதி விசுப்பலகையில் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருக்கிறாள். உள்ளூர் பெண்கள் கல்லூரியில் இரண்டாவது வருஷமாகப் படிக்கிறாள். கணிதம் முக்கிய பாடம். விஜியைப் போன்ற வாட்ட சாட்டமான வடிவமோ, சிவந்த நிறமோ சுமதிக்கு இல்லை. அவள் தகப்பனைப் போன்ற சாயலுடன் கருவலாக இருக்கிறாள். இருவரையும் சகோதரிகள் என்றே சொல்ல இயலாது. விஜி அந்த இடத்தைப் பார்க்கையிலேயே ஏதோ ஒரு விடுதலை மகிழ்ச்சியை உணருகிறாள். ‘ட’ வடிவிலான கூடம். ஓர் புறம் சமையலறை. ‘ட’வின் உட்பகுதி திறந்த முற்றம். அதில் அடிகுழாய். கோடை வந்தால் தண்ணீருக்குக் கஷ்டம். மாரிசாமி எங்கிருந்தோ கொண்டு வந்து ஊற்றுவான் முன்பெல்லாம். இப்போது நகராட்சிக் குழாய் வைத்திருக்கிறார்கள். அதிலும் தண்ணீர் வராமலிருப்பது உண்டு. சாக்குப் போட்டு மூடிய கூடைகளில் செய்து முடித்த மேல் பெட்டிகள் தெரிகின்றன. கீழேயே ஓர் குவியல் சுவரோரமாக ஒதுங்கியிருக்கிறது. இதெல்லாம் இல்லாத வீடுகளே புதுநகரத்தில் கிடையாது. உயரக் கொடியில் சுமதியின் பாவாடை தாவணி கச்சிதமாகத் துவைத்து உலர்த்தப்பட்டிருக்கின்றன. இன்னொரு புறக்கொடியில் வேலம்மாவின் வண்ணமிழந்த சேலை காய்ந்திருக்கிறது. வேலம்மா எப்போதேனும் பளிச்சென்று நினைவில் நிற்கக் கூடிய விதமாகச் சேலை உடுத்தியே விஜி பார்த்ததில்லை. விஜியின் திருமண வைபவத்துக்கு வந்த போது கூட அவள் ஒதுங்கி பார்த்துவிட்டுப் போய் விட்டாளாம். விஜிக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. சுமதியிடம் வந்து கேட்டாள். “ஏண்டி, வேலம்மா வரல?... அவள உள்ள கூட்டிட்டு வரவேயில்லையா?”

“நான் என்ன விஜி பண்ணுவேன்? மாட்ச் ஃபாக்டரி வொர்க்கர்ஸ் நின்னாங்களே, அங்க பார்த்தேன். வான்னு சாடை காட்டினேன். வராம அவ அங்கியே நின்னா, போயுட்டா போல இருக்கு. அவுங்க காம்ப்ளக்ஸ நம்மால போக்க முடியாது” என்றாள்.

தன்னை விட, சுமதிக்குத்தான் வேலம்மா மிகுந்த நெருக்கமுடையவள். ஏன், சுமதியைப் பெற்றதிலிருந்தே தாய் நலக்குறைவாகப் படுத்துவிட்டாள். மதுரை ஆஸ்பத்திரி, வேலூர் மருத்துவமனை என்று கொண்டு போனார்கள். அம்மா வேலூரில் இறந்த போது சுமதிக்கு வயது இரண்டு. அவர்கள் இருவரையும் வேலம்மாதான் பார்த்துக் கொண்டாள். ஆனால் இந்த நெருக்கத்தையும் உறவையும், வெளிச்சமுதாயம் அங்கீகரிக்கவில்லை என்ற உணர்வுடனேயே அவள் நடந்து கொள்கிறாள்.

“என்னப்பா, திகச்சிப் போனாப்பல நின்னிட்டே? நல்லாருக்கியா, சந்தோசமாயிருக்கியா! மாப்பிள நல்லாருக்காரா, மாமியா, நாத்தூனெல்லாம் சொகமா?...” என்று அன்புக் கையால் தோள்களைப் பற்றிக் கொண்டு கேட்கிறாள்.

கூழை பாய்ந்த முடியை இரண்டாகப் பிரித்து, அள்ளிச் செருகியிருக்கிறாள். ஒட்டிய கன்னங்கள், துருத்திக் கொண்டிருக்கும் கன்னத்தெலும்பு. புருசன் இறந்து இந்த வீட்டுக்கு அவள் செந்திலுடன் வருகையில் செந்தில் எட்டு வயசுப் பையன். சுமதியை அம்மா நிறைமாதமாக வயிற்றில் கொண்டிருந்தாள். அப்போதும் வேலம்மாளுக்கு இந்தப் பின் கொசுவக்கட்டுத்தான். முடி பளபளப்பாக அடர்த்தியாக இருந்தது. ஐயாம்மா இவளைச் சமையலறையில் சேர்க்க மாட்டாள். வாயிலில் தீப்பெட்டி ஒட்டுவாள். செந்தில் குச்சி அடுக்கிவிட்டுப் பள்ளிக்கூடம் போவான்.

வேலம்மா சாமான் கழுவி, அம்மாவின் துணியெல்லாம் கசக்கிப் போட்டு, கடைக்குப் போய் எல்லா வேலைகளையும் செய்வாள். அம்மா வேலூர் ஆஸ்பத்திரியில் இறந்து போனதைத் தொடர்ந்து அப்பா அறுபத்திரண்டில் சிறைக்கு சென்ற போது கூட ஐயாம்மா இந்த வீட்டில் தான் அவர்களை வைத்துக் கொண்டிருந்தாள். அவள் கூடச் செந்திலுடன் குச்சியடுக்குவாள். போட்டி போட்டுக் கொண்டு உள்ளே ஐயாம்மாவும், திண்ணையில் வேலம்மாவும் மேல் பெட்டி பண்ணிக் குவிப்பார்கள். ‘ட்ரா’ என்னும் அப்பெட்டிக்குக் கூலி அதிகமென்று வேலம்மா அதுதான் மிக விரைவாக ஒட்டிப் போடுவாள். சிட்டையில் கணக்கப்பிள்ளையிடம் அவள் தான் பதிந்து வந்து பணிவாகக் கீழே வைப்பாள். கூலித் தொகையையும் அவ்வாறே ஆச்சியின் கையில் கொடுக்காமல் கீழே வைத்துவிட்டு நிற்பாள்...

அந்தக் காட்சிகள் படம் பிடித்தாற்போல் நினைவு வருகின்றன.

இந்த ஊரில், ஆணின் ஆதரவு இல்லாத காலத்திலும் பெண்கள் கௌரவமாக உழைத்துப் பிழைக்க முடியும். சுமதி கல்லூரியில் படிக்கிறாள். இவள் செலவுக்கு இவளும் தீப்பெட்டி செய்யலாம்...

பரபரவென்று உள்ளே சென்ற வேலம்மா, கிளாசில் கருப்பட்டி போட்ட கருங்காப்பி கொண்டு வருகிறாள். ஓரமாக இருக்கும் சிறு முக்காலியில் வைக்கிறாள்.

அப்பா அதை எடுத்துக் கொண்டு, “விஜிக்கு...?” என்று கேட்கிறார்.

“பால்காரன் வரலியே ஐயா? ஒவ்வொரு நா நேரங் கழிச்சி வரா...”

“எனக்கும் இதே காப்பி குடு வேலம்மா!”

அவள் உள்ளே சென்று உடனே இன்னொரு தம்ளர் காபியை எடுத்து வருகிறாள் விஜிக்கு.

“எங்கம்மா? மாப்பிள வெளி ஊருக்குப் போறாரா?”

“இல்லப்பா. நேத்துக் காலம பெரியபட்டிக்கு வரியான்னாரு. அங்க கொண்டு விட்டுத் திரும்பிப் போயிட்டாரு. நான் ஐயாம்மாவப் பாத்திட்டுக் காலம குழந்தைகளைக் கூட்டி வர பஸ்ஸில் வந்தேன்...”

“எல்லாம் சுகமாத்தான இருக்காங்க?”

“உம்...” என்றவள் தொழிற்சங்கம் நடத்துபவர் என்ற நிலையில் சிறுவர் சிறுமியரின் பிரச்னைகளை அறிந்திருக்கிறாரா என்று கேட்கலாமா என்று யோசனை செய்கிறாள்.

“என்ன விசயம் விஜி?”

“ஒண்ணுமில்ல. தொழிற்சாலைக்குள்ளாறப் போனேன். குழந்தைகளைக் காலைத் தூக்கத்தைக் குலைத்து எழுப்பி வரதப்பத்தி யோசிக்கணும். நான் இதைப் பத்தி அவங்ககிட்ட சொல்லணும். நீங்க இத்தன நாள் இதை ஏன் கவனிக்கலன்னு தெரியல...”

“விஜிம்மா, அது ரொம்ப சிக்கலான பிரச்னை. நீ ஒண்ணு வச்சிக்க. குழந்தைகளும் பெண்களும் அதிகமாக இருக்கிற தொழிலில் அவங்களை ஒன்று சேர்க்கவே முடியாது. அதனால, அப்படித்தான் போயிட்டிருக்கு...”

அவருடைய மறுமொழி அவளுக்குத் திருப்தியாக இல்லை.

“முக்கியமான பிரச்னையைச் செய்ய முடியாதுன்னு சொல்றதுல என்ன புண்ணியம். நேத்து பஸ்ஸில் பெரியபட்டி சின்னப்பட்டிப் பிள்ளைகளுக்கிடையே சண்டை. எனக்குத் தூக்கி வாரிப் போட்டாப்பல இருந்திச்சி. தீண்டாமை உணர்வு சிறு பிள்ளைங்களிடமா? ஆறுமுகத்தின் டீக்கடையில் தனி டம்ளர் இருக்குதாமே? நீங்கல்லாம் முன்னேற்றக் கட்சி, கொள்கைப் பிடிப்புடையவங்கன்னு நினைச்சேன். நேத்து சிவகணபதி சார் சொன்னார். எனக்கு எப்படியோ இருந்தது.” முகம் சிவப்பேறி விட்டது.

“நீ இதெல்லாம் கவனிக்கிறதில ரொம்ப சந்தோஷம். ஆறுமுகம் கடையில் என்ன, எல்லாக் கிராமத்திலும் நடக்கிறதா இது. ஆனா, இந்தப் பெரிய நகரத்தில, எல்லா ஓட்டலிலும் யாரும் வந்து சாப்பிடலாம். கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட மக்களை வச்சி அவன் பிழைப்பு நடத்துறான். அவன் சொன்னான், ‘அண்ணாச்சி, நீங்க இதுக்குன்னு ஆபீசருங்களக் கூட்டிட்டு வந்து எனக்குத் தண்டனை குடுக்கச் சொல்லுங்க. பட்டுக்கிறேன். ஆனா, அதனால தீண்டாமை உணர்வு இங்க போறதில்ல. எனக்கு வியாபாரம் ஆகணும். அதுதான் சோறு. சோத்துப் பிரச்சினையிருக்கறப்ப இதெல்லாம் பாக்க முடியாதுங்கறான். குருவிமலைப் பக்கம் இப்பிடிப்புடிச்சித் தண்டனையும் குடுத்தா. ஆனா அவன் செயிலுக்கே போயிட்டு வந்து திரும்பக் கடை வச்சிருக்கிறான். இப்பவும் அந்தத் தனிக்ளாசு இருக்கு.”

“சுதந்திரம் வந்து முப்பது வருசமாயிட்டுதுன்னுறீங்க... ஆனா, மட்றாசில இப்படியெல்லாம் இல்ல.”

“இந்த ஊரில கூட இல்லங்கறேன். கிராமத்துல கீழ் நிலை, தன்னம்பிக்கையின்மை, அறியாமை, இதெல்லாமும் இருக்கு. இதை ஒழிக்காமல் எதுவும் செய்ய முடியாதம்மா!”

விஜி காபித் தம்ளருடன் யோசனையில் ஆழ்ந்து போகிறாள். ஐயாம்மா, இந்தத் தகப்பனைப் பெற்றவள் இந்த வீட்டுக்கு வருவதில்லை. ஏனெனில் இந்த வீட்டில் வேலம்மாள் தொட்டால் தான் நீரருந்துவதில்லை என்றிருந்த அவளை அவர் கோபித்தார்.

வேலம்மாளும் அவள் புருசனும் பிழைக்க வழி தேடி வறண்ட கிராமப் பகுதியிலிருந்து வந்தவர்கள். கோவிந்தசாமி கொஞ்சம் படித்தவன். விஜியின் தந்தை வேலை பார்த்துக் கொண்டிருந்த சிறு அச்சகத்தில்தான், அவன் முதலில் பைண்டிங், தாள் வெட்டுதல் போன்ற வேலைகளுக்கு வந்தான். ஐந்து ரூபாய் மாச வாடகை கொடுத்துக் கொண்டு எளியவர்கள் வாழும் பகுதியில் ஓர் கையகலக் குடிசையில் வாழ்ந்த அவனுக்கு அப்போது கிடைத்த நாற்பது ரூபாய்ச் சம்பளம் பற்றவில்லை என்று வேறு வேலைக்கு முயன்று கொண்டிருந்தான். பிறகு ஒரு நாள் சம்பளத்தை வாங்கிக் கொண்டு போனவன் வரவேயில்லை. ஏழெட்டு மாசங்களுக்குப் பிறகு, ஒரு நாள் வேலம்மா, கையில் பிள்ளையுடன் இந்த வீடு தேடி வந்து ஐயாம்மாவிடம் அழுதாள். குடிசை நெருப்புப் பற்றிக் கொண்டு எரிந்து விபத்தில் அந்த வரிசையில் இறந்து போனவர்களில் கோவிந்தசாமியும் ஒருவன் என்றும், எல்லா உடமையும் போய் நடுவீதியில் நிற்பதாகவும் சொல்லி அழுதாள். கோவிந்தசாமி ஃபயர் வொர்க்ஸ் எதிலோ வேலை செய்து கொண்டிருந்தானாம். பட்டாசுப் பொறி பறந்து குடிசைகள் எரிவது அங்கு அபூர்வமான நிகழ்ச்சியல்ல. பாட்டிதான் மனமிரங்கி அவளைத் திண்ணையில் தங்கச் சொன்னாள். மறுநாள் காலையில் வாசலில் கட்டைக் கணக்குப்பிள்ளை திருவிளக்கு மாட்ச் வொர்க்ஸில் இருந்து குச்சியடுக்குவதற்குச் சட்டங்களும் குச்சிகளும் கொடுக்க வந்தபோது, தாயும் பிள்ளையும் வாங்கிக் கொண்டார்கள். நாள் முழுதும் குச்சியடுக்குவதோடு, பாட்டிக்கு உதவியாக சாமான் கழுவி, வீடு கூட்டி மேல் வேலை செய்யும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டாள். அம்மா பிரசவத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால் அவள் உதவி வேண்டியுமிருந்தது. அப்பா சிறையிலிருந்து வந்த பின், வேலம்மாவைப் பாட்டி நடத்தும் விதம் பிடிக்காமல் முரண்பட்டார். அவர் பிடித்தால், பிடிவாதக்காரர். சிறையிலிருந்து வந்த பின்னரே அவருக்கும் மாமன் வீட்டாருக்கும் தொடர்பு முற்றிலும் அறுந்து போயிற்று. கொஞ்சம் நெருங்கியிருந்த பெரிய மாமனும் சர்க்கரை நோய் முற்றி இறந்துவிட்டார். அம்மாவும் இல்லை. முழுசுமாகக் கட்சி, தொழிற்சங்கம் என்று பற்றிக் கொண்டார். சுமதி அப்போதெல்லாம் வேலம்மாளிடம் தான் ஒட்டிக் கொண்டிருப்பாள். வேலம்மாதான் சோறூட்ட வேண்டும். வேலம்மா தான் முடி சீவ வேண்டும். பாண்டியின் தீண்டாமைக்கு இது மிகப் பெரிய குந்தகமாக இருந்தது. இதன் காரணமாக மூண்ட சண்டைதான், அப்பா ஆத்திரமாகப் பேசினார்.

“வேலம்மா தா இந்த வீட்டில் இனி சோறு பொங்குவா! நானும் போனாப் போகுதுன்னு பாக்குறே! என் வீட்டிலேயே நான் இந்தக் கேட்ட வச்சிட்டு ஊருக்கு உபதேசம் பண்ணப் போற! அம்மாவானான்ன, ஆரானா என்ன? உனக்கு வயசாச்சி, வேல செய்ய முடியாது, உக்காந்திரு?” என்றார்.

பாட்டிக்கு ரோசமென்றாலும் ரோசம். சின்னப்பட்டி வீட்டில் அப்போது ஒரு பிராஞ்சு தபாலாபீசுக்காரர் இருந்தார். அப்போது பெரியபட்டிக்கும் சின்னப்பட்டிக்குமாக இருந்த தபாலாபீசு அதுதான். முத்திரை பெரியபட்டி. அவரை முழுசுமாகக் காலி செய்யச் சொல்லிவிட்டு, அதற்குக் கூடக் காத்திராமல், பாட்டி மறுநாளே அந்த வீட்டை விட்டுப் போய்விட்டாள். பஞ்சநத மாமனின் அக்காள், பாட்டிக்கு இளையமைத்துனர் மகள் தானே! அங்கு போய்த் தங்கிக் கொண்டாள். அன்று சென்றவள் தான்.

வேலம்மா இந்த வீட்டு உடைமைக்காரி போலான பிறகு விஜியை அங்கே விட்டு வைக்க அவளுக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. மளிகை என்று முதலில் தொடங்கி, சிறுகச் சிறுக ஹார்ட்வேர், பெயிண்ட் போன்ற சாமான்கள் விற்பனை செய்யும் கடைகளுக்குச் சிற்றப்பன்மார் சொந்தக்காரர்களாகியிருந்தனர். இருவருக்கும் திருமணமுமாகியிருந்தது. விஜி ஏழாவது படித்துக் கொண்டிருக்கையில் சிற்றப்பா வந்து அவளை அழைத்துச் சென்றார்.

வேலம்மாவையும் அவள் தந்தையையும் பற்றிக் கண்டு காணாதது போல் உறவினர் பேசாமல் இல்லை. “நாந்தா இந்தப் பாவத்துக்கு அடிகாரணமாயிருந்தே! என்னமோ அவந்தலையெழுத்து!” என்று புருவம் உயரப் பாட்டி பெருமூச்செறிவாள்.

ஆனால் விஜி அந்த வீட்டுக்கு ஆண்டுதோறும் வந்து போகிறாள். வினாத் தெரிந்த நாளிலிருந்து, வேலம்மா எப்படி இருந்தாளோ அப்படியே இருக்கிறாள். அப்பா எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார். ஆண்டுகள் அவர்களுடைய வெளித் தோற்றத்தில் முதுமையைக் கூட்டியிருக்கின்றன. ஆனால் அவர்களுடைய உள்ளங்களில் எந்தவிதமான பொருளுக்கும் இடமில்லாத ஒருவருக்கொருவர் கடமைப்பட்ட ஆதரவான உறவைத் தவிர வேறு எந்தவித மாறுதலும் தெரியவில்லை.

செந்தில் குச்சியடுக்கிவிட்டுப் பள்ளிகூடத்துக்குப் போனாலும், அவனால் ஒன்பதாம் வகுப்பையே கடக்க முடியவில்லை. படிப்பதற்காக அப்பா அவனைக் கடிந்து கொள்வார். மூன்றாம் முறையாக அவன் பள்ளிக்கூடத்தில் தவறியதும், வீட்டை விட்டு ஒருநாள் ஓடிப் போனான்.

காலண்டர் வார்னிஷ் போடும் ஒரு சிறு தொழிலகத்தில் தாள் கட்டிக் கொண்டிருந்த அவனை அப்பா பார்த்துவிட்டார். காதைப் பிடித்து இழுத்து வந்தார். இந்த ஊரே வேண்டாமென்று கொஞ்சம் கஷ்டப்பட்டு, செங்கற்பட்டுப் பக்கம் மாணவர் விடுதியுள்ள ஓர் பள்ளியில் கொண்டு சேர்த்தார். பத்தாவது படித்தான், சிரமப்பட்டு, அந்தப் பள்ளியிலிருந்து அவன் வெளியேறியதை, பள்ளியிலிருந்து வந்த தகவல் தான் அறிவித்தது.

நாலைந்து ஆண்டுகள் அவன் அப்பாவின் கண்களிலேயே பட்டிருக்கவில்லை. லாரி கிளீனராக இருப்பதாகவும் ஒரு முறை அவள் லீவுக்கு வந்த போது வேலம்மா கூறினாள். சென்ற ஆண்டில் ஒரு நாள் விஜியைப் பஸ் நிறுத்தத்தில் பார்த்துவிட்டு ஓடிவந்தான்.

“பாப்பா? நல்லாயிருக்கியா?...”

அவனை அவளுக்கு அடையாளமே தெரியவில்லை. அவளை விட ஒரு வயசு பெரியவனாக இருப்பானோ சமமாகவே இருப்பானோ? ஆனால் அந்தக் காலத்தில் வேலம்மா அவளைப் பாப்பா என்று தான் அழைப்பாள். அதையே அவனும் வழக்கமாக்கியிருந்தான். வெளித் திண்ணையில் பிஞ்சு விரல்களால் குச்சியடுக்குவான். அவளுக்கு வணங்காது. ஒரு முறை தனது பென்சிலை எடுத்துக் கொண்டான் என்று அவன் அடுக்கிய குச்சியைக் கலைத்து விட்டாள். உதடு பிதுங்க அழுது கொண்டு பெட்டி ஒட்டும் அம்மாவிடம் புகார் செய்ததும், “போனாப் போகுது, நம்ம பாப்பாதானே? அழுவாத!” என்று அவள் சமாதானம் செய்ததும், “நீ எனக்கு அஞ்சு காசி தரணும்!” என்று அவன் விரலை ஆட்டிக் கருவியதும் அவள் அழகு காட்டியதும் நினைவுக்கு வந்தன.

அந்தச் செந்தில், வாட்டசாட்டமாக செம்மையும் கருமையுமாக வயிரம் பாய்ந்தாற் போன்ற மேனியுடன் காட்சி தந்தான். “என்ன பாப்பா? அடையாளம் தெரியலியா? செந்தில்...” என்று சிரித்தான். தான் லாரி ஓட்டுவதாகவும், இந்தியா முழுவதையும் சுற்றுவதாகவும் சொன்னான். பிறகு வீட்டு முகவரி கேட்டு வாங்கிக் கொண்டு, மறுநாள் திராட்சையும் ஆரஞ்சும் ஆப்பிளுமாக வாங்கிக் கொண்டு காலையில் வீட்டுக்கு வந்தான். மரியாதையும் பணிவுமாக அவன் பார்த்துவிட்டுப் போன போது, “அவ மகனா இவெ? நல்லாயிருக்கிறானே?” என்றாள் பெரிய சின்னம்மா கூட. அப்பாவும் கூட, “ஏதோ தொழிலில் வந்து விட்டான். பிழைக்கட்டும்” என்று அவனிடம் கடுமை காட்டவில்லை என்று வேலம்மா சொன்னாள்.

“விஜி, நீ இங்க இருக்கேல்ல?... நான் சாப்பாட்டுக்கு வந்திடுவேன்...” என்ற அப்பாவின் குரல் அவளை நிமிரச் செய்கிறது.

“...ம்...? ஆகட்டும்பா!” என்று அவள் எழுந்திருக்கிறாள்.

அத்தியாயம் - 8

காத்தமுத்து குச்சிகளுக்கு மெழுகு தோய்க்கும் இடத்தில் தான் வேலை செய்து கொண்டிருந்தான். பிள்ளைகள் கொண்டு வரும் குச்சிச் சட்டத்தை வாங்கி மெழுகு தோய்க்கும் பூவலிங்கத்திடம் கொடுப்பதும், அதை அவன் காயும் மெழுகில் தோய்த்துக் கொடுப்பதும் அப்படியே வாங்கி அருகிலுள்ள மருந்தறையில் கொடுப்பதும் அவன் வேலைகள். இதற்கு மாதச் சம்பளம்.

காலில் அடிபட்டு, ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டுமென்று இருப்பதால், அவனைக் குச்சியடுக்க உட்கார்த்தி வைக்கிறான் மாரிசாமி. சின்னப்பட்டிப் பிள்ளைகளுக்கென்ற பகுதியில் கண்காணிப்பவன் மாரிசாமிதான். மாரிசாமிக்கும் சின்னப்பட்டிப் பிள்ளைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவன் பிறந்த மண் அது. அவனுடைய அம்மா கடலைக் காட்டில் வேலைக்குச் சென்ற இடத்தில் பாம்பு கடித்துச் செத்துப் போனாளாம். அவனுக்கு நான்கு வயதாக இருந்த போது, அப்பன் வேறு ஒருத்தியைத் துணை சேர்த்துக் கொண்டு ஊரை விட்டே வேறெங்கோ பிழைக்கப் போய் விட்டானாம். ஆதரவற்று அந்த மண்ணில் எப்படியோ பிழைத்த அவனைப் பெரிய அரிசன மாணவர் விடுதியில் சண்முகம் தான் சேர்த்து விட்டார். எட்டு வரையிலும் சுமாராகப் படித்தான். பின்னர் ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு வருடங்கள் என்று தங்கி விட்டான். பத்தாவதை முடிக்க முடியவில்லை.

இளஞ்சேரன் தொழிலகம் தொடங்கியபின், அங்கே முதன் முதலாக வேலைக்கு வந்தான். தன்னுடைய ஊரென்று மட்டுமில்லை, தாழ்த்தப்பட்ட வகுப்பிப் பிள்ளைகள் என்ற கசிவு அவனுக்கு உண்டு. அவனுக்கென்று தனியாகத் தங்க இடம் ஏதுமில்லை. சில நாட்கள் இரவு பத்து மணிக்குச் சண்முகத்தின் வீட்டுத் திண்ணையில் வந்து படுப்பான். காலையில் எழுந்து செல்வான். தொழிற்சங்க அலுவலகம், படிப்பகம் என்று ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்திருக்கின்றனர். அங்கேயே தங்குவான்.

காலை நான்கு மணிக்குத் தொழிலகத்துக்குள் வந்தால் ஏழிலிருந்து எட்டுமணி வரையிலான காலைக் கடன்களுக்கான விடுப்பு நேரம் தவிர இரவு ஒன்பதரை அல்லது பத்துமணி வரையிலும் தொழிலகத்துக்குள் தான் வாழ்வு கழிகிறது.

யானைக் கொட்டடி போல் விரிந்திருக்கும் கூடத்தில், ஒவ்வொரு யானைக்கும் உரிய இடத்தை வரையறுத்தாற் போன்று குச்சியடுக்கும் பகுதி சிறு சிறு பிரிவுகளாக வரையறுக்கப் பெற்றிருக்கிறது. மாரிசாமி எப்போதோ ஒரு சினிமாவில் பார்த்த யானைக் கொட்டடியைத்தான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறான். ஒவ்வொரு தடுப்பிலும் ஒரு யானைச் சக்தியே இயங்குவதாக நினைக்கிறான். ஆனால் அங்கு உட்கார்ந்து குச்சியடுக்கும் பொடிசுகளுக்குத் தங்கள் சக்தியைப் பற்றி எதுவும் தெரியாது. ஒட்டு மொத்தமாக, உருவத்திலேயே வலிமைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் யானையையே மனிதன் அடக்கி விடுகிறான். ஆனால் இந்தப் பொடிசுகளுக்கு ஒற்றுமை பற்றியோ, வலிமை பற்றியோ யார் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்? மாரிசாமி, பசி என்ற பூதாகாரத் தேவை ஒன்றைப் பிஞ்சுப் பருவத்திலேயே உணர்ந்திருப்பவன். அங்கே உட்கார்ந்து குச்சியடுக்குபவர்கள் யாருக்குமே பெற்றோரின் பாசம் தெரியாது. தாயின் வயிற்றில் உருவாகும் போதே பசி என்ற ஒரே தேவையின் பூதாகார வடிவில் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கான ஆசை உந்துதல்கள் எப்போதும் கண்களில் நிழலாடிக் கொண்டிருக்கும். அவற்றில் முக்கியமானது, உறக்கம், மாரிசாமி உறக்கக் கலக்கம் தெளிய வைக்கச் சில சமயங்களில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துத் துடைத்துக் கொள்ளச் சொல்வான். சட்டங்களைக் கொண்டு வந்து கொடுப்பான்; சின்னஞ் சிறிசுகளுக்குச் சில சமயங்களில் குச்சி தெருட்டியும் உதவி செய்வான்.

கட்டை என்று அழைக்கப் பெறும் முழுச் சட்டத்தில் குறுக்காக ஐம்பத்திரண்டு வரிச் சட்டங்கள் உண்டு. ‘சக்கை’ எனப்பெறும் அவற்றைத் தனியாக எடுத்து விடலாம். அந்த வரிச் சட்டத்தில் ஐம்பது குச்சிகளைப் பொருத்தி வைக்கக் கூடிய வரைகள் இருக்கின்றன.

ஒவ்வொரு சக்கையையும் தனியாக எடுத்து, சிறுவிரல்களால் குச்சியைத் தெருட்டி வரைகளில் படியப் பரப்பி அவர்கள் பொருத்துவதை இடைவிடாமல் கண்காணிப்பாளன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். இங்கே வேலை மந்தமாகிவிட்டால் முழு இயக்கமும் பாதிக்கப்பெறும். இந்தக் கண்காணிப்பாளனைக் கண்காணிக்க மானேசர் வருவார்; சில சமயங்களில் முதலாளியும் வந்து போவார்.

குச்சியடுக்கப்பட்டதும் சட்டங்கள் மெழுகுப் பகுதியில் மெழுகுத் தோய்க்கப் பெற்று, மருந்து முக்கும் பகுதிக்குச் செல்லும் நுனியில் மருந்து தோய்க்கப்பெற்று, அங்கேயே காற்றுப்பதம் செய்யப்பட்ட அறையில் அடுக்குகளில் காயும். பின்னர் இச்சட்டங்கள் இன்னொரு கூடத்துக்குச் செல்கின்றன.

வரிசை வரிசையாக இளம் பெண்கள் இருபுறங்களிலும் மேல்பெட்டி அடிப்பெட்டி என்று போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கின்றனர். சட்டத்திலுள்ள வரிகளைப் பிரித்து மருந்து முக்கிய குச்சிகளை ஒரே ‘தாவாக’ அள்ளி அடிப்பெட்டியில் போட்டு, மேல் பெட்டியில் செருகி இன்னொரு சட்டத்தில் அடுக்குகிறார்கள். குரோசு குரோசாகப் பெட்டிகள் சட்டங்களில் அடுக்கப்பெற்ற பின், பெட்டிகளுக்கு மருந்து பூசக் கொண்டு செல்லப்படுகின்றன.

பின்னர், மீண்டும் இன்னொரு கூடத்தில் வளைக்கரங்கள் இப்பெட்டிகளை உருவி தொழிலகத்தின் வண்ணச் சீட்டும், சுங்க முத்திரையும் ஒட்டுகின்றன. இறுதியாக ‘டஜன்’ என்று கட்டுக்குள் அடங்கி, ஐந்தைந்து குரோசுகள், அல்லது எழுநூற்று இருபது பெட்டிகள் கொண்ட கட்டுக்களாகக் குவிகின்றன.

காத்தமுத்துவுக்கு அருகில் லட்சுமி உட்கார்ந்திருக்கிறாள். மூக்குத்தி துருத்திக் கொண்டு, மூக்குத் துவாரத்தில் கருப்பாக இரத்தம் கட்டியது துடைக்கப்பட்டிருக்கவில்லை. குர் குர்ரென்று மூச்சுவிட்டுக் கொண்டு அவள் குச்சியை அள்ளித் தெருட்டி வரைகளில் இடுவது மிக மெதுவாக இருக்கிறது. அவள் ஒரு சக்கையில் குச்சி நிரப்புமுன் காத்தமுத்து இரண்டு முடித்து விடுகிறான்.

“ஏ நீ இங்ஙன வந்திட்ட?” என்று மறுபக்கம் உட்கார்ந்திருக்கும் பேராச்சி அவனைக் கேட்கிறாள்.

“நா இங்க விட்டுப் போட்டுப் பட்டணம் போகப் போறேன். இப்ப வந்திட்டுப் போனாகளே, விஜிம்மா அவங்க கூட்டிட்டுப் போவா...” என்று மெல்லக் கிசு கிசுக்கிறான்.

“நெசமாலுமா?”

“ஆமா. நேத்து ராத்திரி அவுங்கதா கால்ல கட்டுப் போட்டா. சோறும் பகடாவும் குடுத்தா. அப்ப சொன்னாக, என்னப் பட்டணம் கூட்டிட்டுப் போறேன்னா.”

“சீ, பொய்யி!”

“நீ வாணாப் பாரு. அவியதா மொதலாளியம்மா. இப்ப அவிய வந்து கணக்கவுள்ளட்டச் சொல்லித்தா, மாரிசாமி அண்ணாச்சி இங்க கொண்டிட்டு வந்தா...”

“ஏ, என்ன குசுகுசுப்பு? விரிசாவட்டும்!”

மாரிசாமி கையில் சக்கையை வைத்துக் கொண்டு அதட்டுகிறான்.

ஏழரை மணிக்குள் இரண்டு சட்டம் அடுக்கிவிட்டான் காத்தமுத்து. லட்சுமி ஒன்றே முடிக்கவில்லை. ஒரு சட்டம் அடுக்கினால் பதினைந்து பைசாவுக்குரிய ‘சில்லு’ கிடைக்கும்.

மாரிசாமி தான் வீடு செல்லுமுன், “லே, காத்தமுத்து வாடா!” என்று கூட்டிக் கொள்கிறான்.

கழுகாசலம் அடுத்தப் பிரிவுக்குப் பொறுப்பாளன். “அண்ணாச்சி, இந்தப் பயலுக்கு ஊசி போட்டுக் கட்டுக் கட்டிட்டுவார, கொஞ்சம் முன்னப் பின்ன ஆனா பாத்துக்குங்க...” என்று கேட்டுக் கொள்கிறான்.

“நடப்பியாடா? பண்டாசுபத்திரிக்கு?...”

“ஊசி போடுவாங்களா அண்ணாச்சி...?”

“ஆமா, ஒனக்கு நல்லதுக்குத்தா...” அலுவலகத்தில் சீட்டு வாங்கி வரச செல்கையில் மானேஜர் பார்க்கிறார்.

“நீயா கூட்டிட்டுப் போறே? வாணாம். உன் வேலயப் பாரு போயி! நா வேற ஆள அனுப்புறேன்!”

அலுவலகப் பணியாளனிடம் சீட்டைக் கொடுத்து, “போப்பா, முதலாளியம்மா சொல்லியிருக்காவ... ஒரு ஊசி போட்டுக் கட்டுக்கட்டச் சொல்லு! இதுங்க அடிச்சி மண்டய ஒடச்சிட்டு எல்லாம் நம்ம தலையில வய்ப்பா!...” என்று அனுப்புகிறார்.

மாரிசாமி எட்டரைக்குள், மீண்டு தன் பொறுப்பேற்க வந்ததும் கழுகாசலம் “என்ன மாரிசாமி பொசுக்குன்னு வந்திட்ட? அதுக்குள்ளாறயா ஆசுபத்திரிக்குப் போயி வந்தாச்சி?”

“இல்ல இல்ல, மானேசருக்கு அதுக்குள்ளாற ஆயிரம் சந்தேகம். நீ உன் சோலியப்பாரு போன்னு அனுப்பிச்சுட்டா...”

“ஆமா, காலமே சின்ன முதலாளியம்மா வந்தாங்களாமே? நிசமா?...”

“அதா, பெரியபட்டிக்கி நேத்துப் போயிருக்காப்பல. சின்னபட்டிலதானே பெரியாச்சி இருக்காங்க? எப்படியோ என்னமோ, காலம பஸ்ஸில பிள்ளங்ககூட வந்தாங்க பாத்தேன். நேத்து பஸ்ஸில் போறப்ப...”

மாரிசாமி டக்கென்று பேச்சை நிறுத்திவிட்டு விரைகிறான், தன் இடத்துக்கு.

இந்தத் தொழிலகம் துவங்கி ஐந்து ஆண்டுகள்தானானாலும், இவர்களுடைய பழைய முள்ளுப்பட்டித் தொழிற்சாலையில் இருபது ஆண்டுகளாகக் கணக்கு வேலை பார்த்திருப்பவர் சாமியப்பன். இவருடைய மகன் மேல் நாட்டுக்குச் சென்று வந்து, சென்ற வருசத்திலிருந்து வண்ண அச்சுத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறான். ஒண்ணரை லட்சத்துக்குக் காமிரா வாங்கி வைத்திருக்கிறான் என்று சொல்கிறார்கள். வீரம்மன் காலனியில் மிகப் பெரிய வீடு கட்டியிருக்கிறார்.

கண்கள் எப்போதும் ஓர் துருவும் பார்வையால் துளைத்துக் கொண்டிருக்கும். கோபம் வந்துவிட்டால், நாவில் வசைகள் கூத்தாடும்.

“மாரிசாமி... இங்க வாடா!”

அவன் சட்டென்று திரும்பி நின்றான். “என்ன ஸார்?”

“மணி என்ன ஆச்சு?”

இளரத்தம் இந்த அசாதாரணமான தாக்குதலுக்குப் படிந்து போகாமல் கிளர்ந்துவிடுகிறது. “அறுவது ரூபா சம்பளத்தில் வாட்ச் வாங்கக் கட்டல சார்!”

மானேசரின் உப்பிய கன்னங்கள் சினத்தால் சிவக்கின்றன. “...ப்பயலே? எப்படியிருக்கு? சீட்டுக் கிழிஞ்சி போகும். ராஸ்கல்! எட்டு மணிக்கு வர வேண்டியவன். எட்டரைக்கு மெள்ள வர; கேட்டா, பேச்சு தடிக்கிறது; சாக்கிரதை!”

“சார், அநியாயமா ஏன் திட்டுறீங்க? நீங்க பெரியவங்க. நான் சின்னவன் தான். அதுக்காக மரியாதியில்லாம பேச வேணாம் சார்?”

“என்னடா, மரியாதி, பெரிய மரியாதி?...ப்பயங்களுக்கு மரியாதி வேணுமாமில்ல? நீ ஏழு மணிக்குப் போயிட்டு எட்டு மணிக்கு வர வேண்டியவந்தானேடா?”

“நான் எங்க ஸார் ஏழு மணிக்குப் போனேன்? விஜிம்மா வந்து சொன்னாங்கன்னு...”

“அயோக்கியப் பயலே!” அடி கொடுப்பது போல மானேசர் சீறுகிறார். “நாங்களே முதலாளி வீட்டுப் பெண்களைப் பேர் சொல்ல மாட்டோம்?... புழுக்கப் பயல், பேரில்ல சொல்றான்? போடா வேலையப் பாரு!”

மாரிசாமி இதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் துடிக்கும் உதடுகளை அழுத்திக் கொள்கிறான்.

மானேசர் ஐயா வந்து சத்தம் போட்டுவிட்டுப் போவதென்றால் அந்தப் பகுதி முழுமைக்கும் சவுக்கடி கொடுத்தாற் போலாகும். அதிலும் மாரிசாமியைக் கடிந்து கொண்டால், சின்னப்பட்டிப் பிள்ளைகளுக்குத் தங்களுக்கே தண்டனை நேரிட்டாற்போல ஒடுங்கிப் போவார்கள்.

பதினோருமணி சுமாருக்கு காத்தமுத்து புதிய கட்டுக்கள் தெரியும் கால்களுடன் வந்து உட்கார்ந்து கட்டை அடுக்கவில்லை. இளைப்பாறுவதற்கென்று ஒரு நீளமான அறைஉண்டு. அதில் தான் பசிக்கும் போது அவர்கள் வந்து சோறுண்ணுவார்கள். லேபிள் ஒட்டியோ குச்சி அடைத்தோ வேலை செய்யும் சில கைப்பிள்ளைக்காரிகள் ஏணை போட்டிருப்பார்கள். காத்தமுத்து அங்கு வந்து சுருண்டு படுத்துக் கொள்கிறான்.

பித்தானில்லாத நிசாரோ, சட்டையோ கவுனோ நழுவி விழ, முடிபிரிந்து விழ, கண்களும் மூக்கும் சுத்தமில்லாமல் நீர் வடிய, அந்தச் சிறுவர் சிறுமியரைக் காணக் காண மாரிசாமிக்கு ஆத்திரம் வருகிறது. அவர்களுடைய பெற்றோரைக் கண்டால் கொன்று விடலாம் போன்ற கோபம் உண்டாகிறது. “ஆவட்டும், ஆவட்டும்... என்ன பேச்சு?” என்று கனலைக் கொட்டுகிறான். எப்போதும் போல் கட்டையைத் தூக்கிச் செல்ல இயலாத சிறிதுகளுக்கு உதவவில்லை. தங்கப்பன் லொட் லொட்டென்று ஒவ்வொரு கட்டையையும் இறுக்கிக் கொடுக்கும் போதே, கைபார்க்கும் பழனிசாமி சரியாயில்லை என்று யாருடைய கட்டையையேனும் கலைத்துத் திருப்பி அடுக்கச் சொல்லும் போதோ அவன் அங்கு நின்று பார்க்கவில்லை. நீள நெடுக நடந்து கொண்டு, “ம், ஆவட்டும்! விரிசா!... யே, பேசாத...!” என்று திருப்பித் திருப்பிச் சொல்லுகிறான். சரேலென்று அழுகை உந்துவது போல் துயரம் நெகிழ்கிறது. விழுங்கிக் கொள்கிறான்.

அத்தியாயம் - 9

மயிலேசனுக்குக் காலையில் விழிக்கும் போது ஒரே தலைக்கனமாக இருந்தது. இரு பொட்டையும் அழுத்திக் கொண்டான். வெளிச்ச இயக்கங்கள் வந்து வெகுநேரமாகி யிருந்ததாகப் புரிந்தது. படுக்கையில் எழுந்து உட்கார்ந்து பக்கத்தில் சிகரெட் பெட்டிக்காகக் கை தேடிய போதுதான் விஜி இல்லை என்று நினைவு வந்தது. ஏனெனில் சிகரெட் பெட்டி அங்கு வைத்த இடத்தில் இருந்தது.

விஜி... விஜியைப் பெரியபட்டியில் விட்டு விட்டு வந்தான். ஆமாம், விசுவலிங்கம் நல்ல மது வகைகள் வந்திருப்பதாகச் சொல்லி, மாலையில் பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்திருந்தான். விசுவலிங்கம் முன்னாளையச் சுங்க அதிகாரி ஒருவரின் மகன். மயிலேசனுக்கு ஒத்த நண்பன். தீப்பெட்டிக்கு இன்றியமையாத ரசாயனப் பொருள்கள் விற்பனை உரிமை பெற்றிருப்பவன். அதனால் தான் விஜியைப் பெரியபட்டிக்குக் கூட்டிச் சென்றான். அவள் இருந்தால் பெரிய ரகளை செய்திருப்பாள். விநாடிக்கு விநாடி பணம் என்று தொழில் துறையில் நெருக்கடிகளாய் மனிதனின் நரம்புகளை இழுத்துப் பிடிக்கையில், இத்தகைய ஓய்வான உல்லாசத் தளர்ச்சிகள் வேண்டுமென்பதை ஒப்புக் கொள்ளவே மாட்டாள்.

அவள்... அவனை எதிர்பார்த்துக் காத்து இருக்கிறாளோ என்னவோ?... குளித்து உடைமாறிக் காலையுணவுக்கு அவன் கீழே வருகையில் மணி ஒன்பதரை ஆகியிருக்கிறது.

அம்மா பூசையறையில் பூசையை முடிக்கவில்லை. என்றாலும் அவனைக் கோபிக்க வருகிறாள். அம்மாவும் பையனும் ஒரே அச்சின் வார்ப்புகள் என்ற மாதிரியான சாயல். செவிகளில் பெரிய வயிரத்தோடு ஒளிக்கதிர்களை வாரி வீசுகிறது. மூன்று வடச் சங்கிலியின் கல்லிழைத்த முகப்பும் அதற்குப் போட்டி போடுகிறது. நெற்றியில் துளி திருநீறு. நீராடித் தழைய முடிச்சிட்ட கூந்தலில் ஒரு இழை நரைக்கவில்லை.

“ஏண்டா, இது உனக்கே நல்லாயிருக்கா?”

அவனுக்கு எரிச்சலாக வருகிறது. “என்னம்மா, போது விடிஞ்சதும் ரோதன பண்ண வரீங்க?”

“நா ரோதன பண்ணல, என்ன அவளத்தாங் கட்டிப்பேன்னே! சரி, எப்பிடியோ சந்தோசமாயிருந்தா சரி; இருக்கட்டும்னு சொன்னேன். கலியாணம் கட்டின பிறகு பாக்கிறவங்களுக்குக் கேவலமில்லாம இருக்க வேணாமா? என்னமோ நினைச்சா புறப்பட்டுப் போறீங்க, நினைச்சாப் புறப்பட்டு வரீங்க. இது சத்திரமா, சாவடியா? அவளுக்கு இப்ப என்ன கோபம்?”

“ஆரு சொன்னது கோபம்னு?”

“எனக்கென்ன எளவு தெரியிது? எங்கிட்டச் சொல்லிட்டுப் போனாளா? நான் கோயிலுக்குப் போயிருந்தவ திரும்பி வாரதுக்குள்ள போயிருக்கிறீங்க.”

“எங்கும் போகல. பெரியபட்டி வரியான்னேன், கொண்டு விட்டேன்.”

“ஆமா, ராத்திரிப் போயிக் குடிச்சிட்டு வந்திருக்கே. அவ இருந்தா ஊரக் கூட்டி ரகள பண்ணுவான்னு கொண்டு விட்டிருக்கே. ராத்திரி வரப்ப மணி மூணு. உங்கப்பாக்குப் பையன் நாந்தான்னு நடக்கிற. நீ எப்பிடியானும் நல்லபடியா உருப்படணும்னு நான் நினைச்சிட்டிருந்தேன்...”

“ஐயோ ஏம்மா கத்துற இப்ப? இப்ப போயி அவளக் கூட்டிட்டு வரப் போறேன்...”

“அண்ணன் ரெண்டு தரம் போன் பண்ணிட்டான். அதுக்குள்ளாற. விஜி வீட்டுக்கு வந்தாச்சான்னு கேட்டான்... இல்லேன்னே, சுப்பையாவை வரச் சொல்லுன்னானாம் செல்விகிட்ட, அவதா போன எடுத்தா...”

“எல்லாம் போறேன் இப்ப...”

“வந்தவ புருசன நல்வழிக்குக் கொண்டு வருவான்னு பாத்தா, அவ ஏறுன்னா மாறுன்னிட்டுப் போற!”

தீப்பெட்டித் தொழிற்சாலை அலுவலகத்துள் அவன் நுழையும் போது அண்ணன் தனித் தடுப்புக்குள் இருக்கிறான். அரியானா வியாபாரி ஒருவன் பேரம் பேசிக் கொண்டிருக்கிறான். கைப் பெட்டியைத் திறந்து திறந்து மூடுகிறான். அதில் கத்தையாக நோட்டுக்கள் அடுக்கி வைத்திருப்பதைக் காட்டுவது போல் பாவனை. ஆனால் பேரம் அறுபத்திரண்டுக்கும் ஐம்பத்தெட்டுக்கும் இடையே இழுபறியாகிறது. நாளுக்கு ஐம்பது குரோசுக்குள் உற்பத்தி செய்யும் சிறு தொழிலகங்கள் பெருகிய பிறகு அவர்கள் சரக்கு மிகக் குறைவாக விலை போகிறது. அதனால் ஏற்படும் சிக்கல்கள் பல. “எங்க சரக்குக்கும் அதற்கும் வித்தியாசம் தெரியாதா சிங்ஜி? அதில் இரண்டு பக்கத்திலும் மருந்திருக்காது. மழையோ, ஈரமோ எந்த நிலையிலும் பற்றிக் கொள்ளும் சரக்கு இது...”

பேரம் சரியாக வரவில்லை. அவன் விடைபெற்றுப் போகிறான். ஒரு சமயம் ஒரே கிராக்கியாக இருக்கும், சரக்கு இருக்காது. சில சமயங்களில் சரக்கு தேங்கிவிடும். கையில் பணமுடையாக இருக்கும். இவர்கள், விலையை இறக்குவார்கள் என்ற துணிவுடன் பிடி கொடுக்காமல் சென்று விடுதி அறைகளில் போய்த் தங்கிக் கொள்வார்கள். அத்தகைய நேரம் இது.

அண்ணன் மிகக் கோபமாக இருக்கிறான்.

இந்த அண்ணன் அம்மாவுக்குப் பதினாறு வயசில் பிறந்த பையன். நாற்பதாகப் போகிறது. அவனைப் பார்த்தால் அண்ணன் என்றே சொல்ல முடியாது. இவனைப் போல் உயரமும் இல்லை; நிறமும் இல்லை. புகை குடிக்க மாட்டான். கண்களில் சாந்தமும், உதடுகளில் புன்னகையும் இவன் இயல்புகள். கோபமாக இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அவனுக்குத் தெரிகிறது.

“ராத்திரி கிளப்பிலேந்து எப்ப வீட்டுக்குப் போனே?... ம்...? கல்யாணத்துக்கு முன்ன எப்படியோ இருந்தே. நீ பெண்ணெடுத்த இடம் அம்மாளுக்குப் புடிக்கலன்னாலும் கிளவராச் செஞ்சிருக்கேன்னு நினைச்சேன். விஜி காலம தொழிற்சாலை பஸ்ஸில் இங்க வந்திருக்கிறா. உள்ள வந்து பார்த்தாளாம். நேத்து பிள்ளைகள் அதுங்களுக்குள்ள ஏதோ சண்ட போட்டுக் காயமாம். ஒரு பய்யனை ஆசுபத்திரிக்குக் கூட்டிப் போங்கன்னாளாம். இப்ப நேரா அவங்க வீட்டுக்குப் போயிருக்கா. நீ என்னடான்னா, ஆபீசுக்குப் பத்து மணிக்கு வரே.”

“இப்ப கணக்கப்பிள்ளையை அனுப்பிச்சி வீட்டுக்குக் கூட்டிப் போகச் சொல்றே.”

அவனுக்கு விஜியின் மீது அடங்காத கோபம் வருகிறது. “தொழிற்சாலை பஸ்ஸில் வந்தாளா? அதிகப் பிரசங்கி!”

ஆனால் அண்ணன் அவனுடைய எதிரொலியை ஆமோதிக்கவில்லை.

“முட்டாள்தனமாக எதுவும் செய்யாதே! நீ போய்க் கூட்டிட்டுப் போ! சிகரெட்டப் புடிச்சிட்டுக் கூரை மேல தூக்கிப் போடுறாப்போல ஆயிப்போகும்.”

“அவங்க வீட்டில் போயி நான் கூப்பிட மாட்டேன். எனக்குக் கோபம் வர மாதிரி எதானும் பேசுவா. வீட்டில எந்நேரம் வந்தாலும் அம்மா இவமேலே சொல்ற புகாரும், இவ எல்லோரையும் விரோதி போல நினைக்கிறதும்... எனக்கு வீடாகவே இல்ல...”

“அதென்னமோ, நீ அட்ஜஸ்ட் பண்ணிட்டுச் சாதுரியமா நடக்கணும். பிள்ளைங்களை ஏன் மூணு மணிக்குக் கூப்பிடப் போகணும்? ஏன் தீண்டாமை அலோ பண்றீங்ன்கன்னல்லாம் கேட்டாளாம். இந்த வட்டத்தில் அவ தலையிடக் கூடாத வகையில் சாதுரியமா நீதான் அட்ஜஸ்ட் செய்யணும்...”

“எனக்கு இனிமேல் அட்ஜஸ்ட் பண்ணத் தெரியாது. ஏதானும் சொன்னா, எனக்கு இங்க ஜயில் போல இருக்கு. நான் காவல் கைதி, உங்கம்மா காவல், என்ன விட்டுடுங்க, நான் போறேன். பி.எட். படிக்கிறங்கிறா. நம்ம வீட்டில அம்மாள மதிக்கிறதேயில்ல. அவங்க சாமி பூசையில் நம்பிக்கையில்லேன்னாக் கூட உள்ள வந்து உக்கார வேண்டாமா? அமெரிக்காவிலேந்து வந்தவங்க கூட அம்மாவை மதிக்கணும்னு வெத்துக் காலோட சாமி ரூமுக்கு வந்து அம்மா குடுத்த பிரசாதத்தை வாங்கிட்டாங்க. மருமகள் பூசைக்கு உதவியா எல்லாம் செய்யணும்னு அம்மா எதிர்பார்க்கிறாள். இவ சிலதிலல்லாம் என்னைக் கட்டுப்படுத்தாதீங்க. என்னுடைய நம்பிக்கை இந்த வேசம் போடுறதில இல்லன்னு முகத்திலடிச்சாப்பில பேசுறா. அம்மா இந்தச் சிறிசு அவமதிக்கிறான்னு மூக்கச் சிந்திட்டு அழுறாங்க... அதுபோகட்டும், செல்வி கிட்டன்னாலும் சிநேகமாயிருக்கிறாளா? லோசன் போடுறதும் பவுடர் போடுறதும் தா வேலையா? இந்தப் புத்தகம் படிக்கக் கூடாது. இதுதான் வேணும்னு அவளைப் போயி அதிகாரம் பண்ணுறா. அதுக்கு இவளக் கண்டாலே பிடிக்கல...”

அண்ணன் மென்னகை இலங்க அவனைப் பார்க்கிறான்.

“அது போகட்டும், உன்னிடமேனும் முரண்பாடில்லாமல் இருக்கிறாளில்லை?”

அவன் முகம் விழுந்து போகிறது.

‘திமிர் பிடித்த, அடக்க முடியாத குதிரை’ என்று மனசுக்குள் சொற்கள் வெடித்து வருகின்றன. ஆனால் வெளியிடவில்லை.

“எல்லாம் சரியாப் போயிடும்... நீ வேலையப் பாரு... நான் போகிறேன்...”

ரங்கேசன் வெளிச் செல்கிறான்.

அத்தியாயம் - 10

விஜியும் தந்தையும் சாப்பிட உட்கார்ந்திருக்கின்றனர். சுமதிக்குக் கல்லூரியில் பரீட்சைக்கான படிப்புக்காக விடுமுறை. அவள் ஒரு தோழி வீட்டுக்குச் செல்வதாகக் கூறிப் போயிருக்கிறாள். வேலம்மா, “இன்னும் கொஞ்சம் பொரியல் வைக்கட்டுமா?” என்று கேட்டு பரிமாறுகிறாள்.

“நீங்க வாணா ராத்திரி மாரிசாமி வந்ததும் கேளுங்க. பையனக் கட்டுப் போட்டுட்டு வந்திருப்பான். இந்தப் பிரச்னையெல்லாம் நீங்க ஏன் எடுத்திட்டுப் போராடக் கூடாது?”

“யாருகிட்டப் போராடுறது? இந்தப் பக்கம், தொழில்களில் இருபது ஆயிரத்துக்கு மேல் குழந்தைகள் உழைக்கிறாங்க. அதற்குக் காரணம் முக்கியமான அவங்க பெற்றோர். ஊருக்குள்ள எல்லா விட்டிலும் தான் பெண்கள், குழந்தைகள் மேல்வருவாய்க்கு வேலை செய்யிறாங்க. பள்ளிக்கூடம் போய்ப் படிக்கிறாங்க. வசதியாக இருக்காங்க. ஆனால், அடிநிலையில் இருக்கும் மக்களுக்குத் தாழ்வு உணர்ச்சியும் அடிமை மனப்பான்மையும் அடியோடு நீங்காத வரையிலும் எதுவும் செய்ய முடியாதம்மா...”

“அப்பா நீங்க என்ன தான் தொழிற்சங்கம் நடத்திட்டிருக்கிறீங்கப்பா?”

அவர் சில கணங்கள் எதுவும் பேசவில்லை.

“சங்க ஆபீசு வச்சிருக்கிறீங்க, உங்களுக்குன்னு வருவாய்க்குக் குறிப்பிட்ட தொழிலில்லை. இவ்வளவுக்கு ஏதானும் பயன் வேண்டாமா?”

“இல்லேன்னு சொல்ல முடியாது. இங்கே நூற்றுக்கணக்கான கலர் பிரிண்டிங் பிரஸ் இருக்கு; பட்டாசு வெடித் தொழிற்சாலை இருக்கு. இந்த மாட்சஸ் தவிர அவ்வப்போது பிரச்னை வரும். தொழிலாளர் வருவாங்க. கோரிக்கைகளை வைப்போம். ஆனால் முதலாளிகள் சுமூகமாகவே தீர்த்து விடுகிறார்கள். சொல்லப்போனால் ஒரு பெயர் தானம்மா தொழிற்சங்கம் என்பது, வெறும் கூலி உயர்வு அல்லது வேறு சலுகை என்பதற்கு மேல் வேறு எந்த உணர்வையும் தொழிலாளர் மனசில் ஊட்டி விடவில்லை. தொழிலாளர் சந்தடி என்றால், தொழிலக உரிமையாளருக்கு வங்கிச் சலுகைகள் தகராறாகும். உற்பத்தி சிக்கலாகும். எனவே இங்கே எப்போதோ ஓரிரு சமயங்களில் சலசலப்பு தவிர ஒன்றும் நேரிடவில்லை. அதற்கு இடமுமில்லை.”

“பின்ன, எதற்காக நீங்க இப்படி ஒரு பயனுமில்லாத சங்கத்தைக் கட்டி இழுத்திட்டிருக்கீங்க?”

“பயனில்லைன்னு சொல்றதுக்கில்ல... கூலி உயர்வு அவ்வப்போது கிடைக்கிறது. இத்தனை வேலைக்கு இத்தனை ஊதியம் என்ற நிர்ணயமானால் கூட, ஒரு ஆண்டின் வேலையைக் கணித்து அதற்கு ஒரு ‘போனஸ்’ என்றெல்லாம் இப்போது கிடைக்கின்றன. அது தவிர, தொழிலாளருக்காக ஒரு சங்கம் இருக்கிறது என்பதே பலமல்லவா? தெருவிலிறங்கிப் போராடிக் கூச்சல் போட்டால்தான் என்றில்லாமல் சங்கம் பல முனைகளிலும் செயல்படுகிறது. இதனால் எனக்கு எந்த லாபமும் இல்லை. சங்கம் என்பது நடப்பதற்கே, மூந்நூறு பேர் கூட உறுப்பினரில்லாத அமைப்பில் எல்லாமே கடினம். அதற்கே, சிறு உரிமையாளர், அபிமானமுள்ள அதிபர்கள் என்று ஆதரவு தேட வேண்டியிருக்கிறது. இதெல்லாம் கொள்கை அடிப்படையில் பலவீனங்கள். ஆனால்...” என்று நிறுத்துகிறார்.

அவள் பேசாமல் இருக்கிறாள். “ஆனால் வேறு வழியில்லை அதற்காக இதை விட்டு விட்டு நானும் ஒரு தொழிலக உரிமையாளனாய்ப் பணக்காரனாக விரும்பவுமில்லை. நான் இந்த முழுப் பொறுப்பு ஏற்பதற்கு முன், மருதவாணர்தான் இங்கே இதை அமைத்துப் பாடுபட்டவர். அறுபத்தேழில் பெரிய போராட்டம் அச்சகத் தொழிலாளருடைய பல சலுகைகளுக்காக முன்னின்று நடத்தியதும் அவர்தான். ஆனால் பிறகு அவரே ஃபான்ஸி வெடிகள் செய்து கொடுக்க கான்ட்ராக்ட் எடுத்துத் தொழிலில் இறங்கி விட்டார். ஃபயர்வொர்க்ஸ் பட்டாசு வெடிகள் செய்யும் தொழில்களுக்குத் தேவையான பாதுகாப்புக்கள் எதுவுமில்லாமல் இவர் உற்பத்தி செய்து, பெரிய தொழிலகங்களுக்குக் கொடுக்கிறார் என்றான பிறகு, எந்தச் சலுகைகளுக்காக, பாதுகாப்புக்காக நாம் போராடுகிறோம் என்ற அடிப்படையே போய்விடுகிறது. அவரே சங்கத்தை விட்டு விலகி விட்டார். இப்போது பெரிய தொழிலகமே வைத்திருக்கிறார். சங்கத்துக்கு ஆதரவாளர்...”

“ஆதரவாளராக இருப்பவர், என்ன தவறு செய்தாலும் கண்டு கொள்ள மாட்டீர்கள்!...”

விஜி இவ்வாறு முணுமுணுத்துக் கொண்டு இலையை விட்டு எழுந்திருக்கிறாள்.

“பேசிப் பேசி, பேச்சுத்தா. சாப்பிடவேயில்ல, நீ!” என்று வேலம்மா கடிந்துக் கொள்கிறாள். அப்போது, “விஜி வந்திருக்காமே?... அட... விஜி!...” என்ற குரலுடன் லோசனி உள்ளே வருகிறாள்.

ஐந்தாறு வீடுகள் தள்ளி லோசனி அக்காளின் வீடு. அவள் சிறுமியாக இருக்கையில் லோசனி அக்கா என்று போய் ஒட்டிக் கொள்வாள். அவள் அப்பா மரமறுக்கும் தொழில் செய்தவர். லோசனிக்குக் கல்யாணம் நடந்த போது, அவள் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்ததும், தானும் அவளுடன் ஊருக்குச் செல்ல வேண்டும் என்று அழுததும் நினைவுக்கு வருகிறது. கோதையூரில் தான் அவளுக்குக் கணவன் வீடு இருந்தது. கல்யாணமான புதிதில், அம்மா, ஐயாம்மா இருவரும் ஒருநாள் கோதையூரில் கோவிலுக்குச் சென்றுவிட்டு, அவள் வீட்டுக்குப் போனதும், குறுகிய வாயில் படியில் அம்மா தலையை இடித்துக் கொண்டதும் விஜிக்கு நினைவிருக்கிறது. புருசன் சீக்கு வந்து இறந்து போனான். மூன்று குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு வந்திருக்கிறாள். இங்கும் தந்தை இல்லை. அண்ணன், அண்ணி தனியாகவும் இவள் அம்மா எல்லோரும் தனியாகவும் இருக்கின்றனராம்.

“விஜி அப்படியே இருக்கே? கலியாணம் கட்டிய பிறகு ஒரு விசேசமும் இல்ல?”

லோசனி அட்டைக்கட்டு, நீலத்தாள், தூர்சில்லி, மாவுப்பசை ஆகிய சாதனங்களுடன் வந்திருக்கிறாள்.

கூடத்தின் ஓர் புறம் சிறு பலகையைப் போட்டு அதன் மீது பசை மொத்தையை பிளாஸ்டிக் தாளுடன் வைத்துக் கொண்டு உட்காருகிறாள். விஜி கைகழுவிக் கொண்டு வருகிறாள். அவள் மின்னல் வேகத்தில் தாளை உருவிப் பசை தடவி அட்டைக்கட்டுப் பட்டையை உருவி வளைத்து ‘தூர் சில்லி’ எனப்படும் அடி அட்டையை வைத்து ஒட்டி அடிப்பெட்டியைச் செய்து போடுகிறாள்.

“உங்கையில மந்திரம் இருக்கு லோசனியக்கா... எத்தினி குரோசு ஒட்டுவ?”

“என்னமோ ஒட்டிட்டே கெடப்பே. வேலம்மாளும் நானுந்தான் இங்க பொழுதுக்கும் உக்காந்து கெடப்பம்! பேசிட்டே ஒட்டுவோம். பேசாமயும் ஒட்டுவோம். இந்த வெலவாசில என்ன முடியிது?... அது கெடக்குது போ! நீ பட்டணத்திலேந்து இங்க வந்த பெறகு தெனம் உம் பேச்சுத்தா. மாப்பிள வீட்டுக்காரங்க எப்பிடி இருக்கா! மாப்பிள இப்ப வந்து உன்னக் கொண்டு விட்டாரா?... எங்களுக்கெல்லாம் மாப்பிளயப் பாக்கணுமின்று ஆசதா. முன்ன மாரியம்மன் கோவில் திருவிழாவில வந்திருக்கிறாங்க. நல்ல செவப்பா, நெடுநெடுன்னு இருப்பாரு. சின்னவருதா மாப்பிளன்னு தெரியும். நீங்க சேந்து வந்து பாத்தா அது ஒரு... பவுரில்லியா?”

லோசனிக்கு வட்டமுகம். பெரிய குங்குமப் பொட்டாக வைத்துக் கொள்வாள். அது இப்போது இல்லை.

“புருசன் வீட்டிலேந்து இங்க வந்து எத்தனை நாளாகுது லோசனி நீ?”

“நா உன்னக் கேட்டா, நீ என்னக் கேக்குற, சித்திர வந்தா ஏழு வருசமாவுது. சத்திக்குப் பதிமூணு வயிசாவுது, ஏழாவது படிக்குறானே?”

“அடுத்தது பொண்ணா?”

“ஆமா, நெடு நெடுன்னு வளந்திட்டா, பதினொரு வயசுக்கு. மேப்பட்டி அடிப்பெட்டி செஞ்சு, குச்சியடுக்கி சோறு தின்னத்தா முடியிது. சீட்டு நாட்டுக் கட்டி ரெண்டேனம் எதும் வாங்கிக்கூட வக்க முடியில. வாசுகிக்குக் கலியாணம் கட்டிக் குடுக்கணும்னு நினைச்சா ஒண்ணும் தோணல.”

“பொண்ணு பொறக்கப்பவே கலியாணம் கலியாணம்னு ஏன் சொல்றிய?”

“பின்னே என்னம்மா செய்ய? சமஞ்சிட்டா கலியாணம் கட்டுறவரயிலும் நெருப்பா வச்சிருக்க வாணாமா? ஆம்பிளப் பய எங்கியோ போவா, வருவா, அட, படிப்பு வரலன்னாலும் அவந்தலையெழுத்து தாள் தட்டவோ*, தூள் அடய்க்கவோ# போறா; பட்டினி கெடக்கமாட்டா, பொண்ணுங்க அப்பிடியா விஜி? அதது நேரத்துல காலத்துல உருட்டிப் பொரட்டி சீதனம்னு என்னமேங் குடுத்துக் கட்டிடவாணாமா?”

(* தாள் தட்டல் - அச்சகத்தில் வேலை

# தூள் அடைத்தல் - பட்டாசுத் தொழிலகத்தில் மருந்தடைக்கும் வேலை)

“படிக்க வச்சிடு. வேலை செஞ்சுக்கறா. பணம் குடுத்துக் கலியாணம் பண்ணுவது நிக்கணும் லோசனி அக்கா!”

“படிக்கவச்சா மட்டும் சீதனமில்லாம ஆகுமா? இப்ப என் தங்கச்சி நிக்கிறாளே? தைக்கு இருவத்தேழாவுது!”

“ஆரு லட்சுமியா?”

“லட்சுமியக் கட்டியாச்சு. ஆறுமுகநேரியில் மாப்பிளக்கி வேலை. ஆண்டாளத் தெரியாது?... அவதா படிச்சா. பி.ஏ. படிச்சா. மேல டீச்சர் டிரெயினிங்கும் தூத்துக்குடில போயி எடுத்திட்டு வந்திருக்கிறா. மூணு வருசமா வேலையில்லை. அங்க இங்க டெம்ப்ரியா ரெண்டு, மூணு மாசம்னுதா வேலை, கண்ட எடத்துக்கும் அனுப்ப முடியல. அஞ்சாயிரம் குடு, நாலாயிரம் குடுன்னு கேக்கிறாவ. எங்க போக? இங்க, உங்கையாட்ட சொல்லி, இப்பதா ஸ்கூலில் வேலை கெடச்சி இந்த ஜனவரியிலேந்து போறா. அதும்கூடப் பாரு, தேதி போடாம முன் கூட்டியே ராஜினாமாக் கடிதாச வாங்கி வச்சிருக்கா. இப்பிடியேதான் பண்ணுறா. பொசுக்குனு சம்பளத்தக் குடுத்து வேல இல்லேன்னீடுவா...”

அவ பேசினாலும் கைப் பரபரப்பில் அடிப் பெட்டிகள் குவிந்து விடுகின்றன. விஜி தானும் அட்டைக் கட்டை உருவி எடுத்து வளைத்து ஒட்டுகிறாள். அவள் ஒரு பெட்டி உருவாக்கு முன் லோசனி மூன்று முடித்து விடுகிறாள்.

“உன் வேகம் மந்திரம் மாயம் போல இருக்கு... எனக்கு எவ்வளவு நேரமாகுது!”

“நீ எதுக்கு விஜி இதெல்லாம் செய்யணும்? எங்களுக்குத்தான் தீராது...”

“அப்படியில்ல லோசனி அக்கா, எங்க வீட்டில் எனக்குப் பொழுதே போகாம கஷ்டமாயிருக்கு. மட்றாசில எங்க வீட்டில வீட்டு வேலை செய்ய ஆள் கிடையாது. மேலும் நான் காலேஜிக்குப் போகாத போனாக்கூட. குழந்தைகளை நான் தான் பார்த்துக்கிடுவேன். இங்க்கே எனக்குப் பொருந்தவே இல்ல. மாமியா, காலம குளிச்சி முழுவிப் பூசைன்னு உக்காந்திடுவாங்க. அவங்க காலையில காப்பி மட்டும் தான் ரெண்டு நேரம் சாப்பிடுவாங்க. தவசிப் பிள்ளக்கிச் சாமானங் குடுக்கிறதும் வேலக்காரிய வேல வாங்குறதுமா அவங்க ஏதோ செய்வாங்க. பொண்ணுக்கு எப்பவும் ஏதானும் சினிமாப் புத்தகம், டிரான்சிஸ்டர், இல்லாட்டி முகத்தக் கண்ணாடில பாக்குறதும் பவுடர் பூசுறதும் முடி சீவுறதும் சாப்பிடறதும் அதும் இதும் பேசிப் பொழுது போக்குறதுமாயிருக்கு.”

“பெரியவரு தனியாயிருக்கா இல்ல?”

“அவங்கதா என் கலியாணத்துக்கு முன்னமே தனி வீடு கட்டிட்டுப் போயிட்டாங்களே? பெரியபட்டி போற பாதையில் உள்ளாற தெரியும். அவளுக்கும் அத்தைக்குமே ஒத்துக்கலியாம். ரொம்ப பாஷன். ரெண்டு பிள்ளங்க கொடைக்கானல்ல படிக்கிதுங்க. ஒரு நாளக்கி மூணு தரம் சாதாரணமாய் புடவை மாத்துவாளாம். வருசத்தில் ரெண்டு தரம் ப்யூட்டி, ஹெல்த் சென்டர்னு பட்டணம் போயிட்டு வருவாளாம். ஒரு அலமாரி முழுசும் லோஷன் அது இதுன்னு வச்சிருக்கா. எனக்கு ஒண்ணுமே ஒத்து வராம கூண்டுல அடச்சாப்பல இருக்கு...”

லோசனி சிரிக்கிறாள். “பின்னென்ன வேணும்? பொம்பிளயாப் பிறந்தா சிங்காரிக்கிறதும் சாப்பிடறதும் சீல கட்டுறதுந்தா. பின்ன மாப்பிளயோடு சந்தோசமா இருக்கிறதுந்தா, இதுக்குத்தான் பொட்டி ஒட்டுறதும், குச்சியடுக்கிறதுமா இங்க அத்தினி பொம்பிளயளும், பாடுபடுறதுக. சீட்டுப் போடுறதும் சீலை எடுக்கிறதும், பவுன் வாங்குறதும் அதுக்குத்தா, அது கெடக்கட்டும். மாப்ளயும் நீயும் எப்படி இருக்கிய? எங்கெல்லாம் போனீங்க. அத்தச் சொல்லு விஜி. ‘அனிமூனெ’ல்லாம் போய் வந்திருப்பிய. சினிமால வராப்பில எங்க போனிய? காச்மீரம் போனிங்களா, இல்லே, எங்கே போனிய? நம்ம குத்தாலத்தக் காட்டிலும் அழவான எடமாமே அது?... நான் வேலம்மாட்டச் சொல்லுவேன். அதுக்கு இதெல்லாம் கேக்கத் தெரியாது!”

விஜிக்கு ஊசி குத்திவிட்டாற் போன்று மனசில் சுருக்கென்று வேதனை தைக்கிறது. பெங்களூருக்குச் சென்றார்கள். அவன் முழுக்குடியன் என்று புரிந்து கொண்டாள். அந்தரங்கத்தில் அவனுக்கும் மென்மைக்கும் மரியாதைக்கும் வெகு தொலைவு என்று புரிந்து கொண்டதும் அங்கே தான். திருமணம் என்ற நிகழ்ச்சி அவளை ஒரு முரட்டு ஆணிடம் தன்னை அடிமைப்படுத்தி விட்டதென்பதைப் புரிந்து கொள்ளத் தொடங்கியது அங்கே தான். புறத் தோற்றத்துக்கும் பேச்சுக்களுக்கும், உள்ளப் பாங்குக்கும், சம்பந்தமே இல்லாமலிருக்கலாம் என்று உணரத் தொடங்கியதும் அப்போதுதான்.

“என்ன விஜி பேசாமலிருக்கிற? சினிமாவுக்குப் போயிருப்பிய; என்ன சினிமால்லாம் பார்த்திய! அதன்னாலும் சொல்லு” என்று கிண்டுகிறாள்.

“அப்பபாத்த சினிமா ஒண்ணும் நினைப்பில்ல லோசனி அக்கா! இப்பல்லாம் அவங்களுக்கு வேலயே சரியாப் போவுது. அதுல வெளியூர் போயிடுவாங்க. எப்பன்னாலும் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போவோம்.”

வேலம்மா தான் சாப்பிட்டுவிட்டுச் சாமான்களைக் கழுவப் போகிறாள். அப்பா வெளியே கிளம்பத் தயாராகச் சட்டையை மாட்டிக் கொண்டு வெளிப்படுகிறார்.

“வா, வா, இப்பத்தான் வரியா?”

“ஆமாம் மாமா. லாரி லோடாவுது. ராத்திரிக்குக் கிளம்புவேன். அதுக்குள்ள பாத்திட்டுப் போகலான்னு வந்தேன்...” என்ற குரல் கேட்டு விஜி எட்டிப் பார்க்கிறாள்.

“அட... செந்தி... வேலம்மா? செந்தில் வந்திருக்கிறாம் பாரு!” செந்தில் பரவசமடைந்தாற் போன்று நிற்கிறான்.

“பாப்பா... ஐயோ, இனிமே... உங்கள அப்படிச் சொல்லக் கூடாது... எப்ப வந்தீங்க? மாப்பிள்ளை வந்திருக்கிறாரா? என்ன எதிர்பாராத சந்தோஷம் தெரியுமா? இங்கிட்டு வந்து... உங்க வீட்டுக்கு நா வந்து பாக்க முடியுமா...?”

“ஏன் முடியாது செந்தில்?”

“அதெப்படிங்க?... நீங்க பெரிய எடம். உங்க மனுசா எப்படின்னு தெரியாம வரலாமா? முதலாளிங்கல்லாம் நல்லவங்கன்னு பேருதா, ஆனா... எம்போல சாமானியமெல்லாம் எசமானியம்மாவப் பாக்கன்னு வரலாமா?...”

“சரிதாண்டா, போயி கால்கை கழுவிச் சாப்பிடு. உங்கம்மா சோறு வச்சிருக்கிறாளோ என்னவோ? ஏண்டா, நேரத்தில வரதில்ல?” என்று அப்பா கடிந்து கொள்கிறார்.

“சோறெல்லாம் இருக்கு...” என்று வேலம்மா குரல் கொடுக்கிறாள். மடக்கிவிட்ட புள்ளிச் சட்டையும், கட்டம் போட்ட லுங்கியும் தலைக்கட்டுமாக அவன் உள்ளே அடி வைத்ததும் ஏதோ நினைவு வந்துவிட்டாற் போன்று. “இத, ஒரு நிமிஷம் வெளியே போயிட்டு வந்திடறேன் மாமா!” என்று திரும்பிச் செல்கிறான்.

“இவன் எப்பவும் இப்பிடித்தே. வந்த பெறகுதா எல்லாம் நினைப்பு வரும்!” என்று வேலம்மா முணமுணக்கிறாள்.

அப்பா மறுபடியும் வெளியில் செல்லலாம் என்று திரும்புகையில் வீட்டு வாயிலில் ஓசைப்படாமல் சிறிய கறுப்புக்கார் வந்து நிற்கிறது. ஓட்டி வந்த ரங்கேஷ் கதவைத் திறந்து மூடிவிட்டு அந்தப் படியேறி வருகிறான்.

அத்தியாயம் - 11

மேல் நோக்கி வாரப்பட்ட கிராப்பு; தங்க பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி. வெள்ளைச் சட்டையும் பழுப்பு நிறக் கால் சராயும் அணிந்து மிகச் சாதாரணமாகக் காட்சியளிக்கும் ரங்கேஷ் படியேறி வருமுன் வாயிற்புறத்துக் கதவைக் காட்டி, “வாங்க... வாங்க...” என்று பரபரப்பாகச் சண்முகம் வரவேற்கிறார்.

இவன் வருவானென்று விஜி சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.

லோசனி எழுந்து நிற்கிறாள். வேலம்மா ஒதுங்கிக் கை குவிக்கிறாள். ரங்கேஷ் கூடத்தில் கால் வைத்துத்தான் அறைக்குள் செல்கிறான்.

தீப்பெட்டி அட்டையும், கூடையும் வாளியும், தட்டு முட்டுமாக முதலாளியான ஒருவரை வரவேற்கும்படியாகவா இருக்கிறது. பழைய நாளைய மர அலமாரி; ஒரு கட்டில். மேசையில் சில புத்தகங்கள்; ஒரு நாற்காலி... சுவரில் பெரிது செய்யப்பட்ட அம்மாவின் படம் ஒன்று இருக்கிறது. உயரே கம்பிக் கொடியில் அவருடைய வேட்டி துண்டு சுத்தமாக உலர்த்தப்பட்டிருக்கிறது. மண் கூசாவில் மூலையில் தண்ணீர். அந்த அறையை அவரே சுத்தம் செய்து கொள்வார். சில சமயங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாரிசாமி வந்து சுத்தம் செய்வான். வேலம்மா கூடத்தைத் தாண்டி வந்ததாக அவளுக்கு நினைவில்லை.

விஜி தனது சிந்தை ஏன் எங்கோ செல்கிறது என்ற மாதிரியில் சட்டென்று எதிரே அறைக்குள் ரங்கேஷ் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறாள். படுக்கையில்லாத பலகைக் கட்டிலில் அவனும் அப்பாவும் சேர்ந்து பேசுகிறார்கள்.

வாயிற்படியில் நிற்கும் விஜியை மெல்ல லோசனி கூப்பிடுகிறாள்.

“வேலம்மா கூப்பிடுது. இவுருதா பெரிய மவனா?”

“ஆமா... என்ன வேலம்மா?”

“காபி,... எதுனாலும் குடுக்க வேணாமா? போயி கடயில...”

“வாணாம்... இவரு காபி குடிக்க மாட்டாரு. இவருக்குச் சாப்பாடெல்லாம் என்னமோ அளவுன்னு சொல்லுவாங்க...”

“கிரஷ் கலர் எதுனாலும் வாங்கியாரேன்...” என்று சொல்லிவிட்டு லோசனி ஓடுகிறாள்.

“விஜி...?” என்று அப்பா அழைக்கிறார்.

அவள் மீண்டும் அறை வாயிற்படியில் சென்று நிற்கிறாள். “உட்காரம்மா...” என்று நாற்காலியைக் காட்டுகிறான் ரங்கேஷ்.

அவள் உட்கார்ந்து கொள்கிறாள், சிறிது நாணத்துடன்.

“என்னம்மா... காலம பாக்டரிக்கு வந்து போனேன்னு சொன்னாங்க. நீ இதிலெல்லாம் இன்ட்ரெஸ்ட் எடுத்துக்கறேன்னதும் சந்தோசமாயிருந்தது... விஜிம்மா உன்னை இங்க வந்துதா கேக்கணும். அங்க வீட்டில... ‘யூ ஃபீல் ஃபிஷ் அவுட் அஃப் வாட்டர்’ இல்ல?”

அவள் முகத்தில் லேசாகச் சிவப்பேறுகிறது.

“எனக்கு நல்லாப் புரியிது...” என்று புன்னகை செய்கிறான்.

“யார் என்ன நினைச்சாலும் நம்ம குடும்பங்கள் மீண்டும் இணைஞ்சதில எனக்கு ரொம்ப சந்தோஷம். இப்ப பாருங்க, எங்க மீனாதா இருக்கிறா. அவளும் கிராஜுவேட்தான். ஆனால் பாருங்க, ஒரு சோஷியல் இன்ட்ரஸ்ட் கிடையாது. அவ தோட்டம், பூச்செடி, குரோட்டன்ஸ், பிறகு இருக்கவே இருக்குது; ஃபாஷன், ப்யூட்டி கேர், இன்டீரியர் டெகரேஷன் அது இதுன்னு. நான் யாரையும் எதையும் கட்டுப்படுத்துறதில்ல. அவ இஷ்டம். நினைச்சா மதறாஸ் புறப்பட்டுப் போவா. அங்க அவ ஸிஸ்டர் இருக்கா. கடைசி குழந்தையை அங்க நாட்டிய மந்திர்ல விட்டிருக்கிறாள். அதனால ஒரு சாக்கும் கூட, அம்மா... அவங்க உலகம் தனி. அப்பா போன பிறகு அவங்களுக்கு ஒரு மென்டல் ஷாக் மாதிரியா ஆயிடிச்சி. பிறகு சாமி பூசைன்னு ஒரு மாதிரியா ஆயிட்டாங்க. குற்றாலப் பக்கம் ஒரு சித்தர் இருக்காரு. அவர் தான் குரு. திடீர்னு குரு பூசைம்பாங்க. அவங்கபாட்டுல ஏதோ ஏழைகளுக்கு அன்னதானம் அது இதுன்னு செலவு செய்வாங்க. அவங்க பூசையறையில் கும்பிடாம ஆரும் போகக்கூடாது. பெரியபட்டித் தாத்தா வந்தாக்கூட உள்ள வந்து கும்பிட்டுப் போகணும். இதெல்லாம் புதிசா இருக்கிறதால எப்படியோ இருக்கு இல்லியா...”

அவன் சிரிக்கும் போது மனம் இலேசாகிறது.

“புதிசாகவே இருக்கல. இப்ப அஞ்சாறு மாசமாயிட்டுது. ஆனா, நாள் முழுவதும் சோம்பலா இருந்துஎ நக்குப் பழக்கமில்ல. எங்கேயானும் வெளியே போகலான்னா தனியே எங்கும் போகக்கூடாதுன்னு சொல்றாங்க. பஸ் ஏறி இங்க வந்தாலோ, சின்னப்பட்டிக்குப் போனாலோ உங்க தம்பிக்குப் பிடிக்கல...”

“நான் தான் சொன்னேனே? அவங்க... அம்மால்லாம் ஒரு பழையகால டிரடிஷன்ல வந்தவங்க. சுப்பையாவுக்கு அதெல்லாம் கிடையாது. அவன் சும்மா அம்மாவைத் திருப்திபடுத்தணும்னு பக்கப்பாட்டுப் பாடுவான். அவனைத் தப்பாப் புரிஞ்சிக்கிடாதேம்மா. சொல்லப் போனால், அவனுக்கு இன்னும் மெச்சூரிட்டியே இல்லேம்பேன். முரட்டுத்தனமாப் பேசுவான், ஆனால் மனசில ஒண்ணும் கிடையாது...” என்ன சாதுரியமாகப் பேசுகிறார் என்று அவள் நினைத்துக் கொள்கிறாள். இதற்குள் வெளியே செந்தில் வந்துவிட்ட குரல் கேட்கிறது. அப்பா எழுந்து செல்கிறார்.

தணிந்த குரலில் ரங்கேஷ், “அவனைப் பொறுப்புள்ளவனாகச் செய்ய முடியும் உன்னால் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இந்தக் கல்யாணத்தில் அதனால் தான் நான் ரொம்ப திருப்திப்பட்டேன். முரண்பாடுகளைப் பெரிசு பண்ணிடாதேம்மா!” என்று கேட்டுக் கொள்கிறான்.

அப்பா, பூப்போட்டதொர் ‘ஸில்வர்’ தட்டில் பால்கோவா, சேவு, கொடி திராட்சை ஆகிய வரிசைகள் விளங்க அவன் முன் கொண்டு வந்து நீட்டுகிறார். செந்தில் சமய சஞ்சீவியாக வந்து விட்டான் என்று புரிகிறது. திரும்பிப் பார்க்கிறான். செந்தில், “வணக்கம் முதலாளி!” என்று கைகுவிக்கிறான்.

ரங்கேஷ் சிரிக்கிறான். “மாமா, இந்த முதலாளி என்ற சொல்லைக் கேட்டால் சில சமயங்களில் எனக்குச் சிரிக்கத் தோன்றுகிறது. அந்தச் சொல்லுக்குரிய பிம்பத்தை அரக்கத்தனமாகக் கற்பித்திருக்கின்றனர். ஆனால் அந்தப் பிம்பத்தினால் கவரப்படாதவர்களே இல்லை.”

‘இவன் என்னமாகப் பேசுகிறான்’ என்று விஜி வியந்து போகிறாள். அவள் வியப்பு மேலும் ஏறும்படி, அந்தப் பால்கோவாவையும் சேவையும் அவன் உண்ணுகிறான்.

ரங்கி வெளியே எந்தப் பொருளும் சாப்பிடமாட்டான். சாதம், பருப்பு, கீரை, பழம்னு, அதது அளவா சாப்பிட்டு, ஃபிரிஜ்ஜில வச்ச மோருதான் குடிப்பான். காப்பி, டீ, புகையிலை சிகரெட், ஒரு பழக்கம் கிடையாது. மீனாவுக்கு இதெல்லாம் குறை. ‘கட்டுப்பெட்டி, ஒரு சீட்டாடக் கூடத் தெரியாதுன்னு கேலி பண்ணுவா’ என்று மாமியார் சொல்லிக் கேட்டுருக்கிறாள். அச்சுத் தொழில் சம்பந்தமாக ஜெர்மனிக்குச் சென்று அந்தக் காலத்திலேயே படித்துவிட்டு வந்திருக்கிறான். ஜெர்மானிய மொழியை நன்கு கற்றிருக்கிறான். அவன் வீட்டில் சிறு நூலகம் இருக்கிறது. அதில் யோகாசனம், தோட்டக்கலை, போன்ற பல நூல்களைக் கண்டிருக்கிறாள்.

பொழுது போகாத போது அங்கே சென்று அவள் சில நூல்களை எடுத்து வந்ததற்கு மூனா கேலியாகப் பேசினாள். சுருக்கென்று தைத்தது. ஒரு கிளாசில் எதையோ கரைத்துக் கொண்டு வந்து வேலம்மா செந்திலிடம் கொடுக்கிறாள்.

“காப்பியல்ல, ஆர்லிக்ஸ்...” என்று அவள் மெதுவாகக் கூறிவிட்டு அதைப் பணிவுடன் வைக்கிறாள்.

ரங்கேசன் எதுவும் பேசாமல் எடுத்து அருந்துகிறான்.

“ஆமாம் இன்னிக்குக் காலம யாரோ பையனைக் காயம்னு ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போய் கட்டுப்போடச் சொன்னாயாம்மா?” என்று நினைவூட்டுகிறான்.

“ஆமாம் ராத்திரி நான் சின்னப்பட்டியில் தங்கியிருந்தேன். பஸ்ஸில் தினம் சண்டை வருமாம். ராத்திரி காலில் ரத்தம் வழிய வந்தான். எனக்கு இப்பக் கேக்கலான்னு தோணுது அண்ணா. அவ்வளவு காலைப் பொழுதில் பிள்ளைகளைக் கூட்டி வரணுமா? பாவம், அதுங்களுக்குத் தூங்கப் பொழுதில்லையே?”

“சரியான பாயின்ட், இதைப் பத்தி நான் நிறைய யோசித்திருக்கிறேன். எனக்கு அந்தக் குழந்தைகளின் பெற்றோரை விட கன்ஸர்ன் அதிகமா உண்டு. அதனால் தான் எங்கோ மூலையில் உள்ள இடத்துக்கு பஸ் போயிக் கூட்டி வரணும்னு முதல்ல ரோடு போடப் பாடுபட்டோம். அதுக்குப் பஞ்சாயத்தில் எப்படி முட்டுக்கட்டை போட்டாங்க தெரியுமா? குழந்தைகளைச் சீக்கிரம் கூட்டி வந்து சீக்கிரம் திருப்பிக் கொண்டு விடணும்ங்கறது என் ஐடியா... ஆனால், அதில பாரு, பிராக்டிகள் டிஃபிகல்டீஸ் நிறைய இருக்கு. பேரன்ட்ஸ் வந்து குழந்தைகளிடம் இத்தினி கட்டை அடுக்கணும்னு ‘கம்பெல்’ பண்ணுறாங்க. இது உண்மை... இப்ப பாரு, ஃபயர் வொர்க்ஸில் பதிநான்கு வயசுக்கு மேலுள்ளவர்களதான் வேலை செய்யலாம்னு விதி இருக்கு. நான் எமர்ஜன்சி சமயத்தில் யூனிட்டையே மூடிடச் சொல்லிட்டேன். ஆனால் என்ன நடந்திச்சி? பெற்றோர் எல்லாரும் கூட்டம் கூட்டமா வந்து காலில் விழுந்தாங்க. “நாங்க எல்லாரும் பட்டினியாகச் சாகவா”ன்னு அழுதாங்க. பிறகு டாக்டர் சர்ட்டிபிகேட்ட வாங்கிட்டு வரணும்னு சொல்லி, வேற வழியில்லாம வேலைக்கு வச்சேன்...”

அப்பா, குரலே எழுப்பாமல் அவன் மந்திர ஒலியில் கட்டுப்பட்டவர் போல் உட்கார்ந்திருக்கிறார்.

“நாம் இங்கே பசி பட்டினின்னு சொல்லுகிறோம். ஆனால் சில பிள்ளைகள் தானாக வேலை செய்து சம்பாதித்து ஸெல்ஃப் ரிலயன்டா இருக்க விரும்பறதை, வளமான நாடுகளில் கூடப் பார்க்கலாம். அமெரிக்காவில், மூன்றாம் வகுப்புப் படிக்கும் பிள்ளைகள், பேப்பர் கட்டிட்டு வந்து போட்டு, காசு சம்பாதிச்சு, பெற்றொருக்கு கிறிஸ்துமஸ் பிரசன்ட் வாங்கிக் கொடுக்கிறாங்க...”

“வயிறு நிறைய உணவிருந்து ஏதானும் செய்தால் அந்தப் பிரச்னை வேறு. அங்கே கஞ்சா, மருந்தூசிக்குப் பணம் சம்பாதிக்கிறதாக் கூடத்தான் சொல்றா. நம்ம பிரச்னை, பசி, தண்ணீர் தாகம், இருக்க இடமில்லாமை, கல்வியில்லாமை எல்லாமாக இருக்கு...” என்று அப்பா இப்போது குரல் கொடுக்கிறார்.

“நிச்சயமா... இதுக்கெல்லாம் தீர்வு காணனும்ங்கறதா நம்ம நோக்கமும். இப்பகூட, காலம ஏழு மணிக்கு வேலை செய்யும் பிள்ளைகளுக்கு ஒரு சத்துணவு பாக்கெட் குடுக்க வாலண்டரி சில்ரன் ஆர்கனைசேஷன்களுடைய ஆதரவோடு ஒரு திட்டம் கொண்டு வரணும்னு இருக்கிறேன். ஆனா, நான் ஒருவன் முனைஞ்சாப் போதாது... இல்லையா, மாமா?”

“ஆமாம். அடியிலேருந்து நாம் மாற்றியாக வேண்டியிருக்கு. எதைச் சொல்றது?” அப்பா எங்கோ பார்த்துக் கொண்டு பேசுகிறார்.

விஜிக்கு மனம் இலேசாக இருக்கிறது. “அண்ணா, எனக்கு எதானும் உருப்படியா வேலை செய்யணும்னு எண்ணம். ஏதானும் உதவியாக இருக்க வேண்டும்னு நினைக்கிறேன்...”

“வெரிகுட். உங்கப்பாவக் கேட்டுப் பாரம்மா. நாங்க ஒரு போதும் தொழிலாளிகளுக்கு விரோதியில்லை...” அவன் மீண்டும் முத்தாய்ப்பாக ஒரு புன்னகை செய்கிறான்.

“ஓகே... அப்ப, புறப்படலாமாம்மா? வரியா?...” விஜி நிமிர்ந்து பார்க்கிறாள்...

“இல்லாட்டி, சாயங்காலமா காரனுப்புறேன். இல்ல, நீ சௌகரியத்தச் சொல்லும்மா!”

“சாயங்காலமா வரேனே? நீங்க வண்டியனுப்பணும்னு கூட அவசியம் இல்ல...”

“நோ நோ, வண்டி ஒரு ஆறு மணிக்கு அனுப்புறேன்... வரட்டுமா? வரட்டுமா மாமா? வணக்கம்மா!...” கைகுவிப்புடன் விடை பெற்றுக் கொண்டு அவன் படியிறங்கிச் செல்கிறான்.

வாசலில் இரு புறங்களிலும் பெண்கள் கார் செல்வதைப் பார்க்கின்றனர். கைவேலையை நிறுத்தி, முற்றங்களில் காயும் தீப்பெட்டிகளை ஒதுக்கியவாறு ஆயீஸாபீவியிலிருந்து இட்டிலிக்கடை ஆச்சி வரையிலும் அண்ணாச்சி வீட்டுக்குக் கார் வந்து செல்வதைப் பார்க்கின்றனர்.

குறுகிய காலத்தில் மிகப் புகழ் பெற்றுவரும் இந்த இளைய முதலாளியின் அருமை பெருமைகள் அந்தப் பெண்களின் நாவில் சுருளவிழ்கின்றன.

“ஒண்ணுமில்லாதவனெல்லாம் முப்பது பவன் நாப்பது பவன்னும் அஞ்சாயிரம் பத்தாயிரம்னு கேக்கிறா. அந்தப் பெண்ணோட நல்லகொணத்துக்குத் தக்கினயா மாப்பிளவூடும் வாச்சிருக்கு...”

“அவர் மொறயாள்தானே? அவம்மா ஆரு? என்னமோ காலக் கொடும. கொஞ்சம் அப்படி இப்படி இருந்திச்சி. இப்ப அவிய பொண்ணு வந்து கட்டிட்டா...”

“ஏட்டி, லோசனி? அவிய வந்திருக்கயில நீ அங்கிட்டுத் தா இருந்தியா? வேலம்மா காபி கீபி வச்சிக் குடுத்தாளா?”

“அதோண்ணுமில்ல. விஜி, அவரு காபியொண்ணும் குடிக்கமாட்டான்னா. நா போன மாசம் ராகவுக்குக் காச்சல் வந்தப்ப டாக்டர் சொன்னான்னு ஆர்லிக்ஸ் வாங்கி வச்சிருந்தேன். அத்தக் கொண்டாந்து குடுத்தேன். காச்சிக் குடுத்தா. செந்தில் பளம் சேவு எல்லாம் வாங்கியாந்தா. ரொம்ப நல்ல கொணம், மரியாதி, போறச்ச, என்னக்கூடக் கைய இப்பிடிவச்சிக் கும்பிட்டா” என்று மகிழ்ந்து போகிறாள் லோசனி.

“பாத்தாத் தெரியல தங்கமான கொணம்னு? விஜிக்கு நல்லபடியா அமஞ்சி போச்சி, சுமதிக்கு... அதுக்கும் இப்பிடி வரணும்...” சுமதி பச்சை நைலக்ஸ் சேலையுடன், தெருக்கோடியில் வந்து கொண்டிருக்கிறாள்.

மாரிசாமி இரவு தொழிலகத்தை விட்டுவர ஒன்பதே முக்கால் மணியாகிவிடுகிறது. விஜி இருப்பாளோ என்ற ஆவலில் விரைந்து வருகிறான். ஆனால் விஜியைக் காணவில்லை. சுமதிதான் ஏதோ புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருக்கிறாள்.

வேலம்மா அவனைக் கண்டதும், “சாப்பிட்டாயா மாரிசாமி?” என்று விசாரிக்கிறாள்.

“ஆச்சு அக்கா!”

“இந்தா... இன்னிக்கு விஜி வந்திச்சு, பொறவு செந்தில் வந்தான். உங்க முதலாளி, அவ மூத்தாரு காரப் போட்டுட்டு வந்தாரு...” என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்லி, ஒரு சிறு தட்டில் சிறு பால்கோவா துண்டு, சேவு, பழம் எல்லாம் வைத்துக் கொடுக்கிறாள்.

“அப்படியா?...”

“ஆமாம். ரொம்பப் பெருந்தன்மையா இருக்கிறாரு. விஜிம்மாகிட்ட ரொம்பப் பெருந்தன்மையா இருக்கிறாரு. விஜிம்மாகிட்ட ரொம்ப மதிப்பு. இப்பவே வர சவுரியமில்லேன்னா சாங்காலம் காரனுப்புறேன்னா. அப்பிடியே ஆறடிக்கையில ஓசப்படாம காரு வந்திடிச்சி. விஜி போய் வரேன்னு சொல்லிட்டுப் போச்சு...”

“அப்பிடியா? அக்கா, விஜி வேறொண்ணும் சொல்லல?”

“என்ன சொல்லணும் மாரிசாமி? எல்லாம் பேசிட்டிருந்தா. சின்னப்பட்டிப் பிள்ளகளப் பத்திக் கூடக் கேட்டுட்டிருந்தா...”

மாரிசாமிக்குக் கண்கள் பனிக்கின்றன.

“என்னடா இப்ப...?”

அவன் கண்களைத் துடைத்துக் கொள்கிறான். “அக்கா அந்த மானேசர் வந்து இன்னிக்கு என்னக் கண்டமானியும் திட்டுனா. இன்னிக்குப் பாரு. புள்ளங்க எட்டு மணிவரையும் கட்டயடுக்கி யிருக்குதுங்க. ஏன்னா சனிக்கிளம சம்பளம் போடுறப்ப, நாயித்துக்கிளம சினிமா டிக்கெட்டு இனாமுன்னு சொல்லியிருக்கா. இது மிட்டாய்போல, ஈ புழு குத்துவது போல இந்தா மிட்டாயிக்குக் குந்தியிருந்து கட்டயடுக்கிச்சிங்க. அக்கா, நாயித்துக்கிளம வந்திட்டா, இந்த ரத்தினம், இன்னும் லேபல் செக்சன்ல ஒரு தடியனிருக்கிறா, மன்னாருன்னு. இவனுவ பொண்ணுகளக்கூட்டி அழியிறானுவ. ரத்தம் கொதிக்குது. இதெல்லாமும் விஜிம்மாகிட்ட எடுத்துச் சொல்லணும். அவுங்க இதுக்கு முனஞ்சி, இங்க வேலக்கு வர பொண்ணுவளுக்கு ஒரு தயிரயம், சுய மரியாதையைத் தூண்டி விடும்படி பேசணும். அந்தப் பொண்ணுகள வளச்சிப் போட குச்சி சரியில்ல, அடப்பு சரியில்லன்னு கலச்சிப் போடுவா. நைச்சியத்துக்கு மசிஞ்சிட்டா கூடவே ஒரு சில்லுன்னு கணக்குப் போடுவா. அதுங்க முதல்ல மெரண்டாலும் வழியில்லாம இவனுவ இஷ்டத்துக்கு அடங்கிப் போடுதுங்க... நாயித்துக்கிழமயில கொட்டடி கூட்டவான்னு கூப்பிடுறா... அக்கா, தீப்பொட்டி ஆபிசுல வேல பாக்கும் குமரிப்பொண்ணுங்க, எந்நேரமும் கழுவுகள் திரியும் எடத்தில இருக்குதுங்கன்னு சொன்னா தப்பில்ல...”

அப்போது, சுமதி குறுக்கிடுகிறாள்.

“மாரிசாமி அண்ணாச்சி, வேற எங்கனாலும் போயிப் பேசுங்க. எனக்குப் படிக்க முடியல!”

“அட...? நீ போயி அப்பா ரூமில படியேன்?”

“அங்கே வேற ஆரு வெளக்குப் போடச் சார்ச்சு குடுக்கிறது?”

மாரிசாமி “ம்... அக்கா, இந்தப் பொண்ணு முதலாளிக்கு மேல முதலாளியாயிருக்கு பாத்தியா?” என்று கூறிவிட்டு எழுந்து செல்கிறான்.

அத்தியாயம் - 12

“வேல்முருகன் கொட்டகையில் சினிமாப் பாக்க நாளக்கி எல்லாப் பிள்ளையளுக்கும் சீட்டு வாங்கித்தரேன்னு ஏசண்டு சொல்லியிருக்கா. எல்லாப் பிள்ளையையும் சர்விசு பஸ்ஸில் கூட்டி வரச் சொல்லி எங்கிட்டப் பத்துரூவா குடுத்திருக்காரு!” என்று தெரிவிக்கும் மம்முட்டியானுக்கு வாயெல்லாம் பல்லாயிருக்கிறது. சந்தனக்குடும்பன் அழவாயியும் லட்சுமியும் பெற்று வந்து தந்திருக்கும் கூலியைக் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

“ஏண்டி, முக்காரூவா போல குறயிது? இன்னிக்கு லட்சுமி எத்தினி கட்ட அடுக்கினா?”

மம்முட்டியான் இடைமறித்து, “மாமா, அதெல்லாம் கணக்குப்புள்ள ரைட்டாத்தான் குடுத்திருப்பா. இந்தப் புள்ளயளுக்காக இம்புட்டுக்காசு செலவு பண்ணுறவ, கூலியக் குறப்பாகளா? விஜிம்மா பெரிய முதலாளி வீட்டு அம்மா, அவியளே சொல்லிருக்கா. அதான் சினிமாக்கெல்லாம் கூட்டிப்போறா... அளவாயிக்கு, சோப்பு, பவுடர் கூட வாங்கிக் குடுத்திருக்கா, பாரு!” என்று தெரிவிக்கிறான். “அடிசெறுக்கி, ஏங்கிட்டக் காட்டல...”

அழகாயி அதைக் கொடுக்கிறாள். அவன் வாங்கி முகர்ந்து பார்த்து அனுபவிக்கிறான். “லட்சுமிக்குக் கெடயாதா?”

“அழவு லேபல் ஒட்டுதல்ல? அந்தக் கணக்கபிள்ள வாங்கிக் குடுத்திருக்கா?”

வாரச்சம்பளம் கொடுத்து சினிமாவுக்கும் கூட்டிச் சென்று சோப்பு பவுடரும் வாங்கிக் கொடுத்து எவ்வளவு செலவு செய்கிறார்கள்! இந்த மண்ணில் ஏதேனும் விதைக்க வேண்டுமானால் நூறு இருநூறு செலவு செய்ய வேணும். அதிலும் எதுவும் செலவு போக விளைந்து விடாது.

“என்ன சினிமா?...”

“அதென்னமோ சொல்லிகிட்டா... ஆடொண்ணு வந்து வித்தை எல்லாம் செய்யிதாம்! ரொம்ப நல்லாயிருக்கும்னு ருக்குமணி, சந்திரா எல்லாப் புள்ளயளும் சொல்லிட்ருக்கா?” சனிக்கிழமை இரவுகள், காசைக் கண்டிருக்கும் மகிழ்ச்சியில் இன்பக் கனவுகளில் மிதந்து கொண்டு உறங்கும் பொழுதுகள். வாரவட்டிக் கடன், அடுவான்ஸ் பிடித்தம் எல்லாம் போனாலும், சாமான் வாங்கிச் சமைத்துண்ணும் நாள்; ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நாள்; வறண்ட பொட்டலின் வறட்சியில் சற்றே பசுமை காணும் நாள்.

காத்தமுத்துப் பயல் தீப்பெட்டி ஆபீசு பஸ்ஸில் வராமலே நழுவி விட்டான். கையில் காசு தீரும் வரையிலும் தலை மறைவாக இருப்பானோ அல்லது திரும்புவானோ? சடச்சியைப் போட்டு அந்த ஆண் அடிக்கிறான். குடிப்பதற்குக் காசு கிடைக்காமல் போய் விட்டதே? புது நகரத்தில் ரொம்ப நாட்களுக்கு முன்பு ஃபயராபீசில் வேலை செய்ய வந்த கருப்பனின் பெண் சாதி சடச்சி, அப்போது கருப்பனும் போய் விட்டான். பிறகு சோளக்காட்டில் வேலை செய்ய வந்த போது இவனுடன் சேர்ந்து கொண்டாள். காத்தமுத்து கருப்பனுக்குப் பிறந்த பயல். இங்கிருந்தால் அத்தனை காசையும் பிடுங்கிக் கொள்வான். அதனாலேயே அந்தப் பயல் ஓடிப் போகிறான்...

அன்றிரவுப் பொழுது, சினிமாக் கனவுகளுடன் வெகு விரைவில் கழிந்து விடுகிறது. காலையில் புது நகரத்துக்குச் செல்ல, பலரும் சாக்குச் சொல்லிக் கொண்டு கிளம்புகின்றனர். பெரியபட்டிக்கடையில் அரிசி கிலோ இரண்டு ஐம்பது கொடுத்து வாங்கினாலும் சோறு நன்றாக இல்லை. மண்ணெண்ணெய் நூறு அறுபது பைசா என்று விற்கிறார்கள். புது நகரம் போனால் நூறு நாற்பத்தைந்து, ஐம்பதுக்குக் கிடைக்கும். சில பெண்கள் ஆண்கள் எல்லோரும் ஞாயிற்றுக்கிழமை கூடமங்கலத்துச் சாலையில் பஸ்ஸுக்கு வந்து காத்திருப்பது வழக்கம்தான்.

முடிசீவி, முகம் கழுவிப் பொட்டு வைத்து, வேறு உடை அணிந்து, மம்முட்டியானின் பின் சிறுவர் சிறுமியர் சின்னப்பட்டியிலிருந்து கூடமங்கலம் செல்லும் நேர்த்தடத்தில் நடந்து பஸ்ஸுக்கு வருகின்றனர். சினிமாவுக்கும் பஸ்ஸுக்கும் அவர்கள் காசு கொடுக்க வேண்டாம். ஆனால் அவர்கள் எல்லோரும் சில்லுப் பெட்டியில் ஆளுக்கு ஒரு ரூபாய், எட்டணா என்று காசு வைத்திருக்கிறார்கள். பச்சி, கிழங்கு தோசை என்று தீனி வாங்கித் தின்பதற்கும், இன்னும் சினிமா வாசலில் சோழி குலுக்கிப் போட்டு அதிர்ஷ்டம் பாக்கவும் பத்து பைசா இருபது பைசா வைத்து ஆடி, டிரான்சிஸ்டர் பெட்டி, டார்ச்லைட் போன்ற பரிசுகள் கிடைப்பதற்கு ஆசை கொண்டும் துடித்துக் கொண்டிருக்கின்றனர். அலுமினியம் தூக்குகளில் சோறும் கட்டி வந்திருக்கின்றனர்.

பெரிய சாலையில் மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் நாலைந்து பஸ்கள் ஓடிவிட்டன. அவர்கள் வந்த எக்ஸ்பிரஸ் வண்டிகளில் எல்லாரும் ஏறமுடியாது. பன்னிரண்டு மணி ஆட்டத்துக்குத்தான் வரச் சொல்லியிருக்கிறார்கள். இவர்கள் ஒன்பதுக்கே ஊரைவிட்டுக் கிளம்பிவிட்டார்கள். காத்துக்கிடந்த பிறகு பதினொன்றுக்குச் செல்லும் கூடமங்கலம் பஸ் வருகிறது. பெரியபட்டிப் பிள்ளைகள் எப்போது, எப்படிச் சென்றார்களோ! இவர்கள் காலியாக வந்து நிற்கும் பஸ்ஸில் பாய்ந்து ஏறிக் கொள்கின்றனர். மம்முட்டியான் முதலிலேயே பின் வரிசைகள் இரண்டிலும் அவர்களை நெருக்கமாக உட்கார்த்தி வைக்கிறான். விருப்பம் போல் அமர்ந்து விட்டு பிறகு யாரேனும் வந்து உசுப்பித் தள்ளுவதற்கு முதலிலேயே கவனமாக இருப்பது நல்லதல்லவா?

அழகாயியின் அருகில் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு அவள் புதிதாகப் பூசியிருக்கும் பவுடர் மணத்தில் கிளர்ந்தவனாக மம்முட்டியான் சொர்க்கானுபவம் பெற்றிருக்கும் நேரத்தில் பிள்ளைகள் போடும் கூச்சலும் கும்மாளியும் சிரிப்பும் உறைக்கவேயில்லை. பஸ் புளிமூட்டை போல் மனிதர்களை அடைத்துக் கொண்டு நகர்வது கூடத் தெரியவில்லை. புறாக் குஞ்சு போல் மென்மையான அழகாயி அவன் மீது உராய்ந்து கொண்டிருக்கிறாள். பஸ் ஓடையில் இறங்கி ஏறிக் குலுங்கும் போதும், வளைவாகச் சாயும் போதும், உச்சி மரத்தில் இருந்து பொல பொலவென்று பூக்கள் சொரிவது போல் இருக்கிறது. அழகாயிக்கோ, உடலை மீறிச் சிந்திக்கும் சக்திகள் எதுவும் உறக்கத்தளை நீங்கியிருக்கவில்லை. காலையில் மாமன் உசுப்பும் போது உணர்வு பெற வேண்டும். பிறகு, தீப்பெட்டிகள் மேல் பெட்டி, அடிப்பெட்டி, குச்சிகள் எடுத்து எடுத்து அடைத்துச் செருகி, ஒன்று இரண்டு என்று பன்னிரண்டு பன்னிரண்டாக பன்னிரண்டு குரோசுகள்; எண்ணுவதற்குக் கூட இடைவெளி வேண்டாம். ஏனெனில் சட்டத்தில்தான் அடுக்குகிறார்கள். ஒரு குரோசு பதினேழு பைசா. கணக்கப்பிள்ளையிடம் சென்று காட்டும் வரையிலும் நெஞ்சுக்குள் கலக்கம் தான். சரியில்லை என்று உருவிப் போடுவான். அவன் சரி என்று சொல்வதற்குச் சில சங்கேதங்கள் உண்டு. பண்டல் ‘ரூமிலி’ருந்து அவன் தலையில் பண்டல் எடுத்து வைக்கையில் கட்டுப்பிடித்து முகத்தில் முகம் வைப்பான். இதற்கெல்லாம் எதிர்ப்புக் காட்டக் கூடாது என்று புரிந்து இருக்கிறது.

“எத்தினி குரோசு?”

“இருபது...”

அப்பன் கேட்கும் கேள்விக்கு அவள் இப்படிப் பதில் கொடுக்க வேண்டும்.

இதுவரையிலும் சினிமா டிக்கெட் அவர்கள் வாங்கிக் கொடுப்பதாகச் சொல்லி பஸ்ஸுக்கும் காசு கொடுத்ததில்லை. வேறு ‘ஆபீசு’களில் கொடுப்பதாக சந்திரா, பாலமணி எல்லோரும் சொல்வார்கள்.

முன்பு அழவாயி, அம்மா, அப்பா, மம்முட்டியான் மற்ற பிள்ளைகள் எல்லோரும் ‘தீபாவளி’ போனசு வாங்கியதும் சினிமா பார்க்கப் போயிருக்கிறாள். அப்போது சீட்டு வாங்கப்பட்ட நெருக்கடி...! கூழாக நசுங்கி இடம் பிடிக்க வரிசை நின்று சீட்டு வாங்கி உள்ளே செல்கையில் தம்பி ஓரிடம் தங்கச்சி ஓரிடம் மாமன் ஓரிடம் மச்சான் ஓரிடம் என்று பிரிந்துவிட்டார்கள்.

இப்போது...

பஸ் நிற்கும் இடத்தில் மம்முட்டியான் சிறுவர்களைப் பார்த்து இறங்கச் செய்கிறான். ‘ஏ, எல்லாம் கண்ட பக்கமும் ஓடாதிய! ஒதுங்கி நில்லுங்க! ரோட்டுல வண்டி மோட்டார் வருது!’ என்று அதட்டி ஒதுக்குகிறான்.

சினிமாக் கொட்டகை வாயிலில் நெரிசல் சொல்ல முடியாது. சுற்றுவட்டமுள்ள ஊர்கள் எல்லாவற்றையும் துடைத்துக் கொண்டு ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகக் குழுமிவிட்டாற் போலிருக்கிறது. வாசல் முகப்பில் ஒரு பெண்ணின் படமும், ஆட்டின் பல நிலைப்படங்களும் வைத்திருக்கிறார்கள். ஆடு வேலி தாண்டிக் குதிக்கிறது. நாயைச் சுமந்து நிற்கிறது; வாயில் கடிதம் வைத்திருக்கிறது; காரை மோதிச் சண்டை போடுகிறது. எதிர்சாரியில் நின்று இக்காட்சிகளைப் பார்த்து மம்முட்டியான் பரவசமடையும் பொழுதுக்குள், பேராச்சியும், குரும்பனும் பச்சைமுத்துவும் எதிரே காசு வைத்துக் கட்டையாடப் போய்விட்டனர். ஒரு சதுரத்துணியில் நான்கு கட்டங்களில் கிளாவர், ஆடுதன், டயமன்ட், இஸ்பேட் சீட்டுச் சின்னங்கள் இருக்கின்றன. இவர்கள் பத்துப் பைசாக்களை விரும்பும் சின்னத்தில் வைக்கின்றனர். கடைக்காரன் பகடை உருட்டுகிறான். இரண்டு கிளாவர் வருகிறது; யாரும் கிளாவர் வைக்கவில்லை. பத்து பைசா நஷ்டம். அடுத்து ஆடுதன் வைக்கிறான் பச்சமுத்து. அப்போது மம்முட்டியான் விரைந்து வந்து அவர்கள் முதுகில் போட்டுக் காதைப் பற்றி இழுக்கிறான்.

மன்னாரு அவர்களுக்கான சீட்டைக் கொடுத்து விட்டான். “எல்லாம் படம் முடிச்சிட்டு இங்ஙன வந்து தா பஸ் ஏறணும். ஒண்ணுக்கொண்ணு எங்கனாலும் போயிட்டாக்கூட, பதனமா வெளியே வந்து எதிர சோடாக்கட பக்கமா நிக்கணும்!”

வாயிலில் அடியும் பிடியுமாய் நிற்கும் ஆட்களைப் பார்த்ததும் இப்படி எல்லாம் படாமல் சீட்டு வாங்கிக் கொடுத்ததற்கு மன்னாருவைக் கும்பிட வேண்டும் போலிருக்கிறது, மம்முட்டியானுக்கு.

உள்ளிருந்து முதல் ஆட்டம் பார்த்துவிட்டு கும்பலும் வெளியிலிருந்து உள்ளே செல்ல வரிசை நிற்கும் கும்பலும் மோதிக் கொள்ளும். உச்ச கட்டம் இன்னும் வரவில்லை. லச்சுமியும் அழகாயியும் மம்முட்டியானும் கூடக் காசு வைத்து வட்டம் சுற்றும் ஆட்டம் ஆடுகிறார்கள். இவர்கள் சொல்லும் இடத்தில் வந்து அந்தக் காற்றாடி வட்டமுள் நிற்கவில்லை. மம்முட்டியானுக்கு அந்தப் பாடும் பெட்டி (டிரான்ஸிஸ்டர்) ஒன்று வாங்கிக் கையில் குசாலாகப் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று மிகுந்த ஆசை உண்டு. அதற்காகவே தனது மாசச் சம்பளப் பணத்தைச் சேமிக்கப் பார்க்கிறான். ஆனால் இரண்டு சட்டை தைத்துக் கொண்டிருக்கிறான்; காலையில் பிள்ளைகளை எழுப்பச் செல்லத் தோதாக, ஒரு ‘பாட்டரி’ விளக்கு வாங்கியிருக்கிறான். இதுவே மிக அதிகம். அழகாயியைக் கட்ட வேண்டுமானால் பணம் சேர்க்க வேண்டும். ஒரு சேவல் வாங்கியிருக்கிறான். சென்ற ஈற்றில் ஆடு இரு குட்டியீன்று அவை பெரிதாகி வருகின்றன. இன்னும் பெரிதாகி, அவற்றில் ஒன்றை விற்றால் கல்யாணச் செலவுக்காகும் என்று மாமன் கணக்குப் போட்டிருக்கிறான். தனியாகக் குடிசைப் போட்டுக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் உத்தேசித்து, திருமணச் சடங்கைத் தள்ளிப் போட்டிருக்கிறார்கள்.

உள்ளிருக்கும் கூட்டம் வெளிவர, மம்முட்டியான் கையில் எல்லோருக்கும் கொடுத்திருக்கும் சீட்டுக்களுடன் கூட்டத்தில் மோதிக் கொண்டு முன்னேறுகையில் மம்முட்டியானும் சில சிறுவர்களும் பிரிந்து போகின்றனர். பெண்களின் பக்கத்தில் அழவாயி எங்கே உட்கார்ந்திருக்கிறதோ என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கூச்சலும் மோதலும் குழந்தைகள் அழுகையும் இடியும் மிதியுமான போர்க்களமாக இருக்கிறது.

என்றாலும் பாட்டு நின்று திரையில் படங்கள் தோன்றி சினிமா பார்க்கையில் பொழுது போவது தெரியவில்லை. படம் முழுவதும் ஒரு கனவுலகைக் கண்முன் காட்டி அவர்களைச் சொக்க வைக்கிறது. படம் முடிந்து மீண்டும் மோதல்கள்... “ஏத்தா? எங்கிட்டிருக்கே? அடி... சீலய வுடிடீ!... ஐயோ கால மிதிக்காதேடீ!” என்ற பல கூச்சல்களைக் கடந்து, அழகாயி வெளியில் வரும்போது, மன்னாரு அவள் கையை வலுவாகப் பற்றி இழுக்கிறான்.

“ஏ அழவாயி! இங்க வாடி!”

லச்சுமியின் கையை அவள் பற்றியிருக்கிறாள்.

வாசலில் ஒரு லாரி நிற்கிறது. அவன் அவளை அந்த லாரிக் கதவைத் திறக்கச் செய்து உள்ளே ஏறச் சொல்கிறான்.

“ஏ புள்ள? ஆபீசுக் கொட்டடியெல்லாம் கூட்டிச் சுத்தமாக்கணும்! இவளக் கூட்டிட்டுப் போற. மறுக்க பஸ் ஸ்டான்டில வந்து சேந்துப்பா! மம்முட்டியாங்கிட்டச் சொல்லு!”

“அவ எந்தங்கச்சி, அதும் வரட்டும்!” என்று சொல்ல அழவாயிக்கு நா துடிக்கிறது. ஆனால் லாரிப் பின்புறம் அவள் ஏறிக் கொண்டதும், மன்னாரு முன்னே ஏறிக் கொள்கிரான். அது கிளம்பிவிடுகிறது.

மம்முட்டியான் அழவாயியை லாரியில் பார்த்துவிட்டு ஓடி வருமுன் அது போகிறது.

“ஏட்டி? அழவு எங்கிட்டுப் போறா?”

“கணக்கவுள்ள ஆபீசு கூட்டணும்னு கூட்டிட்டுப் போறா” என்று லச்சுமி தெரிவிக்கிறாள். மம்முட்டியான் திகைத்துப் போய் நிற்கிறான்.

சற்று முன் பார்த்த ஆடு, அந்தப் பெண், அவர்களின் சாகசங்கள் விளைவித்த இனிய கற்பனைகள், எல்லாம் பசுமைகளிழந்து செத்தைக் குப்பைகளாகிவிட, அதில் ஓர் தீக்கங்கு விழுந்துவிட்டாற் போல் இழப்புணர்வு மேவுகிறது.

அந்தத் தொழில் நகரத்தின் விடுமுறை நாளையப் பேரியக்கம், மீண்டும் கொட்டகை வாயிலில் அடுத்த காட்சிக்குக் கூடியிருக்கும் கும்பலில் உயிர்நிலை கொண்டிருக்கிறது.

கூச்சல், மோதித் தள்ளும் நெருக்கடிகள், இவற்றில் பல பசிகளின் தினவுகள் தீர்க்கும் வியாபார சந்தடிகள் எல்லாம். கபடறியாமல் வளர்ந்த இயல்பான ஆசைகளில் மகிழ்ந்து கொண்டிருந்த மம்முட்டியானின் உணர்வில் ஓர் உண்மையல்லாத புழுதிப்படலத் தோற்றத்தைச் சிருஷ்டிக்கிறது.

கையில் இன்னும் சோற்றுப் பாத்திரங்களை வைத்திருக்கும் சிறுவர் சிறுமியர், “பசிக்கிது ஏத்தா, அழவு வாரதுக்கு முன்ன சோறு தின்னுப்பம்... எங்கிட்டுப் போவ?”

மம்முட்டியானுக்கு எதுவும் செவிகளில் ஏறவில்லை.

எதிர்ச்சாரியில் நடந்து சென்று, ரிக்‌ஷாக்கள் ஒதுங்கி இருக்கும் ஓரிடத்தில் அமர்ந்து அந்தச் சிறுவர்கள் பசியாறும் போது கூட மம்முட்டியான் சாலையில் ஏதேனும் லாரி இரைந்து கொண்டு நின்றால் கூர்மையாகப் பார்க்கிறான். சிறுவர் சிறுமியர் ஐந்து பைசாக் கொடுத்து, சில்லென்ற தண்ணீர் வாங்கி அருந்துகின்றனர்.

மம்முட்டியானின் கண்கள், நீலமும் பச்சையும் மஞ்சளும், பூச்சேலைகளும், ரோஸ் நாடாக்களும் எண்ணெய் மினுமினுப்புக்களுமாக வரும் பெண்களிடையே அழகாயியைத் தேடுகின்றன. அவள் ஆளான போது அவன் மாமனாக கடன்பட்டு வாங்கிய பூப்போட்ட சேலையை அணிந்து ரோஸ் நாடாவைப் பின்னல் போட்டிருந்தாள்.

ஆவல்களனைத்தும் மடிந்து போகின்றன.

மாலை வெளிச்சம் மங்கி, நீலம் பாரித்த ஒளிவிளக்குகள் பூத்துவிட்டன; என்றாலும் கூட, அந்தப் புழுதிப்படலத்தில் உறைக்கவில்லை.

கூடமங்கலம் செல்லும் பஸ் வந்துவிட்டது.

மம்முட்டியான் அலைபாய்கிறான். பஸ்ஸில் ஏறுவதற்குக் காத்துக் கிடக்கும் கூட்டம் பாய்ந்து உள்ளே இடம் பிடிக்கிறது. கூடைகள், சாமான்சட்டு என்று தங்கள் உடமைகளுடன் கிராமத்து மக்கள் வண்டியை நிறைக்கின்றனர்.

அழவு... அழவாயி நல்லபடியா வந்து சேரட்டும், கருப்பண்ணசாமிக்குக் கோழி வுடறேன் என்று மனசுக்குள் வேண்டிக் கொண்டு அவன் நிற்கையில் அழவாயி... அவள் அவளேதான், அவன் கண்களுக்குத் தெரியும்படி அந்தப் புழுதிக் கசகசப்பை விழுங்கிக் கொண்டு அவன் முன் தோன்றுகிறான். தவிப்பெல்லாம் உருகிவிட நெகிழ்ந்த குரலுடன், “அழவு, எங்கிட்டுப் போயிட்ட?” என்று கையைப் பற்றிக் கொள்கிறான்.

அவள் முகத்தில் பவுடரும் பொட்டும் இருந்த திட்டுத் திட்டான தடங்கள் கூட இல்லை. ஒரு சூறைக் காற்றடித்து எல்லாம் தடமில்லாமல் போய் விட்டாற் போல் வெறுமை நிலவுகிறது. கொட்டடியைத் தண்ணீர் விட்டுக் கழுவி இருப்பாள். முகத்தையும் கழுவிக் கொண்டிருப்பாள்...

“எல்லாம் ஏறுங்க... ஏறுங்க பஸ்ஸில... விரிசா!”

வண்டியிலிருந்து கூடமங்கலத்தில் இறங்கி அவர்கள் தங்கள் கிராமத்துக்கு நடக்கையில், சோர்வும் அயர்ச்சியும் சினிமாப் பார்த்த பரவசக் கிளர்ச்சிகளை விழுங்கிவிட்டதால், அதைப் பற்றிப் பேசும் தெம்பு கூட இல்லை.

குடும்பனின் வீட்டுக்குள் விளக்கெரிவது தெரிகிறது. வாயிலில் பிள்ளைகள் படுத்து உறங்கிவிட்டனர்.

உள்ளே மாடத்திக் கிழவியும், பேராச்சியின் தாயும் இருக்கின்றனர். புதிய குழந்தையின் ஒலி கேட்கிறது.

அழகாயி அதைக் கேட்டதும் ஆவல் கிளர்ந்து ஓடவில்லை.

“அடி, உங்காயி பெத்திருக்கா, சோறொண்ணும் ஆக்கல. ஆம்புள்ளயாப் பெறந்திருக்கு, அடுப்பக் கொளுத்தி கஞ்சி எதுனாலும் காச்சு. காலம போனவுங்க, பன்னண்டு மணி ஆட்டம் பாத்தா, மூணு மணிக்கு ஆட்டம்வுட்டு அஞ்சு மணிக்குள்ளாற வாரதில்ல? லேடியோல்லாம் முடிஞ்சாச்சி!” என்று அப்பன் குறை கூறுகிறான்.

“நாங்க வாரத்தா இருந்தம். கணக்குபுள்ள வந்து அக்காள ஆபீசு கூட்டணும்னு கூட்டிட்டுப் போயிட்டா. அது இப்பதா வந்திச்சி...” அழகாயி குழந்தையைப் பார்க்கக் கூட நிற்கவில்லை. உள்ளே சென்று வேலிக்கருவையின் காய்ந்த முள்ளை அடுப்பிலிட்டுப் பற்ற வைக்கிறாள். அவள் முகம் அந்த ஒளியிலும் கூட இறுகிக் கிடக்கிறது.

“கணக்கபுள்ள ஆபீசு கழுவக்கூட்டிப் போனானா?” என்று அப்பன் திருப்பிக் கேட்கிறான்.

“நாத்திக்கிழமையும் வேல வாங்குறாங்க. எனக்குத் தெரியல, மாமனக் கேக்கணும்னு சொல்லாம ஏறிட்டா” என்று முணுமுணுக்கிறான் மம்முட்டியான்.

அழகு பதில் சொல்லவில்லை. முள் உள்ளங்கையைக் குத்திவிடச் சிவப்பாக இரத்தம் தெரிகிறது.

“அதுக்குத் தனியாக எதுனாலும் கூலி கொடுத்தானா?” அழகாயி அப்போதுதான் நினைப்பு வந்தாற் போல் தலைப்பில் முடிந்து செருகிக் கொண்டிருந்த முடிச்சை அவிழ்க்கிறாள். கசங்கிய ஒரு ரூபாய் நோட்டும் இரண்டு கால் ரூபாய் நாணயங்களும் வெளிப்படுகின்றன.

“ஒண்ணரை ரூவாயா?...” என்று கேட்டு அப்பன் வாங்கிக் கொள்கிறான்.

அத்தியாயம் - 13

சிவராத்திரியைத் தொடர்ந்து, பெரியபட்டி அம்மன் கோயில் விழாவையும் நடத்துவார்கள். இதன் பொறுப்பு பெரிய வீட்டைச் சேர்ந்தது. கோயிலைப் புதுப்பித்து, பந்தலும் தோரணங்களுமாக அலங்கரித்து, விளக்குகள் போட்டு எல்லா வேலைகளையும் சாமியப்பன் முன்னின்று நடத்துவார். சிறப்பாக மேளக்காரர்களும், வில்லடிக் கலைஞர்களும் வருவார்கள். அந்த ஊர்ப்பிள்ளைகளுக்கு அன்று தொழிலகத்தில் திருவிழாக் காசு இரண்டு ரூபாயுடன் விடுமுறையும் கூட. குடும்பம் முழுவதும் முதல் நாளே பெரியபட்டியில் வந்து இறங்கி, பொங்கல் வைக்கும் விழாவில் கலந்து கொள்வார்கள். விஜிக்கு இந்த நிகழ்ச்சிகள் எதிலும் ஆர்வமோ, பரபரப்பு உற்சாகமோ கூடவில்லை. அவளுக்குக் கைகளையும் கால்களையும் பிணித்துச் சிறையில் போட்டுவிட்டாற் போல் ஓர் உணர்வு தோன்றுகிறது. அநேகமாக விழா முடிந்ததும் அவள் கணவன் வெளியூர்ப் பயணம் புறப்பட்டு விடுவான். அவளுக்குச் சென்னைக்குச் செல்ல வேண்டுமென்று ஆவலாக இருக்கிறது. தனது பாதை நிச்சயமான இலக்கில் செல்வதான உறுதி நம்பிக்கை அவளுக்கு இன்னும் ஏற்படவில்லை.

அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடி உள்வீட்டுப் பூசையை முடித்துக் கொண்டு பெரியபட்டிக்குப் பொங்கல் வைக்கக் கிளம்ப வேண்டும் என்று மாமியார் எல்லோரையும் விரட்டிக் கொண்டிருக்கிறாள். பால், சந்தனம், பன்னீர் போன்ற அபிடேகப் பொருள்கள் எல்லாம் ஓர் புறம் எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர் பணியாளர்.

“தா, விஜி, இந்தப் பருத்தியத் திரிச்சிப் போடு!” என்று கூறிய வண்ணம் வந்தவள், “என்ன இந்தச் சீலய எடுத்து உடுத்திட்டிருக்கிற? கலியாணமாய் முதமுதல்ல பொங்கல் வைக்கப் போறீங்க. சாயம் போயிப் பழசா இருக்கு. நம்ம வீராயி கூட நல்லா உடுத்திருக்கா. போயி தீபாவளிக்கு வாங்கினனே, அந்தச் சீலைய உடுத்திட்டுவா? உன் நாட்டாம எனக்கப்புறம் வச்சிக்க. நா இருக்கிற வரையிலும் யாரும் நாஞ்சொல்றதத்தான் கேக்கணும்!” விஜியினால் இதற்குக் கிளர்ந்த எதிர்ப்புணர்ச்சியை விழுங்கிக் கொள்ள இயலவில்லை.

“எனக்கு இதுதா வசதியாக இருக்கு அத்தை. எனக்கு அப்படித் தகடிச்சேலை கட்டி வழக்கமில்லாததுனால எப்படியோ இருக்கு. நான் இப்படியே இருக்கிறேன் அத்தை...”

“இத பாரு, நீ வீணா இப்ப இதுக்கெல்லாம் பேச்ச வளர்த்திட்டுப் போவாத. பெரியவங்க சொன்னா, சரின்னு கேக்கணும். சீலய உடுத்திட்டு உங்க வீட்டில போட்ட நெக்லசையும் கைவளையலையும் தோட்டையும் போட்டுட்டு லட்சணமாக வா. நெத்தியில் கொசு மாதிரி ஒரு சாந்து பொட்டு. இது இருக்குதா இல்லையான்னே தெரியல. பளிச்சினு குங்குமப் பொட்டா எடுப்பா வச்சிட்டுவா!”

விஜி பிடிவாதமாக மாமியாரைப் பார்க்கிறாள். “நகைகள் போட்டுக் கொள்ள எனக்கு இஷ்டமில்லை. நான் அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன். இந்தச் சேலை பழசாக இருக்கிறதுன்னா நான் வேற உடுத்துகிறேன். ஆனா, நீங்க சொல்லும் சேலையை நான் உடுத்துவதற்கில்லை. மன்னிக்கணும்...”

மாமியார் அதிர்ந்து போகிறாள்.

அவள் முகத்தில் வியர்வை குப்பென்று பூத்து வழிகிறது.

“ஏண்டி? நீ என்னடீ நினைச்சிட்டிருக்கிற? ஒரு நல்ல நாளு, நாலு பேர் பாப்பாங்க. ஒரு கவுரவம் வேண்டாமா? நகையெல்லாம் ஆரக் கேட்டுட்டுத் திருப்பிக் கொடுத்தே?...”

“ஆரைக்கேக்கணும்! அது எனக்குக் கொடுக்கப்பட்டது. எனக்குத் தேவையில்லை, திருப்பிக் கொடுத்தேன்.”

‘ஆரைக்கேக்கணுமா? எப்படி எதித்துக் கேக்கிறா?’

“இத பாருடீ இன்னிக்கு நீ இப்படியே வரக்கூடாது. ஒரு பெரிய இடத்துக்கு மருமகள் நீ. கூலிக்காரிச்சி உடுத்தும் சீலையுடன் வந்து நின்னால் நாலு பேர் மரியாதக்குறவா நினைப்பா. நீ உங்க வீட்டில எப்படி வேணுமின்னாலும் இருந்துப்பே. ஆனால் இங்க அப்படி இருக்கக்கூடாது!”

விஜி வாயைத் திறக்கவில்லை. ஆனால் எழுந்து அவள் ஆணைக்கும் கீழ்படியவில்லை.

“செல்வி, உங்கண்ணனைக் கூட்டிட்டு வா! இன்னிக்கு ரெண்டிலொண்ணு கண்டிப்பாகணும். ஒண்ணு நான் இந்த வீட்டை விட்டுப் போகணும், இல்லாட்டி அவங்க தனியாகப் போகட்டும். என் கண் முன் இது கூடாது!”

செல்வி அண்ணனை எழுப்பத் தயங்குகிறாள். ஏனெனில் அவன் காலையில் ஏழு மணிக்குக் குறைந்து எழுந்து வரமாட்டான். அதற்குள் எந்தக் காரணம் கொண்டு எழுப்பினாலும் எரிந்து விழுவான். அதுவும் விஜி வந்த பிறகு செல்வி அந்த வேலைக்குச் சென்றதில்லை. “மயினியே எழுப்பட்டும்!”

“என்ன ரகள இங்கே?...” என்று கேட்டுக்கொண்டு அப்போது மயிலேசனே அங்கு வருகிறான். கையில் சிகரெட் புகைந்து கொண்டிருக்கிறது.

தாயார்க்காரி அழுகைப் பிரளயம் தொடங்குகிறாள்.

“என்னால நிதநிதம் லோலுப்படுறதுக்கில்ல சுப்பையா. வேலக்காரங்களுக்கு முன்ன அசிங்கமாயிருக்கு...”

“என்னடி அழும்பு பண்ணுற? அம்மா சொல்படிதா இந்த வீட்டில இருக்கணும்!” என்று விஜியிடம் அவன் திரும்புகிறான்.

“இந்த வீட்டில் என் இஷ்டப்படி இருக்க உரிமை கிடையாதா?”

“என்னடி உரிமெ பேசுற? உரிமை? போடீ! சொன்னபடி செய்யி!”

வீராயி, தவசிப்பிள்ளை கோலப்பன், அவன் மனைவி சம்பங்கி ஆகியோருக்கு முன் அவன் அவ்வாறு கேட்கும் போது விஜி அதிர்ந்து போகிறாள்.

கையிலிருக்கும் பருத்தியைப் போட்டுவிட்டு மாடிக்கு ஏறிச் செல்கிறாள். துயர உணர்ச்சி உந்துகிறது.

அழக்கூடாது என்றூ உறுதி செய்து கொள்கிறாள். ஆனால் அவளால் விருப்பமில்லாத செயல்களுக்குத் தலைவணங்கவும் இயலவில்லை. தான் தனித்து நிற்கவேண்டும். இந்தச் சிறு உரிமைகளுக்கு அவளுக்குக் கணவன் வீட்டில் இடமில்லை என்றால், பெரிய உரிமைகளை எப்படிக் கேட்க முடியும்? அல்லது பிறருக்கான உரிமைகளுக்கு எப்படி வாதாட முடியும்?

மாடியிலுள்ள நடுஹாலில், நின்ற வண்ணம், வாயிலை வெறித்துப் பார்க்கிறார். அங்கிருந்து பார்க்க, தொலைவில் சாலையில் செல்லும் ஊர்திகள் தெரிகின்றன. தோட்டத்துக்கப்பால் கட்டாந்தரையாகவே விரிந்திருக்கிறது. வெயிலில் காய்ந்து காய்ந்து இறுகிப் போன மண் அந்தச் சாலையிலிருந்து பார்க்கும் போது இந்த இல்லம் தனியான கனவு மாளிகை போல் தெரியும். ஆனால் உள்ளே வந்தால் இது சிறைச்சாலை. சிறைக் கைதிக்குத் தன் விருப்பப்படி உடை அணிய உரிமை உண்டா?

ஆனால் இந்தச் சிறையில் அவளை யாரும் பிடித்துத் தள்ளவில்லை. அவளாகவே வந்து புகுந்து கொண்டாள். இப்போது இரண்டு வழிகள் தானிருக்கின்றன. ஒன்று, அவள் இவர்கள் சொற்படி கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும்; இல்லையேல், இதைவிட்டு வெளியேற வேண்டும். வெளியேறுவது என்பது சாமானியமாக நடக்கக் கூடியதில்லை. இங்கே இருந்து கொண்டு போராடி இவர்களைத் திருத்துவதென்பதும் நடக்கக் கூடியதாக இல்லை.

அவள் ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருக்கையில் கார் ஒன்று பெரிய சாலையிலிருந்து திரும்பி இவர்கள் வீட்டுக்கு வரும் கப்பிச் சாலையில் வருகிறது. ரங்கேஷின் வண்டி தான் அது. மீனா உடல் முழுதும் சரிகை பின்னப்பட்டாற் போல மினுமினுக்கும் இளம் ‘பிங்க்’ சேலையை உடுத்தியிருக்கிறாள். மீனா நல்ல சிவப்பு; ஆனால் பருமன். முகம் முற்றித் தடித்தாற் போல் காணப்படுவதைப் பூச்சுக்களால் மறைத்திருக்கிறாள். ஈரக் கூந்தலை நுனியில் சிறு பின்னலாய் முடிந்து கொண்டு கனகாம்பரமும் மல்லிகையும் சுமையாகச் சூடியிருக்கிறாள். செவிகளில் முத்தும் சிவப்பும் விளங்கும் தோடுகள். அதே போல் முத்துப் பதக்கம் கழுத்தில் துலங்க, மெல்லிய கழுத்தணி. இரண்டு வரிச் சங்கிலி, முழங்கை முண்டு தெரியாத சதைப்பற்றுள்ள கைகளில் முத்தும் சிவப்புக் கல்லுமாகக் கரைபிடித்தத் தங்க வளையல்களின் அடுக்குகள், நெற்றியில் சேலைக்கிசைந்த பெரிய பொட்டு...

அவளுடைய அலங்காரத்தை வாயில் முகப்பில் நின்றே பார்த்து விடுகிறாள் விஜி.

கீழே கலகலப்பைத் தொடர்ந்து யாரோ வரும் அரவம் கேட்கிறது. மீனாவாக இருக்கும் என்று கருதுகிறாள். வருவது... அவள் கணவன்!

“... குட்மார்னிங், என்னம்மா, விஜி? நீங்க ரெடியாகலியா?”

“குட்மார்னிங்” என்று முணமுணத்துவிட்டு, சற்றே நிதானமாகப் புன்னகை செய்கிறாள். “ரெடியாக என்ன வேணும்? நான் ரெடியாகத் தானிருக்கிறேன்...”

“பின்ன, கிளம்ப வேண்டியதுதானே? எப்பவும் மீனா தான் கிளம்ப நேரம் பண்ணுவா. இங்கேந்து வந்துதான் எங்களைக் கிளப்ப வேண்டியிருக்கும்... இன்னிக்கு எனக்கே நம்ப முடியல. சுப்பையா நான் வந்த பிறகு குளிக்கப் போறான்?”

“... உங்களிடம் இனிமேல் சொல்லுவதற்கென்ன அண்ணா, நான் இந்த உடை அலங்காரத்துடன் கோவிலுக்கு வரக்கூடாதுன்னு அத்தை சொல்றாங்க. எனக்கு இப்படி இருந்துதான் பழக்கம். நான் இந்த மாதிரி ஆடம்பரங்களுக்குப் பழக்கப்பட்டவ இல்ல. இதெல்லாம் என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளும் போதே உங்ஞ்களுக்குத் தெரிஞ்சது தானே? மேலும், என் வ்யூஸ் பத்தி உங்க தம்பிக்கும் முன்னமே நான் சொல்லாமலில்லை. ஐ அம் ஸாரி. எங்கேயோ தவறு நேந்து போயிருக்கு... இப்ப வீணாக என் உடை உடுத்தும் உரிமையில் கூடக் கட்டுப்பாடு என்பது எனக்கு ஒத்துக் கொள்ளக் கூடியதாக இல்லை...”

“அதெல்லாம் என்னம்மா? உன்னை யாரம்மா கட்டுப்பாடு பண்ணினாங்க இப்ப? யூ ஆர் அஸ் ஃபிரீ அஸ் யு ஆர் பிஃபோர். இதுவும் உன் வீடுதான். ஆடம்பரம்னு நீ ஏம்மா நினைக்கிற? நாங்களெல்லாம் சின்னப் பிள்ளையில் குச்சியடுக்கினவங்கதா. முப்பத்தஞ்சு ரூபாதா நான் காலேஜில படிக்கிற நாளிலே செலவுக்குத் தருவாங்க. மாசக் கடைசி நாளில் சோப்பு இல்லேன்னா, சோப்பு இல்லாம குளிக்க வேணும். அதனால, நீங்க என்னமோ எளிமைன்னும் இவங்க இல்லைன்னும் நினைச்சிக்காதம்மா, எல்லாரும் ஒரே நிலைதான்...”

“நீங்க இப்படிச் சொல்வது எனக்குச் சந்தோஷமாக இருக்கு அண்ணா. ஆனா, மத்தவங்க அதுமாதிரி நினைக்கல.”

“மத்தவங்கன்னா யாரு? அம்மா... அம்மா அவங்க காலத்தில் ரொம்பக் கஷ்டப்பட்டவங்க. ஏதோ கொஞ்ச காலம் அவங்க இருக்கும் வரை மதிப்புக் குடுத்திடறதுன்னு வச்சிருக்கிறோம். அவ்வளவுதான். நீ அவங்க சொல்றதப் பெரிசா எடுத்திட்டு மனசு வருத்தப்படறது சரியாயில்ல விஜி. யூ ஆர் மெச்சூர்டு. யூ கேன் அன்டர்ஸ்டான்ட்.” பணிவும் இங்கிதமுமாகப் பேசியே எதிராளியை வீழ்த்திடும் இவனுடைய சாதுரியம் அவளை வியக்க வைக்கிறது.

“நான் புரிஞ்சுக்கிறேன் அண்ணா, அதனால் தான் எனக்குச் சில ஈடுபாடுகள் உள்ளோடு உடந்தை இல்லேன்னாலும், அவங்களுக்காகக் காலம ஆறு மணியிலேந்து சந்தனம் அரைக்கறதும் பூக்கட்டுறதும், திரி திரிக்கிறதுமா என் பொழுதை வீணாக்கிட்டிருக்கிறேன். இதைவிட, பின் தோட்டத்தில கொத்தி வெண்டை பயிரிடலாம்னு நினைப்பேன். ஆனால், நான் உடுத்தும் உடை போன்ற சொந்த விருப்பு வெறுப்புக்களில் எனது சுதந்திரம் பறி போவதை அனுமதிப்பது எப்படி? பிடிவாதமாக அவங்க அந்த சேலையைத் தான் உடுத்தணும், இந்த நகையைத்தான் போடணும்னு சொன்னா எப்படி...?”

“விஜிம்மா, நான் சொல்றேன், ஒரு பேச்சுக்கு, இப்ப இத ஒரு வேட்டிய உடுத்திட்டு நான் வந்திருக்கிறேன். இதோடு ஆபீசுக்குப் போனால், அது சரியாயிருக்கிறதில்லை. அதற்கு ஒரு வேசம் வேண்டியிருக்கு. இன்னும் பல சமயங்களில் முழுசாக டை கோட்டுன்னு போட்டுட்டுத் திண்டாட வேண்டியிருக்கு. சுதந்திரங்கறது அப்படிப் பார்க்கப் போனால் ஒண்ணுமில்ல. ஒரு சமுதாயத்தில் வாழுறப்ப, சில சட்ட திட்டங்களுக்கு நாம தலை வணங்கித்தான் போக வேண்டியிருக்கு. இதுனால நான் எங்கம்மா பக்கம் நியாயம் பேசறேன், உன் பக்கம் பாதகம்னு நினச்சிடக்கூடாது. எனக்கு உன் தனித்தன்மை ரொம்பப் பிடிச்சிருக்கு. இப்படி உள்ளவங்கதான் இன்னிக்கு நம் நாட்டுக்கே தேவை. ஆனால் கொஞ்ச காலத்துக்கு, அம்மாளை நீ எதிராளியாக நினைக்கக் கூடாது. அதுவும் பாரு, இரண்டு வருசம் ஆகி, செல்விக்கும் கல்யாணமாயிட்டா, அவங்க கவனிக்கக்கூட மாட்டாங்க. இப்ப என்னடா புதிசா கல்யாணமான மருமகள், நாம் சொல்றோம் மதிக்கலேன்னு அவங்களுக்குக் கோபம் வருகிறது...”

“ஐ... ஆம்... ஸாரி அண்ணா! எனக்குக் கல்யாணத்தின் பொழுது உடுத்தச் சொன்ன போது, நான் எதிர்ப்புக் காட்டக் கூடாதுன்னு இருந்திட்டேன். இது... அப்படீன்னா நான் கோயிலுக்கு வரல...”

“ஓ... இது அதை விட மோசம்...”

“என்னண்ணா? இன்னுமா தகராறு பண்ணிட்டிருக்கா?”

மயிலேசன் அங்கே வருகிறான். நீராடிப் புதுமை பெற்று தழையப் பாதம் தெரியாமல் புரளும் சரிகை வேட்டியும், மினுமினுக்கும் ஜிப்பாவும், மெல்லிய தங்கச் சங்கிலியுமாக வந்து நிற்கிறான்.

“தகராறு ஒண்ணுமில்ல, இப்ப வந்திடுவாள். நாங்க வேற ஏதோ டிஸ்கஸ் பண்ணிட்டிருந்தோம்.”

“இப்ப என்ன டிஸ்கஷன், அதுக்கு நேரம் பொழுதில்ல? அம்மா நேரமாச்சின்னு கத்துறாங்க. அவ வந்தா வாரா, வாராட்டி நிக்கட்டும்...”

“அதெல்லாமில்ல இப்ப வந்திடுவா. கெளம்பும்மா!”

“இப்படியேதான் வருவேன்...”

அப்படியேதான் அவள் வண்டியிலேற வருகிறாள்.

மீனா ஒன்றும் அறியாதவள் போல் வாய் மலரச் சிரிக்கிறாள். பூக்கூடையில் இருந்து ஒரு கட்டு கனகாம்பரத்தையும் மல்லிகைச் சரங்களையும் எடுத்து அவளுடைய கூந்தலில் சுமையாகச் சூட்டுகிறாள்.

தாயும் இளைய மகனும் கோலப்பனும் ஒரு வண்டியிலும் விஜியும் மீனாவும் ரங்கேசனும் ஒரு வண்டியிலும் கிளம்புகின்றனர்.

பாதையிலே சைகிளில் நரைத்த கிராப்பும் சட்டை மேல் துண்டுமாக வருவது யார்...?

விஜியின் கண்கள் கூர்மையாகின்றன. அப்பா தான்.

இந்த நேரத்தில் அப்பா... அப்பா எதற்கு வருகிறார்? ரங்கேசன் வண்டியை நிறுத்துகிறான்.

“அடாடா... வாங்க... வாங்க மாமா...”

அப்பாவுக்கு இப்போதுதான் கோயில் விழாவே புரிகிறதா?

“நீங்க கிளம்பிடறதுக்கு முன்ன வந்திடணும்னு பார்த்தேன்...”

“வாங்க மாமா, கோயிலுக்குத்தான் போயிட்டிருக்கிறோம். வாங்க...” என்றவன் பின்னால் நிற்கும் வண்டியைப் பார்த்து, “கோலப்பா? சைகிளை வாங்கிக் கொண்டு ஓட்டிட்டுப் போயி வீட்டில விட்டுடு!”

“வேண்டாம். இங்க பழனியாண்டவன் கடையில நிறுத்தி வையி, சௌகரியமாயிருக்கும்...” என்று கூறி விட்டு அப்பா ஏறிக் கொள்கிறார்.

சில வினாடிகளில் விஜி ஏதேதோ எண்ணுகிறாள். அவர் ரங்கேசனின் அருகில் அமர்ந்ததும் வண்டி நகர்ந்து செல்கிறது.

“நேத்து ராத்திரியே வரணும்னு நினைச்சேன்...”

“என்ன விஷயம், சொல்லுங்க மாமா!”

“உங்களுக்கு ஏதும் தெரியாதா? இளஞ்சேரனில் நேத்து... மாரிசாமிய வேலையவிட்டு நிறுத்திட்டா. மானேசர் சாமியப்பனுக்கும் கூவனுக்கும் தகராறு...”

“... எனக்குப் போன் பண்ணினான். ‘பவர்கட்’ பாருங்க ரொம்பத் தொல்லையாயிருக்கு. நான் அது விசயமாப் போயிருந்தேன். ஏதோ பெண்கள் தகராறு போல இருக்கு. இது ஒரு பிராப்ளம் மாமா. நாம என்ன ஒழுங்கு வச்சாலும் வேலைக்கு வரும் இளம்பெண்கள், கணக்கப்பிள்ளைகள்னு விவகாரங்கள் எப்படியும் வந்திடுது. மாரிசாமி ஏதோ பெண்ணிடம் ஒழுங்கு மீறி நடந்திட்டானாம். அது போயி மானேசரிடம் புகார் பண்ணிருக்கு. பாத்திட்டிருந்து புடிச்சிருக்கிறான்.”

விஜியினால் இதை நம்ப முடியவில்லை. செவி மடல்கள் சிவக்கின்றன.

“தம்பி, மாரிசாமிய எனக்கு அஞ்சு வயசிலேந்து தெரியும். இந்த மாதிரி அநியாயங்கள எதுத்துப் போராடுறவன் அவன். அவன் ஒழுங்கு மீறி நடந்தான்னா அது நம்பமுடியாதது. அவன் என்னிடம் சொல்லும் சமாசாரம் நேர்விரோதமாயிருக்கு. ஒரு பெண்ணை, சின்னப்பட்டிப் பெண்ணை, கைபார்க்கும் மன்னாரு கடத்திட்டே போனதைப் பார்த்தேங்கிறான். பண்டல் எடுத்துக் கொடுக்கையில் முறைகேடா நடந்திட்டதைப் பல பிள்ளைங்க பார்த்தாங்கன்றான். அந்தப் பெண் பயந்திட்டுப் பேசாம இருக்கு. ஏன்னா, பெட்டி அடச்சது சரியில்லன்னு கலச்சிப் போட்டுடுவான். கூலி குறைஞ்சிடும். பயப்படாம சொல்லுன்னு அந்தப் பிள்ளையைக் கேட்டிட்டிருந்தானாம். இதை வச்சிட்டு மானேசர் அபாண்டப்பழி போட்டுட்டார்ங்கன்னு சொல்றான். இதை நான் நம்பமுடியும்...”

ரங்கேசன் சிரித்துக்கொண்டு பதிலளிக்கிறான்.

“சாமியப்பன் எங்கப்பா முதல் முதல்ல பஞ்சப்பட்டியில் மாட்ச் வொர்க்ஸுனு தொழில் துவங்கிய காலத்தில் சிறு பையனாக வந்து சேர்ந்தவர். எங்களை எல்லாம் தோளில் தூக்கிக் கொண்டு விளையாடிய நாளிலிருந்து நம்பிக்கை பெற்றவர். அதனால் அவர் தப்பாகச் செய்திருக்க மாட்டார் என்று நானும் நம்ப வேண்டியிருக்கு...”

“இல்லை தம்பி, நீங்கள் தீர விசாரிக்கணும். வேலை போனதை விட, இந்த அவமானம் தான் எரிச்சலாயிருக்கு. நீங்க நியாயமாக விசாரணை செய்தால் பல முறைகேடுகள் தெரிய வரும்...”

ரங்கேசன் சட்டென்று பதில் கூறவில்லை.

அத்தியாயம் - 14

பெரியபட்டி மாரியம்மன் கோயில் புதிய வண்ணங்களும் வண்ணமுகமாகப் புதுமை பெற்றிருக்கிறது. அம்மனின் கருவறையும் முன் மண்டபமும், ஒரு சுற்றும், பழைய வேம்பும் அரசும், புதிய வேம்படியுமாக விளங்கும் கோயிலில் மண்டபம் முழுவதும் பளிங்குத்தரை பாவி ஒரு ஆண்டுதானாகிறது. மண்டபத்துக்கு முன்னும், இன்னும் சுற்றுப்புறத்திலும் பெரிய பந்தல்களும் தோரணங்களும் விளங்குகின்றன. பொரிகடலை மிட்டாய்க் கடைகள், அலுமினியம் பாத்திர வண்டி, மூட்டையில் சேலை கொண்டு வருபவரின் விரிந்த கடை, எல்லாம் விழாவுக்குக் கட்டியம் கூறுகின்றன. சுற்று வட்டம் கிராமங்களிலிருந்து மக்கள் ஆடுகளும், சேவல்களும், எதுவும் காவு கொடுக்க வசதியில்லாதவர், பூசணிக்காயையேனும் சுமந்து கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றனர். ஒலிபெருக்கி, பிரசித்தி பெற்ற பின்னணிப் பாடகர்களின் பக்தி கீதங்களைக் காற்றோடு பரப்பிக் கொண்டு இருக்கிறது. கூடமங்கலத்தின் தொடக்கத்தில் ஆறுமுகத்தின் தேநீர்க்கடைக்கும் திருவிழா, ஒரே கூட்டமாக இருக்கிறது.

பெரிய வீட்டு முதலாளிகளின் கார் வருவது கண்டு தெருவில் செல்லும் மக்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர். பெரிய வீட்டில் கிழவரின் மகளான அத்தை வாயிலில் ஓடி வந்து வரவேற்கிறாள். அவளுடைய மகன், மகள், மருமக்கள் என்று வீடு கொள்ளாத கூட்டம்.

“வாங்க மயினி! ஒடம்பு எப்படி இருக்கிய? மீனா?... வாம்மா!” என்றெல்லாம் வரவேற்கும் உறவினர், விஜியைக் கண்டும் காணாமலும் செல்கின்றனர். உட்பக்கம் அறையிலிருந்து பாட்டி ஐயாம்மா வருவது கண்டு விஜி முக மலருகிறாள்.

“ஐயாம்மா, நீங்க எப்ப வந்தீங்க?”

“இப்பத்தா வாரேன். ஏட்டி, ஒரு நல்ல சீலய உடுத்திட்டு வரதில்ல? பொங்கல் வைக்க, மாவிளக்குப் போட முத வருசம் வந்திருக்க, கல்யாணச் சேலையை உடுத்திட்டு வராண்டாம்? காது தோடுன்னாலும் பளிச்சினு இல்லாம...”

அவளுக்குச் செவிகளைப் பொத்திக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது. அந்த உறவினர் கூட்டத்துக்குத் தான் வந்திருக்கக் கூடாது என்று தோன்றுகிறது.

“ஏண்டி நீ இப்பிடி இருக்கிற? அவங்கல்லாம் என்ன நெனப்பா?”

“ஐயாம்மா நீங்க செத்த பேசாம இருங்க?”

வெளியில் பெரிய மேல் திண்ணையும் கீழ் திண்ணையுமான பகுதியில் சகலைகள், மைத்துனர்கள் மாப்பிள்ளைகள் என்று சரிகை வேட்டிகளும், மினுமினுப்புச் சட்டைகளும் மோதிரங்களும் இழைச்சங்கிலிகளும் இளமைகளும், நடுத்தரங்களுமாக முதியவரைச் சுற்றி அமர்ந்திருக்கின்றனர். இளம்பெண்களான உறவினர் காபியும், குளிர்பானமும் கொண்டு வந்து கேலிகளுக்கும் கிண்ணாரங்களுக்கு மிடையே கொடுக்கின்றனர். அவர்களில் செல்வியை மட்டுமே விஜிக்குத் தெரியும். அந்தப் பெரிய கூட்டத்தில் அவளை இனம் புரிந்து கொள்பவர் யாரும் இல்லை. அவர்களுடன் அவளால் ஒட்டிக் கொள்ளவோ உரையாடவோ இயலவில்லை; தெரியவுமில்லை.

அவள் அறை வாயிற்கதவில் ஒட்டினாற் போல் கனவுலகக் காட்சிகளைக் காண்பது போல் பிரமையுடன் நிற்கையில் ஒரு இளம்பெண் வந்து, “மயிலேஷ் மாமா... மாமிதான நீங்க? அத்தை உங்களைக் கூப்பிடறாங்க!” என்று தொட்டழைக்கிறாள்.

“காப்பி குடிச்சியா?... இப்ப கோயிலுக்குப் போகணும். அபிசேகம் பொங்கல் வைச்சு முடிய பகல் ரெண்டு மணியாகும். எல்லாரும் சுப்பையா பெண்சாதி ஏனிப்படி இருக்கிறான்னு கேக்கிறாங்க. நீ வராம இருந்திருந்தாக் கூட உடம்பு சுகமில்லைன்னு சொல்லி இருப்பேன். என்னாத்துக்குடீ இப்படி எதையோ பறிகுடுத்தாப்பல நிக்கற?...”

மாமியார் கடிந்து கொள்கையில் அவள் அசையாமல் நிற்கிறாள். “இத்தன உறமுறைக்காரங்க வந்திருக்காங்க. சிரிச்சிப் பேசினா என்ன?...”

“அவங்க கூட நா என்னத்தைப் பேசுறது? எல்லாரும் சேலை நகையத்தான் பேசுறா...”

“நான் அதாங் கவுரவமா வாடின்னே. கேட்டியா?”

“சீலை நகைதான் கவுரம்னு நான் இன்னமும் நினைக்கல.” சற்று எட்டி, தன் மனைவியின் நடப்பை மயிலேசன் பார்த்துக் கொண்டு தானிருக்கிறான். விடுவிடுவென்று வருகிறான். “என்னாடி? எப்பப் பார்த்தாலும் தகராறு பண்ணிட்டிருக்கே?”

“நா என்ன தகராறு பண்ணினேன்? நான் சும்மா நின்னிட்டு இருக்கிறேன்...”

பளாரென்று அவள் கன்னத்தில் ஒரு அடி விழுகிறது.

அவள் விக்கித்துப் போகிறாள்.

அம்மா உடனே, “வாணாண்டா, போ, வீண் ரசாபாசம் எதுக்கு?”

“அவனுக்குக் கோபம் வந்திடும். நாலுபேர் வந்த எடத்துல நல்லபடியா நடக்கலன்னா கவுரவக் கொறவில்ல?... போகுது போ; வீணா புடிவாதம் பண்ற. போயி மூஞ்சியக் கழுவிட்டு லட்சணமாப் பொட்டு வச்சிட்டுக் கெளம்பு...” என்று சமாளிக்கிறாள்.

“நான் இங்கே வந்ததே தப்பு. நான் கோவிலுக்கு வரல. இந்தப் பொங்கல் வைக்கிறதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது!”

மயிலேசனுக்கு இந்தப் பதில் இன்னும் ஆத்திரத்தைக் கிளர்த்துகிறது. “என்னடீ? என்னடீ சொன்ன? நம்பிக்கை கிடையாதா? உன் ப்ளடி ஐடியாஸெல்லாம் இந்த வீட்டுக்குள்ளே வரக்கூடாது! என்ன நினைச்சிட்டிருக்கே!”

அவன் மீண்டும் பாய்வதற்குள் அம்மா தடுத்து விடுகிறாள்.

விஜிக்குக் கண்களில் நீர் மல்குகிறது. அது மீறிவிடாமலிருக்கச் சமாளிக்கிறாள்.

“இதுக்குத்தான் சொன்னேன். நான் சொன்னபடி செய்திருந்தால் உன்னை யாரும் தனியாகப் பார்த்து எதுவும் கேக்கமாட்டாங்க. இப்ப உனக்கே குறைவா இருக்கு. பிடிக்கலன்னு ஒரு பொம்பிள வீம்பு புடிக்க முடியுமா?...”

பொறியில் சிக்கிய அற்பப் பிராணி போல் தன் நிலையை உணருகிறாள் விஜி. கற்களைக் கூட்டி அடுப்பில் மண்பானையேற்றிப் பொங்கல் வைக்கிறார்கள். பெரிய வீட்டுப் பெண்களும் ஆண்களும் மண்டபத்தில் பளபளவென்று அமர்ந்திருக்க, உள்ளே அம்மனுக்கு விமரிசையாக அபிடேகங்களாகின்றன. பொங்கலைப் படைத்து விட்டு வீடு திரும்புகையில் பசியும் சோர்வும் மிஞ்சி நிற்கின்றன. அப்பாவும் ஜயாமாவும் அங்குதானிருக்கின்றனர் என்பதைத் திரும்பி வரும் போது தான் அவள் கவனிக்கிறாள்.

“உங்க மாமியாகிட்டச் சொல்லிருக்கிறேன். சாப்பாடான பிறகு மாப்பிளையும் நீயுமா வந்திட்டுப் போகணும்!” பாடிக்கு காரில் அவர்கள் வந்திறங்க, அதை நாயுடு வீட்டிலும் வாத்தியார் சிவகணபதியிடமும் பெருமையாகச் சொல்லிக் கொள்ள வேண்டும்.

“மாப்பிள்ளைகிட்டச் சொன்னீங்களா!” என்று கேட்கிறாள் விஜி.

“அவன் எல்லோருடனும் பேசிட்டிருக்கிறான். அங்க போயி நானெப்படிச் சொல்ல? நா எப்புடிக் கூப்பிட?” என்று பாட்டி மகனை ஏவுகிறாள்.

அவர் மாரிசாமி பிரச்னையில் சிக்கியிருக்கிறார். மகளைப் போல அவரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதையே முரண்பாடாக உணர்ந்திருக்கிறார். பவர்கட் தொல்லை, அரசு அதிகாரிகளின் பேராசை, வெளிநாட்டு ஏற்றுமதிச் சரக்கு ஒப்பந்தம் ஆனபின், கப்பல் கிடைக்காமல் காத்திருந்து நாட்களாகி விட்டதற்காக, சரக்கின் மதிப்புக்கு இரண்டு மடங்காக நட்ட ஈடு கோரி அந்த வெளிநாட்டு நிறுவனம் வழக்குப் போட்டிருக்கும் தொல்லைகள் என்றெல்லாம் தான் பேசினார்கள். மருமகன் உண்மையில் ரங்கேசனைப் போல் அவரை மதிப்பது கூட இல்லை. மாரிசாமி விஷயத்தை அவனிடம் தான் உண்மையில் பேச வேண்டும். ‘இளஞ்சேரன்’ அவனுக்குரியது தான்.

அவர் விடை பெற்றுக் கொள்ளப் போகிறார்.

“என்ன மாமா, அதுக்குள்ளே கிளம்பிட்டீங்க? சாப்பிடாம...?” என்று ரங்கேசன் தடுக்கிறான்.

“இல்ல தம்பி மன்னிச்சிக்கணும். அதான் பொங்கல் பிரசாதம் பழம் எல்லாம் கோயிலிலேயே சாப்பிட்டாச்சே? போதும்...” என்று விடைபெறுகிறார்.

“பிறகு உங்க விருப்பம்...” என்று கை குவிக்கிறான்.

மருமகனை இளவட்டக் கூட்டத்தில் தேடி, “தம்பி கொஞ்சம் வரீங்களா?...” என்று மெள்ளத் தோளைத் தட்டிக் கவனத்தைத் திருப்புகிறார்.

“என்ன...?”

“ஒண்ணில்ல, சின்னப்பட்டி வரய்க்கும் கொஞ்சம் வந்தீங்கன்னா, தேவலை. விஜியை அழைச்சிட்டுப் போகலான்னு...”

“அதுக்கு நா எதுக்கு? டிரைவர் இருப்பானே?”

“அதுக்குச் சொல்லல தம்பி. உங்க கூடவும் கொஞ்சம் பேசணும்...”

“என்ன பேசணும்? சொல்லுங்க... செய்யிறது?...”

“அத இங்க எப்பிடிச் சொல்றது? ஃபாக்டிரி விசயமா...”

“ஃபாக்டரி விசயம்னா நாளைக்கி ஃபாக்டரியில சந்திச்சுப் பேசுங்க. காலம வருவேன்...”

அவன் கத்தரித்து விடுகிறான். ரங்கேசனுக்கிருந்த பண்பு கூட இல்லை. அவளுக்கு அந்தக் காரில் உட்கார்ந்து பாட்டியின் வீட்டுக்குச் செல்வதற்குக் கூட இப்போது சுவாதீனமாகப் பொருந்தவில்லை. பாட்டியோ வெயில் குறைவாக இருந்த காலை நேரத்தில் நடந்து வந்து விட்டாள். இப்போது காரில் ஏறித்தான் செல்லவேண்டும் என்ற மாதிரியில் நிற்கிறாள்.

கூடத்தில் கோலப்பன் இலை போட்டுக் கொண்டிருக்கிறான்.

விஜிக்கு அங்கு அமர்ந்து மீண்டும் சிறுமைகளுக்காளாக விருப்பம் இல்லை. மாமியாரிடம் சென்று, “அத்தை நான்... ஐயாம்மாவுடன் சின்னப்பட்டிக்குப் போகிறேன்... பிரசாதம் எல்லாம் எடுத்துக்கிட்டிருக்கிறேன்...” என்று கூறிவிட்டு அவளுடைய மறுமொழிக்குக் காத்திராமலே வருகிறாள்.

“ஏண்டி? நீ சாப்பிடாம வார?...” என்று பாட்டி கவலையுடன் வினவுகிறாள்.

“கட்டி வக்கச் சொல்லியிருக்கிறேன் கோலப்பனிடம். உங்க கூட வந்திடுவேன்...”

டிரைவரைத் தேடி வருகிறாள். பத்து நிமிடங்களில் அவர்கள் சின்னப்பட்டிக்கு வந்துவிடுகின்றனர்.

மம்முட்டியானும் குடும்பனும் பிள்ளைகளும் இன்னும் கோயிலுக்குக் கிளம்பவில்லை. கார் வந்ததும் ஓடி வந்து பார்க்கின்றனர். நாயுடுவின் மனைவி அலமேலுவும் வருகிறாள்.

பள்ளிக்கட்டிடத்திலிருந்து மாரிசாமியும் விரைந்து வருகிறான்.

“விஜிம்மா...! வாங்க...” என்று ஆசிரியரும் வருகிறார். விஜியின் முகம் தானாக ஏதோ கட்டவிழ்ந்தாற் போல் மலருகிறது.

“எப்படியிருக்கிறீங்க, சார்? இன்னிக்கு ஸ்கூல் இல்ல போல இருக்கு?”

“ஆமாம், மாப்பிள்ளை வரலியாம்மா? கார் போயிட்டுது?”

அவள் அதற்குப் பதில் ஏதும் கூறவில்லை.

கதவைப் பாட்டி திறக்கிறாள். எல்லோரும் உள்ளே செல்கின்றனர்.

கோலப்பன் பெரிய தூக்குக் கூடையில் பொங்கலும் பஞ்சாமிருதமும், சுண்டலும் வடையும் நிறையக் கட்டி வைத்திருக்கிறான். அத்துடன் பெரிய சாப்பாட்டு அடுக்கில் கறி, கூட்டு, சாதம், சாம்பார் என்று வேறு வைத்திருக்கிறான்.

“எம்புட்டுச் சோறு வச்சிருக்கிறான்?”

இலைகளைப் பிரித்துப் போட்டுக் கொண்டு எல்லோருக்கும் விஜி சாப்பாடு பரிமாறுகிறாள்.

“வாங்க சார்? இந்தா மாரிசாமி?...” என்று அழைத்து இலையோடு வைத்துக் கொடுக்கிறாள்.

“உங்க சோறு தான் இத்தினி நாளா சாப்பிட்டது. கடோசில விருந்தாவது சாப்பிடுன்னு குடுக்கிறிங்க விஜிம்மா!”

மாரிசாமிக்குக் குரல் நெகிழ்கிறது.

“சாப்பிடு முதலில், பிறகு எல்லாம் கேட்கிறேன்!”

அந்த எல்லையை விட்டு இங்கே வந்ததுமே மகள் எப்படி ஒட்டிப் போகிறாள்? புளிக்கு உப்புத்தான் இணையும். பாலுக்குச் சர்க்கரைதான் சேர்க்கையாகும்.

பாட்டி இன்னும் மிஞ்சியிருக்கும் பண்டங்களை இலையில் வைத்து, அலமேலுவுக்குக் கொண்டு கொடுக்கச் சொல்கிறாள். அங்கே பெரிய வீட்டின் வரிசைகளைச் சொல்லிக் கொள்ளும் நேரம், இவர்கள் இங்கு அவளுக்குச் சம்பந்தமில்லாததைப் பேசுவார்கள் என்று தெரியும்.

“அம்மாகிட்டச் சொன்னீங்களா அண்ணாச்சி?” என்று மாரிசாமி ஆரம்பிக்கிறான்.

“நான் கேட்டுட்டுத்தானிருந்தேன்... ஏதோ பெண்பிள்ளை விவகாரம்னு சொல்லி சீட்டுக் கிழிச்சிருக்காருன்னு புரிஞ்சிட்டேன்.”

மாரிசாமி நல்ல கறுப்புத்தான். அவன் முகம் பட்டாய் மின்னும் வண்ணம் சிவப்பேறுகிறது. “விஜிம்மா, இந்த அழவாயி இருக்கா. கூப்பிட்டுக் கேளுங்க. என்ன நடந்திச்சின்னு. மம்முட்டியா, பாவம். அத்தக் கட்டப் போறேன்னிருக்கிறா. பண்டல் ரூமிலேந்து பண்டல் கொண்டாந்தாங்க அடுக்கி வைக்க. மன்னாரு அநாசியமா அதுங்கையப் புடிச்சி இழுத்திட்டுப் போனான். நான் பாத்திட்டேன். ஞாயித்துக் கிழமை, அவளைக் கூட்டிட்டுப் போனதும் எங்கண்ணில பட்டிச்சி. இவங்க சமாசாரம் பூராத் தெரிஞ்சதனால், அந்தப் புள்ளயக் கூப்பிட்டு, ‘ஏம்மா எடங்குடுக்கிற. கத்தக்கூடாது?’ன்னேன். அதப் பாத்திட்டு நாந்தான் அதுங்கய்யப் புடிச்சி இழுத்தேன்னு, அந்த மானேசர் விழுவான், சொல்லி வேலக்கி வரவாணாம்னு சீட்டக் கிழிச்சிட்டான்.”

“அந்தப்பிள்ளையைக் கூப்பிட்டுக் கேட்கலியா?”

“கேட்டா... அதுங்க பயப்படுதும்மா! அல்லா பிள்ளைகளும் தான் இருந்திச்சிங்க? அம்மா, இவனுவ சோப்பு வாங்கிக் குடுக்கிறதும், பவுடர் வாங்கிக் குடுக்கிறதும், இப்பிடிச் சமயம் வாய்க்கிற போது வசப்படுத்தறதும் கண்ணால பாக்கிறேன். வயித்துக்கில்லாம வந்து விழுதுங்க. நியாயம்னு ஒருத்திக்கும் கேக்க வாயில்ல. பயந்து சாவுதுங்க. ஆம்பிள, பத்துக் கணக்கப் பிள்ளைகளைக் கூட்டி ஒரு சங்கம்னு செய்ய முடியல. எங்களுக்குத்தா என்ன வாழ்க்கை இது, காலம நாலு மணிக்கு எந்திரிச்சிப் போனால் ராத்திரி பத்து மணி வரயிலும் வேல. இப்ப ஒரே சொல்லா சீட்டக் கிழிச்சிட்டா. என்னுடைய நியாயத்தை எப்படி மெய்யின்னு காட்டுவேன்.”

‘மானேசர் சொல்வதை நான் நம்ப வேண்டியிருக்கு’ என்று சிரித்துக் கொண்டு ரங்கேசன் மொழிந்ததை அவள் நினைத்துப் பார்க்கிறாள். இவர்கள் தொழில்துறையில் வளர்ச்சி பெற்றதற்கு உடந்தையாக இருந்தவன் மானேசர். வரி ஏய்ப்பு நெளிவு சுளிவுகள், லஞ்சக் கையூட்டு விவகாரங்கள் எல்லாம் இல்லாத தொழில் வளர்ச்சி ஏது? தொழில்... தொழிலுக்குச் சிறு முதலை முடக்கி, பல முனைகளிலும் முயன்று சமாளித்து, முன்னேறி வந்திருப்பவர் பாதை நேர்கோடாக இருக்க முடியாது. ஆனால், இந்த முறைகேட்டை ரங்கேசன் ஆதரிக்கமாட்டான் நிச்சயமாக. ஆனால் மானேசரிடம் விவரமாக விசாரணை செய்வதாகக் கூடச் சொல்லாமல், அவர் சொல்வதை நம்ப வேண்டியிருக்கிறதென்று முடிப்பதற்கு என்ன காரணம்?

“விஜிம்மா, நீங்க என்னுடைய பக்கம் நியாயம்னு நம்புறீகன்னா, இந்த அவமானத்தைத் துடச்செறியணும். அந்த மானேசரை அவன் பக்க ஆளுகளை, பொய்யாக்கணும். அது உங்களால் முடியும்னு நினைக்கிறேன். அவன் மன்னிப்புக் கேக்கணும்!”

“உங்களால் முடியும்” என்ற சொற்கள், செவிகளில் பூச்சிகளாய்ப் பறக்கின்றன. என்னால் முடியுமா? என்னால் என்ன முடியும்? இன்று சற்று முன், விருந்தினர் கூடம் என்று கூடப் பாராமல் கைநீட்டி அடித்தாரே, அதை... அதை எதிர்பார்த்திருப்பார்களா இவர்கள்?

“மாரிசாமி, நான் போய் எடுத்துச் சொல்லி அவர்கள் மீண்டும் உன்னை வேலையில் சேர்த்துக் கொள்வதனால் இது போல் இன்னொரு சந்தர்ப்பம் வராது என்று என்ன நிச்சயம்? வினையை வேரோடு கொல்ல ஒரு ஆட்டம் கொடுக்க வேணும். அதற்கு ஒரு வழி உண்டானால் சொல்லு!”

மாரிசாமியின் கண்களில் நீர் துளித்து விடுகிறது.

“நிசமாத்தான் சொல்லுறீங்களா விஜிம்மா?...”

“ஆமாம்...”

“விஜிம்மா, எம் பேரில இதுபோல ஒரு அப்பழுக்கு தூசு ஒட்டிவய்க்க முடியாதுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் அவிங்க எம்மேல காரமாக இருக்கிறதுக்கு காரணம் வேற. இவம்பக்கம் இருக்கும் கணக்கப்பிள்ளைகள் கொஞ்சம் பேருதான். ஆனால் புது நகர ஊருல இளஞ்சேரன் கணக்கப் பிள்ளைக போயி குச்சியும் அட்டைக் கட்டும் சில்லும் குடுத்து, பொட்டியாகவும், அடுக்கின கட்டயாவும் வாங்கறவுக பல பேரிருக்கா. ஃபாட்டரிக்குள்ள இப்பிடிக் கொண்டு வர புள்ளங்கள வேணா என்னால தடுத்து நிறுத்த முடியாது. வெளியிலேந்து வரதத் தடுக்க முடியும். ஏன்னா, எல்லாப் பொம்புளகளும் ஒரு போல இல்ல. என் நியாயத்த அவுங்க பக்கம் கொண்டு போவேன்!”

அத்தியாயம் - 15

முதல் நாள் திருவிழாவைச் சாக்கிட்டு ஐந்து ரூபாய்க்குக் குடித்திருந்தான் மம்முட்டியான். வழக்கமாக அவன் குடிப்பதில்லை என்றாலும், கையில் காசு இருக்கும் போது அவன் ஒரு ரூபாய்க்குக் குடிப்பான். தன்னுடைய மாசச் சம்பளத்தில், பத்து ரூபாய் வைத்துக் கொண்டு மிகுந்ததை மாமனிடம் தான் கொடுக்கிறான். சாப்பாட்டுப் பொருள் வாங்கும் செலவுக்கே வருமானம் பற்றாது. பத்து ரூபாயைத் தன் விருப்பப்படி டீக்கடையிலும், வாரம் தவறாமல் குடிக்கவும் செலவு செய்வான். மாமன் கட்டுப்பாடில்லாமல் குடிப்பவன். எவ்வளவு குடித்தாலும் அவன் தன் நிலை இழக்க மாட்டான்.

ஆனால் அன்று மம்முட்டியானுக்குக் காலையில் பிள்ளைகளை எழுப்பச் செல்லவே இயலாதபடி தலை பாரமாகக் கனக்கிறது. வாயில் ஓர் கசப்பு, குமட்டிக் கொண்டு வருகிறது. அதிகமாகக் குடித்ததாலா? காசைச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று எத்தனையோ பொருள்களின் மீது ஆசை வைத்திருந்தவன் அதிகமாக நான்கு ரூபாயைச் செலவழித்திருக்கிறான். விழாவை முன்னிட்டு ஏசன்டு கொடுத்த ஐந்து ரூபாயும் செலவாகிவிட்டது. அதற்குக் காரணம் புரியாமலில்லை.

மாரிசாமி பொய் சொல்லுவானா?

மாரிசாமையைப் பற்றி ஒருவரும் கெடுதலாகப் பேசமாட்டார்கள். சம்முகம் அண்ணாச்சி, காரில் வரவில்லை. மினுக்குச் சட்டை போடவில்லை. மெய்தான். ஆனால் அந்த ஊருக்கு இந்தத் தீப்பெட்டி ஆபீசு, வண்டியும் வண்மைகளும் வருவதற்கு முன்பே கிணறு வெட்டித் தரவும், பொதுக் குழாய் வைக்கவும், பள்ளிக்கூடம் கட்டவும் அவர் எழுதி எழுதிப் போட்டதையும் மாமனிடமும், மற்றவரிடமும் கடிதாசிகள் கொண்டு வந்து படித்துக் காட்டியதையும், கையொப்பு வாங்கிச் சென்றதையும் மறந்து விட முடியாது. மாரிசாமி படித்தவன். அவருக்குத் துணையாள் போல் வருவான். அவன் பொய் சொல்வானா?

“வெவரம் புரிஞ்சவங்க, தீப்பெட்டி ஆபீசுக்குள்ள வயசுப் பொண்ணுவள அனுப்பக் கூடாது. அப்படிக் கெட்டுப் போச்சி. ஆனா, அவனுவளச் சொல்லியும் குத்தமில்ல. காலம நாலு மணிக்கு வர கணக்குப்பிள்ள, ராத்திரி வரயிலும் இதுங்க மத்தியிலேயே நின்னுட்டு லோலுப்படுறா... எப்பிடி எப்ப்டியோ ஆயிப் போகுது. அழவாயிய, ஞாயித்துக் கிழமை வேலயிருக்குன்னு கூட்டிட்டுப் போனானா கணக்குபிள்ள?” என்று கேட்டான்.

கோழி திருடும் குறப்பிள்ளைகள், வெங்காயத்தில் முள்ளைச் செருகிப் போட்டிருப்பார்கள். கோழி அதைக் கொத்துகையில் முள் மாட்டிக்கொள்ளும். அதனால் குரல் கொடுக்க இயலாது.

மம்முட்டியானுக்கு அந்த வேதனை புரிகிறது. குரல்வளை துருத்திக் கொண்டு தெரிய, சிவந்த விழிகள் நிலைக்கப் பேசாமல் நின்றான்.

“நாடா வாங்கித் தருவா, சடைக்கு வச்சிக்க ஸ்லைடு பவுடர்னு வாங்கிக் குடுத்து நைச்சியம் பண்ணுவா... இத்தப் பார்த்து ஒன் அழவாயிக்காக நாஞ்சண்ட போட்டப்ப, ஏம்மேல் அபாண்டப் பழி சொல்லி வேலய விட்டு என்ன நிப்பாட்டிருக்கா. மம்முட்டியா, நீ நாளக்கிப் புள்ளயள உசுப்பப் போகாத! அழவாயிய வேலக்கி அனுப்பாத!...” இருட்டுக்குள் போயிருக்குமோ என்றஞ்சி அவன் எட்டிப் பார்க்காமலிருந்தான். பேய் இப்பொழுது கழுத்தைப் பிடித்து மெய் என்று உறுதி கூறுவது போல் இருக்கிறது.

“உனக்கு உசுப்புற வேலக்கி அம்பது ரூபா குடுக்கிறா. நாங்க கணக்கப்பிள்ளங்க, காலம நாலுமணிலேந்து ரா பத்து மணி வரயிலும் வேல செய்யிறோம். எம்பது ரூவா சம்பளம் தரா... ஏ? இந்தப் புள்ளய வைச்சுத்தா ஃபாக்டரி ஓடியாவணும். இவங்க வரலன்னா, வேலை நடக்காது. அப்பிடி இருக்கிறப்ப, விடிஞ்சி எட்டுமணிலேந்து, பகல் மூணு மணி வரையிலுந்தான் தொழில்னு நாம் ஒண்ணு சேந்து சொல்லணும். பிள்ளைங்க தூங்க வேணாமா? இப்பிடி அதுகளை உழய்க்க வச்சும் அஞ்சுக்கும் பத்துக்கும் அர வயித்துக் கஞ்சிக்கும் லோலுப்படுறோம். புதுநகர ஊரில மச்சு வீட்டுப் பிள்ளைங்க கூடத்தான் கட்டயடுக்குதுங்க. ஆனால் பள்ளிக்கூடம் போயிப் படிக்கிறா. முன்னுக்கு வரணும்னு ஆச வச்சிட்டிருக்கா. மேல போறா. கிடுகிடுன்னு படிக்கிறா. பொஞ்சாதி நகையப் போட்டு வங்கில கடன் வாங்கித் தொழில் தொடங்கிடறா. முன்னுக்கு வரா. நீ என்ன நடந்தாலும் கண்ண மூடிட்டுப் போயிட்டிருக்கிற. என்னிக்கானும் நாமளும் வாழ்க்கையில நாலு பேரு மதிக்கிறாப்பல இருக்கணும்னு நினைக்கிறியளா?... அப்ப... இருவதம்சத் திட்டம் வந்தப்ப, சட்டம் வந்து கழுத்தில உக்காந்தப்ப, புள்ளயள வேலக்கி வேண்டாம்னு கூட முதலாளிங்க சொன்னாங்க. ஆனா என்ன நடந்திச்சி? ஃபாட்டரிய மூடிடாதிய, நாங்க பட்டினி கெடந்து சாவணும்னு போயி மானேசர் காலில விழுந்திய. பதினாறு வயசாயிருக்கணும்னு சொன்னப்ப, பச்சப் பிள்ளைங்களுக்கு மேத்துணி போட்டுக் கொண்டு போயி நிறுத்தினிய. இதெல்லாம் குத்தமில்ல, நம்ம பேரில? அவுங்க கோடி கோடியாச் சம்பாதிக்கிறாங்க. நாயும் பூனையும் கூடக் கார் சவாரி போவுதுங்க!”

மம்முட்டியானின் மேடிட்ட அறியாமையைத் துளைத்துக் கொண்டு அவனுடைய சொற்கள் பாய்ந்திருக்கின்றன.

அவனுக்கு எழுந்து செல்ல மனமில்லை.

ஆனால் மாமன் விடுவானா?

“ஏண்டா? கோளி கூவிரிச்சி, இன்னும் பிள்ளயள உசுப்பப் போகாம படுத்திட்டிருக்கிற? பசு வந்து அலாரம் அடிப்பா, அப்ப முடுக்கிட்டு ஓடுவா! எந்திரிடா?”

“சும்மாருங்க மாமா! நானின்னிக்கு உசுப்பப் போறதில்லை...”

“என்னது?...” என்று சாத்தியிருக்கும் கைத்தடியை எடுத்து அவன் கீழே தட்டுகிறான்.

“ஏண்டா? ஒனக்கு என்ன வந்திச்சி? திருவிழாக்காசு வாங்கிக் குடிச்சிட்டு அவுங்களுக்கே துரோகம் பண்ணும்படி ஏறிப்போச்சா?...” என்று வசை பாடுகிறான்.

“நீங்க சும்மாருங்க மாமா? உங்கக்கு ஒண்ணுந்தெரியாது! ச...னாயப் பயலுவ... அழவு... அழவு! இனிமே நீ வேலக்கிப் போகக்கூடாது! இன்னிக்கு ஆரும் தீப்பெட்டி ஆபீசுக்குப் போகப் போறதில்ல. வண்டி வந்தா திரும்பிப் போவட்டும்!”

வெறும் களிமண்ணாக இருந்த மம்முட்டியான் திடீரென்று உயிர்த்துவம் பெற்றுக் குதிப்பது போல் குரல் கொடுக்கிறான்.

“என்னடா குதிக்கிற? பூன கண்ண மூடிச்சின்னா ஒலவம் இருண்டிடுமோ? நீ உசுப்பாட்டிப் போ, நா உசுப்பி விடுற! அந்த மாரிசாமிப்பய, கச்சி பேசுறவ, பெரிய மொதலாளிமார எதுத்திட்டுத் திரியுறா! அவங்கூட ஒனக்கென்ன பேச்சி? புண்ணியவாங்க தயவில அரக்கஞ்சி குடிக்கிறம். நாளெல்லாம் இந்தக் காஞ்ச தரிசில பாடுபட்டாலும் ஒண்ணரப்படி சோளமோ, கம்போதாங் கெடய்க்கிது. துட்டக் கண்ணில கண்டமா? இப்ப, வாரா வாரம் சம்பளம். வூட்டு வாசல்ல பஸ் கொண்டாந்து கூட்டிட்டுப் போறா. தீவாளின்னும் திருவிழான்னும் போனசு குடுக்கிறா. நேத்து சேவல் வுட்டோம். சாமி கும்பிடப் போனோம். அவுங்க காசுதான அது? இல்லாட்டி ஒண்ணுக்கு விதியில்லாம கெடப்போம். முதலாளிமாரப் பகச்சிக்கறதா? அந்தக் காலத்தில, எங்கப்பன் பாட்டன் அடிமகளாக் கெடந்தா. கெட்டி வச்சி அடிச்சிருக்கா. இப்ப நெலம எம்புட்டோ மாறிப் போச்சி. ஒண்ணாக் குந்திட்டுப் பேசறா. சாப்பிடறா. நாம போயி பள்ளிக்கூடக் குழாயத் தொட்டடிச்சி இன்னிக்குத் தண்ணி புடிச்சிட்டு வாரம். இந்த மண்ண நம்பாம கஞ்சி முடிக்க முடியிது. நாளேக்கே ஒனக்குக் கலியாணம்னா, ஏசன்டையா பெரசன்டா நூறு ரூவா மொதலாளிட்டேந்து வாங்கித் தருவா...” என்று நீண்ட உரையாற்றுகிறான்.

ஆனாலும் மம்முட்டியானின் நெஞ்சில் தைத்த முள் விடுபட்டு விடவில்லை.

“ஏ அழவு!” என்று கத்துகிறான்.

அழவாயிக்கு ஒரே நடுக்கம். மாமனும் கோபம் வந்தால் அடிப்பான்; அப்பனும் சும்மாயிருக்க மாட்டான்!

“இங்க வாடி...” என்று வசையுடன் அதட்டுகிறான்.

அழகாயி மெல்ல, ஆட்டுக்குடி போல் தலை நீட்டுகிறாள்.

“சாமி சத்தியமாச் சொல்லுடீ, நாத்திக்கிழம, உன்ன எங்கிட்டு கூட்டிட்டுப் போனா? இப்ப எனக்குத் தெரியணும்” என்று மம்முட்டியான் குதிக்கிறான்.

அழகாயி மருண்டு போகிறாள். நெஞ்சடைத்துச் சொல்லெழும்பவில்லை. மம்முட்டியான் வெறியுடன் அவள் தோளைப் பற்றி உலுக்குகிறான்.

“சொல்லிடு... கொன்னிருவன் இல்லாட்டி!”

மாமன் எழுந்து வந்து அவனைப் பேய் போல் இழுத்து விடுகிறான்.

“நீ போடால, புழுக்கப் பயல. எம்புள்ளய உனக்கு ஆருடா கட்டி வைக்கப் போறா? அவமேல கை வச்சே, தொலச்சிடுவேன். பிள்ளயள நீ உசுப்பாண்டாம். நான் போறேன்!”

வயதாகித் தளர்ந்தாலும், அவர்கள் சமுதாயத்தின் பெரிய கை அவன். மம்முட்டியான் கசப்புணர்வை விழுங்கிக் கொண்டு திண்ணைச் சுவரோடு சாய்ந்து நிற்கையில், தொலைவில் பஸ் வருகிறது. வெளிச்சத்தைக் காட்டிக் கொண்டு.

அடுத்த நிமிஷம் அதன் குழலொலி எல்லோருடைய செவிகளிலும் விழுகிறது. வழக்கம் போல் குழந்தைகளையோ, பெரியவர்களையோ, மம்முட்டியானையோ அங்கு காணவில்லை. இரத்தினம் மீண்டும் சத்தமாகக் குழலை அமுக்குகிறான்.

“மம்முட்டியா உறங்கிட்டானா? பிள்ளியள உசுப்ப வரல? அதா குடும்பானல்ல வராரு...! இன்னிக்கென்ன மம்முட்டியா ஒடம்பு சொகமில்லியா?”

“ஆரது? எல்லாம் எந்திரிச்சிப் பிள்ளியள உசுப்புங்க! வண்டி வந்திரிச்சி!” என்று குரல் ஒலிக்கிறது.

ஒவ்வொருவராக வருமுன் இருள் படலம் கரைந்து போகிறது. இரத்தினத்துக்கு ஒரே கோபம்.

“மம்முட்டியா எங்கே? அந்தப் பயலக் கூப்பிடுங்க” என்று சத்தம் போடுகிறான்.

“அவனுக்கு ஒடம்பு சொகமில்ல ஏசன்டையா!” என்று குடும்பன் கெஞ்சுகிறான்.

“அது சரி, இந்தக் காத்தமுத்துப்பய, ஆளையே காணம். இங்க இனியும் அட்வான்ஸ் தீரல. அம்பது ரூபா பாக்கி நிக்கிது. அதுக்கு முன்ன வேற பக்கம் அடவான்ஸ் வாங்கிட்டு விட்டிருக்கா...” என்று இரத்தினம் வசை பாடத் தொடங்குகிறான்.

“மம்முட்டியான் சம்பளத்தில் அந்தப் பயலோட அட்வான்ச வெட்டினாத்தா முளிச்சிக்குவா!...” என்று உறுமுகிறான்.

குடும்பனுக்குத் தூக்கி வாரிப் போடுகிறது.

“அப்படீல்லாம் சொல்லாதீங்க ஏசன்டையா! நான் போயி அந்தப் பொம்புளகிட்ட ரெண்டிலொண்ணு கேட்டுட்டு வாரே!”

தடியும் செருப்பும் ஓசை செய்ய, இருள் கரைந்து கோழிகளும் காகங்களும் சிலும்பும் அந்த நேரத்தில் குடும்பர் வருவதைக் கண்டு சடச்சி அச்சத்துடன் முற்றத்தில் வந்து நிற்கிறாள்.

“பையன வேற தாவுலவிட்டு அடுவான்ஸ் வாங்கிருக்கியா? ஏசன்டையா கேக்குறாரு. பதில் சொல்லு, இல்லாட்டி துட்ட வய்யி!”

சடச்சி நடுங்கிப் போகிறாள்.

“அப்படில்லாம் இல்லிங்க... அவங்காலில் சீக்கோத்து வலின்னு கத்துனா. அங்க மாமன் வீட்டுக்கு அனுப்பிக் குடுத்திருக்கு. வைத்தியரு மருந்து வச்சிக் கட்டிருக்கா...”

“அதுசரி, மாசக் கணக்கா வைத்தியம் பண்ணிருப்பே புள்ளய வச்சிக்க. இப்ப துட்டுக்கு வழி சொல்லு நீ? இன்னும் அம்பது ரூபா பாக்கி நிக்கிதாம் நீ வா, வந்து ஏசன்டுகிட்டச் சொல்லு...”

அவள் முற்றத்தில் நின்று தீனமாக அழுகிறாள்.

“நாங்க எங்க போவம் இப்ப ரூபாயிக்கு...”

உள்ளிருந்து லொக் லொக்கென்று இருமிக்கொண்டு அவள் புருசன் தலை நீட்டுகிறான்.

“அந்தப்பய பொது நகரத்துலதா வாணத் தெருவுல இருக்கா. ஏண்டி சொல்லிப் போடுறதுதானே? ஒரு காரூவாக்காசு கூடக் குடுக்கல. அங்க போயிக் கூட்டிப் போச் சொல்லுங்கண்ணாச்சி!”

“அது சரி...” என்று நிற்கும் குடும்பனாருக்குத் திண்ணையில் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் பிள்ளைகள் மீது பார்வை படிகிறது.

“அது யாரு உம்புள்ளதான. ஒறங்கிட்டிருக்கு பொட்டவுள்ளயா?”

“ஆமாங்கோ...”

“பின்னென்ன? பெரிசாத்தான இருக்கு? அவனுக்குப் பதிலா எளுப்பி அனுப்புறதுக்கென்ன?...”

சடச்சி தயங்கினாற் போல் நிற்கிறாள். “அது... நாங்காட்டுக்குப் போனாவூட்ட, புள்ளியப் பாத்துக்குங்க, பள்ளிக்கூடம் போவுது...”

“பொட்டவுள்ளக்கிப் பள்ளிகூடம் என்னா, பள்ளிக்கூடம்? அவிய அடுவான்ஸ் பின்ன எப்பிடித் தீரும்? தட்டி எளுப்பு” என்று குடும்பர் ஆணையிடுகிறார். அப்பனும் அதை ஆமோதிக்கிறான்.

கனவுலகில் எங்கோ மிதந்து கொண்டிருக்கும் ஒரு கள்ளமற்ற குழந்தையின் சுதந்தரம் சட்டென்று அழுத்தப்படுகிறது.

“வடிவு...? ஏட்டி வடிவு? எந்திரிச்சுக்க... வடிவு? இதபாரு! பஸ் வந்திருக்குடீ! மோட்டாரு! டவுனுக்குப் போக மோட்டாரு அவங்கெல்லாம் சினிமாவுக்குப் போறா எனக்கில்லியான்னு கேட்டியே. எந்திரிச்சிக்க; நீயும் தீட்டி ஆவிசு மோட்டாரில போலாம்...”

“மோட்டாரில் போகலாம்” என்ற மந்திரச் சொல் வேலை செய்கிறது. சிறிது தண்ணீரைக் கொண்டு வந்து கண்களில் விட்டுத் துடைக்கச் செய்கிறாள் தாய்.

“வடிவு, அண்ணாச்சியப் போல நீயும் தீட்டி ஆபிசில குச்சியடுக்கப் போறியா? அழவாயி, பச்ச, ருக்குமணி, சக்கு, எல்லாரும் போறாக. உனக்கும் துட்டு கிடைக்கும். மோட்டாரில டவுனுக்குப் போவ...”

கனவோ நினைவோ என்று தடுமாறினாலும், ஆறு வயசு வடிவு தோள்பட்டை நழுவும் கவுனைச் சரி செய்து கொண்டு எழுந்திருக்கிறது.

“நான் கொண்டுவுடற. காத்தமுத்து பேரில இவள பதிஞ்சிக்கிடச் சொல்லுங்க அண்ணாச்சி!”

அவன் வெற்றியுடன் திரும்புகிறான்.

பள்ளிக்கு மற்றுமொரு மாணவி குறைந்து போகிறாள்.

அத்தியாயம் - 16

மாரிசாமி தனது நேர்மையை நிரூபித்து விடுகிறான்.

அன்று இளஞ்சேரன் தொழிலகத்திலிருந்து, புது நகரத்துத் தெருக்களில் சென்று குச்சி அடுக்கி முடித்த கட்டைகளையும் பெட்டிகளையும் பெற்றுக் கொண்டு புதிய உற்பத்திக்கான பொருட்களைக் கொடுக்கும் கணக்கப்பிள்ளைகள் வேலைக்கு வரவில்லை. உள்ளே கைபார்க்கும் கணக்கப்பிள்ளைகள் இந்த அலுவலை மேற்கொண்டு தெருக்களுக்குப் பொருட்களைக் கொண்டு வந்த போது, பெண்கள் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வந்தார்கள்.

“மாரிசாமியையா பொண்ணுமேல கைவச்சான்னு அபாண்டம் பேசினிய? பாவிங்களா? நாக்கு அழுவிப் போயிடும்! அவெ உள்ளாற இருக்கறதால, எங்க புள்ளயள உள்ள தயிரியமா அனுப்புவோம்... சொல்லு உங்க மானேசரிட்ட, முதலாளியிட்ட!... இந்த ஊரில எங்களுக்கு உங்க குச்சி இல்லேன்னா புழப்பில்லாம போயிடல!” என்று வாடிக்கையான தெருக்களில் மொத்தமாகத் திருப்பி விட்டார்கள்.

நூற்றுக்கணக்கான கட்டைகளும், குரோசு பெட்டிகளும் இந்த வீட்டுப் பெண்கள் உழைப்பில் தொழிலகத்துக்கு வந்து சேரவில்லை.

இரண்டாம் நாளில் நடந்து தொழிலகத்துக்கு வரும் பெண்களும் சிறுவர் சிறுமியரும் வரவில்லை. மூன்றாம் நாளில் தொழிலகத்தை மூடச் செய்து விட்டார்கள்.

முதன் முறையாக இளஞ்சேரன் தொழிலகத்தில் பூட்டுத் தொங்கியது. பலத்த காவல் போடப்பட்டது.

விஜியை அன்று மாலையே ஊர் திரும்பும்போது அவள் கணவன் வண்டியை எடுத்து வந்து கூட்டிப் போய்விட்டான்.

அவளால் அப்போது மறுக்க முடியவில்லை. வெளியிலிருந்து தொழிற்சாலை விவகாரம் எதுவும் அவளுக்கு எட்டவில்லை. அவள் கணவன் கலகலவென்றிருந்தான். காலையில் புறப்பட்டுச் சென்றவன் சாப்பாட்டுக்குக் கூட வராமல் இரவு பத்து மணிக்கு வந்தான். இரண்டாம் நாள் பிறபகல் அவளை ஃபோனில் யாரோ அழைப்பதாகச் செல்வி வந்து சொன்னாள். அவளைத் தனியாக யாரும் அழைத்ததில்லை. அழைத்தவர் அவள் தந்தைதான்.

“என்னப்பா சமாசாரம்? ஐயாம்மா சுகந்தானே?...”

“சுகந்தான். வீட்டில்... மாப்பிள்ளை இருக்கிறாரா?”

“இல்லையே அப்பா?... ஃபாக்டரியில் இருப்பார்?”

“அங்கு... இல்லை... ஃபாக்டரி சமாசாரம் பேசத்தான் கேட்டேன். நேற்றிலிருந்து கிடைக்கவில்லை...”

“மாரிசாமி சமாசாரமாப்பா?”

“ஆமாம், ரெண்டு நாளா வெளிலேந்து யாரும் வேலைக்குப் போகலியே?” அவள் நெஞ்சம் ஒரு கணம் துடிக்க மறந்தாற் போல் உணருகிறாள்.

“என்னது...”

“ஆமாம்மா... பெண்கள் ஒருத்தரும் கட்டை, குச்சி வாங்கல. திருப்பிட்டா. இன்னிக்குக் கால்வாசி பேருதா உள்ள இருக்கான்னு நினைக்கிறேன். அண்ணன் பேச்சு வார்த்தை நடத்தத் தம்பியும் வேணும்னு சொல்றாரு. தம்பியக் கண்டுபிடிக்க முடியல...”

“நான் அங்கு வரட்டுமாப்பா...”

“நீ வர வேண்டாம்மா! நீ இதிலெல்லாம் ரொம்பத் தலையிட்டு உன் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். அதனால் பெரிய பயன் விளையப் போகிறதில்லை. அவர் வந்தாருன்னா நான் சுமுகமாகப் பேசித் தீர்வு காணத்தான் இருக்கிறேன்னு சொல்லுமா...”

விஜி தொலைபேசியை வைத்துவிட்டு எதிரே பார்க்கிறாள். வெயில் இரக்கமின்றிக் காய்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் சுற்றுச் சுவரில் பூத்திருக்கும் போகன் வில்லா வண்ணக் குவியல்கள் கூடக் குளிர்ச்சியைத் தரவில்லை.

செல்விக்கு அவளையொத்த தோழி அருணா வந்திருக்கிறாள். இருவரும் விவித்பாரதியை உரக்க வைத்துக் கொண்டு பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

நீ வரவேண்டாம்னு அப்பா எப்படிச் சொல்வார்?

மாரிசாமி, இரவு பத்து மணிக்குமேல் படிப்பகம் சங்கம் என்று போவான். அவனுக்கு, இவர்களுடைய வலிமையை அசைக்கச் சக்தி இருக்கிறதென்பதை உணர அவளுக்கே வியப்பாக இருக்கிறது. எதுவுமே செய்ய முடியாது என்று அவநம்பிக்கை கொள்ளலாகாது.

“விஜிம்மா! நீங்கள் உச்சியிலேயே இருந்து விடக்கூடாது. கீழே இறங்கி வந்து, இந்தப் பெண்களுக்குத் தன்மான உணர்ச்சியைத் தட்டி எழுப்பணும். நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ற அளவுக்குப் படிக்காதவன் தான். ஆனால், அநுபவப்பட்டறையில நிறைய அடிபட்டிருக்கிறேன்... ஏதுடா இவன் சொல்றானேன்னு நினைக்காதிய, உங்களைப் போல உள்ளவங்க, அறிவைத் துருப்பிடிக்க வச்சிட்டு முடங்கிடக்கூடாது. பெண்பிள்ளைகளுக்கிடையே ஒரு விழிப்புணர்ச்சிய நீங்க கொண்டு வரணும்!” என்று அவன் சொன்ன சொற்கள் அவளுடைய உள்ளத்தைக் குடைகின்றன.

பொழுதுபோக்காகப் புத்தகங்கள் துணை என்று, அவள் ஊரில் கிடைக்கும் பணத்துக்கெல்லாம் புத்தகங்களே வாங்குவாள். இங்கு அவளுடைய கணவனின் ரசனைக்குரிய நூல்கள் ஹெரால்ட் ராபின்ஸ், சேஸ் போன்றவை தான் என்று புரிந்திருக்கிறது. இவற்றில் சிலவற்றை அவள் முன்பே படித்திருக்கிறாள். இப்போது இது வெட்டி வேலை என்ற உணர்வோடு செல்வி சேர்க்கும் ஒரு ரூபாய் நவீனங்களும், மாமியாருக்காக வரவழைக்கப்பெறும் அர்த்தமுள்ள சமயநூல்களும் கூட அவள் படித்துவிடும் பட்டியலில் இடம் பெற்றுவிட்டன. மாலையில் மைத்துனர் வீட்டுக்குச் செல்லலாம் என்று ஆவல் உந்துகிறது. ஆனால் எங்கு போக வேண்டுமானாலும் மாமியாரிடம் கேட்கவேண்டும். கேட்காமல் எதுவும் செய்வது அவர்களுடைய கண்டனத்துக்குரியது என்ற உணர்வு அவளைப் பிணிக்கிறது. குடும்பம் என்பது ஒரு வகையில் சுதந்திரமான நடவடிக்கையை, தனக்கு நேரென்று புரிந்தாலும் கூட, பிணிக்கக் கூடியதோர் அமைப்பென்று அவளுடைய இத்தனை நாளைய மண வாழ்க்கையில் புரிந்து கொண்டிருக்கிறாள்.

இந்தக் கட்டுக்களை அறுத்துக் கொண்டு, தன்னிலும் எளிய, வசதியற்ற, மூட நம்பிக்கைகளுடைய பெண்களின் உள்ளங்களில் விழிப்புணர்வை ஊட்டச் சொல்லவேண்டும் என்ற பேரார்வம் அவளுள் கொழுந்து விடத் தொடங்குகிறது.

மாலையில் அவள் கீழிறங்கி வருகிறாள்.

மாமியார் காத்திருந்தாற் போல், “ஏன்டி? யார் கூடப் போன் பேசினே?” என்று கேட்கிறாள். மாமியார் மேலேறி வரமாட்டாள். ஆனால் தன்னுடைய ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கிறாளா என்ன?

“அப்பாதான் பேசினார்.”

“என்ன விசேசம்? மகள வந்து பார்த்துப் பேசாம போன்ல பேச?” அவள் குரலில் இளக்காரம் தொனிக்கிறது.

“உங்க மகனப் பார்த்துப் பேசணும்னாரு, வீட்டில இருக்கிறாரான்னு கேட்டாரு...”

“மத்தியானத்துல வீட்டில உக்காந்திருக்க அவனுக்கென்ன சோலி எதுவும் இல்லையா? காலம எந்திரிச்சி ஓடினா சோறு திங்கக் கூட நேரமில்லாம ஒழக்கிறாங்க. வெளில பாக்கிறவங்க மொதலாளிய சுகமா சொகுசா காரில போறா, கம்பஞ்சோறு திங்காம, கறியும் சோறும் உண்ணுறான்னு பொறாமைப்படுறா. அவுங்கவுங்க லோலுப்படுறது எங்க புரியிது?”

விஜிக்கு அவள் ஏதோ பூடகமாக மறைத்துப் பேசுவதாகத் தோன்றுகிறது.

“பாக்டரில தொழில்காரங்க வேலைக்கு வரலன்னு உங்களுக்குத் தெரியுமா?”

“எனக்கு அதெல்லாம் என்ன தெரியும்? ஆம்பிளங்க அதெல்லாம் பொம்பிளங்க கிட்ட இது வரயிலும் சொன்னது கெடயாது. இப்பத்தா எல்லாம் புதிசாயிருக்கு. அப்பல்லாம் அவுசரம்பா, கழுத்தில கையில கெடக்கிறத உருவிக் கொடுக்கணும். பின்னாடி சரஞ்சரமாக பண்ணியும் போடுவா. இப்ப புருசன் பொஞ்சாதி அப்பிடியா இருக்கிய?”

அவளுக்குக் காப்பியும் மொறுமொறுவென்ற தீனியும் கொண்டு வைக்கிறான் கோலப்பன். காபியை மட்டும் எடுத்துப் பருகுகிறாள். இரவு அவன் வருகைக்காகக் காத்திருக்கும் நேரம் அணு அணுவாக நகருகிறது.

பத்து மணிக்கு மோட்டார் சைக்கிளின் ஒளி பாதையில் தெரிகிறது. அவன் வரும் வரையிலும் அவள் உணவு கொள்ள வந்த புதிதில் காத்திருந்தது உண்டு. ஆனால் அவன் பாதி நாட்களும் குடித்துவிட்டுச் சாப்பிட வரும் போது அவளுக்கு எதிரே நிற்கப் பிடிக்காது. எனவே அவனுக்காகக் காத்திருப்பதில்லை.

இன்று அவளுக்கு உணவு கொள்ளவும் பிடிக்கவில்லை. செல்வியின் அறை நடு ஹாலுக்கு எதிரே இருக்கிறது. அவள் டிரான்ஸிஸ்டரை வைத்து விவிதபாரதி கேட்டுக் கொண்டிருக்கிறாள். கீழே சொற்பமாகப் பழமும் பாலும் அருந்திவிட்டு மாமியார் படுக்கைக்குப் போயிருப்பாள்.

அவன் தடதடவென்று மாடிக்கு வந்து காலுறையைக் கழற்றிவிட்டு விஜி எடுத்துத் தரும் லுங்கியை அணிந்து கொள்கிறான். சட்டையைக் கழற்றி வீசுகிறான்.

“என்ன இப்படி வேக்காடா இருக்கு? ஏ.ஸி. போடலியா?”

“அது... வொர்க் பண்ணல, மத்தியானமே...”

“மத்தியானமே வொர்க் பண்ணலன்னா இத்தினி நேரம் என்ன பண்ணினே? போன் பண்ணி சொல்லக்கூடாது?”

“ஆருக்குப் பண்ணனும் என்னன்னு தெரியாது.”

“தெரியாது! ஏந்தெரியாது? இஷ்டமில்லேன்னு சொல்லு!”

“அப்படியெல்லாமில்ல. எனக்கு ஸ்ட்ரைக் ஆகல, பவர் கட்டோன்னு முதல்ல நினைச்சேன். பிறகு கதவைத் திறந்திட்டு ஃபானைப் போட்டேன். ஓடிச்சி, சரின்னு இருந்திட்டேன். ஏன் எல்லாத்துக்கும் இப்படிச் சாடுறீங்க?”

“யூ ஆர் வெரி இன்டிப்ரன்ட்.”

“என்னால அப்படித்தான் இருக்க முடியிது. கண்ணைத் துறந்துகிட்டே இந்தச் சிறைக்குள் வந்து விழுந்தேன்...”

“என்னடி பேச்செல்லாம் ரொம்பப் பெரிசா வருது? மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு! உங்கப்பனும் நீயுமா பிளான் போட்டுட்டுல்ல ஆடுறீங்க?...”

அவளுக்கு ஆத்திரம் கிளர்ந்து வருகிறது.

“இத பாருங்க, அநாவசியமா பேசாதீங்க! இப்ப நீங்க தான் மரியாதை கொடுக்கல...”

“மரியாதை! நாலு பேரு கூடியிருக்கிறப்ப அப்பனும் மகளுமா அவமானமா பண்ணுறிய? இந்த வீட்டில் கௌரவமாகக் கல்யாணம் பண்ணியிருக்கிற நினைப்போடு நீ நடந்துகிட்டிருக்கியா. கண்ட கண்ட கூலிப் பயல்களுடன் சிரிச்சிப் பேசிட்டு நிக்கிற. மானம் போகுது. அந்தப் பயல் மாரிசாமி என் கண்ணு முன்னவே பொம்பிளகள வம்பு செஞ்சா, இப்ப நீங்க அத்தச் சாக்கா வச்சிட்டு குச்சி கொளுத்தி விளையாடுறீங்க... உழைக்க தைரியம் இல்லாதவங்க. தொழில் சங்கம்னு ஏமாத்துப் பிழைப்புப் பண்ணிட்டிருக்கிறான்...”

அவளுக்குப் பற்றி எரிவது போலிருக்கிறது.

“பொய்... பொய்...! மாரிசாமி மேல் நீங்கள் அபாண்டம் சொல்றிங்க. அவனை வேலையை விட்டெடுத்த காரணம், தொழிலாளிகளைத் தன்மானமுள்ளவர்களாக்கப் பாடுபட்டதுதான். ஏமாத்துப் பிழைப்புப் பிழைக்கிறவர் எங்கப்பா இல்ல. எங்கப்பா இன்னிக்கு ஏ.ஸி. பங்களாவில வாழல; காரில போகல; கத்த கத்தயா வரி ஏய்ப்புப் பணம் வச்சுருக்கல. அரசு அதிகாரிகளை வளைச்சுப் பார்ட்டிக் கொடுக்கல. இந்த உறுத்தல்களை மறைச்சிக்கக் குடிச்சிட்டு வரல...”

இந்தத் தாக்குதல்கள் அவனைப் பாய்ந்து வந்து அடிக்கச் செய்யும் என்பதை அவள் எதிர்பார்த்திருப்பதால் அவனை எதிர்க்கத் தயாராகவே இரு கைகளையும் உயர்த்திக் கொள்கிறாள்.

“என்னைத் தொட்டடிக்க உங்களுக்கு உரிமை ஏதும் கிடையாது! நானும் பொறுத்திட்டிருந்தேன். அன்னிக்கு அவ்வளவு உறவு முறைக்காரர்களிருக்கையில் என்னை அடிச்சீங்க! நான் உங்கள் அடிமைப் பொருளல்ல!”

“உரிமை...? உரிமைப் பேச்சா பேசுற நீ? பொட்டச்சிங்கள எப்பிடி வைக்கணும்னு எனக்குத் தெரியும்!”

அவள் திரை விலகி ஏதோ பேய் சிரித்தாற் போன்று அதிர்ச்சியுறுகிறாள்.

“இத பாருங்க! இன்னொரு தடவை இந்த மாதிரிப் பேசினால், நானும் உங்க அடிமையில்லை என்பதை நிரூபிப்பேன்! இதுக்கெல்லாம் பயந்து அழுதிட்டுக் கிடப்பேன்னு நினைச்சிடாதீங்க!...”

அவன் மீண்டும் அடிக்கப் பாய்கிறான். அவள் அவன் கையை இறுகப் பற்றி விடுகிறான். வாட்டசாட்டமான அவள் தன் உடல் வலிமையை முதலில் நிரூபித்து விடுகிறாள். முதன் முதலாகக் கண்ணுக்குத் தெரியாமல் பிணிக்கப் பெற்றிருந்த சில இழைகள் துண்டிக்கப்பட்டு விட்டன.

அவன் பலப்பரீட்சை செய்பவனைப் போல் குத்துப்பட்ட ரோசத்துடன் திமிறித் தன் கைகளை விடுவித்துக் கொள்ளப் போராடுகிறாள். இறுதியில் அவன் உதறிய வேகத்தில் படுக்கைப்புறம் அலங்கார விளக்குடன் திகழ்ந்த சிறு மேசை மீது தள்ளப்பட்டாற் போல் வீழ்கிறாள். அவள் எழுதிருக்கு முன் அவன் அவள் முகத்திலும் தோளிலும் மாறி மாறி வெறியுடன் அடிக்கிறான். இந்த மின்னல் தாக்குதலினின்று சமாளிக்க அவள் சற்றே பின்வாங்கிச் சுவரோடு அழுந்திக் கொள்கிறாள். விஜியின் மென்மையான உணர்வுகள் தாறுமாறாகக் குலைந்து போய் விட்டன. திருமண பந்தம் என்ற நம்பிக்கைப் பிணைப்புக்களும் அந்த உணர்வுகளுள் சிக்கியிருந்தன.

விஜி புறத்தோற்றத்தில் வண்மையுடனும் நாகரிகமாகவும் உள்ள மக்களின் மெய்யுருவை இப்போது கண்டுவிட்டாள். அதிர்ச்சி அவளைச் சிலையாக்குகிறது. பொருளாதார நிலையில் இனியும் தாழ்ந்து விட முடியாது என்று நிற்கும் மக்களிடையே உறவுகள் வலுவில்லாதவை. அவ்வப்போது ஏற்படும் கிளர்ச்சிப் புயல்களில் அங்கே ஆண்... பெண்... குடும்பத் தொடர்புகள் குலைந்து போவது சகஜமானதென்று கருதியிருக்கிறாள். வேலம்மா தாழ்ந்த சாதிக்காரி. செந்தில் ஒழுங்காகப் பள்ளிக்கூடத்தில் படிக்காமல் அவளுடைய எதிர்பார்ப்புகளைச் சிதைக்கிறான். அப்பா அவனை உரிமையுடன் கடிந்து கொண்டிருக்கிறார்; அடித்திருக்கிறார். ஆனால் வேலம்மாவின் நாவிலிருந்து ஒரு பண்புக் குறைவான சொல் கூட எழும்பியதில்லை.

அவளுடைய சிற்றப்பன்மார் இருவரும், மிகச் சாதாரண எடுபிடி வேலை செய்து, தொழிலில் முன்னுக்கு வந்திருப்பவர்கள். ஆறுமுகநேரி சின்னம்மா, பத்து படித்துத் தேறியவள். அந்தச் சிற்றப்பா எட்டுடன் நின்று விட்டார். ஆனால் அந்தக் குடும்ப வாழ்க்கையில் எந்த விதமானதோர் பண்புக் குறைவான சொல்லும் தெறித்து அவள் கேட்டதில்லை. “உன் திமிரை எப்படிக் குலைக்கிறேன் பார்!” என்று கருதுவது போல் முணுமுணுத்துக் கொண்டே அவன் வெளியே செல்கிறான்.

அவளுக்கு உலக இயக்கமே நின்று விட்டாற் போலிருக்கிறது. சிந்தனையே மரத்துப் போய் அவள் அங்கே அப்படியே நின்று கொண்டிருக்கிறாள். அவன் கீழே சென்று உணவு கொண்டு திரும்பி வருகிறான். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு அவளைப் பார்க்கிறான்.

“தா வம்பு செய்யாம வந்து படு...”

அவள் எதிரொலியே காட்டவில்லை. ஆனால், இந்த நைச்சியம் எதில் கொண்டு விடும் என்று புரியுமே?

புகையை விட்டுக் கொண்டு சிறிது நேரம் அவளையே பார்க்கிறான்.

அவளுக்கு, அப்போது, ‘இவனையா நான் விரும்பினேன்?’ என்று நெஞ்சு கூர்முள்ளாகிக் குத்துவது போலிருக்கிறது. கவர்ச்சி மிகுந்த புறத்தோற்றம், அவன் புன்னகை, இப்போது வெறுப்பைக் கிளர்த்தும் பக்கம் சாய்ந்து போய்விட்டது.

‘இந்த மனிதனுக்கும் தனக்கும் ஒரு சம்பந்தமும் இனி இருப்பதற்கில்லை’ என்று மனசோடு முடிந்து கொள்கிறாள்.

அவன் எழுந்து வந்து அவள் தோளை தழுவ முற்படுகிறான்.

“சீ! என்ன இது விஜி? உன்னச் சும்மாச் சீண்டிப் பார்த்தேன். இத்தப் பெரிசா நினைக்கிற...”

“ஹ்ம்...” என்று ஓர் ஒலி அடி நெஞ்சிலிருந்து ஓங்காரம் போல் எழுகிறது. “என்னைத் தொடாதீங்க!”

அவன் திகைப்பச் சமாளித்துக் கொள்கிறான்.

“அட, என்ன விஜி. சும்மானச்சிம் சொன்னதெல்லாம் பெரிசு படுத்திட்டு... நீ வரலேன்னா உன்ன குண்டுக் கட்டாத் தூக்கிப் போட்டு...”

“பேசாதீங்க! உங்களப் பார்க்கவே எனக்கு இப்ப வெறுப்பா இருக்கு?” என்று ஒரு நெருப்புச் சாட்டையை அவன் மீது வீசி விட்டு, அவள் கதவைத் திறந்துக் கொண்டு ஹாலுக்குப் போகிறாள். அவன் விடவில்லை. அவனது ஆணவம் அவள் மீது தன் உரிமையைப் பதிக்காமல் விட்டு விட இடம் கொடுக்காது. அவளைப் பிடிக்குள் அகப்படச் செய்யப் பாய்ந்து வருகிறான். அவள் தடதடவென்று மாடிப்படிகளில் இறங்கிக் கீழே வருகிறாள்.

வரவேற்பு அறையில் அவளைத் தொடர்ந்து வந்து விடுகிறான்.

“ஏய், கலாட்டா செய்யாம, மரியாதையா வந்திடு.”

“என்னால் இனிமேல் உங்களுடன் வாழ முடியாது.”

“அது போது விடிஞ்சி, இப்போது இந்த வீட்டில் இருக்கும் வரையிலும் நீ எனக்கு உரிமையானவள்!”

காறித்துப்ப வேண்டும் போன்று கீழ்த்தரமாகத் தோன்றுகிறது விஜிக்கு.

மீண்டும் மீண்டும், திருமணம் ஒரு பெண்ணின் சுதந்தரத்தைக் காவு கொள்ளும் பலிபீடம் என்று அவளுக்கு வலியுறுத்துகிறான்.

வரவேற்பறையிலிருந்து சாப்பாட்டுக் கூடத்துக்குச் செல்லும் சிறு இடைகழி. ஓர் ஓரம் தொலைபேசி, மாடிப்படி வளைவு; மாமியாரின் அறை தெரிகிறது. எதிரே பூஜை அறையும் மூடியிருக்கிறது.

கோலப்பனும் அவன் மனைவி சம்பங்கியும் பின்கட்டு அறையில் இருப்பார்கள். தோட்டக்காரன் வாசல் பக்கம் வராந்தாவில் இருப்பான். எடுபிடிப் பையன் சேது, சாப்பாட்டுக் கூடத்துத் தரையில் படுத்திருக்கிறான்.

“என்னைத் தொட முடியாது. வீணா வம்பு செய்யாம போயிடுங்க!”

“ராச்சசி! ஏண்டி அசிங்கமா கத்துற? நட!”

அப்போது மாமியாரின் அறைக்கதவு திறக்கிறது.

அதற்குள் விஜி வரவேற்பறைக்கு விரைந்து வருகிறாள்.

சுவரில் மாமனாரின் படம், பெரிதாக்கப்பட்ட வண்ணப்படம், சரிகை மாலையுடன் கண்களில் படுகிறது. அதில் எப்போதும் ஓர் பச்சை விளக்கு எரிந்து கொண்டிருக்கும். மாமியார் அவளை இகழ்ச்சியுடன் பார்க்கிறாள்.

“சீ, என்ன கேவலம்டி இது? ஆளுங்க ஆரும் எந்திரிச்சிப் பாத்துச் சிரிக்கப் போறாங்க! மானம் போகுது! புருசம் பொஞ்சாதி சண்டைய வெளில கொண்டு வருவாளா ஒருத்தி?”

அவள் பேசவில்லை. உறுத்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள்.

“ஏண்டி? உனக்கே இது அசிங்கமாயில்ல...?”

“குதிர கீழ தள்ளிட்டுக் குழியும் பறிச்சிதாம். சேத்துல கால வச்சிட்டு நான் தான் தவிக்கிறேன். நீங்க என்னக் குத்தம் சொல்றிய. ஒரு படிச்ச, பண்புள்ள மனிதரா இவர்? சிகரெட் நுனிய வச்சு என் சேலையைப் பொசுக்கியிருக்காரு பாருங்க!”

மாமியார் தலையிலடித்துக் கொள்கிறாள்.

“அவன் ஆம்பிள, கோவக்காரன்னு தெரியுமில்ல? நீ கொஞ்சம் அச்சப்பட்டு ஒடுங்கி இருந்தா என்ன கொறஞ்சி போச்சி?...”

“அச்சப்பட்டு ஒடுங்கி அடிபடறதுக்குத்தான் கலியாணம், இதுதான் இல்லறம்னு இத்தினி நாள் தெரியாம இருந்திட்டேன். தாயும் மகனுமாக இதை விளக்கிட்டதுக்கு ரொம்ப நன்றியம்மா. நாளக்கே உங்க மகளக் கட்டிக் கொடுப்பீங்க, இப்பிடி அவள ஒரு புழுவப் போல மருமகன் நடத்தினாலும் இப்பிடித்தான் விளக்கம் கொடுப்பீங்களா?”

மாமியாரின் முகத்தில் இகழ்ச்சி கூத்தாடுகிறது.

“எம் பொண்ணு ஒண்ணுக்கும் வக்கில்லாம போக மாட்டாடி!... பண்புக்குறவாம்! என்னாத்தடி பெரிய கொறவக் கண்டுட்டே? உங்கப்பன் பவிசு தெரியாம பேசாத! கண்ட கூலிப் பயங்கூட பேசிச் சிரிக்கிறதும் அச்சடக்கமில்லாம புருசங்கட்டின ஊரில் டீக்கடையில் சைக்கிள் எடுத்திட்டுப் போறதும், ஊர்ப்பக்கம் தலைகாட்ட முடியாம செஞ்சது நீயா, நாங்களாடி?...”

விஜி சீறி விழுகிறாள். “த பாருங்க அத்தை? என்னப் பத்தி பேசுங்க. வீணா எங்கப்பாவைப் பத்தி பேசாதீங்க!”

மாமியார் விளக்கெரியும் படத்தை நிமிர்ந்து பார்க்கிறாள். “பார்த்தீங்களா? இப்பிடிச் சீரழியிறது...?” என்று கண்ணீர் விடத் தொடங்குகிறாள்.

“ரெண்டு கட்டி, ரெண்டாமவ, பிள்ளபெத்துச் சீக்காயிட்டான்னு அவ இருக்கையிலேயே என்னக் கட்டுனாருடீ? அந்த காலத்துல எங்க வீட்டில நாப்பது பவுன் போட்டுத்தா கெட்டிக் குடுத்தா. அவியளுக்கப்ப முப்பத்திரண்டு வயசு, சக்களத்தி, மாமியா, நாத்தூன் இத்தினி பேருக்கும் கோணாம நடக்கணும், வெளியே போனா, தொழில் செய்யறவங்களுக்கு ஆயிரம் தொல்லை. இப்பப் போல செழிப்பு வராத காலம். வீட்டுக்கு வரச்சே ஏறுமாறாதானிருப்பா. அனுசரிச்சிட்டுத் தான் போகணும். போயி என்ன கெட்டுப் போச்சி? இன்னிக்கு இந்த வளமை எல்லாம் அவங்களால் வந்ததுதான். வெங்கி மட்டும் என்ன சாமானியமா? நாங்க பாத்துக் கெட்டிவச்ச பொண்ணுதா மீனா. லச்ச ரூபா சீதனத்தோடு வந்தவ; செட்டிநாட்டுக்காரங்க மூக்கில விரல வைக்கிறாப்பல. ஆன மேல ஊர்கோலம் வுட்டு அப்ப்டி ஒரு கலியாணம் பண்ணினா. அவ... இன்னிக்கும் ஒரு பேச்சு புருசனை எதுத்துப் பேச மாட்டா, அவன் உரத்துப் பேசினாலே, நடுங்கிப் போவா. இப்ப கலெக்டர் சாப்பாட்டுக்கு வருவான்னு போன் பண்ணிட்டு கீளவச்சிட்டுத் திரும்புமுன்ன அஞ்சாறு பேரைக் கூட்டிட்டு வருவா. அவன் பாத்தா வெளிப்பார்வைக்குச் சாது போல இருக்கிறானே ஒழிய, நெருங்கிப் பழகினால்ல கொணம் தெரியும்? பெஞ்சாதி புள்ளகளப் பத்தி ஒரு கவனம் கெடயாது. பிள்ளைகளை ஸ்ஊல்ல சேக்கணுமா, பிறந்து வீட்டுக்காரங்க சாமி கும்புடுறாளா! கலியாணமா, எல்லாம் இவதான் போகணும். அவனுக்கு நேரம் கெடயாது. அனுசரிச்சிட்டுத்தான் போயிட்டிருக்கிறா, இந்த ஊரில அவன் அப்பா ஸ்தானத்தில் இருக்கிற பெரியவங்களுக்கு எடயில நல்ல பேர் தான் வாங்கியிருக்கிறான். யார் வீட்டில என்ன நல்லது பொல்லாதுன்னாலும் மீனாதா விட்டுக்குடுக்காம போயிட்டு வரா... இப்ப...”

“இத பாருங்க அத்தை, இதெல்லாம் கேட்டு என் காது புளிச்சிப் போயாச்சி. இந்த வீட்டு மருமகளாக என்னால் இருக்க முடியாது. தயவுசெஞ்சி என்ன விட்டுடுங்க. காலம வரயிலும் பொறுத்துக்கிங்க, நான் போயிடுறேன்...”

“காலம வரையிலும் என்னடி பொறுக்கிறது? இப்பவே கெளம்பு, உன்னைக் கொண்டு விட்டு விடறேன்! ம்... கெளம்பு உன் சாமானை எடுத்துக்க!...” என்று மயிலேசன் அதட்டுகிறான். அவள் அவனை நிமிர்ந்து பார்க்கிறாள். உதடுகள் துடிக்கின்றன. அழுத்திக் கொள்கிறாள்.

“வேண்டாம், காலையில் நானாகவே போய்க் கொள்கிறேன்! காலை வரையிலும் நான் இங்கே இருந்திட்டிப் போறேன்...”

“இருக்க வாணாம், இப்பவே போ!”

மாமியார் குறுக்கே வந்து மகனைத் தடுத்துப் பின்னே தள்ளுகிறாள்.

“வாணாம்... வாணாம்டா, போ! அப்பதே நான் இந்தச் சம்பந்தம் சரியாயிருக்குமாடான்னு கேட்டேன். அண்ணனும் தம்பியுமா என்னை முட்டாளாக்கினீங்க...”

அவர்கள் இருவரும் அகன்ற பிறகு விஜி அந்த முன்னறைச் சோபாவிலேயே இரவைக் கழிக்கிறாள். விடியற்காலையில் அந்தப் பெரிய விட்டு மருமகள் தனது இரண்டொரு சேலை துணிகளடங்கிய கைப் பெட்டியுடன் தன்னந்தனியாகப் பாதையில் நடந்து செல்வதைத் தோட்டக்காரன் பார்த்துக் கொண்டு நிற்கிறான்.

அத்தியாயம் - 17

சுமதி ஒரு சிறு தொட்டியில் ரோஜாப்பதியன் வைத்திருக்கிறாள், செந்தில் கொண்டு வந்தானாம். எங்கோ ஊருணியிலிருந்து மண் கொண்டு வரச் சொல்லி அதை நட்டு, நாள்தோறும் நல்ல தண்ணீர் ஊற்றி, இடை இடையே அதைப் பார்ப்பதிலேயே ஒன்றிப் போகிறாள்.

சித்திரை மாசத்தில் மாரி அம்மன் கோயில் விழாவில் கயிறு குத்துப் பிரார்த்தனைக்காரர் கையிலேந்தும் தீச்சட்டியில் எழுப்பும் சுவாலையைப் போல் துளிர் விட்டிருக்கிறது அது.

“ஐய்யா! வேலம்மா! இதபாரு! இது துளிர் விட்டிடிச்சி! அக்கா! இதபாரு! துளிர்விட்டிடிச்சி” என்று அவள் ஆர்ப்பரிக்கிறாள்.

“மழகாலத்துல வச்சாத்தான் துளிர் வரும்னு நினைச்சிட்டிருந்தேன். செந்தில்தா சொன்னா. இப்ப வையி புடிச்சிக்கும்னு...”

இதைச் சொல்கையில் அவள் முகம் சிவந்து போகிறது. பார்ப்பவர்கள், சுமதியையும் விஜியையும் சகோதரிகள் என்று சொல்லமாட்டார்கள். மாநிறம், ஒடிந்து விழும் மென்மை...

“நான் கரிஞ்சு ஓயிடும் இந்த வெயிலிலேன்னு பயந்திட்டிருந்தேன். சூடு இருந்தால்தான் முட்டை குஞ்சு பொரிப்பது போல், இந்த உயிர்ப்புக்கும் சூடு வேண்டியிருக்கு!”

விஜி அவளையே பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நிற்கிறாள்.

அன்று அதிகாலையில் தன் கைப் பெட்டியுடன் ரிக்‌ஷா ஒன்றில் வந்து இறங்கிய அவளை யாரும் இது வரையிலும் சிறிதும் வித்தியாசமாக நடத்தவில்லை. எப்போதும் போல் முகம் கனிந்த அன்புடன் வேலம்மா வரவேற்றிருக்கிறாள். அப்பா அவரும் வாய்விட்டு எதுவும் கேட்கவில்லை. தொழிற்சாலையைப் பூட்டி வைத்து விடுவார்களா?

சண்முகம் அன்றே பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டார். சிறுவர் சிறுமியருக்குப் பகலுணவு நேரம் ஒரு மணி கொடுக்க வேண்டும்; காலையில் ஏழு மணிக்குத்தான் தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்; மாலை நான்கு மணியுடன் திரும்பி விடவேண்டும்; கணக்கப்பிள்ளைகளுக்கு ஊதிய உயர்வு வேண்டும்; மாரிசாமியை வேலைக்கு மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும்... என்றெல்லாம் அவர் வைத்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டார்கள். மாரிசாமிக்கு அந்தத் தொழிற்சாலையில் மீண்டும் வேலை கொடுப்பதற்கில்லை. ஆனால், அவர்களுடைய உறவு வட்டத்தில் மயிலேசனின் மாமனுக்குச் சொந்தமான பழைய தொழிற்சாலையில் வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. அது புது நகரத்திலிருந்து ஐந்து மைல்களுக்கப்பால் சத்திபுரம் ஊரில் இருக்கிறது. மாரிசாமி அங்கே சென்ற பிறகு ஒரே ஒரு முறைதான் வந்து போனான்.

“விஜியம்மா! எப்ப வந்தீங்க?...” என்று ஆச்சரியத்துடன் கேட்டான். ‘நீ வேலைக்குச் சேந்து போகும் நாளில் வந்தேனே, அன்றிலிருந்து திரும்பவில்லை’ என்று அவள் சொல்லவில்லை. அக்கம் பக்கம், கேட்பவர்களுக்கெல்லாம் மாப்பிள்ளை வெளி ஊருக்குப் போகப் போகிறார், அந்த நாட்களில் இங்கிருக்கும் ஆசையில் வந்ததாகச் சொல்கிறாள். தன்னால் ஏன் உண்மையைச் சொல்ல முடியவில்லை என்று புரியவில்லை.

வறட்சிச் சூழலிலும் ரோஜா துளிர்க்கிறது. அந்த தொழில் பெருக்க நெருக்கடிக் கசப்பிலும் வசந்தத்தின் மென்மைகள் கட்டவிழ்கின்றன. காளிகோயிலில் பத்து நாளைய உற்சவம் தொடங்கி விட்டார்கள். மல்லிகையும் மருவும் மணத்தை வீசிச் சூழலுக்குக் கவர்ச்சி அளிக்கிறது. புதிய தாலிக் கயிறுகளின் மஞ்சட் குங்குமங்கள் துலங்க, கடனும் வறுமையுமாகிய குழிகளை மூடி மறைக்கும் புதிய வேட்டிகளும் மினுமினுப்புச் சட்டைகளுமாக, பஸ் நிற்குமிடங்களில் கொத்துக் கொத்தாக மக்கள் காணப்படுகின்றனர்.

எங்கோ கிராமத்துக் குலதெய்வத்து விழாவுக்கே கடை கண்ணிகள், ராட்டினம் போன்ற களியாட்டங்கள் சந்தை விரிக்குமானால், பெரிய தொழில் நகரத்தின் புராதனமான காளி அம்மன் உற்சவத்துக்கு மக்களைக் கவர்ந்திழுக்கும் வண்மைகள் இல்லாமலிருக்குமா? கோயில் வளைவுக்குள், கடை வீதிகளில், ‘திருவிழா’ என்று அறிவிக்கும் மிட்டாய்க் கடைகளும், பாத்திரக் கடைகளும், துணிக் கடைகளுமாக நிரம்பி வழிகின்றன.

ஒன்பதாம் திருநாளில் இரவில் கோயில் முன் விரிந்த வெளியில், வாணவேடிக்கை எங்கும் காண இயலாத காட்சியாகத் திகழும். அம்மன், வாயிலுள்ள கல் மண்டபத்தில், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி இருக்கிறாள்.

விஜி இந்த வாணவேடிக்கைக் காட்சியை முன்பு சிறுமியாக ஐயாம்மாவின் கையைப் பற்றிக் கொண்டு பார்த்திருக்கிறாள். அவள் படிக்கச் சென்ற பின், இந்த விழாச் சமயத்தில் அநேகமாகப் பரீட்சை முடிந்திருக்காது. மேலும் ஐயாம்மா சின்னப்பட்டியே கதியாகச் சென்ற பின், இந்த விழாவுக்கு வருவதில் உற்சாகமும் காட்டுவதில்லை. இப்போது மோதித் தள்ளும் கூட்ட நெருக்கடியில் அவள் நின்றிருக்கிறாள். லோசனியின் மக்கள், சுமி எல்லோரும் நின்றிருக்கிறாள்.

மண்டபத்தின் வலப்புறத்தில் ஊரின் பெரிய பணக்காரர்களான முதலாளிகள், அவர்கள் குடும்பக்காரர்கள் அதிகாரிகள், செல்வாக்கு மிகுந்தவர்கள் வசதியாக நிற்க இடம் ஒதுக்கியிருக்கின்றனர்.

விஜி, தான் நின்ற இடத்திலிருந்தே மாமியாரை அவளுடைய வெண்பட்டுச் சேலையில் அடையாளம் கண்டு கொள்கிறாள். பக்கத்தில் செல்வி... செல்விக்கருகில்...

குப்பென்று வேர்த்துக் கொட்டுகிறது. இங்கே வேறு யார் கண்களிலேனும் அவர் இருப்பது தெரிந்து “விஜி உன் மாப்பிளை அதோ!” என்று சொல்வார்களோ?...

‘...சீ இதென்ன மடமை எனக்கு? நான் என்ன தவறு செய்தேன்?’ என்று மனப்பலவீனத்தை அடிமை கொள்கிறாள். அந்தப் பக்கமிருந்து பார்வையை அகற்றித் தன்னைச் சுற்றிப் பார்வையைப் பதிக்கிறாள்.

“சீ, என்னாடி இது, எப்பிடி நெருக்கித் தள்ளுறாங்க...?” என்று சிடுசிடுக்கும் சுமதி, “விஜி, உங்க வீட்டுக்காரங்கல்லாம் அங்க மண்டபத்துக்கிட்ட இருப்பாங்கல்ல? நாமும் அங்க போவம்...” என்று கூட இழுக்கிறாள்.

“முதல்லியே போயிருக்கணும். ஏ வாசுகி? எங்கடி பிரிஞ்சு ஓடுற?” என்று லோசனி கத்துகிறாள்.

வாணவேடிக்கை நல்ல வேளையாகத் தொடங்கி விடுகிறது.

‘வீ...ஸ்’ என்று மேலெழும்பிச் செல்லும் வாணம், ஒலித்துக் கொண்டு உயரே வண்ணமயமாகப் பச்சையும் சிவப்புமாக ஓர் கனவுலகைக் காட்டுகிறது.

ஒரே பரவசமாகக் கிளர்ந்தெழும் குரல்கள்.

“ஆத்தாடி! எம்புட்டு... எம்புட்டு ஒசரப் போவுது பாரு!”

“இதாண்டி அவுட் வாணம்!...”

“இதெல்லாம் நம்மூருல செய்யறதுதானே?”

“இதெல்லாம் நம்மூரில செய்யறது இல்லே...”

“ஆமா எங்கப்பாருதாஞ் சொல்லிருக்கா மணி மருந்து கட்டி வச்சிருப்பா, பெசல்லா...!”

“அதொண்ணில்ல. சீமேலேந்து தருவிச்சிருப்பா.”

“பொய்யி, சீமேலேந்து வாணம் தருவிப்பாகளாக்கும் எரிஞ்சி போயிராது?”

“தண்ணில முக்கிக் கொண்டாருவா...”

விஜி சுவாரசியமான இந்த உரையாடலைச் செவியுறுகிறாள். இரண்டு குழந்தைகள் - ஒரு ஆணும் பெண்ணும். முன்னே நிற்கின்றனர். இந்தத் தொழிற் சூழலில், அக்குழந்தைகள் இருவருமே உற்பத்தியில் பங்கு பெறுபவர்களாக இருக்கும்.

“ஏ... குடவாணம்!... குடவாணண்டீ!”

மேலெழும்பிச் சென்று குடை போல் வண்ண ஒளி பரப்பும் வாணம்...

பாட்டியின் கையைப் பற்றிக் கொண்டு கண்டு மகிழ்ந்த அதே வாணங்கள். அந்தப் பருவத்தில் இந்தக் கருமையும் கனங்களும் படிந்திருக்கவில்லை. இங்கு வந்து இத்தனை நாட்களான பின்னரும் அவள் சின்னப்பட்டிக்குச் செல்லவில்லை. இந்த விழாவுக்கு அங்கிருந்து மம்முட்டியானோ, வேறு குழந்தைகளோ வந்திருக்கக்கூடும். தனது எதிர்காலம், இந்த எதிர்காலமற்ற குழந்தைச் சமுதாயத்துடன் பிணைந்ததாக, அவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கானதோர் வழியில் நிலைப்பதாக இருக்க வேண்டும் என்று விஜி முடிவு செய்திருக்கிறாள். ஆனால், அத்தகைய வழியின் சாத்தியக் கூறுகள் சட்டென்று புலப்படவில்லை. தந்தையின் அலமாரியிலுள்ள நூல்களை அவள் இதற்குமுன் இவ்வளவு கவனமாக ஆராய்ந்ததில்லை. இப்போது அவளுக்கு ஒரு நூல் தட்டுப்பட்டது. மகாராஷ்டிர மாநிலத்து கோதாவரி பருலேகரின் ‘ஆதிவாசிகளின் கிளர்ச்சி’ என்ற நூல் அவளைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. அந்த அம்மை, காடுகளுக்குள் நடந்துசென்று, மிக அவலமாக விலங்களுக்கும் கீழான நிலையில் அழுத்தப்பட்டு வந்த ஆதிவாசி மக்களிடையே எவ்வாறு தன்மானத்தை எழுப்பினாள் என்பதை வீரமும் உருக்கமும், எழுச்சியும் நிறைந்த வரலாறாக எழுதியிருக்கிறாள். நாற்பதுகளில் அத்தகைய துணிவுள்ள பெருமாட்டி செயல்பட்டிருக்க முடியுமானால், எழுபதுகளின் இறுதியாண்டுகளில் செயல்பட முடியாதா?

“அடீ... பந்து வாணம்...! பந்து வாணம் பாரு!...” விஸ்ஸென்று உயரத்தில் எம்பிச் சென்று பெரிய பெரிய பந்துக் கொப்புளங்களைத் தள்ள குபுக் குபுக்கென்று வெடிக்கும் பந்துவாணம்.

“விஜிக்கு அந்தப் பக்கமே கண்ணுபோகுது. வாணத்தையே பாக்கல. ஏம்மா, அங்கிட்டுப் போயி வசதியா நின்னு பாக்கலாமில்ல?” என்று லோசனி அவளையே கவனித்தாற்போன்று கிண்டுகிறாள்.

ஒரு பெண்ணுக்குத் திருமணமாகிவிட்டால், சுற்றுச்சூழல் முழுதும் அவளைத் தனித்தன்மையற்றவளாகச் செய்வதிலேயே அக்கறை காட்டுகிறது. இது ஒரு சமுதாய நிர்பந்தம் என்று கூடத் தோன்றுகிறது.

வேலம்மாவைப் பொருட்படுத்த வேண்டாம். விடுமுறைக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சித்திகள் சின்னப்பட்டி வரக்கூடும். அப்போது அவள் அங்கு அப்பாவே வெளிப்படையாக எதையும் அவளிடம் கேட்கவில்லை. அவள் அவ்வாறு இணைந்து போக மறுத்து வந்ததை அவர் ஒரு கால் ஒப்பவில்லையோ?

அவ்வப்போது ஏதோ தீனி கொடுப்பது போன்று சம்பளத்தைக் கூட்டித் திருப்தி செய்து விடுவது போன்றுதான் தொழிற்சங்க நடவடிக்கை இருக்கிறது. உண்மையில் அந்தக் குழந்தைகளை, கணக்கப்பிள்ளைகள் குழந்தைகளாக நடத்துவார்களா? ஏழு மணியில் இருந்து மாலை நான்கு மணி வரையிலும் என்றபடி வேலை முடித்து கொண்டு விடுவார்களா? இதைப் பெற்றோர் ஒப்புக் கொண்டு குறைந்த கூலிக்குத் திருப்தியடைவார்களா?

விஜிக்கு நம்பிக்கையில்லை. இது கட்டாந்தரையில் ஆழப் பதிந்த வேர். தாழ்மையுணர்வும், வறுமையும் பெற்றோரின் இயல்பான கசிவுகளை முழுசுமாக வற்றடித்து விட்டன. அவை நீங்க, நம்பிக்கை நீரைப் பாய்ச்ச வேண்டும். பின்னர் இந்த வேர்களைக் கெல்லி எறிய வேண்டும் என்று அவர்கள் ஒன்றுபட்டால், ‘எங்கள் குழந்தைகளுக்கு எதிர்காலம்’ வேண்டும் என்ற உணர்வு கொண்டு செயல்பட்டால், இந்தப் பிரச்சனைக்கு மாற்று காண முடியும்.

அவளுக்குத் தெரிந்து அப்பாவுடன் கட்சி, தொழிற்சங்க அபிமானிகளாக இருந்தவர் பலரை நினைத்துப் பார்க்கிறாள் விஜி. எபனேசர் சொந்தமாகப் பட்டாசுத் தொழில் செய்கிறான். லாபம் மட்டுமே குறியாகத்தான் சிறு தொழில்காரன் இயங்க முடியும். சட்டப்படியான பாதுகாப்பு விதிகளைப் பெரும்பாலான சிறுதொழிற்சாலைகளில் நினைத்துப் பார்க்க முடியாது. ருத்ரய்யா தெலுங்கன். ‘வார்னிஷிங் பிளான்ட்’ சிறிய அளவில் செய்யும் தொழில். வேலை செய்யும் பையன்களைக் கண்மண் தெரியாமல் அடிக்கிறான் என்று அப்பாவே சொல்வார். காளத்தி சிறிய அளவிலான கட்டிட கான்டிராக்டர். அவன் தினமும் குடித்துவிட்டுப் பெண்சாதியை அடித்துக் கொல்லுவா. கட்டியவள் வேறு. கட்டாதவள் வேறு. சந்திரன் தீப்பெட்டி அலுவலகத்தில் எழுத்தனாக இருக்கிறான். அவன் மனைவி சுசீலா மிக அழகாக இருப்பாள். அவள் மின்சார அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருந்தாள். திருமணமானதும் வேலையை விடச் சொல்லிவிட்டான். நான்கு குழந்தைகள். தேய்ந்து மாய்ந்து, அந்த அழகின் சுவடுகள் இல்லாமல் நோயாளி போலிருக்கிறாள்; திப்பெட்டி ஒட்டுகிறாள். இவர்களெல்லாரும் தாம் ஏற்றத்தாழ்வில்லாத புது யுகத்தைக் கொண்டு வரப்போகும் கட்சிக்குப் பேசுகிறார்கள். கூட்டம் போடுகிறார்கள், கோஷங்களை உருவாக்குகிறார்கள். கோஷங்களும், நடவடிக்கைகளும், உடலுழைக்காமல் காரில் போய்க் கொண்டு சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கும் முதலாளிகளின் வாழ்க்கைத்தர பொருளாதார மேன்மையைத் தான் இலக்காகக் கொண்டிருக்கின்றன. ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற சமத்துவக் கோட்பாட்டின் அடி நிலையில் உழைப்பு மூலதனம் என்பதுதான் உயிர்க்கரு. அந்த அடிப்படையில் விழிப்புணர்வு வரவில்லை. கல்வி, தொழில், ஏன், வாழ்க்கைக் குறிக்கோளே, பணம், உழைக்காத சுகபோகம் என்ற இலக்குகளைப் பிடிப்பதற்காகவே இன்று கருவிகளாக இருக்கின்றன.

விஜி பட்டப்படிப்பைப் பெண்கள் கல்லூரியில் தான் முடித்தாள். பின்னர் மேற்படிப்பு இரண்டாண்டும் ஆண்களும் படித்த கல்லூரியில் தான் கழிந்தது. மாணவர் சம்மேளனத்து ரமணி, முற்போக்கு அணியைச் சேர்ந்தவன். மாணவிகளிடையே ஆதரவாளர்களைச் சேர்க்க அவன் அவளை நாடி வந்திருக்கிறான். உயர்ந்த இலட்சியங்களைப் பற்றி அழகாகப் பேசுவான். ஆனால் இவர்கள் இலட்சியங்களையும், பேச்சுக்களையும் கேலியும் கிண்டலும் செய்தவர்கலே பெரும்பான்மையினராக இருந்தனர்.

பெண்கள் கல்லூரியிலோ, முற்போக்குக் கருத்துக்களைப் பற்றி நினைப்பது கூட அசாத்தியம். ஒரு சமயம் முத்தமிழ் விழாவில் பேச வந்த இலக்கிய ஆய்வாளர் ஒருவர், பெண்களின் சில உரிமைகளை, தனித்தன்மையுடன் இயங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசிவிட்டார். தலைவிக்கு அங்கேயே அச்சம் வந்து விட்டது... அவர் கருத்துக்களை ஒப்புக் கொள்வதற்கில்லை என்று பேசினாள்.

“மாணவப் பருவத்தில் எல்லோரும் புதிய சிந்தனைகளை ஆர்வமாக வரவேற்க முடியும். பெண், குடும்பப் பொருளாதார உற்பத்தியில் பங்கு கொள்ளும் போது, தனிப்பட்ட முறையில் ஓர் மதிப்பும் கௌரவமும் பெறுகிறாள். இதுவே தன்னம்பிக்கையும் ஆற்றலும் பெருக வாய்ப்பளிக்கிறது. ஆனால் இன்றைய குடும்ப அமைப்பில் இன்னும் ஆண் பெண்ணைத் தனக்குக் கீழ்ப்படிய வேண்டியவள் என்று கருதும் நிலை போகவில்லை; இது பிரச்னை” என்றார் அந்தப் பேச்சாளர். இதை அத் தலைவி ஒப்புக் கொள்ளவில்லை.

நிசமான வாழ்க்கையில் அநுபவித்தறியும் உண்மைகள், மாணவப்பருவ நினைப்பிலிருந்து எத்தனை வித்தியாசப்படுகிறது!

“அதோ...! கோழிக்கால் வாணம் அக்கா! கோழிக்கால் வாணம்!”

மேலெழும்பிய வாணம், பல கீறுகளாக, கிளைகளாக கோழிக்கால் சீந்தி விடுவது போல் வெடித்துக் கோலம் காட்டுகிறது.

காளி அம்மன் திருவிழா இது என்று விஜி சிந்தையை இழுத்துக் கொண்டு வருகிறாள்.

கொட்டுக்கள் முழங்குகின்றன. குருக்கள், கழுத்தில் உருத்திராட்சம் தவழ, அம்மனுக்குக் கற்பூர ஆரத்தி காட்டுகிறார்.

வாணப்புகை குழம்பிய வானைப்போல் கூட்டத்திலும் அமைதி காட்டி விட்டுப் போன கசகசப்புக்கள்... குழப்பங்கள் மேலிடுகின்றன. இனி அம்மன் பவனி வரத் தொடங்குவாள்.

கூட்டத்தில் குழந்தைகளை நழுவ விடாமல் கையைப் பற்றிக் கொள்ள, லோசனியும் சுமியும் அவளும் வீடு திரும்புகிறார்கள்.

வீட்டில் சிவகணபதி வாத்தியார், அந்த இரவில், வாசலில் உட்கார்ந்திருக்கிறார். அவளைக் கண்டதும் எழுந்து கை குவிக்கிறார்.

“வாங்க... வாங்க சார்... எப்ப வந்தீங்க? ஊருல எல்லாரும் சுகமா?” என்று வரவேற்கிறாள்.

“எல்லாமே சுகந்தான். திருவிழால்ல? நீங்க இங்க இருக்கீங்கன்னு இப்பதாந் தெரியும்; வந்தேன்...”

“ஊரில மாட்ச் ஃபாக்டரிப் பிள்ளைங்களை இப்பல்லாம் ஏழு மணிக்குக் கூட்டிட்டுப் போயி நாலு மணிக்குக் கொண்டு விட்டுடறாங்கல்ல?”

அவர் புரியாமல் புருவத்தை நெறித்துக் கொள்கிறார்.

“அப்படியெல்லாம் இல்லியே? நாலு மணிக்கு வந்து ஏழு மணிக்குக் கொண்டு விடுகிறான்... கொஞ்சம் முன்ன...” என்று தெரிவிக்கிறார்.

அத்தியாயம் - 18

சடச்சி, இடுப்பில் கைக் குழந்தையும் தலையில் பன நார்ப் பெட்டியுமாக அந்தத் தொழில் நகரத்தின் விழாக் கும்பலில் தனது மகன் காத்தமுத்துவைத் தேடி வந்திருக்கிறாள். காலில் காயத்துடன் அவன் வண்டியேறிச் செல்கையில், அவன் நகரிலேயே அஞ்சித் தங்கி விடுவான் என்ற எண்ணம் அவளுக்கு உதிக்கைவ்ல்லை. திருவிழா வாணவேடிக்கை பார்க்கச் சென்ற ஊர்க்காரர்களிடமெல்லாம், அவள் காத்தமுத்துவைக் கண்டால் சொல்லும்படி கேட்டிருக்கிறாள். ஆனால் யாரும் கண்டு வரவில்லை.

சந்தனக் குடும்பர் ஒரு முறை போய் வந்து, “அவெ கசத்துக்குப் பக்கத் தெருவில் உன் மச்சான் வீட்டுக்காரர்களோடுதா இருக்கிறான்...” என்றார்.

அவர்களெல்லாரும் ஃபயராபீசில் வேலை செய்து பிழைப்பவர்கள்.

“பயராபீசில என்னிய கூலின்னு சொன்னாலும் போவாத ராசா! அது நமக்கு வேணாம்” என்று அவள் பல முறைகளில் மகனிடம் கூறியிருக்கிறாள்.

அவன் எங்கு வேலை செய்தாலும் ஒரு தடவை வரக்கூடாதா?

ஒரு வேளை கால் சரியாகவே இல்லையா!...

அந்தத் தொழில் நகரம் பத்து வருசத்துக்கு முன்பு அவன் வாழ்ந்து நடந்து பழகிய இடம் தான். இந்நாள் அவளுக்கு ஒரு இடமும் அடையாளம் தெரியவில்லை. வீடுகளும் தெருக்களும் அவளால் புரிந்து கொள்ள முடியாத வகையில் மாறியிருக்கின்றன.

காலையில் ஏசன்டிடம் கெஞ்சி, மகள் வடிவுடன் அந்தத் தீப்பெட்டி ஆபீசு வண்டியிலேயே வந்து, இருள் நன்றாகப் பிரிந்து சூரியன் கண்களைக் குத்தும் வரையிலும் தங்கியிருந்து விட்டுப் பிறகு தெருக்களைச் சுற்றி வருகிறாள்.

காச்சல்கார அம்மன் கோயில் வளைவு பிரிகிறது...

இருட்டி வீடு திரும்பும் போது பாதிநாளும் காச்சலுடன் வரும் புருசனுக்காக நேர்ந்து கொள்கிறாள்.

தீப்பெட்டிகள் காயும் முற்றங்கள்... தண்ணீருக்காகக் குடங்களைத் தூக்கிக் கொண்டு அலையும் பெண்கள்... சாக்கடை ஓரங்கள், பன்றிகள் - முட்செடிகள் தெரியும் குப்பை மேடுகள் - சரேலென்று முளைத்தாற் போல் வண்ணமும் புதுமையுமாக வீடுகள் கொண்ட தெருக்கள் - கடக்கடக்கென்று ஓசை கேட்கும் சிறு அச்சகம் போன்ற தொழிலகங்கள்.

சடச்சிக்கு எதுவும் புரியவில்லை. காத்தமுத்துவின் வயசில் தட்டுப்படும் பையன்களை எல்லாம் உற்றுப் பார்க்கிறாள்.

கையில் புத்தகப் பையுடன் சிறுவர் சிறுமியர் பள்ளிக்கூடம் செல்கின்றனர்.

அவள் எங்கோ சுற்றி எப்படியோ வந்து அந்தக் குளத்தைக் கண்டுபிடித்து விடுகிறாள். குளம்... குளமா அது? அது கசம் என்று பேர் பெற்று வெகு நாட்களாகி விட்டன. சுற்றிலும் கட்டுமானம் தெரியாமல் முட்செடிப்புதர்களும் குப்பை மேடுகளும் இடிந்து சரிந்த மண்ணும் எங்கோ ஆழத்தில் பச்சையாகத் தெரியும் ஆடை படிந்த நீருமாக இருக்கிறது. அதன் ஓரமாகக் கொல்லைப் புறமுள்ள குடிசை வீடுகள் - அந்தத் தெருவும் மாறிப் போய்விட்டது. முன்புறம் அடையாளம் தெரியவில்லை. பெரியகட்டுமான வீடுகள் வரிசையாக எதிர்ப்புறம் விளங்குகின்றன.

வெயில் நேர் எதிரே கண்களைக் குத்துகிறது.

குடிசைகளுக்கு வெளியே சிறிதளவு நிழலில் ஒண்டிக் கொண்டு பல சிறிசுகள் கட்டைகளில் குச்சியடுக்குகின்றன.

ஒரு கிழவி ஓய்ந்து, குடிசை வாயிலில் குந்தியிருக்கிறாள்.

“ஆரத்தேடுற? எங்கிட்டிருந்து வார?”

அவள் கேட்டவள் தங்கச்சியின் மாமியாருக்குத் தாய் என்று அடையாளம் கண்டு கொள்கிறாள்.

“நா... சின்னப்பட்டிலேந்து வார. எம்பைய காத்தமுத்து இங்கிட்டு வயித்தியம் பாத்துக்கிட வந்தா - கால்புண்ணுக்கு...” கிழவி அவளை நிமிர்ந்து உறுத்துப் பார்க்கிறாள். குரலில் காரம் மேவுகிறது.

“ஆருடீ? சோளக்காட்டில் களயெடுக்கப் போனவ, அங்கிட்டிருந்தவனைச் சேத்துக்கிட்டுப் போனவதானே?...”

அவள் ஆமென்று சொல்லவில்லை. அவளுடைய வாழ்க்கை வரலாற்றில் உள்ள வடுவை அல்லவோ கூரிய நகம் கொண்டு கிள்ளுகிறாள்?

“பைய இங்கிட்டுத்தான இருக்கிறா?”

“ஆமா, ஃபயராபிசில மாவு நுணுக்கிச் சலிக்க, சித்தப்பன் கூட்டிட்டுப் போறா. இடுப்பில் வச்சிருக்கிறது ஒம்புள்ளதானே?”

பேச்சுக்குரல் கேட்டு உள்ளிருந்து வேறு இரண்டு மூன்று பெண்கள், இடுப்பில் இடுக்கிய குழந்தைகளுடன் வருகின்றனர். சடச்சி அவர்களை உற்றுப் பார்க்கிறாள். அவள் அந்த இடத்தைவிட்டுச் சென்ற காலத்தில் அவர்கள் சீலை உடுத்தத் தெரியாத பிராயமாக இருந்திருப்பார்கள்.

“எப்ப வருவா எல்லாரும்?”

“எப்ப வருவா? பொழுது சாஞ்சிதா வருவா. இன்னிக்கென்ன புள்ளயப்பத்தி அக்கற வந்திச்சி?”

கிழவி கேட்கும் போது அவளுக்கு நெஞ்சில் ஊசி செருகினாற் போலிருக்கிறது.

“எங்கிட்டுப் போனாலும் பயராபீசு வாணாம் ராசா” என்று கெஞ்சியிருக்கிறாளே? எப்படிப் போனான்? சித்தப்பன் இவனை கூட்டிப் போய் அட்வான்சுக்காசு வாங்கியிருப்பானோ? கட்டி நுணுக்கிச் சலித்து மிக்சிங் செய்து ‘லோடிங்ரூம்பு’ வேலையில் முகம் மூக்கெல்லாம் பொடி ஏறிவிடும். காத்தமுத்துவின் அப்பன் நூலில் கரி மருந்து முக்கிக் காயப்போடுவான். அந்நாளில் அதற்கு ஐம்பது ரூபாய்தான் சம்பளம். அவளும் துக்கடா, வளையத்தில அடுக்கி, மண்தூர் ஒரு புறம் அடைத்து, மறுபுறம் மருந்தடைத்து, மீண்டும் தூரடைத்து, குத்தி, மருந்துத்திரி செருகி எல்லா வேலையும் செய்வாள். விடியற்காலையில் ஐந்தரை மணிக்கு வீட்டைவிட்டு, கைப்பிள்ளை மேல் பிள்ளைகளுடன் புறப்பட்டு விடுவார்கள். இருட்டு கண்களை மறைக்கும் வரையிலும் துக்கடா வெடி செய்வார்கள்.

அந்தக் காலத்தில் அது பெரிய ‘ஆபீசு’ இல்லை. ரூம்புக்கு நாலு வாசலிருக்கணும். ஒண்ணில் இரண்டு ஆளுக்கு மேல் வேலை செய்யக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் இன்ஸ்பெக்டர் வரும் போது மட்டும் உள்ளே போட்டிருக்கும் தூளி, பிள்ளைகளை எடுத்துக் கொண்டு மற்றவர் மறைந்து விடுவார்கள். அங்கே மொத்தமே நாலைந்து ரூம்புகள் தானிருந்தன. ஒன்றில் அவள் புருசன் கரிமருந்து ‘டிப்பிங்’ பண்ணிப் போட்டிருப்பான். இன்னொன்றில் பாப்பம்மா அவள் தங்கச்சி, ஓரகத்தில் எல்லோரும் சக்கரம் ட்யூப் வெட்டி மருந்து அடைப்பார்கள். மண்பூசி, வளையம் குத்தித் திரி வைத்தாலும், சரம்பின்னனாலும் ஒரு நாளைக்கு ஒன்று, ஒன்றேகால் கிடைத்தால் அதிகம். ஆனால் விலைவாசி இவ்வளவில்லை. ஊரெல்லாம் நவராத்திரியும் அம்மன் பொங்கலும் கொண்டாடும் போதும் அவர்கள் குறுக்கொடிய, கண்கள் பூக்க, வேலை செய்ய வேண்டும்.

தீபாவளிக்குப் பிறகு மழைக் காலத்தில், பட்டாசு வேலை ஓய்ந்து போகும். இந்தக் காலத்தில் கூலிப் பணமெல்லாம் ஏறியிருக்கிறது. பண்டிகைப் போனசு என்று கொடுக்கிறார்களாம். அதெல்லாம் அந்நாளில் தெரியாது. தீபாவளிக்கு முன்பே, கருமருந்து, வெள்ளைப்பொடி, திரி, காகிதம் எல்லாம் திருட்டுத் தனமாகக் கொஞ்சம் கொஞ்சம் கடத்தி வருவார்கள். அவற்றை இரவில் வீட்டில் வைத்து வெடிகள் செய்து விற்றுக் கொஞ்சம் துட்டு சம்பாதிப்பார்கள். பண்டிகைச் சமயத்தில் எதுவும் இல்லாமல் கடனுக்கும் வட்டிக்கும் கூலியைக் கொடுத்துவிட்டுப் பட்டினி கிடப்பதை எண்ணித் திருட்டு வெடி செய்யும் வேலையில் ஈடுபடுவார்கள்.

அன்று அவள் சிம்னி விளக்கை எட்டி மூலையில்தான் வைத்திருந்தாள். வெளியே காத்தமுத்து, கொல்லைக்கிருந்தான். வானம் கருத்து இருந்தாலும் தூற்றலில்லை. குடிசைக்குள் இன்னொரு மூலையில் துணியின் மீது கைக்குழந்தையைக் கிடத்தியிருந்தாள். குழந்தை துணியுடன் கால்களை உதைத்து நகர்ந்து வந்தது தெரியாமல் கருப்பன் கவிழ்ந்து அமர்ந்திருக்கையில் எப்படியோ விளக்கில்பட விழுந்தானோ, எப்படி என்ன நிகழ்ந்ததோ தெரியவில்லை. பூமியே அதிர்ந்தாற் போன்று ஓசை கேட்டதுதான் தெரியும். அப்போது கூட எங்கே, என்ன என்று அவளுக்குப் புலப்படவில்லை. கீற்றுக்குடில் வீடுகள் பற்றி எரிந்ததும், துண்டுதுண்டாகச் சிதறியதும் வெளியே ஓடி வருபவரும் அக்கம் பக்கங்களிலிருந்து ஓடி வருபவரும், மருந்து நெடியும், புகையுமாக ஒரே குழப்பமாக இருந்தது. இந்நாளைப் போல அந்நாள் அங்கே பெரிய வீடுகள் எதுவுமில்லை. மணலா, தன்ணீரா எதுவும் கைவசமில்லை. பெரும் பசிகொண்டு அந்த வீடுகளைச் சாம்பலாக்கி விடப் பரவிவிட்ட தீயை எளிதில் தணிக்க முடியவில்லை. ஐந்து வீடுகளை முற்றிலுமாக அழித்த பின்னரே அக்கினியின் வெறி அடங்கிற்று.

புருசன், கைக்குழந்தை, அவளுடைய தகப்பன், தாய், தம்பி, கருப்பனின் அக்காள் குடும்பம் எல்லாம் சின்னா பின்னமாயின.

போலீசு வந்து கேள்வி கேட்டபோது, ஒருமுகமாக வெளியிலிருந்து பட்டாசுப் பொறி தெறித்து விபத்து நடந்து விட்டதாக எல்லோரும் பதில் கூறினார்கள். வெந்து தீய்ந்து போன சடலங்களும், நாசமான வீடுகளும் நினைவுக்கு வருகையில் சடச்சி, அந்த எஞ்சிய குஞ்சை, இறுக அணைத்துக் கொள்வாள்.

கருப்பனைக் கட்டிக்கொண்டு, புதுநகரத்தில் வெடிகள் செய்து பிழைக்க வருவதற்கு முன் சடச்சி கரிசல் காட்டு மண்ணில் திரிந்தவள்தான். அவளைப் போல் பிறப்பெடுத்த மக்கள் அனைவருமே கண்விழித்த நாளிலிருந்தே பட்டினியையும் நிராதரவையும் வெல்ல, போராடப் பழகியவர்கள்தாம். பாலுக்கு அழுதழுது கரைந்தாலும், காட்டு வேலை செய்யவோ, பெரிய தனக்காரர் வீட்டில் சாணிதட்டவோ, குத்திப் புடைக்கவோ சென்றிருக்கும் தாய்க்குச் செவியில் எட்டாது. மாலையில் கிடைக்கும் ஈர தானியத்தைக் குத்திப் புடைத்துக் கஞ்சி காய்ச்சிவிட்டுக் குழந்தையை எடுக்கும் நேரம், குழந்தைக்கு மட்டுமில்லை, தாய்க்குமே சுவர்க்கம் திறந்து கிடக்கும். இரவு நேரங்களிலும் அந்த மதலைக்குத் தாயின் சூடு கிடைப்பது நிச்சயமில்லை. ஒரு துளிர்விட்டுக் காலூன்றத் தொடங்கிய பின் தாயின் வெம்மை நிரந்தரமாகப் பறிபோய் விடும். குழந்தை மண்ணையே சாசுவதமாகப் பற்றிக் கொள்ளும். மண்ணே எல்லாம். இதன் அருமை புரியாத நாகரீகக்காரர்கள் தாம் மண்ணில் அளையும் பிள்ளையை அழுக்கென்பார்கள். மண் தாய்மை ஏக்கத்தை மாற்றிவிடும்.

மண்ணைக் கிளறினால், ஈரமும் வித்துமாய்க் குளிர்ந்தால், பச்சையாகச் சிரிக்கும். வெட்ட வெளியிலே குளிர்ச்சியும் வெய்யிலும் மனசை நிறைக்க, உல்லாசமும் தெம்மாங்கும் பிறக்கும்...

அந்த மண் வானம் பொய்த்துச் சதி செய்ததால் இவர்களைக் கைவிட்டது. ‘பயராபீஸ்’ என்ற நெருப்புக்கு வந்தார்கள். இந்த நெருப்புப் பொடியை வளைத்துக் கண்களில் இட்டு மூடும்போது, திரிசெருகும் போது, பிடரி வலிக்கும் போது, உள்ளத்தில் கருந்திகிலாக அச்சம் குறுக்கும். பேச்சு எழும்போது கண்களில் எரிச்சல் மேலிடும்.

ஆனால், துட்டு... துட்டுக் கிடைத்தது. ஈரக் கம்போ சோளமோ கொண்டு வந்து குற்றித் தின்னும் கடினமும் இல்லை.

வெண்முத்துக்களாக அரிசி வாங்கிச் சோறு வடித்து உப்பு, காரம் சுவையாக வியஞ்சனமும் வைத்து உண்டு பழக, துட்டின் மகத்துவம் உடம்பில் ஊறிற்று.

மண்ணின் பரிசம் இல்லாமல் நெருப்போடு உறவாடிப் பிழைத்த வாழ்வில் ஆண்டுக்காண்டு கருப்பனின் வமிசக் கிளையில் பூக்கள் அரும்பின. நான்கு வருசத்தில் மூன்று குழந்தைகள். காத்தமுத்து ஒருவனைத் தவிர, அவளைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் கருகிப் போனார்கள்.

தெருமுனையில் நின்று போக்குவரத்து வண்டிகளையும், மக்களையும் பார்க்கையில் சடச்சிக்கு நெஞ்சு கனக்கிறது. இடுப்புக் குழந்தை மார்பைப் பிராண்டுகிறது.

அவளுடைய மைந்தனைப் போல் பல நூறு பிள்ளைகள் கண்களில் படுவதாகத் தோன்றுகிறது. கறுப்பு பாடி பனியனுடன் கம்பித்தூக்கில் டீ வாங்கிச் செல்லும் பிள்ளை, கை வண்டிகளில் தாள்கட்டோ, தீப்பெட்டி அட்டை குச்சிகளோ தள்ளிச் செல்பவர், தண்ணீர் தூக்கிச் செல்பவர் என்று எத்தனையோ பிள்ளைகள்...

அவளுடைய காத்தமுத்து, பயராபீசுக்குப் போகக்கூடாது. அவனை அங்கிருந்து அழைத்துச் சென்று மறுபடியும் தீப்பெட்டி ஆபீசிலேயே சேர்த்துவிட வேண்டும்.

அதற்கு யாரை எங்கே போய்க் கேட்பாள்?

திருவிழா நடந்து வெகு நாட்களாகி விடவில்லை. கோயில் வளைவில் கட்டிய தோரணங்கள் காய்ந்திருக்கின்றன.

ஒரு மிட்டாய்க் கடையில் பொறியுருண்டை வாங்கி இடுப்புக் குழந்தைக்குக் கொஞ்சம் கொடுத்துத் தானும் சிறிது தின்னுகிறாள்.

ஒரு குறுகிய வாயிலின் முன் ஆண்களும் பெண்களும் நிற்கின்றனர்.

“இங்கென்ன? மண்ணெண்ண குடுக்கிறாவளா?”

“இல்ல, நாங்க பயராபீசுக்காரங்க. சர்வீசு காசு கேக்க வந்திருக்கிறம்...”

“எந்தூர்க்காரவ...?”

“கெணத்துப்பட்டி...”

“இன்னிக்கு லீவா?”

“இல்ல, இது கன்ட்ராக்டு. சேர்ந்தாப்புல வேல தருவா, மருந்து காகிதம் வந்தா தருவா, இல்லாட்டி இருக்காது...”

“இது பயராபீசா?”

“இல்ல, இது சங்கம். சங்கக்காரங்க கிட்டத்தான் சொல்லுவம், நாம் போயி வேற ஆருட்டப் பேசுவம்?”

சடச்சிக்கு சின்னப்பட்டி ஆச்சிமகன் சங்கக்காரர் என்று தெரியும். அவர் மகள் விஜி - காத்தமுத்துவின் காயத்துக்குக் கட்டுப்போட்டு ஆசுபத்திரிக்குக் கூட்டிச் சென்றாள். அவளிடமும் சொல்லாமல் அவன் தீப்பெட்டி ஆபீசை விட்டு ஓடியிருக்கிறான். அவளிடம் போய் முறையிடலாம்... ஆனால் வீடு தெரிய வேண்டுமே.

“இந்தச் சங்கக்காரரு... ஆரு? சின்னப்பட்டிக்காரரா?”

“அதெல்லாம் ஆம்பிளயளைக் கேளு... எங்களுக்கு என்ன தெரியிது?”

“அவிய மககூட மாச்சஸ் முதலாளியக் கட்டிருக்கு...”

“அதா ஆம்பிளயளக் கேளு!”

சடச்சி கேட்டுக் கொண்டு அங்கேயே நிற்கிறாள்.

அத்தியாயம் - 19

அவர்களுடைய தெருக்கோடியில் வீட்டுவாயிலிலேயே காலையில் முத்தாச்சி இட்டிலிக்கடை போட்டுவிடுவாள். காலை நேரத்தில் அங்குதான் கட்டைக் கணக்குப்பிள்ளை கூடலிங்கம் குச்சி, கட்டை, சில் அட்டை, தாள் சாதனங்களை அந்த வட்டத்துப் பெண்களுக்குக் கொடுக்க வருவான். வாடிக்கையாளரான பெண்கள் குச்சி அடுக்கிய சட்டங்களுடன் அங்கே காத்திருக்கும் நேரத்தில் வம்புப் பேச்சுக்களும் கலகலக்கும்.

வேலம்மா அங்கு செல்ல மாட்டாள். லோசனிதான் மகளை அனுப்பி ‘எம்புட்டு’ என்று கேட்டு வரச்சொல்வாள். செய்து முடித்த பெட்டிகளையும் அவள்தான் ஆளைக்கூட்டி வந்து எடுத்துச் செல்வாள். பெட்டி எடுத்துச் செல்லப் பத்து மணிக்குமேல்தான் வருவான்.

வேலம்மா காலையில் ‘சாமான்’ துலக்கி விட்டு, அடுப்படியில் காப்பி போடுகிறாள். சண்முகம் அதிகாலையில் எழுந்து ஒரு நடை வெளியே சுற்றிவிட்டு வரப் போய்விட்டார்.

வாசுகி வந்து ‘எம்புட்டு’ என்று கேட்கையில் வேலம்மா உள்ளிருந்து “சுமதி, செம்புமேல சிட்ட வச்சிருக்கிறேன். எடுத்திட்டுப் போயிப் பதிஞ்சிட்டு, ரெண்டுகட்டு அட்டையும் தாளும் வாங்கியாரச் சொல்லு. மேப்பெட்டி போதும்...”

சுமி ஒரு ரூபாய் மலிவு நாவல் ஒன்றில் சுவாரசியமாக ஈடுபட்டிருக்கிறாள். பரீட்சை முடிந்து விடுமுறை தொடங்கி விட்டது. மாணவிகளும் ஆசிரியைகளுமாகக் கன்யாகுமரி செல்கிறார்களாம். இவளும் போகப் போகிறாளாம். விஜியுடன் அவள் ஒட்டுவதேயில்லை. சின்னப்பட்டிக்கு சிற்றப்பா வீட்டுக்குச் செல்வதும் அவளுக்குப் பிடிக்காது. அவர்கள் வேலம்மாவைப் பற்றிக் குறைவாகப் பேசுவதால் இவளும் அவர்கள் உறவைப் பொருட்படுத்தவில்லை. சுமி சிட்டை எடுத்துக் கொடுக்கிறாள்.

“சுமி, அப்படியே ஏனம் எடுத்திட்டுப் போயி முத்தாச்சிட்ட ஒரு ரூபா இட்லியும் சாம்பாரும் வாங்கிட்டு வா கண்ணு!”

“போ வேலம்மா, அவ காக்க வய்ப்பா!” என்று முகத்தைத் தூக்கிக் கொண்டு மீண்டும் புத்தகத்தில் ஈடுபடுகிறாள்.

“நான் போயி வாங்கிட்டு வரேன்” என்று விஜி கிளம்புகிறாள். வேலை எதுவும் செய்ய வேலம்மா விடுவதில்லை. ஆனாலும் விஜிக்கு இங்கு சுவாதீனமாக எதையும் செய்ய முடியும்.

கட்டைக் கணக்கப்பிள்ளை, சில்க் சட்டையும் தங்கப் பட்டை கடியாரம், கேலிப் பேச்சுமாக விடலையாகத் தெரிகிறான். பத்துப் பெண்களுக்குக் குறையாமல் சூழ்ந்திருக்கின்றனர். கைவண்டியில் கட்டைகளை, குச்சிச் சாக்குகளைத் தள்ளிவந்திருக்கும் பாட்டாளியும் இருக்கிறான். ஒரு வாளியில் குச்சிகளைக் குத்துக் குத்தாகக் கணக்கப்பிள்ளை அளந்து போடுகிறான்.

சற்றே நடுவயசுக்காரியாகத் தோன்றும் ஒரு முஸ்லிம் பெண்மணி, “இன்னும் போடுங்க, ஆமாம், நாலுகட்டக்கின்னு நீங்க குடுக்கறது, மூணு அடுக்கி பத்துச் சக்கக்குள்ளாறவே தீந்து போவுது!” என்று குறை கூறினாள்.

“ஆமா, பாதிக்குச்சி கழிவு!” இன்னொருத்தி ஆமோதிக்கிறாள். “கழியும் கழியும்! வாளி வாளியா தஸ்கரம் பண்ணிப் போடுவிய” என்று சுறுசுறுப்பாக அடுக்கி வைத்திருக்கும் சட்டங்களைப் பார்வையிடுகிறான் அவன். பிறகு குறுக்குச் சக்கைகளை எண்ணுகிறான்.

“ஏத்தா? ஆருது இது? ரெண்டு சக்க குறயிது! ஆளசந்தா ஏப்பம் வுட்டுடுவிய!...”

“என்னுதில்ல! என்னது இங்க வச்சிருக்கிறே...” என்றெல்லாம் ஒவ்வொருவராக நழுவுகின்றனர்.

“ஆயிசா? உன்னுதா?...”

“இல்ல... என்னுது எண்ணி வச்சிருக்கிறே...”

“இதா ருக்குமணி, உன்னுதா, மரியாதியா உள்ளார வச்சிருக்கிற சக்கய எடுத்திட்டு வந்திடு! கூலியில் ஒரு ரூவா புடிச்சிடுவா!”

“ஏய்யா? எப்பிடி இருக்கு?...” என்று ருக்குமணி சிமிக்கியும் மயில் மூக்குத்தியுமாக முகத்தை ஆட்டுகிறாள்.

“இவிய ஒரு கெட்டில ஏழு குரோசு அட்டக்குச்சி இருக்கும்னு குடுக்கிறா. ஆரு குரோசு கூட இல்ல! ஒரு கிலோ குச்சிம்பா, எண்ணூறு கூட இருக்காது!”

“ஆமா, நீங்க குரோசு தொண்ணூத்தஞ்சு பைசா பொட்டி விக்கிறிய!...”

“ஐயோ! பாத்தியாடி! தொண்ணூத்தஞ்சு பைசாவாம்! ஏய்யா அஞ்சு பைசா குறக்கிறிய? நாளெல்லாம் இத்த ஒட்டிப் போடவே குறுக்கு முறியுது!”

“அப்ப ஒரு ரூவாயாத் தாரன், பெட்டி எடுத்து வையி...” என்று அவன் சிரிக்கிறான்.

“பாரேன், இந்த அவராதித்தனத்த!...” என்று நடிப்புத் திறமையைக் காட்டும் ருக்கு, “பின்ன என்ன பண்ண, உங்களைப் போல உள்ள மாப்பிளய கட்டி கட்டியா பவன், பண்டம்னு கேக்குறியளா எப்பிடி சம்பாதிக்கிறது?... இப்பிடி உருட்டிப் புரட்டினாத்தான்...” என்று ஒப்புக்கொள்கிறாள்.

“அடி சுந்தரி, சொகுசுக்காரி, என்னக் கட்டிக்கிறியா சொல்லு! நான் பவன் மாலையே போடுற...” என்று நேரடியாகச் சல்லாபம் தொடங்குகிறான் கணக்குப்பிள்ளை.

“கட்டுவே, மூஞ்சியப் பாரு?” என்று நொடிக்கிறாள் ருக்மணி.

இதற்குள் முத்தாச்சி பாய்ந்து ஒரு அதட்டல் போடுகிறாள்.

“என்னாடி, கட்ட குடுக்க வந்த புள்ளகிட்ட அவராதிப் பேச்சு? சோலியப் பாத்துட்டுப் போங்க!”

அப்போதுதான் விஜி அங்கு திண்ணை ஓரம் பாத்திரத்துடன் நிற்பதை முத்தாச்சி பார்க்கிறாள். “அட... விஜியா? வாம்மா? நீ என்னத்துக்கு வரணும்?” என்று பாத்திரத்தை வாங்கிக் கொள்கையில் விஜி ஒரு ரூபாய்த் தாளை நீட்டுகிறாள்.

“துட்டுக்கென்னம்மா அவுசரம்?... அடுப்பில வேவுது, சூடாக் கொண்டாந்து தாரே. நீ ஏம்மா இங்கிட்டெல்லாம் வந்து நிக்கணும்? அந்தப் பால்காரப் பயகிட்ட ஒரு சொல்லுச் சொல்லி அனுப்பினாக் கூடப் போதுமே?”

விஜி வீடு திரும்பியதும் வேலம்மாளிடம் கேட்கிறாள்.

“அதென்ன வேலம்மா, தொண்ணூத்தஞ்சு பைசா குரோசு தீப்பெட்டி?” வேலம்மா அவளுக்குக் காப்பியை இறுத்துச் சீனியும் பாலும் சேர்த்து ஆற்றி வைக்கிறாள்.

“ஆரு சொன்னது?”

“கணக்கப்பிள்ள கிட்ட பேசிச் சண்ட போட்டாங்க. ஏழு குரோசுக்குக் கொடுக்கும் சாமான் ஆறுக்குத்தான் வருதுன்னு. அதுக்கு அவன் சிரிச்சிட்டே ஒரு ரூவா குடுத்துப் பொட்டி வாங்க வாரேன்னா.”

“திருட்டுப் பொட்டி விப்பா!”

“எப்பிடி? சில்லு சாமானெல்லாம் கணக்குக்கே வரலன்னா.”

“இவனுவ குறச்சிக் குடுக்கிறா. இவங்களும் கூலியச் சரிக்கட்ட, ஒட்டின பொட்டில தண்ணியத் தெளிச்சி வச்சிடுவா, ராத்திரியிலியே. ஏழு குரோசு பத்துக் குரோசுனெல்லாம் எண்ணிச் சாத்தியப்படுமா? அதா கூடை வச்சிருக்கிறேன் பாரு. அதுல அளந்து போடுவா. இவங்க தண்ணி தெளிச்சி வச்சிருக்கிறதால கூடயில கொறவாத் தான் கொள்ளும்... இப்பிடித்தா. அவ இவாள ஏமாத்துனா இவா அவன ஏமாத்துறா. உங்கையா சொல்லுவாங்க. சம்பளத்த நூறு நூத்திருவதுன்னுதா குடுக்குறா. ஓவர்டைமுன்னு எழுபது எம்பது சம்பாரிக்க வழி செஞ்சுகிடறா. இது ஒரு ஏமாத்து. அதிக நேரம் வேலை வாங்கிக்கிறா, நியாயமான சம்பளம் இல்லாமப்பாரு - ஆரு கூடலிங்கமா வந்திருந்தா?”

“ஆமா. குட்டையா, கொஞ்சம் சிவப்பா இருந்தான். சின்ன வயசு...”

“அவந்தான். கலியாணங்கட்டி மூணு பிள்ளை இருக்கு...”

“ஐயோ? அப்ப அவனா அந்த ருக்குமணிய பார்த்து சரசம் பேசினா?”

“பேசுவான். ருக்குமணியா? அந்தப்புள்ள, பாவம் சமஞ்சி பத்து வருசம் ஆவுது. எத்தனை எடத்தில பாத்தாச்சி?... ஒண்ணும் சரிப்பட்டு வரல. அப்பா பாரிசவாயு வந்து படுத்துக் கெடக்கிறா...” பேசிக் கொண்டிருக்கையிலேயே முத்தாச்சி இட்டிலி கொண்டு வந்து விடுகிறாள்.

“வேலம்மா!” என்று குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே வந்து, இலை போட்டு மூடிய சட்டினியோடு இட்டிலி அடுக்கும், சாம்பார்த் தூக்கும் கொண்டு வைக்கிறாள்.

“ஒரு வார்த்த சொல்லி அனுப்பிச்சா நாங்கொண்டு வந்து வைக்கமாட்டேன்? அதுங்கிட்ட, பாவம். ஒரு சூதுவாது தெரியாத பொண்ணு பெரிய முதலாளி காரப் போட்டுட்டு வாரா. அங்க வாக்கப்பட்டது. இதுங்க பொறுக்கித் தின்னும், கண்டமானும் பேசும். எதுக்கு வரணும்? அதுங்களுக்கானும் ஒரு அச்சடக்கம் இருக்கா? கட்டக் கணக்கப் புள்ள கிட்ட இளிச்சிட்டுப் பேசுதுங்க. நா மொதல்ல திரும்பியே பாக்கல. பொறவுதாங் கவனிச்சேன். இதுங்க நாக்குக்குத் துரும்பு கெடச்சாப் போதும். மாப்பிள ஏன் வாரக்கணம். கூட்டிட்டுப் போவாம இங்க வந்திருக்குதுன்னு பேசுறாளுவ. தாய்வூடுன்னு வராதா?... இதுங்க கண்ணே நல்லதில்ல. அம்மாடி, பதனமாப் பாத்துக்க; வாரன்!...”

வாசலில் அப்பா வருவதைப் பார்த்துவிட்டு, தான் தொடர நினைத்ததைக் கத்திரித்துக்கொண்டு செல்கிறாள். முத்தாச்சியின் சாமர்த்தியமான ‘புழுக்குத்தல்’ அவளைக் கட்டிப்போடுகிறது. அப்பா உள்ளே சென்று தனது சட்டையைக் கழற்றி மாட்டிவிட்டுத் துண்டைப் போட்டுக் கொண்டு அறை பெருக்குகிறார். விஜி விரைந்து சென்று அவர் கையிலிருந்து வாருகலைப் பிடுங்குகிறாள். “இருக்கட்டுமேம்மா! நாஞ் செய்தா என்ன?”

“பரவாயில்லப்பா, நான் கூட்டினா என்ன?...”

“நீதான இப்பல்லாம் செய்யிற? நானே கூட்டிடறேன் இன்னிக்கு...” அவர் குப்பையைப் போட்டுவிட்டுக் குளிக்கச் செல்கிறார்.

அவர் குளித்துவிட்டு வருமுன் விஜி அறையை ஈரத்துணி கொண்டு துடைத்து, மண் பானையில் நல்ல நீரூற்றி வைக்கிறாள். முற்றத்து அடி குழாயைக் கொஞ்ச நாட்களுக்கு முன் தான் பழுது பார்த்திருக்கிறார்கள். எனவே இந்தக் கோடை ஒருவாறாகப் போகிறது.

அவர் பிழிந்த வேட்டி துண்டுடன் உள்ளே வரும் நேரத்தில் சுமதியைக் கண்டிக்கிறார். “காலங்காத்தால என்ன நாவல் அது, தூக்கி வச்சிட்டே? உன் துணியெல்லாம் நேத்துலேந்து சோப்புல முக்கி வாளில வச்சிருக்கே! காலம சுறுசுறுப்பா உடம்பு வணங்கணும்!”

“அப்பாக்குக் காப்பி பலகாரம் குடுத்திட்டு நீங்களும் சாப்பிடுங்க. இத நான் கடைக்கிப் போயிட்டு வந்திடறேன்...” என்று வேலம்மா படியிறங்கிச் செல்கிறாள்.

வாசலில் ரிக்‌ஷா நிற்கும் சத்தம் கேட்கிறது.

பஞ்சநதம் மாமா, ரிக்‌ஷா கொள்ளாமல் உட்கார்ந்திருக்கிறார். சந்தனப் பொட்டு அதில் சிறு குங்குமம், பின்னணியில் திருநீறு எல்லாமாக அவர் மெள்ள இறங்கி வருவதை விஜி, அறை சன்னல் வழியாகக் கண்ணுறுகிறாள்.

“அட... வாங்க! வாங்க மாமா! வாங்க!”

அப்பா வரவேற்கும்போது விஜி அறையிலிருந்து கூடத்துக்கு நழுவி விடுகிறாள்.

வாசற் பக்கத்துக் கதவு வழியாகவே அவரை வரவேற்று சண்முகம் நாற்காலியைக் காட்டி உபசரிக்கிறார்.

ஐயாம்மாவின் ஒன்றுவிட்ட சகோதரனாகும் உறவு இவர். மகமை பண்டாபீசில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், அவளுடைய கணவன் வீட்டாரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். இவருடைய மூத்த மகன் ஆஃப்செட் அச்சகம் வைத்திருக்கிறார். கடைசிக்காரன் இவள் கணவனுக்கு நெருங்கிய தோழன், தொழில் நுட்பம் படித்திருப்பவன், புதுநகரத்துத் தொழிற்பேட்டையில் அவன் தொழிலகம் ஒன்று நிறுவியிருப்பதாகத் தெரிந்து கொண்டிருக்கிறாள். அவனுக்குச் செல்வியைக் கொடுப்பதாக ஒரு பேச்சு இருக்கிறது.

“எப்ப வந்தீங்க மாமா? நீங்க வடக்க யாத்திரை போயிருந்ததாச் சொன்னாங்க?”

“வந்து பத்து நாளாச்சி, ஊர்த் திருவிழாவுக்கே வரணும்னு. பெறகு காச்மீரமெல்லாம் போகண்ம்னு ஒரு ஆசை வந்திடிச்சி... சிவராத்திரிக்கு முன்ன கிளம்பினம். சிவராத்திரிக்குப் பசுபதிநாதம்னு நேரப் போயிட்டோம். குளிருதான். ஆனால் ரொம்ப நல்லாயிருந்தது. எல்லாத் தரிசனமும் ஆச்சு. பாட்னா கயா... காசியில் வந்து தங்கினோம். என்ன வெயிலு அதுகுள்ள? பிறகு அலகாபாத் டில்லி, அரித்துவாரம்னு போனோம். பத்ரிநாத்தும் போயிட்டு டில்லிக்கு வந்தோம். கடோசில இனிம வரமோ என்னமோன்னு காச்மீருக்கும் டூரிஸ்டு கார் போகுதுன்னு போயிட்டு வந்தோம்... இப்பத்தான் சமாசாரம் எல்லாம் தெரிஞ்சிச்சு. வெங்கியப் பார்த்தேன்...”

விஜி கூடத்திலேயே நின்று கேட்கிறாள். அவருடைய குரலில் ஏதோ அசாதாரண முக்கியத்துவம் தொனிப்பது போல் படுகிறது.

“என்னமோ, ‘மாச்சஸ்ல தகராறு, மாரிசாமி பய கணக்கப் பிள்ளைய அடிச்சிட்டான். விவகாரமில்லாம ஏதோ நடந்திச்சி’ன்னான். விஜி இதுக்காக வருத்தப்பட்டுக் கோபிச்சிட்டுப் போயிட்டுதுன்னான்...”

“மாமா, விஜிக்கும் இந்த விவகாரத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லியே?” அப்பா துணுக்குற்றவராகப் பேசுகிறார்.

“பின்ன, ஏதோ கலாட்டா வந்து ஒரு நாள் பிள்ளங்க வராம தொழிற்சாலையை மூடிட்டான்னானே? விஜி யாரோ பையனச் சின்னப்பட்டிலேந்து ஃபாக்டரி வண்டியில கூட்டிட்டு வந்து ஃபாக்டரில சாமிக்கண்ணுகிட்ட சண்டை போட்டாளாம். பிள்ளைங்களுக்கு லஞ்ச் அவர் குடுக்கறதில்லையா? எட்டு மணி நேர வேலைதான் குடுக்கணும்னு சொன்னாளாம்...”

“மாமா, இந்த ஊருல, அப்படி விஜியோ, நானோ சொல்லி மாத்திடற பிரச்னை இல்ல இது. காலங்காத்தால பிள்ளைங்களைத் தூக்கத்திலேந்து எழுப்பி அள்ளிப் போட்டுட்டு ஃபாக்டரிக்குக் கொண்டு போற வழக்கத்தை மாத்தணும்னா அவங்க தாய் தகப்பனே அதை விரும்பல. பீஸ் வொர்க் மகத்துவமே இதுதான். நிறையக் குச்சியடுக்கினாத்தான் நிறையக் கூலி. இவங்களுக்கு டிமான்ட், அவங்களுக்குத் துட்டு. விஜி நியாயமாக் கோபப்பட்டுக் கேட்டிருக்கு. எல்லாம் கோரிக்கை வச்சு ஃபாக்டரியத் திறந்தா, ஆனா பிள்ளைங்களுடைய தாய் தகப்பனே நாளைக்கு ரெண்டு ரூபாய்க்கி குச்சியடுக்கணும்னு சொன்னா, கோரிக்கையாவது மண்ணாவது?”

“அதான், விஜி இப்படி மனத்தாபப்பட்டுட்டுப் போயிட்டா, நம்ம தொழிற்சாலைகளில், போனஸ், பண்டிகைக் காசு எல்லாம் கொடுக்கிறோம். பி.எஃப் புடிச்சிருக்கிறோம். கலியாணம் காதுகுத்துன்னு வந்தா தனியாகப் பணம் கொடுக்கிறோம்-ன்னு சுப்பையா பாரு, நேத்துரா வந்து உக்காந்து, மாமா நீங்கதா எடுத்துச் சொல்லணும், ஏதோ நடந்து போச்சுன்னு ரொம்ப வருத்தப்பட்டான். திருவிழாவுக்கு அவ வரலியாம். அவளும் புடிவாதமா இருந்தா, நானும் ஆத்திரத்தில் ரெண்டு சொல் சொல்லிருப்பேன்... இப்பிடிக் கோச்சிட்டுப் போவான்னு நினைக்கலன்னு பாவம், அழுதான். அவன் இப்பிடி அழுவான்னு, நான் நினைக்கல, சிறு வயசில ரொம்ப முரடா இருப்பான்.”

விஜி இன்னும் வெளியேதான் நிற்கிறாள். உணர்ச்சிகள் மோதிக்கொள்ளும் பரபரப்பு அவளை ஆட்கொள்கிறது.

“இதற்கு விட்டுக் கொடுக்காதே!” என்று அறிவு முன்னேற்பாடாக எச்சரிக்கிறது. அப்பா வெளியே வருகிறார். “விஜி இங்கதானிருக்கிறியா? உள்ளே வா!” என்றழைக்கிறார்.

விஜி உள்ளே செல்கிறாள். ஆனால், அப்பா உள்ளே வரவில்லை. இந்த மாமாவின் உறவுக்கு, இவளுடைய உறவு அந்த வீட்டில் பிணைக்கப்படுமுன் எந்தவிதமான முக்கியத்துவமும் கிடையாது. இவர் சென்னைக்கு வந்தால் அவர்கள் வீட்டில் தங்கமாட்டார். ஆனால் ஒரு மிட்டாய் பொட்டலத்துடன் வந்து பார்த்துவிட்டுப் போவார். திருமணச் சம்பந்தத்துக்கு முதல் தூதாக இவர் தாம் வந்தார். திருமண வைபவத்தில் கேலிகள் செய்தார். இவருடைய மகள் மனைவி எல்லோரும் உள்ளூற அவள் தங்கள் ‘அந்தஸ்து’ மதிப்புக்குக் கீழானவள் என்ற எண்ணம் உண்டு.

“உக்காரம்மா, விஜி!”

“பரவாயில்ல மாமா, நிக்கிறது சங்கிடமில்ல... நான் சின்னவதானே?”

“அதில்ல, உட்கார்ந்துதான் பேசணும்... நீ படிச்ச பொண்ணு. எங்களப் போல கிணத்துத்தவள இல்ல. உனக்கு நாலு பேரோடு பேசிப்பழகி விவரம் புரிஞ்சிக்கத் தெரியும். எதோ ஒண்ணுந்தெரியாததுங்க முரண்டிக்கிட்டுதுன்னா அட விட்டுத் தள்ளுன்னு போயிட்டிருக்கலாம். உன்னை அப்படி நினைக்கறதுக்கில்ல. நீ என் கிட்டச் சொல்லு உனக்கு என்ன மனத்தாபம்னு...” இது போன்று ஓர் தூதனுப்புவார்கள் என்று அவள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.

அவள் தலை குனிந்தபடியே, “எனக்கும் அவருக்கும் அந்த வீட்டுக்கும் ஒரு அம்சத்திலும் கூட ஒத்துவரல. இந்தக் கல்யாணத்துக்கு நான் உடன்பட்டதே நான் செய்த தப்பு...” என்று நிதானமாகத் தெரிவிக்கிறாள்.

அவருடைய மலர்ந்த முகபாவம் மாறி, தீவிரம் ஏறுகிறது. அவளை உற்றுப் பார்க்கிறார்.

“நீங்களேதானம்மா பாத்துப் பேசி கட்டிக்கிட்டீங்க? கலியாணம்ங்கறது இப்படி சட்டுனு முடிவு பண்ணுற சங்கதியா நாம நினைச்சே வழக்கமில்ல. ஆனா, நீங்க ரெண்டு பேரும் சின்னப்பிள்ளைங்க இல்ல. பார்த்துப் பேசி, ஒத்துத்தான் பண்ணிட்டீங்க. அத்த, இப்படி இடையில மாத்துறங்கறது பாக்கிறவங்க, கேக்குறவங்களுக்கு ரொம்பக் கொறவாப் படும்மா! கீழ்ச்சாதியில கட்டிக்கிறதும் வாணாம்னு விட்டுட்டுப் போறதும் வழக்கமாயிருக்கும். நாம அப்படியா? உனக்கென்ன குறை அங்கே? வீடு - வாசல், தனி ரூம், சமையலுக்கு, மேல் வேலை எல்லாத்துக்கும் ஆளு, பொறுப்புக்கு மாமியார், வண்டி, துணிமணி, நகை நட்டு, என்ன குறை?”

அவளுக்கு விரக்தியான சிரிப்புத்தான் மேலிடுகிறது.

ஒரு பெண்ணின் உலகை எவ்வளவு எளிதாகக் குறுக்கி விடுகிறார்கள்!

“இதெல்லாம்தான் உலகம்னு என் மனசு ஒப்பல மாமா!”

புருவங்களைச் சுருக்குகிறார் மாமா.

“என்னம்மா இது? நீ பேசறது புரியாம இருக்கு! ஒரு பொண்ணுக்கு இளமையான தொழில்காரனான புருசன், நினைச்சபடி இருக்க பணவசதி, நல்ல வீடு இதெல்லாம் பெரிசில்லன்னா, வேற என்னதா சொல்லுது உம் மனசு? அதிசயமால்ல இருக்கு?”

“நீங்க ரொம்ப மன்னிக்கணும் மாமா. முன்னமேயே நாங்க பேசிட்டது உண்மைதான். ஆனால் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக நடிச்ச நடிப்புண்ணு தெரியாம ஏமாந்திட்டேன்...”

அவருக்கு அடக்க இயலாமல் கோபம் வந்துவிடுகிறது.

“இத பாரம்மா, நமக்குதாம் பேசத் தெரியும்னு வாயறியாம வார்த்தய வுட்டராத. இப்ப என்ன ஏமாத்திட்டாங்க, என்ன நடந்து போச்சி? புருசன் பொஞ்சாதிக்குள்ள பேச்சுவார்த்த தகராறு வர்றதுதா, தடிக்கிறதுதா. ஆனால், பகல் சண்டை பகலோட போயிடும். இத்தப்போயி பெரிசு பண்ணிட்டு கேவலம் பண்ணுற? எனக்கு இது நல்லால்ல. கொஞ்சங்கூட நல்லால்ல, ஆமாம்!”

“மாமா, சும்மா இருந்த எங்கிட்ட நீங்கதா வந்து கேட்டீங்க, நான் சொன்னேன். நடந்து போனதை நான் சொப்பனம்னு நினைச்சி மறக்க முயற்சி செஞ்சிட்டிருக்கிறேன், ஏன் தொந்தரவு செய்யறீங்க?”

“இது நல்ல நாயம்மா! உன் சொந்த விசயம் இல்ல இது; குடும்பத்தின் மானம், கௌரதை சம்பந்தப்பட்ட விசயம். உங்க குடும்பம் மட்டுமில்ல, கௌரவப்பட்ட அந்தக் குடும்பம் சம்பந்தப்பட்டது. என்னமோ கோவிச்சிட்டு பொட்டியத் தூக்கிட்டு வந்திட்டதால் தீந்து போயிடாது, நினைச்சிக்க.”

“மாமா, என்ன மெரட்டுறீங்க? மானக் குறைவுக்கு நான் ஒண்ணும் பண்ணிடல. குடிச்சிட்டு வரதும், பெண்சாதியப் புழுபோல நினைச்சி நாலுபேரு முன்ன கை நீட்டி அடிக்கிறதும் சரின்னு பொறுத்துக்கிட்டு கிடக்க நான் அம்பது வருசத்துக்கு முந்தி பிறந்திருக்கல. ஐ ஹாவ் நோ ரிக்ரட்ஸ். என்னால் அங்கே போய் வாழுவதான பெயரில் சிறைவாசம் அனுபவிக்க முடியாது. எனக்கு வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருக்கு...”

சில கணங்கள் அவர் நாவடைத்துப் போகிறார்.

“என்ன துடுக்குத்தனம் உனக்கு! இந்தப் பேச்சுக்கு நீ ரொம்ப வருத்தப்படப் போறேம்மா! ரொம்ப வருத்தப்படப் போறே! லட்சக்கணக்கில் சொத்து வச்சி அந்தக் குடும்பத்தில் பொண்ணு கொடுக்க இன்னிக்கும் தயாராயிருக்கா...” என்று ஒரு குண்டை வெடிக்கிறார்.

“லட்சம் லட்சம்னு நீங்கல்லாம் சொல்லுறதைக் கேட்டு எனக்குச் சிரிப்புத்தான் வருது. இந்த ஊருல மாட்ச் வொர்க்ஸ்காரங்க கிட்ட சேரும் லட்சமெல்லாம், பிஞ்சுப் பிள்ளைகளின் எதிர்காலத்தை வறட்டி எடுக்கும் காசு. பெற்றவர்களின் வறுமையையும் அறியாமையையும் வச்சு முதலெடுக்கும் காசு. அந்த லட்சங்களில் எனக்கு ஒரு மேன்மையும் தெரியவில்லை!”

அவள் முகம் அசாதாரணமாகச் சிவக்கிறது.

அவர் மேல் வேட்டியை விசிறிப் போட்டு கொண்டு எழுந்திருக்கிறார்.

அப்பா அப்போது காபியை எடுத்துக் கொண்டு உள்ளே வருகிறார்.

“காப்பி குடிங்க மாமா!”

“ஒண்ணும் வேணாம்... ஒண்ணும் சாப்பிடறதுக்கில்ல. உன் பெண்ணை இப்படி ஒரு தறுதலையா வளத்திருப்பேன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல. அந்தம்மா சொன்னது அப்படியே சரியாயிருக்கு!”

“மாமா, இந்தக் காலத்துல அவங்களுக்கு அவங்க வாழ்க்கையைப் பத்தி முடிவெடுக்க தைரியமும் சுதந்திரமும் இருக்கு. இதுக்கு நீங்க எதுக்கு வருத்தப்படணும்?”

“என்னடா பேசுற நீ? என்ன சுதந்திரம் இது?” என்று பஞ்சநதம் மாமா அடித்தொண்டையில் இருந்து கத்துகிறார். “என் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சு அனுப்பினா, இந்தச் சிறுக்கி தூக்கி எறிஞ்சி பேசிட்டாளே. பொம்பிளப் பிள்ளையள வைக்கிறபடி வச்சி வளக்கணும்!”

“மாமா! நீங்க பெரியவர்னு வயசுக்கு மதிப்புக் கொடுக்கிறேன்! வீணாகப் பேச வேண்டாம்!” என்று விஜி கோபத்தை அடக்கிக் கொண்டு மொழிகிறாள். மாமா விர்ரென்று எழுந்து காத்திருந்த ரிக்‌ஷாவில் சென்றமருகிறார்.

“இந்த மாமா, அந்தக் குடும்பத்துக்கு இவ்வளவுக்கு வேண்டியவர்னு எனக்கு இப்பத்தான் அப்பா தெரியிது!”

“இவர் பெரிய பையன் அவங்க பிரஸ்ஸிலதான் முதல்ல வேலைக்கிருந்தான். ரெண்டாவது பையன் பேரில் மாட்ச் ஃபாக்டரி ஒண்ணு இருக்கே, அது அப்ப, 1969இல் தீப்பெட்டிக்கு பண்ட்ரோல் போடுற தீர்வை வேண்டாம்னு வச்சிருந்தா, அப்ப ஆரம்பிச்சாரு. அதுக்கு உதவி செஞ்சவங்க உங்க வீட்டுக்காரங்கதான். அப்ப வரியே கட்டாம இந்த ஊரில கறுப்புப் பணத்தை குவிச்சவங்க ஏராளம். அஞ்சாறு வருசம் அப்படி இருந்திச்சி. மறுபடியும் எழுபத்தஞ்சிலே திரும்பி பண்ட்ரோல் போடுறது கொண்டு வந்திட்டா... இந்த வரி ஏய்ப்புங்கறதுதான் ஒரு பெரிய கோளாறா, கறுப்புப் பணப் புழக்கத்தைக் கொண்டு வருது. கணக்கப்பிள்ளை, மானேசர், இவங்கல்லாம் திடீர் திடீர்னு புதுத் தொழில் செய்ய முதல் போடுறதும் பெரிய பெரிய வீடு கட்டுறதும் அதுனாலதா? சுற்று வட்டமெல்லாம் தொழிலுக்குச் சிறு பிள்ளைகளைப் பீராய்ஞ்சிட்டு வராங்க. வங்கியும் சிறு தொழில்னு மேல மேல கடன் கொடுத்து உதவி செய்யிது. முன்ன, இவ்வளவுக்கு இங்கே இந்தக் குழந்தைத் தொழிலாளிகள் கிடையாது. ‘ஸ்மால்ஸ்கேல் செக்டர்’ங்கறதுக்கு வங்கி உதவி கிடைக்கிதுன்னா, உடனே பெண்சாதி மேல இருக்கும் நகைய உருவிப்போட்டு, கடன் வாங்கி, தொழில் தொடங்கிடறான். அரசு அதிகாரிகளுக்கும் அடியிலிருந்து தலைவரைக்கும் லஞ்சம் கொடுக்கிறான். அதனால அவனுக்கும் பணம் லாபம் சம்பாதிப்பது ஒண்ணே குறியாகிப் போகுது. தொழில், பொருளாதார உற்பத்தி மேன்மைக்கும், அது மக்களுடைய வாழ்க்கை மேன்மைக்குமாக பெருகணும். அது இல்லையேம்மா?”

“சிறு தொழில் பெருக்கத்தில் நிறையத் தொழிலதிபர்கள்னு பெருகியிருக்கிறார்கள். ஆனால், ஒருபுறம் அகழ்ந்து தான் ஒருபுறம் மேடு, என்ற நிலை மாறவில்லை. சிறு குழந்தைகளை படிக்கவிடாமல் தூங்க விடாமல்தான் இந்தத் தொழில் வளரணும்ங்கற நிலையை எப்படி மாற்றலாம்?... ஆறு மணிநேரம் வேலை செய்யணும்னா, இவர்களுக்கு லாபம் வராது. அதிகமான ஆட்களை ஈடுபடுத்த வேண்டும். குச்சியடுக்குவதும் லேபில் ஒட்டுவதும் பெரியவங்க செய்வதனால் அதிக உற்பத்தி காண முடியாது...”

“ஓரளவுக்குப் பெரியவங்களை வச்சுத்தான்மா, குழந்தைகளை விடுவிக்க வேணும். சின்னப்பட்டி போல் ஊரிலேயிருக்கும் பிள்ளைகளைப் பெற்றோர் ஏன் அனுப்புறாங்க? அவங்களுக்கு அங்கே வருசம் முழுதும் பிழைப்பு இல்ல. அங்கே சின்னச் சின்ன அளவில் குடிசைத் தொழிலாக இதை ஊக்குவிக்கலாம். காட்டில் வேலையில்லாத நாட்களில் பெரியவங்க சும்மாத்தானிருக்கா. அவர்கள் குழந்தைகளை அனுப்பலேன்னா, கட்டுப்பாடாக இருந்தால், மாற இடமுண்டு. கூட்டுறவு முறையில் தனக்குத்தான் என்று குடும்பத்தினரே வேலை செய்து ஊதியம் காண தொழில் பெருக்குவதுதான் இதற்கு மாற்று... மற்றபடி ஒரு பயனுமில்லை...”

“சின்னப்பட்டியில் நாம அப்படி ஒரு முயற்சி செய்தால் என்னப்பா?” தந்தை அவளை இரங்கும் விழிகளுடன் நோக்குகிறார்.

‘குழந்தைபோல் பேசுகிறாயேம்மா, அவ்வளவு இலகுவில் அது நடைபெற, மற்றவர் விட்டு விடுவார்களா?’ என்று கேட்பதுபோல் இருக்கிறது.

“விஜி... நீ... உங்க வீட்டில என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. ஆனா... நீ சந்தோஷமாக இருக்கமுடியலன்னு புரிஞ்சிட்டிருக்கிறேன்... பொது வாழ்வைச் சொந்த வாழ்வோடு பிணைக்காதவன் அந்தரங்க சுத்தியோடு பொது வாழ்வில் ஈடுபட முடியாது. ஆனா... அதுக்காகச் சொந்த வாழ்வைப் புறக்கணிப்பது சரியா?”

அவர் கண்கள் மேலே படத்தில் நிலைக்கின்றன. துயரத்தை விழுங்கிக் கொள்கிறார்.

“உன்னம்மா, ஒருபோதும் என் செய்கைகளை எதிர்க்கவுமில்லை; மறுக்கவுமில்லை. என் வகையில் பத்தாயிரம் கொடுத்துத் தொழில் செய்ய அவர்கள் இழுத்தபோது, அவளிடம் கேட்காமலேயே மறுத்தேன். அதெல்லாம் தப்புத்தான்னு பின்னால நினைக்கிறேன். அவ என்ன நினைச்சிட்டிருக்கிறாள்னு அறியக்கூட முயற்சி செய்யல நான்... அவ... நான் தெரிஞ்சுக்கறதுக்கு இல்லாமலே, உலகத்தை விட்டே போயிட்டா...”

குரல் அழுகிறது.

விஜி எதுவும் பேசாமல் சிந்தனையில் மூழ்கிப் போகிறாள்.

அத்தியாயம் - 20

காத்தமுத்துவுக்குக் கண், முகம், தொண்டை, நெஞ்சு எல்லாம் ஒரே முட்டாக எரிச்சலெடுக்கிறது. மூக்கிலிருந்து நீர் வடிகிறது. தொண்டையில் எச்சில் இறங்கினால் விழுங்கும் போது வலியெடுக்கிறது.

மருந்துப்பொடியின் நெடியில் எதுவும் தெரியவில்லை.

மாலையில் ஒரு துண்டு பஞ்சும் சோப்புத்துண்டும் கொடுக்கிறார்கள்.

சிற்றப்பனுக்கும் ‘லோடிங்’கில் தான் வேலை.

வேலை முடிந்ததும் பஞ்சால் முகம் காது மூக்கெல்லாம் சுத்தம் செய்து கொண்டு சோப்புப் போட்டுக் குளித்துவிட வேண்டும்.

கிணற்றில் ஆழத்தில் இருக்கிறது நீர். என்ன தேய்த்தாலும் சோப்பில் நுரை காண முடியவில்லை.

“போதும்ல, அம்புட்டுத் தண்ணியையும் இரச்சிக் கொட்டிடாத!” என்று மற்றவர்கள் அதற்கு உச்சவரம்பு கட்டுகிறார்கள். குளித்துவிட்டு வீடு திரும்பும் போதும் மூக்கிலும் கண்களிலும் நீர் வடியும். எரிச்சலாக இருக்கிறது. அன்று சிற்றப்பனுக்கு மட்டுமில்லை, அங்கிருந்து அவர்களுடன் வேலை செய்யும் எல்லா ஆண் பிள்ளைகளுமே வீடு திரும்பியதும் ஒரு கிளாஸ் போதைத் தண்ணீர் போட முடுக்கு வீட்டுக்குப் போய்விடுவார்கள்.

சின்னம்மாவுக்கு ஒன்பது பிள்ளைகள். மூத்தமகளைக் கட்டி ஒரு குழந்தை இருக்கிறது. அவளும் அவள் புருசனும் கூட பயர் ஆபீசில்தான் வேலை செய்கிறார்கள். அடுத்து மூன்று பெண்களும் அங்கே சரம் பின்னுகிறார்கள். காத்தமுத்துவை விடச் சிறியவனான முருகன் பள்ளிக்கூடம் போகிறான். அவன் காலையில் குச்சி அடுக்குவான். அடுத்து இரண்டு பெண்கள், ராமக்காவும் சுப்பக்காவும் தீப்பெட்டி ஆபீசுக்குக் காலையில் ஆறுமணிக்குப் போவார்கள். கடைசிக் குழந்தை ஏணையில் இருக்கிறது. சின்னம்மா வேலைக்குப் போவதற்கில்லை. தண்ணீர் கொண்டு வரவேண்டும்; ஆக்க வேண்டும்.

டவுனானதால், அடுப்பெரிக்கும் விறகு முதல் விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும். ஒரு சைக்கிள் சுமை ஏழு, எட்டு என்று கொடுத்து வாங்குகிறார்கள். அது ஏழு நாளைக்குக் கூட வருவதில்லை. எல்லோருடைய சம்பாத்தியத்திலும் பிடித்தங்கள் உண்டு. அட்வான்ஸ், பி.எப். என்று போகும். அது தவிர வாரவட்டிக் கடன் வாங்கியிருக்கிறார்கள். அரிசியும், புளியும், மிளகாயும் கருப்பட்டியும் கொஞ்ச விலையாகவா விற்கிறது? மண்ணெண்ணெய் கெட்ட கேடு, நூறு - ஐம்பது பைசா.

முன்பு காத்தமுத்துவின் அப்பன் குடிசை இருந்த இடத்தில்தான் பிறகு ஊரிலிருந்து அங்கு பிழைக்க வந்த தம்பி குடிசை போட்டிருக்கிறான். மகள் ஒருத்திதான் வேறாகத் தனிக்குடும்பம் என்று பிரிந்திருக்கிறாள். ஏழுபத்து பரப்புள்ள வீட்டில், சட்டி பானை, முறம் என்று தட்டு முட்டுக்களுடன், எட்டுப் பிள்ளைகளுடன் அவர்கள் படுக்க முடியுமா? காத்தமுத்துவுக்கு உள்ளே சின்னம்மா சோறு போட்டாலும், படுக்க வெளியேதான் இடம்.

அவனுக்கு அன்று சுடு சோற்றையும் விழுங்க முடியவில்லை. உடம்பு மிதித்துப் போட்டாற்போல் நோகிறது. சாப்பிட்டதும் சாப்பிடாததுமாக வீட்டுக்கு ஓர் மூலையில் சுருண்டு கொள்கிறான்.

வேலை செய்யும் பிள்ளைகளைச் சாப்பிடும் போதே உறக்கமும் தழுவத் துடிக்கும். பெரியவர்களான சோமுவும் ராணியும் மட்டும் ஏதோ பேசிச் சிரிப்பார்கள். பிறகு அவர்களும் உறங்கி விடுவார்கள்.

மூலையில் சுருண்டு கொண்டவனுக்கு அன்று உறக்கம் வரவில்லை. ரத்தினத்தின் அதட்டலுக்குப் படியாமல் சம்பளத்தை வாங்கிக் கொண்டு புது நகரத்தில் இரண்டு நாட்கள் மாலை புரோட்டாக் கடையில் சாப்பிட்டுக் காசைக் கரைத்த பிறகு, ‘வார்னிஷிங்’ தொழிலகம் ஒன்றில் தாள் தட்டிப்போடும் வேலைக்குச் சேர்ந்தான்.

புதிய வேலை கவர்ச்சியாக இருந்தது. ஒரு நாளைக்கு ஒன்றேகால் ரூபாய். இட்லி தோசை சாப்பிட்டான். டீ குடித்தான். ஓ.டி. செய்தால் டீக்காசு தனியாக வந்தது. எதிரே ‘கேஸ்’ பெட்டி செய்யும் இடத்தில் ஒரு பெஞ்சி கிடந்தது. இரவுக்கு அங்கு படுத்துத் தூங்கினான். எல்லாம் அந்த நடராசு, வார்னிஷை எடுத்து லிட்டர் ஆறு ரூபாய் என்று விற்கும் வரையில் நீடித்தது. இரவு அவன் தான் அங்கேயே சுற்றுகிறான், விற்று விட்டான் என்று பழியைப் போட்டான் நடராசு. முதலாளி அவனை அடித்துப் பிணம் புரட்டி வெளியே அனுப்பி விட்டார்.

இப்போது இங்கே அகப்பட்டுக் கொண்டான். அடிபட்டதும் அவனால் இங்கேதான் வரமுடிந்தது. ஒருநாள் கருணைகாட்டி, மறுநாள் அதற்குப் பரிசாக ‘அட்வான்ஸ்’ பெற்று, பயராபீசில் வேலைக்குச் சேர்த்து விட்டான் சிற்றப்பன்.

“ஏலே. என்ன, உள்ளாற வந்து படுத்திட்ட? போல! பொம்பிளப் புள்ளியளுக்கு எடமில்லை, வெளியே போய்ப் படு!” என்று சின்னம்மா அவனை எழுப்பி வெளியே விரட்டுகிறாள்.

“ஒங்க சித்தப்பா வெளியே படுத்திருக்கா, இப்பென்ன மழயா, குளுரா? போ... போ...”

ஒரு கந்தலைப் பரப்பி முன் வாயிலில் அவனைப் போல் படுப்பவர்கள் இல்லாத முன் முற்றமே இல்லை.

தாளாத வெம்மை உடலில் அனலை வாரிக் கொட்டினாற் போலிருக்கிறது. அவனுக்குக் கிடைகொள்ளவில்லை; புரண்டு புரண்டு மண்ணைத் தழுவுகிறான். வாய் அம்மா, அம்மா என்று தன் நினைவின்றி அரற்றுகிறது.

அடுத்த வாயிலில் கிடக்கும் கிழவி, “ஏண்டா அம்மாவைக் கூப்பிடுற? அவ ஆம்பிளக்குப் படுத்திருப்பா!” என்று ஏசுகிறாள். தன்னுடைய தாயை இவ்வாறு அங்குள்ளவர்கள் ஏசுவதை அவன் கேட்கத்தான் கேட்கிறான். அவனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வரும். இப்போது எதுவுமே முடியவில்லை நா வறட்டுகிறது.

பாரவண்டி இழுக்கும் பிச்சாண்டி தினமும் குடித்துவிட்டு வாயில் வந்ததைப் பேசுவான். அவன் இப்போது நல்லவிதமாகப் பேசுவதாகத் தோன்றுகிறது. “அம்மா யாரு...! மண்ணு, தண்ணி, தீ இதுங்கதா அம்மா! மனுசன் கட்டயப் போட்டா அதுங்கதா கரச்சிக்கும். தண்ணி களுவும். தீ சுடும். இந்த ஊரே தீ தான். நெருப்பு. நெருப்புக்கு மத்தில வாழுறம். ஒரு குச்சி கிளிச்சி வைச்சா பொசுக்குனு ஊரே போயிடும்! இந்த ஊருல, எத்தினி நெருப்பு அக்கினி அக்கினியா மொடங்கிக் கெடக்கு?...”

இரவு முழுதும் நெருப்பிலே புரட்டி எடுத்தபின், விடியற்காலைத் தாய் இரக்கம் கொண்டு அச்சிறுவனின் கண்ணிதழ்களைக் குளிர்ச்சியுடன் வருடிக் கொடுக்கிறாள். உறங்கிப் போகிறான்.

“ஏண்டால, இன்னும் ஒறங்கிட்டிருக்க? பால்வண்டி மணியடிச்சிட்டுப் போறா, சூரியன் உதிச்சாசி!” சிற்றப்பனின் குரலுக்கு அவன் எழுந்திருக்கவில்லை. அவனால் கண்களைப் பிரிக்கமுடியவில்லை.

“ஏல காத்தமுத்து எந்திரி?...” காலால் நெட்டுகிறான்.

“ஊ...” என்று முனகிக் கொண்டு கண் திறக்காமலிருக்கிறான்.

“உள்ளாற வந்து படுத்தான். வெளியே போடான்னே கோவிச்சிட்டானா?” என்ற சின்னம்மா தட்டி எழுப்புகிறாள். “வாசப் பெருக்கணும்டா? வேலக்கிப் போக நேரமாச்சில்ல? எந்திரி?”

அவன் சிரமப்பட்டுக் கண்களை விழிக்கிறான். தொண்டை எழும்பவில்லை... முடியவில்லை என்று சாடை காட்டுகிறான்.

“அட...ப்பாவி? அடுவான்ஸ் வாங்கி ஒரு மாசந்தான் ஆகியிருக்கு? எந்திரி...ல, ஒனக்கு முட்டக்காரங்கடயில சரட்டு சராயி வாங்கித் தாரண்டா, எந்திரிச்சி வேலக்கி வா!”

சிற்றப்பனின் இந்த ‘ஊக்க போனசு’ பலனளிக்கவில்லை. சின்னம்மா தொட்டுப் பார்க்கிறாள்.

“காச்சலடிக்கிது. அவங்கிட்டக் காசு எதும் குடுத்தீங்களா? என்ன மேலும் வாங்கித் தின்னிருப்பானோ?...”

“அதொண்ணில்ல, விடிஞ்சதும் கோடிக் கடயிலேந்து ஒரு மாத்திரை வாங்கிக் குடுத்து சுடு தண்ணிகுடு. காச்ச விட்டுடும். மதியம் வேலக்கி வரட்டும்... மதியம் வேலக்கி வாடா, வராம இருந்திடாத! இப்ப வேல நெருக்கடி...!”

சிற்றப்பனும் மற்றவனும் வேலைக்குச் சென்று விடுகின்றனர். அவனைச் சின்னம்மா உள்ளே படுக்கச் சொல்கிறாள்.

வாசலில் சைக்கிள் மணிகள், கூச்சல்கள், கட்டைக் கணக்கப்பிள்ளை வரும்போது ஏற்படும் சந்தடிகள். முருகன் இரண்டாம் வகுப்புப் பாடம் படிக்கிறான். “குடும்பம்; எங்கள் குடும்பம். அப்பா, அம்மா, நான், தம்பி... அப்பா சாய்வு நாற்காலியில் சாய்ந்து பத்திரிகை படிக்கிறார். அம்மா நல்லவர். சமையலறையில் சமையல் செய்கிறார். அப்பா கடைக்குப் போய்க் காய்-கறி வாங்கி வருவார். பிறகு நீராடுவார்; சாப்பிட்டுவிட்டு அலுவலகம் செல்வார்...”

காத்தமுத்துவும் இப்படிப் பாடம் படித்திருக்கிறான். சிவகணபதி சார் மிக நல்லவர். ‘நமது பாரத தேசம்’ பாடத்தில் பத்துக்குப் பத்து வாங்கினான். வீட்டுக்கு வந்து அவனுடைய அம்மாளிடம் அவனைத் தீப்பெட்டி ஆபீசுக்கு அனுப்ப வேண்டாம் என்று கெஞ்சினார். ஆனால், அப்போது அவனுக்கும் மோட்டாரில் செல்ல ஆசையாக இருந்தது.

“ஏ முருவா? என்னடா பாடம் படிக்க ஒக்காந்திட்ட? பொழுதனிக்கும் குடும்பம், குடும்பப்பாடம்! கட்ட குச்சி கொண்டாந்திருக்காப் பாரு! பள்ளிக்கொடம் போகுமுன்ன ஒரு கட்ட அடுக்கி வையி!”

“அலுவா வாங்கித் தரணு!”

“தரண்டா. அலுவாக்காரன் வரட்டும்!”

சின்னம்மா ஒரு கிளாசில் சூடாகத் தேநீரும் மாத்திரையும் கொண்டு வந்து தருகிறாள். காத்தமுத்து அதை விழுங்கிவிட்டுப் படுத்துக் கொள்கிறான். சிறிது நேரத்தில் அவன் மீண்டும் தூங்கிப் போகிறான்.

தூக்கத்தில் யாரோ வந்து, குளிர்ச்சியான கைகளால் தொட்டு, பெரிய பஞ்சுத் துணியினால் காச்சலைத் துடைத்து விடுகிறார்கள். அவனுக்கு ஆற்றிலே குளித்த சுகம் உண்டாகிறது.

“இப்ப எப்பிடி இருக்கு காத்தமுத்து?”

ஆமாம். அரசாணிபோல் விஜியம்மா...

“எனக்கு நல்லாயிடிச்சக்கா! என்ன மட்றாசிக்குக் கூட்டிப் போறியளா அக்கா! அங்க எல்லாரும் குளுமையா இருக்குமாமுல்ல? இது நெருப்பு ஊருதா... பிச்சாண்டி மாமா குடிச்சாக்கூட நல்லாப் பேசுறாரு...”

“ஏ, என்னடா, பெனாத்திட்டு இன்னும் உருண்டு பெரண்டிருக்க? எந்திரி! அதா வெயிலு மேவீட்டுத் திண்ணெய்க்கு ஏறிடிச்சி!”

அவன் கப்பென்று விழிக்கிறான்.

விஜியக்கா இல்லை. சின்னம்மா, பிரிந்த தலையும், வண்ணம் புரியாத அழுக்குச் சீலையும் ரவிக்கையுமாக...

“எந்திரிச்சி, கொஞ்சம் போல சோறு தின்னிட்டுக் கிளம்பிப் போ; கணக்கப்பிள்ள கெடந்து கத்திட்டிருப்பா! வேல நெருக்கடில்ல? இப்ப வேல செஞ்சாத்தா துட்டு...”

அவன் எழுந்து உட்கார்ந்து கழுத்துப்பக்க வியர்வையைத் துடைத்துக் கொள்கிறான். வெளியே வந்து, பின் பக்கம் செல்கிறான், பாசி ஆடை போர்த்த கசத்து நீர். “எந்திரிச்சிட்டியா?” என்று அவனைக் கேட்பது போலிருக்கிறது. குப்பை மேட்டில் நின்றபடி, அந்தப் பாழ்க் கசத்தினுள், இரண்டு பெரிய வங்குகள் இருப்பதைப் பார்க்கிறான். மண்சரிவு, குப்பைச் சரிவு எல்லாம் உள்ளே இறங்கிவிட முடியும் என்று ஆசை காட்டுகின்றன. அந்தப் பிடவுக்குள் புறாக்குஞ்சு அல்லது கிளிக்குஞ்சுகள் இருக்கும்... மழுமழுவென்று புறாக்குஞ்சு... கறி அதிகம் காணும் குஞ்சு...

ஆனால் இன்று துணிவு இல்லை. முன்பு ராமசாமியின் அண்ணன் ஆடுமேய்க்கப் போனபோது, இப்படித்தான் கிணற்றுப் பிடவில் புறாக் குஞ்சிருக்கும் என்று கையைவிட நாகம் தீண்டிவிட்டது. செத்துப் போனான்.

கசத்தில் இறங்கத் துணிவின்றி, அவன் திரும்பி வருகிறான். சின்னம்மா வைக்கும் நீர்ச் சோற்றை விழுங்க முடியவில்லை. இன்னொரு டீயோ, காபியோ குடித்தால் தேவலை என்று தோன்றுகிறது.

“எனக்கு முழுங்க முடியல சின்னாச்சி!”

“கண்ட நரவல்லியும் எச்சித் துப்பியிருப்பே!”

அவனால் பதில் சொல்ல முடியவில்லை. வெளியே வருகிறான். தொழிற்சாலைக்கு அரைமணிக்கூறு நடந்து செல்லவேண்டும். அங்கு போய், பவுடர் சலிக்க வேண்டும். அவனுக்குச் சூடாக டீ, காப்பி, தொண்டைக்கு இதமாக வேண்டும் போலிருக்கிறது.

காலில் கருணையைக் கட்டிக் கொண்டு ஒரு தாத்தா பாரவண்டி இழுத்துச் செல்கிறார். தட்டி மறைவுக்குள் வெயிலுக்குப் பாதுகாப்பாக இருந்து கொண்டு மேல்பெட்டி அடிப்பெட்டி பண்ணி போடுகிறார்கள்.

அவன் கால் போனபடி நடக்கிறான். கட்டறுத்துக் கொண்டு நடக்கிறான். டிக்கடை ஒன்றிலிருந்து அவனைப்போல் ஒரு பையன் குஜராத்திக்காரருக்கு ரொட்டியும் சப்ஜியும் கொண்டு செல்கிறான்.

வெங்காயம், மசாலா மணம், வருகல், முறுகல் மணங்கள் வந்து மூச்சோடு குழம்பும் சாப்பாட்டு வேளை. தொண்டை வலித்தாலும் சாப்பிட வேண்டுமென்று வயிறு கூவுகிறது.

ஒரு ஓட்டல். அதன் சந்து வாயிலில் தொட்டியில் இலைகள் விழுந்திருக்கின்றன. அங்கே நாய்களும் பன்றிகளும் காத்திருக்கின்றன. அவனைப் போல் ஒரு பையன், துடை துணியும் வாழை மட்டையும், நீர் வாளியுமாகப் போகிறான்.

சிறிது நேரம் தொய்ந்த கால்களுடன் நின்ற பிறகு காத்தமுத்து துணிவுடன் உள்ளே செல்கிறான்.

கல்லாவில் சிவப்பாக மினுமினுவென்று கழுத்தில் இழைச் சங்கிலியும் குங்குமப் பொட்டுமாக முதலாளி அமர்ந்திருக்கிறார். ரேடியோ சிலோன் பாடுகிறது. ஒரு சந்தனக் குறுக்கு நெற்றிக்காரர் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டு வெளியே வருகிறார். வாழை மட்டையால் மேசையை வழித்து அழுக்குத் துணியால் துடைக்கும் கரங்களைப் பார்த்துக் கொண்டு நிற்கும் காத்தமுத்து எச்சிலை விழுங்கிக் கொண்டு மீண்டும் முதலாளியைப் பார்க்கிறான். மேலே சுவரில் ஐயப்பன் பட்டைக்குள் குந்திக் கொண்டு கருணையுடன் அபயகரம் காட்டுகிறார்.

குச்சியடுக்கிய, வார்னிஷுக்குத் தாள் தட்டிய, பவுடர் சலித்த கைகளுக்கு இந்தப் புதிய வேலை கவர்ச்சியாக இருக்கிறது.

“மொதலாளி...”

குரல் பிசிறடிக்கிறது. “மொதலாளி!”

முதலாளி அவனைப் பார்க்கிறார். “பசியாயிருக்கு மொதலாளி! எதினாச்சும் வேலை குடுங்க மொதலாளி!”

ஏற இறங்க அவனைப் பார்க்கிறார் அவர்.

“நம்பீசன்! நம்பீசன்!” என்று உள்ளே பார்த்துக் குரல் கொடுக்கிறார்.

தலைமைப் பணியாளர், வெற்று உடம்பில் வேர்வை வடிய வருகிறார்.

“இந்தப் பயலுக்கு ஏதேனும் கழுவுற வேலை கொடுத்துச் சோறு போடு, பசிங்கிறான்!”

காத்தமுத்து உள்ளே செல்கிறான்.

ஞாயிற்றுக்கிழமை மாரிசாமியைக் கண்டதும் சண்முகத்துக்குக் காத்தமுத்துவின் நினைவு வருகிறது.

“அவம்மா வந்து அழுதிச்சி. பயராபீசு வேணாம், அவன வேற எதிலானும் சேத்து புடுங்கன்னு அப்பிடி அழுதிச்சி. போயிப் பய இருந்தாக் கூட்டியா” என்று அனுப்புகிறார்.

அவன் விசாரித்துவிட்டு வருகிறான்.

“அந்தப் பய ஓடிட்டானாம் அண்ணாச்சி! அடுவான்ஸ் அம்பது ரூபா வாங்கிருக்காவளாம். ஒரு மாசங்கூட முழுசா வேல செய்யலேன்னு சித்தப்பன் திட்டுறான்!”

“எங்க ஓடிப் போயிருப்பான்? பொய் சொல்றாங்களா?” என்று விஜி கேட்கிறாள்.

“எங்க ஓடிப் போவா! இப்பிடித்தான் மாறிட்டே இருப்பா. இங்கேயே வேற தாவில இருப்பான். இந்த ஊரு முச்சூடும் இப்பிடிப் பையங்கள எல்லாத் தொழிலிலும் பார்க்கலாம். வெளியூர்க்காரன் வந்துபோற ஓட்டல் பெருத்துப்போச்சி. அங்க இவனுவளுக்கு கிராக்கி. நாப்பதுக்கு மேல சம்பளம் குடுக்க மாட்டா. ஓ.டி.ம்பா. துட்டு ஆசையில ராத்திரி முழிச்சாலும் சின்னப் பயலுவதானே? சேந்தாப்பல ரெண்டு மூணு நா வரமாட்டாங்க; மறுபடி வந்தா வேலையிருக்காது. இன்னொரு பக்கம் போவா. இதே கதைதான்; பட்டினின்னு சாகமாட்டா; பிச்சையும் எடுக்கமாட்டா. அதான இந்த ஊரு முதலாளிய பெருமையடிச்சிக்கிறா!” என்று வெறுப்பைக் கொட்டுகிறார் அப்பா.

அத்தியாயம் - 21

சிற்றப்பா சங்கரலிங்கத்துடன் ராமுவும் கணேசனும் மாம்பலம் நிலையத்திலேயே அவளை எதிர் கொண்டழைக்கின்றனர்.

வீட்டில் சுகந்தி தன்னை அழைத்துச் செல்லவில்லை என்ற கோபத்துடன் மூலையில் முகத்தைத் தொங்கப் போட்டிருக்கிறாள்.

“வாம்மா! விஜி!” என்று வரவேற்கும் குரலுடன் “போடி! விஜியக்கா வந்தாச்சி!...” என்று சொர்ணாச் சித்தி அவளை இழுத்து வருகிறாள்.

“என்னம்மா விஜி? மாப்பிள்ளையக் கூட்டிட்டு வராம வந்திருக்கிற?” என்று ராசுச் சிற்றப்பா கேட்கிறார். கடைப் பையன்கள் வேலையை மறந்து சிரிப்பைச் சிந்தி வரவேற்கின்றனர். அருகில் வந்து நிற்கும் ஜயதேவியும் சந்திரனும் அவள் கவனத்தை ஈர்க்கின்றனர். சந்திரனைத் தூக்கிக் கொள்கிறாள்.

“நேத்திலேந்து விஜியக்கா வருது வருதுன்னு ஜபம் பண்ணிட்டிருக்கிறா! தூங்கி முளிச்சாத்தா வரும்னு சொன்னே.”

“ஜயதேவி ஸ்கூலுக்கு ஒழுங்காப் போவுதா?”

“அதெல்லாம் கேக்காதே! வாசலப் பாத்தே உக்காந்திட்டு இன்னும் அழுவுது. இவங்களச் சமாளிக்கவே முடியல! மூணு டீச்சர் டியூசன் மாறியாச்சி! லீவு விட்டிச்சி, நீ இருந்தா கூட்டிட்டுப் போவே. இங்க கடயில் இப்பதா நெருக்கடி. அவுக யாருக்கும் வரதுக்கில்ல. இந்த வாலுகளைக் கூட்டிட்டு என்னால தனியாகப் போகறதுக்கும் இல்ல. இந்த லதா பெயில் இந்த வருசம், நாம சொன்னா படிக்குதுங்களா...” என்று சித்தி பொரிந்து கொட்டுகிறாள். விஜிக்கு இந்தச் சூழல் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

“நீங்க ஒங்க புராணத்த மொள்ளமா அவுத்துவிடுங்க. அத்தப் பேசவிடாம பேசிட்டே போனா? ஏம்மா, மாப்பிள வீட்டில எல்லாரும் சுகமா? சின்னப்பட்டிக்குப் போயிருந்தியா?” என்று ராசுச் சிற்றப்பா விசாரிக்கிறார்.

“எல்லாரும் சுகம். சின்னப்பட்டிக்கு இங்க வரதுக்கு முன்னதா போயிருந்தேன். ஐயாம்மா உடம்பு முடியாமதா இருக்கு. பட்டணம் வாங்கன்னேன். வரமாட்டேன்னுட்டாங்க. இந்தத் தண்ணி ஒத்துக்காதாம்!”

செய்தியறிந்து அடுத்த தெரு அத்தை விரைந்து வருகிறாள்.

“மாமியா வீட்டுக்காரங்க நல்லபடியா இருக்கிறாங்களா? மாப்பிள அடிக்கடி பம்பாய் டில்லின்னு போவார்னு கலியாணத்தின்போது சொல்லிட்டாங்க. ஒரு நடை இங்க அவருகூட நீயும் கூட்டிட்டு வரக்கூடாது?...” விஜி ஒரு புன்னகையுடன் நிற்கிறாள்.

“உன் நாத்தூனுக்குக் கலியாணம் பாத்திட்டிருக்கா; பஞ்சநதம் மாமா பையன் குமாருக்குத்தான் குடுக்கப்போறா. ஒரு லட்சம் கொடுக்கறான்னு பத்துநா முன்ன செம்பகராமன் வந்து சொன்னான்...” இந்த அத்தைக்கு யாரேனும் ஊரிலிருந்து வந்த வண்ணம் இருப்பார்கள்.

“அப்படியா?” என்று செய்தியைக் கேட்டுக் கொள்கிறாள். மலர்ச்சியும் மகிழ்ச்சியும் இவள் மயிலேஷைச் சார்ந்து, அவன் மனைவியாக இருக்கிறாள் என்ற நிலைக்கே கரை புரளுகின்றன. இரண்டு சின்னம்மாக்களும் இதற்குள் அவள் மீது ஓரப்பார்வை பதிந்து இரகசியம் பேசிக் கொள்கின்றனர். அவர்களுடைய ஊகம் அவள் முகத்தில் சிவப்பேறச் செய்கிறது. ஒரு வேகத்துடன் மறுக்கிறாள்.

“அதெல்லாமில்ல... நீங்க எதுவும் கற்பனை பண்ணிடாதீங்க!”

“அதது காலத்தில உண்டாகணுமில்ல?” என்று சிரிக்கிறாள் சொர்ணம்.

“கலியாணத்துக்குப் பிறகு கொஞ்சங்கூட பூசுனாப்பல மினுமினுப்பா எல்லாம் மாறவேயில்லை. கறுத்துப்போயிட்டா!”

“ரயிலில வந்த வாட்டம்.”

குழந்தைகளுடன் கடற்கரைக்குச் செல்வதும் பூங்காவுக்குச் செல்வதுமாக நாலைந்து நாட்கள் ஓடியது தெரியவில்லை. பிறகு பள்ளி திறந்து விடுகிறார்கள். அவர்களுக்கான புதிய புத்தகங்கள், பாடங்கள் என்றும் பொழுது விரைவாகச் செல்கிறது. இந்தச் சுமுகமான நிலையை அவள் தன் உண்மையான மனநிலையை வெளியிட்டு உடைத்து அதனாலேற்படும் எதிரொலிகளை ஏற்கத் துணிவு இல்லாதவளாக இருக்கிறாள். ஊடே, ஐயாம்மா அவளைக் கவலை கொண்டு தூண்டித் துருவியதையும் நினைக்காமலில்லை.

“இப்ப எதுக்குடீ நீ மட்டும் பட்டணம் போற? உம் புருசன் ஊருல தான இருக்கிறான்?” என்று கேட்டாள்.

“ஐயாம்மா, என் இஷ்டப்படி கொஞ்ச நாள் மாறுதலா இருக்கக்கூடாதா?”

“அடீ உன்னப்பன் என்னை ஊர்ப்பக்கம் மிதிக்கவிடாதபடி செஞ்சான். நீ என்னைப் பெரியபட்டி சாமி கோயிலுக்குக் கூடப் போக வாணாம்னு செஞ்சிட்டே...” என்றாள். அவள் அதிர்ந்து போனாள்.

“கண்டதும் நினச்சிட்டுப் பேசாதீங்க ஐயாம்மா.” இப்ப என்ன ஆயிடிச்சி?”

இன்னும் என்னடீ ஆவணும்? புருசன் வீட்டிலேந்து சண்ட போட்டுக்கிட்டு ஓடி வந்திட்டியாம்! உன் மாமியா வந்து வருத்தப்பட்டு அழுதாளாம். பஞ்சநதம் மாமாவை அனுப்பிச்சாங்களாம்... நீ தூக்கி எறிஞ்சி நான் வரப்போறதில்லன்னு திருப்பி அனுப்பினியாம். எனக்கு ஒண்ணுந் தெரியாதுன்னு நினைச்சுக்காத! விளையாட்டாடீ இது?”

அவளால் அந்த முதிய தலைமுறைக்காரியைத் தன் நியாயத்தைக் கூறிச் சமாதானப்படுத்த முடியவில்லை.

“விஜி, கலியாணமான பொண்ணு காரணமில்லாம ரெண்டு நாள் பொறந்த வீட்டில தங்கினாக்கூட, ஊர் உலகம் எதுக்கு வந்திருக்குன்னுதா விசாரிக்கும்... ஏண்டி இப்பிடி இருக்கிற? அவன் சின்னப்புள்ள. எங்கேன்னு பலாப்பழத்தில் வந்து ஈ குந்துறாப்பல வருவாங்க. படிச்ச உனக்கு ஏண்டி இதெல்லாம் தெரியல?”

அவளுடைய நயம், பயம் எதையும் விஜியினால் ஏற்க முடியவில்லை. அவளுக்கு எப்படிப் பார்த்தாலும் மயிலேசனின் மீது உள்ள வெறுப்பு மாறவில்லை. தான் வெறுப்புக் கொள்வது சரியல்ல என்று மனசின் ஓரத்தில் உறுத்தினாலும், தான் அந்த நேர நெகிழ்ச்சிக்கு இடம் கொடுத்துக் காதல் என்று மயங்கியதைத் தவறாகவே கருதுகிறாள். புத்தகத்தில், கதைகளில் மிகைப்படுத்தப்படும் கவர்ச்சிகளைத் தான் எப்படி ஒப்புக் கொண்டாள் என்பதே அவளுக்குப் புரியவில்லை.

மாரியம்மன் கோவில் விழாவில் நாவில் ஊசிபோட்டுக் கொள்ளும் பக்திப் பரவசக்காரர்களையும், ‘கயிறு குத்து’ நேர்ச்சைக்காரர்களையும் கண்டே இது எப்படி வலிக்காமல் சாத்தியமாகிறது என்று அறிவு பூர்வமாக ஆராய்வாள். அத்தகையவள், திருமணம் என்பது சமுதாயக் கட்டுக்கோப்புக்காக, ஆணும் பெண்ணும் அன்பு கொண்டு, இயற்கையான எழுச்சிகளை ஒருவர்பால் ஒருவர் என்று திருப்பிக் கொண்டு, ஒத்து வாழ்வதற்கானதோர் பிணைப்பு ஒப்பந்தம் என்றும், ஒருவரை ஒருவர் மீறாமலிருப்பதற்காகச் சில விதிகள் நிலையுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவள் கருதியிருக்கிறாள். இதில் பெண் முக்காலும் பொருளாதார சுதந்திரமில்லாமல் இருப்பதனால், எந்நாளும் ஆணைச் சார்ந்த வாழவேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தியிருக்கின்றனர். ஒரு பெண் எந்த நிலையிலும் தனித்து வாழ முடியாது என்று அச்சமுண்டாக்கும் வகையில் சமுதாயத்தில் அவள் கணவனைச் சார்ந்தே கௌரவிக்கப்படுகிறாள்.

இந்தக் கட்டுக்களை எடுத்துவிட்டால், பொருளாதார சுதந்தரம், அறிவு பூர்வமான மனவளர்ச்சி ஆகிய நிலைகளில் ஆணைக் காட்டிலும் தாழ்ந்தவள் என்றில்லாமலாகிவிட்டால், திருமண பந்தங்களின் குறிக்கோள் சுயநலத்திலிருந்து மாறிப்போகும்.

விஜி தனது நிலையைச் சின்னம்மா, அத்தை யாரும் புரிந்து கொள்வார்கள் என்று நம்பவில்லை. அவளுக்கு மிகவும் நெருங்கிய, சமூகவியல் பேராசிரியை ஒருவர் இருக்கிறார். அவள் பெண்கள் கல்லூரியில் படித்து முடித்த பின் அந்த அம்மாள் ஓய்வுபெற்றார். திருமணமாகாமலே காலம் கழிப்பவர்; அவளிடம் அவருக்கு மிகுந்த அன்பும் மதிப்பும் உண்டு.

ஒரு நாள் பிற்பகல் அவரைத் தேடிச் செல்கிறாள், விஜி.

மணியை அடித்து, வாயிற்கதவு திறந்ததும் கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் தெரிவித்து அன்போடு வரவேற்கிறார், அந்த அம்மை. ஆஸ்த்மா நோவு, சென்ற இரண்டு மூன்றாண்டுகளில் அவரை உருப்புரியாமல் மாற்றியிருக்கிறது. வெண்பட்டுப்போல் மினுமினுக்கும் முகமும், கழுத்தும், தொய்ந்து சுருக்கங்கள் விழுந்து முதுமைக் கோலம் காட்டுகிறது.

“...இந்த ஊரில தானிருக்கிறியா விஜி? ஹவ் கைன்ட் அஃப் யூ! கொஞ்சங்கூட மறக்காம பாக்க வந்திருக்கே!...” என்று அவள் கையுறையாகக் கொண்டு சென்ற பன்னீர் திராட்சையை எடுத்து ருசிக்கிறாள். “இதுதான் சாப்பிடுவேன்னு தெரிஞ்சிட்டுக் கொண்டாந்திருக்கிற! ஹவ் நைஸ் அஃப் யூ!”

கண்களில் நீர் கசிய விஜியை அணைத்து மகிழ்ச்சியைத் தெரிவிக்கையில் துணிவும் தன்னம்பிக்கையும் அறிவொளியுமாக நிமிர்ந்து நின்ற சாந்திதேவிதானா இவர் என்று கூட விஜிக்குத் தோன்றுகிறது.

“விஜி டியர்! உனக்கு மாரியேஜ் ஆயிடிச்சில? யாரோ சொன்னாங்க ஆனா பத்திரிகை எதுவும் வந்ததா நினைப்பில்ல. இந்த ஆஸ்த்மா தொந்தரவு, பிறகு ஹார்ட் டைலட் ஆயிருக்குங்கிறா; நான் கோடைக்கு மலைப்பக்கமெல்லாம் கூடப் போறதில்ல. ஒரு வேளை கடிதாசி அனுப்பி மிஸ் ஆயிட்டுதோன்னு நினைச்சேன்...”

விஜிக்கு உள்ளூர நாணமாக இருக்கிறது.

“ஆமாம் மேடம். எங்க ஊரிலதான் கல்யாணமாச்சு. உங்களுக்கு இன்விடேஷன் அனுப்புறது எப்படியோ தவறியிருக்கு... அதான் நேராகவே வந்திருக்கிறேன்...” என்று புன்னகை செய்து சமாளிக்கிறாள். பிறகு கல்லூரி வாழ்வின் பல நினைவுகளில் உரையாடல் சரளமாகத் தொடருகிறது. பணி செய்பவன் தேநீரும் பிஸ்கோத்தும் எடுத்து வந்து வைக்கிறாள்...

“எடுத்துக்கம்மா...”

தேநீரைச் சுவைத்துக் கொண்டு, அந்தரங்கத்தின் படிகளில் இறங்கி வருகிறாள். “ம், எப்படியிருக்கேம்மா, துரு துருன்னிருப்பே, பெரிய பிஸினஸ்காரங்க வீட்டில, ஹவ் இஸ் லைஃப்...”

விஜி தலைகுனிந்திருக்கிறாள். சரேலென்று அவள் முகபாவம் இருண்டு போகிறது. “நாட் வெரி குட் மேடம்...”

ஆதரவான கை அவள் முதுகில் படிகிறது. “ஏம்மா? உன் மேல் அன்பாத்தானே இருக்கிறார்?...”

“மேடம், உங்ககிட்ட எல்லாம் சொல்லி ஒரு யோசனை கேக்கத்தான் வந்திருக்கிறேன்...”

“சொல்லம்மா, என்ன பிராப்ளம்?...”

விஜி நிறுத்தி நிறுத்தி, மயிலேசனைச் சந்தித்தது, பேசியது, தாய்வழி குடும்ப உறவு, திருமணம், தந்தை, எல்லா விவரங்களையும் கூறுகிறாள். கணவனின் உண்மையான தன்மை, வீட்டாரின் நினைப்பு, குழந்தைத் தொழிலாளிகளினால் ஏற்பட்ட பாதிப்புகள், கணவன் வீட்டாருடன் தன்னால் ஒத்துப்போக இயலாத நிலை. அதனால் ஏற்படும் சிக்கல்கள் எல்லாவற்றையும் விவரிக்கிறாள்.

“மேடம், தொழில் செய்து பணம் குவித்திடுபவர் வீடுகளில் பெண்கள் தமக்கென்று ஓர் உலகை நிறுவிக்கொண்டு அதில் மிதக்கிறார்கள். எல்லாப் பெண்களும் உயர் கல்வி கற்றிருக்கின்றனர். ஆனால் வாழ்க்கையில் அதன் பாதிப்பே இல்லை. தோட்டம் போடுதல், நாய் வளர்த்தல், மலர் சிங்காரிப்பு, அழகு பராமரிப்பு என்று பொது வாழ்க்கையிலும் சமுதாய உணர்வே இல்லாமல் கண்களை மூடிக்கொண்டு உண்மைகளைப் புறக்கணிக்கிறார்கள். என் மாமியார் சாமியார்களுக்குக் குருபூசை செய்வதும், ஆயிரம் ஆயிரமாகப் பூசை அறை அலங்கரிக்கச் செலவிடுவதும் புண்ணியம் என்று கருதுகிறாள். உயிருடன் சிறுபிள்ளைகளைத் தொழிலகங்களில் சாறு பிழிவதைப் பற்றி நாம் நினைக்கத் தேவையில்லை என்று கருதுகிறாள். பெண்கள் பொதுவாக மென்மையும் ஈரமும் உள்ளவர்கள் என்பதை நினைவில்கொண்டு ‘சமுதாயம் - நம்மைச் சுற்றியவர்’ என்ற கண்ணோட்டமே தவறு என்ற அளவில் அவளை உருவாக்குவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. பெரிய இடத்துப் பெண்கள் தாமாகவே ஓர் வசதி படைத்த சிறையைச் சிருஷ்டி செய்து கொண்டிருக்கின்றனர்.

நம்மைச் சுற்றி, கிராமங்களில் எவ்வளவு அறியாமை வேரோடி இருக்கிறதென்று தெரிந்து கொள்வதைக் கூட மறுத்து வாழ்கிறார்கள். வசதி உள்ளவர்கள் இப்படி என்றால் மற்றவர்கள், வாழ்க்கையின் தேவைப் போராட்டங்களிலேயே முழு வாழ்வையும் கொடுத்து விடுகிறார்கள். இன்றைக்கு, எங்க ஊர்ப்பக்கத்தில் டவுனைப் பொறுத்த வரையிலும் எல்லாப் பெண்களும் பொருளாதார சுதந்தரம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் என்ன? சாப்பிடணும், துணி உடுத்தணும், சினிமாவுக்குப் போகணும். இதற்குமேல் சீட்டுப் பிடித்து சம்பாதித்து, நகை, ஏனம் வாங்கணும், கல்யாணம் கட்டணும், மறுபடியும் ஆண் எப்படி இருந்தாலும் அவனுக்கடங்கிச் சகிக்கணும்... இது ஒரு வருக்கம். இதுக்கும் கீழே, வாழ்க்கையே அன்றாடத் தேவைகளுக்கான போராட்டம்தான். இங்கே மனிதனுக்கு உணர்ச்சிக் கட்டுப்பாடு, பொறுப்புணர்வு எதுவும் இருக்க நியாயமேயில்லை. வருசாவருசம் குழந்தைப்பேறு குழந்தை பேச, நடக்கத் தெரிந்த நாளிலிருந்து குடும்பப் பொறுப்பைச் சுமக்கிறது. ஆறு வயசுக்குக் குச்சியடுக்கப் போகிறது. மூன்று வயசுக் குழந்தை அம்மா பசை தடவிக் கொடுத்தால் பெட்டி ஒட்டிப் போடுகிறது! நீங்க பார்த்தால் ஆச்சரியப்படுவீங்க மேடம்! ஒரு வயசிலேயே குழந்தைக்குத் துட்டின் மகிமை புரியும். இதனால் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்புவதனால் ஒரு லாபமும் இல்லை என்றே பெற்றோர் முடிவு செய்கிறார்கள்.

எங்க கிராமத்துப் பள்ளிக்கூடத்தில், வாத்தியார் இந்தக் கொடுமையை நான் போனால் சொல்லி அழுகிறார். தொழிலகத்தில், பிள்ளைகளுக்கு வேலை நேரம் விடிகாலம் அஞ்சுமணிக்குத் துவங்குகிறது. இதற்காகத் தொலைவிலிருக்கும் குழந்தைகளை அழைத்துச் செல்ல ஃபாக்டரி வண்டி மூன்றரை மூன்றே முக்காலுக்கே வந்துவிடுகிறது. பிள்ளைகளை எழுப்பும் ஆளுக்கு இப்ப அறுபது ரூபாய் சம்பளம். நாளெல்லாம் பன்னிரண்டு, பதினான்கு மணி நேர வேலை செய்தாலும் அந்த அளவு கூலி கிடைப்பது சிரமமாக இருக்கிறது. எங்கள் தொழிற்சாலையில் ‘லஞ்ச் அவர்’ என்ற கட்டாயம் கூடக் கிடையாது. குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் சென்று சாப்பிடலாமாம். ஆனால் இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யவில்லை என்றால் கணக்கப்பிள்ளை கையிலுள்ள சக்கையால் அடிக்கிறான்; பயமுறுத்துகிறான். வீட்டில் பெற்றோர் ஏன் கூலி குறைந்தது என்று நெருக்குகிறார்கள். இந்தக் கொடுமைகளைப் பார்த்துக் கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. கூட்டுக் குஞ்சுக்கு, பறவை இனத்தில் கூடத் தாயும் தகப்பனும் இரை கொடுத்துப் பேணுகிறது. மனித இனத்தில்... ஏனிப்படி?

ஒருநாள் குழந்தைகளுடன் நான் ஃபாக்டரிக்குள் போனேன் என்பதற்காக என்னை அவர் கை நீட்டி அடிக்கத் துணிந்தார். என்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமுன், தனது முன்னேற்றக் கருத்துக்களையும் மாணவர் இயக்கத்தில் தான் பங்கு கொண்டிருந்ததையும் சொன்னார். இப்போது நான் இந்தக் குழந்தைகளுக்காக இவர்கள் முறைகளை எதிர்க்கிறேன் என்று வந்ததும், ‘யூ ப்ளடி, கம்யூனிஸ்ட்!’ என்று ஏசுகிறார்.

மேடம், நான் அன்னிக்கு நினைத்தேன். நான் வெறும் பெண்ணில்லன்னு. விஜி என்ற பெண்ணை, தனிப்பட்ட முறையில் அவள் உணர்ச்சிகள் வெறும் உடல் வேட்கையினால் தவறான வழிகாட்டிவிட்டன. அப்போது அவரைத் தீரத் தெளியப் புரிந்து கொள்ளும் நிதானம் இல்லாதவளாகி விட்டதற்காக வெட்கப்படுகிறேன். வெளித்தோற்றத்துக்கும், உள்நடப்புக்களுக்கும் எத்தனை பயங்கர வேறுபாடு! என் தனித்தன்மையை இப்போது நான் கொன்று கொள்ளக் கூடாதுன்னு நினைக்கிறேன். என்னைச் சுற்றியுள்ள உறவினர் யாரும் என்னைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

ஒரு பெண்ணுக்குக் கல்யாணமானால்தான் மதிப்பு; அதுவும் அவள் தன் தனித்தன்மையை அந்தக் குடும்ப ஆதிக்கத்தில் பலி கொடுக்க வேணும். அப்படி இல்லையானால் இந்தச் சமுதாயம் அவளைக் குழியில் தள்ளிவிட அஞ்சுவதில்லை. ஒரு பெண் மலையில் வளர்ந்தாலும் உரலில் நசுங்க வேண்டுமாம்! அவளுக்கு ஃபாஷன், நகை, சேலை, ப்யூட்டிகேர், பொன்சாய் என்று விரிந்த உலகையும் உயர்ந்த பட்சமாகக் குறுக்கிடறாங்க...!”

உணர்ச்சி வசப்பட்டுப் பொல பொலக்கும் அவள் சொற்களைக் கேட்கையில் அந்தப் பேராசிரியை, தனது மாணவியாகவே இன்னும் வந்திருக்கும் அவள் கையை எடுத்து தனது இரு கரங்களுக்குள்ளும் வைத்து மெல்ல அழுத்துவதன் வாயிலாகத் தன் மனக்கசிவை வெளியாக்குகிறாள்.

“விஜி... விஜி. ஐ ஆம் ப்ரௌட். இன்றைக்குப் படிச்சுப் பட்டம் வாங்கிட்டுப் போறவங்களும், வேலை பார்க்கிற பெண்களும், பல விஷயங்களில் அறியாமை மிகுந்த பாட்டிகளைக் காட்டிலும் மோசமாகவேதான் இருக்கிறார்கள். அப்படி இல்லாதவங்களையும், ஆண் நிர்ப்பந்தம் செய்கிறான்... சரிதானேம்மா?”

“தொழில் பெருகியிருக்கு. எல்லாருக்கும் பட்டினி இல்லாம வேலை இருக்கிறதாகச் சொல்றாங்க. ஆனால், தொழில் பெருக்கம் எல்லா மக்களுடைய வாழ்க்கை நிலைகளிலும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க வேண்டாமா? பொதுவாக, முக்கியத் தேவையான குடிதண்ணீருக்குத் தட்டுப்பாடான நிலை. அடித்தள மக்களிடையே இன்னிக்குப் பெற்றோர் குழந்தைகள் பாசம் கூட ஏனில்லை? உயிர் வாழ அத்தியாவசியமான தேவைகளைப் பெறுவதே கஷ்டமாக இருக்கிறது. இந்தத் தொழில்கள், பணலாபம் கருதியே செய்யப்படுவதால், கள்ளத்தனம், கைக்கூலி, சூது, எல்லா வாணிபங்களுக்கும் இடம் கொடுக்கின்றன. இன்னிக்குத் தொழிற்சாலைக்குத் தொழில் செய்யப்போகும் இளம்பெண் தனது நல்ல பெயருக்குக் களங்கம் வரக்கூடாதே என்று அஞ்ச வேண்டியிருக்கு...”

“விஜி, உன் சொந்த வாழ்க்கையை இப்படி ஒரு பொதுப் பிரச்னையோடு ஐக்கியப்படுத்துவது... அசாதாரணமானது. உனக்குச் சிறு வயது. உன் வயசில், நான் இதைக் காட்டிலும் துடிப்போடு இருந்தேன். அந்தக் காலத்தில் கல்யாணம் குடும்பம் என்று என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள மாட்டேன்னு, மாரியஸ் ப்ரொபஸல் வந்த போது துச்சமாகத் தள்ளினேன். இப்ப நிலைமை வேறு... நான் உனக்கு நளாயினி கதையைச் சொல்ல வரதாக நினைக்காதே. நீ ஏமாந்து போயிட்டேன்னு சொல்றே. ஆல்ரைட் உங்க வீட்டு மனிதர்களையே மெல்லக் கருத்துமாற்றம் கொள்ளச் செய்ய நீ ஏன் முயற்சி செய்யக்கூடாதும்மா? எப்படியிருந்தாலும், உனக்கு வெறுப்பு விழக்கூடாது, ஏனென்றால் மனிதத் தன்மை சாசுவதமானது. அவரும் வயசு இளையவர், அதனால் உன் சொந்த வாழ்வில் வெறுப்பை வளர்த்துக் கொண்டால் பொது வாழ்வில் எதுவும் நன்மை காண முடியாது விஜி!”

“அதற்காக, அவர்களும் என் நியாயமான உணர்ச்சிகளை மதிக்க வேண்டாமா மேடம்!”

“உண்மைதான் விஜி. இது காலம் காலமாக அழுந்திப் போன மனப்பான்மை. பொருளாதார நெருக்கடிகள் சமுதாயத்தில் திடுதிப்பென்று சில நடைமுறைகளைத் தலைகீழாக்கியிருக்கின்றன. ஆனால், மனப்பான்மைகள் மாறிவிடவில்லை. அதை மாற்றாமல் இருந்தாலே லாபம் என்று இன்னும் பலரும் நினைக்கிறாங்க. அதனால் ஒரே நாளில் எல்லாம் மாறி விடணும்னு நீ எதிர்பார்க்க முடியாது.”

விஜிக்கு அவள் கூற்றின் உட்பொருள் புரியவில்லை.

“நீங்க என்ன செய்யலாம்னு சொல்லுங்கம்மா, ப்ளீஸ்...”

“முதலில் உன் சொந்த வாழ்க்கையையும் இந்தத் தொழில் பிரச்னையையும் சேர்த்து முடிச்சுப் போட்டதை விடுவி. இந்தக் குழந்தைத் தொழிலாளர் பிரச்னை குறித்து நாலு வருஷம் முன்ன அப்ப சமுதாய நல அமைச்சராக டில்லியில் இருந்த அம்மா தீர்வு காண முயற்சி செய்தாங்க. இங்கே தென்னாட்டுக்கு வந்து, உங்க ஊர்ப்பக்கமெல்லாமும் போனாங்க. லண்டனில் நான் அவங்க மாணவியாக இருந்தேன். அந்தக் காலத்தில், ‘ஒன்றும் செய்ய முடியாது சாந்தா, இது முழுக்கப் பொருளாதாரப் பிரச்னை. அடிப்படைத் தேவைகள் இல்லாத வறுமை நிலையை மாற்றாத வரையிலும் எதுவும் செய்ய முடியாது’ என்று நான் கேட்டபோது ஒப்புக் கொண்டார்.

ஏன் இங்கே ‘அர்பன் ஸ்லம்’மில் என்ன நடக்குது? தேவைகளின் பசி பயங்கரமாயிட்டுது. இந்தப் பசிகளுக்கு முன்ன, தாய்மை அன்பு, நீதி நெறி எதுவுமே இல்லைன்னு ஆயிட்டுது. பணம் ஒண்ணே குறின்னு எல்லாம் ஓடுறாங்க. அதனால்தான் சொல்றேன், நீ ஒருத்தி உனது சொந்த வாழ்க்கையை வெறுப்புக் கண் கொண்டு உதறுவதால் இந்த சமுதாயப் பிரச்னையைத் தீர்த்துவிட முடியாது! நினைச்சுப் பார் விஜி.”

விஜி மருட்சியுடன் நோக்குகிறாள்.

எல்லோரும் அவள் நிலையையே குறை கூறுகின்றனர். பஞ்சநதம் மாமா கோபித்துக் கொண்டு போனார். அவரிடம் தீர்மானமாக அங்கு வந்து வாழ்வதற்கில்லை என்றாள். இப்போது, அவள் பெரிதும் மதிக்கும் பேராசிரியை...

தான் நிற்கும் பூமியே சரிவதுபோல் விஜிக்குப் பிரமை உண்டாகியது.

“திரும்பவும் சொல்கிறேன், விஜி. யூ ஆர் யங்க, குடும்பம் என்பது மிகவும் பழமையான ஏற்பாடு என்றாலும், ஒரு சமுதாயத்தின் நிர்வாகத்தை அது உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. அதில் வரும் மாற்றமும் இயல்பாகவே மெல்ல வரவேண்டும். இந்த அமைப்பை இருபாலரும் கட்டிக்காக்கத் தான் வேண்டும். கல்யாணம் ஒருவகையில் சூதாட்டம்போல் நமது நாட்டில் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து அமைகிறது என்றாலும், இரண்டு பேரும் பிரிவதில் நாட்டம் கொள்ளக் கூடாது.

தனியாக வாழ உனக்குத் துணிவிருக்கலாம். ஆனால் இன்றைய நிலை அதற்குச் சாதகமாக இல்லை. இதை உடைத்துவிட்டு இன்னொரு குடும்ப அமைப்புக்கு வணங்குவதற்கும் நீ தயாராக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதனால் என் அறிவுரை இதுதான். நீ போராடு. ஆனால் மணப்பந்தத்தை முறித்துக் கொண்டு வெளிவரப் போதிய காரணமில்லை என்று நினைக்கிறேன். நீ திருமணமே செய்து கொள்ளாமலிருந்தால் நான் பொது வாழ்வைப் பிணைத்துக் கொள்ளாதே என்றோ, திருமணம் செய்து கொள் என்றோ வற்புறுத்தப் போவதில்லை. ஆனாலும் அமைதியாக யோசனை செய். திடீர் முடிவு எடுக்காதே!”

“மேடம், குடும்பத்தில் என் நிலை மாற்றமடையாத வரையில் நான் எப்படிச் சமுதாய அளவில் என் சக்தியை ஈடுபடுத்த முடியும்? ஒவ்வொரு சிறு விஷயத்துக்கும் மோதிக் கொண்டு கழிப்பதில் என்ன லாபம்?”

“ஐ அக்ரி. ஆனால் வெளியில் வந்தால் மட்டும் எப்படிச் சாதிப்பாய்? வெளியே வந்தால் அவருக்கு இன்னொருவர் பெண்ணைக் கொடுப்பார். அண்மைக் காலங்களில் தொழில் செய்பவர்கள் நஷ்டம் காண்பதில்லை. ஏனெனில் வங்கிக் கடன் கிடைக்கிறது; லாபம் காட்டி யாரும் வரி கட்டுவதில்லை; அதிகாரிகள் உடந்தையாகின்றனர். அரசியல்வாதி இதை வைத்துப் பிழைக்கிறான். நீ சொல்லும் குழந்தைத் தொழிலாளிகளிலிருந்து வரதட்சணை வரை எல்லாப் பிரச்னைகளும் இன்று கறுப்புப் பணம், கள்ளச்சந்தை என்ற ஊட்டத்தில் வலிவடைந்து வருகிறது. நீ ஒருத்தி சாந்த வாழ்வைத் தியாகம் செய்வதனால் அது தீரப் போவதில்லை...”

விஜி அவரிடம் அறிவுரை நாடி வந்தபோது, சற்றே தான் கலங்கியிருந்தாள். தெளிவு காண வழி சொல்லாமல் நன்றாகக் கலக்கி விட்டுவிட்டார் பேராசிரியை.

அத்தியாயம் - 22

சொந்த வாழ்வைத் தியாகம் செய்வதா?

சொந்த வாழ்வென்பது முள் நிறைந்ததாக இருக்கையில் அதை விட்டுவிடுவது தியாகமா?

உன் சொந்த வாழ்வையும் இந்த வெளிப் பிரச்னையையும் இணைத்துக் கொள்ளாதே என்றார்.

இணைக்காமல் எப்படி வெவ்வாறாகப் பார்க்கமுடியும்?

உலக வரலாறுகள், சமுதாயப் போராட்டங்கள், தொழில் வளர்ச்சிகள் தோற்றுவிக்கும் வாழ்க்கை மாற்றங்கள், பண்பாட்டு மாற்றங்கள் என்றெல்லாம் படித்தும் சிந்திக்கவும் தெரிந்து கொண்டவள், சொந்த வாழ்வு வேறு என்று கூட்டுக்குள் சுருங்கிக் கொண்டு அவள் சிந்தையைப் பாதிக்கும் பிரச்னைகளைச் சம்பந்தமில்லை என்று புறக்கணிக்கலாமா?

மயிலேசனை அவள் மணந்துகொள்ள விழைந்தது கூட அவன் வெளித் தோற்ற கவர்ச்சிக்காகவோ, பொருளுக்காகவோ, உல்லாச வாழ்க்கைக்காகவோ அல்ல. அவன் இவள் கருத்துக்களை, முற்போக்கான தன்மைகளைப் புரிந்து கொண்டவனாகப் பேசினான்.

“எனக்கு ‘இன்டிபென்டன்ட் வ்யூஸ்’ உள்ள பெண் தான் வேண்டுமென்று தேடிட்டிருந்தேன். என்னுடைய அதிர்ஷ்டம் அவளை இங்கே காண்கிறேன்... விஜி... நான் இப்படி அழைக்கலாமா?...” என்று கேட்ட அந்தக் குரலின் மென்மையும் பண்பும் இன்னமும் அவள் நெஞ்சத்துடிப்பில் எதிரொலிக்கிறது. அத்தனையும் பொய்யாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றவில்லையே! பெண்மையை மதித்து சம உரிமை கொடுக்கும் பண்பாளென்று அவள் நினைத்திருந்தால், அவன் குடிப்பதைக் கூட மாற்றிவிடலாம் என்று தெம்பு கொண்டிருப்பாள். ஆனால் அவள் அவனிடம் பணத் திமிர் படைத்த ஆணவக்காரனைத்தான் காண்கிறாள்.

தொழில்கள் சமுதாய ஏற்றத் தாழ்வுகளைச் சமமாக்கக் கூடிய வகையில் பள்ளத்தை நிமிர்த்தி வளம் கூட்டவில்லை எனின், அந்தத் தொழில் வண்மை எங்கே செல்கிறதென்று சிந்திக்க அவளுக்கு உரிமை உண்டு.

அப்படிச் சிந்திக்க உரிமை தராததோர் மணவாழ்வு அவளை அடிமையாகக் கருதுகிறது என்பதில் ஐயமில்லை.

மணவாழ்வு என்பது, கணவனின் உடலாசைத் தேவையை நிறைவேற்றுவது என்று மட்டும் அவள் கருதவில்லை.

விஜி தீரத் தெளியச் சிந்தனை செய்கிறாள்.

இந்தப் பெரிய தொழிற் பிரச்னை, தனது வாழ்வுடன் சம்பந்தப்பட்டிருப்பதாலேயே சக்தி வாய்ந்ததாக ஆகிறது என்று தோன்றுகிறது.

விஜி, ‘குழந்தைத் தொழிலாளர்’ என்ற தலைப்பில் நீண்டதோர் கடிதத்தை வரைந்து, புகழ் பெற்றதோர் ஆங்கில நாளிதழுக்கு அனுப்பி வைக்கிறாள். அடுத்த சில நாட்களில் அவளை அழைத்து, அந்த நாளிதழ் ஆசிரியரிடம் இருந்து ஓர் கடிதம் வருகிறது.

வீட்டாருக்கு, விஜி வந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் அவள் கணவனிடமிருந்தோ வீட்டாரிடமிருந்தோ கடிதம் ஏதும் வரவில்லையே என்ற சந்தேகம் இல்லாமலில்லை. இவர்களும் நகை, புடைவை, குளிரலமாரி என்றெல்லாம் விசாரிக்காமலில்லை. பத்திரிகை அலுவலகத்திலிருந்து ‘டைப்’ செய்த முகவரிக் கடிதம் வந்ததும் சித்திதான் அதை அவளிடம் கொடுக்கிறாள்.

“நாலு நாளா வரிஞ்சி வரிஞ்சி எளுதிட்டிருந்தே டைப் அடிச்சிட்டு வந்தே. அங்கேந்தும் கடிதாசி மாப்பிள உடனே போட்டுட்டாப் பாரு, வரச்சொல்லி!” என்று கேலி செய்கிறாள்.

சங்கடத்தைச் சிரிப்பால் மறைத்துக் கொண்டு அவள் பஸ் ஏறி அந்த நாளிதழ் அலுவலகத்துக்குச் செல்கிறாள்.

“வரும் ஆண்டு, குழந்தைகள் ஆண்டு. இந்த விவரங்கள் உதவியாக இருக்கும். ஆனால் நீங்கள் இதைப் படங்களுடன் கட்டுரையாக எழுதித் தந்தால் வெளியிடுவோம்” என்று தெரிவிக்கிறார், தலை நரைத்த பொறூப்பாசிரியர்.

விஜிக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

அண்ணாசாலை அஞ்சல் அலுவலகத்தில் இறங்கி அங்கேயே தந்தைக்கு ஒரு கடிதம் எழுதிப் போடுகிறாள்.

ஒரு வாரம் பொறுப்பது மிகுந்த தவிப்பாக இருக்கிறது.

“தொழிற்சாலைக்குள் புகுந்து படம் எடுப்பது இலகுவாக இல்லை என்றாலும் மூன்று படங்கள் எப்படியோ சமாளித்து அனுப்பி இருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

தொழிற்சாலை எதென்று தெரியவில்லை. வாயிலில் குழந்தைகள் கையில் சாப்பாட்டுத் தூக்குடனும் சிட்டைகளுடன் நிற்கும் படம் ஒன்று. மற்றொன்று குச்சியடுக்கும் சிறு குழந்தைகளின் வரிசை; இன்னொன்று, மருந்துப் பொடி சலிக்கும் பையன், ஃபயர் வொர்க்ஸ் போலிருக்கிறது.

உடனே தயாராக வைத்திருக்கும் கட்டுரையுடன் படங்களைக் கொண்டுபோய்க் கொடுக்கிறாள்.

‘சின்னச் சின்ன விரல்கள் இயக்கும் தொழிலகங்கள்!’ என்ற தலைப்பில், அந்த ஆங்கில நாளிதழின் ஞாயிறுப் பதிப்பில் அது வெளியாகி இருக்கிறது. இவர்கள் வீட்டில் ஆங்கில நாளிதழ் வாடிக்கை கிடையாது. எனினும் விஜி வந்த நாளிலிருந்து ஆங்கில நாளிதழ் போடச் சொல்லி இருக்கிறாள்.

அந்தக் கட்டுரையைப் பார்க்கையில் விஜியின் மகிழ்ச்சிப் பூரிப்புக்கு எல்லையே தெரியவில்லை.

“சின்னம்மா! பாத்தீங்களா? தீப்பெட்டி ஆபீசுப் பிள்ளைங்களைப் பத்தி வந்திருக்கு!” என்று படங்களைக் காட்டுகிறாள்.

“அட...? ஆமாம்?...”

“இது... யார் எழுதினது தெரியுமா உங்களுக்கு?”

“யாரு? அப்பாவா?...”

ராசுச் சித்தப்பா பரபரப்புடன் வந்து பார்க்கிறார்.

“அட... நீ தானாம்மா? நீதானா எழுதியிருக்கியா? அட சபாசு! பாரல? விஜியக்கா இங்கிலிசு பேப்பரில எழுதியிருக்கா! ஏம்மா? நீ சொல்லவேயில்லையே...?” என்று பூரித்துப் போகிறார். எதிர்வீட்டு வீரராகவன் எல்.ஐ.சி. அலுவலகர். சிற்றப்பா அவரிடம் கடைக்குச் செல்கையில் சைகிளை மிதித்த வண்ணம், “பார்த்தீங்களா? நம்ம விஜி இன்னிக்குப் பேப்பரில எழுதியிருக்கு!” என்று பெருமை பொங்க விளம்பரம் செய்து கொண்டு போகிறார். “விஜி... எம்புட்டுப் படிச்சிருக்கு! சும்மாவா பெரிய வீட்டிலேந்து மாப்பிள வந்து கட்டியிருக்கா?” என்று அத்தையின் மாமியாரான ஆச்சி முதல் அதிசயப்படுகிறார்கள்.

“ஹலோ, விஜியா? உன் ஆர்ட்டிகள், வொண்டர் ஃபுல்!” என்று பாராட்டுகிறான் பக்கத்து வீட்டுக் கல்லூரி விரிவுரையாளனான சுந்தரவரதன். இன்னொரு பகுதிக் குடித்தனக்காரன் மணவாளன் அஞ்சல் அலுவலகக்காரன் - யூனியன் ஈடுபாடுள்ளவன்.

“ஒரு நாளைக்குப் பத்துமணி நேரமா வேலை வாங்குறாங்க? முதலாளிகள் அக்கிரமம்! யூ ஹேவ் பிராட் அவுட் எ ப்ளாக் ஹோம் டு லைம் லைட்!” என்று புகழ்ந்துரைக்கிறான். தேசிகாச்சாரி ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்.

“விஜி நீ எழுதியிருக்கிறேன்னு இப்பதா உன் சித்தப்பா சொன்னார். உன் இங்கிலீஷ் நடை பிரமாதம் போ, என்னால் நம்ப முடியல. ஆமாம்... உங்க வீட்டுக்காரங்க கூட, எதோ மாட்ச் ஃபாக்டரி பிஸினஸ்னு சொன்ன நினைப்பு... அப்படீன்னா நீயே எழுதுவியோ?” என்று கழுகுக் கண்களால் பார்க்கிறார்.

“ஏன் சார் எழுதக் கூடாது, யாரானாலும் நியாயம் நியாயம்தானே?” என்று அவள் சிரிக்கிறாள்.

“அப்ப உன்னை ரொம்பப் பாராட்டணும்.. நீ ஜர்னலிசம் கோர்ஸ் எதானும் பண்ணறியாம்மா?”

“அதெல்லாம் இல்ல சார்...! உங்க கமன்ட்ஸுக்கு ரொம்ப நன்றி...” விஜி அந்தப் பத்திரிகைத்தாளை அவர்களிடமிருந்தெல்லாமும் வாங்கிக் கவனமாக நான்கு பிரதிகள் கத்தரித்து வைத்துக் கொள்கிறாள். ஒன்றை எடுத்துக் கொண்டு பேராசிரியை வீட்டுக்குச் செல்கிறாள்.

பேராசிரியை கண்ணாடியைப் போட்டுக் கொண்டு முழுதும் படித்து முடிக்கும்வரை, அறையில் உள்ள அலமாரிப் புத்தகங்கள், ஜப்பானிய ஓவியம், தொலைக்காட்சி செட் என்று ஆராய்ந்து பொழுதைத் தள்ளுகிறாள்.

சாந்திதேவி கண்ணாடியைக் கழற்றும்போது ஆவல் துடிக்க அவள் முகத்தைப் பார்க்கிறாள்.

“வெல்... நீ எழுதியதை அப்படியே போட்டிருக்காங்களா, எடிட் பண்ணி, மாத்திருக்காங்களா?...”

விஜியின் ஆவல் அப்படியே விழுந்து உயிரை விடுகிறது. அவளால் உடனே எந்த மறுமொழியையும் கூறமுடியவில்லை.

“இல்ல, இவங்களுக்கு நான் இரண்டு மூன்று கட்டுரை எழுதியிருக்கிறேன். கடிதமும் எழுதியிருக்கிறேன். ரொம்பச் சுருக்கி, சிதைத்துத்தான் போட்டாங்க. அஃப்கோர்ஸ், உனக்கு உங்கப்பா, ஹஸ்பென்ட் வீட்டு பாக்கிங் இருக்கில்ல?”

‘சீ!’ என்று தோன்றுகிறது, விஜி அடக்கிக் கொள்கிறாள். அவளும் சமாளித்துக் கொண்டு புன்னகை செய்கிறாள்.

“...ஸோ, யூ வில் ஷைன் ஆஸ் எ ஜர்னலிஸ்ட்!” விஜிக்குக் கத்த வேண்டும் போலிருக்கிறது.

ஜர்னலிஸ்ட்! நூறு விஷயம் பார்த்துவிட்டுக் கூலிக்கு மாரடிப்பதுபோல் வெள்ளைத் தாளில் கறுப்பாக வாந்தியெடுத்துவிட்டு உடனே மறந்து போகும் தொழில்! “எனக்கு ஜர்னலிஸ்ட் ஆகும் தொழிலில் ஆசையில்லை. ஒரு வகையில் இந்த பப்ளிஸிட்டி ஆசையே நமது நாட்டில் சாபக்கேடாகி விட்டது! எங்க ஊர்ப்பக்கம் ஐந்தாறு வருடம் முன்பு கடுமையான பஞ்சம் வந்து, மக்கள் மிகுந்த கஷ்டப்பட்டார்கள். அப்போது பெரிய காமிராக்காரர்களும், பத்திரிகைக்காரர்களும் கார்களைப் போட்டுக் கொண்டு வந்து பேட்டிகள் கண்டு பத்தி பத்தியாக எழுதினார்கள். அதற்கு மேல் எதுவும் நடக்கவில்லை. என் அப்பா சொன்னார், இந்த பப்ளிசிட்டி பணத்துக்கு இரண்டு கிணறுகள் தோண்டி இருக்கலாமென்று!”

“பின் நீயும் அதற்கு ஆசைப்பட்டுத்தானே பத்திரிகையில் எழுதியிருக்கிறாய், விஜி?”

“இல்லை. இந்த அநியாயத்தை வெளி உலகுக்குத் தெரிவிக்க ஒரு கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறேன். இதன் எதிரொலியை நான் எதிர்பார்க்கிறேன்...” என்று கூறுகிறாள்.

அவள் நம்பிக்கை பொய்க்கவில்லை.

அந்தக் கட்டுரை பலர் கண்களில் படுகிறது. ஒரு வாரத்துக்குள் கற்றையாகக் கடிதங்கள் சேர்ந்துவிட்டன. எல்லாம் நாளிதழிலிருந்து அனுப்பப் பெற்றவை. அவற்றில் ஒன்று, சமுதாய சேவையில் குழந்தை நலம் என்ற பிரிவில் பழுத்த அநுபவம் வாய்ந்தவராகப் புகழ்பெற்ற ஒரு பெண்மணியிடமிருந்து வந்திருந்தது.

வடநாட்டைச் சேர்ந்த அவர், சென்னையில் தங்கியிருந்தாலும், பல மாதங்கள் பம்பாயிலும் இருப்பார். அவர் அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, வரப்போகும் குழந்தைகள் ஆண்டை ஒட்டி, திட்டங்கள் தீட்டுவதற்கு முன்னோடியாக ஒரு குழு அமைக்கப் போவதாகவும், கட்டுரையில் வந்த விவரங்கள் தமது கருத்தைக் கவர்ந்திருப்பதாகவும், தம்மைச் சந்திக்க இயலுமா என்றும் கோரியிருந்தார்.

விஜி உடனே சென்று அவரைச் சந்திக்கிறாள். பிரமிளா தாயிக்கு அவளுடைய தந்தையைக் கூடத் தெரிந்திருக்கிறது.

“மிக மகிழ்ச்சி விஜி, உன்னை நான் எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறேன். பம்பாயில் இதற்காக ஒரு மாநாடுபோல் கூட்ட இருக்கிறோம். நீ அவசியம் வரவேண்டும். இந்தப் பிரச்னையை ஆராய ஒரு கமிஷன் வைக்க வேண்டும் என்று கோருவோம். நிச்சயமாக நாம் செயலாற்றினால் பிரச்னைக்கு விமோசனம் வரும்!” என்று சொல்கிறாள். “இருபதாயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால் விட்டுவிட முடியாது. வேலை நேரம் குறைய சத்துணவு, கல்வி இவற்றுக்கு ஏற்பாடு செய்ய, கோரிக்கை விடுப்போம்!” என்றெல்லாம் பேசியதும், விஜி ஆகாயத்தில் மிதப்பதாக உணருகிறாள். தன்னாலும் ஓர் செயலைச் செய்யத் தூண்ட முடியும் என்ற தன்னம்பிக்கை எத்துணை இனிமையானது!

இந்தக் கிளர்ச்சியில், அவளுடைய கட்டுரை, சம்பந்தப்பட்ட தொழிலதிபர்களைக் கவர்ந்து, அவர்கள் பத்திரிகைக்காரர் பலரை அழைத்து, அந்தக் கடுமையான தொனிக்கு மாற்றாக, மறுப்புக் கட்டுரை எழுதச் சொல்லி பரவலாக அது வெளியானதும் கூட அவளைப் பாதிக்கவில்லை.

வைகாசி இறுதியில் அவள் சென்னை புறப்பட்டு வந்தாள். ஆனி முழுதும் ஓடி ஆடியும் பிறந்துவிட்டது.

அன்று பிரமிளா தாயின் வீட்டுக்குச் சென்று அவள் திரும்பி வருகையில் ஒரே ஊமைப் புழுக்கமாக இருக்கிறது. வீடு திரும்புகையில் பகல் ஒன்றரை மணி இருக்கும். வாயில் முன் அழிவராந்தாவில் ஆறுமுகநேரியிலிருந்து வந்திருக்கும் சித்தியின் தந்தை அமர்ந்து வெற்றிலை போடுகிறார். சித்தப்பாவும் இருக்கிறார்.

“எங்கம்மா போயி வர, இந்த வெயிலில?”

“சில்ட்ரன் இயர் வருதில்ல? அதுக்குன்னு ஒரு கமிட்டி முன்னோடியாப் போட்டுத் திட்டங்களைப் பற்றி ஆலோசனை செய்யறாங்க. அது சம்மந்தமாக நானும் உதவணும்னு பிரமிளா தாயி கேட்டாங்க. அவங்க ஆபீசுக்குப் போயிட்டு வரேன்... எப்ப வந்தீஙக் மாமா? ஊருல எல்லாம் சுகமா?”

“எல்லாம் சுகம்...” என்று ஒரே வார்த்தையில் மாமா வெற்றிலைத் தாம்பூலத்தை வாயில் வைத்துக் கொண்டு பதிலளிக்கிறார்.

“அத்தையைக் கூட்டிட்டு வந்திருக்கியளா?”

“இல்லம்மா. நாமட்டும்தான் இப்படி வந்தேன்...

விஜி உள்ளே சென்று சாப்பிட அமருகிறாள்.

சின்னம்மா இருவரிடமும் ஏதோ மாறுதல் வந்துவிட்டாற் போல் இருக்கிறது.

சொர்ணம் பரிமாறிக் கொண்டே மெதுவாக, “இங்கே இந்த ஆபீசுக்கெல்லாம் போகணும்னுதான் தங்கியிருக்கியா விஜி?” என்று கேட்கிறாள். விஜி சோற்றைப் பிசைந்து கொண்டிருப்பவள் நிமிர்ந்து பார்க்கிறாள்.

“ஆமாம்... ஏன் சின்னம்மா?”

“இல்ல, உன் மாப்பிள வீட்டில ஒண்ணும் சொல்ல யோசிச்சிட்டிருந்தம்...”

“அவங்க சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. சொன்னாலும் நான் முன் வச்ச காலைப் பின்னிழுக்கமாட்டேன்...”

அவள் பொருட்படுத்தாததோர் அலட்சியத்துடன் கூறிவிட்டுச் சாப்பாட்டை முடித்துக் கொள்கிறாள்.

“அவா பேப்பரில மறுப்பு எழுதியிருக்காளாமில்ல?...”

சித்தப்பா அவளிடம் வந்து கேட்கிறார்.

“ஆமாம், முழுப்பூசணிக்காயைச் சோத்தில் மறைக்கும் விவகாரம். குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுங்குது...”

“அதுக்கில்ல விஜி, மாமா வந்து எதோ சொல்கிறார். எங்களுக்கெல்லாம் கவலையாயிருக்கு... அதனால...” என்று நிறுத்துகிறார்.

“என்ன...?”

“வீட்டில், ஊரில் பிழைக்க வழியில்லேன்னு நாம் கூடத்தான் கடைக்குப் பையன்களை அங்கிருந்து கூட்டி வந்திருக்கிறோம். அதத் தப்புன்னு சொல்ல முடியுமா? பெத்தவங்க அனுப்புறா, பிழைக்க வருது தீப்பெட்டி ஆபீசில... இதுக்காக நீ அவங்களப் பகச்சிக்கிடலாமா?... இப்ப மாமா சொல்றா, மாப்பிள்ளைக்கு வேற தாவில பெண் பார்க்கிறதாக...”

குப்பென்று செவிப்பறையில் எதோ மோதிவிட்டாற் போன்று அதிர்ச்சியாக இருக்கிறது. மறுகணம் சமாளிக்கிறாள்.

“அப்படியா?”

நிதானமாக அவள் கேட்பது சின்னம்மாவைத் திகைக்கச் செய்கிறது. “என்னம்மா சொல்றே? அவங்க எதுக்காக வேற பொண்ணு பாக்கணும்? உன்ன விலக்கணும்னு அவங்க எதுக்காக நினைக்கிறாங்க? நாங்க விடுவமா? பழைய காலத்துல இஷ்டத்துக்குப் பொண்ணு கட்டினா! அது சரியா?” என்று உள்ளே வருகிறார் சிற்றப்பன்.

“அவர் என்னை விலக்கிட்டார்னு ஏன் நினைக்கிறிய? நான் தான் அவரை விலக்கிட்டேன்னு வச்சிக்குங்க!”

படிப்பு விபரீதத்துக்குப் பாய்ந்துவிடும் என்று அவர்கள் அதுகாறும் கருதியிருக்கவில்லை. “பொம்பிளப் புள்ளக்கு என்னலே இன்னும் படிப்பு? சும்மாப் படிச்சிட்டு?” என்று ஒரு சமயம் அம்மா சொன்னாள். விஜி படித்த காரணத்தினால்தான் கணவன் வீட்டாரை உதாசீனம் செய்கிறாளா? ஒருகால் மாமியார் நாத்தி இல்லாமல் தனியாக இருக்கவேண்டும் என்று கோரி மாப்பிள்ளை இடம் கொடுக்கவில்லையா?

“ஏம்மா, விஜி, உனக்கு விவேகமாயிருக்கத் தெரியும்னு நினைச்சிருந்தோம் ஊருல பலதும் பேச எதுக்கும்மா இடம் கொடுக்கணும்?”

“சித்தப்பா, ஊரில் பலதும் பேசுவான்னு நான் ஒரு காரியம் செய்ய முடியுமா? விவேகம் இருக்கிறதாலதான் கண்ணியமாக வந்திட்டேன்...”

“அப்ப... எல்லாம் நெசந்தானாம்மா?” அவள் மீது அடங்காப் பெருமை கொண்டிருந்த அவருக்கே அவள் உறுதி கண்டு அதிர்ச்சியாக இருக்கிறது.

“எல்லாம்னா என்ன? ஃபாக்டரி விஷயத்தில் நான் தலையிடக் கூடாது. இப்ப நீங்க கடைப் பையன்கள் கூட்டி வந்திருக்கிறீங்க. இங்கே முன்ன வேலை செஞ்சானே காளி, அவன் சொந்தமா இப்ப வியாபாரம் செய்யிறான். இதுபோல இல்லை அது. அந்தக் குழந்தைகளைப் பார்த்து, நான் வேறாளாக இருந்தாலே ஏற்று நியாயம் கேட்கப் போவேன். இப்போது பாத்தியப்பட்டவள் - கேட்டேன். எனக்கு எதற்கும் உரிமையில்லே. அடிமைபோல் கிடக்கவேணும் என்றார். அடிமையாக இருக்க வேறு ஆள் பார்க்கிறாங்க...”

“உன் நடத்தையிலல்ல அபாண்டமாப் பேச்சு வருது? மாரிசாமி, அவன் இவன்னு கூலிப்பயங்ககூட நடக்கிறதா கேவலமாப் பேசுறாங்களாம் ஊருல!”

அவள் முகம் இரத்தமாகச் சிவக்கிறது.

“என்ன அபாண்டம்? யார் பேசினாங்களாம். இப்படி மாரிசாமி காதில் பட்டாக் கிழிச்சிப் போடுவான்!”

“பொறி விழுந்து கூரைப் பத்திக்கிது. எது முதல்ல பத்திக்கிது, எப்படிப் பத்திக்கிச்சின்னு சொல்ல முடியுமா விஜி? மாரிசாமிங்கறவ அடிக்கடி உங்க வீட்டுக்கு வருவானா?”

“பொய்யி! அவனுக்கு எங்க வீடு கறுப்பா சிவப்பான்னு கூடத் தெரியாது. அவன் பேரில ஏதோ பழிபோட்டு அவங்கதா ஃபாக்டரிய விட்டு நிறுத்தினா. பிறகு அப்பா சொல்லி வேற இடத்தில வேலை வாங்கிக் குடுத்திருக்கா, சித்தப்பா. நீங்க நம்புவீங்களா முதலில்...?”

“எனக்கு வேதனையாக இருக்கம்மா. எவ்வளவோ பெருமையாக இருந்தேன். எப்படின்னாலும் நீ ஊருக்குப் போயிடும்மா!...”

விஜியின் கண்கள் பனிக்கின்றன.

அவளை அதுவரையிலும் ஒருவர் கேவலமாகப் பேசியதில்லை; பள்ளியிலும் கல்லூரியிலும் அவளை எல்லோரும் உயர்வாகவே கொண்டாட உருவாகியிருக்கிறாள். இந்த அபாண்டம் கருக்கரிவாளாக விழுந்து அவள் மென்மை உணர்வுகளைக் கிழிக்கின்றது.

உதிரும் கண்ணீர் முத்துக்களை ‘சீ!’ என்று மனசோடு தள்ளிக்கொண்டு துடைத்துக் கொள்கிறாள்.

அத்தியாயம் - 23

புதிய சூழலில், புதிய தொழிற்சாலையில் வேலைக்கு வந்தாலும், வேலை பழையதுதான்; முகங்கள் மட்டுமே புதியவை. அந்தத் தொழிற்சாலை புதுநகரத்தில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. பெரிய சாலையின் கிழக்கே கப்பிச்சாலையில் இரண்டு கிலோ மீட்டர் குறுக்கே வரவேண்டும்.

இந்தத் தொழிலகத்துக்கு வேலைக்கு வரும் பெண்களும் குழந்தைகளும் இரண்டு கிலோமீட்டருக்கப்பால் முட்காட்டை அழித்துப் போடப் பெற்ற குடிசை வீடுகளில் வசிக்கின்றனர். இவர்கள், மானம் பார்த்த சீமையிலிருந்து பிழைப்பில்லாமல் அண்மைக் காலங்களில் இந்தத் தொழிற்சாலை வேலைக்காக வந்து ஊன்றியிருப்பவர்கள். இந்தக் குடியிருப்பிலிருந்து சுமார் அறுபது சிறுவர் சிறுமியரும், இருபது முப்பது பெண்களும் அந்தத் தொழிலகத்துக்கு வருகின்றனர். வேறு சில பெண்களும் ஆண்களும் இன்னும் தள்ளியிருக்கும் பட்டாசுத் தொழிலகத்தில் வேலை பார்க்கின்றனர். மற்றும் சில ஆண்கள் பாரவண்டி இழுத்தும், பளு சுமந்தும் பிழைப்பவர்கள். பூமியில் ஈரம் படிய மழைத் தூற்றல் விழுந்தால் காடு கழனி வேலைகளை நாடிச் செல்பவரும் உண்டு.

மாரிசாமி இந்தக் கிராமத்துக்கு ஏற்கனவே சைகிளில் நள்ளிரவு நேரங்களில் சண்முகத்துடன் வந்ததுண்டு. தொழிற்சங்கப் பிரசாரத்தைச் செய்ய வந்து, கருப்பன் என்ற ஆளுடன் மோதிக் கொண்டிருக்கிறான்.

இப்போது அங்கே, ‘தீப்பெட்டித் தொழிலாளர் நல சங்கம்’ என்ற பலகை தொங்கும் குடிசை ஒன்றைப் பார்க்கிறான். வந்து வேலைக்குச் சேர்ந்த புதிதில் தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் சரியான இடம் கிடைக்கவில்லை. இரவு பெரியசாலைக்குச் சென்று புரோட்டாக்கடை தேடி ஏதேனும் உண்டான். அங்கேயே தெருவோரம் கடைப்படியில் இரவைக் கழித்தான். மூன்றாம் நாளே செவந்து அறிமுகமானாள்.

அவள் வீட்டிலிருந்து மேல்பெட்டி அடிப்பெட்டி ஒட்டிக் கொண்டு வருவாள். சாக்குச் சுமையைத் தலைமீது சுமந்துகொண்டு அவள் இடுப்பில் ஒரு மண்குடம் சகிதம் காலை பதினோரு மணியளவில் வருவாள். அப்போது அவன் அங்கு வரும் தேநீர்க்காரனிடம் ஒரு தேநீர் கேட்டு வாங்கி அருந்திக் கொண்டிருப்பான்.

இளமையும் மிடுக்குமாகக் காட்சியளிக்கும் செவந்தியிடம் கணக்கப்பிள்ளை கண்ணியமாக நடக்கிறானா என்று அவனையறியாமல் ஓர் காவல் உணர்வு தோன்றிவிடுகிறது.

“ஏ புள்ள? எம்புட்டுத் தண்ணி தெளிச்ச? ஏ இதென்ன?” என்று பெட்டிகளைக் கழித்துப் போடுகிறான் அவன்.

“ஐயோ என்ன இம்புட்டக் கழிச்சிப் போட்டிய?... போடுங்க?” என்று அவள் மன்றாடுகிறாள். அவன் மறுத்து ஒண்ணரை ரூபாய் கூலிக்குத்தான் சிட்டை பதிகிறான்.

அவள் அட்டைக்குச்சி கேட்டு வாங்காமல் குடத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு திரும்புகையில், அவன் அவள் முன்றானையைப் பற்றி இழுக்கிறான்.

“ஏ புள்ள, கோச்சிட்டுப் போற? அட்டசில்லு வாங்கிட்டுப் போ! நாளக்கிக் கூடப்போட்டுத் தாரண்டி!”

செவந்தி வெடுக்கென்று திரும்பி காறி உமிழ்கிறாள்.

அப்போது தேநீரைச் சுழற்றி ஆற்றிக் கொண்டிருந்த மாரிசாமி அங்கு விரைந்து வருகிறான்.

“என்ன தகராறு? என்ன புள்ள?”

“பாருங்க, இம்புட்டுப் பொட்டி, ரெண்டு குரோசு போல கழிச்சிருக்கா! அட்டசில்லு வாங்கிட்டுப் போகணுமாம் முந்தியப்புடிக்கிறா...”

அவன் மாரிசாமியைப் பார்த்து விரசமாகக் கண் சிமிட்டுகிறான்.

“உன்ற செறுக்கியா இவ...”

“மரியாதியாப் பேசு...!” என்று செவந்தி உறுமுகிறாள்.

“ஏன்யா, ஒங்க இஷ்டத்துக்குக் கூட்டறதும் கழிக்கிறதும் நல்லாயிருக்கா?”

“ஏய், நீயாரு பெரிய மானேசர், கேக்கவந்திட்டா... உன் ரோக்கியம் தெரியாது! ஒதை குடுத்து இளஞ்சேரன்லேந்து அனுப்பிச்சிருக்கா. இங்கியும் கல்தா குடுக்க நாளாவாது!”

செவந்து அன்று அட்டைக்கட்டுத்தாள் எதுவும் வாங்கிச் செல்லவில்லை. மாரிசாமி அன்றிரவு அந்தக் குடியிருப்புக்குச் செல்கிறான். குண்டும் குழியும் புதருமாக ஒற்றையடிப்பாதை கூடச் சீராக இல்லை. சைகிளிலும், தலையிலும் இடுப்பிலுமாக ஆண்களும் பெண்களும் அந்த எட்டு மணி நேரத்தில் எங்கிருந்தோ தண்ணீர் சுமந்து வந்து கொண்டிருக்கின்றனர்.

நிலாக்காலமாதலால் வெளியே குஞ்சு குழந்தைகள் சிலர் ஆடிக் கொண்டிருக்கின்றனர். தொழிற்சாலையிலிருந்து அப்போதுதான் நடந்து திரும்பிய சில குழந்தைகள் சோற்றுக்காகச் சோர்ந்து உட்கார்ந்திருக்கின்றனர்.

செவந்தி வெளியே கம்பு குத்திப் புடைத்துக் கொண்டிருக்கிறாள். இவனைக் கண்டதும் இனம் புரிந்து கொள்கிறாள்.

“வாங்க... வாங்க...!” என்று அவள் வரவேற்ற குரல் கேட்டு உள்ளிருந்து அவள் தாய் வருகிறாள்.

அவள் தந்தை சாத்தப்பனும் தாயும் ஃபயராபீசில் வேலை செய்பவர்கள். செவந்தியின் ஒரு தங்கையும் தம்பியும் தீப்பெட்டித் தொழிலகத்தில் வேலை செய்கிறார்கள். செவந்தியின் அக்காளைப் புதுவயலில் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். அவள் கல்யாணத்துக்கு வாங்கிய கடனே இன்னும் அடைபடவில்லை. சாத்தப்பன் மாலையில் வேலை முடிந்து இன்னம் வரவில்லை. வேலை முடிந்து நேராக அவன் வரமாட்டான். குடித்துவிட்டு, கடையில் தின்றுவிட்டுத்தான் வருவான்.

தீபாவளி முடிந்து விட்டால் ஃபயராபீசின் வேலைகள் ஓய்ந்துவிடும். மழை நாட்களில் பட்டாசு காயப்போட முடியாது. அந்த இரண்டு மூன்று மாசங்கள் அவன் ஒரு வேலைக்கும் போகமாட்டான். கடன் தான் வார வட்டிக்கடன் வாங்கியிருக்கிறார்கள்.

அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே சாத்தப்பன் வந்து விடுகிறான். அவன் மாரிசாமியைப் புரிந்து கொள்கிறான். “சங்க ஆளில்ல நீ?” என்று இரகசியமாக விசாரிக்கிறான்.

“ஆமா, இங்க ஒரு சங்கம் இருக்காப்பல இருக்கு? பாட்டரியிலேந்து பிள்ளங்க அஞ்சு மணிக்கு இந்தக் குண்டுக் குழி முள்ளுத்தடத்தில வருதுங்க. ஒருபாதை நல்லாயில்ல, தண்ணிக்கு எங்கியோ ஊருணிக்குப் போய் அலஞ்சிட்டு வாரிய. ஒரு பாதை போட்டு, கிணறு தோண்டனும்னு சங்க மூலமா கேக்கக் கூடாது?” என்று மாரிசாமி விசாரிக்கிறான்.

“ஆமா, பொம்பிளக கஷ்டம் அவியளுக்கெங்க தெரியிது? சங்கம்னு வச்சிருக்கா” என்று செவந்தி கூறுகிறாள்.

“ஆரு பணம் பிரிப்பா?”

“பளபளன்னு சைகிள் வச்சிருக்கிறாரே? கருப்பன்னு உசரமா ஒராளு. அவனும் உங்கூர்க்காரப் பய்யந்தா பாட்டரியில ஆபீஸ்ல வேல செய்யறா?”

“இங்கே இல்லியா?”

“இங்கே இரண்டு வீடு அவுருடையதுதா. வாடக பதினஞ்சு ரூபான்னு விட்டிருக்கா. அவெ அடுத்தாப்பில ஊருணிக்கரை கிராமத்தில் இருக்கிறா. சைகிள்ள வந்திடுவா...”

“சங்கத்தில என்ன செஞ்சிருக்கிறாங்க?”

“கடன் - வார வட்டி மாச வட்டிக்கு அவந்தான் குடுப்பான். பிறகு சனவரியில, அட்வான்ஸ் வாங்கித் தருவா. கடன் அடைப்போம். திரியும் கடன், வட்டி...”

“கடன் குடுக்கிற சங்கம் தானா அது?”

“எதுனாலும் அவுசரம்னா, வருவா. முன்ன, அந்த யேசம்மா புள்ள பெற முடியாம வகுத்துல புள்ள குறுக்க வுழ்ந்திச்சி, அப்ப சங்கக்காரங்கதா கட்டில் கொண்டாந்து நாலுபேராத் தூக்கிட்டுப்போயி, பாட்டரி வாசேல்லேந்து வண்டி வச்சி ஆசுபத்திரிக்குக் கொண்டு போனா, புள்ள செத்துப் போச்சு, ஆனா, அவ நல்லா வந்திட்டா...”

“இதெல்லாம் நீங்க உண்மையான சங்கத்துல சேரக் கூடாதுன்னு செஞ்சிருக்கிற ஏற்பாடு. நம்ம சங்கந்தான் உண்மையில் தொழிலாளிகளை ஒரு சக்தியாகச் சேர்த்து, உரிமைகளுக்குப் போராடும் சங்கம்...”

“அதென்னமோ மெய்தான். ஆசுபத்திரியெல்லாம் எல்லாருக்குமா கூட்டிப்போறா? அதா நம்ம இசக்கிமக முள்ளு கிளிச்சி, சீப்புடிச்சிப் புரையோடு இங்குனயே கெடந்து செத்துப்போச்சி. ஆசுபத்திரிக்கு ஆரு கூட்டிட்டுப் போனா? எத்தினியோ பேரு இங்ஙனதா காச்சல் வந்தாலும் கடுப்பு வந்தாலும் கெடந்து சாவுறம். இதுவரய்க்கும் யேசம்மா ஒருத்திதா... அது புருசனும் கொஞ்சம் முனஞ்சி மானேசர்ட்ட சொல்லி, ஏற்பாடு செஞ்சதால கொண்டுட்டுப் போனா.”

“சம்முக அண்ணாச்சி வருவா. நாமெல்லாம் சேந்து முதல்ல பஞ்சாயத்துல ஒரு ரோடு போட்டு, தண்ணிக்கு வழி பண்ணுவம் - சம்முக அண்ணாச்சி தெரியுமில்ல?”

“தெரியும். அவரு மகதான மாச்சஸ் முதலாளியக் கட்டிருக்கு?”

“ஆமாம். அந்தம்மா இந்தக் குழந்தைகளுக்கு வேலை குறைச்சு, வசதி செய்யணும்னு போராடிட்டிருக்கு... நாம எல்லாம் மொள்ள ஒண்ணு சேரணும்...”

“அதுக்கு அவன் விடுவானா? எல்லாம் இங்க ஆளுக வச்சிருப்பா! நீங்க இங்க உக்காந்து பேசுறீங்கன்னா, நாளக்கி எம்பொட்டியக் கூடவே கழிச்சிப் போடுவா!” என்று தெரிவிக்கிறாள் செவந்தி. அவன் அன்று அங்கேயே உணவு கொள்கிறான். வெகுநேரம் பேசிவிட்டு வாயிலில் படுத்துக் கொள்கிறான்.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. ஞாயிற்றுக்கிழமைகளில், குளியல், துணி அலசல் போன்ற கிரமங்களுக்குத் தண்ணீர் தேடிச் செல்லவேண்டும். முக்கியமாக முள்காட்டில் சென்று வேலிக் கருவை முள்வெட்டி அடுப்பெரிக்க இழுத்து வரவேண்டும்.

அவர்கள் வாயிலில் படுக்க இடம் கொடுத்துச் சாப்பாடும் போடுவதற்காக அவனும் உதவி செய்ய வேண்டியிருக்கிறது. முள் வெட்டி வர அவனும் செவந்தியும் மற்றவர்களுடன் செல்கின்றனர். பச்சையாக வெட்டி, சுமையை இழுத்து வந்து வாயிலில் போட்டு வைத்தால் வெயிலில் காயும். அடுத்த வாரம் அதை ஒடித்து அடுப்பெரிப்பார்கள்.

அந்தக் குடியிருப்புக் குடும்பங்கள் இப்படித்தான் பிழைத்தார்கள். வாரம் ஒரு நடை, புது நகரம் சென்று அரிசி, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருளை வாங்கி வர, சாத்தன் போவான். அம்மாவும் மற்ற குழந்தைகளும் தண்ணீருக்குப் போவார்கள்.

மாரிசாமிக்குச் செவந்தியுடன் முள் வெட்டச் செல்லும் நேரம் வசந்தப் பூஞ்சாரலில் நனைவது போலிருக்கிறது.

“இம்புட்டுச் செடியும் முள்ளா இல்லேன்னா எப்பிடியிருக்கும் புள்ள?” என்று வம்புக்கிழுக்கிறான்.

“என்னமாயிருக்கும்? செடியே இருக்காதில்ல? அம்புட்டுப் பேரும் ஆட்டுக்குக் குழை வெட்டிப் போட்டிடுவாங்கல்ல?...” என்று அவள் சிரிக்கிறாள். புதர் நடுவே முட்களுக்கிடையே அவளைக் கட்டிப்பிடித்து முத்தமிடும் வேட்கை உந்துகிறது. முட்செடியில் பசுந்துளிர் மினுமினுக்கும்போது, செவந்தியின் கன்னங்களில் பசுந்துளிரில் படும் வெயில்பட்டு மினுமினுக்கும் போது, பரவசம் தோன்றுகிறது. வாழ்க்கையில் எல்லாக் கவர்ச்சிகளைக் காட்டிலும் இது ஆற்றலும் இனிமையும் வாய்ந்தது. ஆனால், இதை இந்தப் ‘புல்லர்கள்’ எப்படிச் சாக்கடைச் சரக்காகப் புரட்டிப் போடுகிறார்கள் என்று நினைத்துக் கொள்கிறான்.

செவந்திக்கு முள் வெட்டிச் சுமைபோடுவதில் இரண்டு வருட அனுபவம் உண்டு. அவனுக்கு அத்தகைய அனுபவம் கிடையாது. கையில் துணியைச் சுற்றிக் கொண்டு மெள்ள வெட்டிப் போட்டதை ஒன்று சேர்ப்பான். கட்டி இழுத்துக் கொண்டு வருகையில் அன்று அவன் போட்டிருந்த செருப்பு வார் அறுந்து, அவனைக் காலை வாரிவிட்டுவிட்டது. மேடும் பள்ளமுமாக இருந்த அந்த இடத்தில் அவன் சறுக்கி இன்னொரு முட்செடிப் புதரில் விழுந்து விடுகிறான். முள் வெற்றுக்கால் சதையில், குதிகாலில் கழுத்தில், குத்திக் காயமாயிற்று.

“செவந்தி...! ஏ புள்ள...!”

அவள் குரல் கேட்டு வருகையில் அவன் தலைக்கு மேல் கொம்பாகக் குடைபிடிக்கும் முட்கைகளை விலக்கியும் சட்டையில் குத்தும் முள்ளை நீக்கியும் அதிலிருந்து வெளிவரப் போராடிக் கொண்டு இருக்கிறான்.

“ஐயோ, எங்க இப்படி வந்து பதனமில்லாம மாட்டிக் கிட்டிய?” பெரிய முள் கொம்பை வெட்டி நீக்கி, அவன் கால்களில் தைத்த முட்களிலிருந்து விடுவிக்கிறாள்.

முள் பொத்த இடம் குருதித் துளிகள் கசிய, ஒரே கடுப்பாய்க் கடுக்கிறது. ஆனாலும் சமாளித்துக் கொள்கிறான்.

“இன்னொருக்க முள்ளுள வுழலாம் போலிருக்கு செவந்தி!” அவள் விழிகளால் வெட்டுகிறாள்.

“அப்பிடியா சமாசாரம்? இப்பிடிக் கொத்த ஆளுன்னா எங்கய்யா, முள்ளு வெட்டுற இந்த அருவாளால தலைய சீவிப்போடுவாரு!”

“ஐயோ?”

“என்ன அய்யோ? எங்கய்யா கம்மாத்தண்ணித் தகராறில் ஒருத்தர் தலையச் சீவிப்போட்டு எட்டு வருசம் உள்ளாற இருந்தாரு. எனக்கும் தங்கச்சிக்கும் ஏன் இத்தினி வித்தியாசம்?... அவுரு நல்லபடியா இருந்ததால முன் கூட்டியே வுட்டுட்டா, இங்கிட்டு புழக்க வந்தம்...”

தெம்மாங்கு பாடிய உள்ளம், கருந்திகிலில் சுருண்டு கொள்கிறது. உடல் முழுதும் முள்ளின் கடுப்பு பாதிக்கிறது. காட்டுவெளி கடந்து கப்பிப்பாதை வந்த பிறகு முள்ளை இழுத்து வருவது அவ்வளவு சிரமமில்லை. “நம்மகிட்ட கொஞ்சம் எரக்கமா இருக்கிறது இந்த முள்ளுதாங்க...” என்று செவந்தி அவன் முகத்தைப் பார்க்கிறாள்.

“அதுதான் குத்திடிச்சே? எரக்கம் என்னா எரக்கம்?”

“இல்ல, முள்ளு இல்லேன்னா, நாம அத்த வெட்ட வர முடியுமாங்க? நமக்குன்னு, இந்தச் சீமயில வெட்ட வெட்டத் துளுத்துக்குது பாருங்க?” அந்தப் பட்டுத்துளிரின் மென்மை வலியை மறக்கச் செய்கிறது.

செவந்தியின் அம்மா உடல் கழுவ நீரளித்து, சோறும் போட்டாள்.

“என்னப்பு, காலுல, முள் தச்சிடிச்சா? அது விச முள்ளாச்சே?” என்று இரக்கப்பட்டாள்.

“ஒண்ணுமில்ல, சரியாயிடும்” என்று பிய்ந்துபோன செருப்புக்கு ஒரு ஆணி தேடி அவனே அடித்துக் கொண்டான்.

தொழிலகத்தில் நின்று பணிபுரிகையில் முள்பட்ட உள்ளங்காலும் குதிகாலும் கையும் வலித்தன. மாலை எட்டு மணிக்கு மேல் வேலை முடிந்து, செருப்பைச் செவ்வையாக்க நடந்து செல்லவும் முடியவில்லை. உடம்பு லேசாகக் காய்ந்தது. ஏற்கெனவே குதிகாலில் பித்தவெடிப்பின் எரிச்சல் இருந்தது. வீடு வந்த போது, செவந்தியும் தாயும் தண்ணீருக்குச் சென்றிருந்தனர்; இன்னும் வீடு திரும்பவில்லை. அப்பனையும் காணவில்லை. அவன் சுவாதீனமாக வீட்டுக்குள் சென்று ஓர்புறம் படுத்து விட்டான். அவனுடைய நினைவுகளையும் நோயையும் மூர்க்கத் தனமாக உசுப்பிவிட்ட குரல் செவந்தியின் அப்பனுக்குரியதென்று புரிந்தது.

“...யார்...பூ...உழ்...ளாழ வந்து படுக்க...?”

அவன் குடித்திருந்தான். கையில்... அரிவாளா?...

“வெ...ழ்ட்டிப் போழ்டுவ... ழண்டா...”

அவனை மூர்க்கமாக இழுத்து வெளியே தள்ளுமுன் மாரிசாமி தானாகவே எழுந்து வெளியேறூகிறான். குழந்தைகள் அஞ்சி ஓர்புறம் கோழிகளைப் போல் பதுங்கியிருக்கின்றனர்.

செவந்தியும் தாயும் இன்னும் ஏன் வரவில்லை?

அவனுக்கு நல்ல காய்ச்சல். வெளியே வேறெங்கும் படுக்க இடமில்லை. சங்கம் என்று பலகை தொங்கிய குடிசைக்கு முன் தான் காலியாக இருக்கிறது.

அங்கும் திண்ணை போன்ற முன் மேடையில் ஒரு பன்றியும் குட்டிகளும் படுத்திருக்கின்றன. அதை ஓட்டிவிட்டு, அவன் அயர்ச்சியுடன் படுக்கிறான். கொதிக்கும் அனலிடையே குளிர்ப் பூங்கரம் தொடும் உணர்வு அவனுடைய கண்களை விழிக்கச் செய்கிறது.

“ஐயோ, காய்ச்சல் கொதிக்கிது... என்னதும் சாப்பிடுறியளா?... தண்ணிக்குப் போய் வார நேரமாயிப்போச்சு...”

“உன்னப்பா... செவுந்தி... அருவாளத் தூக்கிட்டு வந்தா...”

“சவம், இப்பிடித்தா குடிச்சிப் போட்டு வருவா, நீங்க இப்ப வாங்க. எல வதக்கி ஒத்தடம் போடுற...”

அந்த இருட்டில் அவள் கைகளைப் பற்றிக் கொள்கிறான். கந்தகக் குழம்பின் எரிச்சல் போய் கண்களில் மலர்பட்ட சுகம் பரவுகிறது.

குடிசையில் அவள் அம்மா நொய்க்கஞ்சி வைத்துக் கொடுக்கிறாள். செவந்தி இதமாக வேலிக்கருவை இலையையே வதக்கி அவன் மேனிக்காயங்களுக்கு ஒத்தடம் போடுகிறாள்.

அவன் சொன்ன மொழிகள் அவன் செவிகளில் மிக இதமாக உயிர்த்து ரீங்காரம் செய்கிறது. “முள்மட்டுந்தா நம்மகிட்ட கருணயோடு இருக்கு...”

அத்தியாயம் - 24

பம்பாய் செல்லும் அந்த ரயில் பயணத்தில் விஜி படிக்க வாங்கிய மாலை நாளிதழ் அது. மயிலேஷின் படம் அவளைப் பார்த்துச் சிரிக்கிறது. மாட்ச் வொர்க்ஸ்... ஃபயர்வொர்க்ஸ்... பார்ட்னர்... மேல் நாடுகளுக்குத் தொழில் முறை சுற்றுப்பயணம் செல்கிறார். வாழ்த்துக்கள்...

‘மாமூலா’கப் பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளைகள் அநுபவிக்கும் வசதிகள், இதுபற்றி முன்பே சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒத்துப் போயிருந்தால் அவளுடைய படமும் அதில் வந்திருக்கும்.

பம்பாயில் நடக்க இருக்கும் மாதர் கவுன்சில் கூட்டத்துக்கு பிரமிளாவின் வற்புறுத்தலுடன் அவள் கிளம்பி இருக்கிறாள். பிரமிளா முதல் வகுப்பில் ஏறி இருக்கிறாள்.

புது நகரத்துத் தொழிலாளரான சிறுவர் சிறுமியர் நிலையைக் கண்டறிவதற்காக, ஓர் உயர்மட்ட கமிஷன் விசாரணை செய்ய வேண்டும், பின்னர் வழி வகுக்கலாம் என்பது பிரமிளாவின் கருத்து. அந்தக் கோரிக்கையைக் கவுன்சிலில் தீர்மானமாகக் கொண்டுவர விஜியை அழைத்திருக்கிறாள்.

சிற்றப்பா, சின்னம்மா உறவுப் புழக்கத்தில் செய்தி கேட்டவுடன் சில நாட்கள் விரிசல் ஒலித்தாலும், சங்கரலிங்கச் சித்தப்பா மிக முற்போக்காளர் என்பதை நடப்பில் காட்டிக் கொண்டு விட்டார்.

“உம் மனசுக்குச் சந்தோஷம் இல்லேன்னா, உன்னை நான் வற்புறுத்த மாட்டேன். யாரும் வற்புறுத்தவும் போறதில்ல விஜி. இது... உன் வீடு. இங்கே எப்பவும் உனக்கு உரிமையுண்டு...” என்று அவள் நெஞ்சம் நெகிழத் தயக்கங்களைக் கரைத்துவிட்டார்.

முதன் முதலாக ஒரு பொதுப்பணியின் நிமித்தம் வெளியூர் புறப்படுவது மிகுந்த கிளர்ச்சியைக் கொடுக்கிறது. நாட்டு விடுதலையில் பங்குபெற்ற அந்தக் காலத்துப் புகழ்பெற்ற பெண்டிர் பலரை இந்த அமைப்பில் காணலாம் என்ற மகிழ்ச்சியுடன் அவள் கிளம்பி இருக்கிறாள்.

கூட்டத்துக்கு வரும் பிரதிநிதிகள் தங்குவதற்கு வெவ்வேறு இடங்களில் அமைப்பாளர் ஏற்பாடு செய்திருந்தாலும் பாந்திராவில் உள்ள பிரமிளாவின் இல்லத்திலேயே விஜி தங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

மிகுந்த கனிவுடன் தனது மகளைப்போல் அன்புகொண்டு நல்விசாரணை செய்து சுவனித்துக்கொள்வது விஜிக்கு துணிவையும் தெம்பையும் அளிக்கிறது.

“நான் எல்லா விவரங்களையும் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறேன். நான் எப்போது பேச வேண்டும் என்பதை மட்டும் முன்னதாகச் சொல்கிறீர்களானால் நல்லது பஹன்ஜி!”

“நான் உன்னை, இருபதாயிரம் குழந்தைகள் பணிபுரியும் தொழில் நகரத்தில் இருந்து வந்த பிரதிநிதி என்று அறிமுகப் படுத்துவேன். சுருக்கமாக அப்போது நீ நிலைமையை எடுத்துச் சொல்லு. பிறகு தீர்மானம் போடுவோம்!"

காலையில் கூட்டம் நடக்கும் நேரம் ஒன்பது மணி என்று அறிவித்திருக்கிறார்கள். பிரமிளா அவளைத் தன்னுடன் காரில் அழைத்துச் செல்கிறாள். ஒன்பதரை மணியாயிருந்தும் எல்லோரும் வந்து சேர்ந்திருக்கவில்லை. ஆனால் அதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. காகிதங்களும், பிரசுரங்களும் அடங்கிய கைப்பைகளுடன் ஒருவரை ஒருவர் சந்திப்பதனால் ஏற்படும் மகிழ்ச்சிக் கூவல்களும், நல விசாரணைகளும் தழுவல்களுமாக ஓர் விழாக்களிப்பைக் கூட்டிக் கொண்டிருக்கின்றனர். விஜிக்குச் சென்னையிலிருந்து வந்திருக்கும் பிரதிநிதிகளையே பரிசயம் கிடையாது. எனவே அவள் ஓரமாக நின்று கொண்டு இருக்கிறாள்.

வந்தவர்களில் வயதானவர்களும் நடுநிலைக்காரிகளும் அதிகமாக இருக்கின்றனர். மெல்லிய மஸ்லின் இழைச்சேலையும் நரைத்த முடிகளும், பளீரென்று சாயம் விளங்கும் கருத்த முடி ‘மேக்கப்’ முகங்களும், காஞ்சீவரம், கைத்தறிச் சேலைகளும். வியப்பொலிகளும் அவளுக்கு இதுகாறும் பழக்கமில்லாததோர் உலகை அறிமுகப் படுத்துகின்றன. பிரமிளா அவளை அழைத்துப் பலருக்கு அறிமுகப்படுத்துகிறாள். தலைவிக்கு அவளை அறிமுகப்படுத்தியபோது தந்தையைப் பற்றி பிரமிளா குறிப்பிடுகிறாள். வயதான அந்த அம்மாள் விடுதலைப்போரில் அரும்பணியாற்றியிருக்கிறாள். விஜி அவர்களைப் பற்றியெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறாள். நேருக்கு நேர் சந்தித்து, புதிய தலைமுறைப் பிரச்னைகளை ஆராயப்போகிறாள் என்ற நினைப்பில் மகிழ்ச்சி பொங்குகிறது.

கூட்டம் தொடங்கும்போது பத்தரையாகிவிடுகிறது. தலைவி, ஓராண்டுக்குப்பின் எய்தியிருக்கும் ஆட்சிமாற்றம் குறித்தும் அரசியல் சம்பந்தமான பிரச்னைகள் எவ்வாறு மாதர் அமைப்புக்களைப் பாதிக்கின்றன என்றும் தன் உரையில் குறிப்பிடுகிறாள். பெண்கள் முன்னைக்காட்டிலும் அதிகமாகப் போராட வேண்டும்; போராடாமல் எதுவும் பெறுவதற்கில்லை. அனைத்துலக ரீதியில் தீர்மானம் செய்யப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த, குழந்தைகள் ஆண்டை எதிர்நோக்கி இந்தக் கூட்டம் அமைந்திருக்கிறது. குழந்தைகள் நலத்துக்காகப் பல திட்டங்களைத் தீட்டவேண்டும்...

தலைவியின் உரை முடிந்ததும், மாநில வாரியான மகளிர் சங்கக் கிளைகளின் ஆண்டு அறிக்கைகள் தொடருகின்றன. இரண்டு மாநிலங்கள் கூடப் பேசி முடியவில்லை. ஒரு மாநிலப் பெண் மந்திரி வருகை தருகிறாள். விஜி அவள் பெயரைக் கூடக் கேள்விப்பட்டிருக்கவில்லை. தலைவி எழுந்து சம்பிரதாயமாக வரவேற்றுப் புகழ்கிறாள். பிரமிளாவும் தன் பங்குக்கு அவளுக்கு முகமன் கூறி, சமுதாயக் சுளத்தில் அவள் ஆற்றியிருக்கும் பொதுப் பணிகளைப் பட்டியல் போடுகிறாள். பிறகு அந்தப் பெண்மணி, பெண்கள், குழந்தைகளுக்கு நலம் காணவே தான் அரசியல் களத்தில் இறங்கியதாகக் கூறி, பெண்கள் அமைப்புக்களுடன் தனக்குரிய தொடர்பை விவரிக்கிறாள். விஜிக்கு அலுப்புத் தட்டத் தொடங்கிவிடுகிறது. இந்த உரை முடிந்து அவளை வழியனுப்பும்போது மணி ஒன்றரை கடந்துவிடுகிறது. பகலுணவு நேரம்.

செயலாளர் அங்கேயே உணவு வழங்கப்பெறும் என்று அறிவிக்கிறாள். விஜியை ஒத்த சில இளம் பெண்கள் பரபரப்பாக வந்து மேசைகளில் இருக்கும் தாள், பென்சில் போன்ற பொருள்களை நீக்கி, சுத்தமான வெள்ளை விரிப்புக்களைப் போடுகின்றனர். உணவு யாரோ பெரிய தொழிலதிபரின் ‘தர்மம்’ என்று விஜி புரிந்து கொள்கிறாள்.

புலால் - மரக்கறி என்று இரு பிரிவுகளிலும் வேண்டிய அளவுக்கு மேல் வகைகள் இருக்கின்றன. எல்லோரும் அளவளாவிக் கொண்டு உணவு கொள்கின்றனர். தாமே போய் எடுத்துக் கொள்ளும் ஏற்பாடு.

விஜி மிகவும் கூசிப்போய் ஒரு தட்டில் சிறிது உணவை எடுத்துச் சென்று உண்டபின் ஓரமாக அமர்ந்திருப்பதைக் கண்ணுற்று பிரமிளா வருகிறாள்.

“வா... எடுத்துக்கொள்!... ஏன் கூசுகிறாய்?...” என்று அழைக்கிறாள்.

“நான் முடித்துவிட்டேன் பஹன்ஜி! போதும்!”

“இந்தா டெஸ்ஸர்ட் இது. இது சாப்பிட வேண்டாமா?”

இனிப்பைக் கையில் திணிக்கிறாள்.

விஜிக்கு, ‘மதிய உணவுக்கு நேரமில்லாமல் குச்சியடுக்கும் குழந்தைகளுக்கு என்ன செய்யப் போகிறோம்?’ என்று கேட்கத் தோன்றுகிறது.

இனிப்பு ருசிக்கவில்லை. தன் முறை பிற்பகலில் வரும் என்று பொறுத்துக் கொள்கிறாள்.

உணவளித்த ‘தாதா’வுக்கு நன்றி கூறிக்கொண்டு தொடங்கிய பிற்பகல் கூட்ட நேரம் முழுவதும், பழைய அறிக்கைகளிலும், அதன் மீதான விவாதங்களிலும் ஓடிவிடுகிறது.

தேநீர் கொடுக்க வந்த ஒரு இளம்பெண் ‘வாலன்டியர்’, அவளிடம், “பிரமிளா தீதியின் பேத்தி நீதானா!” என்று விசாரிக்கிறாள்.

“இல்லை... நான் சென்னைப் பிரதிநிதி” என்றதும் அவள் முகம் வியப்பில் மலருகிறது.

கூட்டம் நடக்கும்போதும், இடைவேளையின் போதும் அடிக்கடி பலர் வெளியே செல்வதும் வருவதுமாக இருப்பதை விஜி கண்ணுறுகிறாள். கூட்டம் முடிந்து படியிறங்கி வரும் போதுதான் அடுத்த மாடியின் வாயிலில் ‘ஸ்பெஷல் தீபாவளி ஸேல்’ என்ற அறிவிப்புடன் கூடிய புடவைக் கடை அமைந்திருப்பதை அவள் பார்க்கிறாள்.

கூட்டத்துக்கு வந்திருந்த அந்தனை பெண்களும் அங்கே மொய்த்திருக்கின்றனர்!

“இது உடியா! ஆ... சங்கு பார்டர், வொன்டர்ஃபுல்! வெறும் முந்நூறு... கொள்ளை மலிவு! மிக நேர்த்தி! நானும் இதே போல் வாங்கப் போகிறேன்!” என்றெல்லாம் குரலொலிகள் மொய்க்கின்றன. கடையில் பணியாளர் சுறுசுறுப்பாகச் சேலைகளை வாரி இறைத்து விடுகின்றனர். நியான் விளக்கொளி ஓர் வண்ணக் களஞ்சிய உலகைத் தோற்றுவிக்கிறது.

அவள் பிரமிளாவுக்காகப் பார்த்துக் கொண்டு திகைத்தாற் போல் படியில் நிற்கிறாள். கையில் ஓர் சேலைப் பார்சலுடன் அவள் வருகிறாள். புன்னகை செய்கிறாள்.

“என் மகளுக்கு வாங்கினேன். நீ புடவை ஒன்றும் வாங்கவில்லையா?”

“இல்லை...” என்று தலையை ஆட்டிவிட்டு இதழ்களை இறுக்கிக் கொள்கிறாள் விஜி.

இரண்டாம் நாள் மாலைதான் அவர்கள் ‘குழந்தைகள் ஆண்டுக்கு’ வருகின்றனர். ஆண்டுக்கான ‘சுலோ’கத்தை உருவாக்குவதிலேயே இரண்டு மணிநேரம் சென்றது தெரியாமல் ஓடிவிடுகிறது.

சுலோகத்தில் குழந்தைகள் நலனுக்கான விளையாட்டரங்குகள் இடம்பெற வேண்டும் என்று ஒருத்தி வலியுறுத்துகிறாள். ஊருக்கு ஊர் குழந்தை மருத்துவர் வேண்டும் என்பது வாசகத்தில் குறிப்பிடப்பெறவேண்டும் என்று ஒருத்தி சண்டையே போடுகிறாள். பின் தங்கிய மாநிலம் என்று குறிப்பிடப்பெறும் மாநிலத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி, தங்கள் பகுதியில் பயிற்சி பெற்ற பேறு பார்க்கும் மருத்துவச்சிகள் வேலையில்லாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி அவர்களுக்கு வேலை கிடைக்கும் படியான வாய்ப்பு வாசகத்தில் குறிக்கப்பெறவேண்டும் என்று அடக்கமாகத் தெரிவிக்கிறாள்.

விஜி பொறுத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாள். பின்னர் பிரமிளா எழுந்திருந்து விஜியை அறிமுகப்படுத்தி அவள் உரையை இரத்தினச் சுருக்கமாக முடித்துவிடும்படி கோருகிறாள். ஏனெனில் நேரம் அதிகமில்லை. அத்துடன் குழந்தைகள் நலனையே மையமாகக் கருதி ஒரு தனிக்குழு அமைக்கப் போகிறார்களென்றும்; அதில் விஜியை அவசியமாகச் சேர்க்கும்படி தான் பரிந்துரை செய்வதாகவும், அதில் விரிவாக அக்கட்டுரை படிக்கலாம் என்றும் பிரமிளா விஜியின் காதோடு சொல்லிவிடுகிறாள்.

விஜிக்கு முகத்தில் சிவப்பேறுகிறது. கையில் பிடித்திருக்கும் காகிதம் பரபரக்கிறது. இருபது நிமிடம் எடுத்துக்கொண்டு மிகக் கவனமாகக் கச்சிதமாக எல்லா விஷயங்களையுமே கூறிவிடுகிறாள். ஊசி போட்டால் கேட்கும் கவனம் நிலவியிருந்ததைப் புரிந்து கொள்கிறாள். தலைவி அவளைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டுகிறாள். இளம் பெண்கள் இவ்வாறு பொதுப்பணிக்கு முன் வரவேண்டும் என்று உற்சாகமாக வரவேற்று வாழ்த்துகிறாள். அவளுடைய உரை எல்லோரையும் கவர்ந்ததென்பதில் ஐயமில்லை. ஆனால் தங்களுக்குச் சம்பந்தமில்லாததுபோல், “ஓ, அப்படியா? அப்படியா?” என்று வியந்ததையும், ஒரு வங்கப் பெண்மணி, “சகோதரிகளே, இந்த நிலை தென்னாட்டில் நிலவுவது குறித்து நாம் அதிர்ச்சியுறுகிறோம். இதைக் கொண்டு வந்ததற்காக நம் இளம் சகோதரியை வாழ்த்துகிறோம். நாடெங்கிலுமுள்ள குழந்தைத் தொழிலாளர் பிரச்னைகளை ஆராய அரசு தனிக்குழுவை அமைக்கவேண்டும் என்று நாம் கோருகிறோம்” என்று ஒட்டிப் பேசியதையும் கேட்டுக் கொண்டு விஜி அமர்ந்திருக்கிறாள்.

அந்தக் கூட்டத்துக்கு வரும்போது இருந்த ஆவலும், நம்பிக்கையும் உற்சாகமும் அவளுக்கு அப்போது இல்லை.

எதிர்பார்ப்புக்கள் வெறுமையாகிவிட்டனவா?

இந்தக் குழுவிலிருந்து விஷயம் இன்னொரு குழுவுக்குப் போகும். பல காகிதங்கள், கோப்புக்கள்... கூட்டங்கள், பிரயாணங்கள், படிச் செலவுகள், இடைவேளை உணவுகள்.

“சகோதரிகளே, மாலையில்... தியேட்டரில் கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எல்லோரும் வரவேண்டும்...” என்று அறிவிக்கிறாள் ஒரு சகோதரி.

விஜி ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று முடிவு செய்து கொள்கிறாள்.

அவள் சென்னை திரும்பி வரும்போது, சிற்றப்பா, தந்தையிடமிருந்து வந்த கடிதம் ஒன்றைத் தருகிறார்.

பம்பாயிலிருந்து வந்ததும் ஊருக்குத் திரும்பி வர வேண்டும் என்று சுருக்கமாக அவளுக்கு அவர் எழுதியிருக்கிறார்.

அத்தியாயம் - 25

ரயிலடிக்கு அப்பா வந்திருக்கிறார்.

அவரைப் பார்க்கும்போது விஜிக்குத் துணுக்கென்று மனம் அதிர்ச்சியுறுகிறது. அவரை நான்கு மாதங்களுக்கு முன்னர் தானே பார்த்தாள்? நான்கு வருடங்களாகி விடவில்லையே?

அந்தக் காலை நேரத்தில் வானம் இருண்டு பிசுபிசுவென்று தூற்றல் போட்டுக் கொண்டிருக்கிறது. பெரிய பெரிய கள்ளிப் பெட்டிகளும், சாக்கு, பனஓலைப் பார்சல்களும் வாகன்களுக்காகக் காத்திருக்கும் பசுமையற்ற அந்தத் தொழில் நகரத்தின் இரயில் நிலையச் சூழல் கூடப் புழுதியடங்கிய குளிர்ச்சியில் கண்களுக்குப் பசுமையாக இருக்கின்றது. ஆனால்... அப்பா, ‘வெதர் பீட்டன்’ என்று ஆங்கிலத் தொடர் நினைவில் மின்னும்படி, காலத்தின் தட்ப வெப்பங்களில் சூறாவளிகளில் அலைகழிக்கப்பெற்ற அயர்ச்சியுடன் தோன்றுகிறார். அவருடைய ஐம்பத்தைந்து வயதில் மூப்பு, இந்த நான்கு மாதங்களில் ஒரே திரியாகக் கூடிவிட்டதா?

“உங்களுக்கு உடம்பு சுகமில்லையா அப்பா?”

“இல்லையம்மா? வழக்கம் போலத்தான் இருக்கிறேன். எனக்கொண்ணுமில்லேம்மா, அங்க... எல்லாருஞ் சுகந்தானே?”

“சுசுந்தான்” என்றவள் சட்டென்று நினைவு வந்தாற் போன்று, “ஐயாம்மா சுகந்தானே?” என்று விசாரிக்கிறாள்.

“ஐயாம்மாக்கும் உடம்பு நல்லாயில்ல. நான் போயி அங்கேயே இருக்கவும் முடியல. மாரிசாமி இப்ப சின்னபட்டிலதானிருக்கிறான். இந்த வருசம் எதோ மழை விழுது. காடு கழனி வேலை எடுத்துச் செய்யும் உத்தேசத்துடன் போயிருக்கிறான்.”

மாரிசாமியின் பேரைக் கேட்டதும் அவளுக்கு அபாண்டமான பழியின் நினைவில் முகம் சிவக்கிறது.

“மாரிசாமிக்கு இப்ப ஃபாக்டரியில் வேலை இல்லையாப்பா?”

“இல்லம்மா. முள்ளுவெட்டப் போனவன் காலிலும், கையிலும் முள் குத்திடிச்சி. காலில் புரையோடிச் சீழ் வச்சிருந்திருக்கு. அங்கே வண்டிப் பாதையில்லை. சொல்லியனுப்பவும் உடனே காகிதம் எழுதவும் வசதி இருந்திருக்கல. அவங்களே எதோ எண்ணெய், ஒத்தடம்னு குடுத்திட்டு முடியாம போன பிறகு எங்கிட்ட ஆபீசில வந்து ஓராள் சேதி சொன்னா. சைகிளில் தூக்கி வச்சிப் பாதை வரையிலும் கூட்டி வந்து, பிறகு வண்டியில கூட்டிப்போயி ஆசுபத்திரியில் சேர்த்தேன். காலை எடுக்க வேண்டி வருமோன்னு பயப்பட்டேன். ஆபரேசன் பண்ணி குணப்படுத்திட்டாங்க. கால் கொஞ்சம் சாச்சி நடக்கிறான். இப்பத்தான் ஒரு வாரமாகுது. சின்னப்பட்டி போய், ஃபாக்டரியில் சர்வீஸ் பணம் ஆயிரத்தைந்நூறு போல கிடைச்சிருக்கு. நீ முன்ன ஒரு நாள் சொன்ன இல்ல? சின்னப்பட்டியில் கூட்டுறவு முறையில் மாட்ச் வொர்க்ஸ் ஆரம்பிக்கலாம்னு ஒரு ஆசை. அதுக்குத்தான் இடத்துக்கு முயற்சி செய்கிறேன்... நீ பம்பாய்க் கூட்டத்தில் பேசினியாம்மா? எப்படியிருந்ததம்மா?”

“நான் எதிர்பார்த்தாற்போல் இல்லையப்பா!” என்று சுவாரசியம் இல்லாமல் மொழிகிறாள்.

“நீ பேச இடம் குடுத்தாங்கல்ல?”

“நான் பேசினேன். உங்க பேரைக் கேட்டு, தலைவி அம்மாகூடத் தெரியும்னாங்க. மதுரையில் அந்தக் காலத்தில் அவங்க வந்து பேசியிருக்காங்களாம்!”

“அப்படியா?... நாலு பேர் கூடிச் செயல்படும் ஆர்கனைசேஷன்னா, எல்லாரும் இலட்சியவாதிகளாக இருக்க மாட்டாங்க விஜி. சுயநலக்காரர்கள் தா முக்காலும் இருப்பாங்க. நம்ம நாட்டில் பிரிட்டிஷ்காரங்ககிட்டருந்து விடுதலை பெறுவது தேசீயம்னு நினைச்சாங்க அப்ப. இப்பவும் தேசீயம்னா அதைத்தான் சொல்றாங்க. பெண்கள் கூடி ‘ஆர்கனைசேஷன்’ நடத்துவது இன்னும் கஷ்டம்.”

அவள் ஏதும் மறுமொழி கூறவில்லை. ரிக்‌ஷா வீட்டு வாசலில் நிற்கிறது. செந்தில் ஓடிவந்து அவள் கைப்பெட்டியை வாங்கிக் கொள்கிறான்.

“விஜிம்மா வந்துட்டீங்களா? வாங்க!” என்று அவன் பெயர் சொல்லிப் பன்மையில் அழைப்பது புதுமையாக இருக்கிறது. ஒரு கால் அபாண்டப் பழி இவனையும் புண்படுத்தியிருக்குமோ?

அவள் உள்ளே அடிவைக்குமுன் கொல் கொல் என்று இதயத்தை உலுக்கும் இருமல் ஒலி செவிப்பறைகளை மோதுகிறது.

அப்பாவின் அறைக்குச் செல்லும் கூடத்துக் கதவு நிரந்தரமாக மூடி இருக்கிறது. அது மட்டுமில்லை. நேராக சுமதி அமர்ந்து படிக்கும், அரசு செலுத்தும் மரக்கட்டில் கூடத்தின் மறுபுறம் வந்திருக்கிறது. முன்பு கட்டிலிருந்த பகுதி ஓர் சாக்குப் படுதாவால் மறைக்கப்பட்டிருக்கிறது.

சமையலறைக்குள்ளிருந்து சுமதி தூக்கிச் செருகிய பாவாடையுடன் வருகிறாள்.

விஜி அதிர்ச்சியுற்றவளாக, “செந்தில்! வேலம்மாவுக்கு உடம்பு சுகமில்லையா?” என்று வினவிக்கொண்டு சாக்குப் படுதாவுக்கப்பால் செல்கிறாள்.

“உள்ள போகவாணாம் விஜிம்மா! நீங்க அங்கிட்டிருந்தே பாருங்க” என்று செந்தில் முன் சென்று தடுக்கிறான்.

விஜி தடுப்பைப் பொருட்படுத்தவில்லை.

பினாயில் வாடை மூச்சைக் கவ்வுகிறது.

கீழே பாயில் வேலம்மா தலையணைகள் இரண்டின் சாய்வில் படுத்திருக்கிறாள். வேலம்மாளா அது?

கிடங்குக்குள் இருக்கும் அந்த விழிகளைத் தவிர வேறு எந்தப் பகுதியையும் அவளால் இனம் காணமுடியவில்லை. எச்சில் துப்பும் பீங்கான் பாத்திரத்தை மூடிக் கொண்டிருக்கும் கை... இவ்வளவு குச்சியாக முன்பு இல்லை.

குரோசு குரோசாகத் தீப்பெட்டி ஒட்டிய கைகளா அவை? “வேலம்மா!” என்று அலறுவது போல் அவள் குரல் வெளிப் படுகிறது. வேலம்மாளின் விழிகள் உருகுகின்றன. உடனே இருமல் வந்துவிடுகிறது.

“விஜிம்மா, போதும், வெளியே வாங்க.”

விழிகள் பிதுங்கித் தெறிப்பதுபோல் இருமல்... பாய்ந்து சென்ற விஜியை ஒதுக்கிவிட்டு அன்னையைச் செந்தில் தூக்கிப் பிடித்துக் கொள்கிறான்.

“எனக்கு ஏனப்பா முன்பே எழுதவில்லை?”

“யாருக்குத் தெரியும்? சுமதியிடம் நாலு மாசம் முன்னமே, வேலம்மாளைப் பண்டாசுபத்திரிக்குக் கூட்டிட்டு போயிக் காட்டுன்னேன். செந்தில் வந்தபோது காட்டி எதோ மருந்து வாங்கிக் கொடுத்ததாக முன்பு சொன்னான். அவ என்னைக்காவது முடியாம படுத்திருந்ததாக எனக்கும் தெரியாது. திடீர்னு ரெண்டு வாரம் முன்ன, சுமதி ஆபீசில் வந்து கூப்பிட்டா, ரத்தமா வாயில வந்து மயங்கி விழுந்திட்டாள்னு. நான் உடனே போயி குமரேசன் டாக்டரைக் கூட்டிட்டு வந்தேன். அவர் பார்த்திட்டு எக்ஸ்ரே எடுக்கணுமின்னார். பார்த்தால் ஒண்ணும் மிச்சமில்ல. இரண்டு சுவாச கோசங்களும் கரைஞ்சு போயிருக்கு. வந்து ஊசி போடுறார். இருந்தாலும் செந்தில் நாகர்கோயில் ஆசுபத்திரியில் சேர்த்திடறேன்னு புறப்பட்டுப் போயி நேத்துத்தான் ஏற்பாடு பண்ணிட்டு வந்திருக்கிறான். இன்னிக்கே கொண்டுட்டுப் போறேன்னு சொல்றான். வாடகைக்காரு தெரிஞ்ச எடத்திலே ஏற்பாடு பண்ணிருக்கேன்னா...”

அவள் நாவெழாமல் நிற்கிறாள்.

தன்னைப் பார்க்க வேண்டும் என்று வேலம்மாள் சொல்லி, தந்தை அதனால்தான் கடிதம் எழுதியிருக்கிறார் என்று புரிகிறது.

அவளுடைய இயக்கம் இல்லாத அந்த வீட்டை அவளால் கற்பனைகூடச் செய்யமுடியாது. ஆனால் அவளது இயக்கம் ஓய்ந்துவிட்டது. சமையலறையில் சுமதியை ஒரு நாளும் காண முடியாது. இப்போதும் செந்தில்தான் அவளுக்கு உதவி செய்கிறான். கஞ்சியை ஆற்றித் தாயாருக்குக் கொண்டு செல்கிறான். சாப்பிடுவதற்குத் தட்டுகளைக் கழுவி வைக்கிறான்.

“நீ இன்னிக்குக் காலேஜிக்குப் போகவேண்டாம் சுமி. ஏன்னா, காரு மத்தியானம் கிடச்சிடுச்சின்னா கொண்டுட்டுப் போயிடலான்னிருக்கிறேன்!” என்று அவன் அவளிடம் தெரிவிக்கிறான்.

“சரி, நீங்க அவுங்ககூட சாப்பிட உக்காந்துக்குங்க, நான் போடுறேன்!”

தன்னை அந்நியமாக்கிவிட்டு அவர்கள் இரகசியம் பேசுவது போல் அடுக்களையில் ஏன் நிற்கவேண்டும் என்று விஜி கருதுகிறாள்.

“அப்பா, பொரியலுக்கு உப்புப் போதுமான்னு பாருங்க” என்று கேட்டுக்கொண்டு சுமி பரிமாறுகிறாள். அவள் முன் போலில்லாமல் சட்டென்று ஏதோ பதவி ஏற்றுவிட்ட கௌரவத்துடன் இலங்குகிறாள். கால்களில் சல்சல் என்று கொலுசுகள் ஒலிக்கின்றன. மருதோன்றி துலங்கும் கைகள்... குனிந்து பரிமாறும்போது பின்னல் தரையைத் தொட விழுகிறது.

“தலையைத் தூக்கி முடிஞ்சிக்கிறதில்ல?” என்று செந்தில் நினைப்பூட்டுகிறான்.

நான்கு மணியளவில் கார் வந்து விடுகிறது.

அந்த வீட்டின் உயிர்மூச்சுப் போல் இயங்கிய வேலம்மா, வீட்டை விட்டுப் போகிறாள். விஜிக்கு இனந்தெரியாததோர் துயரம் கவ்வுகிறது.

சுமதி இதையும் இயல்பாக எடுத்துக் கொள்வதுபோல் அசையவில்லை.

“இரவு தான் வருவதற்கு முடியாமலிருக்கும். பதனமாக இருந்து கொள்ளுங்கள்...” என்று சொல்லிவிட்டு அப்பா செல்கிறார்.

கார் மறைந்த அந்த நிமிடத்திலேயே சுமதி அவளிடம் வந்து, “விஜி, நான் மாரியம்மன் கோயில் தெருவரை போய் விட்டு இதோ வந்துவிடுகிறேன். கல்பனாவிடம் ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறேன்...” என்று அவளுடைய பதிலை எதிர்பாராமலே கைப்பையை மாட்டிக் கொண்டு நழுவுகிறாள்.

விஜி உள்ளே வருகிறாள். அந்த வீட்டை, தீப்பெட்டி தாள், அட்டை, சில் என்ற சாதனங்கள் இல்லாமல் அவள் இப்போது தான் பார்க்கிறாள். கூடத்தின் மறுபுறம் ஒரு புதிய மரப்பெட்டி வீற்றிருக்கிறது. பச்சை வண்ணம் தீட்டப் பெற்ற அப்பெட்டியை அவள் மெல்லத் திறக்கிறாள்.

பளபளவென்று துலங்கும் ஸ்டீல் பாத்திரங்கள்... தட்டுக்கள், அடுக்குகள், தவலை, குடம், விளக்கு... இவை அனைத்தும் தீப்பெட்டிகள்... எல்லாம் வேலம்மாளின் கை, கன்னம், கழுத்துச் சதை, இரத்தங்களைக் குடித்துவிட்டு வீற்றிருக்கின்றன.

இன்னும் சுமி போட்டுக் கொண்டிருக்கும் கொலுசு, விதவிதமாக உடுத்தும் சேலைகள் எல்லாமும் கூடத்தான்...

மழை நசநசவென்று யாருக்காகவோ துயரப்படுவது போல் ஊற்றுகிறது. சுமதி கைப்பையில் கொண்டுபோன சிறு குடையை விரித்துப் பிடித்துக் கொண்டு வருகிறாள்.

இவளிடம் சரளமாகப் பேசுவதைக்கூட விரும்பாதவள் போல் புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொள்கிறாள்.

அப்பா மறுநாள் காலையில் திரும்பி வந்து விடுகிறார்.

“மழ வந்து இந்த வருசம் புழப்பக் கெடுக்குது!” என்று குரல் கொடுத்துக் கொண்டு இட்டிலிக்கார முத்தாச்சி இட்டிலி கொண்டு வந்து வைக்கிறாள். வேலம்மாளைப் பற்றி விசாரிக்கிறாள். இடுப்பில் ஒரு கையுடன் இன்னொரு கையை விரித்து, பெருமூச்செரிந்து அங்கலாய்த்து விட்டுப் போகிறாள். மழையின் நசநசப்பு வண்டிகளும் மனித நடமாட்டங்களும் எழுப்பும் புழுதியைக் கசகசப்பாக்கித் தெருவை நரகமாக்குகிறது. தீபாவளியுடன் பட்டாசுக்காரர்களின் பிழைப்பு ஓய்ந்துவிடும். ஆனால் வழக்கம்போல் கட்டைக் கணக்குப் பிள்ளை கூடலிங்கம் வருகிறான். லோசனி இப்போது அந்த வளைவில் இல்லை. வேறு தெருவுக்குக் குடிபெயர்ந்து விட்டாள்.

சுமதியும் கல்லூரிக்குச் சென்றபின் விஜி அப்பாவின் புத்தக அலமாரியைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாள்.

சோஷிலிஸம்; தியரி அண்ட் பிராக்டிஸ்... பொருளாதார தத்துவங்கள் - தீண்டாதார் யார்? - ஆதிவாசி ரிவோல்ட் - அந்த நூலை உருவுகிறாள்.

தனிமை அவள் பலவீனங்களைக் கெல்லிவிடும்போது, அந்த நூலை ஆதரவாகத் தஞ்சம் அடைவதுபோல் புரட்டு கிறாள்.

செல்வம், சுகம், அச்சம் எல்லாவற்றையும் பின்னே தள்ளிவிட்டு அவளைப்போல் ஒரு பெண், அடிமை விலங்குகளுக்கும் கீழ்ப்பட்ட நிலையில் நில உடமைக்காரர் மற்றும் கடன் கொடுத்தவர் ஆகியோரின் இரும்புப் பிடியில் தங்கள் உடலைத் தேய்த்து உழன்ற மக்களிடையே மானுட உணர்வுகளை எழுப்ப அவர்களைத் தேடிக் கால் நடையாக காடு, மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களெங்கும் செல்கிறாள். போலீசும், அரசின் ஏனைய ஆதிக்க சக்திகளும் அவளை அச்சுறுத்தி விடவில்லை. ஆனால் தன்னந்தனியாக என்றில்லை, அவளுக்கு வாழ்க்கைத் துணையாக அமைந்தவர் பூரணமான நம்பிக்கையையும், ஆற்றலையும் அவளுக்கு அளித்திருக்கிறார். அந்தப் பலம், அவளை ஒரு வீர நாயகியாக்குகிறது.

ஆனால், இன்றைய சூழலில் பெண்மை ஏனிப்படித் தாழ்ந்து போயிற்று? அவள் ஆதரிசமாக நினைக்கக்கூடிய பெண்கள்கூட, சுதந்தரத்துக்கு முன் கொண்டிருந்த இலட்சியக் கனலை அவித்துவிட்டார்களே! பிறகு தேசீயம் என்பதற்கும் பொருளே இல்லையா?

அவளைப் போன்ற இளம் பெண்கள், இன்றைய நிலையில் எப்படி இயங்க வேண்டும்?

தனக்குத் திருமணமான பின்னர், தான் சொந்தமாக நினைக்கக்கூடிய மக்களிடமிருந்து தொலைவுக்கு விலக்கப்பட்டு அந்நியமாகி விட்டாற்போல் உணருகிறாள். எல்லோரும் அவளை வித்தியாசமாகப் பார்க்கின்றனர். சுமதியும் கூட அவளை ஒதுக்குகிறாள். தனக்கென்று அந்தரங்கமாக எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் தோழமைக்குரியவர் யாருமே அவளுக்கு இல்லை!

சின்னப்பட்டிக்குப் போய் வரலாமென்று ஓர் உந்தல் தோன்றுகிறது. சிறு துண்டுக் கடிதாசியில் அதைக் குறித்து சுமதியின் சீப்புக்கடியில் வைத்துவிட்டு, கதவைப் பூட்டிக் கொண்டு அவள் கிளம்புகிறாள்.

சங்க அலுவலகத்தில் அலெக்சாந்தர் என்ற இளைஞன் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறான். அவனிடம் தந்தையிடம் கொடுக்கும்படி சாவியைக் கொடுத்துவிட்டு அவள் பஸ்ஸைப் பிடித்துச் செல்கிறாள்.

கூடமங்கலம் வந்ததே தெரியவில்லை...

ஓ! ராசாத்தி ஓடையில் தண்ணீர் ஓடுகிறது. அதனால் பஸ்ஸை அந்தப் பக்கமே நிறுத்திவிட்டான். எல்லோரும் ஓடையில் முழங்காலளவில் நீரில் இறங்கிக் கடந்து செல்கின்றனர்!

அரசனாற்றிலும் மணல் திட்டுகளுக்கிடையே, திருமணப் பெண் புத்தணி பூண்டாற்போல் தண்ணீர் சூரியனொளியில் மின்னிக்கொண்டு ஓடுகிறது. கோயில் மிகவும் அழகிய சூழலில் காட்சியளிக்கிறது. அரசும், வேம்பும் கோயிலுக்கருகில் இணைந்த இள மரங்களாய்ப் பசுமை கொழிக்கிறது; அதைப் பார்க்கையில், தன்னை மயிலேசன் அங்கே வந்து சந்தித்துப் பேசிய நினைவுகள் முட்டுகின்றன.

அதெல்லாம் கனவாக இருந்துவிடக் கூடாதா என்று நினைத்துக் கொள்கிறாள். அவள் வரைக்கும் கனவாகத் தான் போய்விட்டது. தான் தவறாக நடந்துகொண்டதற்கு அவன் வருந்தி அவளை உள்ளத்தோடு விழைந்து வரப்போவதில்லை. மறுமணப் பேச்சுக்கள் எழுந்துவிட்டன.

விரைவில் ரங்கேஷ் வக்கீலை அனுப்பலாம்...

வண்டியிலிருந்து இறங்கி நடப்பவர்களில் பலரைத் தனக்குத் தெரிந்திருக்கக்கூடும் என்ற நினைப்பில் அவள் நெகிழ்ச்சிக்கு இடம் கொடுக்காமல் நடக்கிறாள்.

ஆறுமுகத்தின் தேநீர்க் கடையில் தீண்டாதாருக்கென்ற தனிக் சிளாசு இருக்கிறது. முதலில் அவள் கண்களை அதுதான் குசலம் விசாரிக்கிறது. பிறகு ஆறுமுகத்தின் குரல் கேட்கிறது.

“அடாடா, வாங்க விஜியம்மா? எப்ப வந்தீங்க மட்றாசிலிருந்து?” பீடி குடித்துக் கொண்டும், தேநீரைச் சுழற்றிக் கொண்டும் இருப்பவர்கள் அவளைப் பார்க்கின்றனர்.

“சைகிள்... வேணுமே...?”

“அஞ்சு நிமிசம்... இப்படி உள்ளே வந்து உட்காருங்கம்மா!” என்று அவளுக்கு ஒரு ஸ்டூலை எடுத்து உட்பக்கம் போட்டு உபசரிக்கிறான். பையனை ஏதோ சொல்லி விரட்டுகிறான். பிறகு ஒரு நல்ல டீயடித்து அவளிடம் கொடுக்கிறான். அவள் சின்னப்பட்டி வீட்டில் சென்று இறங்குகையில் மணி இரண்டரை.

ஊர் ஒரே சேறும் சகதியுமாக இருக்கிறது.

நாயுடு வீட்டுக் குழந்தைகள் மண்ணில் சகதியை அளைந்து விளையாடுகின்றனர். இவர்கள் வீட்டுக் கதவு அடைத்திருக்கிறது. திண்ணையில் ஒரு ஆடும் குட்டிகளும் படுத்திருக்கின்றன. புழுக்கைகள் நிறைந்து அசுத்தமாக இருக்கிறது.

விஜி சைகிளை ஏற்றி நடையில் வைத்துவிட்டுக் கதவைத் தட்டுகிறாள்.

“ஐயாம்மா?”

தாளிடப்படவில்லை. தட்டும்போதே திறந்து கொள்கிறது.

“ஆரு...?”

ஐயாம்மாவின் குரலா அது?

திடுக்கிடும் உணர்வுடன் அவள் அருகில் செல்கிறாள்.

“நான்தான் விஜி... விஜி, ஐயாம்மா! உங்க உடம்புக்கென்ன ஐயாம்மா?”

பாட்டி அவளை ஏறிட்டுப் பார்க்கிறாள்.

“ஒடம்புக்கென்ன, போகணுமில்ல...!”

முடியை அள்ளிச் செருகிக்கொண்டு, கையில் ஒரு குச்சியுடன் அக்கம்பக்கம் ஒரு நாய்கூட வராமல் துரத்திச் சுத்தமாக வைத்திருக்கும் ஐயாம்மா, வாயிற்படியில் ஒரு ராணிக்குரிய மிடுக்குடன் அமர்ந்து தனது வைராக்கியத்தை நிலைநாட்டிய அந்த வடிவம் எப்படி இப்படியாயிற்று? முடி கொட்டி, மண்டை தெரிய, முகம் இறகுதிர்ந்த கோழியை நினைப்பூட்டுகிறது. கயிற்றுக் கட்டில் குழிய, படுத்துக் கிடக்கிறாள். குழிந்து பாதாளத்துக்குப் போய்விட்ட கண்கள் இனிமேல் எழும்புவதற்கில்லை என்று இயம்புகிறது.

அருகில் ஒரு ஸ்டவ், அதன்மீது ஒரு கரிச்சட்டி; ஒரு தம்ளர், கருப்பட்டியுள்ள பிளாஸ்டிக் டப்பி, டீத்தூள்...

“ஓடம்புக்கென்ன, மனசுக்குச் சொகம் கெட்டா, ஓடம்பு தன்னால விழுந்து போவுது... ஏண்டி, உம் புருசன் சீமக்கிப் போறப்ப ஒன்ன வந்து பாத்தானா?”

இந்தக் கேள்விகளுக்காகத்தான் என்னிடம் இன்னும் தெம்பை வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று அவள் சொல்வது போலிருக்கிறது.

விஜி உதட்டைப் பிதுக்கியவளாக மௌனம் சாதிக்கிறாள்.

“என்ன உதட்டப் பிதுக்கற...”

“ஐயாம்மா, இப்ப நீங்க எதுக்கு அதெல்லாம் நெனச்சி அலட்டிக்கிறிய?”

“நெனச்சி... அலட்டிக்கிறனா?... ஏண்டி... கோபுரத்திலே ஏறியிருக்கான்னு பெருமப்பட்டேனே? குப்பயில தாந்து நிக்கிறியே? ஊரு உலகமெல்லாம் நம்மப் பாத்துச் சிரிச்ச காலம் போச்சு. மறந்திட்டம்னு கருவப்பட்டனே, சாமி இதுதான்னு சொல்லிட்டா...” கண்ணீரும் கம்பலுமாகக் குரல் தடைபட தளர்ந்த உடல் குலுங்குகிறது. விஜிக்கு ஏன் வந்தோமென்றிருக்கிறது.

“பஞ்சநதம் மச்சினிச்சி பொண்ணக் குடுத்திடணும்னு புடியா நிக்கிறா. ஆனா, அண்ணன் பாத்து சீமக்கி அனுப்பிச்சிருக்கா. தங்கமான புள்ள. நம்ம சரக்கு ரோசாப்பூன்னு நினைச்சே, சப்பாத்திக்கள்ளின்னு ஆயிடிச்சி...”

விஜி அன்று மாலையே திரும்பி விடுகிறாள். பஸ்ஸில் ஏறி அமர்ந்த பிறகுதான் மாரிசாமியைக் கூடப் பார்க்கவில்லை என்று நினைவு வருகிறது.

அத்தியாயம் - 26

சுமதியை விஜி இப்போது கண்காணிப்பதுபோல் கூர்மையாகப் பார்க்கிறாள். எப்போதுமே சுமதிக்குத் தன்னை அலங்காரம் செய்துகொள்ளப் பிடிக்கும். கண்களுக்கு மை தீட்டிக் கொள்வதற்கே பல நிமிடங்கள் ஆகும். முடியைக் கத்தரித்துக் காதோரங்களில் வளைத்துக் கொண்டிருக்கிறாள். வேலம்மா என்ற தடை கழன்று விட்டபின் சுதந்தரம் அதிகமாகி விட்டாற்போன்று, சேலையும் இரவிக்கையும் மிகவும் இறங்கி இருக்கின்றன. ஞாயிறன்று காலையில் செந்தில் வருகிறான். வழக்கம்போல் அல்வா, சேவு, பழங்கள், பூ... எல்லாவற்றுடன் ஒரு பிளாஸ்டிக் பையையும் சுமதியிடம் கொடுக்கிறான்.

அதிலிருந்து இரண்டு நைலக்ஸ் சேலைகள்... பெரிய பூக்களுடன் விழுகின்றன.

“அம்மாவுக்கு எப்பிடி இருக்கு?...” என்று கேட்க வாயெடுக்கும் விஜி, சேலையைக் கேள்விக்குறியுடன் பார்க்கிறாள்.

ஆனால் சுமதியோ, அதற்குள் சேலையைத் தன்மீது வைத்துக்கொண்டு அழகு பார்க்கிறாள்.

“விஜி, உனக்குப் பச்சை எடுத்துக்க...!”

“அது சரி, இதெல்லாம் இப்ப எதுக்கு? எனக்கு நைலக்ஸ் சேலையே பிடிக்காதுன்னு தெரியாதா உனக்கு? சமய சந்தர்ப்பம் தெரியாம... வேலம்மா எப்படி இருக்கா?”

“தேவலாம் விஜிம்மா. அவங்கதான் இரண்டு சீலை வாங்கிட்டுப் போகணும்னு புடிவாதமாச் சொன்னாங்க...”

“அவங்களுக்குச் செலவு இருக்கிறப்ப, இதெல்லாம் ஏன் அநாவசியமா இப்ப, சேலை வேணும்னா நாங்க வாங்கிக்கிறோம்? இதுபோல சமாசாரத்தில நீ ஏன் தலையிடுற?...”

விஜியின் கடுமை சுமதிக்குப் பிடிக்கவில்லை.

“வேலம்மா வாங்கிக் குடுத்தா உனக்கேன் கோபம் வருது? உனக்கு வேண்டாட்டிப் போ! நானே ரெண்டையும் வச்சுக்சுறேன்...”

“வச்சுப்பே! அவளப் போயி ஒருதரம் பார்க்கணும்னு கூட உனக்குத் தோணல. இத்தினி சுயதலமா நீயிருப்பேன்னு ஃன் நினைக்கல!”

“ஆமா உனக்கு எப்பவும் இப்பிடி ஒரு கெட்ட குணம் இருக்கலாம். எனக்கு நல்ல சேலை உடுத்தணும், நல்லாயிருக்கணும்னு ஆசையிருக்கக்கூடாது, இல்ல?”

“அப்படி எப்போதும் ஆசைப்பட்டிருப்பது தப்புத்தான். உனக்குன்னு சில கடமைகள் இருக்கு. மற்றவர்களுக்கில்லாத சில வசதிகள், ‘ப்ரிவிலிஜஸ்’ உனக்கு இருக்கு. அதை ஒரு பொது நோக்குடன் பயன்படுத்தணும். படிக்க நேரமிருக்குதோ இல்லையோ, அலங்காரம் செய்து கொள்வதில் அதிகக் கவனம் எடுத்துக்கற. லீவு நாள்னா, சினிமாவுக்குப் போகாம இருக்கிறதில்ல. உன்னைப்போல் நான் ஸ்டூடன்டா இருக்கையில் எத்தனையோ விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும், லட்சிய தாகமும் எங்களுக்கெல்லாம் இருந்தது. இப்ப... கடனேன்னு படிக்கிறீங்க. உன் கிரேட்... அப்பா சொன்னார். வெட்கமாயிருக்கு!” சுமதியின் கருவலான முகம் ஓர் கணம் இறுகுகிறது. பிறகு பாய்கிறாள்.

“நிறுத்து, உன் கடமைய முதல்ல நீ கவனிச்சுச் செய்யி. பிறத்தியாருக்குப் பிறகு உபதேசம் பண்ணலாம்! உன்னைப் பத்தி ஊரே சிரிக்கிறது. அப்பா தலை குனிஞ்சி போறது உன்னால் தான். வேலம்மாவுக்கும் அதுதான் சீக்கு!”

மருமத்தில் பார்த்து அடிக்கும் இந்தத் தாக்குதல் விஜிக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. கண்கள் ஊற்றுப்பறித்து விடுகின்றன. விழுங்கிக் கொள்கிறாள்.

“இதபார் சுமி, உனக்குச் சரியாய்த் தெரியாத விஷயத்தில் நீ தலையிடாதே. ஆனால் நான் உன்னைவிடப் பெரியவள்; அநுபவமும் உள்ளவள். உன்னைப் போன்ற இளம்பெண்கள், இன்று சமுதாயத்தில் பெண்கள் நிலையை அவலமாக்கும் கேடுகளைப் பற்றிச் சிந்தித்துப் போராடத் தயார் செய்து கொள்ளவேண்டும். நீ சேலையையும் ரவிக்கையையும் கீழே இறக்கி, ஊரைப் புரட்டுகிறாய். இப்படி உடுத்துக் கொண்டு தெருவில் காட்சிப் பொம்மைகள் போல் போனால் - ‘ஈவ்டீஸர்ஸ்’ என்ற வருக்கம் ஊக்கமாக வளராதா? இதெல்லாம் சின்ன விஷயமல்ல சுமி!”

“இதபார், இது என் சொந்தவிஷயம். இதிலெல்லாம் தலையிட உனக்கு ஒரு உரிமையும் இல்லை!” என்று சல் சல்லென்று கொலுசு ஓசையிட அவள் அப்பால் செல்கிறாள்.

இந்த உரையாடலைக் கேட்டும் கேட்காமலும் எதோ புத்தகத்தைப் புரட்டுவதுபோல் செந்தில் பாவனை செய்கிறான்.

விஜி சமையலறையில் சென்று காபி கலக்கிறாள்.

செந்திலிடம் பழைய கவடில்லாச் சந்தோசம் சுவடு தெரியாமல் போய்விட்டது.

“காபி குடிக்கிறாயா செந்தில்?”

“நீங்க எதுக்கு விஜிம்மா சிரமப்படணும்? நான் காபி குடிச்சிட்டுத்தான் வாரேன். அப்பா எங்கே?”

“அவர் காலையில் சின்னப்பட்டிக்குப் போவதாகச் சொன்னார். சுமி விவரமே தெரியாத பிள்ளையாக இருக்கிறா. உன் அம்மா இவ்வளவு செல்லம் கொடுத்திருக்கக்கூடாது!.. நேத்து சாயங்காலம் இந்த மழை நசநசப்பில் யாரோ சிநேகிதிகளுடன் சினிமாவுக்குப் போய் வந்திருக்கிறாள். சொன்னால் கோபம் வருது...”

அவன் மறுமொழியின்றி எங்கோ பார்க்கிறான்.

“அப்ப வரேன் விஜிம்மா. லாரி திருவனந்தபுரம் பக்கம் போகுது. நான் அம்மாவைப் பாத்துட்டு எதுனாலும் சொல்லணுமா?”

“எனக்கு வந்து பார்க்கணுமின்னிருக்கு. ஐயாம்மாக்கும் ஊருல உடம்பு நல்லாயில்ல. இந்த வருசம் இவ படிப்பு முடியுமட்டும் இங்கதானிருக்கணும்.”

அவன் முள்ளின் மேலிருப்பதுபோல் தவித்துவிட்டு விடைபெற்றுச் செல்கிறான். சுமதி வாயிற்படியில் நின்று அவனிடம் பேசுவதாகத் தெரிகிறது.

சந்தேகங்கள் சிந்தையை வளைக்கின்றன.

மறுநாள் காலை அவள் காய்கறி வாங்கச் செல்கையில் கோயில்முன் லோசனியைப் பார்த்து விடுகிறாள்.

“விஜி எப்ப வந்தே? வேலம்மாவுக்கு உடம்பு சுகமில்லேன்னாங்க. இப்ப எப்பிடி இருக்கா?”

“நா வந்து பத்து நாளாகப் போவுது. வேலம்மாளை ஆசுபத்திரிக்கு நாகர் கோயிலுக்குக் கொண்டு போயிருக்கா.”

“ஐயோ? எனக்குத் தெரியாதே? ஆரு. செந்தில் கொண்டிட்டுப் போயிருக்கிறானா?...”

“ஆமாம். நீ எத்தினி நாளா இங்கவிட்டுப் போயிட்ட; இப்ப பேச்சுத் துணைக்குக்கூட யாருமில்ல லோசனி!...”

“சுமி எப்படி இருக்கு? காலேஜுக்குப் போவுதா?”

“போறா, ஒண்ணுமே தெரியாத விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கிறா. வேலம்மா எப்பிடி இருக்கான்னு கூட நாந்தான் கேட்கிறேன்...”

லோசனி எதையோ சொல்லத் துடிப்பவளாக... ஆனால் மௌனமாக எங்கோ பார்க்கிறாள்.

“ஏ, என்ன விசயம் லோசனி?”

“சுமி விசயம் உனக்குத் தெரியும்ல?”

“என்ன விசயம்?”

“அவ, செந்திலோடு ரெண்டு நா எங்கேயோ போயிட்டா. வேலம்மாவுக்குச் சொல்லவும் முடியல. மெல்லவும் முடியல. வீட்டில லகள. உங்கப்பா அதுங்கூடப் பேசுறதேயில்ல. வேலம்மாக்கு அதான் சீக்குன்னுகூடச் சொல்லுவே. அப்பவே ரத்தமாகத் துப்பிட்டிருந்தா...” இடி விழுந்தாற் போலிருக்கிறது.

“செந்தில் இங்க வந்தா ராத்தங்க மாட்டா. வாரதே இல்ல. இந்த சுமிதா... நீ எப்படி இருக்கிற, விஜி! உன் கால் தூசுக்கு வராது அது. வேலம்மா சொல்லி அழுதா... ஐயோ லோசனி, நா வளத்த புள்ள நானே இதுக்கு உடந்தைன்னு ஊரு முச்சூடும் சொல்லுவாங்களேடீன்னு அப்படியே உருகிப் போயிட்டா. வெளியாளுக்குத் தெரிஞ்சா குல்லுனு போயிடுமே?' இட்டிலிக்கார ஆச்சி கேட்டப்ப, பாட்டி வீட்டுக்குப் போயிருக்கான்னு சொன்னா. செந்தில் அம்மாகிட்ட வந்து அழுவாக்குறயா, ‘நான் என்னப் பண்ணுவேம்மா. நீ என்னக் கட்டிக்கிலேன்னா உயிரே விட்டுடுவேன்னு தொந்தரவாப் பண்ணிச்சி. அப்பிடியும் எனக்கு பயமாயி, குத்தாலத்து கோயிலில மால போட்டுக் கிட்டோம்’னு சொன்னானாம். உங்கையா உங்கிட்ட எதும் சொல்லலியா?”

விஜிக்குப் பளிச்சென்ற தோற்றங்கள் இருளுள் புதைவது போல் தோன்றுகிறது. மழை சரசரவென்று பிடித்துக் கொள்கிறது.

“இத்தினி வருசமா இருந்த எடத்தைவிட்டுப் போனது நல்லாவேயில்லை விஜி. மழ பிடிச்சிட்டது. நீ போம்மா...”

விஜி குடை வைத்திருக்கிறாள். அவள் நனைந்து கொண்டு விரைகிறாள். விஜிக்கு அன்று வேலை செய்யப் பொருந்தவில்லை.

ஐயாம்மாவுக்கு இந்தச் சங்கதி தெரியுமோ?

தெரிந்தால் உயிரை விட்டுவிடுவாள்!

செந்தில் பத்தாவது முடிக்கவே திணறினான். தேறினானோ இல்லையோ, தெரியாது. ஆனால், இவள் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிறாள்.

படிப்புக்கும் இதுபோன்ற வேட்கைகளுக்கும் சம்பந்தமில்லை என்று தோன்றுகிறது. படித்துச் சிந்திக்கத் தெரிந்த அவளே வேட்கையின் மாயத்தில் ஒரு நல்ல வாழ்க்கைத் துணைவனைத் தேர்ந்து கொள்வதில் ஏமாந்து போனாள்.

செந்தில் உண்மையில் எத்தகையவனென்று எப்படித் தெரியும்? ஆனால் அவளுக்குத் தெரிந்து அவன் பண்பாளன் தான். அவன் அவனுடைய நிலையில் உள்ளவர்களைப் போல் எப்போதேனும் பீடி குடித்துக் கொண்டோ, கீழ்த்தரமான பேச்சுக்களைப் பேசியோ அவள் கண்டதில்லை. சாராயம், சூது, பெண்கள் தொடர்பு என்று இருந்தால் கையில் பொருள் தங்காது. அம்மாவைப் பார்த்துவிட்டுச் செல்லாமலிருக்க மாட்டான். அவனால் தனிக் கார் வைத்து நோயுற்ற தாயைக் கூட்டிச் செல்ல முடிகிறது. ஒரு சொல் அதிர்ந்து பேசியதில்லை. அப்பாவிடம் மிகுந்த மரியாதை காட்டுகிறான். ஆனால் வெளித்தோற்றம் கண்டு எதுவும் சொல்வதற்கில்லை.

சுமி பகல் சாப்பாட்டுக்கு வருவதில்லை. ஆனால், மாலையில் ஆறு மணியாகியும் ஏன் வரவில்லை?

மழைகால இருள் பரவி இருக்கிறது.

அவள் வாயிற்படியில் வந்து நின்று தெருவைப் பார்க்கிறாள். அப்பா வருகிறார்.

“ஏம்மா, விளக்கப்போடக்கூடாது?”

“சுமி இன்னும் வரலியே?”

“சுமி செந்திலுடன் வேலம்மாவைப் பாக்கப் போயிருக்கா.”

“ஓ, என்னிடம் சொல்லக்கூடாதா, அதை?”

அவர் இரு கைகளையும் நிலைப்படியில் வைத்துக் கொண்டு விளக்கொளியில் சித்திரம்போல் நிற்கும் அவளையே பார்க்கிறார்.

“உனக்குச் செய்தி தெரிஞ்சிருக்காது விஜி. அவங்க... அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. எப்படியோ சந்தோஷமாக இருந்தால் சரி. செந்தில் நல்ல பையன் தான். ஆனால் வேலம்மாவுக்கு இது சீரணிக்கக் கூடியதாக இல்லை. ஏன்னா, ஊரு உலகக் கணிப்பை நினைச்சே அவள் தன் விரும்பம்னு ஒண்ணுமில்லாதவளாக ஆயிட்டா. எங்கிட்ட இது நாள் நிமுந்து பேசினதில்ல. அன்னிக்கு ரொம்ப வருத்தப்பட்டு அழுதிட்டா. இதுல என்ன தப்பு வந்திடிச்சி, நீங்க எதுக்கு இப்பிடி வருத்தப் படணும்னா கேட்டாத்தானே? ஐயோ, அது பெரிய எடத்தில போக வேண்டிய பொண்ணு. அதுக்குச் சமமான படிப்புக்கூட இல்லாதவனக் கட்டிக்கலாமான்னு அத்தயே சொல்லிட்டிருந்தா. சுமி கூட மனப்பண்பு கொண்டு எந்த வேலை செய்தால் என்னன்னு காதலிச்சாளான்னு தெரியல. இது நிலைச்சு நிக்கணும். நாளைக்கு நம் புருசன் லாரி ஓட்டுறவனான்னு நினைச்சி முரண்டு பண்ணக்கூடாது. நா ஒண்ணு மட்டும் சொன்னேன். படிச்சி முடிஞ்சு ஒரு நிலை வரும் வரையிலும் நீங்க தனிக்குடும்பம்னு வைக்க வேண்டாம்ன்னு சொன்னேன். படிப்பு முக்கியம்...”

விஜி எந்தப் பதிலும் கூறவில்லை.

மழை அடைத்துக் கொட்டுகிறது. தொழில்கள் முடங்குமளவுக்குப் பெய்து, ஊரின் சாக்கடைகளை நிரப்புகிறது. கை வண்டிகளில் தாள், குச்சி அட்டைப் பெட்டிகள் இழுத்துச் செல்லும் கூலிக்காரர் முடங்க வேண்டியிருக்கிறது. “என்னா எளவு, இந்த ஊருல இப்பிடி மள கொட்டித் தொலக்கிது” என்று வசை பாடிக்கொண்டு முத்தாச்சி இட்டிலி கொடுத்து விட்டுச் செல்கிறாள்.

தீபாவளி கொண்டாட ஊரெல்லாம் களிப்புடன் கண் மலரும் நேரத்தில், செந்தில் வந்து, முன்னிரவில் வேலம்மாளின் ஆவி பிரிந்துவிட்டதைத் தெரிவிக்கிறான்.

அத்தியாயம் - 27

ராசாத்தி ஓடையில் நீர் சுழித்துக் கொண்டு செல்கிறது. அரசனாற்றைப் போய்த் தழுவிக் கரைகிறது. அதனால் இதற்கு ராசாத்தி ஓடை என்று பெயராம். மம்முட்டியான் சொன்ன கதை நினைவுக்கு வருகிறது. பஸ் கூடமங்கலத்தோட நிற்கும் ஊர்தியல்ல. நீளநெடுகத் தொலை ஊருக்குச் செல்லும் அந்த ஊர்தியில்தான் விஜி சின்னப்பட்டிக்குக் கிளம்பி இருக்கிறாள்.

இனி ஓடைத் தண்ணீர் சற்றேனும் வடிந்தால்தான் அவர்கள் அக்கரை செல்ல முடியும்.

“எனக்குத் தெரிஞ்சி இந்தக் காட்டில இம்புட்டு மழை அம்பது வருசத்துக்கு முன்னதா பெஞ்சிச்சி” என்று ஒரு முதியவர் சொல்லிக் கொண்டு சுருட்டை வாயில் வைத்துக் கொள்கிறார்.

வேலம்மாளின் மறைவுக்குப் பிறகு செந்தில் உடனே லாரி ஓட்டச் செல்லவில்லை.

விஜிக்கு அங்கே அவர்கள் சுதந்தரத்தில் குறுக்கிட்டுக் கொண்டு நிற்பதுபோல் தோன்றுகிறது. பாட்டி உடல் நலிவாகப் படுத்து கஞ்சி வைத்துக் கொடுக்கவும் நாயுடுவின் மனைவியை நம்பிக் கொண்டிருக்கிறாள். விஜி சின்னப்பட்டிக்குச் செல்லக் கிளம்பி வந்திருக்கிறாள்.

“இப்பிடி மழை ஊத்திச்சின்னா, வச்ச பயிரெல்லாம் போயிடும். காஞ்சும் கெடுத்து, பேஞ்சும் கெடுக்குது!” என்று ஒருத்தி முணமுணக்கிறாள். ஓடைக் கரையில் மறுபக்கம் எங்கிருந்தோ சிவகணபதி வாத்தியார் வருகிறார்.

“விஜிம்மா! வாங்க, சவுக்கியமா... எப்ப வந்தீங்க மட்றாசிலேந்து? அன்னிக்கென்னமோ நீங்க சின்னப்பட்டிக்கு வந்திட்டு உடனே போயிட்டதா ஆறுமுகம் சொன்னான்...”

“ஆமாம். மழை ஊரில எப்படி இருக்கு... ஸ்கூலுக்குப் பிள்ளைகள் வராங்களா?” என்று கேட்டுக்கொண்டே நடக்கிறாள்.

“எங்க? மழை பேஞ்சாலும் குளிரடிச்சாலும் தீப்பெட்டி ஆபீசு பஸ்தான் வரும். பள்ளிக்கூடத்துக்கு அப்படியா?... விஜிம்மா! இங்கிலிஷ் பேப்பரில நீங்க நம்ம ஊர்ப் பிள்ளைங்களைப் பத்தி எழுதியிருந்தீங்கன்னு போன வாரந்தான் புது நகரத்தில் சொன்னாங்க. அந்தப் பேப்பரத் தேடித் தேடிப் பார்த்திட்டு, இப்பத்தா, நம்ம கூடமங்கலத்துத் தேவர் வீட்டிலே எடுத்துக் கொடுத்தா, பார்த்தேன்... அருமையான வேலை பண்ணிட்டிய விஜிம்மா!”

“அதெல்லாம் பொய்யின்னு மறுப்பும் வந்திச்சே, அதையும் பார்க்கலியா?”

சிவகணபதி சார் விழிகள் தெறித்துவிடும் போல் பார்க்கிறார்.

“அப்படியாம்மா?”

“ஆமாம், பத்திரிகைக்காரர், பணக்காரர் என்றால் அவர்கள் சொன்னபடியும் கேட்பார்களே?”

“உண்மைதாம்மா. பணக்காரன் அரசையே இன்னிக்குக் கையில் போட்டுக்க முடியுமே!”

ஆறுமுகத்தின் கடை, குளிருக்கும், சாரலுக்கும் அஞ்சிச் சாக்குப் படுதா போர்த்துக் கொண்டிருந்தாலும் சுறுசுறுப்பாக இருக்கிறது.

“கண்மாய் ரெம்பி வழியுதாம்! எல்லாம் ரெம்பக் காவந்தாயிருக்கா...!”

“சதா ரேடியோவில் சொல்லிப் போடுறாளே!”

“தொழிலாளியளுக்கெல்லாம் இந்த வருசம் கட்ட நட்டந்தா.”

“தீப்பட்டி ஆபீசுக்காரனுக்கு என்ன நட்டம்? அவ வெய்யலப் பாத்தா காயப்போடுறா? சி கிளாஸ் பாக்டரிய வாணா மூடிருப்பான். வெயிலை நம்பிக் குச்சி காயும்...”

“அவனுவ போட்டியும் இல்லாம கொள்ளையோ கொள்ளையடிப்பா, இன்னும் அங்க இங்க பிராஞ்சி பிள்ளைகளைப் பொறுக்கிட்டுப் போவ. ஆயியப்பனும் மழைக்கு வூட்டுக்குள்ளே குந்திட்டு, வவுத்துப் புள்ளயத் தவிர மிச்சதெல்லாம் அனுப்பிச்சி வைப்பா!” என்று எரிச்சலுடன் சிவகணபதி வாத்தியார் கூறிக்கொண்டு, “இப்படி உக்காருங்க விஜியம்மா!” என்று ஓரமாக ஒரு நாற்காலியை காட்டுகிறார்.

“சைக்கிள் பிரேக் புடிக்கல. பாதை நல்லால்ல விஜிம்மா. தண்ணீயும் சேறும் எப்படியோ இருக்கு!” என்று கூறிய வண்ணம் டீ கொண்டு வந்து ஆறுமுகம் கொடுக்கிறான்.

“என்னப்பா இப்படிச் சொல்ற?... தேவர் வீட்டு வண்டி எதினாலும் இருக்குமில்ல? மாட்டு வண்டி...?”

“டோன்ட் வொரி ஸார், நான் நடந்து வரேன்...”

விஜி சற்றே சேலையைத் தூக்கிச் செருகிக் கொண்டு சிவகணபதியுடன் பேசிக்கொண்டு குறுக்குப் பாதையில் நடக்கிறாள்.

பாதையெல்லாம் குண்டும் குழியுமாக நீர்; சடச்சடக் கென்று செருப்பு பின்புறம் சேலையில் மழை நீரை வாரி அடிக்கிறது.

“நான் உங்களை நேர்ப்புகழ்ச்சி செய்யறேன்னு நினைக்காதிங்க, விஜிம்மா. நீங்க ரொம்ப அபூர்வமானவங்க. இப்படி உங்களைப் போலயிருக்கிறவங்க நடப்பாங்களா?”

“இங்கே ரோடு செப்பம் செய்யிறதோ, வண்டி விடுவதோ என் கையில் இல்லையே? நடப்பதால் என்ன குறைஞ்சி போச்சி?”

“அதுதான் அபூர்வம்னேன். அப்பாவும் மாரிசாமியும் இங்க மாட்ச் வொர்க்ஸுக்கு, ‘சி’ கிளாஸ்தான், அதுக்கு முயற்சி பண்ணிட்டிருக்கா. பஞ்சாயத்துல இடம் சம்பந்தமாக நடத்திருக்கிறாரு. இப்பிடி ‘சி’ கிலாஸ் வந்திச்சின்னா, எல்லாம் சேத்து, கூட்டுறவு சொசைட்டின்னு ஆக்கிடலாம், தாய் தகப்பனுக்கும் தொழில் வருவாய்னு இருக்கும். பிள்ளைகள் கொஞ்ச நேரம் குச்சியடச்சிட்டு படிக்கப்போகும். நல்ல நம்பிக்கையுள்ள மக்கள் நாட்டுக்கு உருவாகலாம்.”

அவள் எதுவும் பேசவில்லை. பொடித்தூற்றல் பிடித்துக் கொள்கிறது. அவள் குடை கொண்டு வரவில்லை. சிவ கணபதி சார் குடையை அவளிடம் கொடுத்துவிட்டுத் தன் தலையில் துண்டைப் போட்டுக் கொள்கிறார்.

“குடை நினைப்பில்லாம இறங்கி வந்திட்டேன். நான் கிளம்புறப்ப வெயில் அடிச்சிச்சி, நீங்க நனையுறீங்களே சார்?...”

“பரவாயில்ல. இத ஆச்சி...”

வானவன் கொடையில் ஊரே பசுமையாகக் காட்சி அளிக்கிறது. நாய்களும், பன்றிகளும் ஆட்டுக்குடில், கோழில் கூண்டுகளும் வீட்டுத் திண்ணைகளில் மனிதர்களோடு குந்தியிருக்கின்றன.

இவள் வீட்டுத் திண்ணையில் சலவைக்காரச் சிங்காரத்தின் கழுதையும் ஒண்டியிருக்கிறது.

விஜி கதவைத் தள்ளுகிறாள்.

உள்ளிருந்து சித்தப்பா வருகிறார்.

“அட எப்ப வந்திய சங்கரலிங்கம்?”

“நேத்து ராத்திரி வந்தேன். வாத்தியாரையா சுகமா? வா விஜி, உள்ளாற வாங்க ஸார்!”

“இருக்கட்டும் திண்ணையில் உக்காந்து பேசுறதுக்கில்ல, எல்லாம் ஈரமாயிருக்கு...” என்று விடைபெறுகிறார்.

விஜி குடையை அவரிடம் கொடுத்துவிட்டு, பிளாஸ்டிக் பையினுள் கொண்டு வந்திருக்கும் மாற்றுச் சேலை துணிகளுடன் அறைக்குள் செல்கிறாள். துணியைப் பிழிந்து பின்புறத் தாழ்வரைக் கொடியில் போட்டுவிட்டு கூந்தலை அவிழ்த்துத் துடைத்துக் கொள்கிறாள்.

இத்தனையும் தெரியாதவள்போல் எதிரொலி கொடுக்கும் சக்தியின்றி பாட்டி கட்டிலில் படுத்திருக்கிறாள்.

“அம்மாளக் கூட்டிட்டுப் போயிடலாம்னு வந்தேன், அப்பா காயிதம் எழுதியிருந்தாரு. புள்ளங்க பள்ளிக்கூடம் கடை எப்படி எல்லாம் விட்டுப் போட்டுவர முடியும்? வரமாட்டேங்கிறா. இந்த எடத்திலதா எங்கட்டை வேவணும்றாங்க. நீ சொல்லு விஜி!”

“ஐயாம்மா...? விஜி... விஜி வந்திருக்கிறேன், பாருங்க!” குனிந்து அவள் தோளைத் தழுவிக் காதோடு மொழிகிறாள் விஜி.

முதியவள் திரும்பிப் பார்க்கிறாள். இரு கண்களிலிருந்தும் நீர்த்தாரை கன்னங்களில் வழிகிறது. விஜி மெதுவாக அந்தக் கண்ணீரைத் துண்டு கொண்டு ஒத்துகிறாள். “அழுவாதீங்க, ஐயாம்மா, எதுக்கு அழுவுறீங்க?” ஆனால் அந்தத் துயரம் எல்லை காணாமல் பெருகி வருகிறது.

“இப்ப எதுக்கு இப்பிடி வருத்தப்படுறீங்க, ஐயாம்மா ஒங்களுக்கு என்ன கொற?”

“இன்னும் என்ன வேணும்டி, மானமே இடிஞ்சிவுழுந்தும் நான் உசிரோடு இருக்கிற, ஒருத்தி அரமனபோல வூடும் காரும் காசும் பணமுமான புருசன் வாணான்னு வந்திட்டா. இன்னொருத்தி... இன்னொருத்தி...”

பழைய பாசிகள்... பாசிகளல்ல... அது மேலோட்டமாக மிதப்பவை அல்லவா? இது மிக ஆழமாக வேரோடிவிட்ட முட்செடி வேர். இதைக் கெல்லி எறிவது சாத்தியமா?

பாட்டி அவர்களை மன்னிக்கவேயில்லை. பாசம் - விஜி விஜி என்றிருந்த அன்பு, ஆதங்கம் எல்லாம் அதைக் காட்டிலும் வேரோடி இருக்கவில்லை. அந்தக் குரல் தழுதழுப்புடன் இளைய மகனைக் கூப்பிட்டுக் கையைப் பற்றிக் கொள்கிறாள். “சிவா, நா செத்துப் போனா, எனக்கு நீயோ, ராசுவோ தா எல்லாஞ் செய்யணும்...” என்று அவள் கூறக் கேட்கும் விஜி உள்ளோடு உடைந்து போகிறாள்.

தாய்ப் பாசத்திலும் பொருள்தான் குறியாக இருக்குமா? கண்ணீரை விழுங்கிக் கொண்டு வெளியே வருகிறாள்.

வாயில் திண்ணையில் ஒரு பன்றியும் குட்டிகளும் முடங்கியிருக்கின்றன. அழுக்கையும் மலத்தையும் உண்ணும் அந்தப் பிராணிகளிடம் தாய்ப்பாசம் மேலானதாகத் தோன்றுகிறது. பொருள் குறுக்கே நின்று தாயைக் குட்டிக்குக் குட்டி வித்தியாசம் பாராட்டச் செய்யவில்லை.

ஆராய்ந்து பார்த்தால், பொருள் மீதுள்ள பற்று, சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பது புலனாகிறது. அடுத்தவரும் நன்றாக இருக்கவேண்டும் என்ற இலட்சிய அடிப்படையில் அமையுமானால், அங்கு பொருளின் மீதுள்ள வெறித்தனமான சுயநல ஆசை கெல்லி எறியப்படுகிறது.

அப்பா, வேலம்மாளுக்குப் பதிலாக மிகப் பணக்காரியான தொரு வேறு மதக்காரியை ஆதரவாக அழைத்து வீட்டில் இடம் கொடுத்திருந்தால், பாட்டி இவ்வளவு பிடிவாதம் காட்டியிருப்பாளா? அவள் மணந்துகொண்டு கணவன், ஒரு சாமானியனாக, சிவகணபதி சாரைப் போலவோ, நாயுடுவைப் போலவோ இருந்திருந்தால். ஐயாம்மா இவ்வளவு கண்டிப்பாக, தான் பாசம் கொண்டு பாராட்டின பேரப் பெண்ணை வெறுக்கமாட்டாள். இப்படிப் பார்க்கையில், சுமி செந்திலை மணந்தது தவறில்லை. மனிதனை மனிதன் மனிதனாக மதிப்பதில்லை. அவன் மதிப்பு, அவனைச் சார்ந்த பொருளின் பின்னணியைப் பொறுத்து, ஏறுகிறது; இறங்குகிறது.

மனிதனை மனிதனாக, ஒருவரை ஒருவர் இனம் புரிந்து கொண்டு, கூட்டங்களாக உறவு கொண்டு ஒற்றுமை பெருகும் போதுதான் மானுடம் உயர்வு பெறப்போகிறது.

அவள் அங்கு நிற்கையில், காலைச் சாய்த்துக் கொண்டு கையில் ஒரு தடியை ஊன்றிக்கொண்டு மாரிசாமி வருகிறான். அவன் பின் தலையில் சாக்கு போர்த்தவளாக ஒரு பெண், கட்டை குட்டையாக, துடிப்பான நடையில் பின் கொசுவம் அசைய வருகிறாள்.

“விஜிம்மா! வணக்கம்... எப்ப வந்திய?... அன்னிக்கு வந்தீங்களாம். பாக்க முடியல... இவதா, செவுந்தி...! இதுதாம்மா செவுந்தி...”

“அடாடா, இதை அப்பா சொல்லலியே? சந்தோசம், வாழ்த்துக்கள்! மேலே ஏறி நில்லுங்க...”

செவுந்தி அந்தப் பன்றி, நாய்களை விரட்டுகிறாள்.

கல்லெடுத்துப் போட்டும் அது அசையவில்லை. ஆனாலும் சிரமப்பட்டு விரட்டிவிட்டு, சுற்றிச் சென்று பின் பக்கமிருந்து துடைப்பம் கொண்டுவந்து திண்ணையைச் சுத்தம் செய்கிறாள்.

அவர்களைப் பாட்டி உள்ளே அனுமதிக்கமாட்டாளே!

“விஜிம்மா, நீங்க பேப்பரில எழுதினது, மீட்டிங்கில பேசினது எல்லாம் தெரிஞ்சி ரொம்ப சந்தோசப்பட்டோம். எங்களுக்குப் புரியறாப்பல தமிழ்ப் பேப்பரில எழுதிப் போடக் கூடாதாம்மா?...”

“நான் யாருக்கோ எழுதி என்ன பிரயோசனம்? இங்க மனுசங்க மாறவே மாட்டாங்க போலிருக்கே!” என்று வருந்து கிறாள் அவள்.

தனது இளைய மகன் கையினால் கொள்ளி பெற வேண்டும் என்ற அவளது வேரூன்றிய ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டுத்தான் போலும், சிற்றப்பா விடிந்து ஊருக்குச் செல்கிறார் என்ற நிலையில், முன்னிரவே பாட்டியின் ஆவி பிரிந்து விடுகிறது.

பாட்டியின் முடிவில், விஜிக்குக் கொஞ்சம் கூட வருத்தம் தோன்றவில்லை. வருத்தப்படுவது பேதமை என்று அறிவு தெளிவாக உரைக்கிறது. புதிய குருத்துக்கள் முளைவிடும் போது, பழைய தோடுகள் சுழன்று விலகி மண்ணோடு மண்ணாகத் தானாகவேண்டும்.

அய்யாம்மா, வெறும் தூலமான உடலுக்கு மட்டும் உரியவள் அல்ல. பழைய வேரூன்றிப்போன, இந்நாளுக்கு ஒவ்வாத கருத்துக்களின் பிரதிநிதியும் கூடத்தான்.

சிற்றப்பா, பாட்டியின் விருப்பப்படி அவளை எரித்து, குடத்தில் எலும்புகளை எடுத்துக்கொண்டு, கங்கையில் கரைப்பதற்குக் கொண்டு செல்கிறார்.

பாட்டியின் மறைவுக்கு, பெரியபட்டியிலிருந்து, பெரியவரின் மகள் கொண்டு கொடுத்த சம்பந்தி என்ற முறையில் வந்து சென்றாள். விஜியுடனோ அப்பாவுடனோ அவள் பேசவில்லை. சிற்றப்பாவுடன் மட்டும் பேசிவிட்டுச் சென்றாள். ரங்கேஷ் கையெழுத்திட்டு டைப் அடித்த துக்கக் கடிதாசி வீடு தேடி வந்தது. சுமி மட்டும் வந்து தலைகாட்டிவிட்டுத் திரும்பிப் போய்விட்டாள். அவளுக்குப் பரிட்சை.

செந்தில் ஊரில் இல்லை. அப்பா சின்னப்பட்டிக்கும் புது நகரத்துக்குமாக அலைவதில் இன்னும் உருத்தெரியாமல் தேய்ந்து போகிறார்.

வேலம்மாளின் நினைவு வரும்போது, அப்பாவின் உடல் நிலையைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டுமே என்று நெஞ்சம் குலுங்குகிறது.

ஒரு தலைமுறைக்குரிய நம்பிக்கைகளையும், மதிப்பிழந்து போன சுவடுகளையும் தூலமான வடிவில் அகற்றுவது போல் அந்த வீட்டில் இருந்த பழைய பொருள்களைக் கழித்து, சுத்தம் செய்வதில் விஜிக்குச் செவந்தி உதவி செய்கிறாள். மாரிசாமி தம்பதி பாழடைந்து கிடந்த பஞ்சநதம் மாமா வீட்டில்தான் இரு சட்டி பானைகளுடன் குடியேறி இருந்தனர். அவர்களை இங்கே வரச்செய்கிறாள் விஜி.

மழையோ, மழையில்லையோ, காலை நேரம் தீப்பெட்டி அலுவலக ஊர்தி வந்துவிடுகிறது.

இப்போதெல்லாம் மம்முட்டியான், அவளைக் கண்டாலே ஒதுங்கிச் செல்கிறான். அவன் அழகாயியைக் கட்டிவிட்டானாம். ஆனால் தனிக்குடிசை போடவில்லை. அவன் தினமும் மூக்குமுட்டக் குடிப்பது வழக்கமாகியிருந்தது. தீப்பெட்டி அலுவலகத்துச் சம்பளம் குடிப்பதற்கே சரியாகி விடுகிறது. காடு கழனி வேலை செய்வதில்லையாம்.

அன்றிரவு தொழிற்சாலையிலிருந்து வண்டி வந்து நின்று எல்லோரும் வீட்டுக்குச் செல்கையில் வாசலில்தான் விஜி நிற்கிறாள். வானம் கறுத்த துகிலுக்குள் மருமத்தைப் புதைத்துக் கொண்டிருப்பதால் இருள் மையாக இருக்கிறது அலுமினியம் தூக்கு கிலுங்கென்று ஒலிக்க அவளைப் புரிந்து கொண்டு குறுக்கே நடந்து வரும் உருவம்...

“காத்தமுத்துவாடா? நீ... இங்கதா இருக்கியா?”

“விஜிம்மா!...”

குரலிலேயே ஆற்றாமை நெகிழ்ந்து கொள்கிறது.

“என்னடா?”

“இந்த மம்முட்டியான மொதலாளியிட்டச் சொல்லி ‘டிஸ்மிஸ்’ செஞ்சி போடுங்க. அவெ குடிச்சிப்பிட்டு வந்து அடிக்கிறா. கண்டமாணிக்கும் பேசுறா!”

அவள் ஏதும் பேசாமல் நிற்கிறாள்.

“சொல்றீங்களா விஜிம்மா?”

“ஆகட்டும், போ...!”

“மாரிசாமி அண்ணாச்சிய உசுப்பச் சொல்லிப் போடுங்க விஜிம்மா!”

“சரி, போடா!” என்று பின்னாலிருந்து மாரிசாமி கத்துகிறான்.

“இந்த மம்முட்டியான் ஏனிப்படிக் குடிச்சித் தொலைக்கிறான்.”

“குடிக்கிறது மட்டுமா? ஒவ்வொரு நா, அந்தப்புள்ள அழவாயிய, சீவனில்லாம அடிச்சிப் போடுறா! அத்த அடிக்கிறதுக்கே கட்டிருக்காம்போல...”

“என்னக் கண்டிட்டா ஒதுங்கில்ல போறான்?”

கவடில்லாத அந்த இளைஞனுக்கு இந்த மாற்றம் வர என்ன நேர்ந்திருக்கும்?...

அந்த எளியவனுக்குத் தன் ‘மனைவி’ என்ற நிலையில் அவளை வேலைக்கு அனுப்ப விருப்பமில்லாமலிருக்குமோ? முறைகேடுகளை எதிர்க்கச் சக்தியின்றி, குடித்துவிட்டு அடிக்கிறாளோ? குடிப்பதற்குப் பணம்... அதனால், இரத்தினத்தையோ, வேறு மேலாளர்களையோ இந்த ஏழையினால் எதிர்த்துக் கொள்ள முடியாதோ?...

கேள்விகள் சிந்தையை அப்பிக் கொள்கின்றன.

“மாரிசாமி, இந்தக் காத்தமுத்து பயர் வொர்க்ஸில் இருந்தானே? அங்கிருந்து எப்படி வந்தான்?”

“களுத கெட்டாக் குட்டிச் செவரு. அங்கிட்டிருந்து ஓடிப் போயி ஓட்டல்ல மேசை துடச்சான். அடுத்த பையன் ஒருத்தன் கிட்ட சண்ட வந்து அடிதடி வரவே, ஓட்டல் முதலாளி இவன வெளிய தள்ளிட்டாரு. நேர இங்கிட்டு வந்திட்டான். இப்ப மறுக்க குச்சியடுக்கப் போறான்...”

அத்தியாயம் - 28

அந்தக் கிராமத்தில் பள்ளிக்கூடம் விடுமுறையா, விடுமுறையில்லையா என்பதை எப்போதும் கண்டு கொள்வதற்கில்லை. மழை பெய்திருப்பதால் பெற்றோர் காடு கழனி வேலைக்குச் சென்று விடுவார்கள். பெரிய குழந்தைகள் தொழிற்சாலைக்குச் சென்று விடுகின்றனர். எஞ்சியுள்ள, ஐந்து பிராயம், நான்கு பிராயங்கள், கைக் குழந்தைகளே அதிகமானவர். பெரும்பாலோருக்கு வயசு தெரியாது. பிள்ளைகளைப் பள்ளிக்கனுப்ப வேண்டும் என்று சமயம் வாய்க்கும் போதெல்லாம் விஜி சிவகணபதிக்கு உதவி செய்வதுபோல் ஒருமுறை காலையில் குடில்களைச் சுற்றி வந்து திரட்டிச் செல்வாள். இப்போது அதற்கு வாய்ப்பில்லை. பள்ளிக் கூடத்துக்கு ‘அதிகார பூர்வமான’ விடுமுறை!

நாயுடுவின் குழந்தைகள் ஒரு துண்டு காகிதம் இல்லாமல் கப்பல் செய்து மிதக்க விட்டுவிட்டார்கள். இன்னும் மழை பெய்கிறது. அன்று முன்னிரவில் கொட்டிய மழை நள்ளிரவுக்குப் பின் ஓய்ந்திருக்கிறது. விஜி குளிருக்கு அடக்கமாக அறைக்குள் படுத்திருக்கிறாள்.

பொழுது விடிந்து விட்டதா என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

சாலையில் தீப்பெட்டித் தொழிலக வண்டியின் ஒலி கேட்கிறது. அந்தச் சாலையில் வரும் ஒரே வண்டி.

முன்பொருமுறை அவள் கணவன் அங்கு வண்டி கொண்டு வந்தான். கோயில் விழாவின்போது அவர்கள் வண்டியில் வந்தார்கள். அவள் கணவன் ஊர் திரும்பியிருப்பானா?

பாட்டியின் மரணத்துக்குப் பஞ்சநதம் மாமா வந்தார். அவர் காரில்தான் வந்தார். அவளிடமோ, தந்தையிடமோ பேசவில்லை...

அப்போது மயிலேசன் டிசம்பர் பதினைந்து தேதிக்குள் திரும்பி விடுவான் என்று சிற்றப்பாவிடம் சொன்னாராம்.

தை பிறந்து...

வண்டியின் குழலொலி கேட்கிறது. இதை இந்த மக்கள் ‘அலாரம் அடிச்சிட்டான்!’ என்று சொல்கிறார்கள்.

அலாரம்... மேலும் மேலும் அடிக்கிறான்.

விஜி எழுந்து சன்னல் வழியே பார்க்கிறாள்.

வண்டியின் விளக்குவெளிச்சத்தில், எங்கும் தண்ணீர்க் காடாக இருப்பது புலப்படுகிறது.

மேடான இவர்கள் வீட்டுக்கு வரும் வழியெல்லாம் நீர்ப் பாயல்... அந்த ஒளியை ஏந்திக் கொண்டு மின்னிக்காட்டுகிறது.

இவள் வெளியே வருமுன் மாரிசாமி விந்தி விந்திக் கொண்டு படியிறங்கிச் செல்கிறான்.

செவந்தி போர்த்துக் கொண்டு படியில் நிற்கிறாள்.

குரல்கள் உடைத்து சிதறிவிட்ட வளையல் துண்டுகளைப் போல் விஜியின் செவிகளில் ஒலிக்கின்றன.

“இந்த வெள்ளக் காட்டுல பிள்ளகளை அனுப்பாதிய?...”

“நேத்து ஓடத் தண்ணி வடிஞ்சி வர எந்நேரமாச்சி?”

“ராவு இவம் போகாம வண்டிய பெரிய பட்டில நிப்பாட்டி வச்சிருப்பா!...”

“வாணாவா? மழயானா என்ன? அந்தப் புள்ளய கொட்டடிக்குள்ளாற பதனமாத்தான இருக்குதுங்க?”

“மழ, காத்துன்னு பாத்தா தொழிலாளிங்களுக்கு வகுறு இருக்கல்ல? அனுப்ப மாட்டம்னா, அவுங்க வேற தாவில ஆளக் கொண்டிட்டு வந்திட்டா?...”

யார் யார் குரல்களென்று புரியாவிட்டாலும், நாயுடு சிவகணபதி, பெரிய குடும்பன், எல்லாரும் இருப்பது புலனாகிறது.

“மாரிசாமி! இருட்டு வெளுத்து, பொழுது விடிந்த பிறகு பார்க்கலாம்னு சொல்லு!” என்று விஜி கத்துகிறாள்.

இதற்குள் பஸ்ஸிலிருந்து தொடர்ந்து ஒலி வருகிறது.

“புள்ளியளுக்கு ஒருநா கூலி குறஞ்சா நீங்க குடுப்பியளா? பெரியபட்டிப் புள்ளிய போகல? கூடமங்கலத்துப் புள்ளிய போகல? அதுங்க போறப்ப நமக்கென்ன? இம்புட்டுத் தூரம் ரோடு போட்டு புள்ளியளக் கூட்டிப்போசு ஆளுவச்சிச் சம்பளம் குடுக்கிறவ, ஓடயில கடாசிடுவாங்களா என்ன?”

குடும்பனின் குரல் போலிருக்கிறது. இதற்குள் யாரோ பஸ்ஸிலிருந்து இறங்கிச் செல்கிறான்.

“என்ன தகராறு?...”

குரல் பிசுறலுடன் ஒலிக்கிறது. “மம்முட்டியா இல்லியா?”

“புள்ளியள உசுப்பப் போனவ வரல இன்னும். இந்த மழயில ஓடக்கடந்து எப்பிடியய்யா போவிய?” என்று மாரிசாமி கேட்கிறான்.

“ஓடயில தண்ணி ஓடுறப்ப விடுவமா? பாத்துத்தா நின்னு போவம். வடியிற சமயம் பாத்துக் கடந்திடுவம்...” என்று ஆத்திரமாக அவன் பதில் கொடுக்கிறான்.

“அதுதான். பொழுது வெள்ளென விடிஞ்சி கூட்டிட்டுப் போங்கன்னு விஜிம்மா சொல்றாங்க...”

“பொழுது விடியக் காத்திருக்கிற நேரத்தில மழ ஊத்திச்சின்னா? இப்ப மழை இல்ல. எல்லாம் வாங்க!”

“மானம் பொத்திட்டாப்ப, ஊத்திருக்கு. வூட்டுக்குள்ளாற காஞ்ச எடம் ரவயில்ல...” என்று ஒரு பெண் குரல் ஒலிக்கிறது.

“தீட்டி ஆபீசில கம்முனு உக்காந்து புள்ளங்க பாதுகாப்பா இருக்கிறது. இந்தாளுக்கு எரிச்சலாயிருக்கு. எகிறிக் குதிக்கிறா...”

“குடும்பனாரே, வார்த்தை தடிக்கவேணாம்...”

“பின்ன என்னடா நீ? காலச் சாச்சிட்டு எதுக்கு இங்கிட்டு வார? எங்கிட்டுப் போனாலும் தகராறு! நாங்க பெத்த பிள்ளியள நாங்க அனுப்பறம், சாவ அடிக்கிறம். உனக்கென்ன வந்திச்சி இதில?”

தண்ணீரில் கால்கள் அளைந்துவரும் சிலுங் சிலுங்கென்ற ஓசையுடன் ஈசல் கூட்டம் போல் சிறுவர் சிறுமியர் வருகின்றனர்.

“ராசாத்தி! சிட்ட சில்லுப்பொட்டி பதனமா வச்சிருக்கியா? ஏலே காத்தமுத்து? தங்கச்சிய பதனமாப் பாத்துக்க! அங்ஙன இங்ஙன விட்டிராதக் கூட்டிட்டுச் சோறுண்ணுக்க!”

“நாச்சி, குறும்புத்தனம் பண்ணாத... சோறு நல்லரசம் ஊத்திக் கலந்து வச்சிருக்கே. கொட்டிப்புடாத...”

“பராக்குப் பாக்காம குச்சியடுக்கிக்குடு! கட்ட கொறயக் கூடாது!”

மாரிசாமி தோல்வியடைந்து வருகிறான்.

அறிவுரை கூறும் தாய்மார் அங்கேயே நிற்கின்றனர். இடுப்புக் குழந்தைகளில் ஏதோ ஒன்று அழுகிறது.

மம்முட்டியான் முன்னே டார்ச் அடித்து ஒளிகாட்டிச் கொண்டு செல்கிறான். அழகாயியின் கன்னங்கள் தேய்ந்து கழுத்தெலும்பு துருத்தியிருப்பது புலனாகிறது. மின்னல் வெட்டினாற்போல் உணர்வு துணுக்குறுகிறது.

வண்டியில எல்லோரும் ஏறிக்கொள்கின்றனர். எப்போதும் ஓட்டுபவன் குழந்தைகள் ஏறுமுன் வண்டியைத் திருப்பிக் கொண்டிருப்பான். இன்று பின் செலுத்தி வட்டமடிக்கையில், இறுதியாக வெளிச்சத்தை வீசி, அங்கு நிற்கும் பெற்றோரிடம் விடை பெற்றுக் கொண்டாற் போலிருக்கிறது. அப்போது விழுந்த வெளிச்சம் விஜியின் மீதுகூடத் தேய்ந்த கதிரினால் தொட்டுக் காட்டிவிட்டு, தூற்றல் பொடிப் பொடியாக விழுந்து கொண்டிருப்பதையும் உணர்த்திவிட்டு நகருகிறது. சளக் சளக்கென்று குழிகளில் தேங்கிய நீர் எங்களுக்கு எம்மாத்திரம் என்று கேட்டுக் கொண்டு செல்கிறது. மார்கழிக் குளிரோ, கார்த்திகை மழையோ எங்களை எதுவும் செய்துவிட முடியாதென்று அறைகூவிக் கொண்டு மறைகிறது.

அத்தியாயம் - 29

அந்தப் பெரிய ஊர்தியின் வெளிச்சம் சாலையில் பாய் விரிக்கையில் ராசாத்தி ஓடையில் தண்ணீர் இரு கரையும் புரள மிக வேகமாக ஓடிக் கொண்டிருப்பது தெரிகிறது.

பொழுது நீர்பட்ட கண் மையாய்க் கரையக் கரைய, கூட நாதர் கோயிலின் பின்னே காலம் காலமாக வேரூன்றி, விழுதுகளுடன் நிலைத்து நின்றதோர் ஆலமரத்தை, நீர் அணைத்துத் தழுவிக் கொண்டு செல்லப் பெருகியிருப்பதையும் காண முடிகிறது. அங்கிருந்து ஐம்பது கஜம் தொலைவில் அரசனாறு ஓடைப் பெண்ணைத் தழுவுவதுபோல் வரவேற்றுக் கொள்கிறது. இந்த சங்கமத்துக்குச் சாட்சியாக நிற்கும் கூடநாதர் கோயில் இப்போதுதான் தனது பெயருக்குரிய கௌரவத்தை நிலை நாட்டுவதுபோல் விளங்குகிறது.

இத்தனை நேரம் வண்டிக்குள் அமர்ந்திருந்த ஓட்டுனன், “மழை விட்டிருக்கு. மேத்தண்ணி ஓடிட்டா வடிஞ்சிடும்” என்று கூறிக் கொண்டு தன் பக்கக் கதவைத் திறந்துகொண்டு இறங்குகிறான். வண்டியைச் சாலையின் இடது பக்கம், ஓடையிலிருந்து சில நூறு அடிகளுக்கப்பால் நிறுத்தியிருக்கிறான். சாலையிலிருந்து சிறிது தொலைவில் சாலையின் வாக்கிலே எந்நாளும் மணலாறாக விரிந்து கிடக்கும் அரசனாறு இந்நாள் நீர் பெருகும் ஓடைப் பெண்ணைச் சேர்த்துக்கொண்டு குதிபோட்டு ஓடுகிறது. ஓட்டுனன் இறங்கி விட்டால், நடத்துனனான ஏசன்டு வண்டிக்குள் இருப்பானா?

“சண்ட கிண்ட போட்டு லகள பண்ணாம உக்கார்ந்திருங்க!” என்று ஓர் ஆணையை விதித்துவிட்டு இறங்கிச் செல்கிறான்.

இருவருமாக சாலையின் வலதுபக்கம் தள்ளி, அப்பால் மேட்டுப்பாங்கான இடத்தில் குந்தி, ஓடையைப் பார்த்துக் கொண்டு பீடி புகைக்கத் தொடங்குகின்றனர்.

வண்டிச் சன்னல்களில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு மூடப் பெற்றிருந்தாலும், சில இடங்களின் சந்து வழியாக நீர் உள்ளே ஒழுகியதால் நீண்ட வரிசையில் உட்கார்ந்திருக்கும் சின்னப்பட்டிச் சிறுவர் சிறுமியர் சிலர்மீது சில்லென்றும் படுகிறது.

பேராச்சியும் அழகாயியும் எழுந்துசென்று கடைசி வரிசை ஓரத்தில் நெருங்கிக் கொள்ளப் போகிறார்கள். காத்தமுத்துவும் தொடர்ந்து செல்கிறான். தங்கராசு பெரியபட்டிப் பையன் ஆறாவது படித்தவன். அவனுக்கு இந்த அழுக்குப் பயல் தன்னருகில் அமருவது பிடிக்கவில்லை. அவனுடைய அக்கா மங்கையர்க்கரசி அவனை எட்டிப் போகும்படி வெருட்டுகிறாள். மோதலில் தான் எட்டாமலிருக்க, தங்கராசு வண்டிக் கதவைத் திறந்துகொண்டு கீழே குதிக்கிறான். தொடர்ந்து பலரும் கீழே இறங்கி ஓடிப்பிடிக்கின்றனர்.

தொலைவில் குந்தியிருக்கும் ஏசன்டு இதைப் பார்த்து விடுகிறான். ஓடி வருகிறான். “எல்லாம் உள்ளாறபோங்க போங்க!” என்று விரட்டுகிறான். உள்ளே எல்லோரும் அமர்ந்ததும் கதவை மூடித் திறக்க முடியாமல் தாழ்போட்டு விடுகிறான்.

மழை நன்றாக விட்டிருக்கிறது. கீழ்த் திசையில் வெள்ளைத் துணியைப் பிழிந்து காயப்போட்டாற்போன்று வெளுப்பு பரவி வருகிறது.

மரக்கிளையும் செத்தையும் சருகுமாக அடித்துவரும் சிவந்த நீர் ஒரே பாய்ச்சல் ஆவேசத்துடன் ஆற்றில் கலக்கச் செல்கிறது. புரண்டு வரும் அந்த ஓடை வெள்ளத்தில் தலையைத் தூக்கிக் கொண்டு ஒரு பாம்பும் வருகிறது.

“தலை தூக்கிட்டு வருது, நல்ல பாம்பு!”

“மழவுட்டுப் போச்சி. ஒம்பது பத்துக்குள்ள பட்டுனு தண்ணி வடிஞ்சிடும். அடிச்சிட்டுப் போயிடலாம்...”

வெளியே கதவைத் தாழிட்டுவிட்டதால், காத்தமுத்துவுக்கு ஆத்திரமாக இருக்கிறது.

“ஏசன்டுக் கொத்தா, இங்கிட்டு வாடா,
பூசக்கிப் போறே பொதி செமக்க வாடா,
மன்னாருசாமி மம்முட்டிச்சாமி
மண்ணைத்தின்னுடா மருதக்கிப் போடா...”

என்று பாட்டுப் பாடுகிறான், நடுவில் நின்று ஆடிக் கொண்டு, பாட்டுக் கேட்ட வேடிக்கையில் சிலர் கொண்டாட்டமாகச் சிரிக்கின்றனர். ‘மன்னாரு சாமி மண்ணத் தின்னுடா’ என்று குரங்காட்டம் ஆடிப் பலரும் குதிக்கத் தொடங்குகின்றனர்.

ஒரு இளங்குரல் “அண்ணாச்சி அந்த மானேசருக்கு ஒரு பாட்டுப் பாடு!” என்று கோருகிறது.

காத்தமுத்துவுக்குக் கருவம் இளஞ்சிவப்பாக முகத்தில் மின்னுகிறது.

“ம்...” என்று சுருதி கூட்டுகிறான்.

“மானேசர் தடியன்
மாட்டுக்குக் கொம்பு
அப்பமாட்டு கன்னம்...”

என்று கன்னங்களைக் காற்றடக்கி உப்பச் செய்கிறான்.

அத்தனை குரல்களும் சேர்ந்து சிரிக்கின்றன.

“அப்ப மாட்டுக் கன்னம் -
ஆட்டுக் கொளுப்பு-”

ஹோ என்ற சிரிப்பு வண்டிக்குள் அலை மோதுகிறது.

சிரித்துச் சிரித்து அலைகள் ஓயுமுன், ஓர் பேரோசையாகப் பஸ்ஸே சிரித்துக் கொண்டு நகரத் தொடங்குகிறது.

பஸ், பூட்டிய கதவுடனான வண்டி, மாடில்லாமல், மனிதனில்லாமல், சக்கரம் சுழற்றாமல் நகருவதை உணர்ந்து வண்டிக்குள்ளிருக்கும் இளசுகள் இன்னதென்று புரியாமல் நோக்குகின்றனர். அழகாயிதான் பின்னிருந்தும் ஆற்றுப் பக்கமிருந்தும் தண்ணீர் வந்து மோதுவதைப் பார்த்துக் கூச்சலிடுகிறாள்... “ஐயோ, தண்ணி. தண்ணி வருது ஆத்தாடி! எம்புட்டுத் தண்ணி!” பீதி இளம் முகங்களைக் கவ்வுகிறது.

“நாங்க ஏசன்டையாவ ஒண்ணும் சொல்லல... கதவு தெறங்க! கதவு! கதவு...!”

காத்தமுத்து அடித்துப் பிடித்துக்கொண்டு கதவுப் பூட்டைத் திறக்கப் போராடுகிறான். தண்ணீர்... தண்ணீருக்குள் ஓடைக்குள் பஸ் இழுத்துச் செல்லப்படுகிறது ஒருவர் மீது ஒருவர் விழுகின்றனர். பற்றிக் கொள்கின்றனர். மேல் சாதி, கீழ் சாதி என்ற உணர்வுகள் அடிபட்டுப் போக தலைகள் இற்றுவிழ, உயிர் தப்பும் ஒரே நோக்கில் அந்த இளம் பிஞ்சுகளும், பூ மொட்டுக்களும் அபயக் குரலெழுப்புகின்றனர்.

ஆனால் அந்தக் குரல்களை அமுக்கிக் கொண்டு பேரலை அந்த ஊர்தியை ஓடை வெள்ளத்தில் தள்ளிவிடுகிறது. ஓடையில் பஸ் அமுங்கியும், அமுங்காமலும் போகும் போதுதான் மன்னாருவின் கண்களில் அது சாலையில் நிறுத்தி வைத்த வண்டி என்று மின்னல் வெட்டுகிறது.

சாலை முழுதும் பிரளயம். ஆற்றுக்கும் சாலைக்குமிடையே இருந்த இடைவெளி எப்படி மறைந்தது?

உள்ளிருக்கும் பிஞ்சுகள் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு பஸ்ஸின் கூரைக்குத் தப்பப் போராடுகின்றனர்.

காத்தமுத்து ஒரு வழி கண்டுவிட்டான். இடுக்குவழியே மேலே தொற்றி ஏறுகிறான். அந்தப் பேய்ச்சக்திப் போராட்டத்தில் அவனுக்கு எங்கிருந்து வலிமை வந்ததோ. சன்னலுக்கு வெளியே நீட்டிய கைகளை இழுத்துவிடுகிறான். “தங்கச்சியப் பதனமாப் பாத்துக்க... வடிவு... வடிவு... இதோ... பச்ச... ஏ புள்ள... கெட்டிமாப் புடிச்சிக்க...”

பஸ்ஸை ஆற்றுக்குக் கொண்டு செல்ல முடியாமல், உள்ளே நீர் புகுத்துவிட, அது இரையுண்ட உயிர்ப் பிராணியாகத் தடுமாறுகிறது.

கூச்சல்கள், பீதிகள், ஆசைகள், அற்ப நேரக்களியாட்டங்கள், எல்லாம் மடிந்துவிட, வெறும் ஈயெறும்பின் கூட்டங்களாக, அந்தப் பெரு வெள்ளத்தில் எதிர்ப்புச் சக்தி ஓய்ந்துவிட அவர்கள் ஒடுங்குகின்றனர்.

ஆனால் காத்தமுத்து பஸ்ஸின் கூரையில் வடிவை ஏற்றி விட்டான். பெரியபட்டிச் சிவப்பியை ஏற்றியிருக்கிறான். மீனம்மா ஒடுக்கிக்கொண்டு தொத்தியிருக்கிறாள். அங்கே, பெரிய ஆலமரக் கிளை தாழ்ந்து இருக்கிறது.

அதை அவன் காட்ட அவர்கள் முழுகியும், முழுகாமலும் இருக்கும் கிளையைப் பற்றிக்கொள்கின்றனர்.

காத்தமுத்து தண்ணீரில் முழுகி, வடிவைக் கிளைக்கு மாற்றுகிறான்.

சிவப்பி, மீனம்மா, பேராச்சி... நடராசு...

ஆலமரத்துக்கிளை அபயம் அளிக்கிறது.

கிளையிலிருந்து பெருமரத்துக்கு நகர்ந்து ஒட்டிக்கொண்டு அவன் மேலே போகிறான். தங்கச்சி குளிர் ஒடுக்க, கிளையோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது.

கருணை இல்லமாகத் திகழும் ஆலமரத்திலிருந்து பார்க்கையில்... சாமி! கோயிலும்கூட தெப்பத்தில் மிதப்பது போல் காட்சியளிக்கிறது.

அதோ... பஸ் அரசனாற்றின் மடியில் சென்று சாய்ந்திருக்கிறது. “தங்கச்சி, கெட்டியாப் புடிச்சிக்க!”

நெஞ்சும் நினைவும் உடலும் மரமும் ஒன்றாக, ஒரே நோக்காக உயிர் பிழைக்கும் நம்பிக்கைத் திரியை எரியச் செய்கின்றன.

அப்போது. “அண்ணே...” என்று சிவப்பியும் மீனம்மாளும் கத்துகின்றனர். கண்கள் மருண்டு நிலைக்கின்றன. ஆலமரத்தின் மேலே, உச்சியை நோக்கி, தலை தூக்கிக் கொண்டு ஓர் பாம்பு... முடிச்சோடு முடிச்சாகச் சிறுமிகள் ஒருவரோடொருவர் நெருங்குகின்றனர்.

முரட்டுத்தனம் மாறாத காத்தமுத்து, மேலேறிவரும் நாகத்தைப் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்கிறான்.

“பயப்படாதிய, அதும் தண்ணிக்குப் பயந்து வந்திருக்கு, தண்ணிப் பாம்பில்ல...”

இறுக்கிப் பிடித்து ஒட்டிக்கொண்டு அவர்கள் அந்த மரத்திலே பிழைத்திருக்கின்றனர்.

அத்தியாயம் - 30

பொழுது நன்றாக வெளுத்த பின்னரே மழை விளைவித்திருக்கும் இன்னல்களைக் களையக் கிராமத்து மக்கள் முனைகின்றனர்.

மாரிசாமி வீட்டைச் சுற்றியுள்ள தண்ணீருக்குப் போக்குக் காட்ட மடைவெட்டுகிறான்.

விழுந்த படலைகளை நிமிர்த்திக் கட்டவும், தொங்கிய கூரைகளைச் சரி செய்யவும், சாக்குச் சுருணைகளைப் பிழிந்து போடவும், கிராமம் விழித்துக்கொண்டு பெருமூச்செறிகிறது.

வீட்டுக்குள் ஒண்டியிருக்கும் குழந்தைகள் வெளியே வருகின்றன. திண்ணைகளில் அண்டியிருக்கும் நாற்கால் விலங்குகளும் வெளியே வருகின்றன.

“காட்டில் முழங்காலுக்கு மேல தண்ணி தேங்கி நின்னிச்சி நேத்தே, இன்னிக்கி எப்பிடியோ?” என்று சொல்லிக் கொண்டு இசக்கி தோளில் மண் வெட்டியுடன் நடக்கிறான்.

சிவகணபதி டிரான்ஸிஸ்டர் செய்தியைக் கேட்டுவிட்டு வருகிறார்!

“தீவாளி சமயந்தா காவேரியாத்தா பெருகி மலைக்கோட்டையெல்லாம் பூந்திட்டா. இப்ப இந்த மார்கழில இம்புட்டு மழை பெஞ்சிருக்கு இங்க. ஏரி கண்மாயெல்லாம் ரொம்பியிருக்குதாம்...”

சந்தனக் குடும்பன் பீடி புகைத்துக் கொண்டு வருகிறான்.

“பயிரொண்ணும் மிஞ்சாது, இந்த வருசம் செலவு செஞ்சது அம்புட்டும் தண்டம்.”

“மூணு நாளாச்சி, அரிசி தவசி ஒண்ணில்ல. இப்பிடி மழ ஊத்தினா எங்கிட்டுப் போக? இருக்கிறதப் பொங்கி அந்தப் புள்ளயளுக்குப் போட்டுக் குடுத்திட்டு வகுத்த இறுக்கிக் கட்டிட்டிருக்கிறம்” என்று மன்னம்மா முறை வைக்கிறாள்.

“அங்கெல்லாம் பட்டணத்தில் மள பெஞ்சா சருக்காரில ஆகாசத்தில வந்து பொட்டலம் போடுவாகளாம். நமக்கும் அதுபோல எதுனாலும் சருக்காரு செய்யப்படாது?”

இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் மாரிசாமி நிமிர்ந்து பார்க்கிறான்.

“ஏண்டா, நிமுந்து பார்க்கிற?... பெரியண்ணாச்சி சொல்லி எதுனாலும் செய்யக் கூடாதா?... மழ பஞ்சம் எதுன்னாலும் இந்தக் கிராமம் வரையிலும் ஆரும் வரதில்ல...”

“ஆரும் வராமதான் குழா, கிணறு, லைட்டு, ஸ்கூலு எல்லாம் வந்திருக்கா? இதுக்கெல்லாம் ஓடிஓடிப் பாடுபட்டவரு ஆரு? கோடையிலே டவுனெல்லாம் தண்ணிக்கி எரியிறாங்க: இங்க முணு நாலு அடி குழாயி, கிணறு வத்தாது. குழாய ஓடச்சிப் போட்டா ஒடனே போயிச் சொல்றது எல்லாம் சம்முக அண்ணாச்சியில்லாம ஆரு?...”

“அது சரிதாண்டா, இப்ப இல்லேன்னு ஆரு சொன்னது? மண்ணெண்ண வேணுமின்னா பெரியபட்டிக் கடையில போயி வரிசை நிக்கிறம். அதுவும் எப்பக்குடுக்கிறான்னு தெரியல. நூறு அம்பது பைசான்னா சில்லறைக்காரங்கிட்ட வாங்கிறோம். அதுபோல ஒரு நியாய விலைக்கடை நமக்குன்னு இங்க இருந்தா நல்லது தானேன்னு சொன்னேன்...”

“எல்லாந்தான். இங்க மாட்சஸ் சொசைட்டியே வரணும்னு தான் அவுங்களுக்கு ஆசை, பாடுபடுறா. ஆனா, நீங்க அவங்க சொல்லுவதைக் கேக்குறீங்களா? இன்னிக்குப் பிள்ளயள இருட்டிலே அனுப்பாதீங்கன்னு விஜிம்மா சொல்லிக் கேட்டீங்களா? நீங்க அவங்க சொல்லுக்கே மதிப்பு வைக்கலியே?”

“மதிப்பு வைக்காம ஒண்ணில்ல, மாரிசாமி! அவியாள அந்த ஏசன்டத் தடுத்துப் போன்னு சொல்லியிருக்கலாமில்ல? நாம ஆரு, அனுப்ப மாட்டம்னு சொல்ல? அவங்க மோட்டாரப் போட்டுட்டு எங்கல்லாமோ போயிப் பிள்ளங்களக் கொண்டாந்திடுவா. எருதுமேல ஈ உக்காந்தா அது வாலைத் தூக்கி விசிறிப் போடாது?”

“எருதுக்குக் கண்ணிலயும் கூட ஈ உக்காருது. வாலைத் தூக்கி விசிற முடியாது. அததுக்குச் சக்தி இருக்கு. நீங்க பிள்ளங்கள அனுப்பிக் கொடுத்திட்டுப் பேசுறீங்க, வாரப்ப எத்தினி கட்டு அடுக்குனீங்கன்னு கேப்பீங்க!”

“ஆமா, தொழிலாளி புள்ளயள சொகுசா வளர்க்க எங்கிட்டுப் போவோம் சாமி? எதோ அதுங்க இந்த மட்டும் தொழில் செய்யிதோ காஞ்சும் பேஞ்சும் கெடுக்கும் இந்த மண்ணில நாம கால் வயித்துக் கஞ்சி குடிக்கிறம்...”

“இப்பிடிச் சொல்லிட்டே நீங்க மாட்சஸ் காரங்களுக்குப் பிள்ளைகளைச் சாசனம் எழுதிக் குடுத்திருக்கீங்க...”

இந்தப் பேச்சுத் தொடரவில்லை. சாலையில் பதறியடித்துக் கொண்டு ஏழெட்டுப் பேர் ஓடி வருகின்றனர்.

“கம்மாய் உடச்சிட்டு வெள்ளம் வந்திடிச்சி, எல்லாரும் வாங்க! மாச்சிஸ் வண்டியப் புள்ளிங்களோடு ஓடயில கொண்டு போயிடிச்சி...”

“ஆ...”

கை மண்வெட்டியைப் போட்டுவிட்டு மாரிசாமி ஓடி வருகிறான். செவந்தி வீடு பெருக்கிக் கொண்டிருக்கிறாள். விஜி நாயுடுவின் குழந்தையின் மார்புச்சளிக்கு ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.

“விஜிம்மா!... தீப்பெட்டி ஆபீசு வண்டி ஆத்தோடு போயிடிச்சாம்! கம்மாய் உடச்சுக்கிச்சாம்!”

கூடமங்கலத்தையே விழுங்கிவிடுமோ என்ற அளவில் ஊர் மக்களின் அச்சத்தை விசுவரூபமாக்கிக் கொண்டு தண்ணீர் எங்கிருந்து வருகிறது? அரசனாறா இப்படிப் பெருகி வருகிறது?

சின்னப்பட்டி, பெரியபட்டி, மக்களைத் தவிர இன்னும் சுற்றுப்புறமுள்ள கிராமத்து மக்களனைவரும் அங்கு வந்துவிட்டனர்.

விஜிதான் தனது புகுந்த வீட்டுக்கு சொந்தமான பெரிய வீட்டில், முதன் முதலில் நுழைந்து செய்தியை உடைக்கிறாள். ஊருக்கு ஒன்றாக அங்கிருக்கும் தொலைபேசியை எடுத்து அருகிலுள்ள தீயணைக்கும் நிலையத்துக்கும் தொழிலகத்துக்கும் செய்தி தெரிவிக்கிறாள். மக்கள் திரண்டு செல்கின்றனர்.

கூடமங்கலத்துப் பெரியதனக்காரர், மருத்துவமனையில் உள்ள உதவியாளர், எல்லோரும் ஆலமரத்துக் கிளையில் தஞ்ச மடைந்திருக்கும் சிறுவர்களை எப்படிக் காப்பாற்றுவதென்று பாடுபடுகின்றனர்.

ஆற்றிலே குதித்துப் பல இளைஞர் அமிழ்ந்து கிடக்கும் பஸ்ஸில் இருந்து உயிர்களை மீட்கமுடியுமா என்று போராடுகின்றனர்.

“மாரிசாமி அண்ணே! மம்முட்டி அண்ணாச்சி! எங்களக் காப்பாத்துங்க! அதா... விஜிம்மா! - பெரி... வீட்டுக்காரரு... பிரசன்டையா! ஆறுமுகம்... ஆராரெல்லாமோ வாரா... தங்கச்சி! பத்திரமாயிரு...”

பெரிய பெரிய வடங்களை அவர்கள் பக்கம் வீசுகிறார்கள்! ஆனால் அவன் கை எட்டவில்லை பாம்பும் வேறு அங்கே தஞ்சமடைந்திருக்கிறது.

மம்முட்டியான், கூடமங்கலத்துப் பெரிய வீட்டு அண்ணாச்சி, மாடசாமி டைவர், எல்லோரும் கயிறுகளைக் கொண்டு வீசி, அவர்களைப் பற்றிக் கொள்ளச் செய்கின்றனர். முதலில் மீனம்மா, பிறகு வடிவு... பிடித்துக்கொண்டு இழுப்பை எதிர்த்து நீந்திக் கரை சேர்கிறார்கள். ஒவ்வொருவராக மரத்தைவிட்ட பின், கடைசியில் காத்தமுத்து வெள்ளத்தில் குதித்துக் கயிற்றைப் பற்றிக் கொள்கிறான். எட்டுமணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் உயிர் பிழைக்கின்றனர்.

“எங்கவுள்ள இருக்குதா? பிளச்சிடிச்சா?” என்று கேட்டுக் கொண்டும் ‘எங்கபுள்ள போமாட்டேன்னிச்சி? பாவி, வாரக் கடன் மாசக்கடன நெனச்சி உசுப்பிவிட்டேன்’ என்று அடிக்கொருமுறை அரற்றிக்கொண்டு இருப்பவரும், அசையாமல் இடித்த புளியாய்க் கண்ணீர் வடிய நிற்பவருமாகச் சாலையோரம் நெடுகிலும் பெற்றவர் நிறைந்திருக்கின்றனர்.

“மாரிசாமி அனுப்பாதியன்னா, விஜிம்மா விடிஞ்சி போகலாம்னு சொன்னாங்க... சுப்பிரமணியையும் அனுப்பிச்சிக் குடுத்தம்...” என்று கண்ணீர் பெருக்குகிறாள் மன்னம்மா.

“கதவ அறஞ்சு மூடிட்டுப் புள்ளயள வண்டியோடு ஆத்துல தள்ளிப் போட்டுத் தான் தப்பிச்சிட்டா ஏசன்டுப் பாவி!”

“கதவத் தொறந்து விடுங்கண்ணாச்சின்னு புள்ளிய கத்திச்சாம்! அவங்காதில வுழுந்துதா உக்காந்திருக்கிறா!”

பல நாக்குகள், பல ஊகங்களை விரிக்கின்றன.

மம்முட்டியானும் மாரிசாமியும் காத்தமுத்துவையும் தங்கச்சியையும், மீனம்மாளையும் நடராசுவையும் கூட்டி வருகையில் நல்ல இருள் பரவிவிட்டது. மருத்துவமனை முகப்பில் பெட்ரோமாக்ஸ் எரிகிறது.

“காத்தமுத்து... வடிவு...”

“ராசா... வந்திட்டியா... தங்கச்சியப் பதனமாக் கூட்டிட்டு வந்திட்டியா!” அந்தத் தாய் வியப்பில் ஊமையானாற்போல் மக்களைக் கட்டிக் கொள்கிறாள்.

அவளுக்கு ரெண்டு புள்ளயும் வந்திட்டாங்களே! ஐயோ, எம்புள்ள! எம்புள்ள!... என்று பல தாயார் ஆற்றாமையுடன் விம்முகின்றனர்.

செய்தி கேள்விப்பட்டு விருதுபட்டி, மதுரையிலிருந்தெல்லாம் யார் யாரோ தொப்பிக்காரர், போட்டோகாரர் வந்திருக்கின்றனர்.

“மீனா...ச்சி..மீனாட்சி...” என்று செல்வியைக் கட்டி முத்தமிடும் தாயைப் படம் பிடிக்கிறார்கள்.

இந்தக் குழந்தைகளுக்குப் பன்னும் பழமும் நேநீரும் வழங்குகிறான் ஆறுமுகம்.

பிள்ளைகளை இழந்தவர்களின் பெற்றோரும் மற்றோரும் அன்றிரவு கூடமங்கலத்து மருத்துவமனை முகப்பிலும், பெரிய வீட்டுத் திண்ணையிலும், பள்ளிக்கூடத்திலும்தான் தங்கியிருக்கின்றனர். விஜியும், பெரியவீட்டுத் தவிசிப் பிள்ளையுமாக அவர்களுக்குச் சோற்றுப் பொட்டலம் கொண்டு வந்து கொடுக்கின்றனர். விடிய விடியக் கண் கொட்டவில்லை.

பொழுது விடிந்ததும் வெள்ளம் வடிந்து போகிறது.

விஜி கூடநாதர் கோயிலின் பின்னே நின்று பார்க்கிறாள். ஆற்றுப் பள்ளத்தில் பஸ் சரிந்து கிடக்கிறது. தீண்டக்கூடாது என்று சொன்ன பாலமணியும் ருக்குமணியும் அழகாயி, லச்சுமியோடு ஒன்றிக் கொண்டிருக்க, எல்லா உயிர்களையும் ஆற்றுக்கசத்தில் அழுத்தும் மரண வண்டியாகிச் சரிந்து கிடக்கிறது. என்னுள் மோதி உருக்குலைந்த போதிலும் உள்ளிருக்கும் குஞ்சுகளுக்கு விடுதலை கொடுப்பதற்கில்லை என்று அறைந்து சாத்தப்பட்ட கதவு கருணையின்றி அமுக்கியிருக்கிறது.

சின்னச்சின்னக் குச்சிகளைப் பெட்டிகளுக்குள் அடுக்கும் குஞ்சுகள் சின்னச்சின்னக் குச்சிகளைப் போன்றே அந்த வண்டிக்குள் விரைத்துக் கிடக்கின்றனர்.

காக்கைகள் கூச்சலிட, கழுகுகள் வட்டமிட, கீழே பெற்றோரின் அழுகுரல் நெஞ்சைப் பிளக்கிறது.

ஓடைக்கு அக்கரையில் புதுநகரத்துக்காரர் வந்து கூடியிருக்கின்றனர். கறுப்புக் காரும் நீலக்காரும், புகைப்படக்காரரும், போலீசுக்காரரும் கூட்டமாக மொய்த்திருக்கின்றனர்.

மீட்பு வேலைகள் நடக்கின்றன.

அங்கே... ரக்கேசனுடன், மயிலேசனும் இறங்கி வருகிறான். மெலிந்துபோன ஓடை கடந்து இக்கரை வருகின்றனர். சில குஞ்சுகளுக்கு உயிர்ப் பிச்சையளித்த ஆலமரத்தைச் சுற்றி வருகின்றனர். அந்த இள ஆலமரம் இன்று தண்ணீருக்குமேல் உயர்ந்து நிற்கிறது. மம்முட்டியானின் கண்கள் சிவந்து பழமாய்த் தெரிகின்றன. மாரிசாமி வெற்று மேனியும் கச்சையுமாகச் சற்று எட்டக் குழி வெட்டுகிறான்.

சந்தனக் குடும்பன் படுகிழவனாகக் காட்சி தருகிறான்.

இரத்தினம் அவனருகில் வந்து தட்டிக் கொடுக்கிறான்.

“மூணு பிள்ளையும் பறி கொடுத்திட்டம்...” என்று மன்னம்மா அங்கு நின்று கரைகிறாள்.

“அழுவாத... மொதலாளி வந்திருக்கா பாரு, ரொம்ப வருத்தப்படுறா...”

“ஆரு வருத்தப்பட்டா என்ன, எங்க புள்ளய போயிடிச்சி...!” என்று இருளாயி விம்முகிறாள்.

விஜி சிலைபோல் கோயில் சுற்றில் நின்று மயிலேசனைப் பார்க்கிறாள். பைக்குள்ளிருந்து சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டிருக்கும் அவன் இவளைப் பார்க்காமலிருந்திருக்க மாட்டான். முதல் நாள் தொலைபேசியில் அந்த வீட்டைத்தான் முதலில் கூப்பிட்டாள். அந்த நேரத்தில் அவள் கணவன் வீட்டிலிருப்பான் என்று அவள் சிறிதும் நினைக்கவில்லை. “மல்லேஷ் ஹியர்” என்று குரல் கேட்டதும் சாதாரணமாக இருந்திருந்தால் அவள் தன் சொந்த உணர்ச்சிகளின் வசம் தன்னை இழந்திருக்கக்கூடும். ஆனால் அந்தக் குரல் அவளைப் பாதிக்கவேயில்லை. “விஜி பேசுறேன். தொழிற்சாலை வண்டி குழந்தைகளுடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது. கண்மாய் உடைந்துவிட்டதாம். விரைந்து உதவிக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்றாள்.

அவனுடைய எதிரொலியை எதிர்பார்த்த நினைவுகூட இல்லை.

இப்போது அவன் அவளைப் பார்த்திருப்பான்.

இந்தக் கோயில் முகப்பில் இனிமையும் மலர்ச்சியுமாக அன்று சந்தித்தனர். இன்று...

அவன் தன்னைத் திரும்பிப் பார்க்கிறான் என்று புரிகிறது.

அங்கே அப்பா... அப்பா, ஒவ்வொரு குழந்தையாக மணலில் கிடத்துகிறார். ஒருத்திக்கும் துணிகூட அகன்றிருக்கவில்லை. சூரியனையே பார்க்காமல் தங்கள் நாட்களை ஓட்டிவிட்ட இந்த இளசுகளை, இறுதியாகத் தன் ஆயிரமாயிரம் கிரணங்கள் கொண்டு தழுவிப் புனிதம் செய்கிறான் அவன்.

இறுதிச் சடங்குக்கு அவர்களைத் தூக்கிச் செல்லவேண்டிய சிரமம்கூட இல்லை. ‘மரணத்தில் ஒன்றாக இருங்கள்’ என்ற நிலையில் அங்கே ஆற்றுக்கரையில் பெரிய குழியாகத் தோண்டுகிறார்கள்.

ஒளியை உமிழும் கியாஸ் லைட் இரவைப் பகலாக்க வருகிறது. அடக்கம் செய்யும் வரையிலும் மயிலேசன் பெட்டி பெட்டியாகப் புகைத்துப் போட்டுக் கொண்டு அங்கேயே மரத்துவேர் முடிச்சில் குந்தியிருக்கிறான். விஜி கோயில் மேட்டிலிருந்து இறங்கவில்லை.

அத்தியாயம் - 31

இந்த உச்ச கட்டத்துக்காகவே மழை அப்படிக் கொட்டியதாகத் தோன்றுகிறது.

ஜனவரிப் புத்தாண்டு அங்கு சிறுவர் ஆண்டாக, மரண சோகத்தில் ஆழ்த்தும் எதிர்மறைப் பொருளுடன் துவங்கியிருக்கிறது. ஊரே துயரத்தில் ஆழ்ந்து மழை கூட்டிவிட்ட அவலங்களில் இருந்து மீளும் நம்பிக்கையைக் கூட இழந்து ஒடுங்குகிறது.

பெரும்பான்மை வீடுகளைக் குஞ்சுகளின் இழப்பு பாதித்திருக்கையில், காத்தமுத்துவின் வீட்டில் மட்டும் முனைமுறியாமல் தப்பிவிட்டனர். அந்த வீட்டின் இடிந்த சுவரை நிமிர்த்துகின்றனர்; படலைக் கட்டுகின்றனர். சடச்சியும் அவள் ஆணும் கூலிவேலைக்குச் செல்கின்றனர்.

இந்த இரண்டு மூன்று நாட்களில், சண்முகம் இறந்து போன சிறுவர் சிறுமியரைப் பற்றிய விவரங்களைச் சேகரிப்பதில் மும்முரமாக இறங்கி இருக்கிறார். இந்த விபத்து, குழந்தைத் தொழிலாளர் பற்றிய நிலையை வெளி உலருக்கு வெளிச்சம்போட்டுக் காட்டும் வண்ணம் நிகழ்ந்திருக்கிறது. விஜியும் தந்தையும் தகவல்கள் திரட்டிக்கொண்டு இச்சந்தர்ப்பத்தில் பிரச்னைக்குத் தீர்வு காணும் முயற்சியில் இறங்கி இருக்கின்றனர்.

நான்காம் நாள் பகலில் இரத்தினமும் மானேசரும் அந்தக் கிராமத்துக்குச் சைக்கிளில் வந்து இறங்குகின்றனர்.

சிவகணபதியும் விஜியும் சந்தனக் குடும்பன் வீட்டில் தான் வாயிலில் நிற்கின்றனர். அப்போது...

“பிள்ளைகள் எல்லாரும் விவரம் தெரிந்தவர்கள். ஆனால் யாருக்கும் இன்று மழையில் நாங்கள் வேலைக்குப் போகமாட் டோம் என்று சொல்லத் தைரியம் இல்லை. அந்தத் தைரியம் இருந்திருந்தால் வெள்ளம் வடியட்டும் என்று ஓடைக்கரையில் வண்டியுடன் அவர்களை மணிக்கணக்கில் நிறுத்திவைக்கச் சம்மதித்திருப்பார்களா? அவர்களை இப்படி அடிமையாக்கி வைத்தது உங்கள் தப்பு - இனியாயினும் அவர்களை நல்லபடியாக வளர்க்கிறது நம்ம பொறுப்புன்னு நீங்க நினைக்கணும்...” என்று விஜி கூறிக்கொண்டிருக்கிறாள்.

மம்முட்டியானுக்கு ஒரே ஆத்திரம். “விஜிம்மா, அந்த ஏசண்டுப் பயலும் டைவரும் எங்கண்ணுல பட்டா கோழியைத் திருவறாப்பல குரவளையத் திருகிப் போடுவ. புள்ளங்க வெளியே குதிச்சிடாதபடி கதவ அடச்சிட்டானாமில்ல?”

“வணக்கம்மா - வணக்கம் ஸார்...” என்று கூறிக்கொண்டு இரத்தினமும் மானேசர் சாமியப்பனும் வருகின்றனர்.

விஜி தலையை அசைத்துப் பதில் வணக்கம் தெரிவித்தவாறு நிற்கிறாள்.

“எங்கடா வந்தீய?...” என்று மம்முட்டியான் பாய்கிறான். ஆனால் இரத்தினம் கண்களைத் துண்டால் துடைத்துக் கொள்வதுபோல் பாவனை செய்கிறான். “உங்கோபம் நியாயம் தான். விளையாட்டுப் பிள்ளைங்க. ஓடையைத் தாண்டிடுவேன்னு எறிங்கி ஓடிச்சாம். கதவைச் சாத்தினேன்னு மன்னாரு சொல்றா. அவங்களும் வண்டிலதா குந்தியிருக்கிறாங்க. தண்ணி ஒடப்பைப் பாத்து வண்டியப் பின்னுக்கு எடுக்க முயற்சி பண்ணினேன்னு அழுவுறா. நடந்தது நடந்துபோச்சு. ரங்கையா முதலாளியும், மயிலேஷ் முதலாளியும் நாலு நானா சோறு தண்ணி இல்லாம ரொம்பக் கஷ்டப்பட்டு வருத்தப்படுறாங்க. இறந்து போன குளந்தைங்களுக்கெல்லாம், ஒவ்வொருத்தருக்கும் தலா, ஐயாயிரம் நட்ட ஈடு குடுக்கிறதுன்னு தீர்மானம் ஆயிருக்கு...” என்று நிறுத்துகிறான். “ஐயாயிரமா...” என்று சந்தனக் குடும்பன் தெளிவுபடுத்திக் கொள்ள முயலுகிறான்.

இதற்குள் ‘மானேசரும் ஏசன்டும்’ வந்திருக்கும் செய்தியறிந்து இடுப்புப் பிள்ளைகளும் வயிற்றுப் பிள்ளைகளுமாகப் பல தாயர் அங்கு வருகின்றனர்.

“ஆமாம். ஐயாயிரம்தான்...” என்று சாமிக்கண்ணு அழுத்திச் சொல்கிறார். “அது மட்டுமில்லை, எம்.எல்.ஏ., எம்பி. எல்லாரும் கூடி நேத்துப் பேசிருக்கா. டெல்லி சர்க்காரிலேந்தே ஆறுதல் சொல்லித் தந்தியெல்லாம் குடுத்திருக்காவ. முதலமைச்சரும் இறந்துபோன ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு தலா ஐயாயிரம் குடுக்கும்னு அறிக்கை குடுத்திருக்காக. ஒவ்வொரு குழந்தைக்கும் பத்தாயிரம் வரும்...”

“பத்தாயிரம்...”

“அப்ப மூணு பிள்ளங்க போயிடிச்சே? எனக்கு எம்புட்டு வரும்?”

“முப்பதாயிரம் வரும்...” என்று விள்ளுகிறார் சாமிக்கண்ணு.

அவர்கள் இந்தச் செய்தியைத் தெரிவித்துவிட்டுச் சென்ற பிறகு, அந்த ஆயிரங்களின் வலிமையை விஜி காண்கிறாள்.

பத்து ஆயிரங்கள்! இறந்துபோன ஒவ்வொருத்தருக்கும்...

ஒரு கட்டை அடுக்கினால் பதினேழு பைசா, ஒரு பெட்டி அடுக்கினால் இருபது பைசா என்று கணக்குப் போட்டு ரூபாய் ரூபாயாகச் சிட்டைவில் ஏற்றி, வாரக்கடன், மாசக்கடன் வட்டி கழிக்கப் பொழுதைத் துரத்திப் பிடித்த சிறுவர், தங்கள் இறப்பின் வாயிலாகப் பெற்றோர் முகங்களை ஜகஜ்ஜோதிகள் போன்ற ஆயிரங்களால் மின்னச் செய்துவிடுகின்றனர். மம்முட்டியான் கோழிக்குஞ்சுத் திருகலை மறந்தே போகிறான்.

தனி வீடு கட்டிக்கொள்ள, டிரான்ஸிஸ்டர் பெட்டி வாங்க, வேப்பம்பட்டி சென்று இன்னொரு பெண் கட்டிவரத் திட்டம் போடுவதை விஜியிடமே தெரிவிக்கிறான்.

ஆடுகள் வாங்கத் திட்டமிடுபவரும், உழவு மாடுகள் வாங்க நினைப்பவரும், பணத்தைத் தொடாமல் வட்டிக்கு விடுவதுதான் லாபம் என்று கணக்காக்கும் யோசனைக்காரரும் இறந்து போனவர்களை மறந்தே போகின்றனர். பெற்றவரின் தாபக் குழிகளைப் பத்தாயிரங்களின் நினைப்பே நிரவி அழித்து விடுகின்றன.

“நெசமாலுந்தா குடுப்பாங்களாமா?...” என்று மலைக்கிறாள் மன்னம்மா.

“இம்புட்டுச் சனங்களுக்கும் மத்தியில, மானேசரே வந்து சொல்லி இருக்கிறாரு. பொய் சொல்லுவாங்களா? விஜிம்மா கூட நின்னிச்சே? பொய்யின்னா அவுங்க வுடுவாங்களா?...” என்று சொல்லும் குடும்பன், குரலைத் தாழ்த்தி, “எம்பேருதா குடுத்திருக்கிறே, மூணுபிள்ளகன்னு. அதுங்க பேரச் சொல்லி, ஒந்தம்பிக்கு இதுல பாத்தியத இல்லன்னு அறுதியாச் சொல்லணும்...” என்று விள்ளுகிறான்.

“அவன் நம்ம மகளக் கட்டினானில்ல? அதுக்கு அஞ்சாயிரம் குடுக்க வேண்டாமா?”

“அஞ்சாயிரம் எதுக்கு? அவன் எப்பிடி இதுக்கு உரிமை கொண்டாடுவா? கட்டுனா. ஆனா தனிக்குடும்பம் வச்சானா?... ஆயிரம் குடுப்பம், வேற பக்கம் பொண்ணு கட்டப் போறேங்கிறான். கட்டிட்டு வரட்டும். அதுக்கு மேல சல்லி பேராது...”

மன்னம்மாளுக்கு இன்னும் சந்தேகம். “அவந்தானே பிள்ளங்கள உசிப்பிட்டுப் போனா? ஏசன்டு, மானேசர் அவங்கையிலதான் பணத்தைக் குடுப்பா? சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போறதுக்குக்கூட அவங்ககிட்டதான் குடுத்திருக்கா?”

“அடி போடி... அறிவு கெட்டவளே, மானேசருமில்ல மொதலாளியுமில்ல. முதலமைச்சர் வந்து குடுப்பாராம்... அவவிய பெத்த தகப்பன் பேரச் சொல்லிக் கூப்பிட்டு, கையில ஒவ்வொரு புள்ளிக்கும் பத்தாயிரம் பத்தாயிரம்னு குடுப்பா...!”

“அம்புட்டு நோட்டையும் எப்பிடி எண்ணுவ?

மன்னமாளின் முகத்தில் மகிழ்ச்சிப் பொங்கல் துளும்புகிறது.

“நோட்டில்லடி, காயிதமாட்டும் இருக்கும், செக்குண்ணுவா. அத்த வாங்கில குடுத்தா அப்பப்ப சில்லறையா வேணும்கிற பணம் தருவா. அதெல்லாம் எனக்குத் தெரியும், பாரு இனிமே”

“எனக்கு அந்தப் புள்ளிபோட்ட பச்சசீலயும் மினுமினு ஜாக்கெட்டும் வாங்கித் தாரணும். நீங்க வாட்டுல குடிச்சிப் போட்டு, கேட்டா எட்டி ஒதப்பிய...”

“அடப்போடி பயித்தியக்காரி. அப்ப துட்டில்ல இப்ப சமாசாரமே வேற. உனக்கு என்ன சீலன்னாலும் வாங்கிக்கலாம். முப்பதாயிரம் இப்ப நமக்கிருக்கு. முன்னூறு ரூவாயிக்கிக்கூடச் சீலை இருக்கு. பெரிய வீட்டுப் பொம்பிளிங்க உடுத்தற சீலை...”

“சீல மட்டுந்தா வாங்கிக் குடுப்பியளா?...”

புதிய ஆசைகள் கிளைவிடும் நாணத்தில் அவள் புதுப் பெண்ணாகவே மாறுகிறாள். “என்ன ஆச? சொல்லிப் போடு? நெறவேத்திடுவம்!”

“எனகு... எனுகு... நாயகர் வூட்டில முன்ன அவிய அக்கச்சி வந்திருந்தப்ப, கழுத்தில தாலி போட்டிருந்திச்சி சேப்புக்கல் வச்சு மினுமினுப்பா சங்கிலில தாலி. அது எனக்கு ஒண்ணு போட்டுக்கிடணும் பவன்ல...”

“சவாசு...! போட்டுகிடுவம்...” என்று இழுத்துக் கொள்கிறான்.

குழந்தைகள் இன்னும் உற்பத்தியாகக் கூடிய மகிழ்ச்சிக்கும் தெம்புக்கும் தூண்டுகின்றன பத்தாயிரங்கள்.

காற்றோடு மிதக்கும் பத்தாயிரம் என்ற சொற்கள். சடச்சியின் வீட்டு ஆண்பிள்ளைக்கு ஏமாற்றத்தைத் தூண்டி எழுப்புகின்றன. ஆனாலும் சடச்சியின் மீது எரிந்து விழுவதைத் தவிர எதுவும் செய்ய முடியவில்லை. காத்தமுத்துவுக்கோ ஆற்றாமை பொங்குகிறது. ஏன் அவர்களுக்கு மட்டும் பத்தாயிரம், அவர்கள் என்ன செய்தார்கள்?

எங்கேனும் நான்குபேர் கூடிப் பேசுவதைப் பார்த்தால் அவனும் போய் நிற்கிறான். விஜிம்மா சர்வ வல்லமையுடையவள் என்று நினைத்திருந்தான். மானேசரோ, ஏசன்டோ அவள் சொல்வதைக் கேட்கவில்லை. விஜியம்மா முதலாளியுடன் சண்டைபோட்டுக் கொண்டு வந்து விட்டாளென்று அரிக்காணிப் பாட்டி அம்மாளுடன் பேசிக் கொண்டிருந்ததை அவன் செவியுற்றிருக்கிறான்.

மாரிசாமி அண்ணாச்சியைப் பார்த்துக் கேட்க வேண்டுமென்று திரிகிறான். மாரிசாமி காலையில் எழுந்து கட்டிய பெண்பிள்ளையுடன் காட்டு வேலைக்குப் போய் விடுகிறான்.

பெரியப்பட்டிப் பஞ்சாயத்து ஆபீஸை ஒட்டிப் பெரிய பந்தல் போட்டிருக்கிறார்கள். மைக்கு செட்டில் பாட்டு சின்னப்பட்டிக்கெல்லாம் கேட்கிறது. முதலமைச்சர் வந்து பத்தாயிரங்களைத் தம் கைகளால் வழங்குகிறார் என்றால் ஊரில் யார் தங்கியிருப்பார்கள்? சினிமாக் காமிராக்கள் பளிச் பளிச்சென்று மின்ன முதலமைச்சரும், பெண் அமைச்சரும் துயரமே உருவாக நின்று சோடியாக வரும் பெற்றோருக்கு ஆறுதலும் பணமும் அளிக்கின்றனர். குடும்பாயிக் கிழவியின் மகள் வயிற்றுப் பேத்தி இறந்து போயிருக்கிறது. அந்தக் கிழவியின் ‘கண்ணீரை’த் துடைக்கும் அமைச்சரைக் காமிராக்கள் கிளிக் கிளிக்கென்று படம் பிடிக்கின்றன. கிழவி எதுவும் விளங்காமல் கூசும் வெளிச்சத்துக்குக் கண்களை மூடிக் கொள்கிறாள்.

‘ஆறுதல்’ விழா முடிந்து கார்களும், ஜீப்புகளும் ஏனைய அதிகாரிகளின் ஊர்திகளும் சென்ற பின்னரும் பாட்டுப்பாடிக் கொண்டிருக்கிறது.

பொழுதோடு வீடு திரும்பிய சடச்சி, படலை திறந்து கிடப்பதையும், குடிசைக்குள் அடுப்பிலிருந்த சோற்றுப் பானையை நாய் உருட்டித் தள்ளியிருப்பதையும் காண்கிறாள். வடிவு கைக்குழந்தையுடன் ஈரம் படிந்த மண்ணைத் தோண்டி, பிட்டுச் சமைத்து விளையாடிக் கொண்டிருக்கிறாள்.

வந்த ஆத்திரத்தில் அதை நான்கு மொத்துகிறாள்.

காத்தமுத்துவைத் தேடிக்கொண்டு செல்கிறாள்.

வடிவு ஊளையிட்டு அழுகிறது. “எங்கே அந்தப் பய, துப்புக் கெட்ட பய. குடிக்கிற கஞ்சிய நாய் சரிச்சிருக்கு. கதவத் துறந்து போட்டுட்டு எங்கே போளா?...”

பின்புறம் கிணற்றுக் கரையில்தான் காத்தமுத்து இருக்கிறான். சிதறிக் கிடக்கும் உடைந்த மண்பாண்டச் சில்லுகளை ஒவ்வொன்றாகக் கிணற்றுக்குள் வீசிக்கொண்டு மனக் குமுறலைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

“இங்க வாடால, ஒன்ன வெட்டிப்பலி வய்க்கிற! ஒளுங்கா ஒரு வேலை செய்யத் துப்பில்லாதவ...”

அவள் அவனைத் துரத்த, அவன் ஓட, நாய் குரைக்க, அவள் கத்துகிறாள். “வூட்டுப் பக்கம் வா! உன்ன என்ன செய்யிறம் பாரு! வூட்டத் தொறந்து போட்டுட்டு ஆடுறா. ஒண்ணுக்குத் துப்பில்லாதவெ. நீ தொலஞ்சி போயிருந்தீன்னா, இப்ப எனக்கும் பத்தாயிரமேனும் கிடச்சிருக்கும்!...”

காத்தமுத்து கையிலிருக்கும் பானைச் சில்லைக் குறி பார்த்துத் தாயின் மீது வீசுகிறான்.

“ஐயோ, சாமி கொன்னு போடுறானே” என்று அவள் ஓலமிடுகிறாள்.

“ஒன்னக் கொன்னி போடுவே!” என்று அருகில் வந்து அவளை உதைத்துவிட்டு ஓடுகிறான்.

அத்தியாயம் - 32

விஜி அந்த ஆறுதல் விழாவுக்குச் செல்லவில்லை. அவளுடைய தந்தையும் சிவகணபதியும் சென்றிருக்கிறார்கள்.

வீட்டில் அவன் மட்டுமே இருக்கிறாள்.

கார் வந்து நின்றது தெரியவில்லை. கதவு ஓசைப்படும் போதுதான் அவள் வாயிலுக்கு வருகிறாள்.

“...வாருங்கள்... வாங்க...”

ரங்கேசன் அங்கு வருவதை அவள் எதிர்பார்த்திராததால் தயக்கத்தைச் சமாளித்துக் கொள்கிறாள்.

உள்ளே வந்தவனுக்கு அங்கிருக்கும் ஒரே நாற்காலியைக் காட்டுகிறாள்.

தான் அறைக்கதவின் பக்கம் நிற்கிறாள்.

அவன்தான் மெனனத்தைக் கலைக்கிறான்.

“எனக்கு ரொம்ப நாட்களாக இங்கே வரவேணும், உன்னைப் பார்க்கவேணும் என்று எண்ணம்... அத்தை இறந்த போதுகூட வர முடியாமலாகி விட்டது...”

அவள் தலையை நிமிர்த்தவில்லை.

“இந்த ஊர்களிலிருந்து இனி தொழிலுக்கு யாரையும் கூட்டி வரவேண்டாமென்றாகி விட்டது...”

சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்க்கிறாள் விஜி.

“இந்த ஊரில் இப்போதைக்கு ஏழெட்டுக் குழந்தைகள் கூட உங்களுக்குக் கிடைப்பதற்கில்லை. இன்னும் இரண்டு மூன்று வருஷம் போனால்தான் வேலைக்குக் குழந்தைகள் கிடைப்பார்கள்!”

“விஜி நடந்ததற்கு நான் சொல்லமுடியாமல் வருத்தப்படுகிறேன். நீ... பத்திரிகையில் எழுதிய கட்டுரையைப் பார்த்தேன். உண்மையில் சிறுதொழில் நிலையில் இந்தத் தீப்பெட்டி உற்பத்தியில் மொத்தத்தில் பாதிக்கு மேல் பங்கு வகிக்கிற தென்றால், இதிலுள்ள போட்டி, மற்றும் பல இடையூறுகளை நீ புரிந்து கொண்டிருப்பாய். வெளிநாட்டுக்காரர் பங்கோடு ஏற்பட்ட யந்திரமயத் தொழிற்சாலையோடு போட்டி போட வேண்டிய நிலை; தொழிலாளர் பற்றாக்குறை எப்போதும் இருக்கிறது. இன்று அதிகமாக வரி கட்டுபவர், இந்த ஸ்மால்ஸ்சேல் செக்டர்காரர்கள்தான். நீ எல்லாவற்றையும் யோசிப்பாய் என்று நினைத்து, உன்னுடன் பேச வந்தேன்...”

“எனக்கும் நீங்கள் இவ்வளவுக்கு மதிப்புக் கொடுத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது... நான் ஒன்றும் உங்கள் விரோதியல்ல. குழந்தைகளுக்கு எதிர்காலமில்லாமல் செய்யக்கூடிய தொழிலும், உற்பத்திப் பெருக்கமும், உண்மையில் மகத்தான தேசீய நஷ்டம் என்று சுருதுகிறேன், அண்ணா!”

“நான் உன் கருத்தை நிச்சயமாக ஒப்புக்கொள்கிறேன் விஜி. நீ... உன்னை மணப்பந்தத்திலிருந்து விடுவித்துக் கொண்டாலும், உன்னை எங்கள் குடும்பத்தவளாகவேதான் கருதுகிறேன். உன்னுடைய எதிர்காலத்திட்டம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால்... எனக்கு உன் நல்வாழ்வில் மிகுந்த அக்கறை உண்டு நீ... டீச்சிங் லைனில் ஈடுபாடுண்டு என்று முன்பு சொன்ன நினைவு, காலேஜில் உனக்கு வேலை காத்திருக்கிறது...”

அவள் மெல்லிய புன்னகை செய்கிறாள்.

“மிக்க நன்றி அண்ணா ஆனால்... ஆனால்...”

லோசனி எப்போதோ கூறிய சொல் நினைவில் மின்னுகிறது.

“எனக்காக யாருடைய ராஜினாமா கடிதத்திலும் தேதி போட்டு உயிர் கொடுக்க வேண்டாம் அண்ணா!”

அவனுடைய புருவங்கள் சுருங்குகின்றன.

“இதெல்லாம் என்ன நான்சென்ஸ் விஜி? உன்னுடைய காதில் யாரோ இப்படி விஷமத்தனமான செய்திகளைப் போட்டிருக்கிறார்கள்!”

“உங்களைப் பற்றி நான் எதுவும் பேசவில்லை அண்ணா! இது நடைமுறையில் உள்ள கசப்ப