kottavi rajavum avarathu raajiyamum

கொட்டாவி ராஜாவும் அவரது தூங்குமூஞ்சி ராஜ்ஜியமும்

கொட்டாவி ராஜாவுக்கு இரவில் தூங்குவதில் ஒரு பிரச்சினை இருந்தது. பகலில் அவரது மந்திரிகள் சிக்கலான விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில், தனது தலை மட்டும் தூக்கத்தில் தொங்கி விடுவதை அறிவார். எல்லோரிடமும் தீர்வு கேட்டார். எதுவும் வேலை செய்யவில்லை..அதுவரைக்கும்.. இந்தப் புத்தகத்தின் மூலம் கொட்டாவி ராஜாவின் ராஜ்ஜியத்திற்குப் போய் அடுத்து என்ன நடந்தது என்று பாருங்கள்.

- Sudha Thilak

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஆ.......வ்வ்!!

கொட்டாவி ராஜாவுக்கு தூக்கமாக வந்தது. அவரது மந்திரிகள் ஒரு சிக்கலான பிரச்சினையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். ராஜாவிற்கு அலுப்பாக இருந்தது,

அவர் முந்திய இரவில் சரியாக தூங்கியிருக்கவில்லை. முந்தா நாளும் தூங்கியிருக்கவில்லை. அதற்கும் முந்திய முப்பது இரவுகளிலும் தூங்கியிருக்கவில்லை.

ராஜா மந்திரிகளின் பேச்சைக் கவனிக்க முயன்றார். ஆனால் வாக்கியங்கள் எல்லாம் அரைகுறையாகக் கேட்டன.

‘‘குத்தகைக்காரரைப் பொறுத்தவரைக்கும், சரியான கொலப்கொலப்குல உழ மற்றும் வரி பொலகுலதல உப்பல்லொல்லோ.’'

`கொர்..கொர்...கொர்..`ராஜாவின் தலை தூக்கத்தில் தொங்கியது.

நளன் ஒரு நல்ல ராஜா தான். ஆனால், சிறிது காலமாக, பகலில் விழித்திருக்க முடியவில்லை. அரசவையில் எப்போதும் கொட்டாவி விட்டபடி இருந்தார். அதனால் மக்கள் அவரை ’கொட்டாவி ராஜா’ என்றே கூப்பிடத் தொடங்கியிருந்தனர்.

ஒரு நாள் ராஜா தூங்கிக் கொண்டிருந்த அவர் மனைவியை மெதுவாக எழுப்பி, ’’சுஜாதா! உன்னால் எப்படி நாள் முழுவதும் சுறுசுறுப்போடும், உற்சாகத்தோடும் இருக்க முடிகிறது’’ என்று கேட்டார்.

‘‘ஏனென்றால், நான் இரவில் உறங்குகிறேன்! அதனால், நீங்களும் உறங்க வேண்டும்!’’ பட்டென பதில் சொன்னார் அவர்,

ஆம்! இரவில் உறங்க வேண்டும். ஆனால் எப்படி?

ராஜாவோ பகல் முழுவதும் கொட்டாவி விட்டுக் கொண்டும், மாலை நேரமாகும் போது தூங்கி வழிந்து கொண்டும் இருப்பார். இரவு நேரமாகும் போது நன்கு சுறுசுறுப்பாகி விடுவார். தூக்கமே வராது!

மறுநாள் காலையில், அரசவையில் ராஜா கேட்டார், ‘‘முக்கிய மந்திரி! இரவில் தூக்கம் வராவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?’’

‘‘நான் தூக்க தேவதையான நித்ரா தேவியிடம், என்னை ஆசீர்வதிக்குமாறு கேட்பேன்’’ என்றார்.

‘‘எப்படி?’’

‘‘என் அம்மா எப்போதும் சொல்வார்கள், நிரம்பிய வயிறு, தேவதைக்கு ஒருபோதும் தடையாய் இருக்காது என்று. அதனால், என் சமையல்காரரை வெதுவெதுப்பான, இனிப்புடன் கூடிய அறுசுவை விருந்தை பறிமாறச் சொல்வேன். சாப்பிட்ட இரண்டு நிமிடங்களிலேயே நன்கு உறங்கி விடுவேன்.’’

மந்திரியின் உருண்டையான வயிற்றைப் பார்த்தார் கொட்டாவி ராஜா; அவர் சொன்னதை நம்பினார்.

நிதி அமைச்சர், தானும் தன் பங்கிற்கு ஏதேனும் சொல்ல நினைத்தார். ‘‘இது என்ன பிரமாதம்! மிக எளிமையான விஷயம். சமையல்காரரை தொந்திரவு செய்ய வேண்டியதில்லை. நான் இரவில் தேன் கலந்த வெதுவெதுப்பான பாலை அருந்துவேன். தினமும் ஒன்பது மணி நேரம் நன்றாக தூங்குகிறேன்.’’ என்றார்.

அரசவைப் பாடகருக்கு இந்தக் கதைகள் எல்லாம் பிடிக்கவில்லை. அவருக்கு வயிறு நிரம்பியிருந்தால் பாட முடியாது. அரசருக்குத் தானும் உதவ நினைத்தார். ‘‘அரசே! எங்கள் குடும்பத்தில் அனைவரும் எப்போதும் நித்ரா தேவியை பாட்டுப் பாடி அழைப்போம். வீணை மீட்டி ஒரு அழகான நீலாம்பரி பாடினால்...ஆஹா! இன்பம்!’’ என்றார்.

அரச கவியோ, ‘‘மன்னா! மலர்ந்து மணம் வீசும் பாரிஜாத மலர்களின் மேல் நிலா வெளிச்சம் பட்டு அழகு சேர்க்க, தென்றல் வீசும் அரண்மனைப் பூங்காவில் காலாற ஒரு நடை நடந்து வாருங்கள். ஆஹா! அந்நேரத்தின் கவித்துவமும், அழகும் உங்கள் கவலைகளை எல்லாம் போக்கி விடும், நித்ரா தேவி அமைதியான மனங்களை விரும்பி வருவாள்.’’ என்றார்.

உடனே அரசவை விகடகவி, ‘‘மாமன்னா! இவை எதுவும் உதவவில்லை என்றால் ஒரு நல்ல கதை உங்களுக்குக் கட்டாயம் தூக்கத்தை வரவழைக்கும்’’ என்றார்.

இதையல்லாம் கேட்ட கொட்டாவி ராஜா யோசித்தார்.

‘தூக்கம் வரவழைக்கத் தான் எத்தனை வழிகள்! இவற்றில் ஏதாவது ஒன்று கட்டாயம் வேலை செய்ய வேண்டும்!’

அன்று மாலை, அரண்மனை சமையல்காரர்களுக்கு சிறப்பு விருந்து தயார் செய்ய உத்தரவிட்டார்.

சூடான சாதம், நெய், சுடச்சுட சாம்பார், சேனை, உருளைக் கிழங்கு வறுவலுடன் கசகசா பாயசம். எல்லாவற்றையும் கீழே தள்ள ஜில்லென்ற மோர்!

இன்று இரவில் தூங்கியே ஆக வேண்டும் என்னும் ஆசையில் எல்லா வகை உணவுகளையும் இருமுறை சாப்பிட்டார் ராஜா.

சாப்பிட்டு முடிக்கவே இரவு பதினோரு மணி ஆகிவிட்டது. ஆனாலும் கொட்டாவி ராஜாவிற்கு தூக்கம் வரவில்லை.

என்ன செய்வது? பழைய பழக்கங்களை உடைப்பது அவ்வளவு எளிதல்லவே!

உருண்டு, புரண்டு கொண்டிருந்த ராஜா முக்கிய மந்திரியின் மேல் அதிருப்தி அடைந்தார். நித்ரா தேவி வரவேயில்லை. சாப்பிட்டது போதவில்லை என்றே தீர்மானித்தார்.

‘‘சமையல்காரரே!’’ உரக்கக் கூவினார்.

தூக்கத்தில் இருந்த சமையல்காரர் எழுந்து, அவசரமாய் உடுப்பை அணிந்து கொண்டு ராஜாவிட்ம் ஓடி வந்தார்.

‘‘எனக்கு ஒரு பெரிய கோப்பை நிறைய தேன் கலந்த வெதுவெதுப்பான பாலைக் கொண்டு வாரும்! சீக்கிரம்!’’ என்றார் ராஜா.

கொட்டாவி ராஜா அத்தனை பாலையும் ஒரே மூச்சில் குடித்து முடித்தார்.

ஓ..வ்.! வயிறு அளவுக்கு மீறி நிரம்பி விட்டது. அவரால் எழுந்திருக்க முடியவில்லை. நகரவும் இயலவில்லை. படுக்கவோ, உறங்கவோ நிச்சயமாக இயலவில்லை.

‘‘ஒரு வேளை, இசையைக் கேட்பது தூக்கம் வர உதவுமோ’’ என யோசித்தார்.

உடனே, அரசவைப் பாடகர்களை வரச் சொல்லி ஆள் அனுப்பினார். கசகசவென சுற்றிய தலைப்பாகையும், அவசரமாய்க் கட்டிய வேஷ்டியுமாக அவர்கள் ஓடி வந்தனர். அப்போது நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டிருந்தது.

‘‘எனக்காக நீலாம்பரி வாசியுங்கள்’’ என்றார்.

அந்த நிசப்தமான நள்ளிரவில் அந்த இன்னிசை, கேட்க அற்புதமாக இருந்தது.

கொட்டாவி ராஜா அனுபவித்து கேட்டு இளைப்பாறினார். என்ன ஒரு ஆனந்தம்!

இருபது நிமிடங்களுக்குப் பின் ராஜாவின் இமைகள் சொருக ஆரம்பித்தன. அப்போது..

‘‘டொய்ங்! டொம்!’’

வீணை வாசிப்பவர் தூங்கி வீணையின் மீது விழுந்து விட்டார்,

திரும்பவும் பாட ஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக தூங்கி வழிந்து கொண்டு, தாளம் தப்பியும், ராகம் தப்பியும் பாடினர். ஒரே அபஸ்வரம்!

அதைக் கேட்ட நித்ராதேவி ஓடிப்போய் விட்டாள். ராஜா கொட்ட விழித்துக் கொண்டு எரிச்சலுற்றார்.

அப்போது ராஜாவிற்கு அரசவையில் விகடகவி சொன்னது ஞாபகம் வந்தது.

உடனே அவரை அழைத்து வரச் சொன்னார்.

’’எனக்கு ஒரு கதை சொல்லும்’’ என்றார்.

விகடகவி ஒரு நீளமான அலுப்பூட்டும் கதை ஒன்றைச் சொல்லத் தொடங்கினார். அதைக் கேட்டு ராஜா நிச்சயம் தூங்கி விடுவார் என்று நம்பினார். ஆ! ஆனால் நம் கொட்டாவி ராஜாவுக்கு அது திருப்தி அளிக்கவில்லை. பொறுமையிழந்து, ‘‘சரி, சரி! கதையின் முடிவில் என்னவாயிற்று?‘‘ என்று கேட்டபடி இருந்தார்.

இந்தப் பொறுமையின்மை நித்ரா தேவிக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர் தள்ளியே இருந்தார். ஒரு மணி நேரத்திற்குப் பின்னர், கம்மலான குரலில் கதையை முடித்து, மங்கலான கண்களோடு வீடு திரும்பினார் விகடகவி. இத்தனைக்குப் பிறமும் ராஜா நன்கு விழிப்புடனே இருந்தார்.

அவர் தன் மனைவியை எழுப்பித் தன்னுடன் காலாற நடந்து வரச் சொல்லி வற்புறுத்தினார். அவரும் சிடுசிடுத்துக் கொண்டே தயாரானார்.

"முல்லைத் தோட்டம் வரைக்கும் தான், சரியா? அதன் பிறகு நான் திரும்பி வந்து தூங்கி விடுவேன்’’ என்றார்.

நிலவொளியில், தூக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த பறவைகள் எழுப்பிய மெல்லிய நகைப்பொலிகளைக் கேட்டபடி அரண்மனையின் பெரிய பூங்காவைச் சுற்றி நடந்தனர். ராஜா தான் அமைதியாகி வருவதை உணர்ந்து, ஆஹா! இப்போது திரும்பிச் சென்று உறங்கும் நேரம் ஆகி விட்டது’ என்று நினைத்தார்.

ஒரு வழியாக ராஜா படுத்துக் கொண்டதும், எல்லாப் பக்கமும் பெரும் அமைதி சூழ்ந்தது,  ஆனால் அது, ராஜா தன் வயிற்றிலிருந்து ’கொர கொர’ என்ற உருளும் சத்தத்தைக் கேட்கும் வரை தான்!

பாட்டு, கதை, மென்காற்று, நடை எல்லாம் சேர்ந்து அவருக்குப் பசியைத் தூண்டி விட்டது.

இப்போது ராணி கவனிக்க ஆரம்பித்தார். ஒரு கோப்பை பாலைக் கொண்டு வரச் சொன்னார். உடம்பு பிடித்து விடும்  பணிப்பெண்ணை அழைத்து ராஜாவின் கால்களை பிடித்து விடச் செய்தார். சில நிமிடங்களில் நித்ரா தேவி ராஜாவுக்கு அருள்புரிந்தார்.

ஒரு வழியாக அரண்மனை அன்றிரவுக்கு மூடப்பட்டது.

தினப்படி இவையெல்லாம் ஒரு வழக்கமாகத் தொடர்ந்தன. சில நாட்களுக்குப் பின் ராஜா வழக்கமான நேரத்திற்கு முன்னரே தூங்க ஆரம்பித்தார். இரண்டு வாரங்களில் இரண்டாவது கோப்பைப் பாலுக்குப் பின்னர் தான் தூக்கத்தில் ஆழ்வதை ராஜா தெரிந்து கொண்டார். மேலும் சில வாரங்களுக்குப் பிறகு  பூங்காவில் நடந்து விட்டு வந்ததும் தூங்க ஆரம்பித்தார். ஒரு மாதத்தில் விகடகவியின் கதைக்கே தூங்க ஆரம்பித்தார்.

நாட்கள் செல்லச் செல்ல இரவு சாப்பிட்டானதும் தூங்க ஆரம்பித்தார்.

பெரும்பாலான காலைகளில், ராஜா புதுமலர்ச்சியோடு எழுந்தார். அவரது நடையில் ஒரு துள்ளல் கூடியது. எல்லோரிடமும் புன்னகைத்தார்.

ஆனால் சமையல்காரர், பாடகர்கள், விகடகவி, உடம்பு பிடித்து விடும் பணிப்பெண், ராணி இவர்களின் தூக்கம் என்னவாயிற்று? எப்போது ராஜா எழுந்து நம்மைக் கூப்பிடுவார் என்று தெரியாததால் இரவு முழுவதும் காத்துக் கிடந்தார்கள். ஆகவே, அவர்கள் பகல் முழுவதும் தூக்கக் கலக்கத்தோடு சோர்வாகவும், சிடுசிடுத்தபடியும் இருந்தனர். அதே போல் தான் இவர்களுக்காகக் காத்திருந்தவர்களும் – சமையல்காரரின் மனைவி, பாடகரின் மகன், விகடகவியின் அண்ணன், உடம்பு பிடித்து விடும் பணிப்பெண்ணின் தந்தை, ராணியின் பணிப்பெண், பணிப்பெண்ணின் கணவர், கணவரின் தம்பி, தம்பியின் நண்பன், நண்பனின் பெற்றோர்...அந்நகர மக்கள் அனைவரும்..

ராஜாவுக்கு தூக்கமின்றி தவிக்கும் மக்களைப் பற்றிய கவலை அதிகரித்தது. தன்னுடைய விரிவான தீர்வை யாருக்கும் பரிந்துரைக்க இயலவில்லை. ஆகவே, தன் பிரதான குருவிடம் ஆலோசனை கேட்டார். இது ஒரு கடினமான பிரச்சினை என்பது அறிவாளியான குருவுக்குத் தெரிந்திருந்தது. ‘‘இன்றிலிருந்து பதினைந்தாவது நாளில் அனைவரையும் நகர மண்டபத்தில் கூடச்செய்யுங்கள். அவர்கள் வெந்நீர்க் குளியல் முடித்து, இரவு சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு சூரியன் மறையும் வேளையில் வரவேண்டும் எல்லோருக்கும் அருள் புரிய நித்ரா தேவியை நான் வரவழைக்கிறேன்’’ என்றார்.

இப்படியாக மொத்த நகரமும் கூடியது. எல்லோரும் தங்களது உறக்கமில்லா இரவுகள் முடிவடையப் போகிறது என்று நிம்மதி அடைந்தனர்.

அரண்மனை குரு தேவதையைப் புகழ்ந்து துதி பாட ஆரம்பித்தார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, எல்லோரைக் காட்டிலும் அதிக தூக்கக் கலக்கத்தில் இருந்த ஒரு இளம் தாய் கொட்டாவி விட்டார். அவரைப் பார்த்து அவர் குழந்தை கொட்டாவி விட்டது. அதைப் பார்த்த அதன் தந்தை .. ஆம்! அவரும் கொட்டாவி விட்டார்.

ஒரு பாடகர் பாதிப் பாட்டில் கொட்டாவி விட்டார். அவரைச் சுற்றியிருந்த இருபது பேரும் கொட்டாவி விட்டனர். பின்னர் அவர்களுக்கு அருகில் இருந்தவர்கள் அனைவரும் கொட்டாவி விட்டனர்.

அங்கு கூடியிருந்த அத்தனை பேரையும் இந்தக் கொட்டாவி அலை தழுவியது,

நித்ரா தேவியால் இத்தனைக் கொட்டாவிகளில் இருந்து தள்ளியிருக்க இயலவில்லை. அவர் நகரத்தை நோக்கி ஓடோடி வந்தார்; எல்லோரையும் மெல்லிய காற்றால் வருடினார்.

அன்றைய இரவிற்குப் பின் தொடர்ந்து ஒவ்வோர் இரவும் கொட்டாவி ராஜாவின் ராஜ்ஜியத்தில் இருந்த அனைவருக்கும் தூக்கத்தை அருளினாள்.