சீக்கூதான் அவளது தோழிகள் கூட்டத்திலேயே மிகவும் சோகமான பெண்.
அவள் மொத்த வகுப்பிலும் நிச்சயமாக அவள்தான் மிகவும் சோகமான பெண்.
அவள்தான் உலகிலேயே மிகவும் சோகமான பெண்ணாகக் கூட இருக்கலாம்.
நண்பர்களா? சீக்கூவுக்கு இப்போதெல்லாம் நண்பர்களே இல்லை.
சீக்கூவுடன் விளையாட யாருக்குமே பிடிக்கவில்லை.
ஏனென்றால், அவள் தலைக்கு மேலே ஒரு மேகம் மிதந்து கொண்டிருந்தது.
அது ஒரு குப்பை மேகம்.
ஆரஞ்சு தோல்களும் பிஸ்கட் பாக்கெட் உறைகளும், உடைந்த பொம்மைகளும் பென்சில் சீவிய குப்பைகளும், நெளிந்த பிளாஸ்டிக் பாட்டில்களும் வண்ணமயமான பிளாஸ்டிக் பைகளும். இவற்றைச் சுற்றி ரீங்காரமிடும் ஈக்கள் கூட்டமும்!
தலைக்கு மேலே குப்பை மேகம் மிதந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணுடன் விளையாட யாருக்குமே பிடிக்கவில்லை.
அவர்கள் தலையில் அழுகிய வாழைப்பழத் தோல் ஒன்று விழுந்துவிட்டால்? அய்யே!
சீக்கூவால் இப்போதெல்லாம் கண்ணாமூச்சிகூட விளையாட முடிவதில்லை.
குப்பை மேகம் அவள் இருக்குமிடத்தைக் காட்டிக் கொடுத்துவிடும்.
“பள்ளிக்கு நாம் ஒன்றாக நடந்து போகலாம்” என்று சோனாவிடம் சொன்னாள் சீக்கூ. அதைக் கேட்டதும் எதிர்திசையில் தலைதெறிக்க ஓடிவிட்டாள் சோனா. “உன் பென்சில் சீவியைக் கொஞ்சம் தர்றியா!” என்று ஸ்வீட்டியிடம் கெஞ்சினாள் சீக்கூ. ஸ்வீட்டி, முகத்தைச் சுளித்துக் கொண்டு ஆஷாவின் அருகில் போய் அமர்ந்தாள். மதிய உணவைக்கூட சீக்கூ தனியாகத்தான் சாப்பிட வேண்டியிருந்தது.‘நான் அம்மாவின் பேச்சைக் கேட்டிருக்க வேண்டும்’ என்று சீக்கூ நினைத்தாள்! குப்பையை எறியாதே என்று அம்மா எப்போதும் சொல்லுவார்.
“வாழைப்பழத் தோலை தெருவில் எறியாதே!”“காலி பிஸ்கட் பாக்கெட்டை குப்பைத்தொட்டியில் போடு!”ஆனால் சீக்கூ கேட்கவேயில்லை. சிரித்துவிட்டு குப்பையை எறிந்துகொண்டே இருந்தாள்.
ஒரு நாள் அம்மாவுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. “சீக்கிரமே, இந்தக் குப்பை எல்லாம் சேர்ந்து உன் கூடவே வரப்போகிறது!” என்றார். சீக்கூ சிரித்தாள். அடுத்த நாள் காலை துர்நாற்றமும், ஈக்கள் பறக்கும் சப்தமும் சீக்கூவை எழுப்பின. ஒரு குப்பை மேகம் அவள் தலைக்கு மேலே மிதந்து கொண்டிருந்தது. அம்மாவின் வார்த்தைகள் பலித்துவிட்டன! இப்போது சீக்கூவால் சிரிக்க முடியவில்லை.
சீக்கூ ஓடிப்போகப் பார்த்தாள்.
ஆனால், அந்தக் குப்பை மேகம் அவளை எல்லா இடத்துக்கும் பின்தொடர்ந்தது. சீக்கூ, ஒரு துடைப்பத்தை எடுத்து அந்த மேகத்தைப் பெருக்கித்தள்ள முயன்றாள். ஆனால், அந்தக் குப்பையைத் தள்ள முடியவில்லை.
சீக்கூ எல்லாவற்றையும்முயன்று பார்த்துவிட்டாள்.
அந்த மேகத்திடம் தன்னை விட்டுவிடும்படி கத்தினாள். அதை குப்பைத்தொட்டியில் போட்டுவிடவும் முயன்றாள். ஆனால் அந்தக் குப்பை மேகம் போகவே மாட்டேன் என்றது. சீக்கூ மிகமிக சோகமானாள்.
அதன் பின் ஒரு சம்பவம் நடந்தது!
பாலா, வாழைப்பழத் தோலை வீதியில் எறிவதை சீக்கூ பார்த்தாள். அவளுக்கு எரிச்சலாக வந்தது. அவள் தலை மேல் இருக்கும் மேகம் அவன் கண்களுக்குத் தெரியவில்லையா, என்ன?
“அடேய் மடப்பயலே! தெருவில் வாழைப்பழத் தோலை எறியாதே! யாராவது வழுக்கி விழுந்துவிடுவார்கள்!” என்று கத்தினாள்.
குப்பை மேகத்தைப் பார்த்த பாலா, பயந்து தோலைக் குப்பைத்தொட்டியில் போட்டான்.
அடுத்த நாள் குப்பை மேகம் சற்றே சிறியதாகியிருந்தது!
“இது எப்படி நடந்தது?” என்று சீக்கூ வியந்தாள்.
ரீமா அத்தை பிளாஸ்டிக் பைகளை வீசி எறிவதை சீக்கூ பார்த்தாள்.
“அத்தை! தயவு செய்து இந்தப் பைகளை எடுத்து மீண்டும் உபயோகியுங்கள்” என்றாள் சீக்கூ.
ரீமா அத்தையும் பைகளை எடுத்துக்கொண்டு போனார்.
அடுத்த நாள் காலை, சீக்கூ விழித்தபோது அந்த மேகம் இன்னும் சிறியதாகியிருந்தது.
சீக்கூ புன்னகைத்தாள்.
இப்போது, என்ன செய்யவேண்டும் என்று அவளுக்குப் புரிந்துவிட்டது.
யாரேனும் பென்சில் குப்பைகளையோ, பிஸ்கட் பாக்கெட் உறைகளையோ தூக்கி எறிந்தால் சீக்கூ அவர்களைத் தடுத்து நிறுத்தினாள். நெளிந்த பிளாஸ்டிக் பாட்டில்களை அவளே எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டாள்.
அந்தக் கிராமம் சுத்தமாகிக்கொண்டே வந்தது. அத்தோடு, சீக்கூவின் மேகமும் சிறியதாகிக்கொண்டே வந்தது.
ஒரு நாள் அது மறைந்து விட்டது!
மொத்தமாக மறைந்து விட்டது!
இப்போது உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான பெண், சீக்கூவாகத்தான் இருக்கவேண்டும்!
அதன் பின் எப்போதுமே சீக்கூ குப்பையை எறியவில்லை.சுத்தமான ஊரில் வாழ்வதை அவள் விரும்பவும் செய்தாள். ஆனால் அந்தக் குப்பை மேகம் மறுபடியும் வந்துவிடுமோ என்ற பயமும் அவளுக்கு உள்ளூர இருந்தது.யாருக்குத் தெரியும்!
கொஞ்சம் குப்பையைக் கிளறுவோம்!நீங்கள் குப்பையைப் போட்ட பிறகு, அது என்னவாகிறது என்று வியந்திருக்கிறீர்களா? இல்லை, இல்லை! அது உங்கள் தலைக்கு மேலே மேகமாகி மிதக்காது! அந்தக் குப்பை உங்கள் வீட்டின் அருகிலுள்ள பெரிய குப்பைத்தொட்டிக்குப் போய்ச் சேரும்.நீங்கள் குப்பையை வெளியே எறிந்தால்,அது தெருவோரமாகத் திரண்டுவிடும். அதில் சில குப்பைகள் உங்கள் வீட்டிலிருந்து கழிவுநீரைக் கொண்டு செல்லும் வடிகாலில் விழுந்து, அதை அடைத்துக் கொள்ளும். இது கொடிய நோய்களைப் பரப்புகின்ற ஈக்களை ஈர்க்கும். அய்யே! குப்பையான சூழலில் வாழ்வது யாருக்குத்தான் பிடிக்கும்? சீக்கூவைக் கேளுங்களேன்!
குப்பை மேகத்தைத் தவிர்ப்பது எப்படி?
- நம் சுற்றுப்புறத்தில் குப்பையை எறியாமல் இருக்கலாம்.
- குப்பையை எப்போதும், அருகிலுள்ள குப்பைத்தொட்டியைத் தேடி, அதிலேயே போடுங்கள்.
- வாழைப்பழம் சாப்பிட்ட பின், தோலை வீதியில் எறிய வேண்டாம். ஒரு சிறு பையில் அதனைப் போட்டுவைத்து, குப்பைத்தொட்டியை கண்டபின் அதில் போடுங்கள்.
- வாழைப்பழத் தோலைப் போட உபயோகப்படுத்தும் காகிதப்பையைப் போல, பல பொருட்கள் உங்களுக்குப் பயனற்றவையாகத் தோன்றலாம். ஆனால் எல்லாமே பயனற்றவை அல்ல. வாழைப்பழத் தோலுடன் பையையும் குப்பையில் வீசிவிடாதீர்கள். அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று மறு உபயோகம் செய்யலாம்.
- குப்பைக் கூடைகளில் ஈக்கள் மொய்க்காமலிருக்க, அவற்றை மூடி வையுங்கள்.