குட்டிக் குரங்கு ஒரு பெரிய மரத்திலிருக்கும் வீட்டில் வசித்துவந்தது. அது தனது பொருட்களை ஒழுங்காக அதனதன் இடத்தில் வைத்திருக்காது. அதனால் அதன் வீடு எப்போதும் கலைந்தே கிடக்கும்.
ஒருநாள் காலை, குட்டிக் குரங்கு தன் மர வீட்டிலிருந்து கத்தியது.“எங்கே போச்சு? காணோமே! என் வாழைப்பழக் குலை! எங்கே போச்சு?”
குட்டிக் குரங்கு தேனீயிடம் கேட்டது. “தேனீ! தேனீ! என் வாழைப்பழங்களை சாப்பிட்டாயா?”“டுர்ர்ர்ர்! டுர்ர்ர்! டுர்ர்ர்! நான் பூவிலிருக்கும் தேனைத்தான் சாப்பிடுவேன். வாழைப்பழமெல்லாம் சாப்பிடமாட்டேன்” என்றது தேனீ.
குட்டிக் குரங்கு பாம்பிடம் கேட்டது. “பாம்பே! பாம்பே! என் வாழைப்பழங்களை சாப்பிட்டாயா?””ஸ்ஸ்ஸ்! ஸ்ஸ்ஸ்! ஸ்ஸ்ஸ்! நான் எந்த வாழைப்பழத்தையும் பார்க்கல. தொந்தரவு செய்யாம போ!” என்றது பாம்பு.
குட்டிக் குரங்குக்கு ஒரே பசி!
மேசைக்கு அடியில், படுக்கைக்கு அடியில் என எல்லா இடத்திலும் தேடியது.“என்னால் கண்டுபிடிக்க முடியலை! என் வாழைப்பழத்தக் காணோம்!”
குட்டிக் குரங்குக்கு கோபம் கோபமாக வந்தது. “எனக்குப் பசிக்குது! என் வாழைப்பழத்த காணோம், எனக்கு சாப்பிட எதுவுமே இல்ல!” என்று தரையை உதைத்துக் கொண்டு அழுதது.
குட்டிக் குரங்கு சோகமாக பால்கனியிலிருந்து கீழே பார்த்தது.
”அட! பாரு பாரு... அது வாழைப்பழ தோல்தானே! 1... 2... 3... 4... எத்தனை தோல்!” என்றது குட்டிக் குரங்கு.
”ஆகா! அங்கே பார் முயலை! அப்போ முயல்தான் என் வாழைப்பழங்களை எல்லாம் தின்றுவிட்டது!”
”முயலே! என் வாழைப்பழங்களையா தின்கிறாய்?” என்று கத்தியது குட்டிக் குரங்கு.“இல்லை, குட்டிக் குரங்கே. உன் வாழைப்பழங்களை தின்னவில்லை. அங்கே பார். நான் வாழைமரங்கள் வைத்திருக்கிறேன்!” என்றது முயல்.
முயல் குட்டிக் குரங்கின் மரத்தடிக்கு வந்தது. “உன்னைப் பார்த்தால் பசியாக இருப்பதுபோலத் தெரிகிறது. இந்தா, என் வாழைப்பழ சீப்பு ஒன்றை எடுத்துக்கொள்” என்றது.
குட்டிக் குரங்குக்கு மகிழ்ச்சி. “நன்றி, ரொம்ப நன்றி முயலே! ஆனா...”
”என்னோட வாழைப்பழங்கள... ம்ம்ம்... யாரு.... யாரு எடுத்திருப்பா?”
திடீரென குட்டிக் குரங்குக்கு ஞாபகம் வந்தது.“அடடா... இப்போ ஞாபகம் வந்துவிட்டது! நாந்தான் நேத்து இராத்திரி ரொம்ப பசியா இருந்தேன். எல்லா பழத்தையும் நாந்தான் சாப்பிட்டேன்!”