kuyil paattu ketkuthaa

குயில் பாட்டு கேட்குதா?

இது பருவ மழைக்காலம். பள்ளியில் எங்கோ ஒரு குயில் கூவுவது கேட்கிறது. ஆனால் அதற்கு தொண்டைகட்டிக் கொண்டது போல் இருக்கிறது! பர்வேஸும் ஸ்டெல்லாவும் தொண்டைகட்டிக் கொண்ட ஒரு பறவையை இதுவரைக்கும் பார்த்ததில்லை. ஆகவே அவர்கள் அதைத் தேடிக்கொண்டு போகிறார்கள்.

- Sudha Thilak

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அது ஜூன் மாதத்தில் ஒரு இனிய நாள். மீரா டீச்சர் வேலையாக இருந்தார். அவர் குழந்தைகளைத் தாங்களாக விளையாடிக் கொண்டிருக்கச் சொன்னார். ஸ்டெல்லாவும் பர்வேஸும் கரும்பலகையில் வரைந்துவிளையாடிக்கொண்டிருந்தார்கள்.

கு...ஊவ் கு...ஊவ்!

“குயிலா?” என்று பர்வேஸ் கேட்டான்.

“ஆமாம்! ஆனால் அதற்கு தொண்டைகட்டுஎன்று நினைக்கிறேன். தொண்டைக்கட்டால் அவதிப்படும் ஒரு குயிலை நான் இதுவரை பார்த்ததேயில்லை. வா, போய்ப் பார்க்கலாம்!” என்றாள் ஸ்டெல்லா.

ஸ்டெல்லாவும் பர்வேஸும் மரங்களை நோக்கி ஓடினார்கள்.

“அம்மாடி! இந்தக் குழி ரொம்ப ஆழமாக இருக்கிறது. என்னால் தாண்ட முடியாது!”என்றாள் ஸ்டெல்லா.

பர்வேஸ் அவள் கையைப் பிடித்துக் கொண்டான். இருவருமாய் தாண்டிக் குதித்துச் சென்றனர்.

“கு...ஊவ், கு...ஊவ்!” என்று கூவினாள் ஸ்டெல்லா. “க்...க்...க்கு...ஊவ்!” என்று முனகினான் பர்வேஸ்.

அவர்கள் எல்லா இடங்களிலும் தேடினார்கள். அவர்களால் அந்தத் தொண்டைகட்டிய பறவையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

சிறிது நேரத்தில், அவர்களது வகுப்பினர் அனைவரும் அவர்களுடன் சேர்ந்து தேடினார்கள்.

கு...ஊவ் கு...ஊவ்!

எல்லோரும் அந்தத் தொண்டைகட்டிய குயிலைப் பார்க்க விரும்பினர்.

“அதோ, அங்கே” என்றாள் பானு. “இல்லை, இல்லை, இங்கே!” என்று ஸேபா மெதுவாகச் சொன்னாள்.“அதோ, அந்தக் கிளையில் ஒன்று இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது” என்று சுட்டிக் காட்டினாள் உமா. “பர்வேஸ், மேலே பார்..! அந்த மரத்தின் மேலே!” என்றான் கரண்.“அது சரி. இப்பொழுது எந்தக் குயிலுக்கு தொண்டைக்கட்டு என்று எப்படிக் கண்டுபிடிப்பது?” என்று கேட்டாள் ஸேபா.

டண் டண்ண் டண்ண் டண்

“உணவு இடைவேளை!” என்று கத்தினாள் பானு.

தன் வயிறு உறுமுவதை பர்வேஸ் உணர்ந்தான்.

“அது என்ன சத்தம்?” என்று கேலி செய்தாள் ஸ்டெல்லா.

எல்லோரும் வகுப்பறைக்குள் சென்று தத்தமது உணவு டப்பாக்களைத் திறந்தார்கள். “இட்லி, ஹைய்யா!” என்றாள் ஸ்டெல்லா மகிழ்ச்சியுடன். “ம்ம்...பப்பா...த்...த்தா!” என்று பராத்தாவை மென்றபடியே திக்கினான் பர்வேஸ்.

டண்-டண்-டண்-டண் டண்ண்...!

உணவு இடைவேளை முடிந்துவிட்டது. பர்வேஸ் தன் பையை எடுத்துக்கொண்டு அமீனா தாதி(பாட்டி)யிடம் ஓடினான். அவர் பள்ளிக்கூட வாசலில் காத்திருந்தார்.

“பர்வேஸ், இங்கே பார், நீ உன் காது கேட்கும் கருவியை அணியவில்லை. இதை அணிவது உன் காது நன்றாகக் கேட்பதற்கு உதவும் என்று உனக்குத்தான் தெரியுமே,” என்றார் அவர்.

அவனுடைய சட்டைப்பையிலிருந்து ஒரு சிறிய கருவியை எடுத்து அவன் காதில் பொருத்தினார்.

“என...க்கு இது ப்பி...டி...க்க..வில்லை” என்று அவன் திக்கிப் பேசினான்.“எனக்கும்தான் கண்ணாடி அணியப் பிடிக்காது. ஆனால் நான் அணிகிறேன், அல்லவா?” என்றார் தாதி.அப்பொழுது குயில் கூவுவது அவனுக்கு இலேசாகக் கேட்டது. “கு...ஊ...ஊவ்” என்று சிரித்துக்கொண்டே அதைப் போலவே திருப்பிக் கூவினான். “கு...ஊஉ...ஊவ்!”அவர்கள் ’சுகர்னா காது கேளாதோர் பள்ளி’க்குப் போகும் வழியில்  தாதியிடம் தொண்டைகட்டிய குயிலைப் பற்றி பர்வேஸ் சொன்னான்.

மாலை நேரத்தில், அவன் வீட்டருகே ஸ்டெல்லாவைச் சந்தித்தான். “ஸ்...ஸ்... டெல்லா, நா... க்கு...க்குயில் பா...டுவதக் கேட்டேன்” என்றான் ஒவ்வொரு வார்த்தையாக.ஸ்டெல்லா தன் இரு கைகளையும் காற்றில் ஆட்டிக் காண்பித்தாள். அதாவது அவள் கைத்தட்டுகிறாள் என்று அர்த்தம்.

பர்வேஸ், சுகர்ணா பள்ளியில் ஷீலா டீச்சரிடம் சைகை மொழியில் கற்றுக்கொண்ட பல வார்த்தைகளை அவளுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறான்.

“குக்...குயிலுக்கு..த்தொ..த்தொண்டை... சரி..ஆயிருச்சுனு ந்நி..ந்நினைக்கிறேன்..” என்றான் பர்வேஸ்.

இவனுடைய குரலும் சரியாகிவிடும் என்று ஷீலா டீச்சர் சொல்கிறார். ஆனால் அதற்கு சிறிது காலம் ஆகலாம் என்கிறார்.

“வா, பிடி!” என்று சொல்லிவிட்டு ஓடுகிறான் பர்வேஸ். இப்பொழுது விளையாட்டு நேரமாயிற்றே!

சிலரின் காதுகள் வித்தியாசமானவை

- பர்வேஸ் ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது, அவன் எந்த ஒரு பெரிய சப்தத்தையும் சட்டைசெய்யாமல் இருப்பதை அவனது பெற்றோர் கவனித்தனர். மருத்துவரிடம் சென்றபோது, அவர் அவனுக்கு காது கேளாமை இருக்கலாம் என்றார். மேலும் அவர், காது கேட்கும் பிற குழந்தைகளைப் போலவே அவனும் எல்லாவற்றையும் கற்க எப்படி உதவலாம் என்பதை விளக்கினார்.

- காது நன்றாகக் கேட்கும்போது, பேசக் கற்றுக் கொள்வதும் எளிதாக இருக்கும். காதுகேளாத பெரும்பாலானோர் தெளிவாகப் பேசமுடியாமல் இருப்பதற்குக் காரணம் மற்றவர் பேசுவதைக் கேட்க முடியாமல் இருப்பதுதான்.

- கேட்கும் திறனை முழுமையாக இழந்தவர்களுக்கு எதுவுமே கேட்காது.  பர்வேஸுக்கு அரைகுறையாகக் காது கேட்கும். ஆகையினால், அவனுக்கு ஷீலா டீச்சரைப் போன்ற ஒரு சிறப்பாசிரியர் தேவை. அவர், சைகை மொழி, உதட்டசைவைக் கற்றல் போன்ற உரையாடல்களைப் புரிந்து கொள்ள உதவும் முறைகளைக் கற்க அவனுக்கு உதவுவார்.

- சில குழந்தைகள் தெளிவாகப் பார்ப்பதற்காக கண்ணாடி அணிவார்கள். பர்வேஸ் தெளிவாகக் கேட்பதற்காக காதுகேட்கும் கருவி அணிகிறான். அவன் அதைக் கவனமாக வைத்துக்கொள்வான்.

- பர்வேஸின் எதிரில் முகம் பார்த்து நின்று, நிதானமாகப் பேசினால் பர்வேஸ் நன்றாகப் புரிந்து கொள்வான். பர்வேஸுக்கு காது மட்டும்தான் சரியாகக் கேட்காது. ஆனால், அவனால் பார்க்க முடியும்; உணர முடியும்; முகர முடியும்; புரிந்து கற்றுக் கொள்ள முடியும்; பந்து வீசிப் பிடித்து விளையாட முடியும்!