Maadathevan Sunai

மாடத்தேவன் சுனை

ராமநாதபுரம் ஜில்லாவில் நடைபெறவிருந்த ஓர் ஆண்டு விழாவுக்காக நான் ரயில் ஏறிப் பிரயாணம் செய்ய நேர்ந்தது. அப்போது நாடெங்கும் தண்டவாளம் நகர்ந்து ரயில் வண்டி கவிழ்ந்தது பற்றிச் செய்திகள் வந்து கொண்டிருந்த காலம். எனினும் நான் ஏறிய அதே ரயிலில் ஒரு கனம் மந்திரியும் ஏறியிருக்கிறார் என்ற தைரியத்தின் பேரில் கவலையற்றிருந்தேன்.

- அமரர் கல்கி

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

பொருளடக்கம்

முன்னுரை

ராமநாதபுரம் ஜில்லாவில் நடைபெறவிருந்த ஓர் ஆண்டு விழாவுக்காக நான் ரயில் ஏறிப் பிரயாணம் செய்ய நேர்ந்தது. அப்போது நாடெங்கும் தண்டவாளம் நகர்ந்து ரயில் வண்டி கவிழ்ந்தது பற்றிச் செய்திகள் வந்து கொண்டிருந்த காலம். எனினும் நான் ஏறிய அதே ரயிலில் ஒரு கனம் மந்திரியும் ஏறியிருக்கிறார் என்ற தைரியத்தின் பேரில் கவலையற்றிருந்தேன்.

'தூங்காமை கல்வி துணிவுடைமை
இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு.'

என்னும் திருவள்ளுவரின் திருவாக்கைக் கடைப்பிடித்து நம் மந்திரிமார்கள் உறக்கமின்றி, தேச நிர்வாகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் விழித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் எந்த அரக்கன் வந்து தண்டவாளத்தைத் தொட்டு விட முடியும்? யமன் தான் அணுகி வந்து விடுவானா?

இரண்டு பக்கமும் காடாயிருந்த பிரதேசத்தில் ரயில் நின்றது. காட்டுப்பாக்கம் ஸ்டேஷனுக்கு அப்பால் சிறிது தூரத்தில் நிற்பதாக அறிந்தேன். காரணம் எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வண்டி தண்டவாளத்திலிருந்து நழுவி விட்டதுதானாம். நல்ல வேளையாய்ப் போச்சு. எல்லாம் கடவுளுடைய செயல்தான்! எதிர் பக்கம் வந்த ரயிலுக்கு நேர்ந்தது இந்த ரயிலுக்கு நேர்ந்திருந்தால்?.. இவ்வுலகில் நம்மால் ஏதோ பெரிய காரியங்கள் நிறைவேற வேண்டுமென்பது கடவுளுடைய விருப்பம் போலும்! அன்றைக்கு 'லார்ட் கிளைவ்' என்னும் மகா வீரன் தன்னைத்தானே துப்பாக்கிக் குண்டால் சுட்டுக் கொள்ள முயன்றபோது அவனைச் சாகாமல் காப்பாற்றிய கடவுள்தான் நம்மையும் காப்பாற்றி இருக்க வேண்டும்! உலகில் எந்தப் பாகத்தில் எந்த சாம்ராஜ்யத்தை நாம் ஸ்தாபிக்க வேண்டுமோ, அல்லது அழித்தாக வேண்டுமோ, யார் கண்டது?

காட்டுப்பாக்கத்துக்கு அருகில் நாலரை மணி நேரம் காத்திருந்த பிறகு எங்கள் ரயில் கிளம்பிற்று. அப்புறமும் கொஞ்சம் சாவகாசமாகவே சென்றது. அதன் பலன் என்னவென்றால், காலை எட்டு மணிக்கு மதுரைக்குப் போக வேண்டிய ரயில் மத்தியானம் 12-30க்கு போய்ச் சேர்ந்தது. (அங்கு இறங்கி விசாரித்தபோது, கனம் மந்திரி அவர்கள், எழும்பூர் ஸ்டேஷனில் தூங்க ஆரம்பித்தவர், திண்டுக்கல்லில்தான் விழித்துக் கொண்டார் என்று அறிந்தேன்! நல்ல வேளை, மந்திரியை மட்டும் நம்பியிராமல் கடவுளையும் நம்பியது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று!)

குறிப்பிட்ட ஆண்டு விழாவுக்குப் போய்ச் சேர வேண்டுமானால், பாக்கிப் பிரயாணத்துக்கு ரயிலை நம்பிப் பயனில்லை என்று ஏற்பட்டது. எனவே மதுரையில் ஒரு மோட்டார் கார் பிடித்துக் கொண்டு புறப்பட்டோ ம். வழியில் காரின் இன்ஜின் கொஞ்சம் தொந்தரவு கொடுத்தது. முன் பக்கத்துத் துவாரம் வழியாகவும், பின் பக்கத்து ஓட்டை வழியாகவும் பிரமாதமான புகை கிளம்பியது. "வேறொன்றுமில்லை; வண்டியின் என்ஜின் கொஞ்சம் தண்ணீர் கேட்கிறது" என்றார் டிரைவர்.

"இந்த வறண்ட ஜில்லாவில் மனிதர்களுக்கும் பிராணிகளுக்குமே தண்ணீர் கிடைப்பது அரிதாயிற்றே! மோட்டார் என்ஜின் வேறு தண்ணீர் கேட்டால், தண்ணீர் எங்கே கிடைக்கப் போகிறது?" என்று நான் என் கவலையைத் தெரிவித்துக் கொண்டேன்.

"சீக்கிரத்தில் மாடத்தேவன் சுனை வரும். அதில் எப்படியும் தண்ணீர் இருக்கும்" என்றார், கூட வந்த பாண்டிய நாட்டு நண்பர்.

மாடத்தேவன் சுனை வந்தது. அது சாலைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு குட்டையான, கறுப்பான, பச்சை நிறமே காணாத பாறையின் உச்சியில் இருந்தது. அந்தப் பாறையின் அடிவாரத்தில் ஒரு பழைய கோட்டை ஒரு காலத்தில் இருந்து, பின்னால் இடிந்து தகர்ந்து போயிருக்க வேண்டும் என்பதற்கு அறிகுறிகள் காணப்பட்டன. கோட்டைச் சுவரில் ஒரு சிறு பகுதி கூட உருப்படியாக இல்லை. கோட்டையின் அஸ்திவாரங்கள், தகர்ந்து உருண்டு கிடந்த சிற்சில பகுதிகள் மட்டுமே காணப்பட்டன.

அத்தகைய கரிய பாறையின் உச்சியில் சுற்று வட்டாரத்தில் வெகு தூரத்துக்கு வறண்டு கிடக்கும் பிரதேசத்தில், அந்த இனிய தெளிந்த நீர்ச்சுனை எப்படி ஏற்பட்டது என்பது ஒரு பெரிய மர்மமாகவே தோன்றியது. இங்கேதான் இயற்கையின் அதிசயமான சக்தியைக் காண்கிறோம். சுனையைப் பார்த்து அதிசயித்த பிறகு, அதன் கரையில் செங்குத்தாக நிறுத்தியிருந்த ஒரு கருங்கல்லின் மீது என் கவனம் சென்றது. கல்லுக்கு அருகில் ஒரு சிறிய வேல் நாட்டப்பட்டிருந்தது. கல்லுக்கும் வேலுக்கும் பூஜை நடப்பதுண்டு என்று, சந்தனம், குங்குமம், புஷ்பம், வழிந்தோடியிருந்த எண்ணெய் இவற்றிலிருந்து தெரிந்து கொண்டேன்.

"மாடத்தேவன் சுனை"யைப் பற்றி ஏதேனும் ஒரு கதை இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சுனையின் கதையைப் பற்றி விசாரிக்க அப்போது அவகாசம் ஏது? ஆண்டு விழா அகோரமான குரலில் எங்களை அழைத்துக் கொண்டிருந்தது. மோட்டார் வாகனத்தின் தாகம் தீர்ந்ததும் புறப்பட்டுச் சென்றோம்.

பிறிதொரு சமயம் அவ்விடத்துக்குச் சென்று அக்கம் பக்கத்தில் விசாரித்துத் தெரிந்து கொண்ட கதையைக் கீழே எழுதியிருக்கிறேன். கொஞ்சம் காது, மூக்கு வைத்திருக்கிறேன்; அவ்வளவுதான். காது மூக்கு உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் கதை பிடித்திருந்தால் சரிதான்.

அத்தியாயம் - 1

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அந்த இனிய சுனையைப் பெற்றுள்ள அர்ச்சுனன் குன்றின் அடிவாரத்தில் ஒரு சிறிய கோட்டை இருந்தது. ஒரு சமயம் அர்ச்சுனன் தென்னிந்தியாவில் தீர்த்த யாத்திரை செய்தபோது இந்தக் குன்றின் மேல் ஏறி நின்று தவம் செய்தானாம். அப்போது அவனுக்குத் தாகம் எடுத்து விட்டதாம். அர்ச்சுனனின் தந்தையான இந்திரன் தன் மகனுடைய தாகத்தைத் தீர்ப்பதற்காகத் தேவலோகத்திலிருந்து ஒரு குடம் தண்ணீரைக் கொட்டினானாம். அதில் அர்ச்சுனன் குடித்தது போக மிச்சமிருந்த தண்ணீர் சுனையாக நின்று விட்டதாம். ஆகையினாலேயே அதற்கு அர்ச்சுனன் குன்று என்று பெயர் வந்ததாம். இது பழைய கதை; குன்றுக்குப் பெயர் வந்த கதை. 'மாடத்தேவன் சுனை' என்னும் பெயர் எவ்விதம் ஏற்பட்டது என்பதையல்லவா இப்போது நாம் பார்க்க வேண்டும்?

அர்ச்சுனன் தவம் செய்து சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தக் குன்றின் சாரலில் பாண்டிய மன்னன் ஒருவன் ஒரு கோட்டை கட்டினான். அந்தக் கோட்டை நாளடைவில் பழுதுபட்டு நமது கதை நடந்த காலத்தில் இடிந்து தகர்ந்த நிலையிலேதான் இருந்தது. ஆகையால் அந்தக் கோட்டையைப் பற்றி யாவரும் அவ்வளவாகக் கவனிக்கவில்லை. பாஞ்சாலம்குறிச்சி வீரபாண்டியக் கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட போது, பாண்டிய நாட்டிலுள்ள பாளையக்காரர்களின் கோட்டைகளையெல்லாம் தகர்த்துவிட வேண்டுமென்று கும்பினிக்கார வெள்ளையர்கள் கட்டளையிட்டார்கள். ஆனால் இந்தக் கோட்டையை இடிக்க வேண்டும் என்று அவர்கள் கட்டாயப் படுத்தவில்லை. ஏற்கனவே அக்கோட்டை வேண்டிய மட்டும் இடிந்து தகர்ந்து இருந்தது. எந்தவிதமான சண்டைக்கும் அதை உபயோகப்படுத்திக் கொள்ள முடியாது. அதிகம் பேர் அதில் தங்கியிருப்பது அசாத்தியமான காரியம்.

அச்சமயம் அக்கோட்டையில் கருப்பையா சேர்வை என்ற கிழவனும், அவனுடைய செல்லப் புதல்வி வேலம்மாள் என்பவளும் வாழ்ந்து வந்தார்கள். வெகு காலத்துக்கு முன்பு அந்தப் பாறைக்குப் பக்கத்தில் கள்ளர் பயம் அதிகமாயிருந்த காலத்தில் வழிப்போக்கர்களுக்குப் பாதுகாப்பாக அக்கோட்டை கட்டப்பட்டது. சிவகங்கைப் பாளையக்காரர் அங்கே கருப்பையாவைக் குடும்பத்துடன் குடியேற்றி வைத்தார். அதற்காக அவருக்கு மானியமும் கிடைத்து வந்தது. இளம் வயதில் கருப்பையா பெரிய வீர தீரனாயிருந்தான். கையில் தடியை எடுத்துக் கொண்டு கிளம்பினால் பத்துக் கள்ளர்களை அவன் ஒருவனாகவே சமாளித்து விடுவான். பிரயாணிகள் இரவு நேரங்களில் அந்தக் கோட்டையில் தங்குவதுண்டு. அப்படித் தங்கியதற்காகவும், கருப்பையா தங்களுக்கு அளிக்கும் பாதுகாப்புக்காகவும் பிரயாணிகள் அவனுக்குத் தக்க சன்மானம் கொடுத்துவிட்டுப் போவார்கள்.

அதெல்லாம் பழைய காலம். கும்பினிக்காரர்கள் வந்து ஆர்க்காட்டு நவாப்புக்காக வரி வசூலிக்கத் தொடங்கியதிலிருந்து எல்லாம் ஏறுமாறாகப் போய்விட்டது. கருப்பையாவுக்குக் கிடைத்து வந்த மானியம் நின்றுவிட்டது. அவனுடைய அருமை மனைவி அவனையும் சின்னஞ்சிறு வேலம்மாளையும் அநாதையாக விட்டு விட்டுக் காலமாகி விட்டாள். இப்போதெல்லாம் அந்தப் பக்கத்தில் கள்ளர் பயமும் அதிகம் கிடையாது. கும்பினிக்காரர்களின் படைகளே பட்டப் பகலில் எல்லாக் கொள்ளையையும் நடத்தி வந்தபடியால், கள்ளர்கள் யாரைக் கொள்ளை அடிப்பார்கள்? அவனும் அவனுடைய மகளும் வாழ்க்கை நடத்துவதுதான் எப்படி?

இத்தகைய நிலைமையில் அர்ச்சுனன் குன்றின் உச்சியிலிருந்த சுனை நீர் தகப்பனும் மகளும் ஜீவித்திருப்பதற்கு கொஞ்சம் உதவியாயிருந்து வந்தது. அந்தச் சுனையில் சாதாரணமாக மழைக் காலத்திலும் குளிர் காலத்திலும் தண்ணீர் ததும்பிக் கொண்டிருக்கும். அதிலிருந்து ஒரு சிறிய அருவி கோட்டைக்குள்ளே புகுந்து ஒரு பக்கத்துச் சுவர் ஓரமாக ஓடிச் சென்று வெளியில் வந்து கீழே அடிவாரத்துக்குச் செல்லும். அவ்விதம் குன்றின் அடிவாரத்துக்கு வரும் சுனை அருவி நீரை உபயோகித்து ஒரு வாலிபன் பயிர்த் தொழில் செய்து கொண்டிருந்தான். அவன் பெயர் மாடத்தேவன். சில சமயம் அவன் கேழ்வரகு பயிர் செய்வான். சில சமயம் வெள்ளரிக்காய் போடுவான். நல்ல உழைப்பாளி. ஆகையால் அவனுடைய தோட்டம் எப்போதும் குளுகுளுவென்றிருக்கும். அந்தப் பக்கமாகச் சாலையில் பிரயாணம் செய்கிறவர்கள் சற்று நின்று அந்தத் தோட்டத்தைப் பார்த்துவிட்டுத்தான் போவார்கள். அவர்களில் சிலர் மகிழ்ச்சியுடன் பார்ப்பார்கள்; சிலர் பொறாமையுடனும் பார்ப்பார்கள்.

அவ்வாறு பொறாமையுடன் பார்த்தவர்களில் கருப்பையா சேர்வையும் ஒருவன். மாடத்தேவனுடைய உழைப்பினால் அவனுடைய காணி நிலம் நாளுக்கு நாள் செழிப்படைந்து வந்தது கண்டு கிழவன் மனம் புழுங்கினான். அம்மாதிரி தானும் செய்யலாமென்றால் கைகளில் போதிய வலிமை இல்லை. மூப்பும், வறுமையும், மதுவும் சேர்ந்து இரும்பு போன்ற உடம்பைப் பலவீனப்படுத்தியிருந்தன. தனக்கும் தன் மகளுக்கும் அன்றாடம் பசி தீருவதே பெரும் பாடாயிருக்கும்போது அவனுடைய கண்ணெதிரே, புதிதாக வந்து குடியேறியவன் ஒருவன் நாளுக்கு நாள் செழிப்பாயிருந்தால் மனம் கஷ்டப்படத்தானே செய்யும்? எனவே சுனைத் தண்ணீர் சம்பந்தமாகக் கிழவன் தகராறு செய்ய ஆரம்பித்தான். தன்னுடைய கோட்டையின் வழியாகச் செல்லும் சுனை அருவித் தண்ணீரைத் தடுத்து நிறுத்தி விடுவதாகச் சொன்னான். இதற்கு மாடத்தேவன் பயப்படவில்லை. "சுனை நீர் உன்னுடையதா? அல்லது கோட்டைதான் உன்னுடையதா? சுனை நீர் கடவுள் அளித்தது; இந்தப் பாழடைந்த கோட்டையோ சிவகங்கைப் பாளையக்காரருடையது. நீ மட்டும் சுனை நீரைத் தடுத்து நிறுத்து பார்க்கலாம். நான் பாளையக்காரரிடம் போய் உத்தரவு வாங்கி வருகிறேனா, இல்லையா பார்!" என்றான் அந்த வாலிபன்.

"பாளையக்காரனுக்கு இங்கே என்ன அதிகாரம்? அவன் எனக்குப் படி அளக்கிறானா? அந்தக் காலம் மலையேறிவிட்டது. ஆனானப்பட்ட வீரபாண்டியக் கட்டபொம்மனைக் கும்பினிக்கார வெள்ளையர்கள் புளிய மரத்திலே தொங்கவிட்டு விட்டார்கள் இந்தப் பாளையக்காரன் என்னை என்ன செய்துவிட முடியும்? கோட்டை என்னுடையது. நான் இஷ்டப்பட்டால் அருவியைத் தடுப்பேன்!" என்று கிழவன் கருவினான்.

இதையெல்லாம் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள் அவனுடைய மகள் வேலம்மாள். அன்று மாலை மாடத்தேவனுடைய தோட்டத்திற்குப் போனாள். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றார்கள். பேச்சு எளிதில் வருவதாயில்லை; வேலம்மாளின் நெஞ்சை அடைத்தது. அவளுடைய கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அப்போது பூரண சந்திரன் கீழ்த் திசையில் உதயமானான். சந்திர கிரணங்கள் வேலம்மாளின் கண்ணீர்த் துளிகளைச் சுடர்விடும் முத்துக்கள் ஆக்கின.

அதைப் பார்த்த நிமிடத்திலேயே மாடத்தேவன் வேலம்மாளின் கொத்தடிமையானான்.

"பெண்ணே! இந்த நேரத்தில் இங்கே தனியாக ஏன் வந்தாய்? உன் அப்பன் பார்த்தால் என்ன சொல்வான்?" என்றான்.

ஏற்கனவே அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதுண்டு. எட்ட நின்று பேசியதும் உண்டு. ஆனால், மாடத்தேவனின் தோட்டத்துக்குள் வேலம்மாள் பிரவேசித்ததில்லை.

மாடத்தேவன் இப்போது கேட்டதற்கு "உன்னிடம் ஒன்று கெஞ்சிக் கேட்டுக் கொள்வதற்காக வந்தேன்!" என்றாள் வேலம்மாள்.

"கெஞ்ச வேண்டாம்; உத்தரவு போடு!" என்று கூறினான் மாடத்தேவன்.

"என் தகப்பனாருக்கு வயதாகி விட்டது. தள்ளாமை வந்துவிட்டது. இன்னும் சில காலந்தான் உயிரோடிருப்பார். அவர் இருக்கிறவரையில் இந்த இடிந்த கோட்டையும் மலை மேலுள்ள சுனையும் அவருடைய உடைமைகளாகவே இருக்கட்டும். அவர் போகும் போது இதையெல்லாம் கொண்டு போகப் போவதில்லை. அவருக்குப் பிறகு நான் இங்கே தனியாக இருக்க மாட்டேன். அப்புறம் நீயே இதையெல்லாம் வைத்துக் கொள். நான் போட்டிக்கு வரவில்லை. கொஞ்ச நாள் பொறுத்துக் கொண்டிரு!" என்றாள்.

"பெண்ணே! கோட்டை, சுனை, இந்தத் தோட்டம், குடிசை எல்லாம் உன்னுடைய உடைமை; நான் உன்னுடைய அடிமை. நீ என்னை இங்கே இருக்கச் சொன்னால் இருக்கிறேன். இல்லாவிட்டால் மறுபடியும் போய்க் கும்பினிக்காரன் பட்டாளத்தில் சேர்ந்து விடுகிறேன்" என்றான் மாடத்தேவன்.

"கும்பினிக்காரன் பட்டாளத்தில் சேர்வதா? பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டியனை தூக்கிலே போட்ட சண்டாளர்களுடைய படையிலே சேர்வதா? அந்தப் பேச்சை இன்னொரு தடவை சொல்லாதே! இங்கேயே இரு. உண்மையில் அப்பாவுக்கு உன் பேரில் ரொம்பப் பிரியம். கொஞ்சம் நல்லபடியாக அவருடன் பேசிப் பார்த்தால், இரண்டு பேரும் அன்யோன்யமாகி விடுவீர்கள்!" என்றாள் வேலம்மாள்.

வேலம்மாளுடைய யோசனையை மறுநாளே மாடத்தேவன் கையாண்டு பார்த்தான். கருப்பையா சேர்வையிடம் சென்று "மாமா! அப்புறம் நான் யோசித்துப் பார்த்தேன். உங்களுடன் சண்டைப் பிடித்தது தப்பு என்று தெரிந்தது. நானோ அனாதை; உற்றார் உறவினர் யாருமில்லாதவன். இந்த அக்கம் பக்கத்திலும் நம்மைத் தவிர யாரும் கிடையாது. உங்களுக்கு நான் துணை; எனக்கு நீங்கள் தான் துணை. நாம் எதற்காகச் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும்? எனக்கு ஒரு யோசனை தோன்றியது. உங்கள் கோட்டை வழியாக வரும் அருவித் தண்ணீரை நான் வெள்ளாமைக்கு உபயோகிக்கிறேன் அல்லவா? அதற்குப் பதிலாக, என்னுடைய நிலத்தில் விளைவதில் நாளில் ஒரு பாகம் கொடுத்து விடுகிறேன். என்ன சொல்கிறீர்கள்?" என்றான்.

"தம்பி! அப்படி வா வழிக்கு! இந்த அறிவு உனக்கு முன்னாலேயே ஏன் இல்லாமல் போயிற்று?" என்று கருப்பையா சேர்வை பெருமிதத்துடன் கூறினான்.

"போனது போகட்டும், மாமா! இனிமேல் நடக்க வேண்டியதைப் பார்க்கலாம். ஒரு நாள் என்னுடைய தோட்டத்துக்கு வந்து தான் பாருங்களேன்!" என்று மாடத்தேவன் ஆவலோடு கூறினான்.

"அதற்கென்ன, வருகிறேன். எப்போதாவது உனக்கு கூடமாட ஒத்தாசை செய்ய வேண்டுமானாலும் சொல்லு; நானும் வேலம்மாளும் எங்களால் முடிந்த ஒத்தாசை செய்கிறோம். என் மகள் எப்பேர்ப்பட்டவள் என்று உனக்குத் தெரியாது. அவள் கண் பார்த்ததை அவள் கை செய்யும்" என்றான் கிழவன்.

"நன்றாயிருக்கிறாது, மாமா! தள்ளாத கிழவராகிய உங்களையும் உங்கள் மகளையும் நான் என் தோட்டத்தில் வேலை செய்யச் சொலவேனா? நீங்கள் எப்போதாவது வந்து என்னை பார்த்துக் கொண்டிருந்தாலே போதும். நான் தான் ஏகாங்கி என்று சொன்னேனே? நீங்கள் என்னுடன் சிநேகமாயிருந்தால் அதுவே எனக்குப் பெரிய உதவி!" என்றான் மாடத்தேவன்.

கிழவனும் மகளும் அன்றைக்கே மாடத்தேவனுடைய தோட்டத்துக்கும் போனார்கள். அதில் நாலில் ஒரு பங்கு வெள்ளாமை தனக்கு என்று ஏற்பட்டதிலிருந்து கிழவனுக்குப் பொறாமையெல்லாம் போய்விட்டது. தோட்டம் நன்றாயிருப்பதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான். தோட்டத்தை இன்னும் நல்ல செழிப்பாகச் செய்வதற்கு யோசனைகளும் சொன்னான்.

"நீ என்னை வேலை செய்யக்கூடாது என்று சொன்னாலும் நான் கேட்கமாட்டேன். என்னை இன்னும் கைகாலை முடக்கிப் போட்டு விடவில்லை. தண்ணீர் பாய்ச்சுகிறது, களை பிடுங்குகிறது எல்லாம் செய்வேன். வேலம்மாளுக்குத்தான் என்ன? கொஞ்சம் பழகி விட்டால் எல்லா வேலைகளையும் செய்வாள். என்னுடைய குலத்தில் பெண் பிள்ளைகள் வெளியேறி வேலை செய்து வழக்கமில்லைதான். ஆனால் அப்படியெல்லாம் பார்த்தால் சரிப்படுமா? காலம் மாறிவிட்டது. ஆண்களாகட்டும், பெண்களாகட்டும் பிழைக்க வேண்டும் அல்லவா? கைப்பாடு படுவதில் கேவலம் ஒன்றும் இல்லை...!"

மாடத்தேவன் இப்போது குறுக்கிட்டு, "மாமா! உங்கள் மகள் தோட்ட வேலை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நான் இரண்டு வேளையும் கையினால் பொங்கித் தின்ன வேண்டியிருக்கிறது. அந்த வேலையை மிச்சம் செய்தாலே எவ்வளவோ எனக்கு உதவியாயிருக்கும்!" என்று சொன்னான்.

கிழவனுடைய மனம் பூரித்தது. அநேகம் தடவை இந்த மாதிரி கருப்பையா சேர்வை எண்ணமிட்டதுண்டு. வேலம்மாளை இந்தப் பையனுக்குக் கட்டிக் கொடுத்துவிட்டால், எல்லாக் கவலையும் தீர்ந்துவிடும். வேலம்மாளை வெளியூருக்கு அனுப்ப வேண்டியதில்லை. தான் சாகும் வரையில் அவளோடேயே இருந்து விடலாம். மாடத்தேவனின் வெள்ளாமையில் நாலில் ஒரு பங்குக்குப் பதில் நிலம் முழுவதுமே தனக்கு உரிமையாகப் போய்விடும்! அப்புறம் தான் வைத்தது தானே சட்டம்? - இம்மாதிரி எண்ணினான் அந்தப் பேராசைக்காரக் கிழவன். ஆனால் வெளியில் கொஞ்சம் பிகுவாகவே பேசினான்.

"அதெல்லாம் அவ்வளவு சீக்கிரமாய் முடிவு செய்யக் கூடிய காரியமா, தம்பி! அது விஷயத்தில் வேலம்மாளின் இஷ்டந்தான் முக்கியம். அவள் இஷ்டத்துக்கு விரோதமாக நான் எதுவும் சொல்லமாட்டேன்" என்றான்.

வேலம்மாள் அவர்களுடைய பேச்சின் வெளிப்படையான பொருளை மட்டும் எடுத்துக் கொண்டு, "இது என்ன அப்பா, பிரமாதம்? இரண்டு பேருக்குச் சமைப்பதற்குப் பதில் மூன்று பேருக்குச் சமைப்பதில் என்ன கஷ்டம்? இவர் வேண்டுமானால் தினம் நம் வீட்டுக்கு வந்து உன்னோடு சாப்பிடட்டுமே? இவருக்கும் சேர்த்துச் சமைப்பதில் எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை" என்றாள்.

"உனக்குக் கஷ்டம் இல்லையென்றால் எனக்கு என்ன ஆட்சேபணை?" என்றான் கிழவன் கருப்பையா சேர்வை.

அத்தியாயம் - 2

பிறகு சில தினங்கள் கழித்து அந்த மூன்று பேருடைய வாழ்க்கையும் மிக உற்சாகமாக நடந்து வந்தது. வேலம்மாளை எத்தனை நேரம், எந்தெந்த விதமாகப் பார்த்தாலும் மாடத்தேவனுடைய கண்களில் தாகம் தணிவதில்லை. வேலம்மாளுக்கும் அப்படியேதான். அவளுடைய கண்களுக்கு வானமும், பூமியும் புதிய வர்ணங்களைப் பூசிக் கொண்டு புதிய புதிய அழகுகளுடன் விளங்கின. அவள் காற்றிலே மிதந்தாள்; வானவெளியில் பறந்தாள்; நிலாக் கதிர்களை அருந்தி, நட்சத்திரங்களுடன் உறவாடினாள். இடிந்த பாழுங்கோட்டை, மன்னர்கள் வசிக்கும் மணி மாட அரண்மனையாயிற்று. மலைச் சுனை பொற்றாமரைக் குளமாகத் திகழ்ந்தது. அதன் கரையிலுள்ள வெள்வேல மரம் கற்பக விருட்சமாக மாறிவிட்டது. இந்திரனும் சந்திரனும் அவளுடைய அடிபணிந்து அவளுக்கு ஆடை புனைந்து அலங்காரங்கள் செய்து விட்டார்கள். காட்டு மல்லிகைப் பூ தேவலோகத்து மந்தார புஷ்பம் ஆயிற்று. கேழ்வரகுக் கூழ் தேவாமுதமாக ருசித்தது.

இப்படி நாட்கள் ஆனந்தமயமாகப் போய்க் கொண்டிருக்கையில் அவர்களுடைய வாழ்க்கையில் சங்கடமான சம்பவம் நிகழ்ந்து விட்டது. ஒரு நாள் கும்பினிக்காரர்களின் படை அந்த வழியே போயிற்று. படையின் முன்னணியில் குதிரை மேல் ஏறி ஒரு வெள்ளைக்கார மேஜர் வந்தான். மாடத்தேவனுடைய வெள்ளரிக்காய்த் தோட்டத்தின் மீது அவனுடைய கொடிய ஆசைப் பார்வை விழுந்தது. அச்சமயம் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த மாடத்தேவனைக் கையால் சமிக்ஞை செய்து "கம் ஹியர் மேன், கம் ஹியர்!" என்று அழைத்தான். மாடத்தேவன் அதன் கருத்தைத் தெரிந்து கொண்டு மேஜர் துரையின் பக்கத்தில் வந்தான்.

"வெள்ளரிக்காய் இருக்கிறதா, மேன்? காஸுக்கு எத்தனை?" என்று கேட்டான்.

"வெள்ளரிக்காய் இல்லை, துரையே!" என்றான் மாடத்தேவன்.

மேஜர் எட்டிப் பார்த்து, "இருக்கிறது, மேன்! ஏன் பொய் சொல்லுகிறாய்?" என்றான்.

"நிஜமாக இல்லை, எஜமான்! எல்லாம் பிஞ்சுகள்; முற்றுவதற்கு ஒரு வாரம் பிடிக்கும்!"

"பிஞ்சாய் இருந்தால் மெத்த நல்லது, மேன்! காயைவிடப் பிஞ்சு நல்லாயிருக்கும்! பத்து டஜன் பறித்துக் கொண்டு வா! ஜல்தி!"

"பிஞ்சைப் பறிக்கக் கூடாது, எஜமான்! பறிப்பது பாவம். செய்த வேலையெல்லாம் வீண் போனதாகும்!"

"யூ டாம்! நான் ஆர்டர் போடுகிறேன். நீ மாட்டேன் என்றா சொல்கிறாய்... ஜமேதார்! கம் ஹியர்!"

ஜமேதார் மேஜர் துரையின் அருகில் வந்தான். அவனிடம் மேஜர் ஏதோ சொன்னான். உடனே ஜமேதார் பதினைந்து சிப்பாய்களை அழைத்துக் கொண்டு வெள்ளரிக்காய் தோட்டத்தில் புகுந்தான். பூப்பிஞ்சு உள்பட எல்லா வெள்ளரிக் காய்களையும் அவர்கள் பறித்தார்கள். அதோடு கூட வெள்ளரிப் பாத்திகளையும் கொடிகளையும் கன்னா பின்னாவென்று மிதித்துத் துவைத்தார்கள். அவர்களைத் தடுக்கலாமா என்று முதலில் மாடத்தேவன் நினைத்தான். அதில் பயன் ஒன்றுமில்லையென்று பிறகு நிதானித்துக் கொண்டான். அவர்களுடைய அட்டூழியங்களைப் பார்த்து வயிறெரிந்து நின்றான்.

தோட்டத்தைத் துவம்சம் செய்துவிட்டுச் சிப்பாய்கள் வெளியேறியபோது மாடத்தேவன், மேஜர் துரையின் அருகில் சென்று, "எஜமானே! இது தர்மமா? இந்த அநியாயம் கடவுளுக்குப் பொறுக்குமா?" என்றான்.

"டாம் யுவர் கடவுள், மேன்! நீ இந்த வெள்ளரித் தோட்டம் போட்டிருக்கிறாயே, இதற்காகக் கும்பினிக்கு வரி கொடுத்திருக்கிறாயா?"

"வரியா? வரி யாரும் என்னைக் கேட்கவும் இல்லை; நான் கொடுக்கவும் இல்லை."

"கேட்கவில்லை யென்பது பொய் சால்சாப்பு. போனால் போகட்டும். நாங்கள் இப்போது பறித்துக் கொண்ட வெள்ளரிக்காயின் விலையை நீ கொடுக்க வேண்டிய வரிக்காக வரவு வைத்துக் கொள்கிறேன்!"

இவ்விதம் சொல்லிவிட்டு மேஜர் துரை சிரித்தான். மற்றும் பல சிப்பாய்களும் சிரித்தார்கள். சிரித்துக் கொண்டே மேலே நகர்ந்தார்கள்.

இடிந்த கோட்டைக்கு அருகில் வந்ததும் மேஜர் "இந்தக் கோட்டையை ஏன் இன்னும் தரைமட்டமாக்க வில்லை? பீரங்கியை இதன்மேல் திருப்பலாமா?" என்று கேட்டான். பக்கத்திலே வந்த ஜமேதார், "இந்தக் கோட்டையில் ஒன்றுமே இல்லை. பாழும் குட்டிச்சுவர்கள் தான் இருக்கின்றன. பீரங்கி மருந்து வீணாவது தான் லாபம்!" என்றான்.

"இதில் யாரும் குடியில்லயா?"

"ஒரு கிழவனும் அவன் மகளும் இருக்கிறார்கள். அவனிடம் வேட்டையாடுவதற்கு ஒரு பழைய துப்பாக்கியும், ஈட்டியும், வாளும் இருந்தன. அவற்றையெல்லாம் முன்னமே பிடுங்கிக் கொண்டு விட்டோம்."

"அந்த ஓல்டு மேன் அதோ நின்று பார்க்கிறானே, அவன் தானே! அவனுடைய மகள் எப்படி இருப்பாள்? அழகாயிருப்பாளா?" என்று மேஜர் கேட்டான்.

"இருப்பாள்; அவுராங் அவுடாங்கைப் போல் அழகாயிருப்பாள்!" என்று ஜமேதார் சொன்னதும் துரை கடகடவென்று சிரித்தான். சில நிமிஷத்துக்கெல்லாம் மேஜரும் ஜமேதாரும் மற்றச் சிப்பாய்களும் அர்ச்சுனன் குன்றைத் தாண்டி அப்பால் சென்று மறைந்தார்கள்.

அன்றெல்லாம் கருப்பையா சேர்வை, வேலம்மாள், மாடத்தேவன் ஆகிய மூவரும் கும்பினிக்காரரின் அக்கிரமங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்.

"நானும் இரண்டு வருஷம் கும்பினியாரிடம் வேலை பார்த்தேன். அவர்கள் செய்யும் அக்கிரமம் சகியாமல் தான் திரும்பி வந்துவிட்டேன்" என்றான் மாடத்தேவன்.

"நீ வந்தது நல்லதாய்ப் போயிற்று. இப்படிப்பட்ட பாவிகளிடம் யாராவது சேவகம் செய்வார்களா?"

"இவர்களுடைய அதி அக்கிரமத்தை ஒழிக்கும் காலம் வந்துவிட்டது. நேற்றுத்தான் நான் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு சென்று பாளையங்கோட்டைச் சிறையை உடைத்து விட்டு ஊமைத்துரையையும் அவருடன் இருந்த வீராதி வீரர்களையும் விடுதலை செய்து விட்டார்களாம். ஊமைத்துரையும் ஒரு பெரும் படை திரட்டி வருகிறாராம். கும்பினிக்காரர் இடித்துத் தரைமட்டமாக்கிய பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை ஒரே வாரத்தில் மறுபடி கட்டி விட்டார்களாம். நீங்கள் இரண்டு பேரும் உத்தரவு கொடுத்தால் நான் கூடப் போய் ஊமைத்துரையின் படையில் சேரலாம் என்று பார்க்கிறேன்" என்றான் அந்த வாலிபன்.

இதைக்கேட்ட கிழவன் கருப்பையா சேர்வை பயந்து போனான். "அதெல்லாம் வேண்டாம், தம்பி! ஊமைத்துரையின் காரியம் எப்படி நடக்கிறது என்று பார்த்துக் கொள்ளலாம். இந்த வெள்ளைக்காரர்கள் இருக்கிறார்களே இவர்கள் பாதாள உலகத்திலிருந்து வந்த ராட்சதர்கள். இவர்களை ஒழித்துக் கட்டுவதற்கு சூரபத்மனைக் கொன்ற முருகன் மறுபடியும் அவதாரம் எடுத்தாக வேண்டும். எல்லாவற்றுக்கும் கொஞ்ச நாள் பொறுத்திரு. மேலே என்ன நடக்கிறதென்று பார்த்துத் தீர்மானிக்கலாம்" என்றான்.

வேலம்மாள் அன்று மாடத்தேவனைத் தனியாகச் சந்தித்தபோது, 'அப்பா சொன்னதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. அன்னிய வெள்ளைக்கார கும்பினியை எதிர்த்துச் சண்டை போட வேண்டியது தான். ஆனால் ஒரு விஷயந்தான் கவலையாயிருக்கிறது. என் தகப்பனார் சபல புத்தியுள்ளவர். நீ வெளியில் போனதும், யாராவது ஒருவனுடைய கழுத்தில் என்னைப் பலவந்தமாகப் பிடித்துக் கட்டி விட்டால் என்ன செய்கிறதென்று பயமாயிருக்கிறது. நமக்குள் ஒரு கலியாண பந்தம் ஏற்பட்ட பிறகு நீ போனால் பாதகமில்லை" என்றாள். "நீ சொல்வது உண்மைதான். தை மாதம் பிறந்ததும் ஒரு தேதி பார்த்துக் கலியாணத்தை முடித்து விடுவோம். பிறகு அப்போதுள்ள நிலைமைக்குத் தகுந்தாற்போல் யோசித்துச் செய்து கொள்ளலாம்!" என்றான் மாடத்தேவன்.

அன்னியர்களாகிய கும்பினிக்காரர்களை எதிர்த்துப் போராட வேண்டியது அவசியந்தான்; ஆனாலும் வேலம்மாளைப் பிரிந்து செல்வது இலேசான காரியம் அல்ல. வேலம்மாள் இன்னொருவனைக் கலியாணம் செய்து கொள்வது என்பதை நினைத்தபோது மாடத்தேவனுடைய உடம்பெல்லாம் பற்றி எரிந்தது. வெள்ளரிக்காய், பூவும் பிஞ்சுமாகப் பறிபோனபோதுகூட அவனுக்கு அவ்வளவு ஆத்திரம் உண்டாகவில்லை. எனவே ஊமைத்துரையின் படையில் சேரும் யோசனையைத் தள்ளிப் போட்டான்.

அத்தியாயம் - 3

சில நாளைக்கெல்லாம் முன்னைக் காட்டிலும் மிக்க துயரகரமான செய்தி வந்தது. ஊமைத்துரையின் படைக்கும் கும்பினியின் படைக்கும் கோரமான யுத்தம் நடந்தது என்றும், பாஞ்சாலங்குறிச்சிப் படை கூண்டோ டு கைலாசமாகப் போர்க்களத்தில் மாண்டு மடிந்து விட்டதென்றும் ஜனங்கள் சேரும் இடங்களில் எல்லாம் பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்ட வேலம்மாள் கண்ணீர்விட்டு அழுதாள். மாடத்தேவன் கல்லாய்ச் சமைந்து உட்கார்ந்திருந்தான். கருப்பையா சேர்வை அவர்களுக்கு ஆறுதல் சொன்னான். ஆயினும் அதிகமாக அவன் ஆறுதல் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. யௌவனப் பிராயத்தில் எல்லாவிதத் துயரங்களும் சீக்கிரத்தில் பறந்து போய் விடுகின்றன. அதிலும் புதிது புதிதாகக் காதலில் மூழ்கியிருப்பவர்களைப் பற்றிக் கேட்க வேண்டுமா? மாடத்தேவனும் வேலம்மாளும் தங்களுடைய வருங்கால வாழ்க்கையைப் பற்றிய நினைவுகளில் வெளி உலகத்து நிகழ்ச்சிகளை மறந்து விட்டார்கள்.

கலியாணத்துக்குத் தேதி வைப்பது பற்றி மாடத்தேவன் கருப்பையா சேர்வையிடம் இரண்டு மூன்று தடவை பிரஸ்தாபித்தான். கிழவனும், "ஆகட்டும்; குலதெய்வத்துக்குப் பூசை போட்டுவிட்டுத் தேதி வைத்து விடுவோம்" என்று சொன்னான்.

இந்த நிலையில் ஒரு நாள் மாடத்தேவனுடைய ஆகாசக் கோட்டைகள் எல்லாம், கும்பினியாரின் பீரங்கிகளால் தகர்க்கப்பட்ட பாளையக்காரர் கோட்டைகளைப் போல், தகர்ந்து விழுந்து மண்ணோடு மண்ணாய்ப் போகும்படி நேர்ந்தது.

ஒரு நாள் அவன் சிவகங்கைக்குப் போயிருந்தான். அங்கே தனக்கு வேண்டிய சில சாமான்களை வாங்கிக் கொண்டான். பிறகு நகைக் கடைக்குப் போனான். வேலம்மாளுக்குக் கலியாணத்தின் போது போடுவதற்காகக் கைக்குத் தங்கக் காப்பு, கழுத்துக்குத் தங்கக் கொடி இவைபற்றி விசாரித்தான். எதை வாங்கலாம் என்று நிச்சயிக்க அவனால் முடியவில்லை. வேலம்மாளையே ஒரு நாள் அழைத்து வந்து வாங்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு திரும்பி வந்தான். இதைப் பற்றிச் சொல்லலாமென்று உற்சாகத்துடன் அவன் கோட்டைக்கு வந்த போது, அங்கே கிழவனையும் அவனுடைய மகளையும் தவிர மூன்றாவது ஆள் ஒருவன் இருப்பதைக் கண்டான். அந்தப் புது மனிதன் ஒரு தூணில் சாய்ந்திருக்க, வேலம்மாள் ஒரு அடுக்குப் பானையில் வெந்நீர் வைத்துக் கொண்டு அவன் காலில் விட்டுக் கழுவிக் கொண்டிருந்தாள். கருப்பையா சேர்வை பக்கத்தில் உட்கார்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.

இந்தக் காட்சியை வாசற்படியில் நின்றபடியே சிறிது நேரம் மாடத்தேவன் பார்த்தான். அவன் வந்து நின்றதை அந்த மூவரில் ஒருவரும் கவனிக்கவில்லை. சத்தப்படுத்தாமல் திரும்பிப் போய்விட்டான்.

வெள்ளரிக்காய்த் தோட்டத்தில் அன்று மாடத்தேவனுக்கு வேலை ஒன்றும் ஓடவில்லை. உடம்பெல்லாம் வெலவெலத்திருந்தது. அடிக்கடி இடிந்த கோட்டையையும் மலைமேல் இருக்கும் சுனையையும் பார்த்துக் கொண்டிருந்தான். வேலம்மாள் கையில் குடத்துடன் சுனைக்குப் போவது ஒரு தடவை தெரிந்தது. உடனே குன்றின் மீது பாய்ந்தேறிச் சென்றான். அவன் குன்றின் உச்சியை அடைந்தபோது வேலம்மாள் இடுப்பில் குடத்துடன் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். மாடத்தேவன் அவள் எதிரில் போய் வழி மறிப்பது போல் நின்று முறைத்துப் பார்த்தான்.

"என்னங்கறேன்? ஏன் இப்படி வித்தியாசமாய்ப் பார்க்கிறாய்?" என்று வேலம்மாள் கேட்டாள்.

"ஆமாம்; என்னைப் பார்த்தால் இனிமேல் உனக்கு வித்தியாசமாய்த்தானிருக்கும்!" என்றான் மாடத்தேவன்.

"நீ சொல்லுகிறது ஒன்றும் எனக்கு புரியவில்லை" என்றாள் வேலம்மாள்.

"அது எப்படிப் புரியும்?" என்றான் மாடத்தேவன்.

"சரி, புரியாது போனால் போகட்டும். வழியைவிடு எனக்கு வேலை இருக்கிறது" என்றாள் வேலம்மாள்.

"தாராளமாய்ப் போ! நானா வேண்டாம் என்று வழி மறிக்கிறேன்?' என்று கூறி மாடத்தேவன் வழியை விட்டு விலகிக் கொண்டான்.

வேலம்மாள் மேலே சென்றவள் இரண்டொரு தடவை தயங்கித் தயங்கி நின்றாள். மாடத்தேவன் அவளை பார்க்காமல் எங்கேயோ பார்த்துக் கொண்டு நின்றான்.

வேலம்மாள் ஆத்திரத்துடன் முணு முணுத்துக் கொண்டு விடு விடு என்று நடந்து போய்விட்டாள்.

அன்று மத்தியானம் மாடத்தேவன் வழக்கம்போல் அவர்கள் வீட்டுக்குச் சாப்பிடப் போகவில்லை.

தோட்டத்தில் வேலை செய்யவும் அவனால் முடியவில்லை. அங்குமிங்கும் அகாரணமாய் அலைகிறதும் தனக்குத்தானே பேசிக் கொள்கிறதுமாயிருந்தான்.

சாயங்காலம் பொழுது சாய்கிற சமயத்தில் வேலம்மாள் ஒரு பாத்திரத்தில் சோறு எடுத்துக் கொண்டு தோட்டத்துக்கு வந்தாள்.

அவள் வருவது தெரிந்ததும், மாடத்தேவன் அவளை பார்க்காமல் வேறு பக்கம் திரும்பிச் சுறுசுறுப்பாகச் செடிகளுக்கு களை கொத்திக் கொண்டிருந்தான்.

வேலம்மாள் அவன் எதிராக வந்து நின்று, "மத்தியானம் ஏன் சாப்பிட வரவில்லை?" என்று கேட்டாள்.

"இஷ்டமில்லை, வரவில்லை! நீ எதற்கு இங்கே வந்தாய்?" என்றான் மாடத்தேவன்.

"உனக்குச் சோறு கொண்டு வந்தேன். அப்பா கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வரச் சொன்னார்."

"எனக்குச் சோறு வேண்டாம். உங்கள் வீட்டுக்குப் புது விருந்தாளி வந்திருக்கானே, அவனுக்கே, எல்லாச் சோற்றையும் படையுங்கள்."

வேலம்மாள் சற்றுத் திகைத்தவள் போல் நின்றுவிட்டு, "விருந்தாளி வந்திருப்பது உனக்குத் தெரியுமா?" என்றாள்.

"ஏன் தெரியாது! உங்களுக்குத்தான் - அப்பனுக்கும் மகளுக்கும் - புது விருந்தாளி வந்திருக்கும் மவுஸில் கண் தெரியாமல் போய்விட்டது. எனக்குக் கூட கண் தெரியவில்லை என்று நினைத்தாயா?"

"ஓகோ! உனக்குக் கண்கூடத் தெரியுமா? நீ குருடு என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்?"

"நான் குருடு தான். இல்லாவிட்டால் கழுதையைக் குதிரை என்று எண்ணியிருப்பேனா? மூதேவியை லட்சுமி என்று கொண்டாடியிருப்பேனா?"

"என்ன சொன்னாய்? யாரைக் கழுதை என்றும் மூதேவி என்று சொன்னாய்? உனக்குப் பைத்தியம் தான் பிடித்திருக்கிறது. சோற்றை இதோ வைத்துவிட்டுப் போகிறேன். வேண்டுமென்றால் சாப்பிடு. இல்லாவிட்டால் பட்டினி கிடந்து செத்துப் போ!" என்று சொல்லிவிட்டு வேலம்மாள் சோற்றுப் பாத்திரத்தைக் கீழே வைத்தாள்.

"உன் சோறும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம்! இங்கே வைக்காதே! எடுத்துக் கொண்டு போய் எந்த நாய்க்காவது போடு!" என்று சொல்லிவிட்டு மாடத்தேவன் சோற்றுப் பாத்திரத்தைக் காலால் உதைத்தான். பாத்திரமும் உருண்டு, சோறும் சிதறி விழுந்தது.

வேலம்மாள், "இனி இந்தப் பக்கம் நான் வருகிறேனா பார்!" என்று சொல்லிவிட்டு விம்மிக் கொண்டே அங்கிருந்து போனாள்.

அத்தியாயம் - 4

அன்றிரவே மாடத்தேவனுடைய தோட்டக் குடிசையில் அடுப்புப் புகை கிளம்ப ஆரம்பித்து விட்டது. பழையபடி சுயம்பாகம் செய்து சாப்பிடத் தொடங்கினான்.

மறுநாள் கருப்பையா சேர்வை மாடத்தேவனைத் தேடிக் கொண்டு வந்தான்.

"தம்பி நேற்றெல்லாம் உன்னைக் காணோமே? எங்கே போயிருந்தாய்?" என்று கேட்டான்.

"நான் எங்கும் போகவில்லை, உங்களுக்குத்தான் கண் தெரியவில்லை. புது விருந்தாளி வந்திருக்கிறான் அல்லவா? அந்த மவுஸில் முழுகியிருந்தீர்கள்!"

"அது உண்மைதான், வீட்டுக்கு புது விருந்தாளி வந்தால் உபசரிக்க வேண்டியது நியாயந்தானே! அவனோ உடம்பெல்லாம் புண்ணுடன் வந்திருக்கிறான். அவன் யார் என்று தெரியுமா? வேலம்மாள் சொன்னாளா?"

"அவளோடு இங்கே யார் பேசினார்கள்?"

"நேற்றுச் சாயங்காலம் உனக்குச் சோறு கொண்டு வந்தாளே? சொல்லவில்லையா?"

"கொண்டு வந்தாள். நான் சோறு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்..."

"நான் தான் அவளை இன்னும் ஐந்தாறு நாளைக்கு உனக்குச் சோறு கொண்டு வந்து இங்கேயே கொடுத்து விடும்படி சொன்னேன். புது ஆள் வந்திருக்கிறானே, அவன் என் அக்காவின் மகன். உன்னைப் பார்த்தால், நீ யார் இன்னார் என்று கேட்பான். எதற்காக வீணாய் இந்த வம்பு?"

"இத்தனை நாளும் இல்லாமல் இப்பொழுது அக்கா மகன் திடீரென்று வந்து குதித்து விட்டானா?"

"அதில் என்ன அதிசயம்? இந்தக் காலத்தில் அங்கங்கே படை திரட்டுகிறார்கள்; படையைக் கலைக்கிறார்கள். இன்றைக்கு ஒரு பாளையக்காரன் ராஜாங்கம் செலுத்துகிறான். நாளைக்கு அவன் புளியமரத்தில் தொங்குகிறான். நீ கூட இரண்டு வருஷத்துக்கு முன்னால் திடீரென்றுதானே இங்கே வந்து குதித்தாய்?"

"அதைப்பற்றி இப்போது என்ன? எனக்கு வேலை இருக்கிறது. வீண் பேச்சு பேச நேரம் இல்லை. நீங்கள் போய் உங்கள் விருந்தாளியைப் பாருங்கள்."

"அவ்வளவு பதட்டப்படாதே, தம்பி! வந்திருப்பவன் நல்ல சொத்துக்காரன். அதிக நாள் உயிரோடிருக்க மாட்டான். இருக்கிறவரையில் அவனைக் கொஞ்சம் கவனித்துக் கொண்டால் அவனுடைய சொத்து நமக்கு வரும். அப்புறம் உனக்கும் வேலம்மாளுக்கும் ஒருவிதமான கவலையுமில்லை! ஆயுள் முழுவதும் நீங்கள் உட்கார்ந்து சாப்பிடலாம்."

"அப்படிப்பட்ட சொத்து எனக்கு வேண்டாம். நீங்களும் உங்கள் மகளுமே வைத்துக் கொள்ளுங்கள். எனக்குக் கைப்பாடு பட்டுப் பிழைக்கத் தெரியும்!" என்று சொல்லி மாடத்தேவன் விர்ரென்று நடந்து தோட்ட வேலையைப் பார்க்கப் போனான்.

கிழவன், "இந்த பிள்ளைக்கு வந்த கிறுக்கைப் பார்!" என்று சொல்லிக் கொண்டே வெளியேறினான்.

பிறகு நாலைந்து நாட்கள் விசேஷம் ஒன்றுமில்லாமல் கழிந்தன. மாடத்தேவனுடைய உள்ளத்தில் மட்டும் எரிமலை ஜுவாலை விட்டுக் கொண்டிருந்தது. வெளியே தீக்குழம்பைக் கக்குவதற்குச் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தது. அந்தச் சந்தர்ப்பமும் வந்தது.

ஒரு நாள் மாலை தற்செயலாக மாடத்தேவன் மலை உச்சியில் சுனை இருக்கும் இடத்தை நோக்கினான். அந்தச் சுனைக்கரையில் தானும் வேலம்மாளும் எத்தனையோ நாள் மாலை நேரங்களில் உல்லாசமாகப் பொழுது போக்கியதெல்லாம் நினைவு வந்தது. இருவருமாகச் சேர்ந்து கட்டிய ஆகாசக் கோட்டைகளை நினைத்துக் கொண்டு நெடிய பெருமூச்சு விட்டான். அதைப் பற்றி நினைத்த போதெல்லாம் அவனுடைய நெஞ்சை வலித்தது. அந்தச் சுனையருகில் போனால் ஒருவேளை தன் மனத்தின் தாபம் தீருமோ என்று எண்ணி ஆர்வத்துடன் நோக்கினான். அப்போது மலைக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்த அஸ்தமன சூரியனின் மஞ்சள் வெயில் பட்டு ஒரு மனிதனின் உருவம் கரிய நெடிய சிலைபோல அங்கே நின்றது. சற்று நேரத்துக்கெல்லாம் ஒரு பெண் உருவம் வந்து அந்த நெடிதுயர்ந்த மனிதனின் பக்கத்தில் நின்றது. இருவரும் சுனைக்கரையில் இருந்த வெள்வேல மரத்தடியில் உட்கார்ந்ததும் தெரிந்தது. இதைப் பார்த்ததும் மாடத்தேவனுடைய உள்ளம் குமுறியது. அடக்கி வைத்திருந்த கோபமெல்லாம் கொதித்து வெளிவந்தது. மிக்க ஆக்ரோஷத்துடன் குன்றின் மீது பாய்ந்து ஏறினான். அவன் அங்கே போய்ச் சேர்ந்தபோது அந்தப் பெண் உருவத்தைக் காணோம். இடிந்த கோட்டைக்குள் வேலம்மாளின் பணிவிடைக்கும் உரியவனாயிருந்த மனிதன் மட்டும் அந்த வெள்வேல மரத்தில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்திருந்தான். மேற்குத் திசையை நோக்கி அவன் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தபடியால் மாடத்தேவன் வந்ததையே அவன் கவனிக்கவில்லை.

மாடத்தேவன் குன்றில் ஏறத் தொடங்கிய போது தோட்டத்துக்கு வேலி எடுத்துக் கொண்டிருந்தான். ஆகையால் அவனுடைய கையில் கொஞ்சம் நார்க் கயிறு இருந்தது. மடியில் செருகியிருந்த கத்தியும் இருந்தது. தனியாக உட்கார்ந்திருந்த ஆளைக் கண்டதும் அவனுடைய மூளையில் சட்டென்று ஒரு யோசனை உதயமாயிற்று. பின்புறமாகச் சென்றான். கயிற்றை வீசி எறிந்து அந்த மனிதனைச் சுற்றி மரத்தோடு சேர்த்துக் கட்டினான். கட்டி முடிச்சுப் போட்டுவிட்டு எதிர்ப்பக்கத்தில் வந்தான். மடியில் வைத்திருந்த கத்தியை எடுத்துப் பிடித்துக் கொண்டான், "அடபாவி! சண்டாளா! நீ யார், எதற்காக இங்கே வந்தாய் என்று சொல்லிவிடு. எனக்கும் வேலம்மாளுக்கும் குறுக்கே எப்படி நீ வரலாம்? அவளுக்கும் எனக்கும் கலியாணம் நடப்பது ஒன்றுதான் பாக்கியாயிருந்தது. அப்படி இரண்டு உடலும் ஒருயிருமாயிருந்தோம். எங்கள் வாழ்க்கையைப் பாழாக்க நீ வந்தாய். எதற்காக வந்தாய்? உன்னுடைய மனதில் என்ன எண்ணியிருக்கிறாய்? உண்மையைச் சொல்லிவிடு. திரும்பவும் அவளைப் பார்க்காமல் இப்படியே ஓடிப் போவதாகச் சத்தியம் செய்து கொடு; சத்தியம் செய்து கொடுத்தால் உன்னை மன்னித்து விட்டுவிடுகிறேன். இல்லாவிட்டால் இந்தக் கத்தியால் குத்திக் கொன்று போடுவேன். இது நிச்சயம் நான் சொன்னபடி சத்தியம் செய்யப் போகிறாயா, இல்லையா?" என்று மாடத்தேவன் சரமாரியாகப் பொழிந்தான்.

அந்தக் கட்டுண்ட மனிதனோ இத்தனைக்கும் அதிசயம் ததும்பிய கண்களால் மாடத்தேவனை உற்று பார்த்துக் கொண்டிருந்தானே தவிர, ஒரு வார்த்தையும் பதில் சொல்லவில்லை ஏதோ சொல்லப் போகிறவன் போல் அவனுடைய உதடுகள் ஒரு தடவை அசைந்தன... ஆனால் வார்த்தை ஒன்றும் வெளி வரவில்லை.

"அடே! ஏன் ஆடு திருடின கள்ளனைப் போல் விழித்துக் கொண்டிருக்கிறாய்? பதில் சொல்வதற்கு என்ன? வாயில் கொழுக்கட்டையா அடைத்திருக்கிறது? உன்னை இப்படியே கட்டிப் போட்டுக் கொலை செய்வேன் என்று நினைக்காதே! நீ என்னோடு கத்தி எடுத்துச் சண்டை செய்வதாயிருந்தால் சொல்லு! அவிழ்த்து விட்டுவிடுகிறேன். ஆனால் தப்பித்து ஓடி விடலாம் என்று மட்டும் நினைக்காதே! கோட்டையில் ஒளிந்து கொள்ளலாம் என்று மனப்பால் குடிக்காதே! அந்தப் பாழுங் கோட்டையின் மர்ம வழிகள், மூலை முடுக்குகள் எல்லாம் எனக்குத் தெரியும். நீ எங்கே ஒளிந்து கொண்டாலும் விடமாட்டேன்" என்று மாடத்தேவன் கர்ஜித்தான்.

அதற்கும் கட்டுண்ட மனிதன் சும்மா இருந்தான்.

மாடத்தேவனுக்கு வந்த எரிச்சலைச் சொல்ல முடியாது. "நான் எவ்வளவு நேரமாகப் பேசிக் கொண்டிருக்கிறேன். நீ ஏண்டா சும்மாயிருக்கிறாய்? உனக்குப் பேசத் தெரியாதா? நீ ஊமையா?" என்றான்.

அத்தனை நேரமும் வியப்பு மட்டும் தோன்றிய முகத்தில் இப்போது ஒரு புன்னகை தோன்றிப் பரவியது. அந்தப் புன்னகை மிக விசித்திரமாயிருந்தது. ஆனால் அதன் பொருள் மாடத்தேவனுக்கு விளங்கவில்லை. எரிச்சல் அதிகமாயிற்று.

"என்னடா சிரிக்கிறாய்? நான் சொல்வதெல்லாம் உனக்கு கேலியாக இருக்கிறதா? பரிகாசமா செய்கிறாய்? இதோ பார்! உன்னை ஒரே குத்தாய் குத்திவிடுகிறேன். என் ஆசைக் காதலியை என்னிடமிருந்து பறித்தவனுக்கு இதுதான் தண்டனை!" என்று கத்தியை ஓங்கினான்.

அச்சமயம் கட்டுண்ட மனிதனுடைய பார்வை மாடத்தேவனுக்குப் பின்புறம் சென்றது. அதே கணத்தில் யாரோ வேகமாக ஓடிவரும் காலடிச் சத்தம் கேட்டது.

"அடப்பாவி! நில்லு! நில்லு! என்ன காரியம் செய்யப் போகிறாய்?" என்ற வேலம்மாளின் பதறிய குரல் ஒலி கேட்டது.

மாடத்தேவன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய உள்ளக் கொதிப்பு இப்போது அனல் ஜுவாலை ஆயிற்று.

"அடி பாதகி! நானா பாவி? கையடித்துக் கொடுத்த சத்தியத்தையெல்லாம் மறந்து எனக்குத் துரோகம் செய்யத் துணிந்த நீ என்னவாம்? முதலில் உன்னைக் கொன்றுவிட்டு அப்புறம் உன் ஆசை நாயகனைக் கொல்கிறேன்!" என்று மாடத்தேவன் கத்திக்கொண்டே வேலம்மாளை நோக்கிக் கத்தியை ஓங்கினான்.

"ஐயோ!" என்று வேலம்மாள் வீரிட்டாள். அதே சமயத்தில் மாடத்தேவனுக்குப் பின்னால் படபடவென்று சத்தம் கேட்டது. அது என்ன சத்தம் என்று திரும்பிப் பார்ப்பதற்குள் அவனுடைய கத்தி பிடித்த கையை இன்னொருவனுடைய கை பிடித்துக் கொண்டது. மறுகணம் மற்றொரு கையும் அவ்விதம் கெட்டியாகப் பற்றப்பட்டது. அது சாதாரணப் பிடியா? இரும்புப் பிடி! அவனைப் பிடித்த கைகள் வஜ்ரத்தினாலான கைகளாகவே இருக்க வேண்டும். மாடத்தேவனுடைய உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரையில் அந்தப் பிடியின் வேகத்தினால் நரம்புகள் புடைத்துக் கொண்டன; அவனுடைய உடம்பு வெட வெடவென்று நடுங்கிற்று.

மாடத்தேவன் சற்றுத் திரும்பிப் பார்த்தான். மரத்தில் சேர்த்துக் கட்டியிருந்த கயிறுகள் சுக்குச்சுக்காக அறுபட்டிருந்தன. கட்டை அறுத்துக் கொண்ட அம் மனிதனுடைய முகத்தில் முன் போலவே ஒரு அதிசயமான புன்னகை தவழ்ந்தது. அவன் உதடுகள் துடித்தன.

"அட பாவி! அவர் யார் என்று தெரியவில்லையா? உன் மண்டையில் மூலை இல்லையா? உன் முகத்தில் கண் இல்லையா?" என்று வேலம்மாள் அலறினாள்.

உடனே, மாடத்தேவனுடைய மூளையில் ஒரு நரம்பு அசைந்தது. அந்த நரம்பு வானவெளியிலிருந்து ஒரு செய்தியை ஏற்று அவன் மூளையில் நிரப்பிற்று. அவனுடைய உடம்பு முழுவதும் புளகாங்கிதமடைந்து புல்லரித்தது. கோபத்தினால் புடைத்திருந்த நரம்புகள் தளர்ந்தன. கையில் இருந்த கத்தியும் சரிந்து கிழே விழுந்தது.

உடனே, அந்த இரும்புக் கைகளும் பிடியை விட்டன.

"வேலம்மா! இவர்தான் ஊமைதுரையா?" என்று கேட்டான் மாடத்தேவன்.

"அது உனக்கு இத்தனை நேரம் தெரியவில்லையா? உன் புத்திக் கூர்மையை என்னவென்று சொல்ல!" என்றாள் வேலம்மாள்.

"சாமி! துரையே!" என்று மாடத்தேவன் பாறையில் நெடுஞ்சாண் கடையாக விழுந்து ஊமைத்துரையின் கால்களை பிடித்துக் கொண்டான்.

"தெரியாமல் நான் செய்த குற்றத்தை மன்னிக்க வேண்டும். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது என்று சொல்வார்கள். நான் கும்பிடப் புறப்படுவதற்கு முன்னாலேயே என் தெய்வம் என்னைத் தேடி வந்து விட்டது. துரையே! இந்த சண்டாளப் பாவி வேலம்மாள் இருக்கிறாளே, இவளிடம் நான் கொண்ட மோகந்தான் என் கண்களுக்குத் திரை போட்டு மறைத்து விட்டது. இவளாவது முன்னாலேயே எனக்கு சொல்லக்கூடாதா? சொல்லாமல் துரோகம் செய்து விட்டாளே!" என்றான்.

ஊமைத்துரை மறுபடியும் புன்னகை செய்தான். கொன்னிக் கொன்னி இந்த வார்த்தைகளைச் சொன்னான். "த-த-தம்பி! இந்தச் சு-சு-சுருள் வாளைப் பார்! இதை ஒ-ஒ-ஒரு தடவை வீசி...ஏ-ஏ-ஏழு தலைகளை வெட்டியிருக்கிறேன். உன்னுடன் ச-ச-சண்டை போடச் சொல்கிறாயா!" இவ்விதம் சொல்லி ஊமைத்துரை தன் மடியிலிருந்து கீழே விழுந்து கிடந்த சுருள்வாளை எடுத்து ஒரு வீச்சு வீசினான். இருபுறமும் கூருடைய அந்தச் சுருள்வாள் சுமார் பதினாறு அடி தூரம் மின் வெட்டைப் போல் பாயந்து திரும்பி வந்து சுருண்டு கொண்டது. அதை அவ்விதம் விசிறிய போது நாகப் பாம்பு சீறுவது போன்ற சீறல் சத்தம் கேட்டது.

மாடத்தேவன் அதைப் பார்த்துவிட்டு "சாமி! நான் இந்தச் சுருள் வாளுக்குப் பயப்படவில்லை. இதே சுருள் வாள் உங்கள் விரோதியிடம் இருந்தால் என் சிறிய மடக்குக் கத்தியை வைத்துக் கொண்டே ஒரு கை பார்ப்பேன். ஆனால் உங்களுடன் நான் சண்டை இடுவேனா? உங்களை இந்த ஜன்மத்தில் பார்க்கப் போகிறேனா என்று தவம் கிடந்தேன். நீங்கள் போர்க்களத்தில் இறந்து வீரசொர்க்கம் சென்றீர்கள் என்று கேள்விப்பட்டு மனமுடைந்து போயிருந்தேன். இப்போது தான் எனக்குப் புதிய உயிர் வந்தது. நீங்கள் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்யக் காத்திருக்கிறேன். உங்கள் காலடியில் என் உடல் பொருள் உயிரை அர்ப்பணம் செய்யத் தயார். எனக்குக் கட்டளை இடுங்கள்!" என்றான்.

ஊமைத்துரையின் கண்ணில் அப்போது கண்ணீர் துளித்தது. இதையெல்லாம் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்த வேலம்மாளும் ஆனந்தக் கண்ணீர் விட்டாள். அவர்கள் மூன்று பேருமாகச் சுனைக் கரையிலிருந்து புறப்பட்டு இடிந்த கோட்டைக்குத் திரும்பிப் போனார்கள்.

அத்தியாயம் - 5

கோட்டைக்குள் ஒரு தனி அறையை மாடத்தேவன் கேட்டு வாங்கிக் கொண்டிருந்தான். அதில் தன்னுடைய தட்டு முட்டுச் சாமான்களையும் பெட்டி பேழைகளையும் போட்டு வைத்திருப்பதாகக் கருப்பையா சேர்வையிடம் சொல்லியிருந்தான். ஊமைத்துரையை அந்த அறைக்கு அழைத்துப் போய்ப் பூட்டைத் திறந்து காட்டினான். அறைக்குள்ளே சில பெட்டிகளும் சாக்கு மூட்டைகளும் இருந்தன. அவை எல்லாவற்றிலும் கன்னங்கரிய வெடி மருந்து இருந்தது. பக்கத்தில் சில துப்பாக்கிகளும் ஈட்டிகளும் கத்திகளும் குவித்து வைக்கப்பட்டிருந்தன. "சாமி! இந்த ஆயுதங்களையெல்லாம் உங்களுக்காகத்தான் சேர்த்து வைத்திருக்கிறேன். இவற்றை உபயோகப்படுத்த மட்டும் வழி சொல்லுங்கள்!" என்றான் மாடத்தேவன்.

பின்னர், ஏழெட்டுத் தினங்கள் மாடத்தேவன் மிகச் சுறுசுறுப்பாயிருந்தான். ஊமைத்துரை சொன்னபடி பல இடங்களுக்கும் போய்ப் பலரைப் பார்த்துச் சங்கேதமாகச் செய்தி சொல்லிவிட்டு வந்தான். கடைசியாக ஊமைத்துரை மிக முக்கியமான வேலை ஒன்றை அந்த வாலிபனிடம் ஒப்புவித்தான். சிவகங்கைக்கு அவன் சென்று, சிவகங்கைப் பாளையக்காரரின் தம்பியான சின்னமருது சேர்வை எங்கே இருக்கிறார் என்று விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டியது; சின்னமருதுவைக் கண்டு, ஊமைத்துரை இருக்குமிடத்தைத் தெரிவிக்காமல் அவர் உயிரோடிருக்கிறார் என்று மட்டும் சொல்ல வேண்டியது. மருதுவின் மனதை அறிந்து கொண்டு, "ஊமைத்துரையுடன் சேர்ந்து வெள்ளைப் பூண்டை இந்த நாட்டிலிருந்து அடியோடு ஒழிக்கும் முயற்சிக்கு உதவி செய்யத் தயாரா?" என்று கேட்டு வரவேண்டியது - இந்த முக்கிய விஷயத்தை ஊமைத்துரை இரண்டு மூன்று தடவை படித்துப் படித்துச் சொன்னான். மாடத்தேவனும் நன்றாய் கேட்டுக் கொண்டு உற்சாகமாகக் கிளம்பினான். சிவகங்கைக்குப் போய் விசாரித்தான். சின்னமருது சேர்வை சிறுவயல் என்ற ஊரில் தனி அரண்மனை கட்டிக் கொண்டு வசிப்பதாகத் தெரிய வந்தது. பிறகு சிறு வயலுக்குப் போய்ச் சின்ன மருதுவைப் பேட்டிக் கண்டான். ஊமைத்துரை உயிரோடிருப்பது அறிந்து அவர் அளவிலாத மகிழ்ச்சி அடைந்தார். உடனே தன்னுடைய அரண்மனைக்கு வந்து சேரும்படியும், பதினைந்து நாளில் இருபதினாயிரம் படை வரையில் திரட்டி விடத் தம்மால் முடியும் என்றும், வீராதி வீரரான ஊமைத்துரை தலை வகித்து நடத்தினால் வெள்ளைப் பூண்டை அடியோடு இந்நாட்டிலிருந்து ஒழித்துக் கட்டி விடலாம் என்றும் சொல்லி அனுப்பினார்.

இந்த உற்சாகம் செய்தியுடன் மாடத்தேவன் இடிந்த கோட்டைக்கு விரைந்து வரத் தொடங்கினான். ஆனால் வரும் வழியில் ஒரு இடையூறு ஏற்பட்டது. ஒரு சிறிய கும்பினிப் படை அங்கே திரண்டு இறங்கியிருப்பதைப் பார்த்து, மாடத்தேவன் ஒதுங்கிப் போக நினைத்தான். அது பலிக்கவில்லை. நாலைந்து சிப்பாய்கள் அவனைப் பிடித்துக் கட்டிப் பாசறையின் நடுவில் இருந்த கூடாரத்துக்குக் கொண்டு போனார்கள். கூடாரத்தில் அவனைத் தூணோடு ஒன்றாகச் சேர்த்துக் கட்டினார்கள்.

இந்த நிலைமையில் பக்கத்துக் கூடாரத்தில் நடந்த சம்பாஷ்ணையில் கொஞ்சம் அவன் காதில் விழுந்தது. ஒரு கிழக் குரல், 'ஊமைத்துரை இருக்குமிடம் எனக்குத் தெரியும். காட்டிக் கொடுக்கிறேன்' என்று சொல்லியது. அதற்காகக் கும்பினித் துரைத்தனத்தார் கொடுப்பதாகச் சொல்லியிருந்த ஐயாயிரம் ரூபாய் பணத்தையும் கொடுக்கும்படி அதே குரல் கேட்டது.

"ஆகட்டும்! ஊமையன் பிடிபட்டதும் பரிசுத் தொகை கொடுக்கப்படும்!" என்றார் மேஜர் துரை.

"ஜமேதார்! இப்போதைக்கு இந்தக் கிழவனுக்கு நல்ல பழைய புட்டிச் சாராயம் ஒரு கிளாஸ் கொடு!" என்றும் அந்த மேஜரின் குரல் சொல்லிற்று.

"அதிகம் பேர் வேண்டாம். கூட்டமாக வந்தால் அவன் தப்பித்து ஓடிப் போய் விடுவான். நாலைந்து பேரை மட்டும் - தைரியசாலிகளாக - என்னுடன் அனுப்புங்கள். பிடித்துக் கொடுக்காவிட்டால் என் பெயர்... அல்ல மாற்றி வைத்துக் கொள்கிறேன்" என்றது கிழக் குரல்.

இதையெல்லாம் கேட்டு மாடத்தேவன் துடிதுடித்துக் கொண்டிருந்தான். கட்டுக்களைப் பலாத்காரமாக அறுத்தெறியும் சக்தி தனக்கு இல்லையே என்று வருத்தப்பட்டான். இதற்குள் மேஜர் துரை அவனைக் கட்டி வைத்திருந்த கூடாரத்துக்கு வந்தார்.

"ஓ! இந்தப் பையனை நான் பார்த்திருக்கிறேனே! இவனுடைய தோட்டத்தில்தானே நிறைய வெள்ளரிக்காய் கிடைத்தது!" என்றார் மேஜர்.

"ஆம், எஜமானே! என்னை எதற்காக இவர்கள் பிடித்துக் கட்டி வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை" என்றான் மாடத்தேவன்.

"என்னமேன்! கும்பினியின் படையில் நீ சேர்ந்து விடுவதுதானே? நல்ல சம்பளம் கிடைக்கும்!" என்றார் மேஜர் துரை.

"எஜமானே! நான் ஒரு சமயம் ஆர்க்காட்டு நவாபின் படையில் இருந்தேன். என்னைப் போருக்கு உபயோகமில்லை யென்று போகச் சொல்லி விட்டார்கள். இப்போது சேர்ந்து மட்டும் என்ன பிரயோஜனம்? நல்ல வெள்ளரிக்காய் பயிர் சேமித்து வைக்கிறேன். நீங்கள் அந்த பக்கம் வரும்போது கொடுப்பேன். கும்பினிப் படையில் சம்பளத்துக்கு ஆசைப்பட்டுச் சேர லட்சம் பேர் வருவார்கள். ஆனால் வெள்ளரிக்காய் பயிர் செய்ய எல்லாராலும் முடியுமா?" என்றான் மாடத்தேவன்.

இந்தப் பதில் மேஜருக்கு மிகவும் பிடித்திருந்தது. "நீ சொல்கிறது ரொம்பச் சரி. வெள்ளரித் தோட்டம் நன்றாய்ப் போட்டு வை! மறுமுறை வரும்போது கிஸ்திக்காக வரவு வைத்துக் கொள்ள மாட்டேன். காசுக்கு நாலுவீதம் கொடுத்து வாங்கிக் கொள்வேன்!" என்றான்.

மேஜர் துரையின் உத்தரவுப்படி மாடத்தேவன் கட்டை அவிழ்த்து விட்டார்கள்.

"வந்தனம், துரைகளே!" என்று சொல்லிவிட்டு மாடத்தேவன் அங்கிருந்து விரைந்து சென்றான். ஓட்டமும் நடையுமாகப் போய் அதிசீக்கிரத்தில் இடிந்த கோட்டையை அடைந்தான்.

அத்தியாயம் - 6

மாடத்தேவன் அர்ச்சுனன் குன்றை அடைந்த போது ஊமைத்துரையும் வேலம்மாளும் கோட்டைச் சுவர் மீது உட்கார்ந்து கொண்டு ஆவலோடு வழி பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அவர்கள் கேட்பதற்காகக் கூட இவன் காத்திருக்கவில்லை.

"சாமி! நான் போன காரியம் பழந்தான். உங்களை உடனே புறப்பட்டு வரச் சொன்னார். கிளம்புங்கள்! ஒரு விநாடிக் கூடத் தாமதிக்கக் கூடாது! வேலம்மா! சாமியைத் தனியாக அனுப்பக் கூடாது! நீ சிறுவயல் வரையில் கொண்டு விட்டுவிட்டு வா!" என்றான்.

அவசரத்தின் காரணத்தை அறியாத வேலம்மாள் ஊமைத்துரையைப் பார்த்தாள். ஊமைத்துரையின் முகத்தில் மறுபடியும் ஒரு புன்னகை தவழ்ந்தது, அவன் குதித்து எழுந்து புறப்படுவதற்கு ஆயத்தமானான்.

"இ-இ-இவள் வரவேண்டாம்! நா-நா-நான் போகிறேன்; வ-வ-வழி தெரியும்" என்று சொன்னான்.

"இல்லை, துரையே! உங்களைக் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் கட்டாயம் இவளை அழைத்துப் போகவேண்டும். வேலம்மா! ஏன் தயங்குகிறாய்? உனக்கு விஷயம் புரியவில்லை போலிருக்கிறது. வழியில் கும்பினிப் படையைப் பார்த்தேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கு வந்து விடுவார்கள். குறுக்கு வழியில் சீக்கிரமாகச் சாமியைக் கொண்டு போய்ச் சிறு வயலில் விட்டுவிட்டு வா!" என்றான்.

இதைக் கேட்டதும் வேலம்மாளுக்கு அவனுடைய பரபரப்பின் காரணம் தெரிந்துவிட்டது. ஆனாலும் சிறிது தயங்கினாள்.

"நீயும் - அப்பாவும்... என்ன செய்வீர்கள்?" என்றாள்.

"என்னை நான் காப்பாற்றிக் கொள்வேன். உன் அப்பனைக் கடவுள் கவனித்துக் கொள்வார். முருகன் மேல் ஆணை! உடனே புறப்படு!" என்றான்.

இருவரும் கிளம்ப ஆயத்தமானார்கள்.

"சாமி! சற்றுப் பொறுங்கள்!" என்று சொல்லிவிட்டு மாடத்தேவன் கோட்டைக்குள் ஓடினான். ஒரு நிமிஷத்துக்கெல்லாம் ஒரு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வந்து,

"இதை எடுத்துப் போங்கள்!" என்றான்.

ஊமைத்துரை உதட்டைப் பிதுக்கி "ஹும்" என்றான். தன் மடியில் வைத்திருந்த சுருள் கத்தியை எடுத்து ஒரு விசிறு வீசினான்.

"எனக்கு இ-இ-இது போதும்! அ-அ-அதை நீயே வைத்துக் கொள்!" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

ஊமைத்துரையும் வேலம்மாளும் கொஞ்ச தூரம் சென்றார்கள். குன்றுக்குப் பின்னால் அவர்கள் மறைய வேண்டிய சமயம் வந்தது. வேலம்மாள் ஒரே ஓட்டமாய்த் திரும்பி ஓடி வந்தாள். மாடத்தேவனுடைய கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

"என் பேரில் சந்தேகப்பட்டாயே? இப்போது சாமியுடன் என்னை அனுப்புகிறாயே?" என்றாள்.

"பெண்ணே! சந்தேகத்தைப் பற்றிப் பேச இது தானா சமயம்?" என்று மழுப்பினான் மாடத்தேவன்.

"ஆனால் உன் பேரில் எனக்குச் சந்தேகமாயிருக்கிறது?" என்றாள் வேலம்மாள்.

"இது என்ன பைத்தியம்?" என்றான் மாடத்தேவன்.

"நீ என் உயிரைக் காப்பாற்றுவதற்குத்தான் இப்போது போகச் சொல்கிறாய், இல்லையா?"      "அப்படித்தான் வைத்துக் கொள்ளேன், உன் உயிர் எனக்குப் பாத்தியதைப் பட்டதில்லையா?"

"ஈரேழு ஜன்மத்துக்கும் பாத்தியதைப் பட்டது. ஆகையால் நான் திரும்பி வரும்வரையில் நீ உயிரோடிருப்பதாகச் சத்தியம் செய்து கொடு! அப்படிச் சத்தியம் செய்தால்தான் போவேன்!"

"பெண்ணே! அப்படியே சத்தியம் செய்கிறேன். அதை நிறைவேற்றுவது முருகனுடைய பொறுப்பு!"

"முருகனை நான் வேண்டிக் கொள்கிறேன். நீ கவலைப்படாதே!" என்று வேலம்மாள் சொல்லி, தன் இரு கரிய விழிகளாலும் ஒரு தடவை மாடத்தேவன் முகத்தைப் பருகி விடுபவள் போலப் பார்த்தாள். பிறகு அவனுடைய கழுத்தை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தாள்.

மாடத்தேவன் தன்னுடைய குடிசைக்குப் போனான் அதிலிருந்த சில ஆயுதங்களையும் தட்டு முட்டுச் சாமான்களையும் எடுத்துக் கொண்டான். பிறகு நெருப்புக் குச்சியைக் கிழித்துக் குடிசையின் கூரையில் பற்ற வைத்தான். தீப்பிடித்துக் கொண்டு குடிசை எரிய ஆரம்பித்ததும் கோட்டையை நோக்கிச் சென்றான். கோட்டைச் சுவர் மேல் ஏறி ஒரு வசதியான இடத்தில் கையில் துப்பாக்கியுடன் உட்கார்ந்து கொண்டான்.

சற்று நேரத்துக்கெல்லாம் குடிசை எரிந்த தீயின் வெளிச்சத்தில் ஏழெட்டுப் பேர் சாலையோடு வருவது தெரிந்தது. அவர்கள், எரியும் குடிசையின் அருகில் நின்று சற்று நேரம் பார்த்துக் கொண்டு நின்றார்கள். பின்னர், அவர்களில் நாலு பேர் பிரிந்து முன்னால் வந்தார்கள்.

மாடத்தேவன் துப்பாக்கியின் விசையை இழுத்தான். குபீர் என்ற சத்தத்துடன் குண்டு பாய்ந்தது. வந்தவர்களில் நாலு பேரும் துள்ளி நகர்ந்து கொண்டார்கள். ஒருவர் மேலும் குண்டு பாயவில்லை.

மாடத்தேவன் பிறகு இரண்டு மூன்று தடவை சுட்டதும் வியர்த்தமாகவே போயிற்று.

பிறகு அந்த மனிதர்கள் எல்லோரும் ஓரிடத்தில் கூடி ஆலோசித்தார்கள். அவர்களில் ஒருவன் மட்டும் வந்த வழியே திரும்பிச் சென்றான்.

மற்றவர்கள் சாலையில் துப்பாக்கி எல்லைக்கு வெளியே ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டார்கள்.

திடீரென்று அவர்களில் ஒருவன், "வேலம்மா! மகளே வேலம்மா!" என்று கூவிக்கொண்டு கோட்டையை நோக்கி ஓடி வந்தான். அவன் கருப்பையா சேர்வை என்பது மாடத்தேவனுக்குத் தெரிந்தது. கூடாரத்தில் கட்டப்பட்டிருந்தபோது பக்கத்துக் கூடாரத்திலிருந்த வந்த கிழவனின் குரல் கருப்பையா சேர்வையின் குரல்தான். ஆனால் அவன் எதற்காக இப்போது அப்படி அலறிக் கொண்டு ஓடி வருகிறான்? இதுவும் ஒரு சூழ்ச்சியோ? துப்பாக்கியில் பாக்கியிருந்த ஒரு குண்டை அந்தத் துரோகியின் மீது செலுத்தலாமா என்று மாடத்தேவன் ஒரு கணம் யோசித்தான். ஆனால் அதற்கு அவசியம் ஏற்படவில்லை. ஏனெனில் பின்னால் உட்கார்ந்திருந்தவர்களில் ஒருவன் அந்த வேலையைச் செய்து விட்டான். கிழவன் 'வீல்' என்று சத்தமிட்டுக்கொண்டே கீழே விழுந்தான். 'கிழவனுடைய துரோகத்துக்குப் பலன் கிடைத்துவிட்டது' என்று எண்ணி மாடத்தேவன் மகிழ்ந்தான். ஆனால் இப்படி அவன் செய்த துரோகத்தைப்பற்றி வேலம்மாள் தெரிந்து கொள்ளாதது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று? தெரிந்திருந்தால் வேலம்மாள் அதை நினைத்து எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாள்!

கிழவனுடைய துரோகச் செயலினால் ஊமைத்துரைக்கு ஆபத்து ஏற்படாமல் அவரை எச்சரித்து அனுப்பியது கூட அவ்வளவு பெரிய காரியம் இல்லை. அவருக்கு வழி காட்டுவது என்ற காரணத்தின் பேரில் வேலம்மாளை அனுப்பியது எவ்வளவு நல்ல யோசனை?

அதுவரையில் மாடத்தேவனுடைய யோசனை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இனி என்ன செய்வது என்பதுதான் தெரியவில்லை. வந்தவர்கள் துணிந்து கோட்டைக்குள் வருவார்கள். ஒரு கை பார்த்துவிடலாம் என்று எண்ணியிருந்தான். ஆனால், அவர்கள் அருகில் நெருங்குகிற வழியாயில்லை. ஊமைத்துரை இங்கிருப்பதாகவே அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தவரையில் நல்லதுதான். நேரம் ஆக ஆக, ஊமைத்துரை சிறுவயல் போய்ச் சேர்வதற்கு வசதி ஏற்படும். இந்தப் படு முட்டாள்கள் இங்கேயே காத்துக் கொண்டிருக்கட்டும்! ஊமைத்துரையின் சுருள் வாளை நினைத்துப் பயந்து சாகட்டும்!...

இவ்வாறு இரு தரப்பிலும் காத்திருக்கும் போட்டி நடந்தது. நள்ளிரவு வரையில் அந்தப் போட்டி நடந்தது. மாடத்தேவனுக்குத் தூக்கம் கூட வர ஆரம்பித்துவிட்டது. இளம் பிராயம் அல்லவா? கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. அந்தச் சமயத்தில், வடக்கேயிருந்து வந்த சாலை வழியாக ஒரு கரிய கட்டெறும்புக் கூட்டம் சாரி வைத்து வருவதைக் கண்டான்.

இல்லை, இல்லை! அவை கட்டெறும்புகள் அல்ல. கும்பினிப் பட்டாளம்தான் வருகிறது. அப்பப்பா! எத்தனை பேர்? இருநூறு, ஐந்நூறு, ஆயிரம் பேர் இருக்கும் போல் தோன்றுகிறதே? அத்தனை பெரிய படைக்கு முன்னால் தான் ஒருவன் என்ன செய்ய முடியும்? ஆனாலும் ஒரு கை பார்த்துவிட வேண்டும். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையில் கும்பினிப் பட்டாள சிப்பாய்கள் புகுந்தபோது, கோட்டைக்குள்ளே இருந்த ஒவ்வொரு வீரனும் எத்தனைப் பேரைக் கொன்றுத்தீர்த்தான்? அதைப் போல் தானும் செய்துவிட்டு, வீர சொர்க்கம் அடைய வேண்டியதுதான். ஆனால், பாவம், வேலம்மாள். அவளுக்குச் செய்து கொடுத்தச் சத்தியம் என்ன ஆகிறது? அதைப்பற்றி யோசித்து என்ன பயன்? அவள் தான் முருகன் பேரில் பாரத்தைப் போட்டிருக்கிறாளே? முருகனே சத்தியத்தை நிறைவேற்றட்டும்! நமக்கு என்ன கவலை?

இப்படிச் சாஹஸச் செயல்கள் புரிவதுபற்றி மாடத்தேவன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் கும்பினிப் படைநெருங்கி வந்துவிட்டது. அது என்ன? படைக்கு நடுவில் நீளமாக வண்டி ஒன்று வருகிறதே! அந்த வண்டியில் என்ன வருகிறது.

பட்டாள வரிசை, முன்னால் வந்த வீரர்கள் நின்ற இடத்திலேயே நின்றது. ஏதோ ஆலோசனைகள் நடந்தன. பிறகு, அந்தக் கரிய நீண்ட வண்டியருகில் நின்று கொண்டு சில வீரர்கள் என்னமோ செய்தார்கள். ஓகோ! அது பீரங்கி வண்டிபோல் அல்லவா இருக்கிறது? பீரங்கியில் மருந்து போட்டுக் கொட்டியிருக்கிறார்களா?

மாடத்தேவன் சிறிது திடுக்கிடத்தான் செய்தான். பீரங்கி வரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. பீரங்கியிலிருந்து குண்டு போட்டுக் கோட்டையை அடியோடு நாசமாக்கப் பார்க்கிறார்கள் போலும்! ஆனால் அதிகமாகக் குண்டு போடுதல் தேவையாயிராது. பீரங்கியின் வேலை மிகவும் எளிதாய் போய்விடும். மூட்டை மூட்டையாக வெடி மருந்தைத் திருடிக் கொண்டு வந்து மாடத்தேவன் கோட்டையின் அறை ஒன்றில் போட்டு பூட்டி வைத்திருந்தான் அல்லவா? அந்த அறையில் குண்டுவிழ வேண்டியதுதான்! தீர்ந்தது கோட்டை! தீர்ந்தது தன் உயிரும்! வேலம்மா! நன்றாக முருகன் பேரில் பாரத்தைப் போட்டாய்! கும்பினிப் பட்டாளத்தின் பீரங்கியின் முன்னால் முருகன் என்ன செய்வான்?

ஓகோ!...கிழவன் அலறி ஓடி வந்ததன் காரணமும் இப்போது தெரிந்தது. பீரங்கி கொண்டு வந்து கோட்டை மேல் சுடப் போகிறார்கள் என்று அறிந்ததும் கிழவனுக்கு மகளைப் பற்றிய கவலை வந்து விட்டதாக்கும்!...

குடிசைத் தீ முன்னமே அணைந்து விட்டது. நாலா பக்கமும் காரிருள் சூழ்ந்திருந்தது. அந்த இருளைப் பிளந்துகொண்டு பீரங்கி முகப்பில் ஒரு மின்னல் ஜோதி தென்பட்டது. அடுத்த கணம் பயங்கரமான பீரங்கியின் குரைப்புச் சத்தம் கேட்டது. பீரங்கி சத்தத்திலேயே அந்தப் பயங்கரத்திலேயே அந்தப் பழைய கோட்டைச் சுவர்கள் அதிர்ந்தன. மறு விநாடி குண்டு வந்து கோட்டைக்குள் விழுந்தது. ஆயிரம் பேரிடி ஏக காலத்தில் இடித்தாற் போல ஒரு பயங்கர வெடிச் சத்தம்; ஒரு பெரிய அகண்டமான நெருப்பு ஜுவாலை; பிறகு சட சட, பட படவென்று வானம் இடிந்து விழுந்தது. குன்றும் கோட்டைச் சுவர்களும் தகர்ந்து விழுந்தன. மாடத்தேவனும் உருண்டு விழுந்தான். விழுந்த கணத்திலேயே நினைவை இழந்தான்.

மாடத்தேவனுக்கு மறுபடி நினைவு வந்தபோது, காலில் சகிக்க முடியாத கொடிய வலி தெரிந்தது. மூச்சு விடத் திணறியதும் தெரிந்தது. உடம்பெல்லாம் சொட்ட வியர்த்து நனைந்திருந்தது. ஒரே இருட்டாயும் இருந்தது. அந்த இருட்டைப் போன்ற இருட்டை அவன் அதற்கு முன் கண்டதேயில்லை. ஒருவேளை தன் கண் பொட்டையாயிற்றோ என்று நினைத்தான். இல்லை; கண்ணில் ஒரு கோளாறும் இல்லை. கையினால் தடவிப் பார்த்தேன். மேலே சில்லிட்ட பாறை; பக்கத்திலும் சில்லிட்ட பாறை. கீழே மட்டும் கல்லும் மண்ணுமான தரை, அப்பால் இப்பால் நகருவதற்கு இடம் இல்லை. இடமிருந்தாலும் நகர முடியாதபடி காலில் ஏதோ பெரும் பாரம் அமுக்கியது. பொறுக்க முடியாத வலியும் சேர்ந்திருந்தது.

யாரோ சிலர் பேசிக் கொண்ட குரல்கள் பாதாளத்திலிருந்து கேட்பது போலக் கேட்டன.

"பார்த்தாயா? ஊமையன் மறுபடியும் டிமிக்கி கொடுத்து விட்டான்!"

"நன்றாகத் தேடிப் பார்த்தாகி விட்டது. இனித் தேடுவதற்கு இடமில்லை."

"பீரங்கி வருவதற்கு முன்னாலேயே அவன் கம்பி நீட்டியிருக்க வேண்டும்."

"ஊமைத்துரையை ஊர் ஜனங்கள் இந்திரஜித்தன் என்று சொல்வது சரிதான்."

"எப்படியும் அகப்படாமலா போகிறான்? நாலாபுறமும் ஆட்களைப் பிரித்து அனுப்பித் தேடச் செய்யலாம்!"

"சிவகங்கைக்குப் போயிருப்பான்."

"இல்லை, கமுதிக் கோட்டைக்குச் சென்றிருப்பான்."

"காட்டிலே ஒளிந்து கொண்டிருந்தாலும் இருப்பான்."

"அந்தக் குடிகாரக் கிழவன் நம்மை வேண்டுமென்று ஏமாற்றினானா? அல்லது தானே ஏமாந்து போனானா?"

"முட்டாள்களே! அவனைச் சுட்டுக் கொன்று விட்டீர்களே! மற்றவர்களுக்கு உதாரணமாகத் தூக்கில் அல்லவா தொங்கவிட்டிருக்க வேண்டும்?"

கிழவன் மரத்தில் தொங்கும் காட்சியை மாடத்தேவன் மனக் கண்ணால் பார்த்து மகிழ்ந்தான். அந்தச் சண்டாளத் துரோகியை அப்படிச் செய்திருந்தாலும் தகும். ஆனால் வேலம்மாள் பார்த்தால் எவ்வளவுக் கஷ்டப்படுவாள்? வேலம்மா! வேலம்மா! உன்னை இனி நான் காணப் போவதில்லை. இதோ மறுபடியும் எனக்கு மயக்கம் வருகிறது. என்னுடைய உயிர் இதோ பிரிந்து போகிறது...

அத்தியாயம் - 7

மாடத்தேவனுடைய உயிர் வெகு கெட்டியாக அவனுடைய உடலைப் பற்றிக்கொண்டிருந்தது. மறுபடியும் அவனுக்கு நினைவு வந்தபோது அதை உணர்ந்தான். இப்போது சிறிது மங்கலாக வெளிச்சம் கூடத் தெரிந்தது. மேலேயும் பக்கத்திலேயும் உற்றுப் பார்த்தான். கோட்டைச் சுவரின் ஒரு பெரும் பாளம் எக்கச்சக்கமாக தன் பேரில் விழுந்திருக்கிறது என்பதை உணர்ந்தான். தன் தலையிலும் உடம்பிலும் படாமல் சாய்வாக அந்தப் பாளம் வேறொரு கல்லினால் முட்டுக் கொடுக்கப்பட்டு நிற்கிறது. ஆனால் காலின் மேல் மட்டும் ஒரு பெரிய குண்டு பாறை விழுந்திருக்க வேண்டும். கால் எலும்பே முறிந்து போயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இவ்வளவு பொறுக்க முடியாமல் வலிக்குமா?

நேரம் ஆக ஆகப் பக்கத்துப் பாறைகள் சுட ஆரம்பித்தன. சூரியனுடைய வெயில் அடித்துச் சூடாகி வருகின்றன போலும். வரவரச் சூடு அதிகமாயிற்று; தாகம் தொண்டையை வாட்டியது; பசியும் எடுத்தது. தான் இப்படியே கிடந்து பசியினாலும் தாகத்தினாலும் பரிதவித்துச் சாக வேண்டியதுதானா? கோட்டைச் சுவர் தலையில் விழுந்து ஒரேயடியாகக் கொன்றிருக்கக் கூடாதா? முருகா! வேலம்மாள் பிரார்த்தனையின் பயனா இது?

எங்கேயோ வெகு தூரத்திலிருந்து அதல பாதாளத்திலிருந்து, ஆழமான குகையிலிருந்து, "முருகா, முருகா" என்று ஒரு தீனக்குரல் கேட்டது.

"முருகா! என் கணவன் எங்கே? நான் ஆசை வைத்த புருஷன் எங்கே? உன்னிடம் ஒப்புவித்துப் போன என் ராஜா எங்கே?" என்று புலம்பிய குரல் வெகு வெகு தீனஸ்வரத்தில், ஆனால் தெளிவாகக் கேட்டது.

அதற்குப் பதில் சொல்ல மாடத்தேவன் முயன்றான். "வேலம்மா!" என்று அவன் அழைத்த குரல் அவனுக்கே கேட்கவில்லை; அவளுக்கு எப்படிக் கேட்கும்? ஐயோ முருகா! கும்பினிச் சிப்பாய்கள் என்னைப் பார்க்காமல் போனதுபோல் வேலம்மாளும் போய் விடுவாளோ?

இல்லை; முருகன் அவ்வளவு கருணையற்றவனல்லன். வேலம்மாள் இதோ நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறாள். அவளுடைய குரல் மேலும் மேலும் தெளிவாகக் கேட்கிறது! மாடத்தேவன் தன்னுடைய சக்தியையெல்லாம் பிரயோகித்து, "வேலம்மா, வேலம்மா! இதோ இருக்கிறேன்!" என்று கத்தினான்!

"என் ராஜா!" என்று கதறிக் கொண்டு வேலம்மாள் ஓடி வந்தாள். அவன் காலில் மேல் கிடந்த குண்டு பாறையை முக்கி முனகி அப்புறப்படுத்தினாள். அதனால் அவளுக்கு ஏற்பட்ட இரைப்பு நீங்குவதற்குள் மாடத்தேவனின் காலைப் பிடித்து அவனை வெளியில் இழுத்தாள். "அடி பாவி! கால் முறிந்திருக்கிறதடி! வலி கொல்லுகிறது! என்னைத் தொடாதே! இப்படி இழுக்காதே..."

மாடத்தேவன் பாறைக்குள்ளிருந்து வெளிப்பட்டதும் வேலம்மாள் அவன் மீது விழுந்து கட்டிக் கொண்டு அழுதாள். மாடத்தேவன் பலாத்காரமாக அவளுடைய முகத்தைத் தள்ளிப் பிடித்துக் கொண்டு தான் தாகத்தினால் தவிப்பதை ஜாடையினால் தெரிவித்தான். அவனை உடனே வாரி அணைத்துத் தூக்கிக் கொண்டு சுனைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தாள். நாலு கை தண்ணீர் எடுத்து அவன் வாயில் விட்டதும் மாடத்தேவனுக்குப் போன உயிர் திரும்பி வந்தது.

"வேலம்மா! உனக்குக் கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றினேன் பார்த்தாயா? ஆனால் கால் மட்டும் போய்விட்டது!" என்றான்.

வேலம்மாள் அவனுடைய காலைப் பார்த்துப் பார்த்து விம்மி அழுதாள்.

"எனக்காக அழாதே, வேலம்மா! உன் அப்பனுக்காக அழு! நான் கால் இழந்தாலும் உயிரோடு இருக்கிறேன். அவன் செத்தே போய்விட்டான். ஆனால் அவனுக்காகத் தான் ஏன் அழவேண்டும்? வீரச் சாவு அடைந்தவனுக்காக அழக்கூடாது. நேற்று இராத்திரி உன் அப்பன் என்னோடு நின்று கும்பினிக்காரர்களோடு சண்டையிட்டதைப் பார்த்திருந்தாயானால்... ஆகா! வீரபாண்டியனும் ஊமைத்துரையும் கூட அதிசயப்பட்டிருப்பார்கள்!"

வேலம்மாள் அழுகையை நிறுத்திவிட்டு, "அப்பன் உண்மையில் அப்படி உன்னோடு நின்றானா? வேறு விதமாக நான் சந்தேகப்பட்டேனே!" என்றாள்.

"சந்தேகப்பட்டாயா? நான் சந்தேகப்பட்டதற்கு மட்டும் அவ்வளவு பிரமாதமாகக் கோபித்துக் கொண்டாயே? சந்தேகம் பொல்லாதது வேலம்மா!"

"ஆமாம் சந்தேகப்படக்கூடாதுதான். சற்று முன்னால் நான் முருகன் பேரில் கூடச் சந்தேகப்பட்டேன். ஆனால் முருகன் உன்னை எனக்குக் காப்பாற்றிக் கொடுத்தார்!" என்றாள் வேலம்மாள்.

முருகன் கருணையினாலும் வேலம்மாளின் பணிவிடையினாலும் மாடத்தேவன் பிழைத்து எழுந்தான். ஆனால் கால் போனது போனதுதான். கால் இல்லா முடவனாகவே அவன் வாழ்ந்து வந்தான்.

முடவனைக் கட்டிக் கொண்டதற்காக வேலம்மாள் சிறிதும் வருத்தப்படவில்லை. அதைப் பற்றிப் பெருமையே கொண்டாள். அவளே வெள்ளரித் தோட்டம் போட்டு வெள்ளரிக்காய் விற்று வந்த காசைக் கொண்டு குடும்பம் நடத்தினாள். கணவனையும் காப்பாற்றினாள்.

ஏழு வருஷம் அவர்கள் இன்ப வாழ்க்கை நடத்தினார்கள். பிறகு மாடத்தேவன் இறந்து போனான்.

இறக்கும் வரையில் வேலம்மாளின் தகப்பன் செய்த துரோகச் செயலைப் பற்றி மாடத்தேவன் அவளிடம் சொல்லவில்லை. கும்பினிப் படையுடன் வீரப்போர் புரிந்து அவன் உயிர் விட்டதாகச் சொல்லி வந்தான்.

வேலம்மாளும் ஒரு இரகசியத்தை இறுதிவரையில் மனதிற்குள்ளேயே வைத்திருந்து இறந்தாள். ஊமைத்துரைக்கு வழிகாட்ட அவளை மாடத்தேவன் போகச் சொன்ன இரவில், கொஞ்ச நேரத்திலேயே ஊமைத்துரையிடம் விடைபெற்றுக் கொண்டு அவள் திரும்பி விட்டாள். சுனைக்கரையில் மரத்தின் பின்னாலிருந்து அங்கே நடந்தது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள். தன் தகப்பன் செய்த சதிச் செயலையும் அறிந்து கொண்டிருந்தாள். ஆனால் அதைப்பற்றிப் பிரஸ்தாபிக்கவில்லை. 'உனக்கு எப்படித் தெரிந்தது?' என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? 'ஊமைத்துரையை நடுவில் விட்டு விட்டு வந்தேன்' என்று தானே சொல்லவேண்டும்?

இந்த அதிசயத் தம்பதிகளுடைய வாழ்க்கையைப் பற்றி அறிந்த பக்கத்துக் கிராமவாசிகள் வீரன் மாடத்தேவனுடைய நினைவுக்காகச் சுனைக்கரையில் ஒரு கல் நாட்டினார்கள். அவனைக் காப்பாற்றிய முருகனுக்காக ஒரு வேலையும் நட்டார்கள். அந்தச் சுனைக்கு நாளடைவில் 'மாடத்தேவன் சுனை' என்று பெயர் வந்தது.

இப்போதும் அந்தப் பக்கமாய்ப் போகிற கிராமத்து ஜனங்கள் மாடத்தேவன் கல் மீதும் அருகில் உள்ள வேல் மீதும் சுனை ஓரத்து அரளிச் செடியிலிருந்து பூப்பறித்துப் போட்டு வணங்கிவிட்டுப் போகிறார்கள்.