maayakkannadigal

மாயக்கண்ணாடிகள்

மிரியம் மற்றும் தேஜஸிடம் மாயக்கண்ணாடிகள் இருக்கின்றன. அவர்கள் அந்த மாயக்கண்ணாடிகளைப் பயன்படுத்தி உலகின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வாழும் ஏழு வித விலங்குகள் மற்றும் பறவைகளைப் பார்க்கப் போகிறார்கள். அவர்களோடு நாமும் சேர்ந்துகொள்ளலாம் வாருங்கள்.

- Malarkody

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

“தேஜஸ்! நான் என்ன வரைந்திருக்கிறேன், பார்!” என்று மிரியம் தன் சகோதரனிடம் காட்டினாள்.

“ஓஹோ இதென்ன? புலி பனியில் வாழ்வதில்லையே! என்ன சிறுபிள்ளைத்தனம்!”என்றான் தேஜஸ்.

“கர்ர்ர்… கர்ர்ர்… கர்ர்ர்… இருக்கிறது. பனியிலேயே வாழ்ந்து வேட்டையாடும் புலி ரஷ்யாவில் இருக்கிறது” என்றாள் மிரியம்.

“அப்படியா?” என வியந்த தேஜஸ், “என் மாயக்கண்ணாடிகளைக் கொண்டு வா, மிரியம்! அது உண்மையா என்று பார்ப்போம்” என்றான்.

“ஆமாம்! நீ சொன்னது சரிதான். மிரியம்! என்னால் அந்தப் புலியைப் பார்க்க முடிகிறது. இதற்கு நிறைய மென்மயிர் உள்ளது. அங்கே மிகவும் குளிராக இருப்பதால் அப்படி இருக்கலாம்” என்றான்.

“சைபீரியன் புலி பார்ப்பதற்கு இந்தியாவில் இருக்கும் வங்காளப் புலியை போலவே இருந்தாலும் அது வித்தியாசமானது” என்றாள் மிரியம்.

“அது உலகில் ஒரு பகுதியில் மட்டும்தான் வாழ்கிறது. நாம் எப்படி நம் வீட்டை நேசிக்கிறோமோ, அதே போல ஒவ்வொரு விலங்கும் அதனதன் தனித்துவமான வீட்டை நேசிக்கின்றன. வேறு எந்த இடங்களையும்  அவை விரும்புவதில்லை”என்றான் தேஜஸ்.

“நான் பார்க்கணும்! நான் பார்க்கணும்!” என்று நச்சரித்தாள் மிரியம். “பொறு! பொறு!” என்ற தேஜஸ் சிரித்தபடியே, “இந்த உயரம் உனக்குப் போதவில்லை. எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது” என்று ஒரு மேசையை இழுத்து வைத்தான். மிரியம் அதன் மீது ஏறினாள்.“இங்கிருந்து, பூமியெங்கும் தங்கள் வீடுகளில் வாழும் பல விலங்குகளைப் பார்க்கலாம்” என்றான் தேஜஸ். “துர்கேஷ்! மஹிமா! இங்கே வாருங்கள், இதைப் பாருங்கள்!” என்று அவர்களைக் கடந்து சென்ற நண்பர்களைக்கூவி அழைத்தாள் மிரியம்.

துர்கேஷ் ஒரு வாளியை கவிழ்த்துப்போட்டு இரு கைகளையும் வைத்து அதன் மேல் ஏறியபடி, “ஓ... இது என்ன? நீருக்குள் வாள் போலத் தெரிகிறது!” என்று கேட்டான். “அது, கடலின் ஒற்றைக் கொம்பன். நம் பூமியின் வடதுருவமான ஆர்க்டிக்கில் உள்ள நீர்நிலைகளில் மட்டுமே இது வாழ்கிறது. அங்கே குளிராகவும் இருட்டாகவும் இருக்கும். ஆனாலும் அதுதான் கொம்பன் திமிங்கிலங்களின்(narwhal) வீடாகும்" என்றாள் மிரியம். “உனக்கு இவ்வளவு விவரங்கள் எப்படித் தெரியும்?” என்று சிரித்தபடியே கேட்டான் தேஜஸ். மிரியம் தோள்களைக் குலுக்கியபடியே, “புத்தகங்கள்!” என்றாள்.

இப்போது மஹிமா குதித்து ஏறினாள். “ஒஓ! நான் ஒராங்குட்டன் என்ற ஒரு விலங்கைப் பற்றிய ஒரு கதையை வாசித்தேன். ஆனால் அது பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது” என்றாள்.

“அது இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் வசிக்கும் பெரிய வாலில்லாக் குரங்கு,” என்று கண்ணாடியைக் கிழக்குப்புறமாகச் சுழற்றியபடியே, "இங்கே பார்!" என்றாள் மிரியம்.

“ஆ! ஒராங்குட்டான் பழம் தின்கிறது. என்னைப் போலிருக்கும் ஒரு குழந்தையை வைத்திருக்கிறது” என்று மஹிமா கத்தினாள்.

“சரி, சரி! இப்போது விரைவாக ஒரு கேள்வி. இது என்ன விலங்கு என்று யாராவது சொல்ல முடியுமா?” என்று கேட்டான் தேஜஸ்.

“வரிக்குதிரை!” என்றான் துர்கேஷ்.

“மான்!” என்றாள் மிரியம். “எருமை!” என்றாள் மஹிமா.

தேஜஸ் சிரித்தான்.

“இவை எதுவுமே இல்லை! இது ஆப்பிரிக்காவின் மிகச்சில காடுகளில் மட்டுமே வசிக்கும் ஒகபி(okapi)” என்றான்.

“எனக்கு இன்னொரு வாய்ப்புக் கிடைக்குமா?” என்று துர்கேஷ் மேலே பார்த்து கேட்டான்.

“கண்டிப்பாக!” என்றான் தேஜஸ். “என்ன… என்ன அது? அதற்கு விசித்திரமான நீலநிறப் பாதங்கள் இருக்கின்றனவே?”

“எங்கே? நான் பார்க்கிறேன்” என்று கண்ணாடியை இழுத்தாள் மிரியம்.

“ஆ… ஆமாம்! அது நீலநிறப் பாதமுடைய பூபி(Booby). இது தென்அமெரிக்காவில் வசிக்கும், வேடிக்கையான நடனங்களாடும் ஒரு அற்புதமான பறவை” என்றாள்.

“இருட்ட ஆரம்பித்துவிட்டது. எனக்குப் பசிக்கிறது” என்றாள் மிரியம். “இல்லை… இன்னும் ஒரு முறை! இன்னும் ஒரே ஒரு முறை” என்று எல்லோரும் வேண்டினார்கள்.

“சரி,சரி! கடைசியாக ஒன்று” என்றான் தேஜஸ்.

துர்கேஷ் அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே, “என் மனதில் அதிகச் சிறப்பு வாய்ந்த விலங்கு ஒன்று உள்ளது.  அதனால் இன்னும் இரண்டு முறை" என்றான்.

“இதைப் பாருங்கள். இது பூமியின் தென்னரைக்கோளத்திலுள்ள நியூசிலாந்தில் வசிக்கும் பறவை கிவி. இந்த ஒரு பறவையினத்திற்கு மட்டும்தான் அதன் மிக நீளமான அலகின் நுனியில் நம்மைப் போலவே மூக்குத்துவாரங்கள் உள்ளன. நிலத்தைத் தோண்டவும், பூச்சிகள் மற்றும் பழங்களைக் கண்டுபிடிக்கவும் அவை தன் மூக்கைப் பயன்படுத்துகின்றன” என்றான் தேஜஸ்.

“நன்றி! ஒரு நாள், என் அம்மா இந்தக் கதையைச் சொன்னார். அது ஒரு... ஒரு... தேவாங்கு பற்றி என்று நினைக்கிறேன்" என்றான் துர்கேஷ்.

“உம்...! ஆமாம், அது இலங்கையின் தேவாங்கு. அவை வயிற்றில் வெள்ளி முடியோடும், நம்மைப்போலவே முன்புறத்தில் கண்களுடனும் இருக்கும்” என்றாள் மிரியம். “ஆனால் அதை இப்பொழுது பார்க்க முடியாது. அது இரவில் மட்டுமே நடமாடும்.”

“ஆனால் நாளைக்கு நாம் மறுபடியும்  வரமுடியுமே" என்றாள் மஹிமா.

“அதுவும் சரி!” தேஜஸ் கைகளைத் தட்டி. “நமக்கும் விலங்குகளுக்கும் வீடு திரும்பும் நேரம் வந்து விட்டது” என்றான். “எல்லா விலங்குகளும் வீட்டுக்குத் திரும்புகின்றன என்று நினைக்கிறாயா?”

“ஆமாம், மிரியம்! நம் உலகின் தனித்துவமுள்ள பகுதிகளில் இருக்கும் தத்தமது தனிச்சிறப்பான வீடுகளுக்கு அவை செல்கின்றன.”

நீங்கள் சந்தித்த அந்த ஏழு விலங்குகளும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கின்றன. இந்த நிலப்படம் அவை எங்கெங்கே வாழ்கின்றன என்பதை உங்களுக்குக் காண்பிக்கிறது. உங்களிடம், தேஜஸிடம் இருப்பதைப் போல மாயக்கண்ணாடிகள் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் அந்த விலங்குகளை நீங்கள் இங்கே பார்க்கலாம்.

நிலப்படம் அளவீட்டில் இல்லை

கடல் ஒற்றைக் கொம்பன் (Narwhal): இந்தக் கடல்வாழ் விலங்கு ஆர்க்டிக்கின் பனி நீரில் வாழ்கின்றது. இவை கனடா, கிரீன்லாந்து, நார்வே, ரஷ்யா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.

கிவி: காடுகள், புதர் மண்டிய இடங்கள், மணற்பகுதிகள், மற்றும் சதுப்புநிலக்காடுகள் போன்ற பல்வேறு வசிப்பிடங்களில் இப்பறவைகள் வசிக்கின்றன. இவை நியூசிலாந்தில் காணப்படுகின்றன.

தேவாங்கு (Sri Lankan Loris): ஒராங்குட்டான் என்று அழைக்கப்படும் இந்த மறைந்து வாழும் விலங்கினம், ஈரமான வெப்பமண்டலப் பகுதிகளின் மரங்களில் வாழ்கிறது. இது இலங்கையில் காணப்படுகிறது.

சைபீரியப் புலி: இந்தப் பெரிய பூனை வகை பெரும்பாலும் குளிர்மிகுந்த கலப்புக் காடுகளில் வசிக்கிறது. இது ரஷ்யாவிலும் சைனாவிலும் காணப்படுகிறது.

ஒகபி(okapi): இந்த விலங்குக்கு அடர்ந்த காடுகள்தான் பிடிக்கும். இது டெமாக்ரடிக் ரிபப்ளிக் ஆஃப் காங்கோ நாட்டில் காணப்படும்.

ஒராங்குட்டான்: இந்தக் குரங்குகள் மழைக்காடுகளின் மரங்களின் மேலேயே தங்கள் முழு வாழ்நாளையும் கழிக்கும்.

இவை மலேசியாவிலும் இந்தோனேசியாவிலும் காணப்படுகின்றன.

நீலநிறப் பாதமுடைய பூபி(Blue-footed Booby): இந்தப் பறவைகள் பெரும்பாலும் கலாபேகோஸ் தீவுகளில் வசிப்பவை. இவை கலிஃபோர்னியாவிலும் பெரு நாட்டிலும் காணப்படுகின்றன.