Magudapathi

மகுடபதி

மகுடபதி அமரர் கல்கி அவர்கள் எழுதிய சமூக புதினமாகும். கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

- அமரர் கல்கி

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

பொருளடக்கம்

திறந்த வீடு

அன்று சாயங்காலம், சூரியன் வழக்கம் போலத்தான் மேற்கு மலைத் தொடருக்குப் பின்னால் அஸ்தமித்தான். ஆனால், அப்போது சூழ்ந்து வந்த இருள், வழக்கமான இருளாகத் தோன்றவில்லை. காவியங்களில் கவிகள் வர்ணிக்கும் இருளைப் போல், கோயமுத்தூர் நகரவாசிகளின் மனத்தில் பீதியையும் கவலையையும் அதிகமாக்கிக் கொண்டு, அந்த இருள், நகரின் வீதிகளிலும் சந்து பொந்துகளிலும் புகுந்து பரவி வந்தது. வழக்கம்போல் அன்று தெரு வீதிகளில் முனிசிபாலிடி விளக்குகள் சரியான காலத்தில் ஏற்றப்படாதபடியால் சாதாரண அந்தி இருட்டானது, நள்ளிரவின் கானாந்தகாரத்தை விடப் பயங்கரமாகத் தோன்றியது.

கோயமுத்தூர் நகரம் அன்று அந்தி வேளையில் அளித்த சோககரமான காட்சியைப் போல் அதற்கு முன்னால் அளித்தது கிடையாது; பின்னாலும் அளித்தது கிடையாது. நகரின் பிரதான வீதிகளில் விளக்கேற்றும் நேரத்தில் சாதாரணமாய்க் காணப்படும் 'ஜே ஜே' என்ற ஜனக்கூட்டமும், வண்டிகளின் போக்குவரத்தும் கலகலப்பும் அன்று காணப்படவில்லை. கடைத் தெருக்கள் பாழடைந்து காணப்பட்டன.

வீதிகளில் வீடுகளெல்லாம் சாத்திக் கிடந்தன. ஜன்னல் கதவுகளும் மூடப்பட்டிருந்தன. மேல் மாடிகளிலிருந்து எட்டிப் பார்ப்பவர் கூட இல்லை.

பெரிய வீதிகளில் ஜன நடமாட்டமே கிடையாது. சின்னத் தெருக்களிலும் சந்துகளிலும் அங்கே இங்கே அபூர்வமாக இரண்டொருவர் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களும், முன்னாலும் பின்னாலும் பீதியுடன் பார்த்துக் கொண்டு நடந்தார்கள். அவர்களுடைய முகங்களைப் பார்த்தால், பேயடித்தவர்களின் முகங்களாகக் காணப்பட்டன. தெருக்களில் நிற்க மனமில்லாதவர்களைப் போல் அவர்கள் அவசர அவசரமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.

கோயமுத்தூருக்கு என்ன நேர்ந்தது? நேற்றுவரை அவ்வளவு கலகலப்பாகவும், திருமகள் விலாசத்துடனும் விளங்கிய நகரம் இன்று பாழடைந்து கிடப்பானேன்? திருமகள் தமக்கையின் ஆதிக்கம் இன்று அந்நகரில் எவ்விதம் ஏற்பட்டது?

இதன் காரணத்தை அறிய வேண்டுமானால், நமது கதை ஆரம்பமாகும் காலத்தை - வருஷம் மாதம் தேதியைக் கூட கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

வருஷம், 1931; மாதம், ஜனவரி; தேதி, 6; வாசகர்களுக்கு ஏதாவது ஞாபகம் வருகிறதா?

1930 டிசம்பர் கடைசியில் மகாத்மா காந்தி லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டிலிருந்து வெறுங்கையுடன் திரும்பிப் பம்பாய்க்கு வந்து சேர்ந்தார். அவரை வரவேற்பதற்கு அப்போது இந்தியாவிலிருந்து வில்லிங்டன் சர்க்கார் தக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்! அவர் பம்பாய் வந்து இறங்குவதற்கு நாலு நாளைக்கு முன்பு காந்தி-இர்வின் ஒப்பந்தம் காற்றில் விடப்பட்டது. பண்டித ஜவஹர்லால் நேரு கைது செய்யப்பட்டார்.

மகாத்மா பம்பாய் வந்திறங்கியதும், வைஸ்ராய் வில்லிங்டனுக்குத் தந்தி அடித்தார். பதில் திருப்திகரமாயில்லை. எனவே, காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி, மறுபடியும் சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்குவதென்று, தீர்மானித்தது. உடனே மகாத்மாவும் காரியக் கமிட்டி அங்கத்தினரும் கைது செய்யப்பட்டார்கள்.

அதன்மேல், நாடெங்கும் இரண்டாவது சத்தியாக்கிரக இயக்கம் ஆரம்பமானது போலவே, கோயமுத்தூர் நகரிலும் ஆரம்பித்தது.

ஆனால், 1929-ல் இயக்கத்தை வளரவிட்டதுபோல் இந்தத் தடவை வளரவிடக்கூடாதென்றும், முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்றும், வில்லிங்டன் சர்க்காரின் தாக்கீது நாடெங்குமுள்ள அதிகார வர்க்கத்தாருக்கு வந்திருந்தது. ஆகவே, ஒவ்வொரு ஜில்லாவிலும், இயக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும் பொருட்டு, ஜில்லா அதிகாரிகள் வேண்டிய குண்டாந்தடி முதலிய ஆயுதங்களுடன் தயாராயிருந்தார்கள்.

முதல் நாள் கோயமுத்தூரில் பிரசித்தி பெற்ற ஒரு காங்கிரஸ் தொண்டர், தம்பதி சமேதராய்ச் சத்தியாக்கிரகம் செய்தார். அவர்களைப் போலீஸார் காங்கிரஸ் ஆபீஸ் வாசலிலேயே கைது செய்து கொண்டு போனார்கள்.

அதற்குப் பிறகு நகரின் முக்கிய தெருக்களில் போலீஸ்-'மார்ச்' நடந்தது.

மறுநாள் ஆறு தொண்டர்கள் காங்கிரஸ் ஆபீஸிலிருந்து கிளம்பினார்கள். கிளம்பி, 'வந்தேமாதரம்' முதலிய கோஷங்களைச் செய்து கொண்டு கடைத்தெரு வரையில் சென்றார்கள். வேடிக்கை பார்ப்பதற்கு ஏக ஜனக் கூட்டம் கூடிவிட்டது.

அப்போது பலமான போலீஸ் படை அங்கு வந்து சேர்ந்தது. முன்னால் போலீஸ் அதிகாரிகள், அவர்களுக்குப் பின்னால் குண்டாந்தடி சகிதமாக சாதாரண போலீஸ் ஜவான்கள் - அவர்களுக்குப் பின்னால் துப்பாக்கி சகிதமாக மலபார் ஸ்பெஷல் போலீஸ் - இப்படியாக அந்தப் போலீஸ் ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. தொண்டர்கள் நின்ற கடைத் தெரு முனைக்கு வந்ததும், தலைமைப் போலீஸ் அதிகாரி பயங்கரமான குரலில் போலீஸ் படையைப் பார்த்து உத்தரவுகள் போட்டார். நாலாபுறமும் கூடியிருந்த ஜனங்களைப் பார்த்ததும் ஏதோ சொன்னார். அவர் சொன்னது இன்னதென்று யாருக்கும் தெரியவில்லை. கூட்டத்திலிருந்தவர்களில் பொறுப்பற்ற இளம் பிள்ளைகள் சிலர் போலீஸ்காரர்களைப் பரிகசிக்கும் பாவனையாகக் கூச்சலிட்டார்கள்.

அடுத்த நிமிஷம் போலீஸ் குண்டாந்தடி கைவரிசையைக் காட்டத் தொடங்கிற்று.

சில போலீஸ் ஜவான்கள் தொண்டர்களைச் சூழ்ந்து கொண்டு அடிக்கத் தொடங்கினார்கள். அடி ஆரம்பமான போது, தொண்டர்கள் கூட்டத்திலிருந்து 'வந்தேமாதரம்' என்று கிளம்பிய வீர கோஷத்தின் ஸ்வரம் வர வரக் குறைந்து வந்தது. ஒவ்வொரு தொண்டராகக் கீழே விழுந்து வந்தார்கள். சிலருக்கு உணர்வு தப்பிவிட்டது.

தொண்டர்களைச் சாதாரணப் போலீஸார் ஒரு புறம் கவனித்துக் கொண்டிருக்கையில், மலபார் ஸ்பெஷல் போலீஸ் வீரர்கள், சுற்றுமுற்றும் கூடியிருந்த ஜனங்களை ஸ்பெஷலாகக் கவனிக்கத் தொடங்கினார்கள். பயங்கரமான ஊளைச் சத்தம் போட்டு அவர்கள் பாய்ந்துவந்து ஜனங்களைக் குண்டாந்தடியினால் விசாரிக்கத் தொடங்கவே, ஜனங்கள் நாலாபுறமும் ஓடினார்கள். அப்படி ஓடினவர்களைத் தொடர்ந்து ஜவான்கள் துரத்தினார்கள். துரத்தப்பட்டவர்களில் சிலர் கடைகளுக்குள்ளும் வீடுகளுக்குள்ளும் நுழைந்தார்கள். போலீஸார் அவர்களுக்குப் பின்னால் புகுந்து தாக்கினார்கள்.

தெருவிலே போனவர்கள், வந்தவர்கள் வண்டிக்காரர்கள், வீட்டுக்காரர்கள், கடைக்காரர்கள், கடைக்கு வந்தவர்கள், வேடிக்கை பார்த்தவர்கள், பார்க்காமல் ஓடியவர்கள் ஆகிய சகலரும் பட்சபாதமின்றி அன்றையத் தினம் பிரிட்டிஷ் அதிகாரத்தின் மகத்துவத்தை மண்டையிலும் முதுகிலும் தோள்பட்டைகளிலும் முழங்கால் சில்லுகளிலும் அனுபவித்தார்கள்.

கடைத்தெருவில் சில கடைகளுக்குள் போலீஸார் புகுந்த செய்தியைக் கேட்டதும், எல்லாக் கடைகளும் மளமளவென்று சாத்தப்பட்டன.

இதற்குள் செய்தி ஊரெல்லாம் பரவி விட்டது. மலபார் போலீஸார் வீதியில் யாரைக் கண்டாலும் அடிக்கிறார்களென்றும், அடிக்கப்பட்ட காங்கிரஸ் தொண்டர்களில் ஒருவர் இறந்து போனார் என்றும் வதந்தி பரவியது. இதனால் நகரம் முழுவதும் கதிகலங்கிப் போய்விட்டது.

சற்று நேரத்திற்கெல்லாம் நகரின் வீதிகளில் போலீஸார், 'மார்ச்' செய்துகொண்டு போனதனால் ஜனங்களின் பீதி அதிகமாயிற்று. யாரும் வெளியில் தலைகாட்டத் துணியவில்லை. எல்லோரும் அவரவர்களுடைய வீடுகளுக்குள் கதவைச் சாத்தித் தாளிட்டுக் கொண்டு இருந்தார்கள்.

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு முனிசிபல் விளக்குகள் ஏற்றப்பட்டன. ஆனால், அவையும் பயத்தால் மங்கலாகப் பிரகாசித்தது போலவே தோன்றின.

இந்த மங்கிய வெளிச்சத்தில் அனுமந்தராயன் தெருவில், சுமார் இருபது பிராயமுள்ள ஓர் இளைஞன் அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே விரைவாகப் போய்க் கொண்டிருந்தான். அனுமந்தராயன் தெரு மிகவும் குறுகலான தெரு. இதில் வீடுகளைக் காட்டிலும், வியாபாரிகள் சாமான்களை நிரப்பி வைக்கும் கிடங்குகள் தான் அதிகமாயிருந்தன. ஆதலால், சாதாரணமாகவே இந்தத் தெருவில் அஸ்தமித்த பிறகு ஜன நடமாட்டம் குறைவாக இருக்கும். இப்போதோ, அந்தத் தெரு முழுவதும் சூனியமாகவே காணப்பட்டது. ஆனாலும் அந்த வாலிபன், தான் யாருடைய கண்ணிலும் பட்டுவிடக்கூடாது என்ற கவலையுடன் ஒளிந்து ஒளிந்து போவதாகத் தோன்றியது. களை பொருந்திய அவன் முகத்தில், பயத்தின் அறிகுறி தென்பட்டது. அவனுடைய உடையைச் சற்றுக் கவனித்தோமானால், அவன் அவ்விதம் பயந்துகொண்டு செல்வது நமக்கு ரொம்பவும் ஆச்சரியமளிக்கும். அவன் கதர் உடை தரித்து, தலையிலும் கதர்க் குல்லா வைத்திருந்தான். அவன் தேசத்தொண்டில் ஈடுபட்டவன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்தத் தேசத்தொண்டன் அவ்விதம் பயத்துடன் ஒளிந்து ஒளிந்து செல்வதேன்? போலீஸ் தடியடிக்குப் பயந்து ஓடி வந்தவனோ? ஆனால், தடியடி உற்சவந்தான் சாயங்காலமே தீர்ந்து போய் விட்டதே? இப்போது என்னத்திற்காக அவன் இவ்விதம் பயப்பட்டு ஒளிய வேண்டும்?

அதே சமயத்தில் அனுமந்தராயன் தெரு முனையை நாம் அடைந்தோமானால், மேற்படி மர்மத்தை ஒருவாறு அறிந்து கொள்ளலாம். ஆமாம்; அந்த முனையில் இரண்டு தடியர்கள் வீதி ஓரத்தில் நின்று மெதுவான குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தோற்றத்தில் தடியர்களாயிருந்ததுடன், கையிலும் தடி வைத்திருந்தார்கள்.

"இந்தச் சந்திலேதான் புகுந்தான்" என்று ஒருவன் சொன்னான்.

"அப்படியானால், வா! அவனை இன்றைக்குத் தீர்த்தேயாக வேண்டும்."

இப்படிப் பேசிய தடியர்கள் இருவரும் தெருவுக்குள் நுழைந்தார்கள்.

அச்சமயம் தெருவின் மத்தியில் போய்க்கொண்டிருந்த இளைஞன் திரும்பிப் பார்த்தான். ஒரு முனையில் போட்டிருந்த விளக்கின் வெளிச்சத்தில் அந்தத் தடியர்களின் உருவங்கள் தெரிந்தன. அவர்களைப் பார்த்ததும் இளைஞனின் உடம்பு சிறிது நடுங்கிற்று. வீதியோரத்து இருண்ட நிழலில் இன்னும் நன்றாய் நகர்ந்து கொண்டு அவன் மேலே விரைந்து சென்றான். ஓடினால் கால் சத்தம் கேட்குமே என்றும் அவனுக்குப் பயமாயிருந்தது. ஆகையால், சத்தம் கேட்காதபடி கூடியவரையில் வேகமாக நடந்தான்.

நாலு வீடு தாண்டியதும், ஒரு வீட்டு வாசற் கதவண்டை யாரோ ஒருவன் நிற்பது போல் தோன்றியது. அருகில் நெருங்கியபோது, அவன் ஒரு வயதான கிழவன் என்று தோன்றியது. அவன் வாசற்புறத்திலிருந்து வீட்டுக்கதவின் பூட்டைத் திறந்து கொண்டிருந்தான். தேசீய உடை தரித்த வாலிபன் அந்த இடத்துக்கு வந்ததும் கிழவன் வீட்டின் கதவைத் திறந்ததும், சரியாக இருந்தது.

கதவைத் திறந்துவிட்டு, கிழே விழுந்திருந்த கைத்தடியை எடுப்பதற்காக அந்தக் கிழவன் குனிந்தபோது, வாலிபன் சட்டென்று அந்தத் திறந்த வீட்டுக்குள் நுழைந்தான்.

பெண்குரல்

திறந்த வீட்டுக்குள் நுழைந்த வாலிபன், கிழவனுக்குத் தெரியாமல் மறைந்து கொள்ளும் நோக்கத்துடன், சுற்றுமுற்றும் பார்த்தான். அந்த வீட்டு நடையில் ஒரு பக்கத்தில் மரப்பலகையினாலான குறுகிய மச்சுப் படி காணப்பட்டது. மச்சுப் படியின் ஓரத்தில், கரியடைந்த அரிக்கன் விளக்கு மிக மங்கலான ஒளியைத் தந்து கொண்டிருந்தது. மச்சுப்படிக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள முடியுமோ என்று பார்ப்பதற்காக வாலிபன் அங்கே போவதற்குள், கிழவன் உள்ளே நுழைந்து விட்டான்.

"யாரடா அவன்?" என்று கிழவன் கேட்ட குரலில், வியப்பும், திகைப்பும், கோபமும் கலந்திருந்தன.

ஆனால், அந்தக் குரலைக் கேட்ட வாலிபன், பளிச்சென்று திரும்பிப் பார்த்தபோது, அவனுடைய முகத்தில் வியப்புடன் மகிழ்ச்சியும் காணப்பட்டது.

"பாட்டா!" என்று சொல்லி, அவன் கிழவனை ஏறிட்டுப் பார்த்தபடி நின்றான்.

"யார்? மகுடபதியா?" என்று கிழவன் கெட்டான். அவனுடைய குரலில் இப்போது கோபத்துக்குப் பதிலாகக் கனிவு தோன்றியது.

"ஆமாம், பாட்டா!"

"இதென்ன அதிசயம், தம்பி! நீ எப்போது இங்கே வந்தே? எப்படி வந்தே? வாசற்கதவு பூட்டியிருக்கிறதே!"

"நீ பூட்டைத் திறந்துவிட்டு, தடியை எடுக்கக் குனிந்தாயல்லவா, பாட்டா? அப்போது நுழைந்தேன். ஆனால் நுழையும்போது நீதான் என்று தெரியாது. உன்னிடம் அகப்பட்டுக் கொள்ளாமலிருக்க, இந்த மச்சுப்படிக்குப் பின்னால் ஒளியப் பார்த்தேன். என்ன வேடிக்கை, பார்!" என்று கூறி மகுடபதி சிரிக்க முயன்றான்.

ஆனால், அச்சமயம் கிழவன் முகத்தில் காணப்பட்ட தயக்கத்தையும் பயத்தையும் பார்த்தபோது, சிரிப்பு வாய்க்குள்ளே அடங்கிவிட்டது.

"நீ விளையாடுகிறாயோ, என்னமோ தெரியவில்லை தம்பி! ஆனால் அதெல்லாம் அப்புறம் பேசிக் கொள்ளலாம். நீ இந்த வீட்டில் இருக்கக் கூடாது. ஒரு வினாடி கூட இருக்கக் கூடாது. உடனே போய்விடு..." என்று கிழவன் பரபரப்புடன் சொன்னான்.

மகுடபதி, அப்போது பாதி விளையாட்டுக் குரலில், "அதெல்லாம் முடியாது, பெரியண்ணக் கவுண்டரே! நான் இந்த வீட்டை விட்டு இன்று ராத்திரி கிளம்ப முடியாது. அப்படி என்னத்திற்காக என்னைக் கண்டு பயப்படுகிறாய்? இந்த வீட்டில் நீ களவாட, கிளவாட வரவில்லையே? உன் கையில் இருப்பது தடிதானே? கன்னக் கோல் இல்லையே?..." என்று சொல்லி வந்தவன் சட்டென்று பேசுவதை நிறுத்தி, வாசல் பக்கம் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டான்.

வீதியில் காலடிச் சத்தம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. மனிதர்கள் பேசுகிற குரலும் கேட்டது.

பெரியண்ணன் ஏதோ கேட்க வாயெடுத்தபோது, மகுடபதி தன் வாயின் மேல் விரலை வைத்துப் பேசாமலிருக்கும்படி சமிக்ஞை செய்தான். ஏற்கனவே மங்கலாக எரிந்த அரிக்கன் லாந்தரின் திரியை இன்னும் கொஞ்சம் சின்னதாகப் பண்ணி, அதை மச்சுப் படிக்குப் பின்னால் வைத்தான். வீட்டை நெருங்கிய காலடிச் சத்தமும், பேச்சுக் குரலும் வீதியோடு சென்று சிறிது நேரத்துக்கெல்லாம் மறைந்தன.

மகுடபதி, பெரியண்ணன் கையைப் பிடித்து ஜன்னலண்டை அழைத்துக் கொண்டு போய், வெளியே சுட்டிக் காட்டினான். தூரத்தில் இரண்டு தடியர்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.

"நீ கதவைத் தாழ்ப்பாளிட்டது நல்லதாய்ப் போயிற்று" என்றான் மகுடபதி, மெல்லிய குரலில்.

"என்ன தம்பி, சமாசாரம்? யார் அவர்கள்? எதற்காக நீ அவர்களைக் கண்டு பயப்படுகிறாய்?" என்று பெரியண்ணனும் மெதுவான குரலில் கேட்டான்.

"பாட்டா! அவர்கள் இருவரும் என்னை இன்றைக்குக் கொன்று போட்டு விடுவதென்று வந்திருக்கிறார்கள். இன்று ராத்திரி என்னை வெளியே அனுப்பினாயானால் அப்புறம் என்னை உயிரோடு பார்க்க மாட்டாய். மறு உலகத்தில் தான் பார்ப்பாய்" என்று மகுடபதி சொன்னபோது, கிழவன் முகத்தில் கோபம் கொதித்தது.

"என்ன சொல்கிறாய், தம்பி! இவன்களுக்குப் பயந்து கொண்டா நீ இந்த வீட்டில் ஒளிந்தாய்? எந்தக் களவாணிப் பயல் உன் மேல் கையை வைக்கிறான். பார்க்கலாம்! யாருக்கு அவ்வளவு நெஞ்சுத் தைரியம், பார்த்து விடுகிறேன், வா! இப்போதே வெளியே போகலாம்?" என்று சொல்லிக் கொண்டே கதவைத் திறக்கப் போன பெரியண்ணன், எதையோ நினைத்துக் கொண்டவன் போல், திடீரென்று தயங்கி நின்றான். மச்சுப் படிகளுக்கு மேலே ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தான். பிறகு மகுடபதியை நோக்கிச் சொன்னான்: "தம்பி! ரொம்பத் தர்மசங்கடமாய்ப் போச்சு. இந்தச் சமயத்திலா உனக்கு இம்மாதிரி ஆபத்து வரவேணும்? இன்னொரு சமயமாயிருந்தால், உன் மேல் கைவைக்கத் துணிகிறவனின் கையை ஒடித்துக் கழுத்தையும் நெரித்துவிட்டு மறுகாரியம் பார்ப்பேன். ஆனால் இந்தச் சமயம் சரியாயில்லை. நான் வேறு காரியமாய் இங்கே வந்திருக்கிறேன், தம்பி!..."

கிழவன் மச்சுப் படிக்கு மேலே அடிக்கடி அண்ணாந்து பார்த்தது மகுடபதிக்கு நினைவு வந்தது. அவனுக்கு ஒரு சந்தேகம் உதித்தது. "இந்த வீட்டில் வேறு யாராவது இருக்கிறர்களா என்ன பாட்டா? ஆனால், வீடு வெளியில் பூட்டியல்லவா இருந்தது? நீ வந்துதானே கதவைத் திறந்தாய்?" என்றான்.

கிழவன் பரபரப்புடன், "ஆமாம், தம்பி, ஆமாம், இந்த வீட்டில் யாரும் இல்லை. நான் வந்துதான் கதவைத் திறந்தேன். ஒரு முக்கியமான காரணத்தினால், இப்போது இந்த வீட்டை விட்டு நான் வெளியே வரமுடியாது. நீ இங்கு இருக்கவும் கூடாது. போய்விடு" என்றான்.

"பெரிய மூடுமந்திரமாய்ப் பேசுகிறாயே, பாட்டா! இங்கே நான் இன்றைக்கு ராத்திரி இருந்தால் உனக்கு என்ன நஷ்டம்? இந்த வேளையில் என்னை எங்கே போகச் சொல்கிறாய்? கொலைகாரர்களிடம் நீயே என்னைக் காட்டிக் கொடுத்துவிடுவாய் போலிருக்கிறதே?"

"சீச்சி! என்ன வார்த்தை சொல்கிறாய், தம்பி! முக்கியமான காரணம் இல்லாவிட்டால் சொல்வேனா? ஆனால், நீ இப்படிப் பாடுபட்டுப் பதுங்குவது எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. ஐம்பது குடிகாரர்கள் சேர்ந்தாற்போல் உன்மேல் பாய்ந்த போது கூட மனங் கலங்காமல் நின்றாயே? அப்படிப்பட்ட நீ, இரண்டு களவாணிப் பயல்களுக்குப் பயப்படுகிறாயே?"

"இதைக் கேள், பாட்டா! நமது தமிழ் நாட்டில் திருவள்ளுவர் என்று ஒரு பெரியவர் இருந்தார்..."

"இப்போது அந்தக் கதையெல்லாம் பேசச் சமயமில்லை தம்பி!" என்று கிழவன் தடுத்ததைப் பொருட்படுத்தாமல் மகுடபதி மேலும் சொன்னான்: "அந்தத் திருவள்ளுவர் என்ன சொன்னார் என்றால்,

அஞ்சுவது அஞ்சாமை பேதமை; அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்

என்றார். அதாவது, பயப்படவேண்டிய காரியத்துக்குப் பயப்பட வேண்டும். அசட்டுத் தைரியம் உதவாது என்று அந்தப் பெரியவர் சொல்லியிருக்கிறார். சத்தியாக்கிரகத் தொண்டர் படையில் சேர்ந்து போய், போலீஸ் குண்டாந்தடியால் அடிபட்டுச் செத்தால் பிரயோசனமுண்டு சாகும்போது தேசத்துக்காக உயிரை விடுகிறோம் என்ற திருப்தியுடன் சாகலாம்..."

கிழவன் மிகுந்த ஆர்வத்துடன், "தம்பி! இன்றைக்கு என்ன நடந்தது? ரொம்ப கலாட்டாவாமே? போலீஸ்காரர்கள் ரொம்ப அக்கிரமம் பண்ணி விட்டார்களாமே? ஊரெல்லாம் கொல்லென்று போய்க் கிடக்கிறதே! காங்கிரஸ் தொண்டர்கள் செத்துப் போனது வாஸ்தவந்தானா?" என்றான்.

"இதுவரையில் ஒருவரும் சாகவில்லை, பாட்டா! ஆனால், அந்தக் கண்காட்சியை நீ பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே? காந்தி மகாத்மாவினுடைய ஆன்ம சக்தியை இன்றைக்குத்தான் நான் பார்த்தேன். கொஞ்சங்கூட ஈவு இரக்கம் பச்சாத்தாபம் இல்லாமல், போலீஸார் என்ன அடி அடித்தார்கள்? ஆனால், காங்கிரஸ் தொண்டர்கள் கொஞ்சமாவது மனங் கலங்க வேண்டுமே? ஓட வேண்டுமே? ஒரு தொண்டர் முப்பது அடி அடிக்கிற வரையில் 'வந்தேமாதரம்', 'மகாத்மா காந்திக்கு ஜே!' என்று கோஷித்துக் கொண்டிருந்தார். அப்புறம் கீழே விழுந்து மூர்ச்சையானார்..."

"ஐயையோ! கேட்பதற்குச் சகிக்கவில்லையே? அப்படியா அடித்தார்கள் பாவிகள்? நல்லவேளை, நீயாவது தப்பி வந்தாயே?"

"என்ன அப்படிச் சொல்கிறாய், பாட்டா! என்னை என்னவென்று நினைத்தாய்? நானும் சீக்கிரத்தில் ஒரு நாள் தொண்டர் படையில் சேர்ந்து, போகந்தான் போகிறான். அதற்காகத்தான் இன்று என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இவ்வளவு பிரயத்தனப்படுகிறேன்."

"ஓகோ! அப்படியானால், இன்றைக்கு நீ சத்தியாக்கிரகத்தில் சேரவில்லையா, தம்பி! பின்னே எதற்காக இன்றைக்கு கோயமுத்தூருக்கு வந்தாய்?"

"இங்கே நடக்கிறதைப் பார்த்துவிட்டு, மேலே செய்ய வேண்டியதைப் பற்றித் தலைவர்களிடம் யோசனை கேட்டுக் கொண்டு போகலாமென்று வந்தேன். எங்கள் தாலுக்காவிலேயே என்னைச் சத்தியாக்கிரகம் செய்யும்படி சொல்லியிருக்கிறார்கள். ஆனால், நான் திரும்பி மேட்டுப்பாளையம் போகிறதற்குள் கார்க்கோடக் கவுண்டரின் ஆட்கள் என்னை வேலை தீர்த்துவிடுவார்கள் போலிருக்கிறது."

கிழவன் இப்போது ரொம்பவும் திடுக்கிட்டான். அவன் முகத்தில் பீதியின் அறிகுறியே காணப்பட்டது. முன்போல் மறுபடியும் மச்சுப்படியின் உச்சியை ஏறிட்டு நோக்கினான். பிறகு, மகுடபதியைப் பார்த்து, "கொஞ்சம் மெதுவாய்ப் பேசு தம்பி! யார் கள்ளிப்பட்டிக் கார்கோடக் கவுண்டரா? அவருக்கென்ன உன் பேரில்...?" என்று இரகசியம் பேசும் குரலில் கேட்டான்.

"என்ன, ஒன்றும் தெரியாதவனைப் போல் கேட்கிறாய், பெரியண்ணா! அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் கள்ளுக்கடை வருமானம் என்னால் போய்விட்டதோ, இல்லையோ? முக்கியமாக அந்த ஆக்ரோஷந்தான். இன்றைக்கு இங்கே போலீஸ் அமுல் பலமாயிருக்குமென்று, அவருக்கு முன்னாலேயே தெரியும் போலிருக்கிறது. இந்தச் சமயத்தில் காந்திக் குல்லாப் போட்டவனை அடித்துக் கொன்றுவிட்டால், கேள்வி முறையே இராது என்று அவருக்கு எண்ணம். பழி போலீஸார் மேல் போய்விடுமல்லவா?"

"எனக்கு நம்பிக்கைப்படவில்லை, தம்பி! இப்படிப்பட்ட அக்கிரமமும் உண்டா? உனக்கு யார் சொன்னார்கள்?" என்று பெரியண்ணன் கேட்டான்.

இந்தச் சமயத்தில் மேலேயிருந்து, தேனினும் இனியதான ஒரு பெண் குரல், "பாட்டா! யார் அந்த மனுஷர்? எத்தனை நேரம் பேசிக் கொண்டேயிருப்பாய்? நான் இங்கே இருக்கிறேனென்பதையே மறந்துவிட்டாயா?" என்று கேட்டது.

ஓடக்கரை

சென்ற அத்தியாயத்தின் இறுதியில், 'தேனினும் இனிய பெண் குரல்' என்று நாம் சொன்னபோது, மகுடபதியின் செவியில், அக்குரல் எவ்விதம் தொனித்தது என்பதைத்தான் குறிப்பிட்டோ ம். மற்றவர்களுக்கு அது சாதாரணப் பெண் குரலாகவே தோன்றியிருக்கலாம்.

அந்தத் தேனினும் இனிய குரல், மகுடபதிக்கு அளித்த வியப்பையும் கிளர்ச்சியையும் வர்ணிக்கத் தரமன்று. அந்தக் குரலைச் சுமார் ஒன்றரை வருஷத்துக்கு முன்னால் ஒரு தடவை மகுடபதி கேட்டிருக்கின்றான். ஒரே ஒரு தடவைதான். ஆனால், அதைக் கேட்ட இடமும் சந்தர்ப்பமும் அந்தக் குரலில் கூறப்பட்ட விஷயங்களும், அவன் மனதில் என்றும் மறக்க முடியாதபடி பதிந்து கிடந்தன.

மீண்டும் இப்படிப்பட்ட எதிர்பாராத வேளையில், எதிர்பாராத இடத்தில் அந்தக் குரலைக் கேட்டபோது, மகுடபதிக்கு உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கிப் போட்டு விட்டது. குரல் கேட்ட அதே காலத்தில் மகுடபதி அண்ணாந்து பார்த்தான். அழுது வடிந்த அரிக்கன் லாந்தரின் மங்கிய வெளிச்சத்திலும், அந்தப் பெண்ணின் சிறிது குனிந்த முகம் அவனுக்குப் பளிச்சென்று புலப்பட்டது. ஆமாம்; அவள் தான் சந்தேகமில்லை. பார்த்தது பார்த்தபடியே நின்றான் மகுடபதி.

அந்தப் பெண்ணோ, மின்னல் வீச்சைப் போல் ஒரு தடவை அவனைப் பார்த்துவிட்டுக் கிழவனை நோக்கினாள். கிழவன் தடுமாறிய வண்ணம், "அம்மா, செந்திரு! இதோ ஒரு 'நிமிட்டி'லே வந்து விடுகிறேன். தாயி! கொஞ்சம் பொறுத்துக் கொள்" என்றான். உடனே மகுடபதியைப் பார்த்து, "தம்பி! நான் ஏன் உன்னைப் போகச் சொன்னேன் என்று தெரிகிறதா? உடனே போய்விடு, அப்பா! உன்னை ஒரு களவாணிப் பயலும் ஒன்றும் செய்யமாட்டான். பழனியாண்டவர் காப்பாற்றுவார்" என்றான்.

மகுடபதிக்கோ கிழவன் சொன்னது ஒன்றும் காதில் விழவேயில்லை. செந்திருவின் முகத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு ஒரு விஷயம் மிகுந்த ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அளித்தது. அந்தப் பெண் தன்னைத் தெரிந்து கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லையே, ஏன்? இருட்டினால் தெரியவில்லையா? ஒரு வேளை அடியோடு மறந்துவிட்டாளா? மறந்திருக்க முடியுமா? என்ன ஏமாற்றம்?

செந்திரு, அடுத்தாற்போல் பெரியண்ணனைக் கேட்ட கேள்வி அவனுடைய ஏமாற்றத்தை அதிகமாக்கிற்று. "இவர் யார், பாட்டா? உனக்கு ரொம்பப் பழக்கமானவர் போலிருக்கிறதே? இந்த ஊர்க்கார மனுஷராயிருந்தால் கொஞ்சம் இங்கே அழைத்துக் கொண்டுவா, சில விஷயங்கள் பேச வேண்டும்" என்றாள்.

தன்னை மேலே அழைத்து வரும்படி சொன்னது மகுடபதிக்குச் சிறிது திருப்தியளித்தாலும், அவள் தன்னைத் தெரிந்து கொள்ளவில்லையென்ற ஏமாற்றம் மனதை வருத்திற்று.

பெரியண்ணனோ, இன்னது செய்வதென்று தெரியாமல் திகைத்தான். மேலே செந்திருவின் முகத்தை நோக்கினான். பிறகு மகுடபதியின் முகத்தைப் பார்த்தான். "தம்பி!..." என்று இழுத்தான்.

"பாட்டா நீ கவலைப்பட வேண்டாம். நான் போகிறேன்" என்றான் மகுடபதி.

"இல்லை, தம்பி! குழந்தை உன்னிடம் என்னமோ கேட்கவேணுமென்கிறது..."

"பாட்டா! நான் உனக்குத்தான் குழந்தை; ஊருக்கெல்லாம் குழந்தையா?" என்று மேலிருந்தபடி செந்திரு கேட்டாள்.

மகுடபதி கிழவனிடம் "இல்லை பாட்டா! உனக்கு என்னத்திற்கு வீண் கஷ்டம்? நான் போய் வருகிறேன். நீ இங்கே தனியாய் இருக்கிறதாக நினைத்துக் கொண்டு அவ்வளவு பிடிவாதம் பிடித்தேன். வேறு யாரோ இருப்பதாக மட்டும் தெரிந்திருந்தால் இங்கே வந்திருக்கவே மாட்டேன். உனக்குத்தான் தெரியுமே. அப்படி ஒன்றும் நான் உயிருக்குப் பயப்படுகிறவன் அல்ல" என்றான்.

அச்சமயம் அவன் மேலே நோக்கிப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால், செந்திருவின் முகத்தில் ஒரு விஷமப் புன்னகை தோன்றிக் கணத்தில் மறைந்ததைக் கவனித்திருக்கலாம்.

மச்சுப்படிகளில் இரண்டு படி செந்திரு பரபரப்புடன் இறங்கிச் சற்று மெதுவான குரலில், "பாட்டா! இங்கே கொஞ்சம் வா! சற்று முன்னால் இரண்டு தடியர்கள் இந்தத் தெருவோடு போனார்கள். அவர்கள் கையில் கத்தியும் தடியும் இருந்தது. எனக்கு ரொம்பவும் பயமாயிருந்தது. இப்போது அவர்கள் மறுபடியும் திரும்பி வருகிறார்கள். சட்டென்று இங்கே வந்து பார்!" என்றாள். உடனே மகுடபதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, "பாட்டா! அவரைக் கூட இப்போது போகச் சொல்லாதே! கதவைத் திறந்தால் அந்தத் தடியர்கள் உள்ளே வந்தாலும் வந்துவிடுவார்கள். அவர்களைப் பார்த்தாலே எனக்குக் கதிகலங்குகிறது. உன் சினேகிதரை இங்கேயே கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போகச் சொல்லு. அவருக்கு உயிருக்குப் பயமில்லாமற் போனாலும், எனக்குப் பயமாயிருக்கிறது" என்றாள்.

பெரியண்ணன் அப்போது மகுடபதியின் கையைப் பிடித்துக் கொண்டு, "வா, தம்பி! மச்சுக்குப் போய் அஞ்சு நிமிஷம் இருந்துவிட்டு அப்புறம் போகலாம். அப்படியொன்றும் ரொம்ப நேரமாகிவிடவில்லையே, ஏழரை மணிதான் இருக்கும்" என்றான். பிறகு அவன் ஒரு கையால் மகுடபதியின் கையைப் பிடித்து இழுத்த வண்ணம் மச்சுப்படியில் ஏறத் தொடங்கினான்.

மகுடபதிக்கோ மச்சுப்படியில் ஏறுகையில் ஒரே மனக்குழப்பமாயிருந்தது. அந்தப் பெண் யார்? பதினெட்டு மாதத்துக்கு முன்பு, அந்த அழகிய நீரோடைக் கரையில் தான் சந்தித்த பெண்தானா, இல்லையா? அந்தக் காட்சி நேற்றுத்தான் நடந்ததுபோல் அவன் மனக்கண்ணின் முன்னால் வந்தது.

மகாத்மா காந்தி உப்பு சத்தியாக்கிரக இயக்கம் ஆரம்பித்தபோது, மகுடபதி காலேஜ் படிப்பை நிறுத்திவிட்டு வந்து சத்தியாக்கிரக இயக்கத்தில் ஈடுபட்டான்.

அவனுக்கு ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை கிடைத்தது. அது பூர்த்தியாகி வெளியில் வந்தபோது, கோயமுத்தூர் ஜில்லாவில் மதுவிலக்கு இயக்கம் தீவிரமாக நடந்து வருவதை அறிந்தான். அவனும் அந்த இயக்கத்தில் ஈடுபட ஆவல் கொண்டான். நீலகிரி மலையின் அடிவாரத்திலுள்ள மேட்டுப் பாளையத்துக்கருகில் வேங்கைப்பட்டி என்பது அவனுடைய கிராமம். அந்தக் கிராமத்தில் போய்த் தங்கி, மேட்டுப்பாளையம் தாலுக்கா முழுவதும் சுற்றித் தீவிரமான மதுவிலக்குப் பிரசாரம் செய்யத் தொடங்கினான்.

இந்த வேலையில் ஈடுபட்டிருந்த காலத்தில்தான் ஒரு நாள் மகுடபதி மிதிவண்டியில் சாலையில் போய்க் கொண்டிருந்தபோது, அந்த மறக்க முடியாத சம்பவம் நடந்தது. காலை ஒன்பது மணி இருக்கும். சாலை ஓரத்தில் ஓர் அழகான ஓடை. இரண்டு மூன்று நாளைக்கு முன்னால் நன்றாக மழை பெய்திருந்தபடியால், ஓடையில் நிரம்பத் தண்ணீர் இருந்தது. தெளிவான பளிங்கு போன்ற தண்ணீர்; சுற்றிலும் பசுமையான மரங்கள்; ஓங்கி வளர்ந்த மரங்கள் அல்ல; குட்டையான மரங்கள் தான். சற்று தூரத்தில் மரங்களுக்கு மேலே ஒரு பெரிய வீட்டின் மேல் பாகம் மட்டும் தெரிந்தது. பசுமையான மரங்களுக்கு மேலே தூய வெள்ளைச் சுண்ணாம்பு அடித்த சுவரும், அதன் மேலே சில ஓட்டுக் கூரையும், மேலே ஆகாசமும் ஒரு வர்ணக் காட்சி போல் புலப்பட்டன. நீரோடையின் ஒரு புறத்தில் இரண்டு வெண்ணிறக் கொக்குகள் ஒற்றைக் காலால் நின்று தவம் செய்த காட்சி அதைவிட அருமையாயிருந்தது.

மகுடபதி அந்த ஓடைக் காட்சியைக் கண்டு சிறிது நேரம் இன்புற எண்ணி, மிதிவண்டியிலிருந்து இறங்கினான். மிதி வண்டியை ஒரு மரத்தடியில் சாத்திவிட்டு, ஓடையில் தண்ணீர்க் கரைக்குச் சமீபமாய்ச் சென்றான். அப்படிப் போகும் போது சுற்றுமுற்றும் பார்க்கையில் அவனுடைய நெஞ்சை ஒரு கணம் ஓடாமல் நிறுத்திய ஒரு காட்சி தென்பட்டது. ஒரு மரத்தடியில் ஓர் அழகிய இளம் பெண் படுத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கண்கள் மூடியிருந்தன. அந்த நிலையில் அவளைப் பார்க்கும்போது சாதாரண மனிதப் பெண்ணாகத் தோன்றவில்லை. நிசப்தமான அந்த ஏகாந்தமான பிரதேசத்தில் - அந்த அழகிய ஓடைக்கரையில் - இந்த நேரத்தில் படுத்துத் தூங்குவது மனிதப் பெண்ணாயிருக்க முடியாது; வனதேவதையாகத் தானிருக்க வேண்டும்! - இப்படி எண்ணிய மகுடபதிக்குச் சட்டென்று இன்னொரு நினைவு உண்டாயிற்று. அவள் தூங்குகிறாளோ அல்லது ஏதாவது ஒரு காரணத்தினால் மூர்ச்சையாகித்தான் கிடக்கிறாளோ? - இவ்விதம் எண்ணியதும், அவன் விரைந்து சென்று அப்பெண்ணின் அருகில் நெருங்கினான். குனிந்து பார்த்தான். மூர்ச்சையாயிருக்கிறாளா, தூங்குகிறாளா என்று தெரிந்துகொள்ள வழி தெரியவில்லை. மூக்கின் அருகில் விரலை நீட்டியபோது, மிக மிக இலேசாக மூச்சு வருவது போல் தெரிந்தது. அதே சமயத்தில் அந்த முகத்தின் அழகும் அவன் கண்ணுக்குத் தெரியாமல் போகவில்லை. மூடியிருந்த கண்கள் கூம்பிய நீலோற்பல மொட்டுக்களை அவனுக்கு ஞாபகப்படுத்தின. ஒரு கொசுத்தேனீ அம்முகத்தினருகில் வந்து அப்போது வட்டமிட்டது. "இந்த முகத்தைத் தாமரை மலர் என்று எண்ணித்தான் இந்தத் தேனீ வட்டமிடுகிறது" என்று நினைத்தான்.

வெறுமே இப்படிப்பட்ட வர்ணனைக் கற்பனைகளில் அவன் அதிக காலம் கடத்தி விடவில்லை. 'தூங்குகிறவளாயிருந்தால் இவ்வளவு சமீபத்தில் நாம் வந்து நிற்கும் போது விழித்துக் கொள்ளாமல் இருப்பாளா? மூர்ச்சையாகத்தான் இருக்கவேண்டும்' என்று தீர்மானித்துக் கொண்டு ஓடைக் கரைக்கு ஓடினான். கைக்குட்டையைத் தண்ணீரில் நனைத்து எடுத்துக் கொண்டு ஒரு நொடியில் ஓடி வந்தான். அந்தத் தண்ணீரைப் பிழிந்து முகத்தில் தெளித்தவுடனே, அவள் பளிச்சென்று எழுந்து உட்கார்ந்து முகத்தைத் துடைத்துக் கொண்டதோடல்லாமல், மகுடபதியைப் பார்த்துக் கலகல வென்று சிரிக்கவும் தொடங்கினாள். மகுடபதிக்கு முதலில் சிறிது வெட்கமாயும் கோபமாயும் இருந்தது. ஆனால் அவளுடைய கலகலப்பான இனிய சுபாவமும், சாதுரியமான பேச்சும் அதை மாற்றிவிட்டன. முகத்தின் மோகன சௌந்தரியத்தோடு, கவிகள் வர்ணிப்பது போல் காதளவு நீண்ட கண்களின் காந்த சக்தியும் சேர்ந்துவிட்டால், பிறகு கேட்பானேன்? அந்த மரத்தடியிலேயே நிம்மதியாக உட்கார்ந்து இருவரும் பேசத் தொடங்கினார்கள்.

மகுடபதி அந்தப் பெண்ணைப் பற்றிய விவரங்களையெல்லாம் அறிய விரும்பினான். அவளோ தன்னைப் பற்றி ஒன்றும் அதிகமாய்ச் சொல்லாமல் மகுடபதியைப் பற்றியும் அவன் அப்போது செய்த வேலையைப் பற்றியும் மூச்சுவிடாமல் கேள்வி கேட்டு அவனைத் திணற அடித்தாள். "ஆறு மாதம் ஜெயிலில் இருந்துவிட்டு வந்தேன்" என்று மகுடபதி சொன்னபோது, "இது ஒரு பிரமாதமா? நான் மூன்று வருஷமாக ஜெயிலில் இருக்கிறேனே? அதோ அந்த வீடுதான் என் ஜெயில்" என்று அவள் சொன்னாள். இதைக் கேட்ட மகுடபதிக்கு மனதை என்னமோ செய்தது. அதைப்பற்றி மேலும் விசாரிப்பதற்குள் அவள் பேச்சை மாற்றிவிட்டாள். மகுடபதி இன்னொரு சமயம் பேச்சினிடையே "பாரதத் தாயின் விடுதலைக்காகத் தான் நாங்கள் எல்லோரும் பாடுபடுகிறோம்" என்றான். அப்போது அந்தப் பெண் பெருமூச்சுடன், "என்னை யார் வந்து எப்போது விடுதலை செய்யப் போகிறார்களோ தெரியவில்லை!" என்றாள். "நான் செய்கிறேன்; தேசம் விடுதலையடைந்தவுடனே நானே வந்து உன்னை விடுதலை செய்கிறேன்" என்று மகுடபதி பளிச்சென்று பதில் சொன்னான். "இந்த வார்த்தை சத்தியமா?" என்று அவள் கேட்டாள். "சத்தியம்" என்று மகுடபதி உறுதி கூறி, "ஆனால், நீ உன்னைப் பற்றி ஒன்றுமே சொல்ல மாட்டேனென்கிறாயே?" என்று கேட்டான். இந்தச் சமயத்தில் சற்றுத் தூரத்தில் மோட்டார் வண்டியின் ஹாரன் சப்தம் கேட்டது. "ஐயோ! சித்தப்பா வருகிறார், உன்னையும் என்னையும் சேர்த்துக் கண்டால் இங்கேயே கொலை விழுந்துவிடும்" என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் எழுந்து விரைந்து போய் மரங்களுக்குப் பின்னால் மறைந்துவிட்டாள்.

'அந்தப் பெண் தானா இவள்? அல்லது நமக்குத்தான் சித்தப்பிரமையா' என்று மகுடபதி மச்சுப்படி ஏறும்போது சிந்தனை செய்தான். அடடா! தன்னுடைய பெயர் என்ன என்று கூடச் சொல்லாமற் போய்விட்டாள்? செந்திரு! - என்ன அழகான, அபூர்வமான பெயர்! அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணுக்கு இவ்வளவு அழகான பெயர் யார் வைத்திருக்க முடியும்?

கத்திக் குத்து

மச்சுப் படிகளில் ஏறி மேல்மாடித் தளத்தை அடைந்ததும், மகுடபதி சுற்றுமுற்றும் பார்த்தான். ஒரு பெரிய ஹாலும், அதன் ஒருபுறத்துச் சுவரில் இரண்டு வாசற்படிகளும் காணப்பட்டன. திறந்திருந்த வாசற்படி வழியாகப் பார்த்தால், இருளடைந்த அறை ஒன்று தோன்றிற்று. ஹாலின் மத்தியில் ஒரு மேஜையும், அதைச் சுற்றி நாலு நாற்காலிகளும் இருந்தன. ஒரு பக்கத்தில் சுவர் ஓரமாக ஒரு பழைய சோபா கிடந்தது. தரையும் மேஜை நாற்காலிகளும், சோபாவும் புழுதியடைந்து கிடந்தன. சில இடங்களில் மட்டும் புழுதி கலைந்திருந்தது. இதனாலெல்லாம், அது வெகு நாளாகக் குடித்தனம் இல்லாத வீடு என்று ஊகிப்பது சாத்தியமாயிருந்தது. மேலேயிருந்து அழுக்கடைந்த மின்சார விளக்குகள் தொங்கின. அவற்றை ஏற்றி வெகு நாளாகியிருக்க வேண்டும். ஒருவேளை 'கரண்ட்'டே வரவதில்லை போலிருக்கிறது. இல்லாவிட்டால் அரிக்கன் லாந்தர் எதற்கு? இந்த ஹாலுக்கும் வெளிச்சம் அளித்தது ஒரு அரிக்கன் லாந்தர் தான். சோபாவின் மேல் ஹோட்டலிலிருந்து வாங்கி வந்த பட்சணப் பொட்டணங்கள் கிடந்தன. கீழே ஒரு டிரங்குப் பெட்டியும், கூஜாவும் காணப்பட்டன. சற்றுத் தூரத்தில் தரையில் படுப்பதற்கான சமுக்காளமும் விரித்துக் கிடந்தது.

இவ்வளவையும் மகுடபதி ஒரே நிமிஷத்தில் பார்த்துக் கொண்டான். ஓடைக் கரையில் தான் பார்த்த பெண்ணாயிருந்தால், என்னத்திற்காக இந்தக் குடியில்லாத வீட்டில் வந்து தனியாக இருக்கிறாள் என்று நினைத்தவண்ணம், ஜன்னல் பக்கம் நோக்கினான். அதுவரையில் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த செந்திரு சட்டென்று கிழவன் பக்கம் திரும்பி, "பாட்டா! சீக்கிரம் வந்தாலல்லவா தேவலை? அவர்கள் மறுபடியும் திரும்பிப் போகிறார்கள்?" என்றாள். பெரியண்ணன் ஜன்னலண்டை போய், செந்திரு சுட்டிக் காட்டிய பக்கம் கூர்ந்து பார்த்தான். "ஒன்றும் தெரியவில்லையே, அம்மா!" என்றான். "உனக்கு ஏற்கனவே சாளேசுரம்; இந்த இருட்டிலே என்ன தெரியப் போகிறது? அதோ அந்தச் சந்து வழியாகத் திரும்புகிறார்கள், பார்!" என்றாள். மகுடபதியும் ஜன்னலுக்குச் சற்று தூரத்தில் நின்றபடியே உற்றுப் பார்த்தான். அவனுக்கும் ஒன்றும் புலனாகவில்லை.

"அவர்கள் யார் தெரியுமா, பாட்டா உனக்கு? பார்க்கிறதற்கே பயமாயிருந்தது. இவருக்கு மட்டும் கொஞ்சங்கூடப் பயமில்லை போலிருக்கிறது" என்று சொல்லிக் கொண்டே செந்திரு ஜன்னலண்டையிலிருந்து திரும்பினாள். தன்னை இவ்விதம் அவள் கேலி செய்தது கூட மகுடபதிக்குத் தெரியவில்லை. அச்சமயம் அவளுடைய முகத்தில் தவழ்ந்த குறுகுறுப்பான புன்னகையும் விஷமமான கடைக்கண் பார்வையும் அவ்வளவு தூரம் அவனை மயக்கிவிட்டன.

எல்லாரும் ஹாலின் நடுமத்திக்குப் போனார்கள். செந்திரு சமுக்காளத்தில் உட்கார்ந்தாள்.

"பாட்டா! எனக்குப் பசி பிராணன் போகிறது. வா, சாப்பிடலாம்" என்று சொல்லிக் கொண்டே சோபாவின் மேல் வைத்திருந்த பொட்டணங்களை எடுத்து வைத்துக் கொண்டு பிரிக்கத் தொடங்கினாள். பிரசித்திபெற்ற கோயமுத்தூர் ஜிலேபிகளையும் ரவைத் தோசைகளையும் பார்த்ததும் மகுடபதியின் நாக்கில் ஜலம் ஊறிற்று. பாவம்! அவன் காலையில் சாப்பிட்டதுதான். நிஜமாகவே அவனுக்குப் பசியினால் பிராணன் போய்க் கொண்டிருந்தது.

கிழவன், கூஜாவைக் கொண்டுபோய்ப் பக்கத்தில் வைத்துவிட்டு, மகுடபதியை நோக்கினான். செந்திரு கடைக் கண்ணால் மகுடபதியைப் பார்த்துக் கொண்டு, "பாட்டா! உன் சிநேகிதருக்குப் பயம் மட்டுந்தான் இல்லையா, பசியும் கிடையாதா என்று கேள். ஒருவேளை, நாம் தொட்டதை அவர் சாப்பிடுவாரோ, என்னமோ!" என்றாள் செந்திரு.

"ஏன் அம்மா, அப்படிச் சொல்லுகிறாய்? இவரும் நம்முடைய இனத்தைச் சேர்ந்தவர்தான்; மேலும் இவர் காந்திக்காரராச்சே!" என்றான்.

"இந்த அழகான கையினால் விஷத்தைக் கொடுத்தாலும் சாப்பிடலாம்" என்ற மனோநிலையில் அப்போதிருந்தான் மகுடபதி. அவனும் அவர்களுக்குச் சமீபமாய் போய் உட்கார்ந்து கொண்டான்.

"அழகுதான், கவுண்டரே! எனக்கு இப்போது இருக்கும் பசியில், உங்களுக்கு ஒன்றும் பாக்கி வைக்க மாட்டேன். ஆமாம், இதையெல்லம் எப்போது வாங்கிக் கொண்டு வந்தாய், பாட்டா? போலீஸ் கலாட்டாவுக்கு முன்னாலேயே வாங்கிக் கொண்டு வந்தாயாக்கும்! சாயங்காலந்தான் ஹோட்டல் எல்லாம் மூடிவிட்டார்களே?"

அப்போது செந்திரு, மறந்துபோனதை திடீரென்று நினைத்துக் கொண்டவள் போல் திடுக்கிட்ட தோற்றத்துடன், "பாட்டா, நீ போன காரியத்தைச் சொல்லவேயில்லையே! கடுதாசியைக் கொடுத்தாயா?" என்று கேட்டாள்.

"நானும் மறந்து விட்டேனே, குழந்தை! பங்களாவைக் கண்டுபிடித்தேன். அவர்கள் ஊரில் இல்லையாம்; வீட்டுச் சேவகன் இருந்தான்..." என்று கிழவன் சொன்னவுடன், செந்திரு, "ஐயையோ!" என்று அலறினாள். அவள் முகத்திலிருந்த குறுகுறுப்பு, புன்னகையெல்லாம் மறைந்துவிட்டன. அந்த முகத்தில் இப்போது பீதியும், சொல்வதற்கு முடியாத கவலையும் காணப்பட்டன. இதைப் பார்த்த மகுடபதியும் பயந்து போனான்.

கிழவன் தொடர்ந்து, "நாளைக்கு அநேகமாக வந்து விடுவார்களாம். சேவகனிடம் கடிதத்தைக் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன்" என்றான்.

"நிச்சயமாக நாளைக்கு வந்து விடுவார்களாமா?" என்று செந்திரு கேட்டாள்.

"நாளைக்கு வருவதாகச் சொல்லிவிட்டுப் போனார்களாம். 'நிச்சயமாய் வருவார்களா?' என்று கேட்டதற்கு அந்த நாய் குலைக்க ஆரம்பித்துவிட்டது, பேசாமல் வந்து விட்டேன்."

"ஐயோ! பாட்டா! அவர்கள் நாளைக்காவது வராமல் போனால் நான் என்ன செய்வேன்? இதை யோசனை செய்யாமல் கிளம்பி விட்டேனே?" என்று அழுகை வரும் குரலில் செந்திரு சொன்னாள். அவள் கண்களில் நீர் தளும்பிற்று.

"நான் எத்தனையோ தடுத்துச் சொன்னேன்; நீ கேட்கவில்லை குழந்தை! இருந்தாலும் பழனியாண்டவன் இருக்கிறார். நீ வருத்தப்படாதே" என்றான் கிழவன்.

இத்தனை நேரம் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்த மகுடபதி ஆவலை அடக்க முடியாமல், "பாட்டா! என்ன சமாசாரம்? யாருக்கு கடுதாசி? எதற்கு? என்னிடம் சொல்லலாமென்றால், சொல்லு! இன்றைய தினம் நீங்கள் எனக்கு அடைக்கலம் கொடுத்து என் உயிரைக் காப்பாற்றினீர்கள். இது உண்மையான விஷயம். இதற்காக என்னை நீங்கள் பயந்தவன் என்று பரிகாசம் செய்தாலும் உண்மையை மறைப்பதற்கு எனக்கு இஷ்டமில்லை" என்று சொல்லி, செந்திருவைக் கடைக்கண்ணால் பார்த்தான். மறுபடியும் கிழவன் பக்கம் திரும்பி "என் உயிரைக் காப்பாற்றிய உங்களுக்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கிறேன்" என்றான். அப்போது உணர்ச்சி மிகுதியால் அவனுடைய தொண்டை அடைத்தது.

கிழவன் அப்போது செந்திருவை ஏறிட்டுப் பார்த்தான். "குழந்தை! இவரிடம் சொல்லலாமா? உன் அபிப்பிராயம் என்ன?" என்ற கேள்விகள் அவனுடைய பார்வையிலேயே இருந்தன.

செந்திரு, "பாட்டா! எனக்கு இவரை முன்பின் தெரியாது. உனக்கு நம்பிக்கையுள்ளவரா யிருந்தால் சொல்லு" என்றாள்.

"செந்திரு! இந்தத் தம்பிதான் என்னை மனுஷனாக்கியவர். அதற்கு முன்னால் நான் வெறும் மிருகமாயிருந்தேன். கோயமுத்தூர் ஜில்லாவிலேயே என்னைப் போலக் குடிகாரன் கிடையாது. அந்தக் கர்ம காண்டத்தை விட்டொழிக்கும்படி செய்த புண்ணியவான் இந்த மகுடபதிதான். ஒரு நாள் நல்ல போதையிலே நான் இருந்த போது இந்தப் பிள்ளை வந்து எனக்குப் புத்தி போதிக்க ஆரம்பித்தார். என் இடுப்பிலே செருகியிருந்த கத்தியை எடுத்து இவரைக் குத்தி விட்டேன். இவர் கைச்சட்டையை விலக்கினால், முழங்கையண்டை காயம் இன்னும் தெரியும்..."

இவ்விதம் சொல்லிப் பெரியண்ணன் மகுடபதியின் கையைப் பிடித்து, சட்டையை மேலே விலக்கினான். முழங்கைக்குக் கீழே ஒரு பெரிய காயத்தின் வடு தெரிந்தது.

செந்திரு அதைப் பார்த்துவிட்டு, பரிதாபத்துடன், "ஐயையோ! நீயா இப்படிச் செய்தே, பாட்டா? அப்புறம் என்ன ஆயிற்று?" என்று கேட்டாள்.

"ஆமாம், செந்திரு! போதையிலே இருக்கிற மனுஷன் என்ன வேணுமானாலும் செய்வான். அப்புறம் என்ன ஆச்சு என்றா கேட்கிறாய்! இரத்தம் கொட கொட வென்று கொட்டிற்று. இவர் நினைவு தப்பிக் கீழே விழுந்து விட்டார். ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய்ப் போட்டார்கள். போலீஸ்காரர்கள் என்னை அரெஸ்ட் பண்ணிக் கொண்டு போனார்கள். கேஸ் நடந்தது..."

"அது எப்படி, பாட்டா! சர்க்கார்தான் கள்ளுக்கடைக் கட்சியாயிற்றே? காந்திக் கட்சிக்காரரை நீ குத்தியதற்காக உன் பேரில் எப்படிக் கேஸ் போட்டார்கள்?" என்று செந்திரு கேட்டாள்.

அப்போது மகுடபதி குறுக்கிட்டு, "போன வருஷம் மட்டும் இதற்கு மாறாயிருந்தது. காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் பிரகாரம் சர்க்காரே கள்ளுக்கடை மறியலை அனுமதித்திருந்தார்கள். மறியலின் போது கலாட்டா நடக்காமல் போலீஸ் பந்தோபஸ்து போட்டிருந்தார்கள்" என்று விளக்கிக் கூறினான்.

"சரி, அப்புறம் கேஸ் என்ன ஆயிற்று? உன்னைத் தண்டித்து விட்டார்களோ?"

"அதுதானே இல்லை! இந்தத் தம்பியை கோர்ட்டுக்குச் சாட்சிக்குக் கூப்பிட்டிருந்தார்கள். தம்பி போலீஸுக்குச் சாதகமாகச் சாட்சி சொல்லவில்லை. 'கிழவன் சும்மா கத்தியை ஓங்கினான். நான் அதைத் தடுத்தேன். அப்போது தவறிக் கத்தி பட்டுவிட்டது. கிழவன் பேரில் தப்பே இல்லை' என்று சொல்லிவிட்டார். என்னை ஜெயிலுக்கு அனுப்பாமலிருப்பதற்காக இந்தத் தம்பி பொய்ச் சாட்சி கூடச் சொன்னார்..."

"இல்லவே இல்லை, பாட்டா! நீ நிஜமாகவே நல்ல நினைவில் இருந்திருந்தால் என்னைக் குத்தியிருப்பாயா? போதையினாலேதானே செய்தாய்? அதற்காக, கள்ளுக்கடை வைத்திருக்கும் கவர்ன்மெண்டைத் தண்டிப்பதை விட்டு உன்னைத் தண்டிப்பதில் என்ன பிரயோசனம்?"

"தம்பி சாட்சி சொன்னதைக் கேட்டபோது நான் கோர்ட்டிலேயே அழுதுவிட்டேன். பழனியாண்டவர் அறிய இனிமேல் குடிப்பதில்லையென்று அங்கேயே சத்தியம் செய்தேன். பீடையை அது முதல் விட்டு ஒழித்து விட்டேன். தம்பி அப்படிச் சாட்சி சொல்லியிராவிட்டால் இத்தனை நாள் நான் ஜெயிலிலேயே இருப்பேன்" என்று சொன்னபோது, கிழவன் கண்கள் கண்ணீர் பொழிந்தது.

"நான் அனாதை"

பெரியண்ணன் தன்னுடைய கதையைச் சொல்லி முடித்துக் கண்ணீர் பொழிந்த போது, சற்று நேரம் அந்த மேல் மாடியில் நிசப்தம் குடிகொண்டிருந்தது.

மகுடபதி தான் முதலில் பேசினான்.

"பாட்டா! நான் செய்தது ஒன்றும் பெரிய காரியமில்லை. நீ சபதத்தை நிறைவேற்றிக் குடியை விட்டிருக்கிறாயே, அதுதான் பெரிய காரியம்" என்றான்.

அப்போது கிழவன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "தம்பி, தம்பி! 'பெரிய காரியம்' என்று சொல்லாதே, 'பெரிய காரியம்' என்றால் நம் ஊரிலே 'எழவு'க்குச் சொல்வார்கள். பிள்ளைகள் பட்டணத்துக்குப் படிக்கப் போய் நம்ம பேச்சைக் கூட மறந்து விடுகிறார்கள்" என்றான்.

"எனக்குப் பேச்சு சொல்லிக் கொடுக்கிறது அப்புறம் இருக்கட்டும். முதலில் உங்கள் பேச்சைச் சொல்லுங்கள். ஏதோ அபாயம், தலை போகிற விஷயம் என்று சொன்னீர்கள். வேறு எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறோமே?" என்றான் மகுடபதி.

கிழவன் செந்திருவின் முகத்தை நோக்கி, "நீ என்ன சொல்லுகிறாய், தாயே! இந்தத் தம்பியிடம் எனக்குப் பூரண நம்பிக்கை. உனக்கு இஷ்டமிருந்தால் இவரிடம் எல்லாவற்றையும் சொல்லி யோசனை கேட்கலாம்" என்றான்.

அப்போது செந்திரு, "உன் இஷ்டம், பாட்டா! நாமோ இக்கட்டில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஒத்தாசை வேண்டியிருக்கிறது. ஆனால், இந்தக் காந்திக் குல்லாக்காரர்கள் ஒத்தாசை செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு அவ்வளவாக இல்லை. ஒரு சமயம் இவர் மாதிரியேதான் ஒரு காந்திக் குல்லாக்காரர் என்னிடம் ரொம்ப ரொம்பக் கரிசனமாகப் பேசிக் கொண்டிருந்தார். அவர் ஜெயிலிலே இருந்ததாகச் சொன்னார். நானும் மூன்று வருஷமாக ஜெயிலிலேதான் இருக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். சீக்கிரத்தில் வந்து விடுதலை செய்கிறதாகச் சொல்லிவிட்டுப் போனார். ஒன்றரை வருஷம் ஆச்சு; அப்புறம் எட்டியே பார்க்கவில்லை. அதனால் தான் காந்திக் குல்லாக்காரர்களிடம் எனக்குச் சந்தேகமாயிருக்கிறது" என்று செந்திரு சொல்லிவந்தபோது, மகுடபதியின் உடம்பில் மயிர்க்கூச்சல் உண்டாயிற்று. செந்திரு கடைசி வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே தன்னைக் கடைக்கண்ணால் நோக்கியதை அவன் பார்த்தான். அந்த அழகிய கரிய கண்களின் முனைகளில் நீர்த்துளிகள் துளித்து நிற்பதைக் கண்டான். தான் ஓடைக் கரையில் பார்த்த பெண் தான் இவள் என்பதையும், தன்னை அவளும் அறிந்து கொண்டாள் என்பதையும், அதற்குப் பிறகுதான் அவளைப் பார்க்க வரவில்லையென்ற கோபத்தினாலும் துக்கத்தினாலுந்தான் அப்படிப் பேசுகிறாள் என்பதையும் ஒரு நொடியில் அறிந்து கொண்டான்.

தழதழத்த குரலில், "நான் அப்போது சொன்னது என்ன? தேசம் விடுதலையான பிறகு உன்னை வந்து விடுதலை செய்வதாகத்தானே சொன்னேன்?" என்றான்.

"தேசம் இன்னும் விடுதலையாகவில்லையா?" என்றாள் செந்திரு.

மகுடபதிக்குச் சிரிப்பு வந்தது. அவன் கம்பராமாயணம் கேட்டிருந்தான். சீதை அயோத்தி நகரின் கேட்டை வாசலைத் தாண்டியதும், "காடு எங்கே?" என்று ராமனிடம் கேட்ட விஷயம் அவனுக்கு நினைவு வந்தது.

"தேச விடுதலை என்பது, அவ்வளவு சீக்கிரம் நடக்கக் கூடியதல்ல, போன வருஷம் தேச விடுதலை நெருங்கியிருந்ததாகத் தோன்றியது. இந்த வருஷம் அது வெகு தூரம் போய்விட்டது" என்றான்.

"அதனால்தான் அவ்வளவு தைரியமாக 'வந்து விடுதலை செய்கிறேன்' என்று சொன்னீர்கள் போலிருக்கிறது! 'நாளைக்கு கடன்' என்று பட்டிக்காட்டுக் கடைகளில் எழுதி வைக்கிறார்களே, அந்த மாதிரி!" என்று ஆத்திரத்துடன் பேசினாள்.

இந்தச் சம்பாஷணையின் விஷயம் பெரியண்ணனுக்குப் புரியவில்லை. இரண்டு பேர் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான்.

"தம்பி! இதென்ன, குழந்தையை உனக்கு முன்னாலேயே தெரியுமா?" என்றான்.

செந்திரு, "ஆமாம், பாட்டா! ஒருநாள் நான் ஓடைக் கரையில் படுத்துக் கொண்டு, செத்துப் போவதற்கு என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது இந்த மனுஷர் வந்து 'நான் உன்னை விடுதலை செய்கிறேன்' என்று சொல்லிவிட்டுப் போனார். அப்புறம் திரும்பியே பார்க்கவில்லை" என்று குரோதம் பொங்கிய குரலில் கூறினாள்.

அப்போது மகுடபதி, "என்பேரில் தப்பு ஒன்றும் இல்லை. நீ சரியாக விவரம் சொல்லாமல் ஓடிப்போய் விட்டாய். உன் பெயரைக் கூடச் சொல்லவில்லை. இருந்தாலும் நான் உன்னை மறந்துவிடவில்லை. ஓயாமல் உன் ஞாபகமாகவே இருந்தேன். நீ சுட்டிக் காட்டிய வீட்டைப் பற்றித் தகவல் விசாரித்தேன். அது சிங்கமேடு தங்கசாமிக் கவுண்டர் வீடு என்று தெரிந்தது. அவருடைய வீட்டில் அவருடைய சொந்தப் பெண்கள் மூன்று பேரும் அவருடைய தமையனார் பெண்ணும் இருப்பதாகவும், அவரே சமீபத்தில் இரண்டாந்தாரம் கலியாணம் செய்து கொண்டிருப்பதாகவும் தெரிந்தது. இத்தனை பேரில் நீ யார் என்று நான் எப்படிக் கண்டுபிடிப்பது? அப்புறம் பல தடவை அந்த ஓடைக்கரைப் பக்கம் நான் வந்தேன். எவ்வளவோ நேரம் காத்திருந்தேன். உன்னைப் பார்க்க முடியவில்லை. நீ என்னை மறந்துவிட்டாய் என்றும் அன்று என்னிடம் சொன்னதெல்லாம் விளையாட்டுப் பேச்சு என்றும் எண்ணிக் கொண்டேன்" என்றான்.

செந்திரு, "நான் உங்களை மறக்கவில்லை. நான் மறந்தாலும், உங்களால் எனக்கு ஏற்பட்ட அடையாளம் இருக்கிறது. அது எப்போதும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும்" என்று சொல்லி தன் வலது காலை மறைத்துக் கொண்டிருந்த சேலையை சிறிது நகர்த்தினாள். முழங்காலுக்குக் கீழே ஒரு நீளமான நெருப்புச் சுட்ட வடு காணப்பட்டது.

"ஐயோ!" என்றான் மகுடபதி.

"நான் உங்களுடன் ஓடைக்கரையில் பேசிக் கொண்டிருந்தது எப்படியோ சித்தப்பாவுக்குத் தெரிந்து போய்விட்டது..."

"நீ அவருடைய தமையனார் பெண்தானா?"

"ஆமாம்."

"உனக்கு அப்பா இல்லையா?"

"எனக்கு அப்பாவுக்கு இல்லை, அம்மாவும் இல்லை. நான் அனாதை."

பெரியண்ணன், "அப்படிச் சொல்லாதே, அம்மா! இந்தக் கிழவன் உடம்பில் உயிர் இருக்கிற வரையில் நீ அனாதையாய்ப் போய்விட மாட்டாய்" என்றான்.

மகுடபதி நெருப்புச் சுட்ட வடுவைச் சுட்டிக் காட்டி "இது எப்படி ஏற்பட்டது, சொல்லு" என்றான். கேட்கும் போதே அவன் உடம்பு நடுங்கிற்று.

"சித்தப்பாவுக்கு யாரோ சொல்லிவிட்டார்களோ அல்லது அவரேதான் பார்த்துவிட்டாரோ தெரியாது. 'ஓடைக்கரையில் யாரோடு பேசிக் கொண்டிருந்தாய்?' என்று கேட்டார். 'தெரியாது' என்று சொன்னேன். நீங்கள் யார் என்பது எனக்கு நிஜமாகவே தெரியாதல்லவா? ஆனால், சித்தப்பா நான் சொன்னதை நம்பவில்லை. வேண்டுமென்றே பொய் சொல்லுகிறேன் என்று நினைத்தார். எவ்வளவோ அமர்க்களம் நடந்தது. கடைசியில் 'இனிமேல் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது' என்பதற்கு ஞாபகம் இருப்பதற்காக இம்மாதிரி காலில் சூடு போட்டுவிட்டார்."

"கடவுளே! இம்மாதிரி அக்கிரமங்களும் உலகத்தில் உண்டா?" என்றான் மகுடபதி.

"நீ என்னத்தைக் கண்டாய், தம்பி! இதைவிடப் பெரிய அக்கிரமங்களும் உலகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. கடவுளும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்" என்றான் பெரியண்ணன்.

செந்திரு, அப்போது "கடவுளைக் குறை சொல்லாதே, பாட்டா! கடவுள்தான் இந்த இக்கட்டான வேளையில் இவரை இங்கே அனுப்பியிருக்கிறார். நீங்கள் வந்ததனால் தான் கொஞ்சம் நான் தெம்பாயிருக்கிறேன். இல்லாவிட்டால், அய்யாசாமி முதலியார் வீட்டில் ஒருவரும் இல்லையென்று பாட்டன் திரும்பி வந்ததற்கு, நான் இப்போது பதைபதைத்துப் போயிருப்பேன். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்திருப்பேன். பாட்டன் வருவதற்குக் கொஞ்சம் நேரம் ஆனபோதே எனக்குத் தவிப்பாய்ப் போய்விட்டது. 'ஏன் இன்னும் வரவில்லை?' என்று இந்த மச்சு ஜன்னல் வழியாக வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது நீங்கள் திரும்பிப் பார்த்துக் கொண்டு வீதி ஓரமாக வந்தீர்கள். நீங்கள் தான் என்று உடனே எனக்குத் தெரிந்து போய்விட்டது. பழனியாண்டவன் தான் இந்தச் சமயத்தில் உங்களை அனுப்பியிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்" என்று செந்திரு சொன்னாள்.

"பழனியாண்டவர் கள்ளிப்பட்டிக் கார்க்கோடக் கவுண்டரின் ஆட்கள் ரூபத்தில் வந்து என்னை அனுப்பினார் போலிருக்கிறது" என்றான் மகுடபதி.

"கள்ளிப்பட்டிக் கார்க்கோடக் கவுண்டர்" என்ற பெயரைக் கேட்டதும், அவர்கள் இருவருடைய முகத்திலும் ஏற்பட்ட மாறுதலை மகுடபதி கவனித்தேன். அது என்ன பயங்கரமா? அருவருப்பா? கோபமா? - அந்தப் பெயர் இவர்களை இப்படிப் பயமுறுத்துவானேன்? இதில் ஏதோ பெரிய விசேஷம் இருக்க வேண்டும். யாரால் தனக்கு அபாயம் ஏற்பட்டிருக்கிறதோ, அவருடைய பெயரைக் கேட்டல்லவா இவர்களும் இவ்வளவு பயங்கர மடைகிறார்கள்? விஷயம் என்னவென்று தெரிந்து கொள்வதற்கு மகுடபதியின் ஆவல் அளவில்லாமல் பொங்கிற்று.

"பூம் பூம்"

பெரியண்ணனும் செந்திருவும் மாற்றி மாற்றிச் சொன்னதிலிருந்து, மகுடபதி பின்வரும் விவரங்களைத் தெரிந்து கொண்டான்.

சிங்கமேடு தங்கசாமிக் கவுண்டரின் தமையனார் மருதாசலக் கவுண்டர் என்பவர், மயிலாப்பூரில் பிரசித்தி பெற்ற வக்கீலாயிருந்தார். பிதிரார்ஜித சொத்து ஏராளமாயிருந்ததுடன், வக்கீல் தொழிலிலும் அவருக்கு வருமானம் நிறைய வந்து கொண்டிருந்தது. சென்னையில் உயர்ந்த அந்தஸ்தும், நாகரிகமும் வாய்ந்த மனிதர்களுடன் அவர் பழகிக் கொண்டிருந்தார். அவருடைய ஏகபுத்திரி செந்திரு. செந்திரு தன்னுடைய ஆறாம் வயதிலேயே தாயாரை இழந்துவிட்டாள். தாயை இழந்த குறை அவளுக்குத் தெரியாதபடி தகப்பனார் வளர்த்து வந்தார்.

முதலில் அவள் கான்வெண்ட் ஸ்கூலிலும், பிறகு அடையாறு பள்ளிக்கூடத்திலும் படித்தாள். அவளுடைய முகக்களையினாலும், புத்திசாலித்தனத்தினாலும், பள்ளிக்கூடத்தின் செல்லக் குழந்தையாயிருந்தாள். மயிலாப்பூரில் அவளுடைய தந்தையின் சிநேகிதர் வீடுகளில், அவளை அன்புடன் வரவேற்காத வீடு கிடையாது.

நாலு வருஷத்துக்கு முன்னால் செந்திருவின் தலையில் பெரிய இடி விழுந்தது. அவளுடைய தகப்பனார் மருதாசலக் கவுண்டர் டைபாயிடு சுரம் வந்து இறந்து போனார். அப்போது அவளுக்கு வயது பதின்மூன்று.

செந்திரு அனாதையான அதே சமயத்தில் பெரும் பணக்காரியாகவும் ஆனாள். அவளுடைய தாயாருடைய சொத்துக்கள் தகப்பனாருடைய சொத்துக்கள் எல்லாவற்றுக்கும் உரியவள் ஆனாள்.

அவளுடைய சித்தப்பா தங்கசாமிக் கவுண்டர், அவளைச் சிங்கமேட்டில் தங்களுடைய வீட்டுக்கு அழைத்துப் போனார். வேறெங்கும் அவளுக்குப் புகலிடம் கிடையாது.

தங்கசாமிக் கவுண்டருக்கும் அவருடைய தமையனாருக்கும் எவ்வளவோ வித்தியாசங்கள். மருதாசலக் கவுண்டர் முப்பத்தைந்து வயதிலேயே முதல் மனைவியை இழந்து பின் மறு விவாகம் செய்து கொள்ளவில்லை. தங்கசாமிக் கவுண்டருக்கோ வீட்டில் இரண்டு மனைவிமார் இருந்தார்கள்.

மயிலாப்பூரில் பதின்முன்று வருஷம் வளர்ந்த செந்திருவுக்குச் சிங்கமேடு வாழ்க்கை, கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஊரிலே மற்றப் பெண்களெல்லாம் வயல் காடுகளுக்காவது இஷ்டப்படி சென்று கொண்டிருந்தார்கள். பெரிய கவுண்டர் வீட்டுப் பெண்ணானபடியால், செந்திரு வீட்டை விட்டு வெளிக்கிளம்ப முடியவில்லை. அவளுடைய நடை உடை பாவனைகள் வீட்டில் மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. மற்றவர்களுடைய பழக்க வழக்கங்கள் இவளுக்குப் பிடிக்கவில்லை. இவளுடைய படிப்புக் கர்வத்தை அவர்களால் சகிக்க முடியவில்லை. அவர்களுடைய படிப்பில்லாமையை இவளால் பொறுக்க முடியவில்லை. இதனால் வரவர வீட்டில் ரகளை அதிகமாகிக் கொண்டு வந்தது.

தங்கசாமிக் கவுண்டர் மருதாசலக்கவுண்டர் போலவே சமபாகம் பெற்றவர். ஆனால், அவர் தாலுகா போர்டு ஜில்லா போர்டு எலெக்ஷனில் ஈடுபட ஆரம்பித்ததிலிருந்து வரவுக்கு மேல் செலவாகிக் கடன் முற்றிக் கொண்டு வந்தது. இப்போது அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் கடன்; சொத்து முழுவதையும் விற்றாலும் அடைக்க முடியுமா என்பது சந்தேகம்.

எலெக்ஷன் விவகாரங்களில் தங்கசாமிக் கவுண்டரின் கூட்டாளி, பெயர் பெற்ற கள்ளுக்கடை கண்டிராக்டரான கள்ளிப்பட்டிக் கார்க்கோடக் கவுண்டர். தங்கசாமிக் கவுண்டர் அதிகமாகக் கடன் பட்டிருந்ததும் மேற்படி கார்க்கோடக் கவுண்டரிடம்தான்.

தங்கசாமிக் கவுண்டர் கடனடைந்து மீந்து வருவதற்குக் கார்கோடக் கவுண்டர் ஒரு யோசனை சொன்னார். ஏற்கனவே கார்க்கோடக் கவுண்டருக்கு மூன்று தாரம் கல்யாணம். முதல் தாரம் இறந்தது போக இன்னும் இரண்டு மனைவிகள் வீட்டில் இருந்தார்கள். இப்போது செந்திருவை தனக்குக் கல்யாணம் செய்து கொடுத்து விடுவதாயிருந்தால், கடன் பூராவையும் தானே எடுத்துக் கொண்டு தீர்த்து விடுவதாகக் கார்கோடக் கவுண்டர் சொன்னார். அதற்குத் தங்கசாமிக் கவுண்டர் சம்மதித்துவிட்டார். செந்திரு மைனர் வயது நீங்கி மேஜர் ஆவதற்கு இன்னும் ஆறு மாதந்தான் இருந்தபடியாலும், மேஜர் ஆகிவிட்டால் ஏதாவது 'ரவுஸ்' பண்ணுவாள் என்று அவர்களுக்குப் பயமிருந்தபடியாலும், கல்யாணத்தை இந்த மாதமே முடித்துவிடுவதென்று தீர்மானித்திருந்தார்கள்.

கார்க்கோடக் கவுண்டர் அடிக்கடி சிங்கமேட்டிற்கு வருவதுண்டாதலால், செந்திரு அவரைப் பார்த்திருக்கிறாள். அவரைக் கண்டாலே அவளுக்குக் கதி கலங்கும். அவர் எதிரிலேயே வரமாட்டாள். கல்யாணப் பேச்சு அவளுடைய காதில் விழுந்ததும், அவள் விஷம் குடித்து உயிரை விட்டு விடத் தீர்மானித்தாள். பெரியண்ணக் கவுண்டனிடம் விஷம் சம்பாதித்துத் தரும்படி கேட்டாள். பெரியண்ணன் அவளைத் தடுத்து, கல்யாணத்தை நிறுத்தவும், செந்திரு அந்த வீட்டிலிருந்து தப்பிக்கவும் வேறு வழி யோசிக்கலாம் என்றான்.

அச்சமயத்தில் செந்திருவுக்கு அவளுடைய பள்ளிக்கூடத் தோழி பங்கஜத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. செந்திரு மயிலாப்பூரில் இருந்த போது, அடுத்த வீட்டில் ஸப்ஜட்ஜ் அய்யாசாமி முதலியாரின் குடும்பத்தார் வசித்தார்கள். முதலியாரின் பெண் பங்கஜம், செந்திரு சிங்கமேட்டுக்கு வந்த பிறகு சில காலம் அவளும் பங்கஜமும் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்கள். அப்புறம் திடீரென்று பங்கஜத்தின் கடிதங்கள் நின்று போயின. தான் எழுதும் கடிதங்கள் ஒரு வேளை தபால் பெட்டியில் சேர்க்கப்படுவதில்லையோ என்று செந்திரு சந்தேகித்தாள். அந்தச் சந்தேகத்தைத் தீர்த்து கொள்ள அவளுக்கு வழியில்லாமலிருந்தது. கடைசியாகப் பங்கஜத்திடமிருந்து கடிதம் வந்து இரண்டு வருஷத்துக்கு மேலாகிவிட்டது.

பெரியண்ணனும் செந்திருவும் தப்பும் வழியைப் பற்றி யோசனை செய்து கொண்டிருந்தபோது, பங்கஜத்தினிடமிருந்து கடிதம் வந்தது. அச்சமயம் தங்கசாமிக் கவுண்டர் ஊரில் இல்லை. ஏதோ கேஸ் சம்பந்தமாய்ச் சென்னைப் பட்டணம் போயிருந்தார். ஆகையால் கடிதம் செந்திருவின் கையில் நேரில் கிடைத்துவிட்டது. அதில் பங்கஜம், தான் எழுதிய பல கடிதங்களுக்குச் செந்திருவிடமிருந்து கடிதம் வரவில்லையென்றும், அதனால் கடிதம் எழுதுவதையே நிறுத்திவிட்டதாகவும், இப்போது அவளுடைய தகப்பனார் உத்தியோகத்திலிருந்து ரிடயர் ஆகிவிட்டபடியால், குடும்பத்துடன் கோயமுத்தூரில் வந்து குடியேறியிருப்பதாகவும், செந்திருவின் ஊருக்கு ஒரு நாள் வந்து அவளைப் பார்க்க விரும்புவதாகவும் எழுதியிருந்தாள்.

இதைப் பார்த்ததும், செந்திருவும் பெரியண்ணனும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். கல்யாணத்தை நிறுத்துவதற்குப் பங்கஜத்தின் மூலமாக அவளுடைய தகப்பனாரின் ஒத்தாசையைத் தேடுவது என்று தீர்மானித்தார்கள். பெரியண்ணன், முதலில் தான் மட்டும் கோயமுத்தூர் போய் வருவதாகச் சொன்னான். செந்திரு அதை மறுத்து, ஒரு நிமிஷங்கூடத் தன்னால் அந்த வீட்டில் இருக்க முடியாதென்றும், இரண்டு பேரும் கோயமுத்தூருக்குக் கிளம்பிவிடலாமென்றும் பிடிவாதம் பிடித்தாள். கோயமுத்தூரில் தங்கசாமிக் கவுண்டருக்குச் சொந்தமான இந்த வீடு இருப்பது அவர்களுக்குத் தெரியும். அது பூட்டிக் கிடக்கிறதென்றும், தங்கசாமிக் கவுண்டர் எப்போதாவது குடும்பத்துடன் கோயமுத்தூருக்கு வந்தால் அதில் தங்குவது வழக்கமென்றும், அவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த வீட்டுப் பூட்டின் சாவியும் சிங்கமேட்டில் தான் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு, அன்றைய தினம் அதிகாலையில் ஒருவருக்கும் தெரியாமல் இரண்டு பேரும் கிளம்பிச் சிங்கமேட்டுக்கு இரண்டு மைல் தூரத்திலிருந்த ஸ்டேஷனில் ரயில் ஏறிக் கோயமுத்தூர் வந்து சேர்ந்தார்கள்.

ஸப் ஜட்ஜ் அய்யாசாமி முதலியாரின் பங்களா எங்கே இருக்கிறதென்று கண்டு பிடிப்பதற்காக முதலில் பெரியண்ணன் செந்திருவின் கடிதத்துடன் போனான். போகும்போது வீட்டில் செந்திரு தனியாயிருப்பது யாருக்குந் தெரியாமலிருப்பதற்காக, வெளியில் கதவைப் பூட்டிக் கொண்டு போனான். அவன் திரும்பி வந்து வெளிக் கதவைத் திறந்தபோதுதான் மகுடபதியும் அந்த வீட்டுக்குள் நுழைந்தான்.

இவ்வளவு விவரங்களையும் அவர்கள் சொல்லி முடிப்பதற்கு வெகு நேரம் ஆகிவிட்டது. எல்லாம் கேட்ட பிறகு மகுடபதி "பாட்டா! இவ்வளவு சொன்ன நீ ஒரு விஷயம் மட்டும் சொல்லவில்லையே! சிங்கமேட்டுக் கவுண்டர் வீட்டுக்கு நீ எப்படி வந்து சேர்ந்தாய்?" என்றான். அதன் மேல் பெரியண்ணன் அந்தக் கதையையும் சுருக்கமாகச் சொன்னான்.

பல வருஷங்களுக்கு முன் பெரியண்ணன் கள்ளிப்பட்டிக் கார்க்கோடக் கவுண்டர் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவர் ஒரு நாள் அதிகமாகக் கோபித்துக் கொள்ளவே, அங்கிருந்து கிளம்பி விட்டான். இலங்கைக்குப் போய் சில காலம் அங்கே வசித்துவிட்டுத் திரும்பினான். இலங்கையில் தான் அவன் பெரிய குடிகாரன் ஆனான். இந்தியாவுக்குத் திரும்பி வந்த பிறகு, ஒரு கலகக் கேஸில் அவன் மாட்டிக் கொண்டான். கீழ்க் கோர்ட்டில் ஏழு வருஷம் தண்டனை கொடுத்தார்கள். ஹைக்கோர்ட்டில் கேஸ் உடைந்து விடுதலை ஆயிற்று. அந்தக் கேஸில் அவனுக்குச் செந்திருவின் தகப்பனார் தான் வக்கீலாயிருந்து அவனை விடுதலை செய்வித்தார். அப்போதே பட்டணத்தில் செந்திருவைப் பெரியண்ணன் பார்த்திருக்கிறான். குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சியிருக்கிறான்.

மகுடபதியைக் குத்திய வழக்கில் விடுதலையான பிறகு, பெரியண்ணன் கொஞ்ச நாள் ஊர் ஊராகச் சென்று மதுவிலக்குப் பிரசாரம் செய்து வந்தான். இது கார்க்கோடக் கவுண்டருக்குத் தெரிந்தது. அவர் அவனைச் சிங்கமேடு தங்கசாமிக் கவுண்டர் வீட்டில் வேலைக்கு அமர்த்தினார். அங்கே, இந்தப் பட்டணத்துக் குழந்தையைக் கண்டு யார் என்று தெரிந்து கொண்டதும், பெரியண்ணன் அங்கேயே சந்தோஷத்துடன் இருந்துவிட்டான். அவர்களுக்குள் நாளுக்கு நாள் பாசம் வளர்ந்து, கடைசியில், இம்மாதிரி சொல்லாமல் ஓடி வருவதில் முடிந்தது.

"கள்ளுக்கடைக் கண்டிராக்டில் நஷ்டம் வந்ததற்காக, ஏற்கெனவே என்னை வெட்டிப் போடலாமென்று எண்ணியிருக்கிறார் கள்ளிப்பட்டிக் கவுண்டர். இப்போது இந்த இடத்தில் என்னைப் பார்த்தால் என்ன செய்வாரோ தெரியாது. அவரே கத்தி எடுத்து என்னைக் குத்தி கொன்று விடுவார்" என்றான் மகுடபதி.

அப்போது பெரியண்ணன் முகத்தில் உண்டான விகாரத்தையும், அவனுடைய கண்களில் தோன்றிய பயங்கரத்தையும் மகுடபதியினால் அறிந்துகொள்ள முடியவில்லை.

"என்ன பாட்டா! இப்படி மிரளுகிறாயே! கத்திக்குத்து எல்லாம் உனக்குப் புதிது அல்லவே?" என்றான்.

"தம்பி, தம்பி! அப்படியெல்லாம் நீ ஒன்றும் பேசாதே. நீ எனக்கு ஒரு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும். கள்ளிப்பட்டிக் கவுண்டர்கிட்ட மாத்திரம் நீ போகவே கூடாது. ஒரு போதும் போகக் கூடாது" என்றான் பெரியண்ணன். அப்போது அவன் பேச்சே ஒரு மாதிரி இருந்தது.

அச்சமயத்தில் வாசலில் "பூம் பூம்" என்று மோட்டார்க் குழலின் சத்தம் கேட்டது. அடுத்த நிமிஷம் வாசற் கதவை யாரோ தடதடவென்று தட்டினார்கள்.

மூன்று பேரில் யாருக்குக் கதிகலக்கம் அதிகமாயிருந்ததென்று சொல்வதற்கில்லை.

"சித்தப்பாவாயிருக்குமோ?" என்று நடுங்கிய குரலில் கேட்டாள் செந்திரு.

"பட்டணத்துக்கல்லவா போகிறதாகச் சொன்னார்?"

"வந்து விட்டாரோ, என்னமோ?"

"ஒருவேளை அய்யாசாமி முதலியார் வீட்டில் திரும்பி வந்திருந்து, உன் கடிதத்தைப் பார்த்துவிட்டுக் கார் அனுப்பியிருக்கலாமல்லவா?" என்றான் மகுடபதி.

செந்திருவுக்குக் கொஞ்சம் உயிர் வந்தது. "இருந்தாலும் இருக்கலாம்" என்றாள்.

கிழவன், "நான் போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன். எதற்கும், தம்பி, நீ அந்த அறைக்குள் இரு. கதவை உட்புறம் தாளிட்டுக் கொள்" என்றான்.

பெரியண்ணன் கையும் காலும் நடுங்க மச்சுப் படிகளில் இறங்கிக் கீழே வந்து, கையில் அரிக்கன் விளக்கை எடுத்துக் கொண்டு, வாசற் கதவைத் திறந்தான்.

கதவை இடித்த டிரைவர் ஒதுங்கி நின்றான். மோட்டார் வண்டியில் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் கிழவன் பிசாசைப் பிரத்தியட்சமாகக் கண்டவன் போல் பயங்கரமடைந்து பேச்சு மூச்சின்றி நின்றான்.

பயங்கரச் சிரிப்பு

மோட்டார் வண்டியில் இருந்தோர் கள்ளிப்பட்டிக் கார்க்கோடக் கவுண்டரும், சிங்கமேடு தங்கசாமிக் கவுண்டருந்தான்.

பெரியண்ணன் அவர்களைக் கண்டதும் பயப்பிராந்தி அடைந்தான். தனக்கு ஏதோ தீங்கு வந்து விடப் போகிறதோ என்பதற்காக அல்ல. செந்திருவை எண்ணித்தான் அவன் பயந்தான். அவளை இங்கே பார்த்தால் இவர்கள் என்ன செய்கிறார்களோ, என்னமோ? போதாதற்கு மகுடபதி இந்தச் சமயம் பார்த்து வந்து சேர்ந்தானே? இவர்கள் வேறு விதமாக சந்தேகிக்கலாமல்லவா? அறியாத பெண்ணின் பேச்சைக் கேட்டுப் புறப்பட்டு வந்தது பிசகாய்ப் போயிற்றே? - குழந்தைதான் சொல்லிற்று என்றால் அறுபது வயதான எனக்குக் கூடவா புத்தியில்லாமல் போகவேண்டும்? கவுண்டர் சென்னைப் பட்டணத்துக்கல்லவா போவதாகச் சொன்னார்? வருவதற்கு ஒரு வாரம் பிடிக்கும் என்றாரே? இங்கே எப்படி இருக்கிறார்? - இம்மாதிரி எண்ணங்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு அவன் உள்ளத்தில் எழுந்தன. கையில் லாந்தரைப் பிடித்தபடி அசையாமலும் பேசாமலும் அவர்களைப் பார்த்தபடியே நின்றான்.

பெரியண்ணனைப் பார்த்ததில் இரண்டு கவுண்டர்களுக்குங்கூட ரொம்ப ஆச்சரியம் உண்டாயிற்று என்பது அவர்களுடைய முகபாவத்திலிருந்து நன்றாய்த் தெரிந்தது. சற்று நேரம் அவர்களும் அவனுடைய முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தங்கசாமிக் கவுண்டர், "யார், பெரியண்ணனா? இதென்ன தமாஷ்? நீ எங்கே வந்து சேர்ந்தாய்?" என்று கேட்டுக் கொண்டே காரிலிருந்து இறங்கினார்.

அருகில் சென்று அவன் முகத்தைப் பார்த்ததும், "என்னப்பா, இது? ஏன் இப்படிப் பேயடித்தவன் மாதிரி விழித்துக் கொண்டு நிற்கிறாய்?" என்றார்.

இதற்கும் பெரியண்ணன் பேசாமல் நின்றான். கார்க்கோடக் கவுண்டரும் இறங்கி வந்து, "ஒருவேளை மகாத்மா காந்தி பக்தி முற்றிப்போய் சத்தியாக்கிரகம் பண்ணவே வந்துவிட்டான் போலிருக்கு" என்றார்.

"ஏனப்பா, அப்படியா? நீ சத்தியாக்கிரகம் பண்ணப் போறாயா, அல்லது உன்னைத்தான் கிரகம் பிடிச்சிருக்கா?"

இப்படிச் சொன்ன தங்கசாமிக் கவுண்டர் திடீரென்று ஏதோ நினைவு வந்தவர் போல், "கவுண்டர்! வீட்டிலே எல்லாரும் சுகந்தானே? உடம்பு காயலா ஒன்றுமில்லையே?" என்று கலங்கிய குரலில் கேட்டார்.

"எல்லாரும் சுகந்தானுங்க" என்று மெலிந்த குரலில் பெரியண்ணன் சொன்னான்.

"அப்படியென்றால், நீ எங்கே வந்தே?"

பதில் இல்லாமற் போகவும், இரு கவுண்டர்களும் உள்ளே நுழைந்தார்கள்.

மேல் மச்சில் வெளிச்சம் தெரிந்தது. ஆள் நடமாடும் சத்தமும், கதவு சாத்தும் சத்தமும் கேட்டது. கவுண்டர்களின் ஆச்சரியம் அதிகமாயிற்று.

"பெரியண்ணா! மச்சுமேலே யார்?"

பதில் இல்லை.

"இதென்ன உனக்குப் பிரம்மஹத்தி பிடித்துவிட்டதா? மேலே யார், சொல்கிறாயா, இல்லையா?"

பெரியண்ணன் தடுமாறிக் கொண்டு, "குழந்தை" என்றான்.

"எந்தக் குழந்தை?" என்று தங்கசாமிக் கவுண்டர் வியப்புடன் கேட்டார்.

"எனக்கு எல்லாம் தெரிந்து போய் விட்டது" என்றார் கார்க்கோடக் கவுண்டர். தங்கசாமிக் கவுண்டரின் காதோடு ஏதோ சொன்னார்.

தங்கசாமிக் கவுண்டரின் கண்ணில் தீப்பொறி பறந்தது. "என்ன? இருக்கவே இருக்காது!" என்றார்.

"பெரியண்ணா! எந்தக் குழந்தை? பட்டணத்துக் குழந்தையா?"

"ஆமானுங்க."

அவ்வளவுதான்; அதற்குமேல் தங்கசாமிக் கவுண்டர் அங்கே நிற்கவில்லை. தடதடவென்று மச்சுப்படிகளின் மேலே ஏறினார். கார்க்கோடக் கவுண்டரும் பின் தொடர்ந்து ஏறினார். பெரியண்ணன் லாந்தரைக் கீழே வைத்துக் கதவைத் தாளிட்டு விட்டுத் தள்ளாடிக் கொண்டே ஏறினான். அவன் மனது ஒரே குழம்பலாய்க் குழம்பிற்று. செந்திருவை அங்கே அழைத்து வந்ததற்கு ஏதாவது பொய்க் காரணங் கண்டு பிடிக்க அவன் விரும்பினான். ஆனால் யோசனை ஒன்றுமே ஓடவில்லை. அவன் தலை சுழன்றது.

ஒருவர் பின் ஒருவராக இரண்டு கவுண்டர்களும் வருவதைப் பார்த்ததும், செந்திரு கதிகலங்கியவளாய்ச் சமுக்காளத்திலிருந்து எழுந்து நின்றாள். சித்தப்பாவை அவள் ஒருவாறு எதிர்பார்த்தாள். அவருக்கு என்ன சமாதானம் சொல்லி, எப்படித் தப்புவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். கார்க்கோடக் கவுண்டரும் சேர்ந்தாற்போல் வருவதைக் கண்டதும், எல்லா யோசனையும் போய்விட்டது. பக்கத்து அறையில் மகுடபதி இருக்கிறான் என்பதை நினைத்ததும், அவளுடைய வயிற்றையும் நெஞ்சையும் என்னவோ செய்தது! மயிலாப்பூரில் அவளுடைய வீட்டுக் கூடத்தில் பழநியாண்டவர் படம் ஒன்று மாட்டியிருக்கும். தினம் அப்படத்திற்கு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டுவதுண்டு. குழந்தை செந்திரு அப்படத்தின் முன்னால் நமஸ்காரம் செய்து "ஸ்வாமி! பழனி ஆண்டவனே! பரீட்சையில் எனக்கு நல்ல மார்க் வரவேணும்; முதலாவதாக நான் தேறவேண்டும்" என்று வேண்டிக் கொள்வாள். இப்போது திடீரென்று அந்தப் படத்தின் ஞாபகம் வந்தது! "ஸ்வாமி! ஆண்டவனே! இந்த ஆபத்திலிருந்து நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டாள்.

தங்கசாமிக் கவுண்டர் அவளை வியப்புடனும் ஆங்காரத்துடனும் உற்றுப் பார்த்தபடி அருகில் வந்தார்.

"செந்திரு, நீயா, இந்தக் காரியம் செய்தாய்? என்ன நெஞ்சு அழுத்தம் உனக்கு! பாவி!..."

கவுண்டரின் உதடுகளும் மீசையும் படபடப்பினால் துடித்தன.

"பாவி! உன் அப்பாவின் பெயரை இப்படியா நீ கெடுக்க வேணும்! மருதாசலக் கவுண்டரின் மகளா நீ? ஆஹா! அண்ணன் மட்டும் இப்போது உயிரோடிருந்தால்..."

தகப்பனாரின் பெயரைக் கேட்டதும் செந்திருவுக்கு திடீரென்று மனோதைரியம் உண்டாயிற்று. அவள் ஒரு புது மனுஷியானாள். தன்னுடைய தகப்பனாரே ஆவி ரூபத்தில் வந்து தனக்குப் பின்னால் நிற்பதாக அவளுக்குத் தோன்றிற்று. தனக்கு அபாயம் நேராமல் அவர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உண்டாயிற்று.

திடீரென்று ஆவேசம் வந்தவள் போல் அவள், "அப்பா பேச்சை ஏன் எடுக்கிறீர்கள் சித்தப்பா! அப்பா உயிரோடு இருந்தால் என் கதி இப்படியாயிருக்குமா? தலை நரைச்ச கிழவருக்கு என்னைக் கல்யாணம் கட்டிக் கொடுக்க யோசித்திருப்பாரா?" என்றாள்.

தங்கசாமிக் கவுண்டருக்கு அப்போது வந்த கோபத்தில் அவருடைய உடம்பெல்லாம் நடுங்கிற்று. திரும்பி அவர் கள்ளிப்பட்டிக் கவுண்டரைப் பார்த்தார். கள்ளிப்பட்டிக் கவுண்டரின் முகத்தில் விஷம் நிறைந்த ஒரு புன்னகை காணப்பட்டது. மற்றபடி கோபதாபம் ஒன்றுமில்லை. அவர் சிங்கமேட்டாரைப் பார்த்து, "ஏன் இவ்வளவு பதட்டப் படுகிறீர்கள்? இதை அவளாகச் செய்யவில்லை. யாருடைய துர்ப்போதனையின் பேரிலேயோ நடந்திருக்கிறது. உட்கார்ந்து சாவகாசமாக விசாரியுங்கள்" என்றார்.

இப்படிச் சொல்லிவிட்டு அவர் ஹாலின் வீதிப் பக்கத்துச் சுவரில் இருந்த ஜன்னலண்டை போய் ஜன்னல் கதவுகளைச் சாத்தினார். பிறகு, மச்சுபடிகளின் வழியாகக் கீழே இறங்கிப் போனார்.

சிங்கமேட்டுக் கவுண்டர் மேஜைக்குப் பக்கத்திலிருந்த நாற்காலியில் போய்த் தொப்பென்று விழுந்தார். அளவில்லாத கோபத்தினால் அவருடைய உடம்பு தளர்ந்து போயிருந்தது. தூரத்தில் நடுங்கிக் கொண்டு நின்ற பெரியண்ணனைப் பார்த்து, "கவுண்டா, இங்கே வா!" என்றார்.

பெரியண்ணன் மேஜையண்டை மெதுவாக வந்து நின்றான்.

"எதற்காக இங்கே வந்தீர்கள்? என்ன எண்ணத்துடன் வந்தீர்கள்? யாருடைய தூண்டுதலைக் கேட்டு வந்தீர்கள்? நிஜத்தை, உள்ளதை உள்ளபடி சொல்லிவிடு; இல்லாவிட்டால் இங்கிருந்து உயிரோடு திரும்பிப் போகமாட்டாய்" என்றார்.

பெரியண்ணன், மனத்திற்குள், "என் உயிரோடு போவதாயிருந்தால் பாதகமில்லையே? இந்தக் குழந்தையையும் அல்லவா மாட்டி வைத்து விட்டேன்?" என்று நினைத்துக் கொண்டான்.

அவன் செந்திருவைப் பார்த்தான். செந்திரு, "என்ன பயம் பாட்டா? உயிருக்கு மேலே ஒன்றுமில்லையே? இந்த மாதிரி உயிர் வைத்துக் கொண்டு வாழ்கிறதைவிடச் செத்துப் போவதே நல்லது. எல்லாவற்றையும் சொல்லிவிடு" என்றாள். இப்படிச் சொல்லிவிட்டு அவள் சமுக்காளத்தில் உட்கார்ந்தாள்.

இதற்குள், கள்ளிப்பட்டிக் கவுண்டர், மச்சுப்படி ஏறி மறுபடியும் மேலே வந்தார். அவருடைய ஒரு கை முதுகுப் பக்கம் போயிருந்தது. அந்தக் கையில் ஒரு கயிற்றுச் சுருளும் ஒரு கொடிப் பிரம்பும் இருந்தன. இன்னொரு கையில் டார்ச் லைட் ஒன்று இருந்தது. பெரியண்ணன் இதையெல்லாம் பார்த்து விட்டான். இதற்கு முன்னால் ஒரு போதும் அறிந்திராத ஒரு வித நோவு அவனுடைய அடி வயிற்றில் உண்டாயிற்று.

இரண்டு கவுண்டர்களையும் அவன் மாறி மாறிப் பார்த்து தட்டுத் தடுமாறலுடன் "தெரியாத்தனமாய் நடந்து போச்சுங்க? என்னை என்ன வேணுமானாலும் செய்துக்குங்க! குழந்தையை மன்னிச்சுடுங்க! உங்கள் காலிலே விழுந்து கேட்கிறேன்!" என்றான்.

செந்திருவுக்கு இது கொஞ்சமும் பிடிக்கவில்லை என்று அவளுடைய முகத் தோற்றத்திலிருந்தே தெரிந்தது.

"என்ன பாட்டா! உனக்குப் பைத்தியமா? எதற்காக என்னை மன்னிக்க வேண்டும்? நான் என்ன தப்பு செய்து விட்டேன் மன்னிப்பதற்கு?" என்றாள்.

கிழவன் அவளைக் கொஞ்சம் கோபமாய்ப் பார்த்து, "செந்திரு! நீ அறியாக் குழந்தை! உனக்கு ஒன்றும் தெரியாது, சற்றே நீ பேசாமலிரு" என்றான். அப்போது அவனுடைய பார்வை சாத்தியிருந்த அறைக் கதவின் மேல் போயிற்று.

அது கள்ளிப்பட்டிக் கவுண்டரின் கூரிய பார்வையிலிருந்து தப்பவில்லை. அவர் மேஜைக்குப் பக்கத்திலிருந்த நாற்காலி ஒன்றில் உட்கார்ந்திருந்தார். இன்னொரு காலி நாற்காலியின் மேல் கயிற்றுச் சுருள், பிரம்பு, டார்ச் லைட் இவை இருந்தன. மேஜையின் மேல் முழங்கையை ஊன்றியபடி மற்ற மூன்று பேரையும் அவர் கவனித்துக் கொண்டிருந்தார்.

சிங்கமேட்டுக் கவுண்டரைப் பார்த்து, அவர், "அறியாப் பெண் படபடப்பாய்ப் பேசினால் அதற்காக நீங்களும் கோபித்துக் கொள்ளலாமா? எங்கே கிளம்பி வந்தார்கள், என்னத்திற்காக, என்று கேளுங்கள்" என்றார்.

பெரியண்ணன் உடனே, "குழந்தைக்குச் சிநேகிதப் பெண் இந்த ஊருக்கு வந்திருக்கிறதாம். அவசரமாய்ப் பார்க்க வேணுமென்று கடிதம் வந்ததாம். உடனே கிளம்பித் தான் ஆகவேண்டுமென்று பிடிவாதம் பிடித்தது. நானும் தெரியாத்தனமாய் அழைத்துக் கொண்டு வந்து விட்டேன். செய்தது பிசகுதான்" என்றான்.

செந்திரு அப்போது, "சித்தப்பா! நான் நிஜத்தைச் சொல்லிவிடுகிறேன். எனக்கு இந்த வயதில் கல்யாணம் கட்டிக் கொள்ள இஷ்டமில்லை. அதற்காகத்தான் புறப்பட்டு வந்தேன். நீங்கள் என்னைக் கொன்றாலும் சரிதான். என் மனது மட்டும் மாறாது" என்றாள்.

கள்ளிப்பட்டிக் கவுண்டர், தங்கசாமிக் கவுண்டரின் காதோடு ஏதோ சொன்னார்.

"இது நீயாகச் சொல்கிறாயா? வேறு யாருடைய போதனையின் பேரிலாவது சொல்கிறாயா?"

"யாரும் எனக்குப் போதிக்கவில்லை; நானாகத்தான் சொல்கிறேன்."

"இங்கே கிளம்பி வந்தது நீயாகத்தான் வந்தாயா? யாராவது வரச் சொன்னதுண்டா?"

"நானாகத்தான் வந்தேன்."

கார்க்கோடக் கவுண்டர் "பொய்" என்று சொல்லிக் கொண்டு நாற்காலியிலிருந்த பிரம்பை எடுத்து, மேஜையின் மேல் சிங்கமேட்டுக் கவுண்டர் பக்கத்தில் வைத்தார்.

இதைக் கவனித்த செந்திரு கோபாவேசத்துடன், "சித்தப்பா! நான் துர்ப்போதனைக் காளாகவில்லை. உங்களுக்குத்தான் துர்மந்திரிகள் இருக்கிறார்கள். அதனால் தான் உங்களுக்குக் கடன் வந்தது. அதற்காக என்னை விற்கப் பார்க்கிறீர்கள்" என்றாள்.

தங்கசாமிக் கவுண்டர் மேஜை மீதிருந்த பிரம்பை எடுத்துக் கொண்டு செந்திருவை நோக்கிப் போனார். பெரியண்ணன் அவருக்கு முன்னால் வந்து தரையில் விழுந்து காலைப் பிடித்துக் கொண்டான். கவுண்டர் அவனை உதறித் தள்ளிவிட்டு மேலே போய் செந்திருவின் மேல் பிரம்பை வீசினார். அவளுடைய தோளில் சுளீரென்று விழுந்தது. செந்திரு 'வீல்' என்று கத்திக் கொண்டு கீழே விழுந்தாள். இன்னும் பல அடிகளை எதிர்பார்த்து அவள் கண்ணை இறுக மூடிக் கொண்டு பல்லையும் கடித்துக் கொண்டாள்.

ஆனால், மேலே அடி விழவில்லை. ஏனெனில் அச்சமயம் கதவு தாழ்ப்பாள் திறக்கும் சத்தம் கேட்டது.

"பாவிகளா! சண்டாளர்களா! அனாதைப் பெண்ணை அடிக்காதீர்கள்! என்னை அடித்துக் கொன்று விடுங்கள்" என்று கத்திக் கொண்டு மகுடபதி திறந்த அறையிலிருந்து ஓடி வந்தான்.

கள்ளிப்பட்டிக் கவுண்டர் கலகலவென்று சிரித்தார். அந்தச் சிரிப்பின் தொனி பயங்கரமாயிருந்தது. பெரியண்ணன் உடம்பு வெடவெடவென்று ஆடிற்று.

அந்தகாரம்

இருட்டறைக்குள் இருந்த மகுடபதிக்கு ஹாலில் நடந்த பேச்சுவார்த்தையெல்லாம் நன்றாய்க் காதில் விழுந்தன. குரலிலிருந்து, யார் யார் பேசுகிறார்கள் என்பதையும் ஊகித்துக் கொண்டான். செந்திரு கொஞ்சமும் பயப்படாமல் பேசிய தீரம் நிறைந்த மொழிகள் அவனுடைய காதில் விழுந்த போதெல்லாம், அவனுக்கு மயிக்கூச்செறிந்தது. அந்தச் சமயம் செந்திரு சாதாரணப் பெண்ணாகவே அவனுக்குத் தோன்றவில்லை. காவியங்களிலும், இதிகாசங்களிலும் வர்ணிக்கப்படும் வீர நாரீமணியாகவே தோன்றினாள். இவளுக்காக ஓர் உயிரை அல்ல, நூறு உயிர் ஒருவனுக்கு இருந்தால் அவ்வளவையும் கொடுக்கலாம் என்று நினைத்தான். ஓடைக் கரைக் காட்சியும், அங்கே அவளுக்கு, தான் கொடுத்த வாக்குறுதியும் ஞாபகம் வந்தன. அந்த வாக்குறுதியை இத்தனை நாளும் நிறைவேற்றாமலிருந்ததை எண்ணி அப்போது வெட்கத்தினால் அவனுடைய உள்ளம் குன்றியது. அதற்கெல்லாம் இப்போது பரிகாரம் செய்து விட வேண்டுமென்றும் இந்த இரக்கமற்ற அரக்கர்களிடமிருந்து அவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்றும் உறுதி கொண்டான். இப்பேர்ப்பட்ட ஆபத்தான சமயத்தில் தன்னை அந்த வீட்டில் கொண்டு வந்து சேர்த்த தெய்வச் செயலை எண்ணி அதிசயித்தான். இப்படியெல்லாம் பலவித எண்ணங்கள் அவனுடைய உள்ளத்தைக் குழப்பினவே தவிர, செந்திருவை எப்படி இவர்கள் கையிலிருந்து தப்புவிப்பது என்பதற்கு மட்டும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.

இந்த நிலைமையில்தான் தங்கசாமிக் கவுண்டர் பிரம்பினால் செந்திருவை அடிக்க, அவள் வீரிட்ட குரல் மகுடபதியின் காதில் விழுந்தது. பிறகு அவனால் அந்த இருட்டறையில் சும்மா இருக்க முடியவில்லை. கதவைத் திறந்து கொண்டு ஓடி வந்தான்.

அறைக்குள்ளிருந்து ஓடிவந்த மகுடபதியைப் பார்த்ததும், தங்கசாமிக் கவுண்டருக்கு ஏற்பட்ட பிரமிப்பையும் கோபத்தையும் சொல்லத் தரமல்ல. "இதெல்லாம் நிஜமாக நடப்பவைதானா? இந்திரஜாலக் கனவா?" என்று சந்தேகப்பட்டவர் போல், அவர் கள்ளிப்பட்டிக் கவுண்டரைப் பார்த்தார்.

"தங்கசாமி! நான் சொன்னபோது நீ நம்பவில்லை. இப்போது தெரிந்து கொண்டாயா! சிநேகிதப் பெண்ணைப் பார்க்க வந்தது என்பதெல்லாம் பொய் என்று தெரிகிறதா?..." என்றார் கார்க்கோடக் கவுண்டர்.

தங்கசாமிக் கவுண்டரின் கண்களில் தீப்பொறி பறந்தது. "பாவி, என்ன காரியம் செய்தாய்? குலத்தைக் கெடுக்கவா நீ வந்தாய்?" என்று சொல்லி அவர் மறுபடியும் செந்திருவை நோக்கிப் பிரம்பை ஓங்கினார்.

அப்போது சில நிமிஷநேரம் அந்த ஹாலில் பெருங்குழப்பம் உண்டாயிற்று.

மகுடபதி ஓடி வந்து, தங்கசாமிக் கவுண்டருடைய கைப்பிரம்பைப் பிடிக்க முயன்றான். பெரியண்ணன் குறுக்கே வந்து, மகுடபதியைப் பிடித்து இழுத்தான். "பாட்டா! நீ சும்மா இரு. ஒரு பேடி ஒரு சிறு பெண்ணைப் பிரம்பால் அடிக்கும் போது நீ பார்த்துக் கொண்டு நிற்கிறாய். என்னையும் சும்மா இருக்கச் சொல்கிறாயா?" என்று மகுடபதி சொல்லிக்கொண்டே, பெரியண்ணனிடமிருந்து திமிற முயன்றான். பெரியண்ணன் அவனை இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். இரண்டு பேரும் கட்டிக் கொண்டு கீழே விழுந்தார்கள். பெரியண்ணனுடைய தலை அரிக்கன் லாந்தர் மீது படாரென்று மோதிற்று. அரிக்கன் லாந்தர் கவிழ்ந்து அவிந்தது. ஒரு நிமிஷம் அந்த ஹாலில் இருள் சூழ்ந்தது.

செந்திரு, "ஐயோ! ஐயோ!" என்று அலறினாள்.

பளிச்சென்று டார்ச் லைட்டின் வெளிச்சம் அடித்தது. கார்க்கோடக் கவுண்டரின் கையிலிருந்துதான் டார்ச் லைட் பிரகாசித்தது. வெளிச்சம் பெரியண்ணன் - மகுடபதியின் மேல் விழுந்தது. பெரியண்ணன் பிரக்ஞையற்றுக் கிடந்தான். மகுடபதி திகைப்புடன் சுற்றுமுற்றும் பார்த்தான்.

கார்க்கோடக் கவுண்டரின் கர்ண கடூரமான குரல், "தங்கசாமி! அந்தப் பையனை சோபா காலோடு சேர்த்துக் கட்டு" என்று சொல்லியது அவன் காதில் விழுந்தது.

பெரியண்ணன் கீழே பிரக்ஞையற்றுக் கிடப்பதைப் பார்த்து செந்திரு அலறிக் கொண்டு அவன் அருகில் வந்து முகத்தை உற்று நோக்கினாள்.

திகைத்துப் போய் உட்கார்ந்திருந்த மகுடபதியைக் கார்க்கோடக் கவுண்டரும் தங்கசாமிக் கவுண்டரும் பிடித்துக் கரகரவென்று இழுத்துக் கொண்டுவந்து சோபாவின் காலோடு சேர்த்து கட்டினார்கள். மகுடபதி அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்குச் செய்த முயற்சி ஒன்றும் பலிக்கவில்லை.

செந்திரு பெரியண்ணனுடைய மூக்கினருகில் விரலை வைத்துப் பார்த்தபின், மூச்சு வருவது தெரிந்ததும், கொஞ்சம் தைரியம் உண்டாயிற்று. முகத்தில் தெளிக்கத் தண்ணீர் இருக்கிறதா என்று திரும்பிப் பார்த்தாள். மகுடபதி சோபாவின் காலில் கட்டுப்பட்டிருப்பதையும் அவன் பக்கத்தில் இரண்டு கவுண்டர்களும் நிற்பதையும் கண்டாள். கார்க்கோடக் கவுண்டரின் கையிலிருந்த டார்ச் லைட் கட்டுப்பட்டிருந்த மகுடபதியின் மேல் பிரகாசித்துக் கொண்டிருந்தது. மகுடபதியின் அழகிய முகம் அப்போது மிகவும் பயங்கரத் தோற்றமடைந்திருந்தது. அளவில் அடங்காத கோபத்தினாலும் ஆத்திரத்தினாலும் அவன் முகத்தின் நரம்புகள் எல்லாம் புடைத்திருந்தன. நெடிய பெருமூச்சு வந்து கொண்டிருந்தது. கண்கள் தணலைப் போல் சிவந்திருந்தன.

"பேடிகளா! என்னை ஏன் கட்டிப் போடுகிறீர்கள்? ஆண் பிள்ளைகளாயிருந்தால் கட்டை அவிழ்த்து விடுங்கள் - இப்படிப்பட்ட அக்கிரமங்களை ஏன் செய்கிறீர்கள்? ஆஹா! இந்தப் பாரத தேசத்தில் மகாத்மா காந்தியைப் போன்ற உத்தமரும் பிறந்தார் - உங்களைப் போன்ற பாதகர்களும் பிறந்திருக்கிறார்களே!..." என்றான் மகுடபதி.

"அடே! நிறுத்தடா, உன் அதிகப் பிரசங்கத்தை!" என்று சீறினார் கார்க்கோடக் கவுண்டர். மேலும் ஏளனம் செய்யும் குரலில் அவர் கூறினார்:

"மகாத்மா காந்தியினுடைய அந்தரங்க சிஷ்யனல்லவா நீ? அதனால் தான் மைனர்ப் பெண்ணைத் திருட்டுத்தனமாய் அழைத்துக் கொண்டு ஓடப்பார்த்தாயாக்கும்!... ஆஹா! நல்ல காந்தி சிஷ்யன், அப்பா! தங்கசாமி! எங்கே பிரம்பை எடு! இன்றைக்கு இவன் சிநேகிதர்கள் கடைத் தெருவில் சத்தியாக்கிரகம் செய்து அடிவாங்கினார்கள். இவன் மட்டும் அவர்களுக்குக் குறைந்து போகலாமா? அப்புறம் காந்தி மகாத்மா இவனைப்பற்றிக் குறைவாக எண்ணிக் கொள்ளமாட்டாரா?... சேச்சே! எங்கே அந்தப் பிரம்பை எடு!"

தங்கசாமிக் கவுண்டர் அப்போது பிரம்பை எடுத்துக் கார்க்கோடக் கவுண்டர் கையில் கொடுத்தார்.

இதுவரையில் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த செந்திரு, "சித்தப்பா! அவர்மேல் ஒரு குற்றமும் இல்லை. அவர் என்னை அழைத்து வரவில்லை. சத்தியமாகச் சொல்கிறேன். என் சிநேகியைப் பார்க்க நானாகத்தான் வந்தேன். பாட்டன், கடுதாசிகூடக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வந்தான். அவரை விட்டுவிடுங்கள். அவரை விட்டுவிட்டால், இனிமேல் நீங்கள் சொன்னபடி கேட்கிறேன். அவரை ஏதாவது செய்தீர்களோ, கூச்சல் போட்டு ஊரைக் கூட்டுவேன்" என்று சொல்லிக் கொண்டு செந்திரு ஜன்னல் பக்கம் போனாள்.

"தங்கசாமி! அவளை இழுத்துக் கொண்டு வந்து மேஜைக் காலோட கட்டு!" என்றார் கார்க்கோடக் கவுண்டர்.

செந்திரு எவ்வளவோ திமிறியும் பயன்படவில்லை. தங்கசாமிக் கவுண்டர் அவளை இழுத்துக் கொண்டு வந்து மேஜைக் காலோடு சேர்த்துக் கட்டிவிட்டார்.

கார்க்கோடக் கவுண்டர் சொன்னார்: "தங்கசாமி! காலத்தை ஓட்டிக் கொண்டிருக்க இப்போது சமயமில்லை. இரண்டில் ஒன்று உடனே தீர்ந்துவிட வேண்டும். இந்தப் பையன் இரண்டு விஷயத்துக்குச் சம்மதிக்கிறானா என்று கேள். மைனர்ப் பெண்ணைக் கடத்தி வந்த குற்றம் செய்ததாகவும், மன்னிக்கும்படியும் எழுதிக் கொடுக்க வேண்டும். இனிமேல் கள்ளுக்கடைப் பக்கம் போவதில்லை. மதுவிலக்குப் பிரசாரம் செய்வதில்லை என்று சத்தியம் செய்யவேண்டும். மகாத்மா காந்திமேல் ஆணை வைத்துச் சத்தியம் செய்ய வேண்டும். சம்மதிக்கிறானா, கேள்!"

மகுடபதியின் காதில் இது விழுந்ததும், அவன் பொங்கிக்கொண்டு கத்தினான்: "ஒரு நாளும் மாட்டேன். உயிர்போனாலும் மாட்டேன். என்னை என்னவேணுமானாலும் செய்யுங்கள். அந்தப் பெண்ணை மட்டும் ஒன்றும் செய்ய வேண்டாம். ஏதாவது செய்தீர்களோ, நீங்கள் செய்து வரும் அக்கிரமக் காரியங்கள் எல்லாம் எனக்குத் தெரியும். பத்திரிகைகளில் எழுதி, உங்கள் பெயர் சிரிப்பாய்ச் சிரிக்கும்படி அடித்துவிடுவேன், ஜாக்கிரதை!" என்றான்.

கார்க்கோடக் கவுண்டர் மறுபடியும் பயங்கரமாகச் சிரித்தார்.

"ஓகோகோ! அப்படியா சேதி? - இதுதான் கடைசி வார்த்தையா, கேட்டுவிடு தங்கசாமி!" என்றார்.

இடுப்பிலிருந்து ஒரு பெரிய பேனாக் கத்தியை எடுத்தார். அதன் மடலைப் பிரித்து டார்ச் லைட்டுக்கு நேரே பிடித்தார். கத்தியின் மடல் பளபளவென்று மின்னிற்று. அதன் விளிம்பு கூராயிருக்கிறதா என்று கவுண்டர் விரலால் தடவிப் பார்த்தார்.

செந்திருவுக்கு அடிவயிற்றை என்னமோ செய்தது. அவள் என்னவெல்லாமோ பேச வேண்டுமென்று நினைத்தாள். கூச்சல் போட விரும்பினாள். ஆனால் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. வாயிலிருந்து பேச்சு வரவில்லை; சத்தம் போடக்கூட முடியவில்லை.

கார்க்கோடக் கவுண்டர் ஒருகையில் டார்ச் லைட்டுடனும், ஒரு கையில் பிரித்த கத்தியுடனும் மகுடபதியை நெருங்கினார். "அடே! என்னடா சொல்கிறாய்?" என்று கர்ஜித்துக் கொண்டு கத்தியை ஓங்கினார்.

மகுடபதிக்கு அச்சமயம், "இதெல்லாம் நிஜமல்ல - கனவு கண்டு கொண்டிருக்கிறோம்" என்ற பிரமை உண்டாயிற்று. அவன் அண்ணாந்து, ஓங்கிய கத்தியை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஓங்கிய கத்தி கீழே வரத் தொடங்கியது. அந்த வினாடியில் தடதடவென்று காலடிச் சத்தம் கேட்டது. பெரியண்ணன் குறுக்கே ஓடிவந்து விழுந்தான். (சற்று முன்னால் மூர்ச்சை தெளிந்து அவன் இந்தக் கோரமான காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.) கவுண்டரின் கத்தி, பெரியண்ணன் வலது மார்பண்டை ஆழமாய்ப் பதிந்தது. அவன் "ஆ" என்று அலறிக் கொண்டு கீழே விழுந்தான். அவனுடைய வாய் ஏதோ முணுமுணுத்தது. கார்க்கோடக் கவுண்டர் கீழே குனிந்து அதைக் கவனித்தார். "இரகசியம் ... இரகசியம் ... இத்தனை நாளாய் ... மன்னிக்க வேணும்..." என்ற வார்த்தைகள் அவருடைய காதில் விழுந்தன. உடனே பெரியண்ணனுடைய தலை சாய்ந்தது; பேச்சு நின்றது.

கார்க்கோடக் கவுண்டர் டார்ச் லைட்டை நாலு புறமும் சுழற்றினார். செந்திரு மூர்ச்சையடைந்திருப்பதையும், அவளுடைய தலை தொங்குவதையும் கண்டார். பிரமித்து நின்ற தங்கசாமிக் கவுண்டரைப் பார்த்து, "ஏனப்பா, இப்படி நிற்கிறாய்? அவளுடைய கட்டை அவிழ்த்துத் தூக்கி கொண்டு போய்க் காரில் போடு, அவள் மூர்ச்சையானதே நல்லதாய்ப் போயிற்று. இல்லாவிட்டால் ரொம்ப ரகளை செய்திருப்பாள்" என்றார்.

தங்கசாமிக் கவுண்டர் மறு வார்த்தை சொல்லாமல், செந்திருவைத் தூக்கிக்கொண்டு போனார்.

அவர்கள் போனதும், கார்க்கோடக் கவுண்டர் மறுபடியும் டார்ச் லைட்டைக் கட்டுண்ட மகுடபதியின் மேலும், குத்துப்பட்டுத் தரையில் கிடந்த பெரியண்ணன் உடல் மீதும் செலுத்தினார். பயங்கரமாக ஒரு சிரிப்புச் சிரித்தார்.

"அடே! 'ஜெயிலுக்குப் போகவும் தூக்குமேடை ஏறவும் தயார்' என்று ஆயிரம் கூட்டங்களில் பேசி வந்தாயல்லவா? இப்போது ஜெயிலுக்குப் போகலாம்; அங்கிருந்து தூக்கு மேடைக்கும் போகலாம்" என்று அவர் சொன்னது கனவில் கேட்பது போல் மகுடபதியின் காதில் விழுந்தது.

அடுத்த நிமிஷம் கார்கோடக் கவுண்டர் டார்ச் லைட்டுடன் மச்சுப்படி இறங்கச் சென்றார்.

ஹாலில் அந்தகாரம் சூழ்ந்தது.

ஏமாற்றம்

கார்க்கோடக் கவுண்டர் டார்ச்சு லைட்டுடன் போன பிறகு, சற்று நேரம் வரையில் மகுடபதி சிந்தனா சக்தியையே இழந்திருந்தான். சிறிது சிறிதாக, அவனுடைய மனம் யோசிக்கும் சக்தியைப் பெற்றது. இன்று காலையில் அவன் கிராமத்திலிருந்து கிளம்பிய போது, அன்று இரவுக்குள் தனக்கு இத்தகைய சம்பவங்கள் நேருமென்று யாராவது சொல்லியிருந்தால், இடிஇடியென்று சிரித்திருப்பான். அவ்விதம் சொன்னவனைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் போகும்படி கூறியிருப்பான்.

அவனுடைய மனோ நிலைமையில் இப்போது பயங்கரம் அதிகமாயிருந்ததா, அதிசயம் அதிகமாயிருந்ததா, அல்லது கவலைதான் அதிகமா என்று சொல்வதற்கியலாமலிருந்தது. செந்திருவைப்பற்றி எண்ணியபோது உள்ளத்தில் கவலை மீறியது. ஐயோ! பாவிகள் அவளை எங்கே கொண்டு போனார்களோ? என்ன செய்யப் போகிறார்களோ? பலவந்தமாகக் கல்யாணம் நடந்து விடுமோ? அந்தத் தீரப் பெண் அதற்குச் சம்மதிப்பாளா? சம்மதியாமல் அவள் பிடிவாதம் பிடித்தால் என்னென்ன விபரீதங்கள் நேரிடுமோ? சமயத்தில் போய்க் கல்யாணத்தைத் தடுத்து அவளை மீட்டுக் கொண்டு வரும் சக்தியைக் கடவுள் தனக்கு அளிப்பாரா?

தான் இன்னும் உயிரோடிருப்பதே கடவுளுடைய செயல்தான்! தன் மேல் பாய வேண்டிய கத்தியல்லவா பெரியண்ணன் மேல் பாய்ந்தது? - ஆஹா! சத்தியாக்கிரகம், அஹிம்சை என்றெல்லாம் பேசுகிறோமே? உண்மையான அஹிம்சா தர்மி - சத்தியாக்கிரகி - பெரியண்ணன் அல்லவா? தன்னுடைய உயிரை இன்னொருவனுக்காகக் கொடுக்கத் துணிந்தானே!

ஆனால், பெரியண்ணன் நிஜமாகவே இறந்து போய் விட்டானா? தன் பக்கத்திலே இருக்கும் பெரியண்ணனுடைய உடல் உயிரற்ற சவமா? ஒரு கத்திக் குத்தில் பிராணன் போயிருக்குமோ? உடனே வைத்தியரைக் கூட்டி வந்து சிகிச்சை செய்தால், ஒருவேளை அவன் பிழைத்தாலும் பிழைக்கலாம் அல்லவா? - அடடா! பாவிகள் தன்னை இப்படிக் கட்டிப் போட்டுவிட்டுப் போய் விட்டார்களே...!

மகுடபதி, கட்டை அவிழ்த்துக் கொள்ளும் பொருட்டு இப்படியும் அப்படியுமாகத் திமிறினான். சோபாவும் அவன் கூட வந்ததே தவிரக் கட்டு அவிழவில்லை. அப்புறம், கைகளினால் முடிச்சு எங்கே இருக்கிறதென்று தேடத் தொடங்கினான். அப்போது அவனுடைய மனதில், "ஆஹா! கிழவனுடைய உயிர் மட்டும் போயிருக்கட்டும். எப்படியாவது பழிக்குப் பழி வாங்கியேயாக வேண்டும். அஹிம்சையாவது மண்ணாங் கட்டியாவது! இப்பேர்ப்பட்ட பாதகர்களை இப்பூவுலகில் இல்லாதபடி செய்வதே பெரிய புண்ணியம்" என்று எண்ணினான். கயிற்றின் முடிச்சு எங்கே இருக்கிறதென்று அவன் தேடிய போது பெரியண்ணனுடைய உடல் மேல் கைபட்டது. அவனுடைய உடம்பு ஒரு குலுக்குக் குலுக்கிப் போட்டது அது பிரேதமா, உயிருள்ள உடலா? - இதைத் தெரிந்து கொள்ளும் ஆவலினால் நடுங்கிக் கொண்டே மறுபடியும் உடம்பு தட்டுப்பட்டது. பிரேதமானால் ஜில்லிட்டிருக்கு மென்று அவன் கேள்விப்பட்டிருக்கிறான். இந்த உடம்பு ஜில்லென்று இல்லை; சிறிது சூடு இருப்பதுபோல் தோன்றியது. கவனமாகக் காது கொடுத்துக் கேட்டான். மிகமிக இலேசாக மூச்சுவிடும் சப்தம் கேட்பது போலிருந்தது.

உடனே, மகுடபதியின் பரபரப்பு பன்மடங்கு அதிகமாயிற்று. எப்படியாவது ஓடிப்போய் டாக்டரை, அழைத்து வந்து பெரியண்ணனைக் காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால்... கார்க்கோடக் கவுண்டர் போகும்போது சொன்ன வார்த்தைகள் இப்போது நினைவுக்கு வந்தன. "ஜெயிலுக்கும் போகலாம்! அங்கிருந்து தூக்கு மேடைக்கும் போகலாம்!" இந்த வார்த்தைகளின் அர்த்தம் பளிச்சென்று இப்போது அவனுக்குப் புலனாயிற்று. கார்க்கோடக் கவுண்டர் போலீஸாரை அழைத்து வருவார். தன்னைக் கைது செய்வார்கள். பெரியண்ணனைக் கொலை செய்ததாகத் தன் பேரில் கேஸ் நடக்கும்! கவுண்டர்களே சாட்சி சொல்வார்கள்! குற்றம் ருசுவாகிவிடும்! தன்னைத் தூக்கு மேடையில் ஏற்றுவார்கள்! - தன்னுடைய பேச்சை யாரும் நம்ப மாட்டார்கள். அவர்கள் பேச்சுத்தான் எடுபடும்!... பெரியண்ணனுடைய உயிரைக் காப்பாற்றினாலொழிய, தான் தூக்குமேடை ஏற வேண்டியதுதான்! அப்போது செந்திருவின் கதி என்ன ஆகும்?...

மகுடபதி, வெறி பிடித்தவனைப்போல் அப்படியும் இப்படியுமாகத் திமிறினான். 'பட்' என்று சப்தம் கேட்டது. சற்று நிதானித்துப் பார்த்தபோது அந்தப் பழைய சோபாவின் கால் இவன் இழுத்த இழுப்பில் முறிந்து விட்டது என்று தெரிந்தது. உடனே துள்ளிக் குதித்து எழுந்தான். கயிற்றைக் கீழே தளர்த்திக் கொண்டு வந்து, கடைசியில் கட்டிலிருந்து விடுபட்டான்.

கிழவனை மறுபடியும் தொட்டுப் பார்த்தான்; சூடு இருந்தது. தட்டுத் தடுமாறிக் கொண்டு மச்சுப் படியை அடைந்து கீழே இறங்கினான். கீழே நடையில், புகையடைந்த அரிக்கன் லாந்தர் முன் போலவே எரிந்து கொண்டிருந்தது. வாசல் கதவை இழுத்துப் பார்த்தான். திறக்கவில்லை. வாசற்புறம் கதவைப் பூட்டிக் கொண்டுதான் அவர்கள் போயிருக்க வேண்டும். ஆகையால், அந்தக் கதவைத் திறக்க முயல்வதில் உபயோகமில்லை. கையில் லாந்தரை எடுத்துக் கொண்டு கொல்லைப் புறத்தை நோக்கி விரைந்து நடந்தான். நாலு கதவுகளைத் திறந்து தாழ்ப்பாளையும் திறந்து கொண்டு வெளியே வந்தான். அது சிறு சந்து என்று தெரிந்தது. லாந்தரை உட்புறம் வைத்துவிட்டுக் கதவைச் சாத்தி வெளிப்புறம் நாதாங்கி போட்டுக் கொண்டு, தனக்குத் தெரிந்தவரான டாக்டர் புஜங்கராவின் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாய்ச் சென்றான்.

சுமார் ஒரு மைல் தூரம் நடந்து, அவன் டாக்டர் புஜங்கராவின் வீட்டை அடைந்தபோது நள்ளிரவு இருக்கும். படபடவென்று கதவைத் தட்டினான். புஜங்கராவ் தேசியப் பற்றுள்ள டாக்டர்; காங்கிரஸ் அபிமானி. அன்று சாயங்காலம் போலீஸ் தடியடியினால் காயமடைந்த தொண்டர்களுக்கெல்லாம் சிகிச்சை செய்துவிட்டு, அரைமணி நேரத்துக்கு முன்பு தான் அவர் வீட்டுக்கு வந்து படுத்தார். அதற்குள் யாரோ வந்து கதவை இடிக்கவே, தொண்டர் யாருக்காவதுதான் அபாயநிலை ஏற்பட்டிருக்கிறதோ என்று எண்ணிக் கொண்டு, அவர் வந்து கதவைத் திறந்தார்.

மகுடபதியைப் பார்த்ததும், "ஓகோ! யார் மகுடபதியா? நீ எப்போது வந்தே? சாயங்காலமெல்லாம் உன்னைக் காணவில்லையே!" என்றார்.

மகுடபதி பதறிய குரலில் "டாக்டர்! டாக்டர்! உடனே வரவேணும். ஒரு உயிரைக் காப்பாற்றவேணும். அதோடு என்னையும் தூக்குமேடைக்கு போகாமல் காப்பாற்ற வேணும்" என்றான். அவனுடைய பதட்டத்தையும், முகத்தில் தோன்றிய பீதியையும் பார்த்து, குழறிய வார்த்தைகளையும் கேட்ட டாக்டருக்கு அவனுடைய மண்டையில் போலீஸ் அடி பட்டதினால் மூளை குழம்பி விட்டதோ என்ற சந்தேகம் உண்டாயிற்று.

"மகுடபதி! இப்படி உள்ளே வா! என்ன விஷயம்? யாருக்கு என்ன உடம்பு? நிதானமாய்ச் சொல்லு."

"நிதானமாய்ச் சொல்வதற்கு இது சமயமில்லை, ஸார்! நீங்கள் கிளம்புங்கள். போகும்போதே சொல்கிறேன்" என்றான் மகுடபதி.

"என்ன கேஸ் என்று தெரியாமல் எப்படியப்பா கிளம்புகிறது? தெரிந்தால்தானே அதற்குத் தகுந்த ஆயுதங்களுடன் கிளம்பலாம்?"

"கத்திக் குத்து, டாக்டர், பெரியண்ணன் தெரியுமோ, இல்லையோ பெரியண்ணன்? அவன் மார்பிலே கத்திக் குத்து, இன்னும் உயிர் இருக்கிறது? டாக்டர்! சீக்கிரம் கிளம்புங்கள்."

கத்திக்குத்து என்றதும் டாக்டருடைய தயக்கம் இன்னும் அதிகமாகிவிட்டது. விவரமாய்ச் சொன்னால் தான் கிளம்ப முடியும் என்றார். அதன் மேல் மகுடபதி அவசர அவசரமாக அன்று சாயங்காலம் முதல் தனக்கு நேர்ந்தவைகளை ஒரு மாதிரி சொல்லி முடித்தான்.

எல்லாவற்றையும் கேட்டு, விஷயத்தை ஒருவாறு தெரிந்துகொண்ட புஜங்கராவ், "அப்பா! மகுடபதி! இது டாக்டர் கேஸ் மட்டுமல்ல; இது போலீஸ் கேஸ். ஏற்கனவே நம் பேரில் போலீஸாருக்குக் 'காட்டம்' இருக்கிறது. இந்தமாதிரி விஷயத்தில் அவர்கள் இல்லாமல் தலையிட்டோ மானால், ஆபத்தாய் முடியலாம். முதலில் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவோம். அங்கிருந்து போலீஸ் அதிகாரிகளையும் அழைத்துக் கொண்டு நீ சொல்லும் வீட்டிற்குப் போவோம்" என்றார். வேறு வழியில்லாமல் மகுடபதி ஒத்துக் கொண்டான்.

டாக்டர் புஜங்கராவ், மோட்டார் டிரைவர் போய் விட்டபடியால், காரைத் தாமே எடுத்து மகுடபதியையும் ஏற்றிக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார். மகுடபதி மட்டும் போய் மேற்படி கதையைச் சொல்லியிருந்தானானால், என்ன நடந்திருக்குமோ, எப்படியாகி யிருக்குமோ, தெரியாது. டாக்டரும் கூடப் போயிருந்த படியால், ஒரு போலீஸ் ஸப்-இன்ஸ்பெக்டரும் இரண்டு போலீஸ் கான்ஸ்டேபிள்களும் டாக்டரின் வண்டியிலேயே கிளம்பினார்கள்.

அனுமந்தராயன் சந்தில், குறிப்பிட்ட வீட்டு வாசலில் போய் வண்டி நின்றது. எல்லாரும் அவசரமாய் இறங்கினார்கள். வாசற் கதவு பூட்டியிருந்தது.

"இந்த வீட்டு மச்சிலேதான் கிழவன் குத்துண்டு கிடக்கிறான். சீக்கிரம், சீக்கிரம்!" என்றான் மகுடபதி.

"கதவு பூட்டியிருக்கிறதே!" என்றார் இன்ஸ்பெக்டர்.

"பூட்டை உடைத்தால் போகிறது!"

"பூட்டை உடைப்பதற்கு ரூல் இல்லயே தம்பி!"

"அப்படியானால் வாருங்கள்; கொல்லைப் புறமாகப் போகலாம்."

கார் மறுபடியும் கிளம்பிற்று. கொல்லைப்புறச் சந்து ரொம்பக் குறுகலா யிருந்தபடியால், வண்டியைச் சற்றுத் தூரத்திலேயே நிறுத்திவிட்டு இறங்கி நடந்தார்கள். மகுடபதி எல்லாருக்கும் முன்னால் விரைவாக ஓடினான். மற்றவர்கள் வருவதற்குள் வெளி நாதாங்கியைக் கழற்றிக் கதவைத் திறந்து உள்ளே போய், அவன் வைத்த இடத்திலேயே இருந்த அரிக்கன் லாந்தரைத் தூண்டிவிட்டு எடுத்துக் கொண்டான். எல்லாரும் வீட்டினுள் பிரவேசித்து வாசல் கடைக்கு வந்து மச்சு மேலும் ஏறினார்கள்.

மகுடபதி, பெரியண்ணனுக்கு உயிர் இருக்கிறதோ இல்லையோ என்ற அசாத்திய கவலையுடன், மச்சு ஏறியதும், லாந்தரைத் தூக்கிப் பிடித்தான்.

அவனுடைய இருதயம் ஒரு நிமிஷம் நின்றே போயிற்று. ஏனெனில், சோபாவுக்குப் பக்கத்தில் அவன் எதிர்பார்த்த இடத்தில் பெரியண்ணனுடைய உடலைக் காணவில்லை!

ஹாலில் சுற்று முற்றும் பார்த்தான். எங்கும் காணவில்லை. ஓடிப்போய்த் தான் ஒளிந்திருந்த அறைக்குள் பார்த்தான். அங்கும் இல்லை.

சோபாவுக்குப் பக்கத்தில் சென்று தரையில் இரத்தக் கறை இருக்கிறதா என்று குனிந்து தேடினான். அதுவும் இல்லை. சட்டென்று பெரியண்ணன் சமுக்காளத்தில் விழுந்து கிடந்தான் என்பது நினைவு வந்தது. சமுக்காளத்தையே காணோம். அவர்கள் டிபன் சாப்பிட்ட பொட்டணக் காகிதம், ஜலம் இருந்த கூஜா ஒன்றும் இல்லை. ஒரு நிமிஷம் அந்த வீடுதானா என்பதே மகுடபதிக்குச் சந்தேகமாகி விட்டது. மேஜை நாற்காலிகளும், கால் ஒடிந்த சோபாவும், அந்த வீடுதான் என்ற உறுதியை அவனுக்கு உண்டாக்கின.

இன்னொரு அடையாளமும் இருந்தது. அரிக்கன் லாந்தர் கவிழ்ந்தபோது மண்ணெண்ணெய் கொட்டிற்றல்லவா? அந்தக் கறையும், நாற்றமும் இருந்தன.

ஆனால், பெரியண்ணன் என்னவானான்? அல்லது அவனுடைய உடல் என்னவாயிற்று? மாயமாய் அல்லவா மறைந்து போயிருக்கிறது?

"என்ன தம்பி! 'ஜோக்' பண்ணினாயா?" என்று ஸப்-இன்ஸ்பெக்டர் ஏளனமும் கோபமும் கலந்த குரலில் கேட்டார்.

"உள்ளே தள்ளு!"

ஸப்-இன்ஸ்பெக்டர் சங்கட ஹரிராவ் நாயுடுவின் முகத்தில், அவர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கிளம்பிய போதிருந்தே, ஒருவிதக் கேலிப் புன்னகை குடிகொண்டிருந்தது. அதன் காரணத்தை நாம் அறிய வேண்டுமானால், மகுடபதி டாக்டர் புஜங்கராவ் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்த சமயத்தில் மேற்படி ஸப்-இன்ஸ்பெட்கரின் வீட்டுக்கு நாம் போக வேண்டும்.

அன்று மாலை நடந்த போலீஸ் தடியடி வைபவத்தில் சங்கட ஹரிராவ் நாயுடுவும் கலந்து கொண்டு தம்முடைய பங்கை நிறைவேற்றி வைத்துவிட்டு, இரவு பத்து மணிக்குத் தான் வீட்டுக்கு வந்தார். அவர் வந்த அரை மணி நேரத்துக்கெல்லாம் வாசலில் கார் சத்தம் கேட்டது. உள்ளே வந்தவர் கார்க்கோடக் கவுண்டர் தான். இரண்டு பேருக்கும் ரொம்பவும் சிநேகிதம்.

"என்ன, பிரதர்! என்ன விசேஷம் இந்த நேரத்தில்?" என்று நாயுடுகாரு கேட்டார். உடனே, எதையோ நினைத்துக் கொண்டு, "ஓகோ?" மறந்தே போய்விட்டேனே? - இந்தக் கலாட்டாவில் உங்கள் காரியம் ஒன்று பார்த்துக் கொள்வதாகச் சொல்லியிருந்தீர்களே? காரியம் ஆச்சா?" என்று கேட்டார்.

"ஆச்சு - ஆகவில்லை!" என்றார் கார்க்கோடாக் கவுண்டர்.

"அப்படியென்றால் என்ன?"

"பாதி ஆகிவிட்டது. நீ கொஞ்சம் மனது வைத்தால் பாக்கிப் பாதியும் ஆகிவிடும்."

"என்ன பிரதர், புதிர் போடுகிறீர்கள்?" என்று நாயுடு கேட்டார்.

பிறகு, கார்க்கோடக் கவுண்டர் சாங்கோபாங்கமாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, "பையனைக் கட்டிப் போட்டுவிட்டு வந்திருக்கிறேன். அவனைத் தூக்குமேடைக்கு அனுப்புவது உன் பொறுப்பு" என்றார்.

சங்கட ஹரிராவ் நாயுடு சிறிது நேரம் ஆழ்ந்து யோசித்தார். "கவுண்டரண்ணே! விஷயம் நீங்கள் சொல்லுவது போல் அவ்வளவு சுலபமில்லை. கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. பையன் நடந்த விஷயத்தை 'ஸ்டேட்மெண்ட்' கொடுத்தால், சாட்சிக்குப் பெண்ணைக் கூப்பிட வேண்டியதாகும். பெண் எங்கே என்று தேடும் போது வம்பு வந்து சேரும். மேலும் அவள் யாருக்கோ கடிதம் கொடுத்து அனுப்பியதாகச் சொல்லுகிறீர்கள். அதனால் ஏதாவது தொல்லை வந்தாலும் வரும்" என்றார்.

"என்னப்பா, திடீரென்று உனக்குத் தொடை நடுக்கம் வந்துவிட்டது? இதைவிட எத்தனையோ கஷ்டமான கேஸையெல்லாம் சமாளித்திருக்கிறாயே."

"உங்களுக்குத் தெரியாது, பிரதர்! இப்போது டிபார்ட்மெண்ட் முன்னைப்போல இல்லை. துரை ரொம்பப் பொல்லாதவனா யிருக்கான். ஏதோ இந்தக் காங்கிரஸ்காரர்கள் கலாட்டாவினாலே, நமக்கெல்லாம் டிபார்ட்மெண்டிலே கொஞ்சம் மதிப்பு இருந்து வருகிறது. இல்லாமல் போனால்..."

"உன் அழுகையை ஆரம்பித்து விட்டாயாக்கும், இப்போது என்னதான் செய்யலாம் என்கிறாய்? - நேரம் ஆகிறது."

"வாஸ்தவம். இங்கே, உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தால் ஒன்றும் பிடிபடாது. 'ஸ்பாட்டு'க்குப் போய்ப் பார்ப்போம். தடையங்கள் எல்லாம் எப்படியிருக்கிறதென்று பார்த்துக் கொண்டு தீர்மானிக்கலாம். அந்த லெட்டர் டெலிவரி ஆச்சா, இல்லையா என்று மட்டும் நிச்சயமாய்த் தெரிந்து போய்விட்டால் தேவலை" என்று சொல்லிக் கொண்டே சங்கடஹரிராவ் நாயுடு எழுந்திருந்தார்.

இருவரும் காரில் ஏறி, 'ஸ்பாட்டு'க்குப் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே, இவர்களுக்குப் பெரிய அதிசயம் காத்துக் கொண்டிருந்தது. கட்டிப் போட்டிருந்த மகுடபதியைக் காணோம். அதோடு, கிழவனிடமிருந்து முனகல் சப்தம் வந்தது.

கார்க்கோடக் கவுண்டர், டார்ச் லைட்டைப் பெரியண்ணனுடைய முகத்துக்கு நேராகக் காட்டினார். அவனுடைய கண்கள் சிறிது திறந்தன. கவுண்டரின் முகத்தைப் பார்த்து அக்கண்கள் திறுதிறுவென்று விழித்தன. கொஞ்சம் ஞாபகத்தின் அறிகுறி தோன்றியது. கிழவனுடைய வாய் பேசுவதற்கு முயன்றது. மிக மெலிந்த குரலில் "இரகசியம்... சொல்லாமற் போனால்... மன்னிக்க வேணும்..." என்ற வார்த்தைகள் குழறிக் கொண்டு வந்தன. கிழவன் மறுபடியும் ஞாபகத்தை இழந்துவிட்டான்.

"கிழவனுக்கு உயிர் ரொம்பக் கெட்டி; கத்தி அதிக ஆழம் போகவில்லை. உடனே சிகிச்சை செய்தால் பிழைத்துக் கொள்வான்" என்றார் ஸப்-இன்ஸ்பெக்டர்.

கார்க்கோடக் கவுண்டர் நாயுடுவின் முகத்தைப் பார்த்தபடி திகைத்து நின்றார்.

"அண்ணே! வெறுமே திகைத்துக் கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை. பையன் அனேகமாய் ஸ்டேஷனுக்குத்தான் போயிருப்பான். நான் அவனைப் பார்த்துக் கொள்கிறேன். உடனே கிழவனை அப்புறப்படுத்திவிட வேண்டும்..."

கவுண்டரின் முகத்தில் தோன்றிய கேள்விக் குறியைப் பார்த்துவிட்டு, "ஆமாம்; யோசிப்பதில் பிரயோசனம் இல்லை. கிழவனைப் பிழைக்க வைத்து விடுவதுதான் நல்லது. எது எப்படியிருக்குமோ, என்னமோ? பையனை வேறு விதத்தில் சரிப்படுத்திக் கொள்ளலாம்" என்றார் நாயுடு.

கவுண்டர், "நீ எப்படி ஸ்டேஷனுக்குப் போவாய்? கொண்டுவிட்டுத் திரும்பட்டுமா" என்று கேட்டார்.

"வேண்டாம்; ஸ்டேஷன் இங்கிருந்து கிட்டத்தில் தான் இருக்கிறது. நான் போய்விடுகிறேன். உங்கள் வண்டியில் நான் வந்ததாகவே தெரியவேண்டாம். பையன் அங்கே காத்துக் கொண்டிருந்தால் வம்பு. நீங்களும் அவசரமாய்க் காரியத்தைப் பார்க்க வேண்டும். இங்கே இருக்கிற சமுக்காளம், லாந்தர், பெட்டி, சாமான் ஒன்றும் இருக்கக்கூடாது. போய்விட வேண்டும்."

"அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். இங்கே ஒரு பிசகும் இருக்காது. நீ மட்டும் உன் காரியத்தைச் சரியாய்ப் பார்க்கவேண்டும்.

இந்தப் பேச்சு நடந்து பதினைந்து நிமிஷத்துக்குப் பிறகு ஸப்-இன்ஸ்பெக்டர் சங்கடஹரிராவ் நாயுடு போலீஸ் ஸ்டேஷனை அடைந்தார்; அங்கே இருந்த ஸ்டேஷன் ஆபீசர், கான்ஸ்டேபிள்கள் முதலியவர்களிடம், இன்று கலாட்டா நடந்திருக்கிறபடியால், ஏதாவது ஒரு வேளை 'அர்ஜெண்ட் கால்' வரலாம் என்று ஸ்டேஷனுக்கு வந்ததாகச் சொன்னார். பிறகு, அவர்களுடன் அன்றைய சம்பவங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு, மகுடபதியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவன் தனியாய் வந்தால் என்ன செய்வது, யாருடனாவது வந்தால் என்ன செய்வது என்பதைப் பற்றி அவர் மனம் யோசனை செய்து கொண்டிருந்தது.

நாயுடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகியிருக்கும். பையன் பயந்து எங்கேயோ போய் ஒளிந்து கொண்டு விட்டான். இனிமேல் வரமாட்டான் என்று அவர் எண்ணத் தொடங்கிய சமயத்தில், டாக்டர் புஜங்கராவும் மகுடபதியும் வந்து சேர்ந்தார்கள். ஆகவே, ஸப்-இன்ஸ்பெக்டர், தாம் ஆலோசித்து வைத்திருந்த இரண்டாவது முறையைக் கையாண்டு, அவர்களுடன் அனுமந்தராயன் தெருவுக்குச் சென்றார். மகுடபதி அடைந்த ஏமாற்றத்தைத்தான் சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்தோம்.

"என்ன தம்பி! 'ஜோக்' பண்ணுகிறாயா?" என்று ஸ்ப-இன்ஸ்பெக்டர் ஏளனமாய்க் கேட்டதும், மகுடபதி அவமானத்தினால் மனம் குன்றினான்.

டாக்டர் புஜங்கராவ் ஸப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து "நாயுடுகாரு! என் பேரில் பிசகு. இந்தப் பையன் சொன்னதைக் கேட்டு உங்களுக்குத் தொந்தரவு கொடுத்துவிட்டேன். மன்னிக்கவேண்டும்" என்றார்.

"பரவாயில்லை, டாக்டர்! உங்கள் பேரில் மிஸ்டேக் இல்லை. இந்தப் பையன் ஏதோ 'ட்ரிக்' பண்ணுகிறான் என்று அப்போதே எனக்கு 'டவுட்' இருந்தது. நீங்கள் கூட வந்ததனால் தான் கிளம்பி வந்தேன். கதர் கட்டியிருப்பதைப் பார்த்து நீங்கள் 'டிஸீவ்' ஆகிவிட்டீர்கள்" என்றார்.

மகுடபதி டாக்டரை நோக்கி, "இல்லை டாக்டர்! நான் உங்களை ஏமாற்றவில்லை. சத்தியமாய்ச் சொல்கிறேன். கடவுள்மேல் ஆணையாய்ச் சொல்கிறேன். நான் உங்களிடம் சொன்னதெல்லாம் உண்மை. இந்த அறையில், நீங்கள் இப்போது நின்று கொண்டிருக்கும் இதே இடத்தில் இரண்டு மணி நேரத்துக்கு முன்னால் பெரியண்ணன் கிடந்தான். அவன் மார்பில் கத்தி பாய்ந்திருந்தது. அவன் குத்தப்பட்டு வீழ்ந்ததை இந்தக் கண்களாலே பார்த்தேன்..." என்று ஆத்திரத்துடன் கூறிவந்த போது நாயுடுகாரு குறிக்கிட்டார்.

"சரிதான், நாயனா, சரிதான்! எல்லாரும் காதாலே பார்ப்பார்கள். நீ மட்டுந்தான் கண்ணாலே பார்த்தே! ஒரு வேளை 'ட்ரீம்'லே பார்த்தாயோ, என்னமோ? இல்லாவிட்டால், டிலிரியம் ட்ரீமன்ஸோ? எப்படியிருந்தாலும் ஸ்டேஷனுக்கு வந்து ஸ்டேட்மெண்ட் எழுதி வைத்து விட்டுப் போ!" என்று சொல்லிவிட்டு புஜங்கராவைப் பார்த்து, "வாருங்கள் டாக்டர், போகலாம். மணி ஒன்று அடிக்கப் போகிறது. நல்ல 'வொயிட் கூஸ் கேஸ்' இன்று ராத்திரி" என்றார். சங்கடஹரிராவ் நாயுடுவுக்கு உற்சாகம் வந்தால், ஒரே மணிப்பிரவாள நடையில் இங்கிலீஷும் தமிழும் கலந்து பேசுவார் என்பது பிரசித்தமான விஷயம்.

டாக்டர் முன்னால் போகவும், மற்றவர்கள் எல்லாம் அவரைத் தொடர்ந்து போய்க் காரில் ஏறிக்கொண்டார்கள். மோட்டார் போலீஸ் ஸ்டேஷனை அடைந்ததும் டாக்டரைத் தவிர பாக்கி எல்லாரும் இறங்கினார்கள்.

"குட் நைட், டாக்டர்!" என்றார் நாயுடு.

"குட் நைட் நாயுடுகாரு!" என்று சொல்லிவிட்டு டாக்டர் வண்டியை விட்டார்.

"டாக்டர்! நான் சொன்னது அவ்வளவும் சத்தியம். ஏதோ பெரிய மர்மம் நடந்திருக்கிறது. அப்புறம் வந்து சாவகாசமாய்ச் சொல்கிறேன்..." என்று மகுடபதி இரைந்து கத்திக் கொண்டே இருக்கையில் வண்டி போய்விட்டது.

ஸப்-இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்குள் நுழைந்ததும், "அடே! முந்நூற்றறுபத்தைந்து! பையனை உள்ளே தள்ளு! கையிலே காப்பை மாட்டு!" என்றார்.

இந்த மாதிரி ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்த்த மகுடபதி, "என்னத்திற்காக, ஸார்! என் பேரில் என்ன கேஸ்?" என்று கேட்டான்.

"என்ன கேஸா? எத்தனையோ இருக்கிறது! போலீஸாரிடம் பொய் ஸ்டேட்மெண்ட் கொடுத்த கேஸ்; பூட்டியிருந்த வீட்டுக்குள் பின்புறமாக நுழைந்த கேஸ்; கள்ளுக்கடைக்குத் தீ வைத்த கேஸ்; சட்டத்தை மீறி மறியல் செய்வதற்கு வந்த கேஸ்; இவ்வளவுந்தான்" என்றார் ஸப்-இன்ஸ்பெக்டர்.

அடுத்த நிமிஷம் இரண்டு போலீஸ் சேவகர்கள் மகுடபதியின் கையில் விலங்கை மாட்டி, அவனை லாக் அப்பிற்குள் தள்ளி அடைந்தார்கள்.

மலைச் சிறை

மகுடபதியைப் போலீஸ் 'லாக்-அப்பிற்குள் தள்ளி அடைத்தபோது இரவு சுமார் இரண்டு மணி இருக்கும். கிட்டத்தட்ட அதே சமயத்தில், கோயமுத்தூர் நகரின் எல்லையைத் தாண்டி மேட்டுப்பாளையம் போகும் ரஸ்தாவில் ஒரு மோட்டார் வண்டி போய்க் கொண்டிருந்தது. அந்த வண்டியில் பின் ஸீட்டில் தங்கசாமிக் கவுண்டரும் செந்திருவும் இருந்தார்கள். டிரைவருடைய ஆசனத்தில் கார்க்கோடக் கவுண்டர் உட்கார்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டு போனார்.

செந்திருவுக்கு முன்னமே சுயப் பிரக்ஞை உண்டாகிவிட்டது. ஆனாலும், இன்னும் அவள் உள்ளத்தின் பிரமை நீங்கவில்லை. மகுடபதி சோபாவின் காலில் கட்டுண்டு கிடப்பதும், கார்க்கோடக் கவுண்டர் கத்தியை ஓங்குவதும், பெரியண்ணன் குறுக்கே பாய்வதும், கத்தி அவன் மார்பில் பதிவதும், பெரியண்ணன் கீழே விழுவதுமான காட்சிகள் திரும்பத் திரும்ப அவள் மனக்கண் முன் வந்து கொண்டிருந்தன. வேறு விஷயங்களில் அவள் மனது செல்ல மறுத்தது. கத்திக்குத்து, அரிவாள் வெட்டு முதலியவைகளைக் குறித்துப் பேசுவதை அவள் சர்வ சாதாரணமாய்க் கேட்டிருக்கிறாள். ஆனால் இம்மாதிரிச் சம்பவம் எதையும் அவள் இதுவரைக்கும் பார்த்தது கிடையாது. ஆகையால்தான் அந்தப் பயங்கரக் காட்சி அவள் மனதில் அவ்வளவு ஆழமாய்ப் பதிந்துவிட்டது. கார்க்கோடக் கவுண்டர் கத்தியை ஓங்குவது நினைவில் வரும்போது, அவள் கண்களை இறுக்கி மூடிக் கொள்வாள். உடம்பு வெடவெடவென்று நடுங்கும். பெரியண்ணன் மார்பில் குத்திய கத்தி, உண்மையில் தன்னுடைய மார்பில் பாய்ந்து விட்டதாக அவளுக்குச் சில சமயம் தோன்றும். கத்தி பாய்ந்த இடத்தில் வலிப்பது போலவும் இருக்கும்.

காரில் வேகமாய் சென்றபோது, இரவு நேரத்தின் குளிர்ந்த காற்று விர்ரென்று அவளுடைய முகத்தில் அடிக்கத் தொடங்கியது. இதனால் சிறிது சிறிதாக அவளுக்கு சிந்திக்கும் சக்தி ஏற்பட்டது. தான் காரில் போவதும், தன் பக்கத்தில் தங்கசாமிக் கவுண்டர் உட்கார்ந்திருப்பதும் மெதுவாக மனதில் வந்தன. கார் எங்கே போகிறது என்ற கேள்வி எழுந்தது. சுற்றுமுற்றும் சாலையைப் பார்த்தாள். இருட்டாயிருந்தாலும், அது மேட்டுப்பாளையம் போகிற சாலையென்று ஒருவாறு தெரிந்தது. தன்னைச் சிங்கமேட்டுக்குத்தான் கொண்டு போகிறார்கள் என்று எண்ணிக் கொண்டாள்.

அப்புறம் கொஞ்சங் கொஞ்சமாக அன்று காலையிலிருந்து நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. அவையெல்லாம் உண்மையாக நடந்தவைதானா என்று அடிக்கடி சந்தேகம் உண்டாயிற்று. அந்த வீட்டில், தான் மூர்ச்சையடைந்து விழுந்த பிறகு என்ன நடந்திருக்கும்? பெரியண்ணன் செத்துப் போனவன் தானா? ஒருவேளை பிழைத்திருப்பானா? ஐயோ! பாவிகள் அந்த அழகிய வாலிபரையும்...

இச்சமயத்தில் ஏதோ மங்கிய கனவில் கேட்டது போல், பின்வரும் பேச்சுவார்த்தைகள் அவள் நினைவுக்கு வந்தன.

"பையனை என்ன செய்திருக்கிறீர்கள்?"

"செய்கிறது என்ன? சோபாவின் காலோடுதான் கட்டியிருக்கிறதே? பத்திரமாயிருக்கிறான். பையனை ஒரு மாதத்திற்குள் தூக்கு மேடைக்கு அனுப்பாமற் போனால் நான் கள்ளிப்பட்டி சென்னிமுத்துக் கவுண்டன் மகன் அல்ல..."

"பையன் நடந்ததையெல்லாம் சொல்லிவிட்டால்?"

"நாம் சொல்வதை நம்புவார்களா, அவன் சொல்வதை நம்புவார்களா?"

"இந்தப் பெண் சாட்சி சொன்னால்?..."

"சீ! பைத்தியமே? இவளுக்குக் கூடப் பயப்படுகிறாயா? இனிமேல் இவளை யார் வெளியில் விடப் போகிறார்கள்? நம்மை மீறிச் சாட்சி சொல்லி விடுவாளா?"

"போலீஸ் உளவு விசாரித்தால்..."

"போலீஸ், போலீஸ் என்று அடித்துக் கொள்ளாதே, போலீஸெல்லாம் என் கைக்குள் என்று தெரியாதா? நீ பேசாமலிரு. நான் எல்லாம் பார்த்துக் கொள்கிறேன்."

இவ்விதம் தன் சித்தப்பாவின் குரலும் கள்ளிப்பட்டிக் கவுண்டருடைய குரலும் பேசிக் கொண்டது அவளுக்கு இலேசாக நினைவு வந்தது. அவர்கள் எங்கே இவ்விதம் பேசினார்கள்? தான் எங்கே இருந்து அந்தப் பேச்சைக் கேட்டது? செந்திரு கண்களை இறுக்கி மூடிக் கொண்டு யோசனை செய்தாள். அனுமந்தராயன் தெரு வீட்டிலிருந்து தன்னை வேறொரு வீட்டில் கொண்டு போய்ப் போட்டதும், அங்கே ஒரு கட்டிலில் தான் கொஞ்ச நேரம் கிடந்ததும் - பூர்வ ஜன்மத்து ஞாபகம் போல் நினைவுக்கு வந்தன. அந்த வீட்டில், தான் கட்டிலில் படுத்துக் கிடந்த போதுதான், தனக்கு உணர்வு வந்துவிட்டது என்பதை அறியாமல் அவர்கள் அவ்விதம் பேசிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

அந்தச் சம்பாஷணையை - துண்டு துண்டாகவும் - விட்டு விட்டும் நினைவு வந்த அந்தச் சம்பாஷணையை - செந்திரு அடிக்கடி சிந்தனை செய்தாள். அதனுடைய கருத்து இன்னதென்பதை அவள் அறிந்து கொள்ள கொஞ்ச நேரம் பிடித்தது. விஷயம் இன்னதென்று தெரிந்த போது அவளுக்கு உண்டான பயத்துக்கும், ஆத்திரத்துக்கும் அளவே இல்லை.

பெரியண்ணனைக் கொன்றதாக அந்தக் காந்திக் குல்லாக்காரர்மேல் கொலைக் குற்றம் சாட்டப் போகிறார்கள்! அந்தக் குற்றத்துக்காக அவரைத் தூக்கில் போடப் போகிறார்கள்! - ஆகா, எப்பேர்ப்பட்ட பாதகம்! என்ன பயங்கரமான அக்கிரமம்!

இதை நினைக்க நினைக்க, செந்திருவின் அறிவு விரைவாகத் தெளிந்து வந்தது. அந்த அக்கிரமத்தைத் தவிர்க்கக் கூடியவள் தான் ஒருத்திதான் என்பதை அவள் உணர்ந்தாள். பெரியண்ணன் இன்னொருவர் கையினால் குத்துப்பட்டதை அவள் கண்ணால் பார்த்திருக்கிறாள். கோர்ட்டில் அவள் போய்ச் சொன்னால், நிச்சயமாக அந்தக் காந்தி மனுஷருக்குத் தண்டனை விதிக்க மாட்டார்கள். இதை எப்படியாவது தான் நிறைவேற்ற வேண்டும் என்று அவள் பல்லைக் கடித்துக் கொண்டு தீர்மானித்தாள். அதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தன. பெரியண்ணன் தன் பேரில் அன்பு வைத்த காரணத்தினால் குத்திக் கொல்லப்பட்டான்; அவனுக்காகப் பழிக்குப் பழி வாங்க வேண்டும். அந்த வாலிபர் தன்னால் இந்தப் பெரிய அபாயத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு எறும்பைக் கூடக் கொல்லத் தயங்கக்கூடிய அந்த காந்தி மனுஷர், தன்னால் இப்போது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறார். அவரை எப்படியாவது விடுவிக்க வேண்டும். கார்க்கோடக் கவுண்டரை தான் மணந்து கொள்வதென்பது - அதுவும் அன்று இராத்திரிக்குப் பிறகு - ஒரு நாளும் இயலாத காரியம். அந்தப் பாவி - கொலைகாரன் இன்னும் இந்த உலகத்தில் இருந்தால் என்னென்ன துர்க்கிருத்தியங்கள் செய்வானோ! அந்த அழகிய வாலிபரையல்லவா இவன் தூக்குமேடையில் பார்ப்பதாகச் சொன்னான்? அதற்குப் பதிலாக இவனைத் தூக்கு மேடைக்கு அனுப்புவது தன்னுடைய காரியம்.

கார்க்கோடக் கவுண்டரைக் கல்யாணம் செய்து கொள்ளும்படி, கடைசியில் நிர்ப்பந்தம் ஏற்பட்டால், தன் காதில் இருந்த வைரத் தோட்டை உடைத்துப் பொடி பண்ணிச் சாப்பிட்டு உயிரை விட்டுவிடுவதென்று ஏற்கெனவே செந்திரு தீர்மானித்திருந்தாள். இப்போது அந்த எண்ணத்தை அவள் கைவிட்டாள். தன் உயிரை எப்படியாவது கெட்டியாகக் காப்பாற்றிக் கொள்வது அவசியம்; அப்போதுதான் பெரியண்ணனுடைய அநியாயக் கொலைக்குப் பழி வாங்க முடியும்; அந்த வாலிபரின் உயிரையும் காப்பாற்ற முடியும்.

இப்படி அவள் எண்ணிக் கொண்டிருக்கும்போது, சாலையின் ஒரு புறத்தில் சிங்கமேட்டு ஓடையும், வீடும் தெரிந்தன. வெண்ணிலாவில் ஓடை நீர் வெள்ளிமயமாய்ப் பிரகாசித்தது. அந்த ஓடைக்கரையில், முதன் முதலில் மகுடபதியைத் தான் சந்தித்ததை நினைத்தபோது, அவளுக்கு மயிர்க்கூச்செறிந்தது. மூன்று வருஷமாகத் தன்னைச் சிறை வைத்திருந்த வீட்டுக்கே மறுபடி போகிறோம் என்ற எண்ணம் அவளை என்னமோ செய்தது. முதல் நாள் காலையில் அங்கிருந்து ஒருவரும் அறியாமல் கிழவனுடன் கிளம்பியபோது எவ்வளவு பிசகாய்ப் போயிற்று? தான் நினைத்ததென்ன? மறுபடியும், அன்று இராத்திரியே அந்த ஜெயிலுக்குத் திரும்பி வருவோமென்று...

ஆனால், இதென்ன? வண்டி சிங்கமேட்டுக் குறுக்குப்பாதையில் திரும்பாமல் நேரே போகிறதே? டிரைவர் ஒரு வேளை தெரியாமல் விட்டுக் கொண்டு போகிறனோ? சித்தப்பாவைக் கேட்கலாமென்று செந்திரு வாய் எடுத்தாள். அதே சமயத்தில், தங்கசாமிக் கவுண்டர் "அண்ணே! நன்றாக யோசனை செய்துவிட்டீர்களா? நேரே போக வேண்டியதுதானே?" என்றார்.

"தம்பி! நீ என்னத்திற்கு வீணாகக் கவலைப்படுகிறாய்? யோசனை செய்கிற விஷயத்தையெல்லாம் என்னிடம் விட்டுவிடு" என்ற கார்க்கோடக் கவுண்டரின் குரலைக் கேட்டதும், செந்திரு தேள் கொட்டியவளைப் போல் துடித்தாள். வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தது கள்ளிப்பட்டிக் கவுண்டர்தான் என்பதை இதுவரைக்கும் அவள் கவனிக்கவில்லை. அந்தக் கொலைகார மனுஷருடன் ஒரே வண்டியில் போகிறோம் என்னும் எண்ணம் அவளுக்கு எவ்வளவோ துன்பத்தை உண்டாக்கிற்று. ஓடும் வண்டியிலிருந்து கீழே குதித்து விடலாமா என்று ஒரு கணம் எண்ணினாள். தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்னும் பழைய உறுதியை எண்ணிப் பல்லைக் கடித்துக் கொண்டாள். கள்ளிப்பட்டிக் கவுண்டரும் கூட இருப்பதால், ஜாக்கிரதையாய் நடந்து கொள்ள வேண்டுமென்றும் தீர்மானித்துக் கொண்டாள்.

மோட்டார் வண்டி மேட்டுப்பாளையத்தைத் தாண்டி மேலே சென்றது. நீலகிரி மலையின் அடிவாரத்தை அடைந்தது. மலைப்பாதையில் ஏறிப்போகத் தொடங்கியது.

அப்போது செந்திரு, "ஓகோ! கூனூர் பங்களாவில் நம்மை விடப்போகிறார்கள்" என்று நினைத்தாள். இதனால் ஒரு குதூகலம் உண்டாயிற்று. அவளுடைய தகப்பனார் இருந்த காலத்தில் அவர்கள் கோடைக்குக் கூனூருக்கு வருவது உண்டு. கூனூரில் அவர்களுக்குச் சொந்த பங்களா இருந்தது. பங்களாவுக்குப் பக்கத்தில் தபாலாபீஸ் உண்டு என்பது அவளுக்கு நினைவு வந்தது. பங்களாவில் இருந்த வேலைக்காரன் கூட அவளுடைய மனக்கண் முன் வந்தான். பங்கஜத்துக்கும் அவளுடைய தகப்பனாருக்கும் எம்மாதிரி கடிதம் எழுதுவது, வேலைக்காரனைச் சரிப்படுத்தி எப்படித் தபாலாபீஸில் போடச் சொல்லுவது என்றெல்லாம் யோசனை செய்யத் தொடங்கினாள். இந்த யோசனையிலேயே கண்ணயர்ந்துவிட்டாள்.

தூக்கத்தில் என்னவெல்லாமோ பயங்கரமான கனவுகள் கண்டு பதறிச் செந்திரு கண் விழித்த போது, பலபலவென்று பொழுது விடிந்திருப்பதையும், வண்டி மலையின் மேலே ஒரு மேட்டு பங்களாவின் வாசலில் நிற்பதையும் கண்டாள். அது அவர்களுடைய கூனூர் பங்களா இல்லை. சுற்றிலும் வெகு தூரத்துக்கு மனித வாசஸ்தலமே காணப்படவில்லை. நாலாபுறமும் செங்குத்தாக வளர்ந்த யுகலிப்டஸ் மரங்கள் தான் காணப்பட்டன.

தங்கசாமி கவுண்டர் கீழே இறங்கிச் செந்திருவைப் பார்த்து, "இறங்கு கீழே!" என்றார். செந்திரு இறங்கினாள்.

"போ, உள்ளே!" என்று உத்தரவு பிறந்தது.

செந்திருவுக்கு அந்தச் சூனியமான பங்களாவில் புகுவதற்கு தைரியம் வரவில்லை. குளிரினாலும் பீதியினாலும் நடுங்கிக் கொண்டே, "சித்தப்பா! என்னை எங்கே அழைத்து வந்திருக்கிறாய்? நான் இந்த வீட்டிற்குள் போகமாட்டேன். சிங்கமேட்டுக்கு என்னை அழைத்துக் கொண்டு போ! இல்லாவிட்டால்..."

"தங்கசாமி! அந்தத் தறிதலையைப் பேசவிட்டுவிட்டுப் பேசாமல் நிற்கிறாயே? இழுத்துக் கொண்டு போய் உள்ளே விடு!" என்று கள்ளிப்பட்டியார் கர்ச்சித்தார்.

தங்கசாமிக் கவுண்டர் செந்திருவின் கையைப் பற்றிய போது அவள் திமிறினாள். அப்போது கள்ளிப்பட்டிக் கவுண்டர் அங்கு வந்து, தன் இரும்புக் கைகளினால் செந்திருவைப் பற்றினார். கரகரவென்று இழுத்துக் கொண்டு போய், பங்களாவுக்குள் புகுந்து ஒரு அறையில் அவளைத் தள்ளி வெளியே கதவை இழுத்துச் சாத்திக் கதவில் நாதாங்கியை மாட்டினார். கீழே விழுந்த செந்திரு பரபரப்புடன் எழுந்து வந்து, கதவைப் படீர் படீர் என்று அடித்தாள்.

மறைந்த கடிதம்

மாஜி ஸப்-ஜட்ஜ் அய்யாசாமி முதலியார் ஐம்பத்தைந்து பிராயம் வரையில் பொருட்செல்வம் தேடிய பிறகு இப்போது அருட்செல்வம் ஈட்டுவதில் முனைந்திருந்தார். சைவத்தொண்டர் மகாநாடுகளிலும், மற்றும் சிவனடியார் திருக்கூட்டங்களிலும் அவரைத் தவறாமல் முன்னணியில் பார்ப்பது சாத்தியமாயிருந்தது. "வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்னும் விந்தை மனிதர்" கூட்டத்தை அவர் சேர்ந்தவர் அல்ல. சைவத் திருக்கூட்டங்களுக்கு அவர் தமது இல்லக் கிழத்தியையும் குழந்தைகளையும் அழைத்துப் போவதுண்டு.

பேரூரில் நடந்த சைவத்தொண்டர் மகாநாட்டுக்கு அவர் தமது குடும்பத்துடன் சென்று, ஞானியார் சுவாமிகளின் அமுதமொழிகளையும், இன்னும் பல சைவத்திருவாளர்களின் அரிய சொற்பொழிவுகளையும் செவிகளால் பருகிவிட்டுக் கோயமுத்தூருக்குத் திரும்பி வந்துசேர்ந்தார்.

கோயமுத்தூரில் அய்யாசாமி முதலியாரின் பங்களா அமைதியான சுகவாசத்துக்கென்றே அமைந்ததென்று சொல்லலாம். தென்னிந்தியாவில் பல இடங்களிலும் உத்தியோகம் பார்த்த அய்யாசாமி முதலியார், மயிலாப்பூரில் அவருக்குச் சொந்த வீடு இருந்தும், கோயமுத்தூரின் சீதோஷ்ண ஸ்திதியை முன்னிட்டு, அந்நகரைத் தமது வாசத்துக்குத் தேர்ந்தெடுத்தார். அப்படிப்பட்டவர், நல்ல பங்களாவாகத் தேர்ந்தெடுத்ததில் வியப்பில்லை அல்லவா?

அந்த விஸ்தாரமான அழகிய பங்களாவில் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தனி அறை இருந்தது. அவற்றில், பங்களாவின் முகப்பு அறைகள் இரண்டில் ஒன்று பங்கஜத்தினுடையது. அய்யாசாமி முதலியாரின் அறைக்கு அடுத்தபடியாகப் பங்கஜத்தின் அறையில்தான் புத்தகங்கள் அதிகமாயிருக்கும். ஐந்தாவது பாரத்தில் பங்கஜத்தின் படிப்பை முதலியார் நிறுத்திவிட்டார். அதற்குப் பிறகு அவளுடைய அறிவை விசாலிக்கச் செய்யும் பொறுப்பைத் தாமே ஏற்றுக் கொண்டிருந்தார்.

ஒரு பக்கத்தில் முதலியார் பங்கஜத்துக்குச் சைவ சமய அறிவையும், தமிழ் இலக்கியத்தின் சுவையையும் ஊட்டிக் கொண்டிருக்கையில், மற்றொரு பக்கம், அச்செல்வி சர்க்குலேடிங் லைப்ரெரியிலிருந்து நாவல்கள் வாசித்துத் தள்ளிக் கொண்டிருந்தாள். இதுவரையில் சுமார் முந்நூறு நாவல்கள் வாசித்திருந்தபடியால் தானே ஒரு நாவல் எழுதவும் ஆரம்பித்திருந்தாள். அதில் முக்கால் பங்கு எழுதி, கதாநாயகனையும் கதாநாயகியையும் மிகவும் ரசமான ஒரு கட்டத்தில் கொண்டு விட்டிருந்தாளாதலால், பேரூரில் அவள் செவிகள் ஒரு பக்கம் சைவச் சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டே இருக்கையில் இன்னொரு பக்கம் அவளுடைய மனம் வீட்டில் விட்டு வந்த நாவல் கையெழுத்துப் பிரதிக்குத் திரும்பத் திரும்பப் போய்க் கொண்டிருந்தது ரசமான விஷயமாகும்.

எனவே, அன்று காலையில் பேரூரிலிருந்து திரும்பி பங்களாவுக்கு வந்து சேர்ந்ததும், பங்கஜம் அவசர அவசரமாகத் தன்னுடைய அறையைத் திறப்பதற்குப் போனாள். பங்களாவில், தோட்ட வேலை, மேஜை நாற்காலிகளைத் துடைக்கும் வேலை எல்லாவற்றிற்கும் மருதக் கவுண்டர் என்று ஒருவன் இருந்தான். அவன் கையில் மேஜை துடைக்கும் துணியுடன் பங்கஜத்தின் பின்னோடு வந்து "சாவியை இங்கே கொடு, அம்மா! நான் திறக்கிறேன்" என்றான்.

"எல்லாம் நானே திறந்து கொள்கிறேன்" என்று பங்கஜம் பூட்டைத் திறந்தாள். வழக்கம் போல சுலபமாய்த் திறக்காமல், சாவி சுழல்வதற்குக் கஷ்டப்பட்டது.

"இது என்ன, யாராவது பூட்டை மறுசாவி போட்டுத் திறந்தார்களா?" என்று கேட்டுக் கொண்டே, பங்கஜம் அழுத்தித் திறந்தாள். பூட்டும் திறந்து கொண்டது.

மருதன், "அதென்ன அம்மா, அப்படிச் சொல்றே? இங்கே எவன் மறுசாவி போட்டுத் திறக்கிறவன்?" என்று கேட்டுக் கொண்டே பங்கஜத்தின் பின்னோடு அறைக்குள் நுழைந்து மேஜை நாற்காலிகளையும் புத்தகங்களையும் மளமளவென்று தட்டத் தொடங்கினான்.

"ஒரே தூசாயிருக்கிறதே? தட்டின அப்புறம் வந்தா நல்லாயிருக்குமே?" என்றான் மருதன். அப்போது அவனுடைய கண்கள் அறையின் நாலாபக்கமும் சுழன்று சுழன்று பார்த்தன.

பங்கஜம் அவன் சொன்னதையும் கவனிக்காமல் தூசையும் பொருட்படுத்தாமல், தன்னுடைய நாவல் கையெழுத்துப் பிரதியை ஆவலாகப் புரட்டிப் பார்க்கத் தொடங்கினாள்.

மருதன், சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே வந்தவன், வாசல் ஜன்னலண்டை திடீரென்று குனிந்து எதையோ எடுத்தான்.

அது பங்கஜத்துக்குத் தெரிந்துவிட்டது. அவன் எடுத்தது வெள்ளையாய் ஏதொ ஒரு கடுதாசி மாதிரி இருந்தது.

"அது என்ன மருதா, இங்கே கொண்டு வா!" என்றாள்.

"ஒன்றுமில்லை, அம்மா, குப்பை கடுதாசி" என்று சொல்லிக் கொண்டே மருதக் கவுண்டன் கடுதாசியைக் கையில் கசக்கினான்.

"கொண்டு வா என்றால் கொண்டு வா!" என்று பங்கஜம் வீடு இடியும் படி கத்தினாள். அவள் கண்களின் தீப்பொறி பொறிந்தது.

முன்னொரு தடவை பங்கஜம் கதை எழுதியிருந்த காகிதம் ஒன்று பறந்து போய்த் தரையில் விழுந்தது. அதை வீடு கூட்டுகிறவள் குப்பைத் தொட்டியில் கொண்டு போய்ப் போட்டுவிட்டாள். அதுமுதல் எந்தக் காகிதமானாலும் அதை வேலைக்காரர்கள் தொட்டால், பங்கஜத்துக்குப் பிரமாதமான கோபம் வந்துவிடும்.

மருதன் "ஏன் அம்மா கோவிச்சுக்கிறே? இந்தா!" என்று கொடுத்தான்.

பங்கஜம், அதை வாங்கிப் பிரித்துப் படித்தாள். படிக்கும் போதே அவளுடைய முகத்தில் எல்லையற்ற ஆச்சரியத்தின் அறிகுறி உண்டாயிற்று.

"முட்டாள்! இதைப் போய்க் கசக்கி எறியப் பார்த்தாயே?" என்று சொல்லிக்கொண்டே அவள் மருதன் இருந்த இடத்தை நிமிர்ந்து பார்த்தாள். அங்கே அவனைக் காணவில்லை. பங்கஜம் கடிதம் படிக்கும்போதே அவன் நழுவி விட்டான்.

"மருதா! மருதா!" என்று கூப்பிட்டுவிட்டு, மறுபடியும் ஒரு தடவை கடிதத்தைப் படித்தாள். உடனே அந்த அறையிலிருந்து வெளிக்கிளம்பி, தகப்பனாரின் அறையை நோக்கிச் சென்றாள். வழியில் தாழ்வாரத்தில் மருதன் எதிர்ப்பட்டான்.

"இந்தக் காகிதம் எப்படியடா வந்தது? யார் என் அறையில் போட்டார்கள்?" என்று கோபமாக அவனைக் கேட்டாள்.

"எனக்குத் தெரியாது. அம்மா! நான் போட்டிருந்தால் அதை எடுத்துக் கசக்குவேனா? எந்த நாய் போட்டதோ?" என்றான்.

பங்கஜம் விரைந்து அப்பாவின் அறைக்குள் சென்றாள். அங்கே அப்பாவைக் காணவில்லை.

"மருதா! அப்பா எங்கே?" என்று கத்தினாள்.

"ஸ்நானம் செய்யறாங்க!" என்றான் மருதன்

இதற்குள், சமையர் கட்டிலிருந்து, "பங்கஜம்! காப்பி சாப்பிட்டுப் போ!" என்று தாயாரின் குரல் கேட்டது.

பங்கஜம் கடிதத்தை முதலியாரின் மேஜை மேலிருந்த பெரிய புராணத்துக்குள் வெளியில் கொஞ்சம் தெரியும்படி நீட்டி வைத்துவிட்டு, சமையலறைக்குச் சென்றாள். அந்தக் கடிதத்தைப் பற்றித் தாயாரிடம் சொல்ல அவள் விரும்பவில்லை.

சற்று நேரத்துக்கெல்லாம், பங்கஜம் காப்பி சாப்பிட்டுவிட்டு முதலியாரின் அறைக்கு வந்தபோது அங்கே அவர் இருந்தார். பங்கஜம் பெரிய புராணத்தைப் புரட்டினாள்; மறுபடியும் புரட்டினாள்; மறுபடியும் புரட்டினாள்.

தகப்பனாரைப் பார்த்து, "அப்பா! இந்தப் புத்தகத்துக்குள் ஒரு கடிதம் வைத்தேனே, எடுத்தீர்களா?" என்றாள்.

"நான் எடுக்கவில்லையே? என்ன கடிதம்?"

"இது என்ன அதிசயமா யிருக்கே!" என்று சொல்லிக் கொண்டே பங்கஜம் மேஜை மேலிருந்த திருமந்திரம், திருவாசகம், திருக்குறள், கலித்தொகை, கம்பராமாயணம் முதலிய புத்தகங்களையும் புரட்டத் தொடங்கினாள். ஒன்றிலும் அகப்படவில்லை.

"இதென்ன மாயமாயிருக்கே? அதற்குள் எப்படிப் போயிருக்கும்?" என்றாள் பங்கஜம்.

"நீ எழுதுகிற நாவலில் யாராவது துப்பறிகிறவன் வருகிறானோ இல்லையோ? அவனை அழைத்துக் கொண்டு வந்து கண்டுபிடிக்கச் சொல்லு. என்ன கடிதம், என்ன விஷயம் என்று எனக்குத் தெரியப்படுத்துவது உசிதமாயிருந்தால், அவ்விதமே செய். இல்லாவிட்டால் உன்னுடைய அறைக்குப் போய் நாவலின் அடுத்த அத்தியாயத்தை எழுது!" என்று முதலியார் தமாஷ் செய்தார்.

"நாலாவது, ஒன்றாவது, அப்பா! நாவலில் நடப்பதையெல்லாம் காட்டிலும் அதிசயமான சம்பவம் நடந்திருக்கிறது. செந்திருவை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதோ, இல்லையோ?"

"ஞாபகம் இல்லாமல் என்ன? அதுகிட்டேயிருந்து கடிதம் வரவில்லை என்று தான் நீ உருகிக்கொண்டிருந்தாயே! கடிதம் அதனிடமிருந்து வந்ததுதானா?"

"ஆமாம், அப்பா! ஆனால், கடிதத்தில் எழுதியிருந்த விஷயம் ரொம்ப ஆச்சரியம்."

"ரொம்ப ரொம்ப ரொம்ப ஆச்சரியமா?"

"விளையாட்டுக்குச் சொல்லவில்லை, அப்பா! இரண்டு மூன்று தடவை நான் வாசித்தேன்; அதனால் அப்படியே ஞாபகம் இருக்கிறது. அதில் எழுதியிருந்தபடியே உங்களுக்கு எழுதிக் காட்டி விடுகிறேன்" என்று கூறி மளமளவென்று காகிதமும் பேனாமும் எடுத்துப் பின்வருமாறு எழுதினாள்:

"என் உயிரினுமினிய அருமைத் தோழி பங்கஜத்துக்குச் செந்திரு அன்புடன் எழுதிக் கொண்டது. இரண்டு மாதத்துக்கு முன்பு நீ போட்ட கடிதம் கிடைத்தது. அதற்கு நான் பதில் போடாததற்கு காரணம் நான் ஜெயிலிலே இருந்தது தான். மூன்று வருஷமாய் நான் ஜெயிலிலேதான் இருந்து வருகிறேன். எனக்கு ஒரு பெரிய ஆபத்து வருவதற்கு இருக்கிறது. அதனால் இன்று காலையில் ஜெயிலிலிருந்து தப்பித்துக் கொண்டு ஓடி வந்துவிட்டேன். இந்தக் கடிதம் கொண்டு வருகிற பாட்டனுக்கு என்னிடம் ரொம்பவும் அபிமானம். அது மற்ற விவரம் எல்லாம் சொல்லும். நீ உடனே புறப்பட்டு வந்து என்னை அழைத்துப் போகவும். உன்னிடமும் மாமாவிடமும் யோசனை கேட்க வேண்டியிருக்கிறது. உங்களைத் தவிர எனக்கு வேறு கதி கிடையாது. உங்கள் வீடு தெரியாதபடியால் பாட்டனை அனுப்பியிருக்கிறேன். ஊரில் கலாட்டாவாக யிருப்பதால், உடனே நீயாவது மாமாவாவது வந்து என்னை அழைத்துப் போகவும். ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகமாக உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இப்படிக்கு,
உன் அன்புள்ள தோழி,
செந்திரு"

மேற்கண்டவாறு பங்கஜம் எழுதி, முதலியாரிடம் கொடுத்தாள். முதலியார் அதைப் படித்துவிட்டு, "இது என்ன வேடிக்கை, குழந்தை! நீ எழுதும் நாவலில் யாராவது கதாநாயகி இப்படிக் கடிதம் எழுதுகிறாளா" என்று கேட்டார்.

பங்கஜம் சிறிது ஆத்திரத்துடன், "இல்லவே இல்லை அப்பா! சத்தியமாய்ச் சொல்கிறேன். நிஜமாகவே வந்த கடிதந்தான்" என்றாள்.

"அதைச் செந்திருதான் எழுதினாள் என்று உனக்கு எப்படித் தெரியும்?"

"என் தோழியின் கையெழுத்து எனக்குத் தெரியாதா, அப்பா?"

முதலியார் சிறிது சிந்தனையில் ஆழ்ந்தார். "மேலே விலாசம், தேதி போட்டிருந்ததா?" என்று கேட்டார்.

"கோயமுத்தூர் என்று போட்டிருந்தது. தேதி போட்டிருந்ததாக ஞாபகம் இல்லை."

"கடிதம் எங்கேதான் போயிருக்கும்? ஆனால் உன்னிடம் அது எப்படிக் கிடைத்தது? அதைச் சொல்லவில்லையே?" என்றார் முதலியார்.

பங்கஜம் விவரமாகச் சொன்னாள்.

"மருதா! மருதா!" என்று முதலியார் கூப்பிட்டார். மருதன் வரவில்லை. மருதன் வீட்டிலேயே இல்லையென்று தெரிந்தது.

அப்போது மருதன், அந்தப் பங்களா இருந்த சாலை முனைக்கு அப்பால் ஒதுங்கி நின்ற மோட்டார் வண்டியின் டிரைவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான். டிரைவர் அதை வாங்கிக் கொண்டு அவனிடம் ரூபாய் ஐம்பது நோட்டாகக் கொடுத்தான்.

"இந்த ஐம்பது ரூபாய் என்னத்துக்கு ஆச்சு? எனக்கு வேலை போய்விடும் போலிருக்கு" என்றான் மருதன்.

"வேலை போனால் நேரே கள்ளிப்பட்டிக் கவுண்டர் வீட்டுக்கு வந்துவிடு. வேலை கொடுப்பாரு!" என்றான் டிரைவர்.

மகுடபதி எங்கே?

காணாமற்போன கடிதம் வீடெங்கும் தேடிப்பார்த்தும் அது அகப்படவில்லை. மார்க்கெட்டுக்குப் போய்விட்டு வந்ததாகச் சொன்ன மருதக் கவுண்டனைக் கடிதத்தைப் பற்றிக் கேட்டதற்கு அவன், "நான் கண்டதே இல்லை" என்று சத்தியம் செய்துவிட்டான்.

அய்யாசாமி முதலியார் அத்துடன் அந்தச் சனியனை மறந்து விட்டு, சைவ சித்தாந்தப் பத்திரிகைக்குத் தாம் எழுதி வந்த பதினோராந் திருமுறை ஆராய்ச்சியில் இறங்கியிருப்பார். அதற்குப் பங்கஜம் இடங்கொடுக்க வில்லை. அவள் நாவல் எழுதுவதைக் கூட விட்டுவிட்டாள். ஏற்கெனவே செந்திருவின் பேரில் அவளுக்கிருந்த வாஞ்சையோடு, இப்போது அவளைப் பற்றிய மர்மத்தை அறியும் ஆவலும் சேர்ந்து கொண்டது. அப்பாவை நச்சுப்பண்ணத் தொடங்கினாள்.

"கேளுங்கள், அப்பா! நாங்கள் ஸெகண்ட் பாரத்திலே வாசித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் என்னைக் காட்டிலும் செந்திரு அதிகமாக ஐந்து மார்க் வாங்கி விட்டாள். அதற்காக அவள் அழுஅழு என்று அழுதாள். மறுநாள் வேண்டுமென்று கணக்கைத் தப்பாகப் போட்டுக் குறைச்சலா மார்க் வாங்கினாள். அவள் வீட்டில் ஏதாவது பணியாரம் பண்ணினால் நான் வந்து சாப்பிட்டாலொழிய அவள் சாப்பிடமாட்டாள். நான் புதுத்துணி உடுத்தாமற் போனால் அவளும் உடுத்த மாட்டாள். கோயிலுக்குப் போய் சுவாமி கும்பிடும்போது, எனக்காகத்தான் முதலில் பிரார்த்தனை செய்வாள். இப்படியெல்லாம் பிராண சிநேகிதியாய் இருந்தவளுக்கு இப்போது ஒரு கஷ்டம் வந்திருக்கும்போது, அதைத் தெரிந்து கொண்டு ஏதாவது பரிகாரம் செய்யாமல் நான் எதற்காக உயிரோடிருப்பது?" என்று இப்படியெல்லாம் தொண தொண வென்று பேசி முதலியாரின் பிராணனை வாங்கினாள். செல்லப் பெண்ணாகிய பங்கஜத்தின் மனம் உண்மையாகவே கவலையில் ஆழ்ந்திருக்கிறது என்பதை முதலியார் கண்டபோது, ஏதாவது செய்துதானாக வேண்டுமென்று தீர்மானித்தார். இன்னது செய்வது என்பதுதான் தெரியவில்லை. எனவே, அவருடைய நண்பரான போலீஸ் டிபுடி சூபரிண்டெண்டெண்ட் ராவ்பகதூர் சங்கநாதம் பிள்ளையிடம் யோசனை கேட்பதென்று தீர்மானித்தார்.

ராவ்பகதூர் சங்கநாதம் பிள்ளை போலீஸ் இலாகாவிலும் பொதுஜனங்களிடமும் ரொம்பப் பெயர் வாங்கினவர். இலாகவில் அவரைத் திரிசங்குப்பிள்ளை என்று சொல்வதுண்டு. ஜனங்கள் சாதாரணமாக லஞ்சநாதம் என்று அவரை அழைப்பார்கள்.

அவருக்கு ராவ்பகதூர் பட்டம் எப்படி வந்ததென்றால், கொல்லிமலைப் பக்கத்தில் ஒரு பிரசித்திபெற்ற கொள்ளைக்காரனைப் பிடிக்கப்போய் உயிருடன் திரும்பி வந்த வீரத்துக்காகத்தான். அதாவது, அவருடன் போன போலீஸ் ஹெட்கான்ஸ்டபிள் ஒருவன், கொள்ளைக்காரனுடன் நேருக்கு நேர் நின்று துப்பாக்கியால் சுட்டபோது, கொள்ளைக்காரன் காயம்பட்டுவிழ, ஹெட்காஸ்டபிள் சுடப்பட்டு இறந்தான். அவன் மனைவிக்கு மாதம் ஒன்பது ரூபாய் பென்ஷன் கிடைத்தது. சங்கநாதம்பிளை சற்று தூரத்தில் மரத்தின் மறைவில் நின்று தப்பித்துக் கொண்டு திரும்பியபடியால், கொள்ளைக்காரனைப் பிடித்ததற்காக பிரமோஷனும் ராவ் பகதூர் பட்டமும் கிடைத்தன!

அவருக்குத் திரிசங்குப்பிள்ளை என்று ஏன் பெயர் வந்ததென்றால், இவர் ஏககாலத்தில் இகத்தையும் பரத்தையும் தேடிக்கொள்ள முயன்றதனால்தான்.

சங்கநாதம்பிள்ளை, சைவத்தொண்டர் மகாநாடுகளில் சொற்பொழிவு நிகழ்ந்த ஆரம்பித்தாரானால், சபையில் சிறிது நேரத்துக்கெல்லாம் சாதாரணமாக சபைத்தலைவரையும் மகாநாட்டுக் காரியதரிசியையுந் தவிர யாரும் இருக்கமாட்டார்கள். வேடிக்கையாகச் சொல்வதுண்டு: "காங்கிரஸ் கூட்டங்களைக் கலைப்பதற்குச் சங்கநாதம் பிள்ளையை அனுப்பினால் போதும்; குண்டாந்தடிக்குப் பயப்படாத ஜனங்கள் கூட அவருடைய சொற்பொழிவுக்குப் பயந்து ஓடிப்போவார்கள் என்று."

அப்படிப்பட்ட சங்கநாதம்பிள்ளையின் பிரசங்கத்தைக் கடைசி வரையில் இருந்து ஆர்வத்துடன் கேட்டுப் பாராட்டுகிறவர் நமது அய்யாசாமி முதலியார். அவர் போகிறவரையில் பங்கஜமும் சபையிலிருந்து எழுந்து போக முடியாதாகையால், ஸ்திரீகள் பகுதியில் அவளும் சிவனே யென்று தன்னுடைய நாவலின் அடுத்த அத்தியாயத்தைப் பற்றிச் சிந்தனை செய்துகொண்டு உட்கார்ந்திருப்பாள்.

இப்படியாக, அப்பா, பெண் இருவருக்கும் நன்றிக் கடன் பட்டவரான ராவ்பகதூர் சங்கநாதம் பிள்ளை, அவர்களுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தார். முதலில், அவர்கள் செந்திருவைப் பற்றியும், மர்மமாக மறைந்த கடிதத்தைப் பற்றியும் சொன்னதையெல்லாம் அவர் காதில் சரியாக வாங்கிக் கொள்ளவில்லை. பேரூரில் தாம் நிகழ்த்திய சொற்பொழிவைக் குறித்து அவர்களுடைய அபிப்பிராயத்தை அறிவதிலேயே ஆவலாயிருந்தார். "பாருங்கள், மாமா, நான் எழுதுகிற நாவலிலே போலீஸ் இலாகாவே கொஞ்சமும் உபயோகமில்லை என்று எழுதி வெளுத்து வாங்கி விடுகிறேன்" என்று பங்கஜம் சொன்னதனால்கூடப் பலன் ஏற்படவில்லை. "நான் வாங்குகிற பெயரெல்லாம் வாங்கியாச்சு, அம்மா! இன்னும் இரண்டு வருஷம் இருக்கிறது பென்ஷன் வாங்க, இனிமேல் எனக்கு என்ன?" என்றார்.

கடைசியில் பங்கஜம், "மாமா! நீங்கள் மட்டும் செந்திருவை எனக்குக் கண்டுபிடித்துக் கொடுக்காமல் போனீர்களோ, இனிமேல் உங்களுடைய பிரசங்கத்தைக் கேட்கவே வரவேட்டேன்" என்று சொன்னதுந்தான், ராவ்பகதூருக்கு 'ஓகோ? விஷயம் 'ஸீரியஸ்' போலிருக்கிறது என்ற உணர்ச்சி வந்தது. பிறகு, பங்கஜத்தை எல்லா விவரமும் சொல்லச் செய்து கவனமாகக் கேட்ட பிறகு, "சிங்கமேட்டுக் கவுண்டர் காரியங்கள் அவ்வளவு சரியாயில்லை யென்று எனக்குக் கூடக் கேள்வி; விசாரிக்க வேண்டிய விஷயந்தான்" என்று ஒப்புக்கொண்டார்.

இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே, மருதக் கவுண்டர் உள்ளே வந்து "டாக்டர் புஜங்கராவ்" என்று அச்சடித்த சீட்டைக் கொடுத்தான்.

"இது யார் டாக்டர் புஜங்கராவ்? எனக்குத் தெரியாதே?" என்றார் அய்யாசாமி முதலியார்.

"டாக்டர் புஜங்கராவ், ரொம்ப நல்ல மனுஷர். காரியமில்லாமல் வந்திருக்கமாட்டார்" என்றார் ராவ்பகதூர்.

டாக்டர் புஜங்கராவ் உள்ளே வந்ததும், சங்கநாதம் பிள்ளையைப் பார்த்துத் திடுக்கிட்டார்.

அப்போது பிள்ளை "என்ன, டாக்டர்? ஏது இவ்வளவு சாவகாசம்? சத்தியாக்கிரகமெல்லாம் ஒரு மாதிரி தீர்ந்து போய் விட்டதாக்கும்?" என்றார்.

"சத்தியாக்கிரகம் ஒரு மாதிரி தீர்ந்துபோனது போலத்தான். ஆனால் எனக்கு இன்னும் பல நாளைக்கு ஜோலி வைத்திருக்கிறீர்கள். மண்டை உடைந்தவனும், முழங்கால் சில்லுப் பேர்ந்தவனும், எலும்பு ஒடிந்தவனுமாகப் பதினைந்து பேருக்குச் சிகிச்சை செய்து வருகிறேன்" என்றார் டாக்டர்.

டாக்டர் புஜங்கராவ் பின்னர் அய்யாசாமி முதலியாரிடம் தனியாகக் கொஞ்சம் பேசவேண்டுமென்று தெரிவிக்க, இருவரும் எழுந்து அடுத்த அறைக்குப் போனார்கள். ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் அவர்கள் திரும்பி வந்தார்கள். "பிள்ளைவாள்! என்ன ஆச்சரியத்தைச் சொல்ல? நாம் பேசிக் கொண்டிருந்த விஷயமாகத்தான் டாக்டரும் வந்திருக்கிறார்" என்றார் முதலியார்.

பிறகு, டாக்டர் புஜங்கராவ், அன்றிரவு மகுடபதி தன்னிடம் வந்தது முதல் நடந்தது எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னார். அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, நடுவில் சங்கநாதம் பிள்ளை விரலால் சமிக்ஞை செய்துவிட்டு எழுந்து வெளியில் போய், எச்சில் துப்பிவிட்டுத் திரும்பி வந்தார். கதவுக்குப் பக்கத்தில் மருதக் கவுண்டன் நின்று உற்றுக் கேட்டுக் கொண்டிருந்ததைக் கடைக்கண்ணால் கவனித்துவிட்டுத்தான் திரும்பினார். உள்ளே வந்ததும் ஒரு சீட்டில், இங்கிலீஷில் "இந்தக் கடிதம் கொண்டு வருகிறவனைப் பிடித்து நான் வரும் வரையில் லாக்-அப்பில் வைத்திருக்கவும்" என்று எழுதி கவரில் போட்டு மூடினார். "முதலியார்வாள்! உங்கள் வேலைக்காரனை இதைக் கொண்டு போய்ப் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்துவிட்டு வரச் சொல்லுங்கள்" என்றார்.

அவ்விதமே முதலியார் மருதக் கவுண்டனை அழைத்துக் கடிதத்தைக் கொடுத்தனுப்பினார்.

பின்னர், டாக்டர் புஜங்கராவ் பாக்கிக் கதையையும் சொன்னார். அன்றிரவு சம்பவங்களைத் தாம் மறந்து விட்டுத் தம் காரியத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், ஆனால் ஸப்-ஜெயிலிலிருந்து தன்னை வந்து பார்க்க வேணுமென்று அடிக்கடி மகுடபதி சொல்லி அனுப்பியதாகவும், அதன்மேல் போய்ப் பார்த்ததாகவும், அப்போது மகுடபதி, "டாக்டர்! அன்று இரவு நான் சொன்னதில் உங்களுக்கு நம்பிக்கை பிறக்காவிட்டால், தயவுசெய்து மாஜி ஸப்-ஜட்ஜ் அய்யாசாமி முதலியார் வீட்டுக்குப் போய்ச் செந்திருவின் கடிதம் வந்ததா என்று விசாரியுங்கள்" என்று வற்புறுத்திச் சொன்னதாகவும், அதன்மேல் முதலியாரைத் தேடி வந்ததாகவும் கூறினார்.

கடிதம் வந்தது உண்மை என்றும், அது காணாமல் போன விந்தையைப் பற்றியும் முதலியார் டாக்டருக்குச் சொன்னார். எல்லோரும் சேர்ந்து ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் என்று ஏகமனதாகத் தீர்மானித்தார்கள். மகுடபதியைத் தாமே நேரில் பார்த்துவிட்டு அவனை விடுதலை செய்ய முயற்சிப்பதாகச் சங்கநாதம் பிள்ளை வாக்களித்துவிட்டுப் போனார்.

அன்று அஸ்தமித்த பிறகு ஸப்-இன்ஸ்பெக்டர் சங்கடஹரிராவ் நாயுடு எதிர்பாராத விதமாக டாக்டர் புஜங்கராவிடம் வந்தார்.

"என்ன பிரதர்! பெரிய எழவாப் போச்சு! இந்த மாதிரி டிபார்ட்மெண்டிலே வேலை பார்க்கிறதை விட நானும் உங்களைப்போல ஏன் மெடிகல் காலேஜிலே சேரவில்லை என்று 'ரிபெண்ட்' பண்ணவேண்டியதாயிருக்கு" என்றார்.

"என்ன, நாயுடுகாரு? என்ன வந்துவிட்டது இப்போது?" என்று டாக்டர் கேட்டார்.

"அதை ஏன் கேட்கிறீர்கள்? அன்றைக்கு ராத்திரி வந்து கில்லாடித்தனம் பண்ணினானல்லவா? மகுடபதி என்ற பையன்? அவனாலே மெத்தத் தொந்தரவு, பிரதர்! ஒரு வேளை உங்களைப் பார்க்க வந்திருப்பானோ என்று பார்க்க வந்தேன்."

"இது என்ன கூத்து? அவன் தான் ஸப்-ஜெயிலில் இருந்தானே? நான் கூட முந்தாநாள் பார்த்தேனே?"

"ஆமாம், டாக்டர்! நேற்றுக் காலை வரையில் இருந்தான். நேற்று மத்தியானந்தான் ஜில்லா மாஜிஸ்ட்ரேட் கூப்பிட்டு, 'ஜாமீன் கேஸ் ஒன்றும் போடவேண்டாம். இந்தத் தடவை ஜெயிலுக்கே யாரையும் அனுப்பக்கூடாது. ஆகவே எல்லாரையும் துரத்தி விடுங்கள்' என்றார். இந்தப் பையனையும் வெளியில் அனுப்பி விட்டேன். இப்போது என்னடாவென்றால்..."

டாக்டர் புஜங்கராவ் மிக்க அதிசயத்துடன், "ஆமாம், இப்போது ஏன் அவனைத் தேடுகிறீர்கள்?" என்று கேட்டார்.

"திடீரென்று நம்ம டிபுடி துரைவாளுக்கு ஏதோ தோன்றிவிட்டது. 'அந்த மகுடபதியை எங்கிருந்தாலும் கொண்டு வா!' என்கிறார். நான் எங்கே போய்த் தேடுறது. பிரதர்! இன்னொன்று கேளுங்கள். யாரோ ஒரு மருதக் கவுண்டன் என்பவனிடம் 'இவனைப் பிடித்து லாக்-அப்பில் போடு' என்று கடிதம் கொடுத்து அனுப்பினாராம். அவன் எப்படியோ விஷயம் தெரிந்து கொண்டு இன்னொருத்தனிடம் கடிதத்தை அனுப்பி விட்டுக் கம்பி நீட்டி விட்டான். லாக்-அப்பில் இருந்த ஆள் வேறே ஆளாயிருக்கவே, துரைக்கு என் பேரில் கோபம். நான் என்ன செய்யட்டும், பிரதர்! இப்படியெல்லாம் அல்லாடுகிறதைவிடப் போலீஸ் உத்தியோகத்தை விட்டுவிடலாமென்று தோன்றுகிறது, பிரதர்! உங்களுடைய ஒபீனியன் என்ன?" என்றார் சங்கடஹரிராவ் நாயுடு.

இந்தக் கேள்வி டாக்டர் புஜங்கராவின் காதில் விழவேயில்லை. மகுடபதி எங்கே போயிருப்பான் என்று அவருடைய மனம் சிந்தனையில் ஆழ்ந்தது.

சித்தப் பிரமை

செந்திருவைக் காண வேண்டுமென்று பங்கஜம் துடிதுடித்தான்.

அவளுடைய ஆவலுக்கு இப்போது புதிய ஒரு காரணம் சேர்ந்து கொண்டது. அந்தக் காரணம் மகுடபதி தான்!

அந்த நிமிஷத்தில் பங்கஜம் செந்திருவைப் பார்த்திருந்தால், அவளுடைய கஷ்டங்களைப் பற்றியெல்லாம் ஒரு வார்த்தைகூடக் கேட்டிருக்கமாட்டாள். "அடி-பொல்லாத திருடி! உனக்குக் கதை பிடிக்காது. காதல் பிடிக்காது. கல்யாணம் பிடிக்காது என்று சொல்லிக் கொண்டிருந்தாயே? கன்னிப் பெண்ணாகவே இருந்து, பள்ளிக்கூட மிஸ்ட்ரஸ் வேலைக்குப் போவதாகச் சொன்னாயே? கடைசியில், இப்படிச் செய்தாய், பார்த்தாயா? சாதுவைப் போல் இருப்பவர்களை நம்பவே கூடாது; பொல்லாத கள்ளி!" என்று அவள் கன்னத்தை இடித்திருப்பாள். இன்னும் அவளுடைய கழுத்தைக் கட்டிக் கொண்டு, "அடிபெண்ணே! செந்திரு! அவன் எப்படியடி இருப்பான்? முதன் முதலில் நீங்கள் எங்கே பார்த்துக் கொண்டீர்கள்? யார் முதலில் பேசியது? நீயா? அவனா? நீ என்ன சொன்னாய்? அவன் என்ன பதில் சொன்னான்? எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் உன் தலையில் மூன்று குட்டுக் குட்டுவேன்!" என்று உண்மையாகவே தலையில் குட்டிக் காட்டியிருப்பாள்.

இப்படியாகச் செந்திருவிடம் பேசவேண்டும், கேட்க வேண்டும் என்றெல்லாம் பங்கஜத்துக்கு ஆவல் பொங்கிற்று. மேலே நாவல் எழுதுவதற்குக்கூட அவளுக்கு ஓடவில்லை. நாவலாவது, மண்ணாங்கட்டியாவது? தன்னுடைய சிநேகிதி, இணைபிரியாத பள்ளிக்கூடத் தோழி - கதை, காதல் என்று பேசினால், பிடிக்காமல் முகத்தைச் சிணுக்கியவள் - அவள் அல்லவா இப்போது பெரிய கதாநாயகி ஆகிவிட்டாள்? செந்திருவுக்கு ஒரு காதலன் - அவளுக்காக அவன் தன் உயிரைக்கூடத் தியாகம் செய்யத் தயாராயிருக்கிறான்! என்ன அதிசயம்? செந்திருவை மட்டுமில்லை - மகுடபதியைப் பார்க்க வேண்டுமென்று கூடப் பங்கஜம் ரொம்பவும் ஆவல் கொண்டாள். அவன் எப்படி இருப்பான்? சிறு பிள்ளையாய், லட்சணமாய் இருப்பானா? மீசையும் கீசையுமாய்ப் பயங்கரமா யிருப்பானா? கிராப்புத் தலையா? குடுமியா? உச்சிக் குடுமியா? காந்திக் கட்சியைச் சேர்ந்தவன் என்றால், ஒருவேளை தாடி கூட வளர்த்துக் கொண்டிருப்பானோ? சீச்சீ! ஒரு நாளும் இராது. செந்திருவைப் போன்ற அழகியின் காதலுக்கு உகந்தவனாகத்தான் அவன் இருப்பான். எல்லாம் கொஞ்ச நேரத்தில் தெரிந்து போகிறது. அப்பாவும் போலீஸ் மாமாவுந்தான் செந்திருவைக் கையோடு கூட்டிக் கொண்டு வந்து விடுவதாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்களே? ஆனால் ஏன் இன்னும் அவர்கள் வரவில்லை?

இவ்விதமெல்லாம் பங்கஜம் இரவு பத்து மணி சுமாருக்குத் தன்னுடைய அறையில் தனிமையாக உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள். வீட்டில் மற்ற எல்லாரும் இரவுச் சாப்பாடு முடிந்து படுத்துக் கொண்டு விட்டார்கள். பங்கஜம் மட்டும், நாவல் எழுதப் போவதாகச் சொல்லிவிட்டுத் தன்னுடைய அறைக்கு வந்தாள். அவள் மேஜையின் மேல் மூடியிட்ட விளக்கும், விரித்த காகிதமும், பேனாவும் இருந்தன. ஆனால், காகிதத்தின் தலைப்பில்.

நாற்பத்தேழாம் அத்தியாயம்
மாய மனிதன்

என்று போட்டிருந்ததைத் தவிர, அதன் கீழே ஒரு வரிகூட எழுதப்படவில்லை.

கடிகாரத்தின் மணி பத்து டாண், டாண் என்று அடித்த போது, வாசலில் வண்டிச் சத்தம் கேட்டது. பங்கஜம் அவசரமாக விரைந்து வாசற் பக்கம் சென்றாள். சாலையில் நின்ற மோட்டாரிலிருந்து அவளுடைய தகப்பனார் இறங்கி வருவதைக் கண்டாள். வேறு ஒருவரும் வண்டியிலிருந்து இறங்கவில்லை. காரிலிருந்தபடியே போலீஸ் மாமா "குட் நைட்" என்றார். வண்டி போய் விட்டது.

அய்யாசாமி முதலியார் பங்களா வாசலுக்கு வந்ததும், பங்கஜம் அவர் கையைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு, "என்ன சேதி, அப்பா! செந்திருவைப் பார்த்தீர்களா? எங்கே பார்த்தீர்கள்? எப்படி இருக்கிறாள்? சௌக்கியமா யிருக்கிறாளா? ஏன் அவளை அழைத்து வரவில்லை? அவர்கள் விடமாட்டேன் என்று சொல்லிவிட்டார்களா? என்ன பேசாமல் இருக்கிறீர்களே? ஒன்றும் சொல்லவே மாட்டேன் என்கிறீர்களே?" என்று சரமாரியாய் கேள்விகளைப் பொழிந்தாள்.

"நீ இடங் கொடுத்தால்தானே அம்மா, நான் பேசலாம்? எல்லாம் சாவகாசமாய்ச் சொல்கிறேன். உன்னுடைய அறைக்குப் போகலாம் வா!" என்றார் அய்யாசாமி முதலியார்.

"இதை மாத்திரம் சொல்லி விடுங்கள். அப்புறம் அனுஷ்டானம் செய்து சாப்பிட்டுவிட்டு எல்லாம் விவரமாய்ச் சொல்லலாம். செந்திருவைப் பார்த்தீர்களா?" என்று பங்கஜம் பரபரப்புடன் கேட்டாள்.

"சௌக்கியந்தான் - ஒரு மாதிரியாக. அனுஷ்டானம் சாப்பாடு எல்லாம் ஆகிவிட்டன. அம்மாவை எழுப்ப வேண்டாம். உன் அறைக்குப் போகலாம், வா! எல்லாம் விவரமாய்ச் சொல்கிறேன்" என்றார் முதலியார்.

இருவரும் பங்கஜத்தின் அறைக்குப் போனார்கள். முதலியார் ஈஸிசேரில் சாய்ந்து கொண்டார். அவர் அருகில் ஒரு சின்ன நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு பங்கஜம் உட்காந்தாள்.

"என்ன, அப்பா, ஒரு மாதிரியா 'சௌக்கியம்' என்கிறீர்களோ? ரொம்பக் கவலையாயிருக்கிறதே!" என்றாள்.

"நாம் கவலைப்பட்டு அவளுக்கு ஒன்றும் செய்வதற்கில்லை, அம்மா! எல்லாம் தலையில் எழுதின எழுத்துப்படிதானே நடக்கும்! பாவம், மருதாசலக் கவுண்டர் எவ்வளவோ உத்தமமான மனுஷர், அவர் குடும்பம் ஏன் இப்படி துரதிஷ்டமாகப் போக வேண்டும்!"

"என்ன, அப்பா, அவளுக்கு? சொல்ல மாட்டேன் என்கிறீர்களே? அந்தக் கடுதாசி அவள் எங்கிருந்து எழுதினாளாம்?"

"அந்தக் கடுதாசைப் பற்றி நாம் காபரா அடைந்ததெல்லாம் வீண்..."

"அப்படியா?"

"ஆமாம், இன்று காலையில் நாங்கள் இங்கிருந்து கிளம்பியதிலிருந்து நடந்ததை எல்லாம் சொல்லி விடுகிறேன், கேள். நானும், ராவ்பகதூரும் நேரே சிங்கமேட்டுக்குப் போனோம். செந்திருவின் சித்தப்பா ஊரில்தான் இருந்தார். அவரோடு கள்ளிப்பட்டிக் கார்க்கோடக் கவுண்டரும் இருந்தார். கள்ளிப்பட்டிக் கவுண்டர் ரொம்பப் பொல்லாதவர் என்று எல்லோரும் செல்வதுண்டு. ஆனால், ஒரு பொல்லாத்தனத்தையும் நாங்கள் காணவில்லை. பேரூருக்குக்கூட வந்திருந்து என்னுடைய உபந்நியாசத்தை அவர் கேட்டாராம்."

"செந்திரு இப்போது சிங்கமேட்டிலேதான் இருக்கிறாளா, அப்பா? நானாவது போய்ப் பார்க்கலாமா?"

"இதற்குள் அவசரப்படுகிறாயே? எங்களை ரொம்பவும் மரியாதையுடன் வரவேற்று உபசாரம் செய்தார்கள். செந்திருவின் விஷயத்தை எப்படிக் கேட்பது என்று நாங்கள் தயங்கிக் கொண்டிருக்கையில், கள்ளிப்பட்டிக் கவுண்டரே அந்தப் பேச்சை எடுத்து விட்டார். 'நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். இந்தக் கடிதம் விஷயமாகத் தான் வந்திருக்கிறீர்கள்!' என்று ஒரு கடிதத்தை எடுத்துப் போட்டார். அது செந்திருவின் கடிதந்தான். குழந்தை! உன்னுடைய ஞாபக சக்தி சில விஷயங்களில் அபாரமாயிருக்கிறது. கிட்டத்தட்ட நீ எழுதிக் காட்டினபடியே இருந்தது" என்று சொல்லி, முதலியார் பங்கஜத்தைப் பெருமையுடன் பார்த்தார்.

"இருக்கட்டும், அப்பா! செந்திருவைப் பார்த்தீர்களா, இல்லையா?"

"அதுதானே, சொல்லப் போகிறேன்? கேட்டுக் கொண்டே வா. கள்ளிப்பட்டிக் கவுண்டர் பிறகு என்ன சொன்னார் தெரியுமா? எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. 'இந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறது ஒரு மாதிரி உண்மை தான். அந்தப் பெண்ணை ஜெயிலில்தான் வைத்திருக்கிறது. நீங்கள் விடுதலை செய்து கொண்டு போவதாயிருந்தால் ரொம்ப சந்தோஷம். நாங்கள் குறுகே நிற்கவில்லை. அதனால் ஏதாவது விபரீதம், உயிர்ச்சேதம் நேர்ந்தால் மட்டும் எங்களைப் பொறுப்பாக்காதீர்கள்! அந்தப் பெண்ணை விடுதலை செய்துகொண்டு போக நீங்கள் இரண்டு பேர் போதாது என்று எனக்குத் தோன்றுகிறது. இன்னும் ஏழெட்டுப் பலசாலிகளான மனிதர்களாவது வேண்டும். அப்புறம் உங்கள் இஷ்டம்' என்று கள்ளிப்பட்டிக் கவுண்டர் சொன்னார். அவர் சொன்னதின் அர்த்தம் எங்களுக்குத் தெரிந்ததும், ரொம்பவும் துக்கம் உண்டாயிற்று."

பங்கஜம் வியப்புடனும் பயத்துடனும் "என்ன, அப்பா அவர் சொன்னதின் அர்த்தம்? எனக்குப் புரியவில்லையே?" என்றாள்.

"நீ வீணாக வருத்தப்படாதே, பங்கஜம்! விதிக்கு யார் என்ன செய்யலாம்? உன் சிநேகிதிக்குச் சித்தப் பிரமை; அதுவும் ரொம்பக் கடுமையான பிரமை!..."

"இல்லவே இல்லை; இருக்கவே இருக்காது" என்று கத்தினாள் பங்கஜம்.

"இல்லாமலிருந்தால் நல்லதுதான்; ஆனால், இருக்கிறதை இல்லையென்று எப்படிச் சொல்லமுடியும்?"

"அவர்கள் சொன்னதுதானே? நீங்கள் நேரில் பார்க்கவில்லையே?"

"இப்படிக் கேட்பாய் என்று எனக்குத் தெரியும். ஆகையினால்தான், கள்ளிப்பட்டிக் கவுண்டர் 'நேரில் காட்டிவிடுகிறேன்' என்று சொன்னபோது நான் சரி என்றேன். ராவ்பகதூர் பிள்ளைக்குக் கூட அவ்வளவு இஷ்டமில்லை. 'இவர்கள் சொல்கிறது போதாதா? நாம் திரும்பிவிடலாம்' என்றார், நான் தான் போய்ப் பார்த்து விடலாம் என்று வற்புறுத்தினேன். மருதாசலக் கவுண்டருக்கும் எனக்கும் இருந்த சிநேகிதத்தைச் சொல்லி, அந்தப் பெண்ணை கண்ணாலேயாவது பார்த்துவிட்டு வரலாம் என்றேன். பார்க்காமல் போனால், நீ என்னை இலேசில் விடமாட்டாய் என்றும் சொல்லி வைத்தேன். மத்தியானம் சாப்பிட்ட பிறகு எல்லோருமாகக் கிளம்பினோம்..."

"எங்கே கிளம்பினீர்கள்? அப்படியானால், செந்திரு சிங்கமேட்டில் இல்லையா?"

"பத்து நாளைக்கு முன்பு வரையில் சிங்கமேட்டில் தான் இருந்தாளாம். ஒரு நாளைக்குத் திடீரென்று கிளம்பி ஒருவருக்கும் தெரியாமல் கோயமுத்தூருக்கு ஓடி வந்திருக்கிறாள். ஓடி வந்த இடத்தில் உனக்குக் கடிதம் எழுதியிருக்கிறாள். அந்தச் சமயம் மட்டும் நாம் ஊரில் இருந்திருந்தால் இவ்வளவு தடபுடல் ஏற்பட்டிராது..."

"என்ன, அப்பா, சொல்கிறீர்கள்? சித்தப் பிரமையோடேயா இந்த ஊருக்கு வந்தாள்?"

"ஆமாம், குழந்தை, ஆமாம்! அந்தச் சமயம் அவ்வளவு அதிகம் இல்லையாம். வீட்டில் சாதாரணமாய் நடமாட விட்டிருந்தார்களாம். ஒருவரும் கவனிக்காத சமயம் பார்த்து வீட்டை விட்டுக் கிளம்பி விட்டாளாம். பெரியண்ணன் என்கிற அவர்களுடைய வீட்டு வேலைக்காரன் அவளைத் தேடிக் கொண்டு கிளம்பி வந்து, ரயில்வே ஸ்டேஷனில் அவள் ரயில் ஏறுகிற சமயத்தில் கண்டுபிடித்தானாம். இரண்டு பேருமாக இந்த ஊருக்கு வந்தார்களாம். இங்கே சிங்கமேட்டுக் கவுண்டர் வீட்டிற்கு மெதுவாகத் தாஜா பண்ணி அவளை அழைத்துக் கொண்டு போனானாம் அந்தப் பெரியண்ணன். வீட்டின் கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு, அந்த வீட்டிலேயே அவள் இராத்திரி இருக்க வேண்டுமென்று சொன்னதுந்தான், கத்தியை எடுத்து அவனைக் குத்திவிட்டாளாம்...!"

மனித நிழல்

செந்திரு பெரியண்ணனைக் குத்தினாள் என்று அய்யாசாமி முதலியார் சொன்னதும், பங்கஜம் நெருப்பை மிதித்தவள் போல் துள்ளி எழுந்து, "ஐயையோ! என்ன அப்பா சொல்லுகிறீர்கள்?" என்றாள்.

"ஆமாம், அம்மா! நடந்ததைத்தான் சொல்கிறேன்."

"செந்திருவா கத்தியை எடுத்து ஒருவனைக் குத்தினாள்? சொல்கிறவர்கள் சொன்னால் கேட்பவர்களுக்கு மதி எங்கே போச்சு என்பார்களே?..."

அய்யாசாமி முதலியார் புன்னகையுடன், "எங்கள் மதி எங்கேயும் போகவில்லை. சரியாகத்தான் இருக்கிறது. உன் தோழியின் மதிக்குத்தான் கேடு வந்துவிட்டது. எல்லாம் துரதிர்ஷ்டந்தான்" என்றார்.

"என்னதான் சித்தப் பிரமை என்றாலும், கத்தியால் குத்தத் தோன்றுமா அப்பா! அதிலும் செந்திரு, பாவம், ஒரு எறும்பு ஈயைக்கூட ஒன்றும் செய்யமாட்டாளே? ஜட்கா வண்டிக்காரன் குதிரையை அடித்தால், அதைப் பொறுக்காமல் கண்ணைப் பொத்திக் கொள்வாளே? அவள் கத்தியை எடுத்து ஒருவனைக் குத்தினாள் என்றால், எப்படி நம்புகிறது, அப்பா?"

"நம்புவது கஷ்டந்தான், குழந்தை! யார் இல்லை என்றார்கள்? உன் சிநேகிதிக்கு இப்படி வரவேண்டாந்தான். ஒரு வேளை அவள் அப்பா உயிரோடிருந்து, மயிலாப்பூரில் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டு சந்தோஷமாக யிருந்திருந்தால், இப்படியெல்லாம் வந்திராது. தலையில் எழுதிய எழுத்தை யாராலாவது அழித்து விடமுடியுமா? - ஆனால், உனக்கு ஒன்று சொல்கிறேன். பங்கஜம்! குத்து வெட்டு எல்லாம் நமக்குத்தான் பயங்கரமே தவிர, இந்த ஜில்லாவில் ரொம்ப சகஜம். நமது சென்னை ராஜதானியிலே வருகிற கொலைக் கேஸுகளிலே பாதி கோயமுத்தூர் ஜில்லாவில் தான். இந்தக் கொங்கு நாட்டின் காற்றிலேயே ஏதோ கேடு இருக்க வேண்டும். உன் சிநேகிதியைத்தான் எடுத்துக் கொள்ளேன். அவள் இப்படி மாறிப்போவாளென்று யார் கண்டார்கள்? அப்பா! என்ன பயங்கரமான கூச்சல்! 'குத்து' 'வெட்டு' 'கொலை' 'இரத்தம்' 'பலி' என்றெல்லாம் அவள் போட்ட பயங்கரமான கூச்சலைக் கேட்டிருந்தால், நீ நடுங்கிப் போயிருப்பாய்" என்றார் முதலியார்.

"ஐயோ! அப்படியா? நீங்களே பார்த்தீர்களா அப்பா?"

"அதுதான் சொன்னேனே. நீ இப்படிக் கேட்பாயென்று தெரிந்துதான் நேரே போய்ப் பார்த்துவிட்டு வந்து விடுவோம் என்று ராவ்பகதூரிடம் சொன்னேன். எல்லோருமாக மத்தியானம் கிளம்பினோம்."

"எங்கே கிளம்பினீர்கள்? அப்படியானால் செந்திரு இப்போது சிங்கமேட்டில் இல்லையா?" என்று பங்கஜம் கேட்டாள்.

"நீலகிரியில் கூனூருக்கு மேலே கொஞ்ச தூரத்தில் தேவகிரி எஸ்டேட் இருக்கிறது. அது கள்ளிப்பட்டிக் கவுண்டர் எஸ்டேட். அங்கே கவுண்டருடைய பங்களாவில்தான் இப்போது செந்திரு இருக்கிறாள். குளிர்ச்சியான இடத்தில் இருந்தால் சித்தப்பிரமைக்கு அனுகூலம் என்று டாக்டர் சொன்னதின் மேல் அங்கே அழைத்துப் போய் வைத்திருக்கிறார்களாம். இன்றைக்கு மத்தியானம் இரண்டு கவுண்டர்களும் போய்ப் பார்த்துவிட்டு வர எண்ணியிருந்தார்களாம். ஆகவே, எல்லாருமாகக் கள்ளிப்பட்டிக் கவுண்டர் காரிலேயே கிளம்பினோம்; ஹட்ஸன் கார் மலையிலே என்ன ஜோராக ஏறிற்று தெரியுமா?..."

"காரில் போன பெருமை இருக்கட்டும், அப்பா! செந்திருவின் கதியை நினைத்தால் எனக்கு என்னமோ செய்கிறது. ரொம்ப வேதனையாயிருக்கிறது. அவளை நீங்கள் பார்த்தீர்களா? உங்களை அவள் அடையாளம் கண்டு கொள்ளவில்லையா?" என்றாள் பங்கஜம்.

"அடையாளமாவது, கண்டு கொள்ளவாவது! கார் பங்களாவின் மேட்டில் ஏறும்போதே பயங்கரமான கூச்சல் சத்தம் கேட்டது. பங்களா வாசலில் கார் நின்றதும் 'யாரடா தடிப்பசங்கள் காரிலே வந்து இறங்குகிறது?' என்று ஒரு கோரமான குரல் கேட்டது. உன் தோழியின் குரல் எவ்வளவு கோரமாய்ப் போய் விட்டது தெரியுமா? பிறகு, கொண்டுவா, 'நரபலி' 'கழுத்தை முறித்து, இரத்தத்தைக் குடிக்கிறேன்!' 'குத்து; வெட்டு!' என்று கூச்சல் கிளம்பிற்று. அதையெல்லாம், விவரமாக உனக்குச் சொல்லக்கூடாது. சொன்னால் ராத்திரியில் உளறியடித்துக் கொள்வாய். கார்க்கோடக் கவுண்டர் எங்களைப் பார்த்து, 'என்ன சொல்கிறீர்கள்? அழைத்துக் கொண்டு போகிறீர்களா?' என்று கேட்டார்.

நாங்கள் என்னத்தைச் சொல்கிறது? ராவ்பகதூரும் நானும் ஒருவரையொருவர் பார்த்து அசட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டோ ம். பங்களா வாசலிலிருந்தபடி காரிலிருந்து கீழே இறங்காமலேயே நாங்கள் திரும்பிப் போகத் தயாராயிருந்தோம். ஆனால், கார்க்கோடக் கவுண்டர் விடவில்லை. உள்ளே வந்து பார்க்கவேண்டும் என்றார். பங்களாவுக்குள் போனோம். பாவம், அங்கே ஒரு அறையில் செந்திருவைப் பூட்டி வைத்திருக்கிறது. புத்தி கொஞ்சம் தெளியும் போது வெளியே விடுகிறார்களாம். நாங்கள் போனபோது பைத்தியம் ரொம்பக் கடுமை. ஜன்னலண்டையில் கவுண்டர் எங்களை அழைத்துப் போனபோது அங்கிருந்த சமையற்காரி வந்து குறுக்கிட்டு, 'அந்தப் பெண் துணையை எல்லாம் கிழித்துப் போட்டுவிட்டு உட்கார்ந்திருக்கிறது' என்றாள். அந்தக் கண்றாவியை என்னால் பார்க்கமுடியாது என்று சொல்லிவிட்டேன். ராவ்பகதூரின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு, கவுண்டர் ஜன்னலண்டை போனார். உள்ளேயிருந்து ஒரு தண்ணீர்க் குவளை ஜன்னல் கம்பிகளின் மேல் வந்து படீரென்று விழுந்தது. ராவ்பகதூர் ஒரேயடியாக மிரண்டுவிட்டார். அப்புறம் என்னத்தைச் சொல்கிறது? பேசாமல் திரும்பி வந்தோம்" என்று கதையை ஒரு விதமாக முடித்தார், அய்யாசாமி முதலியார்.

பங்கஜம் சற்று மௌனமாயிருந்தாள்.

"படுத்துக்கொள்ளலாமா, குழந்தை! நான் போகட்டுமா?" என்றார் முதலியார்.

"ஆமாம் அப்பா! அவ்வளவு பைத்தியம் முற்றியிருந்தால், கடுதாசி அவ்வளவு நன்றாக எப்படி எழுதினாள்?" என்று பங்கஜம் கேட்டாள்.

"நான் தான் சொன்னேனே, அம்மா! கோயமுத்தூருக்கு ஓடி வந்த போது, அவளுக்கு உடம்பு அவ்வளவு மோசமாயில்லை என்று."

"சரிதான்; ஆனால், கடிதம் நம் வீட்டுக்கு எப்படி வந்ததாம்? யாரிடம் அனுப்பினாளாம்?"

"சரியாய்ப் போச்சு! அதை இன்னும் உனக்குச் சொல்லவில்லையா? இந்த ஊரில் அனுமந்தராயன் தெரு வீட்டு மச்சில் செந்திருவும் பெரியண்ணனும் தனியாயிருந்தபோது இவள் கடிதம் எழுதி வைத்துக் கொண்டு ஜன்னல் வழியாய்த் தெருவீதியைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாள். இந்த மகுடபதி என்கிற பையன் தெருவோடு போயிருக்கிறான். செந்திரு கடிதத்தை வீதியில் போட்டிருக்கிறாள். இந்த மகுடபதி என்கிற பையன் சுத்தக் காலாடியாம். ஏற்கெனவே, சிங்கமேட்டுக் கவுண்டர் மேல் அவனுக்கு விரோதமாம். கடிதத்தை அவன் நம் வீட்டில் கொண்டு வந்து கொடுத்து விட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்க் கன்னாபின்னாவென்று ஏதோ சொல்லி வைத்தானாம். சிங்கமேட்டுக் கவுண்டர் பெயரைச் சிரிப்பாய் சிரிக்க அடிப்பதற்கு இதுதான் சமயம் என்று நினைத்தான் போல் இருக்கிறது. அவன் மேல் கள்ளிப்பட்டிக் கவுண்டருக்கு என்ன 'காண்டு' தெரியுமோ? 'அந்தப் பயல் மட்டும் மறுபடி என்கையில் சிக்கட்டும், முதுகுத் தோலை உரித்துவிட்டு மறுகாரியம் பார்க்கிறேன்' என்றார். கள்ளிப்பட்டிக் கவுண்டர் என்றால் என்னவென்று நினைத்தாய், குழந்தாய்! இந்த ஜில்லாவிலேயே அவர் வைத்ததுதான் சட்டம். பெரிய உத்தியோகஸ்தர்கள் எல்லாங்கூடப் பயப்படுவார்கள். ஜில்லாபோர்ட் பிரஸிடெண்ட் அன்று பேரூருக்கு வந்த போது தடபுடல் பட்டதே, அந்த பிரஸிடெண்ட்டுக்கு கள்ளிப்பட்டிக் கவுண்டர் என்ற பெயரைக் கேட்டால் தொடை வெடவெட வென்று நடுங்குமாம்! அப்படிப்பட்டவர் கிட்டப்போய் இந்த மகுடபதி என்கிற வெறும் பையன் விரோதித்துக் கொண்டிருக்கிறான். 'காங்கிரஸ் பெயரையும், காந்தி பெயரையும் கெடுக்கத்தான் வந்திருக்கிறான்' என்கிறார் கள்ளிப்பட்டிக் கவுண்டர்."

இவ்விதம் சொல்லிவிட்டு அய்யாசாமி முதலியார் கொட்டாவி விட்டார்.

மகுடபதியைப் பற்றிப் பங்கஜம் கட்டியிருந்த ஆகாசக் கோட்டையெல்லாம் பொலபொலவென்று இடிந்து விழுந்தது.

"என்னமோ கேட்கக் கேட்க விசனமாயிருக்கிறது. அப்பா! ஆனால் இன்னும் ஒரு விஷயம் மட்டும் எனக்கு பிடிபடவில்லை. எனக்குச் செந்திரு எழுதிய கடிதத்தை மருதக் கவுண்டன் ஏன் திருடினான்? அந்தக் கடிதம் உங்கள் அழகான கள்ளிப்பட்டிக் கவுண்டரிடம் எப்படிப் போயிற்று?" என்று பங்கஜம் கேட்டாள்.

"அது ஒரு விஷயம் பாக்கியிருக்கிறதா? சரி, கேட்டுக் கொள். செந்திரு உனக்குக் கடிதம் எழுதி வீதியில் போட்டாள் என்று பெரியண்ணன் கவுண்டர்களிடம் ஒளித்திருக்கிறான். சித்த ஸ்வாதீனமில்லாத சமயத்தில் அவள் என்ன எழுதியிருக்கிறாளோ, என்னமோ - இந்த வெட்கக்கேடு வெளியில் நாலு பேருக்குத் தெரிவானேன் என்று அவர்களுக்கு எண்ணம். அதற்காகத்தான் நீயாவது நானாவது கடிதத்தைப் பிரித்துப் படிக்காவிட்டால் எடுத்துக் கொண்டு விடும்படி அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த முட்டாள் நமக்கு விஷயம் தெரிந்த பிறகு எடுத்துப் போயிருக்கிறான். அதற்காக அவனுக்கு அங்கே நல்ல பூசை கிடைத்ததாம். கவுண்டர்களே நம்முடைய வீட்டுக்கு வந்து இதையெல்லாம் சொல்ல வேண்டுமென்றிருந்தார்களாம். அதற்குள்ளே நாங்கள் போய்..." என்று முதலியார் சொன்னபோது, அவருடைய தலை ஆடிற்று.

"சரி, அப்பா, உங்களுக்குத் தூக்கம் கண்ணைச் சுற்றுகிறது. நீங்கள் போய்ப் படுத்துக் கொள்ளுங்கள். நானும் விளக்கை அணைத்துவிட்டுப் போய்ப் படுத்துக் கொள்கிறேன்" என்றாள் பங்கஜம்.

"சரி, அதிக நேரம் கண் விழிக்காதே. நாவல் எழுதினதெல்லாம் போதும். உன் சிநேகிதியின் கதையே தான் பெரிய நாவலாய் இருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டே அய்யாசாமி முதலியார் எழுந்து போனார்.

பங்கஜமும் தன்னுடைய நோட்டுப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்திருந்து விளக்கை அணைப்பதற்காகப் போனாள். அப்போது அவள் உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கிப் போட்டது. ஒரு நிமிஷம் அவள் மார்பு அடித்துக் கொள்வது நின்றுவிட்டது. ஏனெனில், விளக்கை அணைப்பதற்காக அவள் எழுந்து போனபோது, ஜன்னலுக்கு எதிர்ப் பக்கத்துச் சுவரில் ஒரு மனிதனுடைய நிழலை அவள் பார்த்தாள்.

நள்ளிரவு நாடகம்

பங்கஜம் பளிச்சென்று விளக்கை அணைத்தாள். சத்தமில்லாமல் ஜன்னலண்டை போய் வெளியில் பார்த்தாள்.

ஏறக்குறைய பாதி வட்டமாயிருந்த சந்திரன் மேற்கே அஸ்தமித்துக் கொண்டிருந்தது. அதனுடைய மங்கிய ஒளி அப்போது பெய்து கொண்டிருந்த பனியினால் இன்னும் மங்கலாகக் காட்டிற்று. அந்த மங்கிய நிலவில், ஒரு உருவம் பங்கஜத்தின் அறைப்பக்கத்திலிருந்து எதிர்ப்புறமாகப் போய்க் கொண்டிருந்ததை அவள் பார்த்தாள். பார்த்ததும், பங்கஜம் "யாரடா அது?" என்று கூச்சல் போட எண்ணினாள். ஆனால், அவளுடைய நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. வாயிலிருந்து சத்தம் கிளம்பவில்லை. அவளுடைய தேகமெல்லாம் அந்த மார்கழி மாதக் கடுங்குளிரில் சொட்ட வியர்த்தது. ஒரு நிமிஷ நேரம் அப்படியே பார்த்துக் கொண்டு நின்றாள்.

பங்களாவுக்கெதிரில், கார் வந்து நிற்பதற்கான முன் முகப்பு இருந்தது. அந்த முகப்புக்கு வாசல் காம்பவுண்ட் சுவருக்கு மத்தியில் மரமல்லிகை மரங்களும் குரோட்டன்ஸ் செடிகளும் அடர்த்தியாகப் படர்ந்த ஒரு கொடி வீடும் இருந்தன. அங்கிருந்து மலர்களின் நறுமணம் கம்மென்று வந்து கொண்டிருந்தது.

ஜன்னல் பக்கத்திலிருந்து போன உருவம் அந்தக் கொடி வீட்டுக்கருகில் சென்றது. அங்கே சற்றுத் தயங்கி நின்றது. பிறகு அந்தக் கொடி வீட்டுக்குள் நுழைந்தது.

பங்கஜம் சற்று நேரம் ஜன்னலண்டையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். கொடி வீட்டுக்குள் நுழைந்த உருவம் வெளியே வரவில்லை. இதற்குள் அவளுக்குப் பயம் தெளிந்துவிட்டது. அச்சமயம், தான் என்ன செய்யவேண்டுமென்று யோசித்தாள். அப்பாவிடம் போய்ச் சொல்லலாமா? அதுதான் நியாயமாகச் செய்ய வேண்டியது. ஆனால்...? பங்கஜத்தின் மனதிற்குள் ஒரு விசித்திரமான சந்தேகம் உதித்தது. அவளுடைய அறையின் ஜன்னலோரத்திலிருந்து கிளம்பிச் சென்று கொடி வீட்டுக்குள் நுழைந்த உருவம் பார்ப்பதற்கு ஒரு இளைஞனுடைய உருவமாயிருந்தது. அது யாராயிருக்கும்? ஒரு வேளை...? என்ன பைத்தியக்காரத்தனம்? ஒரு நாளும் இருக்காது!... ஆனால் ஏன் இருக்கக்கூடாது?...இல்லை, இல்லை. கார்க்கோடக் கவுண்டர் தான் அப்பா திரும்பி வந்து என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்வதற்கு ஆளை அனுப்பியிருக்க வேண்டும்... ஒரு வேளை சாதாரணத் திருடனோ, என்னமோ? சே! திருடனாயிருக்க முடியாது. திருடன் அவ்வளவு துணிச்சலாய் வீட்டில் விளக்கு எரியும் போது வந்து ஜன்னலண்டை உட்கார்ந்திருப்பானா?

எப்படியிருந்தாலும், தானே அந்த மர்மத்தைக் கண்டு பிடித்து விடுவது என்று பங்கஜம் தீர்மானித்துக் கொண்டாள். அப்பாவைக் கூப்பிட வேண்டியதில்லை. தன்னுடைய சந்தேகம் ஒருவேளை உண்மையாயிருந்தால் அப்பாவைக் கூப்பிட்டால் காரியம் கெட்டுப் போய்விடும். அப்படியென்ன மோசம் வந்துவிடப் போகிறது? திருடனாய்த்தான் இருக்கட்டுமே? ஒருவனால் என்ன செய்யமுடியும்? எல்லாவற்றுக்கும் முன் ஜாக்கிரதையாயிருந்தால் போகிறது. அப்படி மிஞ்சி வந்தால், முன் அறையில் தானே அப்பா படுத்திருகிறார்? கூச்சல் போட்டால் உடனே வந்து விடுகிறார்.

இப்படியெல்லாம் சிந்தித்து, இந்நிலைமையில் சாதாரணப் பெண் எவளும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்யத் துணிந்தாள் பங்கஜம். அவள் படித்திருந்த நூற்றுக்கணக்கான நாவல்களில் வரும் கதாநாயகிகளின் தைரியம், துணிச்சல் எல்லாம் அவளிடம் அந்த நிமிஷத்தில் வந்து குடிகொண்டன. ஓசைப்படாமல் நடந்து போய் ஒரு அலமாரியைத் திறந்தாள். அதற்குள்ளிருந்து இரண்டு பொருள்களை எடுத்துக் கொண்டு வந்து ஜன்னலண்டை நின்று, நிலவு வெளிச்சத்தில் பார்த்தாள். அவற்றுள் ஒன்று, டார்ச் லைட்; இன்னொன்று, கைத்துப்பாக்கி!

கைத்துப்பாக்கி, அவளுடைய தகப்பனார் கடப்பா ஜில்லாவில் உத்தியோகம் பார்த்த காலத்தில் அபாயத்துக்காக வைத்துக் கொண்டிருந்தது. இப்போது அது துருப்பிடித்துக் கிடந்தது. அதில் ரவையும் கிடையாது. ஒரு விளையாட்டுப் பொருளாக அதைப் பங்கஜம் தன் அலமாரியில் எடுத்து வைத்திருந்தாள். சில சமயம் அவளுடைய தோழிகள், தம்பிமார்கள், வேலைக்காரர்கள் முதலியோரை விளையாட்டுக்காகச் "சுட்டு விடுவேன்" என்று அவள் இந்தத் துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்துவதுண்டு. திருடனை அதனால் ஒன்றும் செய்யமுடியாதென்று அவளுக்குத் தெரியும். ஆனாலும், அவள் இப்போது கொண்டிருந்த நோக்கத்துக்கு அதுவே போதுமாயிருந்தது.

பிறகு பங்கஜம் ஓசைப்படாமல், அந்த அறையிலிருந்து வெளி வராந்தாப் பக்கமுள்ள கதவைத் திறந்தாள். வெளியில் எல்லாம் நிசப்தமாய் இருந்தது. அடிமேல் அடிவைத்து நடந்து தாழ்வாரத்திலிருந்து 'போர்டிகோவில்' இறங்கி, அங்கிருந்து கொடி வீட்டின் அருகில் வந்தாள். அப்போது அக்கொடி வீட்டுக்குள்ளிருந்து மிக மெலிந்த விம்முகிற குரலில் யாரோ பேசும் சத்தம் வந்து கொண்டிருந்தது. பங்கஜம் உற்றுக் கேட்டாள். 'பைத்தியம்' 'பைத்தியம்' 'செந்திருவுக்குச் சித்தப் பிரமை' என்று ஒரு குரல் தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. அந்தக் குரலில் எவ்வளவோ ஏக்கமும், ஏமாற்றமும், வேதனையும் கலந்திருந்தன.

சற்றுத் திகைத்து நின்ற பிறகு, பங்கஜம் கொடி வீட்டின் அருகில் நெருங்கிச் சென்று ஒரு கையில் கைத்துப்பாக்கியை நீட்டியபடி, இன்னொரு கையில் டார்ச் லைட்டை அமுக்கினாள். பளீரென்று வெளிச்சம் அடித்தது. கொடி வீட்டுக்குள்ளே உட்காருவதற்காகப் போட்டிருந்த சிமெண்ட் விசிப்பலகையில் ஒரு வாலிபன் உட்கார்ந்திருந்தான். திடீரென்று வெளிச்சம் அடித்ததும் அவன் திடுக்கிட்டுக் குனிந்த தலையை நிமிர்ந்து பார்த்தான். அவனுடைய கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீரில் டார்ச் லைட்டின் ஒளிபட்டு மின்னியது. எதிரே கைத்துப்பாக்கியுடனும் டார்ச் லைட்டுடனும் நின்று கொண்டிருந்த பங்கஜத்தைப் பார்த்ததும், அவனுக்கு ஒரே திகைப்பாய்ப் போயிருக்க வேண்டும். ஒரு வினாடியில் அவனுடைய கண்களில் கண்ணீர் வறண்டு விட்டது. பங்கஜத்தை வியப்புடன் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஐந்து நிமிஷம் வரையில் இவ்விதம் இருவரும் ஒருவரையொருவர் மௌனமாக உற்றுப் பார்த்தபடி இருந்தார்கள். பங்கஜத்துக்கும் பேச நா எழவில்லை. அவளுடைய சந்தேகம் ஒரு விஷயத்தில் உண்மையாயிற்று. இந்த வாலிபன் அன்று அவர்கள் வீட்டுக்குப் புதிதாக வந்த தவிசுப் பிள்ளைதான்! அன்று சாயங்காலம் பங்கஜம் தன் அறைக்குள் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த போது, வாசலில் யாரோ வந்து 'ஸார்!' என்று கூப்பிடும் சப்தம் கேட்டது. கதையின் சுவாரஸ்யத்தில் ஆழ்ந்திருந்தபடியால் பங்கஜம் போய் யார் என்று கேட்கவில்லை. அவளுடைய தாயார் உள்ளேயிருந்து வந்து வாசல் கதவைத் திறந்தாள். அம்மாவுக்கு வந்திருந்தவனுக்கும் பின்வரும் சம்பாஷணை நடந்தது பங்கஜத்தின் காதில் விழுந்தது.

"யாரப்பா நீ?"

"ஐயாவை ஒரு காரியமாய்ப் பார்க்க வந்தேன். இருக்கிறார்களா?"

"தவிசுப்பிள்ளையா? இதற்கு முன் யார் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தாய்?"

"வந்து நான்..."

"கோடிவீட்டு ஆச்சி அனுப்பினார்களா? அவங்ககிட்டத்தான் நான் தவிசுப்பிள்ளை வேண்டுமென்று சொல்லி வைத்திருந்தேன்."

இவ்வளவுதான் பங்கஜத்துக்குக் கேட்டது. அப்போது அவளுக்குச் சிரிப்பாய் வந்தது. அவளுடைய தாயாருக்குக் கொஞ்சம் காது மந்தம். "யாரோ ஒருவன் எதற்காகவோ அப்பாவிடம் வந்திருக்கிறான்; அவனைப் பிடித்து அம்மா தவிசுப்பிள்ளையா என்று கேட்டாள்" என்பதாக எண்ணிப் பங்கஜம் தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

ஆனால், சாயங்காலம் பங்கஜம் சமையல் அறைக்குள் போனபோது, ஒரு வாலிபன் நாகரிகமும் அழகும் வாய்ந்த தோற்றம் உள்ளவன் - சமையல் வேலையில் அம்மாவுக்கு உதவி செய்து கொண்டிருப்பதைப் பார்த்து வியப்படைந்தாள். அம்மாவிடம் ஜாடையினால் "இவன் யார்?" என்று கேட்டாள். "தவிசுப்பிள்ளை வேண்டுமென்று கோடிவீட்டு ஆச்சியிடம் சொல்லியிருந்தேன். அவர்கள் அனுப்பியிருக்கிறார்கள்" என்று தாயார் சொன்னாள். "சாயங்காலம் வந்தவன் இவந்தானா? அம்மா தப்புச் செய்கிறாள் என்று நாம் நினைத்ததல்லவோ தப்புப் போலிருக்கிறாது?" என்று எண்ணிக் கொண்டாள். பிறகு, சாப்பிடும் சமயத்தில் பங்கஜம் புதிய சமையற்காரனைக் கொஞ்சம் கவனிக்கத் தொடங்கினாள். "இவ்வளவு நாகரிகமான சமையற்காரனும் இருக்கிறானா? முகத்தில் என்ன களை? எவ்வளவு சுத்தமாயிருக்கிறான்?" என்று எண்ணிக் கொண்டாள். ஆனால், அந்தத் தவிசுப்பிள்ளை தன்னைக் கடைக்கண்ணால் அடிக்கடி பார்ப்பதைக் கவனித்தபோது, பங்கஜத்துக்கு அசாத்தியக் கோபம் வந்தது. "அம்மாவிடம் சொல்லிப் பிரயோசனமில்லை; அப்பா வந்ததும், இந்தத் தவிசுப்பிள்ளை வேண்டாம் என்று போகச் சொல்லிவிட வேண்டும்" என்று எண்ணிக் கொண்டாள்.

ஆனால், அப்பா இராத்திரி பத்து மணிக்கு வந்த பிறகு அவர் கூறிய ஆச்சரியமான விவரங்களையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்ததில், புதிய தவிசுப் பிள்ளையைப் பற்றி அவள் அடியோடு மறந்துவிட்டாள்.

இப்போது, கொடி வீட்டுக்குள் உட்கார்ந்து விம்மிக் கொண்டிருந்தவனை டார்ச்லைட்டின் வெளிச்சத்தில் பார்த்ததும், புதிய தவிசுப் பிள்ளைதான் என்று உடனே தெரிந்து போய்விட்டது. ஆனால், உண்மையில் இவன் யார்? கார்க்கோடக் கவுண்டரின் ஆளா? உளவு அறிந்து போவதற்காக வந்தவனா? அல்லது... ஒருவேளை... அப்படியும் இருக்க முடியுமா?

ஐந்து நிமிஷ நேரம் இவ்விதம் சிந்தனையில் ஆழ்ந்து நின்ற பிறகு பங்கஜத்துக்கு ஏதாவது பேசினாலொழிய நெஞ்சு வெடித்துவிடும் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது.

"யார் நீ? நிஜத்தைச் சொல்லிவிடு! இல்லாவிட்டால்..." என்று பங்கஜம் மேலே சொல்லத் தயங்கித் தொண்டையைக் கனைத்தாள்.

அந்த வாலிபனும் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, "இல்லாவிட்டால்...?" என்றான்.

"இந்தத் துப்பாக்கியின் குண்டுக்கு இந்த நிமிஷமே இரையாவாய்!" என்று பங்கஜம் நாவல் பாஷையில் சொன்னாள்.

அந்த வாலிபன் சிரித்தான். அந்தச் சிரிப்பில் எவ்வளவோ சோகமும் வெறுப்பும் கலந்திருந்தன.

"அப்படியே செய்துவிடு அம்மா! எனக்குப் பெரிய உபகாரமாயிருக்கும்" என்றான்.

பங்கஜத்துக்கு என்னமோ செய்தது. ஆனாலும் அவள் சமாளித்துக் கொண்டு, "இந்தப் பாசாங்கெல்லாம் வேண்டாம் யார் நீ? உன் பெயர் என்ன? நிஜத்தைச் சொல்லிவிடு!" என்றாள்.

"நிஜம் சொல்ல வேண்டுமா? நிஜம்! நிஜம்! இந்த உலகத்தில் நிஜத்துக்கு மதிப்பு இருக்கிறதா? நிஜம் சொன்னால் கேட்கிறவர்களும் உண்டா? அம்மா! நிஜத்தைச் சொல்கிறேன். அதற்குப் பதிலாக எனக்கு ஒரு உபகாரம் செய்வாயா?" என்று வெறிபிடித்தவன் போல் பேசினான்.

"உபகாரமா? என்ன உபகாரம்?" என்று பங்கஜம் கேட்டாள்.

"உன் கையிலிருக்கிற துப்பாக்கியால் என்னைச் சுட்டுக் கொன்றுவிடு; இல்லாவிட்டால், அந்தத் துப்பாக்கியை என் கையிலாவது கொடு. நானாவது சுட்டுக் கொண்டு சாகிறேன்" என்றான் வாலிபன்.

"இந்தா!" என்று பங்கஜம் தன் கையிலிருந்த துப்பாக்கியைக் கொடுத்தாள்.

அதை வாங்கி விசையை இழுத்துப் பார்த்துவிட்டு, வாலிபன் வெறுப்புடன் கீழே போட்டான்.

பங்கஜம் சிரித்தாள்.

வாலிபன் அவளைக் கோபமாய்ப் பார்த்து "உனக்குச் சிரிப்பும் வருகிறதா?" என்று கேட்டான்.

"சிரித்தால் என்ன?"

"உன் சிநேகிதிக்கு இப்படிப்பட்ட விபத்து வந்திருக்கும் போதா சிரிப்பது?... உன் மனது என்ன கல்லா?"

"என் சிநேகிதிக்கு என்ன விபத்து வந்துவிட்டது?"

"வேறென்ன விபத்து வரவேண்டும்? உன் தகப்பனார் தான் சொன்னாரே, பைத்தியம் பிடித்து விட்டதென்று?"

"செந்திருவுக்கா பைத்தியம்? ஒரு நாளுமில்லை. அவளுக்குப் பைத்தியம் என்று சொல்லுகிறவர்களுக்குத் தான் பைத்தியம்!" என்றாள் பங்கஜம்.

"என்ன? என்ன? பைத்தியம் இல்லையா? அதெப்படிச் சொல்கிறாய்? பகவானே! இதுமட்டும் நிஜமாயிருந்தால்?... உனக்கு எப்படி தெரியும்? எதனால் அவ்வளவு நிச்சயமாய்ச் சொல்கிறாய்?"

"முதலில், நீ யார் என்று சொல்? சொன்னால்..."

"சொன்னால்..."

"செந்திருவுக்குப் பைத்தியம் ஏன் இல்லை என்று நான் தெரிவிக்கிறேன்."

"என் பெயர் மகுடபதி!"

"நினைத்தேன், நினைத்தேன். நீதானா என் சிநேகிதியைப் பைத்தியமாக அடித்த புண்ணியவான்?" என்றாள் பங்கஜம்.

மோட்டார் விபத்து

மகுடபதிக்கும் பங்கஜத்துக்கும் மேலே நடந்த சம்பாஷணையைச் சொல்வதற்கு முன்னால் காலப்போக்கில் கொஞ்சம் பின்னோக்கிச் சென்று மகுடபதியை லாக்-அப்பில் அடைத்ததிலிருந்து அவனுக்கு நேர்ந்தவைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

போலீஸ் லாக்-அப்பிலிருந்து மகுடபதியை ஸப்-ஜெயிலுக்குக் கொண்டுபோய் ஒரு தனி அறையில் அடைத்தார்கள். ஏற்கெனவே இரண்டு முறை - ஒருவாரமும், பத்து நாளும் - அவன் ஸப்-ஜெயிலில் இருந்திருக்கிறான். ஆனால் இந்தத் தடவை அவன் ஸப்-ஜெயிலிலிருந்த மூன்று நாட்களும் அவனுக்கு மூன்று யுகங்களாகத் தோன்றின. அவன் உள்ளம் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிற்று. தேசத்தில் மகத்தான இயக்கம் ஆரம்பாகி நடந்து கொண்டிருந்தது; அந்த ஜில்லாவில் அவனுடைய முக்கியமான காங்கிரஸ் சகாக்களெல்லாம் சிறைக்குப் போய்விட்டனர்; அனேக தொண்டர்கள் அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடந்தார்கள். இப்படிப்பட்ட இயக்கத்தில், தான் பங்கு எடுத்துக் கொள்ளமுடியவில்லை. ஏதோ ஒரு பொய்க் கேஸில் அகப்பட்டு ஸப்-ஜெயிலில் கிடக்க வேண்டியதாயிருக்கிறது. தன் மேல் என்ன கேஸ் போடப் போகிறார்கள் என்ற விவரம் இன்னும் அவனுக்குத் தெரிந்தபாடில்லை. போலீஸ் அதிகாரிகள் - முக்கியமாக ஸப்-இன்ஸ்பெக்டர் சங்கடஹரிராவ் - என்ன சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறாரோ, தெரியாது. அவர் மட்டுந்தான் சூழ்ச்சி செய்கிறாரோ, அல்லது கார்க்கோடக் கவுண்டரும் சேர்ந்து இரண்டு பேருமாய்ச் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்களோ? ஏதாவது கள்ளுக்கடையைக் கொளுத்தியதாக ஒரு பொய்க் கேஸைத் தன் பேரில் அவர்கள் போட்டு வைத்தால் என்ன செய்வது? அதற்கு வேண்டிய பொய்ச் சாட்சிகளைத் தயாரித்துத் தண்டனையடைந்தால், காங்கிரஸ் இயக்கத்துக்கே அதனால் மாசு ஏற்பட்டுவிடுமல்லவா? அத்தகைய கேஸ் நேர்ந்தால் எதிர் வழக்காடுவதா? அல்லது சும்மா இருந்து விடுவதா? யோசனை கேட்பதற்குக் கூட முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இல்லை; எல்லாரும் முன்னாலேயே சிறைக்குப் போய்விட்டார்கள்; இன்னும் வெளியில் இருக்கும் இரண்டொருவரைச் சந்தித்துப் பேசுவதற்கும் வசதி கிடையாது.

"ஐயோ! அன்றைக்கு நாம் கோயமுத்தூருக்கு என்னத்திற்காக வந்தோம்? நம்மூரிலேயே ஏதாவது மறியல் நடத்திப் பேசாமல் சிறை புகுந்திருக்கக்கூடாதா?" என்று எண்ணி மகுடபதி பெருமூச்சு விட்டான். அன்று தான் கோயமுத்தூருக்கு வந்ததனால் என்னென்ன விபரீதங்கள் ஏற்பட்டு விட்டன? தனக்கு மட்டுமா கஷ்டம்? செந்திருவுக்கும் பெரியண்ணனுக்கும் அல்லவா தன்னால் பெரும் விபத்துக்கள் நேர்ந்து விட்டன?

செந்திருவைப் பற்றி நினைக்கும் போதே அவனுடைய நெஞ்சு சொல்லமுடியாத வேதனை அடைந்தது. அவளுடைய கதி என்ன ஆயிற்றோ? எங்கே இருக்கிறாளோ? பலவந்தமாய்க் கார்க்கோடக் கவுண்டருக்குக் கல்யானம் செய்து வைத்திருப்பார்களோ? ஒருவேளை, அவள் உயிரை விட்டிருப்பாளோ? பாவிகள் ரொம்பவும் அவளை இம்சை செய்திருப்பார்களோ? "ஐயோ! நம்மை நம்பிய அந்த அபலைப் பெண்ணுக்கு நம்மால் அனுகூலமில்லாவிட்டாலும் ஆபத்தல்லவா அதிகமாகிவிட்டது?" என்று எண்ணிய போது, மகுடபதியின் இருதயம் துடித்தது. ஆம்; அன்றிரவு, தான் அந்த வீட்டில் ஒளிந்திருந்து திடீரென்று வெளியே வந்ததனால், செந்திருவின் மேல் அந்தக் கவுண்டர்களுக்கு இல்லாத பொல்லாத சந்தேகங்கள் உண்டாகியிருக்குமல்லவா?

செந்திருவுக்கு மட்டும் ஏதாவது தீங்கு நேர்ந்திருந்தால், அதற்குக் காரணமாயிருந்தவர்கள் மேல் பழிக்குப் பழி வாங்கியே தீருவதென்று மகுடபதி சங்கல்பம் செய்து கொண்டான்.

கார்க்கோடக் கவுண்டர் அவன் மனக்கண்ணின் முன்னால் தோன்றும் போதெல்லாம், அவனுடைய இரத்தம் கொதித்தது; நரம்புகள் எல்லாம் புடைத்து எழுந்தன. "அஹிம்சையாவது, ஒன்றாவது? வெறும் பைத்தியக்காரத்தனம்! இப்படிப்பட்ட பாதகர்களை எந்த விதத்திலாவது யமலோகத்துக்கு அனுப்பினால் அதுவே பெரிய புண்ணியச் செயலாகும்" என்று அடிக்கடி எண்ணமிட்டான்.

பெரியண்ணன் மீது கார்க்கோடக் கவுண்டரின் கத்தி பாய்ந்த காட்சி அடிக்கடி அவன் மனக்கண்முன் வந்து கார்க்கோடக் கவுண்டரின் மேல் அவனுக்கிருந்த கோபத்தீயை இன்னும் தூண்டிவிட்டு ஜ்வலிக்கச் செய்தது. பெரியண்ணனுடைய கதி என்னவாயிருக்கும்? தானே எழுந்து போயிருப்பானோ? அல்லது கவுண்டர்கள் வந்து தான் அப்புறப்படுத்தியிருப்பார்களோ? இன்னமும் பிழைத்திருக்கிறானோ? அல்லது இந்தப் பாதக உலகை விட்டுப் போய்விட்டானோ?

மூன்று தினங்கள் வரையில் இவ்விதம் அவன் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. இன்னும் சில தினங்கள் இப்படியே தன்னைத் தனி அறையில் போட்டிருந்தால் ஒரு வேளை பைத்தியம் பிடித்துவிடுமோ என்று கூட அவனுக்குத் தோன்றத் தொடங்கியது. ஐயோ! அப்படி ஏதாவது நேர்ந்துவிட்டால் செந்திருவின் கதி என்ன? இந்த வண்ணம் தோன்றும்போது, விரிந்து மலர்ந்த கண்களில் நீர்த்துளிகளுடன் கூடிய செந்திருவின் சோகம் ததும்பும் முகம் அவன் மனக்கண்முன் வரும். அப்போது அவனுடைய நெஞ்சு வெந்து போவது போலிருக்கும். இந்தத் துயர நினைவை மறப்பதற்காக மகுடபதி காங்கிரஸ் இயக்கத்தையும், காந்தி மகானையும், தேசியப் போரின் மற்ற அம்சங்களையும் பற்றிச் சிந்திக்க முயன்றான்.

மூன்றாம் நாள் பிற்பகலில் மகுடபதி இத்தகைய சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென்று சில போலீஸ் சேவகர்கள் வந்து அவனை அடைத்திருந்த கொட்டடிக்கு முன்னால் நின்றார்கள். கதவு திறக்கப்பட்டது. அவர்களுடைய உத்தரவுப்படி மகுடபதி வெளியேறினான். வாசலில் போலீஸ் வண்டி காத்துக் கொண்டிருந்தது. அதற்குள் ஏற்கனவே நாலைந்து தொண்டர்கள் இருந்தார்கள். மகுடபதியும் அதற்குள் ஏற்றப்பட்டான். போலீஸ் சேவகர்களும் ஏறி உட்கார்ந்ததும், வண்டி புறப்பட்டது.

எல்லாரையும், கோர்ட்டுக்குத்தான் அழைத்துப் போகிறார்கள் என்று மகுடபதி நினைத்தான். வண்டியில் ஏற்கெனவே இருந்த தொண்டர்களில் ஒருவரையும் மகுடபதிக்குத் தெரியாது. அவர்கள் எல்லாம் "மகாத்மா காந்திக்கு ஜே!" "வந்தே மாதரம்!" என்று உரத்த குரலில் கோஷமிட்டார்கள். மகுடபதிக்கு இந்தக் கோஷத்தில் கலந்து கொள்வதற்கு வேண்டிய உற்சாகம் இல்லை. ஆகையால் மௌனமாயிருந்தான். தொண்டர்களின் கோஷத்தினால் கலவரப்பட்டு வீதியில் போய்க் கொண்டிருந்த ஜனங்கள் போலீஸ் வண்டியை நோக்கினார்கள். அவர்களில் யாராவது தனக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா, இருந்தால் சமிக்ஞையினால் செய்தி தெரிவிக்கலாம் என்று மகுடபதி ஆவலுடன் வண்டிக் கம்பிகளின் வழியாகப் பார்த்துக் கொண்டே போனான். ஒருவரும் அவனுக்குத் தெரிந்தவர்களாக எதிர்ப்படவில்லை. எதிர்ப்பட்டிருந்தாலும், இரும்பு வலைக் கூண்டு போல் அமைந்திருந்த போலீஸ் வண்டிக்குள்ளிருந்து அவனால் ஒன்றும் பேசியிருக்க முடியாது. வண்டி வேறு மிகவும் வேகமாய்ப் போய்க் கொண்டிருந்தது.

கோர்ட்டில் கொண்டு போய் நிறுத்தியதும், தன் பேரில் பொய்க் கேஸ் என்று கூச்சலிட்டு, அன்றிரவு நடந்த சம்பவங்களையும் சொல்லலாமா என்று மகுடபதி யோசித்தான். அவனால் தெளிவாகச் சிந்தனை செய்ய முடியாவிட்டாலும், அதனால் பயன் விளையாது என்று தோன்றியது. முதலில், மற்ற தொண்டர்கள் தன்னை ஜெயிலுக்குப் பயந்தவன் என்று நினைத்துக் கொள்வார்கள். மற்றபடி, மாஜிஸ்ரேட்டும்தான் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கமாட்டார். கேஸுக்குச் சம்பந்தமில்லாத விஷயம் என்று சொல்லி, தான் பேசுவதற்கே இடங்கொடுக்க மாட்டார். கார்க்கோடக் கவுண்டர் மாஜிஸ்ரேட்டையும் தன்னுடைய கைக்குள் போட்டுக் கொண்டிருக்கக் கூடுமல்லவா? ஏதாவது ஜாமீன் கேஸ் என்று தன்னை ஒரு வருஷம் சிறைக்குள் தள்ளிவிட்டால், செந்திருவின் நிலைமை என்ன? இப்படிக் கோர்ட்டில் என்ன சொல்வது என்பதைத் தீர்மானிக்க முடியாமல் மகுடபதி தவித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் போலீஸ் மோட்டார் கோயமுத்தூர் நகரின் எல்லையைத் தாண்டிக் கொண்டிருப்பதை மகுடபதி கவனித்தான்.

"இதென்ன? நம்மைக் கோர்ட்டுக்குக் கொண்டு போகவில்லையா? எங்கே கொண்டு போகிறார்கள்?" என்று மகுடபதி மற்ற தொண்டர்களைப் பார்த்துக் கேட்டான். அவர்களில் ஒருவன், "இது தெரியாதா, உனக்கு? நம் பேரில் கேஸ் நடக்காதாம். இப்போது கோயமுத்தூருக்கு வெளியே எங்கேயாவது தூரத்தில் கொண்டு போய் விட்டுவிடும்படி ஜில்லா மாஜிஸ்ட்ரேட்டின் உத்தரவாம்."

இந்தச் செய்தியைக் கேட்டதும், மகுடபதிக்குப் புத்துயிர் வந்தது போலிருந்தது. இன்னும் சிறிது நேரத்துக்கெல்லாம் தனக்கு விடுதலை கிடைத்துவிடும் என்ற எண்ணம் அவனுக்குக் குதூகலமே உண்டாக்கிற்று. போலீஸ் வண்டி அதிக வேகமாகச் சென்றதுபோல், அவன் எண்ணங்களும் விரைந்து சென்றன. விடுதலை கிடைத்ததும் செந்திருவைத் தேடும் முயற்சியில் தான் ஈடுபட வேண்டும். அதை எப்படி ஆரம்பிப்பது? ஏன்? முதலில் மாஜி ஸப்-ஜட்ஜ் அய்யாசாமி முதலியார் வீட்டுக்குத் தான் போகவேண்டும். முதலியார் எப்படிப்பட்டவராயிருந்த போதிலும், அவருடைய பெண் செந்திருவின் தோழி - தனக்கு ஒத்தாசை செய்யலாமல்லவா?

அதி வேகமாய்ப் போய்க் கொண்டிருந்த மோட்டார் வண்டி சட்டென்று சாலையில் நின்றது. மூன்று தொண்டர்கள் இறக்கிவிடப்பட்டார்கள். அவர்கள் "வந்தே மாதரம்" என்று கோஷித்தார்கள். வண்டியிலிருந்தவர்கள் எதிரொலி செய்தார்கள். மறுபடியும் வண்டி கிளம்பித் துரிதமாய்ச் சென்றது. கால் மணி நேரம் போன பிறகு, மீண்டும் நின்றது. இரண்டு தொண்டர்கள் இறக்கி விடப்பட்டார்கள். பிறகு வண்டியில் மகுடபதி ஒருவன் தான் இருந்தான்.

மகுடபதி பொறுமையிழந்து வண்டியிலிருந்து குதித்து விடலாமா என்ற நிலைமைக்கு வந்தபோது, வண்டியின் வேகம் குறைந்தது. "இறங்கப்பா!" என்றான் ஒரு போலீஸ் சேவகன். வண்டி சரியாக நிற்பதற்குள்ளாகவே மகுடபதி இறங்கினான். இதனால் தள்ளாடிக் கீழே விழப் போனவன் மெதுவாகச் சமாளித்துக் கொண்டான்.

அவன் இறங்கியதும் போலீஸ் வண்டி அந்தச் சாலையை ஒரு பிரதட்சணம் செய்து திரும்பி, வந்த வழியே விர்ரென்று புறப்பட்டு, அடுத்த நிமிஷம் அமோகமாய்க் கிளம்பிய சாலைப் புழுதியில் மறைந்துவிட்டது.

அஸ்தமன சமயம். சூரியன் மேற்குத் திசையில் காணப்பட்ட மலைத் தொடர்களுக்குப் பின்னால் மறைந்துவிட்டது. சாலை நிர்மானுஷ்யமாயிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் ஊரோ, வீடோ காணப்படவில்லை.

அந்த இடம் கோயமுத்தூரிலிருந்து சுமார் முப்பது மைல் இருக்கலாம். அவ்வளவு தூரம் எப்படி நடந்து போய்ச் சேர்வது? சாலையில் ஏதாவது பஸ் வந்தால் ஏறிக் கொள்ளலாம். இத்தனை நேரங் கழித்து பஸ் வருமா?

இம்மாதிரி யோசனை செய்து கொண்டு மகுடபதி சாலையோடு வந்து கொண்டிருந்தான். ஓரிடத்தில் சாலையில் முச்சந்தியும் கைகாட்டி மரமும் காணப்பட்டன. கோயமுத்தூர் சாலையில் அவன் திரும்பியதும், எதிரே ஒரு மோட்டார் வண்டி வருவதைக் கண்டான். "எவ்வளவு வேகமாய் வருகிறது" என்று நினைத்துக் கொண்டே சாலையில் ஒதுக்குப்புறமாக நகர்ந்தான். வண்டி கொஞ்சம் மெதுவாவது போல் தோன்றியது. "இதென்ன? நாம் இவ்வளவு ஒதுங்கியும் வண்டியும் இப்படி விடுகிறானே?" என்று நினைத்துக் கொண்டே இன்னும் ஒதுங்கினான். ஆனால், வண்டியும் ஒதுங்கி அவன் பக்கமே வந்தது. அடுத்த வினாடி வண்டி அவன் மேல் மோதிற்று. மகுடபதி நினைவிழந்து கீழே விழுந்தான்.

நடுச்சாலைச் சம்பவம்

மகுடபதிக்கு மறுபடியும் நினைவு வந்தபோது, தான் ஒரு மோட்டார் வண்டியின் பின் சீட்டில் படுத்திருப்பதை அறிந்தான். வண்டி வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. அவனுடைய தலையில் ஏதோ ஈயக் குண்டை வைத்தது போல் கனத்தது. வண்டி மோதிக் கீழே தள்ளியது அவனுக்கு நினைவு வந்தது. தலையில் நல்ல அடிபட்டிருக்க வேண்டும். அதனால் தான் அப்படிக் கனக்கிறது. இன்னும் முழங்காலிலும், முழங்கையிலும், தோளிலும் காயம் பட்ட வலியின் உணர்ச்சியும் உண்டாயிற்று. மிகவும் பிரயத்தனப்பட்டுச் சிறிது தலையைத் தூக்கி முன் சீட்டைக் கவனித்தான். நன்றாக இருட்டியிருந்ததாயினும் வண்டி ஓட்டியது கார்க்கோடக் கவுண்டர்தான் என்பது தெரிந்தது. இந்த வண்டியேதான் தன்னை மோதிக் கீழே தள்ளியது. தான் கீழே விழப்போகும் தறுவாயில், டிரைவர் சீட்டில் இருப்பது கார்க்கோடக்கவுண்டர் போலிருக்கிறதே என்று எண்ணியதும் நினைவுக்கு வந்தது.

தன்னைப் போலீஸார் கொண்டுபோய் நடுச்சாலையில் விடப்போவதைத் தெரிந்து கொண்டுதான் கவுண்டர் பின்னால் தொடர்ந்து வந்திருக்கவேண்டும். வேண்டுமென்றுதான் காரைத் தன்மேல் மோதியிருக்க வேண்டும். ஆனால், இப்போது எங்கே தனனைக் கொண்டு போகிறார்? - ஏதோ கொடிய நோக்கத்துடன் தான் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. தான் பிழைத்திருக்கும் விஷயம் அவருக்குத் தெரியுமா, தெரியாதா? செத்துப் போனதாக நினைத்துக் கொண்டு தன் உடலை எங்கேயாவது யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் கொண்டு போய்ப் போட்டுவிட எடுத்துப் போகிறாரா? அல்லது உயிர் இருக்கிறதென்று தெரிந்துதான் வேறு ஏதாவது தீய நோக்கத்துடன் கொண்டு போகிறாரா? ஒருவேளை அவர் தன்னை உயிரோடேயே புதைத்து விடக்கூடும் என்று எண்ணியபோது, மகுடபதியின் தேகமாத்தியந்தம் ரோமங்கள் குத்திட்டு நின்றன. அந்த நினைப்பினாலேயே அவனுக்கு மூச்சுத் திணறிற்று.

இந்த ராட்சதனுடைய வசத்திலிருந்து எப்படியாவது தப்பித்துக்கொள்ள வேண்டும். தனக்காக இல்லாவிட்டாலும், செந்திருவுக்காகவும் பெரியண்ணனுக்காகவும் தப்பிப் பிழைக்க வேண்டும். ஆனால், எப்படி? அதி வேகமாய்ப் போய்க் கொண்டிருக்கும் காரிலிருந்து எப்படி இறங்கித் தப்பிச் செல்வது?

இவ்விதம் மகுடபதி யோசித்துக் கொண்டிருக்கும் போதே, வண்டியின் போக்கு மெதுவாயிற்று. என்ஜினிலிருந்து பட், பட் என்ற சத்தம் கேட்டது. இரண்டு மூன்று தடவை முக்கி முனகிவிட்டு 'கர்ர்ர்' என்ற சத்தத்துடன் கார் நின்றுவிட்டது.

வண்டியை மறுபடி கிளம்புவதற்குக் கவுண்டர் ஆனமட்டும் முயற்சி செய்து பார்த்தார். ஒன்றும் பலிக்காமற் போகவே, வண்டியிலிருந்து கீழே இறங்கி, மகுடபதி படுத்திருந்த பின் சீட்டின் பக்கம் வந்து கதவைத் திறந்தார். மகுடபதி கண்களை இறுக மூடிக் கொண்டான். மூச்சுக் கூட மெதுவாக விட்டான். கவுண்டன் குனிந்து எதையோ எடுத்தார். அவர் எடுத்தது டார்ச் லைட் என்பதாக அடுத்த நிமிஷம் தன் முகத்தின் மேல் வீசிய ஒளியினால் மகுடபதி ஊகித்துக் கொண்டான். அப்போதும் அவன் கண்களைத் திறக்கவில்லை. கவுண்டர் டார்ச் லைட்டுடன் முன் பக்கம் போனார்.

சற்று நேரத்துக்கெல்லாம் மகுடபதி கண்ணை விழித்துப் பார்த்தான். அவன் படுத்திருந்த பின் சீட்டின் கதவு திறந்திருந்தது. பின்னால் என்ஜின் மூடியைத் திறந்து வைத்துக் கொண்டு, கவுண்டர் கையில் டார்ச்சுடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சரி, தப்புவதற்கு இதுதான் சமயம் என்று மகுடபதி தீர்மானித்தான். சத்தம் செய்யாமல் கீழே இறங்கினான். சாலைக்குப் பக்கத்தில் மரங்களும் புதர்களும் அடர்ந்த காடு. நல்ல இருட்டு, உடம்பின் வலியையும் தலைக்கனத்தையும் சிறிதும் பொருட்படுத்தாமல் மகுடபதி மெள்ள மெள்ள நடந்து அந்தக் காட்டுக்குள் புகுந்தான். புகுந்த பிறகு திரும்பிக்கூடப் பார்க்காமல் போய்க் கொண்டேயிருந்தான். சுமார் அரை பர்லாங்கு தூரம் போன பிறகு நின்றான்.

கவுண்டர் என்ஜினை ரிப்பேர் செய்துவிட்டுத் திரும்பி வந்து பார்க்கும் போது தன்னைக் காணாமல் எவ்வளவு ஏமாற்றமடைவார். எவ்வளவு கோபம் அவருக்கு வரும் என்று எண்ணினான். அப்போது கவுண்டரின் கோபக் குரல் போல், மோட்டார் கார் டர்ர் என்று கர்ஜனையுடன் கிளம்பும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் தூரத்தில் மறையும் வரையில் மகுடபதி பேசாமலிருந்தான். பிறகு மெள்ள மெள்ள நடந்து சாலைக்கு வந்து சேர்ந்தான்.

சாலையில் ஈ காக்காய் கிடையாது. இருட்டோ கேட்க வேண்டியதில்லை. நடுக்காட்டின் தனிமையைக் காட்டிலும் இந்தச் சாலையின் தனிமை அதிக பயங்கரத்தை யளித்தது.

மகுடபதி சற்று நடந்து பார்த்தான். களைப்பினால் நடக்க முடியவில்லை. ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டான். "கடவுளே! நீயே துணை!" என்று மனதிற்குள் எண்ணினான். இங்கே, இந்த மரத்தடியிலேயே கடவுள் நமக்கு மரணத்தை விதித்திருக்கிறாரா. இராது, ஒரு நாளும் இராது. இவ்விதம் அனாதையாக மரத்தடியில் சாவதற்காகவா பகவான் இத்தனை அபயாங்களிலிருந்து தன்னைக் காப்பாற்றுவித்தார்? இல்லை, தன் மூலமாகக் கடவுள் நிறைவேற்ற விரும்பும் காரியங்கள் இன்னும் இருக்கின்றன. முக்கியமாக, செந்திருவைக் கார்க்கோடக் கவுண்டரிமிருந்து காப்பாற்றும் வேலையைக் கடவுள் தனக்கு அளித்திருக்கிறார். அந்த வேலை நிறைவேறும் வரையில் தனக்குச் சாவு வராது. சீக்கிரத்தில் கடவுள் ஏதேனும் உதவி அனுப்பத்தான் செய்வார்.

ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகமாக மகுடபதிக்குப் போய்க் கொண்டிருந்தது. இவ்வாறு அரைமணி நேரம் ஆகியிருக்கும். தூரத்தில் மாட்டு வண்டிகள் வரும் சத்தம் கேட்டது. அவற்றில் தொங்கிய விளக்குகள் வரிசையாக ஆடிக்கொண்டு வரும். அலங்காரக் காட்சியும் தென்பட்டது. அவை கோயமுத்தூருக்குச் சாமான் ஓட்டிச் செல்லும் பார வண்டிகளாய்த் தானிருக்க வேண்டும். வண்டிகள் அருகில் வந்தபோது மகுடபதி முன் ஜாக்கிரதையாக ஒரு மரத்தின் பின்னால் தங்கி வருவதைக் கவனித்தான். முன் வண்டிகள் எல்லாம் போன பிறகு, மறைவிலிருந்து வெளிவந்து, கடைசி வண்டியின் அருகில் வந்தான்.

அரைத் தூக்கமாயிருந்த வண்டிக்காரன், திடுக்கிட்டு "யாரப்பா, அது?" என்றான். "நீதானா அண்ணே!" என்றான் மகுடபதி. அவன் வேங்கைப்பட்டிக்குப் பக்கத்து ஊரான காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவன். செங்கோடக் கவுண்டன் என்று பெயர். மகுடபதியை இந்த இடத்தில் இந்தக் கோலத்தில் கண்டு அவன் அதிசயித்து வண்டியில் ஏறிக்கொள்ளச் சொன்னான். வண்டியில் தானிய மூட்டை ஏற்றியிருந்தது. மகுடபதி படுத்துக்கொள்ளச் சௌகரியமாயிருந்தது.

மகுடபதி காங்கிரஸ் தொண்டன் என்பது செங்கோடக் கவுண்டனுக்குத் தெரியும். கோயமுத்தூரில் நடத்த தடியடி கலாட்டாவைப் பற்றியும் அவன் கேள்விப்பட்டிருந்தான். ஆகவே மகுடபதி தன்னைப் போலீஸார் இப்படித் தனிக் காட்டில் கொண்டு வந்து அடித்துப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள் என்று சொன்னதை அவன் உடனே நம்பினான். மகுடபதியினிடம் பூரண அனுதாபம் காட்டியதுடன், போலீஸ் இலாகாவைப் பலமாகத் திட்டவும் தொடங்கினான்.

"அண்ணே! சத்தம் போடாதே!" என்றான் மகுடபதி.

"சத்தம் போட்டால் என்ன? எந்தப் பயல் என்னை என்ன செய்து விடுவான்? சிகப்புத் தலைப்பாகையைக் கண்டு, பயப்படுகிறவன் செங்கோடக் கவுண்டன் அல்ல. எந்தப் பயலாவது என்மேல் கையை வைக்க வந்தால் ஒரே குத்தாய்க் குத்திப் போட்டு விடுவேன்" என்று செங்கோடன் மடியிலிருந்து கத்தியை எடுத்தான். மகுடபதி அவனுக்கு மகாத்மாவின் அஹிம்சையைப் பற்றிச் சொன்னதெல்லாம் ஒன்றும் பயன்படவில்லை. கடைசியாக, மகுடபதி, "இன்னொரு காரணம் இருக்கிறது, அண்ணே! இந்தக் கலாட்டாவில் என்னை வேலை தீர்த்து விடுவதென்று கள்ளுக்கடைக் கவுண்டர் கங்கணம் கட்டியிருக்கிறார். என்னைத் தேடிக் கொண்டு ஒருவேளை எதிரே வந்தாலும் வருவார். நான் இந்த வண்டியிலிருக்கிறது தெரிந்தால்..."

"யார், கள்ளிப்பட்டிக் கவுண்டரா?" என்று செங்கோடன் கேட்டபோது, அவனுடைய குரலில் கவலை தொனித்தது.

"ஆமாம்" என்றான் மகுடபதி.

"ஐயையோ! அந்த ராட்சதன் கிட்டவா நீ விரோதம் பண்ணிக்கொண்டாய்?" என்றான் செங்கோடக் கவுண்டன்.

போலீஸாரைப் பற்றி அவ்வளவு அலட்சியமாய்ப் பேசிய செங்கோடக் கவுண்டன். கள்ளிப்பட்டிக் கவுண்டர் என்ற பெயரைக் கேட்டதுமே நடுங்கியதைப் பார்த்து மகுடபதிக்கு ஆச்சரியமாயிருந்தது.

"கள்ளிப்பட்டிக் கவுண்டரை உனக்குத் தெரியுமா அண்ணே?" என்று கேட்டான்.

"ஏன் தெரியாது? நல்லாத் தெரியும். நானும் அவரும் ஒரே வீட்டிலே தான் பெண் கட்டினோம்..."

"என்ன?"

"ஆமாம்; என் மச்சினியை அவர் இரண்டாந்தாரமாய்க் கட்டியிருந்தார்."

"அப்படியா?"

"ஆனால் எங்களுக்குள்ளே வெகு நாளாய்ப் போக்கு வரவு இல்லை. பாவாயி செத்துப் போன அப்புறம்..."

"யார் பாவாயி?"

"என் மச்சினிதான். அவளுக்கு ஒரு ஆண்பிள்ளைக் குழந்தை பிறந்தது. மூன்று வயதிருக்கும். பாவாயி செத்துப் போன சமயத்தில், அந்தப் பிள்ளையும் காணாமல் போய்விட்டது. பிள்ளையை நான் தான் ஏதோ பண்ணிப்பிட்டேன் என்று கள்ளிப்பட்டிக் கவுண்டருக்குச் சந்தேகம். ஐயையோ? என்னைப் படாதபாடு படுத்திவிட்டார். கொதிக்கிற எண்ணெயிலே கையை வைத்துச் சத்தியம் செய்த அப்புறந்தான் விட்டார். இதோ பார்!" என்று செங்கோடன் கையைக் காட்டினான். கை வெந்து போய்த் தோலுரித்திருந்தது.

"பதினைந்து வருஷம் ஆச்சு! அப்போதிருந்த ராட்சதத் தனம் அந்த மனுஷனுக்கு இன்னும் போகவில்லை" என்றான் செங்கோடன்.

மகுடபதி இந்த விவரத்தைக் கேட்டு, மிக்க ஆச்சரியமும் அருவருப்பும் அடைந்ததுடன், கள்ளிப்பட்டிக் கவுண்டரிடம் தான் சிக்கிக் கொண்டால் என்ன பாடுபடுத்துவாரோ என்று எண்ணினான். அவன் அடிவயிற்றை என்னமோ செய்தது.

இச்சமயத்தில் தூரத்தில் மோட்டார் வரும் சத்தம் கேட்டது. அதே ஹாரன் தான்!

அந்த ஹாரன் சத்தத்தைக் கேட்டதுமே வண்டிக்காரர்கள் மளமளவென்று வண்டிகளைத் திருப்பிச் சாலையில் ஒரு ஓரமாகக் கொண்டு போகத் தொடங்கினார்கள். வருகிறது யார் மோட்டார் என்று அந்த வண்டிக்காரர்களுக்குத் தெரியும் என்று தோன்றிற்று.

"நீ பயந்தாப் போலேயே ஆச்சு, தம்பி! கப்சிப் பேசாமல் துணியைப் போர்த்துக் கொந்து படுத்துக்கோ!" என்றான் செங்கோடன்.

கட்டை வண்டிகளுக்கு எதிரே கொஞ்ச தூரத்திலேயே மோட்டார் நின்றுவிட்டது. அதில் இப்போது நாலுபேர் இருந்தார்கள். கள்ளிப்பட்டிக் கவுண்டர் கையில் துப்பாக்கியுடன் காரிலிருந்து இறங்கியபோது அவ்வளவு வண்டிக்காரர்களுக்கும் குலைநடுக்கம் எடுத்திருக்க வேண்டும். மகுடபதிக்குக்கூட, "என்ன விபரீதம் நடக்கப் போகிறதோ?" என்று தத்தளிப்பாயிருந்தது.

கவுண்டர் துப்பாக்கியைப் பக்கத்திலிருந்த காட்டுப் பக்கமாய்த் திருப்பிச் சுட்டார்.

'டுடும்' 'டுடும்' என்று இரண்டு வேட்டுச் சத்தம் அந்த நள்ளிரவின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு கேட்டது.

பைத்தியம் யாருக்கு?

கவுண்டருடன் வண்டியிலிருந்து இறங்கிய தடியர்கள் இருவரும் துப்பாக்கி வேட்டுத் தீர்த்த திசையை நோக்கி விரைந்து போனார்கள். அவர்கள் கோயமுத்தூரில் அன்று மாலை தன்னைத் தொடர்ந்து வந்தவர்கள்தான் என்பதை மகுடபதி கவனித்தான். கட்டைவண்டிகளில் தொங்கிய லாந்தர்களின் வெளிச்சத்தில் இதெல்லாம் ஓர் அதிசயமான சினிமாக் காட்சி போல் தெரிந்தது.

காட்டிற்குள் புகுந்த தடியர்கள் இருவரும் சற்று நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்தார்கள். ஒருவன் கையில் செத்த முயலைத் தூக்கிக் கொண்டு வந்தான். முயலின் வயிற்றிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இந்தக் கோரக் காட்சியைக் காணச் சகிக்காமல் மகுடபதி கண்ணை மூடிக் கொண்டான். முயலின் மேல் பாய்ந்த குண்டு உண்மையில் தன்னை உத்தேசித்து விடப்பட்டதுதான் என்பது அவன் உள்ளத்திற்குத் தெரிந்து போயிற்று.

'ஆமாம்; பக்கத்துக் காட்டில் ஏதோ சலசலப்புச் சத்தம் கேட்டுதான் கவுண்டர் மோட்டரை நிறுத்தியிருக்கிறார். தாம் தேடி வந்த ஆசாமி அங்கே காட்டில் ஒளிந்து கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்த்துத்தான் துப்பாக்கி வேட்டுத் தீர்த்திருக்கிறார். அர்த்த ராத்திரியில் முயல் வேட்டையாட அவர் வரவில்லை என்பது நிச்சயம். மனித வேட்டையாடத்தான் வந்திருக்கிறார்!'

இந்த நினைவினால் மகுடபதியின் தேகம் நடுங்கிற்று. அந்த ஜனவரி மாதத்துக் குளிரில் அவனுடைய உடம்பு சொட்ட வியர்த்துவிட்டது.

கவுண்டரும் மற்றவர்களும் காரில் மறுபடியும் ஏறி உட்கார்ந்தார்கள். கார் கிளம்புவதற்குள்ளே கள்ளிப்பட்டிக் கவுண்டர் முன்னாடியிருந்த வண்டிக்காரனைப் பார்த்து, "ஏனப்பா! நீங்க வருகிற வழியிலே யாராவது ஒரு பையனைக் கண்டீங்களா?" என்று கேட்டார்.

அப்போது செங்கோடன், மகுடபதி இரண்டு பேருடைய நெஞ்சம் பட்பட் என்று அடித்துக் கொண்டன.

முன் வண்டிக்காரன் இல்லிங்களே! ஒரு ஈ காக்காய் வழிலே கிடையாது!" என்று பதில் சொன்னது காதில் விழுந்த பிறகுதான், அவர்களுடைய பதட்டம் அடங்கிற்று.

கார் உடனே கிளம்பி, கட்டைவண்டிகள் எல்லாவற்றையும் தாண்டிக்கொண்டு, சாலைப் புழுதியை அமோகமாய்க் கிளப்பி விட்டுவிட்டு அதிவேகமாய்ச் சென்று மறைந்தது.

பிறகு செங்கோடக் கவுண்டன் மகுடபதியைப் பற்றி மேலும் விசாரித்தான். கடைசியில் "தம்பி! நான் சொல்கிறதைக் கேள். என் மாமியார் வீடு சேவல் பாளையத்தில்தான் இருக்கிறது. கோழி கூப்பிடுகிற நேரத்திற்கு அங்கே போய்ச் சேருவோம். உன்னை என் மாமியார் வீட்டில் விட்டுவிட்டுப் போகிறேன். நன்றாய்ப் பார்த்துக் கொள்வார்கள். பகலெல்லாம் படுத்துத் தூங்கு. திரும்ப நான் இராத்திரி வருகிறேன். பேசாமல் என்னோடு ஊருக்கு வந்துவிடு. காங்கிரஸும் காந்தியும் சுயராஜ்யம் கொண்டு வருகிற காரியம் நீ ஒருவன் இல்லாததனாலே கெட்டுப் போய்விடாது..." என்றான்.

மகுடபதி உடம்பும் மனமும் சோர்ந்திருந்தான். அந்த நிலைமையில் செங்கோடக் கவுண்டன் சொன்னது அவனுக்குப் பக்குவமாகப் பட்டது. "ஆகட்டும்!" என்றான் மகுடபதி. ஆனால் வண்டி கடகடவென்று ஆடிக்கொண்டு போய்க் கொண்டிருந்தபோது, அவன் மனமும் ஊசலாடிக் கொண்டிருந்தது. "வாஸ்தவந்தான்! காங்கிரஸும் காந்திமகானும் நான் ஒருவன் இல்லாமலே காரியத்தைப் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் செந்திருவின் கதி என்ன? அவளும் எப்படியாவது போகட்டும் என்று விட்டுவிடுகிறதா?" என்ற கேள்வி அவன் மனதில் எழுந்து கொண்டேயிருந்தது. அப்படியே கண்ணயர்ந்து விட்டான்.

கோயமுத்தூருக்கு இப்பால் ஆறு மைல் தூரத்தில் சேவல்பாளையம் கிராமம் இருக்கிறது. பெரிய சாலையிலிலிருந்து பிரிந்து ஒரு மைல் தூரம் குறுக்குப் பாதையில் போகவேண்டும். செங்கோடன் அங்கே தன் வண்டியைப் பிரித்து ஓட்டிக் கொண்டு போய்ச் சேவல்பாளையம் சின்னசாமிக் கவுண்டர் வீட்டில் மகுடபதியை விட்டான். சின்னசாமிக் கவுண்டர் காலமாகிக் கொஞ்ச காலமாயிற்று. செங்கோடனுடைய மாமியாரும், கல்யாணமாகாத ஒரு மைத்துனியும் இரண்டு மைத்துனர்களுந்தான் இருந்தார்கள். மைத்துனர்கள் சிறுபிள்ளைகள். அவர்கள் காங்கிரஸ் தொண்டன் மகுடபதியைப் பற்றி ரொம்பவும் கேள்விப் பட்டிருந்தார்கள். மகுடபதிக்கு அந்த வீட்டில் ராஜோபசாரம் நடந்தது.

செங்கோடன் வண்டியுடன் கோயமுத்தூருக்குக் கிளம்பியபோது, மகுடபதி, அவனிடம் "அண்ணாச்சி! கோயமுத்தூரில் எனக்கு அவசியமாக ஒரு காரியம் ஆக வேண்டும். உன்னால் முடியக்கூடிய காரியம்தான். செய்து வருவாயா?" என்று கேட்டான். "ஆகட்டும்; என்ன காரியம்?" என்றான் செங்கோடன். "பிரமாதம் ஒன்றுமில்லை. பென்ஷன் ஸப்-ஜட்ஜ் அய்யாசாமி முதலியார் வீடு எங்கே இருக்கிறதென்று விசாரித்து அடையாளம் தெரிந்து கொண்டு வரவேண்டும். அவரிடம் ஒரு முக்கியமான காரியம் எனக்கு இருக்கிறது. அதை முடித்துக் கொண்டு பிறகு ஊருக்கே வந்து விடுகிறேன்" என்றான் மகுடபதி. "சரி" என்று சொல்லிவிட்டுச் செங்கோடன் போனான்.

மகுடபதி அன்று முழுவதும் ஓய்வு எடுத்துக் கொண்டு இளைப்பாறினான். எப்படியோ அந்த வீட்டில் அவன் என்றும் அறியாத ஒரு மன அமைதியை அனுபவித்தான். வீட்டுப் பிள்ளைகள் இரண்டு பேரும் மகுடபதியிடம் கலகலவென்று பேசிக்கொண்டும், காங்கிரஸையும் காந்தியையும் சிறைவாசத்தையும் பற்றிக் கேட்டுக் கொண்டுமிருந்தார்கள். அடிக்கடி அவர்கள் 'மகாத்மா காந்திக்கு ஜே!', 'பாரத மாதாவுக்கு ஜே!', 'மகுடபதிக்கு ஜே!' என்று கோஷித்து விட்டு, புன்னகையுடன் மகுடபதியைக் கடைக்கண்ணால் பார்த்தார்கள். அவர்களுடைய அக்காவுக்குப் பதினேழு, பதினெட்டு வயதிருக்கும், படிப்பில்லாத பட்டிக்காட்டுப் பெண்தான். ஆனால் முகத்திலே நல்ல குறுகுறுப்பு இருந்தது. அவள் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் ஓடியாடி வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள் இடையிடையே மகுடபதியின் பேரில் ஒரு கடைக்கண் பார்வையை மின்வெட்டைப் போல் வீசிவிட்டுப் போனாள். இந்த மாதிரி ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு சிவனேயென்று அமைதியான கிராம வாழ்கை என் நடத்தக் கூடாது என்று மகுடபதி எண்ணினான்.

செங்கோடனுடைய மாமியாருடன் அவன் பேசிக் கொண்டிருந்தபோது, இறந்துபோன பாவாயியைப் பற்றியும், அவளுக்குக் கள்ளிப்பட்டிக் கவுண்டருடன் நடந்த கல்யாணத்தைப் பற்றியும், அவர்களுடைய இல்வாழ்க்கையைப் பற்றியும் பல விவரங்கள் அறிந்தான். பாவாயிதான் அந்த வீட்டின் மூத்த பெண். கள்ளிப்பட்டிக் கவுண்டரின் முதல் மனைவிக்குக் குழந்தைகள் இல்லையாதலால் பாவாயியை இரண்டாந்தாரமாகக் கொடுத்தார்கள். பாவாயிக்கு ஆண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பட்டிக் கவுண்டரின் பெரிய சொத்து முழுவதும் அந்தக் குழந்தைக்கு வரும் என்று ஆசைப்பட்டுக் கொடுத்தார்கள். பாவாயிக்கு அவ்விதமே ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனாலும், அதற்குப் பிறகு கள்ளிப்பட்டிக் கவுண்டர் மூன்றாந்தாரம் கல்யாணம் செய்து கொண்டார்.

பாவாயியின் பிள்ளைக்கு நாலு வயதான போது பாவாயி இரண்டாவது பிரசவத்துக்காகப் பிறந்த வீட்டுக்கு வந்திருந்தாள். கள்ளிப்பட்டிக் கவுண்டருக்கு அவள் மேல் எப்படியோ வெறுப்பு உண்டாகி, அவளை அடித்து உபத்திரவப்படுத்த ஆரம்பித்தார். இதனால்தானோ என்னமோ, பாவாயிக்கு அகாலப் பிரசவமாகிக் குறைபிறந்து தாயாரும் இறந்துபோனாள். அதே சமயத்தில் அவளுடைய நாலு வயதுப் பிள்ளையும் காணாமல் போய்விட்டது.

கள்ளிப்பட்டிக் கவுண்டருக்குப் பாவாயி இறந்ததில் துக்கம் இல்லை. ஆனால், பிள்ளை காணாமல் போனது பற்றி அவருக்குத் துக்கமும் கோபமும் அசாத்தியமாயிருந்தன. பாவாயியுடன் அவர் துணைக்கு அனுப்பியிருந்த வேலைக்காரப் பெரியண்ணன் மேலும் அவருடைய சகலன் செங்கோடக் கவுண்டன் மேலும் அவருக்குச் சந்தேகம் உதித்திருந்தது. அவருடைய கோபத்துக்குப் பயந்து பெரியண்ணன் கண்டிக்கு ஓடிப் போய்விட்டான். செங்கோடக் கவுண்டன் அவரிடம் அகப்பட்டுக் கொண்டு உயிருடன் தப்பிய பாடு பெரும்பாடாகிவிட்டது.

மகுடபதி இன்னும் கொஞ்சம் விசாரித்து, அப்போது கண்டிக்குத் தப்பி ஓடிய பெரியண்ணன் தான் குடிப்பேயினிடமிருந்து தப்புவித்த பெரியண்ணன் என்பதைத் தெரிந்து கொண்டான். "ஐயோ! பெரியண்ணனை மறுபடியும் காண்போமா?" என்று அவனுடைய மனம் தத்தளித்தது.

அன்றிரவு செங்கோடன் கோயமுத்தூரிலிருந்து திரும்பி வந்தான். மாஜி ஸப்-ஜட்ஜ் அய்யாசாமி முதலியாரின் விலாசத்தைத் திட்டமாக விசாரித்துக் கொண்டு வந்து மகுடபதியிடம் தெரிவித்தான். ஒரு அநியாயக் கேஸ் சம்பந்தமாக் யோசனை கேட்க வேண்டியிருக்கிறதென்றும், அவரைக் கண்டு பேசிவிட்டு உடனே வேங்கைப்பட்டிக்கு வந்து விடுவதாகவும் மகுடபதி செங்கோடனிடம் கூறி, வேங்கைப்பட்டியில் தன் தாயாரைப் பார்த்து அவ்விதம் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொண்டான். மறுநாள் காலையில் செங்கோடன் தன்னுடைய கிராமமான காட்டுப்பாளையத்துக்கும், மகுடபதி கோயமுத்தூருக்கும் கிளம்பினார்கள்.

மகுடபதி கோயமுத்தூருக்குக் கிளம்பிய போதும், அன்று பிற்பகல் அய்யாசாமி முதலியார் வீட்டு வாசலை அடைந்தபோதுங்கூட, தான் இன்னான் என்பதைச் சொல்லிச் செந்திருவைப் பற்றி விசாரிக்கும் எண்ணத்துடன் தான் வந்தான். ஆனால் செவி மந்தமுள்ள முதலியாரின் மனைவி, "தவிசுப்பிள்ளையா?" என்று கேட்டபோது, அம்மாதிரி தவிசுப் பிள்ளையாய் நடித்தால் ஒரு வேளை சீக்கிரத்தில் உண்மை தெரியலாம் என்ற யோசனை மகுடபதிக்கு உண்டாயிற்று. காங்கிரஸ் விடுதிகளில் மகுடபதி சமையல் வேலையும் நன்றாய்க் கற்றுக் கொண்டிருந்தான். ஆகவே பங்கஜத்தின் தாயாருக்குச் சந்தேகம் தோன்றாதபடி அவனால் சமையல் அறையில் வேலை செய்ய முடிந்தது.

நள்ளிரவில், அய்யாசாமி முதலியார் பங்களாவின் முன்புறத்துக் கொடி வீட்டில் உட்கார்ந்து கொண்டு, மகுடபதி மேற்கூறிய வரலாறுகளைச் சுருக்கமாகப் பங்கஜத்தினிடம் தெரிவித்தான். அவன் சொல்லாவிட்டால் பங்கஜம் விடுகிற வழியாயில்லை. நாவல் பைத்தியம் முற்றியவளான பங்கஜம், நிஜ வாழ்க்கையில் நடக்கும் இவ்வளவு அபூர்வ சம்பவங்களைத் தெரிந்து கொள்ளாமல் விடமுடியுமா? ஆகவே மகுடபதி எதையாவது விட்டால்கூட, பங்கஜம் நோண்டிக் கேட்டு விஷயங்களைத் தெரிந்து கொண்டாள்.

கடைசியாக மகுடபதி, "இவ்வளவெல்லாம் நான் சிரமப்பட்டதில் என்ன பிரயோஜனம்? ஒன்றுமில்லை. நாளைக்கே நான் மறுபடியும் பகிரங்கமாக மறியல் செய்து ஜெயிலுக்குப் போய்விடுகிறேன்" என்றான்.

உடனே அவன், "இல்லை, இல்லை, மறியலும் ஆச்சு மண்ணாங்கட்டியுமாச்சு! இந்தக் கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டுபோய் அந்தக் கார்க்கோடக் கவுண்டரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, போலீஸிடம் நேரே போய் ஒப்புக் கொண்டு விடுகிறேன்..." என்றான்.

"பைத்தியந்தான்!" என்றாள் பங்கஜம்.

"யாரைச் சொல்லுகிறாய்?"

"ஆமாம்; பைத்தியம் உமக்குத்தான்; என் தோழிக்கு இல்லை."

"அதெப்படிச் சொல்லுகிறாய்? உனக்கு என்னமாய்த் தெரியும்?"

"சொல்லுகிறேன், கேளும் மூன்று வருஷத்துக்கு முன்னால் நானும் செந்திருவும் மயிலாப்பூரில் அடுத்தடுத்த வீட்டில் இருந்தோம். அப்போது நான் ஒரு கதை எழுதினேன். அதில் கதாநாயகி ஒரு துஷ்டனிடம் அகப்பட்டுக் கொண்டு விடுகிறாள். 'என்னைக் கல்யாணம் செய்து கொள்' என்று அந்தத் துஷ்டன் வற்புறுத்துகிறான். மனோன்மணி - கதாநாயகி - மாட்டேன் என்றாள். அவனுடைய பலவந்தத்திலிருந்து அவள் எப்படித் தப்புவது. இதற்கு ஏதாவது யுக்தி கண்டுபிடிப்பதற்கு நான் யோசித்தேன். எவ்வளவோ யோசித்தும் யுக்தி ஒன்றும் தோன்றவில்லை. செந்திருவிடம் கேட்டேன். அவள் உடனே 'மனோன்மணிக்குப் பைத்தியம் பிடித்து விட்டதாக வையேன்' என்றாள். 'அடி சுட்டி! பேஷான யோசனையடி' என்றேன். அன்று செந்திரு என் கதைக்குக் கூறிய யுக்தி இப்போது அவளுக்கு நிஜமாகவே உபயோகப் பட்டிருக்கிறது. அதை ஞாபகப்படுத்திக் கொண்டுதான் என் சமர்த்துத் தோழி இப்போது பைத்தியம் போல் நடித்திருக்கிறாள்..."

"இதுமட்டும் நிஜமாயிருந்தால்?..." என்றான் மகுடபதி அளவற்ற ஆவலுடன்.

"சந்தேகமே இல்லை. என் மனது சொல்லுகிறது. என் தோழிக்கு நிஜப் பைத்தியம் இல்லையென்று அப்பா சொல்லும்போதே எனக்கு இது தோன்றிவிட்டது. ஆனால் அவரிடம் சொல்லிப் பிரயோசனமில்லையென்றுதான் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். செந்திருவின் சமர்த்தே சமர்த்து; ஆனானப்பட்ட கார்க்கோடக் கவுண்டரையும், போலீஸ் சூபரிண்டெண்டையும், என் அப்பாவையும் கூடத் தனக்குப் பைத்தியந்தான் என்று நம்பும்படி நடித்திருக்கிறாளே? அந்தக் கெட்டிக்காரியை எப்படியாவது விடுதலை செய்யவேண்டியது நம்முடைய பொறுப்பு" என்றாள் பங்கஜம்.

"உன்னையும் பொறுப்பில் சேர்த்துக் கொண்டதற்காக ரொம்ப சந்தோஷம்" என்றான் மகுடபடி.

"உம்மிடம் ஏதாவது பணம் இருக்கிறதா?" என்று பங்கஜம் கேட்டாள்.

"காலணாக்கூட இல்லை; வேங்கைப்பட்டிக்குப் போய் எடுத்துக்கொள்ள வேண்டும்."

"சற்றுப் பொறும்" என்று சொல்லிவிட்டுப் பங்கஜம் வீட்டுக்குள்ளே சென்றாள். ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் திரும்பி வந்து மகுடபதியின் கையில் சில பத்து ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தாள்.

உடனே, "இப்போது, கிளம்பும். பொழுது விடிந்து இங்கே இருந்தால், அப்பா பார்த்துவிடுவார். அம்மாவை ஏமாற்றியது போல் அவரை ஏமாற்ற முடியாது. அவர் தெரிந்து கொண்டால் ஏதாவது அனர்த்தமாய் முடிந்தாலும் முடியும்."

"போகிறேன், போய் என்னத்தைச் செய்வது?"

"என்னத்தைச் செய்வதா? போய் மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டுச் சௌக்கியமாய்ப் படுத்துத் தூங்குவது. ஒரு அனாதைப் பெண் எந்தக் கதி யடைந்தால் உமக்கு என்ன?"

"அவளுக்காக என் உயிரைக் கொடுக்கவும் தயாராயிருக்கிறேன். ஆனால் என்ன செய்கிறது என்று தான் தெரியவில்லை."

"சரி, நான் சொல்லிக் கொடுக்கிறேன். இந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு போய்த் தேவகிரி எஸ்டேட்டுக்குப் பக்கத்தில் ஓர் ஊரில் இருந்து கொள்கிறது; எஸ்டேட் பங்களாவிலுள்ள வேலைக்காரர்களை எப்படியாவது சிநேகம் செய்து கொள்கிறது; அவர்கள் மூலமாகச் சொல்லி அனுப்பியோ, கடிதம் அனுப்பியோ, செந்திருவிடமிருந்து 'எனக்குப் பைத்தியம் இல்லை' என்று ஒரு கடிதம் மட்டும் எப்படியாவது வாங்கிக் கொண்டு வந்துவிடும். அப்புறம் அவளை மீட்டுக் கொண்டு வருவதற்கு நானாயிற்று" என்றாள் பங்கஜம்.

மகுடபதி அவளுக்கு நன்றியும் வந்தனமும் கூறத் தொடங்கினான். "அதெல்லாம் வேண்டாம்; சீக்கிரம் போம். அப்பாவின் அறையில் ஏதோ சத்தம் கேட்டது. அவர் ஒரு வேளை விழித்துக் கொண்டு வந்துவிட்டால் ஆபத்து!" என்று சொல்லிப் பங்கஜம் விரைவாகப் பங்களாவுக்குள் சென்றாள். அடுத்த நிமிஷம் பங்களாவில் நிசப்தம் குடிகொண்டது.

மகுடபதி, "இதெல்லாம் கனவா? உண்மையில் நமது வாழ்க்கையில் நடப்பதுதானா?" என்ற திகைப்புடன் அங்கிருந்து எழுந்திருந்து வெளியே செல்லத் தொடங்கினான். இந்த அர்த்த ராத்திரியில் எங்கே போவது, என்ன செய்வது என்று யோசிக்கக்கூட அவன் மனம் அப்போது சக்தி இழந்திருந்தது. உணர்வில்லாத இயந்திரம்போல் நடந்து சத்தம் செய்யாமல் காம்பவுண்ட் கேட்டின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். வெளியே வந்து திரும்பியதும், சுவரோரத்தில் அவனுக்கெதிரே தோன்றிய தோற்றத்தைக் கண்டு, அப்படியே வெட வெடத்து நின்றான். அந்தக் கணத்தில் அவனுடைய உடம்பில் ஓடிய இரத்தமெல்லாம் சுண்டி வறண்டுவிட்டது. அப்படி அவனை வெடவெடத்து நடுங்கச் செய்த தோற்றம் அங்கே சுவரோரமாக நின்ற பெரியண்ணனுடைய ஆவி வடிவந்தான்!

கல் விழுந்தது!

இத்தனை காலமும் நமது கதாநாயகி செந்திருவை அந்தரத்திலேயே நிறுத்தி வைத்துவிட்டேன். அவளைப் பற்றி ஒன்றும் சொல்லாததனால் வாசகர்கள் பலர் பெரிதும் கவலை யடைந்திருப்பார்கள். என்மேல் கூட கோபங்கூட அவர்களுக்கு வந்திருக்கும். செந்திரு மகுடபதியின் உள்ளத்தை மட்டுந்தானா கவர்ந்தாள்? ஆயிரக்கணக்கான நேயர்களின் அன்பையும் அனுதாபத்தையும் அல்லவா, கவர்ந்திருக்கிறாள்?

ஆனாலும் இந்தக் கதையில் தயவு செய்து இது கதை தான் என்பதை மறந்துவிட வேண்டாம் - பல சம்பவங்கள் ஏக காலத்தில் வெவ்வேறு இடங்களில் நடப்பதால், ஒவ்வொன்றாகத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அப்படிச் சொல்லும்போது, பாவம், அந்த அனாதைப் பெண்ணின் துயரத்தைக் கடைசியில் வைத்துக் கொள்ளலாமே என்று தள்ளிப் போடத் தோன்றுகிறது.

கவுண்டர்கள் இருவரும் செந்திருவைத் தேவகிரி எஸ்டேட் பங்களாவில் கொண்டு வந்து விட்டுப் போனதையும், செந்திரு தன்னை அடைந்திருந்த அறையின் கதவைப் படீர் படீர் என்று அடித்ததையும் பதினோராம் அத்தியாயத்தில் பார்த்தோம். கதவை அடிப்பதனால் கை நோவதைத் தவிர வேறு பயனில்லையென்று அவள் கண்ட போது, திரும்பிச் சென்று அந்த அறையில் கிடந்த கட்டிலில் குப்புறப் படுத்துக் கொண்டு விம்மி அழுதாள். கண்ணீர் ஆறாய்ப் பெருக்கி வெகுநேரம் அழுது கொண்டே யிருந்தாள். அழுகையின் போது எப்படியோ வெறி சிறிது சிறிதாகக் குறைந்துகொண்டு வந்தது. மனதில் ஒருவித அமைதி உண்டாயிற்று. அப்படியே நித்திரையில் ஆழ்ந்தாள்.

"அம்மா! அம்மா!" என்ற மிருதுவான குரலைக் கேட்டுச் செந்திரு கண் விழித்தபோது பத்து மணிக்கு மேலிருக்கும். அவளை எழுப்பியவள் பங்களாவின் வேலைக்காரி பவளாயி. அறிவு தெளிந்தபோது, செந்திரு தான் ரொம்பவும் பலவீனமாயிருப்பதை உணர்ந்தாள். முதல் நாள் இரவு ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வந்த பயங்கரச் சம்பவங்களினாலும், அவற்றினால் உள்ளத்தில் ஏற்பட்ட பீதி, கோபம், துன்பம் முதலிய கிளர்ச்சிகளினாலும், போதிய உணவும் உறக்கமும் இல்லாதபடியாலும், அவள் தேகம் மிகவும் சோர்வு அடைந்திருந்தது; உள்ளமும் களைபடைந்திருந்தது. அவளுடைய திக்கற்ற நிலைமையை உள்ளபடி உணர்ந்து துக்கப்படுவதற்கு வேண்டிய சக்திகூட அவளுக்கு அச்சமயம் இல்லாமலிருந்தது. அவளுடைய தேகமும் மனமும் அவ்வளவு பலவீனப்பட்டிருததன் காரணமாக, அச்சமயம் யார் என்ன சொன்னாலும் கேட்கக்கூடிய நிலைமையில் அவள் இருந்தாள். வேலைக்காரி சொன்னபடி எழுந்திருந்து பல் துலக்கி முகம் கழுவினாள். அவள் கொண்டு வந்திருந்த ஆப்பத்தையும் காப்பியையும் சாப்பிட்டாள்.

பவளாயி பாத்திரங்களை எடுத்துப் போன பிறகு அறையின் கதவு திறந்திருப்பதைச் செந்திரு கவனித்தாள். மெதுவாக எழுந்து வெளியே வந்தாள். ஒருவரும் அவளைத் தடை செய்யவில்லை. ஹாலைக் கடந்து பங்களாவின் வாசற்புறம் வந்து பார்த்தாள். பார்த்துக் கொண்டே நின்றாள். சிறிது சிறிதாக அவளுடைய உடம்பில் ஜீவசக்தி உண்டாகி வந்தது. உள்ளமும் வேலை செய்ய ஆரம்பித்தது. ஒரு புறத்தில் அவள் கண்முன் தோன்றிய அழகிய அற்புதமான இயற்கைக் காட்சி அவளை வசீகரித்தது. "ஆகா! என்ன அழகான இடம்!" என்று மனம் வியந்தது. மற்றொரு புறத்தில், அந்த அழகான இடத்தில் தான் சிறைப்பட்டிருப்பதும் அங்கிருந்து ஒரு வேளை கார்க்கோடக் கவுண்டரின் மனைவியாகத்தான் வெளியே போகக் கூடுமென்பதும் நினைவு வந்தன. அப்போது அவளுடைய நெஞ்சை யாரோ முறித்துப் பிழிவது போல் இருந்தது.

பங்களாவின் முன் வாசல் தோட்டத்தில் வந்து அங்கு மிங்கும் உலாவினாள். அவ்விடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு ஏதேனும் ஒரு வழியுண்டா என்னும் எண்ணம் அவள் மனதில் அடிக்கடி உதயமாயிற்று. சுற்றுமுற்றும் பார்க்கப் பார்க்க, அது எவ்வளவு அசாத்தியமான காரியம் என்பதுதான் நிச்சயமாய்த் தெரிந்தது.

பங்களாவுக்கும் தோட்டத்துக்கும் இடது புறத்தில் சரிவாக மலை உயர்ந்திருந்தது. அந்தச் சரிவில் கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு யுகலிப்டஸ் மரங்கள் வானளாவி உயர்ந்திருந்தன. பங்களாவுக்குப் பின் பக்கத்தில் மலை, சுவரைப் போல் உயர்ந்திருந்தது. வலது புறத்தில் திடீரென்று செங்குத்தான பள்ளமாயிருந்தது. அதன் ஓரத்தில் இரும்பு வேலை எடுத்திருந்தது. வேலி வழியாக எட்டிப் பார்த்தால் சுமார் நாலு ஆள் உயரத்துக்குக் கீழே ஒரு பாதை போவது தெரிந்தது. அப்பாதை வளைந்து வளைந்து குறுக்கும் நெடுக்குமாய்ச் சென்று, வெகு தூரத்துக்கப்பால் தெரிந்த பெரிய மலைச் சாலையை அடைந்தது.

பங்களாவுக்கு எதிரே பலமான இரும்புக் கேட் போட்டிருந்தது. அதன் வழியாகத்தான் அந்தப் பங்களாவிலிருந்து வெளியே போகலாம். அப்படிப் போகும் பாதைதான் சிறிது தூரத்தில் மடங்கி, பங்களாவின் வலது புறமாகக் கீழே இறங்கிப் போயிற்று.

செந்திருவுக்கு நீலகிரி புதியதில்லை. ஏற்கெனவே அவளுடைய தகப்பனார் இருந்த காலத்தில் கூனூரில் அவள் கோடை வாசம் செய்ததுண்டு. ஆகவே சுற்று முற்றும் பார்த்த பின்னர், இந்தப் பங்களாச் சிறையிலிருந்து பிறருடைய ஒத்தாசையில்லாமல் தப்பிச் செல்வது இயலாத காரியம் என்பதைத் தெரிந்து கொண்டாள். ஆனால் அத்தகைய ஒத்தாசை தனக்கு எப்படிக் கிடைக்கும்? இந்தத் தனிமையான மலை உச்சிக்குத் தன்னைத் தேடிக் கொண்டு யார் வரப்போகிறார்கள்? தன் பேரில் உண்மையாகப் பிரியம் கொண்டிருந்த இருவரில் ஒருவர் கார்க்கோடக் கவுண்டரின் கத்திக்கு இரையானார். இன்னொருவர் மேல் பாவிகள் கொலைக் குற்றம் சுமத்தப் போகிறார்கள்! ஆகவே தான் விடுதலையாகிச் சென்று அவரைக் காப்பாற்றினால் தான் உண்டு. அவர் வந்து தன்னைக் காப்பாற்றப் போவதில்லை. பின் யார் தனக்கு ஒத்தாசை செய்யப் போகிறார்கள்? ஐயோ! மூன்று வருஷம் சித்தப்பாவின் வீட்டில் சிறை இருந்த பிறகு தப்பித்துச் செல்ல முயன்றதன் பலன் இதுதானா? அதைவிடக் கடுமையான மலைச் சிறைக்கு அல்லவா வந்து சேர்ந்து விட்டோ ம்? - என்று எண்ணிச் செந்திரு விம்மினாள். இதிலிருந்து தப்புவதற்கு வழியே கிடையாதா? தன்னிடம் அன்புடன் பேசிய வேலைக்காரி பவளாயியின் ஞாபகம் வந்ததும், கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. 'பெண் என்றால் பேயும் இரங்கும்' என்று பழமொழி ஆயிற்றே? ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் இரங்கமாட்டாளா?

இந்த எண்ணத்துடன் செந்திரு வேலைக்காரியுடன் சிநேகம் செய்து கொள்ளத் தொடங்கினாள். பவளாயியும் செந்திருவிடம் அன்பும், அனுதாபமுமாய்ப் பேசினாள். செந்திரு தன்னுடைய மனத்தைத் திறந்த போது, பவளாயி அவளுக்காகக் கசிந்துருகுவதாய்க் காட்டிக் கொண்டாள். "ஆனால், நான் என்ன செய்வேன், தாயே! இந்தப் பங்களாவை விட்டு அந்தண்டை இந்தண்டை நான் போகக்கூடாது. உனக்கு மட்டுமா, எனக்குங்கூட இது ஜெயில் தான். என் புருஷனோ ரொம்ப முரடு, ஏதாவது சந்தேகம் தட்டினால் என்னைக் கத்தியால் குத்தி விடுவான்!" என்றாள்.

பவளாயி தன் புருஷனைப் பற்றிச் சொன்னது என்னமோ ரொம்ப சரிதான். இவனுடைய முகத்தைப் பார்க்கவே பயங்கரமாயிருந்தது. செந்திருவிடம் அவன் ஒரு வார்த்தை பேசவுமில்லை; செந்திரு பேசினால் அவன் காது கொடுத்துக் கேட்பானென்றும் தோன்றவில்லை. அவன் பாட்டுக்கு அவன் காரியத்தைச் செய்து கொண்டிருந்தான். பங்களாவுக்கு உள்ளே இருக்கும்போது அவன் தோட்டத்தின் இரும்பு கேட்டைப் பூட்டிச் சாவியைப் பத்திரமாய் மடியில் வைத்திருந்தான். வெளியே போகும்போதும் கேட்டைப் பூட்டிச் சாவியை எடுத்துக் கொண்டு போனான்.

மூன்று தினங்கள் கழித்து ஒருநாள் இரண்டு கவுண்டர்களும் வந்தார்கள். செந்திரு அவர்களுடைய காலில் விழுந்து தன்னுடைய சொத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு, தன்னை விட்டு விடும்படி கேட்டுக் கொண்டாள். இதனால் அவர்களுடைய கோபந்தான் அதிகமாயிற்று. கல்யாணத் தேதி குறிப்பிட்டாகி விட்டதென்றும், அவள் நல்லபடியாய்ச் சம்மதிக்காவிட்டால் பலவந்தமாகக் கல்யாணம் நடத்தப்படுமென்றும் தெரியப்படுத்தினார்கள். அதோடு, அடுத்த தடவை தாங்கள் வரும்போது அவளே இஷ்டப்பட்டுக் கார்க்கோடக் கவுண்டரைக் கல்யாணம் செய்து கொள்வதாக ஒரு காகிதத்தில் எழுதிக் கையெழுத்துப் போட்டுத் தர வேண்டுமென்றும் கூறிவிட்டுப் போனார்கள்.

செந்திருவுக்குப் பிராணனை விட்டு விடலாமா என்ற எண்ணம் அடிக்கடி உதித்தது. ஆனால் மகுடபதியின் மீது கொலைக் குற்றம் சாத்தியிருக்கிறார்கள் என்பது நினைவு வந்த போது, அவள் சாக விரும்பவில்லை. தனக்காக இந்தப் பெரிய கஷ்டத்துக்குள்ளானவரை, எப்படியாவது காப்பாற்ற வேண்டும்; அதற்காக தான் உயிரோடிருக்க வேண்டியது அவசியம். ஆனால், கார்க்கோடக் கவுண்டரைக் கல்யாணம் செய்து கொள்வது கனவிலும் நினைக்க முடியாத காரியம். கல்யாணத்தை எப்படித் தடை செய்வது? இம்மாதிரி யோசித்து யோசித்துக் கடைசியில் பங்கஜம் ஊகித்த வண்ணமே தனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதாக நடிப்பது என்ற முடிவுக்கு வந்தாள். வேலைக்காரப் பவளாயியிடம் இதைச் சொல்லி, தனக்கு உண்மையில் பைத்தியந்தான் என்று மற்றவர்கள் நினைக்கும்படி செய்வதற்கு உதவி புரிய வேண்டுமென்றும், அவளுடைய புருஷன் குப்பண்ணக் கவுண்டனிடம் கூட இரகசியத்தைச் சொல்லக் கூடாதென்றும் கேட்டுக் கொண்டாள். பவளாயியும் இதற்குச் சம்மதித்தாள். ஆனால், இவர்களுடைய பேச்சைக் குப்பண்ணக் கவுண்டன் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த விவரம் செந்திருவுக்காவது பவளாயிக்காவது தெரியாது.

கார்க்கோடக் கவுண்டரிடம் மேற்படி சூழ்ச்சியைக் குப்பண்ணக் கவுண்டன் தெரியப்படுத்திய போது, அவருடைய முகத்தில் புன்னகை தாண்டவமாடியது.

மாஜி ஸப்-ஜட்ஜ் அய்யாசாமி முதலியாரும், டிபுடி ஸுபரிண்டெண்ட் சங்கநாதம் பிள்ளையும் செந்திரு விஷயமாகப் புலன் விசாரிக்கிறார்களென்று கார்க்கோடக் கவுண்டருக்குத் தெரிந்தது. அவர்களைச் சரிப்படுத்துவதற்குச் செந்திருவின் நடிப்புத் பைத்தியம் உபயோகமாக யிருக்குமென்று அவர் கருதினார். அவ்விதமே அவர் உபயோகித்து வெற்றியடைந்தார் என்பதை முன்னொரு அத்தியாயத்தில் பார்த்தோம்.

மேற்படி பிரமுகர்கள் தேவகிரிக்கு வந்த அன்று காலையில் வேலைக்காரி பவளாயி செந்திருவிடம் வந்து, "அம்மா! என்னத்தைச் சொல்ல? இன்றைக்குக் கல்யாணம் நிச்சயம் செய்வதற்காக யாரோ வரப் போகிறார்களாம்" என்று தெரிவித்தாள். செந்திருவுக்குப் பகீர் என்றது. வழக்கத்தைவிட அதிகமாகப் பைத்திய நடிப்பு நடிப்பதென்று அவள் தீர்மானித்தாள். மத்தியானம் அவள் அறைக்குள் போன சமயம் பார்த்துக் குப்பண்ணக் கவுண்டன் அறைக் கதவைச் சாத்தி வெளிப்புறம் தாளிட்டதுடன், பவளாயிக்குக் "கதவைத் திறக்காதே!" என்றும் உத்தரவு போட்டு விட்டான்.

அந்தச் சமயத்திலேதான் அய்யாசாமி முதலியாரும் சங்கநாதம் பிள்ளையும் கவுண்டர்களுடன் வந்தார்கள். வந்து பார்த்து - இல்லை, பார்க்காமலே பரிதாபப்பட்டுவிட்டுப் போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் திரும்பிப் போக, மோட்டார் ஏறும் சமயத்தில் பேசிக் கொண்டிருந்ததைப் பவளாயி வந்து தெரிவித்தபோது, செந்திரு, "ஐயையோ! இது என்ன விபரீதம்?" என்று அரண்டு போனாள். வந்திருந்தவர்களில் ஒருவர் "இந்தப் பெண்ணை குற்றாலத்துக்கு அழைத்துப் போங்கள்" என்றாராம். இன்னொருவர், "சென்னைப் பட்டணத்தில் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலேயே கொண்டு விட்டு விடுவதுதான் நல்லது" என்றாராம். "ஆமாம்; சென்னைப் பட்டணத்துக்கு அனுப்பலாம் என்றுதான் உத்தேசம்" என்று கார்க்கோடக் கவுண்டர் பதில் சொன்னாராம்.

"கடவுளே! பிள்ளையார் பிடிக்கக் குரங்காக முடிந்ததே!" என்று செந்திரு கதிகலங்கினாள். பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் போனால் நிஜமாகவே பைத்தியம் பிடித்துவிடும் என்பார்களே? தனக்கு அந்தக் கதிதான் நேருமோ?

வந்திருந்த பெரிய மனுஷர்கள் யார் என்று ஏதாவது தெரியுமா எனச் செந்திரு பவளாயியைக் கேட்டாள். "எனக்குத் தெரியாதம்மா! ஒருத்தர் முதலியார் போலிருக்கு. 'முதலியார்' 'முதலியார்' என்று கூப்பிட்டுக் கொண்டாங்க" என்று பவளாயி சொன்னதும், செந்திருவுக்கு மறுபடியும் கல்லைத் தூக்கித் தலையில் போட்டது போலிருந்தது. ஏனென்றால், வந்திருந்தவர்கள் போகும்போது பேசிய இரண்டொரு வார்த்தைகள் அவள் காதில் விழுந்தபோது, "ஏதோ தெரிந்த குரல் போலிருக்கிறதே!" என்ற சந்தேகம் ஒரு வினாடி அவளுக்கு உண்டாயிற்று. எனவே, இப்போது, "ஐயோ! ஒரு வேளை அவர் பங்கஜத்தின் தந்தை அய்யாசாமி முதலியார்தானோ? அப்படியிருந்தால், என்னுடைய பைத்திய நடிப்பு உண்மையிலேயே பைத்தியக்காரத்தனமாக அல்லவா ஏற்பட்டுவிட்டது! சுவாமி! பழனி ஆண்டவனே! இப்படியா என்னைச் சோதிக்க வேண்டும்?" என்று செந்திரு கதறினாள்.

இப்படி வெகு நேரம் கவலைப்பட்ட பிறகு, பழனியாண்டவனே வழிகாட்டினார் என்று சொல்லும்படியாக, ஒருவழி தென்பட்டது. செந்திரு அங்கே வந்தது முதல் தினம் சாயங்காலத்தில் ஒரு காட்சியைக் கண்டு வந்தாள். அந்த பங்களாவுக்கு எதிரே கொஞ்ச தூரத்தில் தோன்றிய ஒரு மலை மேலிருந்து ஒரு சுவாமியாரும் அவருடன் ஒரு பையனும் இறங்கி வருவார்கள். சாமியார் காவி உடை தரித்தவர்; இளம் வயதினர்; கையில் ஒரு தடி வைத்திருந்தார். பின்னோடு வந்த பையனுடைய கையில் ஒரு பெட்ரோமக்ஸ் விளக்கும், சில புத்தகங்களும் இருந்தன. இரண்டு பேரும் மலை உச்சியிலிருந்து இறங்கி, அந்தப் பங்களா வாசலில் இரும்புக் கேட்டுக்கு அப்பால் கொஞ்ச தூரம் வரையில் வந்து, அங்கிருந்து கீழே இறங்கிச் சென்ற பாதை வழியாகப் போனார்கள். தினம் மாலை ஐந்து மணிக்கு இது நடந்தது. "அவர்கள் யார்?" என்று செந்திரு கேட்டதற்கு, கூனூரிலிருக்கும் சச்சிதானந்த மடத்துச் சுவாமியாரென்றும், ரொம்பப் படித்தவரென்றும், அங்கிருந்து கொஞ்ச தூரத்திலுள்ள மலைக் கிராமத்தில் இராப் பள்ளிக்கூடம் நடத்துகிறாரென்றும், அதற்காக இப்படிக் குறுக்கு வழியாய்த் தினம் போகிறார் என்றும் பவளாயி தெரிவித்தாள். தன்னுடைய விடுதலைக்கு அந்தச் சுவாமியாருடைய ஒத்தாசையைக் கோருவதென்று செந்திரு இப்போது தீர்மானித்தாள்.

பவளாயியின் உதவியைக் கொண்டு ஒரு துண்டுக் காகிதமும் பென்சிலும் சம்பாதித்தாள். தன்னுடைய நிலைமையைச் சுருக்கமாக எழுதி, எப்படியாவது தன்னை விடுதலை செய்து காப்பாற்ற வேண்டுமென்று வேண்டினாள். அந்தக் காகிதத்தை ஒரு கல்லில் நாரினால் சேர்த்துக் கட்டி எடுத்துக் கொண்டு அன்று சாயங்காலம் இரும்பு வேலி ஓரமாகப் போய் நின்று கொண்டிருந்தாள். வழக்கம்போல சுவாமியாரும் பையனும் எதிர்புறத்து மலையிலிருந்து இறங்கி வந்து பங்களாப் பாதையை அடைந்து அதன் வழியே கீழே சென்றார்கள். செந்திரு பங்களா வாசல் தோட்டத்தில் வேலி ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். தான் நின்ற இடத்துக்குக் கிட்டத்தட்ட நேர் கீழே அவர்கள் வந்ததும், காகிதம் கட்டிய கல்லைக் கீழே போட்டாள். என்ன துரதிர்ஷ்டம்! காகிதம் கட்டிலிருந்து நழுவி எங்கேயோ பறந்து சென்றது. கல் மட்டும் நேரே கீழ் நோக்கிப் போயிற்று. க்ஷவரம் செய்யப்பட்டு பளபளவென்று கண்ணாடிபோல் விளங்கிய சுவாமியாரின் மொட்டைத் தலையில் குறிபார்த்து விழுந்தது!

"தம்பி! நீதானா?"

அய்யாசாமி முதலியார் பங்களா வாசலில், நள்ளிரவில் மகுடபதியின் முன் தோன்றிய உருவம் உண்மையில் பெரியண்ணனுடைய ஆவி உருவம் அல்லவென்றும் பெரியண்ணனேதான் என்றும் வாசகர்கள் ஊகித்திருப்பார்கள்.

பெரியண்ணன் கத்திக் குத்துக்கு ஆளாகிக் கீழே விழுந்த போதுதான் கடைசியாக மகுடபதி அவனைப் பார்த்தவனாதலாலும், நள்ளிரவில் எதிர்பாராதபடி திடீரென்று அவன் உருவம் தோன்றியபடியாலும், மகுடபதி அவ்விதம் வெடவெடத்து நிற்கும்படியாயிற்று. ஆனால் அறிவாளியாதலால், விரைவிலேயே அவனுடைய பயம் நீங்கி, மனம் தெளிந்தது.

"தம்பி! நீதானா?" என்று பெரியண்ணனுடைய குரல் கூறியதும், மகுடபதியின் ஐயம் அறவே நீங்கியது.

"ஆமாம், பாட்டா! நான் தான், பிழைத்திருக்கிறாயா?" என்று சொல்லிக்கொண்டே பெரியண்ணனை ஆர்வத்துடன் கட்டிக்கொண்டான் மகுடபதி.

"பிழைத்திருக்கிறேன், தம்பி! இந்தக் கிழவனுக்கு உயிர் ரொம்பக் கெட்டி" என்றான் பெரியண்ணன்.

பெரியண்ணனுக்கு உயிர் உண்மையாகவே ரொம்பக் கெட்டி என்பதில் சந்தேகமில்லை. அவனால் சில முக்கியமான காரியங்கள் ஆகவேண்டியிருந்ததை முன்னிட்டே கடவுள் அவனுடைய உயிருக்கு அவ்வளவு வலுவைக் கொடுத்திருந்தார் போலும். அதோடு பற்பல அபாயங்களிலிருந்தும் அவனைக் கடவுள் தப்புவித்தார்.

கார்க்கோடக் கவுண்டார் மகுடபதியின் மேல் ஓங்கிய கத்திக்கு குறுக்கே பெரியண்ணன் விழுந்த போது கவுண்டரின் கை கொஞ்சம் தடுமாறிவிட்டது. அதனால் கத்தி ஆழமாகப் பதியவில்லை.

பெரியண்ணனுக்கு உயிர் இருக்கிறது என்பதைக் கார்க்கோடக் கவுண்டர் கண்டு, சங்கடஹரிராவ் யோசனையின் பேரில் அவனை அப்புறப்படுத்தத் தீர்மானித்தபோது, 'இரகசியம் இரகசியம்' என்று அவன் மார்பைத் தொட்டுக் காண்பித்தது அவருடைய ஞாபகத்திலிருந்து அகலவில்லை. முடியுமானால் அவனை எப்படியாவது உயிர் பிழைக்கச் செய்து இரகசியத்தை அறிய வேண்டுமென்று விரும்பினார். அவன் சொல்ல விரும்பிய இரகசியம், தன்னை முக்கியமாய்ப் பாதிப்பது என்று அவருடைய உள்ளத்திற்குள் ஏதோ ஒன்று சொல்லிற்று. ஆகையால்தான், கிழவனைக் கள்ளிப்பட்டிக்கு ஜாக்கிரதையாகக் கொண்டு சேர்ப்பதற்கு அவர் ஏற்பாடு செய்ததுடன், அவர் மாதச் சம்பளம் கொடுத்து வைத்திருந்த பஞ்சாலை டாக்டரைக் கொண்டு அவனுக்குச் சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்தார்.

பெரியண்ணனுக்குச் சுயப் பிரக்ஞை வந்தவுடன் சுற்று முற்றும் பார்த்தான். தான் இருப்பது பழகிய இடம் என்று தோன்றியது. கொஞ்சம் கொஞ்சமாக யோசிக்கும் சக்தி அவனுக்கு வந்தபோது, தான் இருப்பது கள்ளிப்பட்டியில் கவுண்டரின் பருத்தி மில் பங்களா என்பதை அறிந்து கொண்டான். அந்தப் பங்களாவில் பின்புறத்து அறையில் அவன் கிடந்தான்.

அவனுடைய மார்பிலே இலேசாக வலி இருந்தது. அவன் பக்கத்தில் கோயமுத்தூர் அனுமந்தராயன் தெருவில் பார்த்த இரண்டு தடியர்களும் நின்று கொண்டிருந்தார்கள். சிறிது சிறிதாக, அன்றிரவு அந்த வீட்டில் நடந்த பயங்கரச் சம்பவங்கள் எல்லாம் நினைவு வந்தன.

செந்திருவும், மகுடபதியும் என்ன ஆனார்களோ என்ற திகில் அவன் மனதில் தோன்றியது. அந்தத் தடியர்களைக் கேட்பதற்காகப் பேச முயன்றான்; பேச முடியவில்லை.

சற்று நேரத்துக்கெல்லாம் டாக்டர் ஒருவர் வந்தார். பெரியண்ணன் கண் விழித்திருப்பதைப் பார்த்துவிட்டு பக்கத்தில் நின்றவர்களை நோக்கி, "கத்திக் குத்து அதிக ஆழமாய்ப் பதியவில்லை. சீக்கிரத்தில் குணமாகிவிடும். இரண்டு மூன்று நாளைக்கு இவனிடம் பேச்சுக் கொடுக்க வேண்டாம்" என்று சொல்லிப் போய்விட்டார்.

பெரியண்ணனுக்குச் சிறிது சிறிதாக அறிவு நன்றாய்த் தெளிந்து வந்தது. யோசிக்கும் சக்தியும் அதிகமாயிற்று. தன்னுடையை தேக நிலைமை, தான் இருக்குமிடம் இவைகளைப் பற்றியும், செந்திரு மகுடபதியைக் குறித்துத் தெரிந்து கொள்ளும் வழியைப் பற்றியும் யோசனை செய்தான்.

அங்கிருந்து தான் தப்பிச் செல்வது எளிதான காரியமல்ல; அதற்கு வேண்டிய சக்தியும் உடம்பில் இல்லை. கொஞ்ச நாள் எப்படியும் அங்கே இருக்கத்தான் வேண்டும். ஆனால், தன்னைக் கொன்று போடாமல் கார்க்கோடக் கவுண்டர் இந்த மட்டும் தன்னை இங்கே கொண்டு வந்து வைத்து, டாக்டரைப் பார்க்கச் சொல்லியிருப்பது அதிசயமான காரியந்தான். இதற்கு ஏதோ அந்தரங்கமான காரணம் இருக்க வேண்டும். ஆம், இப்போது அவனுக்கு ஞாபகம் வந்தது. தனக்குப் பிரக்ஞை போகும் தறுவாயில் கவுண்டரைப் பார்த்து, 'இரகசியம்' 'இரகசியம்' என்று சொன்னது. அதை அறிவதற்காகத்தான் தனக்கு இவ்வளவு பராமரிப்பு நடக்கிறதோ, என்னமோ? ஆனால் அதைச் சொல்லலாமா? இப்போது சொல்லக்கூடாது. அதற்கு முன்னால் செந்திருவும் மகுடபதியும் என்ன ஆனார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அவசியம் நேர்ந்தால் பிற்பாடு சொல்ல வேண்டும். இப்போது சொன்னால் நம்புவது கடினம் என்பதோடு ஏதாவது விபரீதத்திலும் முடியலாம்.

எல்லாவற்றுக்கும் தனக்கு உடம்பு முதலில் சரியாகக் குணமாக வேண்டும். அதுவரையில் தான் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டியதுதான். அறிவு தெளிந்ததாகவே காட்டிக் கொள்ளக் கூடாது. அதற்குள் மகுடபதியையும் செந்திருவையும் பற்றித் தெரிந்து கொள்ளப் பார்க்க வேண்டும். ஐயோ! அவர்களுடைய கதி என்னவாயிற்றோ? - சுவாமி! பழனி ஆண்டவனே! அந்தக் குழந்தைகளை நீதான் ஓர் அபாயமும் நேராமல் காப்பாற்ற வேண்டும். நான் தான் இப்படிக் கையாலாகாமல் கிடக்கிறேனே!

விழித்துக் கொண்டிருக்கும் நேரமெல்லாம் பெரியண்ணனுடைய உள்ளம் இப்படிப்பட்ட சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தது.

சில சமயம் பக்கத்து ஆபீஸ் அறையில் கார்க்கோடக் கவுண்டரும் தங்கசாமிக் கவுண்டரும் பேசும் குரல் கேட்டது. அப்போதெல்லாம் பெரியண்ணன் ஆவலுடன் காது கொடுத்துக் கேட்பான். மகுடபதி செந்திரு என்ற பெயர்கள் அடிக்கடி அவன் காதில் விழும். அவர்கள் இருவரும் உயிரோடிருக்கிறார்கள் என்று ஒருவாறு தெரிந்து கொண்டான். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் முதலிய பூரா விவரங்களையும் தெரிந்து கொள்ள அவன் விரும்பினான். ஆகவே, ஒவ்வொரு சமயம் கார்க்கோடக் கவுண்டர் அவனுடைய அறைக்கு வந்து அவனைப் பார்த்த போது, உடம்பு தனக்குக் குணமாகிவிட்டதாகவோ, அறிவு தெளிந்து விட்டதாகவோ காட்டிக் கொள்ளவில்லை. கார்க்கோடக் கவுண்டரையே பார்த்தறியாதவனைப் போல பேந்தப் பேந்த விழித்தான்.

"பெரியண்ணா! இதோ பார்! நான் யார் தெரிகிறதா?" என்று கவுண்டர் கேட்டபோது, "யாரு? ஓகோ? நஞ்சைப்பட்டிச் சிங்கமா?" என்று இப்படி ஏதோ வேண்டுமென்றே உளறினான். கவுண்டரும், "மூளை அடியோடு குழம்பிப் போயிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாள் பார்க்கலாம்" என்று முணு முணுத்துக் கொண்டே போய்விட்டார்.

நாலாம் நாள் பெரியண்ணனுக்குப் போட்டிருந்த காவலில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. முதல் மூன்று நாளும் கோயமுத்தூரில் அவன் பார்த்த தடியர்கள் மாறி மாறிக் காவல் புரிந்தார்கள். பிறகு அவர்கள் போய்ப் பதிலுக்கு மருதக் கவுண்டன் வந்து சேர்ந்தான். "இவனை எங்கே பார்த்தோம்?" என்று பெரியண்ணன் யோசனை செய்து, கடைசியில் அடையாளம் கண்டுபிடித்தான். "அய்யாசாமி முதலியார் பங்களாவில் காவல்காரன் அல்லவா? இவனிடந்தானே செந்திருவின் கடிதத்தைக் கொடுத்தோம்?" என்பது நினைவு வந்தது. "இவன் எப்படி இங்கே காவலுக்கு வந்து சேர்ந்தான்?" என்பது ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனாலும், அவனைத் தனக்குத் தெரிந்ததாகப் பெரியண்ணன் காட்டிக் கொள்ளவில்லை. "என்ன, பாட்டா! என்னைத் தெரியவில்லையா? உன்னாலேதானே எனக்குப் பங்களா வேலை போச்சு? நீ ஒரு பீத்தல் கடுதாசியைக் கொண்டு வந்து கொடுத்தாலும் கொடுத்தே; எனக்குச் சனியன் பிடிச்சுது!" என்று மருதக் கவுண்டன் சொன்னபோது கூடப் பெரியண்ணன் சும்மா திரு திருவென்று விழித்தானே தவிர வேறு வார்த்தை பேசவில்லை.

இப்படியெல்லாம் பாசாங்கு செய்துகொண்டு அவன் எதற்காகக் காத்திருந்தானோ, அந்த நோக்கம் கடைசியாக நேற்று நிறைவேறியது. அடுத்த அறையில் கார்க்கோடக் கவுண்டர் கோடை இடி இடித்தது போல் சிரிப்பதைக் கேட்டு அவன் திடுக்கிட்டு எழுந்தான். அச்சமயம் மருதக் கவுண்டன் நல்ல வேளையாக அறையில் இல்லை. கதவு ஓரமா நகர்ந்து வந்து ஒட்டுக் கேட்டான். கார்கோடக் கவுண்டர் சிரிப்பை நிறுத்திவிட்டு, "ரொம்பத் தரமாய்ப் போச்சு? பழம் நழுவிப் பாலிலே விழுந்தது! பைத்தியம் பிடித்து விட்டதா, பைத்தியம்? வேஷமா போடுகிறாள்? சபாஷ், அப்பா, சபாஷ்!" என்று கத்தி விட்டு மறுபடியும் சிரித்தார்.

"எதற்காக இப்படிச் சந்தோஷப்படுகிறீர்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லை" என்றது தங்கசாமிக் கவுண்டரின் ஈனக்குரல்.

"உனக்கு ஒன்றும் புரியாது. நீ பச்சைக் குழந்தை; வாயில் விரலை வைத்தால் கடிக்கக் கூடத் தெரியாது."

"என்னதான் விஷயம் சொல்லுங்களேன்!"

"அட பைத்தியமே! - அந்த வேலையற்ற அய்யாசாமி முதலியாரும், சங்கநாதம் பிள்ளையும் நம்ம விஷயத்தில் தலையிடுகிறார்களே. அவர்களை எப்படிச் சரிக்கட்டுவது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். கடவுளே நம்முடைய கட்சியில் இருந்து இந்தப் பெண்ணுக்கு இப்படிப்பட்ட புத்தியை உண்டாக்கினார். அவர்களை நாமே தேவகிரி எஸ்டேட்டுக்கு அழைத்துக் கொண்டு போய்ப் பொண்ணுக்குச் சித்தப் பிரமை என்று நிரூபித்து விடலாம். அப்புறம் அவர்கள் ஏன் தலையிடப் போகிறார்கள்?"

இவ்வாறு இரண்டு கவுண்டர்களும் நெடு நேரம் பேசிக் கொண்டதிலிருந்து, பெரியண்ணன் தெரிந்து கொள்ள விரும்பிய முக்கிய விஷயங்கள் அவனுக்குத் தெரியவந்தன.

செந்திருவைக் கூனூருக்குப் பக்கத்தில் தேவகிரியில் வைத்திருக்கிறார்கள். அவள் கவுண்டருடன் கல்யாணத்தைத் தடுப்பதற்காகப் பைத்தியம் கொண்டவள் போல் நடிக்கிறாள். அவள் விஷயத்தில் தான் அன்று கடிதம் கொண்டு போன பெண்ணின் தகப்பனார் சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் - மகுடபதி இவர்களுடைய வலையிலிருந்து தப்பித்துக் கொண்டு போய்விட்டான் - செந்திருவைச் சீக்கிரத்தில் தேவகிரியிலிருந்து வேறு பந்தோபஸ்தான இடத்தில் கொண்டு போய் வைத்து விடும் உத்தேசம் கவுண்டர்களுக்கு இருக்கிறது - ஆகிய இந்த விவரங்களையெல்லாம் பெரியண்ணன் திரும்பத் திரும்ப ஆயிரம் தரம் சிந்தனை செய்தான். செந்திருவைக் கார்க்கோடக் கவுண்டரிடமிருந்து காப்பாற்ற வேண்டுமானால் அவன் இனிமேல் அங்கே படுத்திருக்கக் கூடாது. உடனே தப்பித்து வெளிக் கிளம்ப வேண்டியதுதான். அதற்கு என்ன வழி என்று யோசிக்கலானான்.

மறுநாள் சாயங்காலம் அந்த வழி அவனுக்குத் தென்பட்டது. அந்த வழியை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்து உதவியது, கள்ளிப்பட்டிக் கவுண்டரின் கள்ளுக்கடைதான்! அன்று காலையில் கவுண்டர்கள் காரில் கிளம்பிப் போய்விட்டார்கள். மருதக் கவுண்டன் மட்டுந்தான் ஆபீஸ் பங்களாவுக்குக் காவலாயிருந்தான். சாயங்காலம் அவன் கள்ளுக்கடைக்குப் போய் நன்றாய்ப் போட்டுவிட்டுக் கையில் ஒரு புட்டியிலும் கள் வாங்கிக் கொண்டு வந்தான். தள்ளாடிக் கொண்டே பெரியண்ணன் அருகில் நின்று, "ஏன் பாட்டா! நீ கள்ளுக் குடிக்கக் கூடாதென்று ஊர் ஊராய்ப் பிரசாரம் செய்தாயாமே, அது நெசமா? இந்தா! இதோ உனக்கு ஒரு புட்டி வாங்கியாந்திருக்கிறேன். சாப்பிடாமற் போனாயோ விடமாட்டேன், வாயிலே விட்டு விடுவேன்!" என்றான். பெரியண்ணனுக்கு ரௌத்திரகாரமான கோபம் வந்தது. எழுந்திருந்து அந்தக் கள்ளுப் புட்டியைப் பிடுங்கி மருதக் கவுண்டன் தலையிலேயே போட்டு உடைக்க வேண்டுமென்று தோன்றிற்று. இன்னும் ஒரு தடவை மருதக் கவுண்டன் கள்ளுப் புட்டியை அவன் வாய்க்கு அருகில் கொண்டு வந்திருந்தால் அவ்விதமே செய்திருப்பான். ஆனால், மருதக் கவுண்டன் அவ்வளவுக்கு வைத்துக் கொள்ளவில்லை. "வேணுமா, வேண்டாமா, சொல்லிப்பிடு! வேண்டாமே? இவ்வளவு தானே? வேண்டாத போனால் போ! அப்புறம் 'சுவத்துக் கீரையை வழிச்சுப் போடடி சொரணைகெட்ட வெள்ளாட்டி' என்னாதே? மாட்டாயே? சரி; ரொம்ப சரி!" என்று சொல்லிக் கொண்டே புட்டியைத் தன் வாயிலேயே கவிழ்த்துக் கொண்டு அவ்வளவையும் குடித்துத் தீர்த்தான். சற்று நேரத்திற்கெல்லாம் அவன் தலை சுற்றியது. ஏதோ உளறிக் கொண்டே இரண்டு ஆட்டம் ஆடி விட்டுக் கீழே விழுந்து பிணம் போலானான்.

இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காதென்று பெரியண்ணன் மெதுவாக அங்கிருந்து கிளம்பி வெளியில் வந்தான். அவன் அந்தக் கட்டிடத்தில் இருப்பதே ஒருவருக்கும் தெரியாது. ஆகையால், அவன் போவதை யாரும் தடை செய்யவில்லை. இராஜாங்கமாகக் கட்டிடத்தை விட்டு வெளியே வந்து கோயமுத்தூர்ச் சாலையை அடைந்து அங்கு ஒரு போக்கு வண்டியில் ஏறிக் கொண்டான். வண்டியில் போகும் போதே, என்ன செய்ய வேண்டுமென்பதை ஒருவாறு தீர்மானித்துக் கொண்டான். முதலில், கோயமுத்தூரில் அந்தப் பெண்ணின் தகப்பனார் வீட்டுக்குப் போய் அவரிடம் எல்லா விஷயங்களையும் சொல்லவேண்டும். அவருடைய உதவியைக் கொண்டு செந்திருவைக் கவுண்டர்களிடமிருந்து விடுதலை செய்ய வேண்டும். பிறகு, மகுடபதியைத் தேட வேண்டும்.

இவ்விதச் சிந்தனையுடன் பெரியண்ணன், கோயமுத்தூரை அடைந்தபோது இரவு வெகு நேரமாகிவிட்டது. ஆனாலும், இரவுக்கிரவே காரியத்தை முடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தினால் அவன் தட்டுத் தடுமாறி வழி கண்டுபிடித்துக் கொண்டு அய்யாசாமி முதலியாரின் பங்களாவை அடைந்தான். வாசல் கேட்டுத் திறந்திருக்கவே உள்ளேயும் நுழைந்தான். அப்போதுதான் கொடி வீட்டில் பேச்சுக் குரல் கேட்டது. மகுடபதியின் குரல் மாதிரியும் இருந்தது. மரத்தின் மறைவில் நின்று, சற்று நேரம் கேட்டான். நிலைமை ஒருவாறு புரிந்தது. பங்கஜம் உள்ளே பணம் எடுக்கப் போனபோது சட்டென்று கேட்டுக்கு வெளியே வந்து நின்று, மகுடபதிக்காகக் காத்திருந்தான்.

மேற்கூறிய விவரங்களையெல்லாம் கோயமுத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் உட்கார்ந்து கொண்டு மகுடபதி கேட்டான். தன்னுடைய கதையையும் பெரியண்ணனுக்குச் சொன்னான். கோயமுத்தூரில் தங்குவதற்குப் பத்திரமான இடம் ரயில் ஸ்டேஷன் தான் என்று தீர்மானித்து, அவர்கள் நேரே ஒரு வண்டி பிடித்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்திருந்தார்கள்.

மறுநாள் காலையில் புறப்படும் ரயிலில் கூனூருக்குப் போய் எப்படியாவது செந்திருவைக் கண்டுபிடித்து விடுதலை செய்வது என்று அவர்கள் பேசி முடிவு செய்தார்கள்.

"தம்பி! கூனூர் நம் இருவருக்கும் புதிதாயிற்றே. அங்கே நமக்குத் தெரிந்தவர்கள் யாருமில்லையே! எங்கே தங்குவோம்? எப்படிக் கவுண்டர் பங்களாவைக் கண்டுபிடிப்போம்? யார் நமக்கு உதவி செய்வார்கள்?" என்று பெரியண்ணன் விசாரத்துடன் கேட்டான்.

"பாட்டா! நீ கவலைப்படாதே கூனூரில் சுவாமியார் ஒருவர் இருக்கிறார். சச்சிதானந்த மடம் என்று ஒரு மடம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரை எனக்கு நன்றாய்த் தெரியும். பல தடவை அவரை நான் மத உபந்நியாசத்துக்காக அழைத்து வந்திருக்கிறேன். அவரைப் போய்ப் பிடிப்போம். அநியாயம், அக்கிராமம் என்றால் அவருக்கு ஆகாது. இந்த விஷயத்தில் நமக்குக் கட்டாயம் உதவி செய்வார்" என்றான் மகுடபதி.

அதே சமயத்தில், மேற்படி சுவாமியார் மண்டையில் கல் விழுந்த காயத்துக்குக் கட்டுப் போட்டுக்கொண்டு வலியினால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார் என்பது அவனுக்கு எப்படித் தெரியும்?

சுவாமி மகானந்தர்

மகுடபதியும் பெரியண்ணனும் மறுநாள் மத்தியானம் கூனூரில் உள்ள சச்சிதானந்த மடத்தை எவ்வித இடையூறுமில்லாமல் போய் அடைந்தார்கள். மடத்தின் தலைவர் சுவாமி மகானந்தர், தலையில் கட்டுடன் படுத்திருப்பதைக் கண்டதும் மகுடபதி திடுக்கிட்டான். அவரிடம் மகுடபதிக்கு விசேஷ பக்தி உண்டு. சுவாமியாருக்கும் மகுடபதியிடம் அதிகப் பிரேமை அவனை அரசியல் தொண்டை விட்டு விட்டுத் தம்முடன் சேர்ந்து பாரமார்த்திகத் தொண்டு செய்ய வரும்படி சுவாமியார் சில சமயம் அழைத்ததுண்டு. மகுடபதி அதற்கு இணங்காமலிருந்ததற்கு முக்கிய காரணம் அவனுடைய இருதய அந்தரங்கத்தில் குடிகொண்டிருந்த செந்திருவின் நினைவுதான் என்று சொல்லலாம். அரசியல் கிளர்ச்சியில் அவனுக்கிருந்த ஆர்வமும் ஒரு காரணந்தான். சமீபத்தில் ஒரு வருஷ காலமாக அவன் கூனூர் மடத்துக்கு வரவேயில்லை. தான் அரசியலில் ஈடுபட்டவனாதலால், மடத்துக்குத் தன் மூலமாய்ப் போலீஸ் தொந்தரவு ஏற்படக்கூடாதென்று அவன் கருதியிருந்தான்.

இப்போது மண்டையில் கட்டுடன் சுவாமியாரைப் பார்த்ததும் அவன் பரபரப்புடன், "சுவாமி! தங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? தங்களிடம் ஒரு உதவி கேட்கலாமென்று எண்ணியல்லவா வந்தேன்?" என்றான்.

"வீணாக ஒருவர் மேல் சந்தேகப்பட்டதால் வந்த விபத்து இது; ஆண்டவனுடைய தண்டனை!" என்றார் சுவாமியார்.

"தாங்களாவது ஒருவர் மேல் வீணாகச் சந்தேகப்படவாவது? ஆண்டவன் தண்டனையாவது? ஒன்றையும் நம்பமுடியவில்லை!" என்றான் மகுடபதி.

"கார்க்கோடக் கவுண்டரைப் பற்றிக் கேட்டிருக்கிறாயோ, இல்லையோ?" என்று சுவாமியார் சொன்னதும், மகுடபதிக்கு எவ்வளவு வியப்பாயிருந்திருக்குமென்று சொல்லவே வேண்டியதில்லை.

"ஆமாம்; அவருக்கு என்ன? சுவாமி! ஒருவேளை..." என்று மகுடபதி திடுக்கிட்டுக் கேட்டான்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை. அவர் என்னை அடித்துப் போட்டார் என்று பயப்படுகிறாயா? மனுஷன் செய்யக் கூடியவன் தான். ஆனால் அதற்கு முன்னாலேயே சுவாமி என்னைத் தண்டித்துவிட்டார்."

"என்ன சுவாமி! திருப்பித் திருப்பித் தண்டனை என்கிறீர்களே?"

"சொல்கிறேன். இந்த ஊருக்குக் கொஞ்ச தூரத்தில் கார்க்கோடக் கவுண்டருக்கு ஒரு எஸ்டேட் இருக்கிறது. தேவகிரி என்று பெயர். அங்கே ஒரு பங்களாவும் இருக்கிறது. அந்த பங்களாவைப் பற்றி என்னவெல்லாமோ கெட்ட பெயர் உண்டு. கவுண்டருடைய விரோதிகளை அங்கே கொண்டுவந்து தீர்த்து விடுகிறார் என்று வதந்தி. ஆறு மாதத்துக்கு முன்பு யாரோ ஒரு பணக்காரப் பையனை அங்கே கொண்டு வந்து ஜெயிலிலே வைக்கிறாப்போல் வைத்திருந்து பதினாயிரம் ரூபாய்க்கு நோட்டு எழுதி வைத்துக் கொண்டு தான் விட்டாராம். இன்னும் அங்கே அனாதைப் பெண்களைக் கொண்டு வந்து சிறைப்படுத்தி வைத்து அட்டூழியங்கள் செய்வது பற்றியும் கர்ணகடூரமான விவரங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன்... இருக்கட்டும், தம்பி! உன்னைப் பார்த்தால் ஒரு மாதம் பட்டினி கிடந்தவன் மாதிரி இருக்கிறது. ஏன் இப்படி? முதலில் கொஞ்சம் பிரசாதம் எடுத்துக் கொண்டு இளைப்பாருங்கள். அப்புறம்..."

மகுடபதிக்கு உண்மையில் பசியாகத்தானிருந்தது. சச்சிதானந்த மடத்தில் பிரசாதங்கள் பிரம்மானந்தமாயிருக்குமென்றும் அவனுக்குத் தெரியும். ஏனெனில் மகானந்த சுவாமியார் பட்டினி போட்டு உடலை வருத்தும் கூட்டத்தைச் சேர்ந்தவரல்ல; நன்றாகச் சாப்பிட்டு, தேகாப்பியாசம் செய்து, திடசரீரம் பெற்றிருந்தால்தான் எந்த விதமான தொண்டும் சரியாகச் செய்யலாம் என்ற கொள்கையுடையவர். ஆகவே, சாதாரண நிலைமையில் "ஆமாம், முதலில் பிரசாதத்தைக் கவனிக்கலாம். இன்றைக்கு என்ன பிரசாதம்? சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம் ஏதாவது உண்டா?" என்று மகுடபதி கேட்டிருப்பான். ஆனால் இப்போது, சுவாமியார் சொல்ல ஆரம்பித்திருந்த விவரம் அவனுக்கு அசாத்தியமான ஆவலை உண்டாக்கியிருந்தது. அதுவும் பெண்களைப் பற்றிய அட்டூழியங்கள் என்று சுவாமியார் குறிப்பிட்டவுடன், மகுடபதியின் உடம்பில் உள்ள இரத்தம் கொதிக்க ஆரம்பித்துத் தேகமெல்லாம் தகதகவென்று எரிந்தது. இந்த நினைவில் அவனுடைய மனம் பிரசாதத்தில் செல்ல முடியாதல்லவா?

"சுவாமி! பிரசாதமெல்லாம் இருக்கட்டும். எங்களுக்குப் பசியேயில்லை. ஆரம்பித்த விஷயத்தைச் சொல்லுங்கள்" என்றான்.

அதன்மேல் சுவாமியார் சொன்னதாவது:

"தேவகிரியை அடுத்துள்ள கிராமத்தில் தினம் சாயங்கால வேளையில் வயதானவர்களுக்காக ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்து நடத்தி வருகிறேன். ஒரு மாதமாக நடக்கிறது. அந்தக் கிராமத்துக்குக் குறுக்கு வழி, தேவகிரி பங்களாவின் ஓரமாகப் போகிறது. தினமும் அந்த வழியாக ஒரு மாதமாய் நான் போய்க் கொண்டு வருகிறேன். பங்களாவுக்குச் சமீபமாய் நான் போகும் போதெல்லாம் அதைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கும் விஷயங்கள் என் ஞாபகத்துக்கு வந்து கொண்டிருந்தன. ஏழெட்டுத் தினங்களுக்கு முன்னால் ஒரு நாள் அந்த வழியாகப் போய்க் கொண்டிருந்தபோது, ஒரு பெண்ணின் பரிதாபமான அழுகுரலைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போனேன். ஆனாலும் நமக்கேன் இந்தத் தொல்லை என்று எண்ணியவனாய் மடத்துக்குத் திரும்பி வந்துவிட்டேன். ஆனால் அன்று இராத்திரியெல்லாம், அந்தப் பெண்ணின் தீனமான அழுகுரல் என் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது; மனதை வேதனை செய்து கொண்டே இருந்தது. இம்மாதிரி விவகாரங்களில் தலையிட்டால் நான் இங்கே எடுத்துக்கொண்டிருக்கும் தொண்டுகள் எல்லாம் தடைப்பட்டு விடுமென்பதை நினைத்தும், 'பரதர்மோ பயாநக!' என்ற பகவத்கீதை வாக்கியத்தை நினைத்தும் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு, என் வேலைகளில் கவனம் செலுத்தினேன். மறுநாள் அந்தப் பக்கம் போனபோது, என்னையறியாமலே, அழுகுரல் இன்றைக்கும் கேட்கிறதா என்று செவிகள் கூர்மையாகக் கவனித்தன. ஒன்றும் கேட்கவில்லை. மனம் சற்று நிம்மதியடைந்தது.

இரண்டு நாளைக்குப் பிறகு, பங்களாவின் முன் தோட்டத்தில் ஒரு பெண் உலாவிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். மறுபடியும் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. இவள் இங்கே இஷ்டப்பட்டு வந்திருக்கிறாளா, பலாத்காரமாகக் கொண்டு வந்து வைத்திருக்கிறார்களோ, என்ன நோக்கத்துடன் சிறைப்படுத்தியிருக்கிறார்கள், முதல் நாள் ஏன் இவள் அழுதாள் என்றெல்லாம் மனதிற்குள் கேள்விகள் எழுந்து கொண்டேயிருந்தான். இதையெல்லாம் யாரைக் கேட்டுத் தெரிந்து கொள்வது? கார்க்கோடக் கவுண்டர் அங்கே இல்லை. இருந்தாலும் அவரை எனக்கு முன்பின் தெரியாது. ரொம்பப் பொல்லாத மனுஷன் அக்கிரமக்காரன் என்று கேள்விப்பட்டிருந்ததுதான்! மற்றபடி, பங்களாத் தோட்டக்காரன் ஒருவன் காணப்பட்டான். அவனைப் பார்க்கவே பயங்கரமாயிருந்தது. யமகிங்கரனைப் போல் இருந்தான். அவனிடம் எப்படி என்ன கேட்பது? கேட்டால், நிச்சயமாக அவன் சண்டைக்கு வருவானே தவிர, சரியான பதில் சொல்லப்போவதில்லை...

இப்படியே இன்னும் இரண்டு நாள் போயிற்று. முந்தாநாள் நான் அந்தப் பக்கமாகப் போன போது பங்களாவுக்குள்ளிருந்து வந்த அலறுங் குரல் மயிர்க்கூச்செறியச் செய்தது. "ஐயோ! பாவி! சண்டாளா! பழிவாங்குகிறேன், பார்!" என்று இப்படியென்னவெல்லாமோ பயங்கரக் கூக்குரல் அழுகையுடன் கலந்து கலந்து வந்தது. இதற்குப் பிறகு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. பங்களாத் தோட்டத்தின் வாசல் கேட்டுக்கு அருகில் சென்று தோட்டக்காரனைச் சமிக்ஞை செய்து கூப்பிட்டேன். நான் எதிர்பார்த்தது போலவே அவன் கண்ணில் தீப்பொறி பறக்க வந்தான். 'என்ன?' என்று வள்ளென்று விழுந்தான். 'ஏனப்பா இப்படிக் கோபிக்கறே? யாரோ ஒரு பெண் அலறுதே, என்ன சமாசாரமென்று கேட்கத்தான் வந்தேன். வைத்தியர் கியித்தியர் வேணுமானால் அனுப்புகிறேன்' என்றேன். தோட்டக்காரனும், சற்று சாந்தமடைந்து, 'இதெல்லாம் உங்களுக்கு என்னாத்துக்கு, சாமி! உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க சாமி! அப்படி ஏதாவது கேட்க வேண்டுமானா நாளைக்கிக் கவுண்டர் வராரு. அவரை வந்து கேட்டுக்குங்க!' என்றான். அவனிடம் மேலே பேசுவதில் பயனில்லை என்று என் வழியே போய்விட்டேன். மறுபடியும் அன்றிரவெல்லாம் என் மனம் அமைதி இல்லாமல் தவித்தது.

அடுத்த நாள் பிற்பகலில் நான் மடத்திலிருந்து கிராமத்துக்குக் கிளம்பிக் கொஞ்ச தூரம் போனதும் ஒரு பெரிய மோட்டார் எதிரே வந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அதில் நாலைந்து பேர் - பெரிய மனுஷர்கள் - இருப்பது தெரிந்தது. என்னருகில் வந்து மெதுவாக நின்றபோது பெரும் வியப்பு உண்டாயிற்று. வண்டி ஓட்டியின் ஸ்தானத்தில் இருந்தவர் என்னைப் பார்த்து, 'சுவாமி! சௌக்கியமா?' என்று கேட்டார். அவர்தான் கார்க்கோடக் கவுண்டர் என்று என் மனதுக்குத் தெரிந்துவிட்டது. எந்தவிதமான் கொலை பாதகத்துக்கும் அஞ்சாத மனுஷன் என்று முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. மனதில் தோன்றிய வெறுப்பைக் காட்டிக் கொள்ளாமல் 'சௌக்கியந்தான்' என்றேன். 'பங்களாவில் இருக்கும் குழந்தையைப் பற்றி விசாரித்தீர்களாம்' என்றார் கவுண்டர். அப்போது அவருடைய முகத்தில் விஷம் கக்கிய புன்னகை தாண்டவமாடியது.

ஏதோ சண்டைக்குத்தான் ஆரம்பிக்கிறார் என்ற எண்ணத்துடன், நானும் குரலைக் கடுமைப் படுத்திக் கொண்டு, 'ஆமாம், விசாரித்தேன்' என்றேன். 'ரொம்ப சந்தோஷம், சாமி! தங்களைப் போன்ற பரோபகாரிகள் - மகான்கள் இருப்பதனால்தான் இந்த நீலகிரி மலையிலே மழை பெய்கிறது. இல்லாவிட்டால் பெய்யுமா? பங்களாவிலே இருக்கிற பெண் குழந்தைக்குச் சித்தப் பிரமையாயிருக்கிறது - ஆறு மாதமாய் - இப்போது ரொம்பக் கடுமை. குத்து, வெட்டு என்கிற நிலைமைக்கு வந்திருக்கிறது. இவர்கள் யார் தெரியுமோ, இல்லையோ? டிபுடி சூபரிண்டெண்டு சங்கநாதம் பிள்ளைவாள்; ஸப்-ஜட்ஜ் அய்யாசாமி முதலியார்வாள்; இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு வந்து காட்டினேன். பட்டணம் ஆஸ்பத்திரிக்கு அனுப்புங்கோ, இல்லாவிட்டால் குற்றாலத்துக்கு அனுப்புங்கோ என்கிறார்கள். உங்களுக்கு என்ன தோன்றுகிறது, சுவாமி? அல்லது ஏதாவது மந்திரம், தந்திரம் வைத்திருக்கிறீர்களா? நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா?' என்று கேட்டார். கடைசியில் கேட்டது கிருதக்காகச் சொன்ன வார்த்தை என்று தெரிந்துவிட்டது. பைத்திய சிகிச்சையில் எனக்கு அவ்வளவாக அனுபோகமில்லை; மன்னிக்கவேண்டும்' என்று சொல்லிவிட்டு நடந்தேன். மோட்டாரும் கிளம்பிச் சென்றது.

பள்ளிக்கூடத்துக்குப் போகும்போது என் மனம் சரியான நிலைமையில் இல்லை. நாலு பேர் முன்னிலையில் அவமானப்பட்டதனால் ஆத்திரமாயிருந்தது. அந்த மனுஷன் சொன்னது முழு நிஜம் இல்லை. ஏதோ பித்தலாட்டம் இருக்கிறது என்று தோன்றியது. அவர் சொன்னதெல்லாம் பொய்யாகத்தான் இருக்கும் என்றும், பாவம் யாரோ ஓர் ஏழைப் பெண்ணை இங்கே கொண்டு வந்து கொடுமைக்கு ஆளாக்கிவிட்டு, பைத்தியம் என்று சொல்லி உலகத்தை ஏமாற்றப் போகிறார் என்றும் நினைத்தேன். இதெல்லாம் எவ்வளவு அநியாயமான எண்ணங்கள் என்பதையும், கார்க்கோடக் கவுண்டருக்கு நான் எவ்வளவு அநீதி செய்து விட்டேனென்பதையும் நினைக்கும் போது ரொம்பவும் வருத்தமாயிருக்கிறது. அவரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டாலொழிய என் மனம் சாந்தி அடையாது..."

இதுவரையில் மிக்க ஆவலுடன் மௌனமாய்க் கேட்டு வந்த மகுடபதி இங்கே குறுக்கிட்டு, "ஐயோ! என்ன வார்த்தை சொல்கிறீர்கள்? கள்ளிப்பட்டிக் கவுண்டரிடம் நீங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதா? எதற்காக? நீங்கள் நினைத்தது தான், சுவாமி உண்மை! அந்தக் கொலை பாதகக் கள்ளுக்கடைக் கண்டிராக்டர்.." என்று உரத்த குரலில் பேசத் தொடங்கினான்.

"பொறு, தம்பி! பொறு! பாக்கிக் கதையையும் கேட்டு விட்டல்லவா பேச வேண்டும்? கார்க்கோடக் கவுண்டர் எவ்வளவோ பொல்லாத மனுஷராயிருக்கலாம். எத்தனையோ கொலை பாதகங்களைச் செய்திருக்கலாம். ஆனால், இந்த விஷய்த்தில் அவர் கூறியது உண்மை என்று அரைமணி நேரத்துக்குள் தெரிந்து போயிற்று. மேற்படி பங்களாவை நான் நெருங்கிய போது, அந்தப் பெண் தோட்டத்தில் உலாவிக் கொண்டு நிற்பதைக் கண்டேன். வேலைக்காரனைக் காணவில்லை. கேட்டண்டை போய் அவளைக் கூப்பிட்டுப் பேசி, உண்மையை அறிந்து கொண்டாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. பங்களா தோட்டத்தின் ஓரமாய்க் கீழே போகும் பாதையில் போய்க் கொண்டிருந்த போது, தற்செயலாய் மேலே பார்த்தேன். வேலி ஓரத்தில் சேலைத் தலைப்புத் தெரிந்தது. எதற்காக வேலி ஓரமாய் வந்து நின்றாள் என்று நான் எண்ணி முடிவதற்குள், என் பின்னோடு வந்த பையன் 'சாமி! சாமி!' என்று கத்தினான். அதே சமயத்தில் தலையில் ஒரு கல் விழுந்தது. விழுந்த அதிர்ச்சியில் கண் இருண்டு மயக்கமாய் வந்தது. கீழே உட்கார்ந்து விட்டேன். இரத்தம் பெருகி வழிந்து துணியையெல்லாம் நனைத்தது. அப்போதே கபாலம் திறந்து மோட்சமடையாமல் இன்னும் இந்த உடலில் உயிர் இருப்பது கடவுளுடைய செயல் தான். பாவம் அந்தப் பெண்ணுக்குப் பைத்தியந்தான் என்பது நிச்சயமாயிற்று. கவுண்டரைச் சந்தேகித்ததற்குத் தண்டனை கிடைத்தது!"

மகுடபதியின் ஆகாசக் கோட்டையெல்லாம் இவ்விதம் சிதைந்து போயிற்று. தொண்டை அடைக்க, நாத் தழுதழுக்க, அவன் "சுவாமி! உங்கள் மேல் வேண்டுமென்று அந்தப் பெண் கல்லை எறிந்தாளென்றா சொல்கிறீர்கள்? என்னத்திற்காக?" என்றான்.

"பைத்தியக்காரர்களின் செயலுக்குக் காரணம் இருக்குமோ? என் பின்னோடு 'லைட்' எடுத்துக் கொண்டு வந்த பையன், மேலே அண்ணாந்து பார்த்துக் கொண்டே வந்தானாம்! கல்லைக் குறி பார்த்து என் தலைக்கு நேரே எறிவதைக் கண்ணால் கண்டதாகச் சொல்கிறான். அவன் இப்போது கிராமத்துக்குப் போயிருக்கிறான். நேற்றுக் கிராமத்துக்குப் போகாமலே மடத்துக்குத் திரும்பிவிட்டேன். தலைக் காயம் குணமாகும் வரையில் ஒரு வாரத்துக்குப் பள்ளிக்கூடம் கிடையாது என்று சொல்லிவிட்டு வரும்படி அவனை அனுப்பியிருக்கிறேன்... அதோ அவனே வந்து விட்டான் போலிருக்கிறதே?" என்றார். ஒரு சிறு பையன் மடத்து வாசற்படியண்டை வந்து கொண்டிருந்தான்.

"ஏண்டா, கிருஷ்ணா! அதற்குள்ளே எப்படித் திரும்பினாய்?" என்று சுவாமியார் சிறிது வியப்புடனே கேட்டார்.

"நான் கிராமத்துக்குப் போகவில்லை, சாமி! வழியிலேயே திரும்பிவிட்டேன்" என்று சொல்லிக் கொண்டே கிருஷ்ணன் சாமியார் அருகில் வந்து, சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்தான்.

"சாமி! எஸ்டேட் பங்களாவுக்குக் கொஞ்ச தூரத்தில் ஒரு செடியில் வெள்ளையாய்த் தெரிந்தது. கிட்டப் போய் பார்த்தேன். இந்தக் கடிதம் கிடந்தது. வாசித்துப் பார்த்ததும் முக்கியமான விஷயம் என்று எண்ணி, கிராமத்துக்குப் போகாமலே திரும்பிவிட்டேன்" என்று சொல்லிக் கடிதத்தையும் சுவாமியார் கையில் கொடுத்தான்.

சுவாமியார் கடிதத்தைப் படித்த போது, அளவுகடந்த ஆச்சரியத்தினால் அவருடைய புருவங்கள் நெரிந்து உயர்ந்தன.

எதிர்பாராத சந்திப்பு

சுவாமியார் கடிதத்தைப் படித்துவிட்டு மகுடபதியிடம் கொடுத்தார். மகுடபதி படித்தான். கடிதத்தில் பின்வருமாறு எழுதியிருந்தது:

நான் ஒரு அனாதைப் பெண். இங்கே என்னைப் பலவந்தமாகக் கொண்டுவந்து சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். எனக்குப் பைத்தியம் இல்லை. இந்தப் பாதகர்களுடைய கொடுமைக்குப் பயந்து பைத்தியம் மாதிரி வேஷம் போட்டு நடிக்கிறேன். என்னை எப்படியாவது நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.

இப்படிக்கு,
திக்கற்ற
செந்திரு

இதைப் படித்தடும் மகுடபதியின் கண்களில் ஜலம் வந்துவிட்டது. பெரியண்ணன் "என்ன? என்ன?" என்று வற்புறுத்திக் கேட்கவே, அவனுக்கும் வாசித்துக் காட்டினான். பெரியண்ணன் 'ஓ'வென்று அழுது விட்டான்.

சுவாமியார் இரண்டு பேரையும் மாறி மாறி பார்த்தார். "மகுடபதி! இதென்ன? உங்களுக்கு இந்தப் பெண்ணைத் தெரியுமா?" என்று கேட்டார்.

"ஆமாம், சுவாமி! அவளைத் தேடிக்கொண்டு தான் நாங்கள் வந்தோம்!" என்றான் மகுடபதி.

பெரியண்ணன் விம்மிக் கொண்டே, "குழந்தை இந்தக் கடிதத்தைக் கல்லில் கட்டிக்கீழே போட்டிருக்கிறது. கடுதாசி பறந்து போய்விட்டது. கல் மாத்திரம் சுவாமியின் தலையில் விழுந்திருக்கிறது" என்றான்.

"அப்படியானால், கடிதத்தில் கண்ட விஷயம் உண்மையென்று நீங்கள் நினைக்கிறீர்களா?" என்று சுவாமியார் இரண்டு பேரையும் பார்த்துக் கேட்டார்.

கொஞ்சம் கொஞ்சமா எல்லா விஷயங்களையும் மகுடபதியும் பெரியண்ணனும் சுவாமியாருக்குச் சொன்னார்கள். சுவாமியார் அளவு கடந்த ஆச்சரியத்துக்கு உள்ளானார் என்று சொல்லவேண்டியதில்லை. அதோடு அவருக்குக் கொஞ்சம் பயமும் உண்டாயிற்று. கார்க்கோடக் கவுண்டரைப் பற்றி அவர் ஏற்கெனவே பராபரியாய்க் கேள்விப்பட்டதுதான். இப்போது அவருடைய கொடுமைகளுக்கு உள்ளானவர்களிடம் நேரிலேயே விஷயங்களைக் கேட்டதும், "அவ்வளவு பொல்லாத மனுஷனுடைய விரோதத்துக்குப் பாத்திரமாகி இந்த ஊரில் மடம் எப்படி நடத்த முடியும். நம்முடைய தொண்டுக்கெல்லாம் விக்கினம் வந்து விடும்போலிருக்கே?" என்று நினைத்தார். அதோடு, காங்கிரஸ் தொண்டனான மகுடபதி இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டிருப்பதனால் அபாயம் அதிகமாயிற்று. சர்க்கார் அதிகாரிகள் கார்க்கோடக் கவுண்டரின் பக்கந்தான் இருப்பார்கள். நம்முடைய பேச்சை நம்பமாட்டார்கள். இவ்வளவுடன் கூட, சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டிருப்பது ஒரு பெண்; நாமோ சந்நியாசி, பழி சுமத்த எங்கே இடுக்குக் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டிருக்கும் தூர்த்தர்கள் தங்கள் காரியத்தை ஒருவேளை ஆரம்பிக்கலாம்.

இப்படியெல்லாமிருந்த போதிலும், ஒரு அனாதைப் பெண்ணைப் பாவிகளின் கொடுமையிலிருந்து காப்பாற்ற வேண்டியது அவசியந்தான் என்று சுவாமியார் முடிவு செய்தார். ஆனால் காரியம் கெட்டுப் போகாமலிருக்க வேண்டுமானால், ரொம்பவும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டியதும் அவசியம். அவசரப்பட்டு ஒன்று கிடக்க ஒன்றைச் செய்து மோசம் போகக் கூடாது.

வெகு நேரம் மகுடபதியுடனும், பெரியண்ணனுடனும் கலந்து யோசித்த பிறகு, சுவாமியார் சொன்னதாவது:

"இந்த விஷயத்தில் நீங்கள் ஒன்றும் பிரவேசிக்க வேண்டாம். நீங்கள் தலையிட்டால் கட்டாயம் காரியம் கெட்டுப் போகும். இன்று ராத்திரி இங்கே தங்கிவிட்டு நாளைக்குக் கோயமுத்தூருக்கோ அல்லது கிராமத்துக்கோ புறப்பட்டுப் போங்கள். உதகமண்டலத்தில் ஒரு பெரிய உத்தியோகஸ்தரை எனக்கு நல்ல பழக்கமுண்டு. நாளையதினம் எனக்கும் கொஞ்சம் உடம்பு சௌகரியமாகிவிடும். நானே நேரில் போய் அவருடன் பேசி எப்படியாவது அந்தப் பெண்ணை விடுதலை செய்யப் பார்க்கிறேன். அதற்கு இந்தக் கடிதமே எனக்குப் போதும். அவசரப்பட்டு ஏதாவது செய்தோமானால் எல்லாம் குட்டிச்சுவராகிவிடும். அந்தப் பெண்ணுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் அதன் பொறுப்பு நம்முடைய தலையில் தான் விடியும். கார்க்கோடக் கவுண்டரிடத்திலிருந்து அவளை விடுதலை செய்துவிட்டால், அப்புறம் அவளாச்சு, நீயாச்சு!"

சுவாமியார் கூறியதை மறுத்துக் கூற மகுடபதிக்குத் தைரியம் உண்டாகவில்லை. அவர் கூறுவது தான் நியாயம், புத்திசாலித்தனம் என்றும் அவனுக்குப் பட்டது.

"சரி, சுவாமி! அப்படியே ஆகட்டும்" என்றான்.

"இனிமேலாவது நீங்கள் கொஞ்சம் பிரசாதம் எடுத்துக் கொண்டு சிரமபரிகாரம் செய்து கொள்ளுங்கள். ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள்" என்றார் சுவாமியார்.

அவ்விதமே மகுடபதியும் பெரியண்ணனும் சுவாமியாரின் அறையிலிருந்து வெளிவந்து பிரசாதம் சாப்பிட்டார்கள். பிறகு மகுடபதி, கிருஷ்ணன் என்கிற பையனிடம் தேவகிரி எஸ்டேட் பங்களா எங்கே இருக்கிறதென்பதைப் பற்றியும், போகும் வழியைப் பற்றியும் விவரமாக விசாரித்துக் கொண்டான். சற்று நேரத்துக்கெல்லாம், பெரியண்ணனைப் பார்த்து, "பாட்டா! என்னால் சும்மா உட்கார்ந்திருக்க முடியவில்லை. நான் போய்க் கொஞ்சம் ஊர் சுற்றிப் பார்த்து விட்டு வருகிறேன், நீ படுத்துக் கொண்டிரு" என்று சொல்லிவிட்டுப் போனான்.

அவன் போன சிறிது நேரத்துக்கெல்லாம் பெரியண்ணன் கிருஷ்ணனிடம் "தம்பி! எனக்கு இங்கே ஒருவரைப் பார்க்க வேண்டும். போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன். சுவாமியார் கேட்டால் இரண்டு பேரும் ஊர் சுற்றிப் பார்க்கப் போயிருக்கிறோம் என்று சொல்லிவிடு" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

சுவாமியார் சொன்ன யோசனை சரியானது என்று மகுடபதி ஒப்புக் கொண்ட போதிலும், செந்திருவைப் பார்க்காமல் திரும்ப அவன் மனம் ஒப்பவில்லை. உலகத்தைத் துறந்த சுவாமியாருக்கு மகுடபதியின் உள்ளம் செந்திருவைப் பார்க்க எப்படித் துடித்தது என்பது தெரிவதற்கும் நியாயமில்லை. ஆகவே, அவரிடம் சொல்லாமல் எப்படியும் தேவகிரி எஸ்டேட் பங்களாவுக்குப் போய் அவளை ஒரு தடவை கண்ணால் பார்த்துவிட்டாவது திரும்ப வேண்டும் என்று அவன் தீர்மானித்துக் கொண்டான். கவுண்டர்கள் நேற்றுத்தான் வந்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். ஆகையால் இன்று இங்கே இருக்கமாட்டார்கள். பங்களாவுக்கு வெளித்தோட்டத்தில் அவள் வந்து உலாவுகிறாள் என்றும் தெரிகிறது. ஆகவே, அவளைப் பார்ப்பது சாத்தியந்தான். "பயப்படாதே! நான் இருக்கிறேன்" என்று இரண்டு வார்த்தை சொல்லுவதுகூடச் சாத்தியமாகலாம். ஏன் முடியாது? இந்த நோக்கத்துடன் தான் மகுடபதி இப்போது உதகமண்டலம் போகும் மலைச்சாலையில் போய்க் கொண்டிருந்தான்.

போகும் போது அவன் உள்ளத்தில் எத்தனை எத்தனையோ எண்ணங்கள் தோன்றின. செந்திரு உண்மையிலேயே அங்கே இருப்பாளா? நாம் பார்ப்போமா? அவளை விடுதலை செய்வதற்கு சுவாமியாரின் முயற்சியையே நம்பியிருக்க வேண்டியதுதானா? ஆகா! என்ன சமர்த்து அவள்! எப்பொழுதோ தோழியிடம் பேசின ஞாபகத்தை வைத்துக் கொண்டு பைத்தியம் போல் நடிக்கிறாளே? "எல்லாம் உன் பேரில் உள்ள அன்பினால்தானே?" என்று எண்ணிய போது மகுடபதிக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. அத்தகைய அன்புக்குப் பாத்திரமாக நாம் என்ன செய்திருக்கிறோம்? எத்தனையோ நாவல்கள் படித்திருக்கிறோமே? இம்மாதிரிச் சந்தர்ப்பத்தில் உபயோகப்படக்கூடிய யுக்தி ஒன்றும் இப்போது ஞாபகத்திற்கு வரவில்லையே? - தோட்டக்காரனிடம் ஏதாவது சொல்லிச் சிநேகம் செய்து கொண்டு பங்களாவுக்குள் போய் அவனைத் திடீரென்று ஓர் அறையில் தள்ளிப் பூட்டிவிட்டாலென்ன? செந்திருவை அழைத்துக் கொண்டு நேரே ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் ரயிலேறிச் சென்னைக்குப் போய் விடலாமா - ஆகா! செந்திருவைப் போல் ஒரு வாழ்க்கைத் துணைவி மட்டுமிருந்தால், எப்படி எப்படியெல்லாம் தேசத் தொண்டும், சமூகத் தொண்டும் செய்யலாம் என்று மகுடபதி மனோ ராஜ்யம் செய்து கொண்டே நடந்தான். இதனால் வழி நடக்கும் களைப்பே அவனுக்குத் தெரியவில்லை. கிருஷ்ணன் சொன்ன அடையாளப்படி, சற்று தூரத்தில் ஒரு மேடான இடத்தில் பங்களா தெரிந்ததுந்தான் அவனுக்கு இப்போதைய நிலைமை ஞாபகம் வந்தது.

பங்களா அருகில் தயங்கித் தயங்கிப் போய் முன்புறத் தோட்டத்தில் செந்திருவைப் பார்க்கும் ஆவலுடன் கண் கொட்டாமல் பார்த்தான். ஆனால், பங்களாவிலோ, தோட்டத்திலோ மனித சஞ்சாரம் இருப்பதாகவே தெரியவில்லை. சற்று நேரம் கழித்து இன்னும் சமீபத்தில் சென்றான். இந்த பங்களாதானா, அல்லது தவறான இடத்துக்கு வந்துவிட்டோ மா என்று அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. தோட்டத்தின் முன் கேட்டுக்கு அருகில் தைரியமாய்ப் போனான். கேட்டின் கதவு திறந்து கிடந்தது. "சரி, இந்த வீடு இல்லை" என்று அவனுக்கு நிச்சயமாயிற்று ஆயினும் உள்ளே போய் யாராவது இருந்தால் அவர்களை விசாரிக்கலாம் என்று போனான். பங்களா முகப்புக்கு அவன் வந்த போது, கதவைத் திறந்து கொண்டு ஒரு மனிதன் வெளியே வந்தான். அவனைப் பார்க்கப் பயங்கரமாயிருந்தது. முரட்டு மனிதனாகக் காணப்பட்டான். ஒரு வேளை இந்தப் பங்களா தானோ, இவன் தான் அந்த முரட்டுத் தோட்டக்காரனோ என்று தோன்றியது. படபடவென்று நெஞ்சு அடித்துக் கொண்டது.

"யார் ஐயா நீ?" என்று அந்த மனிதன் கேட்டதற்கு மகுடபதி சரியான பதில் சொல்லாமல், "இது யார் பங்களா அப்பா? வீட்டில் ஒருவரும் இல்லையோ?" என்றான்.

"ஒருவரும் இல்லாமல் என்ன? உனக்கு யார் வேணும்?" என்று எரிந்து விழுந்தான் அம்மனிதன்.

"வீட்டு எஜமானைப் பார்க்கணும்" என்றான் மகுடபதி, தடுமாற்றத்துடன்.

"உள்ளே இருக்கார், போ!"

இந்த பங்களா இல்லையென்று மகுடபதிக்கு உறுதியாயிற்று இருந்தாலும் இவ்வளவு தூரம் விசாரித்துவிட்டு உள்ளே போகாமல் திரும்பக் கூடாது என்று நினைத்துக் கொண்டே வாசற்படியில் நுழைந்து நடையில் போனான். நடையில் வலது புறத்தில் ஒரு வாசற்படி இருந்தது. அதன் அருகில் அவன் போனதும் வெளி வாசற் கதவு திடீரென்று சாத்திய சத்தத்தைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அதே சமயத்தில் அறைக்குள்ளேயிருந்து "வாடா, அப்பா, வா!" என்று ஒரு தெரிந்த குரல் - பயங்கரமான குரல் கேட்டது. மகுடபதி திகிலுடன் அறைக்குள் நோக்கினான். அங்கே, கையில் சுழல் துப்பாக்கியுடன் கள்ளிப்பட்டிக் கார்க்கோடக் கவுண்டர் நின்று கொண்டிருந்தார்.

"அண்ணா வந்தார்!"

அன்று காலையில் செந்திரு அளவில்லாத துயரத்தில் ஆழ்ந்தவளாய் உள்ளமும் உடலும் குன்றி உட்கார்ந்திருந்தாள். "இந்த உலகில் ஏன் பிறந்தேன் நான்" என்பதாக அவள் கேட்டிருந்த ஒரு பாட்டின் அடி திரும்பத் திரும்ப அவளுடைய ஞாபகத்துக்கு வந்து கொண்டிருந்தது. நாலு வருஷத்துக்கு முன்பு வரையில் அவளுடைய வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமயமாயிருந்தது என்பதையும், திடீரென்று எப்படித் துன்ப மயமாக மாறிவிட்டதென்பதையும் நினைத்து நினைத்துப் பொருமினாள். "கடவுள் எதற்காக எனக்கு இவ்வளவு கஷ்டத்தையும் கொடுத்தார்? நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன்?" என்று அடிக்கடி எண்ணினாள். இவ்வளவு சொந்தத் துயரங்களுக்கிடையேதான் கடிதத்துடன் கட்டிப் போட்ட கல் சுவாமியாரின் தலையில் விழுந்து காயப்படுத்திய விபரீதத்தை நினைத்து நினைத்து வேதனையடைந்தாள். சுவாமியாருக்குப் பெரிய காயம் ஏற்பட்டிருக்குமோ? ஒரு வேளை சாபம் கொடுத்து விடுவாரோ? ஐயோ! தான் ஏற்கெனவே படும் கஷ்டம் எல்லாம் போதாதா? என்ன பைத்தியக்காரத்தனம்? பைத்தியம் மாதிரி நான் நடித்ததல்லவா உண்மையில் பைத்தியக்காரத்தனமாய்ப் போய்விட்டது? இனிமேல் இந்தப் பைத்திய வேஷம் வேண்டாம் என்று அவள் முடிவாகத் தீர்மானித்துக் கொண்டாள். அடுத்த தடவை சித்தப்பா வரும்போது அவரைக் கேட்டுப் பார்க்க வேண்டியது தனக்கு விடுதலை யளிக்கும்படி; அதற்கு அவர் சம்மதிக்காவிட்டால் உயிரை விட்டு விடுவதுதான் சரி. நல்ல வேளையாக இந்த மலைப் பிராந்தியத்தில் உயிரை விடுவது அவ்வளவு கஷ்டமான காரியமல்ல. கிராதி மேல் ஏறி கீழே குதித்தாலும் தீர்ந்தது. இப்படி எண்ணிய போதெல்லாம் காலஞ்சென்ற தந்தையின் நினைவும் அவளுக்கு அவ்வப்போது வந்து கொண்டிருந்தது. "அப்பா! நீ எங்கேயாவது இருக்கிறாயா? உன் அருமை மகள் படும் கஷ்டங்களெல்லாம் உனக்குத் தெரியுமா? இந்தப் பாவிகள் செய்யும் கொடுமைகளையெல்லாம் நீ பார்த்துக் கொண்டு தானிருக்கிறாயா?" என்று அவளுடைய மனம் கதறிற்று.

ஒரு தடவை இன்னொரு எண்ணமும் அவளுக்குத் தோன்றியது: "இந்தக் கஷ்டங்கள் எல்லாம் நாமாக விலைக்கு வாங்கிக் கொண்டதுதானே? எத்தனையோ பெண்கள் வயதானவர்களைக் கல்யாணம் செய்து கொள்ளவில்லையா? கள்ளிப்பட்டிக் கவுண்டரைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தால் இதே பங்களாவில் கைதியாக இருப்பதற்குப் பதிலாக எஜமானியாக இருக்கலாமல்லவா?" என்று நினைத்தாள். அவளுக்குத் தெரிந்த குடும்பங்களுக்குள்ளே வயதானவர்களை - கள்ளிப்பட்டிக் கவுண்டரைவிடக் கிழவர்களை கல்யாணம் செய்து கொண்டவர்களின் ஞாபகமெல்லாம் அவளுக்கு வந்தது. ஆனால், அதே சமயத்தில், மூன்று வருஷத்துக்கு முன் ஒரு நாள் ஓடைக் கரையில் நடந்த சம்பவமும் அவளுடைய நினைவுக்கு வந்தது. மூர்ச்சை யடைந்தது போல் தான் பாசாங்கு செய்ததும், காந்திக் குல்லா அணிந்த அந்த வாலிபன் ஜலம் கொண்டு வந்து தன் முகத்தில் தெளித்ததும், மூக்கின் அருகில் கையை வைத்து மூச்சு இருக்கிறதா என்று பார்த்ததும், தான் எழுந்து உட்கார்ந்து கலகல வென்று சிரித்ததும், நேற்றுத்தான் நடந்தது போல் அவள் மனதில் தோன்றி, தேகம் சிலிர்க்கச் செய்தது. பின்னர், அந்தக் கோயமுத்தூர் வீட்டில் அன்றிரவு தன்னைச் சித்தப்பா பிரம்பினால் அடித்தபோது, மகுடபதி கதவைத் திறந்து கொண்டு ஓடி வந்து தடுத்ததும், அவனைக் கவுண்டர்கள் கட்டிப் போட்டதும், சோபாவின் காலில் கட்டிப் போட்டிருந்தபோது அவ்வாலிபனுடைய முகத்தில் தோன்றிய தீரமும், தன்னை அடிக்கடி 'பயப்படாதே!' என்று சொல்கிறவன் போல் பார்த்ததும் - இவையெல்லாம் அவள் மனக்கண்ணின் முன் மீண்டும் தோன்றின. தான் மணம் செய்துகொள்வதாயிருந்தால் மகுடபதியை மணம் செய்துகொண்டு வாழ்வது, இல்லாவிட்டால் உயிரை விட்டுவிடுவது என்று உறுதி செய்து கொண்டாள்.

இப்படிப் பலவிதச் சிந்தனைகளில் அவள் ஆழ்ந்திருந்த சமயத்தில் வாசலில் கார் வரும் சத்தம் கேட்டது. ஜன்னல் வழியாகப் பார்த்த போது, கள்ளிப்பட்டிக் கார்தான் என்று தெரிந்து கொண்டாள். உடனே, அவள் அலமாரிக்குச் சென்று, கறிகாய் நறுக்குவதற்காக உபயோகிக்கப்பட்ட ஒரு சிறு கத்தியைத் தேடி எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டு, கவுண்டர்களைச் சந்திப்பதற்கு ஆயத்தமானாள். அவளுடைய அறைக்கு வெளியே காலடிச்சத்தம் கேட்ட போது, ஒரு கையை இடுப்பில் கத்திப் பிடியின் மேல் வைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.

உள்ளே தங்கசாமிக் கவுண்டர் மட்டுந்தான் வந்தார். சாவதானமான குரலில் "செந்திரு! உடம்பு எப்படியிருக்கிறது?" என்று கேட்டுக் கொண்டே வந்தவர், செந்திரு ஆவேசங் கொண்டவள் போல் நிற்பதைப் பார்த்துச் சிறிது திடுக்கிட்டார்.

"எனக்கு உடம்பு ஒன்றுமில்லை" என்றாள் செந்திரு.

"ரொம்ப நல்லது; அப்படியானால் உட்கார். ஏன் இவ்வளவு பதட்டப்படுகிறாய்? உன்னை யார் என்ன செய்கிறார்கள்?" என்றார்.

கவுண்டர் நாற்காலியிலும், செந்திரு அவளுடைய கட்டிலிலும் உட்கார்ந்தார்கள்.

"அநாவசியமாகப் பதட்டப்பட்டுத்தானே அந்த சுவாமியாரின் மொட்டை மண்டையில் கல்லைப் போட்டாய்? பாவம்! சாகக் கிடக்கிறார்!" என்றார்.

"ஐயோ?" என்று அலறினாள் செந்திரு.

"பிழைத்தால் புனர்ஜன்மந்தான். செத்துப் போனால் உன் மேல் கேஸ் வந்தாலும் வரும். நீ பைத்தியம் என்று வேஷம் போட்டது போக, நிஜமாகவே உனக்குப் பைத்தியம் என்று ருசுச் செய்யும்படி வரலாம்" என்றார்.

செந்திரு திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள். விஷயம் அவளுக்கு நன்றாக விளங்கக் கூட இல்லை. சுவாமியார் சாகக் கிடக்கிறார் - தான் எறிந்த கல்லினால் - என்பது மட்டுந்தான் மனதில் நின்றது.

"குழந்தை! இதையெல்லாம் நீயாகவே பண்ணிக் கொண்டாய் என்பதை நினைத்தால் ரொம்ப வருத்தமாகயிருக்கிறது" என்றார் தங்கசாமிக் கவுண்டர்.

"சித்தப்பா! சத்தியமாகச் சொல்லுங்கள். இதெல்லாம் நானாகச் செய்துகொண்டதா? இந்தக் கதிக்கு என்னைக் கொண்டு வந்தது நீங்கள் இல்லையா?" என்று செந்திரு கதறினாள்.

"இருக்கலாம், அம்மா! என் பேரிலும் கொஞ்சம் தப்புத்தான். ஒப்புக் கொள்கிறேன். கள்ளிப்பட்டிக் கவுண்டரின் அந்தஸ்தை உத்தேசித்து உன்னை அவருக்குக் கட்டிக் கொடுக்க எண்ணினேன். அந்த மனுஷருக்கும் ஆண் குழந்தை இல்லையே, உன் வயிற்றில் ஒரு ஆண் குழந்தை பிறந்தாள் அவ்வளவு சொத்தும் வருமே என்ற ஆசைப் பட்டேன். ஆனால், உனக்கு இஷ்டமில்லை என்றால் அதைச் சொன்னால் போதாதா? சொல்லாமல் கொள்ளாமல், ஊரை விட்டு ஓடி வரலாமா? அதுவும் நான் இல்லாத சமயத்தில்! இதனால் நம்மெல்லோருக்குமே எவ்வளவு அவமானம் பார்! உன்னுடைய இஷ்டமில்லாமல் பலவந்தப்படுத்திக் கல்யாணம் செய்து கொடுத்துவிடுவோமா? இதெல்லாம் இந்தக் காலத்தில் நடக்கக் கூடிய காரியமா?... படித்த பெண்ணாகிய உனக்கு இது தெரியாமல் போய் விட்டதே!... ஆனால், உன் பேரில் தவறு இல்லை. 'கரைக்கிறவர்கள் கரைத்தால் கல்லுங்கரையும்' என்பதுபோல், யாருடைய துர்ப்போதனையையோ கேட்டு நீ இந்த மாதிரி செய்து விட்டாய்...!"

கவுண்டர் இவ்வாறு பேசி வந்தபோது முதலிலெல்லாம் செந்திருவுக்குத் தன் பேரிலே தான் ஒருவேளை பிசகோ என்று தோன்றியது. ஆனால், கடைசியில் 'துர்ப்போதனை' என்றதும், அவர் மகுடபதியைத்தான் குறிப்பிடுகிறார் என்று அறிந்து கொண்டாள். அடங்கியிருந்த கோபமெல்லாம் பொங்கியது. "நான் யாருடைய துர்ப்போதனையையும் கேட்கவில்லை. அப்படிச் சொன்னால் பாவம். நீங்கள் தான்..." என்று ஆரம்பித்தாள்.

கவுண்டர் குறுக்கிட்டு, "போனதைப் பற்றி இனிமேல் என்ன செந்திரு! இரண்டு பேரும் அதையெல்லாம் மறந்துவிடுவோம். நேற்று இரவு கனவில் அண்ணன் வந்தார். 'உன்னை நம்பி என் குழந்தையை ஒப்புவித்தேனே! எங்கேயடா என் குழந்தை?' என்று கேட்பது போலிருந்தது. தூக்கத்தில் ஓவென்று அழுதுவிட்டேன். எல்லோரும் என்ன என்று கேட்டுக் கொண்டு வந்துவிட்டார்கள்..." என்று சொல்லி, வேறு பக்கம் திரும்பிக் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

செந்திருவுக்கு மனம் இளகி விட்டது. அவளும் சேலைத் தலைப்பினால் முகத்தை மூடிக் கொண்டு விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.

தங்கசாமிக் கவுண்டர் அவளுடைய தலை மீது தடவிக் கொடுத்து, "வேண்டாம் அம்மா! போனதெல்லாம் போகட்டும். என் அண்ணனுக்கு நான் கொடுத்த வாக்கைக் கட்டாயம் நிறைவேற்றுவேன். நீ ஊருக்கே திரும்பி வந்து விடு. கல்யாணத்தைப் பற்றி உன்னை இனிமேல் வற்புறுத்த மாட்டேன். நீ மேஜர் ஆவதற்கு இன்னும் ஒன்றரை வருஷம் தான் இருக்கிறது. அதுவரையில் பொறுத்திரு. அப்புறம் உன் இஷ்டம் போல் செய். இப்போது கிளம்பு, போகலாம்" என்றார்.

மறுபடியும் ஏதாவது சூழ்ச்சி செய்கிறார்களோ என்று ஒரு நிமிஷம் செந்திருவுக்குச் சந்தேகம் தோன்றிற்று. ஆனாலும் இந்த மலைச் சிறையில் இருப்பதைக் காட்டிலும், ஊருக்குப் போனாலும் பாதகமில்லை என்று கருதினாள். எனவே சித்தப்பாவுடன் புறப்படச் சம்மதித்தாள்.

பங்களாவின் வாசலுக்கு வந்த போது, அங்கே கள்ளிப்பட்டிக் கவுண்டரைக் கண்டதும் அவளுக்கு நெஞ்சு திடுக்கிட்டது. ஆனால், கள்ளிப்பட்டிக் கவுண்டர் அவர்களைத் தொடர்ந்து வந்த காரில் ஏறவில்லை. இது அவளுக்குத் தைரியத்தை உண்டாக்கிற்று. அவர் இல்லாமலே கார் கிளம்பிய போது அவளுக்கு உற்சாகமே உண்டாகிவிட்டது. "இவர்களுக்குள் ஏதோ சண்டை போலிருக்கிறது; ரொம்ப நல்ல காரியம். அந்தப் பாவியின் சிநேகம் இல்லாவிட்டால் சித்தப்பா நல்லவராகவே ஆகிவிடுவார்" என்று நினைத்தாள்.

கார் போன பிறகு, கள்ளிப்பட்டிக் கவுண்டர் நடையில் வாசற்படியுள்ள முன் அறையில் போய் உட்கார்ந்து கொண்டார். அங்கிருந்து ஜன்னல் வழியாகப் பார்த்தார். அந்தப் பங்களாவுக்கு வரும் பாதை நன்றாகத் தெரிந்தது. அடிக்கடி அந்தப் பாதையைக் கவுண்டர் ஆவலுடன் உற்று நோக்கிய வண்ணமிருந்தார். வலையை விரித்து விட்டு, பட்சி எப்போது வந்து சிக்கிக் கொள்ளும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேடனுடைய முகபாவம் கவுண்டரின் முகத்தில் அப்போது தோன்றிற்று. சாப்பாடு, சிற்றுண்டி முதலியவையும் அந்த அறையிலேயே நடந்தது. மேஜை டிராயரிலிருந்து அடிக்கடி கைத்துப்பாக்கியை எடுப்பதும், அதன் விசையில் விரலை வைப்பதும், மறுபடியும் மேஜைக்குள் வைத்து மூடுவதுமாக இருந்தார். தோட்டக்காரனையும் அடிக்கடி கூப்பிட்டு, பாதையைப் பார்த்துக் கொண்டிருக்கும்படியும், யாராவது வருவது தெரிந்தால் உடனே தெரிவிக்கும்படியும் கட்டளையிட்டார். நேரம் ஆக ஆக, அவருடைய பொறுமை குறைந்து வந்தது. அறையில் அங்குமிங்கும் வேகமாக உலாவினார். கடைசியில், தூரத்தில் மகுடபதி வருவது தெரிந்ததும், அவருடைய முகத்திலும் கண்களிலும் பயங்கரமான குரோதத்தின் விகாரம் தோன்றியதுடன், உற்சாகத்தின் அறிகுறியும் காணப்பட்டது. வேலைக்காரனை மறுபடியும் கூப்பிட்டு வருகிற ஆளை உள்ளே விட்டு வெளிக் கதவை சாத்தி விடும்படிக் கட்டளையிட்டார். பிறகு கைத்துப்பாக்கியைக் கையில் எடுத்துக் கொண்டு மேஜைக்கு முன்புறமாக வந்து நின்றார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தான் சென்ற அத்தியாயத்தில் இறுதியில் கூறியபடி, மகுடபதி உள்ளே நுழைந்தான். "வா அப்பா, வா! உனக்காகத்தான் காத்திருக்கிறேன்!" என்று அவனை வரவேற்றார் கவுண்டர்.

மகுடபதி சொல்ல முடியாத ஏமாற்றத்துடனும் பயங்கரத்துடனும் கார்க்கோடக் கவுண்டரையும் அவர் கையிலிருந்த துப்பாக்கியையும் மாறி மாறிப் பார்த்தான். இதைக் கவனித்த கவுண்டர், "ஓகோ! இங்கே என்னை எதிர்பார்க்கவில்லையாக்கும். வேறு யாரையோ எதிர்பார்த்தாயாக்கும்! பாதகமில்லை வா! முன் இரண்டு தடவை என்னிடமிருந்து தப்பித்துக் கொண்டாய்; இந்தத் தடவை தப்பிக்க முடியாது!" என்றார்.

"கவுண்டா! சுடாதே!"

கார்க்கோடக் கவுண்டர் "இந்தத் தடவை தப்பிக்க முடியாது" என்று சொன்னபோது மகுடபதி அதனுடைய உண்மையைப் பூரணமாக உணர்ந்தான். ஒரு நிமிஷ நேரத்துக்குள் அவன் உள்ளத்தில் ஆயிரம் எண்ணங்கள் தோன்றி மறைந்தன. ஆகா! கடைசியில் இதுதானா முடிவு? இந்தக் கொலைகாரன் கையினால் சாவதற்குத்தானா இவ்வளவு பிரயாசமும்! சாமியாரின் பேச்சைத் தட்டி விட்டு வந்தேனே?... பெரியண்ணன் எப்படித் தவிப்பான்?... ஐயோ! செந்திரு... அவள் கதி என்ன? அடுத்த ஜன்மத்திலாவது அவளை அடைவோமா?

"என்னடா திருட்டு முழி முழிக்கிறாய்? இங்கே எதற்காக வந்தாய்? இது உன் அப்பன் வீடா..." என்ற கவுண்டரின் கடுமையான குரலைக் கேட்ட மகுடபதி சுய நினைவை அடைந்தான். "உன் அப்பன் வீடா?" என்ற கேள்வி அவனுக்கு என்னவெல்லாமோ ஞாபகங்களை உண்டாக்கிற்று. தான் தாய் தந்தையில்லாத அனாதை என்பதும், திருவிழாக் கூட்டத்தில் கிடந்து அகப்பட்டவனென்பதும் நினைவுக்கு வந்தது. வளர்ப்புப் பெற்றோர்களில் தகப்பனார் காலமாகி விட்டார். தாயார் மட்டுந்தான் வேங்கைப்பட்டிக் கிராமத்தில் ஓர் இடிந்த வீட்டில் இருக்கிறாள். ஐயோ! தன்னை எத்தனையோ அன்பாய் வளர்த்த அந்த அம்மாள் இவ்விதம் தான் செத்ததை அறிந்தால் எவ்வளவு துக்கப்படுவாள்?

ஏற்கெனவே பலவிதத் துயரங்களினாலும் ஏமாற்றங்களினாலும் இளகியிருந்த மகுடபதியின் உள்ளம் இந்த நினைவினால் ரொம்பவும் உருகிவிட்டது. அவன் கண்களில் குபீரென்று நீர் ததும்பியது.

"அடே கோழை! அழுகிறாயா? உன் வீர தீரமெல்லாம் இவ்வளவுதானா? மீட்டிங்குகளிலே பிரமாதமய்ப் பேசினதெல்லாம் வெறும் வாய்ப் பேச்சுத்தானோ? கள்ளை ஒழிப்பதற்காக 'உயிரைக் கொடுப்பேன்' என்றெல்லாம் வீராப்புப் பேசினாயே? இப்போது பெண்பிள்ளை மாதிரி அழுகிறாயே?' என்றார் கவுண்டர்.

மகுடபதியின் உள்ளத்தில் அமுங்கிக் கிடந்த கோபமெல்லாம் பொங்கி எழுந்தது.

"பாவி! துரோகி...!" என்று ஆரம்பித்தான். ஆனால் ஆத்திரமிகுதியினாலே ஒன்றும் பேச முடியவில்லை.

"அவ்வளவுதானா!" என்று கவுண்டர் கூறிப் பயங்கரமாய்ச் சிரித்தார்.

"கொலைகாரா!..." என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.

"அப்புறம்?"

"அப்புறம் நீ நரகத்துக்குப் போவாய். உன்னோடு பேச எனக்கு இஷ்டமில்லை. உன் எதிரில் நிற்பதே பாவம். துப்பாக்கியை வைத்துக் கொண்டு ஏன் நிற்கிறாய்? குண்டு இருக்கிறதா? வெறும் ஓட்டைத் துப்பாக்கியா?" என்றான் மகுடபதி.

"செத்துப் போவதற்கு அவ்வளவு அவசரமா?" என்றார் கவுண்டர்.

"அவசரந்தான். உன்னைப் போன்ற பாவிகள் உலகத்தில் இருக்கிறதை விட இறந்து போவது மேல்..."

"அப்படியானால், உயிரோடிருக்கவே உனக்கு இஷ்டமில்லையா?"

இதைக் கேட்டதும் மகுடபதிக்குச் சிறிது நம்பிக்கை உண்டாயிற்று. ஒரு வேளைக் கார்க்கோடக் கவுண்டரின் மனது கூட இளகிவிட்டதோ? தன்னைக் கொல்வதற்கு அவருக்கு மனம் வரவில்லையோ? இல்லாவிட்டால் இத்தனை நேரம் ஏன் தயங்கிக் கொண்டு நிற்கிறார்? அவருடைய மனது உண்மையில் இளகியிருக்கும் பட்சத்தில் இந்தச் சமயத்தில் கொஞ்சம் போதனை செய்து அவருடைய மனதைத் திருப்ப முயல்வதே மேல் அல்லவா? மகாத்மா, அவருடைய அஹிம்சா தர்மம், அன்பு மதம் எல்லாம் மகுடபதியின் மனதில் தோன்றின. "பகைவனுக்கருள்வாய்" என்னும் பாரதியார் பாட்டின் வரிகளையும் நினைவு படுத்திக் கொண்டான். தன்னுடைய துவேஷம், கோபம், எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு, முகத்தில் மலர்ச்சியை வருவித்துக் கொண்டு கவுண்டரைப் பார்த்துச் சொன்னான்:

"அப்படியொன்றும் நான் வாழ்வை வெறுத்து விடவில்லை. இந்த உலகத்தில் ஜீவித்திருக்கத்தான் விரும்புகிறேன். தேசத்துக்காக இன்னும் எவ்வளவோ தொண்டுகளைச் செய்ய விரும்புகிறேன். இந்தப் பாரத தேசம் சுதந்திரம் அடைந்து பார்க்க ஆசைப்படுகிறேன். இந்தியக் குடியரசின் முதலாவது பிரசிடெண்டாக பண்டித ஜவஹர்லால் நேரு வருவதைப் பார்க்க விரும்புகிறேன். நீங்களும் இந்தத் தேசத்தில் பிறந்தவர் தான்; பாரத மாதாவின் புதல்வர்தான். உங்கள் கையினால் சாவதைக் காட்டிலும், போலீஸ் துப்பாக்கியினால் சாக நேர்ந்தால் எவ்வளவோ சந்தோஷமாக உயிரை விடுவேன் ஐயா! உண்மையில், உங்களுக்கு நான் என்ன கெடுதல் செய்தேன்? எதற்காக என்னை நீங்கள் கொன்று பாவத்துக்குள்ளாக வேண்டும்? உங்களுடைய இதயத்தில் கையை வைத்துச் சொல்லுங்கள்..."

மகுடபதியின் பேச்சினால் கவுண்டரின் மனம் எவ்வளவு தூரம் மாறியதோ, என்னமோ, தெரியாது. அவர், "இந்தப் பிரசங்கமெல்லாம் வேண்டியதில்லை. நீ உயிர் தப்ப வேண்டுமானால், அதற்கு வழியிருக்கிறது" என்றார்.

மகுடபதி மௌனமாயிருந்தான். அவன் உள்ளத்தில் மறுபடியும் சந்தேகங்கள் தோன்றின.

"இங்கே வா! இந்தக் காகிதத்தில் கையெழுத்துப் போட்டாயானால் இங்கிருந்து பிழைத்துப் போகலாம்" என்று கவுண்டர் சொல்லி, தம்முடைய சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தையும் பௌண்டன் பேனாவையும் எடுத்து மேஜை மேல் வைத்தார்.

மகுடபதி தயக்கதுடன் மேஜையண்டை நெருங்கினான். மேஜைமேல் விரித்து வைத்திருந்த காகிதத்தைப் படிக்கத் தொடங்கினான். பக்கத்தில் கவுண்டர் கையில் பிடித்த துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார்.

காகிதத்தில் சில வரிகள் படித்ததுமே மகுடபதியின் இரத்தம் கொதிக்கத் தொடங்கியது. ஆத்திர மிகுதியினால் மண்டை வெடித்துவிடும் போலிருந்தது. பக்கத்தில் நின்ற கவுண்டரை அவனுடைய உடம்பின் ஒவ்வொரு அணுவும் வெறுத்தது.

அந்தக் காகிதத்தில் எழுதியிருந்தது இதுதான்:

"கள்ளிப்பட்டி மகா-ள-ள-ஸ்ரீ கார்க்கோடக் கவுண்டர் அவர்களுக்கு மகுடபதி தாழ்மையுடன் நமஸ்காரம் செய்து எழுதிக் கொண்ட விண்ணப்பம்.

நான் இத்தனை நாளும் செய்த குற்றங்களை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு தங்களுடைய மேலான மன்னிப்பைக் கோருகிறேன். காங்கிரஸ் தொண்டன் என்று நான் வேஷம் போட்டுக் கொண்டு பணம் வசூலித்துத் துன்மார்க்கமான காரியங்களுக்கு உபயோகப்படுத்தியது உண்மை. தங்களுடைய கண்டிராக்ட்டில் உள்ள கள்ளுக்கடைகளை மறியல் செய்யாமலிருப்பதற்காகத் தங்களிடம் பணம் கேட்டது நிஜம். தாங்கள் கொடுக்காதபடியினால் தங்களுடைய கள்ளுக்கடைகளில் கடுமையாக மறியல் நடத்தியதும் நிஜம். சிங்கமேடு தங்கசாமிக் கவுண்டர் தமையனார் பெண் செந்திரு சித்த சுவாதீனமில்லாமலிருப்பது தெரிந்ததும், அவளுடைய நகைகளை அபகரிக்கும் எண்ணத்துடன் அவளை ஊரை விட்டுக் கடத்திக் கொண்டு போனேன். பெரியண்ணன் வந்து என்னைக் கைப்பிடியாய்ப் பிடித்த போது, அவனைக் கத்தியால் குத்திவிட்டேன். இப்பேர்ப்பட்ட பாதகமான காரியங்களையெல்லாம் செய்ததன் பொருட்டு மிகவும் பச்சாதாபப் படுகிறேன். தாங்களும், மகா-ள-ள-ஸ்ரீ தங்கசாமிக் கவுண்டரும் ரொம்பவும் பெரிய மனது செய்து என்னை இந்தத் தடவை மன்னித்து விட்டுவிட்டால், இனிமேல் இப்பேர்ப்பட்ட துர்க்காரியங்களில் இறங்குவதில்லை என்று கடவுள் சாட்சியாகப் பிரமாணம் செய்கிறேன். அதோடு, இந்தக் கோயமுத்தூர் ஜில்லாவில் அடி வைப்பதில்லையென்றும் பிரமாணம் செய்கிறேன். துராக்கிரமாக இன்றைக்கு உங்களுடைய பங்களாவில் நுழைந்ததற்காகவும் என்னை மன்னித்துவிடும்படி வேண்டிக் கொள்கிறேன்."

கடிதத்தை எப்படியோ முழுவதும் மகுடபதி படித்து முடித்தான். ஆனாலும், கடிதத்தை விட்டுக் கண்களை அகற்றாமல் தீவிரமாக யோசனை செய்யத் தொடங்கினான். இந்தக் காகிதத்தில் தன்னைக் கையெழுத்திடச் செய்யும் நோக்கம் இன்னதென்பது அவனுக்கு ஸ்பஷ்டமாக விளங்கிவிட்டது. செந்திருவிடம் இதைக் காட்டித் தன்னிடம் அளவில்லாத அருவருப்பு அவளுக்கு உண்டாகும்படி செய்வர்கள். இன்னும் பலருக்குப் பகிரங்கப்படுத்திக் கோயமுத்தூர் ஜில்லாவில் தான் தலைகாட்ட முடியாதபடி செய்வார்கள். காங்கிரஸின் பெயருக்கே அழியாத மாசு தன்னால் உண்டாகிவிடும்... இந்தக் காகிதத்தில் கையெழுத்துப் போட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்வதைக் காட்டிலும் உயிரை விட்டு விடுவதே மேல். சித்திரவதை செய்தாலும் இதில் கையெழுத்துப் போடக்கூடாது. ஆனால் தான் உயிரை ஏன் விட வேண்டும்? இப்பேர்ப்பட்ட பாதகன் உலகத்தில் ஏன் ஜீவித்திருக்க வேண்டும்? தான் சாக வேண்டியிருந்தாலும் இவனைக் கொன்று விட்டு ஏன் சாகக் கூடாது? ஆம்; மகுடபதி பல்லைக் கடித்துக் கொண்டு அவ்விதம் தீர்மானித்தான். எப்படியாவது இன்றைக்கு இந்தக் கொடும் பாதகனை யமலோகத்துக்கு அனுப்பிவிட வேண்டும். பிறகு தனக்கு என்ன கதி நேர்ந்தாலும் பாதகமில்லை. ஆனால், எப்படி?...எப்படி?... இவன் கையிலுள்ள துப்பாக்கியைப் பிடுங்கிக் கொண்டு சுட்டால் என்ன? ... அது சாத்தியமா? படீரென்று தட்டி விடலாமா? ஆளையே பலமாகப் பிடித்துத் தள்ளி விடலாமா?... மேஜையின் கீழ் புகுந்து அப்பால் சென்று நாற்காலியை எடுத்து எறியலாமா?...

"என்னப்பா கையெழுத்துப் போடப் போகிறாயா?" என்று கவுண்டரின் குரல் கேட்டது.

மகுடபதி நிதானமான குரலில், "கடவுள் சாட்சி போதுமா?" என்றான்.

"போதாது; நீ கடவுள் இல்லையென்று சாதித்து விடுவாய். மடத்துச் சாமியாரை இங்கே அழைத்துவரச் செய்கிறேன். அவர் சாட்சி போட வேணும்... ஆ!"

கவுண்டர் அடுத்த கணத்தில் சுவரில் போய்ப் படார் என்று மோதினார். அவர் கையிலிருந்த துப்பாக்கி இன்னொரு பக்கம் போய் விழுந்தது. அதிலிருந்து 'டுடும்' என்று ஒடு வெடி வெடித்தது. அறையில் புகை சூழ்ந்தது. மகுடபதி நாலாபுறமும் பார்த்துவிட்டு அந்தத் துப்பாக்கியை எடுத்துக் கொள்வதற்கு ஓடினான். அதற்குள் அறைக் கதவு திடீரென்று திறந்தது. யமகிங்கரன்போல் வேலைக்காரன் ஓடி வந்து மகுடபதியைக் கட்டிப் பிடித்தான். தட்டுத் தடுமாறி எழுந்திருந்த கவுண்டர், "கட்டு அவனை! மேஜைக் காலோடு சேர்த்துக் கட்டு!" என்றார். தோட்டக்காரன் அவ்வாறே மகுடபதியை இழுத்துச் சென்று, தான் மேலே போட்டிருந்த வேட்டியினால் மேஜைக் காலோடு சேர்த்துக் கட்டினான்.

கவுண்டர் துப்பாக்கியை மறுபடியும் எடுத்துக் கொண்டார். மகுடபதியை நோக்கிக் குறி பார்த்தார். "அடே! இந்த வேலை கூடத் தெரியுமா உனக்கு? காந்தியின் சீடன் என்றல்லவா பார்த்தேன்?" என்று கூறி ஹஹ்ஹஹ்ஹா என்று பேய் சிரிப்பது போல் சிரித்தார்.

"இதோ பார்! இந்த ரிவால்வரில் இன்னும் ஐந்து குண்டுகள் இருக்கின்றன. ஆனால், உன்னை அவ்வளவு சுலபமாய் விட்டுவிடுவேன் என்று நினைக்காதே! முனியா! கொண்டுவா, சவுக்கை!" என்று கர்ஜித்தார்.

முனியன் அறைக்கு வெளியே சென்றான். மறுகணத்தில் நடையில் ஏதோ தடபுடல் சத்தம் கேட்டது. "விடு விடு" என்று ஒரு குரல் அலறிற்று. பின்னால் இருந்து இழுத்த முனியனை மீறிக் கொண்டு பெரியண்ணன் உள்ளே வந்தான். அவனுடைய வெறிகொண்ட கண்களால் விழித்துப் பார்த்தான். மகுடபதி கட்டுப் பட்டிருப்பதையும், கார்க்கோடக் கவுண்டர் அவனைச் சுடும் பாவனையாகத் துப்பாக்கியைக் குறிவைத்து நிற்பதையும் கவனித்தான்.

"கவுண்டா! சுடாதே!" என்று அலறினான்.

"ஓகோ! நீயும் வந்துவிட்டாயா?" என்றார் கார்க்கோடக் கவுண்டர்.

"ஆமாம்; வந்து விட்டேன் கவுண்டா! நல்ல சமயத்தில் தான் வந்தேன். அவனைச் சுடாதே! உன் தலை மேல் ஆணை!" என்று பெரியண்ணன் கத்தினான்.

"சீ, நாயே! உன்னை யார் கேட்டது? முனியா! இழுத்துக் கட்டு அவனையும்!" என்றார் கவுண்டர்.

"என்னைக் கட்டு! என்னைச் சுடு! கொல்லு! அந்தப் பிள்ளையைச் சுடாதே!"

"ஓகோ! அப்படியா? உன் கண்ணெதிரிலேயே சுடுகிறேன் பார்!" என்று கார்க்கோடக் கவுண்டர் மகுடபதியை நோக்கிக் குறி பார்த்து விசையிலும் கையை வைத்தார்.

"ஐயோ வேண்டாம், கவுண்டா! அவன் உன் மகன்!" என்று பெரியண்ணன் அலறினான்.

"என்ன!" என்று கூவினார் கவுண்டர்.

"ஆமாம்; காணாமற்போன உன் மகன் தான். இடது காதுக்குப் பின்னால் அடையாளம் இருக்கிறது. வேணுமானால் பார்த்துக் கொள்" என்றான் பெரியண்ணன்.

கள்ளிப்பட்டிக் கவுண்டருடைய உடம்பு வெட வெடவென்று ஒரு நிமிஷம் நடுங்கியது. அவருடைய கையிலிருந்த துப்பாக்கி கீழே விழுந்தது. மறுகணம் அவரும் தள்ளாடி சுருண்டு கீழே விழுந்தார்.

காணாமற் போன குழந்தை

"என் அருமைத் தோழி பங்கஜத்துக்கு உன் அன்பும் ஆறுதலும் நிறைந்த கடிதம் கிடைத்தது. ஆமாம்; என் வாழ்க்கையில் மகா அதிசயமான சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. நீ கற்பனை செய்து எழுதிய எந்த நாவலிலும் இம்மாதிரி அற்புத சம்பவங்கள் நடந்திருக்க முடியாது. கடிதத்தில் விரிவாக எழுதுவதற்கில்லை. நேரில் பார்க்கும் போது எல்லாம் சொல்லுகிறேன். என்னுடைய காதலருக்கு நீ அன்றிரவு செய்த ஒத்தாசையைப் பற்றிச் சொன்னார். ரொம்ப ரொம்ப ரொம்ப வந்தனம். மற்றவை நேரில்.

இப்படிக்கு
செந்திரு"

மேற்படிக் கடிதத்தைப் பங்கஜம் கையில் வைத்துக் கொண்டு அதைத் திரும்பத் திரும்ப படிப்பதும், எழுந்து அறைக்குள் நடமாடுவதும், ஜன்னல் வழியாய் எட்டிப் பார்ப்பதுமாயிருந்தாள். "இன்னும் அப்பா வரக் காணோமே?" என்று அதிருப்தியுடன் முணுமுணுத்துக் கொண்டாள்.

கடைசியில், வாசலில் வண்டி வந்து நின்றது. அய்யாசாமி முதலியார் வண்டியிலிருந்து இறங்கி உள்ளே வந்தார். பங்கஜம் ஓடி அவரை வரவேற்றுக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து ஈஸிசேரில் உட்கார வைத்தாள்.

"சொல்லுங்கள்; உடனே சொல்லுங்கள். ஒன்று விடாமல் சொல்ல வேணும்!" என்றாள்.

"மூச்சு விடுவதற்குக் கொஞ்சம் அவகாசம் கொடேன்!" என்றார் முதலியார்.

"அதெல்லாம் முடியாது. உடனே சொல்ல வேணும். என்ன ஆச்சரியம் அப்பா! மகுடபதி கள்ளிப்பட்டிக் கவுண்டருடைய சொந்தப் பிள்ளையாமே? நிஜந்தானா?" என்று பங்கஜம் துடித்தாள்.

"நிஜந்தான் அம்மா, நிஜந்தான். இன்னும் எவ்வளவோ அதிசயம். கேட்டாயானால், நீ கதை எழுதுவதையே விட்டு விடுவாய்?" என்றார்.

பிறகு முதலியார் நீட்டி முழக்கி வளர்த்திக் கூறிய வரலாற்றின் சாராம்சம் பின்வருமாறு:

மகுடபதியின் தாயார் கள்ளிப்பட்டிக் கவுண்டருடைய இரண்டாவது மனைவி. மகுடபதிக்கு நாலு வயதாயிருந்த போது அவள் அடுத்த பிரசவத்துக்காகச் சேவல் பாளையத்திலிருந்த தன் தாயார் வீட்டுக்குப் போனாள். மகுடபதியையும் பின்னோடு அழைத்துப் போயிருந்தாள். கவுண்டருடைய மற்ற மனைவிமாருக்கு ஆண் குழந்தைகள் இல்லை. ஆகையால் அவர்களுக்கெல்லாம் மகுடபதியின் தாயிடம் ரொம்பவும் வயிற்றெரிச்சல். இரண்டாவது, கர்ப்பத்தின் போது அவர்கள் சாப்பாட்டில் விஷ பதார்த்தம் கலந்து தனக்குக் கொடுத்து விட்டதாக அவள் சந்தேகங் கொண்டிருந்தாள். அதற்குத் தகுந்தாற்போல், இரண்டாவது குழந்தை செத்துப் பிறந்தது. தானும் பிழைப்பது துர்லபம் என்று அவளுக்குத் தெரிந்து போகவே, அவளிடம் அந்தரங்க விசுவாசம் வைத்திருந்த பெரியண்ணனைக் கூப்பிட்டு, "மாமா! இந்தக் குழந்தையை நீதான் காப்பாற்ற வேண்டும். கள்ளிப்பட்டியிலிருந்தால் கட்டாயம் என் சக்களத்திமார்கள் கொன்று விடுவார்கள். எங்கேயாவது கண்காணாத சீமைக்குக் கொண்டு போய் விடு. வயதான பிறகு அழைத்துக் கொண்டு வந்து இவனுடைய அப்பனிடம் ஒப்புவி. அடையாளத்துக்கு இதைக் காட்டு!" என்று சொல்லி, குழந்தையின் இடது காதுக்குப் பின்னால் முக்கோணம் போல் இருந்த மூன்று மச்சங்களையும் காட்டினாள். தான் இரகசியமாகச் சேர்த்து வைத்திருந்த பணத்தையும் தன் நகைகளையும் கூடப் பெரியண்ணனிடம் கொடுத்து, தான் சொன்னபடி செய்வதாக அவனிடம் சத்தியமும் வாங்கிக் கொண்டாள். இதெல்லாம் அவளுடைய பிறந்த வீட்டில் கூட யாருக்குமே தெரியாது.

பெரியண்ணன் அன்றிரவே குழந்தையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். ரயிலில் ஏறினால் தெரிந்து போய்விடுமென்று கால்நடையாகவே சில நாள் பிரயாணம் செய்து கொண்டு போனான். குழந்தைக்குப் பெரியண்ணனிடம் ஆசை உண்டு என்றாலும், தாயார், பாட்டி முதலியவர்களைப் பிரிந்ததனாலும் ஊர் ஊராய்ப் போனதனாலும் ரொம்பவும் அழுது தவித்துக் கொண்டிருந்தது. பெரியண்ணன் பழனிக்குப் போனபோது, அங்கே கிருத்திகை உற்சவம் பலமாக நடந்து கொண்டிருந்தது. ஏகக் கூட்டம். பெரியண்ணன் எவ்வளவோ நல்லவன் தான்; ஆனால் மதுபானப் பழக்கமுள்ளவன். ஒரு கள்ளுக்கடைக்குப் பக்கத்தில் குழந்தையை விட்டு விட்டுக் கடைக்குள் போனான். திரும்பி வந்து பார்த்தால் குழந்தையைக் காணோம். அலறிப் புடைத்துக் கொண்டு அந்த உற்சவக் கூட்டத்தில் தேடுதேடென்று தேடினான். பிரயோசனப்படவில்லை. உற்சவம் முடிந்த பிறகும் ஒரு மாதம் வரையில் பழனியில் தங்கித் தெருத் தெருவாய்ப் பைத்தியக்காரன்போல் சுற்றி அலைந்து கொண்டிருந்தான். பிரயோசனப்படவில்லை. ஊருக்குத் திரும்பிப் போகவும் மனம் வரவில்லை. ஆகவே, கண்டிக்குப் போய்விட்டான். பலவருஷங் கழித்துத் திரும்பி வந்து கோயமுத்தூர் ஜில்லாவிலேயே பெரிய குடிகாரன் பெயர் வாங்கினான். இப்படிப்பட்ட சமயத்திலேதான் அவன் காங்கிரஸ் தொண்டு செய்து வந்த மகுடபதியைச் சந்தித்தான். முதலில் பரம விரோதியாயிருந்து, கேஸில் தனக்குச் சாதகமாகப் பேசி விடுதலை செய்த பிறகு, அவனுக்கு ரொம்ப வேண்டியவனாகி, மதுவிலக்குப் பிரச்சாரமும் செய்துவந்தான். மகுடபதி ஒரு நாள் தனக்குத் தாய் தகப்பன் இல்லையென்றும், தன்னுடைய வளர்ப்புப் பெற்றோர்கள் பழனி உற்சவக் கூட்டத்தில் தன்னைக் கண்டெடுத்தார்கள் என்றும் சொன்னபோது, பெரியண்ணனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. மகுடபதி நன்றாய்த் தூங்கும் சமயத்தில் அவனுடைய இடது காதை மடித்துப் பார்த்து அடையாளமிருப்பதைத் தெரிந்து கொண்டான். அதைத் தக்க சமயத்தில் வெளியிட வேண்டுமென்று காத்திருந்தான்.

கூனூர் மடத்திலிருந்து மகுடபதி கிளம்பியபோது, பெரியண்ணனுக்கு மனது சமாதானம் ஏற்படவில்லை. கொஞ்ச தூரம் பின்னாலேயே அவனைத் தொடர்ந்து போனான். தக்க சமயத்தில் பங்களாவுக்குள் தோட்டக்காரனை மீறிக் கொண்டு நுழைந்து, உண்மையை வெளியிட்டு மகுடபதியின் உயிரைக் காப்பாற்றியதுடன், கள்ளிப்பட்டிக் கவுண்டரையும் புத்திர ஹத்தி பாவத்திலிருந்து காப்பாற்றினான்.

எல்லாம் கேட்ட பிறகு, "சரி அப்பா! இப்போது எப்படி இருக்கிறார்கள் எல்லோரும், சந்தோஷமாயிருக்கிறார்களா?" என்று பங்கஜம் கேட்டாள்.

"சந்தோஷத்துக்கு என்ன குறைவு? கார்க்கோடக் கவுண்டர் மட்டுந்தான் படுத்த படுக்கையாகிவிட்டார். ஏற்கெனவே, அவருக்குக் கொஞ்சம் பட்ச வாத ரோகம் உண்டாம். இந்த அதிர்ச்சியினால் அது முற்றிவிட்டது. கைகால்கள் கூட அசைக்க முடியாமல் கிடக்கிறார். ஆனாலும் செய்ய வேண்டியதையெல்லாம் செய்து விட்டார். சொத்தையெல்லாம் மகுடபதிக்கே 'உயில்' எழுதி வைத்திருக்கிறார். பையன் இருக்கிறானே, உத்தமமான குணம், உயர்ந்த நோக்கம். பூர்வீகமான சொத்தை மட்டும் தான் வைத்துக்கொண்டு, கள்ளுக்கடையில் வந்த பணத்தை யெல்லாம் தர்மத்துக்குக் கொடுத்து விடுகிறானாம். கூனூர் சச்சிதானந்த மடத்துக்கு நல்ல வேட்டை. நமது சைவ சித்தாந்தக் கழகத்துக்குக் கூட நன்கொடை கேட்டிருக்கிறேன். இருக்கட்டும். பங்கஜம்! அந்தப் பையன் நம்ம வீட்டில் வந்து ஒருநாள் சமையல் பண்ணினானாம். நீதான் அவனுக்குப் பணங் கொடுத்துக் கூனூருக்கு அனுப்பினாயாமே?" என்றார்.

"ஆமாம் அப்பா!"

"பலே கைகாரி நீ! உன் தோழிக்கு உன்னை உடனே பார்க்க வேணுமாம். இன்னும் எத்தனையோ அந்தரங்கம் உன்னிடம் சொல்ல வேண்டியிருக்கிறதாம். நாளைக்கே புறப்பட்டு வரச் சொல்லியிருக்கிறாள்."

"நாளைக்கா அப்பா! இன்றைக்கே புறப்படக் கூடாதா?" என்றாள் பங்கஜம்.

ஓடைக்கரை

சிங்கமேட்டு ஓடைக்கரை இந்த வரலாற்றில் ஒரு முக்கியமான ஸ்தானம் வகிக்கிறது. அந்த அழகான இடத்துக்கு இன்னொரு தடவை போகாமல் கதையை முடிப்பதற்கு மனம் வரவில்லை.

மாலை நாலு மணி இருக்கும். ஓடை ஜலம் நிர்மலமாயிருந்தது. ஆங்காங்கே கரையோரத்தில் உட்கார்ந்திருந்த வெண் கொக்குகள் நீரில் பிரதிபலித்தன. ஓடைக் கரையில் இருபுறமும் வளர்ந்திருந்த கல்யாண முருங்கை மரங்களில் இளந்தளிர்களும் சிவப்புப் பூக்களும் குலுங்கிக் கொண்டிருந்தன. மந்தமாகத் தவழ்ந்து வந்த குளிர்ந்த காற்றில் அவை இலேசாக ஆடின. மரக் கிளைகளில் உட்கார்ந்திருந்த குருவிகள், ஒன்றின் மூக்கை ஒன்று கொத்திக் கலகலவென்று சப்தித்தும், அவ்வப்போது ஜிவ்வென்று பறந்து போய்த் திரும்பி வந்து உட்கார்ந்தும் விளையாடிக் கொண்டிருந்தன.

குருவிகள் குரலுடன் போட்டியிடுவது போல் கலகலவென்று பெண்கள் சிரிக்கும் ஒலி கேட்டது. பங்களாவின் பக்கமிருந்து இரண்டு இளம் பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள். கைகோத்துக் கொண்டு நடந்த அவர்களுடைய முகத்தில் குதூகலம் தாண்டவமாடியது. அவர்கள் வேறு யாருமில்லை, செந்திருவும் பங்கஜமுந்தான்.

பங்கஜத்தின் குரல்தான் ஓங்கியிருந்தது. "எந்த மரமடி அது? அதோ தெரிகிறதே, அதுவா? நீ எப்படிப் படுத்துக் கொண்டிருந்தாய்? கண்ணை எவ்விதம் மூடிக் கொண்டிருந்தாய்? அவன் என்ன செய்தான்? - என்றெல்லாம் நடந்தது போலவே காட்டவேண்டும். நீ என்ன பேசினாய்? அவன் என்ன பதில் சொன்னான் என்பதையெல்லாம் ஒரு வார்த்தை விடாமல் சொல்ல வேண்டும்" என்று பங்கஜம் மூச்சு விடாமல் பேசிக் கொண்டே வந்தாள்.

செந்திரு சிரித்துக் கொண்டே ஓடி, ஒரு மரத்தடிக்கு வந்ததும், "இந்த மரந்தானடி" என்றாள்.

"சரி; நான் தான் அந்தக் காந்திக் குல்லாக்காரன் என்று வைத்துக்கொள். நீ என்ன செய்தாய்? அந்த மாதிரியே செய்து காட்டு!" என்றாள் பங்கஜம்.

செந்திரு தரையில் படுத்துக் கொண்டு கண்ணையும் மூடிக் கொண்டாள்.

அப்போது பங்கஜம், நாடகமேடைக் கதாநாயகனுடைய தோரணையில் செந்திருவின் பக்கத்தில் மண்டியிட்டு உட்கார்ந்து, "என் கண்ணே! கண்மணியே! தாமரை இதழையும், கருவண்டையும், மீனையும், வேலையும் ஒத்த உன் அழகான கண்களைத் திறந்து என்னைப் பாராயோ?" என்று சொல்லிக் கொண்டு சட்டென்று குனிந்து செந்திருவின் கன்னத்தில் முத்தமிட்டாள். குபீரென்று சிரித்துக் கொண்டு செந்திரு எழுந்து உட்கார்ந்தாள்.

பங்கஜம் அவளுடைய கழுத்தைக் கட்டிக் கொண்டு, "அடியே! நிஜமாகச் சொல்! இப்படித்தானே அவன் உண்மையில் செய்தான்? நீ என்னிடம் சொன்னதெல்லாம் பொய் தானே?" என்றாள்.

பதினாறு, பதினேழு வயதுப் பெண்கள் இரண்டு பேர் சேர்ந்தால் அவர்களுடைய பேச்சு, கொஞ்சம் அசட்டுப் பிசட்டு என்றும், தத்துப் பித்து என்றும் இருப்பதில் வியப்பில்லையல்லவா? எனவே, இவர்களும் அம்மாதிரி பேசுவதற்குப் பதினைந்து நிமிஷம் கொடுத்து விடுவோம். ஓடைக்கரையை ஒரு சுற்றுச் சுற்றுவிட்டு வருவோம்.

பதினைந்து நிமிஷம் கழித்து நாம் திரும்பி வந்து பார்க்கும் போது காட்சி ஒருவாறு மாறியிருப்பதைக் காண்கிறோம். அதே இரண்டு பெண்கள் அதே மரத்தடியில்தான் இருக்கிறார்கள். ஆனால் இருவர் முகத்திலும் குதூகலத்துக்குப் பதிலாகச் சோகக் குறி காணப்படுகிறது.

செந்திருவின் கண்களில் ஜலம் ததும்பிக் கொண்டிருக்கிறது. "மறுபடியும் இந்த ஓடைக் கரையில் இவ்வளவு சந்தோஷமாக ஒருநாள் உட்கார்ந்திருப்போம் என்று நான் சொப்பனத்திலும் எண்ணவில்லை, பங்கஜம்!" என்றாள் செந்திரு.

"போனதைப் பற்றி இனிமேல் என்ன? கடவுள் அருளால் எல்லாந்தான் சந்தோஷமாக முடிந்து விட்டதே!" என்றால் பங்கஜம்.

"கடவுள் அருள்தான்; சந்தேகம் என்ன? ஒரு தடவையா? இரண்டு தடவையா? கடைசியில் தான் பாரேன்! பெரியண்ணக் கவுண்டன் இன்னும் ஐந்து நிமிஷம் கழித்து வந்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும்? ஐயோ! நினைப்பதற்கே பயமாயிருக்கிறது" என்று செந்திரு கூறியபோது, அவளுடைய உடம்பு நடுங்கிற்று.

"என்ன ஆகியிருக்கும், சொந்தப் பிள்ளையைத் தகப்பன் சுட்டுக் கொன்றிருப்பான்! எனக்கு என்ன அதிசயம் என்றால், அப்பேர்ப்பட்ட தகப்பனிடத்தில் திடீரென்று பிள்ளைக்கு இவ்வளவு வாஞ்சையும், பக்தியும் எப்படி உண்டாயிற்று என்பதுதான். உலக இயற்கைக்கே மாறாய்த் தோன்றுகிறது எனக்கு."

"கடவுள்தான் அவரைத் தண்டித்து விட்டாரே, பங்கஜம்! இனிமேல் சாகிற வரையில் அவர் படுத்த படுக்கையாய்த் தான் கிடக்க வேண்டுமாம். கை கால் சுவாதீனமே இராதாம். படுக்கையில் எழுந்து உட்கார வேண்டுமானால் இரண்டு பேர் பிடித்துத் தூக்கிவிட வேண்டுமாம். இப்படியாகி விட்ட தகப்பனாரிடம் எந்தப் பிள்ளைக்குத்தான் கோபம் இருக்க முடியும்? அவரையாவது என்னையாவது பார்த்துவிட்டால் போதும், கவுண்டருடையை கண்களில் ஜலம் பெருகிவிடுகிறது. ஏதோ பேசுவதற்கு முயற்சிக்கிறார். வாய் குழறுகிறது. உடனே அழுது விடுகிறார். எனக்கே எல்லாம் மறந்து போய் அவரிடம் பரிதாபமாயிருக்கிறது. பெற்ற பிள்ளைக்கு எப்படி இருக்கும்?"

"ஆமாமடி! நீ கோயமுத்தூருக்கு ஓடி வந்த கதையை அப்புறம் சொல்வேனென்றாயே; சொல்லவே யில்லை, பார்த்தாயா? இப்போது சொல்லிவிடு. நாளைக்குக் கல்யாணம் ஆகிவிட்டால் அப்புறம் உன்னோடு பேசுவதற்கு சமயம் கிடைக்குமா? என்னைத் திரும்பித்தான் பார்ப்பாயா?"

"நாங்கள் ஒன்றும் அப்படிப்பட்டவர்கள் அல்ல"

"நாங்களா? அதற்குள்ளே பாத்யதை கொண்டாடுவதைப் பார்த்தாயா?

"பரிகாசம் இருக்கட்டுமடி! கல்யாணம் ஆகிக் கையில் கங்கணத்துடன் அவர் சத்தியாக்கிரகம் செய்து ஜெயிலுக்குப் போகப் போகிறார்; ஆறு மாதமோ ஒரு வருஷமோ, எப்போது திரும்பி வருவாரோ, தெரியாது."

"கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரி, கடன் வாங்கியும் பட்டினி என்கிற கதைதான் அப்படி அவர் போகும் பக்ஷத்தில், நீ எங்களுடன் இருந்திரு, செந்திரு!"

"அது முடியாதே, அம்மா! அவர் ஜெயிலுக்குப் போனால் நானும் கூட வருவேன் என்று சொன்னேன். 'கூடாது; நீதான் என் தகப்பனாரைப் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்றார். அப்படியே பார்த்துக் கொள்வதாக வாக்களித்து விட்டேன்."

"ஆஹா! தகப்பனாரிடம் தான் என்ன பக்தி! பிள்ளையென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்!..."

"பல நாள் கழித்துக் கிடைத்த அப்பா அல்லவா பங்கஜம்? மேலும் இவர் என்ன சொல்லுகிறார் தெரியுமா? 'பகைவனுக்கு அருள்வாய்' என்று பாரதியார் பாடியிருப்பதன் கருத்து இப்போதுதான் இவருக்கு விளங்குகிறதாம். மஹாத்மா காந்தி போதிக்கும் அஹிம்சா தர்மத்தின் மேன்மையும் இப்போதுதான் நன்றாய்த் தெரிகிறதாம்..."

"அஹிம்ஸையாவது, தர்மமாவது! நல்ல பைத்தியத்தை நீ கட்டிக் கொள்ளப் போகிறாயடி! நீ மட்டும் என்ன இலேசா? ஏண்டி சுட்டி! ரொம்ப நன்றாய் பைத்தியம் வேஷம் போட்டாயாமே! அதோடேயா? யாரோ ஒரு சாமியார் தலையிலே கல்லைத் தூக்கிப் போட்டாயாமே?" என்று பங்கஜம் சொல்லி வரும்போது, செந்திருவின் கண்களிலே ஜலம் ததும்பிற்று.

"அசடே! இதென்ன? எல்லாம் முடிந்த பிறகு இப்போதென்ன கண்ணீர்?" என்றாள் பங்கஜம்.

"உனக்கு வேடிக்கையாக இருக்கிறதடி அம்மா! ஐயோ! அந்த மலை பங்களாவில் நான் பட்ட கஷ்டத்தை நினைத்தால்..."

"போடி போ! ஜாலக்காரி! நீ பட்ட கஷ்டங்களைப் போல் நூறு மடங்கு கஷ்டங்களை நான் அனுபவிக்கத் தயார் தெரியுமா?..." என்று பங்கஜம் கூறி, செந்திருவின் காதண்டை வாயை வைத்து, மெதுவாக, "உனக்குக் கிடைத்தது போல், ஒரு காதலன் எனக்குக் கிடைப்பதாய் இருந்தால்!" என்றாள்.

செந்திருவின் முகம் மலர்ந்தது. அவள் பங்கஜத்தின் கன்னத்தைக் கிள்ளினாள்.

அச்சமயத்தில் ஏதோ சத்தம் கேட்க இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். சற்று தூரத்தில் மகுடபதி ஓடையில் இறங்கித் தண்ணீரில் கையால் சலசலவென்று சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்தான்.

உடனே, பங்கஜம், "கிள்ளாதேடி! இதோ நான் போகிறேன்! இதோ நான் போகிறேன்! 'அவர் வந்து விட்டார், நீ போய்த் தொலை' என்று மரியாதையாய்ச் சொல்லுவதுதானே?" என்று எழுந்திருந்து போகத் தொடங்கினாள். வழியில் ஓடை அருகில் நின்று மகுடபதியைப் பார்த்து, "ஓய் தவசுப்பிள்ளை! முன்மாதிரியெல்லம் இனிமேல் ஏய்க்கமுடியாதே. நன்றாய்ச் சமையல் செய்ய வேணும். இல்லாவிட்டால் செந்திரு உம்மை லேசில் விடமாட்டாள்" என்றாள்.

மகுடபதி அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.

"அதோ பார்த்தீரா? அங்கே ஒரு பைத்தியம் இருக்கிறதே ஜாக்கிரதை! ஒரே கூச்சல் போடும். அப்புறம் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டாலும் போடும்! கையைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு வாயை இறுக்கி மூடிவிடும்!" என்று சொல்லிவிட்டு விரைவாக பங்களாவை நோக்கிச் சென்றாள்.

அவள் மரங்களின் பின்னால் மறையும் வரையில் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, மகுடபதி செந்திரு இருந்த இடத்தை நோக்கி நடந்தான்.

செந்திரு அவன் வருவதைக் கடைக் கண்ணால் பார்த்தாள். உடனே சட்டென்று, முன்னைப் போல் தரையில் படுத்துக் கொண்டு கண்களையும் மூடிக் கொண்டாள். அவளுடைய இதழ்களில் வெட்கத்துடன் கூடிய புன்னகை மலர்ந்தது; அவளுடைய அழகிய கன்னங்களில் குழி விழுந்தது.

அந்த மரத்தின் மேலே இரண்டு தூக்கணாங் குருவிகள் உட்கார்ந்திருந்தன. அவை தலையைச் சாய்த்துச் சிறிது நேரம் கீழே உற்றுப் பார்த்தன. பிறகு ஒன்றையொன்று பார்த்து பறவைகளின் பாஷையில் கலகலவென்று சிரித்தன.