manikantanukka podum

மணிகண்டனுக்குப் போதும்

மணிகண்டனுடைய தாயத்து அவன் எப்போது மகிழ்ச்சியாக இருக்கிறான், எப்போது வருத்தமாக இருக்கிறான், உடல் நலத்தோடு இருக்கிறானா இல்லையா என்பதையெல்லாம் சொல்லிவிடும். எப்போது சாப்பிடவேண்டும், எப்போது தூங்கவேண்டும் என்பதைச் சொல்வது, அவன் வீட்டுப்பாடத்தைச் செய்வதற்கு உதவி செய்வது, அவன் நலமாக இல்லை என்பதை அம்மாவிடம் தெரியப்படுத்துவது போன்ற பல வேலைகளை அது செய்யும். இது மாயாஜாலமா, இல்லை அறிவியலா? மணிகண்டனும் அவன் அம்மாவும் கிராமத்திலிருந்து ஒரு நவீன நகரத்துக்கு போகும்போது என்ன நடக்கிறதென்று பாருங்கள்.

- S Krishnan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மணிகண்டன் தன்னுடைய ஸ்கூல் பையை காபி டேபிளில் வைத்துவிட்டு முனகினான். அவனுடைய தோள்கள் வலித்தன, தலை அதைவிட அதிகமாக வலித்தது. அது ஒரு நீளமான நாள். அவன் கழுத்தைச் சுற்றியிருந்த தாயத்து ஒரு முறை மின்னியது.

"மணிகண்டன், உன் ஸ்கூல் பையை அதனுடைய இடத்தில் வை" என்றது காபி டேபிள்."ஆமா மணிகண்டன்" என்று ஒத்துப்பாடியது ஸ்கூல் பை. "என்னுடைய இடம் இது இல்லை. உன் அறையில் சரியான இடத்தில் என்னைக் கொண்டுபோய் வைப்பது நல்லது."

விவாதம் செய்வது வீண் வேலை என்பது மணிக்குத் தெரியும். ஸ்கூல் பையை எடுத்துக் கொண்டு களைப்புடன் தன் அறையை நோக்கி நடந்தான். ஸ்கூல் பையை மேஜையில் வைத்து, தன் ஷூவை கழற்றி எறிந்துவிட்டு படுக்கையில் படுத்தான். மீண்டும் முனகினான். "உனக்கு உடம்பு சரியில்லையா, மணிகண்டன்?" என்று கேட்டது அறை.

"நான் நல்லாத்தான் இருக்கேன். என்னைத் தனியா விடு."

மணி தாயத்தைக் கழுத்தின் பின்புறமாகத் தள்ளினான். அதை குப்பைத் தொட்டியில் போட வேண்டும்போல் இருந்தது அவனுக்கு. வீட்டிலுள்ள பொருட்கள் அவன்மீது ஒற்று வேலை பார்த்தாலும், அவற்றால் அவனுடன் பேசமுடியாது.

"நீ இரண்டு தடவை முனகினாயே! உனக்குத் தலை வலிக்கிறதா மணிகண்டன்?" என்று அறை கம்மலான குரலில் கேட்டது.

"என்னைத் தனியாக விட்டுவிடு" என்ற மணி, கொஞ்சம் இடைவெளி விட்டு, "ஆமாம்" என்றான்.

"ப்ச், ப்ச்! இதைக் கேட்க வருத்தமாக இருக்கிறது மணிகண்டன்" என்று அந்த அறை அனுதாபத்துடன் சொன்னது. "உன் அம்மாவிடம் இதைச் சொல்கிறேன். உனக்குப் பசிக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் தலை வலிக்கிறது. ஒரு கப் டீயும் பக்கோடாவும் சாப்பிடுகிறாயா?"

டீயும் பக்கோடாவும் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான் மணி. அதேசமயம், அம்மாவிடம் அந்த அறை தனக்கு தலைவலி என்பதைச் சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் நினைத்தான். அம்மா கவலைப்படுவாள். "சரி."

"நல்லது. நான் சமையலறையிடம் சொல்லிவிட்டேன். மணிகண்டன், உன் ஷுக்களை ஷு அலமாரியில் வை.""ஆமாம்" என்றது ஷூ அலமாரி. "என்னிடம் நிறைய இடம் இருக்கிறது, காத்துக்கொண்டிருக்கிறேன்."மணிக்கு எழுந்திருக்கவேண்டும் என்று தெரியும். ஆனால் அவன் அதை விரும்பவில்லை. இன்னும் கொஞ்சம் தூங்கலாம் என்று நினைத்தான். அவனுக்கு ரொம்ப களைப்பாக இருந்தது. "காத்துக்கொண்டிருக்கிறேன்" என்றது ஷூ அலமாரி.மணி தன் கண்களை மூடி ஆனந்தபுரத்தை நினைத்தான். அவன் அம்மாவுக்கு அது ஒரு கிராமம். ஆனால் மணிக்கு அது வீடு.

உயரமான பனை மரங்கள் அழகாக அசைந்தாடுவதையும் பரந்து விரிந்த இளஞ்சிவப்பு - நீல நிற வானத்தையும் நினைத்துப் பார்த்தான்.

காலையில் மெலிதாக வீசும் காற்று, சமையலறையில் கரியடுப்பில் சமைக்கப்படும் பராத்தாக்களின் அருமையான வாசனையைச் சுமந்து வரும். அங்கே குளிர்கால மாதங்கள்தான் சிறந்தவை. அங்கு வீசும் காற்றுக்கு ஸ்மார்ட் நகரக் கட்டடங்களின் குளிரூட்டப்பட்ட காற்று எந்த விதத்திலும் ஈடாகாது.

இல்லை, பொறுங்கள், மழைக்காலம்தான் சிறந்தது! பெரியார் ஆற்றில் கனமான மழைத்துளிகள் க்ளக் க்ளக் என்று விழுவதைப் பார்க்க அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்.

அவன் ஆற்றங்கரையிலிருந்து அதையெல்லாம் எவ்வளவு அனுபவித்து இருக்கிறான். சத்தமில்லாமல், மிகவும் அமைதியாக. அப்போது இருந்ததைப் போல எல்லாம் மீண்டும் திரும்பிவிட்டால்...

"காத்திருக்கிறேன்" என்றது ஷூ ராக்.மணி ஒரு பெருமூச்சு விட்டபடி எழுந்து உட்கார்ந்தான். உதவி செய்யக்கூடிய குறிப்புகளைப் பெறுவதில் அவனுக்கு ஒரு கஷ்டமுமில்லை. ஆனாலும் இது ரொம்ப அதிகம். ஏதோ சிறையில் இருப்பதைப் போல் அவனுக்குத் தோன்றியது. ஆனால் அதைப்பற்றி யாருமே, அம்மா கூட, கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மணி ஷுக்களை ஷூ ராக்கில் வைத்துவிட்டு சமையலறையை நோக்கி நடந்தான்.

பக்கோடாக்களை அவன்தான் சூடாக்கவேண்டும். ஆனால், ஃபுட்-ஜீனி கொஞ்சம் டீ தயாரித்து வைத்திருந்தது. ஒரு இயந்திரம் தயாரித்தது போலவே அந்த டீயின் சுவை இருந்தது."இந்த டீ உனக்கு திருப்தி அளித்ததா, மணிகண்டன்?" என்று கேட்டது ஃபுட்-ஜீனி."பசு மூத்திரம் போல இருந்தது."

"நன்றி."

மணியின் தாயத்து சத்தமிட்டது. அது அவனுடைய அம்மா. அவன் நலமாக இருக்கிறானா என்று கேட்டார் அவன் அம்மா. "உன் தலைவலி எப்படி இருக்கிறது, கண்ணா?"அவரது பாசமிக்க குரலைக் கேட்டவுடன் மணி தனக்காக பரிதாபப்பட்டுக் கொண்டான். "தலைவலி தேவலாம், அம்மா. வேலை எப்படி இருக்கிறது?" "மிகவும் நன்றாக இருக்கிறது. இது என் பழைய ஆனந்தபுரம் வேலையைப் போல இல்லை, உன்னுடைய நாள் எப்படிப் போனது கண்ணா? " "அருமையாக." அவன் அம்மா கடுமையாக உழைத்தார். நீண்ட நேரம் வேலை செய்தார். அவனைப் பற்றி ரொம்ப கவலைப்பட்டார். அவனை நன்கு கவனித்துக் கொண்டார். அவர்தான் அவனுக்கு தாய், தந்தை மற்றும் இந்த உலகில் அவனுக்கு என்று இருக்கும் சொந்தம் மொத்தமும். அவனுக்கு உண்மையைச் சொல்ல மனம் வரவில்லை.

"இந்த நாள் அருமையாக இருந்தது." "நிஜமாகவா மணி? உன் ஸ்கூல் பை, நீ ப்ரின்சிபலிடம் போனதாகச் சொன்னது. அது எதற்காக ?""ஒன்றுமில்லை.""மணி?""ஒன்றுமில்லை அம்மா! நீ ஸ்கூல் பையிடமே கேட்டுக்கொள். அதற்குத்தான் எல்லாம் தெரியுமே.""மணி, என்ன நடந்தது? இங்கே பார், நீ கண்ணாடியிடம் போ. நான் உன்னைப் பார்க்கவேண்டும். பிரச்சினை என்னவாக இருந்தாலும் நாம் அதைத் தீர்க்கமுடியும்."

"இல்லை, நம்மால் தீர்க்க முடியாது!" மணி கண்ணீர் வருவதை உணர்ந்தான்.

அவன் அழுகையை அடக்க முயற்சி செய்தாலும் பெரியாரில் பெய்யும் மழையைப் போல அது வந்துகொண்டே இருந்தது. அந்த வீடு அவன் அம்மாவிடம் அவன் அழுகிறான் என்று சொல்லிவிடும் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. அவன் செய்வது எல்லாமே கவனிக்கப்பட்டு, சொல்லப்பட்டு வந்தது. அவை அவனுடைய நன்மைக்குத்தான் என்றும் அவன் அம்மாவுக்கு அவனை மிகவும் பிடிக்கும் என்றும் அவனுக்குத் தெரியும்.

ஆனால் சில சமயங்களில், அவன் சில விஷயங்களை விரும்பினான்.

அவன் தாயத்தைச் சுற்றி தன் விரல்களை இறுக்கப்பிடித்து அந்த சங்கிலியை வேகமாக இழுத்தான். அது அறுந்து விழுந்தது. மணி தாயத்தை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, அது கத்துவதைப் பொருட்படுத்தாமல், அபார்ட்மெண்டை விட்டு வெளியே ஓடினான்.எவ்வளவு தூரம் ஓடினோம், எங்கு ஓடினோம், எப்படித் தொலைந்து போனோம் என்பதெல்லாம் மணிக்குத் தெரியவில்லை.

தாயத்தின் துணை இல்லாமல் அவன் எங்கு போகிறான் என்பதை அவனால் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அந்த நகரத்தில் இருந்த நவீன கருவிகள் அவன் தொலைந்து விட்டான் என்பதை ஊகித்து சரியான அதிகாரிகளிடம் அதைத் தெரிவித்தன. அவனைக் கூட்டிகொண்டு வந்த போலீஸ்காரரிடம் அவன் அம்மா நன்றி தெரிவித்த பிறகு, மணி அவரிடம் இருந்து தாயத்தை வாங்கினான். அவனுக்கு வெட்கமாகவும் அதேசமயம் திரும்பி வந்ததால் மகிழ்ச்சியாகவும் இருந்தது. "நான் செட்டிங்கை கொஞ்சம் மாத்தி இருக்கேன்" என்றார் அவன் அம்மா. "இந்த வீடு உனக்கு இன்னும் கொஞ்சம் சுதந்திரத்தைக் கொடுக்கும். ஆனால் எல்லாம் உன் நன்மைக்காகவே, மணி!""எனக்குத் தெரியும்" என்று முணுமுணுத்தான் மணி."எப்படி இருந்தது, உன்னுடைய இந்த சாகசம்?"

மணியின் உடல் சிலிர்த்தது. தெருக்கள் முழுவதும் மக்கள் நிறைந்திருந்தாலும் அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் மாறுபட்டவர்களாக இருந்தனர். எல்லாரும் அந்நியர்களாக இருந்தனர். தாயத்து இருக்கும்போது தெருக்களில் அவனுக்குத் தெரிந்தவர்களே நிறைந்திருந்தனர். அவர்களது பெயர்கள், அவர்களுக்குப் பிடித்த இசை, அவர்களுடைய நண்பர்கள் யார் யார் போன்ற வியப்பூட்டும் விஷயங்கள் அவனுக்குத் தெரிந்திருந்தது.

ஆனால் தாயத்து இல்லாமல், தெருவைக் கடப்பது போன்ற சின்ன விஷயங்கள் கூட மிகவும் கஷ்டமாக இருந்தது.

“மணிகண்டன் இப்போது நீ தெருவைக் கடக்கலாம்” என்று

சொல்லக்கூடிய குரல் ஏதும் இல்லை. அவனைத் தெரிந்தவர் யாரும் அங்கே இல்லை.

’மிஷன் மௌட்’ சினிமா போஸ்டரை தாண்டியபோது, அந்தப் படத்தின் ஹீரோ விக்ரம் செவன் "ஹாய், உனக்கு ஆக்சன் படங்கள் பிடிக்குமா?" என்று கேட்டார்.

அவனிடம் தாயத்து இருந்திருந்தால்: "ஹே மணிகண்டன்! உன்னை மறுபடி பார்ப்பதில் சந்தோஷம், வா பேசலாம்" என்று சொல்லியிருப்பார்.

தாயத்து இல்லாமல் ஒவ்வொரு பொருளும் கல்லைப் போல முட்டாளாக இருந்தன.

"நினைத்தேன்" என்று ஒரு புன்சிரிப்புடன் சொன்னார் அவன் அம்மா. "மணி, ஆனாலும் தாயத்து இல்லாமல் நீ வீட்டை விட்டு வெளியே போயிருக்கக்கூடாது, சரியா? நாங்கள் மிகவும் கவலைப்பட்டுப் போனோம்!" "விதிகளை மீறியதற்காக சாரி, அம்மா.""அது அவ்வளவு மோசமான விஷயமில்லை, கண்ணா! ஆனால் இப்போது நீ பெரிய பையனாகிவிட்டாய். முதிர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும். இங்கு நாம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம் இல்லையா?"மணி ஆனந்தபுரத்தைப் பற்றி நினைத்தான். ஆனந்தபுரத்தில் தாயத்துக்கு வேலையில்லை. அது அவ்வளவு நல்ல விஷயமில்லை போலும். அவன் தலையாட்டினான். அவன் அம்மா ரொம்ப இனிமையானவர். அவனுக்கு தன் கையாலேயே- அதாவது பெரும்பாலும் தன் கையாலேயே டின்னர் தயாரித்தார். ஃபுட்-ஜீனி கொஞ்சம் உதவி செய்தது.

அவன் பாலைக் குடிக்கும்போது அவர் ஒரு கதையைப் படித்துக் காட்டினார். பிறகு  அவனைப்  படுக்கையில் போட்டு, குட் நைட் என்று சொல்லி முத்தமிட்டு, அவருடைய தாயத்தால் அவன் தாயத்தை தொட்டார். அவன் அம்மா மிகவும் களைப்படைந்திருக்கிறார்   என்று அவனுக்குத் தெரிந்தது. "குட் நைட், அம்மா!""குட் நைட், கண்ணா!"

"குட் நைட், மணிகண்டன்! குட் நைட், அம்மா!"

அந்த வீடு மெல்லப் பேசியது.

"நன்றாகத் தூங்குங்கள். உங்களுக்கு எந்தத் தொல்லையும் இல்லாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்."

பொருட்களின் இணையம்

உங்களுக்கு நாளை தேர்வு இருக்கிறது என்று அலாரம் கடிகாரத்திற்குத் தெரியுமா? காலை சீக்கிரம் எழுந்து மறுபடி ஒருமுறை படிப்பதற்கு நீங்கள் அலாரம் வைக்கவேண்டும் என்பதை அது உங்களுக்கு நினைவுபடுத்துமா?

நீங்கள் எங்கேயாவது செல்லும்போது வழி தவறிவிட்டால் உங்கள் ஷூ படிப்படியாக வழி காட்டுமா? நிச்சயமாக இதெல்லாம் செய்யாது.

இன்று நம்மைச் சுற்றியுள்ள பெரும்பாலான பொருட்கள் வெறும் பொருட்கள்தான். அவைகளுக்கு உங்களைப் பற்றியோ அல்லது வீட்டிலுள்ள பொருட்களைப் பற்றியோ தெரியாது. கடிகாரம் ஒரு கடிகாரம்தான். ரேடியோ ஒரு ரேடியோதான். கடிகாரத்துக்கு ரேடியோ என்றால் என்ன என்றும் ரேடியோவுக்கு கடிகாரம் என்றால் என்னவென்றும் தெரியாது. அவை உங்களுடனோ மற்ற மனிதர்களுடனோ அல்லது மற்ற பொருட்களுடனோ தொடர்பு கொண்டது இல்லை.

ஆனால், இவை அனைத்தும் மாறப் போகிறது.

சீக்கிரமே, மனிதனால் செய்யப்பட்ட எல்லாப் பொருட்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையாக மாறப்போகின்றன. அவற்றைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது அவற்றுக்குத் தெரிய ஆரம்பிக்கும். அவை புத்திக்கூர்மையுடன் இயங்கும். அவைகளுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து உங்களுடைய தேவைகளை  சிறந்த முறையில் கவனிக்கும்.

இவ்வாறு பொருட்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தப்பட்டு, அவைகளின் இடையே தகவல் பரிமாற்றம் நிகழும்போது, அதாவது கண்ணுக்குத் தெரியாத ஒரு டெலிபோன் வலைப்பின்னலைப் போல தகவல்கள் பரிமாறப்படும்போது, அதைபொருட்களின் இணையம் என்கிறோம்.

நீங்கள் எங்கு வசிக்க விரும்புவீர்கள்? ஒரு நவீன நகரத்திலா அல்லது ஆனந்தபுரத்திலா? ஏன்?

அவை எல்லாம் பேச ஆரம்பித்தால் எப்படி இருக்கும் ?

உங்கள் வீட்டிலோ அல்லது வகுப்பறையிலோ உள்ள பொருட்களைக் கணக்கிடுங்கள் (கதவு, நாற்காலி, கடிகாரம், ரேடியோ, புத்தகங்கள், போன்றவை). அந்த எண்ணிக்கை உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கிறதா? அவை எல்லாம் பார்க்க, கேட்க, பேச முடிவதாகக் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கை எப்படி மாறிவிடும்?