Manikka Gangai

மாணிக்கக் கங்கை

இந்தியாவுக்குச் சுதந்தரம் வந்திராத நாட்கள். நான் எழுத்துலகில் அடி வைப்பதற்கு முன்னோடியாகத் தோன்றியதை எல்லாம் எழுதிப் பார்த்துக் கொண்டிருந்த காலம். உதகை நகரில், எங்கள் நண்பர் ஒருவர் வீட்டு வாயிலில் தான் நான் முதன் முதலாக ஒரு தேயிலைத் தோட்டத் தொழிலாளியைக் கண்டேன்.

- ராஜம் கிருஷ்ணன்

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

பொருளடக்கம்

கதை பிறந்த கதை

இந்தியாவுக்குச் சுதந்தரம் வந்திராத நாட்கள். நான் எழுத்துலகில் அடி வைப்பதற்கு முன்னோடியாகத் தோன்றியதை எல்லாம் எழுதிப் பார்த்துக் கொண்டிருந்த காலம். உதகை நகரில், எங்கள் நண்பர் ஒருவர் வீட்டு வாயிலில் தான் நான் முதன் முதலாக ஒரு தேயிலைத் தோட்டத் தொழிலாளியைக் கண்டேன்.

ஆங்கிலேயர் ஆட்சி புரிந்திருந்த அந்நாளைய உதகை, திருச்சி மாவட்டத்தின் எளிய கிராம மொன்றில் பிறந்து வளர்ந்திருந்த எனக்கு முற்றிலும் அந்நியச் சூழலாக இருந்தது என்றால் தவறில்லை. மரம் வெட்டும் ஒரு தொழிலாளியும் கூட, நீண்ட கால் சட்டை, மேல்சட்டை, கோட்டு, தொப்பி அல்லது தலைப்பா அணிந்திருந்தான். வேட்டி சட்டை போட்ட எளிய மனிதரையே நான் கண்டிருக்கவில்லை. அது குளிர் ஊர் என்ற கருத்தை விட, வாழ்க்கைத் தரத்தில் நாகரிகமடைந்த மேலான மக்கள் நிறைந்த ஊர் என்றே, எனது அந்தப் பதினைந்து, பதினாறு வயசு உள்ளத்தில் பதிந்தது. அத்தகைய நிலையில், நான் குறிப்பிட்ட நண்பர் வீட்டில் அவனைக் கண்டேன். எனக்குத் திக்கென்று தூக்கிவாரிப் போட்டாற் போலிருந்தது.

கூழை பாய்ந்த உருவத்தினனான அவன், முழங்காலுக்கு மேலேயே முடிந்து விடும் ஓர் அழுக்குத் துணிக் கச்சை அணிந்து, மேலே பெயருக்கு அதே அழுக்கில் ஒரு கந்தற் சுருணைச் சட்டை போட்டிருந்தான். எண்ணற்ற சுருக்கங்கள் ஆழக் கீறிவிட்ட முகம். ஏதோ ஒரு பழைய சீலைக்கந்தல் பெயருக்குத் தலைப்பாகையாக இருந்தது. முடிக்கருமை, அவன் வயசை நாற்பதுக்குள் என்று வரையறை செய்தது. நரம்பெடுத்த முடிச்சுக் கால்களில், வெற்றுப் பாதம் வெடிப்பும் கணிசமான தேய்மானமும் உண்டென்று விளக்கியது.

“யார்...?” என்றேன் சற்றே திகைத்து.

அவன் கூடலூருக்கருகே எங்கோ ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிழைக்கும் தொழிலாளி. இங்கே வீட்டுக்காரருக்குத் தோட்டத் துரையிடம் இருந்து செய்தி கொண்டு முப்பது மைலுக்கு மேல் ஓடி வந்திருக்கிறான்.

“ஏன் பஸ் இல்லையா? பஸ்ஸில் ஏன் வரவில்லை?”

வரலாம் தான். ஆனால், ஆறணாவோ, எட்டணாவோ, மிச்சம் பிடிக்க முடியாதே? எத்தனையோ ஆண்டுகளாகி விட்டன. ஆனால் சோவியத் தோட்டத் தொழிலாளி என்று என்னுள் அந்நாளில் பதிந்த உருவம், இன்றும் அப்படியே நினைத்தால் கண்முன் தெரிகிறது.

தேயிலைத் தோட்டங்களில் பண்புரிபவர்களின் பணி, அல்லது வாழ்க்கை பற்றிய அவலமான செய்திகளெல்லாம் எனக்குப் பின்னே தான் அறியக் கிடைத்தன. அந்த ஆரம்ப நாட்களில் கற்பனையாகவே சில சிறுகதைகள் புனைந்ததுண்டு. ஆனால் அவை ஒன்றும் அச்சேறவில்லை.

தோட்டத் தொழிலாளிகளின் வாழ்க்கையைக் கண்டு, எனது எழுத்தில் உருவாக்க வேண்டும் என்றதோர் ஆவல், என்னுள் நீறு பூத்த நெருப்பாக அந்நாளிலேயே முகிழ்த்திருந்தது எனலாம். பின்னால் பல ஆண்டுகளில் நான் நீலகிரிச் சூழலில் ஒன்றி வாழ்ந்து, காடு மலைகளெல்லாம் சுற்றியிருக்கிறேன். தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகள் எனக்குப் பழகிப் போயின. என்றாலும் எனது அந்த ஆவல் நிறைவேறும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. நீலகிரியை விட்டு வந்த பிறகும் கூட, ஒரு தடவை அங்கே சென்று தொழிலாளர் வாழ்க்கையைக் கண்டறிய முயன்றேன். பயனில்லை.

1977ம் ஆண்டில், மதுரையில் உள்ள ஒரு கல்லூரி விழாவில் பங்கேற்கச் சென்றிருந்தேன். அப்போது, இலங்கையில் இருந்து அங்கு கல்வி பயில வந்த மாணவர், ஏழெட்டுப் பேர் என்னைச் சந்திக்க வந்து ஆர்வத்துடன் பல விஷயங்களையும் பேசினார்கள். ஈழத் தமிழர் பிரச்னைகளைக் குறிப்பாக எடுத்துரைத்தார்கள். நான் இலங்கைக்கு வரவேண்டும் என்றும், எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன், பிரச்னை தொடர்பான பிரசுரங்கள், மற்றும் விவரங்களடங்கிய காகிதங்களையும் என்னிடம் கொடுத்தார்கள். அப்போது நான் தோட்டத் தொழிலாளர் நிலை, சிரிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம், மற்றும் குடியுரிமை மறுக்கப்படும் பிரச்னை ஆகிய எல்லா விவரங்களையும் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தேயிலைத் தோட்டத் தொழிலாளர் நிலை குறித்து நாவல் எழுத ஆர்வம் இருப்பதையும் கூறினேன். அவர்கள் உடனே மனமுவந்து, நான் இலங்கைக்கு அவசியம் வர வேண்டும் என்றும், மலையகத் தொழிலாளரிடையே தங்கிச் செய்திகள் அறிய அவர்கள் உதவுவார்கள் என்றும் கூறினார்கள். இந்தச் சந்திப்புக்கு முன், எனக்கு இலங்கையில் இருந்து வெளியாகும் இலக்கியங்கள் அதிகம் படித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கவில்லை. இதற்குப் பிறகு பல நூல்களை இலங்கையிலிருந்து நண்பர்கள் பெற்றுத் தந்தார்கள். திரு.டொமினிக் ஜீவா, டானியல், யோகநாதன், தெளிவத்தை ஜோசஃப், செங்கை ஆழியான், போன்ற பல எழுத்தாளரின் படைப்புக்கள், வீரகேசரி பிரசுரங்கள் எல்லாம் எனக்கு இலங்கை வாழ் தமிழ் மக்களின் பிரச்னைகளை, யதார்த்த வாழ்வின் சிக்கல்களைப் பரிச்சயம் செய்து தந்தன. தெளிவத்தை ஜோசந்ப் அவர்களின் மலையகத் தொழிலாளிகளின் வாழ்க்கையைப் படம் பிடிக்கும் சில கதைகள் அறுபதுகளில் கலைமகளில் வெளிவந்திருக்கின்றன. எண்பது தொடக்கத்தில் இலண்டனில் வாழும் திருமதி ராஜேசுவரி பாலசுப்ரமணியனின் ‘ஒரு கோடை விடுமுறை’ என்ற நாவல், வெளியான சில நாட்களிலேயே எனக்குக் கிடைத்தது. அது என்னைப் பெரிதும் கவர்ந்தது. பிரச்னையின் தீவிரத்தைப் பாதிப்போடு உணர்த்தியது எனலாம்.

இந்த நிலையில் 1983 பிப்ரவரி - மார்ச்சில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், பாரதி நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு, இலங்கைக்கு அழைத்த எழுத்தாளரிடையே நானும் இடம் பெற்றிருந்தேன். அப்போது அங்கு அரசியல் சமூக நிலைமை மிக நெருக்கடியாக இருந்தது. எங்களுக்கு விசா கிடைப்பதே கடினமாக இருந்தது.

நான் அந்த வாய்ப்பை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ள முயன்றாலும், நான் எண்ணியிருந்தது நிறைவேறவில்லை. மலையகத் தமிழர், வீடற்ற நாடற்ற நிலையில் இடம் பெயர்ந்து, கிளிநொச்சிப் பகுதியில் குடியேறியிருந்தனர். சாலையிலே செல்லும் போது, அவர்கள் குடியிருப்பைக் காட்டினார்கள் நண்பர்கள். ஆனால், இறங்கிச் செல்லவோ, அவர்களைப் பார்த்துப் பேசவோ நேரமில்லை என்று போக்குச் சொல்லி, நண்பர்களே என்னைத் தடுத்து விட்டார்கள்.

மேலும் கண்டியில் எனக்குக் கிடைத்திருந்த சிறிது நேர ஓய்வை, நான் லயங்களுக்குச் சென்று தொழிலாளர் குடும்பத்தினரைக் காணும் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளப் பெரிதும் விரும்பினேன். அதுவும் சாலையிலிருந்து இறங்காத நிலையில் வெறுமே காண்பதுடன் திருப்தி கொள்ள வேண்டியதாயிற்று. தேசீய மயமாக்கப்பட்ட தோட்டம் ஒன்றின் மேலாளர் ஒருவரும், மற்றவர்களும் (தமிழர்கள்) என்னை, “லயங்களுக்குள் நீங்கள் செல்ல அனுமதி கிடைக்காது. மீறினால் வீணான தொந்திரவுக்குள்ளாவீர்கள்” என்று எச்சரித்தார்கள். மேலாளர் பங்களாவில் இருந்து திரும்ப வேண்டியதாயிற்று.

ஆனால் நண்பர்கள், மீண்டும் என்னை ஜூலையில் வரும் படியும், தக்க உதவிகளைச் செய்வதாகவும் வாக்களித்தார்கள்.

லயன்களுக்குச் செல்ல முடியவில்லையே என்ற ஏமாற்றம் சோர்வாக இருந்தது. கண்டியில் (அந்நாள் தைப்பூசம் என்று நினைவு) கண்ணகியம்மன் கோயிலிலும், பூங்காவிலும் ‘இவர்கள் தோட்டத் தொழிலாளர் குடும்பத்தினர்’ என்று முத்திரை குத்தினாற் போன்று தென்பட்ட சில தமிழரைப் பார்த்து, பெண்களிடம் சில வார்த்தைகள் பேசியதுடன் நான் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டேன்.

இலங்கையில் தங்கியிருந்த அந்த இருவார காலத்தில், திரு.டொமினிக் ஜீவா, கவிஞர் முருகையன், (பாரதியின் வாழ்க்கையில் இருந்து சில நிகழ்ச்சிகளை அற்புதமான நாடகமாக்கி அளித்தவர்) இளைஞர் முருகபூபதி ஆகியோர், எங்களுடனேயே மாறி மாறிப் பயணம் செய்தும், போகுமிடங்களிலெல்லாம் பல எழுத்தாளப் பெருமக்களை அளவளாவச் செய்தும் பேரன்பைக் காட்டினார்கள்.

தங்கிய காலம், கூட்டங்கள், பேச்சு, பல்வேறு பிரச்னைகளில் புகுந்து உரையாடுதல் என்று நீண்ட போது, காலம் காலமாகப் பழகிவிட்ட நெருக்கத்தையும் அன்பையும் சோதர உணர்வையும் அழியா நினைவுகளில் பதிந்து விட்டனர்.

காலம் சென்ற தானியல் அவர்கள், தம் வீட்டில் எனக்கு விருந்தளிக்கும் வாய்ப்பாக, பல எழுத்தாள நண்பர்கள், பேராசிரியர்கள் ஆகியோருடன் இருந்து அளவளாவ உதவியதை எப்படி மறக்க முடியும்? தெளிவத்தை ஜோசஃபைப் பற்றிப் பல நாட்கள் எண்ணிப் பார்த்ததுண்டு. 1968-ம் ஆண்டு இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக்குச் சென்னைக்கு வருகை தந்த நிலரிடம், நான் அவரைப் பற்றிக் குறிப்பிட்டு விசாரித்தேன். அவர்கள் ஆச்சரியமும் திகைப்புமாக, ‘உங்களுக்கு அவரை எப்படிப் பழக்கம்’ என்று கேட்டார்கள். அவர் நேரில் வந்து, தமது சிறுகதைத் தொகுப்பொன்றை அளித்த போது, நான் அடைந்த மகிழ்ச்சி சொல்லத் தரமன்று. எங்கெங்கோ மூலைகளிலிருந்து எத்துணை இதயங்கள், அன்பு மொழிகளைத் தாங்கி வந்தன! எத்தனை கன்னி முயற்சிகள்! துண்டுப் பிரசுரங்கள்! நூல்கள்! சஞ்சிகைகள்! அத்தனையும் பெரும் புதையலாக இருந்தன. கொழும்பில், நண்பர் திரு.ரங்கநாதன் அவர்கள் தம் வீட்டில், நான் வேலுப்பிள்ளை அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். தோட்டத் தொழிலாளருடன் தம் பணி முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்ட அவர் ‘வீடற்றவர்’ ‘Bonded Labour' என்ற அருமையான நூல்களைத் தந்தவர்.

“நீங்கள் மீண்டும் ஜூலையில் வாருங்கள்!” என்று எல்லா நண்பர்களும் பிரியா விடை தந்தார்கள்.

ஆனால் ஜூலை 83 - அந்த மாதமே இலங்கை வாழ் தமிழரின் வரலாற்றில் மட்டுமல்லாமல், நாகரிகமடைந்ததாகச் சொல்லப்படும் மனிதகுல வரலாற்றிலேயே வெட்கப்படும் வகையில் மிருக வெறியிலும் கீழான வெறிச்செயல்களுக்கு அப்பாவி மக்களைப் பலி கொண்ட நாட்களைக் கொண்ட கரிய மாசமாக, வன்முறைச் சம்பவங்கள் அடுத்தடுத்து பேயாட்சி செய்ய முடிசூட்டு வைபவம் செய்து கொண்ட மாசமாக விடிந்து விட்டது.

அந்நாளிலிருந்து இந்நாள் வரையிலும், சம்பவங்கள் முறுக்கேறி, மனிதாபிமானமாகிய மாணிக்கக் கங்கையில் பச்சை நிணத்தையும் தீயின் பொசுங்கலையும் குழப்பும் வகையில் ஈழத்தமிழர் பிரச்னை அகில உல்கப் பரிமாணத்தைப் பெற்றிருக்கிறது என்றால் மிகையில்லை. தாயையும் சேயையும் பிணைத்த கப்பல் போக்குவரத்து நின்றதும் அந்நியனுக்கு அடிமையாகிக் கிடந்த, சொந்த மண்ணை விட்டு, கால்வாயைப் போன்றிருந்த கடலைத் தாண்டி இலங்கைக் காடுகளில் அதே அந்நியனுக்காக உதிரத்தையும் எலும்பையும் தேய்த்து வளம் பெருக்கிக் கொடுத்த மக்கள், இந்நாள் அங்கே உரிமையற்று விரட்டியடிக்கப்பட, சொந்தமாகக் கனவுகளில் மட்டுமே கண்டிருந்த பூமி முற்றிலும், அந்நியமாகி வதைக்கும் பரிதாபம் கண்முன் தொடர்ந்த காட்சிகளாக நெருக்குகின்றன. மனிதகுலம் விஞ்ஞான அறிவாலும் நாகரிகப் பண்பாட்டினாலும் விண்வெளியையே எட்டும் சாதனையைக் கண்டிருக்கிறது என்று பெருமைப்பட வேண்டிய நாளில், பிறவியெடுத்த மண்ணில் கண் விழித்துப் பிழைக்க உரிமை இல்லை என்று நசுக்கப்படும் மக்கள், காற்றில் பறக்கும் பஞ்சுப் பிசிறுகளாக, குஞ்சும் குழந்தையுமாகக் கரைக்குக் கரை அகதிகளாக அல்லாடுவதும், எந்த நேரமோ, எப்போதோ, வாழ்வோ, சாவோ என்று கத்தி முனையில் அஞ்சியஞ்சி மக்கள் நாட்களைக் கழிப்பதும், மனித நாகரிகத்தைக் காட்டுமிராண்டி நிலைக்குப் பின்னோக்கித் தள்ளிச் சென்றுவிட்டதைக் காட்டுகின்றன.

இந்த நெருக்கடிகளில், புற உலகால் பாதிக்கப்படவில்லை என்று மனிதாபிமான அடிப்படையில் ஒரு தொழில் செய்யும் எவரும் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. எழுத்து மனித உணர்வுகளின் பாதிப்புக்களின் எழுச்சிகளை வெளிக் கொண்டு வரும் வடிகால் என்றால் தவறில்லை. இந்தச் சுமைகளை எழுதினாலே தீரும் என்ற உந்துதலுக்கு ஆட்பட்டு எழுதத் துனிந்தேன். இதனால் சுமைகளை இறக்கிவிட்டேன்; பிரச்னையைத் தீர்த்து விட்டேன் என்று சொல்வதாகப் பொருளில்லை. இப்படி உரத்து இந்தப் பிரச்னைகளை சித்தரிப்பதும், சிந்திப்பதும், பலரிடம் பகிர்ந்து கொள்ளும் உத்திதான். தனியாகச் சிந்திப்பதை விடுத்துப் பலரையும் சிந்திக்கச்செய்தால், கருத்துக்களுக்கு வலிமை உண்டாகும். தெளிவான முறையில் தீர்வு காணச் செயலாற்ற வாய்ப்புக்கள் நேரலாம். இது நம்பிக்கை. இன்றைய நிலையில் நம்பிக்கை ஒன்று தான் தேன் துளி.

இந்த முயற்சிக்கு உறுதுணையாகப் பல இடங்களிலும் செய்திகள் சேகரிக்க உதவிய நண்பர்கள் பலர். பெருவாரியாகத் தாயகம் திரும்பிய தோட்டத் தொழிலாளர் நெருங்கும் நீலகிரிப் பிரதேசத்தில், குன்னூர், கூடலூர், கோத்தகிரி, தேவாலா என்று எனக்குப் பல நண்பர்கள் செய்திகளைக் கூறி உதவினார்கள். குறிப்பாக, தாயகம் திரும்புவோருக்கான சம்மேளனத்தைச் சார்ந்த, திருவாளர்கள் சொர்ணமணி, குழந்தைவேல், தங்கவேல் எம்.சண்முகம், மற்றும் கூடலூர் நடராசா, ஆகியோர் என்னைப் பல இடங்களுக்கும் கூட்டிச் சென்று மக்களைச் சந்தித்து விவரங்கள் அறிய உதவியதை மறக்க இயலாது.

இராமேசுவரத்திலும் மண்டபம் காம்பிலும் தூத்துக்குடியைச் சார்ந்த அகதி முகாம்களிலும் திரு.சாஸ்திரி அவர்களும், டாக்டர் நடராஜன் அவர்களும் பேரார்வம் கொண்டு, எனக்கு எல்லா வகையிலும் உதவினார்கள். இம்முயற்சிக்கு நான் துணிவு கொண்டு செயலாற்ற அவர்கள் காட்டிய ஆர்வம் பெரிதும் காரணமாக இருந்தது.

முழு மனிதாபிமானத்துடன், அரசியலுக்கு அப்பால் நின்று, மண்டபத்திலும் இராமேசுவரத்திலும் இராமகிருஷ்ண மடம் சார்ந்து, பெருந் தொண்டாற்றும் அருள்மிகு பிரணவானந்தா சுவாமிகளின் ஒப்பற்ற அரும் பணிகளை நேரில் கண்டறியும் வாய்ப்பையும் பெற்றேன்.

சென்னை நகரின் சுற்றுப் புறங்களில் தங்கியிருக்கும் பல முன்னாள் இலங்கைத் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களில் நான் எப்போது சென்று எந்தச் சந்தேகம் கேட்டாலும், தங்களுடைய சங்கடமான வாழ்க்கைச் சூழலைப் பொருட்படுத்தாமல் எனக்குச் செய்திகள் கூறி உதவியதை மறுப்பதற்கில்லை.

இவ்வாறு எனக்கு உதவிய எல்லா நண்பர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வது என் கடமையாகிறது.

இந்த நவீனம், ஏதேனும் பத்திரிகைகளில் வெளிவந்தால், பெருமளவில் மக்களைப் போய்ச் சேரும் என்ற ஆசை உள்ளூற இருந்தது. ஆனால் அரசியல் - வாணிப லாபமே பத்திரிகை தருமமாகப் போய்விட்ட நிலையில் அந்த எண்ணம் கைகூடவில்லை. எப்போதும் போல் எனது முயற்சிகளுக்கெல்லாம் பேராதரவளித்து நூல்களை வெளியிட்டு வரும் பாரி புத்தகப் பண்ணையாரே, இதையும் நூலாக வெளியிடுகின்றனர்.

இதற்கான உற்சாகமும் ஊக்கமும் அளித்து எனக்கு வெற்றிகரமாக இயங்கத் தூண்டுதல் நல்கிய தமிழ்ப் புத்தகாலய அதிபர் கண.முத்தையா அவர்களுக்கும், இளவல் அ.கண்ணன் அவர்களுக்கும் எனது நன்றியைப் புலப்படுத்திக் கொண்டு, தமிழ் வாசகப் பெருமக்களுக்கு, இந்நூலை முன் வைக்கிறேன்.

ராஜம் கிருஷ்ணன்

அத்தியாயம் - 1

பனிக்கால வெயில் சிலுசிலுக்கும் காலைக் கடற்கரையில் வெம்மை தேம்பாகாகப் பரவுகிறது.

முண்டும் முடிச்சும், அழுக்கும் அவலமும் அச்சமும் ஆயாசமும் இறுக்கிப் பிணித்திருக்கும் கும்பலின் இறுக்கங்கள் அந்த இதமான மணற்கரையில் கட்டவிழ்கின்றன. கறுப்பு, சிவப்பு, மஞ்சள் என்று பல நிறங்களாகப் பெண்கள் அணிந்திருக்கும் சேலைகளும், சிறுவர் சிறுமியர், குஞ்சு குழந்தைகளின் சிலும்பல்களும், பசியும் சோர்வும் பயமும் அகன்றதென்று விழித்தெழும் முகங்களும், உயிர்ப்பயம் நீங்கியது என்ற ஆறுதலின் ஒலிகளும் இனம்புரிய, இந்திய மண்ணின் கரை அவர்களை ஏந்துகிறது.

கரையோரம் வந்து ஒதுங்கிய இரு தோணிகளில் இருந்த மக்கள் அனைவரும் விடுபட்டு வந்த பின்னர், உள்ளிருக்கும் பெட்டி, மூட்டை, தட்டுமுட்டுச் சாமான்களை எல்லாம், தலையில் கைலி சுற்றிய பலாட்டியரான சில இளைஞர் மணலில் எடுத்துப் போடுகின்றனர். வெற்று மேனியராக விளங்கும் அவர்கள், கருங்காலியில் கடைசல் பிடித்த சிற்பங்கள் உயிர்த்து வந்தாற் போல் இயங்குகின்றனர்.

பெட்டி, மற்றும் மூட்டை முடிச்சுக்களுக்கு உரியவர்கள் வந்து அவற்றை இழுத்து வைத்துக் கொள்கையில் இறுக்கம் விடுபட்ட விதலைக் குரல்கள் உரத்துக் கேட்கின்றன. சில பல குழந்தைகள் அழுகின்றன.

“இங்கிட்டு ஆமி வருமா அம்மா?”

ஒரு ஐந்து வயசுச் சிறுமி கண்களில் கலவரத்துடன் தாயை ஒட்டிக் கொள்கையில், “இங்க வராது கண்ணு, நாம இந்தியாவுக்கு வந்துட்டோம்ல?” என்று ஆறுதல் அளிக்கிறாள்.

“ஆரம்மா இது? உலக்கைய வுடாம கொண்டிட்டு வந்திருக்கிய?” மர உலக்கை ஒன்று மண்ணில் வந்து விழுகிறது.

“அது எண்ட சாமான். எம்புட்டு நாளா எனக்குச் சோறு போட்டுச் சீவியம் தந்த உலக்கை ஐயா!”

வயது முதிர்ந்த பெண்மணி ஒருத்தி அதைப் பிள்ளையைக் கட்டி அணைப்பது போல் எடுத்துக் கொள்கிறாள். அவள் காதுகளில் ஊசலாடும் பொன்னாலான பாம்படம் அவளுடைய சீவியத்தின் பெருமையைச் சுருக்கமாக விள்ளுகிறது.

“இதா, இந்தப் பையி குட்டிச்சாக்கு ஆரோடது?”

“அதா அந்தப் பெரியவரோடது... இங்க கொண்டாங்க...”

ஒரு குமரிப்பெண் அந்தக் குட்டிச் சாக்கை வாங்கிக் கொண்டு போய், மணலில் குந்தியிருக்கும் முருகேசுவிடம் வைக்கிறாள்.

“பாவம், தோட்டத்து ஆளு மன்னாருல செம தூக்கிக்கிட்டிருந்தாரு. மூணு கொமரிப் புள்ளிங்களோட, மூணு மாசமா தாய்நாடு போவணும்னு காத்திட்டிருந்தாரு. புள்ளிங்க மூணும் காணமற் போயிற்று, போன மூணுமாசக் கரச்சல்ல. சனங்க தீ வைச்சப்ப அலையக் கொலைய ஓடினாங்கல்ல?... ரொம்பசனம் தப்பிப் போயிட்டாவ, அப்பவே கப்பல்ல போயிடிச்சுங்களோ, என்னாவோ... இப்ப போட்டுக்கு எட்டு நூறு... எட்டு நூறு...”

பாம்படக் கிழவி, அந்தக் குமரிப்பெண்ணிடம் விவரம் கூறுகிறாள்.

முருகேசு உண்மையில் பிரமை பிடித்த நிலையில் தான் உட்கார்ந்திருக்கிறான்.

சுகந்தி, தனம், சரோசா...

சுகந்தி வயது வந்த குமரிப்பெண்... தனத்துக்குப் பன்னிரண்டு வயசு, சரோசா பத்து வயசுச் சிறுமி.

அவனுடைய தமக்கையின் பேரப் பெண்கள்.

இதே போன்று இக்கரையில் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், அவன் தாய் கழுத்தில் மஞ்சட்சரடும் இடுப்பில் குழந்தையுமாக இப்படித் தோணியேறிப் போனாள். கங்காணியின் கீழ் ஒப்பந்தக் கூலிகளாக, மன்னார்க்காட்டில் அவர்கள் நடந்து போன காட்சியை அவன் எண்ணிப் பார்க்கிறான். அந்த மண்ணில் அவள் இரத்தத்தையும் சதையையும் மட்டும் உரமாக்கவில்லை. சூல்பை வெடிக்கப் பத்து நூறாக விதைகள் விழுந்து எங்கெங்கும் தன் வேரைப் பாய்ச்சப் படரும் காட்டுக் கொடியின் மூர்க்கத்துடன் அவர்கள் மக்களையும் பெருக்கினார்களே? ஆனால்... ஆனால், இந்த மானுடபீஜங்கள், வேர்பிடிக்கச் சக்தியற்று, லட்சோப லட்சங்களாக... சூறைக்காற்றில் அலையும் சருகுகளாக, ஒடியும் தளிர்களாக, உதிரும் பூக்களாக மொட்டுக்களாக...

முருகேசுவுக்குச் சிந்திக்கத் திராணியில்லை.

சில நிமிடங்களில் படகுகள் காலியாகின்றன. புருபுருவென்று நீரைக் கிழித்துக் கொண்டு கிழக்கே செல்கின்றன.

மணற்கரையின் வழக்கமான அலைகள் எழுப்பும் மெல்லொலிக்குக் குஞ்சம் கட்டினாற் போன்று இந்த மக்களின் பேச்சொலிகளும், குழந்தைகளின் அழுகை ஒலிகளும் இணைகின்றன. சற்று எட்டத் தெரியும் பனைமரங்களும் மணல் மேடுகளும் இந்த மக்கள் அரவங்களை வாஞ்சையோடு ரசிப்பது போல் இதமாகக் காட்சி அளிக்கின்றன.

“இதா ராமேசரமா? ஏம்மா, கோயிலக் கானம்?”

“ராமேசரம் இன்னும் அங்கிட்டிருக்காப்பல. இது தனுஸ்கோடின்னில்ல செபமால சொன்னா?”

“அதா கடல்ல முழுகிடிச்சின்னி சொன்னாவ.”

“அல்லாம் முழுவல, அதா கருப்பா தெரியுது பாருங்க, கோயிலு. இதொரு பாதி மிச்சம்...”

“ஏ, இந்தக் கரையில கொண்டு வந்து விட்டுப் போறா? இதுக்கா இம்புட்டுப் பணம்?”

புள்ளிச்சேலை உடுத்திய ஒரு பெண், அவள் புருசனைக் கேட்கிறாள்.

“சொம்மா இரு! ஒனக்கு ரொம்பத் தெரியுமில்ல? அங்கிட்டு ஏதானும் ஆமி போட்டு நிக்கிமாயிருக்கும்?”

“இது இந்தியாக்கரைதான? ஆமி இங்கிட்டு வருமா?”

பாம்படக் கிழவி மீதமிருக்கும் நாலைந்து பல்லை குத்துகிறாள். பல்லில் ஒன்றும் ஒட்டி இருக்க நியாயமில்லை. வெற்றிலைக் கூடப் போடவில்லை. ஆனால் எதுவும் செய்யத் தோன்றாத போது இது ஒரு நேரம் போக்குத்தான் என்று முருகேசு நினைக்கிறான்.

“ராமேசரத்துல, ஏற்கனவே சனமான சனம் வந்து நெருங்கியிருக்காம்ல? அங்கிட்டுப் போனா நிக்க உட்காரக் கூட எடமில்ல...!”

“அதில்ல பாட்டி, பாஸ்போட்டு அது இது இல்லாம தான இப்ப மிச்சம் பேரும் வந்திருக்கிறம்? அங்க கங்கானிப்பாவ இல்ல?”

“செத்த சொம்மா இருக்க மாட்டிய?” என்று பூப்போட்ட சட்டையும் கைலியும் அணிந்த ஒரு நடுத்தர வயசுக்காரன் அதட்டுகிறான். ஒரு தாய் அலையில் நனைந்த துணி மூட்டையைத் திறந்து, உள்ளே அலுமினியம் குண்டில் மூடி வைத்திருக்கும் புளிச்சோற்றை வெளியாக்குகிறாள். எங்கிருந்தோ காக்கைகள் வந்து குந்துகின்றன.

அவற்றை ஒரு கையால் விரட்டிக் கொண்டு, நண்டும் சிண்டுமாக இருக்கும் மூன்று குழந்தைகளுக்கும் கையில் வைத்துக் கொடுக்கிறாள். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேறு சில குழந்தைகளுக்கும், ஏன் பெரியவர்களுக்கும் கூட பசி கிளர்ந்தெழுகிறது.

ஆனால், எல்லாராலும் இதைப் பின் பற்ற முடியவில்லை.

அழியாத ரோஸ் குங்குமத்துடன் விளங்கும் இளந்தாயொருத்தி, தன் நான்கு பிராயச் சிறுமியை வெறி வந்தாற் போல் அடிக்கிறாள். சோறு தண்ணீர் காணாமல் எங்கோ பதுங்கி, எப்படியோ தப்பினாற் போதும் என்று வந்த பெண் அவள். அவள் புருசன் படகைத் தள்ளிக் கொண்டு எங்கோ பத்திரமாக நிறுத்தப் போயிருக்கிறான். திருட்டுப் படகு தள்ளும் கூலிக்காரன் அவன். கையில் காசிருந்தாலும், வயிற்றுப் பசியை அவிக்க இயலாத கொடுமை. “பசிக்கி... அம்மா பசிக்கி...” என்று அந்தச் சிறுமி, அடியும் வாங்கிக் கொண்டு தேம்புகிறாள்.

முருகேசு தன் குட்டிச் சாக்கைத் திறந்து, கைவிட்டுத் துழாவுகிறான். பாண் துண்டுகள் அகப்படுகின்றன.

“இந்தா...ட்டீ? இந்தா... தின்னுக்க?”

ஏழெட்டுக் கைகள் நீள்கின்றன. சாதியும் மீதியும் அடிபட்டுப் போகும் பசி.

முருகேசு இன்னும் துழாவுகிறான். நமுத்துப் போன பிஸ்கற் பொட்டலம் வருகிறது.

“ஒரு வெத்தில போடாம நாக்கு அறுவறுத்துப்போச்சி. வார அவசரத்தில, வெத்திலப் பெட்டிய எடுக்க இல்ல. கட்டின துணியோட வந்திருக்கம். இனி என்ன ஆவுமோ? நம்மள ஆண்டவ இம்புட்டுக்குச் சோதிக்கிறா...” பாம்படக் கிழவி சிலுவைக் குறி செய்து கொள்கிறாள்.

“இந்தியாக்கரயில, ‘கவுர்மென்டு’ சீட்டுக் குடுக்காவ, சோறு போடுதாவ, தேத் தண்ணி குடுக்காவன்’ல்லாம் சொன்னாவ, இவனுவ உண்டான காசையும் வாங்கிட்டு, இப்பிடி விட்டுப்போட்டுப் போயிட்டானுவ?...”

ரோஸ் குங்குமக்காரி, பொறுக்காமல், “விட்டுப் போவ இல்ல. போட்டப் பதனமா வச்சிட்டு வருவா?”

“ஆமா, போட்ட விட்டுப் போட்டு, பிளசர் எடுத்திட்டு வருவா!” என்று ஓர் இளைஞன் நையாண்டி செய்கிறான்.

எந்தச் சூழலிலும் சிரிக்கும் இளமை.

பசியாறிய பிள்ளைகள் கரையில் இறுக்கம் விட்டு விளையாடுகின்றன. ஒரு பயல் எட்டிச் சென்று, பாரைக் குட்டி மீன் பிடிக்கிறான்.

இவர்கள் ஏறக்குறைய அனைவருமே மீனவர் தாம். கடற் கரையிலேயே பிறந்து வளர்ந்து வாழ்கையும் போராட்டமும் முடிவுமே கடல் என்று பழகியவர்கள். இவர்கள் பிரச்னை விடுக்க முடியாத சிக்கலில்லை. அந்தக் கரையில்லை என்றால் இந்தக் கரை, என்று தொழில் செய்து சீவிப்பார்கள், ஆனால், அவன்...?

மகன் வந்து நெடு நெடுவென்று மூன்றாண்டுகளுக்கு முன் இப்படி ஒரு நாள், காலையில் அவன் முன் வந்து நின்ற போது... பிரட்டுக்களம் நோக்கிக் கிளம்பிக் கொண்டிருந்தவன் திடுக்கிட்டான்.

பேச்சு வரவில்லை. கண்களில் நீர் மல்கியது. தன் ஒரே மகன், கண்ணான கண்ணாக வளர்த்த மகன் தான்... என் மகன் தோட்டக்காரனின் மகனாக வளரக் கூடாது, அவன் படித்துப் பெரியவனாக... தோட்டத்துக் கிளாக்கர், சூபரிண்டு என்று வரவேண்டும் என்றல்லவோ கனவு கண்டு உதிரத்தை உருக்கிப் பிள்ளையைப் படிக்க வைத்தான். லட்சத்தில் ஒருத்தனே அப்படிப் படிக்க வைக்க முடியும். ஆனால் அவன் கிளாக்கராகவோ, சூபரிண்டாகவோ தோட்டத்துக்கு இவன் மதிப்பை உயர்த்தும் வகையில் வரவில்லை. இவர்களைத் தோட்டக்காட்டான் என்று பழிக்கும் ஒரு படியில் துணை தேடிக் கொண்டு, பிரிந்து போனான். ராமாயி... அந்தத் தாய்... அவள் சாவுக்கும் கூட வரவில்லை.

“என்னடா?...”

வெறுப்பனைத்தும் திரண்டு நெஞ்சுக் குழியில் வந்தது.

“அப்பா... அவுசரமா வந்தேன். நீங்க... இந்தியா போயிடுங்கப்பா... நம்மாளுங்க நெறயப் பேரு போறாங்க. நீங்க வயசு காலத்தில தனியா இருக்கிறதுக்கு இங்க ஒண்ணுமில்ல. எனக்குப் பிரஜா உரிமை இருக்கு. ஆனா ஒண்ணுமே செரியில்ல. நீங்க அந்தக் கரைக்குப் போயிடுறதுதா நல்லது. நீலகிரியில, வேண்டியவங்க, தோட்டம் கரை வாங்கிட்டு செட்டிலாயிருக்காங்க. நீங்க போயிடுங்க. நா ஏற்பாடெல்லாம் பண்ணுறேன்...”

அப்போது, முருகேசுவின் குமுறல், எப்படி வெடித்தது?

குதிரை, கீள தள்ளிட்டு குழியும் பறிச்சுதாம்...?

“ஏண்டால? அப்பன் மேல இப்பக் கரிசனம் எங்கேந்துடா வந்திச்சி? நீ மகனுமில்ல, நா அப்பனுமில்ல... அவ... ராமாயி... மகனப் பாக்கலியே, பாக்கலியேன்னு துடிச்சி செத்தா... பாவிப் பய... உன்டை அட்ரசு கூடத் தெரியாது; அங்க ஆளனுப்பி, இங்க ஆளனுப்பி காயிதம் எழுதச் சொல்லி... என்ன பாடுபட்டிருப்பே? தோட்டத்துல பெறந்து, எங்க அழுக்கிலும் மலத்திலும் ஜனிச்சி உருண்டவந்தான்டால நீ! மகன் இங்கிலீசு படிக்கணும், துரையாவனும்னு எங்க சக்திக்கு மீறி உழச்சி அம்பதும் நூறும் அனுப்பிச்சிக் குடுத்தம் பாரு? அதுக்கு நல்ல புத்தி படிப்பிச்சிட்ட. ஆறு தடவ குறப்பிள்ளப் பெத்து ஏழாவதா உன்னியப் பெத்தா. அந்த ஆறப்போல இதும்னு எப்பவோ மனசைக் கல்லாக்கிட்ட. எனக்கு இனி இந்தியாவில என்ன இருக்கு? என்ன இருக்கில? யாரு சொந்தம், யாரு வேண்டப்பட்டவங்க? இந்தத் தோட்டம், இந்தப்பச்ச, இந்தக் கஸ்டம், நட்டம் எல்லாம் தான் எனக்கு இனியும் சீவியம். நீ ஒரு புள்ள இல்லன்னான பெறகு, இங்க எத்தினியோ புள்ளங்களப் பார்க்கிறேன். நா இங்கதா பொறந்தவன், சீவிச்சவன். என் ராமாயி, இங்கதா மண்ணோட கிடக்கா. நானும் இங்கேயே முடிஞ்சி போவன். நீ போயிடு...!” கண்களை நீர்ப்படலம் மீண்டும் மறைக்கிறது.

ஒரு மொட்டைக்கல்லில் வண்ணமாய்க் குந்தியிருக்கும் மீன்கொத்தி, கரைந்து போகக் கண்களைத் துடைத்துக் கொள்கிறான்.

தப்பு யார் மீது?

குமாரு அப்பேர்க்கொத்த பையனாக இருந்தானா?...

கல்யாணம் கட்டி வந்த போது கூட, வணக்கமாக அந்தப் பெண்ணுடன் காலைத் தொட்டுக் கும்பிட்டான். கட்டைக் குட்டையான அந்தப் பெண்... படித்து நாகரிகமடைந்த மெருகுடன், தனியாக வேலை பார்க்கும் முதிர்ச்சியுடன், நேராகப் பார்த்தாள். “மாமா, நீங்களும் எங்க கூட வந்திருக்கலாம். இனியும் நீங்கள் பாடுபட்டு சீவிக்கத் தேவையில்லையே?” என்றாள். அவள் கலாசாலையிலே ஆசிரியராக இருந்தால். குமாருக்கு, தினசரிப் பத்திரிகை ஆபிசில் வேலை இருந்தது. அவனுக்கு ஆங்கிலம் படிப்பித்து, மிகவும் ஊக்கம் காட்டி முன்னுக்கு ஏற்றி விட்ட கிறித்தவ சாமியார் அவனைத் தோட்டக் காட்டிலிருந்தே பிரித்துவிட்டதாக அப்போது கடுங்கோபம் கொண்டான்.

“தாத்தோ...? உங்களத்தான்...?”

முருகேசு திடுக்கிட்டாற் போல் திரும்பிப் பார்க்கிறான்.

முப்பது முப்பத்திரண்டு பிராயக்காரன். கறுப்புக் கண்ணாடி, மடிப்பான மினுமினு சராய், சர்...

“யார்ல...? போட்டில வந்தவ இல்ல போல இருக்கு?”

அரும்பு மீசைக்குக் கீழ் இளம் நகை மெல்ல அரும்புகிறது.

“என்னா வச்சிருக்கீரு, டேப் ரிகாடரு, சீல, கெசட், எதுன்னாலும் எடுத்துக்கிடறோம்...”

மீண்டும் ஒரு நகை.

முருகேசு வாயைத் திறக்கவில்லை. கையால் குட்டிச் சாக்கைப் பற்றிக் கொள்கிறான்.

அந்தாள் கீழேயே நெருக்கமாக உட்கார்ந்து காதுகளில் கிசுகிசுக்கிறான். “பிஸ்கற் இருந்தாக் கூட... எடுக்கிறோம்.”

முருகேசு சுதாரிக்குமுன், இவனைப் போல் நாலைந்து பேர் அந்த கும்பலிடையே புகுந்திருப்பதைக் கண்டு கொள்கிறான்.

“அட போப்பா, ஒண்ணில்ல, எப்பமோ வாங்கி வச்ச பிஸ்கற்று, புள்ள அழுவுதுன்னு குடுத்தே. ஏது பிஸ்கற்...?”

“தாத்தா, நீங்க பகடி பேசுறிய. நாங்கேட்ட பிஸ்கற் வேற. உங்களுக்கு நாங்க ஹெல்ப் பண்ண வந்திருக்கிறம். நல்ல நேரம் நீங்க இந்தக் கரையில எறங்கியிருக்கிறிய. இல்லாட்டி உங்கள இதுக்குள்ளாற சூழ்ந்துகிட்டு, போலீசே கொள்ளையடிச்சிட்டுப் போயிருவா?”

முருகேசு பேசவில்லை.

ஆனால் நீரலைகளைத் தவிர, ஒரு புதிய சலசலப்பு அலை அங்கே பரவியிருக்கிறது. பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்.

“இப்ப ஏதும் செய்ய ஏலாது. இங்க ஆம்பிளங்க போட்ட நிறுத்திப் போட்டு வருவாக. நாங்க ஆமி வாரதுன்னு அலயக் கொலய அள்ளிப் போட்டுக்கிட்டு ஓடி வந்தம். எங்க ஒண்ணு ரெண்டு சாமானமெல்லாம் வங்கில வச்சத கொளும்புக்கு சீல் போட்டு அனுப்பிட்டாவ...” என்று பாம்படக்கிழவி மொழிகிறாள். “பாட்டி... எங்களுக்கு போட்டுகாரங்க தகவல் சொல்லிதா இங்க வாரம். செத்தப் போனா, கஸ்டம் ஆளுக இங்க வந்து லாரில கொண்டிட்டுப் போவா. அங்க என்ன பண்ணுவாங்கன்னு சொல்ல முடியாது. முதலுக்கே நஷ்டமாகிப் போவும். நாங்க சும்மா கேக்கல, வெலை குடுத்து வாங்கிக்கறோம்...”

இந்தக் கொக்கியில், ‘எங்க ஆம்பிளங்க வரட்டும்’ என்ற குரல்கள் தொய்ந்து விழுகின்றன.

ஆட்கள் பிரிந்து வளையமாகிறார்கள்.

தகரப் பெட்டிகள், மூட்டைகள் பிரிபடுகின்றன. கேசட்டுகள், டார்ச் லைட்டுகள், சீலைகள், சட்டைத் துணிகள் என்று வெளியாகின்றன.

உயிர் பிழைக்க இன்றியமையாத உணவைத் தயாரிக்கக் கூடிய சில்லறைச் சாமான்களும் கூடக் குறைந்த அந்தத் தட்டுமுட்டுக்களிடையே, அந்நியத் தன்மையைப் பறை சாற்றிக் கொண்டு; பல பொருள்கள் கைமாறுகின்றன. சாராய போத்தல்கள் சட்டுப்புட்டென்று பெரிய பைகளுக்குள் அடக்கமாகின்றன.

வுலி வுலி, நைட்குவீன், என்ற சொற்களுடன் இழியும் சேலைத் துணிகள் கைமாறுகின்றன.

சிறிது நேரத்தில் அங்கே அந்நியச் சுவடுகள் சுத்தமாக அகற்றப்படுகின்றன. அந்தப் புதிய ஆட்களும் மணற் கரையில் மறைந்து போகிறார்கள்.

வெயில் சுள்ளென்று படிகிறது.

சொல்லி வைத்தாற் போல் போலீசு ஆட்கள் வருகின்றனர்.

குழந்தைகள் காக்கிச் சட்டையைக் கண்டதும் தாய் தகப்பன் என்று கிலியுடன் ஒண்டிக் கொள்கின்றனர்.

“எல்லாம் வண்டியில போய் ஏறுங்க...?

அவரவர் மூட்டையுடன் சற்று எட்டி நிற்கும் லாரியில் ஏறச் செல்கின்றனர்.

“கிழவா? மூட்டையில என்ன வச்சிருக்க?”

முருகேசு அசையவில்லை.

“என்னாடா? என்ன வச்சிருக்கே?...”

அந்தக் கருப்புக் கண்ணாடிப் பயல் எட்ட இருந்து வேடிக்கைப் பார்க்கிறான்.

“ஒண்ணுமில்ல...”

“ஒண்ணுமில்ல...?”

கைக்கம்பு கொண்டு குட்டிச் சாக்கையும், அவன் பிடித்திருந்த சிலுவார் பையையும் குத்துகிறான்.

“நட...?”

எல்லோரும் லாரிக்குள் ஆடு மாடுகளைப் போல் ஏறி அடைகின்றனர்.

கையில் காசு, லாரிப் பயணம் இரண்டையும் அநுபவிக்கும் குடும்பத் தலைவர்கள், குழந்தைகள்...

ஆனால் முருகேசுவுக்கோ இனம் புரியாத குழப்பம், கிலி.

பூவரச மரத்தடியில் லாரி அவர்களை இறக்குகிறது.

“லே, கிழவா, இங்க வா, உம் மூட்டய எடுத்துட்டு?”

ஒரு தட்டித்தடுப்பு அறை. மேசையடியில் இன்னொரு காக்கிச்சட்டை உட்கார்ந்திருக்கிறது.

குட்டிச் சாக்கை அவிழ்க்கிறார்கள்.

பழைய நைந்த சேலை இரண்டு, இவனுடைய ஒரு லுங்கி, ஒரு போர்வை, ராமாயியும், குமாரும், மருமவளும் தானுமாக முன்பு கண்டியில் எடுத்துக் கொண்ட கண்ணாடி உடைந்த போட்டோப் படம்... இன்னமும் மீதமுள்ள ஒரு ‘பாண்’ துண்டு...

“அதில என்ன இருக்கு?... வையி...?”

அதில்... தோட்டத்துரை எழுதிக் கொடுத்த நல்ல தொழிலாளி சான்று, புகைப்படம் ஒட்டிய பாஸ்போர்ட்டுகள், சரோஜா, தனம், சுகந்தி... எல்லாருடையதுமான பாஸ்போர்ட்டுகள்... பிறகு, மன்னாரில் எழுதிக் கொடுத்த சீட்டு... ரோஸ் காகிதத்தில் பொதிந்த தாலி, அட்டியல், இவனுடைய வங்கியில் கட்டிய பணத்துக்கான சான்று... எல்லாம் மேசையில் இறைபடுகின்றன.

“இவங்கள்ளாம் இருக்காங்களா?...”

“அந்த மூணு பெண்ணுகளும், என் அக்கா பேத்திங்க, வுடுபுசேலா தோட்டத்துல இருந்தாவ. அம்மா செத்து, அப்பன் கூறில்லாம போயிட்டா. கூட்டிட்டுத் தாய் நாடு போன்னு அனுப்பிச்சி வச்சாவ. இங்க வந்து, மன்னாருல, கப்பல் சீட்டெடுக்கக் காத்திட்டு, செம தூக்கிப் பிழச்சனுங்க. ஒரு நா வாரப்ப, ஒரே கரச்சல். ஆமி வந்திச்சின்னா, அவுங்கள மட்டும் மாணம் அய்யா?”

முருகேசு குரல் உடைய அழுகிறான்.

இது போல் எத்தனையோ அழுகைகளை அவர்கள் கேட்டிருப்பார்கள் போலும்? இரக்கம், இளக்கம் எதுவும் இல்லை.

“போ, போ எல்லாம் எடுத்திட்டு, இமிகிரேஷன் தாசில்தார் கிட்ட போ... போ?” என்று விரட்டுகிறார்கள்.

அன்றாடம் லாஞ்சிகள் கடவுகளில் மனிதர்களைக் கொண்டு கொட்டுகிறது. யார் எவர் என்ற முகவரிகள் குலைந்து போய், தனித்துவங்கள் அழிந்து போய், வேரற்ற பூண்டுகள் போல் இராமேசுவரம் கரையெங்கும் கும்பல் சிதறிக் கிடக்கிறது. கங்கையையும் காசியையும் இணைக்கும் புள்ளியாக, பரந்த பாரதமனைத்தையும் புனிதச் சரடால் பிணைக்கும் இக்கடற்கரையில் சிதறிக் கிடக்கும் அகதிக் கும்பல், அந்த இலங்கை மண்ணும் தொந்தமுண்டு என்று மந்திரிப்பது போல் கடலலைகள் அலப்புகின்றன.

முருகேசு, முட்டு முட்டாக மரத்தடிகளிலும் தெருவோரங்களிலும் மணல் பரப்புகளிலும் தென்படும் மக்களிடையே தன் பிடி நழுவிப் போன குழந்தைகளை, பெண்களைத் தேடுகிறான்.

“இந்தப் பொண்ணு, சடங்கான போது, அவங்கல்லாம், இங்கத்தா இருந்தா. பின்ன கானளந்து குடுக்கிற கரச்சல் வந்தப்ப, அல்லாம் அடிபுடின்னு லகள வந்திச்சா? அந்தப் பயல, செயிலுக்குக் கொண்டு போயிட்டா. அடிச்சி கால் உடஞ்சி போச்சின்னு அல்லாம் சொல்றாவ. அப்பனோ ஒண்ணும் சரியில்ல. பெண்டாட்டி ஆம்பிளப் புள்ளக செத்ததிலேந்து, குடி குடின்னு குடிச்சிச் சீரழியிறா. நீங்க கூட்டிட்டுப் போயிடுங்க. நீலகிரியில, அவ சித்தப்பன் அத்தை குடும்பமெல்லாம் அப்பமே எழுபத்தாறுல ஒப்பந்தப்படி போயிருக்கா. கொண்டு சேத்துடுங்க...”

குடும்பமில்லாமல் போன தனக்கு இப்படி ஒரு பொறுப்பு வரும், என்று கனவு கூடக் கண்டிருக்கவில்லை. இந்த மண்ணிலேயே கிடப்பேன் என்று சொன்னவனை, துரை கூப்பிட்டனுப்பி, ஒரு கடிதாசைக் குடுத்து, “உனக்கு வயசாகி விட்டது; இனி தோட்டத்தில் வேலை கிடையாது” என்று சொன்னதும் எப்படி நொறுங்கிப் போனான்? அந்தத் தோட்டத்து மக்கள் உறவுகள் எல்லாமே அவனுடைய உழைப்புரிமையின் ஆதாரத்தில் அல்லவோ தொக்கிக் கொண்டிருந்தன? கூடப் பிறந்த உறவுகள், சொந்த பந்தங்கள் எங்கெங்கோ அந்த மண்ணில் உழைக்கச் சிதறி இருந்தார்கள். பெண் மக்கள் கட்டிய இடங்களுக்குச் சொந்தமானார்கள். அந்த உறவுகள் கூட, ஏழைகளுக்கு அவ்வப்போது புதுப் பித்துக் கொண்டு பழகும் வாய்ப்புக்களை ஏற்க இயலாமல் நலிந்து போயின. ஆனால், தலைமுறை தலைமுறையாக, ஒரே லயம், அடுத்தடுத்த காம்பரா என்று சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் கட்டாயத்தில், உயிராய் உறவாய்ப் பழகிய பாசங்களை எப்படி விட்டு விர வேண்டி இருந்தது?

இவனுக்கு வேலையில்லை என்றதும் காம்ப்ராவும் பூட்டப் பெற்றது.

அன்றாடம் போராட்டமும், திணறலுமாகத் தோட்டங்களிலும் அமைதி குலைந்து போயிற்று. குடும்பம் குடும்பமாக ஒப்பந்தம் என்று தாய்நாடு செல்லத் துணிந்து விட்டார்கள். இந்தியாவில் தேயிலைத் தோட்டங்களில் வேலை கொடுக்கிறார்கள்; போய் இறங்கியதும் பணம் கொடுக்கிறார்கள் - சோறு போடுகிறார்கள் - இங்கு போல் பொழுதெல்லாம் தெமிலு தெமிலு என்ற வசைப் பேச்சுக்களுக்கும் எந்த நேரம் என்ன ஆகுமோ என்ற கிலிக்கும் இலக்காக வேண்டாம் - என்று தீர்மானம் செய்து கொண்டு குடும்பம் குடும்பமாகப் பெயர்ந்தார்கள். அவனுக்குத் தெரிந்து, ராமசாமிக் கங்காணி - நாச்சிமுத்து குடும்பம், வேலப்பன் குடும்பம் என்று மூட்டை கட்டிக் கொண்டு கப்பலேறிப் போனார்கள். புதிய சூழலில் எப்படி எங்கிருந்து பிழைப்பான்?

பதுளைப்பக்கம், தமக்கை ஆண்டாளுவின் குடும்பத்தோடு அண்டச் சென்றான். “விரலுக்குத் தக்கின வீக்கம்தான் வீங்கணும். ஒரு சாதிசனம், கலியாணங்காச்சி, ஏதும் வேணான்னு, புள்ளய அனுப்பிச்சிப் படிக்கப் போட்ட, என்ன ஆச்சி?” என்று சொல்லிச் சொல்லிக் காட்டினாள். தன் ஓய்வுக் காலப் பணம், ராமாயியின் சிவப்புக்கல் தோடு, மூக்குத்தி, மூன்று பவுன் அட்டியல் தாலி, எல்லாவற்றையும் கொடுத்து விட்டு, அங்கே ஒண்டிக்கொள்ள நினைத்திருந்தான்.

ஆண்டாளு புருஷன், எழுபதைக் கடந்தவர். சீக்கு வந்து கட்டிலோடு கிடந்தார். மூன்று ஆண்மக்கள் கல்யாணம் கட்டிக் குடும்பமாக வெவ்வேறு திக்கில் இருந்தார்கள். வீட்டோடு இருந்த இளையமகன் ராசு, தையல் தைத்துக் கொடுத்தான். பெண்சாதியும் ஒரு மகளும் தோட்டத்தில் வேலை செய்தார்கள். முருகேசு, எங்கேனும் சில்லறையாக சுமை சுமக்கவோ, வயல் வேலை செய்யவோ போனான். ஏழெட்டு மாசங்கள் ஓடியிருக்கும். அப்போதுதான் பெரிய கலவரமாக வெடித்தது. ஆடிவேல் திருவிழாவுக்குக் கதிர்காமம் சென்றிருந்த மருமகன் குடும்பத்தினரை, குண்டர்கள் வழி மறித்து, பஸ்ஸுக்குத் தீ வைத்தார்கள் என்று கேள்விப்பட்டதும், ஒடுங்கிப் போனார்கள்.

அந்த மருமகன், மூன்று பெண்களையும் கூட்டிக் கொண்டு ஒருநாள் ஓலமிட்டுக் கொண்டு வந்தான். ஆண் குழந்தைகள் இரண்டும் தாயோடு வெந்து போனார்கள். பஸ்ஸைக் காடர்கள் வளைத்துக் கொண்டதும் புருஷன் தப்பி ஓடிவிட்டானாம்... பெண் பிள்ளைகளைக் கூட்டிப் போகவில்லை.

ஆண்டாளு நெஞ்சில் அறைந்து கொண்டு அழுதாள்.

“பாவி... உன்ற உசுரு வெல்லாமப் போச்சுன்னு, அவளயும் புள்ளகளையும் விட்டுப் போட்டு ஓடிவந்தனியா?...”

முருகேசுவுக்குத் தாங்க முடியாமல் இருந்தது.

பிறகுதான் அவன் கண்டிக்குப் பயணமானான்.

அந்தப் பெண் குழந்தைகளுக்குத் தன்னைக் காப்பாளனாக்கிக் கொண்டான்.

“சமஞ்ச பொண்ணு, இங்கியே ஒரு கலியாணத்தை செட்டப் பண்ணிட்டு குடும்பம்னு கூட்டிப் போங்க. குடும்பத்துக்கு மூவாயிரம் குடுக்காவ, இந்தியா கவுர்மென்ட்டில” என்று பலரும் யோசனை சொன்னார்கள்.

ஆனால், சுகந்திப்பெண்... பயங்களில் அதிர்ச்சியுற்று இறுகிப் போயிருந்தாள். பாட்டியும் மாமனும் இந்த யோசனையைச் செயலாக்கி விடுவார்களோ என்று அஞ்சி, “எனக்கொண்ணும் கலியாணம் வாணாம். இந்தியாக்குக் கூட்டிப் போயி என்ன படிப்பிக்கணும்...” என்றாள்.

“ஆமாம். அதுஞ்சரிதா. அவுசரத்தில எவனாயாணும் சேத்துக்கிட்டு, காசுக்காக, கவுர்மென்ட் ஏமாத்துறது சரியில்ல. ஆண்டாளு, நா கூட்டிட்டுப் போயிடறே. இந்த மண்ணு எனக்கே இப்ப கசந்து போச்சு!”

இப்படித்தான் புறப்பட்டான். அவர்கள் மன்னாரை அடைந்த பொழுதில் இனக்கலவரம் அங்கும் கொள்ளையும் தீவைப்புமாகப் பரவ கப்பல் இல்லை என்றாகி விட்டது. இரவுக்கிரவே தோணி விடுகிறார்கள் என்பதை விசாரிக்க, அந்தப் பெண்களைத் தங்கியிருந்த வீட்டில் விட்டுவிட்டு அவன் சென்றிருந்தான். திரும்பி வர இரண்டு நாட்களாகி விட்டன. அவர்களை விட்டிருந்த இடம், ஒரு கடையுள்ள பின்புற வீடு. இளவயசுக்காரி. புருஷன் சவுதிக்குப் போயிருந்தான். பையன் முன்புறம் கடையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

நாட்டுக்காரத் தமிழரா, வம்சாவழியினரா என்பதெல்லாம் தான் தெரியாத நிலை வந்துவிட்டதே?

“பிள்ளங்களப் பத்திக் கவலைப் படாதீங்க பெரியவரே, நான் பார்த்துக்கிற” என்றாள்.

கையில் அந்த வார்ப் பை, அத்தாட்சிகளுடன் அவன் விசாரிக்கப் போய் இருந்தான். முன்னிரவில் திரும்ப வந்த போது, கடை பொசுங்கிக் கிடந்தது.

ஒரு ஈ குஞ்சு வீட்டினுள் இல்லை. வெறும் தட்டுமுட்டுக்கள் தானிருந்தன. அவர்களின் துணிமணிகள் கூடத் தென்படவில்லை.

அவர்கள்... என்ன ஆனார்கள்?

“பொடியனை ஆமி புடிச்சிக்கிட்டு போயிற்று. மத்தவங்க எங்க போனாங்கன்னு தெரியல்ல...” என்று அடுத்த பக்கத்துக் குடிசையில் கிழவி ஒருத்தி தகவல் கொடுத்தாள்.

பெண் குழந்தைகளை, அந்தத் தாயை, இராணுவ வெறியர்கள் கடத்திப் போயிருப்பார்களோ?

முருகேசுவுக்கு நினைத்தால் நெஞ்சு விண்டு போகிறது.

தேனீக்கூட்டில் புகை போட்டால் நாலா பக்கமும் தானே சிதறிப் போகும்? ராணுவத்தினர் ஏடா கூடமாகப் பெண்களைக் குலைத்திருந்தால் அதற்குரிய தடயங்கள் இருக்குமே? ஆனால்... அதொன்றும் இல்லை. ஒருகால் அவர்கள் வேறெந்தப் பக்கத்திலேனும் ஓடிப் போயிருக்கலாமல்லவா? முருகேசு மேலும் சில நாட்கள் அங்கே விசாரித்துக் கொண்டு தேடி அலைந்தான். இறுதியில், இந்தக் கரையில் அவர்கள் வந்திருக்கக் கூடும் என்ற நம்பிக்கையைக் கையில் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறான்.

அவனுடன் லாஞ்சியில் வந்தவர்கள் அனைவரும் எங்கெங்கோ சிதறியிருக்கிறார்கள். இவனுக்கும் மண்டபத்துக்குத்தான் சீட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இவனிடம் விற்கவும் பொருள் இல்லை. இந்தியாக் காசும் இல்லை. மண்டபம் சென்றாலே பிரச்னைகளுக்கு வழி காண முடியும். ஒரு கால் அவர்கள் மண்டபத்தில் இருக்கலாம்.

அக்கினி தீர்த்தம் என்று பெயர் பெற்ற புனிதக் கரையின் அருகே மரங்களின் நிழலில் ஓர் அகதிக் கும்பல் வேரூன்ற மண் பறித்திருக்கிறது. கைப்பொருளை விற்றுக் கஞ்சிக் காய்ச்சிக் குடிப்பவர்களும், இராமகிருஷ்ண மடத்துச் சாமியும் தொண்டர்களும் கொடுக்கும் உணவுப் பொட்டலம் கொண்டு ஒருவேளைப் பசியாறிப் பிழைக்கப் போராடுபவர்களுமாக வேர் பறித்த மக்கள் குலம் எங்கும் காணப்படுகிறது.

முருகேசுவும் முதல் நாள் தருமப் பொட்டலம் பெற்றுப் பசியாறினான். இன்று கடலில் மூழ்கி, நீறுதரித்து, கோயிலுக்குச் சென்ற பின் மண்டபம் செல்லத் தீர்மானித்திருக்கிறான்.

இராமேசுவரம் கோயில்...!

நிமிர்ந்து பார்க்கிறான். உடல் சிலிர்க்கிறது.

இவனுக்குத் தோட்டக் கோயில்கள் தெரியும். மாரியம்மன், முருகன், கணபதி கோயில்களுண்டு. கதிர்காமக் கந்தனை இரண்டு முறைகள் ராமாயியுடன் சென்று வழிபட்டிருக்கிறான். அந்தக் கோயிலில் சாமியைப் பார்க்க முடியாது. கப்புராளை திரையைப் பாட்டுவிட்டு உள்ளே பூசை செய்வார்.

இந்தக் கோவில்... அடேயப்பா!

உள்ளத்தின் அவநம்பிக்கைகளும், சஞ்சலங்களும் கரைந்தாற் போன்று உணருகிறான்.

இந்தியா...! அவனுடைய மூதாதையர் பிறந்து வளர்ந்து தாய்நாடு. இந்த நாட்டை, மண்ணை விட்டு வெள்ளைக்காரன் தோட்டத்துக்கு உழைக்கப் போன போதே அவர்களைக் கெட்ட காலம் சூழ்ந்து விட்டது...!

தாய் மடியை உதாசீனம் செய்து போகலாமா?...

எப்பேர்க்கொத்த மனிதர்கள் இந்தக் கோயிலை நிருமாணித்திருப்பார்கள்!

முருகேசு, பூகோள பாடமும் சரித்திரமும் படித்தானா?

மலைச்சரிவுகளும், தேயிலை திரைகளும், சிறிய மனிதர்களும், ஆணையிடும் கங்காணி மற்றும் உயர்படிக்காரரும் சர்வ வல்லமை பொருந்திய பெரியதுரை, சின்னத் துரை பங்களாக்களும் கொண்ட உலகில், வாழ்வின் ஒரே லட்சியமான பிள்ளையின் படிப்புக்காக உழைத்தே தன் மிடுக்கான இளமையையும் நடுத்தரப் பருவத்தையும் கழித்து விட்டான். இவன் கண்டிருக்கும் தனித்தன்மை படைத்து மனிதர்கள், பண்டாரம், பூசாரி, உடுக்கடித்து மேளம் கொட்டுபவர், சடங்குகள் செய்யும் உயர்குலத்தினர் ஆகியோர் தாம்.

இந்தச் சிறு உலகத்திலும் நூறு சாதி சம்பிரதாயம் பிரிவுகள் அரசோச்சாமல் இல்லை. பரமசிவம் பறச்சாதி என்று மாரிமுத்துக் கங்காணி பிள்ளைகளை அவன் காம்பிரம் பக்கம் போகக் கூடாது என்று அதட்டி வைத்திருந்தான். பரமசிவத்தின் மகள் சடயம்மா தான் ராமாயி கண்மூடிய பிறகு இவனுக்குச் சோறும் தேநீரும் வைத்துக் கொடுத்தாள். சொந்த மகளாகப் பிரியம் வைத்திருந்தாள். அவளும் புருசனும், அவனுடைய தம்பி குடும்பத்துடன் நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தம்பி ஆறுமுகம் தான் புதிய மனைவியுடன் இவன் வீட்டுக்கு வர இருந்தான்...

அதற்கே மாரிமுத்துவின் வீட்டில் இவன் சாதியை மட்டமென்று முடிவுகட்டி, மகன் பிரிந்து சென்றது நியாயம் என்று கூடச் சொன்னார்கள்.

சிங்களக் காடையர் தோட்டத்தில் கரைச்சல் விளைவித்த போது, இவர்கள் உயிருக்கஞ்சி மலைமேல் தேயிலைச் செடிகளுக்கிடையே தஞ்சம் புகுந்திருந்தனர். இரவு வருமுன், சமைத்த சோறு, பிள்ளைகுட்டி என்று தூக்கிக் கொண்டு ஈரத்தோடு ஈரமாக, விஷப் பூச்சிகளுக்கும் அஞ்சாமல் பதுங்கிய நிலையில் கூட அந்தச் சாதிச் சனியன் தலைகாட்டாமல் இல்லை. சடயம்மா, புளிச் சோற்றுப் பானையுடன், “மாமீ சாப்புடுறீங்களா?” என்று கேட்டா என்று, “ஏடீ பறக்கழுதை, எம்புட்டுத் தயிரியம் டீ,” என்று கூறினாள்.

இப்போது... இப்போது...?

பசி பசி என்று எப்படித் துடித்துப் போனார்கள்?

இராம கிருஷ்ண மடத்துச்சாமியும் தொண்டர்களும் கொடுக்கும் பொட்டலங்களுக்கு எத்தனை அடி பிடி?

கோயிலுக்குள் சஞ்சலங்களும் கவலைகளும் கழன்ற உணர்வில் அடி வைத்து நடக்கிறான். மக்கள் பல்வேறு தீர்த்தங்கள் முழுகிய பின் அடி வைத்து நடந்து நடந்து கல்தளம் முழுவதும் மண்ணும் தண்ணீருமாக இருக்கிறது. அந்தச் சில்லிப்பே இவனுக்குப் புதிய சிலிர்ப்பை ஊட்டிக் கொண்டிருக்கிறது. ஆடவரும் பெண்டிரும் - குழந்தைகளும்... ஈரம், மொழு மொழுவென்று சந்தன நிறங்களும், மெல்லிய ஆடைகளுமாகச் சீமான்களாகக் காணப் பெறும் மக்கள்; ஏழைகள், கருப்பர், குட்டையானவர்... என்று குழுமும் கோயில். அர்ச்சனை தட்டுக்கள், பூக்களின் நறுமணம் - பல்வேறு மொழிகளின் ஒலிகள் - உயரமான - பரவசப் புல்லரிப்பை தோற்றுவிக்கும் சூழல்...

“இந்தக் கோயிலை முத முதல்ல யாரு கட்டினாங்க தெரியுமா? சிரீலங்காவை ஆட்சி புரிந்த பராக்கிரமபாகுதான் முதமுதல்ல இன்னிக்குக் கருப்பக்கிரகமா இருக்கிற பகுதியைக் கட்டினான்...”

முருகேசு திடுக்கிட்டாற் போல் கொடி மரத்தின் கீழ் நிற்கிறான்.

“யாரு இந்தப் பய...? பாத்த மொகமா இருக்கு?...”

நெஞ்சிலே அழுத்தமாக நிரடுகிறது. மென்மையான அந்த மூக்கும் உதடுகளும் அரும்பு மீசையும், எண்ணெயும் தண்ணீரும் கோத்த கருமுடியும்... எந்தக் கூட்டத்திலும் கண்டு கொள்ளும் நெடு நெடு உயரம், முழுக்கைச் சட்டை, குரல்... குரல் கூட...

“இந்த லிங்கம் சீதாதேவி மணலால் பிடித்து வைத்து ராமர் பூசை செய்ததுன்னு சொல்லுவாங்க. வடக்கு தெக்கு எல்லாப் பிரிவினையும் வெள்ளக்காரன் வந்தப்புரம் தான் வந்தது. முதமுதல்ல, இந்த லிங்கம் கரையில, கோயிலில்ல இருந்ததாம். ஒரு குருக்கள் சாமி, தினம் வந்து பூசை பண்ணிண்டிருந்தாராம். அப்ப, ஈசுவரன் அவர் கனவில் வந்து “பக்தா, நான் எத்தனை நாளைக்கு இப்படி மழையும், வெயிலும் கொண்டிட்டு இருப்பேன்? எனக்கு ஒரு நல்ல கல்கட்டிடம் எழுப்பணுமே!” என்று சொன்னாராம். அப்ப, குருக்கள், “சாமி, உங்களுக்குக் கற்கோயில் எழுப்ப இந்த ஏழை கல்லுக்கு எங்கே போவேன்? இங்கே மலையும் கூட மணலாக அல்லவா இருக்கிறது?” என்றாராம். அதற்கு ஈசுவரன் “பக்தனே கேள். இந்தக் கடலைத் தாண்டிப் போ; தெற்கே இலங்கையை ஆளும் ராஜா வயிற்று வலியினால் ரொம்பக் கஷ்டப்படுகிறான். நீர் ஒரு தோணியிலேறிப் போய் அவனைக் கண்டு, திருநீறு கொடுப்பீர். அவனுக்கு நோவு குணமாகும். உமக்கு என்ன பரிசு கொடுக்கட்டும் என்று கேட்பான். அப்போது இங்கே ஒரு கற்கோயில் எழுப்ப வேண்டும் என்று சொல்!” என்று சொல்லி மறைந்து போனார்.

“குருக்களையா, உடனே இங்கே கரையில் மீன் பிடிக்கும் மீனவரிடம் சென்று சொல்ல, அவர்கள் இவரை ஒரு தோணியிலேற்றி, மன்னார்க்கரையில் விட்டார்கள். குருக்கள் காடுகளில் பயணம் சென்று ராஜாவைப் போய்ப் பார்த்துத் திருநீறு கொடுத்தார். இறைவன் சொன்னபடியே, ராஜாவின் நோய் குணமாக, ரொம்ப சந்தோஷமடைந்தார்.

“குருக்கள் தன் கனவை அவரிடம் சொல்லி, ”ஈசுவரனுக்கு ஒரு கற்கோயில் கட்ட வேண்டும்” என்று வேண்டினார். கல்லை அளவாக எடுத்துக் கொண்டு கடலில் செல்ல வேண்டுமே? அதிகமானாலும் சிரமம்; குறைவாகப் போயிவிட்டாலும் சிரமமாயிற்றே? ராஜா திரிகோண மலையில் கற்களெடுத்து, முதலில் அங்கேயே சிறுகோயில் அமைக்கக் கட்டளையிட்டான். பின்னர் அதே அளவு கற்களைத் தோணியில் ஏற்றிக் கொண்டு இக்கரை வந்து இங்கே சுவாமிக்கு முதன் முதலில் கோயில் அமைத்தான். இன்னைக்கும் கருவறை தெரியிதே, அது அந்தக் கட்டிடம் தான். பின்னால், பல ராஜாக்கள், நகரத்தார், எல்லாரும் சேர்ந்து பெரிய பெரிய பிரகாரங்கள், மண்டபங்கள் எல்லாம் கட்டினாங்க...”

முருகேசனுக்குச் சட்டென்று நினைவுக்கு வந்து விடுகிறது. “எலே, நீ சுந்தரலிங்கம் இல்ல?...”

கங்காணி சந்தனசாமியின் பையன்... குமாருவுடன் கூடப் படித்தான். வெளியே ஜோசப் ஸ்கூலில், ஒரு வருசம், தாக்குப் பிடிக்க முடியவில்லை. சந்தனசாமி குடும்பம், எழுபதிலேயே இந்தியா போய்விட்டார்களே...?

அந்தக் கூட்டத்துடன் இவனும் அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டே நடக்கிறான். அவர்களும் தமிழர்கள் தாம். ஆனால் வெளியூர்க்காரர்கள்...

“எலே... நீ... சுந்தரலிங்கமில்ல?”

அவன் திடுக்கிட்டாற் போல் தான் பார்க்கிறான். ஆனால் புன்னகை செய்து விட்டுத் தன் தொழிலில் கண்ணாய் இருக்கிறான்.

கருவறைக்கு முன் நின்றதும், அருச்சனைத் தட்டைக் கொடுத்து, பணிவாக அவர்களுக்கு நல்ல தரிசனம் கிடைக்க வழி செய்கிறான்.

முருகேசு, முக்கால் மணி நேரமும் வியப்புடனும் பிரமிப்புடனும் அவர்களுடன் சுற்றிய பிறகு, வெளியே கற்றூணருகில் நிற்கும் போலீசுக்காரப் பெண்பிள்ளையைப் பார்த்துக் கொண்டு, தயங்குகிறான்.

அந்தப் பெண்களைப் பற்றி இவளிடம் கேட்டால் தகவல் கூறுவாளோ? அப்போது, சந்தனப் பொட்டுடன் சுந்தரலிங்கம் அவனருகில் வருகிறான்.

“மாமோ?... நீ...ங்க... ஆருன்னு தெரியல... பார்த்த சாடயா இருக்கு...”

“குமாருவோட அப்பா... எல... முருகேசு...”

“ஏ... மாமோ...! நீங்க... நீங்களா? தாடி மீசையெல்லாம் நரச்சி, எப்படிப் போயிட்டீங்க? அடையாளம்னு தெரியிறது, ஒங்க கண்ணும் மூக்கும் குரலுந்தா. நீங்க எப்ப வந்தீங்க? எங்க இருக்கிறீங்க? மாமி காலமாயிட்டதா கேள்விப்பட்டேன்...”

“ஒங்கப்பா, அம்மா, குடும்பம்லாம் எங்க இருக்காங்க?... ஒங்கப்பா, புத்திசாலித்தனமா முன்னமே வந்தாரு. இப்ப பாரு, எலங்கைச் சீமயே பத்தி எரியிது. அன்னிக்கு அனுமான் நாயத்துக்கு எரிச்சாரு. இன்னைக்கு அநியாயத்துக்குச் சுட்டுப் பொசுக்குறானுவ...”

அவனுடைய நெஞ்சம் பொல பொலத்துக் கொட்டுகிறது - ஊர்க்காரன், மைந்தனைப் போல் உறவுடையவன் என்று பற்றிக் கொள்கிறது.

“குமார இங்க ரெண்டு மூணு மாசம் முன்னாடி கூடப் பார்த்தேன்...”

“இங்கியா? இங்க இருக்கிறானாப்பா...?”

“இங்கன்னா, இங்க என்னப்போல தொழில் செய்யிறவனில்ல. இங்க பார்ப்பேன்னா, வருவான்... இப்பதா ரெண்டு மாசம் முன்ன பாம்பன் கிட்டப் பார்த்தேன். ஸ்டேஷன்ல நின்னிட்டிருந்தான், ரயிலுக்கு... எனக்கு அங்க ஸிடிஸன் ஷிப் இருக்கு, ஆனா... மனசு கேக்கல, அங்க நடப்பு ரொம்பக் கஷ்டமா இருக்கு. நான் இங்க தான் வந்திடறதா இருக்கிறேன்னான். சம்சாரத்து வீட்டுக்காரங்கல்லாம் மெட்றாஸ்ல வந்திருக்காப்பல. ஒரு மச்சான் படிக்கிறானாம்... மச்சாள் புருஷன், சவுதியிலோ துபாய்லோ இருக்கிறது போலச் சொன்னான்...”

“என்னைப் பத்தி ஏதேனும் பேசினானா?” என்று கேட்க நெஞ்சு துடிக்கிறது. ஆனால்... ஆனால்... நீ பிள்ளை இல்லை என்று சொல்லி விரட்டினானே? அந்த வைராக்கியம் குறுக்கே நிற்கிறது.

“நீங்க எப்ப வந்திய...? யாரோட இருக்கிய?...”

முருகேசு சுருக்கமாகத் தெரிவிக்கிறான்.

“அந்தப் பிள்ளைக எங்க போச்சின்னு தெரியலப்பா... என்ன நம்பி ஒப்பிச்சா. மன்னாருக் கரையெங்கும் விவரம் விசாரிச்சேன். ஒண்ணும் புடிபடல...”

பொங்கிவரும் கண்ணீரை முருகேசு துடைத்துக் கொள்கிறான்.

“இப்ப ஒண்ணுமே புரிபடாம இருக்கு. அல்லாம் எப்படி எப்படியோ வந்து வுழுறாங்க கரையில. ஆனா, இந்தக் கரைக்கு வந்த பெறகு - வந்திருந்தாங்கன்னா, எங்கானும் கேம்பில இருப்பாங்க... அப் கன்ட்ரி ஆளுவ கப்பலிருக்கிறப்பதா வந்தாங்க. இப்ப அவ்வளவு சனமும், மீன்பரவங்க, அங்கங்க சிறு கடை தொழில்னு வச்சிருக்கிறவங்கதா, வாராங்க... மண்டபம், தூத்துக்குடி, திருச்சின்னு போயிருப்பா...”

“நீ... இப்ப எத்தினி காலமா இருக்கேப்பா இங்க? கலியாணம் காச்சி ஆயிருக்கணமே?”

“இல்ல மாமா, எங்கையா, தமிழ்நாட்டுல சொந்த நாடுன்னு வந்ததுக்கு ரொம்பப் பட்டுட்டாரு. இங்கே சொந்தக்காரங்க நில புலம் ஒண்ணில்லன்னுட்டாங்க. நா ஒருத்தந்தா அப்ப வெவரம் தெரிஞ்சவ. இங்கே தொழில் செய்யன்னு பணம் எல்லாம் இப்ப தான் குடுக்கறாங்க. அப்ப ஒண்ணுமில்ல. அப்பா ரொம்ப கஷ்டப்பட்டாரு. கிராமத்துல வேலை ஒண்ணுமில்லன்னு, கொண்டு வந்த நகை நட்டு எல்லாம் கரைஞ்சதும், வேலைக்குப் போற வயசும் இல்ல. மிச்சமும் செரமம். அதே மனசு ஒடஞ்சு சீக்காயி, தூத்துக்குடி ஆசுபத்திரில செத்து போனார். ரெண்டு தங்கச்சியக் கட்டிக் குடுத்திட்டோம். ஒரு தங்கச்சி கான்வென்டில நிக்கிது. ஏழைப் புள்ளயா படிப்பு சாப்பாடுன்னு... ஒரு தம்பியைப் படிக்கப் போட்டேன். பத்து தா முடிச்சா. சிவகாசில லித்தோ வொர்க்ஸ்ல வேல பார்க்கிறான். அவந்தா முந்நூறு ரூபா போல சம்பாதிக்கிறா. அம்மாளும் அங்கதா இன்னுமொரு தங்கச்சிய வச்சிட்டிருக்காங்க. நானும் என்னென்னமோ தொழில்னு போனவந்தா. சிவகாசியில, மாட்சிஸ்ல கணக்கப்புள்ளயா வச்சுக்கிட்டா... ஆனா, அங்க நெலவரம் ஒண்ணும் புடிக்கல. கோபம் வந்து மானேசர அடாபுடான்னு பேசிட்டேன். பொம்பிளப் புள்ளியள அக்கிரமமா அநியாயம் பண்ணிப் போடுறானுவ, அதனாலதான் வேதக்காரங்களாக்கினாலும் போவட்டும், கான்வென்டில் பாதுகாப்பா இருக்குமின்னு விட்டுப்புட்டோம். கடசீத் தங்கச்சிக்கு நாங்க வாரப்ப, மூணு வயசு. அது இப்ப சமஞ்சு நிக்கி. இதெல்லாம் பாத்த பெறகு எனக்குக் கலியாணம்னு கட்டிக்கணும்னே தோணல...

“வாங்க, மாமோ... காபி சாப்பிடுவோம்...”

இவனுடைய மகன் ஒரு நாள் இப்படிக் கூப்பிடச் சந்தர்ப்பம் வந்ததில்லை. அவன் படிக்கிற நாட்களில் லயக்கோடியில் தென்படுமுன்னரே எப்படி மனசு துள்ளும்? பச்சை மரம் பால் ஒடிய முறிந்து விழுவது போல் பாசமும் உறவும் கூட உயிரற்றுப் போவதுண்டோ?

நேரம் காலம் இல்லாமல் அலையலையாக மக்கள் வருகிறார்கள். கடலில் முழுகுகிறார்கள். கோயிலுக்குப் போகிறார்கள்.

கெசட், டார்ச்லைட், சேர்ட், சராய் துணிகள் என்று வரிசையாகத் தோணிகளில் வந்த மனிதர்களிடம் வாங்கிய சாமான்களைக் கடைபரப்பி இருக்கிறார்கள். இவர்கள் பலருக்கும் சுந்தரலிங்கம் நெருங்கிய தோழமையுடையவன் போலும்!

“என்ன அண்ணாச்சி? ஆரும் வர இல்லையா?...”

“அண்ணாச்சி? ‘செட்டி வீட்டு சங்கு’ கேட்டியளே? இருக்கு?”

“அப்படியா? வச்சிருங்க. சாயங்காலம் கூட்டி வாரேன்!”

சுந்தரலிங்கம் சிரித்துக் கொண்டே நடக்கிறான்.

இவர்கள் கடைகளுக்கு இவன் பயணிகளைக் கூட்டி வருவான் போலும்!

“மூணு வருசமா இங்க இருக்கிறேன்... நான் இங்கே தேவஸ்தான உரிமை பெற்ற கைடு. மேல மேல படிக்கணும்னு ஆசை. எப்படின்னாலும், ஒரு பி.ஏ., எம்.ஏ.யும் எடுத்துடணும். படிச்சவன்னா அந்த மதிப்புத் தனிதா... மாமோ, தலைமுறை தலைமுறையா தோட்டக் காட்டில எதுவுமே தெரியாம உழச்சு உழச்சு அந்த மண்ணுல உரிமையில்லாத ஆளாகவே இருந்திருக்கிறோம்னு, இத்தனை லட்சம் பேருக்கும், அன்னிக்கு 48ல பிரஜா உரிமைச் சட்டம் கொண்டு வந்தப்பவே உறைச்சிருந்திச்சின்னா, இன்னிக்குக் கதை வேறயா இருக்கும். அட நாம தா இப்படி உழைக்கிறோம். நம்ம பிள்ளைக நல்லா வரணும்னு நீங்க ஒருத்தர் வாணா நினைச்சீங்க. மத்த அம்புட்டுப் பேரும் என்ன செய்தாங்க? என்னமோ ஆடுமாடு ஒப்பந்தம் போல ஒப்பந்தம் பண்ணிட்டாங்க. அடிமையாப் போனம், அடிமையா வந்து விழறம். இப்பவும் பாருங்க, ஈழம் வருமா வராதாங்கறது கேள்விக்குறியா நிக்கிறதுக்குக் காரணம், அப்கன்ட்ரில இருக்கிற பத்து லட்சம் தொழிலாளருங்கதா... இவுங்க நிலைமை என்ன?”

முருகேசன் பதில் கூறவில்லை.

காபிக் கடையின் முன் முறமுறப்பாக சமோசாக்கள் பிஸ்கத்துக்கள் வைத்திருக்கிறான். சுந்தரலிங்கம் உள்ளே சென்றமர்ந்ததும், “ரெண்டு சமோசாவும் காபியும் குடுங்கண்ணாச்சி!” என்று கூறுகிறான்.

ஒரு போலீசுக்காரனும் வாசலில் நின்று தேநீரருந்தி வருகிறான்.

“பெரியவர் ஆரு?”

“நம்மாளு, மாமன்...”

மரியாதையாகக் கூறி, சுந்தரலிங்கம் புன்னகை செய்கிறான்.

‘போலீசைக் கண்டதும் எதற்குப் பயப்பட வேண்டும்...’ என்று முருகேசு தனது கூனலை நிமிர்த்திக் கொள்ள முயலுகிறான். அந்த மகன் உடனிருந்தால்,... அவனுடைய தலை குனிய வேண்டியிருக்காது. தலைமுறை தலைமுறையாக வந்தத் தாழ்வுச் சரட்டை அறுத்து விட்டு, உயர்குடி மக்களுக்குச் சமமாக இருந்திருக்கலாம். சுந்தரலிங்கம் இவனும் இந்த நேரத்துக்கு மகன்போல்.

சமோசா முறமுறவென்று, உப்பாய், விருவிருப்பாய், சுவையாய், நாவுக்கே, சுரணையூட்டுகிறது. இவன் சாப்பிடும் வேகம் பார்த்து, “மாமு, இன்னொன்று சாப்பிடுங்க” என்று தன்னுடையதைத் தள்ளி வைத்து, இன்னும் இரண்டு கொண்டு வரப் பணிக்கிறான். பிறகு நல்ல காபி. சுவையாக மணமாக... இரத்தத்தைக் கொடுத்து, தேயிலைக் காடுகளில் உழைத்தார்கள். மலையைச் சீர் திருத்துவதில் இருந்து, அது உசத்தி, ‘பிகோ’ சரக்காக, பெட்டிகளில் அடைபட்டு, கப்பலில் ஏறும் வரையிலும் இவர்களின் செய்நேர்த்தியில் தான் வளர்ந்திருக்கிறது. ஆனால், இந்த ஏழைகளில் எவனேனும் அந்தத் தேயிலைத் தூளின் ருசியைச் சுவைத்திருப்பானோ? சல்லடையில் வேலை செய்த துலுக்காணம் பயல், சட்டை மடிப்பில் சிறிது மறைத்து வைத்திருந்ததை, இவர்களில் ஒருவனான சிங்காரமே காட்டிக் கொடுத்தான். அந்த டீமேக்கரும் கண்டாக்கும் சிங்களவர்களில்லை... துலுக்காணம் பயல் அடி கொண்டதும், அவமானப்பட்டதும், விசும்பி விசும்பி அழுததும்...

சே, காப்பி ருசிக்கவில்லை. அவன் வயிற்றைச் சங்கடம் செய்கிறது. காபி குடித்து விட்டு வருகையில் மணலில் சூடேறி இருக்கிறது.

நெருக்கடியான வீதி கடந்து கிளையாகச் செல்லும் சந்து போன்ற சிறு தெருவில் சுந்தரலிங்கம் அவனை அழைத்துச் செல்கிறான்.

நீண்ட சந்தாக விரிகிறது. அதில் ஒரு பூட்டப்பெற்ற அறைக் கதவைத் திறக்கிறான்.

“வாங்க மாமோ!...”

ஒரு கயிற்றுக் கட்டில், சுவரில் ஒரு சிம்மணி விளக்கு மாட்டியிருக்கிறான். ஒரு மர அலமாரியில் சில புத்தகங்கள். ஒரு தகரப் பெட்டி... கொடியில் ஒரு சராய், லுங்கி, துண்டுகள்...

“உக்காருங்க மாமு?...”

முருகேசுவுக்குக் கேட்க வெட்கமாக இருக்கிறது.

“சுந்தரலிங்கம்... நீ தப்பா நினைச்சிக்க மாட்டியே?...”

“என்ன மாமா? கேளுங்க. எதுன்னாலும்...”

“ஒண்ணில்லப்பா, நேத்து, புடுங்கிக் கடாசின பயிரா வந்து விளுந்தப்ப, மடத்துச் சாமியாரு வந்து தேத்தண்ணி குடுத்தாவ. புது உசிர் வந்தாப்பில இருந்திச்சி. நா ராமாயியக் கட்டின பெறகு, கள்ளுசாராயம் கிட்டப் போனவனில்ல. ஆனா, மன்னாரு வந்தப்புறம் மனசுக்கு ரொம்பக் கஷ்டமாப் போயி, ரெண்டு மூணு நாளு பாவிச்சேன். அன்னைக்கு, வூடு வாசலும் பொண்ணுங்களும் போயிட்டாங்கன்னு வந்து பாக்கறப்பக் கூட ரொம்ப ஒடம்புக்கு முடியாம குடிச்சிருந்தேன். அந்தப் பாவந்தானோ என்னமோன்னு உள்ளாற மனசில உறுத்திட்டே இருந்திச்சி. ஆனாக் கூட, போலீசுக்காரன் இமிசையோட, என் சாமானக் குத்தி எடுத்துப் போட்டப்ப, திருடன்னு நெனச்சிட்டானேன்னு ரொம்பத் துடிச்சிப் போனேன். அப்ப, இத்திரீ... சாராயம் வேணும்னு தொணிச்சி. சாமியார் வந்தது, தேத்தண்ணீர் குடுத்தது மட்டுமில்ல. அன்பா ரெண்டு சொல்லு மணக்கரையில வந்து வுழுந்தவன, என்ன கொண்டாந்தேன்னு கொத்தாம...”

அவன் கைகள் குவிகின்றன.

“இது புண்ணிய பூமிதாப்பா. இங்க மனிசங்க இருக்காங்கன்னு நினைச்சிட்டு, அந்தப் பிள்ளங்க பத்திச் சொன்னப் பின்னால எல்லாம் எழுதிக்கிறேன், வெவரமான்னு, அவுசரமாப் போயிட்டாரு... இப்ப ஒண்ணில்ல சுந்தரலிங்கம். கையில ஒரு சதமில்ல - ஒரு பீடி வேணும்...”

சுந்தரலிங்கம் வெளியே சென்று ஒரு கட்டு பீடியும் நெருப்புப் பெட்டியும் கொண்டு வந்து வைக்கிறான்.

“மாமா, சவுகரியமா இருந்துக்குங்க. நான் இப்பப் போகணும். போயிட்டு ஒரு ரெண்டு மணி சுமாருக்கு வாரேன்...”

சுந்தரலிங்கம் போகிறான்.

அத்தியாயம் - 2

புகையிலைக் காரலின் நெடி சுகமாகச் சூழ்ந்து கொள்ள, முருகேசு பீடி புகைக்கிறான்.

கடலுக்கப்பால்... மலைச்சரிவுகள், தேயிலைத் தோட்டங்களிடையே அவன் பூதலத்தில் கண் விழித்துக் கண்ட தனி உறவுகள்... மனிதநேயங்கள், கெடுபிடிகள், சின்னத்தனமான சண்டைகள்... எல்லாம் அந்த மண்ணோடு இறுகிப் பிடித்த வாழ்வாக அல்லவோ வேரோடியிருந்தது?

ஆனால் இந்த முதிய காலத்தில் பெயர்ந்து வந்து இக் கடற்கரையில் விழுந்திருக்கிறான். இங்கு வேர் பற்றுமோ?

அந்தக் குழந்தைகளை இராணுவம் இழுத்துச் சென்று...

கண்கள் நிரம்ப, நெஞ்சடைக்க, அதற்கு மேல் நினைக்க முடியவில்லை.

ஆண்டாளு! நான் பாவி! பொஞ்சாதி புள்ளங்கள விட்டுப்போட்டுத் தான் மட்டும் உசிர் தப்ப பஸ்லேந்து குதிச்சு ஓடி வந்தான்னு மருமகனைச் சொன்னியே! நானும் தோத்துப்பிட்டேனே...!

பீடிப்புகையும் கூட இப்போது இரணமாகக் கொல்கிறது.

கடலில் போய் முடிந்து விடலாமா என்று கூடத் தோன்றுகிறது...

ஆனால்... குமாரனை... அந்த உயிரின் உயிராகப் பொரிந்து தெரித்த சுடரை, சுடரின் கொழுந்தைப் பார்க்கக் கூட வாய்ப்பின்றி முடிவதா?

ஆண்டாளுவின் பேத்திகளைக் கூட்டிக் கொண்டு வரும் சாக்கில் இந்திய மண்ணை நாடி அவன் புறப்பட்டதற்கு மூல காரணமே அந்தச் சுடர்ப் பொரிதானன்றோ?... சொல்லப் போனால், அவன் பிள்ளை, குமாரன், என்ன தப்புச் செய்தான்? இவன் மனசுக்குள், அருமையாகப் படிக்கவைத்திருக்கும் மகனுக்கு, ஹெட் கே.பி. என்றழைக்கப்பெறும் பெரிய கணக்கப்பிள்ளை பழனியாண்டியின் மகள் செல்லத்தைக் கட்டி வைக்க வேண்டும் என்ற இலக்கு இருந்தது.

தேயிலைத் தோட்ட சாம்ராச்சியத்தில் இந்தச் சம்பந்தம் அவனுக்கு உயர்ந்த இலட்சியம். அந்தப் பெண், சிவப்பாக, சிட்டு போல் அழகாக, மரியாதையாக இருப்பாள். அவருக்கும் படித்த பையனை மருமகனாக்கிக் கொள்வது மிகவும் உகப்பாக இருந்தது.

ஆனால், படிக்கச் சென்ற இடத்தில், பாதிரியார் சிபாரிசில் மேலும் மேலும் படிப்பதாக அவன் தங்கியதும், ‘ரெக்வானேயி’லேயே நின்றதும், அவனுடைய நடவடிக்கைகள் இவனுக்கே புரியாத உலகமாகப் போனதும்... உள்ளூற வேதனையாகவே இருந்தது.

சின்னதுரை புதியவனாக வந்தபிறகு லயத்தில் இவர்களுக்கு அவ்வப்போது சங்கடங்கள் விளைந்தன.

இனக்கலவரம் என்ற பெயரில்லை என்றாலும், கோழிகள் களவு போகும். இவர்கள் தங்கள் லயத்தை ஒட்டிப் பயிரிட்ட விளைவுகள் பறிபோகும்; நாசமாக்கப்படும். பரமு நட்டு வைத்திருந்த மையக்குச்சிகளைப் பிடுங்கிப் போட்டு கோழிகளைக் களவாடிப் போனதும், தொழிற்சங்கத்து ஆறுமுகம் வந்து, மையக் குச்சிகளைக் கட்டி டவுனுக்குக் கொண்டு போகச் சொன்னன். முந்நூற்றைம்பது ருபாய் நட்டஈடு கோரி வழக்காடினார்கள்.

பரமு அப்போது வந்து சொன்னான்:

“முருகேசண்ணே, வக்கீலையாகூட நம்ம குமருதா எல்லா விவரமும் பேசிக் குடுக்கிறான். கந்தோர்ல அவந்தா டைப் அடிக்கிறான். ‘நீங்க ஒண்ணும் கவலிக்க வேண்டாம். மாமு, நாயம் கிடைக்கும்’னு சொன்னா...”

ராமாயியும் அவனும் அன்று ஆகாயத்தில் அல்லவோ பறந்தார்கள்?

அந்த வக்கீல் முகமதியர் என்றும் தமிழர் என்றும் தெரிந்து கொண்டான். பரமுவுக்கு நட்டஈடு தீர்ப்பாயிற்று.

அவ்வப்போது குமாரு மின்னல் போல்தான் தோட்டத்துப் பக்கம் தலை காட்டிப் போனான். இவன் கஷ்டப்பட்டுப் பணம் அனுப்பிக் கொடுக்க வேண்டாம் என்றும், தானே சம்பாதிக்க முற்பட்டுவிட்டதாகவும் சொன்னபோது ஆனந்தக் கண்ணிர் வடித்தார்கள்.

“எலே, அந்தப் பொண்ணு சமஞ்சி மூணுவருசமாச்சி. நல்ல வடிவான பொண்ணு. புறாப் போல கொணம், இந்தத் தையில கலியாணத்த வச்சிக்கலாம்னு கேக்க இருக்கிற...”

சாடையாக அவன் மகனிடம் தெரிவித்தபோது, “இப்ப என்னப்பா கலியாணத்துக்கு அவுசரம்?” என்று சொல்லி விட்டுப் போய்விட்டான்.

கொழும்பில் பேப்பராபீசில் வேலைக்குச் சேரப் போவதாகவும் பிரஜா உரிமைக்கு மனுப் போட்டிருப்பதாகவும் வந்து சொல்லி, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அவனிடம் ஏதேதோ பத்திரங்களில் கையொப்பம் வாங்கிக் சென்றான்.

பிறகு அவன் வெகுநாட்கள் வரவில்லை. கடிதமும் எழுதவில்லை. பழனியாண்டிக்கும் புதிய துரைக்கும் ஒத்துக்கொள்ளவில்லை. திடீரென்று அவரை வேறு டிவிசனுக்கு மாற்றினார்கள். அவர் முருகேசுவிடம் வந்து சொன்னார்:

“நா ஊருநாட்டோட திரும்பிடலாம்னு இருக்கிறேன். செல்லத்தின் கலியாணந்தா குறுக்கே நிக்கிது. இங்கே இனிமே சரிப்பட்டு வராது...”

குமருவுக்கு கடிதம் எழுதினான்; ஆளனுப்பி விசாரித்தார்கள். ஒரு நாள் திடுமென்று புறப்பட்டு வந்தான்.

“நான் வாழ்க்கையில் நல்லபடியாக முன்னுக்கு வந்து இந்த மொத்த சமூகத்துக்கும் உருப்படியா எதானும் செய்யணும்னு இருக்கிறேன். இந்தத் தோட்டக் காட்டில கலியாணம் செஞ்சிட்டு மறுபடி மறுபடி வமிசம் பெருக்கிட்டு இங்கியே உழலப்போறதில்ல! வுடுங்க” என்று கடுமையாகப் பேசினான்.

முருகேசு என்னமாய் அதிர்ந்து போனான்?

அந்த அதிர்ச்சியின் சிதிலங்களாக வசைகள் பொல பொலவென்று உதிர்ந்தன. ஆனால் ராமாயியோ, “வாணாமுங்க, நம்ம புள்ள இந்த மொத்தத் தோட்டத்திலும் மேன்மையா இருக்கணுமின்னுதான நெத்தத்த தண்ணீயாக் கொட்டிப் பாடுபட்டோம்?”

“அவம் பேசுனதல என்ன தப்பு? வீடு நெறயப் புள்ளங்களப் பெத்து வச்சிட்டிருந்தாலும் பன்னண்டு வயிசிலியே கத்தியக் கையில குடுத்துப் புல்லு வெட்டப் போகச் சொல்லறதும், பொம்புளயானா கொழுந்து கிள்ள அனுப்புறதும்னுதா லட்சோப லட்சமா வந்திருக்கிறம். இப்ப இந்த மண்ணே நமக்கு இல்லேன்னு கரச்சலக் கொண்டாராங்க. நம்ம புள்ள லச்சத்தில ஒத்தனா வர்றது பெருமயில்லியா! நம்ம புள்ளய நம்ம நாக்கால அடிக்கலாமா?”

ஒரு தாயாக அவள் பொறுமை... அவளுக்குக் கோபமே வந்ததில்லை. அவள் துன்பங்களை முகம் சுளிக்காமல் பொறுத்தாள்.

அந்தப் பழைய காலத்தில், நான்கு மாசத்துப் பிள்ளையைச் சுமந்து கொண்டு அவன் தாய், புருசனுடன் கங்காணியுடன் மன்னார்க்காட்டில் நடந்து வந்த போதே, அரவு தீண்டிப் புருசன் செத்துப் போனான். பின்னர் அவன் தாய், தோட்டக் காட்டில் நாலணாக் கூலிக்கும் இரண்டனாக் கூலிக்கும் உழைக்க வேண்டி இருந்தது. ஓர் இளம் பெண் தன்னந் தனியாக இருந்துவிட முடியுமா? கங்காணிச் சுப்பனுக்கு இரண்டாந்தாரமானாள். எட்டுப் பிள்ளைகளைப் பெற்றாள். அந்தக் காலத்து நினைவுகள் இப்போதும் கூட அவனுக்கு முழுதும் அழிந்து விடவில்லை.

பிள்ளைக் காம்பராவின் கிழவி. முகச் சுருக்கம் தென்ன மரத்துப் பன்னாடைக்கீறல் மாதிரி... முடி குப்பென்று வெளுத்திருக்கும். சாயம் மங்கின தோம்புச் சேலையில் கொள்ளாமல் பெரிய ‘கொச்சிங்காய்’ அளவுக்குத் தளர்ந்து தொங்கிய மார்புகள்... தூளிப்பிள்ளைகளின் சிறுநீர் கோலங்களாகத் தரையில் விழுந்திருக்கும்... இவர்களை உள்ளே அடைத்து அதட்டி வைப்பாள்.

ஒரு நாள் கொட்டடிக்கு வெளியே சென்று தேயிலைச் செடியைக் கிள்ளி வைத்துப் பாப்பாத்தியுடன் கறி சமைத்து விளையாடினான். கங்காணி வந்து முதுகில் சாத்தி, கிழவியையும் காய்ச்சிக் கதவைப் பூட்டச் சொல்லிப் போனார்.

பாப்பாத்தி ஆண்டாளுவுக்கு மூத்தவள், மூன்று பிள்ளை பெற்ற பின் நாலாவது பேறில் பிள்ளை குறுக்கே விழுந்து முடியாமல் செத்துப் போனாள். ருக்குமணி வீரய்யா மாமனின் பெண். கண் பூவிழுந்து தெரியாமல் போய் விட்டது. அம்மாவுக்கு வீட்டிலிருந்து ரொட்டியும் தேத் தண்ணியும் தூக்கிக் கொண்டு சீராக நடந்து எந்த மலையில் கொழுந்து கிள்ளுகிறாளோ அங்கு போய்விடும்.

அவள் சமைந்த பெண்ணாகி, ரோஸ் குங்குமமும் மூக்குத்தியுமாக லயத்தின் பக்கம் விறகு சுமந்து வருவதும் பளிச்சென்று நினைவில் உயிர்க்கிறது. துரையின் குதிரைக்காரன் ஒருவன் காளைமாடு போல் திமிரெடுத்து உலாவினான் கையில் காசு குலுங்க, கல்யாணம் கட்டாமலே அவன் லயப் பெண்டுகளுக்கு யமனாகத் திரிந்தான். ருக்குமணி, பாவம், மூணுமாசம் கர்ப்பம் வந்து, பண்டாரம் மருந்து கொடுக்க ஏடாகூடமாகிச் செத்துப்போயிற்று.

முருகேசுவுக்கு அப்போது மீசை முளைக்கும் வயசு. “அம்மா, ருக்குமணி, பாவம். அந்தக் குதிரைக்காரப் பயலைப் பாம்பு தீண்டவச்சு ஏன் சாமி கொல்லல?” என்று கேட்டான். பொன்னுசாமி சுவரில் முட்டிக் கொண்டு அழுதான்.

ராமாயி ருக்குமணியின் தங்கச்சிதான். அந்தக் குடும்பத்தில் பெண் கொள்ள அவன் தாய்க்கு அவ்வளவு இஷ்டமில்லைதான். ஏனெனில், மாமன் பெருத்த குடிகாரன். குடும்பச் சுமை பெரியது. மாமியும் சீக்காளி. பெண்ணும் நோஞ்சானாக இருந்தாள். ஆனால், முருகேசுவுக்கு அந்த நாளிலிருந்தே யாரையும் நோகும்படி பேசக்கூடாது என்ற பண்பு இருந்தது. ராமாயியைக் கல்யாணம் செய்து கொள்ள இஷ்டம் என்று நின்றான்...

ஒருநாள் கூட இவளைக் கல்யாணம் செய்து கொண்டோமே என்று அவன் நினைத்ததில்லை. சீக்காளிதான், மாசத்தில் முழுநாட்களும் வேலை செய்தாள் என்பதே இல்லை; அதோடு எத்தனை குறைப்பிள்ளை!

குடிக்காமல், கட்டியவளை அடிக்காமல், மாமி நாத்தி ஏச்சுப் பேச்சுக்களும் சாடை சள்ளைகளும் செயலற்று மாயும் வகையில் ஒரு புருசனாய், அவன் வாழ்ந்திருக்கிறான். “புள்ள, புல்றவெட்டு கன்டாக்கு குடுத்திருக்காவ. பொழுதோட கஞ்சி குடிச்சிட்டுப் போற... பதனமா பாத்துக்க?” என்று சொல்லிவிட்டுப் பேய் போல் உழைக்கப் போவானே? அவளும் கூட வருவாள். நாட்டானிடம் (சிங்களவரிடம்) கூடுதல் கிரயம் கொடுத்து அரிசி வாங்கி மற்றவர் சாப்பிடும் நாட்களிலும் இவர்கள் கிழங்கையும் கட்டசம்பலையும், வைத்தே பொழுதைக் கழித்திருக்கிறார்கள்...

கதிர்காமம் சேவித்து, கண்ணகியம்மனை வழிபட்டு ஏழாவதாக அவள் வயிற்றில் தங்கிப் பிறந்தபிள்ளை... குமாரவேலன் என்று பெயரிட்டனர்...

துரை வீட்டுப் பிள்ளைபோல் மேஜோடும் சப்பாத்தும் அணிவித்துப் பார்த்து மகிழ்ந்தனர். முருகேசுவின் தாய் நோஞ்சான் பெண்ணைக்கட்டி, மகனுக்கு ஒரு பிள்ளை வாய்க்கவில்லையே என்று குறைப்படாத பொழுது இல்லை. குமாரு பிறந்த போது அவள் உயிருடன் இல்லை. அப்போது, உள்ளூற அவளுக்கு ஒரு பிரார்த்தனை இருந்தது.

இந்திய மண்ணை அவன் பார்த்ததில்லை. ஆனால் அவன் தாயின் பூமி அதுதான். தெற்குக் கடலோரம், செந்தூர் முருகனைப் பற்றி அவள் சொல்லுவது உண்டு. வைகாசித் திருவிழாவைப் பற்றிப் பேரப்பிள்ளைகளுக்கு வருணிப்பாள்.

“செந்தூரு முருகா... ஒரு புள்ளை பிறக்கட்டும், வந்து காவடி எடுக்கச் சொல்லுறோம்” என்று மனமுருகி நைந்திருக்கிறாள்.

ஒருகால், அந்தப் பிரார்த்தனையை இத்தனை நாள் நிறைவேற்றாததால் தான் இப்படி அலங்க்கோலமாக வந்து விழுந்திருக்கிறானோ?...

முருகா... முருகா...!

கண்களில் நீரருவியாய்ப் பொழிகிறது.

கல்யாணம் கட்டியதும் மஞ்சக் கோடியுடன் அவளையும் அவனையும் அங்கு அனுப்பித்துப் பிரார்த்தனையை நிறைவேற்றச் சொல்லவேண்டும் என்று அவன் எண்ணியது உண்டு. பழனியாண்டி படித்த மருமகளைத் திருமணம் முடித்து, இந்தியாவுக்கு அழைத்துச் சென்றால், தனக்கும் ராமாயிக்கும் கூட அங்கென்னவேலை என்றும் கூட அவன் நினைத்திருக்கிறான்.

“புள்ள, நாம இங்க தொழிலவுட்டுப் போகாட்டியும், ஒரு நடை போயி, கப்பலேறி, செந்தூரு முருகன், ராமேஸ்வரம் கோயில், பழனி, மதுரை எல்லாம் பார்த்திட்டு வாரணும். பண்டு பண்டு வரும் கொலதெய்வங்களைப் பாக்கறது இந்த சென்மத்தில ஒரு கொடுப்பனயில்ல? நம்ம பய்யன் படிக்கணும் மேம்மயா வாரணும்னு நினச்சோம். எதோ முருகன் இந்தமட்டும் கொண்டு வந்திட்டா. நம்ம கடனையும் செலுத்தணுமில்ல!” என்று பரவசம் அடைந்தவனாகக் கனவுகண்ட முருகேசன் அவன்.

ஆனால், ராமாயி மன்னார் கடற்கரையே கண்டதில்லை.

ஆறுமுகம் தான் முதலில் சேதியை வந்து சொன்னான்.

“குமாரு... கல்யாணம் கட்டிக்கிட்டான் மாமு... உங்களுக்குத் தெரியுமா?” இவனாலும் ராமாயியினாலும் நம்ப முடியவில்லை.

“குமாரா...!”

“ஆமாம்... பொண்ணு... கொழும்பில பள்ளிக்கூட ஆசிரியரா இருக்கு. பி.ஏ. பரீட்சை கொடுத்திருக்கா. யாழ்பாணத்துக்காரங்க. அந்தப் பொண்ணு, எழுதுதாம். நாடகம், கதைன்னு. ரொம்ப நாளாவே பழக்கம் போல் இருக்கு. குமாருவும் எழுதறானில்ல?...”

குமாரு... குமாரு... நீயாடா இப்படித் துரோகியானே?

சீலை கூடக் கட்டாமல் துரைசானி போல் கவுன் போட்டுக் கொண்டு இங்கிலீசில் பேசும் ஒரு வருக்கம்... அவர்களைத் தோட்டக் காட்டுப் பயல் என்று ஏசும் வருக்கம், கங்கிருந்து பெண் எடுப்பதைப் பெற்றோர் ஒப்ப மாட்டார்கள் என்று அவன் இப்படி மீறிவிட்டானா?

குமாரு... டேய் குமாரு... இவன் கையில் நெளிந்து பூப் பூவாய்ச் சொரிந்து புளகிக்க வைத்த குமாரு, ஆய் அப்பனுக்குத் தெரியாமல் ஒருத்தியைச் சேர்த்துக் கொண்டான்.

நெஞ்செரிச்சல் தாங்கவில்லை. இரவெல்லாம் நிலை கொள்ளாமல் தவித்தான். தான் பற்றியிருந்த நூலேனி பட்டென்று அறுந்து அவனை எங்கோ எரி நெருப்பில் தள்ளி விட்டாற் போல் இருந்தது... முருகா, எனக்கு இப்படி புள்ளயே நீ குடுத்திருக்க வேண்டாமே?...

“முருகேசு, நா அப்பமே சொன்னன். இந்தத் தோட்டக் காட்டுப் பிள்ளய படிச்சா, பின்னுக்கு ஆயியப்பனையே மதிக்கமாட்டாங்கறது இப்பமாவது தெரிஞ்சிச்சா? அட இப்பிடி இப்பிடி விசம்னு வந்து சொல்ல கேட்டு, எதும் இல்லாம, ஒரேயடியால்ல மீறிப் போயிட்டா!”

“அட, வயசுப் பிள்ளைக பழகற எடத்தில தொடிசு வாரதுதா, நம்ம வயசில இங்க எல்லாந்தான் பார்க்கிறம். அதுக்குன்னு சொல்லாம கல்யாணம் கட்டிட்டு சேந்து வாழுறாங்கன்னா அப்புறம் அதென்ன, அணிப்புள்ள தென்னம்புள்ள...?”

பலரும் பலவிதமாக வந்து துக்கம் விசாரித்துவிட்டுப் போனார்கள்.

பழனியாண்டியின் முன் இவன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு போய் நின்றான்.

“ரொம்பத் தலைக்குனிவாயிப் போச்சு அய்யா...?”

“இதுவும் நெல்லதுக்குத்தான். கல்யாணம் கட்டின பிறகு அவன் இவளை விட்டுப் போட்டுப் போயிருந்தான்னா...?”

நெஞ்சில் ஆயிரம் ஊசிகள் தைத்தன.

ஆனால், ராமாயி மட்டும் சலனமே காட்டவில்லை.

“நம்ம புள்ள சந்தோசமா இருக்கோணும்னுதான நாம நினைச்சி எல்லாம் செய்யிறம்? இப்ப என்னாத்துக்கு கப்பல் கவுந்தாப்பல சங்கடப்படுதிய? நம்ம புள்ள, அநாவசியமா எதும் நடக்கமாட்டா. ஒரு தப்புதண்டா நேரப்படாதுன்னே கட்டிருப்பான். இங்கே வந்து உங்ககிட்ட சொன்னா, அப்பவும் லயம் முச்சுடும் கண்டதும் கடியதும் பேசும். வீணான கரச்சல் அப்பன் புள்ளக்கிடயே வரும்....இப்பமும் அவ வராம போமாட்டா... வருவா. பெத்தமனச அறியாத புள்ளயில்ல அவ...”

அவள் நம்பிக்கை வீண் போகவில்லை. அவன் ஒரு மறு ஞாயிற்றுக் கிழமையிலேயே புறப்பட்டு வந்தான்.

இவர்களுக்குத் துணிமணி, பழங்கள், இனிப்புப் பண்டங்கள் என்று வாங்கி வந்ததை வைத்துப் பணிந்தார்கள். ‘தவம் தவம்’ என்று அவன் அடிக்கொருமுறை அழைத்துப் பெற்றோரைப் பற்றி உயர்வாகப் பேசியதும் அவள் மிக அருமையாக ராமாயியை அத்தை என்று பழகியதும் அவனுக்கு மனத்தாங்கலின் நினைவுகள் கூட எழவிடாமல் தடுத்துவிட்டன. எல்லோருமாகக் கண்டிக்குச் சென்று, கண்ணகியம்மன் கோயில், முருகன் கோயில் என்று வழிபட்டு, பெரிய பூந்தோட்டம் கண்டுகளித்து வந்தார்கள். மருமகப் பெண், தோட்டங்களில் பெண்கள் என்ன மாதிரியான வேலை செய்கிறார்கள், என்ன கூலி, பிள்ளைக்களம்னா விஷயங்கள், என்று மிகவும் சிரத்தையுடன் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

“அப்பா, தவம் இங்குள்ள பெண் தொழிலாளர் நிலைமை பற்றி ஆராய்ந்து எழுதப் போகிறாள். பெண்களுக்கான தொழிற்சங்கங்கள், சமூகப் பிரச்னைகள் பற்றி ரொம்ப ஈடுபாடு...” என்றான்.

அவர்கள் புறப்பட்டுப் போனபின், அவனுக்குத் தானே புதிய காற்றைச் சுவாசிப்பது போல் கருவமாக இருந்தது.

ஆனால், அன்று மாலை, மாரிமுத்துவும் ஆறுமுகமும் ஸ்தொப்பில் வந்து குந்தினார்கள். இருவரும் குடித்திருந்தனர்.

“முருகேசு...? என்னாடா கேளுவிப்படுறது? உம்மருமவ, அந்தப் பொண்ணு இங்க சங்கம் கிங்கம்னு பொண்டுவ கிட்டப் பேசிட்டுப் போயிருக்கா? விசயம் வெளிக்குத் தெரிஞ்சா நாம அத்தினி பேருக்குமே ஆவத்தாயிடும். ஏற்கெனவே, தெமிறா, தெமிறான்னு புகைச்சுக்கிட்டிருக்கானுவ, இந்தச் சிறுக்கி, இங்க வந்து குச்சி கொளுத்திட்டுப் போயிட்டா, நாம இங்க கெடந்து சாவணும் இல்ல? இன்னா மயித்துக்கு இவ உம்பயலை மயக்கிப் போட்டிருக்கா?...”

சொல்லக்கூடாத வசைகள் கட்டவிழ்ந்தன.

அந்நாள் வரையிலும், அவன் அத்தகைய விரோதமான பேச்சுக்களைக் கேட்டதில்லை. அவன் ஒரு பிள்ளையைப் பெற்றுப் படிக்க வைத்ததில், பலருக்குப் பொறாமை இல்லாமல் இல்லை. இவன் மாடு வைத்துக் கொண்டும், புல் வெட்டு கொந்தரப்பு எடுத்தும் குடிக்காமலும் தனித்து நின்ற போதும் கூட, நேரடியான சண்டைகள் வந்ததில்லை. சிறுசிறு உரசல்கள், இவனது நல்ல பண்பிலே முழுகியே மறைந்து விட்டிருக்கின்றன. இப்போது, அந்த நல்ல பெண்ணை... கேவலமாக இவர்கள் பேசியதை இவனால் தாள முடியவில்லை.

“எம்பய்யனைப் பேசுங்க, நீங்க அந்தப் புள்ளய ஏன் குத்தம் சொல்லணும், விடுங்க... மேலிக்கு அவங்களை இங்க வர வேணாம்னா சொல்லிடறேன்” என்றான்.

இதன் பிறகு அவனே அஞ்சிக் கடுதம் எழுந்த இருந்தான்.

ஏனெனில் பொறாமை எவ்வளவு தூரம் போகுமோ? அவர்களுக்கு மானக்குறைவாக இவர்களே ஆபத்து விளைவித்துவிட்டால்?

அடுத்த தடவை, பையன் மட்டுமே வந்தான்.

தவமணி யாழ் நகரிலேயே வேறு கலாசாலைக்குப் போகிறாள் என்றும், அடுத்து அவர்களுக்குச் சில மாதங்களில் குழந்தை பிறக்க இருக்கிறதென்றும் கூறினான்.

“குமரு, எங்கியினாலும் சுகமா இருங்க. நீங்க மேலுக்கு இங்க வரதுன்னா கூடப் பயமா இருக்கு. இங்க ஆளுங்க மிச்சம், மோசம். பொறாமை புடிச்சதுங்க?” என்றான்.

ராமாயி அவனைப் பார்த்தது அதுதான் கடைசி.

இழைப்பும் இருமலும் அதிகமாய், கோழை துப்பலானாள். கோழையில் இரத்தமும் வந்தது.

அவள் பையனைப் பார்க்க வேண்டும், மருமகளைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டாள்.

அவனுக்குக் காகிதம் எழுத வேண்டுமே?

மாரிமுத்து பையன், இல்லையேல், ஃபாக்டரியில் வேலை செய்யும் கதிர்வேலு, யாரேனும் தான் இத்தனை நாட்கள் அவனுக்குக் கடிதம் எழுதிக் கொடுப்பவர்கள். அந்தத் தெரிந்த வட்டம் முழுவதும் பொறாமையில் வேவதாக அவனுக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், பலருக்கும் படிக்க ஆசையிருந்தும் வசதியில்லை. அபூர்வமாகப் படித்த பழனியாண்டியின் மகன் சிவநேசனுக்கும் கொழும்பில் இவனைப் போல் கந்தோர் வேலை கிடைக்கவில்லை. ஃபாக்டரியில் தானிருந்தான். சிங்களத் தொழிலாளி சம்பந்தம் வைத்திருப்பது மெய்யானாலும் இதுகாறும் தோட்ட சமூகம், அதுவும் தொழிலாளி சமூகத்தில் யாரும் உயர்படிப்புப் படித்த தமிழின மகளைக் கட்டியிருக்கவில்லை.

இந்நாட்களில், சிங்கள - தமிழ் விரோதங்கள் ஆங்காங்கு தோன்றிக் கொண்டிருந்தன. நிறைய ஆட்கள் சிங்களவர்களைத் தோட்டங்களில் கொண்டு வந்து கொண்டிருந்தனர். பலரும் சாஸ்திரி ஒப்பந்தம், ஐம்பத்தெட்டு வயசு, கொத்தலாவலை ஒப்பந்தம் என்று தோட்டங்கள் விட்டுப் போய்க் கொண்டு இருந்தனர். ஒரு சிலர், இங்கிருந்து குடி பெயர்ந்து கிளிநொச்சிப்பக்கம் ஊன்றுவதற்கு வழி செய்வதாகச் சொல்லிக் கொண்டார்கள்.

பழனியாண்டி குடும்பத்துடன் தாய்நாடு சென்று விட்டார். புதிய ஆள் சிங்களவர் வந்தார். அன்றாடம் தோட்டத் தொழிலாளர் கண்டிக்குப் போவதும், பாஸ்போர்ட் எடுப்பதும், நாடு திரும்புவதற்கான ஒழுங்குகள் செய்வதுமாக அமைதியாக இருந்த தோட்ட நடவடிக்கைகளின் ஒழுங்குகள் மாறிப் போயின.

மாயாண்டி இவனுக்குத் தூரத்து உறவில் மச்சான் முறைக்காரன். உருபுசெலாவில் இருந்து அவன் மகனுடன் வந்தான்.

“அண்ணே, கிளிநொச்சிப் பக்கம் நமக்குக் காணி எடம் குடுத்து ஒதுகிறமுங்கறா. வாத்தியாரிட்டப் பேசிட்டு, முத்தன் ஒருக்க பாத்துப்போட்டு வந்திருக்கிறான். இந்தச் சிங்களக் கரச்சல், நம்மச் சும்மாவுடாது. எப்படின்னாலும் நாம ஒரு மொழி பேசறவங்க. இனிமே நாம கடல்தாண்டிப் போயி எங்கிட்டுப் பிழைக்க? நாங்க முடிவு செஞ்சிட்டோம்...” என்று சொன்னான்.

அவன் மகனைக் கொண்டே, குமருவுக்கு விரிவாகக் கடிதம் எழுதிப் போட்டான். அம்மாதிரித் தாங்களும் யாழ்ப்பாணத்துத் தமிழ் நாட்டில் போய் ஊன்றிவிடலாம். “இத்தனை நாட்கள் இங்கே தேயிலைத் தோட்டத்துக்கு உழைத்தாகிவிட்டது. அம்மாளுக்கு, மகனும், மருமகளும் பக்கத்திலிருந்தாலே சீக்குவாசியாகிவிடும். இங்கு, பலரும் பலபேச்சுப் பேசுகிறார்கள், பொறாமையால். அதனால், கடிதம் கண்டதும் உடனே புறப்பட்டுவர வேண்டும்...”

மாயாண்டியும், முத்தனும், இடம் பெயருவது சம்பந்தமாக நோக்கம் அறியவே வந்திருந்தார்கள். குமரு தமிழ்ப் பெண்ணைக் கட்டியிருப்பது தெரிந்தும், அவன் படித்தவன் என்று மதிப்புவைத்தும், அவர்கள் வந்திருந்தார்கள். ஆனால் இந்த மாதிரியான ஒரு பேச்சையே அவர்கள் தாய் தகப்பனிடம் பிரஸ்தாபித்திருக்கவில்லை என்றறிந்து ஏமாற்றத்துடன் தான் திரும்பினார்கள்.

திரும்பிப் போக அவர்களிடம் கோச்சுக்குக் கொடுக்கப் பணம் கூட இல்லை. இவனே கொடுத்தான்.

ராமாயி வைத்தியர் கொடுத்த மருந்தில் நம்பிக்கை இழந்தாள்.

“குமரு... குமரு வந்தானா...” என்று கண்கள் நிழல்படும் போதெல்லாம் ஆதுரம் கொண்டு வாயிலிலேயே நிலைத்தன.

பிரட்டுக்களம் செல்வது நின்றது.

“அவன் காகிதம் போட மாட்டான். புறப்பட்டு வந்திருவான்...” என்று அன்றாடம் தெம்பை நிமிர்த்திக் கொண்டு முருகேசன் வேலைக்குப் புறப்படுவான். அரிவாளைக் கையில் பிடித்தால் ஒரே வெட்டில் கிளை தெரித்து விழும் கூர்மை போயிற்று.

“என்னப்பா! யாரிது... கவாத்து?” என்று கங்காணி கேட்கும் வகையில் தளர்ந்து போனான்.

“ஒருக்க, இந்த நாயித்துக் கிழமை வருவானா இருக்கும்!” என்று ஒவ்வொரு வார இறுதியிலும் ஆவல் உச்சிக்கு ஏற, பஸ் வரும் பாதையில் போய் நின்றான்.

வாத்தியார் நடராசாவிடம் கொழும்புக்குச் செல்கையில் செய்தி சொல்லி அனுப்பினான்.

வாத்தியார் வந்து சொன்ன செய்தி மண்டையில் இடிபோல் இறங்கியது. அவன் கொழும்பில் இல்லை. அவன் சொன்ன பத்திரிகை எப்போதோ நின்று போயிற்று. அவன் சம்சாரமும் அங்கே இல்லை. அவர்கள் குடாநாட்டுக்கே போய்விட்டார்கள்...

போனவன் விலாசம் கூடக் கொடுக்கக் கூடாதா?

ராமாயி தவித்துத் தவித்துத் துடித்துச் செத்தாள்...

பிள்ளை இருந்தும் மூன்று நாட்கள் எங்கெங்கோ சேதி அனுப்பிக் காத்திருந்தும், அவள் முகத்தை அவன் பார்க்கவில்லை. தோட்டத்து மண்ணில் அவளைக் குழித்து மூடிய மூன்றாம் நாள் தான் வந்தான். முகமே நன்றாக இல்லை. மனைவி செத்துப் பிழைத்தது போல் பெற்றுப் பிழைத்ததாகவும், பெண்குழந்தை என்றும் சொன்னான். முருகேசுவினால் எதையும் சீரணிக்க முடியவில்லை.

“குமாரு... குமாரு ஒருக்க அவ மொகம் பாத்தேன்னு எனக்கு நெஞ்சு ஆறுதலாயிருக்கும்... எம்பய்யன்... குமாரு..ன்னாருங்க, புள்ளக்கி சுடுதா மேலுக்கு, தொட்டுப் பாருங்க?... சைகிளெடுத்திட்டு அம்மாந்தொல புள்ள படிக்கப் போவுது பூன பாலம்புட்டயும் குடிச்சிப் போட்டது. கடுந்தண்ணியக் குடிக்கச் சொன்ன...”

சம்பந்தா சம்பந்தாமில்லாமல் அவள் பிதற்றியதெல்லாம் நெஞ்சை முட்டுகிறது. விம்மி விம்மி அழுகிறான்.

“மாமு?... மாமு...? மாமு...”

எத்தனை நேரமாகச் சுந்தரலிங்கம் கதவை இடித்தானோ?

திடுக்கிட்டு எழுந்து வருகிறான். கதவு வெறுமே சாத்தியிருக்கிறது நன்றாகத் திறக்கிறான்.

சுந்தரலிங்கம் கையில் ஒரு டிபன் காரியருடன் வந்திருக்கிறான்.

“ரொம்ப நேரமாயிட்டது, மாமு. சாப்பிடலாம் வாங்க...”

அத்தியாயம் - 3

“ரொம்ப நேரம் ஆயிட்டுதில்ல மாமு?... உறங்கினீங்களா?...”

முருகேசு ஒன்றுமே பேசாமல் வாளி நீரை எடுத்து வாயிலில் வந்து முகம் கழுவிக் கொள்கிறான்.

சந்துக்குள் யார் யாரோ விடலைப் பையன்கள் போகிறார்கள்; வருகிறார்கள்.

தமிழ்ப் பேசுபவர்களாக இல்லை.

இலை விரித்து சோறு, சாம்பார் பொரியல் என்று எடுத்து வைக்கிறான்.

இருவரும் சாப்பிட உட்காருகிறார்கள்.

இப்படிச் சாப்பிட்டு எத்தனை நாட்களாயின!

“இந்தத் தொழில்ல உனக்கு என்ன தம்பி கிடைக்கும்?”

“ஒவ்வொரு நாள் பத்து இருபது கிடைக்கும். சில சமயம் வடக்கத்திக்காரங்க வருவாங்க. சேதுக்கரை, திருப்புல்லாணி எல்லாம் கூட்டிட்டுப் போவேன். மாமா, கொஞ்சம் கொஞ்சமா இந்தி, சம்ஸ்கிருதம் படிச்சிட்டிருக்கிறேன். தெலுங்கு கூடப் பேசுவேன். நிறையப் படிக்கணும், மடத்துசாமியாரப் பாத்தீங்கல்ல?... அவருதா என்மேல ரொம்ப அன்பா படிப்பும் சொல்லித்தராரு. இப்ப பாரும், ஒரு நாளக்கி எத்தினி சனம் வந்து விழுது? அங்கியும் இங்கியுமா? சாமிதா எங்க்கெங்கிருந்தோ ஆக்களைத் தருவிச்சி, சாப்பாடு போடுறதும் பிணி தீக்கிறதுமா சேவை செய்யிறாரு. கவுர்மென்ட், கட்சிக்காரங்கல்லாம் விளம்பரத்துக்குச் செய்யிவா. ஆனா, சாமி செய்யிறது, சும்மா சொல்லப்படாது. அங்கங்க கரையில்லாம் ஆக்கள் வந்து எறங்குறதப் பாத்து, எல்லாம் செய்யிறாரு... நீங்க, அவுருகிட்ட விசாரிச்சா, ஒருக்க விசயம் தெரியும். மண்டபம் காம்புல போயிருப்பாங்க...”

“எங்க கூட வந்தவங்கல்லாம் மிச்சம் பேரும் வண்டில ஏறிட்டாங்க. எனக்கும் சீட்டுக் குடித்திருக்கா. இந்த மண்ணில முதிச்சிட்டு கோயிலப்பாக்காம போறதா? அதுதா வந்தேன்...”

“மாமு, நீங்க சொல்றியலே, எத்தினி தோட்டத் தொழிலாளிய கப்பல விட்டு எறங்கி வந்தாங்க? எத்தினி பேருக்கு இந்தக் கோயிலப் பாக்கணுமின்னு தோணியிருக்கும்? ஒண்ணுமே இல்ல. அப்படியப்படியே மணல்ல குந்தி இருந்து, அவுங்க குடுக்கற தேத்தண்ணியும் சோறும் வாங்கிட்டு அப்படியே ரயில்ல ஏறி மண்டபம் போயிடுவாங்க. அப்படியே அன்னக்கி அடிமையாப் போன ரெத்தம் ஊறி இன்னமும் அப்படியே இருக்காவ. இப்ப இந்தியாவில எங்க பார்த்தாலும் ரெண்டு புள்ளக்கி மேல பெத்துக்காதீங்கன்னு சொல்றா... நினச்சிப் பாத்தா, இந்த நாடு, எனம்ங்கற கரச்சல் எல்லாம் ஏன் வருது?”

“ஏ ஏடம், ஓ எடம்னு ஏன் சொல்றாங்க? சனம் பெருத்துப் போனது தான் காரணம். வசவசன்னு பெத்துப் போட்டாங்க. நாமதா இப்படிச் சீம வுட்டுச் சீம வந்து அத்துவானப் படுறோம். துரைக்கும் கண்டாக்குக்கும் கூனிக்கூனி அடிமைப் பொழப்புப் பொழக்கிறோம். நம்ம புள்ளங்க இப்படி இருக்கக் கூடாதுன்னு எத்தினிபேருக்குச் சொரணை இருந்திச்சி? லட்ச லட்சமா இந்த மண்ணில எடமில்ல, இந்தியாவுக்குப் போகணும்னு ஒப்பந்தம் பண்ணிட்டாங்கலே, அதுவே பத்துப் பதினஞ்சு வருசம் ஆவுது. அப்பன்னாலும் இந்த அப்பங்களுக்குச் சொரண இருந்திச்சா? ஒப்பந்த காலத்துல அஞ்சு ஆறூ லட்சம்னா, இப்ப பத்து லட்சமா கூடியிருக்கும். பன்னண்டு வயிசாகுமுன்ன கத்தியக் கையில குடுத்துப் புள்ளயப் புல்லுச்சாக்கோட வேலைக்குச் சேத்திட்டா சாயுச்சியம்னுதானே நெனச்சாங்க?...”

அவனுக்கு முகம் சிவக்கப் புரையேறிக் கொள்கிறது.

முருகேசன் எடுத்த கவளத்தை வாயில் போடாமல் மலைத்துப் போயிருக்கிறான்.

அவன் நீரையருந்திச் செருமலைச் சரியாக்கிக் கொள்கிறான். குரல் கம்மிப் போகிறது.

“அந்த ஸ்கூல்ல, ஒரு வாத்தியார் இருந்தாரு. குமாரு உழச்சுப் படிப்பான். எனக்கு மார்க்கு வராது. சரித்திரத்தில ரொம்பக் குறைஞ்சு போகும். தோட்டக்காட்டுப் பய, சரித்திரம் வருமா? தரித்திரம்தா வரும்னு ஏசுவாரு. குமரு இப்ப சொன்னா, எனக்குப் பிரஜா உரிமை இருக்கு, ஆனா, அங்க தனி ஈழமில்லாம இருக்க ஏலாதுன்னான். மனுசங்க, அங்க நடத்தப்படும் விதம் பார்த்திட்டு, மனசனுக்கு மனுசன் வாழ உரிமை மறுக்கப்படும் கொடுமையைப் பாத்திட்டு அங்க நான் சுகமா எப்படி இருக்கன்னான். மக்கள் விடுதலை இயக்கம்னு சம்பந்தப்பட்டிருக்கிறான்னு நினைச்சேன். ஒண்டும் விசாரிக்க இல்ல.”

இவன் கேட்காமலே செய்திகள் வருகின்றன.

செல்லப் பொண்ணைக் கல்யாணம் கட்டிக்கிட்டு, தோட்டத்துக் கிளார்க்கா, பதவியை நோக்கி நிற்க மறுத்து, ‘சமுதாயம் மேன்மையா வரணும்னு இலட்சியம்’ என்று சொல்லிப் போனானே, அந்த இலட்சியம் இவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போதும் கூடத்தான்...

“எனக்கு என்னப்பா தெரியிது? ஆகாசம் உசரமா இருக்கு, ஆமா. ஆகாசம் உசரம். நட்சத்திரம், சூரியன் சந்திரன்லாம். ஏரோபிளேன்ல மனுசன் பறக்கிறான். அப்படியே சந்திரனுக்கும் போயிட்டான்னு இப்ப பேசிக்கிறாவ. அதுதான் எனக்குத் தெரியும்...”

இவர் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசுகிறாரே என்பது போல் சுந்தரலிங்கம் பார்க்கிறான்.

இலையைச் சுருட்டிக் கொண்டு இவன் போகப் புறப்படும் போது, “இருக்கட்டும் மாமு. கைகழுவிட்டு இருங்க. நான் சேத்துக் கொண்டிட்டுப்போற... சாப்பாடு நல்லாயிருந்திச்சா? பிறமணாள் சமைக்கிற சோறு. வழமையாக யாத்ரீகர்களுக்குச் சமைப்பாங்க. ஒரு செட்டுனா, ரெண்டு பேரு சாப்பிடலாம். நா இதே மரக்கறி சாப்பிட்டுப் பழகிட்டேன் மாமு...”

“ஒன்னப் பாக்கக் குளிச்சியா இருக்கு சுந்தரலிங்கம். பெரியவங்க ஆசிர்வாதம் ஒனக்கு என்னக்கிம் இருக்கும்...”

நா தழுதழுத்துப் போகிறது.

அந்த சுகந்திப் பெண் நல்லபடியாக காம்பில் இருந்து அகப்பட்டால்... இவனுக்குக் கலியாணம் கட்டி...

பஞ்சையாக மனசு எண்ணிப் பார்க்கிறது.

அன்று முழுவதும் முருகேசு இராமேசுவரத்தில் கழித்த பின், அடுத்த நாள் காலையில், மண்டபத்துக்கு இரயிலேறுகிறான். அவனுடைய வங்கி டிராஃப்ட் மாற்றி, பணம் பெறவும் அவன் உதவுகிறான்.

“எதுனாலும், தேவை, விசயம் அறியணும்னா, தெரிவியுங்க மாமு, நான் செய்யிறேன்” என்று அன்புடன் சொன்ன வார்த்தைகளில் முருகேசு நெகிழ்ந்து போகிறான்.

இன்று லாஞ்சிகளில் நிறைய மனிதர்கள் வந்திருக்கிறார்கள் போலும்! ரயிலில் கசகசவென்று கும்பல்.

பாம்பன் தாண்டி, மண்டபமும் தாண்டி, ‘காம்ப்’ என்ற ஸ்டேஷனில் இறங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

பாம்பனைக் கடக்கும் போது ஆழமில்லாக் கடல் தெரிகிறது.

எட்டி... உயர உயர, இன்னுமும் பெரிய நிலைகளைச் சமுத்திரத்துக்கு நடுவே கட்டியிருக்கிறார்கள்... இன்னமும் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிலைகளை இணைத்துப் பாலம், புதிய பாலம் போடப் போகிறார்களாம்...

“ட்டேயப்பா!”

முருகேசு பிரமித்துப் போகிறான்.

பனை உயரத்துக்கு மேல், கடல் பொங்கினாலும் சேதம் ஆகாமல் கட்டுகிறார்கள். இந்தியா... இந்தியா... அவனுடைய மூதாதையர், தாய் பிறந்த மண்... தோட்டக் காட்டையும் அடிமைக் கூனலையும் பற்றி இறுகிப் போன அவனுடைய உடலின் ஒவ்வொரு அணுவும் அந்தச் சொல்லின் ஒலி அலைகளை சூக்குமமாக உணர்ந்து விட்டாற் போல் பூரித்துப் போகிறது.

குமாரு, அவன் இங்கு தான் வந்திருக்கிறான். ‘எனக்குப் பிரஜா உரிமை இருந்தாலும், அங்கே இருக்க முடியாமல் வந்திருக்கிறேன்’ என்றானாம்.

“பாவி, எனக்கு இந்தியாவில என்னலே இருக்கு? அங்க பிறந்தனா, வளந்தனா, அங்க மனிசன் எச்சி எல பொறுக்கிறானாம். நான் இங்கேயே உழச்சேன், இங்கேயே எங்காயி அப்பன், ராமாயி கூடவே மண்ணாகிக் கிடப்பேன்” என்று அன்று மகனிடம் சொன்னான்...

அம்மை மடி தெரியாமல் தோட்டத்துப் பிள்ளைக்காம்பிரா இருட்டிலும் அழுக்கிலும் அடைபட்டுக் கிடந்தவன் தானே? உறவா பாசமா, என்ன மேன்மை அந்த மக்களுக்கு இருந்தது? பெண் வயசுக்கு வந்த சடங்கு, காதுகுத்து, கலியாணம், கருமாதி என்று கூட அவன் உறவு மக்களைக் கொண்டாடவில்லை. முருகேசு, தன் சகோதரி மக்களுக்கென்று ஒரு சீரெடுத்துப் போனானா? அவர்களுக்கு எத்தனை மக்கள் என்பதே தெரியாத அளவுக்கு விட்டுப் போயிற்று.

அப்படி இருந்தவன், சரேலென்று பற்றியபிடி, அவனை உதைத்துத் தள்ளிய நிலையில் ஆண்டாளுவின் உறவு கொண்டாடிப் போனான். கைச்சேமிப்பைக் கொடுத்தான். ஆனால்... ஒன்றுமே ஒட்டவில்லை.

மூன்று குழந்தைகளும், அக்கரை வந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை தான் ஒட்டி இருக்கிறது.

கசகசவென்றிருந்த கும்பலில், இளம் பிள்ளைகள், பெண்கள் கடலின் நடுவே பாலம் கட்டுவதை வேடிக்கை பார்க்கிறார்கள்.

“நீங்கல்லாம் எங்கேந்து வரீங்க? லாஞ்சில வந்தியளா?”

வட்ட முகமும் சப்பை மூக்குமாக ஒரு பெண்மணி சோகமே உருவாக இருக்கிறாள். அவள் தான் பதில் சொல்கிறாள்.

“எங்கக்கு பேசாலை. ஆமி வந்து ரெண்டு பொடியனையும் கடத்திப் போயிட்டா...”

அவளால் பேச இயலவில்லை. துயரம் கண்களில் தளம் கட்டுகிறது. இளமைப் பூரிப்பு வெளிப்படையாகத் தெரியும் வகையில், ‘கவுன்’ அணிந்திருக்கும் ‘குமரு’கள் இருவர் அவளுடைய சாயலாகவே இருக்கின்றனர்.

“உங்க மக்களா?...”

“ஆமா. இவவுக்காகத்தா இப்ப இங்க வாரம். எத்தினி பெட்டகளைக் கொலச்சிப் போட்டு, அவ நஞ்சுண்டும் கடல்ல விளுந்தும் உசுர விட்டுப் போட்டாங்க!...”

அவன் நடுங்கிப் போகிறான்.

‘ஏன் பேசினோம்’ என்று தோன்றுகிறது.

மண்டபம் காம்ப்... அங்கே இறங்கும் கூட்டத்தை, அங்கேயே ஆட்கள் கண்காணிக்கின்றனர். எல்லோரும் தத்தம் சாமான்களுடன், வேர் பரிந்து வரும் பஞ்சைகளாக, அகதிகளாக மணலில் நடக்கின்றனர். எங்கும் யாரும் பார்க்கும் சந்தேகக் கண்கள். இதற்குள் முருகேசுவுக்குப் பரிதாபமாகிவிட்டது. மணலில் புதிதாக முளைத்த தகரக் கூரைகள் - அவசரமாக அமைந்த கீற்றுக் கொட்டகைகள்.

ஆங்காங்கு கொட்டகைகளின் வாயிலில் மக்கள் புதிதாக வரும் இவர்களை வேடிக்கை பார்க்கிறார்கள்.

“ஒ... ஸியா? நீங்க எங்கிட்டுப் போயிட்டிய? காங்கல?” நீலத்தில் பூப்போட்ட குப்பாயம் அணிந்திருக்கிறாள். ஒரு நாள் இரவு, லாஞ்சியில் வந்த தோழமை. சிரித்த முகம் முருகேசுவுக்குத் தெம்பளிக்கிறது.

“பொலீசு புடிச்சு அடிச்சாங்களா ஸியா?...”

மெல்லிய குரலில் கபடமின்றிக் கேட்கிறாள்.

“எங்கிட்ட ஒண்ணுமில்லியேம்மா ஏன் அடிக்கிறாவ?”

“ஸியா, நேத்து மந்திரி வந்து பாத்தா. ஏங்கிட்டப் பேசுனா ஸியா?”

அவளுக்கு ஒரே சந்தோஷம்.

“என்ன பேசுனா?...”

“எப்படி யிருக்கீங்க, நல்லாயிருக்கீங்களான்னு கேட்டாங்க. ஒரு பாயி, ஒரு சாரம், சீலை எல்லம குடுத்தாங்களான்னு கேட்டாங்க. ஓம்னு சொன்னம். ஏங்கிட்ட படிக்கிறயான்னு கேட்டாங்க. படிக்கணும், படிப்பிச்சாப் படிப்பேன். சமாதானம் ஆனதும் போறம்னு சொன்னே...”

எதிர்காலத்தை நம்பிக்கையோடு பார்க்கும் வயசு. எல்லாமே புதுமை; சந்தோஷம்...

தொலைவில் சாமியாரின் காவி உடை தென்படுகிறது.

மணலில் புதையப் புதைய ஓடுகிறான்.

“சாமி... கும்பிடறேன், வணக்கம், சாமி... நேத்து சொன்னனே, எம்புள்ளக...”

“ஆபீசுக்கு வாங்கப்பா...” என்று சொல்லிவிட்டு விரைந்து அவர் போகிறார்.

ஆபீசு...

சமையற் கொட்டடி தெரிகிறது. பெரிய பெரிய அடுப்புக்கள், மூட்டை மூட்டையாக அரிசி பருப்பு, வந்து இறங்குகிறது. ‘பொலீஸ்’ நிற்கிறது.

கூடையில் பொட்டலம் போட்ட உணவு...

ஆபீசு என்ற கொட்டகைக்கு முன் நீள நெடுக வரிசை... எல்லாரும் மண் பெயர்ந்த பரிதாபங்களாய், பஞ்சைகளாய்க் காத்திருக்கின்றனர்.

இருளில் தெரியும் உருவங்களாய் அவன் கருத்தில், தனித்தன்மை அற்ற வடிவங்களாய் உறைக்கின்றன. கருப்பிணி, முதியவள், இளவட்டம், பொடிசுகள்... குரிசு தொங்கும் சமயத்தினர்.

அந்த வரிசையில் ஒரு வடிவம், அவனின் ஆழ்ந்த நினைவின் ஒரு பிசிறை நெம்பிக் கொண்டு வருகிறது.

பொட்டில் ஒரு பச்சையான மச்சக்குறி. அந்த மூக்கு - கூர்மையாக - முருகலான செம்மை பாய்ந்த கறுப்பு - செவிகள் தொள்ளையாகத் தொங்க, நரை முடியை அள்ளி முடிந்து கொண்டு, வெற்றிலைக் காவி தெரியும் ஒற்றைப்பல் பாகில் போட்ட தேங்காய்ச் சில்லுபோல் துருத்தி நிற்க...

“யாரய்யா? பாத்தாப்பில இருக்கு? எங்கிட்டிருந்து வாரிய?...”

“...ஆத்தாடி... நீ நீ... பாஞ்சாலியில்ல? பிச்சமுத்து மாமன் மக... உன்ன, அண்ணாவி மகன் சோமுவுக்குக் கட்டினாங்கல்ல...?”

“ஞாபகம் வச்சிட்டிருக்கிய, எனக்குத்தா ஆருன்னு தெரியல... நீங்க... ரத்தின புரா தோட்டமா...”

“ஆமா... முருகேசு...”

முருகா... முருகா... என்று கண்மூடிக் கும்பிட்டவள் கண்களில் நீர் வழிகிறது. “ஐயா, இந்த ஆண்டாளு பேத்திக வந்து நிக்கி - இங்க லாஞ்சில, செறகொடிஞ்ச புறாக்களா. எங்க பாட்டா கூட்டிட்டு வந்தாவ, ஆனா, அவவ இல்லாத சமயத்தில ஆமி வரது குண்டு வைக்கிறான்னு சொல்லி அல்லாம் ஓடுங்க ஓடுங்கன்னு சொன்னாங்களாம், மீன் காரச் சனங்க கூட அலையக் கொலைய அல்லாம் இங்கிட்டு வந்து விழுந்திருக்குதுங்க. வந்த சனம் அம்புட்டும், மீன்காரவச் சனங்க. கூலிப் பிழைப்புக்குப் போன சனங்க. நா எங்க பய்யன் கொழும்பில கடயில இருந்தா. போன ஆடி மாசம் முச்சூடும் சுட்டுப் பொசுக்கிப் பேயாட்டம் ஆடினாவளே? அப்ப, இங்க வந்தம். ஒரு வருசத்துக்கு மேல ஆச்சி. அஞ்சு, புள்ளக. எம்மகன், அவன் பொஞ்சாதி, நா... எங்கூட்டுக்காரருக்கு காலு வெளங்காம போயிருச்சி திடீர்னு... இப்புட்டு நா இங்கதா இருந்தா. இப்ப நேத்து முந்தா நா, திடீர்னு, அல்லாம் தூத்தூடி காம்புக்குப் போங்க, இங்க புது ஆளுங்க வாராங்கன்னு ஏத்தி விட்டுட்டாவ. அவவ, ராமநாதபுரம் ஆசுவத்திரில இருக்காவ... நான் நிக்கேன்...” அவள் பின்னால் என்ன சொன்னாள் என்பது அவன் செவிகளில் விழவில்லை.

“முருகா முருகா...” என்று கசிந்து நிற்கிறான்.

“அம்மா, நா முருகேசு புள்ளக்காம்பறாவில சோறு சமச்சி வெள்ளாடின நாள்ள அம்மாளா சோறு போடுவிய. இன்னக்கி அந்தத்தாய், மீனாட்சி, கோயில்ல கும்படற அம்மனே உன் ரூவத்தில வந்து அந்தப் புள்ளிய இருக்குன்னு சொல்றாப்பல நெனச்சிக்கிற, சுகந்தி, தனம், சரோசா எல்லாரும் இருக்காவளா?”

“எல்லாம் இருக்காவ. கூட்டிட்டு வந்தவங்க கூடவே போவுதுங்க. அதுக அழுது அழுது சாவுதுக. பெரிய பொண்ணு சோறே எடுக்குறதில்ல. நா தெனமும் உங்க தாத்தா வந்திருவாரம்மான்னு சொல்லிட்டு இப்பிடிப் புதுசா வாரவுக மூஞ்செல்லாம் பாத்திட்டு நிப்பே...”

நெஞ்சுக் கனமெல்லாம் நொடியில் ஆவியாகிப் போகின்றன.

தூத்துக்குடியில் இருக்கிறார்கள்.

பாஞ்சாலி... பாஞ்சாலி...?...

அவள் சடங்கான போது இவனுக்குப் பத்து வயசு. போய் விருந்து சாப்பிட்டது நினைவிருக்கிறது. சாமியாரிடம் மகிழ்ச்சியுடன் தன் பேரப் பெண்கள் கிடைத்துவிட்டார்கள் என்று தெரிவிக்கிறான்.

தாசில்தாரின் அலுவலகத்தில் வரிசை நின்று, தன் சீட்டுக்களைக் காட்டி, தூத்துக்குடிக்கு அனுப்ப வேண்டும் என்று பரபரக்கிறான்.

“ஏம்பா? நீ ரிஃப்யூஜி இல்ல. ரிபாட்டிரியட்... நீ எங்கயானும் போய்த் தங்கி தொழில் செய்து பிழைக்கலாம். அப்படித்தான் எழுதித் தருவோம். ஒரு மாசத்துக்கு மேல் இங்க முகாமில வைக்க மாட்டாங்க?”

“சரிங்கையா?”

“அப்ப உனக்கு மூவாயிரம் இப்ப தருவாங்க. தூத்துக்குடி போயி, அந்தப் பிள்ளைகள் உன் குடும்பனு அங்க தாசில்தார் கலக்டர்ட்ட அத்தாட்சி வாங்கிட்டு வா. பணம் குடுத்திடுறோம்...”

மூவாயிரம்... ஆம், இந்தியாப் பணம் மூவாயிரம் அரசு கொடுக்கிறது. ஒரு வாசம் வரையிலும் தங்கிச் சாப்பிட உதவித் தொகையும் கொடுக்கிறது. ஒரு எண்ணம்... கையில் மூவாயிரம் கிடைத்ததும், அந்த சுகந்திப் பெண்ணை அழைத்து வந்து, ராமேசுவரம் கோயில் முன் சுந்தரலிங்கத்துக்குக் கட்டினால்...

பதவிசான பெண். ஆயியில்லை; அப்பனும் கூறில்லை. இனி நீலகிரிச் சீமை தேடி, அவள் சிற்றப்பன் பெரியப்பன் தேடி எங்கு சென்று ஒப்புவிக்க? அதற்கும் அடுத்த பொடிசுகள் இருக்கிறார்கள்...

முருகேசுவின் ஆத்திரம், அவனைத் தூத்துக்குடிக்குச் சென்று அந்தக் குழந்தைகளைப் பார்த்து விட்டு வரும் வரையிலும் கூடப் பொறுக்கவில்லை.

பொதுக்குழாயில் குளித்துச் சுத்தமாய், ராமநாதபுரம் ஆசுபத்திரிக்குச் சென்று பாஞ்சாலி புருசனை அவளுடன் பார்க்கிறான். ஒரு புளிச்சோறு வாங்கிவந்து அவளுக்கும் கொடுத்துவிட்டுப் பசியாறுகிறான். மாலையில் செல்லும் வண்டியைப் பிடித்துக் கொண்டு, இராமேசுவரம் போய்ச் சேருகிறான்.

பனிக்குளிர் சிலிர்க்கிறது; இருட்டில் ஒளிரும் தீப ஒளிகளின் அருகில் அன்று, தெருவில் செல்வோர் முகம் புரியவில்லை.

விடுவிடென்று கோயில் பக்கம் நடக்கிறான்.

உள்ளே சென்று நெஞ்சு குளிரக் கும்பிட்டுவிட்டு, சுந்தரலிங்கம் எங்கேனும் தென்படுகிறானா என்று பார்த்துக் கொண்டே அவன் அறையை இலக்கு வைத்துக் கொண்டு வருகிறான்.

அவன் அறைக்கதவு பூட்டியிருக்கிறது. சந்துக்குள் யார் யாரோ பெண்டிர், ஆடவர் நடமாட்டம் தான் தெரிகிறது.

வெளியே மீண்டும் வந்து கடைவாயிலில் நிற்கிறான். முப்பது பைசா கொடுத்து இரண்டு பழம் வாங்குகிறான்.

“தம்பி? இங்க ரூம்புல, சுந்தரலிங்கம்னு கோயில்ல சாமியெல்லாம் காட்டிக்குடுப்பானே, அவ இருக்கானில்ல, இப்ப எங்க போயிருப்பா, தெரியுமா?”

அவன் வாய் திறந்து கூடப் பதில் கூறாமல், தெரியாது என்று தலையை மட்டும் ஆட்டுகிறான்.

அது ஒரு தெரு முனை. ஒரு பழத்தை உரித்துத் தின்ற வண்ணம், மறுபக்கமிருந்து வருபவர்களை அவன் உன்னிப்பாகக் கவனிக்கிறான்.

அப்போது, கையில் ஒரு சிறு பெட்டியுடன் நீண்ட சட்டையும் வேட்டியுமாக விடுவிடென்று நடந்து செல்பவன்...

உணர்வில் உயிரில் பதிந்துவிட்ட நடை அல்லவா அது?

குமரு... குமரு...?

நெஞ்சு கூவக் குலுங்கிக் கொண்டு இவன் விரைகிறான்.

அவனைப் பிடிக்க முடியவில்லை. “குமரு ஏலே, குமாரு...”

இவன் குரல், குதிரை வண்டிச் சத்தத்தில் அமுங்கி விடுகிறது. புதிய யாத்திரைக் கும்பலில் அவனும் நழுவிப் போகிறான்.

இல்லை... மூன்று தெருக்களும் சுற்றி விட்டான், அவனில்லை.

...அவன் யாரோ? தனக்கு ஏன் இப்படிப் பிரமை தோன்றுகிறது? மீண்டும் கோயிலைச் சுற்றிக் கொண்டு சந்து வாசலுக்கு வருகையில் சுந்தரம் கதவு திறந்து கொண்டிருக்கிறான். தோளில் பை தொங்குகிறது.

“முருகேச மாமா?... என்ன? எப்ப வந்திய?...”

“செத்த நேரம் ஆச்சி. உள்ளாற வாப்பா, ஒரு முக்கிய விசயம் பேசணும்னு வந்தே. பிள்ளய கிடச்சிட்டாங்க தூத்துக்குடில பத்திரமா காம்பில தெரிஞ்ச ஆளுவளோட இருக்காங்க. ஆமி வந்து குண்டு வைக்கப் போவுதுன்னு சொன்னாங்களாம். எல்லாம் அலையக்குலய ஓடி வாரப்ப இவுங்களும் வந்திருக்காங்க. பணத்தம்புட்டயும் எடுத்திட்டுப் போகாம குடுத்து வச்சிருந்தனா. அல்லாம் நல்லபடியா முடிஞ்சிச்சி... இனிமேதா பாக்கணும்...”

சுந்தரலிங்கம் பையை ஆணியில் மாட்டுகிறான்.

கயிற்றுக்கட்டிலில் ஒரு பழுப்பு நிறக் காகிதப்பை இருக்கிறது.

“அட...?...”

கையில் அதை எடுத்துக் கொண்டு அவன் திகைத்தார் போல் நிற்கிறான். பின்னர், அதில் கைவிட்டு, அழகிய வழுவழுப்பான லேசுகள் தைத்த குழந்தை கவுனை எடுத்துப் பார்க்கிறான்.

“மாமு... இது... இங்க குமாரு வச்சிட்டுப் போயிட்டான்...”

“ஆ...?”

நெஞ்சில் சிக்கிக் கொண்ட சந்தேகம் நழுவி வெளிவந்து விட்டது.

“அப்ப... குமாரு... அவந்தா, வேட்டி கட்டி, நீளச் சட்டை போட்டிருந்தானில்ல?”

“ஆமா. இதா தெருத் திரும்பி கடயண்ட காத்திருக்கயில, பின்னாடி போறதப் பாத்தேன். அவன் நடை எனக்குத் தனியாத் தெரியுமே? உடனே குமாரு குமாருன்னு கத்திட்டு ஓடினே. குதிரவண்டிக்காரன் சத்தம், லொரி ஒண்ணு வந்திச்சி, கூட்டம் கண்டுபுடிக்க முடியல... இங்க வந்திருக்கிறானா?... நா அவனப் பாக்கணும்டால...”

“மாமு, எனக்கே எதிர்பார்க்கல. பாத்தேன். நா ஒடன, உங்கப்பாரு வந்திருக்காரப்பா, நேத்துக் காலமதா மண்டபம் காம்புக்கு அனுப்பிச்சேன். இப்படி இப்படின்னு வெவரம் சொன்னேன். ரூமுக்குக் கூட்டி வந்தே. இது புள்ளக்கின்னு வாங்கினா. அவுசரமா யாரையோ பாக்கணும் சோலி இருக்குன்னு அப்பவே போயிட்டா. இன்னிக்கு இங்க மினிஸ்டர் வந்திருக்காரு. நேத்து காம்புக்கு வந்திருந்தா ராம்ல?”

“அப்படி, குமாரு என்னியப் பாக்கணும்னு சொல்லல, ஒண்ணும் விசாரிக்க இல்ல?...”

“நான் பாக்காம, கூப்பிடாம இருந்தா அப்படியே போயிருப்பான். அப்பா வந்திருக்காருன்னே... அப்பிடியான்னான். பெண்சாதி அங்கேயும், குழந்தை மட்றாசிலும் இருக்கான்னு தெரிஞ்சிச்சி...”

“நீ எத்தினி மணிக்குப் பாத்தே?...”

“ஒரு நாலு, நாலரை இருக்கும். சாயங்காலமா, நான் படிக்கப் போவேன். சாமியார் கிட்ட புதிசா இந்து பரிஷத்லேந்து ரெண்டு மாஸ்டர்ங்க வந்திருக்காங்க. படிக்கிறேன். இன்னிக்கு அதுக்குதா கெளம்பிட்டிருந்தேன், யதேச்சயாப் பாத்தனா...”

“அப்ப என்னப்பத்தி, ஆண்டாளு பேத்திங்களப் பத்தி ஒண்ணுமே கேக்க இல்ல?”

“இல்ல, எதோ ஒரு சுமையோட மனசு நெருக்கமா இருந்தாப்பல இருந்தான். நா சொல்ல வேண்டிய விசயத்தச் சொன்னேன். ஒருக்க உங்கள மண்டபத்தில வந்து பாப்பானோ என்னமோ? எதுக்கும் இந்தப் பிள்ளை கவுனை நீங்க வச்சுக்குங்க.”

முருகேசு அந்த கவுனைத் தொட்டுப் பார்க்கிறான்.

வழவழவென்று துரைமார் குழந்தை அணியும் துணி...

அவன், குமாரு வருவானோ? மண்டபத்தில் விசாரிப்பானோ?...

வந்த விஷயம் இந்த ஆதுரத்தில் மறந்தே போகிறது. அடித்து வைத்த சிலையாகப் போகிறான்...

தாயோரிடம் பிள்ளையோரிடமா?... அந்தத் தாய் ஏன் வரவில்லை? ஏன் புருஷனுடன் வரவில்லை?

“மாமு, நீங்க என்ன விசயமா வந்தீங்க? அதச் சொல்லலியே?”

முருகேசு சரேலென்று இந்தக் கேள்விகளை உதறிக் கொள்பவனாக அவனைப் பார்க்கிறான். இவன் யார்? இவனிடம், அந்தப் பொண்ணைக் கட்டிக் கொள் என்று திடீரென்று சொன்னால்... எப்படி எடுப்பானோ?

“என்ன மாமா? என்ன விசயம்? அந்தப் பொண்ணுங்க யாரு கூட வந்து எப்படி இருக்கா?...”

அவன் விவரம் சொல்லுகிறான்.

தூத்துக்குடியில் இருக்கிறார்கள். தெரிந்த மனிதர்கள் பாதுகாவலில்.

இப்போது இவனுக்குக் குடும்பக்கார்டும், மூவாயிரம் பணமும் கிடைக்கும்...

“அப்ப வாங்கிட்டு, எங்கிட்டுப் போயி நிக்கிறீங்க? புள்ளங்களை அவங்க சனம் பாத்து ஒப்புவிக்கணுமில்ல?”

“சனம் ஆரு இருக்கா? சித்தப்பன் பெரியப்பன் நீலகிரில இருக்கான்னு சொன்னா. காகிதம் வந்திச்சின்னு காமிச்சா. போயிதா விசாரிக்கணும். மூணு கொமப் பொண்ணுவ, ஒண்ணு சமைஞ்ச பொண்ணு. சுந்தரலிங்கம், நா ஏ வந்தன் தெரியுமா... நீ உன்ன பெத்த மகனுக்கு மேல இப்ப பெரிசா நினைக்கிறேன். என்னியக் கூப்பிட்டு சோறு போட்டு அம்பா ரெண்டு பேச்சுப்பேசி, அனுப்பி வச்ச. எனக்கு இப்ப ஆருமில்ல. இந்த வயசான காலத்துல அந்தப் புள்ளியள எங்க சுமந்துகிட்டுப் போக?... சுகந்திப் பொண்ணு ரொம்ப நல்ல பதவிசான பொண்ணு. ஆறோ ஏழோ படிச்சிருக்கா. நீ... கட்டிக்கிறன்னா, இப்பமே ஒங்கம்மாளக் கூட்டியாந்து, ஒரு சீல வேட்டி எடுத்து, முடிச்சி வச்சிடுவே. தாலி இருக்கு; நாலு சவரன் அட்டியல் இருக்கு. ரெண்டு வளவு இருக்கு, நா கேட்டுட்டுப் போகணும்னுதா வந்தேன்...”

சுந்தரலிங்கத்தின் முகம் இறுகிப் போகிறது.

“மாமு... மன்னிக்கணும், நான் இப்ப கலியாணம் கட்டுறாப்பில இல்லை. ஆமா... கையில ஒரு முக்காணித்துட்டு நிரந்தரமா இல்லாம, ஒரு புள்ளயக் கட்டினா, அதுக்கு ஒரு நல்லது பொல்லாது வாங்கிக் குடுத்து, சந்தோஷமா வச்சிக்கணும்னா முடியுமா? மாமு, உங்ககிட்ட சொல்லுறதுக்கென்ன? நாங்க நாட்டுக்கு வந்தப்ப, நான் பதினேழு பதினெட்டு வயசுக்காரன். அத்தைமாரு மூணு பேரு. மூணு பேருக்கும் பொம்பிளப் பிள்ளங்க இருக்கிறாங்க. எங்கப்பா, எலங்கையிலேந்து வாரப்ப, தங்கமா, வயிரமாக் கொண்டாருவான்னோ என்னமோ, ‘வந்திருங்க, வந்திருங்கன்னா’ எழுதினாங்க, பூஞ்சோலைய எனக்குக் கெட்டறதுன்னு பெரியத்தை புருஷனும், இல்ல, அடுத்த தம்மகளைக் கட்டிக்கணும்னு இன்னொரு அத்தையும் எழுதினாங்க. அப்பா, சம்பாரிச்சுச் சேத்ததெல்லாம், ஒரு இருவது சவரன் உருப்படியும், ஆறாயிரம் ரூபாயும் தான். ரெண்டு பிள்ளைங்களைக் கலியாணம் கட்டிக் குடுத்ததில அது செலவாகிப் போச்சி. குடும்பத்தக் காப்பாத்த வேண்டிய நிலையில கலியாணமாவது?...ன்னாலும் நானு எங்கெங்கோ வேலையில சேந்து நாலு காசு சம்பாரிக்காம இல்ல. எங்கையா கலியாணப் பேச்சு எடுத்ததும், என்ன ஏசு ஏசினாங்க? மனசு கசந்து போச்சி, நா இப்ப, குடும்பம் இல்லன்னு கஷ்டப்படலன்னாலும், இவங்க கலியாணம் பத்திப் பேசாமயே இருந்திருந்தா, இப்படியெல்லாம் நினைக்கப் போறதில்ல. நாலு காசு சேத்து தங்கச்சியக் கெட்டணும். காசில்லாத தோசமே, ஒரு பெண்ணு கன்யாஸ்திரீயாப் போறாப்பல சேந்துபோச்சி... தயவு செஞ்சி வேற என்னன்னாலும் கேளுங்க மாமு...”

தோட்டக்காட்டில் புல்லறுத்த பயல்தான். இவனும் எப்படிப் பேசுகிறான்? இவன் சொல்வதில் நியாயம் இருக்கிறது. கல்யாணம், வாழ்வு, இரண்டும் பிரச்னையாகப் போயிற்று. சமைஞ்ச பொண்ணை மொறயாள் தூக்கிப் போவான். கல்யாணம், அவனுக்கும் வேலை அவளுக்கும் வேலை... அது பத்துமா பத்தாதா என்ற லட்சியங்களின்றிப் போன காலமில்லையே?

“...சுந்தரம், நீ சொல்றத நா ரொம்ப ஒத்துக்கறேன். ஆனா, உன்னியப் போல எல்லாம் சொல்லிட்டா, அந்தப் பொட்டப்புள்ளிய கெதி என்ன? நல்ல புள்ள, பண்பா ஒரு கவுரவமா சுத்தமாப் பொழக்கிறான்னு எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கி? நீ வேற பொண்ணு எதயானும் மனசில வச்சிட்டிருந்தேன்னா சொல்லு, நான் பேசல. ஆனா, மனசு கசந்து போச்சின்னு உன்னப்போல இருக்கிற பையங்க சொல்லுறது செரியில்ல...”

“மாமு, மன்னிச்சிடுங்க. கலியாணப் பேச்சு வாணாம்...”

“சரி, உன்னிஷ்டம் நா இதுக்கு மேல இட்டமில்லாதவனக் கசக்கி மோந்து பாக்கிறவனில்ல. அந்தப் பிள்ளைக்குக் கொடுப்பின இல்ல. வாரம்பா...”

“அப்ப... தூத்துக்குடிக்குப் போயிட்டு...?...”

“அதுங்கள அழச்சிட்டு நீலகிரிப் பக்கம், எதோ அட்ரசு குடுத்திருக்கா. அங்க விசாரிக்கணும்...”

“பொண்ணுங்க படிச்சிருக்குதா மாமா?”

“எதினாலும் நாலு அஞ்சி படிச்சிருக்குப் போல இருக்கு...”

“நீங்க கையில பணம் வந்ததும், கண்டமானிக்கும் செலவு பண்ணிப் போடாம, பதனமா வெச்சுக்குங்க. மாமு, நான் ஏன் சொல்றன்னு நெனக்காதீங்க. நா சின்னவ. ஆனா, கையில நூறு ரூபா முழுசாப் பாத்துத் தெரியாத நம்மாளுவ, ஆயிரக்கணக்காப் பாத்ததும், செலவு செஞ்சி போடுறா. எங்கப்பாவே, பணம் மொத்தமா கையில கிடைக்கிது, ஊரில வந்து கோட்டை கட்டலான்னு நெனச்சிதா மோசம் போனாரு. அது அப்ப. இப்ப... ரொம்ப மோசம். இப்படி வந்தவங்களுக்கு சர்க்காரு தொழில் திட்டமெல்லாம் வெச்சிருக்கா நெறய. அதுவும், பொம்பிளப் புள்ளங்களுக்கு தொழில் பயிற்சி குடுக்கறதுக்கும், அதுங்க பிழைச்சிக்கவும் வகையெல்லாம் செய்திருக்கா. உங்களப் போல தாயகம் திரும்புறவங்களுக்குன்னு ஆபீசு வச்சிருக்கா, மண்ட பத்திலியே பாருங்க. இருப்பாங்க...”

“இனி காலமதான வண்டி?...”

“ஆமா... வாங்க, போயி எதினாலும் சாப்பிட்டு வரலாம்...”

வெளியில் சந்தடி ஓயவில்லை. சந்துக்குள் ஓர் அறைப் பக்கமிருந்து, ஏதோ புரியாத தட்டும் கொட்டுமாகப் பாட்டு கோசமாகக் கேட்கிறது. ஓர் இளம் பெண் முக்காடிட்டுக் கொண்டு போகிறாள்.

அவள் சென்ற திசையில் இருந்து, மூச்சை இழுத்துப் பிடிக்கும் ‘செண்ட்’ மணக்கிறது.

வெளியே நடக்கிறார்கள். ஒன்றும் பேசவில்லை.

சாராயக்கடைக் குத்தகையைப் பற்றி இருவர் பேசிச் செல்கின்றனர்.

“ஏப்பா சுந்தரம், கோயில் தெருவில சாராயக்கடை இருக்கு...?”

“மாமு, இந்த ஊரில, இப்ப, என்ன இருக்கு என்ன இல்ல, ஆரு வருவா, வரமாட்டா, ஆரு நல்லவன் ஆரு கெட்டவன்னு ஒண்ணும் சொல்ல ஏலாது. கடத்தல்காரன் வருவா, விடுதலைப் புலியும் இருப்பான். வியாபாரம் பண்றவன் இருப்பான்; வேவு பாக்கிறவனும் இருப்பா. பொண்ணுங்களோட நடக்கிறவன் கூட்டிக் கொடுக்கும் கொத்தனாகவும் இருப்பான். இந்த ராமேஸ்வரம் இன்னிக்கு ராமன் கால் வச்ச புண்ணிய பூமின்னு நினைச்சிராதீங்க. பொலீசுன்னு காக்கி சட்டை போட்டுத் திரியிறவன், கொள்ளையடிக்கிற திருடனாவே கூட இருப்பா. ஒண்ணும் கண்டுக்கக் கூடாது. ஈசுவரா எல்லாம் உம் பாரம்னு, நம்ம வேலையப் பாத்துட்டு ஒட்டாம போயிட்டிருக்கணும்...”

சட்டென்று குமருவின் தோற்றம் நடப்பு எல்லாம் மின்னலாக நெஞ்சில் தோன்றுகிறது. ஒரு கிலி அவனுள் பரவுகிறது. முருகா... முருகா என்று கூவிக் கொள்கிறான்.

அத்தியாயம் - 4

தூத்துக்குடி நகராட்சிப் பள்ளி வளைவில் போடப்பட்டிருக்கும் அந்தக் கீற்றுக் கொட்டகை காற்றடித்தால் கண் மண் தெரியாமல் மணலை வாரி இரைக்கும் கடற்பிடித்து மணலில் கால் கொண்டிருக்கிறது. கசகசவென்று, பல்வேறு தரங்களில் குஞ்சு குருவான்கள்; பிள்ளைகள்... வெற்றிலை வாயும், சுருண்ட முடியும் பலாட்டிய உடற்கட்டுமாகப் பரதவர்கள் என்று சொல்லாமலே விள்ளும் ஆண்கள்... கூடிக் கூடிப் பேசுபவர்கள், எங்களுக்கு வேலை ஏதுமில்லை என்று, அந்த முற்பகல் நேரத்திலேயே மணலில் கீற்றோரச் சிறு நிழலில் புலிக்கட்டம் ஆடும் இளைஞர், பிள்ளையை மடியில் போட்டுக் கொண்டு உறங்கச் செய்யும் பாவனையில் தளைகளற்றுப் பேசிக் கொண்டிருக்கும் பெண்கள்...

வெளிக்கும்பலில் இவன் தேடி வருபவர்கள் தெரியவில்லை.

“ஸியா? ஆரு வேணும் உங்கக்கு?”

ஒரு குமரிப் பெண் வந்து கேட்கிறாள்.

“இங்கே சுகந்தி, தனம் சரோஜா என்று மூணு பொண்ணுக, அக்கா தங்கச்சிக வந்திருக்காவளா?”

“...அமலி அம்மான்னு ஒருத்தரு, மன்னாரிலேந்து வந்தவங்க. அவவளா?”

“ஆ... குட்டையா, தாட்டியா, ஒரு பையன் கூட இருப்பா. ஏழு வயிசில ஒரு பொம்பிளப்புள்ள...”

“ஆ... இருக்கு. உள்ளாற போங்க?”

கொட்டகை வாயிலில் யார் யாரோ பெண்கள்...

உள்ளே எட்டிப் பார்க்கிறான். வண்ண வண்ணச் சேலைகளால் தடுப்புச் செய்து கொண்ட குடும்பங்கள். கலபுலவென்று இரைச்சல் - பேச்சுக்குரல்... முருகேசு திண்டாடிப் போகிறான். “எம்மாடி, தனம், சரோஜா, சுகந்தி...”

“ஏக்கி...? அவவ... அந்த சரோஜா அவள்த்தாண்டி...! தனம்... இங்க பாருடீ, உங்க தாத்தா?...”

அடுத்த சில நிமிடங்களில் அங்கே ஒரு புதிய அலைபரவி, அவனைச் சூழ்ந்து கொள்கிறது.

“சுகந்தி குளிக்கப் போயிருக்கு. ஓடிப் போயிக் கூட்டியா?”

“எங்க தாத்தா எங்கதாத்தான்னு அழுது அழுது கெடந்திச்சி... வந்திடுவாருன்னு சொன்னம், மிச்சமும் வருத்தமாப் போச்சு. எல்லாம் வந்து நோட்டிஸு போட்டாங்க, குண்டு வைக்கப் போறாகன்னு. போயிடுங்கன்னு. இவுவள எப்படி வுட்டுப் போட்டு வார? கடன ஒடன வாங்கிப் போட்டு போட்டு அஞ்சு நூறு குடுத்திட்டுக் கூட்டி வந்திட்டம்...” சுகந்தி குளித்துவிட்டுப் பளிச்சென்ற முகத்துடன் வருகிறாள்.

ஏதோ ஒரு நீளப் புள்ளிச்சேலை... மண்டபத்தில் கொடுத்தார்களாம், அணிந்திருக்கிறாள்.

குமரிப் பெண்களும் விடலைப் பையன்களும் வேலையற்ற சோம்பேறி ஆண்களும், இந்த மறைப்பில்லாத கொட்டடியில் அடங்கி இருக்கும் நிலைமையை முருகேசு பார்த்து நாவெழாமல் சிறிது நேரம் நிற்கிறான்.

“தாத்தா, வெளியே வாங்க. நாம பேசலாம்...”

மணலில் ஒதுக்குப்புறமாக வருகிறார்கள். சுகந்தி குபீரென்று அழத் தொடங்குகிறாள்.

“...ந்தாம்மா, சீ... இதென்ன? நாந்தா வந்திட்டனே? ஏ அழுவுற?” அவள் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். கருஞ்சிவப்புப் பட்டாக விளங்குகிறது முகம்.

“நாம இன்னிக்கே இங்க விட்டுப் போயிடலாம் தாத்தா?... இங்க, அவ்வளவும் மோசம், படுக்க, குளிக்க, எதுமே ஏலாது. ஆக்கள் எட்டிப் பாக்கறதும் சல்லியம் செய்யிறதுமா இருக்கா. ராமுச்சூடும், உறங்கவே இல்ல. கையத் தொட்டு இழுக்கா. சீலையப் புடிச்சி...”

“ஷ்... புரிஞ்சிச்சி. நாம ஒடனே போயிடுவோம்...”

“இங்க கலட்டரிட்ட, தாசில்தாரிட்ட எழுதி வாங்கிட்டு வாரணும்னாங்க. உங்கக்குக் கார்டு குடுத்திருக்காங்களா?”

“ஆமா. அகதின்னு குடுத்திருக்கா... பணம் குடுத்தா, அரிசி வாங்கி, தனியே தா சோறு சமச்சுக்கிட்டோம்... அங்க, உங்களத் தெரியும்னு தோட்ட ஆளு ஒரு பாட்டி இருந்தாவ, பாத்தீங்களா தாத்தா? உங்க கூட சின்னப் பிள்ளையில வெளயாடினாங்களாம்... ஆமா அவங்க இங்க வேற காம்புக்குப் போயிட்டா...”

“அவங்கதா சொன்னாங்க. மேக்கொண்டு நானு இங்க தாசில்தாரப் பாத்து அல்லாம் காட்டி விசாரிச்சிட்டு வார. நாம நீலகிரி போயிரலாம்...”

ஒரு பெரிய பளு இறங்கினாலும், அடுத்தடுத்துக் குறுகிய தடங்களில் பயணம் செய்யும் போது சுமை மேலும் வந்து விடுவது போல் இருக்கிறது.

கசகசவென்று அந்தத் தொழில் நகரம், அவனுடைய நினைப்பைக் காட்டிலும் நெருக்கடி மிகுந்ததாக இருக்கிறது. வண்டிகளும், லாரிகளும், புழுதியும், சாக்கடையும், இரைச்சலும், ‘ஏற்கெனவே பிதுங்கி வழிகிறேனே, நீங்களும் வேறு இங்கே வந்தீர்களா?’ என்று கேட்பது போல் தோன்றுகிறது.

உடலுழைப்பு, உணவு உறக்கம் என்ற ஒழுங்குகள் அறவே குலைந்து போய்விட்டன. புதிய ஊரில், எழுத்துப் புரியாத அலுவலகங்களில் மோதப்படுபவனாக நாலைந்து நாட்கள் அலைகிறான்.

சாய்பாபா மிஷன் என்று சுகந்தியைப் போல் ஒரு பெண், படித்தவள், அன்று அவர்களை எல்லாம் விசாரிக்க வருகிறாள்.

“அம்மாடி, எனக்கொண்ணும் புரியல. தாசில்தார் வருவாகன்னா, எப்ப எங்க வராருன்னு புரியல இந்தப் புள்ளயளும் நானும் ஒரே குடும்பம்... பாரும்மா...!”

அந்தக் குழந்தை உதவி செய்கிறாள். மாலை ஏழுமணியுடன் எங்கெங்கோ அலைந்த பின், மறுநாளைக்குக் கிடைக்கும் என்று வருகிறான்.

நிலவில் மணலில் கொத்துக் கொத்தாக உட்கார்ந்திருக்கிறார்கள். ஒரு பெண் பிள்ளை சட்டியில் கஞ்சி கலக்கி வைத்துக் கொண்டு, மீன் துண்டோ துவையலோ கையில் வைத்து அநுபவித்துக் கொண்டு வித்தாரமாகக் குடிக்கிறாள். அவளைச் சுற்றி இரண்டு மூன்று விடலைகள், பொடிசுகள் கும்மாளமாக நிற்கிறார்கள்.

“மாசியா, ஒரு துண்டு குடு...!”

“சரக்கு வெள்ளை போட்டாவில வராதாம்... இது கஞ்சித் தண்ணிக்குடித்தே?” சரச சல்லாபங்கள், பிணக்குகள், எல்லாம் வெட்ட வெளியில், கட்டவிழ்ந்த நிலையில் விரிகின்றன. வயிற்றுக்கு வழியில்லாமல் சோரம் போகும் பெண்ணும், வீட்டுக்குத் தெரியாமல் காதலிக்கும் இளசுகளும் கூட, தேயிலைச் செடிகளின் மறைவிலோ, அடர்ந்த மரம் செடிகளின் பக்கமோ தான் சாடை மாடையாகத் தங்களை வெளியிட்டுக் கொள்வார்கள். இங்கே எதற்கும் மறைவில்லை. இந்தச் சேலை மறைப்புக்கள் சற்றே சாய்ந்தாலும் கட்டவிழ்ந்து போகும்.

முருகேசு, அந்தக் குழந்தைகளை கொடுக்கப்பட்டிருக்கும் ஒரே பாயில் ஒண்டிக் கொள்ளச் செய்து விட்டு, விழித்தும் விழியாமலும் காவலிருக்கிறான். கொட்டகைக்கு வெளியே பனியும் குளிரும் குலுக்குகிறது. பழைய சாரத்தையும் போர்வையையும் இழுத்துப் போர்த்துக் கொண்டு குறுகி உட்காருகிறான்.

அன்று பகலில் சோறு இல்லை. கிழக்கு வேக வைத்து, ஒரு துவையலும் கூட்டியிருந்தாள். மறுநாள் தான் அரிசி வாங்கவேண்டுமாம்...

அவனுக்கு வயிறு வேறு சங்கடம் செய்தது.

சற்று எட்ட கிழவி இருத்தி விழித்திருக்கிறாள். சோகமாக சாவு வீட்டை நினைவுக்குக் கொண்டு வரும் குரலொன்று மெல்ல இழைகிறது. இரவின் அமைதியில், எல்லாரும் உறங்குகிறார்கள் என்பது எவ்வளவு பொய்யானது!... இந்தக் கிழவிக்கு என்ன துயரமோ?

முருகேசுவுக்கு அவளருகில் சென்று விசாரிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

சுகந்தி வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்து உட்காருகிறது.

“ஏம்மா? படுத்திரு. ஒண்ணும் பயமில்ல...”

அவள் சுற்று முற்றும் பார்க்கிறாள். “படுத்துக்கம்மா?...”

“நீங்க உறங்கவே இல்லையா?...”

“நாந்தா இப்படி உக்காந்தே தூங்குவேன். பழக்கம். வயிசானவ இல்ல...?”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கையிலேயே அங்கே... முகம் விளங்கவில்லை, மேலே போர்வையும் சராயும் தெரியும் ஓர் உருவம் அவர்களைக் கடந்து செல்கிறது. நடையிலிருந்து இளைஞன் என்று புலனாகிறது. கிழவியின் குரல் டக்கென்று மாறுகிறது.

“ஆருலே... ராசா...? ராசாவா?...”

கிழவி எழுந்து குலுங்கக் குலுங்கக் கொட்டகைக்குள் போகிறாள்.

கசமுசவென்று குரல்கள் எழும்புகின்றன.

சுகந்தி உற்றுப் பார்த்துவிட்டு, “...தாத்தா, அதாரு தெரியுமில்ல? ரஞ்சியிட அண்ணன்... அவ... ஈழப் போராளி... பத்துப் படிச்சிட்டிருந்தா. போயிச் சேர்ந்திட்டானாம் காட்டில... அவந்தாப் போல...”

முருகேசு இதுவரையிலும் நேருக்குநேர் அப்படி எந்த இளைஞனையும் சந்திக்கவில்லை.

“தலைமறைவா வந்திருக்கிறானா?...”

“இல்ல தாத்தா, ரஞ்சிக்குக் கலியாணம் நிச்சயம் பண்ணி இருக்கா. கலியாணத்துக்கு மின்ன வருவேன்னு சீட்டனுப்பி இருந்தானாம்... அதாப்போல இருக்கு...”

முருகேசு எழுந்து உள்ளே எட்டிப் பார்க்கிறான்.

அவனைச் சுற்றிக் குடும்பத்தினர்... தாய் அவனைப் பார்த்துக் குமுறி அழுகிறாள். பிறகு தான் முருகேசு கவனிக்கிறான். அவனுக்கு ஒரு கை இல்லை.

“நீங்க இப்படி வருத்தப்பட்டுக் கரையிறதானா நான் இப்பவே போயிடுவேன்.”

“ராசா, கை... இன்னும் ரணம் ஆறலியே...!”

“ஒண்டுமில்ல; எல்லா நெல்லாயிட்டுது. ஒரு கையால வலிவு கூடிப் போச்சி. ஏன் அழுகிறீர், நீங்க அழுகிறதானா நா நிக்கமாட்டே. தங்கச்சி கலியாணமின்னு வந்தேன்.”...பையில் இருந்து ஒரு சேலை, சட்டை, இரண்டும் வெளியாக்குகிறான்....தங்கைப் பெண்ணைக் கூப்பிட்டுக் கொடுக்கிறான்...

“இனி, நாம சுதந்தர ஈழத்தில தான் ஒண்ணு சேருவம். இல்ல... சொர்க்கம்...”

அந்தத் தாயும் கிழவியும் துயரம் வெடிக்கக் கதறுகிறார்கள்.

“நா எந்திரிச்சிப் போகட்டுமா?... சந்தோசமா இருக்கிற நேரம் இது...”

அவசரமாக அவர்கள் அடக்கிக் கொள்கிறார்கள்.

தங்கச்சிப் பெண், அந்தக் கை துண்டான தோளை மெல்லத் தடவுகிறது.

“குண்ட எடுத்துக் கட்டுப் போட்டாங்க, மதுரையில வந்து ஒரு வாரம் ஊசி போட்டுக்கிட்டேன். இப்ப சரியாப் போச்சி...”

முருகேசனுக்கு அந்தப் பிள்ளையிடம் பேச வேண்டும் என்ற ஆவல் உந்தித் தள்ளுகிறது.

“ஏம்பா, தம்பி? இப்படி எத்தினி ரத்தம் பாயணும்? மாவலிகங்கை போல ரத்தம் பெருகியிருக்கும் போல இருக்குப்பா?...”

“பெரியவரே, சிங்களப் படை வெறும் கூலிப்படை, ஈழம் வந்தே தீரும், நிச்சயம்!”

இளரத்தத்தின் நிச்சயமும் உறுதியும் அவனைப் பிரமிக்க வைக்கின்றன.

சூழ்ந்திருப்பவர்களில் யாரோ, “அமுர்தலிங்கம், பார்த்தசாரதி பேச்சுவார்த்தைன்றாங்க, இந்திரா காந்தி அம்மாவால முடியல, அவங்க மகன் தீர்த்து வைப்பான்றாங்க?” என்று கூறுகிறான்.

“இனி பேச்சு வார்த்தை ஒண்ணும் ஏலாது. ஆப்பு வந்து நடுப்பகுதியில் துண்டாக்கிட்டு நிக்கிது. அது நேராப் போகுமே தவுர பின்னுக்கு வார ஏலது.”

சுந்தரலிங்கம் சொன்னது முருகேசுவுக்கு நினைவுக்கு வருகிறது.

“தம்பி, நா ஒண்ணு கேக்கறேன். தப்பா நினைச்சிக்காத. நா தோட்டத் தொழிலாளி. எல்லாம் இழந்து வந்திருக்கிற. இந்த இந்திய வம்சாவளிக்காரங்க எட்டு பத்து லட்சம் தொழிலாளியும் என்ன செய்வா? நிரபாதி அம்புட்டுப் பேரையும் சுட்டுக் கொல்றானுவ,...எல்லாரும் இங்கிட்டு வர்றது சாத்தியமா...”

“அப்கன்ட்ரி ஆளுங்க எல்லாருக்குமா, நாங்க சோசலிச ஈழத்துக்குத் தான் போராடுறோம். எங்க முன்னோரு செஞ்ச தப்ப நாங்க செய்ய விரும்ப இல்ல. பிரிட்டிஷ் ஆழ்ச்சியில தான் உயர்வு தாழ்வுப் பிரிவினையை வளர்த்தது. நாங்க சோசலிச ஈழ லட்சியத்துக்குத் தான் போராடுறோம்...”

முருகேசு அரசியல் படிக்கவில்லை; பத்திரிகை படிப்பதற்கும் தெரியாது. ஆனால் நடைமுறைப் பிரச்னைகளில் அரசியல் அவர்கள் வாழ்வைப் பிணித்திருக்கிறதே? லட்சோப லட்சம் தமிழர் வாழும் தேயிலைத் தோட்டங்கள் தமிழீழத்தில் வருமா? சாத்தியமா?...

அவன் தனியே மணலில் வந்து குந்துகிறான்.

மனசுக்குள் பல பல கேள்விகள் முளைக்கின்றன.

இவர்கள் தனி ஈழம் என்று இப்படி எறி குண்டுடன் விளையாடுகின்றனரே?

ஒப்பந்தக் கூலியாக வந்து, ஒப்பந்த அகதிகளாகத் திருப்பி அனுப்பப்படுகின்றனரே, வம்சாவளித் தொழிலாளர்? இரண்டு அரசுகளும் ஆடுமாடுகளை நடத்துவது போல் அல்லவோ நடத்தியிருக்கின்றன... இவர்களில் இத்தனை லட்சங்களில், எந்தத் தமிழர் தலை நிமிர்ந்து உரிமை கேட்டுப் போராடினர்?

சொல்லப் போனால், இந்த விடலைப் பிள்ளைகள் வெடியும் குண்டும் எறிந்து விளையாடும் போராட்டத்தில், பாதிக்கப் பெற்ற நிலையில் கூட அந்தத் தன்னுணர்வு வரவில்லை.

“எங்க முன்னோர் செய்த தப்பை நாங்க உணர்ந்திருக்கிறோம். நாங்க இலட்சியமாக வைத்திருப்பது சோசலிச ஈழம்...”

சோசலிசம் என்றால் என்ன என்பது பற்றிய விவரம் முருகேசுவுக்குப் பிடிபடவில்லை. இந்த வார்த்தையைத் தொழிற்சங்கத்து ஆறுமுகம் அடிக்கடி சொல்வான்.

அந்தக் காலத்தில், துரைமார் போன பிறகு அதுதான் சோசலிசம் என்று சாராய நெடியுடன் தோப்பில் உட்கார்ந்து கொண்டு மாயாண்டி கதைத்தது நினைவில் வருகிறது. இதைப் பற்றியெல்லாம் முருகேசு இந்நாள் வரை அலட்டிக் கொண்டதில்லை. இப்போது, இந்த சோசலிச ஈழத்துக்காகக் குண்டெறிந்து, ஒரு கையைப் பறிகொடுத்து விட்டு வந்திருக்கும் இளைஞன்... சந்தித்தால் சுதந்தர ஈழத்தில் சந்திப்போம், இல்லாவிட்டால் சொர்க்கம் என்று சொல்பவன்... பால்வடியும் இளமை...

சீ, நாமெல்லாம் இந்த மண்ணில் பிறந்து என்ன சாதித்தோம் என்று தோன்றுகிறது அவனுக்கு. அதே சமயம்... குமாரு...

அவனும் இப்படிக் குண்டெறிந்து விளையாடுகிறானோ? அதனால் தான், அப்பன் மாமன் என்று ஒரு தொடர்பும் வேண்டாம் என்று கத்திரித்துக் கொண்டு போகிறானோ? மயிர்க்கால்கள் குத்திட்டுக் கொள்ள, முருகா, முருகா என்று செபிக்கிறான். தங்கள் தலை முறையினர் செய்யத் தவறிப் போன ஒரு போராட்டம், இப்போது இவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் என்ற நினைப்பில், தனது அல்லல்கள் பெரிதாகப்படவில்லை.

தாசில்தாரின் சீட்டைப் பெற்றுக் கொண்டு ரயிலேறி மண்டபத்துக்கு வந்து இறங்குகிறார்கள். மாலை மங்கி வரும் நேரம். பாய், மூட்டை அலுமினியக் குண்டான் ஆகியவற்றைச் சுமந்து கொண்டு மணலில் நடந்து வருகையில் ஏழெட்டு இளைஞர்களும் பெண்களும் கும்பலாக அலுவலகத்தின் முன் நிற்கின்றனர்.

முருகேசு, தன்னுடன் படகில் வந்தவர்களென்று அவர்களைக் கண்டு கொள்கிறான். பாம்படம் போட்டுக் கொண்டிருக்கும் கிழவி, ஆக்ரோஷத்துடன் மணலில் துப்புகிறாள்.

“எங்க பயன், வுடமாட்டா. பொலீசு கிலீசெல்லாம் பயமில்ல.”

“அங்கதா ஆமிவாரது, கொமப்புள்ளிங்களக் கொலய்க் கிதுன்னா, இங்க அதயும் காட்டிலும் மோசமா இருக்கி. வந்தது வாரதுன்னு அங்கியே கெடந்து செத்திருக்கலாம்... கால மாடனுவ... அம்புட்டும் கொள்ளயடிக்கிறானுவ. என்ன கொண்டாந்த, ஏது கொண்டாந்த...ன்றதும் பூடிசு காலால சவட்டுறதும்?...”

“ஏ அம்மா? என்னா விசயம்?...”

“ஒரு புள்ளயப் போலீசுக்காரன் இனிஸ்பெட்டரோ என்னவோ, கொண்டிட்டுப் போயி, கொலச்சிப் போட்டான், பாவி. இவவுங்க, கடய்க்குப் போனபுள்ள திரும்பலியே இருட்டிப் போச்சேன்னு நாலாபக்கமும் தேடறா... அது... பாவம்... அழுதுட்டே பத்து மணிக்கு ஓடியாருது...”

“அட பாவிகளா?” இப்படியா கழுகுகளும் பருந்துகளுமாக மனிதன் மாறுவான்?

“யாரு புள்ள...?”

“தா, அந்தப் பெரியம்மா, அவிய பேத்தி... சின்ன பொண்ணு, கடயில, முட்ட வாங்கிச்சாம். கெட்டுப்போன முட்டய அதிக வெலக்கிக் குடுத்தாங்களாம். இது சண்ட போட்டு காசத்திருப்பிக் குடுன்னிச்சாம். நாங்க அகதிகதான்னு ஏ இப்பிடி எல்லாம் ஏமாத்துறியன்னிச்சாம். அப்ப பொலீசுக்காரரு என்ன கரச்சல்னு வந்தானாம். டேசனுக்குவா, எழுதிக்குடுன்னு கூட்டிட்டுப் போனானாம், பாவி...”

“ஸியா! மந்திரி வந்தாரு. நல்லா இருக்கீங்களான்னு பேசுனாரு...” என்று குதித்துக் கொண்டு பேசிய பெண்... கள்ள மற்ற குழந்தை... அங்கு, அக்கரையில், கரச்சல், குழப்பம், சண்டை... வெடி... எல்லாம் அடியோடு புரண்டு போயிருக்கிறது. காக்கி உடுப்புக்காரன் மிருகமாகக் கட்டவிழ்க்கப்பட்டிருக்கிறான். இந்தக் கரையில், பயமில்லை என்று சொல்லிக் கொண்டு உலவும் சூழலில் கொடிய விலங்குகளாய்ப் பாயக் காத்திருக்கும் ‘காவல்’ சிப்பாய்கள்...

தன் பொறுப்பில் புறாக்களாகப் பதுங்கும் ‘பெட்டைகளை’ தாய்ப்பறவையாக அவன் நினைப்பு கவிந்து கொள்கிறது.

அத்தியாயம் - 5

மதுரை சந்திப்பு...!

உச்சிப் பொழுது தாண்டி, பகலவன் மக்களை உணவு கொண்டு சற்றே இளைப்பாறுங்கள் என்று இதமாக இரக்கம் காட்டுகிறான்.

கலகலவென்று ஒரு கல்யாண கோலாகலத்துடன் அந்த ரயில் நிலையம் முருகேசுவுக்கு இந்த நாட்களில் என்றுமிலாததொரு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் கூட்டுகிறது. சாப்பாடுப் பொட்டலம் விற்பவர்கள், காபி, வடை என்று உண்டு விற்பவர்கள், அந்தச் சொற்களே மணக்கும் போது உண்டி வகைகள் பசியைக் கிண்டி விடாதா? பூக்களின் நறுமணம்; வண்ண வண்ணங்களாலான அறிவிப்பு, விளம்பரங்கள், ஒலி பெருக்கிக் குரல்,... அடுக்கடுக்கான கனி வகைகள்...

தனது உள்ளச் சிலிர்ப்பின் பூரிப்புடன் “மீனாட்சி தாயே!” என்று நாவில் உச்சரித்துக் கொண்டு ரயிலடி மேடையில், தங்கள் சாமான்கள் எல்லாம் சரியாக இறக்கியிருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்கிறார்கள்.

விடியற்காலையில் எழுந்து, மண்டபத்தில் வண்டி பிடித்து இடம் இல்லாமல் நெருக்கிக் கொண்டு தான் வந்திருக்கிறார்கள். ஆனால், பயமில்லாமல் ரயில் வண்டியில், கையில் ஆயிரக்கணக்கில் பணம் வைத்துக் கொண்டு எப்போது அவர்கள் பயணம் செய்திருக்கிறார்கள்? அதுவும் புதிய ஊர்கள்... பாட்டன் பூட்டன் பேசிப் பெருமூச்செறிந்த தாய் நாட்டு மண்ணின் புதுமைகளைக் கண்கள் விரியப் பார்க்கிறார்கள்.

“தாத்தா, இனி எப்ப ரயில்ல ஏறுவோம்...”

கடைசிப் பெண் சரோஜாவுக்கு முகமெல்லாம் பூரிப்பு. தூத்துக்குடியில் வாங்கிய ஒட்டுப் பொட்டும் ஸ்லைடும் பூரிப்பின் காரணத்தையும் விள்ளுகின்றன. மூவரில் இந்தப் பத்து வயசுப் பெண் தான் கலகலப்பும் கவடறியாத மலர்ச்சியுமாக விளங்குபவள். சுறுசுறுப்பாகக் காலையில் எழுந்ததுமே பல்துலக்கி, தண்ணீர் கொண்டு வந்து, அடுப்புக்குச் சுள்ளி ஒடித்து, பரபரப்பாக எதையேனும் செய்யும் இயல்புடையவள். தனத்தின் இயல்பு அப்படியில்லை. தாயையும் தம்பிகளையும் உயிரோடு எரியப் பார்த்து விட்டாற் போன்ற சோகம் முகத்தில் எப்போதும் குடி கொண்டிருக்கிறது. குட்டையான, அகலப் பூப்போட்ட பாவாடையும், நீலச் சட்டையும், தருமமாகக் கிடைத்தவை. ஏறக்குறைய இரு சகோதரிகளும் ஒரே உயரம் தான். எவள் பெரியவள், எவள் சிறியவள் என்று சொல்வதற்கில்லை. கலகலப்பான முக இயல்பு காரணமாக, சரோசாதான் பெரியவளோ என்று நினைக்கும்படி இருக்கிறது.

“நாம, ஊருக்குள்ளாற போயி, மீனாச்சிய, தரிசனம் பண்ணிட்டு வருவோம்... சாமானங்கள சத்திரம் எங்கனாலும் விசாரிச்சி வச்சிட்டு போலாம் தாத்தா!...”

பாயோடு கட்டிய மூட்டையைத் தூக்கிக் கொள்ளத் தயாராக நிற்கிறாள். முருகேசு சுற்றுமுற்றும் பார்க்கிறான். திக்குத் தெரியாத சந்தடி. மாடிப் படிகளில் ஏறிச் செல்பவர்களும், வாயில்களில் வருபவர்களுமாக இரயில் நிலையம்.

முருகேசு விசாரித்துக் கொண்டு, வெளிப்பக்கம் பயணிகள் தங்கும் கூடத்துக்கு அவர்களைக் கூட்டி வருகிறான்.

அங்கே, படுத்த நிலையிலும் உட்கார்ந்த நிலையிலும் பல பயணிகள், மூட்டையும் முடிச்சுமாக இருக்கின்றனர். அவனைப் போன்ற வறியவர்களே அதிகமாக இருக்கின்றனர். இவர்களும் ஒருபுறம் அந்த சாமான்களை வைக்கின்றனர்.

“தாத்தா, பசியாயிருக்கு, நாம தண்ணி புடிச்சிட்டு வந்து சோறுண்ணலாம்...” என்று சரோசா நிற்கிறாள். உண்மையில் அருகில் ஒரு சிலர் புளிச்சோற்றைப் பிரித்து உண்ணுகின்றனர்.

“நா... தண்ணி புடிச்சிட்டு வார... அதா குழாய்...”

மூட்டையை அவிழ்த்து, ஒரு அலுமினியம் குண்டானை எடுத்துக் கொண்டு அவன் போகையில்...

“மாமோ... ந்தா... முருகேசு மாம... அப்பச்சி? முருகேசு மாமா, அதா...”

முருகேசு குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்புகிறான்.

பஞ்சம் பரதேசிகளைப் போல் அந்தக் கூட்டத்தின் இன்னொரு மூலையில், சடயம்மா, அவள் குழந்தைகள்... புருசன் மாமுண்டு... பரமு... பரமுவா அது?...

இவர்களை விட்டு வந்து இரண்டு வருசம் தானே ஆயிற்று?...

“அம்மானம்...? நீங்க எப்ப வந்திய?...”

கூட்டத்தைத் தாண்டி முருகேசுதான் போகிறான்.

பரமு, தலை முடியெல்லாம் உதிர்ந்து முழு வழுக்கையாக, எலும்புக் கூட்டு உடலில் ஒரு சட்டை துருத்திக் கொண்டு விளங்க, கண்கள் ஒளியிழந்து பள்ளத்தில் தங்க, மூச்சிறைத்துக் கொண்டு...

“ஏம்மா? எப்ப வந்திய? உங்கம்மா எங்க...?”

“அம்மா போயி வருசமாச்சி...”

“ஆ... எங்க வந்திய? எப்ப வந்திய?...”

“ஒண்ணும் வாகில்ல மாமா. நீங்க லயத்த வுட்டுப் போனப்பறம் மிச்சம் குழப்பமாயிட்டது. அம்மா சறுக்கி வுழுந்து, மூட்டெலும்பு முறிஞ்சு போச்சி. பொறவு, கானளந்து நாட்டுக்காரங்களுக்குக் குடுக்காவன்னு சொல்ல, நம்மவங்க தடுத்து மிச்சம். குழப்பம், வெட்டுகுத்துண்ணு. பொறவு நாங்க இந்தியா போறம்னு எளுதிக்குடுத்து, போன வருசம் அதா எம்பத்து மூணு வன் செயலுக்கு அப்புறமா இங்க வந்தம். மண்டபத்துல ஒரு மாசம் போல இருந்தம். பொறவு திருச்சிக்கு அனுப்பினாவ. இங்க புதுசா ஃபாக்டரி திறக்குறமின்னு,... தாயகம் திரும்பினவங்களுக்கு வேலை குடுக்கறதுக்காகவேன்னு சொல்லி அனுப்பிச்சாவ. ஆனா, அஞ்சு மாசமாச்சி. இவங்க போயிட்டுப் போயிட்டு வாரதுதான். வூட்ட தென்னம்புள்ளக்கித் தண்ணி ஊத்து, செம தூக்கிட்டுவா, அப்படி இப்படீன்னு ஏதானும் வேலை, மாசத்துல பத்து நா குடுத்திருக்கா. ஆறு ரூவா கூலி. இல்லாட்டி அதிகபட்சம் ஆறு மணி வரய்க்கும் இருந்தா எட்டு ரூவா. நம்மாளு பத்து பேரு அவங்க ஃபக்டரிக்குன்னு சொல்லி அனுப்பிச்சாவ. ரெண்டு மாசம் இப்படி போக்குக் காட்டிட்டு நிப்பாட்டிட்டாவ. நா அங்க இங்க கூலி வேலை செஞ்சே, இந்த மாதிரி பெரிய பட்டணத்துல, எப்படிங்க பொழக்கிறது? நமக்கு ஒரு வெவரமும் புரியல.

“அப்பச்சிக்கு ஒண்ணுமே ஏலாம இப்பிடித்தான் எழப்பும், இருமலுமா இருக்காவ. அங்க ஒரு மேஸ்திரி சொன்னாவ, தெலுங்கு தேசப்பக்கம் ஸ்லோன் ஆளுவளை எடுக்காவ, நாளக்கிப் பன்னண்டுக்குக் குறயாம சம்பளம், புழைக்க முடியும்னு... மூணு நாளா இங்க கெடக்கிறம், இவவ போயி இப்பதா விசாரிச்சிட்டுவாரா. கொண்டு வந்த பொட்டு பொடிசு அல்லாம் வித்துத் தின்னாச்சி...”

முருகேசு உறைந்து போகிறான்.

பரமு... பரமுவின் குடும்பம், சொந்த சகோதரனைப் போல் காலம் காலமாகப் பழகிய குடும்பம்... ராமாயி ஒவ்வொரு முறை குறைப் பிள்ளையப் பெற்றுப் படுக்கையில் வீழ்ந்த போதும், அருகிருந்து மருத்துவம் செய்த அவன் பெண்சாதி தேவானை, மூத்த பெண் ருக்கு... குமருவைப் பிள்ளைக்காம்பிராவில விடாமல், இந்த மூத்த பெண் ருக்கு பார்த்துக் கொள்வாள்... ருக்குவுக்கு ஐந்து வயசுதானிருக்கும். ருக்குவுக்குப் பிறகு... முருகன், அடுத்து தங்கம்... தங்கத்துக்கும் அடுத்தவன் சடயம்மா... தங்கத்தை பதுளையில் கட்டிக் கொடுத்தான்...

“நீ மட்டும் தான் - உன் குடும்பம் மட்டும்தான் தாயகம் வந்தீங்களா?”

“தம்பி மாணிக்கம் குடும்பம் வந்திருக்கு. நூலாபீசில வேலைக்கு எடுத்திருக்கா. கோயில்பட்டில இருக்கு. எல்லாம் கஸ்டந்தா. எத்தினி கஸ்டம்னாலும் இங்க வந்திருக்க வேணாம்னு தோணுது. அங்கேயே பொறந்தும், வளந்தும், இங்க வந்தது தப்புதான்னு தெனமும் அழுவுற. செம தூக்கப் போனாக் கூட, இங்க எங்க பொழப்பில மண்ணப்போட ஏ வந்தியன்னு கேக்கிறா...”

“அழுவாத புள்ள... என்ன செய்ய, சீம முச்சூடும் இப்ப பெரட்டப் பெரட்டிட்டிருக்கு...”

திரும்பிப் பார்க்கிறான், சரோஜா தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்து விட்டாள். முருகேசு, தன் விவரங்களைச் சுருக்கமாகச் சொல்கிறான்.

வாய் பேசுகிறதே ஒழிய, அவன் மனதில் ஒரு போராட்டம் மூண்டிருக்கிறது. இந்தக் குடும்பத்தினரை இப்படியே கண்டு கொள்ளாமல் அவன் போவதா? நீங்கள் வந்த வழி உங்களுக்கு, நாங்கள் போகும் வழி எங்களுக்கு என்று கண்டு கொள்ளாமல் போகலாமா?

சடயம்மாவின் இடுப்பில் இருக்கும் ஒரு வயசுக் குழந்தை மூக்கொழுக அவனையே பார்க்கிறது. அந்தக் குழந்தை அவன் தோட்டம் விட்ட பிறகு பிறந்திருக்கிறது. முந்தின குழந்தை பெண்... நான்கு பிராயம் இருக்கும். பெரியவன் பையன். ஆறு வயசு இருக்கலாம். குழந்தைகள் சோர்ந்து வாயில் விரலைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றன.

“ஏலே, வால... சோறுண்ணலாம். செல்லி...!” என்று பெண்ணையும் கொஞ்சிய வண்ணம் கூட்டி வருகிறான். குண்டானில் நிறையவே சோறு வடித்துப் புளி காய்ச்சிக் கலந்திருக்கிறார்கள். மானாமதுரையில் வசால் வடை வாங்கி வைத்திருந்தார்கள்.

சுகந்தி சிறுசிறு சருகிலையில் சோற்றை வைத்து, வடையையும் புட்டு வைத்துக் கொடுக்கிறாள்.

அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், முருகேசு மாமுண்டியுடன் பேசிக் கொண்டு நிற்கிறான். இடுப்புக் குழந்தைத் தனக்கும் சோறு வேண்டும் என்று தாவுகிறது.

“தா, அதுக்குப் பாலு எதுனாலும் வாங்கி ஊத்தறது தானே?...”

அப்பன் பையிலிருந்து ஒரு ரூபாய்த் தாளை எடுத்து நீட்டுகிறான்...

“வயித்தால ஊத்துது. சோறொண்ணும் வாணாம்... தே” என்று குழந்தையை அவள் அடக்குகிறாள்.

“என்னம்மா!... நாங்க இப்ப நீலகிரிப் பக்கம் போறம்... இந்தப் பிள்ளைங்களோட பெரியப்பன் சித்தப்பன் குடும்பமெல்லாம் போயிருக்கு. அங்க நமக்கு தேயிலைத் தோட்டத்தில எதானும் வேலை கெடய்க்கும். தெரிஞ்ச பொழப்பு. மின்னமே, நம்ம மாணிக்கத்தின் மச்சான் குடும்பம் போயி, காயிதம் கூடப் போட்டா. எல்லாம் நம்ம ஊரு மாதிரியே இருக்குன்னு... உனக்குதா தெரியுமே? குமருகூட வந்து, அப்பா போயிடுங்க, இங்கே எழுதிக் குடுத்தா அங்க வேலை குடுப்பாங்கன்னான். நாந்தானே முறச்சுக்கிட்டு வெரட்டி விட்டே? இப்ப கிளம்பிட்டோம். இந்தப் பிள்ளையள அவக கிட்டச் சேர்த்திட்டா, எம்பொறுப்பு வுட்டுது. எனக்கு எங்கேனும் செம தூக்கியோ, எப்படியோ ஒரு நேரம் கஞ்சி குடிச்சிப் பிழைச்சிப்பே... என்னா சொல்றிய?...”

இவன் சொற்களில் தொங்கி நிற்கும் ஆசைக்கனி கவர்ச்சியாகத் தான் இருக்கிறது. மொழி புரியும் ஊரிலேயே ஏமாற்றுகிறார்கள். மொழி புரியாத ஊரில், யாரோ சொன்னான் என்று நம்பி எங்கே போய் நிற்பார்கள்? அங்கும் கல் கட்டிட வேலை என்று தான் சொல்கிறார்கள். ஏற்கெனவே ஏழெட்டுக் குடும்பம் எழுதிக் கொடுத்துப் போயிருக்கிறார்கள். அதை நம்பி அவ்வளவு தொலைவு செல்வதற்கும் கூட, வண்டிக் கூலிக்கான முழுப்பணம் இல்லை. சென்னை வரையிலும் டிக்கெட் வாங்கிக் கொண்டு சென்ற பின், அங்கேயிருந்து பார்க்க வேண்டும்...

“ன்னாங்க, அப்ப நாமும் நீலகிரிப் பக்கமே போயிருவமா?”

“அப்பச்சிக்கிட்ட கேளு” என்று கூறுகிறான் கணவன்.

“யம்மா, உங்கள் இந்த நிலமயில வுட்டுட்டுப் போக எனக்கும் மனசில்ல. தாயா புள்ளயா வாழ்ந்தோம். இப்ப நா இங்க எறங்கறப்ப, மீனாச்சி கோயிலப் பாக்கணுமேன்னு ஆசப்பட்டுக்கிட்டே எறங்கின. இந்த சாமான் சட்டத் தூக்கிட்டு எப்பிடிப் போவ. எங்கிட்டு வைக்கன்னு நினைச்சிட்டே தா வந்தே. மீனாட்சி தா இப்பிடி உங்களக் கொண்டு வுட்டிருக்கா. பேசாம நீங்களும் அங்க வாங்க. எப்பிடியோ பொழச்சிப்போம். பாசை தெரியாத தேசத்தக் காட்டிலும் அது மேலு...”

முருகேசு தீர்த்துவிட்டான்.

பாரத்தின் அழுத்தம் உறைக்கும் நேரமில்லை அது.

அவர்களின் கண்காணிப்பில் சாமான்களை வைத்துவிட்டு, வழி கேட்டுக் கொண்டு நடக்கிறார்கள்.

பெரிய கோயில்... பெரி...ய்ய கோயில்!

முருகேசு தலைத்துணியை இடுப்பில் சுற்றிக் கொண்டு, பெண்களுடன் உள்ளே நுழைகிறான்.

“மீனாட்சி, தாயே! கும்புடறோம். எங்களுக்கு நல்ல வழி காட்டம்மா!”

“பிரிஞ்ச சன மெல்லாம் மோதிட்டிருக்கிறோம்... நல்ல வழி காட்டம்மா?”

ஐந்து ரூபாய் செலவழித்து, அருச்சனைத் தட்டு வாங்கிக் கொண்டு உள்ளே செல்கிறான்...

அன்று வியாழக்கிழமை.

அம்பிகை அதிகமான அலங்கார விசேடமின்றி, ஒற்றை ரோஜா மாலையுடன், திலகம் சுடர் தெறிக்க, அபயக் கரம் நீட்டி அருள் பாலிக்கிறாள்.

முருகேசுவுக்குத் தோத்திரப் பாடல்கள் ஒன்றும் நினைவு வரவில்லை.

‘தாயே மீனாட்சி, அம்பிகே பரமேஸ்வரி...’ என்று கண்ணீர் மல்கக் கரைகிறான். கன்னத்தில் போட்டுக் கொள்கிறான். பெண்களை விழுந்து கும்பிடச் சொல்கிறான். அருச்சனைத் தட்டைக் கொடுத்து, “எங்க சனங்க க்ஷேமமா இருக்கணும் சாமி! நாங்க லங்கையிலேந்து வந்திருக்கிறோம்” என்று மனம் கரைந்து முறையிடுகிறான்.

கடுக்கனும் உருத்திராட்சமும் செம்பொன் மேனியுமாக வந்த குருக்கள் இவனை ஒருகணம் நின்று பார்த்துவிட்டு மந்திரங்களை முணமுணத்துக் கொண்டு திரும்புகிறார்.

கோயிலாவது கோயில்! இராமேஸ்வரம் கோயிலக் காட்டிலும் பெரிய கோயில். இதையெல்லாம் பார்க்காத சீவியம் ஒரு சீவியமா?

மனநிறைவுடன் குழந்தைகள் ஆசைப்பட்ட மணிமாலை வளையல்கள் - என்று பத்து ரூபாய்க்குப் பொருள் வாங்குகிறான். சடயம்மாளின் கைக் குழந்தைக்கு இரண்டு ரூபாயில் ஒரு பிளாஸ்டிக் பொம்மை...

கோயில் வாசலில் ஓட்டலில் ஏறி இட்டிலி சாப்பிட்டு, மிட்டாயும் பக்கடாவும் வாங்கிக் கொண்டு அவர்கள் இருட்டோடு ஸ்டேஷனுக்குத் திரும்புகிறார்கள்.

இரவு பத்து மணிக்குத்தான் வண்டியாம். மாமுண்டு கணக்குப்பண்ணி, பயணச் சீட்டு வாங்கி வருகிறான். எல்லோருமாக வண்டி கிளம்பும் வரையிலும் பழைய கதைகளைப் பற்றிப் பேசுகிறார்கள்.

பிறகு வண்டி வருகிறது.

முருகேசு, ஒரு குடும்பத்துடன் இன்னொரு குடும்பச் சுமையையும் சுமந்து கொண்டு மலையேறுகிறான். பரமுவை விட அவன் இரண்டொரு வயசு இளையவனாக இருப்பானாக இருக்கும். ஆனால், பரமு, பெரிய சம்சாரியாக இருந்தும், காற்று வாக்கில் அடித்துச் செல்லப்படட்டும் என்ற மாதிரியில் அந்தப் பிள்ளைகளைப் பற்றிய பொறுப்பு எதையும் தீவிரமாக ஏற்கவில்லை. மாசம் முழுதுமாக வேலை செய்து கூலி பெற்றாலும், பெறாவிட்டாலும், அவன் குடித்தான். ஆண்டுக்காண்டு சராசரித் தொழிலாளியைப் போல் குடும்பமும் பெருக்கியிருக்கிறான். பெண் மக்கள் கொழுந்து கிள்ளினார்கள்; அந்த மலைக் காட்டிலேயே... ‘ஆளாய்’ ஒரு தொழிலாளிக்கு வாழ்க்கைப் பட்டார்கள். பிள்ளைகள் புல்லரிந்தார்கள். படிப்படியாக முன்னேறி, கான்வழிக்கவும் கவாத்து வெட்டவும் எல்லாச் செய்நேர்த்திகளையும் செய்ய வல்லவர்களாகத் தோட்டங்களில் ஊறிப் போனார்கள். பரமு இப்போது இந்த அவல நிலைக்காகக் கஷ்டப்படுகிறானா? அவன் பேசவேயில்லை. அவனால் இனி உழைக்க முடியாது. உட்காரச் சொன்னால் உட்காருகிறான். காபியோ சாப்பாடோ கொடுத்தால் சாப்பிடுகிறான்.

அதிகாலையில் கோயமுத்தூர் சந்திப்பை அடைந்து, பின்னர் மேட்டுப்பாளையம் வண்டியைப் பிடிக்கிறார்கள்.

உயர்ந்த மலைகள் அருகே வருகின்றன.

மேட்டுப்பாளையத்தில் குழாயடியில் முகம் கழுவிக் கொண்டு மீதமிருக்கும் புளிச்சோற்றை எல்லாரும் உண்ணுகிறார்கள். குழந்தைக்கு முருகேசு ரொட்டி வாங்கிக் கொடுக்கிறான். நீலகிரியில் கையிலிருக்கும் விலாசத்தைக் காட்டிச் சரியான பஸ் ஏறத் தெரியாமல், கூனூர் வந்து அலைந்து திரிந்த பின், கோத்தை பஸ்ஸைப் பிடிக்கிறார்கள். சில்லென்று குளிர் வந்து படிகிறது. பெரிய பெரிய மரங்கள்... தேயிலை நிரைகள்... ஆகா... இது எங்கள் இராச்சியம்... இடைஇடையே கண்ணாடிச் சுவர்களும் கூரைகளுமாக ஃபக்டரிகள்... வெட்டுவதும் கிள்ளுவதும், ஃபாட்டரியில் வாட்டுவதும் சலிப்பதும் பிரிப்பதும் உயிரோடு ஊறிப்போன பழகிய காட்சிகள். பஸ் வளைந்து செல்கையில் தேயிலையின் மணம் உள்ளங்களில் நம்பிக்கைப் பால் வார்க்கின்றன...

மாலை ஐந்தரை மணிக்குள் இருட்டினாற் போலிருக்கிறது. குறுகிய சாலை. மக்கள் மஃப்ளரும், கோட்டுமாக நிற்கும் இடம் ஒன்றில் பஸ் அவர்களைக் கொண்டு விடுவிக்கிறது.

அத்தியாயம் - 6

மாமுண்டி, இளவயசுக்காரனே ஒழிய, மந்த இயல்பினன். இன்னதுக்கின்ன செய்ய வேண்டும் என்ற கூரில்லாதவன். அதுவும் குடித்துக் குடித்துத்தானோ என்னமோ, ஓர் உந்துதலே இவனிடம் காணப்படவில்லை. இந்தப் பயலை ஃபாக்டரிக்காரர் ஏற்றுக் கொள்ளாமல் தள்ளியதில் வியப்பில்லை.

குளிரும் இருளுமாகக் கவியும் சூழலில், சாக்கு மூட்டை, பாய், குண்டான், பெட்டி என்று இறக்கி வைத்துக் கொண்டு அவர்கள் நிற்கின்றனர். அவர்களில் சுகந்திக்கு மட்டுமே சுமாராகப் படிக்கத் தெரியும். அந்த விலாசச் சீட்டில், முத்து வேலு பிள்ளை, குன்சோலை கருபாலத்தருகே, முள்ளிப்பள்ளம்... கோத்தகிரி நீலகிரி என்று இருக்கிறது. கோத்தகிரி வந்து விட்டார்கள்.

கடை வாசலில் கோட்டும் தலைக்கட்டும் மஃப்ளருமாக நின்று கொண்டிருக்கும் ஒருவரிடம் முருகேசு அந்த விலாசச் சீட்டைக் காட்டுகிறான்.

அவர் தமக்குத் தெரியாது என்று சொல்கிறார். முருகேசு இன்னும் இரண்டு மூன்று பேரிடம் விசாரணை செய்த பிறகு, அங்கு கடையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஆளிடம் காட்டுகிறான்.

அவன், இவர்களைப் பார்த்துவிட்டு, “நீங்க ஸ்லோன் ஆளுங்களா?” என்று விசாரிக்கிறான்.

“ஆமாங்கையா. அலையக் கொலைய வாரம். அந்தப் பிள்ளைகளோட அப்பன் சித்தப்பன் வீட்டுக்காரங்க...”

“பாலம் இங்க இருக்கு. ஆனா, நீங்க கேக்கற மாதிரி இங்க ஒரு இடமும் இல்ல. மூணு நாலு கிலோமீட்டர் தள்ளிப் போனா, அவங்களுக்கு வூடுகட்ட எடம் குடுத்திருக்காங்க... நீங்க போயி, அங்க ஆபீசு இருக்கு, விசாரியுங்க!...”

“ஆபீசு எங்க இருக்குங்க...?”

“...முன்ன கீழ இருந்திச்சி. இப்ப மேல கொண்டிட்டுப் போயிட்டாங்க போல. போர்டக் காணம். நீங்க இப்பிடி மேலே போயி விசாரியுங்க...”

அவன் காட்டிய பாதை நெட்டுக்குத்தாக, சரளைக் கற்களும் படுக்கைக்கற்களும் நிரம்பியதாக இருக்கின்றது. பெண்கள் எல்லோரும் பழக்கப்பட்ட இடம் - குளிர் என்றாலும் கூட, இப்போது பழக்கம் விட்டுப் போனதாலும், ஒற்றைச் சட்டையும் துணியும் அணிந்து கொண்டிருப்பதாலும், குளிருக்கு இரு கைகளையும் முன்புறம் குறுக்கே போட்டுக் கழுத்தைப் பற்றிக் கொண்டிருக்கின்றனர். திரும்பி வந்து, “பதனமா இருந்துக்குங்க... மேலே ஆபீசு இருக்குதாம், சாரிச்சிட்டு வரலாம்... மாமுண்டி, வா, நீயும்... பரமு அண்ணே, அப்படி ஓரமா குந்திக்குங்க. போய் விசாரிச்சிட்டு வாரம்... புள்ளங்க பத்திரம்!...”

மாமுண்டியின் காலில் செருப்பு இருக்கிறது. முருகேசுவுக்குச் செருப்பும் இல்லை. சரளைக்கற்கள் குத்த, மேலே ஏறுகையில் இவனுக்கும் பழக்கமில்லாத நிலையில் மூச்சு வாங்குகிறது. அந்தப் பாதையின் இருமறுங்கிலும் பெரிய பெரிய மாடிக்கட்டிடங்கள் இருக்கின்றன. வருபவர் போகிறவர்கள் நன்கு உடையணிந்தவர்களாக இருப்பதால், இவர்கள் அந்தச் சூழலுக்கே அன்னியமாகின்றனர்.

கம்பளிச் சட்டையுடன் ஓர் ஆள் இறங்கி வருகிறான்.

முருகேசு சற்று மூச்சு விட நின்று, “...ஐயா,...நாங்க ஸ்லோன் காரங்க. தாயகம் திரும்புறவங்களுக்குன்னு ஒரு ஆபீஸ் இருக்குதாமே, அது எங்கங்க இருக்கு?...”

அவன் வாய் திறந்து பதில் சொல்லாமல் மேலே என்றபடி ஆகாசத்தைக் காட்டினார் போல் கையைக் காட்டி விட்டு இறங்கிப் போகிறான்.

“இன்னும் மேலியா?...”

“ஆமாம்... மேல...” என்று பின்னால் வரும் இளவட்டங்கள் இருவரும் சிரிப்பது போல் இவனுக்குத் தோன்றுகிறது.

சாலையில் நடந்தால், “தோணி... கள்ளத் தோணி...” என்று நையாண்டி செய்தார்கள். இவர்களை இழிவு படுத்தினார்கள். அதே நிலையா இங்கும் என்று மனசில் சுருக்கென்று ஊசி குத்துகிறது.

மேலே மேலே சென்ற பின், அங்க மைதானம் போல் சற்றே அகலமான ஓரிடத்தில் விளக்குகள் போட்ட ‘டென்ட்’ கொட்டகை ஒன்றிலிருந்து ஒலிபெருக்கி ஏதோ பேச்சை ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறது.

சினிமா கொட்டகையா அது?...

இல்லை... “தாய்மார்களே, சகோதரர்களே, ஈழ விடுதலை இயக்கச் செய்திக் கண்காட்சி... இலங்கை ராணுவம், ஈழப் போராளிகளை வேட்டையாடுவதாக நிரபராதிகளைக் கொன்று குவிக்க, வெறித்தனமாகக் கட்டவிழ்க்கப்படுகிறது. எமது இளம் வீரப் போராளிகள், அஞ்சா நெஞ்சத்துடன் புரியும் சாகசங்கள், கூலிப் படையினரைத் திகைக்க வைக்கின்றன. செய்திகள் காட்டும் விளக்கப் படங்கள்... கண்காட்சி காண வாருங்கள், கட்டணமில்லை...”

இதுபோல் எங்கேனும் ஒலிபெருக்கி போட்டு விட்டால் குஞ்சு குழந்தைகள் முதல் ஓடி வருமே?

இங்கு யாரும் வரவில்லை. நின்று பார்க்கவுமில்லை; கேட்கவும் இல்லை.

ஒருவேளை இதுவே அவர்கள் தேடி வந்த ஆபீசாகவும் இருக்கலாம் அல்லவா?

முருகேசு, சாலையோடு இணையும் பரப்பில் நடந்து அந்தக் கூடாரத்துக்கு வருகிறான். வாசலில் ஈழ விடுதலைப் போராளி போல் தொப்பியும் சட்டை, பெல்ட்டும் அணிந்து ஓர் இளைஞன் நிற்கிறான்.

“ஏம்ப்பா, தம்பி, நாங்க தாயகம் திரும்பிய தோட்டத் தமிழருங்க. ஆபீசு எங்க இருக்கு?... இதா ஆபீசா?”

அவன் “உள்ளே வந்து பாருங்க...” என்று கூப்பிடுகிறானே ஒழிய, கேட்டதற்கு நேரான மறுமொழி கொடுக்கவில்லை.

என்றாலும் முருகேசுவும் மாமுண்டியும் உள்ளே செல்கிறார்கள்.

இருவருக்கும் படிக்கத் தெரியாது. இவற்றைத் தெரிந்து கொள்ளும் மனநிலையும் இல்லை. திரும்பத் திரும்ப இராணுவம் சுட்டுத் தள்ளிய, எரிந்த கோலங்கள், இடிந்த கட்டிடங்கள், வீழ்ந்த மனித சடலங்கள், கண் நொள்ளைகளாக... அலங்கோலமாக பலியான வீரப்பிள்ளைகளின் படங்கள்...

இவற்றை எல்லாம் இவன் படங்களில் பார்க்க வேண்டுமா? பேசாலையிலும், மன்னாரிலும் எரிக்கப்பட்ட காட்சிகளை நேராகப் பார்த்தவன் தானே?

ஆனால் எங்கோ இந்த மலை மூலையில் இவர்கள் கொட்டகை போட்டு கலர் பல்ப் போட்டு, இதை எல்லாம் காட்டுவார்கள் என்று நினைத்துக் கூட அவன் பார்த்திருக்கவில்லை. சாலையில், மேட்டில் எத்தனையோ மக்கள் சென்ற வண்ணம் இருக்கின்றனர். அவர்களில் எவருக்கும் இதற்குள் வந்து பார்க்கும் அவகாசமோ, ஆவலோ இல்லை. இதை விட இரண்டு தலை ஆட்டுக்குட்டி, கை முடமாக பெண் காலால் செய்யும் சாகசம் என்று ஏதேனும் வைத்திருந்தால் கூட்டம் கூடுமாக இருக்கும் என்று அவனே நினைத்துக் கொள்கிறான்.

“ஏப்பா, நீ ஈழப் போராளியா?...”

அவன் வாயைத் திறக்காமல் சிப்பாயைப் போல் விறைப்பாக நிற்கிறான்.

“உங்கிட்ட கேட்டனே, தாயகம் திரும்புறவங்களுக்கான ஆபீசு எங்க இருக்குன்னு?”

அவன் சிறிதும் அசையாமல், “தெரியல...” என்று சொல்கிறான்.

முருகேசுவுக்குக் கண்மண் தெரியாமல் கோபம் வருகிறது. அடக்கிக் கொள்ளும் முயற்சியாக நாவைக் கடித்துக் கொள்கிறான்.

பாவிப் பயகளா? தெரியல... தெரியாம சுடுகாடாப் போகட்டும்!

தேன்கூட்டில் தீயச் சொருவின பாவிப்பயக... அந்த நாளில தோட்டக்காட்டான், வடக்கத்தியான்னு எங்கள ஏசினீங்க. இன்னக்கி... இன்னக்கி அந்தப்... பயன் தூத்துகுடியில் கண்டபயன், எவ்வளவு இதமாப் பேசுனான்? எங்க மின்னோர் பண்ண தப்ப நாங்க பண்ணலன்னானே? அவன் வேற, இவன் வேறயா?

படுபாவிக... தெரியலியாம், தெரியல...

கண்களில் நீர் கொப்புளிக்கிறது. மூக்கில் நீர் பெருகி வருகிறது. ஒரு பருக்கைக் கல் ஏற்கெனவே வெடித்திருந்த கட்டை விரல் இடுக்கில் குத்திப் பதம் பார்க்கிறது. உடல் வலியைக் காட்டிலும் நெஞ்சுக் காயங்கள் அதிகமாக வேதனைப் படுத்துகின்றன. “சிங்கள ஆமி அடிக்கிது, உதைக்கிதுன்னு சொல்லி இங்க நாயம் கேக்க வந்தாப்புல தான காட்சி போட்டிருக்கிய? அட ஒரு தோட்டத் தொழிலாளி அம்போன்னு வந்து நின்னு அட்ரசு கேக்கறான், அநுகூலமா, ‘மாமா, எனக்குத் தெரியல, விசாரிச்சிச் சொல்றேன்னு’ சொல்லக்கூடாதா? அத்தனிக்குக் கூட ஈரம் இல்லாத நீங்க என்னாடா நாயம் செய்திடப் போறீங்க லட்ச லட்சமான எங்க சனங்களுக்கு?

அந்த மேல் சாலையில் விளக்குகள் பூத்திருக்கின்றன. சும்மாடு சுமந்த தலைக்கட்டுடன் கூலிக்காரர் சிலர், பெண்கள், திரும்பிப் போய்க் கொண்டிருக்கின்றனர்.

முருகேசு, விரைந்து சென்று ஒருத்தியிடம், “ஏத்தா, நாங்க... ஸ்லோன் தோட்ட ஆளுங்க, தாயகம் திரும்பினவங்களுக்கு ஆபீசு இருக்குதாமே... அது எங்கன்னு தெரியுமா?...”

அவள் சற்றே நின்று விட்டு, “இதா ரோட்டுல ரெண்டு விளக்குக் கப்பால, இந்திரா அம்மா படம் போட்ட ஆபீசு ஒண்ணு இருக்கு. அங்க விசாரிச்சிக்குங்க...” என்று சொல்கிறாள். அதே குரலுடன், “இப்பிடி அன்னாடம் வந்து வுழுறாங்க, இங்க. நமக்கு இந்தக் கூழிலும் மண்ணடிக்க” என்று சொல்லிக் கொண்டு நடப்பது காதில் விழுகிறது.

அவள் சொன்ன இடம் அவர்கள் நாடி வந்த அலுவலகம் அல்ல. ஆனால் அங்கே கோட்டும் தொப்பியுமாக நின்ற பெரியவர், தாயகம் திரும்பியவர்களுக்கான ஆபீஸ், பஸ் நின்ற இடத்திலிருந்து நெட்டுக் குத்தாகச் செல்லும் கீழ்ப்பாதையில் சென்றால், ஒரு பாலம் வருமென்றும், பக்கத்தில் கிழங்கு மண்டி ஒன்று இருப்பதாகவும், அங்குதான் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறார். முருகேசு தெம்புடன் ‘முத்துவேல் பிள்ளை’ என்ற முகவரி சீட்டைக் காட்டுகிறான். “அங்க ஆபீசில கேளுங்க, சொல்வாங்க. அதிகமான பேர் இங்க வந்து தோட்டங்களில், மண்டிகளில் வேலை செய்கிறார்கள். போய் விசாரியுங்க.” இறங்குவது கடினமாக இல்லை. இதற்குள் இருட்டிப் போகிறது.

சடயம்மா, பிள்ளையை இழுத்துத் தலையோடு கால் சேலைத் தலைப்பினால் மூடிக் கொண்டிருக்கிறாள்.

“கெடச்சிச்சா மாமா?”

“மேல போன்னாங்க... மேல போனம். இப்ப மீள போன்றாங்க.”

“போய்ப் பார்ப்பம்...? நம்ம அல்லல் என்னைக்குத் தீருமோ?”

கீழே நெருங்க நெருக்கமான வீடுகள், சிறு கடைகள், ஏழை எளியவர் நெருங்கும் இடங்களாகப் போகின்றன. லாரிகள், லாரிக்காரர்களின் பேச்சுக்கள் - கள் சாராயக்கடை, குப்பை கூளங்கள், என்று கடந்து பாலம், ஆபீசுக்கும் வந்து விட்டார்கள்.

ஆனால், அந்த ஆபீசு பூட்டிக் கிடக்கிறது. யாருமே இல்லை.

அருகில் ஒரு கடை முகப்பில், கந்தலும் வறுமையுமாக ஒரு குடும்பம் இடம் பெற்றிருக்கிறது. முருகேசுவுக்குப் பீதி நாவை அழுத்துகிறது. ஒரு கால் அவர்கள் இலங்கைத் தோட்டத் தொழிலாளிகளோ?

இல்லை. அவர்களிடம் அவன் எதுவும் கேட்கவில்லை. முருகா... மீனாட்சி தாயே ஈசுவரா... எங்கக்கு இனிச்சோதனை வேண்டாம்...

மீண்டும் அவன் மேலேற வரும் போதுதான் மாமுண்டு தன்னுடன் வரவில்லை என்று புரிந்து கொள்கிறான்.

“ந்தப்பய எங்க போனான்?”

வரவேயில்லையா தன் பின்னே?... சோம்பேறிப் பயல்.

இனியும் எங்கும் போய்த் தேட முடியாது. இரவு எங்கேனும் தங்கிவிட்டு காலையில் விசாரித்துக் கண்டு பிடிக்கலாம். இரவு எங்கே தங்குவார்கள்?...

கலவர காலத்தில் லயங்களில் தங்க அஞ்சி, மலைமேல் தேயிலைச் செடிகளிடையே, விஷப் பூச்சிகளின் அபாயத்தில் கூடத் தங்கி இருக்கிறார்கள். அப்படி...

முருகா...

மனசோடு கூவிக் கொண்டு மேலேறி வருகையில்... பின்னால் மாமுண்டி மெல்ல வருவதைக் கண்டுகொள்கிறான்.

“எல, எங்கடா போயிட்ட...?”

அவன் பதில் சொல்லவில்லை. ஆனால்... குடித்து விட்டு வந்திருக்கிறான் என்பது தெரிகிறது.

அட பாவிப்பயல, ஊருல காலு குத்தியதும் எங்க கள்ளுக்கடை, சாராயக்கடைன்னு பாத்துத் தொலச்சிட்டியா? உருப்பட்டாப்பிலதா!

முருகேசு துயரங்களை விழுங்கிக் கொண்டாக வேண்டியிருக்கிறது.

அவர்களை நிற்க வைத்த இடத்தில்... சிறுமிகளின் புள்ளிச் சட்டை... முழங்காலுக்குக் கீழே வராத பாவாடை... புலப்படவில்லை. குழந்தைகள்... சடயம்மா, கீழே குந்தியிருந்த பரமு...

யாரும் இல்லை. பஸ் ஒன்று வந்து மக்கள் யார் யாரோ இறங்குவதும் நடப்பதுமாகச் சந்தடியாக இருக்கிறது. பஸ் சென்ற பின் அவன் அங்குமிங்கும் பார்வையை ஓட்டுகிறான்.

எங்கே அவர்கள்?... ஏவுட்டி...! சுகந்தி...! சரோசா...!

பிள்ளைகளை யாரேனும் கடத்திப் போய் விட்டார்களா? பரமு, சடயம்மா, குழந்தைகள்... எங்கே? இங்கே தானே நின்றார்கள்?

“எல... எண்டா, மரமாட்ட நிக்கிற? பாரு அந்த பக்கம் போயி!” முருகேசு எதிரே இருக்கும் கடைக்காரரிடம், “ஏய்யா, இப்ப பஸ்ஸில வந்து எறங்கி நின்னாங்களே பொண்ணுங்க, ஒரு முடியாத ஆளு எல்லாரும் எங்கே போனாங்க தெரியுமா?...”

“நா கவனிக்கலியே?...”

ஆமாம், கவனிக்கிற நேரமா? பகல் வெளிச்சமானாலும் கவனித்திருப்பார்கள்.

முருகேசு அழுது விடுவான் போல் உடைந்து போகிறான்.

தெருவில் இரண்டு பக்கமும் பார்த்துக் கொண்டே செல்கையில், பெரிய விளைக்கை வைத்துக் கொண்டு, ஓராள் சுடச்சுட வண்டியில் ஏதோ தீனி விற்கிறான். பச்சியோ, வடையோ...

அந்தக் கும்பலிலிருந்து சரோ ஓடி வருகிறது.

“தாத்தா...? தாத்தா...? நாங்க இங்க இருக்கிறம்... இதா பச்சவேலு மாம வந்திருக்கு...”

“மாமா... இத தாத்தா...!”

செவிகளில் தேன் பாய்ந்தாற் போல் இருக்கிறது.

தலையில் பூத்துவாலை. மூடாத கோட்டு, சராய். பளிச்சென்று பற்கள் தெரிகின்றன. “...வணக்கம்... மாமு... நா இங்கதா லோடு ஏத்தி லொரில வந்திட்டிருந்த. பாத்தே... சட்டுனு சுகந்திப்புள்ள மாதிரி தெரிஞ்சிச்சி. எறங்கின. பாத்தா அவுங்கதா...”

முருகேசுவின் உள்ளம் முருகா, முருகா என்று கரைகிறது.

முத்துவேல் மாமன் இப்போது அங்கு இல்லை. கூனூர் பக்கம் எங்கோ உருளைக்கிழங்குத் தோட்டத்தில் அவர் தம்பி... சிறியவர் இருக்கிறார். பச்சைவேலு, முத்துவேல் பிள்ளையின் மச்சான் மகன். இவனுடைய தாய் தந்தையர் சென்னையில் இருக்கிறார்கள். இவன் லாரி ஓட்டுவான். சரக்கெடுக்க நீலகிரி முழுவதும் எங்கும் போவான்... அவர்கள் எழுபத்தெட்டு கடைசியில் இந்தியாவுக்கு வந்தார்கள்...

“எல்லாம் வாங்க, நம்ம வீட்டுக்குப் போவலாம்!”

...நம்ம வீடு...

முகமறியாத இடத்தில் நம்ம வீட்டுக்குப் போகலாம் என்று கூப்பிடுகிறான்... தங்கள் மூட்டை முடிச்சுக்களுடன் அவன் அவர்களை எங்கோ கூட்டிச் செல்கிறான். மேட்டில் ஏறி, வரிசையாக லயன் போல் தெரியும் வீடுகளுக்கு முன் நின்று குரல் கொடுக்கிறான்.

“அம்மா...?”

ஒரு பையன் தான் கையைக் கட்டிக் கொண்டு வருகிறான்.

“பொட்டம்மா இல்ல?...”

“குன்னூரு போயிருக்காவா...”

“நெம்பர் ரூம்பு சாவி இருக்கா? கொஞ்சம் ஆளுவ வந்திருக்காவ. காலைல எடம் பாத்துட்டுப் போயிருவா... சாவி தா...”

பையன் சாவி கொண்டு வந்து கொடுக்கிறான். அந்த வளைவுக்குள் விறகோ, சாமானோ போடும் தகரத் தடுப்பு அறை ஒன்று பூட்டப்பட்டிருக்கிறது. அதைத் திறந்து விடுகிறான். மின் விளக்கைப் போடுகிறான். அங்கே கட்டை அடுக்கியிருக்கிறார்கள். அதன் மேல், தட்டுமுட்டு, உடைந்த சைக்கிள் பகுதிகள், குழந்தை விளையாடும் ஆடும் குதிரை என்று கிடக்கின்றன. ஒதுக்கிவிட்டால் நாலும் பேர் தான் படுக்க இடம் தேறும்.

விறகை வெளியே எடுத்துப் போட்டுப் பெருக்கினால், தாராளமாகப் படுக்கலாம். இளைப்பாறலாம்.

பின்புறம் குழாய் இருக்கிறது...

பச்சையே விருவிரென்று சாமான்களை வெளியே வைக்கிறான். விறகை ஆளுக்கு இரண்டு கைகளாக வெளியே எடுத்துப் போடுகிறார்கள். சரசரவென்று வேலையாகிறது. சடயம்மா துடைப்பம் கொண்டு கூட்டி விட்டாள். சுத்தமாகி விட்டது. கதவை மூடிவிட்டால், பெட்டி போலாகிவிடும்...

“சொந்தக்காரங்க... தெரிஞ்சவங்களா?...”

“ஆமாம் ரொம்ப நெல்லவங்க. கிழங்கு தோட்டம், தர்க்காரித் தோட்டம் இருக்கு. ரெண்டு புள்ளய அமெரிக்கா போயிட்டா. குன்னூரில மக இருக்கு. போயிருப்பாங்க, இந்த ஊருக்காரங்க...”

“என்னமோப்பா, முருகனே வந்தாப்பில வந்த... எனக்கு வேறொண்ணும் சொல்லத் தெரியல...”

“ஏனம் எதுனாலும் இருந்தா குடுங்க. தேத்தண்ணி வாங்கியாற ராவிக்கு சாப்பாட்டுக்கு...”

“இருக்கு...” என்று சடயம்மா சொல்கிறாள்.

“வேவிச்ச கெளங்கு வாங்கினம். பன்னு, முருக்கு எல்லாம் வச்சிருக்கே. சோறும் கொஞ்சம் போல இருக்கு... நீங்க ஆம்பிளங்க எதானும் சாப்பிட்டுட்டு வாங்க...”

“அதெப்படிப் பத்தும்?...”

அவன் ஏனம் வாங்கிக் கொண்டு போகிறான்.

“நீங்க வரவேணாம் மாமு. ஆறுதலா இருங்க...”

“அப்பாடி...” என்று முருகேசு குந்துகிறான்.

சுகந்தியின் முகத்தில் ஒரு மலர்ச்சி... சந்தோஷம் எட்டிப் பார்க்கிறது. “சடயம்மா, புள்ள ஏ சவண்டு கெடக்கு?... உக்காருங்க... இந்த மட்டும் வந்து சேர்ந்திட்டம்...”

“புள்ளக்கிக் காயுது...” துணியை மடித்துப் போட்டுக் கீழே விட்டுப் போர்த்துகிறாள்.

சற்றைக்கெல்லாம் பச்சை சூடாகத் தேநீரும் தோசைப் பொட்டலங்களும் கொண்டு வருகிறான்.

எல்லோரும் பசியாறி, களைப்பின் மேலீட்டாலும், பயண அலுப்பினாலும் உறங்கிப் போனார்கள். முருகேசு கண் விழிக்கும் போது, பொழுது நன்றாக விடிந்திருக்கிறது. பனிமூட்டமும், பசுமையான சரிவுகளும், வீடுகளும், எதிர்கால நம்பிக்கைகளும் புரியாத நடப்புக்களையும் போல் ஒன்றுக்கொன்று முரண்களாகத் தோற்றுகின்றன.

குழந்தைகள் அயர்ந்து நெருங்கிப் படுத்துப் பிணைந்து கொண்டு உறங்குகின்றனர். மாமுண்டி பிள்ளைகள், ஒரு பாயில் நெருங்கிக் கிடக்கின்றனர். பரமு இப்போதுதான் எழுந்து குந்தி இருமுகிறான்.

முருகேசு, சரிவில் இறங்கிப் பார்க்கிறான். நெடிதுயர்ந்த யூகலிப்டஸ் மரம் ஒன்று வெட்டப்பட்டுச் சரிந்திருக்கிறது. புல் நுனிகளில் பனிநீர், வெறும் கால்களில் தேள் கொட்டலாய்க் கடுக்கச் சுரீலென்று பாய்கிறது. ஒற்றைச் சட்டைக்குமேல் இராமநாதபுரத்தில் வாங்கிய போர்வையைப் போர்த்தி இருக்கிறான்.

இராமேசுவரத்தில் மாற்றிய பணத்தில், ஆயிரம் போல் செலவழித்தாகிவிட்டது. இன்னும் இங்கே தங்க, வீடு எடுக்க வேண்டும். கொஞ்சம் போர்வை துணி வாங்க வேண்டும்... எல்லாவற்றுக்கும் முருகன் இருக்கிறான்...

பச்சைவேலு அவர்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறான்.

அத்தியாயம் - 7

பச்சைவேலு முருகேசனை வளைந்த சாலையில் கூட்டிப் போகிறான்.

மேலே, மேடு முழுவதும் தேயிலை நிரைகள். பள்ளத்தில் ஆங்காங்கு ஒவ்வொரு வீடு தெரிகிறது. தனியாரின் உருளைக்கிழங்கு - கோஸ் தோட்டங்கள் வரிசை வரிசையாக நடு நடுவே தெரிகின்றன. மனிதர் வாழும் வண்மையைக் காட்டும் இடங்களை எல்லாம் கடந்து, ஒரே காடாகத் தெரியும் இடத்தில், சறுக்கலாகச் செல்லும் ஒற்றைப் பாதையில் அவன் விடுவிடென்று போகிறான். அங்கே... திருத்தப்படாத காட்டின் நடுவே, ஒரு பள்ளச் சரிவில் ஆங்காங்கு தகரம், சாக்கு, ஓடு, என்று வீடுகள் அல்ல, குடிசைகள் தெரிகின்றன. ஓரிடத்துக்கு மற்ற இடம் காட்டுச் செடிகளையும் கொடிகளையும் கடந்து சரிவிலும் குண்டு குழியிலும் நடக்க வேண்டும். நடக்கும் பாதைகள் அழகாக வெட்டி அமைக்கப்படவில்லை. நடந்து நடந்து தடம் ஏற்பட்டிருக்கிறது.

“இதெல்லாம் தோட்டக்காரங்க வந்து குடியேறின எடந்தா மாமு... அதா... அங்க இருக்கிற வூடு, இப்ப ஆளு இல்லாம இருக்கு. வந்து பாருங்க... நீங்க... இங்கே டான்டீல வேலை இருக்குன்னு வந்திருக்கீங்களா, எப்படி மாமு...?”

“டான்டீன்னா என்னால...!”

“அதா, தமிழக அரசு டீத்தோட்டம். அங்க கண்டிலியே எழுதிக் குடுத்துடறாங்க, இன்னாருக்கு இங்க வேலன்னு... அப்பிடிக் குடுத்தவளான்னு கேட்ட...”

“அதெல்லாம் கரச்சலுக்கு முன்னா இருக்கும். நாந்தா அப்ப வரலன்னுல இருந்த. பொறவு ஒருநா உனுக்கு வயிசாயிப் போச்சி, வேலை இல்லன்னிட்டான் தொர. எப்படி எப்படியோ ஆச்சி. இந்தப் பிள்ளைகள அவங்க ஆளுவகிட்ட ஒப்புவிக்கணும். சடயம்மா, பரமு... இவங்க... தாய் பிள்ளையா சுகத்தில கஷ்டத்திலன்னு இருந்தவங்க. வேற உத்தாரு உடம்பிறப்புன்னு ஒட்டல... ஏம்பா, டீதோட்டத்துல இங்க வேலை கிடக்கிமில்ல?”

“மாமா, அரசு தோட்டமுன்னாதா, வூடு, நல்ல கூலி சலுகை எல்லாம். அதும் கூட உங்களை அங்க வயிசாச்சின்னு தள்ளிட்ட பிறகு, இங்க வந்திருக்கிய. அதனால தனியா இருக்கிற எடங்கள்ளதா வேலை தேடணும். அது ரொம்ப சிரமம்...”

“ஏம்பா, வேலை கெடய்க்காதா? நீலகிரியில் எம்புட்டுச் சனம் போயிருக்கா வேலை கெடய்க்கும்னாவ?”

“ஆமாம் மாமா நாளொண்ணுக்கு நாலு குடும்பம்னாலும் வந்து வுழுதுங்க. எப்படி வேலை கெடய்க்கும்! ஏற்கெனவே வந்தவங்க, இங்கியே இருக்கிறவங்க தங்க வயித்தில மண்ணடிக்க இவங்க வந்திட்டாங்கன்னு காயறாங்க... நம்ம உறவு சனங்கல்லாம், மூணு குடும்பக்காரங்க இங்க வந்து வேலை இல்லாம, இப்ப கூடலூரு, பந்தலூரு, தேவாலான்னு காபித் தோட்டம் அங்க இங்கன்னு போயிப் பிழைக்கிறாங்க... நாங்க முன்னடியே வந்தோம். எங்கப்பா மட்றாசில, அம்பத்தூரு பக்கம் புதிசா கட்டுற ஃபக்டரில வேலை இருக்குன்னு, அங்க தா வந்தாரு. பெறவு, நாந்தா இந்த லாரி வேலை கிளீனரா இருந்து படிச்சிட்டே, இப்ப நெல்ல மாதிரியா இருக்கிற... பொட்டம்மா இருக்காங்களே, அவுங்க புருஷன் மிலிட்ரில இருந்தாரு... செத்திட்டாரு. அவங்க லொரிதா நா ஓட்டுற. கொஞ்சம் தோட்டம் எல்லா இருக்கு. ஒரு ஆபத்து சம்பத்துன்னா அவங்க கிட்டதா எதுவும் கேட்டுக்குவ. அதா தயிரியமா, கார்ஷெட்டத் தொறந்து வுட்ட. இப்ப காரொண்ணும் மில்ல. மகன் அமெரிக்கா போகுமுன்ன வச்சிருந்தா. வெறவுதா போட்டிருக்கா...”

ஒற்றையடித்தடம் போல் நீண்ட வழியில் குண்டு குழி சரிவு தாண்டி அந்த வீடு இருந்த பக்கம் ஏறுகிறார்கள். ஏறக்குறைய ஒரு வட்டச்சரிவு போல் அமைந்த பள்ளத்தைச் சுற்றி, ஆங்காங்கே முளைத்த வீடுகள். கீழே கிடு கிடு பள்ளத்தில் பாறையும், மனிதர் புகமுடியாத மரம் செடி கொடிகளுமாக இருக்கும் இடத்தில், குட்டையாக நீர் போல் தெரிகிறது. காட்டருவி ஏதோ போகிறது.

தட்டித்தடுப்பு உட்சுவர்கள். கதவு வாசலில் குட்டியாக மண் திண்ணை. மேலே சிமந்துத் தட்டிக் கூரை வாசலில் ஒரு கிழவி போர்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள்...

வரிசையாக ஐந்தாறு வீடுகள்... அதில் ஒன்றில்தான் பச்சைவேலு கூட்டி வந்திருக்கிறான்.

“ஆத்தா, வூட்டுக்கு ஆரும் வர இல்லயே?”

“பயங்க, ஆரும் வூட்ட இல்ல. அல்லாம் காலம வேலைக்குப் போயிட்டாவ?...”

“பொம்பிளங்தா இருக்கா...”

“இவங்க... நம்ம ஆளுவ. அங்கேந்து வந்திருக்கா, ரத்னபுரா தோட்டம். இப்ப வூடுவேணும்...”

“எத்தினி பேரு...?”

“இவரு, பின்ன தம்பி மக புருசன், ரெண்டு சின்னப் புள்ளக.”

கிழவி அடுத்த வாயிலின் வெளியே நின்று குரல் கொடுக்க, ஒரு குமரிப் பெண் எட்டிப் பார்க்கிறாள். சாவி வருகிறது.

திறந்து பார்க்கிறார்கள். வீட்டின் மொத்தப் பரப்பே பத்தடிக்குப் பத்தடி தான் இருக்கும். அதில் தட்டித் தடுப்பாகச் சமையல் - படுக்கறை என்று பிரித்திருக்கிறார்கள். படுக்கையறையில் ஒரு மூங்கிலிலான கட்டில் சுவரோடு ஒட்டிக் கிடக்கிறது.

“தண்ணி தவசி...”

“தண்ணி கீள இருக்கு. அங்கேந்து கொண்டாரணும்... விளக்கு சிம்னிதான் வச்சுக்கணும்...”

“முப்பத்தஞ்சு ரூபா வாடகை...” என்று கிழவி கறாராகப் பேசுகிறாள்.

“முப்பது வச்சுக்குங்க... பாட்டீ?”

“அஞ்சு ரூபா கட்டிலுக்கு... அதுக்குக் குறச்ச இல்ல.”

“கட்டில் வாணாம்னா குறச்சுப்பீங்களா?”

“இல்ல...”

“சரி, வுடு, இருக்கட்டும். இப்ப அல்லாம் வந்திட்டப் பிறகுதான பேச்சு?...”

கிழவி, இரண்டு மாச வாடகை முன் பணம் வாங்கிக் கொள்கிறாள்.

சற்றைக்கெல்லாம் எல்லாரும் அந்த இடத்துக்கு வருகிறார்கள்.

தோட்டத்து லயங்களில், ஒழுங்கான பாதைகள் - பரப்புகள் என்று பழகிய பெண்கள், இந்தப் பாதையில் முகம் சுளித்துக் கொண்டு நடக்கிறார்கள். ஒரு கடை கண்ணிக்குப் போக வேண்டும் என்றால் மேலே சாலையில் ஏறுவதற்கே தொலை போக வேண்டும்...

இங்கே குடியேறியிருப்பவர்கள் அனைவரும் எழுபதுக் கடைசி, எண்பது என்று வந்தவர்கள். இங்கே இவர்களுக்கு வீடு கட்டிக் கொள்ள இடம் ஒதுக்கி, அரசு மூவாயிரம் கடனும் வழங்கியது. அப்படி வீடு கட்டிக் கொண்டவர்களின் கிழவியின் இரண்டு பையன்கள், பெண் குடும்பமும் சேர்ந்து அமைத்த வரிசை இது. மகள் புருசன் கொஞ்ச காலத்துக்கு முன்பு, வேறுபக்கம் வேலை என்று போய்விட்டான். அவர்களுடைய இந்த வீட்டை இப்படி வாடகைக்கு விடுகிறார்கள். மகள் தான் இப்போது அந்த வீட்டில் இருந்து வந்து சாவி கொடுத்தாள்.

வீட்டில் வசவச என்று துணியும், தட்டுமுட்டுமாக மூட்டைக்குள் இருந்தவை வெளியே வர விரித்துவிட்டார்கள். சடயம்மாளின் குழந்தைகள் இருவரும் வெளியே ஓடி விளையாடுகிறார்கள். நடுப்பகல் நேரத்துக்குத்தான் சிறிது வெளிச்சம் காட்டக் கதிரவன் வானில் சிரிக்கிறான்.

பரமு, திண்ணையில் குந்திக் கொள்கிறான். மாமுண்டியை அழைத்துக் கொண்டு முருகேசு, அரிசி மற்றும் அவசியமான சாமான்களை வாங்கி வரச் செல்கிறான்.

சுகந்திக்கு, சடயம்மாவுடன் ஒட்டுதலான நெருக்கம் வரவில்லை. அவர்களை விடத் தாங்கள் மேலானவர்கள் என்ற ஒரு எண்ணம் அவளுக்கு இருக்கிறது. தங்கள் துணி பாய் - சாமானெல்லாம் தனியாக வைத்துக் கொண்டு ஒதுங்கி இருக்கிறாள்.

சடயம்மா தண்ணீருக்காக பிளாஸ்டிக் வாளி, பெரிய குண்டான் இரண்டையும் எடுத்து வைக்கிறாள். “தண்ணி எங்கிட்டிருக்கு? போயி தண்ணி கொண்டு வரனுமில்ல...”

சடயம்மாவின் புன்னகை சரோவைத்தான் துள்ளி வரச் செய்கிறது.

முருகேசுவும் மாமுண்டியுமாக வீட்டுக்குத் தேவையான சாமான்களும், அரிசியும் தேத்தூளும் சீனியும் வாங்கிக் கொண்டு வருகையில் நடுப்பகல் கடந்து விடுகிறது. கீழே பள்ளத்தில் இறங்கி, சிறிதே தண்ணீர் செல்லும் அருவியில் துணி கசக்கி, குளித்து, நீரும் கொண்டு வர வேண்டும். பொழுது போக இருட்டும் நேரத்தில் தான் அங்கே வீடுகளில் வேலைக்குச் சென்றவர் திரும்ப ‘நடமாட்டம் தெரிகிறது. சடயம்மாவின் குழந்தைகள் அக்கம் பக்கம் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு சிநேகமாகப் போகின்றன. ஆனால், அக்கம் பக்கம் இருக்கும் ஆண் பெண் அனைவரும் புதியவர்களை சுவர்களைப் போல் இடம்பெயர்ந்து வந்தவர்கள் என்ற மனமின்றி ஒட்டாமல் போவதைப் பார்த்து அவன் துணுக்குறுகிறான்.

கிழவியின் பெரிய மகனுக்குக் குடும்பம் பெரியது. ஒரு பையன் அரசுத் தேயிலைத் தோட்டத்தில் குன்னூர் பக்கம் இருக்கிறான். அவனுக்கே நான்கு குழந்தைகள். இரண்டு பெண்களைக் கட்டிக் கொடுத்திருக்கிறான். பெண்சாதி இறந்து போய்விட்டாள். இன்னும் ஒரு பையன் படகர் தோட்டத்தில் வேலை செய்கிறான். கல்யாணமாகவில்லை. இவனும் எங்கோ தனியார் தோட்டத்தில் தான் வேலைக்குப் போகிறான். நாட்கூலி ஆறும் ஏழும் தான். அரசுத் தோட்டமானால் பன்னிரண்டு ரூபாய் கூலி வரும். இங்கே வேலை செய்து பிழைப்பது மிகவும் கடினம். அரசுத் தோட்ட வேலை என்று கண்டியிலேயே பதிவு செய்து கொண்டு வந்தவர்களும் கூட, குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்படுகிறார்கள். ஏனெனில் இலங்கைத் தோட்டம் போல் இங்கே குடும்பத்தினர் அனைவரும் பிழைக்க முடியாது. ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமே வேலை கிடைக்கிறது. ஒரு வீட்டில் ஏழெட்டுப் பிள்ளைகள் இருக்கையில், அவர்களெல்லாரும் என்ன செய்வார்கள்?

“சனங்க, அங்கத்துத் தோட்டம் மாருதியே இருக்கு, அல்லாம் நீலகிரி போவம்னு வாராங்க. எங்க வேலை? இதா நாலு கிலோமீட்டர் போயி வாரம், நானும் பொஞ்சாதியும் ஆறு அஞ்சுதா கூலி. ஆம்புளப் புள்ளங்கள அங்க இங்க அனுப்பிச்சிரலாம். பொட்ட புள்ளங்கள எங்க அனுப்ப?...”

முருகேசுவின் நம்பிக்கையில் இருள் நிழல் விழுகிறது.

காலையில் அவரவர் சாலையில் சந்தித்தாலும், நீ யாரு, நீ யாரு என்று கேட்கும் சரளபாவம் கூட இல்லை. முருகேசுவாகச் சிலரிடம் விசாரிக்கிறான்... உடுசேலா... பதுளை... மோனஹன் க்ருப்...

ஒரே பேச்சில மறுமொழி; ஒதுக்கம்.

வேலை தேடுமுன் குன்னூர் சென்று, முத்துவேல் பிள்ளையின் தம்பி குடும்பம் பார்த்துப் பெண்களை ஒப்புவிக்க வேண்டும் என்று மறுநாட் காலையிலேயே புறப்பட்டு விடுகிறான்.

குன்னூர் வந்ததும் பச்சை வேலு சொன்ன தடயம் வைத்துக் கொண்டு, பஸ் ஏறிச் செல்கிறான். குன்சோலை கைகாட்டி என்று இறங்கி நடக்கிறான்.

ஒரே மாதிரியான சிறு வீடுகளைக் கொண்ட படகர் கிராமங்கள். தலையில் வட்டு மூடிய கோலத்தில் முதிய பெண்கள், பிள்ளைகள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டு முற்றங்களில் காணப்படுகின்றனர்.

யாரைப் பார்த்தாலும் நேசப்பார்வை இல்லை.

ஒரு முதியவர் வருகிறார்.

“...சலாமிங்க... இங்க... ஸ்லோன் ஆளுங்க பக்கத்தில இருக்காங்களா?...”

அவர் பேசாமல் போகிறார். ஸ்லோன் ஆள் என்றாலே பிடிக்கவில்லையோ? முற்றத்திலிருக்கும் முதியவளிடம் கேட்கிறான்.

அவள் பேசாமல், கையிலிருக்கும் குச்சியை நீட்டி அந்தப் பக்கம் சாலை கடந்து போனால் நிறைய இருக்கிறார்கள் என்று சாடை செய்கிறாள்.

நடையான நடை நடந்து, முட்டு முட்டான பஞ்சக் குடில்களைக் கண்டு பிடிக்கிறான். கோழிகள்... நாய்கள்... வண்ணத்துணிகள்... புகை... அவன் வந்து சேரும் போது பிற்பகல் மூன்று மணி வேளை.

காலையில் ஒரு பன்னும் தேநீரும் தான் உணவாகக் கொண்டிருந்தான். முற்றத்துப்பக்கம் செல்கையில் யார் வீட்டிலிருந்தோ குழம்பு மசாலை மணம் உட்புகுந்து பசியைக் கிண்டி விடுகிறது.

“யம்மா, இங்க, கொழந்தவேலுன்னு... இருக்காவளா? அவரு அண்ணாச்சி முத்துவேலு...”

“ஆ... இதா இந்தவூடுதா...”

முற்றம் வழவழவென்று நன்றாக வழிக்கப்பட்டிருக்கிறது; கோலம் போட்டு மிக அழகாக இருக்கிறது. ஆனால், நாலைந்து வயசுக்குள் ஐந்தாறு பிள்ளைகள் அங்கே விளையாடுகின்றனர். கீழே அவர்கள் சட்டைகள், துணிகள் பூனைக் கண்ணாகப்படும் பனிவெயிலில் காயத்தவமிருக்கின்றன.

“அம்மா, ஆரோ வந்திருக்கா, பாருங்க?”

அகலக் குங்குமமும், மூக்குத்தியுமாக, லட்சுமீகரமாக ஒரு நடுத்தர வயசுப் பெண்பிள்ளை வருகிறாள்.

“குழந்தை வேலு... ங்கறது...”

“அவரு சம்சாரம்தா நா... அவங்க இங்க இல்லியே இப்ப? ராவிக்குதா வருவா... நீங்க யாரு?...”

அவன் சுமையை இறக்குகிறான்; விவரம் பேசி முடிக்கக் கால் மணியாகிறது.

“உக்காருங்க. அப்ப அந்தப் புள்ளியள இங்க கூட்டிட்டு வந்திருக்கியளா?”

“ஆமா நா ஒண்டி ஆளு. நானே இன்னொரு குடும்பத்தோட கைய எதிர்பார்த்திட்டு இருக்கிற, பொம்பிளப் புள்ளய. அதும் பெரிசு சமஞ்சு அஞ்சாறு வருசம் ஆவுறாப்பில...”

“ஏய்யா, வெவரமில்லாம, சமஞ்ச பொம்பிளப்பிள்ளையளக் கூட்டியாரே, வச்சுக்குங்கன்னு சொல்றியளே! நா விட்ட ரெண்டு ஆம்பிளப்பயங்க, பெறிசு, கலியாணங்கட்டி வச்சிட்டிருக்கிறம். ஒரு பய ரெண்டுங்கெட்டா. படிக்கப் போறா. இங்க கொண்டாந்து வுட்டா நாங்க என் செய்ய? அவ அவிய தாயோட புள்ளயோட இருக்கறத வுட்டுப் போட்டு, சீம கடந்து ஏங் கூட்டிட்டு வந்திய?... ந்தா, ஒங்களால வச்சிக்க முடியும் வச்சிக்கணும்... அவுரு, எங்க மூத்தாரு போயி வருசமாகப் போவு. அதுக்கு மின்னாடியே, சம்சாரம் - எங்க ஓப்படியா நெஞ்சுக்குத்து வந்து போயிட்டா. பிள்ளைக, ஒரு பய டான்டீயில இருக்கிறா. ஒரு பொண்ண மதரயில கட்டியிருக்கு. சின்னவன் பத்துப் படிச்சிட்டு, வொர்க்சாப்ல சேர்ந்திருக்கா. அதது அங்கங்க எப்படியோ சீவிக்கிறது பாடாயிருக்கு. நாங்களே, என்னமோ தெரியாத்தனமா வந்திட்டம்னு இருக்கிறம். தாயி செத்துப் போச்சின்னா, தகப்பன் இருக்கிறாரில்ல?... மனிசா இருக்கயில பொட்ட புள்ளியள கூட்டி வரலாமா? நீரு மட்டும்னா, எங்கக்கு என்னா? ஊருமனுசா இன்னமோ, வந்து குந்துனா ஒர் நேரம் சோறு போடுறது பாரமில்ல... இப்ப... இங்க கொண்டாந்து வுட்டா சரியில்லீங்க! அவங்க வந்து பேசவே ஒண்ணில்ல...”

மேலே பேசவே வழியில்லை. தீர்த்து விட்டாள்.

கிட்டி முட்டிப் போகும் போது மனிதநேயம் எப்படிச் சுருங்கிப் போகிறது?

என்ன நேரத்தில் இந்தச் சுமையை இவன் ஏற்றுக் கொண்டான்? வயசு, உழைப்புக்கான வாய்ப்புக்கள், திறன், பொருள், எதுவுமே இல்லை. எங்குமே சரிய ஆதாரம் இல்லை...

திரும்பிச் சென்றால் அந்தப் பிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்லுவான்?

“முத்துவேலின் பிள்ளைகள் எல்லாருக்கும் கட்டியாயிற்றா?”

“கடோசிப் பயதா சொன்னனே, பத்துப் படிச்சிட்டு வொர்க்சாப்பில இருக்கிறா...”

“சுப்பிரமணியனுக்குக் கண்ணாலம் இங்கியே கட்டினாகளா?”

“சொந்தத்திலியே மகளக் குடுத்த எடத்திலியே பொண்ணெடுத்திட்டா. ரெண்டு புள்ளிக. அதுகூட ரெட்டைப்புள்ள...”

அந்த சுப்பிரமணியனுக்குத்தான் இவளை... சுகந்தியைக் கட்டிக் கொள்வார்கள் என்று ஆண்டாளு சொன்னாள்.

எல்லாம் நடக்காத ஆசைக் கனவுகள்.

எண்ணெயில் ஒட்டாத நீராக அங்கே சிறிது நேரம் முருகேசு தங்குகிறான். கோதுமை அரைத்துச் செய்த ரொட்டியும் குழம்பும் வைத்துக் கொடுக்கிறாள். பசிக்கு அது இதமாக இருக்கிறது. ஆனால், அவன் உள்ளம் நோகிறது. தேநீர் தருகிறாள்.

குழந்தைகள் வந்து உற்று உற்றுப் பார்க்கின்றன. வீடு உள்ளே இரு அறைகள் கொண்டதாகப் பெரியதாகவே இருக்கிறது.

இவள் புருஷன் அல்லது வேலைக்குச் சென்ற ஆடவர்கள் வரும் வரையிலும் தங்கியிருப்பது தேவையில்லாதது என்று படுகிறது. மென்மையான அவனுடைய உணர்வுகள் சுருங்கும்படி அவள் பேசிவிட்டாள்.

“நா வரேம்மா, எதாச்சும் தப்பாச் சொல்லியிருந்தா மனசில வச்சுக்காதீங்க, வார...”

அவன் கூனியவனாக, புதியதாக முதல்நாளே வாங்கியிருந்த செருப்பை மறக்காமல் எடுத்துக் கொண்டு வெளியே வருகிறான். தொடர்ந்து அவள் வெளியே வருகிறாள். அக்கம் பக்கம் பெண்களனைவரும் முற்றத்தில் அவனைப் பற்றி விசாரணை செய்கிறார்கள் போலும்!

“இந்தாளு, அங்கேந்து வாராரு, சமஞ்ச பொண்ணுங்கள வச்சிக்குங்கன்னு, புள்ளகுட்டி இருக்கிற வூடாச்சேன்னு, ஒரு காரூவா மிட்டாயி வாங்கிட்டு வார மாட்டாரு!...”

அவன் காதுகளில் இந்தச் சொற்கள் நேராக வந்து தாக்குகின்றன.

எவ்வளவு கேவலமாகிவிட்டான்? மனித நேசம் பாராட்ட இந்தச் சின்னச் சின்ன வழமைகள் அவசியம் என்ற அறிவு கூட அவனுக்கு இல்லாமல் போயிவிட்டதே? இதெல்லாம் அவனுக்கு ஏன் தெரியவில்லை?

தனது சொந்த உடன்பிறப்புக்கள், கொண்டார் கொடுத்தாரென்று, காதுகுத்து, கலியாணம் சடங்கு என்று போய்க் கொண்டாடினாலல்லவோ தெரியும்? அப்படிக் கொண்டாடாத தவறை ஈடு செய்வது போல், தானே வலிய இந்தப் பெண்களை ஏற்று வந்திருக்கிறான். எப்படியேனும் சுகந்திக்குக் கல்யாணம் செய்துவிட வேண்டும். இந்த மனிதர்களைப் பற்றிய விவரங்களை அவளிடம் சொல்லவே கூடாது... பச்சைவேலுப் பயலுக்குக் கல்யாணம் ஆயிருக்க நியாயமில்லை. அவனுக்கு, சுகந்தியை...

விரைந்து நடை போடுகிறான்.

அத்தியாயம் - 8

காலை இருள் பனிமூட்டத்தினால் தான் விலக்கப்படுகிறது.

சடயம்மா எப்போது விழித்தாள் என்பது தெரியவில்லை. கட்டிலுள்ள அறையில் கட்டிலில் முருகேசுவும், சடயம்மாவின் பையனும் படுத்திருக்கிறார்கள். கீழே, ஒரு மூலையில் தகப்பன் பரமு; அடுத்து மாமுண்டி, சடயம்மா, அவள் இரு குழந்தைகள்... பெண்கள் மூவரும் சமையலறையை ஒட்டிய தடுப்பில் முடங்குகின்றனர்.

“...ந்தா, செல்லி... புள்ள தூங்குறா எந்திரிச்சா, அடுப்பில டீத்தண்ணி வச்சிருக்கே, புரைய நனச்சிக்குடு... அல்லாம் பதனமா இருங்க. சண்டபோடாதீங்க...!” அந்தப் பெண்குழந்தைக்கு நான்கு வயசுதானிருக்கும். இது புதிதில்லை. சேலைக் கொங்காட்டுடன் அவள் மெல்ல வெளியேறுகிறாள். மாமுண்டி வெளியே பீடி குடிக்கிறான் போலிருக்கிறது. புகையிலை மணம் வருகிறது.

முருகேசுவுக்கு நெஞ்சில், இழையாகச் சோகம் எழும்பி வருகிறது.

இங்கே வந்து ஏறக்குறையப் பதினைந்து நாட்களாகி விட்டன. அவனுடைய கைப்பணம் வெகுவாகக் கரைந்து, சுகந்திக்குக் கல்யாணம் செய்து விடவேண்டும் என்ற புள்ளியையும் அழித்து விடும்போல் இருக்கிறது. பெண்கள் மூவரும் ஓரளவு வசதியாக - உழைத்தாலும் நன்றாக உண்டு வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள். மரச்சீனிக்கிழங்கைத் தின்று விட்டு இருக்கத் தெரியாதவர்கள்.

எனவே, அதே வீட்டில் சடயம்மா, தனிச்சமையல் என்று பிரிந்து கொண்டு விட்டாள். ஒரு வாரமாக அவளும் புருஷனும் எங்கெங்கோ அலைந்து திரிந்த பிறகு, நாலைந்து மைலுக்கப்பால், சாலை மராமத்து வேலைக்குப் போகிறார்கள். இருவருக்குமாகப் பத்துப் பன்னிரண்டு கூலி கிடைக்கிறது. அதிலும் குடிக்க எடுத்தது போக மிகுதியில், ஏதோ வாங்கி வருகிறாள் சடயம்மா. இரவு வந்த பின்னரே அவள் சமையல் செய்ய வேண்டி இருக்கிறது; தண்ணீர் மிகப் பெரிய பிரச்னை.

பகலெல்லாம் பரமு குந்திக்குந்தி இருமுகிறான். குழந்தைகள் அழுக்கும் கந்தலுமாக அநாதைகள் போல் திரிகின்றன.

முருகேசு அவனையுமறியாமல், அருகில் படுத்திருக்கும் பயலை அணைத்துக் கொள்கிறான்.

சடயம்மா சென்று சிறிது நேரம் சென்ற பின்னரே சரோசா எழுந்து போகிறாள். இந்த வீடுகளுக்குக் கழிப்பறைகள் என்று மறைவிடங்களும் இல்லை. பள்ளத்தில் நெருங்கி இருக்கும் புதர்க்காடுகளே மறைவிடங்கள். இந்தப் புதர்க்காடுகள் மறைவிடங்களாக மட்டும் பயன்படவில்லை, காய்ந்த சுள்ளி, சருகு என்று அடுப்பெரிக்கும் சாதனங்களை நல்குகின்றன. புதர்களில் எங்கேனும் காட்டுமுள் செடிகளில் உண்ணும் பழங்கள் கனிந்திருக்கும். எனவே பிள்ளைகள் அங்கெல்லாம் திரிகிறார்கள்...

முருகேசு எழுந்து ஒரு வாளியை எடுத்துக் கொண்டு நீர் கொண்டு வரப் போகிறான்.

தண்ணீர்த் தொட்டி மேலே கட்டிக் குழாய் போடுவதாக எழுதிப் போனார்களாம்; ஆறு மாசங்களாகிவிட்டனவாம்.

“அங்கங்க ஆளுகளுக்கு வெட்டணும், எவன் கேக்குறான்?”

கோழிகளைத் திறந்து விட்டிருக்கிறார்கள்... ஆங்காங்கு புள்ளி புள்ளியாய் இரை தேட வீட்டு முற்றங்களில், குறுகிய சந்துகளில் உயிர்ப்பூட்டுகின்றன. சாரி சாரியாக வேலைக்குச் செல்லும் ஆண், பெண்கள் ஒற்றைப் பாதைகளில் தென்படுகின்றனர்.

அருவி நீர் தேனாகக் கொட்டுகிறது. மழைபெய்தால் பெருகி வருமாம். இப்போது பாதாள கங்கையாக இருக்கிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கே துணி கசக்குபவர்களின் அடிபிடி நெருக்கமாக இருக்கும். வசைகள், ஏச்சுப் பேச்சுக்கள் மேலிருந்து கேட்க எட்டாமல் காடு அமுக்கிக் கொள்ளும்.

முருகேசு காலைக்கடன் முடித்து, வாளி நீருடன் மேலே வருகையில் சுகந்தி அடுப்புப் புகைய விட்டிருக்கிறாள். குழந்தை அழுது கொண்டிருக்க ஆறிய தேத்தண்ணீர்க் குவளையையும் வருக்கியையும் கையில் வைத்துக் கொண்டு செல்லி, “அழாதே ராசா, கண்ணில்ல...” என்று கெஞ்சுகிறது...

பையன் எழுந்து பரிதாபமாக வாயிலில் விரலை வாயில் போட்டுக் கொண்டு பாட்டனின் அருகில் குந்தியிருக்கிறான். வெயில் வரவில்லை.

சுகந்தி, அடுப்பைப் புகைய விட்டிருக்கிறாள். நீலப்புகை கூரையின் புகைப்போக்கியில் போவது, அழகாக இருக்கிறது. வீட்டில் நெருப்பு அடுப்புப் புகைவது அழகு; குடிசையானாலும் இந்தப் புகைக் கொடிகள், வயிற்றுத் தீ அவிக்கும் கொடிகள். அநேகமாக உழைப்பாளர் குடில்களில் மாலையில் தான் ஆரவாரங்கள் இருக்கும். இப்போதும் கூட எல்லா வீடுகளிலும் புகை இல்லை.

உள்ளே சுகந்தி கோதுமை மாவு பிசைகிறாள். அடுப்பில் தேநீருக்கு நீர் வைத்து இருக்கிறாள், அலுமினியம் வட்டையில்.

அவள் மாவு பிசைவதை ஆவலுடன் பார்த்துக் கொண்டே செல்லி,

“ராசா, கண்ணில்ல” என்று கெஞ்சுகிறது.

குழந்தை கையை வீசியபடி, மூக்கு ஒழுக, முன்பல்லில் நனைய அழுகிறது. “ஏட்டி, புள்ளய வெளில தூக்கிட்டுப் போறதில்ல? இங்கயே சுத்திச் சுத்தி வார?” என்று அதட்டிக் கொண்டே மாவை உருட்டி அடிக்கிறாள் சுகந்தி. இந்தப் பெண்ணின் உள் இயல்பு, இவ்வாறு சொத்தைக் கடலையைக் கடித்தாற் போன்று வெளியாகும் என்று முருகேசு எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் ராமாயி எவ்வளவு நல்லவள்?...

இதே பரமுவின் குழந்தைகள் பாதிநாட்களிலும் வந்து உட்கார்ந்து கொள்ளும். ஒரு கடினமான சொல்லும் வந்தது கிடையாது.

முருகேசு வாளியைக் கீழே வைத்துவிட்டு, குழந்தையின் மூக்கைக் கண்களைத் துடைக்கிறான்.

“ஏம்மா சுகந்தி, மாவு அம்புட்டுதா இருக்கா, நாலு உருண்டை உருட்டி வச்சிருக்கிய? கூடக் கொஞ்சம் போட்டுப் பெனஞ்சி உருட்டு. கோதம்பு, தா கெடக்கிதே! வாங்கியார?...”

அவளுக்கு இஷ்டமில்லை என்று முகத்திலேயே புரிகிறது.

“நீங்கதா புள்ளிய புள்ளியன்றிய. தாயி புள்ளயானாலும் வா வவுறு வேற. நேத்து, முந்தாநா, நெதம் வாரப்ப, பொரியுருண்டயும் கடலையும் வாங்கிட்டு வந்து அவிய மட்டும் ரூம்புல உக்காந்து திங்கிறா. எங்கக்கு என்ன வாங்கியாந்து குடுக்கிறா?...”

இது மிகவும் சின்னத்தனமாகப் படுகிறது.

“அரிசி வெறவு, அவியளுக்கு ரேசன் கார்டு இருக்குன்னு மாத்திக்கிட்டு வாங்கிட்டு வந்திட்டா. நமக்கு இன்னும் கார்டில்ல கோதம்பு மாவவச்சிப் பினஞ்சிட்டும் சுட்டுட்டும் திங்கிறம். க்லோ நாலும் அஞ்சிம் குடுத்துத்தான அரிசி வாங்குறம் நாம? ஒங்கக்கு வயிசாப்போச்சி. ஒரு கோளி வாங்கி வச்சிட்டோ, ஆடுவாங்கி வச்சிட்டோ, புழக்கிலாம்னாக் கூட ஒண்ணும் ஏலாது போல இருக்கு... எங்கக்கு ரோட்டு வேலைக்கும் கல்லுவேலைக்கும் போயியும் பழக்கமில்ல... மக்க மனுசா இருக்காவன்னு வந்திட்டம். இப்ப ஏந்தா வந்தமின்னு இருக்கு!...”

இத்தனையும் பொருமிவிட்டு முழங்காலில் முகம்கவிய விம்மல் வெடிக்க அழத் தொடங்குகிறாள்.

“ந்தா... சுகந்தி...? என்னாம்மா இது? நீ ஏ இப்படில்லாம் நெனக்கிற? கூட்டிட்டு வந்தவன் கைவிட்டுடுவனா? உன்ன, நல்லபடியாப் பார்த்துக் கலியாணம் கட்டிக் குடுக்கத்தா போற. அதுக்கு வேணுங்கற காசு வச்சிருக்கே. நேத்துக்கூட, அங்கே விசாரிச்சுட்டிருந்தே, கிறிஸ்தவ கன்யாஸ்தீரிங்க, இப்படிப் புள்ளகளுக்குக் கைத்தொழில்னு சொல்லிக் குடுக்கறாவளாம். நல்லபடியா உங்களை செட்டில் பண்ணுறது ஏம் பொறுப்பு. நீங்க ரோட்டு வேலையும் செய்ய வாணாம், காட்டு வேலைக்கும் போக வாணாம்!”

மனசு நோகிறது.

“நீங்க எப்பிடிக் கலியாணம் கட்டுவிய? கையில கெடந்த வளவிய போட்டுக்குக் குடுத்துப் போட்டு வந்தம். சர்க்காரு குடுத்த காசை வச்சிட்டு இப்ப குடும்பம் நடக்குது...”

அவள், இந்தச் சிறு பெண், தன்னை வேண்டுமென்றே நோகப் பேசுகிறாள். அவனுக்குப் பேத்தியாகும் மூன்றாம் தலைமுறை. இவள் அப்பனையும் தாயையும் அவனுக்குத் தெரியாது. ஆழம் தெரியாமல் காலை விட்டுக் கொண்டானோ?

“அம்மா, சுகந்தி, நீ சின்னப் பொண்ணு. மனசில எதும் வச்சுக்கக் கூடாது. நல்லபடியா நடக்கும். நா எப்பாடு பட்டுன்னாலும் காப்பாத்துவேன். சந்தோசமா இருக்கணும் ந்தா...”

முழங்காலில் கவிழ்ந்த உச்சியில் இதமாகக் கை வைத்துச் சமாதானம் செய்கிறான்.

ஆனாலும் அவள் சமாதானமாகவில்லை. மாவை விட்டு விட்டு எழுந்து போகிறாள். சரோசா உட்கார்ந்து ரொட்டியைத் தட்டுகிறாள்.

முருகேசு குழந்தை கையில் ஒரு சிறு கறுப்பு வெல்லக் கட்டியைக் கொடுத்து சமாதானம் செய்கிறான். அவனே ரொட்டிகளை அடுப்பை ஊதிச் சுட்டு எடுக்கிறான். வறமிளகாயையும் சிறிதளவே இருக்கும் தேங்காய்ச் சில்லையும் வைத்து அறைத்து வைக்கிறாள் சரோசா. வட்டை நீரில் தேத்தூளைப் போட்டிருக்கிறார்கள். குழந்தைகள் மூவருக்கும் அந்தக் கனத்த ரொட்டியைப் புட்டு ஆளுக்கு ஒரு துண்டு கொடுக்கிறான். பிறகு வாயில் பக்கம் கூட்டித் தள்ளிக் கொண்டிருக்கும் சுகந்தியை வந்து கூப்பிடுகிறான்.

அப்போது, குறுக்கே இறங்கி, தலைக்கட்டின் வண்ணம் தெரிய, பச்சைவேலு வருகிறான். உல்லாசமாகச் சீட்டியடித்துக் கொண்டு வருகிறான். கையில் உள்ள துணிப்பையில் இருந்து ஒரு வாழைச் சருகுப் பொட்டலம் வெளியாகிறது.

“ஓ... கருவாடு...”

சுகந்தியின் முகம் மலருவதை அவன் கவனிக்கிறான்.

“எங்கேந்து வாரிய?...”

“கோழிக்கோடு...”

“வா... வா... உன்ன இப்பதா நனைச்சிட்டேனப்பா...”

“அப்ப இத்தினி நாளா நெனக்கவே இல்லியாக்கும்? குன் சோலைப் பக்கம் போனியளா?”

முருகேசு சென்று வந்த கதை எல்லாம் விவரிக்கிறான்.

“...அப்படியா சமாசாரம்?... அப்ப விட்டுத் தள்ளுங்க, மாமா, அங்க தோட்டத்தில இருந்த அதே ஆளுவ, அதே உறமுறை இங்க வந்த பெறகு ரொம்ப மாறிப் போச்சி. நாங்க இதே மாதிரி அப்பமே கயிஷ்டப்பட்டோம். அதுனாலியே நம்மப் போல வாரவங்களுக்கு நாம நம்மாலான ஒத்தாச செய்யணும்னு ஒரு இது நமுக்கு... என்ன சுகந்தி?...”

கண்கள் பூப்பூவாய் ஒளி சிதறுகின்றன. அரும்புமீசைக்குக் கீழ் பளிச்சென்ற பல்வரிசை...

சுகந்தி நாணத்துடன் அவனுக்கு ரொட்டியும் காரத் துவையலையும் வைக்கிறாள்; தேநீர்...

“அத்தக் கொஞ்சம் இதோடு சேத்து நுணுக்கி வையி, நெல்லாயிருக்கும்...”

“சுட்டசம்பல் ருசிய நெனச்சுக்கினாருபோல...” என்று அவள் சிணுங்கிச் சிரிக்கிறாள்.

முறமுறத்த வறட்டு ரொட்டியும் துவையலும் தேநீரும் காலை உணவாக விரிகிறது. “ரேசன் கார்டுக்காக தாசில்தாராபீசில போயி நின்னு, ஃபாரம் வாங்கி, குடுத்திருக்கிற. தம்பி ஒங்கிட்ட ஒண்ணு கேக்கிற தப்பா நினச்சிக்காத...”

“என்ன மாமா தப்பு? நீ கலியாணம் கட்டிருக்கியான்னு கேக்குறீங்க இல்ல?...”

மீசை மோவாயை வளைத்துக் கடித்துக் கொண்டு நமட்டலாகச் சிரிக்கிறான். சுகந்தி தலையைக் குனிந்து கொண்டு சுவரில் கோலம் இடுகிறாள்.

அப்பிடியா விசயம் என்று மனசுக்குள் சந்தனம் மணப்பது போல் இருக்கிறது.

“இப்ப என்ன சங்கட்டமின்னா, அந்தப் புள்ளயும் ரொம்ப வேண்டிய பொண்ணு. காலக்கொடும அவுங்களுக்கு ஒரு கஷ்டம் - நமக்கும் கஷ்டம்தா. மனிசாளுக்கு மனிசான்னு இருக்கில்ல...? அதா, இந்தப் புள்ளய நெல்லபடியா கலியாணம்னு கட்டி ஒருத்தன் கையில ஒப்படச்சிட்டா அவ பேருக்கு ரெண்டாயிரம் டிராபிட்டு எடுக்காம போட்டு வச்சிருக்கிற. வங்கில ராமேஸ்வரத்தில, என் சொந்தப் பணந்தா மாத்திக் கிட்டே. அது தவிர,...ஒரு உருப்படியும், சவரன் தாலியும் இருக்கு. நல்ல ரோக்கியமான பய்யனா, பொண்டாட்டிய அடிக்காதவனா உதய்க்காதவனா, நாலுகாசு சம்பாரிச்சிக் கூழுன்னாலும் குடிக்க இன்பமா வச்சிக்கிறவனா இருக்கணும்னு பாக்கேன்...”

“மாமா, அந்தக் கவல உங்களுக்கு வாணா. உங்ககிட்ட உஜாரா சில விசயம் சொல்லணும்னு இருக்கிறே. வெளிய வாங்களேன்? அப்படியே பொட்டம்மாளப் பார்த்து வரளாம்?”

பரமுவுக்குத் தேத்தண்ணியைச் செல்லி கொண்டு வந்து வைக்கிறது.

“அம்மாடி, நா போயிட்டு வார, அல்லாம் பதனமா இரிங்க...”

குளிர் குறைந்து வருகிறது. சோகையாக வானில் சூரியன் சிரிக்க முற்படுகிறான். பனிமூட்டம் விலகுகிறது. அவர்கள் இருவரும் நடக்கிறார்கள்.

“மாமா, அவுசரமாப் போயிட்ட... லாரி லோடாயிட்டதா, நிக்க நேரம் இல்ல. இப்ப, நீங்க நீலகிரி முச்சூடும் சும்மா நம்ம சனம் அம்பதாயிரத்துக்கும் மேல வந்திருக்கா. சர்க்காரே, இங்க மறுவாழ்வுக்கு ஏற்பாடு பண்ணணும்னு சொல்லி மிச்சம் பேருக்கு வேலை குடுத்தாலும் கட்டுபடி யாவல. இப்ப இங்கியே, சர்க்காரோட அனுமதியின் பேரில சில பெரிய மனிசங்க, சிரிலங்கா பினான்ஸ் கார்ப்பரேசன்னு வச்சிருக்கா. அதுல எப்பிடின்னா, இப்ப, வங்கில பணத்தப் போட்டா, நூத்துக்குப் பத்துகூடத் தேர்றதில்ல. இவங்க என்னான்னா, நம்மப்போல இருக்கிறவனுக்கு ஒத்தாசை செய்யணும்னு பணத்தை வச்சி தொழில் பண்ண திட்டம் வச்சிருக்கா. இங்க பழம் எல்லாம் கெடக்கிறது. ஜாம் ஃபாட்டரி, பின்னால, கப்பூரத் தைலம் பண்ற பாட்டரின்னு நிறைய எல்லாம் தொறந்து, வர்ற பொம்புளப் புள்ளியளுக்கு வேலையும் பழக்கிக் குடுக்கத் தோது பண்றா. இப்ப நீங்க ஆயிரம் ஆயிரம்னு கட்டினா உங்க புள்ளியளுக்கு மூணு பேருக்கும் வேலை கிடைக்கும். இப்ப, இவங்க இதாரம்பிச்சி, ஒரு மூணு மாசமா ஜில்லா பூராச் சுத்தி ஆளுகளுக்கு நோட்டிஸ் போட்டு எல்லாம் நாமுந்தி நீமுந்தின்னு கூடலூரு, தேவாலா, முச்சூடும் பணம் கட்டிட்டாவ. இப்ப நமுக்கு எடம் இருக்குதோ என்னமோன்னு கூடத் தெரியல...”

“முருகா...!” என்று முருகேசு மனசோடு கூவிக் கொள்கிறான்.

“அப்ப நம்ம பணம் முதலாயிருக்கும்னு சொல்றியா? வட்டி வாசி வருமா?”

“அதென்ன மாமா அப்பிடி சுலுவா கேட்டுட்டிய? இப்ப ஆயிரம் போட்டா வருச முடிவில அது நாலாயிரம் ஆவுது. தொழில்ல போட்டா விருத்தியில்ல?”

“அப்ப, இந்த மூவாயிரத்த இப்ப கட்டினா, வருச முடிவில பன்னண்டாயிரம் ஆவுமா?”

“ஆமா!... பின்ன? நம்ம சனங்க சும்மா, அந்தப் பக்கத்துல, தாலியக் கூட வித்து ஷேரு வாங்கிட்டா. இது வேலைக்கு வேலை பணத்துக்குப் பணமும் விருத்தியாவுது இல்ல?”

“அப்ப...”

முருகேசு யோசனை செய்கிறான்.

“அந்தப் பெண்ணுக்கு ஒரு கல்யாணத்தைக் கட்டிடலாம்னு இருந்தே. பணத்தை முடக்கி, எதுனாலும் தொழில்ல, ஃபாக்டரில வேலைக்குச் சேர்த்துடலாம்னு சொல்ற?”

“மாமு, வருசமுடிவில, கலியாணம் கட்டிக்கிறது... உங்கக்கும் ஒரு வூடுன்னு ஊருச்சிதமாவணும் இல்ல...?”

“அதும் சரிதா. சடயம்மா, இப்ப அஞ்சு நாளா எங்கியோ புருசன்கூட, தார்ச்சட்டி சொமக்குற ரோட்டு வேலைக்குப் போறா. நமக்கு அத்தயும் வுட முடியல. இந்தப் புள்ளகள ஒரு மாதுரி சமாளிச்சிட்டா, நா எங்கியோ கூலி வேலை செஞ்சி புழைச்சிக்குவே...”

“அப்ப, இப்ப வாங்க, பொட்டம்மா வூட்டுக்கு மேல நா அந்த ஏசண்டு இருக்கா. விசாரிப்பம்...”

துன்பமும் நெருக்கடியும் வரும்போதெல்லாம் முருகன் கை கொடுத்துக் காப்பாத்துகிறான் என்று நெஞ்சம் கசிகிறது. ஏறி இறங்கி, மேலே கண்ணாடிக்கதவில் சூரிய வெளிச்சம் பட்டுப் பிரதிபலிக்கும் ஒளியை நம்பிக்கையாக எண்ணி உற்சாக மடைகிறாள். வாசலில் இங்கிலீசு எழுத்துக்களில் பலகை தொங்குகிறது. “அதா போட்டிருக்கு, பாருங்க. சிரிலங்கா பினான்ஸ்னு... இவரு பேரு பழனியப்பா... இவுருதா ஏசண்டு இங்கத்திக்கு...” என்று பச்சைவேலு விளக்குகிறான்.

வாசல் மணியை அமுக்குகிறான் அவன்.

சற்றைக்கெல்லாம் கதவு திறக்கப்படுகிறது. ஓர் அம்மாள் கதவைத் திறந்துவிட்டு, சகஜமான தன்மையுடன், ‘இருங்க’ என்று சொல்வது போல் தலையசைத்தவாறு உள்ளே செல்கிறாள்.

சற்றைக்கெல்லாம் தலையில் சுற்றிய மஃப்ளரும், ஸ்வெட்டருமாகக் கண்ணாடி போட்டுக் கொண்டு ஒருவர் வருகிறார்.

“வணக்கம் சார்... இவரு நம்ம ஆளு... வந்து பத்து நாளாச்சி. அப்பவே வந்து கண்டுக்கணும்னு... லோடு கொண்டு போயிட்டே...”

“உள்ளே வாங்க...”

முன்னறை. கீழே கயிற்றுப் பாய் பரப்பியிருக்கிறது. துரை பங்களாவைப் போல் சோபா செட்டு. நாற்காலிகள்... மூலையில் ஒரு டைப்ரைட்டர் மேசை. மிசின் மூடப்பட்டிருக்கிறது. சுவரில் தேயிலைத் தோட்டத்துப் பெண்களின் வண்ணப்படம். கொங்காடும் கூடையுமாக...

பார்க்க அழகாக இருக்கிறது. ஆனால் அந்த அழகுக்குப் பின்னால் உள்ள ‘நொம்பரங்’களைப் பற்றி இவர்களுக்குத் தெரியுமா? இதுபோல் ஒரு வீடு வைத்துக் கொள்வதைப் பற்றிக் கனவிலும் நினைக்க முடியுமா?

“அநேகமாக இப்ப எல்லாம் ‘குளோஸ்’ ஆகிட்டிருக்கிற சமயம். ஃபாக்டரிக்கு மேலேந்து இடமெல்லாம் பார்த்து எக்ஸ்பர்ட்ஸ் பிளானெல்லாம் அப்ரூவ் பண்ணியாச்சு. ஆச்சு, இப்ப பிப்ரவரியா? அதாம் போயிட்டுதே? ஏப்ரல் ஒண்ணாந்தேதி துவக்க விழாவுக்கு, மினிஸ்டரைக் கூப்பிட்டிருக்கிறோம்...”

“என்ன ஃபாக்டரிங்க வருது?”

“இப்ப, நிட்டட் கார்மென்ட்ஸ் - கம்பளிவுல்லன் நூல் உடுப்பு - ஜாம் ஃபாக்டரி ரெண்டும் வருது. ப்ரூக்லின் எஸ்டேட் இல்ல, அத்தத் தொட்டு வருது... எடம்... இப்ப... அப்ளிகேசன் ஃபார்ம் வேணுமா?”

“ஆமாங்க...”

“...வேலை... பொம்பிளப்புள்ளங்க, மூணுபேரும்...”

அவர் உள்ளே செல்ல அடி வைத்தவர் திரும்புகிறார்.

“இந்த ஸ்கீமே, பெண் பிள்ளைகளுக்குக் கௌரவமா வேலை குடுக்கணும்னு தா. அவங்க அப்படி இப்படி வச்ச பணத்தைத் தொழிலில் முடக்கணும்னு, டெல்லி வரையிலும் போயி, இத்த ஆரம்பிக்கப் பாடுபட்டிருக்கு. இதுவரைக்கும் ஒரு பதினையாயிரம் பேர் இதுல பங்கு வாங்கி, வேலைக்கும் ஒரு அஞ்சாயிரம் பேர் ரிஜிஸ்தர் பண்ணிட்டிருக்காங்க...”

“அப்ப, பங்கு வாங்கினவங்க அல்லாருக்கும் வேலை கிடைக்காதா?”

“அதெப்படிங்க? அஞ்சாயிரம் வாங்கினால், நிச்சயம் வேலைக்குச் சேர்த்துக் கொள்வோம். பணத்துக்கு வட்டி, ரிடர்ன் அது பாட்டில வரும். ஆயிரம் ஆயிரம்னு... ஒரு லிஸ்ட் வச்சிட்டிருக்கிறோம். இது எக்ஸ்பாண்ட் ஆகிற தொழில். இன்னும் வெவ்வேறு தொழில் தொடங்க ஸ்கீம் இருக்கு. அப்ப நிறையப் பேருக்கு வேலையும் பிழைப்பும் குடுப்பதுதான் எங்க லட்சியம்.” அவர் மேலே மாட்டியிருக்கும் புகைப்படம் ஒன்றைக் கழற்றிக் காட்டுகிறார்.

“இத பாருங்க, ஜனவரில தான் துவக்கவிழா. மினிஸ்டர், எம்.எல்.ஏ எல்லாரும் வந்து ஆரம்பிச்சது. எதிர்பார்த்ததுக்கு மேல ஜனங்க ஆர்வம் காட்டுகிறதால தான், இங்கயும் நாலு இடத்தில ஃபாக்டரி திறக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்... பாங்க்ல பாருங்க, உங்களுக்கு பத்து சதம் வட்டி கிடச்சா பெரிசு. இங்க, இரு நூறு சதத்துக்கே விருத்தி யாவுது...”

முருகேசு, பிரமித்துப் போகிறான்.

நூறு நூறாக விருத்தியாக்கிக் கொண்டு, பணம் குட்டி போட, சொகுசாக வாழ்க்கையை அநுபவிக்கும் தந்திரம் இதுதானா?

“இப்ப நா மூவாயிரத்தை இதுல போட்டு வச்சா, மூணு புள்ளகளுக்கு வேலை கிடைக்குமாங்க? ஒரு பொண்ணு பதினெட்டு, இன்னொண்ணு பன்னண்டு, பின்ன பத்து வயசுப்புள்ள... கைவேலை எதுனாலும் செய்யும்...”

“ஒருத்தருக்கு நிச்சயமாகக் கொடுக்கிறோம். நிட்டட் கார்மன்ட்ஸ்னா, பெண்பிள்ளைகள் சுலபமாக் கத்துக்கிடலாம். அது பிரச்னையில்ல... அப்ப... பாரம்... தரட்டுமா?...”

பசுமையான காட்சிகள் எதிர்காலக் கனவுகளை நிறைக்கின்றன.

ஃபாரத்தை அவரே படித்துக் காட்டுகிறார்.

இலங்கையில் இருந்த இடம், தொழில், வந்த தேதி, இவன் அப்பா பெயர், தாத்தா பெயர், இப்போது இருக்கும் இடம், வேலைக்கு இருக்கும் பெண்களின் விவரங்கள், எல்லாமே எழுதிக் கொள்கிறார்.

அவனே மை தோய்த்துக் கட்டை விரலைப் பதிக்கிறான்.

வங்கி டிராஃப்டாக இருந்த மூவாயிரமும், மூன்றாம் பேர் அறியாமல் ஒரே வாரத்தில் பச்சைவேலின் உதவியுடன் கைமாறிப் போகிறது.

அத்தியாயம் - 9

“மாமா, ரேசன்ல வெறவு போடுறாவளாம். அரிசி மண்ணெண்ணெய் வாங்கிட்டு வாரணம். சிமிணிக்கு எண்ணெயில்லாம ரெண்டுநாளா இருட்டில புள்ள கத்துறப்ப, பூச்சி, பொட்டு கடிச்சிச்சான்னு ஒரெளவும் தெரியல... ஒரு இருவது தந்தீங்கன்னா, வாரக்கூலி வாங்கினதும் தந்திடறேன்...”

அவர்களுக்கு இன்னமும் ரேசன் கார்டு கிடைக்கவில்லை. பச்சைவேலு அப்போது மங்களூர்ப்பக்கம் போவதாகப் போனவன் தலைகாட்டவில்லை. இவனுக்கு, ஏப்ரலுக்கு முன் வேலை ஒன்றும் கிடைக்க வாய்ப்பு இல்லை. ‘பொட்டம்மா’ என்று பச்சை அழைக்கும் வீட்டுக்கார எசமானி, ஏப்ரல் பத்துத் தேதிக்கு மேல் தான் பள்ளத்தில் கிழங்கு விதைப்பதாக யோசனை இருப்பதாகவும், முதல் தேதி வாக்கில் பார்க்கலாம் என்று சொன்னாள்.

ரேசன் கார்டுக்காகப் போன இடத்தில், ஓராள், மேஸ்திரிக்கு ஐம்பது ரூபாய் போல் செலவழித்தால், மரம் அறுக்கும் இடத்தில் ஏழு ரூபாய் கூலிக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொன்னான். கப்பென்று கைப்பணம் கரந்து விட்டதை உணருகிறான். கையில் அறுபது ரூபாய் கூட இல்லை. முப்பதாந்தேதியே கிழவிக்கு வாடகை கொடுக்க வேண்டும். அதற்குள் வேலை தேடியாக வேண்டும்.

இங்கு சுமை தூக்கும் வேலை கூடக் கிடைக்கவில்லை. உள்ளூர் ஆட்கள் எந்தத்திக்கிலும் இவர்களை இனம் கண்டு கொள்கிறார்கள்.

“வார செவ்வாக்கிளம குடுத்திடறே மாமு...”

“அதுக்கில்ல சடயம்மா, உனக்கில்லாமயா? தேதி இருபதுதா ஆவுது. இன்னும் பத்து நா போறது செரமமா இருக்கும் போல இருக்கு...”

சொல்லிக் கொண்டே தட்ட முடியாமல் பிளாஸ்டிக் பையில் பொக்கிஷமாக வைத்து இருக்கும் நோட்டை எண்ணிப் பார்த்து விட்டு இரண்டு நோட்டை எடுத்துக் கொடுக்கிறான்.

இவர்களுக்கும் அரிசி வாங்கியாக வேண்டும். கிலோ மூன்றே முக்கால், நான்கு, என்று வெளியே வாங்கும் உயர்ந்த அரிசி சாப்பிடுகிறார்கள்...

விறகுக்கு அங்கே இங்கே சென்று கொண்டு வருவது கூட இலகுவாக இல்லை.

பொட்டம்மாவின் வீட்டின் முன் சென்று நின்றான்.

அம்மா வாயிலில் ஒரு கசாலையைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து புத்தகம் படிக்கிறாள். புருஷன் இறந்து போன பிறகும் பெரிய பொட்டு வைத்திருப்பதால் ‘பொட்டம்மா’ என்று சிறப்புப் பெயர் பெற்றிருப்பதாகப் பச்சைவேலு சொன்னான். நல்ல உயரமான கம்பீர உருவம். ஒரு முடி கூட நரைக்கவில்லை. ராணி போல் இருக்கிறாள்.

இவன் குழைந்து நிற்கிறான். “அம்மா!...”

“யார்ப்பா...?”

“...நாந்தாங்க முருகேசு. அன்னிக்குப் பச்சவேலு கூட வந்தேன். ஏப்ரல் மாசந்தா வேலைன்னு சொன்னீங்க. ரொம்பவும் சங்கடமாயிருக்கு, வேலை இல்லாம... வீட்டில மூணு புள்ளங்க, ரேசன்கார்டு இப்ப தாரே, அப்ப தாரேங்கறா, அரிசி நாலு நாலரைன்னு வாங்கித் திங்கிறம்...”

“...நா என்னாப்பா வேலை குடுக்க...? அங்கங்க ஆளுங்க இருக்காங்க..., ஆமா, பிள்ளைங்க, எத்தினி வயசு?”

“மூணு பேத்திங்க, ஒண்ணு பதினெட்டு, மத்தது ரெண்டுக்கும் பன்னண்டு வயிசும் பத்து வயிசும் இருக்கும்...”

“ஒத்தையில எங்க மகளுக்கு சிநேகிதி டாக்டராக இருக்கு. ஒரு சின்னப் பொண்ணு குழந்தை பாத்துக்கிட வேணும்னு கேக்கறாங்க, சாப்பாடு துணி போட்டு, மாசம் முப்பத்தஞ்சு ரூபா பாங்கில போட்டுடுவாங்க. நல்ல எடம். அவங்க புருசன் சவூதில இருக்காரு. சின்னக் குழந்தை வீட்டில. அதப் பார்த்துக்கிடணும்...”

முருகேசுவுக்குத் துணுக்கென்றிருக்கிறது. தோட்டத்தில் இப்படிப் பிள்ளைகளை வீட்டு வேலைக்குத் துரைமார் வீட்டில் வைத்துக் கொள்வார்கள். ஆனால், ‘என்னமும்’ நேர்ந்தாலும் கேள்வி முறையில்லை. தாய் தகப்பனில்லாத குழந்தையை இப்படி எங்கோ அனுப்பலாமா? அவனை நம்பி அனுப்பினாளே? முறையா?

“என்னப்பா பேசல...? வீட்டில சமையலுக்கு ஒரு அம்மா இருக்காங்க. இதுக்கு வெறும் குழந்தை பாத்துக்கிற வேலைதான்...”

முருகேசு தலையைச் சொறிந்து கொள்கிறான்.

“இல்லீங்கம்மா, அங்கத்த கலவரத்துல, ஆத்தாள உயிரோட எரிச்சிப் போட்டாங்க. அப்பன் பித்துப் பிடிச்சாப்பல ஆயிட்டான். இங்க சொந்தக்காரங்க கிட்ட சேத்துடலாம்னு கூட்டி வந்தேன். என் கூடப் பிறந்தவ பேத்திக... வர்ற சித்திரயிலே, இங்க ஃபாக்டரில வேலைக்கு எடுத்துக்கறேன்னு சொல்லியிருக்கா. அப்படி எப்படீங்க அனுப்புறதுன்னுதா யோசிக்கிற...”

“...எங்க ஃபக்டரில வேலை குடுக்கறாங்க?”

“அதா மேல கண்ணாடி போட்டுட்டு உசரமா ஒருத்தரிருக்காரே, பச்சதா கூட்டிட்டுப் போனா, சிரிலங்கா சீட்டு ஃபண்டு, தொழில் பண்றதுன்னு... நானும் ஷேரு போட்டிருக்கேங்க...?”

“...ஓ... அங்க போர்டு தொங்குது நாலஞ்சு மாசமா. அந்தாளு புதிசா வந்திருக்காரு... சீட்ஃபண்டா?”

இவன் அவர்கள் சொன்னதை எல்லாம் விவரிக்கிறான்.

“அப்படியா?... அவங்க எல்லாம் பொண்ணுகளுக்கும் வேலை கொடுப்பாங்களா? பத்து வயசுப் பொண்ணை, புள்ள வச்சிக்க அனுப்பிக்கறது தப்பில்ல. டாக்டரம்மா ரொம்ப நல்ல மாதிரி. நல்லா வேலை செஞ்சா, கூடவே பணம் போட்டுக் குடுப்பா. உனக்கும் பொம்பிளப் புள்ளய விட்டிருக்கிறமுன்னு பயமே இல்லை. இல்லாட்டி நா சிவாரிசு பண்ண மாட்டேன்..”

“யோசிக்கிறேம்மா... வீட்டுக்குப் போயி அதுங்க கிட்டக் கேட்டுட்டு வாரேன்...”

அம்மா சரேலென்று நினைபு வந்தாற்போல் பார்க்கிறாள்.

“கொஞ்சம் இரு...!”

எழுந்து அந்த வரிசையின் கடைசியில் உள்ள வீட்டுக்குச் சென்று யாரையோ கூப்பிடுகிறாள். அங்கிருந்து ஓர் இளம் பெண் குட்டை முடியும் கவுனுமாக வருகிறாள்.

“ஒரு கட்டை தடிமனா இருக்கு. கொஞ்சம் வெட்டித் தாரியா?”

“கோடாலி இல்லியேம்மா ஏங்கிட்ட?...”

பொட்டம்மாவை அவள் பார்க்கிறாள். “நம்ம வீட்லேந்து எடுத்துக்க...”

போனால் போகிறது என்ற மாதிரியில் தயவு காட்டும் குரல்.

“போப்பா, வெட்டிக் குடுத்திட்டு, ஏதானும் குடுப்பா, வாங்கிட்டு போ!”

அந்தப் பெண்ணே கோடரியை எடுத்துக் கொண்டு முன் செல்கிறாள். கர்ப்பூர மரத்துண்டுகள் - அறுவைத் துண்டுகள். கூலி என்ன கொடுப்பாள் என்று தெரியவில்லை. கூலி பேசவும் கூச்சமாக இருக்கிறது. கோடரியை அருகிலுள்ள கல்லில் வைத்துத் தேய்க்கிறான்.

“சின்ன சின்னதாப் பொளந்து போடு...?”

முண்டு முடிச்சில்லை. மணி இரண்டடிக்கும் பொழுதில் பிளந்து விட்டான்.

“கொண்டு லம்பர் ரூமில அடுக்கிடு...”

மூன்று ரூபாய் கூலியும் தேநீரும் தருகிறாள்.

மூன்று ரூபாய், இப்போது முந்நூறு ரூபாயாக இருக்கிறது. மன்னார் கரையில் வந்து தங்கியிருந்த நாட்களில் கூட அவன் வேலைக்கும் கூலிக்கும் இத்துணை கஷ்டப்படவில்லை. சுமை தூக்கும் வேலையில் பத்துப் பதினைந்து சம்பாதிக்க முடிந்தது. உடலுழைப்பவனுக்கு இவ்வளவு போட்டி பொறாமைகள் இருந்ததாக அவனுக்கு உணரச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை...

ஒரு கட்டு பீடி வாங்கிக் கொண்டு, சரோசாவை டாக்டர் வீட்டுக்கு அனுப்புவது பற்றி யோசித்தவாறே முருகேசு நடக்கிறான். பெரிய கடை, சந்தைப் பக்கம் பஸ் நிறுத்தத்தில் கூலிக்குக் கிராக்கி இருக்குமா என்று பொழுது சாயும் வரையில் நின்றதில், இரண்டு ரூபாய் கிடைக்கிறது. வீட்டுக்குத் திரும்பும் போது ஓய்ச்சலாக இருக்கிறது. மாமுண்டு நாள்தோறும் சாராயக் கடைக்குச் செல்வதுடன் பரமுவுக்கும் வாங்கிவந்து கொடுக்கிறான். கசகசவென்று புகைபடிந்த துணிகளைப் போல் கோட்டும், சராயும், மஃப்ளருமாக மக்கள்... முன்பு தாயகம் திரும்புவோர் அலுவலகம் என்று காட்டினானே, அந்த இடத்தில் கதவு திறந்திருக்கிறது. படி ஏறிப் போகிறான். ரேஷன் கார்டு வாங்கித் தர உதவி செய்வார்களா என்று கேட்க வேண்டும்.

இவனைப் போல் தாயகம் திரும்பிப் பராரியாக நிற்கும் மக்கள். மூட்டை முடிச்சுக்களுடன் ஒரு குடும்பம் வெளியே உட்கார்ந்திருக்கிறது. இவனுக்கே இப்போது இவர்களைப் பார்த்தால் ஒருவகைப் பீதியும் கலக்கமும் நேரிடுகிறதே ஒழிய இரக்கம் வரவில்லை.

ஒரு தட்டித் தடுப்பு அறையில் இரண்டு பெஞ்சுகள் தெரிகின்றன. சற்று எட்ட ஒரு மேசை - நாற்காலி! மங்கலாக ஒரு விளக்கு எரிகிறது.

இவர்களுடைய வீட்டளவு பரப்பு தான் - ஏழெட்டு ஆண்கள், வாயிலை அடைத்துக் கொண்டிருக்கிறார்கள். உள்ளே முருகேசு எட்டிப் பார்ப்பதற்குள்,

“இதுதான் தாயகம் திரும்பியவங்க ஆபீசு?”

“ஆமா...?”

“ரேசன் கார்டுக்கு எழுதிக்குடுத்து மாசத்துக்கு மேலாச்சு. வர இல்ல...”

“நெம்பரு, பாஸ்போட்டு, வந்தெறங்கின தேதி எல்லாம் இருக்கில்ல?”

“அல்லாம் குடுத்தாச்சி...”

“அது சரியாய், இன்னொருக்க, அந்த நெம்பரு வெவரம் வோணும்... கொண்டாந்து குடு...”

இவனைப் போல் நின்றவன் தான் இதைச் சொல்கிறான்.

“அவுரு இங்கிட்டில்ல. ஒரு கேசு. வெவரம் விசாரிக்கப் போயிருக்காரு.”

“என்னா கேசு?”

“...வயித்துக் கில்லாததுவ, கோளியத் திருடி வித்துப் போட்டா. தோட்டக்காரவுக புடிச்சி பொலீசில குடுத்திட்டா அதா...”

“பெரிய ஆளா...?”

“...ஆ...ரெண்டு புள்ளிங்க இருக்கு...”

முருகேசனுக்கும் எதுவும் பேச இயலாமல் நா ஒட்டிக் கொள்கிறது. எதுவும் கேட்காமல் வீடு வருகிறான்.

தனமும் சுகந்தியும் எவருடனும் பேசுவதில்லை. சரோசா தான் சிரித்த முகத்துடன் வீட்டில் உயிர்த்துடிப்பாக இயங்குகிறது. இந்தக் குழந்தையை அனுப்புவதா?...பெரிய வீட்டில், தப்புத்தண்டாவாகக் கருதி, பொலீசில் புடித்துக் கொடுத்து விடும்படி நேர்ந்தால்...?

அவன் தனது தலைவிதியை நொந்து கொள்வதைத் தவிர வேறு எதுவும் செய்யத் தோன்றவில்லை.

நாட்கள் மிகவும் சுமையாக நகருகின்றன.

முருகேசு, சிறுசிறு வேலை, சுமைதூக்கல், என்று கூலி நாடி ஒவ்வொரு நாளும் பல மைல்கள் மேடும் பள்ளமுமாக ஏறி இறங்குகிறான். தொடர்ந்த கூலிக்கும், வேலைக்கும் எங்கு விசாரித்தாலும் மேஸ்திரிக்கு வாய்க்கரிசி கொடுக்க வேண்டி இருக்கிறது.

பனி குறைய, ஒரு முன் மழை இடியும் காற்றும் ஆர்ப்பாட்டமுமாகப் பெய்கிறது. பொட்டம்மாவின் வீட்டுக்குச் செல்லுமுன் மேல்வீட்டுக்குப் போய் நிற்கிறான். இவனைப் போல் நாலைந்து பேர் அங்கே கூடி இருக்கின்றனர்.

“...பாக்டரி திறந்துட்டாங்களா?”

இவனைப் போன்ற முதியவன் தான் அவனும். உதட்டைப் பிதுக்குகிறான்.

“போர்டு இருக்குது, ஆனா, வூடு பூட்டியிருக்கு. ஆளக் காங்கல, கேட்டா பாட்டரி தொறக்கதா மட்றாசு போயிருக்கான்னு சொல்றாவ...”

“ஆரு அப்படிச் சொன்னது?”

“பேப்பர்காரரு சொன்னாரு...”

“கொழந்த சாமி அன்னைக்கே ரோசிச்சிட்டுப் பணத்தப் போடுங்கன்னா. அங்க, கூடலூறு, தேவாலா, கோழிப்பள்ளம், குன்னூரு எல்லா எடத்திலும் நம்ம ஆளுவ பணம் கட்டிருக்காங்க. எம்.எல்.ஏ. வந்திருந்தாராம்ல?... அட, நாம படியாதவங்க, படிச்சிருக்கிற, விக்னேசுவரா மாஷ்டர் கூட மூணாயிரம் போட்டிருக்காராம்...”

முருகேசுவுக்குக் கபீலென்று குழிபறிக்கிறது திகிலுணர்வு.

“ஏ, என்ன ஆச்சி, இப்ப?...”

“அதா, இவரு சகலைபய ஒருத்தன், அதெல்லாம் மோசடி, பணத்த சுருட்டிட்டு ஓடிட்டானுவன்னு சொன்னானாம். போர்டு இருக்கில்ல?...”

“அம்புட்டுப் பேருமா ஏமாந்திடுவம்?...”

“கொளந்தசாமி சொன்னான்னா, அது வேற விசயம். இப்ப, குடும்பக்கார்டு வாங்கித்தாரே, லோன் வாங்கித்தாரேன்னு ஆபீசில சொல்றா. அல்லாருடைய பாஸ்போர்ட்டு வெவரம் எல்லாம் கட்டி வச்சிட்டு, தாசில்தார் ஆபீசுக்குப் போயிப் போயி பார்த்துகிட்டே இருக்க வேண்டியதுதா. அங்கங்க துட்டு வெட்டாம ஒண்ணும் இங்க நடக்கிறதில்ல. அதில, நம்மள்ள, செல்வாக்கா, ஒண்ணு ரெண்டு பேரு, ஆளுகளத் தெரிஞ்சி வச்சிருக்கானுவ... அம்பது, நூறு குடுத்தா வேலையாவுது. ஒரு ரேசன் கார்டு இல்லாம எம்புட்டு நாளா நடக்குறது? நாம ஒவ்வொரு வாட்டியும், அங்க இங்க, ஒத்தைக் குன்னூருக்குன்னு ஆபீசருங்களப் பாக்க முடியுமா? அத்த அவன் செய்யிறான். அம்புட்டுதா வித்தியாசம்...”

புதிய கிலி அவனைக் கவ்விக் கொள்கிறது.

பொட்டம்மா வீட்டில் இல்லை. மகள் வீட்டுக்குப் போய் விட்டாள்.

அன்று வீடு திரும்பவே முருகேசுவுக்கு மனமில்லை, சுமையாக இருக்கிறது. காலையிலேயே அரிசி இல்லை; தேத் தண்ணீருக்குப் போட வெல்லத்தூளோ சர்க்கரையோ இல்லை. தேங்கா யெண்ணெய் இல்லை என்று சுகந்தி முணமுணத்து முகத்தால் அடித்துக் கொண்டிருந்தாள். சடயம்மாவும் மாமுண்டியும் அந்த வாரத்தில் நான்கு நாட்களுக்கு வேலைக்குப் போகவில்லை. வேலை இல்லை. அதுவும் எங்கோ கட்ட பெட்டு தாண்டிப் போகிறார்கள். எனவே வாங்கிய கடனில் இன்னும் பத்து ரூபாய் கொடுபடாமல் நிற்கிறது.

இந்தச் சுமைகளின் அழுத்தம், அவனையும் சாராயக் கடைப்பக்கம் கொண்டு செல்கிறது. ஒரு கிளாஸ் வாங்கி நின்று பருகுகிறான்.

முகத்துக்கு முகம் தெரியாத கும்பல் - ஒருவரை மற்றவர் இனம் தெரிந்து கொள்ள முடியாத மொந்தையில் ஒரு புள்ளிதான் அவனும்.

...சற்றே கவலைகள், கனங்கள் இறங்கிப் பஞ்சாகப் போகின்றன.

ஒரு ரூபாய்க்கு பகடா வாங்கி முடிந்து கொண்டு வீட்டுப் பக்கம் திரும்புகிறான். அங்கே, சுகந்திக்கும் சடயம்மாவுக்கும் இடையே பெரிய சண்டை போல் இருக்கிறது. வாயிலில் கிழவி, அடுத்த பக்கத்து ருக்குமணி, அவள் பிள்ளைகள், எல்லாரும் நிற்கும் கூட்டம்.

“...பேசாதேடி, தேவுடியா? உனுக்குமட்டும் எங்கேந்து டீ எப்டீ வேல கிடச்சிச்சி?... தேயிலக் காட்டுக்குள்ளாற சீல அவுக்கிறவதான?...”

ஐயோ ஐயோ... என்று முருகேசு துடிக்கிறான். சுகந்தி... பழம் அழுகிப் புழுத்தாற் போல் வார்த்தைகளைக் கொட்டுகிறாள்.

“ஒ நாக்கு அழுவிடும்டீ! அப்படிக் கொத்த ஆளுவ பழக்கம் ஒங்கக்குதே.”

சடயம்மா அழுகிறாள். “புள்ளயளுக்குன்னு வாங்கி வச்சிருந்த பிசுகோத்த, இவவ திருடித் தின்னு போட்டது மல்லாம, என்னிய மானம் கெட்டவன்னு பேசுறியே? கெளக்கால உதிச்சி மேக்கால போறானே அவன் சாட்சி, நீ அழுவிப் புழுப்ப?...”

கைகளை நெறிக்கிறாள்; சாபமிடுகிறாள்.

“ந்தா, என்ன இது?...”

முருகேசு அதட்டுகிறான்.

வாயில் கூட்டம் மெல்லக் கரைகிறது.

சிம்ணி விளக்கின் ஒளியில், முன் அறையில் பரமு குந்தி இருமுகிறான். பிள்ளைகள் அடுத்த அறைக் கட்டிலில் முடங்கி உட்கார்ந்திருக்கின்றன. சரோசாவும் அவர்களுடன் ஏதோ கதைத்துக் கொண்டு, சூழலைப் பற்றிக் காதில் போட்டுக் கொள்ளாமல் இருக்கிறாள். மாமுண்டியைக் காணவில்லை.

“மாமு... நீங்க, எங்களைக் கூப்பிட்டீங்க, வந்தோம். நெதம் நெதம் எச்சி பொறுக்கித் தின்னுறாப்பில எம்புள்ளியளும் நாங்களும் இங்க என்னாத்துக்கு இருக்கணும்? ஏழுகல்லு, எட்டுகல்லு நடந்து குளிரிலும் மழையிலும் தார்ச்சட்டி செமந்துகிட்டு நாலும் அஞ்சும் கூலி வாங்கிட்டு வாரம். மானம் மருவாதியாப் பொழச்சவங்க நாங்க...”

அவள் அழுவது இவனுக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது.

“சடயம்மா, சே, என்ன இது? அது பச்சப்புள்ள. உன் செல்லியப் போலன்னு நெனச்சிக்க! நீங்க நெனச்சிப் பாருங்க, நமக்குள்ளயே சண்ட போட்டுகிட்டா, எப்பிடி? அடுத்த எடத்தில, ஊரு நாடுலேந்து, பராரியா நாம வந்திருக்கிறோம். மேடுபள்ளம் குண்டுகுழி எங்குந்தானிருக்கு. தா, அழுவாதீம்மா!”

சுகந்தி உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு நிற்கிறாள்.

அருகில் சென்று அவள் தோளில் கை வைக்கிறான். “ஏம்மா, சுகந்தி நீ படிச்ச பொண்ணில்ல...!”

அவள் சரேலென்று முகம் சுளிக்கப் பார்க்கிறாள்.

“...நீருமா குடிச்சுப்போட்டு வந்திருக்கிய? எல்லாம் வேசந்தானா? சீ...! எங்கள இங்க கூட்டி வந்திட்டு... குடும்பம்னு காட்டி சருக்களில பணம் வாங்கிட்டு ஒங்க இட்டம் போல கண்டவங்களையும் வூட்ட வச்சிட்ட்டு, குடிச்சிட்டும் வாரிய...”

கூர்முனையாகக் கத்தி பாய்ந்தாற் போல் குலைந்து போகிறான். சிறிது நேரம் பேச்சே எழவில்லை. தலையைத் தொங்கப் போட்டுக் கொள்ளும் இறக்கம், அவனைக் கொல்லுகிறது.

“தப்புத்தாம்மா, தப்பு என் சுமய நானே ஏத்திக்கிட்டேன். இப்ப செமக்க முடியாம தடுமாறிப் போறன்...”

சட்டைப் பையோடு ஒட்டிய பிளாஸ்டிக் கவரில் எஞ்சியிருக்கும் ரூபாய் நோட்டுக்களை அவளிடம் நீட்டுகிறான்.

“...தப்புப் பண்ணிட்டேன் இந்த தபா மன்னாப்பு கேட்டுக்கறேன். இனி நடக்காது...”

அன்றிரவு யார் சோறெடுத்தார்கள், இல்லை என்று அவன் கண்டு கொள்ளவில்லை. அவன் உள்ளே வரவுமில்லை. வாயில் குட்டித் திண்ணையிலேயே சுருண்டு கிடக்கிறான். இருளும் குளிரும் இதுதான் நீ கடக்க வேண்டிய பள்ளம் என்று அவன் காதில் கிசுகிசுப்பது போல் உராய்கின்றன.

வீட்டுக்குள் முணமுணப்புக்கள், குழந்தை அழுகை, எல்லாம் ஓய்ந்து அமைதி நிலவுகிறது. அந்த அமைதியினூடே, அக்கம்பக்கத்துப் பேச்சொலிகள், இடை இடையே மெல்லிய கீற்றாகக் குழந்தைகளை நினைவூட்டும் சிணுங்கள்களும் தேய்ந்து போகின்றன. குளிர் முகத்தில் வந்து கனத்த படுதாவைப் போல் படிகிறது. பார்க்கும் சக்தியே இல்லை என்ற சோர்வில் கண்கள் மூடிக் கொள்கின்றன.

திடீரென்று படுதாவில் கத்தி செருகினாற் போல் பரமுவின் நீண்ட குலை இருமல் அமைதியைக் கிழிக்கிறது.

சங்கடம் நெஞ்சை வாட்டுகிறது. பரமு... பரமு கட்டுவிடாத வாலிபனாக, தோட்டத்தில் ரப்பர் பாலெடுக்கும் கத்தியும் கையுமாக அவன் மனக்கண்ணில் தோன்றுகிறான். “யாண்டி கறிக்குளம்பு வய்க்கல...!” என்று கேட்டு பெண்சாதியை அடித்துக் கொல்வதும், “ஐயோ, ஐயோ” என்று அவள் அலறுவதும் இப்போது போல் தோன்றுகிறது... இவனுடைய உடலும் உள்ளமும் குன்றிச் சிலுத்து வெறும் அழுகல் சுமையாகக் குந்திக் கிடக்கிறான்...

இருமல் நின்று போயிற்று. ஆனால், சடயம்மா, “அப்பூ...! அப்பூ...!” என்று கலவரத்துடன் அழைப்பது கேட்டுத் திடுக்கிடுகிறான்.

தொடர்ந்து சிம்ணி விளக்குடன் அவள் வாயிலுக்கு ஓடி வருகிறாள்.

“மாமா... மாமா?... அப்பச்சிய வந்து பாருங்க...? அப்பூ... அப்பூ!” முருகேசு வந்து பார்க்கிறான். உள் அறையில், அவன் குந்திய நிலையில் சாய்ந்திருக்கிறான். கீழே மக்கு நிறமாக இரத்தம்... கையகலத்துக்கு மேல் இரத்தம் அவன் கந்தல் கோணிக்கப்பால்...

மாமுண்டி சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கிறான்.

பரமுவின் தோளைப் பற்றி நினைவிருக்கிறதா என்பது போல் மெல்ல அழைக்கிறான் முருகேசு.

“பரமு...! பரமு...!”

நினைவுமட்டுமில்லை, உயிர்த்துடிப்பும் வெளியேறி விட்டது என்பதற் கடையாளமாகத் தலையும் தொய்ந்து விடுகிறது.

அத்தியாயம் - 10

“இந்தா, முன்னெடுத்திட்டுப் போயி, வேலையப் பாரு. ரெண்டு நாள்ள முழுசும் முள்ளுப் போட்டு, பார் கட்டிடணும்...”

பெரிய தலைப்பாவும் கோட்டுமாக மேஸ்திரி அந்தத் தோட்ட அறையில் இருந்து பூமி கொத்தும் பெரிய முள்ளை எடுத்துக் கொடுக்கிறான்.

முருகேசுவுக்குக் களைப்பும் சோர்வும் கரைந்து போய் இலேசாக இருக்கிறது. கீழே பனியில் நனைந்த பசுந்தரை புத்துணர் வூட்டுகிறது. எத்தனையோ நாட்களுக்குப் பிறகு இவ்வாறு வெட்ட வெளியில் மண்ணில் உழைக்க வருகிறான். ஆறு ரூபாய்க் கூலி மிகக் குறைவுதான். ஆனால் இந்த வேலையே யார் யாரையோ கெஞ்சியதால் கிடைத்திருக்கிறது...

முதல் முதல் கன்னி நிலத்தைப் பண்படுத்தித் தேயிலைச் செடிகள் பொங்கிப் பூரிக்க, உழைத்த நிலைகளெல்லாம் உள்ளத்தில் நிறைகின்றன. பெண்டுகள் முதல் கொழுந்து எடுக்கையில் சாமி கும்பிட்டு லூ லூ லூ என்று குரவை இடுவார்கள். மங்கலங்களை முன்நிறுத்தி, எந்த வளமுறையும் வழுவாமல் அந்த மண்ணோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள்...

ஆழ்ந்து வேரோடிய புல்லை அடியோடு பெயர்ப்பது போல் கைமுள் இருகிய நிலத்தில் ஆழ இறங்க, காலை அதன் படங்கில் வைத்து உள்ளே அழுத்துகிறான். பின்னர் கை வலிமையை வைத்துப் பெயர்த்துப் பெயர்த்து மண் கட்டிகளை, ஈரத்தோடு, பொலபொலக்க உடைக்கிறான். இப்படித் துண்டுதுண்டாக, மக்களை, குடும்பம் குடும்பமாகக் குலைத்து சிதற, பெயர்த்து விட்டார்கள்...

பரமு மண்ணோடு மண்ணாகி விட்டான். அவன் போய் அன்றோடு இருபது நாட்களாகி விட்டன... அவனுடைய அடக்கச் செலவுக்கு, ஒரு இருநூறு ரூபாய் புரட்ட முடியாமல், கிழவி வார வட்டிக்குக் கடன் கொடுத்திருப்பதை வாங்கி இருக்கிறான். வீட்டில் தனி அடுப்பாக இருந்தாலும், அந்தப் பிள்ளையை, அவனால் எப்படியும் போகட்டும் என்று விட முடியவில்லையே?

அவளுக்கும் இங்கே ரோட்டு வேலை முடிந்து போய் விட்டதாம். “இன்னும் நாலுநாத்தான் சோலி. பொறவு நாங்களும் வேற பக்கந்தா போகணும்...” என்று அவனிடம் சொல்வது போல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

பஞ்சை பரதேசிகளாக, பொலபொலத்த மண் துகள் போல் நாலாபக்கமும் சிதறிப் போய் விழுகிறார்கள். அவன் சொந்த மகன் குமரு... அவன் எங்கோ, அவர்கள் பிள்ளை எங்கோ...

மண் கட்டிகள், படங்கு படங்காக, பச்சை ஓடிய பரப்பு பாளம் பாளமாக ஈரத்துடன் பெயர்ந்து விழுகிறது.

சரிவை தட்டுத்தட்டாக வெட்டி, அகல அகலப்படிகள் போல் சீராக்கி, மழையில் மண் சரிந்து விழாமல் ‘ஒப்புரவு’ செய்ய வேண்டும். சூரியன் தலைகாட்டலாமா வேண்டாமா என்று யோசிப்பதும், பின்னர் மெல்ல மேகத் திரை விலகுவதுமாக இதமாக இருக்கிறது. வந்த புதிதில், குளிர் பொறுக்க முடியாமல், முப்பது ரூபாய் கொடுத்துப் பழையதான, பட்டிபிரிந்த ‘கோட்’ ஒன்றை வாங்கி அணிந்திருக்கிறான். அதைக் கழற்றி வைத்துவிடலாம் போல் இருக்கிறது. உச்சிப்பொழுது ஏறி வருவதை மூட்டமாக இருந்தாலும் வயிறு கூவி அறிவிக்கிறது. பரமுவின் பிள்ளைகள் எத்தனையோ நாட்களில் அவனுக்குத் தேநீரும் ரொட்டியும் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள். இப்போது இந்த இடத்திலிருந்து சாலைக்குப் போவதற்கே வெகு தொலைவு நடக்க வேண்டும்.

கட்டிகளைத் தட்டி உடைத்துவிட்டு மேலே பார்க்கிறான்.

வரிவரியான வண்ணத் தலைக்கட்டுடன்... பச்சை பச்சைதான் வருகிறான்... பச்சை...!

ஏதோ வானுலகிலிருந்து வண்ணத் தூதுவன் இழிந்து வருவதைப் போல் இருக்கிறது.

“ஏலே பச்சையாடா?”

“ஆமாம் மாமு, இப்பதா வந்தே, வூட்ட போனே, சுகந்தி இப்படீன்னு சொல்லிச்சி...”

“ஏலே, உனக்கு இந்தப் பக்கம்னு எப்பிடித் தெரிஞ்சிச்சி?”

“தெரியாம என்ன? பொட்டம்மா மகளுக்கு சொந்தமான பூமிதான இது? இங்கதா மூணு வருசமா ஒண்ணும் போடாம இருக்கு. விதைக்கணும்னு சொல்லிவிட்டிருந்தாங்க. மேஸ்திரிய கிளங்கு மண்டிகிட்ட மார்க்கெட்ல பார்த்தேன். சரி ரெண்டும் ரெண்டும் நாலுன்னிட்டு ஓடியாந்தே...”

“ஏண்டா ஒம்பேச்சக் கேட்டு மூவாயிரத்தையும் தூக்கிக் குடுத்திட்டு, மிச்சம் கொழப்படில நிக்கிறேன்? அந்த ஆளைய காங்கல, மிச்சம் ஆளுவளும் வந்து பாத்திட்டுப் போறாங்க,... அந்த ரிபாட்ரியட் ஆபீசில, அந்தப்புள்ள எம்பேச்சக் கேக்காம இப்படிக் கண்ட ஆளுவகிட்டயும் தூக்கிக் கொடுக்கலாமா? இங்க ஆபீசுன்னு ஒண்ணு என்னாத்துக்கு வச்சிருக்கோம்னு கத்தினான். உங்கக்குச் சொன்னாத் தெரியாது, ராமேசரத்தில இறங்கறப்பவே கையில நோட்டீசைக் குடுத்துச் சொல்றமே? மோசம் போவாதிய போவாதியன்னு. அதுக்கு மேலியும் புத்திய களவு குடுத்திட்டு இங்க அழுவுறீங்களேன்னு, பேசுறான். ஏசுறான்... நோட்டீசு பச்சயும் மஞ்சளுமா குடுக்கறான், அது என்ன எளவு தெரிஞ்சிச்சி? அந்தப்புள்ள சுகந்திட்டன்னாலும் குடுத்துப் படிக்கச் சொல்லியிருக்கலாம். ஏலே... அம்புட்டுபேரும் பணத்தைப் போட்டது போட்டது தானா?”

“முடிஞ்சிச்சா?... மாமு, அப்பிடி லேசில வுட்டுட மாட்டம். கூடலூரில சொல்லிட்டா. இப்ப விசாரிச்சிட்டுத்தா வார. ஃபக்டரிக்கு லைசென்ஸ் அது இது எல்லாம் அவ்வளவு ‘விரிசா’ கெடச்சிடுமா? அவங்க மட்றாசு போயிருக்கா. இத்தினி ஆளுவளும் லட்சக்கணக்கா குடுத்திருக்கா. வங்கி மானேசர், தாசில்தாரு. எல்லாரும் திறப்பு விழாவுக்கு வந்தாங்க. நம்ம விக்னேசுவரா மாஸ்டர்... அவுரு, நம்ம ஆளு, படிச்சவரு, அங்க நம்ம பிள்ளையளுக்கு ஸ்கூல் நடத்துறாரு, அவுரும் கூட பணம் போட்டிருக்காரு. அப்பிடி மோசம் செய்ய விடுவாங்களா? எந்த கோர்ட்டுன்னாலும் ஏறிக் கொண்டாந்துடுவா, பயப்படாதிய...”

“அது சரி, இப்ப, மிச்சம் குழப்பமாப் போச்சி. பரமு, திடீர்னு அன்னிக்கு மண்டயப் போட்டுட்டான். ஒரு அம்பது ரூபா கையில இல்ல. வீட்டில இனி இந்தப் புள்ளய ரெண்டு கச்சியும் சேர முடியாம கொழப்பம்...”

“வார வட்டிக்கு எரநூறு ரூபா கடன் வாங்கிருக்கே கூடிட்டே போறது. இப்ப, ராமாயி உருப்படி ஒண்ணிருக்கு. ஒரு மூணு சவரன் அட்டியல். அதுவும் தாலியும் தானிருக்கு. இந்தப் புள்ளக்கிக் கண்ணாலம்னா போட்டுடலாம்னு வச்சிருக்கிறேன். அத்த எங்கனாலும் வங்கில வச்சின்னாலும் ஒரு அஞ்சு நூறு பெரட்டியாவணும்... ஏலே, ஒங்கிட்ட... அப்பமே சொன்ன... சுகந்திப் பொண்ணுக்கு ஒம்மேல இஸ்டன்னுதா தெரியிது. அதுக்கு ஆரும் தாதியில்ல. நெல்ல தங்கமான பொண்ணு. அதிந்து ஒரு சொல்லு சொல்லாது. பாங்கா நடந்துப்பா, வூட்டு வேலை, ஒரு சாமா வீண் பண்ணாம, நெல்லபடியா வக்கிது. நல்ல கொணம்... சித்திரயும் பொறந்தாச்சி. அந்த மூவாயிரம் செலவு பண்ணிக் கலியாணம் கட்டிடணும்னு இருந்தே... என்ன சொல்ற?...”

மீசையைப் பல்லால் கடித்துக் கொண்டு சிரிக்கிறான், பச்சை.

“அதுக்கென்ன மாமா? எங்கம்மாளும் அப்பாவும் என் இஸ்டத்துக்குக் குறுக்க நிக்யமாட்டா. அடுத்தமாசம் போறேன் அந்தபக்கம். இப்பிடிச் சொல்லிட்டுவார. அதோட மாமு, நீங்க ராமேஸ்வரத்தில வந்ததும் மூவாயிரம் குடுத்தா அந்தப் பணம் தான இப்ப வச்சிருந்திய? அது தவுர, தொழில் பண்ணன்னு லோன் குடுக்காவ, அதுக்கு எதுன்னாலும் அப்ளிகேசன் குடுத்திருக்கீங்களா?”...முருகேசு முன்பிடியில் கையை வைத்துக் கொண்டு பார்க்கிறான்.

“தொழில் பண்ணவா?... அதான் மாமுண்டியும் சடயம்மாவும் சொன்னாங்களா?”

“வூடுகட்டிக்க, தொழில் பண்ண அல்லாத்துக்கும் பணம் கவுர்மெண்ட் தர்ராங்க ஆனா, வாங்குறது செத்த செரமம். அங்கங்க, கொஞ்சம் பணம் செலவழிக்கணும். ஆபீசு மூலமா போனா வருசம் ஆனாலும் வாரதில்ல. அதுக்குன்னு இடை ஆளுவ இருக்காங்க. அவுங்களக் கண்டு நேக்கா பேசணும். தொழில்கடன்னு ஒரு மூணாயிரம் வாங்கினா, ஒரு கோழிப்பண்ணை, இல்லே ஒரு தையல்மிசின் வாங்கி வச்சிட்டுப் பொம்பிளப் பிள்ள தொழில் செய்யலாம். படிப்பிச்சிக்குடுக்க, கன்யாஸ்திரி மடத்துல கிளாஸ் வச்சிருக்காங்க...” முருகேசுவின் முகம் மலருகிறது. “அட, ஏண்டால முன்னியே இதெல்லாம் சொல்ல இல்ல?... இத பாரு, நீ என்ன செய்யிவியோ? அந்த புள்ளய நீ கட்டிக்கணும். நீ லோனு வாங்கிக் குடுப்பியோ, மிசின் வாங்கிக் குடுப்பியோ உம் பொறுப்பு...”

அவன் சிரிக்கிறான். “இப்ப நா ஊட்டிக்குப் போறேன் நாளக்காலம இந்நேரம் வார, மிச்சம் பேசலாம்...”

“ஏண்டால, இப்ப ஒரு அஞ்சுநூறு பெரட்டி, கிளவி கடன அடச்சிப் போடணுமே?... பாத்தியா மறந்திட்டானே? ரேசன் கார்டுக்கு எழுதிக் குடுத்து மாசமாச்சி, ஒண்ணுமே புரியல.”

“வாங்கித்தார, ரேசன்கார்டு இருந்தாதா, லோனு கீனு எல்லாம் கிடக்கும்...” அவன் வந்து சென்றது, வீரிய மருந்து உட்கொண்டாற் போல் தெம்பாக இருக்கிறது.

மறுநாள் அவன் வருகிறான்.

அடுத்த வாரத்துக்குள் ரேஷன் கார்டு பெற்றுத் தருவதாகச் சொல்லி, அந்த அட்டியலை வாங்கிச் செல்கிறான்.

மூன்றாம் நாள் முருகேசு வேலைக்குப் புறப்படுவதற்கு முன்பே, புதிய நூறு ரூபாய் நோட்டுக்களாக ஐந்து நோட்டுக்களையும், வங்கியில் வைத்ததற்கு அடையாளமான சீட்டொன்றையும் கொண்டு வந்து கொடுக்கிறான்.

அவசரமான கடன் வட்டி எல்லாம் கொடுத்தபின், அரிசி விறகு போன்ற அத்தியாவசியப் பொருளும் வாங்கி வருகிறார்கள்.

பொட்டம்மா, பச்சையிடமும் சொல்லி, டாக்டர் வீட்டு வேலைக்குப் பெண்ணை அனுப்ப உடன்பட வைக்கிறாள்.

“சரோசாவ அனுப்பினா என்ன மாமா? பொட்டம்மா சிவாரிசின்னா, நல்ல ஆளுங்களாதா இருக்கும். அவங்க நல்லராசி உள்ளவங்க. பிள்ளைய சாப்பாடு போட்டு, பாதுகாப்பான எடத்தில வச்சி, மாசம் முப்பத்தஞ்சு ரூபா வங்கில போடறாங்கன்னா பாருங்க!...”

“ஏம்மா சரோசா... கேட்டுக்கிட்டியா?”

“நா போற தாத்தா... போலாம்...”

“அப்ப, நாயித்துக்கிளம, அல்லாரும் ஒத்தைக்குப் போகலாம்... நா கூட்டிட்டுப் போவேன்...” என்று பச்சை வேலு சொல்கிறான்; ஆனந்தமயமாக இருக்கிறது. இந்த இவர்கள் குடும்பமும், சடயம்மாவின் குடும்பமும் இப்போது சில நாட்களில் மிகுதியும் பிரிந்து போய்விட்டன. தகப்பனின் சாவுச் செலவுக்கும் முருகேசு மாமன் செலவழித்திருக்கிறான் என்ற உணர்வும், சுகந்தியின் வேற்றுமையும் அவளைப் பிள்ளைகளைக் கூட அங்கே விட்டுவைக்க இடம் கொடுக்கவில்லை.

மாமுண்டியுடன் அவள் வேலைக்குச் செல்கையில், அந்தக் குழந்தைகளையும் கொண்டு செல்கிறாள். சுகந்தி எழுந்திருக்கு முன்பே, தேநீர் கொதிக்க வைத்துக் கொள்கிறாள். காலை உணவு ஒன்றும் தயாரிப்பதில்லை. முதல் நாளிரவு வடித்த சோறோ, புளியோ கூட்டி, எடுத்துக் கொண்டு போகிறார்கள். பிள்ளைகள் நிமித்தமாகச் சண்டை என்று வருவதற்கு இடமில்லை.

ஞாயிற்றுக்கிழமை இவர்கள் ஒத்தைக்குச் செல்வதாகத் தீர்மானித்து இருக்கிறார்கள். வாரக் கடைசியில் முருகேசுவுக்கு முப்பது ரூபாய் போல கூலி வந்திருக்கிறது. அவன் வேலை முடிந்து திரும்பி வருகையில், மாமுண்டியும் சடயம்மாவும் குழந்தைகளும் மார்க்கெட்டின் பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள். குழந்தைக்குக் குளிருக்குப் பாதுகாப்பாக ஒரு சட்டையை முருகேசு விலைபேசுகிறான். சப்பைமூக்கு வடக்கத்தியான் கம்பளிச்சட்டைக் கடைக்காரன் பதினைந்து ரூபாய் சொல்கிறான்.

“மாமா...?...”

சடயம்மா தான். இடுப்பில் இருக்கும் குழந்தை செல்லி விளையாட்டுக் காட்ட, சிரிக்கிறது. எண்ணெய் கண்டு பல நாட்களான தலை. அழுக்கும் கந்தலுமாகத் துணி. மாமுண்டி ஊரிலிருந்து வந்த போது அணிந்த ஒரே சட்டையை, அணிந்திருக்கிறான். மேலே பழைய போர்வையைப் போர்த்திருக்கிறான். சடயம்மா தான், எப்படி ஆகிவிட்டாள்!

கன்னத் தெலும்புகள் முட்டி, கண்கள் உள்ளே போய்...

“என்ன வாங்குறிய?...”

“புள்ளக்கிதா, போட்டுப்பாரு...”

பன்னிரண்டு ரூபாய் என்று தீர்த்திருக்கிறான்.

“மாமா, உங்ககிட்ட ரெம்பக் கடம்பட்டிருக்கிற, என்னிக்கின்னாலும் குடுத்துப் போடுவ...”

“அட, இதெல்லாம் என்ன புள்ள?...எதுக்கு அழுவுற? இந்தா, புள்ளிக்குப் போடு...”

சிவப்பும் பச்சையுமாக வரிவரியாகப் பின்னிய வண்ண நூல் சட்டை, முருகேசன் பைக்குள்ளிருந்து ஒரு பத்து ரூபாயும் இரண்டு ரூபாயும் எடுத்துக் கொடுக்கிறான்.

“மாமா... நாங்க காலம பொறப்பட்டு வேற எடம் போறம். இங்க வேலை முடிஞ்சிபோச்சி. குன்னூருக்கந்தால மேலே ரோட்டுவேலை இருக்குதாம். நம்ம சனங்கல்லாமும் இருக்காவளாம்... காலம போயிடறோம்...”

முருகேசுவுக்குத் தொண்டையில் உணர்ச்சி முட்டுகிறது. பேச முடியவில்லை; கடலை மிட்டாய்க்காரரிடம் மிட்டாய் வாங்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்கிறான். ‘இரு புள்ள’ என்று சொல்ல என்ன இருக்கிறது?

‘அங்கே வீடு வாசல் இருக்கிறதா’ என்று கேட்க வாய் இருக்கிறதா?

ஒன்றுமில்லை.

பேசாமலே நடக்கிறார்கள்.

சிறிது நேரம் சென்றதும், முருகேசு தெரிவிக்கிறான்.

“சரோசாவ நாளைக்கு ஒத்தையில கூட்டிட்டுப் போயி டாக்டரம்மா வீட்டில வேலைக்குச் சேர்க்கப் போறேன். சாப்பாடு போட்டு துணி குடுத்து மாசம் முப்பத்தஞ்சு ரூபா குடுக்கிறாங்களாம்...”

“அது நல்ல புள்ள...”

“எல்லாமும் நல்ல புள்ளயதா. அததுக்குச் சீவியம் தாறுமாறாப் போறப்ப, கொணமும் கெட்டுப் போவுது...”

அன்றிரவே வீடு திரும்பியதும் சடயம்மா அடுத்த நாளைக்கும் சேர்த்துச் சோறு பொங்கிக் கட்டிக் கொள்கிறாள். அதிகாலையில் மூட்டை முடிச்சுக்களையும், கந்தல்களையும் வாரிக் கொண்டு கிளம்புகிறார்கள். செல்லியின் தலையிலும் கூடச் சிறு மூட்டை இருக்கிறது. பையன் தூக்க மாட்டேன் என்று அடம்பிடித்து விட்டுப் படுக்கைக் கந்தலைத் தலை மீது வைத்துக் கொள்கிறான். சடயம்மா இடுப்பில் குழந்தை, தலையில் சுமையுடன் நடக்கிறாள். மாமுண்டிக்கு உச்சியில் தொடங்கி மண்டை முக்காலும் வழுக்கையாய்ப் பிடரியில் தான் சுருட்டையாக முடி தொங்குகிறது. கூன் விழுந்த முதுகில் சாக்கு மூட்டைச் சாமான்களைச் சுமந்து கொள்ள, அந்தக் குடும்பம் எங்கோ, எப்படியோ பிழைக்க நகர்ந்து செல்கிறது. அந்தப் பள்ளம் சுற்றிய குடியிருப்பு முழுவதிலும் அவர்களைப் போன்ற நாடு பெயர்ந்தவர்கள் தாம். ஒரே தட்டில் அமர்ந்து உண்ணக் கூடிய அபிமானமும் ஈரமும் அவர்களிடம் இருந்தது. அந்தத் தேயிலைப் பசுமையில் அவர்கள் தளிர்த்துப் பிழைத்த போது, இப்படி இருந்ததில்லை...

கண்களைத் துணியினால் ஒத்திக் கொண்டு உள்ளே வந்தாலும், அவர்கள் பாதையில் செல்லும் காட்சி அவனுள் கலக்கத்தையும் சங்கடத்தையும் பிசைகின்றன.

“தாத்தா, அவரு எத்தினி மணிக்கு வாரேன்னாரு?”

சுகந்தி கூந்தலை வாரிக் கொண்டு கேட்கிறாள். முகத்துக்குப் பவுடர், பொட்டு, எல்லாம் புதிதாக வாங்கிக் கொண்டிருக்கிறாள். வாசனை அடிக்கிறது.

சரோசா தனது இரண்டு பாவாடை சட்டைகளையும் மினுமினுக்கும் கித்தான் பையில் அடைத்துக் கொண்டிருக்கிறாள். இடையில் இருப்பதற்குள் பளிச்சென்றிருக்கும் பூப்போட்ட பாவாடை சட்டை அணிந்திருக்கிறாள். தனமும் இதே போன்ற உடுப்பை அணிந்து இருப்பதைக் கவனிக்கிறான். தனம் வயசுக்கு வளர்த்தி இல்லை. இருவருக்கும் இரண்டு வயசு வித்தியாசம். ஆனால் பார்க்க சரோசா தான் வளர்ந்தவளாக இருக்கிறாள். முடியில் நீண்ட நாடா வைத்து முடிச்சிட்டுக் கொண்டு, ஒட்டுப் பொட்டு வட்டமாகப் புருவங்களுக்கிடையே பளிச்சென்று துலங்க மூவரும் தயாராக நிற்கின்றனர்.

முருகேசுவினால் இந்த உற்சாகத்தைக் கொண்டாட முடியவில்லை. எனினும், பச்சை வேலு வந்ததும் வருத்தத்தைக் காட்டிக் கொள்ளாமல் புறப்படுகிறான்.

உதகையில் ‘ரேஸ்’ கூட்டம் தெருக்களெல்லாம் நிறைந்திருக்கிறது.

டாக்டரம்மாவின் வீட்டைத் தேடிச் செல்கிறார்கள்.

அம்மா அப்போது தான் பகல் சாப்பாட்டுக்கு வந்திருக்கிறாள்.

முன் வாயிலில் உள்ள பூச்செடிக்குப் பக்கத்தில் வரிசையாகப் பெண்களும் இரு ஆண்களும் நிற்பதைக் கண்டதும், “யாரப்பா?” என்று விசாரிக்கிறாள்.

“...நாங்க கோத்தையிலேந்து வாரம்... புள்ள வச்சிக்க சிறிசா ஒரு பொண்ணு வேலைக்கு வேணும்னு சொன்னியளாம்... மேஜர் அம்மா அனுப்பிச்சாங்க...”

“ஓ... நீங்கதானா!... யாரு பொண்ணு...?”

சரோஜாவை அவன் காட்டுகிறான்.

கையில் பையுடன் நிற்கும் சரோஜா கபடமில்லாமல் சிரிக்கிறது.

“உம் பேரென்ன?...”

“சரோஜா...”

அம்மாள் “ஜான்!” என்று உள்ளே பார்த்துக் கூப்பிடுகிறாள்.

சிலுவை தொங்கும் பிள்ளை ஒருவன் வருகிறான். கட்டு மத்தாக இருக்கிறான்; மீசை வரும் பருவம்.

“சமையலுக்கு இவன் இருக்கிறான். குழந்தைதான் பாத்துக்கிடணும்... பேபி எங்கே ஜான்?”

“தூங்குது டாக்டர்!”

“ஒரு வயசாகிறது. நான் காலமே ஆசுபத்திரி போயிடுவேன். பகலுக்கு வந்து உடனே மூணு மணிக்குத் திரும்பிப் போவேன். சிலப்ப ராவிலும் கேஸ் பார்க்கப் போக வேண்டி இருக்கும். அதனால குழந்தையை நல்லாப் பாத்துக்கிடணும். சாப்பாடு, படுக்கை, துணி எல்லாம் தரேன். முப்பது ரூபாய் சம்பளம்; சரியா?”

“டாக்டரம்மா! கொஞ்சம் கூடப் போட்டுக் குடுங்க! அதுக்குத் தாய் தகப்பனில்ல. ஸிலோன் கலவரத்தில குடும்பம் அலையக் குலைய மூணு பிள்ளைகளும் வந்திருக்கு... பாத்துக் குடுங்க...”

பச்சை வேறு அவர்கள் வரலாற்றைச் சொல்கிறான்.

“...நீங்க கவலைப்பட வேண்டாம். என் பொண்ணு போல பாத்துக்குவேன்.”

“...அந்தப் பொண்ணையும் வேலைக்கு விடுறீங்களா?”

“யாரு... தனத்தையா?...”

முருகேசு எதுவும் பேசாமல் பார்க்கிறான்.

“என் தங்கச்சி இங்கே டெலிபோன்ல இருக்கா. எசமானரும் இன்ஜினியரா இருக்காரு. ரெண்டு பிள்ளைங்க. பார்த்துக்க ஆள் இல்ல... இங்க தான் பக்கத்தில இருக்கிறா. இதே போல சாப்பாடு துணி எல்லாம் குடுத்து, அம்பதோ அறுபதோ குடுப்பா...”

“என்ன மாமா? யோசனை வாணாம், அக்கா தங்கச்சிங்க ரெண்டுமா இருந்தா... அதுங்களுக்கும் தனியாத் தெரியாது!”

இதற்குள் குழந்தை எழுந்துவிட்டது. ஜான் தூக்கிக் கொண்டு வருகிறான்.

தாய் குழந்தையை வாங்கிக் கொள்கிறாள். தூங்கி எழுந்த சிணுங்கல் கூட இல்லாமல் தாயைக் கண்டதும் சிரிக்கிறது.

வெள்ளை வெளேரென்று நிறம்; ரோஜாக் கன்னங்கள், கருவண்டாய்க் கண்கள், சுருண்ட முடி. ஆண் குழந்தை.

சரோசா ஆசையுடன் ‘வா... கண்ணு’ என்று கூப்பிடுகிறாள்.

“இவம் பேரு கிரீஷ்...”

“அக்கா... சரோ அக்கா, அக்கா... அவ வெளியே தூக்கிட்டுப் போறா...!”

குழந்தைக்கு வேற்றுமுகம் இல்லை; சிரிக்கிறது.

“அப்ப... ஒத்துக்கிட்டீங்க...?”

“உங்களுக்குத் தெரியாததில்ல... புள்ளைங்க கபடே தெரியாதவங்க. முன்ன பின்ன இருந்தாலும் சொல்லிக் குடுங்க தாயி!”

“ரெண்டு பேரையும் விட்டுட்டுப் போறீங்களா? தங்கச்சி இப்ப ஆபீசுக்குப் போயிருப்பா. சாயங்காலந்தா வருவா, நான் கூட்டிட்டுப் போறேன்.”

“இருக்கட்டுமுங்க. இதுங்கல்லாம், இங்க தோட்டம், ரேசு காட்டணும்னு கூட்டிட்டு வந்தேன். சாங்காலமா வாரம்...?”

“அப்ப இருங்க...”

ஜானைத் தேநீர் போட்டுக் கொண்டு வரச் சொல்கிறாள்.

இரண்டு சகோதரிகளையும் நல்ல இடத்தில் சேர்த்து விட்ட ஆறுதல் உண்டாகிறது.

பச்சைவேலு ஒரு வாரத்துக்குள் ரேஷன் கார்டு கிடைக்க தாசில்தார் அலுவலகத்தில் ஓராளைக் காட்டிக் கொடுக்கிறான். ஐம்பது ரூபாய் தான் செலவு. அத்துடன் தொழிற்கடனுக்கும் இவன் ரேகை வைத்துக் கொடுக்கிறான். இந்த இரண்டு மூன்று மாச அலைபாயும் வாழ்வில், ஏதோ ஒரு துறையில் இளைப்பாறத் தங்கினாற் போல் முருகேசு மூச்சு விடுகிறான்.

அத்தியாயம் - 11

இளவேனிலின் இனிமைகளெல்லாம் பாய்சுருட்டிக் கொண்டுவிட்டன. ஏழைகளுக்கும் மாற்றுடையில்லாத வறியவர்களுக்கும் காலனாகப் பருவமழை மலைகளில் பேயாட்டம் ஆடக் கொடியேற்றுகிறது.

மழை நாட்களில் சம்பளம் கொடுக்க இவனுக்கென்ன அரசு வேலையா? வீட்டில் குந்திப் பார்த்தால் செம்மண் குழம்பாக மேடுகளைக் கரைத்துக் கொண்டு நீர் பள்ளத்தில் பாய்ந்து விழுவது தெரிகிறது. ஊசிக்குத்துகளாக ரோமக் கால்களைக் குளிர் குத்துகிறது. வீட்டில் சூடு என்ற பெயருக்கே வழியில்லாமல் இருக்கிறது. இந்த எட்டு நாட்களில் ஒரே ஒரு நாள் தான் இவனுக்கு வேலை இருந்திருக்கிறது. சுகந்தி தனியாக இருப்பதால், ஒயர் பை போடப் படித்துக் கொண்டிருக்கிறாள். பொட்டம்மா சிபாரிசு செய்து, இந்த ஒன்றரை மாசத்தில் நான்கு பைகள் போட்டுக் கொடுத்து, ஒரு பத்து ரூபாய் சம்பாதித்திருக்கிறாள். இன்னும் பை போட ஒயர் வாங்கித் தந்திருக்கிறாள். அதைப் பின்னும் ஒரு சுவாரசியத்தில், சூடில்லாத வறுமையும் பசியும் அமுங்கிப் போகின்றன.

‘சித்திரை, வையாசி போயி ஆனியும் வந்தாச்சு. லோன் அப்ளிகேசன் போட்டு மாசமாவுது. அவனவன் வருசம் ஆனாலும் வாரது செரமம்னு சொல்லுறான்... அது வந்ததும் வங்கியிலிருக்கும் சாமானையும் திருப்பி, கலியாணமும் கட்டிடணும்...’ இவன் சிந்தையில் மின்னலாய் வரிகள் ஓடுகின்றன.

அந்தப் பணத்தைப் பறிகொடுத்துவிட்ட உணர்வு அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டே இருக்கிறது... மூவாயிரம்!

அரசு ஒரு பக்கம் உதவி செய்து, இன்னொரு பக்கம் இப்படி முதலைகளையும் வளர விட்டிருக்கிறது. உசர உசரமான கோயிலும், சாமியார் போன்ற மனிதர்களும் நடமாடினாலும், அடித்துப் பிருங்கும் போலீசாரும் இருக்கிறார்கள்.

“தாத்தா... அடுப்புப் புடிக்கவே மாட்டேங்குது. சீமண்ணெய் குப்பி காலியிருக்கு. காஞ்ச வெறவா கொஞ்சம் வாங்கிட்டு வாங்க.”

ரேசனுக்குப் புறம்பாகச் சீமை எண்ணெய் வறியவரால் வாங்க இல்லாத பொருள். விறகு... உயிர்ச்சூடு...!

வேலை முடிந்து திரும்பியதும் மிலாறு பொறுக்கிக் கொண்டு பெண்டுகள் வீட்டில் பத்திரப்படுத்திக் கொள்வார்கள். இதற்கெல்லாம் காசு கொடுத்தே அறிந்ததில்லை. இங்கே தொட்டது தொன்னூறும் காசாக இருக்கிறது. தலையில், உடலில் இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கிய பிளாஸ்டிக் துணியைப் போர்த்துக் கொண்டு முருகேசு வெளியில் இறங்கிப் போகிறான். அன்றாடம் சந்தைப் பக்கத்துக் கடையில் குந்தியிருக்கும் மேஸ்திரியிடம் ‘லோன்’ பற்றி நினைவூட்டுவது போல் தலைகாட்ட வேண்டும். பாதையெல்லாம் சறுக்கலும் வழுக்கலுமாக இருக்கிறது.

ஏழைகளெல்லாம் உயிர்ச் சூடின்றித் தொல்லைப்படுகிறார்களே என்று மலையே கண்ணீர் சொரிவது போல் நினைத்துக் கொள்கிறான். மேடான திருப்பப் பாதையில் லாரி ஒன்று ஏறத் திணறிக் கொண்டிருக்கிறது. வழுக்கல், பள்ளத்துக் கப்பால் தொலைவில், ஓட்டுபவனுக்கு உதவியாக இருக்கும் பொடியன் ‘ரெய்ட் ரெய்ட்’ என்று சொல்ல நிற்பது புரிகிறது. ஒருகால் அவன் பச்சை வேலுவாக இருக்குமோ? லொரியில் போகும் ஆள் நன்றாகச் சம்பாதிக்கிறான். அத்துடன் நிறைய ஆட்களைத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறான்... எப்படியேனும் நகையை மீட்டு ஒரு கலியாணம் கட்டிவிட்டால் சுகந்திப் பெண்ணைப் பற்றிய கவலை தீர்ந்துவிடும்...

பிறகு...

மனசின் உள்ளே தீக்கங்கு போல் சாம்பலுக்குள் புதைந்து கிடப்பது போல் குமருவைச் சென்று பார்க்க வேண்டும் என்ற பொறி இருக்கிறது. அந்தக் குழந்தைச் சட்டையைப் பத்திரமாகப் பைக்குள் வைத்திருக்கிறான்.

குழந்தையை மேனியில் ஒட்ட இருக அணைத்து முத்தமிடும் ஆசை அவனுள் அன்று டாக்டரம்மாவின் குழந்தையைப் பார்த்த போது வெறியாக எழும்பியது. அவனுக்கென்று அவனுடைய அணுவின் அணுக்களால் ஆன பூந்தளிர்.

சந்தைப் பக்கம் கடைகள் எல்லாம் போர்த்துக் கொண்டு முடங்கிக் கிடக்கின்றன. டீக்கடைப் பக்கம் மட்டும் கூலிக்கும்பல் சாக்கும் கூடைகளுமாக அன்றாட இயக்கத்தை இழுத்துப் பிடிக்க நிற்கிறது...

“முருகேசண்ணா? ஒங்கள இப்ப, ஓராளு தேடிட்டுப் போனாரு, ஒத்தையிலேந்து காயிதம் குடுத்தனுப் பிச்சிருக்காங்களாம். உங்களை வாரச் சொல்லி?”

இந்தச் செய்தி சொல்லுபவன் மாரியண்ணன். அவர்களுடைய குடியிருப்பில் தான் இருக்கிறான். கோழி வளர்த்து முட்டை வியாபாரம் செய்கிறான்.

முருகேசுவுக்குத் துணுக்கென்றிருக்கிறது. அந்தப் பெண்ணைக் கஷ்டப்படுத்தியிருப்பார்களோ? ஜான் என்ற அந்தப் பொடியன்... ஏடாகூடமாக விளையாடியிருப்பானோ?... இல்லை... தனம்... தனம்?

தனத்தைப் பற்றி முன்பு கவலை இருந்தது. ஆனால் டாக்டரம்மாவின் தங்கை வீட்டில், புருசன் பெஞ்சாதி இருவரும் வேலைக்குச் சென்றனர். குழந்தைகள் இருவரும் பெரியவர்கள். பள்ளிக்கூடம் செல்பவர்கள். அவர்களைக் கவனிப்பது, அடுத்து பகல்சோறு கொண்டு கொடுப்பது, மாலையில் கூட்டி வருவது என்ற மாதிரியான வேலைகள். சம்பளமும் அறுபது ரூபாய். தனம் சிரித்துக் கொண்டு, “நான் இங்கேயே இருக்கிறேன்.” என்று தான் சொன்னாள்... என்ன ஆயிற்று? மாரியண்ணனிடம் பத்து ரூபாய் கேட்டு வாங்கிக் கொண்டு, வீட்டுக்கு வந்து சேதி சொல்கிறான். “அம்மா, டாக்டரம்மா சீட்டுக் குடுத்து, அனுப்பிச்சிருக்காவ. சந்தக்கடயில மாரியண்ணஞ் சொன்னா, பதனமா இருந்துக்கம்மா, போயி என்னான்னு விசாரிச்சுட்டு வார. செரிப்படலன்னா, கூட்டியாந்துடறே. பாட்டியத் துணைக்கு வந்திருக்கச் சொல்லு. ராவிக்குத் திரும்பிடுவ...”

இவன் உதகை சென்றிறங்கி டாக்டரம்மாவின் வீட்டு மேடேறுகையில் மழையும் சாரலும் விட்டிருக்கிறது. உச்சிப் பொழுது கடக்கும் நேரம். எல்லாரும் சாப்பாட்டுக்கு வரும் நேரம்.

கண்ணாடிக் கதவு மூடியிருக்கிறது. முருகேசு தன் பிளாஸ்டிக் கொங்காணியை எடுத்து உதறிக் கொண்டு மணிப்பித்தானை அழுத்துகிறான்.

...சரோ... சரோசாதான் வந்து கதவைத் திறக்கிறது. சிவப்பும் பச்சையுமாகப் பின்னப்பட்ட புதிய உல்லன் சட்டை அணிந்து கொண்டிருக்கிறாள். கை முழங்கைக்கு மேலே நின்று கழுத்து வரை மூடிப் பாதுகாப்பாக இருக்கிறது. எண்ணெய் தொட்டுத் தலை சீவிப் பின்னலைக் கட்டிக் கொண்டு, புதிய கோலத்தில், மென்மையாகச் சிரிப்பதில் இருந்து பிரச்னை சரோசாவைப் பற்றியதில்லை என்று ஆறுதல் தோன்றுகிறது.

அப்போதுதான், கையில் சூடுபட்டுக் கன்றிப் பொறுக்கு விடக் காய்ந்திருப்பதையும் அதில் ஏதோ களிம்பு போல் தடவியிருப்பதையும் கவனிக்கிறான். துணுக்குறுகிறான்.

“உள்ளவாருங்க தாத்தா, குளுரு காத்து வெளிய...”

“கையில என்னம்மா?...”

“ஒண்ணில்ல. ஆவி அடிச்சிரிச்சி...” வழக்கமான சிரிப்பு மாறவில்லை.

“ஏம்மா, அடுப்பாண்ட நீதா வேலை செய்யிறியா? பொடியன் இருந்தானே?”

“...அவனப் போகச் சொல்லிட்டா. அவ மோசமா நடந்திட்டா. டாக்டரம்மா, நா வந்த மறுநாளே தெரத்திட்டாங்க. சமயல் நாந்தா செய்யிற...”

“புள்ளையும் நீயே பாக்குறியா?”

“ஆமா இப்ப எந்திரிச்சிடுவா...”

“ஒண்ணத் திரும்பக் கூட்டிப் போயிடட்டுமா?”

“வாணாந்தாத்தா; இங்க ஒண்ணுமே கஷ்டமில்ல. டாக்டரம்மா ரொம்ப நெல்லவங்க. துணியெல்லாம் வாங்கிக் குடுத்திருக்காங்க. நெதம் சாயங்காலம் அவங்க காரில புள்ளயும் என்னயும் வச்சி கூட்டிட்டுப் போவாங்க. எனக்குன்னு கட்டில், நாரு மெத்த அல்லாம் இருக்கு... அடுப்பு எல்லாம் வெறவு புகை ஒண்ணில்ல. காஸ் ஹீட்டருதா. அம்மா எனக்கு எல்லாம் சொல்லிக் குடுத்திருக்கா. அம்மாவுக்கு காரு துடைச்சி சிலப்ப ஒட்ட, வீட்டு வேலை எதானும் செய்ய, கடை கண்ணிப் போக உங்களைப் போலவே ஒரு பெரியவருதா இருக்காரு. நெல்லவரு. இப்ப ஆசுபத்திரிக்குப் போயிருக்காரு...”

கேட்கக் குளிர்ச்சியாக இருக்கிறது.

“பின்ன, அம்மா காயிதம் குடுத்து அனுப்பிச்சாவன்னு, சந்தப்பேட்டயில மாரியண்ணன் சொன்னான்... தனம்... தனத்தப் பாப்பியா நீ?...” அவள் இதழ்களில் குறுஞ்சிரிப்பு எட்டிப் பார்க்கிறது.

“தாத்தா தனம் சமஞ்சிடிச்சி. அந்த... அவுங்களும் நெல்லவங்கதா. ஆனா, கிளீனா இல்லன்னா கோவிச்சிப்பாங்க போல. அங்க அவுங்களே தா சமயல் பண்ணுறாங்க. மேவேலை எதுனாலும் செய்யணும். அவுங்க காலமபோனா, ராவிக்குத்தா வருவா. அய்யாவும் அங்க இங்க டூர் போயிடுவாராம். முக்கியமா புள்ளங்களதா பாத்துக்கிடணும். சமஞ்சிட்டா, வூட்ட ஆரும் இல்ல, அளுதிட்டே இருந்திச்சாம். பக்கத்திலேந்து, ஒரு அம்மாதா பாவம், அழுவாதடீன்னு சொல்லிட்டு இங்க வந்து சொல்லி அனுப்பினாங்க. டாக்டரம்மா வூட்ட இல்லாம நானும் எப்பிடிப் போவ? ஆனா, சாங்காலம் அவங்க வந்ததும் காரப் போட்டுட்டுப் போனம். அந்தப் புள்ளங்க யோகேசு, ரமேசு, ரெண்டும் சுட்டிப் பசங்க. எல்லாம் இங்கியே அஞ்சு நாளக்கி வச்சிட்டிருந்தாங்க...”

முருகேசுவுக்கு இப்படி... நினைத்துப் பார்க்கக் கூடத் தோன்றவில்லையே?

பேச்செழாமல் நிற்கிறான்.

ஒரு பெண் குழந்தைக்குத் தாயும் சகோதரியும் மற்றும் ஆதரவான உறவுத் தொடர்புகளும் இல்லாத நிலையில் முற்றிலும் வேறுபட்ட ஓர் இடத்தில், இந்த நிகழ்ச்சி நடந்து விடக் கூடும் என்ற அறிவு இல்லாதவனாக, வேலை வந்ததும் இருக்கட்டும் என்று சொல்லி விட்டானே?

“அப்ப, நாம் போயி அத்தப் பாத்திட்டு வாரம்மா!...”

“இருங்க தாத்தா, குளுரில வந்திருக்கீங்க, தேத் தண்ணி தார, குடிச்சிட்டுப் போங்க...”

அவன் கூசுகிறான். உள்ளே அவனுக்கு நிற்பதற்கே அந்நியமாகத் தோன்றுகிறது.

“இருக்கட்டும்மா, போயிட்டு வந்து டாக்டரம்மாளப் பாத்திட்டுத்தா போவ...”

‘ஸிலோன்லந்து வந்ததுங்கதா நெறயக் குமிஞ்சிருக்கு. ஆனா, உள்ள வேலைக்கு விடப் பயமா இருக்கு’ என்ற சொல்லை, அவனே கேள்விப்பட்டிருக்கிறான்.

‘டாக்டரம்மா இல்லாத நேரத்தில் தேத்தண்ணீர் குடிச்சிட்டு போகலாம்’ என்று இந்தப் பெண் சொல்வது கூடத் தப்பாகப் போய்விடலாம்.

கீழிறங்கி, சாலை கடந்து, மறுபுறத்து மலைமீது ஏறி தனம் வேலை செய்யும் வீடு இருக்கும் இடத்தை நினைவு வைத்துக் கொண்டு போகிறான். செருப்பு சறுக்கும் என்று அணிந்து வரவில்லை. கால்கள் சில்லிட்டுப் போகின்றன.

ஊற்றும் மழையில் முகத்திலும் கையிலும் தெரியாமலே வந்து கவ்வும் அட்டைகளைப் பிய்த்துப் போட்டுக் கொண்டு வேலை செய்து பழகிய உடல், இன்று வாழ்க்கையின் மோதல்களிலும் நசுக்கல்களிலும் தளர்ந்து விட்டது. பசேலென்று புல்லாடை போர்த்த மலையில் முட்டு முட்டாக உயர உயரமாகச் சிமிட்டிச் சுவர் கட்டிடங்கள் வண்ணங்களிழந்து அழுது வழிகின்றன. அந்த வீட்டுக்கு முன் அன்று அவர்கள் வந்த போது மஞ்சட் பூங்கொத்து உள்ள கொடி இருந்தது. முன் வாசலில் பூஞ்சட்டிகள் இருந்தன. இஸ்தோப்பு போல் - அரைச்சுவர்...

அவன் பார்த்துக் கொண்டே வந்து கண்டு பிடித்து நிற்கிறான்.

வாயிலில் சங்கிலியில் நாய் கட்டி இருக்கிறது. அது இவனைச் சுற்றுக் கட்டை வேலியருகில் பார்த்ததுமே எம்பி எம்பிக் குலைக்கிறது.

சின்னப் பையன் ஓடி வருகிறான் வாசலுக்கு. தலையில் குல்லாய், உடல் முழுதும் வுல்லன் நூல் உடுப்பு...

“ரமேசு...! வெளில போகக்கூடாது...!”

சொல்லிக் கொண்டு... தனம்... தனம் தான் வருகிறது.

“டைகர்! சும்மா இரு!...” நாய்ச் சங்கிலியை அவிழ்த்துக் கொண்டு உள்ளே போகிறாள். இவனைத் தாழ்ந்த கண்களால் பார்த்து விட்டுத்தான் ஒன்றும் பேசாத கோபத்துடன் போகிறாள். ஒரு பூப்போட்ட சேலையைச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். முகம் பரந்து, இந்த ஒன்றரை மாத வளர்ச்சியில் வேற்றுமைப்பட்டு விட்டதை அறிவுறுத்துகிறது.

“என்னம்மா, தனம்!” என்று கேட்க நினைத்தவன் இறுகிப் போகிறான்.

இப்படி ஒரு... நிலைமை, பத்து நூறு ரூபாய் செலவு செய்யும்படியான சடங்கு செய்ய வேண்டிய தருணம் என்ற அறிவே இல்லாமல் பஸ் சார்ச்சுக்கு மட்டும் கணக்குப் போட்டுக் கொண்டு, இரண்டு கடலை மிட்டாயையும், ஒரு பொரிப் பொட்டலத்தையும் மட்டும் வாங்கி வந்தானே?

உள்ளே நாய் குரைப்பது நிற்கவில்லை. “தே, சும்மா இரு!” என்று அவள் அதட்டுகிறாள். ஆனால் வெளியே வரவில்லை. ரமேசு வாசற்படியிலேயே நின்று அவனைப் பார்க்கிறது.

அவனைப் பிச்சைக்காரனாகக் கருதி விரட்டவும் இல்லை. ஒரு வியப்புடன் பார்க்கிறது.

இதற்குள், அந்தக் குடியிருப்பின் அடுத்த பகுதியில் இருந்து சற்றே வயது முதிர்ந்த பெண்மணி வருகிறாள்.

“ரமேசு? நேத்தெல்லாம் காய்ச்சல்னா உங்கம்மா?... நாய் குலைக்கிது. தனம் எங்க போனா?... தனம் இல்லியா?...”

அவனைப் பார்த்து விடுகிறாள். “யாரப்பா...?”

“தனத்தப் பாத்திட்டுப் போக வந்தம்மா. என்னப் பாத்திட்டு உள்ளாற போயிட்டது; டாக்டரம்மா சீட்டு அனுப்பிச்சாங்க...”

“ஓ, நீங்க தா தாத்தாவா?... பாவம், வயிசுக்கு வந்திடிச்சி... சின்ன பொண்ணு. அம்மா அப்பால்லாம் ஸ்லோன்ல உசிரோட எரிச்சிட்டாங்களாமே? என்ன கொடுமை? பாவம், பொலபொலன்னு கண்ணீர் விட்டு அழும், எந்திரிக்காம சாப்பிடாம, ரொம்பக் கஷ்டமாப் போச்சு. இங்க, மாதுரிக்கு காலை ட்யூட்டி, இல்லாட்டா ராத்திரி பத்து மணிக்கு மேல வராப்பில ட்யூட்டி. பிள்ளைங்க ரெண்டும் ரெண்டுங் கெட்டான். துரு துரு விஷமம்... இப்படிப் பாவமா கொலைபட்டினி கிடக்குதேன்னு, இவ தங்கச்சியைக் கூட்டிண்டு வந்து பேசச் சொன்னா, கேக்கல. பிறகு, டாக்டர் மாலினி தான் வந்து அதட்டி எல்லாத்தையும் அங்க கொண்டு ஒரு வாரம் வச்சிட்டிருந்தா. இப்பதா தேவல...”

இவன் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொள்கிறான்.

“அம்மா, தனம்...?”

உள்ளே நொறுங்கிய சிதிலமாகக் குரல் வருகிறது.

உறவுகள், மரபுகள், எல்லாம் கடும்புயலில் வேரோடு தலைசாய, இந்தப் பெண்ணினால், அந்த அதிர்விலிருந்து மீள முடியவில்லை.

அந்தம்மா உள்ளே சென்று, “போம்மா, உன்னப் பாக்கணும்னுதானே வந்திருக்காரு?... பாவம்...” என்று ஆதரவாக வற்புறுத்தியும் அவள் அசையவில்லை.

“எனக்கு யாரையும் பார்க்க வேணாங்க. இங்க யாரும் எங்கக்கு ஒற முறையே இல்ல...”

அவள் சொன்னது இவன் செவிகளில் ஈயம் காய்ச்சி ஊற்றினாற் போல் பாய்கிறது. அந்தம்மாள் வருகிறாள். “வேணான்னா வேணாம். இருக்கட்டும் எங்கியானும் நல்லா இருக்கட்டும். அது சொல்றதில நாயம் இருக்கு. எங்ககாலக் கொடும. நா வாரம்மா... அவங்க எசமானி அம்மாட்ட சொல்லுங்க. முருகன் ஒரு கொறயும் வைக்கமாட்டா!...”

அவன் போன வழியிலேயே திரும்பி வருகிறான்.

டாக்டரம்மா வந்திருக்கிறாள். அவனைப் பார்க்கவே காத்திருக்கிறாள் போலிருக்கிறது.

“என்னப்பா? தனத்தப் பாத்தீங்களா?... நா ஸ்லோனுக்குப் போயிடறேன். எனக்கு இந்த ஊரு புடிக்கல, இந்தியா புடிக்கலன்னு அழுதிச்சி. அதா உங்கக்கு சொல்லி அனுப்பினேன். சமாதானமா இருக்கா...”

முருகேசு தலையைத் தொங்கப் போட்டுக் கொள்கிறான்.

“என்னம்மா செய்யிறது? கூட வாரியா கூட்டிட்டுப் போறேன்னே. பேசவேயில்ல. பொறந்து வளந்து ஆயியப்பன்னு இருந்த பூமி அல்லாத்தையும் பறிச்சிட்டுத் தூக்கி எறிஞ்சிரிச்சி. காலக் கொடும... என்னமோ நீங்க அன்பா ஆதரவா இருக்கிறீங்க. முருகன் நெல்லா வைப்பான். அதான் வேண்டிக்கிறேன்...”

“நீங்க கவலைப்படாதீங்க. சில பிள்ளைங்க, இந்த மாதிரி சமயத்தில மனசு கஷ்டப்படுறது உண்டுதா. நா அவகிட்ட லெட்டர் எழுதித்தா, உங்க ஊருக்கு அனுப்பி வைக்கிறேன்னு சமாதானமாச் சொன்னேன். வேலை எல்லாம் நல்லாப் பாக்குறா. குழந்தைகள் ரெண்டும் தனம் தனம்னு உயிராயிருக்கு... இங்க வச்சிருந்தேன், ஒரு வாரம்... பையனுக்கு ஸ்கூல் துறந்திட்டாங்க. அதா அனுப்பினேன்...”

அவனை அங்கேயே சாப்பிட்டுவிட்டுப் போகச் சொல்லிவிட்டு, அவள் போகிறாள்.

“முருகா! இவங்களை நல்லபடியா வச்சிரு?”

பஸ் பிடித்து முருகேசு ஊர் திரும்புகையில் இருட்டி விடுகிறது.

வீட்டில் பச்சை வேலு வந்திருக்கிறான். வெங்காய வடை மணம் அந்த மழைக் கூதலுக்கு இதமாக மூக்கைப் பிடிக்கிறது. மீன் கொண்டு வந்திருக்கிறான். சுகந்தி, அம்மியருகில் சிம்ணியை வைத்துக் கொண்டு இழைய இழைய மசாலைப் பொருள் அறைக்கிறாள்.

உள்ளே கட்டில் ஒன்று தான் சற்றே ஈரம் பொசியாத இடமாக இருக்கிறது. அதில் ஒரு புதிய வாயல் சேலையும் தைத்த ஜாக்கெட்டும் வைத்திருக்கிறது.

“ஏன்ல, எப்ப வந்த நீ...?”

முருகேசுவுக்கு ஒரு பக்கம் இது வரவேற்கக் கூடியதாகத் தோன்றினாலும், அத்து மீறல் என்ற சந்தர்ப்பத்துக்கு ஆளாகக் கூடாதே என்ற அச்சமும் இருக்கிறது. அதனால் தான் குரலில் மரியாதை தோய்ந்த சரளம் வரவில்லை.

“...இப்பதா கொஞ்ச நேரமின்ன வந்த, மாமு...”

மீசையைப் பல்லில் இழுத்துக் கடித்துக் கொண்டு அசட்டுச் சிரிப்புச் சிரிக்கிறான்.

“...சீல... ஏது...?”

“நாதா வாங்கியாந்தே, மாமு. கோயமுத்தூருல வாங்கின. செவுந்திக்குன்னு...”

“யாருல செவுந்தி?”

“...ஓ... எனக்கு செவுந்தின்னுதா வருது. சுகந்தின்னு வாரதில்ல...” என்று சிரிக்கிறான்.

மசாலையை வழித்துவிட்டு இதற்குள் சுகந்தி தேத் தண்ணீரும் வடையும் கொண்டு வந்து வைக்கிறாள். முகம் பளிச் சென்று சிரிக்கிறது. நெற்றியில் பெரிய ஒட்டுப் பொட்டு.

“என்ன தாத்தா? சொல்லி அனுப்பிச்சாங்கன்னு போனில, ஒண்ணுமே சேதி சொல்ல இல்ல? சரோவும் தனமும் நல்லாருக்காங்களா?”

“ம்... தனம் வயிசுக்கு வந்திடிச்சு.”

இருள் படுதாவைத் தொங்க விட்டாற் போல் அமைதி படுகிறது.

சிறிது நேரம் சென்ற பின் பச்சைதான் கேட்கிறான். “டாக்டரம்மா நல்லபடியா வச்சிட்டிருக்காங்க இல்ல?”

“நல்லா தா இருக்கா. பங்களா போல வூடு. அதெல்லாம் ஒரு கஷ்டமும் இல்ல...”

“எலே, ஒங்கிட்டக் கொஞ்சம் பேசணும்...”

“சொல்லுங்க மாமா...”

“வெளியே வா...”

“கூதலு அடிக்கிதே மாமா, என்னா ரகசியம், சுகந்திக்குத் தெரியாம?”

அவன் சுகந்தியை நிமிர்ந்து பார்க்கிறான்.

“ரகசியம் இல்லேடா. ஆவணி பிறக்கப் போவுது. ஒத்தயில முருகன் மலை இருக்குன்னா. கூட்டிட்டுப் போயி, ஒரு தாலியக் கட்டிபோடுன்னு சொல்ல வந்தே. கவுறு போட்டுட்டன்னா, நீ சீல வாங்கிட்டு வந்தாலும் ஜாக்கெட் வாங்கிட்டு வந்தாலும், வூட்ட வந்து உரிமையோட பேசலாம். ஒரு பேச்சுக்கு எடமிருக்காது பாரு?...”

“என்ன மாமா, சீல வாங்கிட்டு வந்தது தப்பா?”

“தப்புன்னா சொன்னே? அத வச்சித்தா சொல்ற. அதுக்கும் இஷ்டம். எனக்கும் பொறுப்பு விட்டுடும். தாலி என்னமோ இருக்கு. நான் லோனெடுத்து ஊரு கூட்டிக் கலியாணம்னு யோசன பண்ணிட்டிருந்தே. அததுக்குக் காலம் நேரம்னு வந்திட்டா, செஞ்சிரணுமில்ல?...”

“இருக்கட்டும் மாமு, பயப்படாதீங்க, நா சுகந்தியக் கட்டிக்கிறேன். லோனு வரட்டுமே?”

“லோனு வாரப்ப வரட்டும். இப்ப அட்டியல, அஞ்சு நூறுக்குத்தான், வச்சிருக்க? கூட ஒரு அஞ்சு நூறு வாங்கிக் கண்ணாலத்த முடிச்சிடறது. நேரம் காலம் வாரப்ப அததைச் செஞ்சிரணும்...”

அவன் பதில் பேசவில்லை. சம்மதம் என்ற மன ஆறுதல் கொள்கிறான்.

மீன் குழம்பும் சுடச்சுடச் சோறும் உண்டு படுக்கிறார்கள்.

தனக்கு யாரும் இல்லாத நிலையில் தனம் மனம் நொந்து சலித்து ஒடிந்து போக இடம் வைத்தாற்போல், இந்த சுகந்தியும் ஏடாகூடமாக நடக்க இடம் வைக்கக் கூடாது என்று உறுதி செய்து கொள்கிறான்.

“ஏன்ல, அந்தச் சீட்டு எடுத்துத்தார. அதிலியே இன்னொரு அஞ்சு நூறு மேல எடுத்திட்டு வந்திரு. பின்னால நீயே கட்டி உருப்படிய எடுத்திக்கிடலாம்... அது சுகந்திக்குத்தா...”

“இருக்கட்டும் மாமா, நா நாளைக்கு வந்து அத்த வாங்கித்தார... நான் ஆவணி பாஞ்சு தேதிக்கு வாரேன்... அப்ப... வாங்கிட்டு வார. கலியாணத்துக்கு முன்ன எடுத்தாப் பத்தாதா? கையில இருந்தா செலவழிஞ்சி போயிடும்...” என்று சொல்லி விட்டுப் போகிறான்.

பத்து நாட்கள் கழித்து ஆவணி பிறந்த பிறகு, அவன் முருகேசு வேலைக்குப் போயிருந்த பொழுதில், வந்து போனதாக சுகந்தி தெரிவிக்கிறாள். வழக்கம் போல் மீன் வாங்கி வந்திருக்கிறான். காரா பூந்தி, பகோடா போன்ற நொறுக்குத் தீனி வாங்கி வந்திருக்கிறான். ஆனால் இவன் கண்களில் தட்டுப்படவில்லை.

“அவெ என்ன, எப்ப வாரேன்னு சொன்னா?”

“சொன்னாரு தாத்தா. காலம நீங்க சோலிக்குப் போகு முன்ன வாரேன், பேசுறேன்னு சொன்னாரு...”

“சரி, நா போனப்புறம் வந்தா, நா மண்ணுகட்டிட்டிருக்கிறேன் தோட்டத்தில, அங்க வாரச் சொல்லு! தனிச்சிருக்கிற பொம்பிளப் புள்ளட்ட வந்து பேசுறதும் போறதும் சரியில்ல...”

ஆனால் அவன் வரவில்லை. சுகந்தியோ, வயர் பை போடுகிறாள், வெளியே செல்கிறாள், அக்கம் பக்கம் பேசுகிறாள்! இப்போது புதிய சிநேகமாக, அந்தக் குடியிருப்பிலேயே, பார்வதி என்ற பெண் பிள்ளைத் தொடர்பு வருகிறது. பார்வதியின் வீட்டில் அவளும் அவள் தகப்பனான ஒரு குடிகாரனும், வளர்ந்த இரு பெண்களும் தான் இருக்கிறார்கள். புருஷன் எங்கோ கேரளத்து வய நாட்டில் வேலை செய்வதாகச் சொல்கிறார்கள். மொத்தக் குடியிருப்பிலும், அவளும் பெண்களும் நைலக்ஸ், வுலிவுலி சேலைகள் அணிவதும், சினிமாவுக்குப் போவதுமாக, ஆடம்பரமாக இருக்கிறார்கள். அவர்கள் வீட்டிலும், நாற்காலி, ‘கசட்’ வைக்கும் டு இன் ஒன் போன்ற சாமான்கள் இருக்கின்றன.

“அந்தப் பொம்பிள, ஒரு மாதிரி... எங்கோ எப்பிடியோ தொழில் நடத்துபவர்கள்” என்று மாரிமுத்து சந்தைக் கடையில் விவரம் சொல்கிறான்.

ஆவனி தேய்ந்து புரட்டாசியும் பிறந்து நாட்கள் நழுவுகின்றன.

மலை முழுதும் பூரித்துக் குலுங்குகிறது. வெயிலோன் புதிய உற்சாகத்துடன் இதமாகப் பவனி வருகிறான்.

அன்று வேலை முடிந்து வருகையில், பார்வதியின் மகள் இருத்தி இவளுடன் இருக்கிறாள். ஏதோ கதைப் புத்தகமோ வேறு புத்தகமோ வைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறாள்.

கண்கள் அகல மை தீட்டிக் கொண்டு, இரட்டைப் பின்னல் ரிப்பன் முடிச்சுடன், மெல்லிய தாவணியில் பொங்கும் இளமையைக் கவர்ச்சியைக் காட்டிக் கொண்டு...

“வணக்கமுங்க” என்று சிரிக்கிறாள் இவனைக் கண்டதும்.

“யார்மா?”

“இவ... சகுந்தலா, தாத்தா. என்ன சினிமாக்குக் கூப்பிடுறா. டிக்கெட், பாஸ் இருக்குதாம்...”

“என்னிக்கு?”

“இன்னிக்கு தா, ரெண்டாம் ஆட்டம்... இவங்கண்ணன் கூட்டிக் கொண்டு விட்டுடுவா. இவங்கம்மா, தங்கச்சி எல்லாம் போறாங்க...”

“தபாரும்மா, ரா ஆட்டத்துக் கெல்லாம் போகக் கூடாது... அவ்வளவுதா நாஞ் சொல்லுவே...”

“ஏம் போகக் கூடாது! காசொண்ணும் செலவில்ல... பாஸு இருக்கு...”

“சுகந்தி, காசுக்காகச் சொல்லல. காசு தொலஞ்சாக் கூட சம்பாதிக்கலாம். நல்ல பேரு முக்கியம்.”

அவன் தடுத்து விட்டான்.

சுகந்தி முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு போகிறாள்.

அத்தியாயம் - 12

“இதுவா வங்கில குடுத்தாங்க? பெரியவரே, பாரும், வேற இருக்கும். இது ரசீதில்ல...?”

முருகேசு விதிர் விதிர்க்க விழிக்கிறான்.

“இது வங்கி ரசீதில்ல? இதுதா அந்தப்பய குடுத்தான்? பத்திரமாக அந்தப் பைக்குள் வைத்துப் பெட்டிக்குள் தான் வைத்திருந்தான்...!”

“இது சும்மா எதோ போஸ்டாபீசு ரசீது, முத்திரையிருக்குப் பாரும்?”

முருகேசுவுக்கு அன்று தோட்டத்தில் வேலையில்லை. பச்சைவேலு ஊரில் இருக்கிறான். ஆனால் இவன் கண்களில் தென்படாமல், சுகந்தியுடன் குலாவி விட்டுப் போகிறான் என்பது புரிந்து போகிறது. இவன் சொன்னாலும் கேட்காமல் சினிமாவுக்குப் போய் வருகிறாள். கையில் கொஞ்சம் காசை வைத்துக் கொண்டு, பையனை இழுத்துச் சென்று அவளுக்கு ஒரு முடி போட்டு விட வேண்டும்...

இந்தத் தீர்மானத்துடன் அவன் தாயகம் திரும்புவோர் அலுவலகத்தில் குந்தியிருக்கும் பழனிவேலுவிடம் அந்த ரசீதைக் கொடுத்து மேலே ஒரு ஐநூறு பணம் எடுக்க வேண்டும் என்று கோருகிறான்.

அவன் இந்த ரசீது வங்கி ரசீதே இல்லை, என்று நம்பிக்கை வேரைச் சரக்கென்று வெட்டிப் போட்டு விட்டானே?

அலையக் குலைய வீட்டுக்கு வந்து பெட்டியைத் திறக்கிறான். அதில் சுகந்தியின் சீலைகள் ஜாக்கெட் தவிர, தனது சாமான் என்று வைத்திருக்கும் பையை எடுக்கிறான். பைக்குள்... குமரு விட்டுப் போன அந்தக் குழந்தை ஃபிராக்... பிளாஸ்டிக் உறையில் போட்டோ படம், மற்றும் அத்தாட்சிச் சான்றுகள், பாஸ்போர்ட் - வேறு காகிதமே இல்லையே?

இவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது, பச்சை வேலு கொண்டு வந்து கொடுத்த ரசீது இதுதான்...

மறுபடியும் ஓடுகிறான், பையையே தூக்கிக் கொண்டு.

பழனி எல்லாவற்றையும் பார்த்து விட்டு மீண்டும் பையில் போடுகிறான்.

“இது வங்கி ரசீது இல்ல. எத்தனை ரூபா பெருமான உருப்படி, யாரிட்ட குடுத்தீங்க?...”

முருகேசு அழாக்குறையாகச் சொல்கிறான்.

“யாரு, பச்ச வேலு?...”

“வரிவரியா, துண்டு தலையில கட்டிட்டு, லொரி ஓட்டுறா... அவனும் இலங்கைப் பய்யன்தா, ஒறவுகாரங்கதா, நாங்க இங்க வந்து எறங்கினப்ப, அவந்தா எல்லா ஒத்தாசையும் பண்ணினா, எங்க புள்ளக்கி, மொறக்கார...”

“அதென்னமோ, ஆனா, இது வங்கி ரசீது இல்ல...”

ஒருக்க, அவனே மறந்து போயி அத்த வச்சிட்டு அவனே ஞாபக மறதியில இதைக் குடுத்திட்டானா?...

வீட்டுக்குச் சென்றதும் சுகந்தியிடம் கேட்கிறான்.

“அம்மாளம், இது என்ன ரசீது... பாத்து சொல்லு?”

வெங்காயக் கையைத் துடைத்துக் கொண்டு வந்து பார்க்கிறாள் அவள்.

அவளுக்கு எதுவும் புரியத்தானில்லை.

“இத பாரு, அந்தப்பய மூணு பவன் அட்டியலக் கொண்டிட்டுப் போயி வங்கில வச்சிருக்கேன்னு இத்தக் கொண்டாந்து குடுத்தா. இவம் பேச்ச நம்பி மூவாயிரம் ரூவாய எவங்கிட்டயோ தூக்கிக் குடுத்தேன். எம்புத்தியச் செருப்பாலடிக்கணும், ரோக்கியமான பயன்னு நினச்சா... இப்பிடி ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிருக்கிறா! என் கண்ணில படாம இங்க வந்திட்டுப் போயிட்டிருக்கிறான்?...”

அவளுக்கு விருவிரென்று முகத்தில் சூடேறுகிறது.

“அதெல்லா ஒண்ணுமில்ல. இப்பிடி ரூவாயக் குடுத்துக் காணாம போயிடிச்சேன்னு நெதம் சொல்றாரு. மதராசி வரயிலும் போயிப் புடிச்சிரலாம்னுதா இன்னமும் சொல்றாரு. அதனால உங்க முகத்தில முழுக்கவே எப்பிடியோ சங்கடப்பட்டுக் கிட்டு இருக்காரு. மைத்தபடி ஒண்ணில்ல. நமக்கு மட்டுமா? ஆயிரக்கணக்கான சனங்களும் குடுத்திருக்கா...”

பரிந்து கொண்டு வருகிறாள்; சரிதான். “ஆனால் இந்த ரசீது... இத்த ஏன் ஏமாத்திருக்கிறான்?”

“அவுரு ஒண்ணும் ஏமாத்தரவரு இல்ல. நீங்க, சடயம்மா சடயம்மான்னு அல்லாம் ஒண்ணாப் பாவிச்சீங்க. அவங்ககிட்ட எங்கனாலும் போயிடுச்சோ என்னமோ?...”

இவனுக்குக் கடுகடுவென்று பேச நா துடிக்கிறது.

அழுத்திக் கொள்கிறான். சடயம்மாவின் குடும்பம், நாதியின்றி, காற்றில் பறக்கும் பஞ்சுப் பிசிறுகளைப் போல் தலையில் மூட்டை முடிச்சுக்களுடன், பசிய மலைச்சரிவுகளின் இடையே எங்களுக்கு வாழ்வில்லை என்று நடந்து போன காட்சி நெஞ்சில் சூடு போட்டாற்போல் பதிகிறது.

“மேலுக்கு முடியாம மாமி படுத்திருக்காவ. ரொட்டியும் தேத்தண்ணியும் இந்தாரும் மாமு?” என்று சிரித்துக் கொண்டு அந்தச் சிறுமி ரொட்டியும் துவையலும் வைத்த காட்சியை விட, பசி நேரத்தின் அந்த உணவின் ருசி ஈரேழு சன்மத்துக்கும் நினைவிருக்க வேண்டுமே?

சுகந்திப் பொண்ணுக்கும் இவனுக்குமுள்ள தொடர்பில் அத்தகைய கசிவே தோன்றவில்லை. இப்போது அது கட்டாந்தரை வெடிப்பாக இருவரையும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாத இலக்குகளில் விலக்குகிறது.

அன்று மாலை வேலை முடிந்து, முருகேசு மெள்ள நடந்து வருகையில், வழக்கம் போல் சாராயக்கடை வாசலில் முகம் புரியாத கும்பல் மொய்த்திருக்கிறது. இவன் கண்கள் சட்டென்று பச்சை வேலுவின் தலைக்கட்டை இனம் கண்டு கொள்கிறது.

இடையே புகுந்து சட்டையைப் பற்றி இழுக்கிறான். பளாரென்று கன்னத்தில் விடுகிறான்.

“அயோக்கியப் பயலே? எங்கலே ரசீது? பொய்யா ஒரு கடிதாசித் துண்டக் குடுத்து ஏமாத்திப்பிட்டுத் தலை மறவாப் பதுங்கறே?...”

ஏமாற்றங்கள் இழப்புக்களில் கிளர்ந்தெழும் ஆற்றாமை வெறியனாகவே அவனை ஆட்டுகிறது. சாராயக் கடை வாசலில் கூட்டம் கூடிவிடுகிறது.

“ஏ...ய்யா? ஏய்யா போட்டு அடிக்கிற?...என்ன?”

“பொய் ரசீதக் குடுத்துப் போட்டு வங்கில குடுத்ததுன்னு ஏமாத்திப் போட்டான்? கயவாளி... ராஸ்கோல்!”

பச்சைவேலுவோ, “அடிக்காதீம்; அடிக்காதீம் மாமா...” என்று கைகளினால் தடுத்துக் கொண்டு பரிதாபமான குரலில் அழுகிறான்.

“நா... ஏமாத்துறவ இல்ல. மானம் மரியாதி உள்ளவ மாமு...”

“மானமென்ன மானம்? என்னிக்குப் பெறந்த பூமி, பெறந்த தாய் மண்ண வுட்டு நவுந்தமோ அன்னக்கே அந்த மானம் போயிட்டதுலே, வவுறு எரியிது... எரியுதுலே...”

“மாமு, தப்புதா... சத்தம் போடாம வாருங்க, வெவரமாச் சொல்லுற...”

“நா என்னல இன்னும் சத்தம் போடாம வார, நீ சொல்ல? மாசக்கணக்கா, நீ எங்கண்ணில படாம நழுவிட்டிருக்கிற! ஏண்டா நழுவணும், நேர்மயா இருக்கிறவனா இருந்தா? ஏங்கிட்ட உருப்படிய வாங்கி அடமானம் வச்சிட்டு ரூபா கொண்டாந்து தந்த. ரசீதுன்னு ஒண்ணும் குடுத்த. இப்ப பாத்தா அது என்னமோ காயிதம்...”

“மாமு... ஒங்கக்கு இந்த வயிசில கையில இவ்வளவு பெலமிருக்கி!”

“இருக்குண்டா... கயவாளி ராஸ்கோல், என்ன நீ ஏமாத்துற? ஒம் பேச்சக் கேட்டு, மூவாயிரத்தக் கொண்டு எவங்கிட்டியோ தூக்கிக் குடுத்து அம்புட்டும் போச்சி...”

“மாமா மன்னிச்சிக்குங்க... அது நீங்க மட்டுமில்ல. எல்லாரும் குடுத்திருக்கா....இப்ப, நா வந்து, வங்கில கூடுதல் வட்டி யாவும்னு, தெரிஞ்ச எடத்துல குடுத்துப் பணம் வாங்கிட்டு வந்தே. அவவும் ஸ்லோன் காரவுகதா, உருப்படி நம்பகமா இருக்கு. பணம் கெட்டிட்டா, வந்திடும்...”

“பச்சவேலு, எனக்குள்ளாற இப்ப ஒரு காளவாயி எரியிது. அடுப்பாளா இருந்திருக்கிற. அப்பக் கூட நெருப்பு உறச்சதில்ல. இப்ப வேவுது. இத்தவுட, அன்னைக்கு நாங்க இந்த மண்ணு பச்சைன்னு வந்து எறங்கினப்ப, அது இல்லேன்னு அப்பமே உறச்சிருக்கும், நீ வந்து மாமுன்னு ஒறவு கொண்டாடிட்டு வர இல்லேன்னா ஒரேயடியா எங்கனாலும் போயிக் கசத்துல வுழுந்திருப்போம். ஊரு பேரு தெரிஞ்சி, நம்பிக்கை குடுத்து, துரோவம் பண்ணிருக்கிற நீ! ஏன்ல...?”

“மாமா, துரோவம் இல்ல சத்தியமா...”

“சத்தியத்தை எச்சில்ல பெரட்டாத, உருப்படிய இப்ப நீ எங்க வச்சிருக்கிறன்னு சொல்லணும், காட்டணும்...”

இவர்கள் சண்டை அங்கே பழனி வேலுவைத் தள்ளி வருகிறது.

தாயகம் திரும்புவோர் சங்கத்தில் இது வங்கி ரசீதில்லை, என்று சொன்ன அதே படித்த ஆள்.

“இவந்தானா, பெரியவரே?...”

“ஆமாம் தம்பி...”

“என்னாடா பச்சை? என்னா விசயம்?”

பச்சை அழுது கொண்டே சொல்கிறான். “அண்ணே, நா நிசமா ஏமாத்தணும்னு செய்ய இல்ல... உருப்படி இ.எஸ்.எம். அண்ணாச்சி கிட்டதா வச்சிட்டே. எழுநூத்தம்பது வாங்கின. அடுத்த மாசம் குடுத்திடறே...”

“அஞ்சு நூறு எனக்குக் குடுத்தான். இப்ப ஏழுநூறுன்னு சொல்றா. எது நிசமோ, முருகனுக்குத்தா வெளிச்சம்!”

“இதபாருங்க, இப்ப நடு வீதில அடிச்சிட்டா, எவனாலும் பொலீசைக் கூட்டிட்டு வருவான். ஸ்லோன் ஆளுங்களே மிச்சம் குடிச்சிட்டுக் குழப்பம் பண்றானுவன்னு கூட்டிப் போய் அடிப்பான்!...”

இவர்களை விலக்கி அவன் கூட்டிப் போகிறான்.

“உங்க உருப்படி என்ன ஆச்சின்னு நான் பார்த்துச் சொல்றே. கவலப்படாம போங்க...! இவந்தான?...”

வீட்டுக்கு ஓர் ஆறுதலுடன் வருகிறான். வீட்டில் சுகந்தி இல்லை. பார்வதி வீட்டாருடன் சினிமாவுக்குப் போயிருக்கிறாள். இனி பத்தடித்த பின் இருளிலும் குளிரிலும் வருவாள்...

கிழவி சாவியைக் கொடுத்து விட்டு சில பல கொச்சைகளால் மொத்தமாகத் திட்டிக் காரி உமிழ்கிறாள்.

இவன் கைப்பட்டுப் பூமித்தாய் வஞ்சனை செய்ததே இல்லை. கிழங்குத் தோட்டம், பொங்கிப் பூரிக்க ஒரே வரிசையாகப் பச்சை விரிந்திருக்கிறது. மண் கட்டி, கிளைத்துவிடும் வேரில் கிழங்குகளுக்கு ஊட்டமாக அணைத்துக் கொடுக்கிறான். புண்ணான இதயத்துக்கு, இந்த பூமிக் கொஞ்சல் தான் இதமாக இருக்கிறது. தேயிலைப் பச்சையைக் காட்டிலும் கிழங்குப் பச்சை பசி அவிக்கும் பச்சை. எத்தனை குவித்தாலும் தேயிலையைத் தின்று பசியாற முடியாது. அந்த மண் விரட்டி விட்டது. இது... இந்த மண்ணில், வீட்டுக்கடன் மூவாயிரம் வந்ததும், ஒரு குடிசை போட்டுக் கொண்டு,...சுகந்தி கலியாணத்தை முடித்து விட்டு... அவ்வளவுதானா? அவ்வளவுதானா?

இல்லை... குமருவை ஒரு முறை பார்க்க வேணும். அவன் குழந்தை மதறாசில் இருக்கிறது. அதை மார்போடு தழுவிக் கொண்டு, அது தாத்தா என்று தேன் பிலிற்றுவதைச் செவிமடுத்து... “உங்க பாட்டி, பூட்டி பெத்த மண்ணை உதறிட்டுப் போனா; அதன் பலன், அந்தப் பாவம், அவ பரம்பரையே அல்லாடுது. தாய் மடியை உதாசீனம் செய்யலாமா? தாய் தகப்பன்கிட்ட நாயம் கிடைக்கலேன்னா உரிமையோட சண்ட போடலாம், போராடலாம், அதுக்காவ விட்டுப் போட்டுப் போகலாமா? தாயே குடுக்காதத, மத்தவ குடுப்பாளான்னு நினைக்கணும்...” வார்த்தைகள் முண முணப்பாக உயிர்க்கின்றன.

இடையில் நான்கு மாசக் குழந்தையைச் சுமந்து கொண்டு புருசனுடனும் கங்காணியுடனும் அநுராதபுரக் காடுகளில் எறும்புக் கும்பல் போல் சென்ற கும்பலில் ஒருத்தியான தாயையும் தந்தையையும் இன்று நொந்து கொள்கிறான். கட்டின புருசனும், கைக்குழந்தையும் வழியிலேயே மரித்த பின், வேறு ஒருவனைக் கட்டி, அங்கே குடும்பம் பெருக்கினாள்... இரண்டு துரோகங்கள்...

முருகா... என் ஆத்தாளை நான் தப்பாக நினைக்கிறேன். மன்னிச்சிடு. நா யாருக்கும் துரோகம் நினைக்கல. புள்ளயள நல்லா வய்யி!...

சற்று முன் பளிச்சென்று சிரித்த வானில் கருமேகம் மூடிக் கொள்ள, பள்ளத்தில் கரும்புகையாக அந்த மஞ்சு கவிந்து கொண்டு பசுமை, மேடு பள்ளம், சாலை, எல்லாவற்றையும் மறைக்கிறது.

தொலைவில் ஒரு மணிச்சங்கு இலேசாக இழைவது போல் செவிகளில் படுகிறது.

மண்வெட்டியைக் கொண்டு கிடங்கறைப் பக்கம் போட்டுவிட்டு, சாலையில் நடந்து டீக்கடைக்கு வருகிறான்.

டீக்கடை வாசலில், குழந்தைவேலுவும், இன்னும் சில ஆட்களும் இருக்கின்றனர்.

“தம்பி, சவுக்கியமா?... நல்லாருக்கீங்களா?...”

“நீங்க முருகேசு இல்ல...? பொட்டம்மா வீட்டு ஷெட்டில தங்கிட்டு, ராமசாமி வூட்டுக்கு அடுத்தாப்பில இருக்கிறீங்கல்ல?...”

“ஆமா, காபகம் வச்சிருக்க.”

“நீங்களும் சிரீலங்கா பைனான்சில பணம் போட்டீங்க தான?”

“ஆமா, மூவாயிரம். மண்டபத்துல குடுத்த டிராஃப்ட மாத்தி அப்பிடியே குடுத்தே...”

“இப்ப கேசு எடுத்திட்டுப் போறம். நீங்களும், சாங்காலமா ஆபீசுக்கு வந்து, எழுதிக் குடுங்க?...”

“லோனு... அது எப்ப வரும்...?”

“வூட்டு லோனா?... போகணும், ஊட்டிக்கிப் போயி, கலக்டரப் பாக்கணும். எங்க... பாத்தா, இப்ப ஆச்சி, அப்ப ஆச்சிங்கறா. அந்த காலனில, தண்ணி இல்லாம என்ன செரமப்படுறா? நேத்து ஒரு புள்ள சருக்கி வுழுந்து எலும்பு ஒடஞ்சி அசுபத்திரில போட்டிருக்கு... ஒரு குழாய் வச்சித்தரணும்னு மனுக் குடுத்து ஒரு வருசமாகப் போவுது. ஒண்ணும் நடக்க இல்ல... நீங்க வாங்க...!”

பழனி வேலுவைப் பற்றி விசாரிக்கத் தோன்றுகிறது. மாலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று விடுகிறான்.

ஒரு பன்னையும் தேநீரையும் வாங்கி வைத்துக் கொண்டு, அநுபவித்து அருந்துகிறான்.

“இங்கவுட, கூடலூர் பக்கந்தா, வியாபாரம் உள்ள எடம். ஒரு செமை தூக்கின்னாலும் பொழக்கலாம். காபித் தோட்டம் மிச்சம் இருக்கு. குளுரு இம்புட்டு இல்ல. எப்படின்னாலும் பொழக்க முடியும். காடுங்கள்ள, வெறவு வெட்டிட்டு வந்து கூடப் பிழக்க முடியும்...”

என்று அவர்களில் ஒருவன் சொல்கிறான். மரம் அறுக்கும் தொழிலாளிகள்...

“எட்டுப் பேரு... ஒருத்தன் வேலை செஞ்சி பிழக்கிறது எப்படி? அங்க போனா, பொண்டுவளுக்கு, சல்லிசா தோட்டங்கள்ள வேலை கிடைக்கும்னு சொல்றா. ஒரு பலகாரம் போட்டு வித்தாக்கூடப் பொழக்கலாமாம்!”

தேநீரை உறிஞ்சி விட்டு ஒருவன் குரலை இறக்குகிறான்.

“மிச்சம் சங்கடமா இருக்கு. பொம்பிளக,...தெரியுமில்ல சடாச்சரத்தும் பொம்பிள, மூணு பொண்ணுக... இதா அவளுகளத் தட்டிக் கேக்க முடியல. சூடுசொரண உள்ள ஆம்பிளகதா, பாத்திட்டிருக்கிறம்...”

முருகேசுவுக்கு மூளை நரம்புகளில் சுரீர் சுரீரென்று ஊசிகள் குத்தினாற்போல் அந்தக் குரலின் உட்பொருள் உறைக்கிறது.

பசி வந்து விடப் பத்தும் பறந்து போகுமாம்... இனி, பறக்க ஏதேனும் மனிதனிடம் இருக்கிறதா?

மாலையில் அலுவலகத்தில் பழனியும் இருக்கிறான்.

அங்கே கட்டாகச் சிறு புத்தகங்கள் வந்து கிடக்கின்றன. ஒரு புத்தகத்தைத் திருப்பிப் பார்க்கிறான்... ஒன்றும் புரியவில்லை. துப்பாக்கியை நீட்டிக் கொண்டு, ஒரு தமிழ்ப் படையாளி நிற்கும் பொம்மை மட்டும், அது ஈழம் சம்பந்தப்பட்டது என்று புரிகிறது.

“இதெல்லாம் என்ன பொஸ்தகம் தம்பி?...”

“...எல்லாம் நம்ம பிரச்சின தா. திம்பு பேச்சுவார்த்தை நடக்குதில்ல? அதில, நம்ம தோட்டத் தொழிலாளிகளுக்கு முக்கியத்துவம் குடுக்க இல்லன்னு எழுதியிருக்கா. நம்ம லச்ச லச்சமா வந்து சாவுறோம். ஆனா, நம்ம பிரச்சின யாருக்கும் பெரிசாப் படலன்னு எழுதியிருக்கா. என்ன பிரேசனம்? இங்க நூத்துக்குத் தொண்ணுத் தெட்டாளுவளுக்கு இந்தப் பிரக்ஞையே இல்ல...”

“இதாரு தம்பி புத்தகம் போட்டிருக்கா?...”

“நம்ம ஆளுதா, குமார வேலன்னு...”

அதற்கு மேல் என்ன சொன்னான் என்று புரியவில்லை.

முருகனுக்குப் பாலபிஷேகம் செய்து, பார்த்தாற்போல் குளிர்ந்து போகிறான். பூரித்து, இதமான வெம்மையில் மகிழ்ந்து போகிறான். சொல்லத் தெரியாத சுகம் நாடி நரம்புகளிலெல்லாம் பாய்கிறது.

“அவ... இந்தியாவில இருக்காரா, அங்கியா?”

“அங்க இங்க போவாரு, இங்கயும் கூட வருவா. இதுதா முதல்ல புஸ்தகம் போட்டிருக்காரு, இது மட்றாசில அச்சாகி வந்திருக்கு...”

“குடும்பம், சம்சாரமெல்லாம்...?”

“சம்சாரமும் படிச்சவங்க, தமிழர் பொண்ணு. அவங்க தா, தோட்டத் தொழிலாளிப் பெண்களுக்காகப் பாடுபட்டிருந்தா. இப்ப, அவங்க இயக்கத்தில இருக்காங்க... தோட்ட ஆளுங்களுக்கும் நாயம் கிடைக்கணும்ங்கற பக்கம் தா அவங்களும். இப்ப தலைமறவா இருக்கிறதாக் கேள்வி...”

“குளந்தங்க இல்ல...?”

“அவங்க சனங்க மட்றாசில வந்திருக்கா. ஒரு பிள்ளை அங்க இருக்குன்னு சொல்லிட்டா...”

மூன்றாம் மனிதர் மூலமாக அவன் கேட்கிறான்.

எத்தகைய பெருமை!... என் மகன்... என் மகன்...

அவனைத் தன் மகன் என்று சொல்லிக் கொண்டால், இந்தப் பழனி ஒப்புவானோ?

“என்ன பெரியவரே? நா கூடலூருப் பக்கம் போற. ஞாயித்துக்கிழம, வாரீங்களா? உருப்படி அங்கதா இருக்கு.”

கண்களில் கசிவைத் துடைத்துக் கொண்டு சட்டென்று நிமிருகிறான்.

“ஆமா, அத்த... ஒரு கிரயத்துக்குக் குடுத்துப் போட்டு, கடன் போனதும் இருக்கிறத வச்சி, ஒரு கலியாணத்தக் கட்டி வச்சிடலாம்... வார...”

வீட்டுக்குச் சென்றதும் பெட்டியைத் திறந்து, பைக்குள் பத்திரமாக இருக்கும் அந்த வழுவழுத்த சந்தன வண்ணப் பிள்ளைக் கவுனைத் தன் கையினால் தடவுகிறான். புல்லரிக்கிறது. கன்றுக் குட்டியின் மேனியைப் போல் அவன் தளர்ந்த மேனி சிலிர்த்துப் போகிறது.

அத்தியாயம் - 13

“அம்மா, புள்ள தனிச்சிருப்பா, செத்தப் பாத்துக்கும்... அம்மாளம், ராவிக்கு ஒருக்க வரமுடியாமப் போயிட்டுதுன்னா, பாட்டி துணைக்குப் படுத்துக்கும். பதனமாயிருந்துக்க...”

வீட்டுக்காரக் கிழவியிடமும் சொல்லி சுகந்திக்கும் மென்மையாக அறிவுறுத்துகிறான் முருகேசு...

சுகந்தி முகம் மலர்ந்து தலை ஆட்டுகிறாள்.

பார்வதி வீட்டாரின் சிநேகத்தில், பை போட்டுக் கொடுப்பதில் கையில் இரண்டு மூன்று சேர்ந்திருக்கிறது. பளிச்சென்று சிலைடு, ரிப்பன், சோப்பு என்று வாங்கிக் கொண்டிருக்கிறாள். அந்த சிநேகம் வரம்பு மீறி விடக் கூடாது என்று தான் இப்போது போகிறான். ஏறக்குறைய நாலு சவரன் உருப்படி நாலாயிரத்துக்குப் போகும் என்று பழனி சொல்கிறான். கடனும் வட்டியும் போக மூவாயிரம் தேறும். கல்யாணம் கட்டி விட வேண்டும்.

விடியற் காலையில் இருள் பிரியுமுன் பழனி ஏதோ ஒரு லாரியில் தான் இவனை இட்டுப் போகிறான் ஒத்தைக்கு. சாரல் ஈரம் இன்னமும் பூமியில் உலர்ந்து விடவில்லை. குளிருக்கு ஒரு தேநீர் வாங்கித் தருகிறான். இதமாக இருக்கிறது.

கைச்செலவுக்குப் பதினைந்து ரூபாய் வைத்துக் கொண்டிருக்கிறான்.

லாரி, இருள் பிரிந்தும் பிரியாமலும் இருக்கு நேரத்தில் ஒத்தை பஸ் நிறுத்தத்தில், கொண்டு விட்டு விடுகிறது.

நகரத்துக்கே உரிய சுறுசுறுப்பும் கலகலப்பும் அப்போதே அங்கு துவங்கி விட்டது. கோழிக்கோடு, குருவாயூர், பாலக்காடு என்று குரல் கொடுத்துக் கொண்டு ஆட்கள் விரைகிறார்கள். கம்பளி உடுப்புக்களும், பெட்டி கூடைகளுமாகப் பல்வேறு வண்ணங்களாகப் பயணிகள் வண்டிகளின் உறுமல் ஓசைகள்... பெட்டிக் கடைகளில் சுறுசுறுப்பான காபி, தேநீர் வியாபாரம்...

முருகேசு பந்தய மைதானத்தைச் சுற்றிச் செல்லும் பாதையையும், எதிரே இருக்கும் சரிந்த மலைத் தொடரில் வெண்மையும் கோபியும், சிமிட்டி வண்ணமுகமாகத் தெரியும் வீடுகளையும் பார்த்தவாறு நிற்கிறான்.

தனம் அங்கேதான் ஒரு வீட்டில் இருக்கிறது. பார்க்க நேரமில்லை. இப்போது கோபம் ஆறி, சகசமாக இருக்குமோ?

திங்களன்று ஒரு வேளை வர இயலுமோ இயலாதோ என்று மேஸ்திரியிடம் சொல்லியிருக்கிறான். ஆனால், இன்னமும் மண்கட்டும் வேலை பாக்கி இருப்பதால், முடித்துவிட்டுப்போ என்று தான் சொன்னார். பழனி இன்றே புறப்படுவதாகச் சொன்னதால், தட்ட முடியவில்லை...

“எங்க பாத்துட்டு நிக்கிறீங்க? ஏறுங்க! இதா கூடலூரு பஸ்!”

‘முருகா!’ என்று முணமுணத்தபடியே, ஓடி வந்து பஸ்ஸில் ஏறுகிறான்.

பஸ் நகரத் தொடங்கியதும் அயர்வு மறந்து போகிறது. வளைந்து வளைந்து, நகரின் சந்தடிகளைக் கடந்து, கட்டிடங்களை, தொழிலகங்களைக் கடந்து நெடிய கர்ப்பூரமரச் சோலைகளுக்கிடையே ஊர்தி செல்கிறது.

பச்சைத் தேயிலையின் மணம் கம்மென்று நாசியில் படும்போது, பழைய வாழ்வை அது புரட்டிக் கொடுக்கிறது. கவ்வாத்துக் கத்தி பிடித்துக் காய்த்துப் போன கைகளை ஒன்றன் மீது ஒன்றாக வைத்துக் கொள்கிறான்...

காடுகள், பசுமையான சமவெளி போன்ற பரப்புக்கள், ஏற்ற இறக்கங்கள், கடந்து, லாரிகளும் பஸ்களும் நிறைந்து தூசிபரப்பும் நெருக்கடியான சாலைச் சந்தியில் வந்து அவர்கள் இறங்குகிறார்கள். லுங்கியும், தலைக்கட்டும் தாடியுமாக கேரளத்து முகமதியர் பேசும் மலையாள மொழி செவிகளை நிறைக்கிறது. வாழைத்தார்களும், தேங்காயும் வந்து இறங்கும் மண்டிகள்...

பழனி அவன் பின் தொடர, கையில் அந்தப் புத்தகக் கட்டுடன் புகுந்து செல்கிறான். வழியில் பலர் அவனை முகமன் கூறி விசாரிக்கின்றனர். வெற்றிலை பாக்குக் கடையில் பச்சைப் பாக்கு கொட்டிக் கிடக்கிறது. வெற்றிலை புகையிலை மறந்து விட்டது. பீடி மட்டுமே இப்போது அவனுக்கு எஞ்சியிருக்கும் சஞ்சீவி... பாக்கு மரங்களடியில் கொட்டிக் கிடக்கும் அடைக்காய்... அந்நாட்களில், அப்படியே விலை கொடுப்பதானாலும் இருபது சதத்துக்கு, நூறு போல் கிடைக்கும்.

சுள்ளென்று வெயில் உறைக்க, வியர்வையும் கசகசக்கிறது.

“ஏதானும் சாப்பிட்டுப்போவம், வாங்க...!”

சற்றுத் தள்ளி, மலையாளத்தார் கடை ஒன்றில் படி ஏறுகின்றனர். முருகேசனுக்கு நல்ல பசி. இட்டிலியும் சாம்பாரும் காபியும் கைப்பணத்தைக் கரைக்கும் உணர்வைக் கொண்டு வரவில்லை.

ஒரு மலையாளத்துப் பெண் எட்டிப் பார்க்கிறாள். “சேட்டன் எப்ப வந்தது?”

“ஓ... ஆறுமுகத்தைத்தான் தேடிட்டு வந்தேன். வீட்டில இருக்காரா?”

“தேவலா போயி...”

“எப்ப வருவார்...?”

“ஒண்ணும் சொல்லிட்டில்ல. எதோ கேசாண. நேத்து ராத்ரி ஒரு மணிக்கு வந்து, காலம திரிச்சிப் போயி...”

“அப்ப, நான் ராசு கடையில இருக்கிறேன். வந்தா வரச் சொல்லணும்...”

அவள் தலையை ஆட்டுகிறாள்.

“வாங்க. ஆறுமுகம் வர வரையிலும் அங்க இருப்போம்...”

“அவருகிட்டதா... உருப்படி இருக்கா?”

“ஆமான்னு சொன்னா. இந்தாளு, எழுபதுல ஸ்லோன் விட்டு வந்தவரு. ஓட்டல்ல தண்ணி எடுத்திட்டிருந்தாரு. பின்ன கொஞ்சம் கொஞ்சமா சரக்கு புடிச்சி, சிறுசிறு வியாபாரம் பண்ணினாரு, இன்னிக்கு ரெண்டு லாரி வாங்கி ஓட்டுறா. இந்தப் பொண்ணக் கட்டி ரெண்டு புள்ள, வீடு எல்லாம் வசதியாயிருக்காரு, அவுருதா இப்பிடி நம்ம ஆளுங்களுக்கு ரொம்ப வட்டி இல்லாம ஒத்தாசை, பண்ணுறாரு...”

வெயில் விழாமல் சாக்குப் படுதா பாதியை மறைக்கும் மளிகைக் கடை. மூட்டைகளின் நடுவே புகுந்து பழனி பின்புறம் ஓர் அறைக்குக் கூட்டிச் செல்கிறான். அங்கே சிலர், ஒரு நெருக்கமான கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருக்கின்றனர். அறை முழுதும் புத்தகங்கள், பிரசுரங்கள்... பழனி கைக்கட்டை அங்கே ஓரமாக பெஞ்சியில் வைக்கிறான்.

“பேச்சு வார்த்தையாவது, மண்ணாங்கட்டியாவது? சும்மா கண் துடைப்பு. பேச்சு வார்த்தைன்னு சொல்லிட்டு அவன் இன்னும் தமிழ் மக்களை வேரோடு அழிக்கத் திட்டம் போட்டுச் சுட்டுக் கொல்லுறான். இன்னும், கொரியா, பாகிஸ்தான் அங்க இங்க ஆளுங்கிள அனுப்பிப் பயிற்சி குடுக்கறான்; மூக்குமுட்ட ஆயுதம் வாங்கி நிரச்சிருக்கிறான். பேச்சு வார்த்தைங்கற கண் துடைப்பு அவனுவளுக்குத் தான் சாதகம்...”

சிவப்பாக, ஒல்லியாக இருக்கும் ஓர் ஆள், சிறுவயசுக்காரன். சூடாகப் பேசுகிறான்.

நரைத்தலையும் மூக்குக் கண்ணாடியுமாக நன்கு படித்த அறிவாளி போல் தோன்றும் ஒருவர், “ஏம்ப்பா, பழனி வேல்? சிரீலங்கா பைனான்ஸ் பய அம்புட்டானா?” என்று விசாரிக்கிறார்.

“ஹம்... எல்லாம் அம்புட்டதச் சுருட்டிட்டு ஓடிட்டானுவ. கேவுறுல நெய் ஒழுவுதுன்னா கேக்கிறவனுக்குப் புத்தி இல்ல? ரெண்டே மாசத்தில ரெண்டாயிரம் பத்தாயிரமாவும்னா, எப்பிடின்னு யோசிக்க வாணாம்?...”

“தொழில் - உற்பத்தி, அதனால ஒரு மதிப்புன்னு நினைச்சித்தான் நாங்கூட ஒரு அஞ்சு நூறு போட்டேன். மாஸ்டர் வரணும்னு கூப்பிட்டா, ரெண்டு கூட்டத்துக்குப் போனேன். அதிகார பதவி, அரசு சார்ந்தவர்களெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கான்னு நினச்சோம் பாவம் இங்க, காது மூக்குத் திருகாணி எல்லாம் வித்துக் குடுத்திச்சு பொம்பிளங்க... சே!...”

“இங்க நம்மப்போல வந்தவ அத்தினி பேரும் கரையில எறங்கின உடனயே வெளுத்தது பால்னு நினைச்சா ஏமாந்திடுவோம்னு தெரிஞ்சிக்கிறோம். அப்ப, சாக்கிரதயா இருக்கணும்ல? நாங்க மாட்டும் ரொம்பப் பேருக்கு எச்சரிச்சோம். ஆனா, எங்க கேட்டாங்க? இதா, இந்தப் பெரியவரு, கடோசில, மூவாயிரத்தைக் குடுத்து ஏமாந்திருக்காரு...”

“எங்கந்து வந்தாரு...?”

முருகேசு சுருக்கமாகத் தன் விவரங்களைச் சொல்கிறான். பையனைப் பற்றிப் பேசாமல், குமரிப் பெண்ணைக் கல்யாணம் கட்ட வேண்டிய அவசியம், பச்சைவேலு நகை வைத்தது, எல்லாம் சொல்லுகிறான்.

“நானு, அங்க பிரஜா உரிமை இருந்திச்சு, நல்ல வசதியா இருந்தேன். ஆனா, இந்தத் தோட்ட ஆளுங்க, தமிழங்களுக்கு நடக்கிற அநியாயம் பொறுக்காம, இந்தியா வந்துடணும்னு வந்தேன். இங்க விசயங்களப் பாத்தா, மனசுக்கு ரொம்பக் கயிஸ்டமா இருக்கு. இனிமேலிக்கு இருக்கிறவங்க, வாராதீங்க, போராடுங்கன்னு சொல்லணும்...” என்று மாஸ்டர் என்றழைக்கப்படும் பெரியவர் கூறுகிறார்.

“மாஸ்டர், சிரிமாவோ சாஸ்திரி ஒப்பந்தமே தப்பு. லட்சலட்சமா ரத்தத்தைக் குடுத்துக் காடுமேடு திருத்தினாங்க. பச்சைப் பொன்னா வாரிக்குடுத்தாங்க, அவங்களுக்கு அங்க பிரஜா உரிமை இல்லைன்னு 48ல வாய்ப்பூட்டுப் போட்ட போது, எல்லாம் என்ன செஞ்சா? ஒப்பந்தம் பண்ணிட்டாங்களே, ரெண்டு தலைவர்களும், நாமென்ன ஆடா, மாட்டான்னு கேட்டாங்களா? இப்ப மட்டும் என்ன? ஒப்பந்தம் பண்ணிட்டா, அதென்ன, கடவுள் வந்து கையெழுத்துப் போட்டாரா? அப்பிடி தெய்வ சாக்கியா நடக்கிறதயே மீறிடறாங்க. இப்ப இந்த ஒப்பந்தம் செல்லாதுன்னு எத்தினி பேரு எந்திரிச்சோம்?...”

பழனி கேட்கிறான்.

“நீங்க ஆதிலேந்து நினச்சிப்பாருங்க, சரித்திரத்த, சிரீலங்கா அரசு, தமிழர் பிரச்னையை எப்படித் தீர்க்க முயற்சி பண்ணிருக்குன்னு தெரியும்... ஆதியில, இலங்கை, சுதந்தரமடஞ்சதும், அரசியல் மந்திரி சபையில் யாழ்ப்பாணத்தார் இடம் பெற்றிருந்த போதுதான், இந்தியத் தமிழர் குடியுரிமை இல்லாதவர்களாக ஆனாங்க. இந்திய அரசு, தொழிலாளர் மறுப்புக் கோரிக்கை வச்சதெல்லாம் ஏறக்கட்டி வச்சாங்க. அதே மாதிரித்தா, பின்னால இந்திய வம்சாவளிப் பிரதிநிதி மந்திரி சபையில் இருந்தப்ப, வடகிழக்கு மாகாணங்களில் தமிழர் துன்புறுத்தப் பட்டாங்க. ஆனா, அப்ப, ரெண்டு தமிழ் மக்களும், நம்மச் சேர்ந்தவங்க, ஓரினம்னு நினைக்க இல்ல. அதேசமயம், இவரு மந்திரி சபையில தோட்டத்து மக்களுக்காக எழுப்பின கோரிக்கை எல்லாம் அப்படியே தானிருக்கு. ஆனா, ஒரு தமிழனால் பாதிக்கப்பட்டால், பழிவாங்குவதற்கு மட்டும், சிங்கள அரசு ரெண்டு பேரையும் பிரிச்சிப் பாக்கிறதில்ல...”

“அப்ப, மாஸ்டர், எம்பத்து மூணு கலவரத்தில தோட்டத் தொழிலாளிகளுக்கு சம்பந்த மில்லங்கிறியளா?”

“அடிச்சுச் தள்ளுறபோது, இவன் தோட்டத் தொழிலாளி, இலங்கைத் தமிழன்னு பாக்கலன்னுதா சொன்னனே? இத, இப்ப இவருமக... குடும்பத்தோட, கதிர்காமம் போயி வாரப்ப வண்டில பெட்ரோல் ஊத்திக் கொளுத்தினாங்கன்னு சொன்னாரு. சாமி கும்பிடப் போனவங்க, அவங்க, என்னய்யா அநியாயம் செஞ்சா?... நான் என்ன சொன்னேன்னா, இவங்க, இவ்வளவு கஷ்டப்படுறதுக்கு, தங்க உரிமைகளைக் கோரி அதற்காக உயிரைப் பணயம் வச்சிருந்தா, தீர்வு இருக்கும்ங்கறததா-”

“அது என்னமோ வாஸ்தவம் மாஸ்டர்...”

“எம்பத்து மூணு கலவரம் இங்க இந்தியாவில, எத்தனை பெரிய எழுச்சியைக் காட்டிருக்கு? அரசியல் தலைவர்கள் கண்டனம், பத்திரிகைகள், போஸ்டர்கள், எல்லாம், தமிழன் உரிமை மறுக்கப்படுகிறதுன்னு வந்திச்சு. ஆனா, இதுபோல், இன்னிக்கு ஜயவர்த்தனா ஆட்சியைக் கண்டிக்கும் உணர்வு, அன்னிக்கு இந்தியத் தமிழர் உரிமை பறிபோன போது எத்தினி பேருக்கு இருந்தது? இங்கே இந்திய ஆளுகளுக்கு, நம்ம லட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர், குடியுரிமை இல்லாமல் மனித உரிமைகளே மறுக்கப்படும் நிலையில் இருப்பது பற்றிய உணர்வு இன்றும் இல்லை. பொருளாதார வறுமை, சமூகத்தில் பின் தங்கித் தாழ்த்தப்பட்ட நிலை, இத்துடன், இவர்கள் கையில் உழைத்துச் சேர்த்த காசு அஞ்சு பத்து வச்சிருந்தா, அத்தையும் பிடுங்கிக் கொள்ளும் மோசடி...”

“நீங்க என்ன பெரிசா இந்தியா ஆளுங்களச் சொல்லப் போயிட்டீங்க? நம்ம தோட்டத் தொழிலாளிகளுக்கு இருந்திச்சா?...”

“சும்மா சும்மா தோட்டத் தொழிலாளிக்கு உணர்வு இல்லன்னு சொல்லிப் போடாதீங்க. அவவ அம்பது சதம் அறுபது சதம்னு வாங்குற கூலில, மாசம் முப்பது நாப்பது செலவு பண்ணி புள்ளய எங்கேந்து படிக்கப் போடுவா? பொம்பிளப் புள்ளயக் கட்டிச்சிக் குடுக்கணும். அடுத்தடுத்து நோவு, சீக்கு, வறட்சி, கூலிவெட்டு, கங்காணி கணக்கப்பிள்ளங்களின் தீராத கொடுமை. ஒருத்தருக் கொருத்தன் ஒதவி, எல்லாருக்கும் சேர்ந்து கஷ்டம் வரப்பதா நெனப்பா. தொரப்பிரட்டுன்னு வாரவுந்தா பெரிய கங்காணி ஆடிப்போனா. அதுவரய்க்கும் அவன் தன்னத்தா சீம தொரன்னு நெனச்சா. சொல்லுங்க...”

மூலையில் உட்கார்ந்திருந்த மீசை நரைத்த ஆள் ஒருவர் சட்டென்று தொழிலாளிகளுக்குச் சாதகமாகக் குரல் கொடுக்கிறார்.

முருகேசு அவரை உறுத்துப் பார்க்கிறான்.

“அது சரி, என்னாய்யா புஸ்தகக் கட்டு...?”

“மட்றாசிலேந்து வந்திச்சி. நா படிச்சுப்பாத்தே. இப்ப மாஸ்டர் சொன்ன விசய மெல்லாந்தா, கே.வி. எளுதியிருக்காரு... இதுவரைக்கும். இந்த நோக்குல ஆரும் பேச இல்ல...”

வாசற்பக்கம் புதிய குரல் கேட்கிறது.

“நேத்து ஒரு கேசு. ரெண்டு பொம்பிளங்கள ஃபாரஸ்டு கார்டுங்க கொண்டு போயிக் குலச்சிட்டா. வெறவு வெட்டிட்டு வந்திருக்கு. எப்படியோ தப்பிச்சிட்டு கண்ணுல படாம வந்திருக்கு, பாறமுக்கில வச்சி ஏடாகூடம் பண்ணிப் போட்டானுவ. ஒரு பொண்ணுதா பாடி கெடச்சிச்சி... லபோ திபோன்னு அவ புருசங்காரனும், இன்னொரு பொண்ணோட அப்பனும் வந்து அழுதா... சந்தனக்கட்ட திருடிட்டு வந்தாளுவ, புடிச்சிட்டு வுட்ட. ஆனா அடிச்சிப் போட்டிருக்கும்ங்றானுவ... சந்தேகத்துக்கு இடமில்லாம ரேப்-மர்டர்...”

“ஆரு சம்முவத்தின் குரல் போல இருக்கு?...”

சிவப்பாக நரை கலந்த சுருட்டையுடன் அலைந்து திரிந்து கறுத்த முகமாக ஒரு நடு வயசுக்காரன் உள் வாயிற்படியில் வந்து நின்றான்.

“பழனி வந்திருக்கிறதாச் சொன்னாங்க. என்னப்பா, புதுசா ஆறு குடும்பம் நீலகிரிக்கு வாரதா எட் ஆபிசிலேந்து தகவல் வந்திச்சே? எந்தப் பக்கம் போனாங்க தெரியுமா?”

“ஆறு குடும்பமா? நூறு குடும்பம்னு சொல்லுங்க! அவுங்க பாட்டில தெரிஞ்சும் தெரியாமயும் அங்கங்க வந்து ரோட்டோரமும் காட்டோரமும் அவதிப்படுறாங்க. அங்கயும் டீத்தோட்டம், நமக்குப் போனதும் வேலை தயாரா இருக்கு, அறுபத்தெட்டில மச்சான் போனான், எழுபத் தொண்ணில சகலை போயிருக்கான்னு விவரமில்லாம வந்திடறாங்க, புள்ளக் குட்டியோட, ஒண்ணும் சமாளிக்கிறாப்பில இல்ல...” என்று பழனி அலுத்துக் கொள்கிறான்.

சம்முகத்தின் நெற்றியில் ஆழ்ந்த கீறல்கள் இன்னும் ஆழ்ந்து போகின்றன.

“ரொம்ப மனசுக்குக் கஷ்டமாயிருக்கு. வசதியா மேன்மையா வாழ்ந்தவங்க, வெறவு செமக்கிறாங்க. நூறு நூறாக் குடும்பங்க, இங்க யானைக் காட்டில, வெறவு வெட்டிட்டு வந்து கூடலூரு மார்க்கெட்ல வித்துக் கஞ்சி காச்சிக் குடிக்கும் நிலைமை. இந்த ஃபாரஸ்டு ஆளுவ கொடுமை... கேக்க வாணாம், இவனுவளே சந்தனம் திருடறானுவ, கட்டை கடத்தறானுவ. பத்தாக் கொறய்க்கு மேலிடத்தில, காடழியிதுன்னு, இவங்களுக்கு எவிக்‌ஷன் ஆர்டர் குடுத்திருக்கா. நாம தா புரொடஸ்ட் பண்ணி ஒரு ‘ஸ்டே’ ஆர்டர்னாலும் வாங்கணும்!”

ஒருவரும் பேசவில்லை. சல்லென்று அமைதித் திரை படிகிறது.

“தமிழீழம் வந்தாத்தா இதுக்கெல்லாம் விடிவு காலம், மாஸ்டர்!”

முதலில் பேசிய இளைஞன் கூறுகிறான்.

“அது எப்படி வரும்ங்கறது தான் கேள்வி” என்கிறார் மாஸ்டர்.

“வந்து தான ஆவணும்? வராம வழி இல்ல. இவ்வளவுக்கு வந்த பெறகு, பின்னுக்குப் போக முடியுமா?”

“சும்மா ஈழம் ஈழம்னு சொல்லிட்டிருந்தா எப்படிய்யா வரும்? பேச்சு வார்த்தையின்னா ஆளுக்காள் முறச்சிக்கிறா. இருட்டு ரூம்பு, சுருட்டுப் பாயி, மொறட்டுப் பொண்ணுங்கற கதையா இவங்கள ஒண்ணு சேக்கறதுக் குள்ளாற பேச்சு வார்த்தையே முடிச்சிட்டோ, முறிச்சிட்டோ அவம் போயிட்டா...”

“இத பாருங்கண்ணாச்சி, பேச்சு வார்த்தை எல்லாம் மழுப்பல். இந்தியா படையை அனுப்பிக்கணும்...”

“அதெப்படி?... நம்ம வம்சாவளி பத்து லட்சம் ஆளுக கதி என்ன? இந்தியா இதுக்கு மேல எதுவும் செய்ய ஏலாது. அந்த வம்சாவளி - ப்ளாக்கா - அப்படியே அத்தன லட்சம் பேரும் ஹோஸ்டேஜ் மாதிரி இருக்காங்க, பச்சையா சொல்லப் போனா...”

“சோசலிச ஈழம்னு வரணும். தோட்டத் தொழிலாளரும் அங்க பிறந்தவங்க, அவங்களுக்கும் அங்க உரிமையுண்டுன்னு போராடணும் அத்தினி பேரும்...”

“இது சொப்பனத்தத் தவுர ஒண்ணில்ல. இந்தச் சின்னப் புத்தகத்துல அதுதா இவரும் சொல்றாரு. ஈழப் போராளி யாருன்னு தெரியாம, ஒருத்தனை ஒருத்தன் இவங்களே அடிச்சிட்டுச் சாவுறான். இது, அவங்களுக்கு சாதகமாயிருக்கு. இப்ப ராணுவமே கொன்னிட்டு, புலிகளே அடிச்சிட்டாங்கன்னு சொல்லிடறான். ஒருத்தன ஒருத்தன் உளவாளின்னு சந்தேகப்பட்டுக் கொன்னுக்கிடறாங்க... இதுக்கு என்னதா செய்ய?...” என்று பழனி சோர்வடைகிறான்.

“குண்டத் தூக்கி எறிஞ்சிட்டு ராச்சியத்தக் கவுத்து, சுதந்தரம் வாங்கிடலாம்னு நெனச்சானுவ. அது வெடலத்தனமின்னு இப்ப ருசுவாயிடிச்சி. இவன் குண்டெறிஞ்சா, அவங்க ராணுவத்த வச்சி சுட்டுத் தள்ளுறான். சித்திரவதை பண்றான். ஆக, ஒண்ணுமறியாத பிள்ளைங்க பொண்ணுங்க சாவுறாங்க. சொத்து பத்து, அல்லாம் படுநாசம். எல்லாம், எண்ணிய கருமம் நுண்ணித் துணியணும். அராசகத்தால ராச்சியம் புடிக்க முடியாது. ருசியப் புரட்சி... ஆனானப்பட்ட ருசியப் புரட்சில எத்தினி பேரு செத்தாங்க தெரியுமா?... ஒம்பது பேரோ, பத்துப் பேரோ தான். முதல்ல மக்கள் மனசில எழுச்சிய ஒருமிச்சு உண்டாக்கணும் - ஆயுதப் புரட்சிங்கறது கடோசில...”

நரைத்த மீசைப் பெரியவர், தோட்டத் தொழிலாளர் இயக்கத்தில் சம்பந்தப் பட்டவரென்று முருகேசன் தெரிந்து கொள்கிறான்.

இளைஞனுக்குக் கோபம் வருகிறது.

“மனசு எழுச்சி எழுச்சின்னு சும்மா உக்காந்திருந்தா வருமா? கெளம்புனாத்தா வரும். இந்திய அரசு, தமிழன் தமிழ் இனம்னு தானே மெத்தனமா இருக்கு. முதல்ல, இப்ப கப்பல் இல்ல, நம்ம தொழிலாளரு எத்தினிபேரோ, வார வழியில்லாம திண்டாடிட்டிருக்கா. இங்கேந்து கப்பல அனுப்பிச்சி நம்ம தொழிலாளிங்களைப் பத்திரமாக் கொண்டு வர ஏலாதா? பின்ன, ராணுவத்த ஏன் அனுப்பிக்கல? பங்ளாதேஷ்ல அனுப்பல...?”

இளைஞனுக்கு முகம் சிவக்கிறது.

ஆனால் மாஸ்டர் புன்னகையோடு பேசுகிறார்.

“ஆ, ஊன்னா பங்களாதேஷ், ராணுவம்ங்கறது தப்பு. அப்ப நிலம வேற. சர்வதேச நிலைமை பதட்டமா நெருக்கடியா இருக்கு. இப்ப போர்னு வத்தி வச்சிட்டா, உலகமே இருக்காது, யார் கெலிச்சது, தோத்ததுன்னு புரிஞ்சிக்கக்கூட... முதல்ல இந்தச் சின்ன விசயம் நினச்சிப் பாருங்க? தமிழருங்க, ஒத்துமயா எப்பல்லாம் இருந்திருக்காங்க? வடக்கு மாகாணத் தமிழர் யு.என்.பி.ய ஒதுக்க ஓட்டுப் போட்டா, தோட்டத்துப் பிரதிநிதிங்க ஆதரிப்பாங்க. தோட்டத்துத் தமிழ்காரன் சிரீலங்கா ஃபெடரல் பார்ட்டிய ஆதரிச்சா, வடக்கு மாகாணத் தமிழன் யு.என்.பி. கூடக் கூட்டுச் சேர்ந்தான். வடக்கு மாநிலக்காரர் ஈழம்னு சொன்னா, மத்தவன் தேசீயம்னு சொல்றான். ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சிட்டிருக்காங்களா?... ஆதியில், பூர்ஷ்வாவா இருந்த இலங்கைத் தமிழர் தோட்டத்து ஆளுங்களை மதிச்சாங்களா? சமமா நினைச்சாங்களா?... சொல்லப் போனா, ஆதியில், தோட்டத்துத் தமிழனும் சிங்களத் தொழிலாளியும் கூட ஒத்துப் போனா. கலியாணம் காட்சின்னு சம்பந்தம் கூட வச்சிட்டா. ஆனா, அப்படி அந்தத் தமிழாளுவ சம்பந்தம் வச்சிட்டதாச் சரித்திரம் உண்டா?... இதெல்லாம் அடீல இருக்கு...”

“மாஸ்டர், நீங்கதா இப்பப் பிரிவினை வாதம் பேசுறீர், தமிழினம்னு நினைக்க இல்ல?”

“உருத்திராபதி, நீ உண்மையில தொழிலாளி வருக்கம் இல்ல. நீ பூர்ஷ்வா. எனம் எனம்னு மக்களத் திசை திருப்பாம, எல்லாரும் மனுஷங்கங்கற அடிப்படையில பாரு! இப்ப, இந்தியாவில, வடக்க, சீக்கியத் தீவிரவாதிங்களால எவ்வளவு நஷ்டம், சேதம்? இந்திரா அம்மாவின் உயிரே பலியாயிருக்கு. நிதம் நிதம், பிரிவினை கூடாது, அராஜக வெறியை எதிர்க்கணும்னு, இந்திய அரசு சொல்லிட்டிருக்கிறாங்க. அப்படி இருக்கறப்ப, அதை மறைமுகமா ஆதரிக்கும் செயல்ல இறங்க முடியுமா?”

“அப்ப தமிழீழம் சாத்திய மில்லன்னு நீங்க சொல்றியளா மாஸ்டர்? உலகத்தில் சின்னச் சின்ன இனமெல்லாம் கூடத் தனி ராச்சியம் வச்சிருக்கு. தமிழ் உலகத்திலேயே பழய பெருமை உள்ள மொழி. அதைப் பேசுற இனத்துக்கு ஒரு தனி அரசு கட்டாயம் வேணும். இந்தியாவில அது ஏலாதுன்னு ஆயிட்டது. அதுனால இலங்கையில அது அமையணும்...”

மாஸ்டர் அவன் கடுமையான வாதத்தைக் கேட்டு நகைக்கிறார்.

“இனம் இனம்னு குட்டயக் குழப்புறீங்க. இருந்தாலும் உண்மையில் பார்த்தால், இந்தியாவில் மானிட இயல் ரீதியா, இன வேறுபாடுகளைத் தோற்றத்தில் கண்டு கொள்ள முடியும். வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று பல்வேறு இனக்கலப்பினரும், ஒரே பண்பாட்டால் பிணைக்கப்பட்டிருக்கிற உண்மையைப் புரிந்து கொள்ளலாம். இலங்கையில் பொதுவாகப் பார்க்கும்போது தோற்றத்தில் இருந்து சிங்களரா, தமிழரா என்று ஆழ்ந்த வேற்றுமை எதுவும் குறிப்பாகச் சொல்லிவிட ஏலாது. என் கணிப்புப் படி, மானிட இயல் ரீதியான வித்தியாசமில்லாமல், மொழி, சமயம் மட்டுமே பிரிவு உண்டாக்கி இருக்கிறது. ஆதியில் கலிங்கத்து அரசகுமாரன் கடத்தப்பட்டு வந்தான். அவங்க சந்ததின்னு சொல்லும்போது கூட, வித்தியாசமான இனமாக அதாவது மானிட இயல் ரீதியா, மங்கோலிய இனம், அல்லது, திராவிட இனம்னு பிரிக்கும்படி இல்லை. அதனால் கலந்து கூட சமரசமாக ஆதித்தமிழரும் வாழ்ந்திருக்கிறார்கள்ங்கற வரலாற்றை மறக்க முடியாது...”

“நீங்க சுத்திவளைக்கிறீங்க மாஸ்டர். தமிழீழம் சாத்தியமில்லன்னு நீங்களே கருத்துச் சொல்றிய...”

“நான் அப்படித் தீர்க்க இல்ல. சாத்தியா சாத்தியக் கூறுகள் பார்த்துப் போராடணும்... இப்பக் கூடப்பாருங்க, தமிழீழ விடுதலைப் போராளிகள் பேச்சு வார்த்தையில், தோட்டத் தொழிலாளிகள் பிரதிநிதி யாரானும் இருக்காங்களா? இல்லை. அதை விடுவோம். இலங்கைத் தமிழ் முஸ்லிம்னு ஒரு தனி பிலாக்...”

“இது, தமிழ் இனத்தாரிடையே வேற்றுமையை விதைக்கும் சூழ்ச்சிதான், வேறென்ன?”

“சரி, அது இருக்கட்டும். நா ஒரு பேச்சுக்குக் கேக்கிறேன். தமிழ் ஈழம் வந்திடுது. அப்ப, நீங்கல்லாம் நம்ம நாடுன்னு அங்க போயிடுவீங்களா, பழயபடி?”

“வந்திருக்கிற ரிஃப்யூஜிஸ் போயிடுவாங்க. ரிபாட்ரியட்ஸ் அங்க போறதெப்படி?”

“...அப்படியா, வழிக்கு. அந்த நாட்டில் உம்ம மூதாதையர் மூணு தலைமுறயா இருந்திருக்கிறிய. ஆனா, அங்க தள்ளி விட்டதும் இங்க வாரதுதா நாயம்னு நினைக்கிறிய. ஆனா, அங்கே போயி என் உரிமையக் கேப்பேன், கொண்டாடுவேன்னு சொல்ல மாட்டிய. அப்ப, நாங் கேக்கிறேன், இந்தியா ராணுவத்த அனுப்பிக்கணும்னு சொல்றீங்களே, இந்தியாக்கு என்ன இன்ட்ரெஸ்ட்?”

“அப்ப நீங்க எதுதா நியாயம்னு சொல்றிய?”

“நான் இப்ப எதுக்கும் நியாயம் பேச வர இல்ல. எத்தனையோ முட்டுக் கட்டைகளை பாக்காம வச்சிட்டு, போராட்டம் போராட்டம்னு வெறிய மட்டும் முன்னுக்கு வச்சி விளையாடுறதில, எத்தினி இளம் பிள்ளைக சாவுறது? நிலமயத்தான் ஆராய்ஞ்சு பாக்கணும். இங்கத்த அரசியல்வாதிகள், ஈழ இனப்பிரச்னைன்னு கூக்குரல் போட்டுட்டு, பேரணி போறதும் உண்ணாவெரதம் இருக்கறதும் பள்ளிக்கூடப் பிள்ளைங்களை முடக்கிப் போடறதுமா இருக்காங்களே, நம்மவங்க நெலமைக்கு எத்தினி பேரு பேசறாங்க? இவுங்களே எரியிற வூட்டில புடிங்கினது ஆதாயம்னு தானே நடந்துக்கறா? சிரீலங்கா ஃபைனான்ஸ் ரிபாட்ரியேட் வங்கின்னு எல்லா திட்டத்திலும் இவங்க மோசடி பண்ணிட்டிருக்காங்க... கண்ண மூடிக்கிட்டுத் தமிழினம் தமிழினம்னு அவங்க கூட நாமும் பேசிட்டிருக்கிறதில ஒரு புண்ணியமும் இல்ல. நம்ம மனிசங்களா பாக்கணும்ங்கற கோரிக்கைய நாமும் வச்சிப் போராடணும். நமக்கு நாம பொறந்து வாழ்ந்து வளர்ந்த எடத்துல உரிமை உண்டுன்னு, நாம உணரணும். அத விட்டுட்டு பிச்சை வாங்குறாப்பல, இங்க வந்து எல்லாம் இழந்த நிலையில் ஏன் அல்லல் படணும்?”

முருகேசு வாயடைத்துச் சிலையாக நிற்கிறான்.

அந்நாள் ஒப்பந்தக் கூலிகளாகப் போனவர், நூறு நூறு ஆண்டுகளாகத் தம்மையே எண்ணிப் பார்க்காமல் பகடைக் காய்களாகிவிட்ட தலைவிதியைக் கிழித்தெரியும் ஒரு துளிச்சக்தியாகத் தன் மகனும் இந்தக் களத்தில் இருக்கிறான் என்ற எண்ணம் அவனுள் ஒளிப் பொறியின் சுகமான வெம்மையாக வியாபிக்கிறது.

அத்தியாயம் - 14

“வாங்க, ஆறுமுகம் வந்துட்டாப்பல, போலாம்...”

முருகேசன் சுய உணர்வு பெற்றவனாகக் கடைக்குள்ளிருந்து வெளியே வருகிறான்.

“ஏந்தம்பி... இந்த மாஸ்டர், இன்னும் இவங்கள்ளாம் யாரு?”

“எல்லாம் நம்மவங்கதா. மாஸ்டர், நல்லா படிச்சவரு... கண்டில கடை வச்சு வாழ்ந்த குடும்பம். இவுரு கலியாணம் கட்டல. படிப்பு படிப்புன்னு இருந்தா. காந்தி, சர்வோதயம்னு ரொம்ப ஈடுபாடு. அந்தக் காலத்துல பிரஜா உரிமைச் சட்டம் கொண்டிட்டு வந்தப்ப, மந்திரிசபை வாசல்ல சத்தியாக்கிரகம் பண்ணினவரு... கோடில உக்காந்திருந்தவரு, அந்த காலத்துல தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ்ல ஒரு தலைவரா இருந்தவரு. நாகலிங்கம்னு பேரு. உருத்திராபதியும் கண்டிப் பக்கம் தான். முப்பது ஏகராக்குள்ள சின்னதா சொந்தத் தேயில தோட்டம், வியாபாரம் இருந்திச்சி. திராவிட முன்னேற்ற இயக்கத் தலைவர்களிடம் நெருக்கமா இருந்து அங்கயும் தமிழர் இயக்கம்னு கூட்டமெல்லாம் கூட்டிப் பேசுவான். எல்லாரும் இப்படித்தா இங்க வந்து உக்காந்து நெஞ்சுக் குமச்சலப் போக்கிக்கும்படி பேசுறது. மாஸ்டர் இங்க நம்ம பிள்ளைங்களுக்காக ஒரு ஸ்கூல் மாதிரி நடத்தறாரு...”

“குமார வேலன்னு சொன்னியே தம்பி, அவரும் இங்க வருவாரா?”

“...அடிக்கடி வரமாட்டா. இப்படிப் புத்தகம் அனுப்பிச்சிப் படிப்பிச்சி, நம்ம தொழிலாளிகளை உருப்படியா பிரச்னைகளைச் சமாளிக்க வைக்கணும்னு சொல்றாரு. தோட்டத்துக் காரங்களையும் இப்ப தமிழர் போராட்டத்துல ஈடு படுத்துறது அவருடைய தா இருக்கு. ஆனா, என்னங்க. தோட்டங்கள்ளல்லாம் ஆமி புகுந்து அடிக்கிறதும், கூட்டிட்டுப் போறதும்தான் நடக்குது. சின்னச் சின்னப் புள்ளங்க ளெல்லாம் கடத்திட்டுப் போயிடறாங்களாம், சிங்களப்படை...”

முருகேசு பேசவில்லை.

சாலையில் இருந்து மேடாக இருக்கும் வீட்டு வரிசைகளுக்கு வெட்டி விட்டிருக்கும் படிகளில் காலை ஊன்றி ஏறுகிறார்கள்.

முன்பு சாப்பிட்ட கடையைத் தாண்டி அப்பால் ஒற்றை வீடாக இருக்கிறது. வாசலில் ரோஜாச் செடிகளும், பக்கத்தில், மரவள்ளி நட்ட பரப்புமாகப் பசுமை சூழ்ந்திருக்கிறது.

பெரிய மீசை வைத்துக் கொண்டு, உயரமும் பருமனுமாக, நரை இழைகள் குலுங்கும் அடர்ந்த முன் கிராப்புமாக ஆறுமுகம் நிற்கிறான்.

“என்னப்பா பழனி?... என்ன விசேசம்?...”

“வணக்கம் அண்ணாச்சி...”

முன்னால் நீண்ட தாழ்வரைதான், பாதிச் சுவரும் பாதிக் கண்ணாடியுமாக மறைக்கப்பட்டிருக்கிறது. பிரம்புக் கழியினாலான இருக்கைகளுக்கு நடுவே குட்டை மேசையில் தாள்கள் சில இருக்கின்றன. அவர்கள் உட்காருகிறார்கள்.

முருகேசு நிற்கிறான். “உக்காருங்க,” என்று பழனி ஒரு இருக்கையைக் காட்டுகிறான். பிறந்த நாளிலிருந்து வேர்விட்டு ஊன்றியிருக்கும் தாழ்வுக் கூனல், ஒரே நாளில் நிமிர்ந்து விடுமா?

இவன் உட்காருவதையோ, உட்காராமல் இருப்பதையோ அவர்கள் பொருட்படுத்தவில்லை.

“...ஏ.ஜி.என். டிரான்ஸ்போர்ட்ல, கிளீனரா ஒரு பய பச்சவேலுன்னு, தெரியுமில்ல அண்ணாச்சி?...”

“ஆமாம், நாந்தான ராவுத்தர்ட்ட சொல்லி நல்ல பயன்னு வேலைக்கு வச்சிக்கச் சொன்னேன்?”

“அவ, இவரிட்டேந்து ஒரு நாலு சவரன் உருப்படிய உங்ககிட்டக் கொண்டாந்து குடுத்திருக்கிறானாமே? நாலு மாச முன்ன?...”

“ஆமா. அவுசரம்னு ஆயிரம் வாங்கிட்டுப் போனான். வட்டி ஒண்ணும் இதுவரை கட்டல. நா, நம்ம ஆளுவன்னு சும்மா பேருக்கு, மூணு ரூபா ரெண்டு ரூபா தரம் போடுறன்னாலும், நாலு மாசத்துக்கு எம்பது ரூபா ஓடிப்போச்சு. இவங்க அதையே கட்டுறதில்ல. மாசாமாசம் கொஞ்சம் கொஞ்சமா கடனும் சேத்து அடச்சிடுங்க, வட்டியும் குறையும், சுமை தெரியாதுன்னா, அழுதுங்க?...”

“அதா, இவருகிட்ட வங்கில வைக்கிறேன்னு சொல்லிட்டு இங்க உங்க கிட்ட வச்சிருக்கிறான்...” என்று விளக்குகிறான் பழனி.

“இப்ப... இவர் மூட்டுக்கிறாரா...”

“இல்லீங்கையா,... எங்க பொண்ண அந்தப்பய கட்டிக்கிறதா இருக்கு. கலியாணச் செலவுக்குன்னு வச்சிருந்த மூவாயிரம்தா, தூக்கிக் குடுத்திட்ட, போயிட்டுது. இப்ப, இத்த ஒரு கிரயம் போட்டு எடுத்துக்கிடுங்க, கடன் போக மீதிப் பணத்தை வச்சி கலியாணத்த முடிச்சிரணும். எனக்கு அதுவே ஒரு பாரமா இருக்கு...”

“அப்பிடியா? வித்துப் போடுறீங்களா?...”

“என்னங்க செய்யிறது? வீடு கட்ட லோனு எழுதியிருக்கிறம். அதும் எப்ப வரும், வராது, தெரியாது... எனக்கு... அருமயா பண்ணிப் போட்ட உருப்படி. மருமவளுக்குக் குடுக்கணும்னு ஆசயா வச்சிருந்தா. அவ வந்தப்ப, மொடய்க்கு வச்சுப் பணம் வாங்கிருந்தே. ஒரே மகன்... அதெல்லாம் இப்ப எதுக்கு?... நீங்க உருப்படிய நிறுத்து, ஒரு கிரயம் போட்டு...”

முருகேசுவுக்குக் குரல் தழுதழுக்கிறது. தளர்ந்த உடல் நடுங்குகிறது. கண்களில் நீர் கசிகிறது. துடைத்துக் கொள்கிறான்.

ஆறுமுகம் உள்ளே சென்று, பெட்டியுடன் அதை எடுத்து வருகிறான். இரட்டைக் கம்பிகளாக இழைந்து, மாதுளம் முத்துக்களைப் போல் நீரோட்டமுடைய கெம்புப் பதக்கம் விளங்கும் அட்டியல்.

இது மருமகளுக்காக, என்று சீட்டுப் பிடித்து, தான் சம்பந்தம் செய்யப் போகும் பெரிய இடத்துப் பெண் - ‘ஹேட் கேபி’யின் மகள் என்று பண்ணி வைத்த நகை. இதை மருமகள் வந்தபோது கழுத்தில் போட நினைத்தும் போட இயலவில்லை. மகன் எதிர்பாராமல் மருமகளைக் கூட்டி வந்த போது, அதை வைத்து, ஐநூறு ரூபாய் கடன் வாங்கியிருந்தான். ராமாயியின் சீக்குக்காக, பூசாரியார் அறிவுரைப்படி, மந்திரத்தாயத்து ஒன்று வாங்கிக் கட்டியிருந்தாள். அந்த நகை, அப்போதே, ‘ஆவி’ வரவில்லை, விற்றுப் போடலாம் என்ற எண்ணம் இருந்தது... இப்போது அது என்ன நினைத்தும் தங்காது போல் இருக்கிறது. போகட்டும்.

அவன் அதைப் பண்ணிய காலத்தில், இரண்டாயிரத்துக்குள் தான் அடங்கியது. இப்போது...

கடை வீதிப்பக்கம், சேட் கடை ஒன்றில் ஏறி அதை நிறுக்கிறார்கள்.

பதக்கம் மட்டுமே ஆயிரத்துக்கு மேல் கிரயமாகிறது.

நகையின் கிரயம் அதையும் சேர்த்து, மூவாயிரத்து இருநூற்றுக்கு மேல் போகிறது. வட்டி, அசல் கடன் போக, இரண்டாயிரத்து, எண்பத்தெட்டு ரூபாய், கையில் கிடைக்கையில் இருட்டி விடுகிறது.

ஆறுமுகத்தின் வீட்டு விறாந்தையிலேயே இரவைக் கழித்துவிட்டு, மறுநாட் காலையில் அவன் வண்டி பிடித்து ஒத்தை வந்து பஸ் ஏறி உச்சிப் பொழுதில் வீடு வந்து சேருகிறான். பழனி முதல் நாளிரவே ஏதோ வரத்துவண்டி பிடித்து வந்திருக்கிறான்.

“பழனி, இத்தினி தொகையை வீட்டில வச்சிட்டுப் போகக்கூட இப்ப பயமா இருக்கு. நீயே கூட்டிட்டுப் போயி வங்கில கொண்டு போட்டுக் கணக்கு வச்சிக்குடு...”

பழனி அவனை அழைத்துச் சென்று, வங்கியில் போட்டுப் புத்தகம் வாங்கிக் கொடுக்கிறான். இங்கு போட்ட பணத்தைத் தான் ஒரு நொடியில் பச்சைவேலு வாங்கிக் கொடுக்கச் சொன்னான்.

“பெரியவரே, உங்களுக்கு நல்லத சொல்றேன். நீங்க சட்டுனு ஆரையும் நம்பிடறீங்க. நீங்க ஒண்ணு மட்டும் மறக்காதீங்க. அங்க, இலங்கையில இருந்தப்ப, தோட்டத்துல தாயாபுள்ளயா பழகியிருப்பாங்க. ஆளக்காணுறப்பவே, மாமா, மச்சான்னு கூப்பிடுவாங்க. சாப்பிடுங்க, இருங்கம்பாங்க. ஆனா, அதே ஆளுங்க, இங்கே இன்னிக்கு அந்த மாதிரி கல்மஷமில்லாம இல்ல. மிச்சம் ஆளுங்க ஒருத்தருக்கொருத்தன் அமுக்கிட்டுத் தாம் பிழைக்கறதில தா இருக்கிறாங்க. நீங்க யாரை, யாரு பொலீசில புடிச்சிக் குடுக்கறதுன்னும் புரியாது. அப்பிடியே நாயம் தேடிப் போனாலும் கிடைக்காது. புத்தகம், பதனமா வச்சிக்குங்க...” என்று அறிவுரையும் சொல்கிறான்.

“முருகன் தான் என்னைக் கொண்டாந்து உங்கிட்டச் சேர்த்தான். தம்பி, உனக்கு ஒரு விசயம் தெரியுமா?”

“சொல்லுங்க...?”

“...குமார வேலு... இருக்கான்ல...?”

“ஆமா...?”

“அவ... எம்மகன்... என் ஒரே மகன்...!”

அவன் சிறிது நேரம் உறுத்துப் பார்க்கிறான். “அட...? அப்பிடியா?”

“ஆமாம். அவன இந்த ரத்தத்தக் குடுத்துப் படிக்கப் போட்டேன். ஒரே புள்ள... நம்ம சீவியந்தா இப்படி லோலுப்பட்டுச் சாவுறம், அவன் துரை கணக்கா, கிளாக்கர், சூபரின்டன்ட்னு வாரணும்னு நெனச்சே. ஆனா அவன் இன்னிக்கு எங்கக்கு எட்டாத ஒசரத்துல எழுதறான், பேசுறான்னு கேட்க அவன் ஆத்தா இல்லாம போயிட்டாளே...?”

அவன் கண்களிலிருந்து அடக்க முடியாமல் நீர் வழிகிறது.

“பெரியவரே, நீங்க ஏன் முன்னாடியே சொல்ல இல்ல. இப்படின்னு?”

“எப்படிப்பா சொல்ல? அததுக்கு நேரம் காலம்னு வரணும். இப்பதா தோணிச்சி. அவ அம்மா சாவுக்குக்கூட வர இல்ல, சொல்லாம போயி நம்மளத் தோட்டக் காட்டான்னு ஏசுற சனத்தில் கட்டிக்கிட்டான்னு வருத்தமா இருந்தேன். பின்னாடி எப்பிடி எப்பிடியோ ஆயிப்போச்சி. இப்ப, அவ, இந்த மொத்த மனிச பந்தத்தையும் ஏத்தி வச்சிட்டிருக்கிறான். அதை ஒண்ணையே பெருமையா நினைச்சுக்கறேன். அதை ஒண்ணையே பெருமையா நினைச்சுக்கறேன். இனிமே, இந்தப் பொண்ணுக்கு ஒரு கலியாணம் கட்டி ஒப்பிச்ச பெறகு, ஒருக்க அவனப் பார்க்கணும். புரிஞ்சுக்காம, ரொம்பக் கடுமையாத் திட்டிப் போட்டே...”

கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறான்.

மனம் சிறிது இலேசாகிறது.

கார்த்திகை பிறந்து இரண்டு நாட்களுக்கெல்லாம் பச்சைவேலு வருகிறான். கிழங்கு தோண்டி, பூமியெல்லாம் மீண்டும் கிளறிக் கொண்டிருக்கும் காலம். கோசு நாற்று வைத்திருக்கிறார்கள் எங்கும்.

“ஏண்டாலே, உங்கப்பா, அம்மாகிட்ட சொன்னியா? எப்ப முகூர்த்தம் வச்சிக்கலாம்னாவ? அவங்க இங்க வாராங்களா? இல்ல, நாம போகணுமா?... இங்கேந்து அந்தப் பிள்ளையளயும் கூட்டிட்டுப் போகணும்னா, இப்ப மிச்சம் செலவாகும். பழனி சொல்றா, இங்கியே மாரியம்மன் கோயிலிலோ, இல்லாட்டி, ஒத்தை மலை மேல, முருகன் கோயில் இருக்காம்ல, அங்க வச்சி முடிச்சிட்டு வந்திடலாம்ல?...”

பச்சை வழக்கம் போல் மீன், காரப் பொட்டலம், கோதுமை அல்வா எல்லாம் வாங்கி வந்திருக்கிறான். சுகந்தி, தீவாளிக்குப் பார்வதி மூலமாக, மாசம் பணம் கட்டும்படி ஒரு மினுமினுத்த சேலை எடுத்திருக்கிறாள். அன்றே அதை உடுத்து, தலைசீவிப் பொட்டிட்டுப் புதிய அலங்காரம் செய்து கொண்டு கல்யாணப் பெண்ணைப் போல் விளங்குவதாக முருகேசுவுக்குத் தோன்றுகிறது.

மீசையை இழுத்துக் கடித்த வண்ணம் கட்டிலில் உட்கார்ந்திருக்கும் பச்சை வழக்கம் போல் சிரிக்கிறான்.

“ஏண்டா? சொன்னியா உங்கப்பா அம்மாகிட்ட? இந்தக் கார்த்திகயிலியே கலியாணத்த முடிச்சிடணும்னு இருக்கிற. பிறகு, புருசன் பாடு, பொஞ்சாதி பாடு...”

“வச்சிட்டாப் போச்சி. அப்பா அம்மா இப்ப வாராப்பில இல்ல. தங்கச்சி முழுவாம இருக்கு, வூட்டுக்கு வந்திருக்கு. அப்பாவுக்கு மூட்டுவலி, இங்க மலைமேல் வந்தா ஒத்துக்காதுன்னு சொல்லிட்டா... நீங்கல்லாந்தா மனிசங்க இப்ப...”

மறுபடியும் ஒரு சிரிப்பு.

“அப்ப, கடோசி ஞாயித்துக்கிழமை நல்லா இருக்கான்னு பாத்திட்டு வச்சிக்கலாமா?...”

அவனுக்குச் சம்மதம் தான்.

‘கல்யாணம்’ என்ற சொல்லே எத்துணை இடைஞ்சல்களுக்கு நடுவே ஒலித்தாலும் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தைத் தள்ளி வருகிறது.

தூத்துக்குடி முகாமில் கையிழந்த போராளிப் பையன் தங்கையின் திருமணத்துக்கு முன்னதாக வந்து வாழ்த்திவிட்டுப் போனதை எண்ணிக் கசிகிறான் முருகேசு. வாழ வேண்டிய காலத்தில், அந்த இளைஞனைப் போல் குமருவும் மரணத்தையும் துச்சமாக எண்ணிக் களத்தில் இறங்கியிருக்கிறான்...

உணர்ச்சி முட்டிக் கண்ணீர் பொங்குகிறது.

பத்திரிகை வைத்து, மரியாதைப் பட்டவர்களைக் கூப்பிட வேண்டும் என்ற ஆசை சுகந்திக்கு உள்ளூற இருக்கிறது. ஒத்தை முருகன் மலையில் கலியாணம் முடிக்க வேண்டும் என்பது முருகேசனின் தீர்மானம். பொட்டம்மாளோ, மேஸ்திரியோ, பக்கத்து வீட்டுச் சொந்தக்காரக் கிழவியோ, ராமசாமியோ வரப்போவதில்லை. பார்வதியையும் அவள் மகள்களையும் மனதில் வைத்துக் கொண்டு தான் சுகந்தி சொல்கிறாள் என்பது முருகேசனுக்குத் தெரியும். அந்தப் பெண்கள் கூச்ச நாச்சமில்லாமல் உடையணிந்து கொண்டு புறப்படுவதில் இவனுக்கு விருப்பமில்லை.

“பத்திரிகை எல்லாம் எதுக்கு? அவ தாய் தகப்பன் இங்க இருக்கிறதா இருந்தாலும் வச்சிக் கூப்பிடணும். அவ மனுசா இல்ல. வாரவும் இல்ல....அதுக்கு ஒரு முப்பது நாப்பது, அம்பதுன்னு ஆற செலவுக்கு, உருப்படி எதுனாலும் வாங்கினாலும் இருக்கும்...”

தீர்த்துவிட்டு, வேண்டப்பட்டவர்களை, அவனே அழைத்து விடுகிறான்.

பொட்டம்மா, முப்பது ரூபாய்க்கு ஒரு ‘ஸில்வர்’ ஏனம் வாங்கிக் கொடுக்கிறாள். சரோஜாவுக்கும் தனத்துக்கு, முன்னதாகவே செய்தி சொல்லி அனுப்பி விட்டார்கள். பச்சைவேலுவின் நண்பன் தங்கராசு, டீக்கடைப்பையன் இரத்தினம் இருவரும் முன்பே கோயிலில் பூசைக்கு வேண்டிய ஏற்பாடுகளும் செய்து திருமணம் முடிந்து அங்கேயே பொங்கல் பிரசாதத்துக்கும் அச்சாரமும் கொடுக்கப் போகிறார்கள்.

சந்தர்ப்பத்தை எண்ணி, முருகேசு தனத்துக்கும் சரோஜாவுக்கும் துணிகள் வாங்குகிறான். அரக்கும் பச்சையுமாகக் கலந்த இரு வண்ணத்தில் சரிகை போட்ட சின்னாளப் பட்டுச் சேலையும், மாப்பிள்ளைக்குப் பட்டுக்கரை வேட்டி, உருமால், சட்டை துணிமணியும் ஒத்தையில் வாங்கிக் கொண்டபின், டாக்டரம்மாளையும், அவள் தங்கை, அவள் புருசர் ஆகியோரையும் பார்த்துக் கும்பிட்டுக் கல்யாணத்துக்கு அழைக்கிறான்.

டாக்டரம்மாள் மிகவும் சந்தோஷத்துடன், மணமக்களைக் கூட்டி வரும்படி சொல்கிறாள்.

தனம் முன்னைவிட இப்போது முகமும் மேனியும் தெளிந்து மலர்ச்சியுடன் இருக்கிறால். மலைமீது உற்சாகத்துடன் ஏறுகிறார்கள்.

ராமாயி போட்டுக் கொண்டிருந்த தாலியில் மஞ்சள் குங்குமம் வைத்து, புதிய மஞ்சட்சரட்டில் கோத்து, குருக்களுக்கு முன், பழம் வெற்றிலை பாக்கு, தேங்காய், பூமாலைகள் வைத்த தட்டில் வைக்கிறான்.

குருக்கள் முருகன் சந்நிதியில் வைத்துப் பிரார்த்தனை செய்து, ஆசி மொழிந்து, தருகிறார்.

“அம்மாளம், தெய்வமாயிட்ட உன் அம்மாளையும் ஊரிலிருக்கிற அப்பனையும் கும்பிட்டுக்க” என்று மாலையை எடுத்து அவள் கையில் கொடுக்கிறான். மணமக்கள் மாலை மாற்றிக் கொள்கின்றனர். திடீர் வியப்பாக, தங்கராசுவிடம் இருந்து சிறு பெட்டியை வாங்கி, அதில் மின்னும் ஒரு தாமரைப் பூப்போட்ட மோதிரத்தை பச்சைவேலு, சுகந்தியின் விரலில் போடுகிறான்.

“சொல்ல இல்லையே...”

மகிழ்ச்சி பூரிக்கிறது.

ஒரு குமரிப் பெண்ணுக்கு அவள் விரும்பும் இளைஞனைப் பார்த்து மண முடிப்பதின் இனிய அநுபவம் அவனுள் நிறைவாக இருக்கிறது.

“ஆண்டாளு, எப்பிடியோ, மலையேறி, ஒரு வாக்கைக் காப்பாத்திட்டேன்...” என்று மனசுக்குள் எண்ணிக் கொண்டு விழி நீரை ஒத்திக் கொள்கிறான். தாலியை அவன் அவள் கழுத்தில் அணிவித்ததும், குலவையிடக் கூடப் பெரிய பெண்கள் யாருமில்லை. பார்வதியை அழைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அதை உணர்ந்தாற்போல், சரோஜாவும், தனமும் குலவையிட்டு மகிழ்கிறார்கள்.

பிரசாதமான பொங்கலும் புளியோதரையும் வடையும் உண்டு மகிழ்ந்து களித்தபின், பொழுதோடு மணமக்களை அழைத்துக் கொண்டு டாக்டரம்மா வீட்டுக்கு வருகிறான். அங்கே அவள் தங்கையும் இருக்கிறாள். அவர்களுக்கு இனிப்பு பர்பியும் காராபூந்தியும் வைத்துக் கொடுக்கிறாள். சரோஜாவும் தனமும் போய் எல்லாருக்கும் தேநீர் வழங்குகிறார்கள்.

பச்சையும் சுகந்தியும் உட்காரக் கூசினாலும், “உக்காருங்க, சும்மா?” என்று டாக்டரம்மா உபசரிக்கிறாள்.

தங்கராசு விரைந்து கீழே மார்க்கெட் கடை வீதிக்குச் சென்று, ஆரஞ்சும் மலைவாழைப் பழங்களும் வாங்கி வந்து வைக்கிறான். பால்கோவாத் துண்டைக் குழந்தைகளுக்குக் கொடுக்கிறான். மணமக்கள் அவர்கள் காலில் விழுந்து பணிகின்றனர்.

“என்னத்துக்கப்பா இதெல்லாம்?...”

“ஆம்மா? ஊரில்லா ஊரில, எங்கக்கு நீங்க பெத்த தாய்க்கு மேல தெய்வமா இப்ப இருக்கிறீங்க. எங்க நன்றிய எப்படிக்காட்ட? காசுபணம் வேணும்தா. ஆனா, அதுக்கெல்லாம் மேல, நொந்து வந்த மனசுக்கு, இதமா முகமும், பேச்சும், மனுஷாபிமானமுந்தா. அதை நாங்க இந்த நேரத்தில மதிக்கிறாப்பல, உணருராப்பல, யாருக்கும் இருக்குமான்னு தெரியல. இருக்கட்டும் மா, புள்ளங்கள வாழ்த்துங்க...”

நூற்றியொரு ரூபாயும் ரோஜாப் பூக்களும் வைத்துக் கொடுக்கிறார்கள்.

ஒத்தையிலிருந்து அவர்கள் வீடு திரும்புகையில் மணி ஒன்பதடித்து விடுகிறது. எல்லோரும் விடைபெற்றுப் போய் விட்டார்கள். பார்வதியும் அக்கம்பக்கம், ருக்கு, தேவானை என்ற பெண்களும் வந்து ஆலம் சுற்றி மணமக்களை வரவேற்றுக் குலவை இடுகிறார்கள்...

எல்லாரும் வந்து பேசிச் சென்ற பின், முருகேசு வெளியறையில் போர்வையைப் போர்த்துக் கொண்டு படுக்கிறாள். உள்ளே, அந்தக் கட்டில் - அறை சோபன அறையாக மாறியிருக்கிறது. அவர்களின் மெல்லிய குரலும் சிரிப்பொலியும், மௌன இருளின் இடையே எங்கிருந்தோ விழும் ஜன்னல் வெளிச்சம் போல் இதமளிக்கிறது.

மூன்று பெண் குழந்தைகளையும் ஒரு மாதிரி தகுந்த இடங்களில் ஒப்படைத்து விட்டான். இனி ஒரு நடை... அந்தக் குழந்தையை... அவன் மகனின் குறுத்தான குழந்தையை மார்புற அணைத்து...

இந்த இதமான நினைவுடனேயே தூங்கிப் போகிறான். வெகு நாட்களுக்குப் பிறகு அயர்ந்த உறக்கம்.

இவன் கண் விழிக்கையில், பச்சை வேலு எழுந்து குளித்து, சாமி கும்பிட்டுத் திருநீறு தரித்திருக்கிறான். அவளும் நீராடிக் கூந்தல் ஈரம் விரிய, குங்குமமும் மஞ்சளுமாக, தேங்காய் துருவுகிறாள்.

“அம்மளம்? எம்புட்டு நேரம் உறங்கிட்டேன்? சூரியன் உதிச்சிரிச்சே? எளுப்பக் கூடாது?...”

“சூரியன் உதிக்கில தாத்தா, பனி மூட்டம் குளுருது உறங்குங்க...”

பச்சை வேலு தலை சீவிக்கொண்டு, சிரிக்கிறான்.

சுகந்தி... பார்த்தும் பாராமலும் களிகொண்ட முகத்துடன் வட்டையில் இருக்கும் கோதுமை மாவில் திருவிய தேங்காயைத் தட்டுகிறாள். முருகன் கோயிலில் முதல் நாள் உடைத்த தேங்காய் மூடி...

அடுப்பில் கட்டை எரிந்து கணகணவென்று தணல் விழுந்திருக்கிறது. முதல் இரவானதும் அதிகாலையில் எழுந்து நீராடவேண்டும் என்று யாரோ இந்தப் பெண்ணுக்குச் சொன்னார்கள்?

“இன்னிக்கு லாரி லோடு எடுத்திட்டு மேட்டுப்பாளையம் போவணும் மாமா... நீங்க நாளக்கிதான வேலக்கிப் போறீங்க?...”

“...எல, நா ஒருக்க மட்றாசிக்குப் போயி வந்திரணும்னு இருக்கே.”

அவன் சட்டென்று விழிகள் நிலைத்துப் போகக் கையில் சீப்புடன் பார்க்கிறான்.

“மட்றாசில என்ன மாமா விசேசம்? அங்க வேலை ஒண்ணும் கிடைக்காது. சீவிக்கிறது செரமம். நா அடிக்கடி லோடு எடுத்திட்டுப் போயிருவ. நீங்க இங்கியே இருந்திருக்கிறியன்னுதா, நா கலியாணம் கட்டவே சம்மதிச்சே...”

“அட, அங்கிய போயி இருந்திட மாட்டன்ல, ஒரு நடை போயி பாத்திட்டு வந்திருவே...”

“அங்க போயி லோனுக்கு எதுனாலும் ஏற்பாடு பண்ணணும்னு பழனி அண்ணாச்சி சொன்னாரா?”

“அதெல்லாம் ஒனக்குத் தெரிஞ்சு என்னல ஆவணும்?”

“என்ன மாமா? மட்றாசில முன்ன பின்ன தெரியாம எங்கிட்டுப் போயித் தங்குவிய, மோசடியும் புரட்டும் மிச்சம் உள்ள இடம் மட்றாசி. முளிச்சுக் கிட்டிருக்கறப்பவே முளிய எடுத்திடுவாங்க, ஆளுக...”

“என்னல, பயமுறுத்தற? பொண்ண குடுத்த சம்பந்தக்காரு வீட்டில போயி தங்குவ. உங்கப்ப ஆயியப் பாத்துப் பேசிட்டு, எனக்கும் ஒரு காரியம் இருக்கு, பாத்திட்டு மறு வண்டில திரும்பிடுவ. உங்க வீட்டில போயி உக்காந்திடுவன்னு நினச்சிப் பயந்து போனியால?”

அவன் சிரிக்கிறான். “அதுக்கில்ல மாமு, நீங்க எத்தினி நா வோணாலும் இருங்க, எனக் கொண்ணுமில்ல, இவ தனியா இருப்பாளேன்னு தா ரோசிச்சே...”

“ஒரு நாலு நா இருக்க மாட்டாளா, கலியாணம்னு கட்டி ஒரு காப்புக்கவுறு விழுந்திட்டா, தயிரியம் வந்திடும். அதுக்குதா இவ்வளவு விரிசா நானும் கலியாணம் கட்டணும்னு நினைச்சது?”

முருகேசு பல்துலக்கிவிட்டு வருகையில், சுகந்தி, அடுப்பை எரிய விட்டு, விரல் பருமனுக்கு ரொட்டியைத் தட்டிப் போடுகிறாள். மணம் ஊரைத் தூக்குகிறது.

அருகில் உட்கார்ந்திருக்கும் கணவனுக்கு, சூடாக இருக்கும் அந்தப் பெரிய ரொட்டியில் பாதியைப் பிட்டு, பொட்டுக்கடலையும் தேங்காயும் வர மிளகாயையும் வைத்து அறைத்த சட்டினியையும் எடுத்து வைக்கிறாள்.

தாத்தாவை அவள் கவனிக்கவே மறந்து போனாற் போல், புருசன் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

பெண்ணாகப் பிறந்ததன் பயனே இதுதானோ என்று முருகேசு உளம் கரைகிறான். அவனுடைய ராமாயி, இப்படி அவனுக்கு இதேபோல், நிரம்பத் தேங்காய் திருகிப் போட்டு, ரொட்டியைத் தட்டிப் போடுவாள். மாசி மீன் சம்பலும் வைப்பாள்...

அவன் கண்களில் நீர் மல்க, பச்சைவேலுவின் உருவம் கரைகிறது. ஆனால்... அங்கே குமருவை உருவகப்படுத்திப் பார்க்கிறது மனசு. அவன்... அந்த பழனியாண்டியின் மகள் அலமேலுவைக் கட்டியிருந்தால், கும்பலோடு கும்பலாக இப்படி வந்து விழுந்து அல்லாடிக் கொண்டிருந்திருப்பார்கள். தோட்டக் காட்டானாகவே அழுந்தி, அலைபாய்ந்து கொண்டிருப்பார்கள்... இப்போது, லட்சத்தில் ஒருவனாக அவன் பிறந்த மண்ணில் நியாயம் கேட்கப் புறப்பட்டிருக்கிறான்.

“தாத்தா, தேத்தண்ணி குளுந்து போயிடும் எடுத்துக்கும், ரொட்டி... முருகேசு கீழே உட்காருகிறான். பச்சவேலு தலையில் அந்த வண்ணத்துண்டைச் சுற்றிக் கொண்டு, “சுகந்தி, வாரன், பத்திரம், ராவுல இல்ல, விடியக்காலம் வந்திருவ. வார, மாமா...!” என்று விடைபெற்றுக் கொண்டு படி இறங்குகிறான். சுகந்தி எழுந்து வாசலில் போய் நின்று பார்க்கிறாள். திருமணம் இளமையின் இனிய அநுபவங்களின் தோரணவாயிலாக, புதிய மெருகுகளை அழியாமல் வைக்கும் உணர்வுகளாக, லட்ச லட்சமான மலர்க் குவியல்களை முகிழ்க்கச் செய்திருப்பதை அந்த வறுமையில் கால்கொண்ட சாம்ராச்சியத்திலும் முருகேசு தரிசிக்கிறான்.

அத்தியாயம் - 15

மார்கழி பிறந்து குளிர் ஒடுக்குகிறது. பச்சை கருகும் ‘கண்டப்பனி’ மேடு பள்ளமெங்கும் சர்க்கரையாய்ப் பூத்திருக்கிறது. கையிலிருக்கும் பணத்தைப் பொத்திப் பொத்தி வைத்துக் கொண்டு, பழைய மார்க்கெட்டில் ஒரு கம்பளிக் கோட்டு, கையில்லாதது, வாங்குகிறான். முப்பது ரூபாய் ஆகிவிடுகிறது. அன்றாடம் இந்தக் குளிரில் எங்கிருந்தோ மக்கள் அழுக்குக் கந்தல் துணிகளாக வந்து விழுகிறார்கள். எல்லாரும், அந்த இலங்கைச் சீமையில் பிறந்தவர்கள் தாம். நல்ல உடம்பிலே பொங்கிய அழுக்குக் கொப்புளங்கள் போல், சரிவுகள், பள்ளங்களிலெல்லாம் கந்தலும் சாக்கும் தகரமும் கொண்ட குடிசைகள்தாம், முருகேசுவுக்கு இப்போது அந்த ஊரின் சுற்றுப்புறம் எங்கும் நடக்கவோ, வேலைக்கு அலையவோ கூடக் கூச்சமாக இருக்கிறது. பொட்டம்மா மகள் தோட்டத்தில் கிழங்கு தோண்டிய பிறகு மேஸ்திரி வேலை இல்லை என்று சொல்லிவிட்டான்.

‘தர்காரி’த் தோட்டம் என்று கோசு நாற்றுக்குச் செய் நேர்த்தி செய்யும் பணியில் ஆங்காங்கு இரண்டு நான்கு கிடைத்தது. சுகந்தியைப் பற்றிய கவலை விட்டாலும், தன் தோள்களில் இன்னும் மலையான பாரம் ஏற்றிக் கொண்டிருப்பது போலவே அவன் உணருகிறான்.

இப்போதெல்லாம் வீட்டுக்குப் பணம் கொடுக்க வேண்டுமே என்ற கவலை இல்லை. சுகந்தி சந்தோஷமாகத்தான் இருக்கிறாள். பச்சைவேலு, காலையில் சென்றால், இரவில் பன்னிரண்டு மணிக்கேனும் திரும்பி விடுகிறான். ஒரு தரம் அவளை ஒத்தைக்குச் சினிமாவுக்குக் கூட்டிச் சென்றான். திரும்புகையில் சரோசாவையும் தனத்தையும் பார்த்ததாகச் சொன்னார்கள்.

ஆனால், இரவு அவன் டீக்கடையில் இருந்து முடங்க வரும்போது, “தாத்தா, சாப்பிட்டீங்களா” என்று அவள் கேட்பதில்லை. காலையில் தேத்தண்ணீர் கொடுப்பதும் கூட விருப்பமிருந்தால் தான் என்று அருகிப் போகிறது. விரைக்கும் குளிரில் உழைத்துக் கறடுதட்டிய உள்ளங்கைகளைச் சூட்டுக்குத் தேய்ப்பது கூடக் கடினமாக இருக்கிறது. தன்னுடலிலேயே சூட்டுக்கும் இதத்துக்கும் உறுப்புகள் வேறுபட்டுப் போகும் கொடுமையில், யாரை நொந்து என்ன பயன் என்று சமாதானம் செய்து கொள்கிறான்.

எதிரே பனியைக் கரைக்கவல்ல சூரியக்கதிர் தலை நீட்டலாமா என்று யோசனை செய்வதுபோல் வானில் சிறிது நம்பிக்கை உதயமாகிறது. முட்டுமுட்டாகக் கைகளால் மேனிகளைப் பற்றிய வண்ணம் ஆங்காங்கு ஆண், பெண்கள் வெளிக் கிளம்புவதை அந்தக் குட்டித் திண்ணையில் இருந்து பார்க்கிறான். வீட்டுக்காரக் கிழவி, கோழிக் கூட்டைத் திறந்து விட்டிருக்கிறாள்.

கக்கக்கென்று சத்தம் செய்து கொண்டு தாயும் குஞ்சுகளுமாகப் பரவுகின்றன.

“தாத்தா, ஒரு பக்கெட்டி தண்ணி கொண்டாந்து தாங்களே, தேத்தண்ணி வச்சித்தார... மேலுக்கு முடியாம இருக்கு...”

சுகந்தி வாளியைக் கொண்டு வந்து வைக்கிறாள்.

இவன் பணம் கொண்டு வந்து குடும்பத்தைத் தாங்கிய நாட்களில் இவள் ஒரு நாள் கூட இப்படிக் கூறியதில்லை.

இப்போது, வாளியில் நீர் கொண்டு வந்தால் தேத்தண்ணீர் தருவதாகச் சொல்கிறாள்.

இவள் தேத்தண்ணீர் வைக்கவில்லையா? வைத்துக் கொடுத்து, பச்சைவேலு வெளியே போய் விட்டான். மணி எட்டடிக்கும் நேரமாக இருக்கும். வாளியை எடுத்துக் கொண்டு பாதையில்லாச் சரிவில், கல்லும் கரடும் கால்களை பதம்பார்க்கக் கீழே இறங்குகிறான். இந்த இத்தனை குடும்பங்களின் கழிவுகளும் மலங்களும், அங்கே கால்களை ஊன்றி வைக்கவே அருவருப்பைத் தருகிறது. தோட்டங்களில் வேலை செய்த நாட்களில், இதே மக்கள் இத்தனை அசுத்தங்களில் உழன்றிருக்க மாட்டார்கள்... ஒருவருக்கொருவர் மனங்களிலும் அழுக்கும், பொறாமையும் குவிந்து நெருங்க, வெளியிலும் அதே பிரதிபலிக்கிறது. தண்ணீர் வரும் இடத்திலும் கூட சுத்தம் குலைக்கப்பட்டிருக்கிறது. தண்ணீரே, வாளியால் மொள்ளும்படி இல்லை. மழை நாட்களில் செங்குழம்பாய் ஓடிற்று. இப்போது, இறைத்து நிரப்பும் வகையில் குறைந்து போய் விட்டது.

நீருடன் மேலேறுகையில் முருகேசுவுக்கு முன் பின்னென்று புரியாமல் ஒரு அச்சம் மனதில் படருகிறது.

பரமு பரிதாபமாக இரத்தம் துப்பி உயிரைவிட்ட நினைவு மனதைக் கவ்விக் கொள்கிறது. ஒருகால்... அவனுக்கு அது போல் ஏதேனும் வந்துவிடுமோ? இந்தப் பெண்ணிடமோ, அக்கம்பக்கத்திலோ, அந்த நிமிடத்தில் ஈரமே எதிர்பார்ப்பதற்கில்லை... ஒரு முறை பையனைப் பார்த்து... ‘லே, நீ இருக்கும் இடத்தில் நா வுழுந்து கிடக்கிறேன். இனி ஆவாது’ என்று சொல்லச் சந்தர்ப்பம் கிடைக்குமோ?... அவன் குழந்தையை ஆரத் தழுவிக் கொண்டு கண்கள் ஈரிக்கும் சொர்க்க சுகம் கிடைக்குமோ?

அவன் வீராப்பு, கருவம் எல்லாம் தொய்ந்து துவண்டு விட்டன.

அவன் மகன்... குமரு... அவனும் ராமாயியுமாய்க் கவிந்து காப்பாற்றி ஆளாக்கிய குமரன்... அவன் எட்டி உதைக்க மாட்டான். உதைத்தாலும் சொந்த இரத்தம். ஒரு கை இன்னொரு கையை அடிப்பது போல...

வாளியை வைத்தவன் தேத்தண்ணீருக்குக் காத்திருக்கவில்லை. உள்ளே சென்று தன் பெட்டியைத் திறந்து, பையை எடுத்து, மீதமிருக்கும் பணத்தை எண்ணுகிறான். நூற்றுப் பத்தும் சில்லானமும் தான் மீதி. இதுவும் கரையுமுன், சென்னைப் பட்டினம் சென்று, குமரனைப் பார்த்துவிட வேண்டும்...

பணத்தை மட்டும் கவருடன் வைத்துக் கொள்கிறான், கையில்லாத அந்தக் கோட்டின் உட்பகுதியில். பிறகு பெட்டியைப் பூட்டுகையில் சுகந்தி வாயிற் படியில் நிற்பதைக் கவனிக்கிறான்.

“வெளியில போறீங்களா தாத்தா?”

“ஏம்மா?”

“பாட்டி வாடகைப் பணம் கேட்டிச்சி...”

அவன் துணுக்குறுகிறான்... “அதும் குடுக்கணுமோ?...”

கிழவியே அப்போது வந்து விடுகிறாள். “மாசம் பொறந்து பத்துத் தேதியாவுது. சினிமாவுக்குப் போறிய, கறி வாங்கிக் குளம்பு வக்கிறிய, வாடகைப் பணம் கேட்டா இல்லன்றிய... தை பொறந்ததும் எம்மவ வாரா. எடத்தக் காலி பண்ணிட்டுப் போங்க?...”

“ஏம்மா சத்தம் போடுறீங்க? நா என்ன ஓடியா போயிட்ட? இத்தினி மாசமும் முத வாரத்தில உங்க பணத்தைக் குடுத்திடல?...”

“குடுப்பிய, ஆனா... இப்ப குடுக்க இல்ல. நானென்ன கண்ட?” முருகேசு எரிச்சலுடன் முப்பது ரூபாய் பணத்தை எண்ணி அவளிடம் கொடுக்கிறான்.

“பாத்துக்கிங்க, இனிமே, இந்த வூடு, இவ, புருசன் ரெண்டு பேருக்குந்தா பொறுப்பு. நா ஊருக்குப் போறேன், காலி பண்ணிட்டு...” சுகந்தியின் பக்கம் திரும்பிப் பாராமல் முருகேசு முரட்டுக் கம்பளியால் இழுத்துப் போர்த்துக் கொண்டு நடக்கிறான்.

டீக்கடையில் வந்து, சூடாக இரண்டு கிளாஸ் தேநீர் வாங்கி அருந்துகிறான். வருடக்கணக்கில் மழையிலும் கூதலிலும், சுகத்திலும் துக்கத்திலும் தேயிலை நிரைகளுக்கிடையில் நடந்த போதும், வெட்டிய போதும், கொத்திய போதும் அவனுக்கு அந்த மண்ணில் அலுப்பும் சோர்வும் தெரிந்ததில்லை. “இன்னும் இன்னும், மேலும் மேலும்” என்ற உக்கம் மடிந்ததில்லை. அந்தத் தோட்டத்தை விட்டு அவன் பிரியவே நினைத்ததில்லை. இரத்தமும் சதையுமாக இருந்த இரணம் பொறுக்குத் தட்டி உலராத நிலையிலேயே பிய்த்தெறிந்தாற் போல் அவன் அந்த மண்ணின் பற்றை உரித்தெரிந்து விட்டு வெளியேறினான். ஆனால், இங்கே வந்து இத்தனை மாதங்களாகியும் இவனுக்கு இது பொருந்தவில்லை. இதுதான் என் இடம் என்று அவன் தனக்குள் உறைத்துக் கொண்டாலும் ஒட்டவில்லை. லட்ச லட்சமாக மானிடர் இருந்தும் வெம்மையான நேசச் சுவாசமே நெருங்கி வரவில்லை... ஒடுக்கும் குளிரில் குறுகிக் கொண்டிருக்கிறான்.

ஒரு கட்டு பீடி வாங்கி வைத்துக் கொண்டு ஒன்றைப் புகைத்த வண்ணம், ஒத்தை செல்லும் வண்டியிலேறி உட்காருகிறான்.

ஒத்தையில் வண்டி மாறி, கூடலூர் பஸ்ஸைப் பிடித்து, சந்தைக்கு முன் நிறுத்தத்தில் இறங்குகிறான்.

ராசு கடையை அடையாளம் வைத்துக் கொண்டு செல்கிறான். கடையின் முன் சாக்குத் தொங்கவில்லை. இரண்டொருவர் சாமான் வாங்க நிற்கின்றனர். கல்லாவருகில் முன்பு பார்த்திராத இளைஞன் ஒருவன் இருக்கிறான். படிப்படியாக முடி வெட்டிக் கொண்டு, அழகு மீசையும், சட்டை கோட்டுமாக இருக்கிறான். ரேடியோவில் வரும் சினிமா பாட்டை ரசிக்கிறான்.

“ஏந்தம்பி, இந்தக் கடைக்காரத்தம்பி... உள்ள இருக்காரா?” அவன் அலட்சியமாக “தாத்தா கடைக்காரத் தம்பி, உங்கக்கு யாரு வேணும்?”

“...இது...ஸ்லோன் காரத்தம்பி கட தானே?”

“ஆமா, எங்க மாமா தா அவுரு. நீங்க யாரு?”

முருகேசு நிதானமடைகிறான். “ஒரு சங்கதி அவருகிட்ட கேக்கணும். நானும் ஸ்லோன் ஆளுதா. என் மகன் புஸ்தகமெல்லாம் போடுறான். போன மாசம் இங்க வந்து உள்ள எல்லாரோடயும் பேசிட்டிருந்தே....அதா மாஸ்டர், எல்லாருமா... இப்ப ஒரு முக்கிய சங்கதியாப் பாத்துப் பேசணும்னு வந்திருக்கிற...”

“மாமா ஊட்டிக்குப் போயிருக்காரு, நீங்க எங்கேந்து வறீங்க, சொல்லுங்க!...”

“நா ஸ்லோன்லேந்து வந்து வருசமாகப் போவுது. கோத்தகிரில இருக்கிறே. ஏந்தம்பி... குமாரவேலன்னு ஈழ விடுதலைப் புஸ்தகம் எல்லாம் எழுதறாருல்ல? அவ... எங்க மகந்தா...”

அந்த இளவட்டம், இந்த அநாகரிகமான தோட்டக் காட்டானை ஓர் ஏளனப் பார்வையால் குத்துகிறான்.

“அப்படியா?... நீங்க சொந்த அப்பாரா?”

“சொந்த அப்பா, எரவல் அப்பான்னு உண்டா? சொந்த அப்பந்தா. ரத்னபுராத் தோட்டத்தில வேலை செஞ்ச தோட்டத்தாள் நான். எங்க சொந்த மகன்...”

“...அப்படியா. ஆரும், இப்படிச் சொன்னதில்லியே? அவருக்குத் தாய் தகப்பன் இறந்து போய்ட்டாங்கன்னு தான் கேள்விப்பட்டிருக்கிறேன்...”

இவனுடைய அவநம்பிக்கை அலட்சியம் இரண்டும் முருகேசுவுக்குச் சினமூட்டுகின்றன...

“ஏண்டா? ஒங்கிட்ட எனக்குப் பொய் சொல்லி ஒண்ணும் ஆகவேணாம்? வயிசுக்கின்னாலும் கொஞ்சம் மதிப்புக் குடுக்கணும்!”

“பெரியவருக்குக் கோபம் வருது. ஏன் தாத்தா? நா என்ன மதிப்புக் குறவாப் பேசிட்ட? நீங்கதா இப்ப அடா புடான்னு பேசுறிய!”

“அடாபுடான்னு நான் என்ன பேசிட்ட?”

அவன் இவனுடன் பேசவே விரும்பவில்லை. “இத பாருங்க, கடைய விட்டு எறங்குங்க. நீங்க தேடற ஆளு யாரும் இங்க இல்ல. உள்ளாற வந்து வம்பு குடுக்கிறாரு...!”

சாமான் வாங்க வந்த இரண்டொருவரும் இவனை ஒப்பவில்லை. அவமானத்தால் சிறுத்தவனாக, ஆறுமுகத்தின் ஓட்டல் பக்கம் நடக்கிறான். படியேறி தோசையும் காபியும் அருந்துகிறான். தெரிந்த முகமாக யாருமே தென்படவில்லை.

ஆறுமுகத்தின் கேரளத்து மனைவியும் வீட்டு வாசலில் தட்டுப்படவில்லை. ஒரு ‘செருக்கன்’ இவன் அரவம் கேட்டு வந்து எட்டிப் பார்க்கிறான்.

“வீட்ட... அம்மா இல்ல?”

“ரெண்டு பேரும் இல்ல. தோட்டத்துப் பக்கம் போயிருக்கா?”

“தோட்டம் எங்க...? என்ன தோட்டம்?...”

“காபித் தோட்டம். சஞ்சைக்கு மடங்கும்...”

எங்கே என்பதற்கு மேலே கையைக் காட்டுகிறான்.

“மாஸ்டர்னு ஒருத்தரு வெள்ளச் சட்டப் போட்டுட்டு அன்னிக்குப் பார்த்தன, அவரு வீடு எங்க தெரியுமா?”

“அதா, அந்த மேடேறிப் போனா ஸ்கூல் வரும். அங்கே...”

எல்லாம் அந்த மேடு இந்த மேடு என்று கைகாட்டுகிறான்.

மகனின் சென்னை இருப்பிடம் பற்றிப் பழனியே சொல்லி இருப்பான் என்றாலும், இங்கே வந்து மாஸ்டரிடம் எல்லாம் பேசி விசாரிக்க வேண்டும் என்ற ஆவலுடன் ஓடிவந்தான். இனி, பச்சையும் சுகந்தியும் இருக்கும் வீட்டில் இருக்கப் பிடிக்காமல், இங்கே காப்பித் தோட்டம், அல்லது வேறு இடங்களில் வேலை கிடைக்குமோ என்ற நப்பாசையும் அவனை இங்கு புலனறியத் தள்ளி வந்திருக்கிறது.

மாலையில் திரும்பி வந்து ஆறுமுகத்திடம் விசாரிக்கலாம் என்று நெடுஞ்சாலையில், மார்க்கெட்டின் பக்கம் நடக்கிறான்.

பஸ்ஸும் லாரியும் சென்ற புழுதிக் கசகசப்புடன் வாணிப நெருக்கடியின் குரல்களும், மோதிக் கொள்ளும் சந்தைப்பேட்டை...

தேங்காய், வாழை என்று பொதி சுமந்த லாரிகள்... அரிசி மூட்டைகள், ஈமொய்க்கும் வெல்ல மண்டி, புளி...

“மாமா? மாமோ...!”

“அதா தாத்தா...!”

லாரி ஒன்று குறுக்கே திரும்ப முயற்சி செய்யும் நெருக்கம். மிளகாய்ச் சாக்கை உதறியதால் ஏற்பட்ட நெடி மூக்கிலேறுகிறது.

சடயம்மாளின் குரல் போல் ஒலித்தாலும் இவனால் சுற்றுமுற்றும் அந்தக் கும்பலில் இனம் கண்டு கொள்ள முடியவில்லை.

அவன் பின் கம்பளி நுனியைப் பற்றி செல்லி இழுக்கிறது.

...அம்மாளம்... ‘செல்லி...’ குழந்தை கைகாட்டி அவனை அழைத்துச் செல்கிறாள். ஒரு சுமை விறகை வைத்துக் கொண்டு ஓரமாகச் சடயம்மா நிற்கிறாள். அந்தக் கோலத்தை என்னவென்று சொல்ல!

மானம் மறைக்க முழுச்சீலை இல்லை. ஒற்றை ரவிக்கையின் மீது சேலைத் துண்டு மாறாப்பு; கீழே இன்னொரு துண்டம். எண்ணெய் கண்டு எத்தனையோ காலமாயிற்றென்று விள்ளும் சடைக் கூந்தல், மேலே கரிய சும்மாடு. இரண்டு குழந்தைகளும் அவளுக்கு வாரிசென்பதை அந்தப் பஞ்சைக் கோலமே விள்ளுகின்றன.

மதுரை ரயில் நிலையத்தில், பனியில் மலர்ந்த பூசணிப் பூவைப்போல் பளிச்சென்று அவள் விளங்கிய காட்சியை நினைத்துக் கொள்கிறான்... ‘எங்களுடன் வந்து விடுங்கள்’ என்று கூப்பிட்டு, நட்டாற்றில் விட்ட வேதனை அவனைக் குத்துகிறது.

“ஏம்மா, சடயம்மா? நீ இங்கியா இருக்கிற...?”

அவள் பதில் கூறுமுன் துயரம் வெடித்து வருகிறது.

“எப்பிடியோ உசிர் புழக்கிறம். காட்டுக்குப் போயி வெறகு வெட்டிக் கொண்டாந்து வந்து வித்து ரெண்டு சல்லி பாத்துக் கஞ்சி காச்சிக் குடிக்கிறம். மண்ணத் தின்னு புழங்க முடியலியே...”

பொங்கிவரும் கண்ணீரில் சொற்கள் முழுகிப் போகின்றன.

அவள் நெற்றியில் குங்குமம் இல்லை. பருமனாக ஒரு மஞ்சட் சரடு கழுத்தில் கிடக்குமே, அதுவும் இல்லை.

துணுக்குற்றவனாகப் பார்க்கிறான்.

“ஏம்மா, மாமுண்டி என்ன செய்யிறான்?”

“அவர ஆன மிதிச்சிப் பெரட்டிப் போட்டுது, இன்னோட இருபத்திரண்டாவுது...”

மளமளவென்று கண்ணீர் பெருகி வருகிறது.

அவன் வார்த்தைகளே எழாமல் சில்லிட்டுப் போனாற் போல் நிற்கிறான். அந்தச் சந்தைப் பேட்டையின் இரைச்சல்கள், நெருக்கடிகள் எல்லாவற்றுக்கும் மேலாக அவளுடைய விம்மல்கள் நெஞ்சில் இடிக்கின்றன.

“...அம்மாளம், ரோட்டு வலைன்னு தான போனிய?... என்னியப் பாவியா, துரோகியாக் கிட்டீங்களே?...”

“ரோட்டுவேலை பத்து நாத்தா இருந்திச்சி. பொறவு ஒண்ணும் தோதுப்படல. அல்லாம் இங்க காபித் தோட்டத்துல வேலை இருக்குன்னு வந்தா. மழ... ஊத்தோ ஊத்துனு ஊத்திச்சி. அங்க இங்க நிக்ய எடமில்ல. கடப்படி, வூட்டுப்படி ஏறித்தங்கினா, செம்பக்காணம், சட்டியக் காணம்னு மிச்சம் பேச்சுக் கேக்கணும். பொறவுதா எல்லாம் சுண்டிக்குப் போனம். நம்ம ஆளுவ நெறயப்பேரு காட்டுக்குள்ள குடிச வச்சிட்டிருக்கா. இந்தப் புள்ளியள வுட்டுப் போட்டு ரெண்டு பேரும் கருக்கல்ல போவம். கைப்புள்ள பாலுக்கில்லாம அளுதே சத்துப் போச்சி...”

“அளுவாதம்மா, ரொம்பப் பத்தாத காலம்...”

“பாரஸ்டாளுவ உபத்திரவம் வேற மிச்சமும். அவவுக்கு அஞ்சு பத்து, மொய் வய்க்கணும்... இந்தவெறவ இங்க வித்துப் போட்டு, டீத்தூளு, சக்கரை, கிளங்கு மாவு வாங்கிட்டுப் போவ. இந்தப் புள்ளிய அப்பனை ஆனை மெதிச்சிட்ட பிற்பாடு தனிச்சி இருக்க மாட்டேங்கிதுங்க... மாமா, தேயிலைக் காட்டுல நமக்கு எடமில்லன்னு சொல்ல இல்ல. கேப்பாரு பேச்சக் கேட்டிட்டு நாங்க ஓடி வந்தம். அப்பிடிச் சொல்லியிருந்தாலும் மலையிலியே இம்புட்டு நஞ்சரச்சிப் பிள்ளங்களுக்குக் குடுத்திட்டுச் சத்திருக்கணும்...”

முருகேசுவினால் இனியும் பொறுக்க முடியவில்லை.

“அழுவாதம்மா, நா ரொம்பத் தப்புப் பண்ணிட்டே. உங்களக் கூட்டிட்டு வந்தது நா. இல்லன்னா எங்கியோ போயி எப்பிடியோ பிழச்சிட்டிருப்பீங்க. இப்ப, நானே உங்களை நட்டாத்துல விட்டுப் போட்டேன்...”

“நீங்க என்ன பண்ணுவிய, எங்க தலையெழுத்து...”

“இல்லம்மா, நா இருக்கிற வரயிலும் உங்களை எப்படின்னாலும் காப்பாத்துவேன்... வாங்க... வாம்மா, செல்லி...?”

பன்னும் டீயும் வாங்கிக் கொடுக்கிறான்.

“பிறகு, நீங்க இங்க ஒரிடமா குந்தி இருங்க, நான் போயி ஒராளக் கண்டுக்கிட்டு வந்து உங்கள இட்டுப்போறே...?”

மாஸ்டர் வீட்டை விசாரித்துக் கொண்டு ஓர் உறுதியுடன் போகிறான்.

அத்தியாயம் - 16

அந்த வீட்டைக் கண்டுபிடித்து, அவரைச் சந்தித்தே தீருவேன் என்ற உறுதியுடன், எத்தனை பேரிடம் கேட்பது என்ற தயக்கமும் சடைவும் இன்றிக் கேட்டுக் கேட்டு ஒரு மேட்டில் அந்த ஒற்றைக் கட்டிடத்தைக் கண்டுபிடித்து விடுகிறான்.

வளைவு வாயிலில் ‘இங்கிலீசு’ எழுத்துக்கள். இரண்டு மூன்று பையன்கள், தோட்டத்தில் ஏதோ கொத்திக் கொண்டிருக்கின்றனர்.

முருகேசு படியேறி நிற்கிறான். சற்றே மூச்சு விட்டு, நிதானத்துடன், “தம்பிங்களா, மாஸ்டர்... மாஸ்டர் இருக்காருங்களா?” என்று கேட்கிறான்.

“மாஸ்டர் கிளாஸ் எடுக்காரு. முடிஞ்சதும் வருவாரு, இருங்க...”

சொற்கள் இதமாக இருக்கின்றன.

காத்திருக்கிறான். சந்தைப் பேட்டைச் சந்தியில், ஒரு முழுச்சேலைக்கும் இல்லாதவளாகிப் போன சடயம்மாவும் குழந்தைகளும் பிச்சைக் கோலங்களாகக் காத்திருக்கும் கோலத்தை நெஞ்சில் உறைய வைத்துக் கொண்டு உள் வாயிலில் விழிகளைப் படித்தபடி, வராந்தா ஓரம் நிற்கிறான். பத்துப் பன்னிரண்டு வயசுச் சிறுவர் சிறுமியர் உள்ளிருந்து வருகின்றனர். ஒரே மாதிரியான காக்கியும் வெள்ளையும் பையன்கள் அணிந்திருக்கின்றனர்; பெண்கள் பச்சையும் வெள்ளையும் அணிந்திருக்கின்றனர். தொடர்ந்து அவரும் வெளியே வருகிறார்.

“வணக்கம் ஐயா!... கும்பிடறேன்...”

“என்னப்பா விஷயம்?... உன்னை எங்கோ பார்த்தேன் போல இருக்குது?”

“அன்னைக்குக் கடையில், பழனிவேலுவோட வந்தேன் சாமி...”

“ஆமாம், சிரீலங்கா பைனான்ஸ்ல ஏமாந்து போனே, பிறகு... எதோ நகையக் குடுத்து வேறு ஏமாந்திட்டே இல்ல?”

“...ஆமாம் சாமி... இப்ப எனக்கு முக்கியமா, ஒரு ரொம்ப கயிஷ்டமான விஷயம்... நம்ம பொண்ணு... பொண்ணு போல தா. இங்க பொழக்க வழியில்லாம காட்டில வெறவு வெட்டிச் சீவிக்கிறதுங்க, புருசன ஆனை முதிச்சிடிச்சி... எனக்கு... லோனொண்ணும் தொழில் பண்ணக் கிடய்க்கல, கிடச்சதக் கொண்டு குடுத்திட்ட. அத்தோட நிரந்தரமா வேலை ஒண்ணும் இல்ல. இந்தப் புள்ள ரெண்டு குழந்தைங்கள வச்சிட்டு பராரியா நிக்கிது. ஒரு வேலை... எங்கனாலும் ஒரு வேலை... சாமி, இத்தினி கஷ்டப்பாடுன்னு தெரியாம வந்திட்டம். திருடுறது, பிச்சையெடுக்கிறது, ரெண்டும் கேவலம். ஆனா, ரெம்ப சனங்க ரெண்டுக்கும் தள்ளிவிடப் பட்டிருக்காங்க. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலய்யா!”

வெள்ளி பிரேம் மூக்குக் கண்ணாடி அணிந்திருக்கும் அவர் அதைக் கழற்றிவிட்டுத் துண்டால் கண்களை மூடித் துடைத்துக் கொள்கிறார்.

“அந்தப் பொண்ணு... அவங்க எங்க...? இங்க வந்திருக்காங்களா?”

“சந்தப் பேட்டயில உக்காத்தி வச்சிட்டு உங்க எடத்தைத் தேடிட்டு வந்தே ஐயா. இன்னொண்ணு உங்ககிட்டச் சொல்லணும். நா முதல்லியே சொல்லாததினால், எல்லாம் நம்பமாட்டேங்குறாங்க. நீங்க பேசிட்டிருந்தீங்க, மதிப்பா... அந்தக் குமாரவேலு எம் மகன்... சொந்த மகன். முதுகொடியத் தேயிலத் தோட்டத்தில அவன் ஆத்தாளும் நானும் உழச்சிப் படிக்கவச்சோம். கள்ளுத்தண்ணி பக்கம் போனதில்ல. புல்லுக்கன்ட்ராக்டு வேணுன்னு கூனிக்கூனி யாருயாருக் கெல்லாமோ வேலை செஞ்சேன். சதம் சதமா எண்ணிக் காசு சேத்து, மாசம் முப்பது நாப்பது அம்பதுன்னு குடுத்து அவனைப் படிக்கப் போட்டேன். வீண் போக இல்ல... அவனால் பேச முடியவில்லை.

“பெரியவரே, உள்ள வாங்க. வந்து இருங்க... ஆறுதலா... ஆறுதலா...” உள்ளே சென்று அவர் ஒரு நாற்காலியை எடுத்து வந்து வராந்தாவில் போடுகிறார். அவன் அதற்குள், “வேணாமுங்க... நீங்க நின்னுக்கிட்டு, நா... உக்காருறதாவது. உக்காந்து பழக்கமில்லீங்க...” என்று அவர் கையிலிருந்து நாற்காலியை வாங்கி ஓரமாகப் போடுகிறான்.

“...குடும்பத்தில் ஏதேதோ மனத்தாபப் பட்டுட்டு கடுமயாப் பேசிட்டேன். நீரடிச்சி நீர் விலகாதும்பாங்க. நீரடிச்சி ரெண்டு மண்ணையும் பிரிச்சி, இன்னிக்கு சொந்த பந்தம் இல்லாத ஒரு சுழலில சிக்கிட்டாப்பல அல்லாடுறோம். எனக்கு ஒருக்க அவனப் பாக்கணுமய்யா, பேசக்கூட வாணாம். தோட்டக்காட்டு அடிமை, இந்தப் புத்திதான அப்பனுக்கு இருக்குன்னு அவ வேதனைப் பட்டிட்டிருப்பா. அது இல்லேன்னு தெரிஞ்சிக்கணும்...’ அவ எங்கருக்கான்னு வெவரம் சொல்லிக்குடுங்க... ஒருக்க மட்ராசி போயிப் பாத்துட்டு வார... அதுவரய்க்கும், இந்தப் புள்ளியளுக்கு ஒரு வேலையும்... குடுக்கணும்...”

அவர் சிறிது நேரம் எதுவுமே பேசவில்லை.

“குமாரவேலு உங்க மகன்னு இப்பதா நாலஞ்சு நா மிந்தி ஆறுமுகம் பேச்சுவாக்கில் சொன்னாரு. நீங்க வர விருப்பப் படலன்னு அஞ்சாறு மாசம் முன்ன இங்க வந்திருந்தப்ப குமாரு சொல்லியிருந்தார். மகனிடம், சுயநல பரமாப் பாசமும் உரிமையும் வைச்சிருக்காத உங்களைப் பார்க்கிறப்ப, இப்பிடியும் மனிசர் இருக்கிறார்னு கண்ணில தண்ணி வந்திரிச்சி. அவரு சம்சாரம், இப்ப... உங்களுக்குத் தெரியுமா...?”

“என்னங்கய்யா? தெரியாதே? சொல்லுங்க?”

“காண இல்லண்ணு தகவல். சிறையில இருக்காங்களோ, தலமறவாப் போயிட்டாங்களோ தெரிய இல்ல. இவுரு, தோட்டத் தொழிலாளிகள், தமக்கு உரிமையில்லாமல் வாய்ப் பூட்டுப் போடப்பட்ட அந்த 48, நவம்பர் பதினஞ்ச இப்ப, முழுதுமா அர்த்தால் அனுஷ்டித்து நினைவு கூறணும், போராடணும்னு திட்டம் வச்சிட்டு அங்க போகப் போறதாச் சொன்னாரு. குழந்தைய அதனாலதா மட்றாசில கொண்டு வந்து விட்டுப் போட்டேன்னாரு. மட்றாசில மச்சான் குடும்பம் கொண்டு வச்சிருக்கிறா. இன்னும் அவ சொந்தக்காரங்களும் இருக்காங்க போல இருக்கு. சின்ன பிரஸ் ஒண்ணு பார்த்திட்டிருக்கிறோம்னு சொல்லிட்டு ரொம்ப நேரம் கதைச்சாரு. இப்ப நமக்கு இப்படி அறிக்கைகள் வர தகவல்தான். மெட்றாசிலேந்து கல்லூரி மாணவர்கள் ஆய்வு பண்ணி ஒரு குழு வந்திருந்தாங்க. அவங்க கிட்டயும் விசாரிச்சேன். தோட்டங்களில் இலங்கையில் நம் தொழிலாளர் விழிப்புணர்வோடு போராடுறதாத் தகவல் வந்திட்டிருக்கு. எப்படியும் ஒரு திருப்பம் வந்துதானாகும்னு தோணுது. நீங்க... இப்ப என்ன செய்யப் போறீங்க...!”

...தவம்... அந்தப் பெண்... இவன் மருமகள்... சிறையில்... தலைமறைவு... இவனால் சீரணிக்கவே முடியவில்லையே!

படிப்பு, வேலை, எல்லாம் இருக்கும் போது, ஒரு பெண், போராட வந்திருக்கிறாள். யாருக்காக? எதற்காக?

ஐயோ? சிறையில் என்னென்ன கொடுமைகள் இழைப்பார்கள் என்பதை எல்லாம் தூத்துக்குடியில் அன்று சொன்னார்களே? இந்தப் பூப்போன்ற பெண்ணை எப்படியெல்லாம் பாடுபடுத்தியிருப்பார்களோ? குமாருவும் அந்தக் களத்தில் தான் போராடிக் கொண்டிருப்பான்...! முருகா! கதிர்காமக் கந்தா!... இவனுக்கு நா எழவில்லை. சடயம்மாவையும் குழந்தைகளையும் இந்த நெக்குருகலில் தாற்காலிகமாக மறந்து போகிறான். பெற்ற தாயின் கடைசி முகம் பார்க்கக் கூட வரவில்லை என்று அல்லவோ பொங்கினான்? எல்லாம் அற்பங்களாகி விட்டன.

அவர் உள்ளே சென்று ஏதோ புத்தகத்தைக் கொண்டு வந்து புரட்டுகிறார். அதில் இருந்து அந்தச் சென்னை விலாசத்தைப் படிக்கிறார்.

செல்வி ராஜசேகரன், ஏழாம் குறுக்குத் தெரு... பாரதி நகர்,... அண்ணாநகர் எக்ஸ்டென்ஷன்...

“இந்த இடத்தில் தான் பிள்ளைய விட்டிருக்கிறதாகச் சொன்னா. ‘மாஸ்டர், உங்ககிட்ட இந்த அட்ரஸ் இருக்கட்டும்... உங்க ஸ்கூல் நல்லபடியாக நல்ல தாபனமா வரும்..’னு சொல்லிட்டுப் போனாரு. சொந்த பந்தம், பிள்ளை, தகப்பன், எல்லாப் பாசங்களையும் கழற்றிப் போட்டு விட்டு, நீதி கேட்கக் களம் இறங்கியிருக்கிறாங்க. நீங்க இங்க வந்திருக்கிறீங்கன்னு தெரிஞ்சா, ஆறுதலாயிருப்பாராக இருக்கும்...”

இராமேசுவரத்தில் சுந்தரலிங்கம் பார்த்துச் சொன்னதாகச் சொல்லவில்லையா? அப்போது ஏன் நிற்கவில்லை...?

முருகேசுவுக்குத் தோட்டத்துத் தேயிலை நிரைகளும், அந்தப் பிராந்திய வளைவு பாதைகளும் தான் தெரிந்தவை. அவனுடைய அறிவுக் கண்கள் இதற்குமேல் விரிவு பெறாதவை. அவனுக்குப் புரியவில்லை. ஆனால், சந்திரனின் மேடு பள்ளங்களும் நிழலும், பின் நிலவு வெளிச்சத்திலும் கூட நினைவு வருவதில்லையே? அவன் மகனும் மருமகளும், தோட்டக்காட்டுத் தமிழர்களிடையே புதிய சரித்திரம் படைக்கப் போயிருக்கிறார்கள். வாழ்நாளெல்லாம் கணக்கப்பிள்ளை, கங்காணி, காலைச் சங்கு, பிரட்டுக்களம், கள்ளுக்கடை என்று சிறுமைக்குள் அழுத்தும் சுழலை விட்டு வெளியேறத் தெரியாமலேயே உதிரம் தேய்ந்து, மாண்டு மடிந்து அந்தத் தேயிலைக்கே உரமாகிப் போனவர்களின் சந்ததிகளைப் புதிய மனிதர்களாக்க இவர்கள் போயிருக்கிறார்கள்.

இந்த நினைப்பில் மயிர்க்கூச் செறிகிறான்.

“...யாரோ, உங்க பொண்ணு, காட்டுல விறகொடிக்கயில ஆளை முதிச்சிப் போட்டுதுன்னு சொன்னீங்களே? கூட்டிட்டு வாருங்க!...”

இவனுக்குப் பிறகுதான் நிகழ்காலம் - நினைவுக்கு வருகிறது.

இறங்கிச் சென்று, சந்தைப் பேட்டையில், மண்டியருகில் நின்ற சடயம்மாவையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வருகிறான். மாஸ்டர், “எட்வர்ட்! எட்டி...?” என்று கூப்பிடுகிறார். வெள்ளைச் சட்டையும் அரைச் சராயும் அணிந்த பையன் வருகிறான்.

“ஆறு பேருக்கு, தேத்தண்ணி வச்சிக் கொண்டாங்க, காந்தம்மா இருக்கில்ல?”

“சரி, மாஸ்டர்!” என்று பையன் உள்ளே செல்கிறான்.

மாஸ்டர் செல்லியையும் விழிகள் பொங்கி மூக்கு ஒழுகும் பையனையும் பார்த்து இரங்குகிறார்.

“உம்பேரென்ன பையா?...”

“வேலு...”

“தங்கச்சி பேரு...?”

“செல்லி” என்று செல்லியே துடிப்பாகச் சொல்லுகிறது. உள்ளே சென்று அவரே ஒரு வட்டையில் சுடுநீர் கொண்டு வருகிறார். ஒரு துண்டும் கையில் இருக்கிறது.

“நல்லாக் கழுவிக்கிங்க... கழுவி விடும்மா... தேத்தண்ணி கொண்டாருவா...”

சுடுநீரில் கழுவிக் கொள்வதே ஆடம்பரமாகி விட்ட வாழ்க்கையாகி விட மானுடம் அடித்தளத்துக்கு வந்து விட்டது.

தட்டில் வருக்கி பிஸ்கோத்தும், கடலை உருண்டையும் எடுத்து வந்து பிள்ளைகளுக்குக் கொடுக்கிறார். “இருங்க... உக்காந்துக்குங்க...”

கண்ணாடிக் கிளாசில், தேத்தண்ணீர் ஊற்றி வந்து எட்டியும், பாவாடை சட்டைப் பெண் காந்தம்மாவும் கொடுக்கிறார்கள்.

சடயம்மா, குறட்டோரம் உட்கார்ந்து தேநீரையும் பிஸ்கோத்துகளையும் குழந்தைகளுக்கும் கொடுத்துத் தானும் உண்ணுகிறாள்.

பிறகு மாஸ்டர், காகிதமும் பேனாவும் எடுத்து வைத்துக் கொண்டு அவளிடம் விவரம் கேட்கிறார். அவள் சொல்வதெல்லாம் குறித்துக் கொள்கிறார்.

“ஏம்மா, ‘சுண்டி’ப் பக்கத்தேந்து தான வார? காட்டுலேந்து சந்தனக்கட்டை எல்லாம் திருடி வித்துப் போடுறாங்க, இலங்கை யாளுவங்கறாங்களே?”

“சாமி, அதெல்லாம் நெம்பர் போட்ட மரமுங்க, நாங்க ஏங்க அதெல்லாம் தொடப்போறம்? கிட்டக் கூடப் போக மாட்டம். அதும் அவிய பாரஸ்டாருட்ட பாஸ் வாங்கி வச்சிருந்தா. இத்துப் போயிவுளும் கட்ட, குச்சி, காஞ்ச கொம்பு இதெல்லாந்தா வெட்டிட்டு வருவோம். இதுக்கே ஃபாரஸ்டாளு செலப்ப, காசு கொடுக்கலன்னா வம்பு பண்ணுவா...”

“ஆன எப்பிடி வந்திச்சி?”

“அது ஒத்த ஆனயிங்க. ஆரோ சுட்டிருக்காங்க போல இருக்கு. நெடு நெடுன்னு வந்து கொம்பெல்லாம் ஒடிச்சிப் போடும். முன்ன, ஒரு பொம்பிளயும் பயனும் ஓடக்கரயில சோறு தின்ன உக்காந்திருக்கச்சே வந்து சவட்டிப் போட்டுதாம்... பையன் எந்திரிச்சி ஓடிட்டான். பொம்பிள... தா அம்புட்டுக்கிட்டா. அல்லாம் கத சொல்றாப்பில ஆயிப் போச்சிங்க. இவங்க மரத்துமேல குந்திட்டு, காஞ்ச கிளைய ஒடிச்சிட்டிருந்தாங்க போல. ஆனை ஆனைன்னு சுத்துவட்டும் அம்புட்டுப் பேரும் ஓடிட்டாங்களாம். நாங்க பொம்பிளங்க இன்னொரு பக்கம் செம கட்டிட்டிருந்தம்..., அம்போ கும்போன்னு எல்லாரும் ஓடி வந்தம், இவங்கள மட்டும் காங்கல. சரி, எங்கிட்டின்னாலும் ஒளிஞ்சிட்டிருப்பா, வந்திருவான்னு ராமுச்சூடும் தவிச்சிட்டிருந்தே. ஒருக்க மரத்துமேல இருப்பா. ராமுச்சூடும் ஆன கீன நீக்கும்னெல்லாம் வர எலாதுன்னு அல்லாம் தயிரியம் சொன்னா. அடுத்த நா முச்சூடும் வர இல்ல. ஃபாரஸ்டாபீசில சொன்னம். பின்னாடி பார்த்தா, ஆனை பொரட்டி அளுவிப்போன ஒடம்பு தா கிடச்சிச்சி... ‘ஆனை சல்லியம் குடுத்தாலும் ஏன் இங்க வந்து சாவுறிய! காலி பண்ணிட்டுப் போங்க’ன்னு அல்லாம் வெரட்டுறாங்க. நூறு நூறாக் குடும்பங்க இருக்குங்க, எங்கிட்டுப் போவ?...”

“அந்த ஒத்தையானை இது வரை நிறைய ஆளுங்களைக் கொன்னிடிச்சி. அதைச் சுடக்கூட ஆர்டர் குடுத்தாச்சின்னு சொன்னாங்க...” என்று அவர் தெரிவிக்கிறார்.

“ஆனக் காட்டுல வந்து சாவனுமின்னு விதி போட்டிருக்கு...”

இந்தச் சொல்லே ஈட்டி முனையாக வெந்த புண்ணில் உரைக்கிறது. அவனுக்கு வேலை... அத்தனை பேருக்கும் வேலை இல்லை. உடலை வருத்தி உழைக்க வேலை. பூமி... நிழல்... எதுவுமே இல்லை! ஆயிரம் ஆயிரமாகக் குடும்பங்கள் இப்படி நிலை குலைந்து குற்றுயிராக சாகாமல் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

“இதுக்கு எங்கனாலும் ஒரு வேலை பார்த்துக் குடுங்கையா... ரொம்பப் புண்ணியமாப் போகும். இந்தப் புள்ள, இவக்கா, அம்மா அப்பா அல்லாரும் ஒரு குடும்பம் பொல இருந்தம். குமாரு ஒருத்தனப் படிக்கப் போட்டன்னா, அதுக்கு இவங்களும் கூட ஒத்துழச்சாங்க. இன்னிக்கு எப்படீன்னாலும் ஒரு உதவி நீங்க செய்யணும் சாமி...!”

“...பிள்ளைங்க ரெண்டயும் பள்ளிக் கூடத்தில போடலாம், இங்க இருந்துக் கிடலாம். அதும் கஷ்டந்தா. இவங்களுக்குத்தான் பாதுகாப்பா எடம் வேணுமில்ல? நீங்க இருக்கிற எடத்துக்கு இப்ப கூட்டிட்டுப் போங்க, நா தகுந்த எடமா வேலை பாத்துச் சொல்லுறே...!”

வேறு வழியில்லை. இருந்தாலும் அசுவாசமாக இருக்கிறது.

குழந்தைகளை அங்கு விடுவது கஷ்டமாக இல்லை. தேநீரும் பிஸ்கட்டும் தந்தார்கள். பசி தெரியாமல் சாப்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கை, தாயின் மீதிருக்கும் பிணைப்பையும் கூடத் தாற்காலிகமாக வென்று விடுகிறது.

பஸ் ஏறிச் சென்று, கானகத்தின் ஓரம் முட்டு முட்டாக இவர்களின் பஞ்சை குடிசைகளைப் பார்க்கிறான். குஞ்சு குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாகக் காட்டு விலங்குகளும் நச்சரவங்களும் நடமாடும் இடங்களில் ‘வாழ’ வந்திருக்கிறார்கள்!

இது போன்ற கானகங்களில் நடந்து, காடுதிருத்திப் பசுமைக் கண்டு, பொன்னைக் கொழிக்க வைத்து, சீமைத் துரைமாரும் சின்னத்துரை வருக்கங்களும் நாகரிக பங்களாக்களில் சொகுசு வாழ்க்கை வாழத் தங்களைத் தேய்த்தவர்கள், இன்று தங்கள் சந்ததிக்கு எந்த நம்பிக்கையும் இல்லாமல் துடைத்து மீண்டும் இந்தக் கானகங்களில் தங்களை முடித்துக் கொள்ளும் அவலத்துக்கு நிறுத்தியிருக்கிறார்கள்...

மூங்கிலை நட்டு மண்ணை அப்பித் தேய்த்து காய்ந்த காட்டுப் புற்களை வேய்ந்த வீட்டில், கதவுகூட ஒழுங்காக இல்லை. ஏழைக்கு அலுமினியம் சட்டியும் உடைந்த பிளாஸ்டிக்கும் கூடத் தங்கமாயிற்றே? சிம்னியில் சிறிது எண்ணெய்த்திரி இருக்கிறது. அதை ஏற்றி வைக்கிறாள் சடயம்மா.

“இந்த வெளக்கு இல்லன்னா, விஷப்பூச்சி வாரது கூடத் தெரியாது. எதுனாலும் நஞ்சு கலக்கிக் குடிச்சிட்டுப் போயிரலாம்னுதா தோணும். ஆனா,...இந்தப் பிள்ளங்கள எப்பிடிக் கொல்லலாமின்னு நினைச்சா...”

நெஞ்சு கம்மிப் போகிறது.

“...அழுவாத அழுவாதம்மா. கதையில சொல்லுவாங்க. பாரதயுத்தத்துக்கு மேல இது பெரிசு. அப்ப ஜப்பான்காரன் ஜர்மன்காரன் குண்டு போட்டான்னாங்க. நம்ம தோட்டம் வரய்க்கும் அப்பக் கூடத் தட்டுப்பாடு இப்பிடி இல்ல. அரிசிக்குத் தட்டுப்பாடுன்னாக்கூட, சோமபாலாவும் பொடிசிங்கோவும், பலாக்காயும் கிழங்குமாக் கொண்டு வந்து குடுத்திருக்கா. தண்ணி விட்டுக் கழுவித் தோலை உரிச்சி வெட்டி வேக விடுவோம். தேங்காய்த் திருவிக் கொட்டினால் என்ன ருசியா இருக்கும்! அவங்களுக்கு அரிசியே கிடைக்காது. எஸ்டேட் அரிசி. துரை எங்கிருந்தாலும் தருவிச்சி ரேசன்ல போடுவதை, அப்ப இப்ப கொஞ்சம் டீத்தூளும் கூடக் குடுத்தா, கோணியோட கொண்டாந்து கொட்டுவா... விலையே இல்லாமல் குடுத்திருக்கா, வரிக்கான் தேன்களை... பத்து வருசம் பழை இல்லாம இருந்தாலும் பலாக்காயும் மரவள்ளியும் ஈடு கொடுக்கும். பாக்குமரம் தன்னால் கொட்டிக் கிடக்கும். நூறு இருபது சதம், தப்பினா முப்பது சதம்... அந்தக் காலம் எல்லாம் ஏன், எப்படிப் போச்சி? அதே சிங்களவங்க, எப்பிடி மாறிப்போனா? ஆய் ஊய்னு கத்திட்டு வந்து தீயே வச்சு, கந்தன் கோயிலுக்குப் போயிட்டு வந்த சனங்களை... குஞ்சும் குளந்தையுமா எரிச்சிப் போட்டானுகளே? பாவிக...”

எதை எதையோ நினைத்து நிகழ்காலத்துத் திகில் பள்ளங்களை மூட முயன்று இரவைக் கழிக்கிறார்கள்.

“சுகந்திய பச்சைக்குத்தா கட்டி வச்சிருக்கு. அங்க உன்ன ஒருவாரம் பத்துநாப் போல வுட்டுவச்சிட்டு, ஒருநட மட்றாசிக்குப் போயி, அந்தப் புள்ளயப் பாக்கணும்னிருக்கு. தாபமா இருக்கு சடயம்மா. மாஸ்டர் சொல்றாரு, தவம்... தவம், குமாருவோட பொஞ்சாதி ஜெயில்ல இருக்கும்னு. இவன், இங்கியும் அங்கியும்னு, எந்த நிமிசமும் குண்டடி பட்டுச் சாவுற சோலியில குளந்தய விட்டுப்போட்டுப் போயிருக்கிறானாம். கேட்டதிலேந்து மனசு ரொம்பத் தவிக்குது...”

“குமருவா...?”

“ஆமாம். அன்னன்னிக்கு குண்டடிபட்டு செத்திட்டிருக்கிறாங்க சனங்க. எலிகோப்டரில இருந்து சுடறாங்களாம். பேப்பர் படிக்கிறவங்க, பேசிப்பாங்க. ஆனா, அதெல்லாம் நமக்கு இல்லன்னு நான் காதில போட்டுக்கிட்டதில்ல. ஆனா, நேத்து விசயம் கேட்ட பிற்பாடு... ரொம்பத் தாவமா இருக்கு...”

“மாமா, எம் புள்ளங்கள ஒரு எடத்துல ஒப்பிச்சிட்டம். எப்பிடியோ அதுங்க புழச்சிக்கிடட்டும். இனி எனக்குக் கவல இல்ல. என்னப்பத்திக் கவனிக்காம நீங்க போயிவாங்க...”

“சுகந்திப் பொண்ணு அப்பப்ப கோவமா ஏறுமாறா நடந்துட்டாலும் நீ மனசில வச்சுக்காத. சொல்லி வைக்கிறேன்... அட, பொட்டம்மா வூட்டில போயி அஞ்சு தடவைக்கு நாலு தடவியாக் கேட்டா, எங்கனாலும் உன் வயிறு புழக்க வேலை கிடைக்கும். நம்புவோம்...”

முருகேசு தன் எண்ணங்களையே உரத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறான். ஆனால், சடயம்மா ஒப்பவில்லை. “மாமு நீங்க தப்பா நெனச்சிக்காதீங்க. துப்புன எச்சிய முழுங்குற மாதிரி நா மறுக்க அங்க வரதுக்கில்ல. நீங்க ஊருக்கெல்லாம் போயி வாங்க. நா இப்ப புள்ளங்க கவல இல்லாததால, எப்பிடியோ கஞ்சி காச்சிக் குடிச்சிப்ப... இப்ப நானு கோத்தகிரிப் பக்கம் வர இல்ல...”

முருகேசு வேறு வழியின்றித் திரும்புகிறான்.

அத்தியாயம் - 17

முருகேசுவுக்குக் கொழும்பு நகரம் தெரியும். அந்தப் பாவனையுடன் சென்னை சென்டிரல் நிலையத்தில் வந்திறங்கி வெளியே வருகிறான்.

“உனக்கு சரியாகச் சொல்ல வாராது... இந்தச் சீட்டை போலீசுகாரங்ககிட்ட காட்டினா, சரியான நெம்பர் பஸ்ல ஏறச் சொல்லிக் காட்டுவா. மிச்சம் பொலீசும் மோசம்னு வச்சிடாதீங்க! உதவுவாங்க!” என்று குழந்தை வேலு சொல்லி இருக்கிறான். அதைக் கெட்டியாக முடிந்து கொண்டு, படியருகில் நிற்கும், ‘பொலீசு’ உடை தரித்த ஒருவரிடம் அவன், “இந்த அட்ரசுக்கு எப்பிடிப் போகணும்னு சொல்றீங்களா சார், கொஞ்சம்!” என்று கேட்கிறான்.

சாதாரண ‘கான்ஸ்டபிலை’ விட உயர்ந்த அதிகாரி போல் அவர் தோன்றுகிறார். நடுத்தர வயசுக்காரர். பார்க்க அச்சுறுத்தும் முகமாக இருந்தாலும், இவனிடம், “இப்படி வெளியே சுரங்க வழியில் போய் ரோடுக்கு அப்பால, அதா பஸ் நிற்கிறதே, அங்கே போயி, பதினஞ்சு நம்பரில் ஏறு!” என்று காட்டிக் கொடுக்கிறார்.

முருகேசு சுரங்கப் பாதையில் இறங்கிச் சாலையைக் கடக்கிறான். அவன் கண்டிருந்த பெருநகரங்களைக் காட்டிலும் சென்னைப் பட்டினம் மிக மிகப் பெரியதென்று தோன்றுகிறது... பஸ்... பஸ்களில் தேனீக்கள் அடையில் மொய்ப்பது போல் மொய்த்துக் கொண்டல்லவோ மக்கள் ஒட்டிக் கொண்டு வீதியில் நகருகின்றனர்! பஸ்... ஒன்றா இரண்டா?... கார்கள், டிரக்குகள்... கலுகங்கையில் வெள்ளக் காலத்தில் தண்ணீர் ஓடுவது போலல்லவோ ஓடுகின்றன? முதலும் புரியவில்லை; முடிவும் புரியவில்லை. இப்படி ஒரு மக்கள் கடலினிடையே, குமாருவின் மச்சான் குடியிருக்கும் வீட்டை எப்படிக் கண்டு பிடிக்கப் போகிறான்?

‘காவல் துறைக்கார’ காட்டிவிட்ட நிறுத்தத்தில் பஸ்கள் வருகின்றன, நிற்கின்றன; நகருகின்றன. அலுவலக நேரம், மக்கள் பிதுங்கி வழியத் தொத்திக் கொள்கின்றனர். நீள நெடுக, பஸ்ஸுக்குக் காத்திருப்பவர்களின் தங்குமிடச் சார்புகள் இருக்கின்றன. அவன் தன் கையிலுள்ள விலாசச் சீட்டை மீண்டும் அங்கு நிற்கும் ஒரு பெண்மணியிடம் காட்டுகிறான்.

“பதினஞ்சு பஸ் எங்கம்மா நிக்கும்?”

“இதோ... அடுத்த ஸ்டாப்ல நில்லுங்க...”

அவள் காட்டுமிடம் ஆஸ்பத்திரி வாயிலை ஒட்டி இருக்கிறது.

அங்கிருந்து ஓர் உடலை, ஓரமாகக் குதிரை வண்டியில் ஏற்றிக் கொண்டு வருவதைப் பார்க்கிறான். தலைவிரி கோலமாக ஓர் இளம் பெண்... ஒரு முதியவர் இருவரும் கதறி அழுது கொண்டு தொடருகின்றனர்.

இளம்பிள்ளையா மாண்டவன்...?

முருகேசு துணுக்குற்று, அந்த இருவரையும் வண்டியையும் மட்டுமே பார்த்துக் கொண்டு நிற்கிறான் சிறிது நேரம்.

எந்த பஸ்கள் நின்றன, சென்றன என்று கவனிக்கத் தவறியவன் சட்டென்று நினைவில் தன் நிலை உறுத்த நிமிர்ந்து கொள்கிறான்.

“ஏங்க, பதினஞ்சி பஸ்... வார எடம் சொல்றிங்களா?...”

“இதா, வந்திட்டது, ஏறு! ஏறு!...”

முருகேசு தன் பையுடன் கூட்டத்தில் நசுங்கிக் கொண்டு ஏறி விடுகிறான்.

குளிர்காலம் என்பதின் சுவடே இல்லை. வெம்மையும் நெருக்கடியும் நெடிகளும், இரைச்சலும் இறுக்கிப் பிடிக்கின்றன.

“ஏய்யா! எங்க போவணும்?... நகர்ந்து முன்ன போங்க... முன்ன போங்கய்யா! உள்ளாற எவ்வளவு எடம் இருக்கு!...”

டிக்கெடெ கேட்டுவரும் நடத்துனர், இவனிடம் மீண்டும் எரிந்து விழுகிறார்.

“ஏய்யா எங்க போகணும்?...”

“எக்ஸ்டென்சனுங்க...” இரண்டு ரூபாய் நோட்டைக் கொடுக்கிறான்.

உறுத்துப் பார்க்கிறார். பிறகு ஒரு ரூபாய் அழுக்கு நோட்டையும் ஒரு சீட்டையும் கிழித்து அவனிடம் கொடுக்கிறார்.

அசைய முடியாத நெருக்கத்தில், பையைப் பத்திரமாக அமுக்கிக் கொண்டு முருகேசு நிற்கிறான். பட்டணம் இனம் புரியவில்லை.

பெரிய நீண்ட சாலைகளில், நெருக்கடியான கடை வீதிகளில் பஸ் புகுந்து செல்கிறது. எங்கு பார்த்தாலும் மாடி வீடுகள், விளக்குகள்... கடைகள், மனிதர்கள், சீருடை அணிந்து பள்ளிசெல்லும் குழந்தைகள், அலுவலகங்களுக்குச் செல்பவர்கள் என்று வண்டி நின்று நின்று, இன்னம் இன்னம் என்று விழிபிதுங்க ஏற்றிக் கொள்கிறது.

பெரம்பூர்...! வில்லிவாக்கம்! ஐ.ஸி.எஃப்...! அம்பத்தூர் என்று சீட்டைக் கிழித்துக் கொடுக்கிறான்; மாத அட்டைகளைத் துளைத்துத் தருகிறான்.

பட்டணத்தில் எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது? இவனுக்கும் இங்கே வேலை கிடைக்கும். சடயம்மாவைக் கூடக் கூட்டி வந்திருக்கலாமோ? ஓரிடத்தில் குனிந்து பார்க்கிறான். வளைவு வாயில் தோரணங்கள், வரவேற்பு வைபவம் நிகழ்ந்த அடையாளங்கள்... பானர்களில் ஏதேதோ எழுதிய வாசகங்கள். கறுப்பும் சிவப்புமாக அலங்காரங்கள். இரட்டை இலை வரிசைகள்... முதலமைச்சரின் பெரிய ‘கட் அவுட்’ தெரிகிறது. பல்வேறு சினிமா விளம்பர ஒட்டிகள்... இந்தியா... இந்தியாதான்!

ஒரு குறிப்பிட்ட இடம் வந்து நின்றதும், “எறங்கு பெரியவரே!” என்று நடத்துனன் உசுப்புகிறான்.

முருகேசு சட்டென்று பரபரப்புடன் பையைக் கவனமாகப் பற்றிக் கொண்டு இறங்குகிறான்.

நெருக்கமான சாலை. இருமருங்கிலும் சந்தடி மிகுந்த கடைகள். துணிக்கடை, பாத்திரக்கடை, இரும்புக் கம்பி, சிமிட்டி போன்ற ‘கனரக’ சாதனங்கள் விற்கும் கடைகள்...

இடையே குறுகலான சாலையில், பஸ்களும் லாரிகளும் போவதும் வருவதுமாக மிகுந்த நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கிறது. சாலையே குண்டும் குழியுமாக, அணிமையில் பெயத மழை, புயலின் சின்னங்களை இன்னும் தாங்கிக் கொண்டிருக்கிறது.

மாவுமில் கிரீச் கிரீச் சென்று, வண்டி வாகனங்களின் இரைச்சலுக்கு மேலாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறது. அடுத்து ஒரு பலசரக்குக் கடை... வாயிலில் ஓர் அம்மாள் நிற்கிறாள். முருகேசு, தன் விலாசச் சீட்டை அவளிடம் காட்டலாமா என்று நினைக்கு முன், ஒரு சேற்றுக் குழியில் இறங்கிய லாரிச்சக்கரம், எழும்புகையில் சர்ரென்று சேற்று நீரை வாரி இறைத்துக் கொண்டு நகருகிறது. தன் சட்டை, வேட்டியில் அந்தச் சேறு தெறித்ததும், முருகேசுவுக்கு மிகவும் ஆத்திரமாக இருக்கிறது. தனது வறுமைக் கோலத்துக்கு இப்படியும் வேறு ஒரு அலங்காரமா என்று வெதும்பிப் போகிறான். போட்டிருப்பது நீலச் சட்டையும் கையில்லாத அந்த அரைக் கோட்டும்... இவனைப் போல் அரைக் கோட்டுத் தரித்தவர் எவரும் அங்கு தென்படவில்லை, என்பதும் அப்போது புலனாக, அதை மெள்ளக் கழற்றி, உட்பையில் உள்ள பர்சும் பணமும் பத்திரமாக இருக்கிறதா என்று பார்க்கிறான். பிறகு கடைப் படியில் ஒதுங்கி, அதைக் கைக்குள் இடுக்கிக் கொள்கிறான்.

அவன் அணுகிக் கேட்க இருந்த பெண்மணி இதற்குள் மறுபக்கம் போய்விட்டான்.

முருகேசு அப்போது தான், அந்தச் சாலையின் இடப்புறம் அகன்ற பெரிய சாலையும் இருமருங்கிலும் குடியிருக்கும் மாடி வீடுகளும் இருப்பதைக் காண்கிறான். சாலையில் இரு புறங்களிலும் மரங்கள்... வீடுகளின் முன் பசுமையாகப் பூச்செடிகளும் கோலங்களும் விரியும் வாயில்கள்... சாலை திரும்பும் நடுச்சந்தி முனையில் வண்டியில் சிவப்பும் மஞ்சளுமாக, ஆப்பிள் ஆரஞ்சுப்பழ வியாபாரம் செய்கிறான் ஒருவன். அதை ஒட்டி லாட்டரிச்சீட்டு வண்டி - அருகில் சாராயக் கடை... அதையும் அடுத்துக் கீற்றுத் தடுப்புடன் ஏதோ ஒரு அம்மன் கோயில், சூலம் - உண்டியல்...

முருகேசு தயங்கித் தயங்கித் தனது விலாசச் சீட்டை எடுத்துக் கொண்டு லாட்டரிச் சீட்டுக்காரப் பையனை நெருங்குகிறான்.

“இந்த இடம் எங்க தம்பி?”

அங்கே யாரும் இவன் கேள்வியையே சட்டை செய்யவில்லை.

முனை திரும்பி வீதிக்குள் நடக்கிறான். வீதியில் இரண்டு சக்கர ஊர்திகள் பட்பட்டென்று பறக்கின்றன.

வீடுகளில் காலை நேரப் பரபரப்புக்கள்;...முன் நிற்கும் வாகனங்கள், ஆணும் பெண்ணுமாக ஏற்றிக் கொண்டு நகரும் அவசரங்கள்.

ஒரு வீட்டின் முன் நிற்கிறான்.

இது போன்ற ஒரு வீட்டில்... மாடியிலோ கீழோ, குமாருவின் மச்சாள் இருக்கிறாள். அவள் பெயர்... செல்வி... செல்வி அம்மா... செல்வி ராஜசேகரன்... வாசலில் காத்திருந்து, அவன் சீட்டைக் கையில் வைத்துக் கொண்டு, வெளியே வரும் ஓர் அலுவலகக்காரரிடம் கேட்கிறான். மனைவி வழியனுப்புவது போல் வந்து நிற்கிறாள்.

“இங்கே செல்வி அம்மான்னு... இருக்காங்களா? ஸிலோன்காரங்க...”

“தெரியலியேப்பா! அந்தப் பக்கம் போய்க் கேளு!”

முருகேசு நடக்கிறான். உயர்ந்த சாலை மரங்களில் பச்சையாகத் தோலுரிக்கப் பட்டிருக்கிறது. குழிகளில் நீர்ப் பரப்பில் கூடி மகாநாடு நடத்தும் கொசுவினங்கள் ஒவ்வொரு சக்கரம் பதம் பார்க்கும் போதும் பறந்து போய்த் திரும்பக் கூடுகின்றன. அங்கே பெரிய சிவப்புப்பட்டைக் குறியுடன் ஆசுபத்திரிக் கட்டிடம் ஒன்று இருக்கிறது. வாசலில் பெரிய எழுத்துக்கள், சற்றுச் சிறிய எழுத்துக்கள் என்று பல்வேறு விவரப் பலகைகள் விளங்குகின்றன. அதே சிவப்பு அடையாளத்துடன் ‘அம்புலன்ஸ்’ வண்டியும் நிற்கிறது. காவாய்ப் பாலக்கல்லில் சற்றே உட்காருகிறான். கதிர்காமக் கந்தனையும், மீனாட்சி அம்மனையும் ஒருமுறை கூவி அழைத்துக் கொள்கிறான்.

ஃபிளாஸ்கும் கையுமாக ஒரு காக்கிச் சட்டைப் பணியாளன் வருகிறான்.

“இங்க... செல்வி ராஜசேகரன்னு.. ஸ்லோன்காரங்க... எந்த வூடுன்னு சொல்றியளா கொஞ்சம்...?”

அந்த ஆள் நின்று இவனைப் பார்க்கிறான்.

“ஸ்லோன் ஆளுங்கல்லாம், அதா, அந்த வூடுங்களுக்குப் பின்னால இருக்காங்க. அங்க போயி விசாரியும்!”

அம்மாடி! துப்புக் கிடைத்துவிட்டது.

அவன் காட்டிய திசையில் நடந்து, இந்தப் பெரிய வீட்டு வரிசைகளைத் தாண்டி பின்புறம்... குப்பை மேடுகளும் குடிசைகளுமாக இருக்கும் பகுதியில் வந்து நின்று விழிக்கிறான்.

...‘இங்கதா ஸ்லோன் ஆளுங்க’ என்று சொன்னான். ‘ஸ்லோன் ஆளுங்க’ என்றால், இவன் வருக்கத்துத் தோட்டத் தொழிலாளப் பஞ்சைகள் என்றே புரிந்து கொண்டு விட்டானா?

தனது மடத்தனத்தை நொந்து கொள்கிறான். குமாருவின் மச்சாள், இது போன்ற ஓரிடத்தில் இருப்பாளா?... இல்லை. அவன் ‘ஸ்லோன் ஆளுங்க’ என்ரு பொதுவாகச் சொல்லியிருக்கக் கூடாது. ‘யாழ்ப்பாணக்காரங்க...’ என்று சொல்லி இருக்கலாம்...

“அண்ணாச்சி?... முருகேசு அண்ணாச்சிதான? எங்க இம்பிட்டுத்தூரம்...? எப்ப இந்தியா வந்திய?...”

ஒட்டிக் குழி விழுந்த கன்னத்தில் ஒட்டாத மீசையும், காக்கிச் சட்டை, முண்டாசுமாகத் தன்னை இனம் கண்டு கொண்ட மனிதனை முருகேசு விழித்துப் பார்க்கிறான்.

“ஏங்க, புரியலியா? டிவிசன் மூணுல... கங்காணியா இருந்தன, ராமாயி புருசந்தான நீங்க!... ராமாயிக்கு ஒரு வகையில முறக்காரன்லா!...”

இவன் கண்களில், ராமாயி என்ற ஒலியே வெம்பனியைக் கசியச் செய்கிறது.

“...ஆமா...மாணிக்கக் கங்காணியில்ல! நீங்க இங்கதா இருக்கியளா?”

“ஆமா. அதா, ஆசுபத்திரில வாட்ச்மேன் வேல. இப்பதா வீட்டுக்குப் போயிட்டிருக்கிற, அங்கியே உங்களப் பாத்தேன். சந்தேகமா இருந்திச்சி. அதா, இப்ப இங்க வந்து நின்னு கவனிச்சே. உங்க மகனப் படிக்கப் போட்டீங்க, அவன் தமிழ்ப் பொண்ணக் கட்டிக் கிட்டான், தாய் செத்ததுக்கும் கூட வார இல்லன்னு கேள்விப் பட்டேன். சங்கட்டமா இருந்திச்சி. இப்ப நீங்க எங்கிட்டிருந்து வந்திருக்கிய?...” முருகேசு எல்லா விவரங்களையும் பேசித்தீர்க்கிறான், அங்கே நின்றபடியே. முகவரிச்சீட்டை மாணிக்கம் பார்க்கிறான்.

“இது பெரியார் நகருங்க. நீங்க அண்ணா நகர் எக்ஸ்டென்சன் விலாசத்த இங்க வச்சிட்டுத் தேடினா?... வாங்க நம்ம வீட்டுக்குப் போகலாம்...”

இவர்கள் எழுபத்தெட்டில் தாயகம் திரும்பினார்களாம். “இங்க வந்தா என்னமோ தொழில் பண்ணலாம், வூடுவாசல் கட்டலான்னு பெர்மாதமா நினச்சது தா மிச்சம். கைப்பணமும் தின்னு, கடனும் பட்டதுதா மிச்சம்...”

எருமை மாடும் சகதியும் குப்பை மேடுகளுமாக இருக்கும் சூழலில் குறுகுறுவென்று குழந்தைகள், அழுக்கைப் பற்றிய பிரக்ஞையேயில்லாமல் சொறி நாய்களுக்குச் சமமாகக் காட்சி தருகின்றன. கசாப்புக் கடையிலிருந்து, புதியதாக ஒரு எலும்புத் துண்டைச் சதையோடு கவ்வி வந்திருக்கும் ஒரு நாயுடன் நாலைந்து நாய்கள் மோதுகின்றன. எல்லாவற்றையும் கடந்து, கந்தல் சாக்குப் படுதாத் தொங்கும் ஒரு குடிசை முன் அவன் குனிந்து இவனை வரவேற்கிறான். “வாங்க அண்ணாச்சி?”

“தேவான...? தேவான...”

நீலப் பாவாடையும் வெள்ளைச் சட்டையும் அணிந்து, முகத்தில் திட்டுத் திட்டாகப் பவுடர் தெரிய, பள்ளிக்கூடப் பையுடன் ஒரு பெண் உள்ளிருந்து வருகிறாள்.

“எங்கடீ, அக்கா? நீ இஸ்கூலுக்குக் கிளம்பிட்ட அதுக்குள்ள?”

“அக்கா எந்திரிக்கல. தூங்குது...”

“இன்னுமா எந்திரிக்கல? மணி ஒம்பதாயிடிச்சி? ராவெல்லாம் பையி ஒட்டிச்சிதாக்கும்?...”

வாசற்பக்கம் குட்டியான தாழ்வரையில் ஒரு கயிற்றுக் கட்டில் நெருங்கிக் கிடக்கிறது. அதில் ஒரு கந்தற்பாய் கிடக்கிறது. கட்டிலின் கீழ், வாளி, கயிறு, மற்றும் சில தட்டு முட்டுக்கள் தெரிகின்றன. “இருங்க அண்ணாச்சி, இந்தப் புள்ள ஏன் தூங்கறான்னு பாக்கிறேன்!”

அவன் உள்ளே போகிறான்.

“தேவான...! தேவான...! எந்திரம்மா? புள்ள பாரு, அடுப்புக்கிட்ட நிக்கிது. கோவாலு, தாமோதரன் அல்லாம் எங்க காணம்? கோவாலு இஸ்கூல் போனானா?...”

ஒன்றரை வயசுக் குழந்தை ஒன்றைத் தூக்கிக் கொண்டு மாணிக்கம் வருகிறான். தேவானையின் குரல் கேட்கிறது.

“தூங்கிட்டே... ராவெல்லாம் கொசுக்கடி, இந்தப் புள்ள வேற உறங்காம சல்லியம் குடுத்திட்டிருந்திச்சா?...”

“சரி, நாம் போயி சீனியும் பாலும் வாங்கிட்டு வார. தேத்தண்ணி போடு...” மெதுவான குரலில் கூறிவிட்டு, முருகேசுவை உள்ளே அழைக்கிறான்.

“வாங்கண்ணாச்சி! உள்ளாற வாங்க!...”

உள்ளே சதுரமான கூடம், சிமிட்டி போடப் பெற்று இருக்கிறது. சுவரும் வெளுப்பாக வெள்ளையடித்துப் பளிச்சென்றிருக்கிறது. கொடியில் துணிகள் மடித்துப் போடப்பட்டிருக்கின்றன. ‘டிரங்குப் பெட்டி’ ‘இலங்கை’ என்ற முத்திரை குத்தும் இலேசான சதுர மரத் தகட்டுப் பெட்டிகள் இரண்டு எல்லாம் ஓரமாக ஒழுங்காக வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பிரம்பு செல்ஃபில், பிள்ளைகள் படிக்கிறார்கள் என்றறிவிக்கும் புத்தகங்கள் நோட்டுக்கள். அடுக்காக ஒட்டிய பைகள், பசை வைத்த அலுமினிய வட்டை...

இங்கும் ஒரு கயிற்றுக் கட்டிலில் சாக்கு விரிப்பு இருக்கிறது.

“உக்காருங்க... இவுரு ஆரு தெரியுமில்ல? மாமன்முறதா... இதுதா என் ரெண்டாவது மக, தேவான. அவ புள்ளதா இவெ... உங்க பேருதா முருகன்னு, இவ ஆத்தா போயி மூணு வருசம் ஆயிட்டுது இந்த அப்பிசியோட...”

முருகேசு சலனமேயில்லாமல் உட்கார்ந்திருக்கிறான்.

“அப்ப, தேவான, மாமனுக்குத் தண்ணி தவசி கொண்டாந்து குடு. இதா வந்திடறேன்...”

பாலுக்கு ஓர் ஏனம் எடுத்துக் கொண்டு மாணிக்கம் வெளியே செல்கிறான். தேவானை பின்புறம் வாளியில் நீர் கொண்டு வைக்கிறாள்.

பையில், மேட்டுப் பாளையத்தில் வாங்கிய பிஸ்கோத்தும் கமலாரஞ்சிப் பழங்களும் இருக்கின்றன. இந்தக் குழந்தைக்குக் கொடுக்க வேண்டும்.

மாணிக்கம் திரும்புவதற்குள் இவன் முகம் கழுவிப் புதுப்பித்துக் கொள்கிறான். நெற்றியில் திருநீற்றை எடுத்து வைத்துக் கொள்கிறான்.

தேவானை, குண்டு முகத்தில் பெரிய கண்களுடன், தேத்தண்ணீரும், வருக்கி பிஸ்கோத்தும் கொண்டு வைக்கிறாள்.

குழந்தை அவளைப் போன்ற முகத்துடன் துருதுருவென்றிருக்கிறது. முருகேசு பிஸ்கோத்துப் பொட்டலத்தைப் பிரித்து அதன் கையில் ஒரு பிஸ்கோத்தை எடுத்துக் கொடுக்கிறான். ஆரஞ்சு கம்மென்று மணக்கிறது.

தேநீரருந்திக் கொண்டு இருவரும் பேசுகிறார்கள்.

“மருமகன் என்ன செய்கிறான்? எங்கிருக்கிறான்?...”

“...அந்தக் கதய ஏன் கேக்குறிய அண்ணாச்சி? அங்கேந்து வாரியில, இந்தப் பொண்ணு சமஞ்சிருந்தாளா? அவங்களும் நம்ம சனங்கதா, ஒங்கக்கும் கூட, சுத்தி வளச்சா ஒறமுறையாகும். பதுளப் பக்கம் தோட்டத்தில இருந்தாங்க. கண்டியில பாஸ்போட்டு எடுக்கச் சொல்ல போயிப் பாத்து சிநேகிதமாச்சி. இந்தியா கவுர்மென்டிலே, குடும்பம்னு போனா, தனியா தொழில் பண்ண, வூடுவைக்கப் பணம் தாரான்னு சொன்னாங்கன்னு ரெண்டு வூட்டுக்காரங்களும் ஒரு மாதிரி பேசி செட்டப் பண்ணிட்டோம். இந்தப் பொண்ண அவனுக்குக் கட்டி வச்சாப்பில பேசி அப்படியே பாஸ்போட்டு எல்லாம் வாங்கிட்டு வந்தம். கலியாணமும் பண்ணிவச்சம். அவசரமா, அங்கியே கோயில்ல வச்சி...”

“மிச்சம் பேரு அப்படித்தான பண்ணினாங்க!”

“ஆமாம். அவங்க குடும்பத்தில முதப்பையன் கொடைக்கானல் பக்கம் வேலை கெடச்சிப் போயிட்டா. இவங்க அல்லாம் ஒண்ணா வந்தாங்க. எங்கக்கு வந்தவாசி பக்கம் சொஞ்சம் பூமி இருந்திச்சி. அத்த வச்சிட்டுத்தா தொழில் கடன் வாங்கலான்னு வந்தே. அதெல்லாம் ஒண்ணும் சரிவர இல்ல. பெரி... கதை. ஏழாயிரம் செலவு பண்ணி வீடு ஒண்ணு கட்டின. அத்த வித்துப் போட்டு, இவளுக்கு அடுத்தப் பொண்ணக் கட்டிக் குடுத்தேன். பையன் ரெண்டு பேரைப் படிக்கப் போட்டேன்... பின்னால அவ வேற சீக்கு வந்து செத்துப் போனா. பெரிய பையன் பத்துப் படிச்சிட்டு வேலை இல்லாம, இஸ்திரிப் பொட்டி வச்சிட்டு தொழில் நடத்துறான். அவனுக்குக் கல்யாணம் கட்டி தனியா இருக்கிறான்... வூட்டில அப்பிடி இப்பிடி பத்து நபர் சாப்பிடணும். என்ன செய்ய? இங்க தொழில் கடன் வாங்கித் தாரேன், வூட்டுக் கடன் வாங்கித் தாரேன்னு மிச்சம் பேரும் தரகங்க கிட்ட மோசம் போன கத தா. ஆரையும் நம்ப ஏலாது...”

இந்தக் கதையைக் கேட்கவா முருகேசு வந்தான்?

“அப்ப உங்க மருமக இந்த ஊருலதா தொழில் செய்யிறானா?”

“அத்தத்தா சொல்ல வந்தே. மொதல்ல இந்த பக்கந்தா லாரி கிளீனரா இருந்தா. அப்பப்ப, பத்து நுப்பது சம்பாரிச்சித் தருவா. இப்ப... ஒரு ரெண்டு வருசமாச்சி. இந்தப் புள்ள முதல்ல முழுவாம இருந்து ஒரு புள்ள எட்டு மாசத்தில பொறந்து போயிடிச்சி. இதுக்கு ரெண்டு வருசமாயிடுத்து. இந்த வவுத்துல வச்சிருக்கிறப்ப, அவ, நீலகிரிப் பக்கம் மனுசாளிருக்கா, அங்க லொரி ஓட்டப் படிக்கிறேன், தேவானய பின்னாடி கூட்டிப் போறன்னு சொல்லிட்டுப் போனா. நானுங்கூட அங்க டீ தோட்டத்தில நல்லபடியா கிடச்சிச்சின்னா வந்திடறம்னு சொல்லி வச்சே... அதுக்கப்புறம், விலாங்கு மீனாட்ட வழுவிட்டே போறான். காயிதம் போடுறதில்ல. எப்பனாலும் வாரது. ஒரு நேரம் தங்கிட்டு, பத்து இருவது, ஒரு மிட்டாய், சேவுன்னு வாங்கித் தாரது, போயிடறது. இப்ப இங்க வந்து எட்டு மாசமாவுது. இங்க லோடெடுத்திட்டுவாரான். இப்ப, ரெண்டு மாச முன்ன வந்தானாம். அஞ்சாறு கிலோ கிளங்கும் கோசும் கொண்டாந்து குடுத்தானாம். எட்டிப் பாக்க இல்ல. எங்கே போயிச் சொல்லிக்க? நீங்க... அப்ப கோத்தையில இருக்கிறியளாக்கும்? குமாரு அங்க பொண்ணு கட்டினவ, அங்கியே தங்கிட்டானா?...”

“அதொண்ணும் தெரிய இல்ல. அங்கதா கரச்சல் ரொம்பல்ல போயிட்டுது? புலி புலின்னு நிரபராதிகள ஆமிக்காரன் வந்து சுட்டுத்தள்ளுறானாமில்ல? இவனும் மருமகளும் அதுலல்லாம் சம்பந்தப் பட்டிருக்கிறாப்பல இருக்கு. குமாரு இங்க இருந்து புஸ்தகமெல்லாம் எழுதி அனுப்புறான். பிள்ளை இங்க மச்சாள் வூட்டில இருக்குதாம். வந்து ஒரு நடை பார்க்கணும்னு அட்ரசு வாங்கிட்டு வந்தேன்...”

“அண்ணா நகருப் பக்கம் அது. நான் கூட்டிப் போறேன்... இப்பம் இங்க குளிச்சி சாப்பிட்டுப் போகலாம். நீங்க எப்படீன்னாலும், நீலகிரிப் பக்கம் அந்தப் பயலத் துப்புக் கண்டு சொல்லணும். முருகனே அனுப்பிச்சாப்பல வந்திருக்கிறீங்க...”

“விசாரிக்கலாம். அங்கயும் ஏகத்துக்கு ஸிலோன் ஆளுக, தோட்டத்துக்காரங்க வந்து திண்டாடுறாங்க. ஒண்ணும் சொகமில்ல. இக்கரைக்கு அக்கர பச்ச. அம்புட்டுதா...”

“இருந்தாலும் மட்ராசு மிச்சம் மோசம் அண்ணாச்சி. இங்க ஆளுங்க ரொம்ப சூதுக்காரங்க. முதமுதல்ல. வந்த புதுசில, வேலு இங்கதா ஆடோ சாப்பில வேலைக்கிருந்தா. நாளொண்ணுக்கு ஏழெட்டுக் கொண்டாருவான். இவனுவ, அவனத் திருட்டுப்பய அது இதுன்னு சொல்லி முதலாளிட்டக் காட்டிக் குடுத்து அடிச்சிப் போட்டா. அதுக்குப் பிறகுதா இங்க வுட்டுப்போனா. நம்மவங்க ஆரும் மின்னுக்கு வர ஏலாது இங்க. நாம வார வழியில எரும பாத்தமில்ல? அதெல்லாம் வங்கிக் கடனுக்குத்தா இவனுவ வாங்கிருக்கா. நமக்கொண்ணும் கிடைக்கிறதில்ல. அதா ரோட்டோரம், கைவண்டி வச்சிட்டிருக்கானே ஒராளு, அவ நா இங்க வாரப்ப, கூலிக்குப் பாலு கறந்து கொண்டு விட்டிட்டிருந்தா. இப்ப, இந்த பக்கம்பூரா வளச்சிப் போட்டிட்டிருக்கிறா. கிழக்கால தெரியிற குடிச அம்புட்டும் அவனுக்கு வாடகை. இந்தப் பக்கத்துக்கே அவந்தா, பெரிய ஆளு. அமைச்சர் வருவாரு, கட்சிக்காரர் வருவாரு, கொடி போடுவாங்க, மைக்குப் போட்டுப் பேசுவாங்க. இதா, இப்ப வெள்ளம் வந்திருச்சி... இங்கொண்ணும் ரொம்ப சேதமில்லன்னாலும், கல்லுவூடு வச்சவன்லாம், அரிசி, வேட்டி, சேலை, ஏனம், பணம் அதெல்லாம் வாங்கிட்டாங்க. அதா இந்த வூட்டுச் செவுரே போயி இப்பதா வச்சே. நம்ம பேரொண்ணும் எழுதமாட்டா... அத்த ஏன் கேக்குறீங்க அண்ணாச்சி! ரோட்டு மரத்துப் பச்சையம் புட்டயும் உரிச்செடுப்பானுவ. தழய தொரட்டியால வெட்டி ஆட்டுக்குப் போட்டு மரத்தை மொட்டயடிப்பாங்க. அவங்கள யாரும் கண்டுக்கமாட்டா. நம்ம புள்ளங்க எங்கனாலும் ஒரு காஞ்ச குச்சி எடுத்திட்டாப் போதும். ஏசு ஏசுன்னு ஏசித் தொரத்துவாங்க. ஆ, ஊன்னா, பொலீசைக் கூட்டு வெரட்டுவம்பாங்க... நமக்காக யாரு கேக்குறது? அவுங்கள அண்டிக்கிட்டுத் தண்ணி குடிக்கிறமில்ல...?”

மாணிக்கம் மூச்சு விடுகிறான். அப்போது எங்கோ வீட்டு வேலை செய்யப் போயிருந்த அலமேலு தேவானைக்கு இளையவளான பெண், ஒரு அலுமினியம் தூக்கில் மிகுந்த பழைய சோற்றுடன் வருகிறாள்.

“இவளுக்குக் கலியாணம் கட்டணும். கொலனில ரெண்டு வூடு வேலை செய்யிது. அம்பது ரூபா கெடக்கிது...”

முருகேசு குழந்தையின் முகத்தைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்கிறான்.

அத்தியாயம் - 18

அவனுக்குக் குளிக்கத் தண்ணீர் சுடவைத்துக் கொடுக்கிறார்கள். கோசும் தேங்காயுமாகப் பொரியலும், வெங்காயம் மணக்கப் பருப்பு சாம்பாரும் ஆக்கி, விருந்தாளிக்குப் படைக்கிறார்கள்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் வாயிலில் பெரிய கூச்சல் கேட்கிறது. தேவானை வெளியே விரைந்து செல்கிறாள்.

“ஏண்டி தேவுடியா? துணிய மெறிச்சிட்டுப் போயி, நீ தண்ணி புடிச்சிட்டுப் போறா? ஒண்ட வந்த பறக்கயித...” வசைகள் பொல பொலக்கின்றன...

“எம்மா, நவுத்திவச்ச. பொழுதுக்கும் குழாய நீங்களே ஆளுறீங்க. சர்க்காரு அல்லாத்துக்கும் சேத்துதான, பொதுவா குழா போட்டிருக்கா?”

“சர்க்காரு போட்டிருக்கா, நீ முந்தி விரிச்ச பன்னாட, பறப்பன்னாட, புருசன ஓட்டி விட்டுட்டு ஊரு மேல போற கயித... சோப்புப் போட்டுத் துணிக் கசக்கி வச்சிட்டு உள்ளேந்து குடம் கழுவி வருமுன்ன, துணிய விசிறி எறிஞ்சி மெதிச்சிட்டுப் போறா! இன்னா திமிரு இருந்தா நீ துணியக் கீழ விசிறுவ...! அடீ... இந்த ஆலயம்மா ஆருன்னு உனுக்கு புரியல...! ராச்சியமா பண்ணுறிய இங்க வந்து! சாணியக் களவாடுறது, எருமுட்டயக் களவாடுறது, அசந்து மறந்தா கோளியக் கூடத் தூக்கிட்டுப் போயி முளுங்கிடற கும்பலு... கேடுகெட்டதுங்க!...”

“இந்தாம்மா, ஏனிப்படி இல்லாதது பொல்லாததெல்லாம் பேசுறிய?...”

மாணிக்கம் கையை உதறிவிட்டு, “தேவானை! நீ உள்ளாற வா...” என்று கத்துகிறான்...

எழுந்து சென்று அவளை உள்ளே தள்ளிவந்து வாயிற் கதவைச் சாத்துகிறான். தேவானை பிழியப் பிழிய அழுகிறாள்.

“எந்நேரமும் வம்புச் சண்டைக்கு வலிய வருது இந்தப் பொம்பிள... ஆமாப்பா, நா வேலை செய்யிற வூட்டில அந்தப் பொம்பிள தங்கச்சி வேலை செஞ்சிட்டிருந்திச்சா. குளந்த மோதரம் காணாமப் போச்சா. எதுனாலும் சாமான் கிடச்சா, கொண்டாந்து குடுக்கமாட்டாளாம். அவங்க நிப்பாட்டிட்டு என்ன வச்சிட்டாங்களா. அதே கெரு வச்சிட்டுப் போகவரத் திட்டுறா. பொலீச வுட்டு அடிக்கச் சொல்லுவ அப்பிடி இப்பிடின்னுறா...”

“கெடக்கிறாங்க, விடு. நாம எதுத்துப் பேசக் கூடாது. பதனமா, நம்மமட்டும் அடாவடிக்குப் போகாதவங்களாத்தா பொழக்கணும். நாமெல்லாம் வந்திருக்கக் கூடாது. இந்த மண்ணுல சொந்தம் கொண்டாட நமுக்கு என்னா இருக்கு? நமக்குன்னு பேசுறவங்க யாரிக்கா? நமக்கென்ன கட்சியா, சங்கமா என்ன இருக்கு?... எலக்சன்னா, அந்தச் சின்னத்துக்கு ஓட்டுப் போடு, இந்தச் சின்னத்துக்கு ஓட்டுப் போடுன்னு வாராங்க. மத்தபடி நமக்கென்ன இருக்கு இங்க?”

கதவைச் சாத்தினாலும் வெளியே வசைமழை நின்றபாடில்லை. இப்போது புதிய கீச்சுக்குரல் இவர்கள் சார்பில் ஒலிக்கிறது. அலமேலு கிளர்ச்சியுடன் வெளியே கதவைத் திறந்து சாக்கை நீக்கிப் பார்க்கிறாள்.

“பேசாதடி அறிவு கெட்ட நாயி, சாராயத்த ஊத்தி போலீசுக்கும் குடுத்துக் கைக்குள்ள போட்டுக்குவே. நேயி... நேயி... தூ!...”

“நீ பேசாதடீ பன்னி! நீங்கல்லாம் மனுசங்களா? கண்டவனுக்கும் முந்தி விரிக்கிற பன்னிங்க! பொஞ்சாதியக் கூட்டிவிட்டு வயிறு வளக்கிற பன்னிங்க!... இவளுவ ரோட்டோரமும் சந்தியிலும் மினுக்கிகிட்டு நிக்கிறதும் சீலையத் தூக்கி சிரிக்கிறதும்... துத்தேறி!...”

“அலமேலு! கதவை மூடு...!”

முருகேசு நடுங்கிப் போகிறான்.

மலைமேல் இவ்வளவு சீரழிவு இல்லை.

எடுத்த கவளச் சோறு உள்ளே செல்ல மறுக்கிறது.

“ருக்குமணி அக்காதா இவளுவளுக்குச் சரி... நாம பேசாம இருந்தா சும்மா குலச்சுக்கிட்டே இருப்பா...”

“நீங்க இப்ப கதவத் துறக்க வேணாம். அது இப்பிடித் தான் புகஞ்சிட்டே இருக்கும். பொக்குனு கிளம்பும். நீ நாயி, நீ பன்னின்னு திட்டிப்பா. ஆம்பிளக இதுல தலையே குடுக்க மாட்டா. நெதம் இது பழக்கமாப் போச்சி?”

“சண்ட போடற பொம்பிளயும் நம்மவங்க தானா?”

“இல்ல இல்ல. இங்கத்து ஆளுவ. அதா கச்சிக் கொடி போட்டிருக்கே? சாராயக் கடைக்காரன் ஆளுக... இங்க முச்சூடும் ஃபக்டரிங்கதா. தொழிலாளிக்கு நல்ல சம்பளமும் இருக்கு. ஆனா, எல்லாம் குடிச்சிப் போடுவா. வூட்டுப் பொம்பிள மட்டும் நேர்மயா இருக்கணுமின்னா எப்பிடி?... மிச்சூடும் மோச மில்லன்னாலும் சூழ்நிலை சந்தர்ப்பம் சரியில்ல. நம்ம ஆளுவளே எதும் பண்ண முடியாம, பொம்பிளயலதா பொழக்கிறா. அதும் இருக்கு. ஏன் மறைக்கணும் அண்ணாச்சி?... மானம் மரியாதி, கவுரவம் ஒழுங்கு அல்லாம் வயித்துக்கில்லன்னா போயிடுது...”

ஒருவரும் ஒலி எழுப்பவில்லை.

சாப்பிட்டு முடிந்த பின் பின்பக்கமே கை கழுவிக் கொள்கிறார்கள். பிறகு கட்டிலில் உட்கார்ந்து புகை பிடிக்கிறார்கள். “சமஞ்ச புள்ளய வீட்டில வச்சிக்கவும் முடியாம அனுப்பவும் முடியாம அதா கஷ்டமா இருக்கு. ஒருத்திக்குக் கட்டியே, அந்தப்பய பொஞ்சாதி புள்ளன்ற நெனப்பில்லாம இருக்கிறா. நல்லா உழைப்பா, பேசுவா சிரிப்பா, ஆனா, சூதாடுறா. அதுதா கையில பணம் தங்கறதில்ல. வூட்டுக்கு வாரதில்லன்னு அவாயி சொல்றா. வேற தொடுப்பு கிடுப்பு வச்சித் தொலைச்சிருக்கானோ என்னமோ அதும் தெரியல...”

“புள்ள அலமேலு!, அந்த படத்தை எடுத்து வா, அண்ணாச்சி கிட்டக் காட்டுவம்...”

சுவரில் மாட்டியிருக்கும் புகைப்படத்தை அலமேலு எம்பி மெள்ள மெடுக்கிறாள். அப்படியும் அது கை நழுவி விழுகிறது. கண்ணாடி உடைந்து சிதறவில்லை. என்றாலும் கீறல் விழுந்து இரண்டு பகுதிகளாக நிற்கிறது. மாணிக்கம் எழுந்து போய் எடுக்கிறான். “பதனமா எடுக்கிறதில்ல? கண்ணாடி ஒடஞ்சி போச்சி பாரு?”

கடிந்த வண்ணம் படத்தை முருகேசனுக்குக் காட்டுகிறான்.

“இத பாருங்க, அங்க கண்டியில எடுத்த படந்தா இது.”

முருகேசு கையில் வாங்கிப் பார்க்கிறான்.

திடுக்கிடுகிறான். எங்கேயோ அரிக்குளிப்பாய்த் தட்டிய நெருடல் திடுக்கென்று குவிந்து முனையாய் நெஞ்சில் வந்து ஒட்டுகிறது; குத்துகிறது.

இந்தப் பெண்ணின் பக்கத்தில் தலைக்கட்டும் புது வேட்டி சட்டையும் மாலையுமாக நிற்பவன் பச்சைவேலு!

அட... பாவி!

அதே பச்சைவேலு! ஏழெட்டு வருசங்களுக்கிப்போது முகத்தில் சிறிது அழுத்தமும் முதிர்ச்சியும் கூடியிருக்கின்றன. மற்றபடி அதே பச்சைவேலு. அதே ஆள். இதனால் தான், இவன் தாய் தகப்பன் யாரையும் கூட்டி வரவில்லை; சொல்லவில்லை. நகையைக் கொண்டு போய் வைத்தது... ஒன்றுமே இல்லாமல் இவர்களைக் குழிபறித்து...

அட பாவிப் பயலே! கல்லைத் தூக்கிப் போட்டாற் போல காரியம் செய்து விட்டாயே? முருகேசுவினால் அமைதியாக இருக்க முடியவில்லை. படத்தைப் பார்க்க முடியாமல் கண்களைப் படலம் மறைக்கிறது.

“இந்த... இவம் பேரென்ன?”

“பச்சைவேலு... வேலுன்னுதா கூப்பிடற பழக்கம். நல்ல பயதா. சாவகாசம் மோசமாப் போயி சூதாடுறா. ரேஸ் போவா. சம்பாதிக்கிற பணமெல்லாம் எங்கியோ போகுது. எப்படின்னாலும் பொழச்சிக்கிறவ, நாலு தொழிலும் செய்யிவான்னு அவுங்கப்பாவும் சொன்னாரு. அப்ப எட்டு சவரன் தாலிச் செயின் போட்டே. இங்க வந்து மூணு மாசத்துல அத்தக் கொண்டு போயி வித்திட்டா... இதெல்லாம் இப்ப சொல்லிப் பிரயோசனமில்ல. சூழ்நிலை சந்தர்ப்பம் மனிசன் உள்ளாற மிருகமாப் போயிடறா. அதா உங்ககிட்ட இப்ப காணிச்சித்தார. எங்கனாலும் துப்புக் கெடச்சா, காதப் புடிச்சி நீங்க இட்டாரப் பாத்தியத இருக்கு... இது உங்க புள்ளையாட்ட...”

“இழுத்தாரேப்பா... இழுத்தாரேன்...”

நெஞ்சு தழுதழுக்கிறது. மனிதன் மிருகமாகிப் போகிறான். இனம் இனத்தையே காலைவாரி விட்டுக் குழி பறிக்கிறது. குடும்பங்கள் குலைந்து, சமுதாயக் கட்டுக் கோப்புகள் உடைந்து, உணர்வுகள் வெறித்தனத்துக்குச் சிதறி...

முருகேசு அந்தக் குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக் கொள்கிறான்.

“இவ புருசன் வீட்டில யாரிருக்காங்க?”

“அவரு அப்பன் இறந்து போயி ஆறு மாசந்தானாகுது. சாவுக்கு ஆளனுப்பிச்சிருந்தா, போனோம். இவன் வார இல்ல. பாலுக்கு இருந்திட்டு வந்திட்டம். அங்க இருக்க எடமில்ல. மூணு பொட்டப்புள்ள - ஒரு அண்ணன் ரிக்சா வாங்கித் தொழில் செய்யிறான். ஒண்ணும் நிழலுக்கு சாயுறாப்பில இல்ல; குளுருக்குத் தாங்கறாப்பில இல்ல... காட்டுல இலவு வெடிச்சுப் பக்கம் பக்கமா பறக்கிற கெதியா ஆயிட்டம் அண்ணாச்சி!”

“இதையே சொல்லிட்டிருந்தா ஓயாது. ஒரு நாலுமணி போல உங்கள நா கூட்டிட்டுப் போயி விட்டுப் போட்டு வேலைக்குப் போகணும். செத்தவாணா படுத்து ஒறங்குங்க!”

முருகேசுவுக்கு உடல் அயர்வாகத்தான் இருக்கிறது. ஆனால் படுத்தால் கண்களை மூட முடிகிறதா?

இருட்டுக் கடலில் குண்டடியை நினைத்துத் திகிலும், காணாமற் போன பெண்களை நினைத்த பயமுமாகப் பயணம் செய்த போதும் கூட ஏதோ பற்றிக் கொள்ள இலக்கு இருந்தாற் போல் பற்றியிருந்தான். எத்தனை எத்தனை நொடிகள் முழுகிவிடும் அவலத்தில்! முருகா முருகா என்றோ, மீனாட்சி, ஈசுவரா என்றோ எங்கோ இருக்கும் கடவுளரைக் கூவியழைத்தானே? இப்போது அந்தப் பற்றும் கூட அவனுக்குள் முழுகிப் போகிறது. கந்தன், முருகன், ஈசுவரன் தேவி எல்லாம் மனிதனுக்கு உள்ளுக்குள்ளே ஒரு தைரியம் கொடுக்க அவனாக ஏற்படுத்திக் கொண்ட ‘தாங்கிகள்’தாம். இப்போது அந்த எல்லையையும் மீறிவிட்டது அவனுக்கு நேர்ந்திருக்கும் துன்பங்கள்... அவன் என்றால், அவனல்ல - மொத்தமாக எல்லாச் சமுதாயத்தினருக்கும்.

இதற்கெல்லாம் யார் பொறுப்பாளி? சிங்களத்தானா? அரசா? குண்டெறியப் புறப்பட்ட விடலைகளா? யார்?...

இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இவனால் யாரையும் குற்றவாளியாகப் பார்க்க முடியவில்லை. இதோ இந்தக் குழந்தை... இதற்கு என்ன தெரியும்? பச்சை வேலுப்பயல் ஏனிப்படித் துரோகம் செய்திருக்கிறான்?

சூது, குடி, இதெல்லாமும் பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியிலும், நிகழ்காலத்தை மறக்க வேண்டும் என்ற வெறியிலும் தான் வருகின்றன.

சிங்களத்தானை நல்லவனாக, நல்ல மனிதனாக அவன் இதயத்தோடு உணர்ந்து இருக்கிறான். அதே சிங்களத்தான் மிருகமாக நிற்கும்போது, இரத்தம் குடிக்கும் பேயாட்டாம் ஆடும் போது இது கனவோ என்று தான் மயங்கிப் போயிருக்கிறான். இதெல்லாம் போய், மனிதன் மனிதனாக எப்போது ஆகப்போகிறான்? இந்தப் போராட்டத்தில், படிப்பு, பணம், பதவி எல்லாமே வெறும் வார்த்தைகளாகப் போகின்றன.

அத்தியாயம் - 19

இனிப்பு வில்லைகளும், ஏழு ரூபாய்க்கு ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் வாங்கிப் பையில் வைத்துக் கொள்கிறான் முருகேசு.

மாணிக்கமும் அவனும் பஸ்ஸில் ஏறி, அந்த முகவரியைத் தேடி வருகிறார்கள்.

“இந்தப் பக்கம் பிஸ்கற் ஃபக்டரி, சைகிளை ஃபக்டரின்னு, மிச்சம் ஃபக்டரிங்க இருக்கு. தொழிலாளிக்குச் சம்பளம், போனஸ், பகலுக்கு அம்பது காசுக்குச் சாப்பாடு, இனாமா தேத்தண்ணி எல்லாந் தாரா. ஆனா, நமக்கெல்லாம் மூட்ட தூக்கப் போனாக் கூட எடமில்ல. அதுக்கும் ஒரு மேஸ்திரி, நாம எட்டு ரூபா சம்பாதிச்சா, அஞ்சுதாங் குடுப்பான். நாம கங்காணிக்குத் தலைக்காசு கூட அந்த நாள்ள இம்புட்டுக் குடுக்கல...”

அங்கே சினிமாச் சுவரொட்டிக்கு இடையே, தேயிலை கிள்ளும் ஒரு பெண் மணியின் வாயில் பூட்டுப் போட்ட படம் ஒட்டியிருக்கிறது. ‘வாய்ப்பூட்டுப் போட்ட நாள் - 16.11.48’ என்று எழுதியிருக்கிறது.

“இது என்னப்பா, மாணிக்கம்?”

“அதா, நானுங்கூடப் பாக்கிறேன். ஈழப் போராளிங்க படந்தா அங்கங்க ஒட்டிருப்பாங்க... நம்மப் பத்தியும் இப்பதா பார்க்கிறேன். அண்ணாச்சி, எத்தினி கூட்டம், கூச்சல், பேரணி இலங்கைத் தமிழருக்காக நடந்திருக்கு? இது, இப்ப மூணுநா முன்ன, இங்கேந்து ஏதோ கட்சியாளு தெரியாமப் போயிட்டு வந்து அங்க என்னவெல்லாம் கொடுமைப் படுத்தறாங்கன்னு வீடியோ எடுத்திட்டு வந்து போடறாங்கன்னு எம்பய்யன் சொன்னான். இதுவரயிலும் நம்ம விசயத்த, இங்க எந்த அரசியலாளும் கவலப்பட்டுப் பாக்கிறதாத் தெரியல. ‘தமிழினம் சாகிறது; மாநில அரசே தூங்காதே!’ன்னெல்லாம் கூச்சல் போடுறா. அதே கட்சிக் கொடுக்குப் பக்கத்தில, ஒரு குழாத் தண்ணி நமக்குக் குடுக்காம ராச்சியம் பண்றான். ஆரு கேக்கிறாங்க? நாம் ஆம்பிளங்க, எங்கியோ போறம் வாரம்... ஆனா, பொம்பிளப் புள்ளிய என்ன பண்ணுவாங்க அண்ணாச்சி!”

பெரிய பெரிய மாடி வீடுகள் இருக்கும் அகலச் சாலை... மாடி முகப்புக்களில் வண்ணச் சீலைகள் தொங்குகின்றன; பூஞ்சட்டிகள் அழகு செய்கின்றன. இடை இடையே பல்வேறு நுகர்பொருள் விற்கும் அங்காடிகள்; சலவை நிலையங்கள்;

“இந்த பக்கம் ஒரு ‘டொக்டர்’ வூட்ல முன்ன தோட்ட வேலை பண்ணிட்டிருந்தேன். அவரு பவுனியா ஆஸ்பத்திரில டொக்டரா இருந்தாராம். அவருதா எனக்கு இந்த வாட்ச்மேன் வேலை சிபாரிசு பண்ணி அனுப்பிச்சாரு... நல்ல கொணமான ஆளு... அங்க கேட்டா வெவரம் சொல்வாரு...”

“வெவரம் ஏதும் தெரியாம ஒண்ணும் கண்டுபிடிக்க ஏலாது போல...?”

“ஆமா அண்ணாச்சி. ஒரு மாசமுன்ன வந்திட்டுப் போன, இப்ப அடையாளந் தெரியாது. இங்க அரபு நாடுங்களேந்து வார பணத்தைக் கொட்டி எடம் வாங்கிப் போடுறா! நம்மப் போல ஏழயிங்க எங்க போக? அண்டித்தான் பிழைக்கணும்...”

வீட்டை ஒரு மாதிரி கண்டுபிடிக்கிறார்கள்.

அந்தப் பக்கத்தில் இலங்கைத் தமிழர் பலர் இருப்பதாகத் தெரிகிறது. வெளுத்த ஃபிராக் போட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண், பள்ளியிலிருந்து அப்போதுதான் திரும்பி வருபவள், அவர்களை அழைத்துக் கொண்டு படியேறி முதல் மாடிக்குச் செல்கிறாள். இவர்களை நிற்க வைத்துவிட்டு, “அம்மா...! உங்களை தேடிட்டு ஆரோ வந்திருக்கினம்!” என்று குரல் கொடுக்கிறாள். அது அங்கு ஒலிக்கும் குழந்தையின் அழுகுரலுக்கு மேல் தெளிவாகச் செவிகளில் விழுகிறது.

“தா, நந்தினி அக்கா வந்திருக்கு. பாரு, பாலொண்டு குடிச்சிட்டு நந்தினி கூட, ஊஞ்சலாடப் போகும்... கண்ணல்ல...!”

“ஊஞ்சல் வாணாம், மம்மிகிட்ட, டாடிகிட்டப் போவினம்...” அடித்தொண்டையில் இருந்த ஒரு பிடிவாதக் கத்தல்... அழுது அழுது தொண்டை கம்மும் குரல்... குழந்தையின் ஒலி... யாரென்று அவனுக்கு யாரும் விளக்கத் தேவையில்லை. அவனை யாரும் அழைக்கத் தேவையில்லை. அவன் கொடியில் அரும்பிய தளிர்... அது காய்ந்து காய்ந்து கதறுகிறது. மரியாதைப் போர்வைகள் கழன்று வீழ்ந்து அவனை உள்ளே தள்ளுகிறது. உடலும் உள்ளமும் பதற அவன் பையைக் கீழே வைக்கிறான்.

“...தா, அழுவாதம்மா!... கண்ணில்ல? ஒரு சொட்டு பாலும், சோறும் கூட எடுக்காம இப்படிக் கரைஞ்சா உடம்பு என்ன ஆகும்? தா... ஆரு வந்திருக்காங்கன்னு பாப்பம்...” என்று குழந்தையுடன் வந்து காட்சியளிக்கும் பெண்... மருமகளின் அக்காளா? குழந்தையின் முகம், கறுத்த முகம் அழுது அழுதுச் சிவந்து நனைந்து... அம்மளம்! ராமாயி போலவே இருக்கிறாளே! என் தாயி! என்னப் பெத்த தாயி...!

முருகேசு அருகில் சென்று கையை நீட்டுகிறான்.

“நா... உன்ற தாத்தா, பாட்டன்டீ கண்ணு! உங்கப்பன் குமாரு எம்புள்ளை டீ ஆத்தா! வந்திடம்மா!...”

நல்ல கறுப்பில் உயரமும் பருமனுமாக இருக்கும் அந்தப் பெண்பிள்ளைக்கு, அவன் மருமகளின் சாடை இருக்கிறதோ?... மருமகளே கனவுத் தோற்றம்தானே? விசும்பும் குழந்தையின் முன் மிட்டாய்ப் பொட்டலம், பிஸ்கற்றை வைத்துக் கொண்டு நீட்டுகிறான்.

“தாத்தா... தாத்தாகிட்டப் போம்மா! பாரு, டாடிதா போயி போயிப் பாத்திட்டு வாங்க, சோலி முடிய இல்லன்னு சொல்லி அனுப்பிச்சிருக்கா. நீங்க சிரீலங்காவிலேந்து தானே வந்திருக்கீங்க?”

“ஆமாம்மா! உங்கப்பாதா, புள்ளயப் பாத்துட்டு வாங்கன்னு அனுப்பிச்சாரு. இதபாரு...”

சட்டென்று நினைவு வர, அவன் பையைத் திறந்து அந்தக் குழந்தை ஃப்ராக்கை எடுத்துப் பையுடன் கொடுக்கிறான்.

“உன் அப்பாதாம்மா வாங்கிக் குடுத்தாரு...!” பெரியவள் அந்த ஃபிராக்கை வாங்கிப் பிரிக்கிறாள். கண்கள் அகல...

“எவ்வளவு வடிவான பிராக், புள்ளக்கு டாடி வாங்கிக் குடுத்திருக்காரு! இப்பம் இந்தப் பால் குடிப்பீர், பிறகு புதிசு ஃபிராக் போட்டுட்டுப் போகலாம்...”

குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு, அவனை உறுத்துப் பார்க்கிறாள். தனது தந்தையின் உறவு இருக்கிறதா என்று பார்க்கிறாளோ?

“வந்திடம்மா!... வா...”

குழந்தை அவனிடம் வருகிறாள்.

“குடுங்கம்மா அந்தப் பால் கிளாச...”

அதை வாங்கித் தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டு பாலைக் குடிக்கச் செய்கிறான். பிறகு, வெதுநீரில் நனைந்த துண்டால் முகம் துடைத்து, சுருட்டையான முடியைச் சீவி, பவுடர் ஒத்தி, அந்தப் புதிய ஃபிராக்கைப் போடுகிறான்.

“ஐயா, உங்களை இப்பப் பார்க்கலையெண்டா, பிள்ளை அழுது கரைஞ்சு, ஓஞ்சு போயிருப்பா. ஒரு கிளாஸ் பால் குடிச்சி ஒரு பிடி சோறோ, இட்டிலியோ எதுவோ எடுத்து, ஒரு மாசம் ஆகும். என்னன்னு செய்ய? ஒரு நாளைத் தள்ளுவதும் ஏலாம கனமாப் போவும்...”

குழந்தை பிஸ்கட்டை வைத்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தாலும் இன்னமும் அந்தத் தாப அலைகள் ஓயவில்லை.

அந்தப் பட்டுடலின் தொட்டுணர்வே, முருகேசுவின் இத்தனை நாளைய - பிறவிக் கசடுகளை எல்லாம் கரைக்கும் அமுதமாகச் சிலிர்க்கச் செய்கிறது.

கவாத்துக் கத்தியும், முள்ளும் கொத்தும் மண்வெட்டியும் பிடித்துக் கரடு தட்டிப் போன கைகளால் இந்த மென்மையான பூ முகத்தையும், தளிர்க்கையையும் தீண்டும் பேற்றுக்காக, இந்த வாழ்நாளில் எந்தச் சுமையையும் சுமந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அவன் தனது உறவை, தொடர்பை, முன்பின் அறியாத இந்தப் பெண்மணியிடம் நிலைப்படுத்திக் கொள்ளவோ, தெளிவாக்கிக் கொள்ளவோ எந்தச் சான்றாதாரத்தையும் துணை தேட வேண்டியதாயில்லை.

இந்தக் குழந்தை, அவனை அங்கீகரித்து விட்டாள்.

வழுவழுத்த தரையில், சொர்க்க பூமியில் இருக்கும் விநாடிகளாக இந்த அங்கீகாரத்தை அவன் அனுபவிக்கையில், அந்தப் பெண்மணி மன்னிப்புக் கோரும் பாவனையில் பேசுகிறாள்.

“மாமா, எழுந்து, கதிரையில் உட்காருங்கள். நீங்கள் அங்கேயே நிக்கிறீர்? உள்ளாற வந்து உட்காருங்கள்...! நான் சரியாய் உபசரிக்க ஏலாமல் போச்சு...” என்று மாணிக்கத்தையும் அழைக்கிறாள். அந்தக் கூடத்தை அப்போதுதான் முருகேசு சுற்றுமுற்றுமாகப் பார்க்கிறான். துப்புரவாக இளம்பச்சைச் சாயச் சுண்ணாம்பு அடித்த குளிர்மையான அறை, உட்கார மெத்தை தைத்த இருக்கைகள்; ஓரத்தில் வண்ணச் சீலை போர்த்துக் கொண்ட தொலைக்காட்சிப் பெட்டி. அலமாரியில் புத்தகங்கள்... உயர்தட்டு மக்களின் வீடு. இவன் மகன், தோட்டக் காட்டானின் மகன், இந்தமட்டத்துக்குரியவனாகி விட்டான். மாமா என்று உரிமை கொண்டு இவள் அழைக்கிறாள். அப்படி இவனைத் தூக்கி வைக்கக் காரணமாக இருப்பவள்...

குழந்தையைக் குனிந்து உச்சிமுகர்ந்து புளகமுறுகிறான்.

இவர்களைக் கதிரையில் உட்காரச் சொல்லி உபசரித்துவிட்டு அவள் உள்ளே செல்கிறாள்.

சற்றைக்கெல்லாம் பதினைந்து வயசு மதிக்கத் தகுந்த ஓர் இளைஞனுடன் அவள் வருகிறாள்.

“இவள் நடராசா, இங்க கல்லூரியில் படிக்கிறான். எங்கட மகன். இவனுக்காகத்தான் நான் ரெண்டு வருசமா இங்க குடும்பம் வைத்தனான். இவனொத்த பெடியன்கள வச்சிட்டு சீவிக்க ஏலாமல் போயிற்று. இவண்ட அப்பா, சவூதியில் இருக்கிறார். ரெண்டு பிள்ளைகளோட இங்க கூட்டி வந்தனன்... பின்ன அங்கே கனத்த கலவரம், பயமெண்டான பெறகு, தவம் பிள்ளைய இங்க அனுப்பிச்சி வச்சது...”

“உங்க தாய் தகப்பன் எல்லாம்...?”

“எல்லாம் அங்கதா இருக்காங்க. என்னவானாலும் என்ற பிள்ளைகள் இருக்கிற இடந்தான்னு அம்மாளும் அங்கதா இருக்கா. அங்கங்க திடீர் சோதனை, குண்டு வெடிப்பு... இந்தப் புள்ளய வச்சிற்று எதும் சொல்லறதுக்கில்ல...” என்று உதடுகளை விரல்களால் பொத்திச் சாடையாகத் தெரிவிக்கிறாள்.

“...இப்ப குமாரு... அங்க சோலியா இருக்கிறானா?...”

“...இங்க வந்து அச்சகம் வைக்கணும்னு அஞ்சாறு பேராச் சேந்து யோசனை பண்ணினாங்க. அதுக்குள்ள, வேறொரு நடவடிக்கை நடந்திட்டது. ஒண்ணும் சரிப்படல... போர் நிறுத்த நடவடிக்கைன்றா. ஆனா, நித நிதம் எதோ நடந்திட்டிருக்கு...”

“நிறுத்தமாவது நிறுத்தம்? பாகிஸ்தான்லியும், இஸ்ரேலிலும் ஆளுங்கள அனுப்பிக் கொண்டாரன், அங்க இங்க போயி ஆயுதம் வாங்கிட்டு வாரன். தமிழங்களச் சுட்டுக் கொல்லுறதுக்கு?” என்று இளைஞன் படபடக்கிறான்.

“நடராசா, நீ போய்ப்படி, உவனுக்குப் பரீட்ச்சை இப்ப... போ!”

அவனைச் சாதுரியமாக அனுப்புகிறாள்.

சற்று முன் ஃபிராக்கில் வந்த பள்ளிப் பெண், உள்ளிருந்து பூந்தட்டில் தேத்தண்ணீரும், பணியாரமும் வைத்து எடுத்து வருகிறாள்.

“எடுங்க...”

கூச்சம் விடவில்லை. அவனை விட மாணிக்கம் கூசுகிறான்.

செல்வி வந்து தட்டை எடுத்துக் கொடுக்கிறாள். டீபாயை நகர்த்தித் தேத்தண்ணீர் கோப்பைகளை வைக்கிறாள்.

“மாமா எப்பம் அங்க விட்டு வந்தனீர்...”

“போன தை மாசம் வந்தேன். அதெல்லாம் மிச்சம் கொழப்பமான கதை. குமாரு வந்து என்ன அப்பமே, இனி நீங்க தோட்டத்தில இருக்க வாணாம்னு இங்க வாரச் சொன்னான் தா. ஆனா, எனக்கென்னமோ இங்கேயே பிறந்து வளந்து கலியாணங்கட்டி, அல்லாரும் இந்த மண்ணிலியே போய்ச் சேந்தா, நானும் வரதில்லன்னு வீராப்பாதா பேசுன...”

கண்களில் நீர் மல்குகிறது அவனுக்கு.

“இப்படியெல்லாம் வருமெண்டு ஆரும் நினைக்க இல்லதானே!”

அவள் எங்கோ பார்த்தவாறு நிற்கிறாள். பிறகு சட்டென்று நினைவு வர, “தேத்தண்ணீர் ஆறிப் போகும்... நான் எதை எதையோ பேசிட்டன்...” என்று அவர்களை உண்ணச் சொல்கிறாள்.

முருகேசுவுக்குக் கைத்தட்டு கனக்கிறது.

பணியாரத்தைச் சிறிது விண்டு குழந்தைக்குக் கொடுக்கிறான். பிறகு தானும் சிறிது வாயில் போட்டுக் கொள்கிறான். துரைமார் வீடுகளில் உண்ணும் பணியாரம். உதிர்ந்து வாயில் பூவாகக் கரைகிறது.

“இங்க நாங்க நாலஞ்சு பேரு கேக் சுடும் வகுப்பு எடுக்கிறம். எல்லாம் இங்க வந்து என்னன்னு செய்து சீவிக்க? எனக்குப் பரவாயில்லதான். ஆனா, ரொம்பப் பேரும் வீடெடுக்கவும், பிள்ளைகளைப் படிக்கப் போடவும் சிரமப்படறாங்க...”

“அம்மா, அதையேன் கேக்குறிய? மிச்சம் கஷ்டப்படறாங்க, எங்களப் போல தொழிலாளுக. சாஸ்திரி ஒப்பந்தம், கொத்தலாவல ஒப்பந்தம்னு வந்து இங்க வந்து வுழறவங்கள இங்கத்து மனுசங்க சேத்துக்கத் தயாரா இல்ல. அதுதா கசப்பான விசயம். நிசமும் அதுதா. இப்பம், ஒரு புள்ள - எங்க புள்ளபோல நெருக்கமா இருந்தது, இங்க வந்து அப்பன் செத்ததும், புழைக்க வழியில்லாம ஆனைக் காட்டில விறகொடிச்சி சீவியம் பண்ணப் போயிப் புருசனைப் பறிகொடுத்திட்டும் நிக்கிது. நா மனசோடு இங்க குமாரப் பாக்கணும்னு வந்ததும் கூட, அந்தப் புள்ளக்கி எதுனாலும் ஒரு வழி காட்டணுமின்னு, குமாருக்குத் தெரியும். இன்னிக்கி, அவெ, ஒரு கண்ணியமான மதிக்கிற நிலைமைக்கு வந்திருக்கிறான்னா, அதுக்கு எல்லாருந்தா ஒதவி இருக்கா... மானம் மறைக்க, குடல் நனைய, ஒரு மழகுளுருக்குப் பாதுகாப்பா ஒதுங்க, ஒண்ணுமில்லாம தவிக்குதுங்க...”

அவள் இறுகிப் போய் நிற்கிறாள்.

“ஆமா, இங்கியும் கூட மிச்சம் சனம் பார்க்கிறம் தான. இப்பவும், உங்களுக் கெல்லாம் பிரஜா உரிமை கொடுக்கோணுமிண்டுதா கேட்டுப் பலதும் கதைச்சிட்டிருக்கா. இப்ப, ‘போய்ஸ்’ உறுதியாத்தான் நிக்கிறாங்க. ஆமி பயப்படுதாம்...”

குழந்தை உன்னிப்பாய்க் கேட்கிறாள்.

“இப்ப இந்தியா கவர்மெண்டில, அங்க எங்க ஆளுகளுக்கு சரியான பேருக்கும் பிரஜா உரிமை குடுத்து, இங்க வந்திருக்கிற லட்சம் அகதிகளத் திருப்பிக் கவுரமா அழச்சிட்டாத்தா நாங்க அங்கேந்து வார சனங்கள இங்கிட்டு வரவச்சிப்போம்னு சொல்லியிருக்கில்ல? அதும் ஒரு நல்லதுக்குத்தான?...”

யாரும் எதுவும் பேசவில்லை. குழந்தைதான் திடீரென்று மவுனத்தைக் கலைக்கிறாள்.

“டாடி எப்ப வரும்?...”

முருகேசனை நோக்கிய வினா அது.

அவன் குழந்தையின் உச்சியை முகர்ந்து விட்டு, “வரும்டா கண்ணு...” என்று சொல்கிறான்.

“எப்ப வரும்?”

“இப்ப, நாளைக்கு வரும். ஒங்கம்மாளையும் கூட்டிட்டு, பிளேன்ல வந்து எறங்குவா!”

“பிளேன் வாணாம்... பிளேன்ல தான குண்டு வெடிச்சது? பிளேன் வாணாம். போட்லதா வரும்...”

“சரி, போட்ல வரும்...”

“எப்ப வரும்...?”

“ப்ரியா, தாத்தாவுக்கு நீ கார்டன்லாம் காட்டிக்குடு. பாரு, தாத்தா வந்து, சறுக்குப்பலகையில ஏத்தி விடுவாரு. புது ஃப்ராக் போட்டிருக்க. குணா, மஞ்சரி, வடிவு ஆன்ட்டி எல்லாரிட்டயும் காட்டிட்டு வா, தாத்தாவக் கூட்டிட்டுப் போயி?”

இந்தத் திசை திருப்பலில் சிறிது ஒளி கண்களில் மின்னுகிறது. மடியை விட்டிறங்கி, “வா” என்று சொல்கிறாள் குழந்தை.

மாணிக்கம் குறிப்பறிந்து “அப்ப, அண்ணாச்சி, நீங்க இருந்துக்குங்க, நா வாரன். வரட்டுமா...”

“வாரம்மா?...”

அவள் எதுவும் சொல்லாமல் ஒரு செயற்கைப் புன்னகையுடன் தலையசைக்கிறாள். மாணிக்கம் இறங்கிச் செல்கிறான்.

முருகேசுவுக்கு அந்த இடத்தில் கால்கள் ஊன்றினாலும் பொருந்தவில்லை. ஒரு புறம், அவன் சொந்த வட்டம் அதுதான் என்ற உணர்வு அவனுள் பரபரக்கிறது. மறுபுறம்... அவனால் கத்திரித்துக் கொண்டு செல்ல முடியாதபடி குழந்தை அவனை இழுத்துப் பிடிக்கிறது.

குழந்தையைத் தூக்கிக் கொண்டு படியிறங்கி வருகிறான். மாணிக்கம் விடைபெற்றுச் செல்கிறான்.

அத்தியாயம் - 20

மாலை மயங்கும் நேரம். பெரிய சாலையில் இருசக்கர வண்டிகளும், பேருந்துகளும், கார்களும் நெரிசலைத் தோற்றுவிக்கிறது. அந்தச் சாலை நிறுத்தத்தில் பேருந்தை விட்டு இறங்கிய அலுவலகப் பெண்கள் வண்ன வண்ணச் சேலைகளும், வாடிய தோற்றமுமாக வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். கிளைத் தெருக்கள், ஆங்காங்கு சற்றே பசுமையாகக் காணப்படும் புற்றரை, எல்லாம் பார்த்துக் கொண்டே முருகேசு, குழந்தையுடன் நடக்கிறான். கூடத் துணைக்கு, நந்தினி வந்து கொண்டிருக்கிறாள்.

“அடே, ப்ரியா பேபி, எங்கே போகுது?...”

எதிரே வரும் ஒரு பெண்மணி, குழந்தையைக் கொஞ்சுகிறாள்.

“பார்க் போறம் ஆன்ட்டி?” என்று நந்தினி கூறுகிறாள்.

“டாடா... சொல்லு ப்ரியா, ஆன்ட்டிக்கு!”

கையை மெல்ல அசைக்கிறாள் குழந்தை.

பூங்காவில், சறுக்கு மரம், ஸீஸா என்ற விளையாட்டுப் பலகை, ஆகிய இடங்களைச் சுற்றிப் பூச் செண்டுகளாகக் குழந்தைகள்.

சுத்தமாக உடுத்த, உணவுத் தேவையின் பயங்கரங்களை உணராத உலகில் வாழும் குழந்தைகள், இவர்கள் துள்ளி விளையாடுகிறார்கள். பந்து எறிகிறார்கள்; ஊஞ்சல் ஆடுகிறார்கள். அழகிய நாய்க்குட்டி ஒன்று துள்ளிக் குதித்துச் சில பிள்ளைகளுடன் விளையாடுகிறது.

“ஹாய் ப்ரியா! ப்ரியாடீ!”

“ப்ரியா, ஊஞ்சலாடலாம் வா!”

ஆனால் குழந்தை அவன் இடுப்பை விட்டு இறங்க மறுக்கிறாள். மற்ற குழந்தைகளோடு அவள் சேரவில்லை.

ஆனால் நந்தினி, அங்கே பந்தாடும் குழந்தைகளுடன் ஆடப் போகிறாள்.

“கண்ணு! உம் பேரு என்ன? அவங்கெல்லாம் என்ன கூப்பிட்டாங்க?”

“தாத்தா, நீங்க, டாடிகிட்டக் கூட்டிட்டு போங்க...!”

“போறண்டா கண்ணு. நம்ம, நாளைக்கிப் போயி, சீட்டெடுத்து, பாஸ்போர்ட் எளுதிட்டு, ஊருக்குப் போகலாம்?”

“நாளக்கி வாணாம். இன்னக்கே போகலாம்!”

“இன்னக்கி நேரமாயிடிச்சே? இனிமே ஆபீசெல்லாம் மூடிருப்பா, சீட்டுத் தரமாட்டாங்க இல்ல?”

விலுக்கென்று ஷூ அணிந்த பூங்கால்களை உதறிக் கொண்டு ப்ரியா சிணுங்கி அழத் தொடங்கினாள்.

“அழுவாதேம்மா, என் ராசாத்தி! நாம நிச்சியமா, அம்மாகிட்ட, அப்பாகிட்டப் போகலாம். நாங்கூட்டிட்டுப் போற உன்ன...”

“பொய் சொல்லுறீங்களா?”

“இல்லம்மா, என் கண்ணில்ல?...”

“தாத்தா... நன்னியக்காவோட டாடிய, சுட்டுப் போட்டா, அவ அளுதுகிட்டே இருந்தா.”

இவனால் பேச முடியவில்லை. குழந்தையின் மனதில் உள்ள திகில் மட்டும் புரிகிறது.

“தாத்தா?”

“உம்...?”

“நன்னியக்கா இல்ல...? டெந்த் அவின்யூவில, அவள்ட டாடிய உங்களுக்குத் தெரியுமோ?”

“தெரியாதேம்மா?”

“எங்க டாடியோட ஃப்ரண்ட். குகா ஆன்ட்டி பாவம் அளுது அளுது கத்தினாங்க. ராவில ஒறங்கறப்ப ஜீப்புல வந்து, துப்பாக்கியக் காட்டி இளுத்திட்டுப் போயிட்டா. சுட்டுட்டாங்கன்னு, டாடியும் ஆன்டியும் கதச்சிட்டிருந்தா. நான் ரகசியமாக் கேட்டனா, ஓம் தாத்தா...!”

“அப்பிடியாம்மா? அவங்கல்லாம் கொழும்பு ஊரில இருந்தாங்களா?”

“இல்ல தாத்தா, இங்க டெந்த் அவின்யூ இல்ல, அங்க. நாங்க ஒருக்க நன்னியக்கா பர்த்டேக்குக் கூடப் போனம்...”

“இங்க வந்தா துப்பாக்கியக் காட்டி இளுத்திட்டுப் போனா? இருக்காதும்மா. இங்க, இந்தியால்ல. அதெல்லாம் இங்க செய்யமாட்டாங்க...”

“இல்ல... இங்கத்தா. குகா ஆன்ட்டி அளுதிட்டே இருந்தாங்க. நன்னியக்காவும் அளுதாங்க. கூட்டிட்டுப் போயி, ஷூட் பண்ணிட்டாங்க, எங்கப்பாவன்னு அளுதா... எனக்கு இங்க பயமா இருக்கு தாத்தா. மம்மி கிட்டப் போயிடுவம். போவோம் தாத்தா...”

அவன் முகவாயைத் திருப்பிக் குழந்தை கெஞ்சி வற்புறுத்துகிறாள்.

அவன் அந்தக் கையை முத்தமிட்டுக் கொள்கிறான்.

“போலாம். இப்ப ஆபீசு மூடிருப்பாங்க கண்ணு, நாளக்கிக் காலம சீட்டெடுத்து...”

...

குழந்தையிடம் காரண காரியச் சமாதானம் செல்லுபடியாகவில்லை.

அவள் சிறு முனகலிலிருந்து பெரிய அழுகைக்கு ஏறுகிறாள். பூங்காவில் போகிறவர்கள் வருகிறவர்கள் கவனத்தைக் கவரும் வகையில் அவள் அழுகையும் முரண்டும் இவனுடைய இயலாமையும் வலிமை பெறுகின்றன.

நந்தினி ஓடிவருகிறாள். நந்தினியாலும் சமாளிக்க முடியாத அளவுக்கு வெறிபிடித்து அழுது அடித்து அடம் பிடிக்கிறாள்.

இருள் படரும் நேரமாகிறது. “சரி, இப்ப ஆபீசுக்குப் போவம், சீட்டெடுக்க” என்று இவன் ஒத்துக் கொள்கிறான்.

“இவ உப்பிடித்தான் ஐயா பண்ணுவா. குமார் மாமாகிட்டதா கொஞ்சம் பயப்படுவா. ஸ்கூலில கொண்டு சேர்த்தாங்க. அங்க போக மாட்டேன்னு அங்கியும் அழுவா...”

தாய் ஒருத்தி எப்படி இந்த மாதிரிப் பிள்ளையைப் பிரிந்து செல்லத் துணிந்தாள்? இந்தப் பிள்ளையின் வளமான சந்தோசமான நல்வாழ்க்கையைக் காட்டிலும் மிகப் பெரிய பொறுப்பா இவள் ஆற்றப் போயிருக்கிறாள்? குண்டெடுத்து அடித்துச் சாகும் பிள்ளைகளுக்கு இவள் உதவி செய்வதும், சிறைக்குப் போய் வதைபடுவதும் தவிர்க்க இயலாத நிர்ப்பந்தங்களா? இந்த மனைவியினால் தான் புருசனும் வேறு வழியில்லாமல் மகளையும், மற்ற தொழில் அலுவல்களையும் கூட விட்டுவிட்டுப் போயிருக்கிறான்...

முருகேசுவுக்கு எதுவும் புரியவில்லை. அவனுக்கும் அவனைச் சார்ந்த சடயம்மாளுக்கும் பிரச்சினை, அடிப்படைத் தேவைகள் இல்லாத பிரச்சினை; படிப்பு திறமை போன்ற பணம் சம்பாதிக்க வேறு சாதனம் இல்லாத பிரச்சினை. ஆனால், இங்கு... இந்தக் குழந்தைக்கு ஆதாரமே இல்லாத பிரச்சினை. விவரம் புரியாத கள்ளங்கபடு இல்லாத பால் மனசில், அவ நம்பிக்கைகளும், பீதியும் அடைந்து கிடக்கின்றன. இதைத் தாயொருத்தியால் மட்டுமே அகற்ற முடியும்...

அவனுடைய மார்பிலும் முதுகிலும் அவள் வெறியுடன் அடிக்கிறாள். அவள் என்ன வார்த்தைகள் சொல்லிக் கத்துகுறாள், கதறுகிறாள் என்பதெல்லாம் கவனிப்பவர்களுக்கும் விளங்காது. ஆனால், அவனுக்குப் புரிகிறது. இந்தக் கத்தலுக்கு வார்த்தை முகங்கள் தேவையில்லை.

ஒட்டு மொத்தமாகத் தன் சக்திகளை எல்லாம் திரட்டிக் கொண்டு, இந்தக் குழந்தை தாயிடம் போக வேண்டும் என்று தன் தாபத்தை வெளிப்படுத்துகிறாள்.

கீழ்த்தள வாசலுக்கே செல்வி ஓடு வருகிறாள்.

“ஏண்டா! ஏண்டா இப்பிடி அழுகினம்!... வந்திடும். இப்பிடி... செல்லம்...”

இந்தக் கொஞ்சு மொழிகள் எதுவும் அந்த வெறியின் முன் எடுபடவில்லை. ஆனால், செல்வி, முருகேசனிடம் இருந்து அவளை விடாப் பிடியாக உரித்தெடுத்துக் கொண்டு கத்தக் கத்த எங்கோ செல்கிறாள்.

முருகேசன் செய்வதறியாமல் நின்று பார்க்கிறன்.

அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. சுற்றிலும் மக்கள் முகங்கள் தெரியாத வண்ணம் இருள் திரையை அவிக்கிறது. தெருவிளக்குகள் இருளில் கோடு கோடாக மனிதரை இனம் காட்டப் பளிச்சிடுகின்றன. ஆனாலும் யாருக்கு யார் என்று புரியவில்லை.

முற்றிலும் புரியாத சூழலில் அந்நியமாகத் தான் நிற்பதாகப் படுகிறது. தாயின் அருகாமையில்லாத அந்தக் குழந்தையின் உணர்விலேயே தன்னையும் இப்போது அவன் புரிந்து கொள்கிறான்.

“தாத்தா, உள்ளாற வாருங்க தான? அம்மா வருவாங்க.”

“கொளந்த இப்படி அழுவுதே? அம்மா என்ன செய்வாங்க?”

“உப்பிடித்தா அளுவா. முன்ன ஒரு நா அளுது, ஒண்டுமே சாப்பிடாம, முகமெல்லாம் எப்படியோ ஆயிப்போச்சி. டொக்டர் வந்து ஊசி போட்டதும் உறங்கிப் போச்சு...”

‘டொக்டர்’ வந்து ஊசி போட்டு உறங்கச் செய்வதா?

தாய்மார் பிள்ளைக்காம்பராவில் போட்டு விட்டுக் கொழுந்து கிள்ளப் போவார்கள். குழந்தைகள் அழுது கொண்டும் ‘சலம்’ விட்டுக் கொண்டும் கிடக்கும். ஆனால் மாலையானால் தாயின் மடியாகிய சிம்மாதனம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. அந்த நம்பிக்கை இல்லாத நிலையில், ஊசிபோட்டு அந்தத் தாபத் தீயை அணைப்பதா?

அந்தக் கணத்தில் முருகேசுவுக்குக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய்விட வேண்டும் என்று பரபரப்பாக இருக்கிறது. நம்பிக்கையை இன்னொரு பெண் தாயாக நின்று பாலாகப் பொழிவதைத்தான் அவனால் நினைக்க முடிகிறது.

“ஏம்மா, இப்பிடி அளுவுற கொளந்தயத் தாய் தகப்பனவுட்டுப் பிரிச்சா பாவமில்லியா?”

“பின்னென்ன செய்ய? சித்திக்குக் கனமான பாரந்தான். போராளிகளுக்குச் சேதி சொல்லுறதும் எதுவும் உதவுறதுமா இருக்கறதால, புள்ளயக் கவனிக்க முடியா தெண்டு தான இங்க கொண்டிட்டு வந்தாரு குமாரங்கில்?”

“... அப்ப ஒங்க... சித்தி, செயில்ல இல்லியா?...”

“அதாரு சொன்னா உங்களுக்கு?”

“எனக்கென்னம்மா தெரியும்? கூடலூரில சொல்லிட்டாங்க.”

“சிரிலங்காவிலா?”

“இல்லம்மா, இங்கத்தா... நீலகிரில...”

“அதெல்லாமில்ல. அவங்கள ஆமி ஆரும் புடிச்சிட ஏலாது. போராளிக்கு... உள வெல்லாம் கண்டு சொல்ல ஆக்கள் இருக்கா. அந்தத் தகவல் எல்லாம் ரேடியோ மூலம் அனுப்புவாங்களாம்...”

“உன் சித்தப்பனும் இதான் செய்யிறானா?”

“...அவுங்க... பிஸினஸ்... பிஸினஸ் செய்யிறாங்க. அதா இங்க வருவாங்க போவாங்க...”

“பிஸினஸ்னா, என்ன பிஸினஸு...?”

சிறிது நேரம் யோசனை செய்வது போலிருக்கும் சிறுமி, “எனக்குத் தெரியாது தாத்தா. அம்மா கிட்ட கேளுங்க...”

தன் மகன் மீது அவனுக்கு இப்போது கோபம் வருகிறது. பெண்சாதியாகப்பட்டவள் என்ன செய்தாலும் அதற்கு நியாயம் கற்பித்துக் கொண்டு இவன் போவதாக மனசுக்குள் கடுமை கொள்கிறான். இந்தப் பச்சைக் குழந்தையை எரியில் போடுவதைப் போல் போட்டு வதைத்துக் கொண்டு, ஒரு சன சமூகத்தையே பாழாக்கும் வேலைகளில் ஈடுபடுவதற்கு என்ன பெயர்? இவன் ‘பிஸினஸ்’ என்று என்ன செய்கிறான்? இந்தியாவில் இருந்து பருப்பும் வெங்காயமும் பூண்டும் கடத்திக் கொண்டு போய் விற்கிறானா? அங்கிருந்து கெசட்டும், அதும் இதும் கடத்தி வந்து...

பரவலான மக்கள் ‘பிஸினஸ்’ என்றால், இந்த வேலை செய்கிறார்கள் என்பதுதான் பொருள். அவன் இதைத்தான் செய்கிறானா? இவனை சக்கை சாறாக உழைத்துப் படிக்கப் போட்டது இந்தத் தொழில் செய்யவா?

முருகேசனுக்குள் இப்போது ஒரு வெறியே எழுவது போல் கிளர்ச்சி மூள்கிறது.

அந்தப் பயல், எப்போது வந்தாலும் அவனைப் பிடித்து உலுக்க வேண்டும். பெத்தபுள்ள, அது வெம்பி நொந்து உருகுது. அத்த விட்டுப் போட்டு, என்னாடா லேய், உங்க போராட்டம்? என்னாடா எளவு போராட்டம்? ஆளுக்காள் குண்டெறிஞ்சு கொல்லுற போராட்டம்?...

தோளைப் பிடித்து உலுக்குகிறான்... கைகள் பரபரக்கின்றன.

சரேலென்று நினைவு வருகிறது.

“ஏம்மா? அது யாரு, சின்னியோ, நன்னியோ அவங்க டாடிய ஜீப்பில வந்து கடத்திட்டுப் போயிட்டான்னு சொல்லிச்சே குளந்த...!”

“...ஓம் தாத்தா, அவங்க... டென்த் அவின்யூல இருந்தாங்க. அந்த அங்கில் நுவல் கதையெல்லாம் எளுதுவாங்க. யாரோ தெரியாதவங்க வந்து கடத்திற்றுப் போயிட்டா.”

“இங்க, கூடவா அதெல்லாம் நடக்குது?”

“ஓம். அவங்க ஸி.ஐ.ஏ.வோ என்னமோ சொன்னாங்க...”

முருகேசு தனக்குள் நொறுங்கிப் போகிறான். சோற்றுக்கு துணிக்கு இல்லை என்ற வறுமையில் கூட நம்பிக்கையும் வாழும் உறுதியும் சாகாமலிருக்கும். ஆனால், உயிரே பத்திரமில்லை என்ற திகிலில் அவநம்பிக்கை, வாழும் உறுதியையும் குடித்து விடும்... அது அந்தப் பச்சைக் குஞ்சுக்கு நேரிட்டிருக்கிறது.

செல்வி சொன்னாற்போல் குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு வருகிறாள். வாசற்கதவு திறந்தே இருக்கிறது.

“நந்தினி! கதவைத் திறந்து போட்டிருக்கிறீர்?... ஏம்மா? தாத்தா எங்க?...”

அவன் முன்பக்கத்துத் தொட்டி போன்ற சிறு வராந்தாவில், பூந்தொட்டிகளிடையே சிலைபோல் நின்று கொண்டிருக்கிறான்.

“இத இங்க இருக்காரம்மா?”

செல்வி உள்ளே படுக்கையறையில் குழந்தையைத் தலையணையை வைத்துப் படுக்க விடுகிறான்.

“ஏம்மா? குழந்தை தூங்கிட்டாளா? டாக்டரிடம் கொண்டு போனீங்களா?”

“ஆமாய்யா, ஆனா தூங்கிட்டா. டொக்டர் ஊசி போடுவார்னு பயம். என்ன செய்யிறதுன்னே புரியல... சரியான கவலையாயிருக்கய்யா!”

“அம்மா, நான் சொல்றேன்னு நினைக்காதீங்க. தாய் பிள்ளையப் பிரிப்பது மகா பாவம். பேசாம, வாழ்வோ, சாவோ, அவ அம்மாகிட்ட அனுப்பிச்சு வச்சிடுங்க. அங்க அது தாய்மடில எத்தினி கஷ்டப்பட்டாலும் தெரியாது. இது வேண்டாம்மா...!”

அவள் பெருமூச்செறிந்து நிற்கிறாள்.

முருகேசுவின் உள்ளத்தில் இப்போது அந்தக் குழந்தையே வியாபித்து நிற்கிறாள்.

நீலகிரியும், அந்தப் பெண்களும் அவன் சிந்தையை விட்டே அகன்று போகின்றன. மகனைப் பார்க்காமல் அங்கிருந்து செல்வதற்கில்லை என்று நிற்கிறான்.

செல்விக்கு, முதியவன் அங்கே வீட்டோடு இருப்பது மிகவும் உதவியாக இருக்கிறது. ஒரு விசுவாசமுள்ள பணியாளனைப்போல, நெருங்கிய உறவினனைப் போல அவன் அவளுக்கு வீட்டு வேலைகளில் உதவுகிறான். குழந்தையைச் சிறிதும் சலியாமல் பார்த்துக் கொள்கிறான். அவளுடைய மாறும் குணங்களுக்கேற்ப, ஈடு கொடுக்கிறான். செல்வி, ‘கேக்’ வகுப்பு எடுப்பதற்காக முற்பகலிலும் பிற்பகலிலும் வெளியே சென்றாலும், முருகேசுவே வீட்டை முழுவதுமாகப் பொறுப்பேற்றிருக்கிறான்.

“மாமா, நீங்கள் தெய்வ கிருபையினால இங்க வந்தீர்கள். ரொம்பவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனன். உங்களைத் தெய்வம் கொண்டு விட்டது...” என்று அவள் உருகிப் போகிறாள்.

“அம்மா, இங்க தங்கணும்னு நான் வரல. அங்க என்னை எதிர்பார்த்து ஒரு புள்ள நின்னிட்டிருப்பா. ஆனா, இப்ப, எனக்கு மனசில்ல. போனாலும் நிம்மதி இருக்காது...”

மாலை நேரங்களில் இவன் அந்தச் சூழலை விட்டுப் புதிய பக்கங்களில் குழந்தைக்குப் போக்குக் காட்டிக் கொண்டு செல்கிறான். அதன் மனசில் இருந்த பயத்தையும் அவநம்பிக்கையையும் விரட்டியடிக்கத் தன் நெஞ்சோடு இணைத்துக் கொண்டு இரவில் விழித்திருக்கிறான்.

இந்த உலகில், வெளி உலக நடப்புக்கள் தெரியாமலேயே நாட்கள் உருண்டோடுகின்றன. பொங்கல் பண்டிகை வந்தது தெரியாமல் மழை கனத்து, மக்களின் உற்சாகங்களை வடிய வைக்கிறது.

செல்வி பத்திரிகையைப் பார்த்துக் கொண்டு, “மாமா! தோட்டக்காரங்களுக்கு, பிரஜா உரிமை கொடுக்கிறதா ஒத்திட்டிருக்காங்க. இன்னும் பதினெட்டு மாசத்தில், ஆறு லட்சம் பேரும் இலங்கையில் குடியுரிமை பெறப் போறாங்க...” என்று முகம் மலரச் செய்தி தெரிவிக்கிறாள்.

குழாயில் நீர் பிடித்து வைக்கும் முருகேசு, நிமிர்ந்து பார்க்கிறான்.

“அப்ப, போராட்ட்ம ஓஞ்சிடுமாம்மா?”

“...அதொண்ணும் தெரிய இல்ல. இந்தியா கவர்மென்ற்றும், இலங்கை அரசும், மந்திரி தொண்டமானும், இப்படி ஓர் உடன்பாட்டுக்கு வந்து அறிக்கை வந்திருக்கிறது...”

“அப்ப... அதென்ன பதினெட்டு மாசம்? இப்பவே குடுக்கிறது?”

“மாமா, வருச வருசமா, தலைமுறை தலைமுறையாப் பொறுத்தவங்க, பதினெட்டு மாசம் பொறுக்கிறது சிரமமா?”

முருகேசு வானைப் பார்க்கிறான். மேக மூட்டமில்லை. நிர்மலமாக இருக்கிறது.

குடியுரிமை என்றால், அவனுக்கும் குடியுரிமை உண்டு. அவன் அங்கே பிறந்தவன். தாய் மடியை விட்டு இந்தக் குழந்தை ஏங்கித் தவிப்பதுபோல், அவனும், சடயம்மா, குழந்தைகளும், இந்த வேற்று மண்ணில், வேற்று மக்களிடையே தவிக்கிறார்கள். எல்லோரும் அங்கே போகலாம். மகன் வந்ததும், குழந்தையையும் எடுத்துக் கொண்டு போவார்கள். இனி போராட்டம் இல்லை. மருமகளும் ஆசிரியை, மகனும் கந்தோரில் வேலை செய்வான். கொழும்பிலோ, அல்லது கண்டியிலோ, எங்கோ, ஒரு வீட்டில் அழகான முன் தோட்டமுடைய ஒரு வீட்டில் இவர்கள் இருப்பார்கள். குழந்தை ஓடி விளையாட, புல்தரையை வெல்வெட்டுப் போல், துரைமார் வீட்டு முன் வாயில் களைப்போல் இவன் செய் நேர்த்தி செய்திருப்பான்... பந்தெறிந்து குழந்தையோடு விளையாடுவான்...

ஆகா... அந்த நினைப்பே எவ்வளவு சுகமாக இருக்கிறது?

சடயம்மாளும் குழந்தைகளும் கூட வந்து விடுவார்கள். அந்தப் பிள்ளைக்குத் தோட்டத்தில் வேலை. பிள்ளைகள் படிக்க வேண்டும்... பிறகு அந்தக் குழந்தைகள்...? தனம், சரோசா, சுகந்தி...

எல்லோருக்கும் தான் இங்கு இனி என்ன வேலை? அவரவர் தோட்டத்துக்குப் போய் வேலை செய்ய வேண்டும். முன் போலவா? இப்போது அதிகக் கூலி, அதிகச் சலுகைகள்... உரிமைகள்...

வேலை, சோறு, துணி, நிழல்... பச்சை வேலுப் பயல் செய்ததை மன்னித்து விடலாம். முருகனே இரண்டு கட்டியிருக்கிறான். இரண்டு பேரையும் வைத்துக் கொண்டு யோக்கியமாக உழைச்சுப் பிழை என்று சொன்னால் கேட்கக் கூடிய பிள்ளைதான். யாரையும் குறை சொல்லக் கூடாது. நேரம்... நேரம்...

குழாயில் நீர் நிரம்பி வழிந்தோடுகிறது.

செல்வி வந்து நிறுத்துகிறாள். “மாமா?...”

அவள் குரல் கேட்ட பின்னரே நினைவு வர உடலைக் குலுக்கிக் கொள்கிறான். இதெல்லாம் இன்னும் நடக்கவில்லை. கனவுதான்...

அத்தியாயம் - 21

“டாடி...! டாடி வந்திருக்கு...”

குழந்தை முருகேசுவின் படுக்கையிலிருந்து ஓட்டமாக வாயிலுக்கு ஓடுகிறாள்.

இரவு மணி பத்தடித்து, விளக்கெல்லாம் அணைத்து விட்டார்கள். தொலைக்காட்சி அரவங்கள் ஓய்ந்து விட்டன. முருகேசுவைப் பொறுத்த வரையிலும், தொலைக்காட்சி, அதிசயங்கள், இரணத்தில் காய்ந்த பொறுக்குப் போல் ஒட்டாமல் விழுந்து விட்டன. ஏனெனில், அவன் பிரியாவுக்கு, அதைக் கண்டால் மருட்சி. என்றோ ஒருநாள் விமான நிலையத்தில் குண்டு வெடித்திருந்த அலங்கோலக் காட்சியை அவள் பார்த்திருந்தாள். அந்த வீட்டில் தொலைக்காட்சியை நந்தினிதான் போட்டுப் பார்ப்பாள். பையன் வீட்டிலேயே இருப்பதில்லை. ஈழ மாணவர் பேரவை என்று படித்த நேரம் போக எங்கெங்கோ திரிந்துவிட்டு வருகிறான். இன்று அவன் உடம்பு சுகமில்லை என்று ஒன்பது மணிக்குள் படுத்து விட்டான்.

செல்வி வாயிற் கதவைத் திறக்கும் ஓசை கேட்கிறது.

“...இன்னுமா முழிச்சிட்டிருக்கு?... ஹாய், ப்ரியா கண்ணு? உனக்கு என்ன கொண்டிட்டு வந்திருக்கிறன் பாரு...!”

அவன் குரல் தான். மேனி புளகமுறச் செய்யும் குரல்.

“மம்மி எங்க! கூட்டிட்டு வர இல்ல?”

“அட கண்ணு! மம்மிக்கு போட்ல எடமில்லன்னுட்டாங்கடா. அடுத்த போட்ல, ப்ரியாக் கண்ணைப் பாக்க ஓடி வந்திடுவாங்க.”

“நீங்க பொய் சொல்றீங்க... டாடி வாணாம், பொய், அழுக்கு... வாணம். என்னிய தாத்தா நாளக்கி போட்ல கூட்டிட்டுப் போவா...”

“...உங்கப்பா வந்திருக்கிறார் குமார்...”

அவன் என்ன சொல்கிறான் என்று கேட்க காதுகள் கிண்ணங்களாகக் காத்திருக்கின்றன.

முருகேசு, ஒற்றைச் சமுக்காளப் படுக்கையில் ஒட்டி விட்டாற்போல் உட்கார்ந்திருக்கிறான். உள்ளத்தில் பிரளயமே கண்டுவிட்டாற் போல் உணர்ச்சிகள் மோதுகின்றன.

சற்றைக்கெல்லாம் விளக்கை யாரோ போடுகிறார்கள்.

சிறுமியின் கையைப் பற்றிக் கொண்டு அவன்...

தூசி படிந்த முரட்டு நீலச் சராய், சேட்... தூசி படிந்து கூளமாகக் கிடக்கும் தலை; முகத்தில் ஏழெட்டு நாளையத் தாடி...

“இதா தாத்தா. நீங்க வாணாம்...”

குழந்தை ஓடி அவன் மடியில் வந்தமர்ந்து, “நாளக்கி நாம மம்மியப் பாக்கப் போறோமில்ல?” என்று கேட்கிறாள்.

மகனை ஒருகணம் புருவங்களை உயர்த்திப் பார்த்துவிட்டு, “போகலாம் கண்ணு!” என்று இதமாக உரைக்கிறான்.

“நீங்க எப்ப வந்தீங்கப்பா?... சுந்தரலிங்கம் போன வருசம் ஒருநா சொன்னான் ஆண்டாளத்தை பொண்ணுங்கள வச்சிட்டு அவனைக் கலியாணம் பண்ணிக்கச் சொன்னீங்களாம்?”

இந்த மாதிரியான குரலை அவன் சிறிதும் எதிர்நோக்கியிருக்கவில்லை. என்ன வறட்சி! காய்ந்து பொடிந்து ரோதையில் வறுபட்ட தேயிலை போல!

“ஆமா, சொன்னே. உன்னப் பாக்கணுமின்னும் சொன்னேன்...”

“நீங்க வெவரம் ஒண்ணும் சொல்ல இல்ல. சரி, எப்பிடியோ வந்து சேந்திட்டீங்க. இந்த மட்டுக்கும் எனக்கு ஒரு உறுத்தல், உள்ளுக்கு இருந்திட்டே இருந்தது. ஆண்டாளத்தய, தலவாக் கொல்லயில பாத்தன். விசாரிச்சா. போன உங்கப்பா, ஒரு காயிதம் எளுதக் கூடாதான்னு வருத்தமாச் சொன்னாங்க...”

“என்னான்னு காயிதம் எழுத? இங்கதா மாபாரதமா ஒண்ணு போக ஒண்ணு வந்திட்டே இருக்கே?... அவ புள்ளங்க நல்லபடியாதா இருக்கா.”

“நானும் அதான் சொன்னேன். காயிதம் இல்லன்னா, சுகம்னா நினைச்சுக்குங்கன்னே. இங்க எப்படி வந்தீங்க? என்னிக்கு வந்தீங்க...?”

“உன்னப் பாக்கணும், பாத்திட்டுப் போயிடலாம்னு தான் வந்தன். பாத்தாச்சு. ஒங்கிட்ட ஒரு விசயம் சொல்லிடணும்னு இருக்கிற...”

“சொல்லுங்கப்பா...”

“இந்தக் குழந்தைய தாயவுட்டுப் பிரிச்சிரிக்கிறியே, இது ரொம்பக் கொடும. எங்கோ ஆமிக்காரன் கியாம்புல சித்திரவதை பண்றான்னுறியே? அதுக்கு இது கொறவில்ல. முதல்ல குளந்தயக் கொண்டு தாயிட்ட விடு...”

“என்னப்பா நீங்க, விவரம் புரியாம பேசுறீங்க! சரி, இப்ப இதென்னதுக்கு?... நீங்க நான் முன்ன சொன்னப்பவே வந்திருக்கணும். இப்பலாவது வந்து சேந்திட்டிங்க. அதுவே பெரிய ஆறுதல் இப்ப...”

“குமாரு, நா வெளயாடுறன்னு நினக்கிறியா? இப்ப ஆறுதல் இல்ல. இந்தக் குளந்த மனசில ஒரு நொடி யுகமாப் போகுது. பயப்படுது. குண்டு முகமாயிருந்தாலும் தாய் மடின்னா அதுக்குப் பயமில்ல. இத்தன படிப்புப் படிச்ச தாயும் தகப்பனும், இந்தச் சின்ன விசயம் புரிஞ்சுக்காம என்னாடாலே போராட்டம்!”

தோட்டக்காட்டானின் முரட்டுப் பிடிவாதம் என்று அவன் நினைக்கட்டும்.

“அப்பா, நீங்க இந்த விசயத்தில் தயவு செஞ்சு தலையிடாதீங்க. குழந்தை இங்கு இருப்பதனால்தான், அதன் எதிர்காலம் காப்பாற்றப்படும். இந்தக் குழந்தையின் எதிர்காலத்தை எண்ணித்தான் நாங்கள் இந்தத் தியாகங்களைச் செய்து கொண்டிருக்கிறோம். குழந்தை மீது எங்களுக்கு ஆசை இல்லையா? தவம் நினைத்தால் உருகிச் சாகிறாள். ஆனால் மேற்கொண்டிருக்கும் கனமான கடமைகள் பிள்ளைப் பாசம் போன்ற மென்மையான உணர்வுகளைக் கொன்று போடுகின்றன. நீங்கள் என்னைப் படிக்க வைக்க எத்தனை கனமான சீவியத்தை மேற்கொண்டீர்கள்?”

நெடிதுயர்ந்து வாட்டசாட்டமாக நிற்கும் பிள்ளையை முருகேசன் பெருமித உணர்வு கசியப் பார்க்கிறான்.

“அது சரிதா. ஆனா, அந்தப் பச்சைப் பிள்ளை அப்பிடித் தியாகம் பண்ணணும்னு நீங்க கட்டாயப் படுத்தறாப்பில இல்ல? அத்த நினைச்சிப் பாருங்க?”

“அதையெல்லாம் நினைக்கிற நேரமில்லப்பா. குழந்தைகள் மறந்து போயிடும். நாமதா பெரிசு பண்ணாம மாத்திடணும்...”

“என்னாத்த மறக்கிறது? அது அழுது அழுது சாவுது. டாக்டர்ட்டப் போயி ஊசி போட்டுத் தூங்கப் பண்றாங்க. இத்தவுட, அது நிம்மதியாத் தாய்கிட்ட பட்டினியோ பசியோ கெடந்து உசுர் விட்டாக்கூட அவதியில்ல...”

அவன் இவரிடம் பேசிப் பயனில்லை என்று நினைத்தாற் போல் அப்பாற் போகிறான்.

அவன் வெளியறையில் செல்வியுடன் முணமுணவென்று பேசுவதும், அந்த நேரத்தில் சுடுநீர் வைத்துக் குளிப்பதும், சாப்பிடுவதும் தெரிகிறது. குழந்தையும் உறங்கவில்லை. அவனுடன் பேசிக் கொண்டே அலைகிறது. எல்லோரும் விளக்கை அணைத்துவிட்டு உறங்குகையில் மூன்று மணி இருக்கும்.

முன்னறையில்தான், படுக்கையை, சுருட்டி வைத்திருந்த மெத்தையை விரித்து அவனும் பிள்ளையும் படுத்து உறங்குகின்றனர். குழந்தை அவன் அணைப்பில் இருந்து விலகிக் கால்களை அகல விரித்துக் கொண்டு உறங்குகிறது. போர்வை விலகிக் கிடக்கிறது.

விடிவிளக்கின் ஒளியில் முருகேசு அருகில் நின்று பார்க்கிறான்.

குனிந்து, போர்வையை எடுத்துக் குழந்தைக்குப் போர்த்து விடுகிறான்.

அவனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. இந்தத் தடவை குழந்தையை விட்டு அவன் போக இடமில்லாமல் வற்புறுத்திச் சேர்த்துவிட வேண்டும்...

எத்தனை நேரமாகப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறானோ?

“அப்பா...!...”

குமாரன் விசுக்கென்று எழுந்தமர்ந்து, அப்பனை நெஞ்சாரத் தழுவிக் கொள்கிறான்.

“அப்பா, போயிப் படுத்து உறங்குவீர்... இனி உங்களுக்குக் கஷ்டமில்லை. இங்கே இருங்கள். நீங்கள் உழைச்சுப் பிழைச்சதெல்லாம் போதும்... பேரக் குழந்தையைப் பாத்திட்டு...”

“குமாரு... குமாரு... புள்ளயத் தாய்கிட்ட விட்டுப்போடு. உங்கம்மா உன்முகம் பாக்கணும்னு துடிச்சிட்டே செத்தா. இப்ப, அது என் ராமாயி போலவே தாயைக் காணத் துடிக்குதுலே... என் நெஞ்சு விண்டு போவுது...”

“சரி... போவலாம். நீரு, படுத்து உறங்குமே?...”

“உறக்கம் எப்பிடிலே வரும்? எத்தினி காலம் கழிச்சிப் பாக்குறம்?... இப்ப... உன் மச்சான் பேப்பர் பார்த்துச் சொன்னா. அங்க, குடியுரிமை குடுக்கிறாவன்னு. இங்க, இது நம்ம மண்ணில்லை. அடிபட்டுச் செத்தாலும் போராட நமுக்கு அதுதான் சென்ம பூமி. குழந்தய மட்டுமில்ல. என்னியும் கூட்டிட்டுப் போயிருலே...”

“அப்பா? குடியுரிமையாவது மண்ணாங்கட்டி! அந்தப் பொம்பிள, சிரிமாவோ, என்ன சொல்லியிருக்கிறா தெரியுமில்ல? அவளுக்கு இப்ப வாய்ப்பூட்ட அவுத்து, நாங்குடுக்கறாப்பில பேசுறேன். நீ தூண்டி விட்டு அடின்னு பேச வச்சிருக்கிறா. இதெல்லாம் தந்திரமான ஆட்சி. இனிமே நீங்க அங்க போறதுங்கற தெல்லாம் நடக்காத நெனப்பு...”

“அப்பிடியா?...”

“ஆமாம். இப்ப போராளிகள் நாலு பிரிவு ஒண்ணு சேந்திருக்கா. ஆமி வெளிக்கிடலே பயப்படுறா. ஆனா, இது இன்னும் கனமான சண்டயா ரெண்டில ஒண்ணுன்னுதா தீரணும். வேற வழியில்ல. முன்வச்ச காலைப் பின்னுழுக்க ஏலாது. அதுனால நீங்க புள்ளய வச்சிட்டு இங்க இருக்கிறது தா நல்லது...”

“நீ இப்ப என்னதா பண்ணிட்டிருக்க?”

“என்னவா? அங்க, பிழைப்பு, தொழில் எல்லாம் படுத்துப் போச்சி, கமத் தொழில், மீன் பிடித்தொழில் எல்லாமே. நமக்குள்ளன்னு சில சில தொழில் ஆரம்பிச்சி நடத்துறோம். சோப்பு பண்ணுறதுக்குன்னு ஒரு ஃபாக்டரி வச்சிருக்கிறோம். இதெல்லாம் இப்ப சொல்லுறதுக்கில்ல. ஒளிஞ்சு ஒளிஞ்சு வாழ்க்கை நடக்குது. நீங்க, நான் சொல்லுறதக் கேளுங்க...”

“அப்ப, நீ மறுக்கப் போறியா அங்க?...”

“ஒரு வாரம் போல இருப்பே. சோலி இருக்கு. மதுரைக்குப் போறேன்... பிறகு அங்கேந்து பத்து நாள்ள புறப்பட்டுப் போவேன்...”

“தோணிலதான?”

அவன் பதில் சொல்லவில்லை.

படுக்கையில் உட்கார்ந்து தலையணைப் பக்கமிருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொள்கிறான்.

“அப்பா... நீங்க... ஒண்ணு பண்ணுவீங்களா?”

“சொல்லு...”

“தவம் ராமேசுவரம் வந்து, இந்தப் புள்ளயப் பார்த்திட்டுப் போறேன்னு சொல்றா. அவளுக்கும் பாக்கணும்னு ரொம்பத் தாபமா இருக்கு. அதும் நான் போன தடவை இப்படின்னு விசயம் சொன்னப்ப ரொம்பவும் கிலேசப்படுறா. எனக்கு, நான் கொண்டு போனன்னா, இவ, திரும்பி வாரமாட்டா. அங்க கொண்டு வச்சிட்டா, எந்த நேரத்துல என்ன ஆகும்னு தெரியாது. ஒருக்க பாத்துட்டா, பெறகு கொஞ்ச நா ஆறுதலா இருக்கும். நா ஏற்பாடு பண்ணுறேன். நீங்க, ராமேசுவரம் கொண்டிட்டுப் போயி, காட்டிட்டு கூட்டியாந்திடுங்க?... அவ வார வியாழக்கிழமை வாரதாச் சொன்னா. நாந்தா கூட்டியாரேன்னு சொல்லிருந்தேன். இப்ப நீங்க இங்க இருக்கிறதால பிரச்சின சுலுவாப் போச்சி...”

முருகேசுவுக்கு உவப்பாக இருக்கிறது.

அத்தியாயம் - 22

விடியற் காலைக் கடற் காற்று, குளிர் சிலிர்ப்பாக இருந்தாலும், இதமாக இருக்கிறது.

வண்டி எந்த நிலையத்தில் நிற்கிறதென்று முருகேசு தலை நீட்டிப் பார்க்கிறான். அந்த வண்டியின் எதிர்ப் பலகையில், மேலும் கீழுமாக, ஓர் இளம் தம்பதி வருகின்றனர். முகமதியர்கள். வளைகுடா நாட்டில் இருந்து, கீழக்கரை செல்பவர்கள். பெட்டிகளும், பைகளும் வண்மை வரிசைகளுமாக ஏறியிருக்கின்றனர். அருகில் அவர்களுடைய இருப்பே பெட்டி முழுதும் இலேசான பரிமள மணங்களை அவிழ்த்துக் கொண்டிருக்கிறது. இரவெல்லாம் அவர்கள் உறங்காமல் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த இளம் பெண் வெள்ளை வெளேரென்று துரைசாணி போல், கைகளில் முழங்கை வரையிலும் தங்க வளையல்கள் குலுங்க, புருசனின் தோளை ஒட்டிப் பற்றி, சரசமும் சல்லாபமுமாக நடந்தபோது, முருகேசுவுக்கு இனந் தெரியாத ஆற்றாமைகளைக் கிளப்பி விட்டது உண்மை. தன் மகனும் மருமகளும், இப்படியெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய பிராயத்தினர். என்ன தவறுக்காக இப்படித் தலைமுறை தலைமுறையாக அல்லல் படுகிறார்கள்!

அவர்கள் இறங்கப் போகிறார்கள் போலிருக்கிறது. இவனும் எழுந்து பார்க்கிறான். “போய் வாரம், தாத்தா! பரமக்குடி வந்திற்று!” என்று செவ்விதழ் விரியச் சிரித்து விட்டுக் கையில் தோல் பையுடன் இறங்குகிறாள்.

முருகேசு, உறங்கும் குழந்தையை மெல்லத் தடவி, நெற்றியில் முத்தமிடுகிறான். காலையில் பாம்பன் பாலம் வரும்போதே அவன் குழந்தையைத் தட்டி எழுப்புகிறான்.

“கண்ணு, பாம்பன் கடல் வந்திடிச்சி. ராமேசுவரம் வருது பாரும்மா!”

குழந்தை விழித்து எழுகிறாள். மலர் விரிந்து சிரிப்பதைப் போல், அடிவானத்தில் இருந்து சூரியன் எட்டிப் பார்ப்பதைப் போல் இருக்கிறது.

கடல் பாலத்தில் வண்டி செல்லும்போது அசையாமல் பார்க்கிறார்கள்.

பாம்பன் தாண்டி, தங்கச்சி மடத்தில் தான் ஓரிடத்துக்கு எழுதிக் கொடுத்திருக்கிறான் குமாரன். அங்கு கிழக்குப் பார்த்த வெற்றிலைப் பாக்குக் கடைக்காரரிடம் சீட்டைக் காட்டினால், அழைத்துச் செல்வான். தவம் அங்கு வந்திருப்பாள் இரவே...

குழந்தையைக் கழிப்பறைக்குக் கூட்டிச் சென்று முகம் துடைத்து விடுகிறான். தங்கச்சி மடத்தில், மீனவர்களும் வியாபாரிகளுமாகக் கலகல வென்றிருக்கிறது. குழந்தையைத் தூக்கிக் கொண்டு, கைப்பையுடன் இறங்குகிறான்.

அவன் சொன்ன வழியை நினைவு வைத்துக் கொண்டு, நீலச்சாயம் அடித்த சுவரில் ஒற்றை அறை தெரியும் தேநீர்க் கடை... வலப்புறம் இட்டிலி சுட்டு விற்கும் ஆயா... தாயத் தணிந்த பலாட்டியனான ஓராள், மார்பில் அடர்ந்த ரோமங்களுடன் கடை வாசலில் இருக்கிறான்.

“நீங்க... சன்னாசித் தேவருதான...? நா. மட்றாசிலேந்து வார...” அவன் தலையை ஆட்டியதும், முருகேசு பையிலிருந்து கடிதத்தை எடுத்துக் கொடுக்கிறான். ஒரே நிமிடத்தில் படித்துவிட்டு, “அவங்க இன்னும் வர இல்லையே? ஒருக்க ராத்திரி வருவாங்களா இருக்கும்...” என்று தயங்குகிறான்.

“மம்மி... எங்க தாத்தா?...”

“கண்ணு, நாம ராமேசரம் போயி, சாமி கும்பிட்டு வருவம். அம்மா, ராத்திரி போட்ல வந்திருவாங்க...!”

சிறிய பஸ்ஸில் ஏறி, இராமேசுவரம் கோவிலருகில் வந்து இறங்குகிறார்கள். தாயைப் பார்க்கப் போகும் ஆவலில், அவன் நெஞ்சுருகும் வண்ணம் அவள் அமைதியாக இருக்கிறாள். முருகேசுவுக்கு, எப்படியேனும் குழந்தையைத் தாயிடமே சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணமே உள்ளூற வேரோடி இருக்கிறது. அவளை மீண்டு பிரித்து வர முடியாமல் குழந்தை முரண்டு பிடிப்பவளாக இருந்தால் தவத்தை அவள் பாதையில் இருந்தே திருப்பிக் கூட்டி வர வேண்டும் என்ற எண்ணமாக இருக்கிறான்.

முதலில் சுந்தர மூர்த்தியின் அறைக்குச் சென்று பையை வைத்துவிட்டு, கடலில் நீராடி, சுவாமி தரிசனம் செய்ய எண்ணி, அவன் அறைப் பக்கம் வருகிறான். கதவு பூட்டியிருக்கிறது.

என்ன மடத்தனம்! ஒன்பது மணியாகி விட்டது. அவன் கோயிலில் யாருடன் சுற்றிக் கொண்டிருக்கிறானோ?

வேறு வழியில். பையைக் கொடுத்துக் குழந்தையைக் கரையில் உட்கார்த்தி வைத்துவிட்டு, அவன் நீராடுகிறான். பின்னர், வேறு வேட்டி சட்டை அணிந்து, பணத்தைப் பத்திரமாக உள்மடிப்பில் வைத்துக் கொண்டு, குழந்தையையும் கடலில் நீராட்டுகிறான். அழவில்லை. கத்தவில்லை, சிரிப்பு; சிலிர்ப்பு.

திருநீறு பூசிக்கொண்டு, பையையும் குழந்தையையும் எடுத்துக் கொண்டு கோயிலுக்குள் நடக்கிறான். குழந்தை நடந்து வருவாள். ஆனால் சேரும் சகதியுமாக இருக்கும் தளத்தில் அவளை நடக்க வைக்க அவனுக்கு மனமில்லை.

செல்லும் போதும், நிற்கும் போதும், அவன் கண்கள் சுந்தரமூர்த்திக்காகத் துழாவுகின்றன. அவன் கண்களில் தட்டுப்படவில்லை.

தரிசனம் முடிந்து, கோவில் வெளிச் சுற்றுக்குள் நடந்து வெளியே கடைகளிலும் சுற்றுகிறார்கள்.

குழந்தைக்கு ஒரு மணிமாலையும் தங்கம் போல் மின்னும் தலையில் செருகும் ஊசியும் வாங்கி அணிவிக்கிறான். எட்டு ரூபாய் கொடுத்து ஒரு கரடி பொம்மை வாங்கித் தருகிறான். உச்சி வேளையின் வெயில் சுள்ளென்று உறைக்கிறது. சுந்தர மூர்த்தியின் அறைக்கதவு பூட்டியே கிடக்கிறது. முன்பக்கமுள்ள கடையில் விசாரிக்கிறான்.

“...அவுரு, கோயில்ல தரிசனம் பண்ணி வைக்க ஆக்களைக் கூட்டிப் போவாரே, அந்தப் புள்ளயாண்டான், இல்ல?”

“அவரு தங்கச்சி கலியாணமின்னு ஊருக்குப் போயிருக்காப்பல. முந்தா நாதா போனாரு. ஒரு வாரம் போல ஆகும்... நீங்க ஆருங்க?...”

“தெரிஞ்சவங்கதா...”

சொல்லிவிட்டு நடக்கிறான். ஓர் ஓட்டலில் ஏறிக் குழந்தைக்கும் சாப்பாடு கொடுத்துத் தானும் சாப்பிடுகிறான். சத்திரத்திலேறி, ஒரு புறம் குழந்தையைப் படுக்க வைத்துவிட்டுத் தானும் இளைபபறுகிறான். பொழுது ஓடி விடுகிறது. பஸ் ஏறி, தங்கச்சி மடம் வருகிறார்கள்.

சன்னாசி, அந்த அறைக்கதவைத் திறந்து விடுகிறான்.

“படுத்து உறங்குங்க. அவுங்க வந்திட்டா ஆளுவரும். கூட்டிட்டுப் போற...”

பழைய மரக்கட்டிலில், சவுரி மெத்தை ஒன்றிருக்கிறது.

“படுத்துக்க கண்ணு, அம்மா வந்திட்டிருக்காங்களாம். வந்த ஒடன கூப்பிடுவாங்க?”

“மம்மி எப்ப வருவாங்க?”

“வருவாங்க... வந்திட்டே இருக்காங்க...”

அவளுக்கு உறங்க விருப்பமில்லை. ஆனால் மீறிய அயர்வில் அறியாமல் உறக்கம் தழுவுகிறது. முருகேசுவுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. சன்னாசி கடையை மூடிவிட்டு அறைக்குள் வருகிறான். அவனும் இலங்கை ஆள்தான். அங்கே சற்றுத் தொலைவில் மணற்காட்டில், இரகசியச் செய்தித் தகவல் சாதனம் வைத்திருக்கிறார்கள். வேவு பார்க்கும் உளவாளிகள் தீவில் நிறையப் பேர் இருக்கிறார்கள். எனவே மிக்க கவனமாக இருக்க வேண்டும். அந்தச் சாதனத்துடன் மூன்று மாசம் முன்பு ஒரு பெண்மணி வந்திருந்தாள். குமாரவேல் அடிக்கடி வருவார். தோணிகள் பலவும் கொண்டு போகும். எதுவும் விவரம் சொல்வதற்கில்லை.

அவனுடன் பேசியதில் மேலோட்டமாக இத்தகைய விவரங்கள் புலனாயின.

சற்றைக் கெல்லாம் அவனும் அறையின் ஒரு புறத்தில் சாக்கை விரித்துக் கொண்டு உறங்கிப் போகிறான்.

முருகேசுவுக்குக் கண்களைப் பாரம் அழுத்தினாலும் இமைகள் ஒட்டவில்லை.

கடலலையின் ஓசையின் பின்னணியில் துல்லியமாக அடியோசைகள், பேச்சொலிகள் எழும்புகின்றனவா என்று செவிகளைக் கூர்மையாக்கிக் கொண்டு அமர்ந்திருக்கிறான்.

அடிச் சத்தம் கேட்கிறது.

வலுத்து, வாயிற் கதவடியில் மனித அரவங்களாக மலர்கின்றன.

முருகேசு அடங்காத கிளர்ச்சியுடன் குழந்தையை எழுப்புகிறான். “கண்ணு, எந்திரிச்சிக்க, அம்மா... அம்மாடா கண்ணு!”

இதற்குள் சன்னாசி கதவைத் திறந்து விடுகிறான். இருட்டு...

ஐந்தாறு பேர்...

யாரோ டார்ச் அடிக்கிறான்.

பெண் பிள்ளை இருப்பதற்கான தடையமான, சேலையே தெரியவில்லை.

முரட்டுச் சராயும், பெல்ட்டும், சட்டையும் அணிந்திருக்கிறார்கள். தலையில் துணி கட்டிக் கொண்டு நனைந்த லுங்கியுடன் ஓர் இளைஞன்... காலில் பெரிய கட்டு, நனைந்து போயிருக்கிறது.

ஒரு கணம் முருகேசுவுக்குக் கப்பென்று, செவிகள் அடைத்துக் கொண்டாற்போல் இருக்கிறது.

அவள்... வரவில்லையா? குழந்தையை எழுப்பி உட்கார்த்தி... ஏமாற்றமா?

காலில் கட்டுப் போட்டுக் கொண்டிருப்பவன் உள்ளே வந்து ஈரத்துணியை அவிழ்க்கிறான். பரபரவென்று அறைக்குள் எல்லோரும் நுழைய, சன்னாசி ஒரு விளக்கை ஏந்திக் கொண்டு வருகிறான்.

அப்போதுதான் இங்கு மின் விளக்கு எரியவில்லை என்பது முருகேசுவுக்குப் புலனாகிறது. கட்டிலில் ஒருவன் வந்து உட்கார்ந்து குழந்தையைத் தொட, ப்ரியா வீலென்று கத்தி முருகேசனிடம் ஓடி வருகிறது.

“டே, கண்ணா, நான்டா, உன்ற மம்மி! செல்லம்? உன்ற மம்மிடா?”

முருகேசு திடுக்கிட்டுப் போகிறான்.

பெண்மைக்குரிய கோலத்தில் இல்லை. அவள் தாய் தான்.

முடியை வெட்டிக் கொண்டு, முரட்டுச் சராயும் வார் பட்டையும், மேலே முரட்டுச் சட்டையும் போட்டுக் கொண்டு... தவம்... கனவாகிப் போன அந்த முகம் தான்.

குழந்தை அவனை ஒட்டிக் கொள்கிறாள். அஞ்சி நடுங்கி, “நாம போலாம், தாத்தா போலாம்... மம்மிட்ட போலாம்...” என்று கத்துகிறாள்.

“செல்லம், உன்ற மம்மி... மம்மி...டா, தவம்டா... மாமா, நீங்களே எடுத்திட்டு வாரியள்னு இப்பத்தா தெரியும். ஏனிப்படிப் பயந்து போயிட்டா, ப்ரியாக் கண்ணு...” முருகேசுவுக்கு நெஞ்சு கட்டிக் கொள்கிறது.

“போடாம்மா, அம்மா, இதா அம்மா... அம்மா வந்திருக்காங்க பாரு...”

விரைத்த நிலையில் கால்களை அவனோடு இறுக்கிக் கொள்கிறாள் குழந்தை.

“இவங்க என்ற மம்மி இல்ல. இது ஆரோ...”

“மம்மீடா... மம்மி...”

கத்தக் கத்தப் பிடுங்கி முத்தமழை பொழிகிறாள். கண்ணீரும் கடல் நீரும் நனைந்த கன்னங்களால் குழந்தையை அணைக்கிறாள்.

ஆனால், குழந்தையோ, வீறிட்டலறித் திமிருகிறாள். அடித் தொண்டையின் கரகரப்போடு அலறுகிறாள்.

“தாத்தா, நாம போவம், இது என்ற மம்மியில்ல...”

“தூக்கத்தில எழுப்பிட்டே, அதாம் போல இருக்கும்மா.”

“எங்கம்மாட்ட போவணும் போவணும்னு அது அரை உசுரு கால் உசுரா எங்கிப் போச்சம்மா. நா உன்னப் பாத்து, அம்மா, நீ எப்பிடியோ, கொண்டிட்டுப் போயிருன்னு சொல்லக் கூட இருந்தே...”

“மாமா...” என்று ஒரே ஒலி எழும்ப, அவள் குலுங்கக் குலுங்க விம்முகிறாள். குழந்தை அவளை ஒப்பவில்லை.

“விடிஞ்சா ஒருக்க இனம் கண்டுக்குமா இருக்கும்மா! தூக்கக் கலக்கம் பாரு...”

“இந்த போட்டில வாரது கன வருத்தம். இவவ வாராங்கன்னு, புள்ளயப் பாத்திட்டு வாரணும்னு வந்தே. அதும் அங்க இங்க, எங்கும் நேவி ரோந்து போட்டு கெடக்குதுங்க. எப்ப என்ன ஆவுமோன்னு வாரேன்... கண்ணு, உன்ற அம்மா... இதபாருடா?...”

“என்ற அம்மா பூவுவச்சி, பொட்டு தொட்டு, சொரி உடுத்தி ப்ளவ்ஸ் போட்டிட்டிருப்பா. என்ற அம்மா வடிவா இருப்பா... தாத்தா, நாம போலாம்... போலாம் தாத்தா...!”

அவள் திகைத்துப் போய் அங்கும் இங்கும் பார்க்கிறாள்.

குழந்தையின் மனதில் அம்மா என்று காப்பாற்றப்பட்ட அந்த பிம்பத்துக்குரியவளாக அவள் இல்லை.

இனம் இனத்தை அறியும் என்பார்களே? தாயும் பிள்ளையும் எந்த உருவில் இருந்தாலும் கண்டு கொள்ள மாட்டார்களா?

“தாத்தா, நாம போவம், நாம போவம்...”

பிடித்துத் தள்ளும் வெறி...

அவள் கையில் கொண்டு வந்த சாக்லேட் பாக்கெட் கை நழுவுகிறது.

உதடுகள் சுருங்க, கண்ணீரின் முத்து அந்த மெழுகுவர்த்தியின் ஒளியில் பளபளக்க, அவளைப் பார்க்கவே அஞ்சினாற் போன்று அவன் தோளில் துவண்டு திரும்பிக் கொள்கிறது குழந்தை.

“வருத்தப்படாதே அம்மா, இதுவும் காலத்தின் கொடுமதான். நீ போயிற்றுக் காலம வா. சீல உடுத்திப் பொட்டு வச்சிட்டு வந்தியானா புரிஞ்சிக்கும். தாய் புள்ளத் தொடுப்பு அப்படி அத்துப் போவாது. அது ரொம்ப மெரண்டு போயிருக்கு. ஏம்மா, இதக் கொண்டு வாரக்குள்ள, அங்கியே எதானும் ரெத்தம் பட்டுச் சாவு பாத்திருக்குமோ?...”

அவள் எதுவும் பேசவில்லை. கறுத்த அந்த உதடுகள் இறுகிப் போகின்றன.

“மாமா, அப்ப நா வாரன்...|

குனிந்து அவன் கால்களைத் தொட்டுக் கண்களில் வைத்துக் கொண்டு சரேலென்று அகலுகிறாள்.

முருகேசு குழந்தையுடன் அப்படியே நிற்கிறான்.

அவர்கள் வந்ததும், போனதும் கனவு போல் இருக்கிறது. சன்னாசி அவர்களுடன் வெளியே போய் எப்போது வந்தான் என்று தெரியவில்லை. முருகேசு குழந்தையைக் கட்டிலில் விட்டு விட்டு அவனும் அருகில் படுக்கிறான்.

குழந்தை எழுந்து அவன் கழுத்தைக் கட்டிக் கொள்கிறாள்.

“தாத்தா, நம்ப போகலாம்...!”

“இப்ப ராத்திரி இருட்டாருக்கேம்மா? விடிஞ்சில்ல போகணும்?”

“மம்மி வரவேயில்ல. இல்ல தாத்தா?... அவங்க வாரன்னு ஏமாத்திட்டாங்க!

“காலம வருவாங்கடா கண்ணு, பொட்டு தொட்டு, சீல உடுத்தி, பிளவ்ஸ் போட்டு, வடிவான மம்மி வருவாங்க!”

படுக்க வைத்து மெள்ளத் தட்டுகிறான்.

ஆனால் அவள் வரவேயில்லை.

சூரியன் தன் தங்கக் கிரணங்களால் மணற் குன்றுகளைத் தழுவி விளையாடுகையில் சன்னாசி மட்டுமே திரும்பி வருகிறான்.

“ஏனப்பா, அம்மா வாராங்களா?”

அவன் இல்லை என்று சாடை காட்டுகிறான். கடலில் ஏறிப் போய் விட்டார்கள் என்று தெரிவிக்கிறான்.

கிழவி வறட்டி, அடுப்பு, எல்லாம் கொண்டு வந்து கடை போட வருகிறாள். டீக்கடை ‘பொய்லர்’ புகைகிறது.

மீனவர்கள் சிலர் கடலுக்குச் சென்றவர், திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

முருகேசு உள்ளே வந்து அறைக்குள் பார்க்கிறான்.

குழந்தை, நிர்மலமான முகத்துடன் எதையும் அறியாத நிலையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள்.

ஒரு தாயாக அவள் நெஞ்சில் சுமந்த ஆற்றாமை வெடிக்கக் குலுங்கிக் குலுங்கி ஓசை எழுப்பாமல் விம்மிய கணங்கள் கண்முன் விரிகின்றன.

ஆனால் அவள் பூண்டிருந்த வேடம் கிழியவில்லை. குழந்தையின் முன் வடிவான தாயாக அவள் வரவில்லை.

அந்தக் கோலத்தைக் கழற்றிக் கொண்டு தாயாகத் தாபம் தீர்த்துக் கொள்ள அவளால் முடியாது.

உயிரோடு வைத்துச் சுட்டெரிக்கும் வன்முறைகளுக்கிடையே அஹிம்சை வடிவான புத்தர் படிமங்கள் கண்களை மூடிப் படுத்திருக்கலாம்.

ஆனால், இவர்களால் கண்களை மூடிக்கொண்டு சுயநலங்களில் தஞ்சமடைய இயலவில்லை. பேதா பேதமின்றி, மகனில்லை, மருமகளில்லை, புருசனில்லை, பெண்சாதியில்லை, தாயில்லை, பிள்ளையில்லை என்று மண்ணுக்காகப் போராடும் போராளியாகியிருக்கிறார்கள். சாசுவதமாக ஓடிக் கொண்டிருக்கும் மாணிக்கக் கங்கை இரத்தக் களரியாகியிருக்கிறது. அது கண்களை மூடிக் கொள்ள முடியாது. என்றென்றைக்கும் சாசுவதமான சத்தியம் அது...

வெளியிலே காகங்களும் நீர்ப்பறவைகளும் வானில் கலகலப்பூட்டுகின்றன. பனை ஓலை வட்டிகளும், பாய்களுமாகப் பெண்கள் மீன் வாணிபத்துக்குச் செல்கின்றனர். துன்பம் உறைக்காத சிரிப்பொலிகளாய்ச் சிறாரின் அரவங்கள் சுற்றுப் புறமெங்கும் உயிர்ப்பூட்டுகின்றன.

இலேசாகப் புளித்த ஆப்பமாவின் தேங்காய் மணம் எழும்ப கிழவி ஆப்பம் சுட்டுப் போடுகிறாள். தேநீர்க் கடையின் முன் பலரும் வந்து அமர, சுறுசுறுப்பாய்க் காலை மலர்ந்து விரிகிறது.

அயர்ந்து உறங்கும் குழந்தை விழித்து எழுந்திருக்கட்டும் என்று முருகேசு காத்திருக்கிறான். இந்தத் தீவின் மணற்கரையில் அவன் முதன் முதலாக வந்து விழுந்தபோது பரவியிருந்த மன இருள் இப்போது அகன்று விட்டது.

வெளிச்சத்தில் ஓர் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் தனது வாழ்வின் இறுதிக்கால அத்தியாயத்தை அவன் துவங்கப் போகிறான்.