mannillaamal chedi valarumaa

மண்ணில்லாமல் செடி வளருமா

சுருதி ஒரு செடி வளர்க்க வேண்டும். ஆனால் அதை மண்ணில் வளர்க்க அவளுக்கு விருப்பமில்லை. செடி வளர்க்க வேறு வழிகள் இருக்கிறதா, என்ன?

- Rajam Anand

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சுகன்யா டீச்சர் வகுப்பிற்கு வந்ததும், “இந்த மாதம் ஆளுக்கொரு செடி வளர்க்கும் மாதம்” என்றார்.

எல்லோரும் அதைக் கேட்டு உற்சாகமானார்கள்,

சுருதியைத் தவிர!

சுருதிக்கு மண் என்றாலே வெறுப்பு. மண்ணைத் தொடவே பிடிக்காது. அதில் நெளியும் மண்புழுக்களைக் கண்டாலோ சுத்தமாகப் பிடிக்காது. மண், கைகளில் ஒட்டிக்கொண்டு அசிங்கமாக்குவதும் பிடிக்கவே பிடிக்காது!

“இன்று வகுப்பு எப்படி இருந்தது?” என்று கேட்டார் அப்பா.

‘தடால்’ என்று பையைக் கீழே போட்டாள் சுருதி. “நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு செடி வளர்க்க வேண்டுமாம் அப்பா. எனக்குதான் மண்ணைத் தொடவே பிடிக்காதே.”

“அவ்வளவுதானே, செடி வளர்க்க மண்ணே தேவையில்லையே!” என்றார் அப்பா.

“ஆனால், செடி வளர காற்று, நீர், மண் மற்றும் சூரிய ஒளி தேவைதானே. செடிகளுக்கு வேண்டிய சத்து மண்ணிலிருந்துதான் கிடைக்கிறது என்று சுகன்யா டீச்சரும் சொல்லியிருக்கிறார்” என்றாள் சுருதி.

“நீ சொல்வதும் சரிதான். ஆனால், குளத்தில் வளரும் தாமரையைப் போல, சில செடிகளால் நீரிலிருந்தும் சத்தை உறிஞ்சிக்கொள்ள முடியும்” என்றார் அப்பா.

“அப்போ, நான் தண்ணீரில் செடி வளர்க்கலாமா?”

“ஆமாம், அதற்குத் தேவையானவை செடி நாற்று, சிறிது தேங்காய் நார், ஒரு பெரிய பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் செடி வளர உதவும் ஊட்டச்சத்துகள்.”

மணி பிளான்ட் நாற்று

செடி ஊட்டச்சத்துகள்

தேங்காய் நார்

பிளாஸ்டிக் பாட்டில்

அப்பா பாட்டிலை இரண்டாக வெட்டினார்.

சுருதி அதன் அடிப்பகுதியில் நீர் நிரப்பி ஊட்டச்சத்துகளைக் கலக்கினாள்.

மேற்பகுதியை தலைகீழாகத் திருப்பி, அதில் தேங்காய் நாரை நிரப்பினாள்.

கடைசியாக, அதில் நாற்றை வைத்தாள்.

சுருதி, தினந்தோறும் தனது செடியை கவனமாகப் பராமரித்தாள்.

மூன்று வாரங்களுக்குப் பிறகு, சுருதி தன் செடியை பள்ளிக்குக் கொண்டு சென்றாள்.

எல்லோரும் ஆச்சரியம் அடைந்தனர். “சுருதி, உனது செடி எப்படி இவ்வளவு பெரிதாக இருக்கிறது?” என்று ஆச்சரியப்பட்டார் சுகன்யா டீச்சர்.

“நான் செடியை நீரில் வளர்த்தேன் மிஸ், அதனால்தான்!” என்றாள் சுருதி.

அவளுடைய வகுப்பில் யாரும் நீரில் வளர்த்த செடியை பார்த்ததில்லை. நீரில் செடி வளர்க்க முடியும் என்று யாருக்கும் தெரியாது.

“உனது செடி மிகவும் அழகாக இருக்கிறது, சுருதி” என்றாள் அவள் வகுப்பு மாணவி ஒருத்தி.

சுருதிக்கு என்றுமில்லாத அளவு பெருமையாக இருந்தது.

சுருதி தனது செடியை எப்படி நீரில் வளர்த்தாள்?

சுருதி, தண்ணீரில் செடி வளர்க்கும் மண்ணில்லா வேளாண்மை(Hydrophonics) முறையில் தனது செடியை வளர்த்தாள். தாவரங்கள் வளர காற்று, நீர், சூரிய ஒளி மற்றும் ஊட்டச்சத்துகள் (தாது உப்புகள், கனிமங்கள்) தேவை. மண்ணில் நடப்பட்ட தாவரம் தனக்குத் தேவையான ஊட்டச்சத்தை மண்ணிலிருந்து எடுத்துக்கொள்கிறது. ஆனால் நீரில் வளர்க்கப்படும் தாவரத்திற்கு ஊட்டச்சத்து வெளியிலிருந்து அளிக்கப்பட வேண்டும். சுருதி தனது செடிக்குத் தேவையான ஊட்டச்சத்து, நீர், காற்று, சூரிய ஒளி மற்றும் வளர்வதற்குப் போதுமான இடம் ஆகியவற்றை அளித்தாள்.

சுருதியைப் போலவே நீங்களும் நீரில் செடி வளர்க்க விரும்புகிறீர்களா?

பாட்டிலில் செடி வளர்க்கலாம் வாருங்கள்

தேவையான பொருட்கள்:

2 லிட்டர் சோடா பாட்டில்

கத்தரிக்கோல் (கத்தரிக்கோலை பெரியவர்களின் மேற்பார்வையில் உபயோகிக்கவும்)

மணி பிளான்ட் நாற்று

தேங்காய் நார்

நீரில் கரையக்கூடிய ஊட்டச்சத்து (இதற்கு பதிலாக, சர்க்கரையையும் உபயோகிக்கலாம்)

குடிநீர்

செய்முறை:

பாட்டிலின் மூன்றில் ஒருபங்கை மேற்புறத்திலிருந்து அளந்து, அதை வெட்டி எடுக்கவும். (இதைப் பெரியவர்களின் உதவியுடன் செய்யவும்)

நீரில் ஊட்டச்சத்து கலந்து பாட்டிலின் அடிபாகத்தை நிரப்பவும்.

மேல்பாகத்தைத் தலைகீழாகத் திருப்பி அடிப்பாகத்தின் மேல் பொருத்தவும். மேல்பாகத்தில் தேங்காய் நாரை நிரப்பவும்.

மணி பிளான்ட் நாற்றை நடவும். அதன் வேர் நீரைத் தொடுமாறு வைக்கவும்.

இப்போது பாட்டிலை நன்கு சூரிய ஒளி படும் இடத்தில் வைக்கவும்.