mazhai neraththu pakoda

மழை நேரத்துப் பக்கோடா!

இனிமையான கஜ்ரி இசை, சின்னஞ்சிறிய அருவிகள், ஈரமான மண்வாசம், அம்மாவின் பக்கோடா வாசம்... மீனு மழைக்காலத்தை அனுபவித்து மகிழ்கிறாள்!

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

வானத்தில் பெரிய கருமேகங்கள், இடியின் ஓசை. மழைக்காலம் வந்துவிட்டது! சமஸ்கிருதத்தில் இதனை ‘வர்ஷ ரிது’ என்று அழைப்பார்கள்.

ஈர நிலத்தின் மணம் எனக்கு மிகவும் பிடிக்கும். சூடான கோடைக் காலத்துக்குப்பிறகு, நிலத்துக்கும் மழைத் துளிகளைப் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்.

மழை தரையில் விதவிதமாகக் கோலம் போடுகிறது. மழை நீரைச் சேமிப்பதற்காக என் மாமா ஆங்காங்கே பெரிய பாத்திரங்களை வைத்திருக்கிறார்.

கூரையிலிருந்து வரும் தண்ணீர் அவற்றில் விழுகிறது. அவைதான் எங்கள் வீட்டு அருவிகள்!

அத்தைக்கு மழை பெய்யும்போது உரக்கப் பாடுவது பிடிக்கும்!

வாரணாசியில் வசிக்கும் சுபா அத்தை எனக்குக் ‘கஜ்ரி’ என்கிற அருமையான பாடல்களைச் சொல்லிக்கொடுத்தார். உங்களுக்குத் தெரியுமா?

பேரரசர் அக்பரின் சபையில் இருந்த புகழ் பெற்ற பாடகரான மியான் தான்சேன் ‘மல்ஹார்’ என்ற ராகத்தில் ஒரு பாடலைப் பாடினால், உடனே மழை பெய்யுமாம்.

நானும் இந்தியப் பாரம்பரிய இசையைக் கற்றுக்கொள்ளப்போகிறேன்!

பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது மழை பெய்ய, நான் நன்கு நனைந்துவிட்டேன். ஆனால் அதுவும் மகிழ்ச்சியாகவே இருந்தது.

எங்கள் வீட்டுக்கு அருகே உள்ள வயல்களில் மயில்கள் மழையில் ஆடுவதைப் பார்த்தேன். அவை நனையவே நனையாதா?

மனு ஒரு பெரிய மரத்தில் ஊஞ்சல் கட்டியிருக்கிறான். அதில் உட்கார்ந்து ஆடியபடி மழைச் சாரல் என் முகத்தில் விழுவதை நான் அனுபவிக்கவேண்டும்!

ஆஹா! சமையலறையில் சூடான பக்கோடா தயாராகும் மணம் வருகிறது. கூடவே கொஞ்சம் மக்காச்சோளமும் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

அம்மா எங்களுக்குச் சூடான பால் தருகிறார். நேற்று அவர் மசாலா அவல் செய்தார். நாளைக்குப் பூரி செய்யப்போகிறாராம்!

எல்லா மரங்களும் செடிகளும் பச்சைப்பசேலென்று மகிழ்ச்சியாகச் சிரிக்கின்றன, ஹரி அண்ணா ஜெய்ப்பூரிலிருந்து எனக்கு அனுப்பிய பச்சைத் துப்பட்டாவைப்போல!

அந்தத் துப்பட்டாவின் பெயர் ‘தானி சுனரியா’ வாம். ‘தானி’ என்றால் பச்சைப்பசேல் நெல் பயிர்கள் என்று அர்த்தம்.

நல்ல மழை பெய்தால், விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் வரும் என்று தாத்தா சொல்கிறார்.

நாமெல்லாம் மழைக்காகக் காத்திருக்கிறோம். ஆனால் விவசாயிகள் மழையைக் கடவுளாக எண்ணி வழிபடுகிறார்கள்!

என்னுடைய மாமரம் மழைக் காலத்தில் பெரிதாக வளர்ந்துவிட்டது. இனிமேல் நான் அதற்குத் தண்ணீர் ஊற்றவேண்டியதே இல்லை.

சென்ற மாதம் காற்று பலமாக வீசியபோதும், என்னுடைய மரம் உறுதியாக நின்றது. என்னுடைய மாமரம் எப்போது இந்த அளவு பெரியதாக வளரும்?