மீராவும் நானும் கூட்டாளிகள். இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தமானவள் அவள்தான். ஏன் தெரியுமா? அவள் ஒருத்தியால் மட்டுமே என்னை பார்க்க முடியும்!
அவளுக்கு பிடித்தது எல்லாம் எனக்கும் பிடிக்கும். எனக்கு பிடித்தது எல்லாம் அவளுக்கும் பிடிக்கும். எங்கள் பெயர்கள்கூட ஒரே மாதிரி இருக்கின்றன. மீரா – அமீரா!
அவளுக்கு நடப்பதெல்லாம் எனக்கும் நடக்கும். “எனக்கு இன்னொரு பல் விழுந்துவிட்டது” என்றாள் மீரா. அப்போது என் உடலில் இருந்தும் இன்னொரு முள் விழுந்தது.
சில சமயங்களில் நாங்கள் வித்தியாசமாகவும் இருப்போம். மீரா பிரச்சினைகளை உருவாக்குவாள். நான் அவற்றை தீர்த்து வைப்பேன்.
மழை பெய்துகொண்டிருந்த அன்றைய தினம் நடந்ததுபோல. “ஐயோ, இப்பொழுது நம்மால் வெளியே போய் விளையாடவே முடியாது” என்று மீரா அழுதாள்.
ஆனால் எனக்கொரு யோசனை வந்தது. காகிதக் கப்பல் ஒன்றில் நாங்கள் பயணம் போனோம்!
அவள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த சமயத்திலும் அப்படித்தான். “எனக்கு நண்பர்களே கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?” என்று கவலைப்பட்டாள் மீரா. “என்னை தோழியாக ஆக்கியது போல, அங்கு இன்னொருவரை நண்பராக்கிக் கொண்டு விடு” என்று நான் அவளைத் தேற்றினேன்.
இப்போது நான் கதை சொல்கிறேன். இது என் முறை. அமீராதான் இந்த உலகத்திலேயே எனக்கு ரொம்ப பிடித்தமானவள். ஏன் தெரியுமா? எனக்கு வித்தியாசமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் அவள் தலைகீழாகக் கவிழ்த்து விடுவாள்.
அமீரா, என்னை எந்த சண்டைக்கும் தனியாகப் போக விடமாட்டாள். அவளால் செய்யக்கூடிய உதவி அதிகம் இல்லை என்றாலும் கூட.
ஒவ்வொரு நாளையும் அவள் ஒரு பெரிய சாகசமாக மாற்றிவிடுவாள். ஒரு சமயம் நாங்கள் அந்த முறுக்குப் புதிரில் மாட்டிக்கொண்டது போல. அப்போது அமீராதான், “எனக்கு ஒரு வழி தெரியும்! நாம் முறுக்கைக் கடித்து சாப்பிட்டுக் கொண்டே வெளியே சென்றுவிடலாம்” என்றாள்.
அமீரா சொன்னது போல், நாங்கள் இருவரும் கூட்டாளிகள்தான்.