ஃபாத்திமாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மதியநேரம் மிகவும் பிடிக்கும். வீட்டில் எல்லாரும் சேர்ந்து பீன்ஸும் கோஃப்தாவும் சாப்பிடுவார்கள், அதன்பிறகு, அம்மா சோஃபாவில் அமர்ந்து செய்தித்தாள் படிப்பார், அப்பா உள்ளே சென்று தூங்கிவிடுவார்.
ஃபாத்திமா ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு அருகே உள்ள பசுமையான காட்டுக்குள் நுழைவாள். அப்போது, காட்டில் வாழும் உயிரினங்கள் தூங்கிக்கொண்டிருக்கும். அமைதியான காட்டு மரங்களின் அரவணைப்பில் அவள் மட்டும் தனியாக அமர்ந்து புத்தகம் படிப்பாள்.
ஃபாத்திமாவுக்கு மிகவும் பிடித்தது, அர்ஜுனா மரம்தான். அதன் நிழலில் அமர்ந்தபடி மேலே இருக்கும் இலைகள் நிறைந்த உலகத்தை அவள் உற்றுப்பார்ப்பாள்.
மேலே சென்று பார்க்கவேண்டும் என்று ஃபாத்திமாவுக்கு ஆசைதான். ஆனால், மரத்தில் ஏறக்கூடாது என்று அவளுடைய தாய் கண்டிப்பாகச் சொல்லியிருந்தார். 'நாம் கீழே உள்ள உலகத்தைச் சேர்ந்தவர்கள், எப்போதும் மேலே உள்ள உலகத்துக்குச் செல்லக்கூடாது. அதுதான் நமக்குப் பாதுகாப்பு.’
மேலே உள்ள உலகத்தில் என்னவெல்லாம் இருக்கின்றன என்று ஃபாத்திமாவுக்குத் தெரியாது. என்றாலும், அதை நினைத்தாலே அவளுக்குப் பயம்.
ஆனால் அன்றைக்கு, ஃபாத்திமாவுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. அவள் புத்தகம் படித்துக்கொண்டிருக்கும்போது பொத்தென்று ஏதோ அவளுடைய தலையில் விழுந்தது.
ஃபாத்திமா சட்டென்று கத்திவிட்டாள், பிறகு, தலையைத் தேய்த்துவிட்டுக்கொண்டாள். தன்மேல் விழுந்தது என்ன என்று பார்த்தாள்.
அது ஒரு சிறிய புத்தகம், ஒரு பட்டாணி அளவில்தான் இருந்தது.
ஃபாத்திமா மேலே நிமிர்ந்து பார்த்தாள். அங்கே புசுபுசு விலங்கு ஒன்று இலைகள் நிறைந்த கிளைகளுக்கு நடுவே ஒளிந்துகொள்வது தெரிந்தது.
”ஹலோ! இந்தப் புத்தகம் உன்னுடையதா?” என்று மேலே பார்த்துக் கேட்டாள் ஃபாத்திமா. பதில் எதுவும் வரவில்லை.
அந்தப் பட்டாணி அளவுப் புத்தகம், மேலே உள்ள உலகத்தைச் சேர்ந்த கோபா என்ற இளம் டார்மௌஸுடையது. கோபாவின் வீடு அந்த அர்ஜுனா மரத்தில்தான் இருந்தது. மென்மையான, உலர்ந்த இலைகள் மற்றும் குச்சிகளைக் கொண்டு கட்டப்பட்ட அழகிய சிறு வீடு அது.
அந்த டார்மௌஸ் ஃபாத்திமாவைப் பலமுறை பார்த்திருந்தாள். ஃபாத்திமாவின் தலையில் இருக்கும் மஞ்சள் நிற ரிப்பன்கள் அவளுக்கு மிகவும் பிடிக்கும்.
ஆனால், கீழே உள்ள உலகம் மிகவும் மோசமானது என்று கோபாவின் தாய் அவளுக்குச் சொல்லியிருந்தார்.
ஆகவே, எல்லா விலங்குகளும் ஃபாத்திமாவையும் மற்ற மனிதர்களையும் பார்த்துப் பயந்தனர். கீழே உள்ள உலகத்துக்குத் தெரியாதபடி மறைந்து வாழ்ந்தனர்.
அன்றைக்கு, பச்சை இலையால் செய்யப்பட்ட தன்னுடைய ஊஞ்சலில் ஆடியபடி புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள் கோபா. கடைசிப் பக்கத்தைப் படிக்கப்போகும் நேரம், வலுவாக காற்று அடித்தது. சட்டென்று புத்தகம் கோபாவின் கையிலிருந்து பறந்து, கிளைகளில் மோதி, பொத்தென்று ஃபாத்திமாவின் தலையில் விழுந்தது.
கோபாவின் வால் துடித்தது. அவள் காதுகள் கூர்மையாகின. மேல் கீழ் உலகங்கள் சந்தித்துக் கொள்ளவே கூடாது என்று யோசித்தபடி வீட்டை நோக்கி ஓட்டம்பிடித்தாள்.
ஃபாத்திமாவும் மரத்தில் ஏறவில்லை. தன் கையிலிருந்த புத்தகத்தைக் கஷ்டப்பட்டுப் படிக்க முயற்சி செய்தாள். அந்த எழுத்துகள் மிகவும் சிறியவையாக இருந்தன. 'இவ்வளவு சிறிய புத்தகத்தைப் படிப்பது யார்?'
நிறைவாக, அவள் ஒரு தீர்மானத்துக்கு வந்தாள், 'எப்படியாவது இந்தப் புத்தகம் யாருடையது என்று கண்டறிந்து, அதைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்.'இதற்காக, புத்திசாலி ஃபாத்திமா ஒரு வழி கண்டுபிடித்தாள்!
அப்போது கோபா தன்னுடைய புசுபுசு வாலைத் தூசு தட்டிக்கொண்டிருந்தாள். திடீரென்று ஐந்து பளபளப்பான சிவப்பு பலூன்களைப் பார்த்ததும், 'இன்றைக்கு யாருடைய பிறந்தநாள்?' என்று யோசித்தாள்.
கோபா பலூன்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, சட்டென்று அங்கே வந்தாள் ஃபாத்திமா. 'அட, அந்த
மஞ்சள் ரிப்பன் பெண் இங்கே எப்படி வந்தாள்?' என்று கோபா யோசித்தாள். உடனே, 'போச்சு, கீழே உள்ள உலகத்தைச் சேர்ந்த மனிதர்கள் இங்கே வந்துவிட்டார்கள், இனிமேல் ஆபத்துதான்' என்று ஓட நினைத்தாள்.
அதற்குள் ஃபாத்திமா கோபாவின் புத்தகத்தை அவளிடம் கொடுத்து 'இது உன்னுடையதுதானே?' என்று கேட்டாள். கோபா அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு சிரித்தாள். ஃபாத்திமாவும் சிரித்தாள். கோபா தன்னுடைய ரிப்பனையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்த அவள், அந்த ரிப்பன்களில் ஒன்றை எடுத்து கோபாவின் வாலில் அழகாகக் கட்டிவிட்டாள். ஃபாத்திமாவும் கோபாவும் கை குலுக்கிக் கொண்டனர். இருவருமாக மேல் உலகத்தை சுற்றிப்பார்க்க புறப்பட்டார்கள்!
அவர்கள் இருவரும் அந்த விதானக் காட்டிலிருந்த மரங்களிடையே குதித்து ஓடினார்கள். ஃபாத்திமாவுக்கு மிகவும் மகிழ்ச்சி.
அங்கே ஒரு மரத்தில் பாங்க்கீ என்ற பழவௌவால் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தான். ஃபாத்திமாவும் கோபாவும் அவனை எழுப்பிவிட்டார்கள்.
இது பாங்க்கீக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. கோபமாகக் கத்தியபடி அடுத்த கிளைக்குப் பறந்துசென்றான். “என்னைக் கொஞ்சநேரம் தூங்க விடமாட்டீர்களா?” என்று சத்தம் போட்டுவிட்டு, மறுபடியும் தூங்க ஆரம்பித்தான்.
தூக்கத்தில் பாங்க்கீக்கு ஒரு கனவு வந்தது. அதில் பாங்க்கீ ஓர் அத்திமரத்தில் தொங்கிக்கொண்டிருந்தான். அந்த மரத்திலிருந்த பெரிய, இனிப்பான பழங்களைக் கடித்துச் சாப்பிட்டு மகிழ்ந்தான்.
கோபாவும் ஃபாத்திமாவும் தொடர்ந்து சென்றார்கள். அங்கே தையற்கார எறும்புகள் வரிசையாக வந்துகொண்டிருந்தனர். அவர்களின் நீளமான கால்களையும் குமிழி போன்ற உடல்களையும் ஃபாத்திமா வியப்புடன் பார்த்தாள். இந்த எறும்புகள் குழுவாகச் சேர்ந்து பணியாற்றிப் பெரிய இலைகளைத் தைத்து கதகதப்பான கூடுகளாக மாற்றுகின்றனர்!
அடுத்து, அவர்கள் ஃபிர்க்கி என்ற விதானத் தவளையைச் சந்தித்தார்கள். 'இந்தத் தவளை வானவில்போல இருக்கிறது' என்று நினைத்தாள் ஃபாத்திமா. 'மஞ்சள் கால், சிவப்புக் கண்கள், நீல உடல்! ஆச்சரியம்தான்.'
ஃபிர்க்கிக்கும் ஃபாத்திமாவைப் பார்த்து ஆச்சர்யம். விதானத்தில் ஒரு மனிதப்பெண் எப்படி வந்தாள் என்ற ஆச்சரியத்தில் அது கிளையின் பிடியை விட்டுவிட இருந்தான். அவளை வரவேற்பதுபோல் ஒருமுறை கத்திவிட்டு, ஒரு வெட்டுக்கிளியைப் பிடித்துச் சாப்பிட்டான்.
இதுவரை, கீழே உள்ள உலகத்தில்தான் தவளைகள் இருக்கும் என்று ஃபாத்திமா நினைத்துக்கொண்டிருந்தாள். அங்கே அவளுடைய வீட்டிலிருக்கும் குளத்தருகே தவளைகளைத் துரத்தி விளையாடுவது அவளுக்குப் பிடிக்கும்.
ஹரி என்கிற ஹார்ன்பில் அவர்களைத் தொலைவிலிருந்து கவனித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு அவர்களுடன் நண்பனாகவேண்டும் என்று விருப்பம். 'ஆனால், அவர்கள் என்னைச் சேர்த்துக்கொள்வார்களா?'
உண்மையில் ஹரி நட்பான பறவைதான். ஆனால், அவன் சத்தமாகக் குரல் எழுப்புவதால், பல விலங்குகள் அவன் அருகே வரமாட்டார்கள். ஆனால், கோபாவும் ஃபாத்திமாவும் அப்படி நினைக்கவில்லை. ஹரியுடன் சேர்ந்து விளையாடினார்கள்.
'அட, மேலே உள்ள உலகம் நான் நினைத்ததைவிட மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது' என்று யோசித்தாள் ஃபாத்திமா.
கோபாவும் அதேபோல்தான் நினைத்தாள். 'இத்தனை நாட்களாகக் கீழே உள்ள உலகத்தைச் சேர்ந்த மனிதர்களை நினைத்து நான் பயந்து கொண்டிருந்தேனே! அவர்கள் உண்மையில் நல்லவர்களாக இருக்கிறார்களே!'
”ம்ம்ம்! ம்ம்ம்!”
அப்போது, யாரோ அழுகிற குரல் கேட்டது.
'அது, வைத்யாவின் குரல்' என்றாள் கோபா. அவளது கூர்மையான காதுகள் எந்த ஒலியையும் விரைவில் கேட்டுவிடும். இரு நண்பர்களும், நிறைய வெட்கப்படும் வைத்யா என்கிற பச்சைப்பாம்பை நோக்கிச் சென்றார்கள்.
”என்ன ஆச்சு வைத்யா?” என்று விசாரித்தாள் கோபா.
வைத்யா வழக்கத்தைவிட பச்சையாக இருந்தான். அவன் அழுதபடியே, ”நான் வசித்த மரத்தை மனிதர்கள் வெட்டிவிட்டார்கள். இனிமேல் நான் எங்கே செல்வேன்?” என்றான்.
பாங்க்கி, டிபு, மற்ற விலங்குகளெல்லாம் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வந்தனர். வைத்யாவுக்கு வீடில்லை.”ஏதோ புதிய சிமெண்ட் சாலை அமைக்கிறார்களாம். அதற்காக மனிதர்கள் என் மரத்தை வெட்டிவிட்டார்கள்.”
அவர்களது வீட்டை வெட்டுகிறார்களா! மேல் உலகம் வருத்தமும் எச்சரிக்கையும் அடைந்தது.
”நாம் வைத்யாவுக்கு உதவவேண்டும்” என்றாள் கோபா.
ஃபாத்திமாவும் கோபாவும் நண்பர்களோடு சேர்ந்து ஒரு தேடும் குழுவை உருவாக்கினார்கள். அவர்கள் தேடித்தேடி கடைசியில் வசதியான பொந்துடன் ஒரு மரம் கிடைத்துவிட்டது. ஃபாத்திமா அங்கே மென்மையான இலைகள், வைத்யாவுக்குப் பிடித்த ஆரஞ்சு மலர்களைப் போட்டாள்.
”எனக்கு இவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. ரொம்ப நன்றி. எனக்கு இந்த வீடு மிகவும் பிடித்திருக்கிறது. நாம் இதை ஒரு விருந்து வைத்துக் கொண்டாடவேண்டும்” என்றான் வைத்யா.
அந்த விருந்து அருமையாக நடைபெற்றது. விருந்து நடக்குமிடத்தை ஃபாத்திமா பலூன்களால் அலங்கரித்தாள். எறும்புகள் தாங்களே தைத்த இலை மெத்தைகளைக் கொண்டுவந்தனர். அதில் எல்லாரும் அமர்ந்துகொண்டார்கள்.
விருந்தில் எல்லாரும் அவர்களுக்குப் பிடித்த உணவுகளை உண்டு மகிழ்ந்தார்கள்: கோபா கொட்டைகளைக் கொறித்தாள். ஹரி பழங்களைத் தின்றான். ஃபிர்க்கி வெட்டுக்கிளிகளைச் சாப்பிட்டான். பாங்க்கீ தூக்கக் கலக்கத்தில் எதையும் சாப்பிடவில்லை!
முதன்முறையாக, மேலே உள்ள உலகமும் கீழே உள்ள உலகமும் சேர்ந்து ஒரே உலகமாக மாறியது!
மேலே உள்ள உலகத்தில் ஃபாத்திமாவின் நண்பர்களைச் சந்திக்க வாருங்கள்
கோபாவும் அவள் நண்பர்களும் இந்தியாவின் பெரிய காட்டு விதானங்களில் வசிக்கிறார்கள். அதாவது, நம்மைப்போல் அவர்கள் கீழே வசிப்பதில்லை, மரங்களுக்கு மேலே கிளைகள், இலைகளில் வசிக்கிறார்கள்.
காட்டு விதானங்களில் வசித்த பல உயிரினங்கள் இப்போது மரங்களின் மேல் வசிக்கப் பழகிவிட்டன. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், நீங்கள் அவற்றைக் காணலாம். ஆனால், அவை புத்திசாலித்தனமாக ஒளிந்து வாழ்பவை, ஆகவே, நீங்கள் பொறுமையாகக் காத்திருந்து பார்க்கவேண்டும்!
இந்த விதானங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் விஞ்ஞானிகள் கயிறுகளையோ ஏணிகளையோ பெரிய, சூடான காற்று நிரம்பிய பலூன்களையோ பயன்படுத்திதான் இந்த மரங்களின்மீது ஏறவேண்டும். அந்த அளவுக்கு இந்த மரங்கள் மிகவும் உயரமானவை.
காட்டு விதானங்களில் வாழும் சில மிருகங்கள்:
மலபார் ஸ்பைனி டார்மௌஸ்: இது புசுபுசு வால் கொண்ட மிருகம். அமைதியான, எந்தத் தொந்தரவும் இல்லாத காடுகளில் உள்ள மரங்களில் வசிக்க விரும்பும். பழங்களை விரும்பிச் சாப்பிடும். சில நேரங்களில் மிளகைக் கொறிக்கும். சுருண்டு படுத்துக்கொண்டு, தன்னுடைய வாலை வெளியே நீட்டிக்கொண்டு, ஒரு முள்ளெலிபோலத் தூங்கும்.
இருவாய்ச்சி(ஹார்ன்பில்): இந்தப் பறவைகள் வண்ணமயமானவை. நீண்ட, வலுவான அலகுகளைக் கொண்டவை. பிற விலங்குகளுடன் நன்கு பழகுபவை. பழங்கள், பூச்சிகள், சிறிய விலங்குகளைச் சாப்பிடுகிறவை. இவை மரங்களில் உள்ள பொந்துகளில் தங்கள் கூடுகளை அமைக்கின்றன. குஞ்சு பொறிக்கும்போது, வீடுகட்டுவதுபோல் தங்கள் பொந்தை மூடி ஒரு மண் சுவரை அமைக்கின்றன!
பச்சைப்பாம்பு: இது பிரகாசமான பச்சை நிறம் கொண்ட, ஒல்லியான மரப்பாம்பு. விதானத்தில் இருக்கும் இலைகளில் ஒளிந்துகொள்ளும். மிகவும் மெதுவாகத்தான் நகரும். நீங்கள் இதனை இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பர்மா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாமில் காணலாம்.
மரத்தவளை: பலவிதமான மரத்தவளைகள் இருக்கின்றன, அவை வெவ்வேறு நிறங்களில் காணப்படுகின்றன. வெள்ளை உதடுகள், சிவப்பு அல்லது மஞ்சள் கண்கள், பழுப்புக் கால்கள் என்று வண்ணமயமாக இருக்கும் இந்தத் தவளைகள், பொதுவாக மிகவும் சிறியவை. இவை உங்கள் உள்ளங்கையில் பாதிதான் இருக்கும். அப்போதுதான் அவற்றால் சிறிய கிளைகளில் குதித்துச்செல்ல இயலும். இந்தத் தவளைகள் பெரும்பாலும் மரங்களிலேயேதான் வாழ்கின்றன.
பழவௌவால்(மெகாவௌவால்): இவை தலைகீழாகத் தொங்குபவை. அவற்றின் பார்வையில் உலகம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இவற்றுக்குப் பழங்களைச் சாப்பிடுவதும் அங்குமிங்கும் சுற்றித் திரிவதும் மிகவும் பிடிக்கும். இவற்றில் சில மிகவும் சத்தம் போடும். அந்தச் சத்தத்தை நீங்கள் நெடுந்தொலைவிலிருந்தே கேட்கலாம். இவற்றின் பார்வை, முகரும்திறன் மிகவும் அதிகம். இவை நமக்குப் பிடித்த மலர்கள், பழங்களில் மகரந்தச்சேர்க்கை நடைபெற உதவுகின்றன.