மெங்குக்குத் தாகமாய் இருந்தது.
அவள் தண்ணீரைத் தேடிச் சென்றாள்.
மெங் தன் பாதத்தால் தரையைத் தட்டினாள்.
முன்பு அது ஓர் அழகிய கால்வாய். நீர்நாய்கள் அங்கு விளையாடி மகிழும்.
ஆனால் இப்போது இல்லை.
மெங்குக்குத் தாகமாய் இருந்தது.
மெங் கற்சுவர்களைத் தொட்டுப் பார்த்தாள்.
முன்பு அது ஓர் நீர்த்தேக்கம்.
பார்க்க பசுமையாக இருக்கும்.
ஆனால் இப்போது இல்லை.
மெங்குக்குத் தாகமாய் இருந்தது.
மெங் சோர்ந்து அமர்ந்தாள்.
முன்பு அங்கு ஓர் ஏரி இருந்தது.
மீன்கள் துள்ளி நீந்தும்.
ஆனால் இப்போது இல்லை.
மெங்குக்குத் தாகமாய் இருந்தது.
மெங் வெகுதூரம் புழுதியில் நடந்தாள்.
முன்பு அங்கு ஓர் ஆறு ஓடியது. அதன் நீர் பளபளக்கும்.
ஆனால் இப்போது இல்லை.
மெங்குக்குத் தாகமாய் இருந்தது.
மெங் தாவித் தாவி கடற்கரைக்கு வந்தாள்.
முன்பு அது பார்க்க தூய்மையாக இருக்கும்.
ஆனால் இப்போது இல்லை.
எல்லாத் தண்ணீரும் எங்கு மறைந்தது?
மக்கள் தண்ணீரை வீணாக்கிவிட்டனரா?
மெங் மனம் உடைந்தாள். தன் கண்களை மூடிக் கொண்டாள்.
திப். திப். திப்.
மெங் தன் உள்ளங்கையைக் குவித்தாள்.
அதில் மழைத்துளிகளுடன் கண்ணீர்த் துளிகளும் நிறைவதைக் கண்டாள்.
மெங்குக்குத்
தாகமாய் இருந்தது.
பாத்திரங்கள் கழுவும் பொழுது தண்ணீரை குழாயிலிருந்து ஓட விடாதீர்கள். ஒரு வாளியில் தண்ணீரைப் பிடித்துக் கொண்டப் பின் அலச ஆரம்பிக்கவும். பாத்திரம் கழுவும் இயந்திரக்கருவி தண்ணீர் வீணாகுவதைப் பெரிதும் குறைக்கும்.
நீங்களும் தண்ணீரைச்
சேமிக்க உதவலாம்!
தரையைத் துடைப்பதற்கு முன் வாளியில் போதுமான தண்ணீரைப் பிடித்துக்கொள்ளவும். அவ்வாறு செய்தால் ஒவ்வொரு முறையும் குழாயைத் திறந்து துடைப்பானை சுத்தம் செய்ய வேண்டியதில்லை. தண்ணீர் மிச்சமாகும். காலணிகளை கழற்றி பாதங்களைக் கழுவி வீட்டிற்குள் நுழைந்தால் தரையில் அழுக்கு படிவது குறையும். தரையில் ஏதேனும் சிந்திவிட்டால் உடனே துடைத்து சுத்தம் செய்துவிடவும். கரை படிந்தால் அதை நீக்க அதிக தண்ணீர் தேவைப்படும்.
குளியல் தொட்டிலில் தண்ணீர் பிடித்து குளிப்பதைத் தவிர்க்கலாம். ஐந்து நிமிடங்களுக்குள் குளித்து முடித்துவிடலாம். குழாயை மூடிவிட்டு நம் ஆசைப்படி ஆடிப் பாடி மகிழலாம்!
தண்ணீரைச் சேமிக்க உங்களுக்கு
வேறு என்னென்ன யோசனைகள் தோன்றுகின்றன?
அரிசி மற்றும் காய்கறிகளைக் கழுவும் நீரைக் கொண்டு செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றலாம்.
மழை நீரை வாளிகளில் சேகரித்துக்கூட தண்ணீர் விடலாம்!