migach chirantha veedu

மிகச் சிறந்த வீடு…

பெரியது, சிறியது, வட்டமானது, சதுரமானது, கனமானது, லேசானது ...இல்லங்களில் பல வகைகள் உண்டு. அவற்றினிடையே என்னென்ன வேறுபாடு என்பதை அறிந்துகொண்டு உங்கள் வீட்டை நீங்களே உருவாக்குங்கள். அது எப்படி என்பதை எங்கள் குட்டிக் கட்டடக் கலைஞர் சொல்லித்தருகிறார், தெரிந்துகொள்ளுங்கள் !

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நான் ஒரு கட்டடக் கலைஞர். எப்படி என்று கேட்கிறீர்களா?

கட்டடக் கலைஞர்கள் கட்டடங்களை வடிவமைக்கிறார்கள், உருவாக்குகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்குக் கட்டடங்களும் வீடுகளும் பிடித்திருக்கின்றன! நானும் அப்படித்தான்! ஆகவே, என் தாய் என்னைக் 'குட்டிக் கட்டடக் கலைஞர்' என்று அழைக்கிறார்.

வீட்டைக் கட்டுவதற்கு, முதலில் காலி இடம் தேவை.

உங்கள் வீட்டை முழுவதும் மரங்கள் நிறைந்த காட்டில் உருவாக்கலாம்,

மிகமிகச் சூடான பாலைவனத்தில் உருவாக்கலாம்,

மிகவும் உயர்ந்த மலையில் உருவாக்கலாம்,

வெள்ளைவெளேரென்று பனி நிறைந்த இடத்திலோ,

சடசடவென மழை பொழியும் இடத்திலோ,

சேற்று வயல் நிறைந்த கிராமத்திலோகூட உங்கள் வீட்டை உருவாக்கலாம்.

உயரமான, பெரிய கட்டடங்களைக் கொண்ட முடிவில்லாத

பெருநகரங்களிலும் நீங்கள் உங்கள் வீட்டை உருவாக்கலாம்.

அல்லது, ஒரு வீட்டுக்குள்ளேயே

இன்னொரு வீட்டை உருவாக்கலாம்.

அடுத்து, வீட்டைக் கட்டுவதற்குப் பொருட்கள் தேவை. பொருட்களா? அவை எங்கே கிடைக்கும்?

எங்கே வீடு கட்டப்போகிறீர்களோ அந்த இடத்தைச் சுற்றிப்பார்த்தால் கிடைக்கும்!

எடுத்துக்காட்டாக, காட்டில் மரங்கள் உள்ளன. மலையில் கற்கள் உள்ளன. ஆர்க்டிக்கில் பனி உள்ளது. கிராமத்தில் ஈர மண்ணும், கூரை போடப் பெரிய இலைகளும் மூங்கிலும் உள்ளன. பெருநகரத்தில் செங்கல்லும் சிமெண்டும் இரும்பும் கண்ணாடியும் உள்ளன.

ஒரு வீட்டுக்குள் பலவகையான பொருட்கள் இருக்கின்றன.

நீங்கள் ஒரு வீட்டைக் கட்டுவதற்கு முன், அந்த வீடு என்ன செய்யவேண்டும் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

எடுத்துக்காட்டாக, பனியாலான இக்லூக்கள் உங்களைக் கதகதப்பாக வைத்திருக்கின்றன!

சாய்ந்த கூரைகளுள்ள மரம் அல்லது கல் வீடுகள் மழையையும் பனியையும் சரிந்தோடச் செய்கின்றன.

கழிகளாலும் விலங்குத் தோலாலும் செய்யப்பட்ட அமெரிக்கப் பழங்குடியினரின் டீப்பீக்கள் உங்களை வசதியாக வைத்திருக்கின்றன. அவற்றை எளிதில் சுற்றி எடுத்துச் செல்லலாம்.

உயர்ந்த கழிகளின்மீதுள்ள வீடுகள் உங்களை நீரிலிருந்து காக்கும்…

…காட்டு விலங்குகளிடம் இருந்தும் காக்கும்!

உங்களுக்குக் காலி இடமும் பொருட்களும் கிடைத்ததும், நீங்கள் வீடு கட்டத் தொடங்கலாம்.

உங்கள் வீடு எந்த வடிவத்திலும் எந்த அளவிலும் இருக்கலாம்.

எடுத்துக்காட்டாக, சிறிய, வட்டமான கூரை வேயப்பட்ட மண் வீடு.

விண்ணை முட்டும் வானுயர்ந்த கட்டடம்.

தலைகீழான ஐஸ்கீரீம் போன்ற டீப்பீ.

வட்டமான கேக்கைப் போன்ற மங்கோலிய யூர்ட்.

ஒரு பந்தைப் பாதியாக நறுக்கியதுபோன்ற இக்லூ.

மிகப் பெரிய மாளிகை வடிவில்...

தடிமனான எழுத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ள வீடுகளைப் பற்றி அறிந்துகொள்ள, இந்தப் புத்தகத்தின் பின்பகுதியைப் பார்க்கவும்.

...மாளிகை!

அல்லது, என்னுடையதைப் போல் அற்புதமான, புதுமையான ஒரு வீடு.

வீடுகளில் பல வகை உண்டு. ஆனால், அவற்றில் சிறந்தது…

… அதை இல்லமாக மாற்றும் ஒரு குடும்பம் வசிக்கும் வீடுதான்!

வீடுகள் பலவகை

யூர்ட்: மங்கோலியாவில் காணப்படும் ஒருவகையான வீடு இது. யூர்ட்கள் மரச்சட்டங்கள், தடிமனான பாய்களால் உருவாக்கப்படுகின்றன. யூர்ட்டின் பாகங்கள் காட்டெருமை அல்லது குதிரையில் எடுத்துச் செல்லுமளவு இலேசானவை.

டீப்பீ: நீண்ட கழிகள் மற்றும் விலங்குத் தோலால் உருவாக்கப்படுபவை, சமவெளிகளில் வாழும் வடஅமெரிக்கப் பழங்குடியினர் இந்த வகை வீடுகளை அமைக்கிறார்கள். இவற்றையும் எளிதாகச் சுருட்டி எடுத்துச் செல்ல முடியும்!

தோடர் டாக்ளெ: தென்னிந்தியாவின் நீலகிரி மலையில் வாழும் தோடர் என்ற பழங்குடியினரின் அரை உருளை வடிவிலான குடிசை இது. குச்சிகள், மூங்கில், கூரையால் உருவாக்கப்படும் இந்தக் குடிசைகளுக்குள் மிகச் சிறிய வாசல் வழியே தவழ்ந்து செல்ல வேண்டும். இந்த அமைப்பு அவர்களை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்கிறது.

இக்லூ: இறுக்கமாக அமைக்கப்பட்ட பனியால் உருவாக்கப்பட்ட ஒரு வீடு இது. ஆனால், இதற்குள் சென்றால் குளிராது, கதகதப்பாகதான் இருக்கும். காரணம், இக்லூக்கள் கட்டப்படும் கனேடிய ஆர்க்டிக், கிரீன்லாந்தின் துலெயில் வெளியே வெப்பநிலை -40 டிகிரி சென்டிகிரேட். அதோடு ஒப்பிடும்போது இக்லூ கதகதப்பாகவே இருக்கும்.

ஸ்டில்ட்கள்: என்ன வடிவம் இது? பூச்சியைப்போல் உள்ளதா? ஸ்டில்ட்கள் இருப்பிடத்தைக் குளிர்ச்சியாக வைக்கின்றன, தென்கிழக்கு ஆசியாவில் இவற்றைப் பொதுவாகப் பார்க்கலாம்.