miss bandicota bengalensis pazaiya kukaikalaik kandupidikkiraal

மிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸ் பழைய குகைகளைக் கண்டுபிடிக்கிறாள்

மிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸ் ஒரு சாதாரணமான வரப்பெலி அல்ல. அவள் ஒரு சாகசக்காரி. ஒவ்வொரு மாலையும் வெயிற் கண்ணாடிகள், தொலைநோக்கிகள், பூதக்கண்ணாடிகள், பாண்டேஜுகள் அடங்கிய பயணப்பையுடன் புறப்பட்டுவிடுவாள். ”ஒரு ஆய்வாளர் எப்போதும் தயார்நிலையில் இருக்கவேண்டும்” என்பாள். இரவுமுழுக்க புதிதாக ஏதேனுமொரு திசையில் தோண்டி கடலுக்கோ புதிய குன்றுக்கோ செல்வாள். வாருங்கள், மிஸ் பண்டிகோட்டாவுடனும் அவள் புதிய நண்பனுடனும் சேர்ந்து இந்தியாவின் பழமையான குன்றுகள் மற்றும் குகைகளிளொன்றை ஆராயலாம்.

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மிஸ் பண்டிகோட்டாவைச் சந்தியுங்கள்

மிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸ் ஒரு குட்டி இந்திய வரப்பெலி. அவள் தன் அம்மா, ஏழு சகோதரிகள் மற்றும் பத்து சகோதரர்களோடு வளைகளாலான ஒரு புதிர்ப்பாதையில் வசிக்கிறாள். அவர்கள் பத்தொன்பது பேருமே பயங்கரமான பீடைகள், எப்போதும் ஏதாவதொரு வெறியாட்டத்தில் ஈடுபட்டிருப்பார்கள்.

ஒவ்வொரு  இரவும் அவளொரு சுரங்கப்பாதையைத் தோண்டத் தொடங்குவாள். ஒவ்வொரு காலையிலும் ஏதாவது வித்தியாசமான இடத்தில், புதிய நண்பர்களையும் சாகசங்களையும் உணவையும் தேடிக் கொண்டிருப்பாள்.

ஒருமுறை, போர்டி கடற்கரைக்குச் சென்றுசேர்ந்தாள். அங்கே போர்பிடா போர்பிடாவையும் மணற்குமிழ் நண்டுகளையும் சந்தித்தாள். அப்போதுதான் அவள் முதல்முறையாக கடலையும் பார்த்தாள்.

எங்கு போனாலும், வெயிலுக்கான கண்ணாடிகள், தொலைநோக்கிகள், பூதக்கண்ணாடி, அப்புறம் அவளுக்கு விருப்பமான ஒட்டும் பாண்டேஜுகள் அடங்கிய ஆய்வுப் பையையும் எடுத்துக்கொண்டுதான் போவாள்.

வாருங்கள், மிஸ் பண்டிகோட்டாவுடன் சேர்ந்து இந்தியாவின் இன்னொரு பகுதியை சுற்றிப்பார்க்கலாம்!

யாரோ தரையிலிருக்கும் ஒரு ஓட்டையிலிருந்து தன் குட்டி மூக்கை நீட்டி எட்டிப் பார்க்கிறார்கள். யாரது?

மிஸ் பண்டிகோட்டா பெங்கலென்ஸிஸ்!

இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் பழுப்புப் பாறைகளின் பலப் பல அடுக்குகள் வழியாக இரவுமுழுக்கத் தோண்டிய புதிய வளையிலிருந்து அவள் இப்போதுதான் வெளியே வருகிறாள். கிட்டத்தட்ட விடிந்துவிட்டது.

அவள் தன் வளைக்குள் மறுபடிசட்டென நுழைந்து மறைந்தாள்.

பின், கவனமாக,

மெல்ல தலையை வெளியே நீட்டினாள்.

தடிமனான கருப்பு வளையத்துக்குள்ளிருக்கும் வட்டமான கண்ணாடிச் சாளரத்தைப் போலிருந்த அதைப் பதட்டத்தோடு பார்த்தாள். அதனுள்ளிருந்து, ஒரு பெரிய கருப்புக் கண் அவளைப் பார்த்தது.

மிஸ் பண்டிகோட்ட பெங்காலென்ஸிஸால் தன் கண்களையே நம்பமுடியவில்லை.

அது, அது ஒரு பூதக்கண்ணாடியா, என்ன?

அவள் அந்தக் கருப்புக் கண்ணிடம் எதுவும் சொல்வதற்குள், அது அவளைப் பார்த்து ஒரு மென்மையான மனிதக் குரலில் “யார் நீ?” என்று கேட்டது.

”நான் மிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸ். நீ யார்?”

”நான் டிக்கூ. நானொரு ஆய்வாளன்” என்று சொல்லிவிட்டு, அந்த மனிதக்குழந்தை ஓரடி பின்னால் சென்றது.

அந்தப் பையன் மிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தான். அவ்வளவு பெரியவனுமில்லை, அவ்வளவு சிரியவனுமில்லை - ஒரு ஆய்வாளர் தோற்றத்துக்குப் பொருத்தமாகவே இருந்தான்.

“இன்று பீம்பேட்கா குன்றுகளை சுற்றிப்பார்க்கக் கிளம்பியிருக்கிறேன்” என்று பெருமையாகச் சொன்னான்.

மிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸ் அவன் தலையிலிருந்த பச்சைத் தொப்பி, கழுத்தில் தொங்கிய தொலைநோக்கி, தோளில் தொங்கும் பழுப்புப் பை மற்றும் அவன் கையிலிருந்த பெரிய பூதக்கண்ணாடி எல்லாவற்றையும் பார்வையால் ஆராய்ந்தாள்.

டிக்கூ எல்லாவற்றுக்கும் தயாராகவே வந்திருக்கிறான். அவள் ஆமோதித்துத் தலையசைத்தாள்.

எனவே, தன் பூதக்கண்ணாடியையும் பயணப் பையையும் காண்பித்தப்படி, “எனக்கும் ஆய்வுப்பயணங்கள் பிடிக்கும்! நான் புதிய இடங்களுக்குச் செல்ல வளை நோண்டுவேன்” என்றாள்.

டிக்கூ இளித்தான். “எனக்கு இந்தக் காட்டில் ஒரு ரகசியப் பாதை தெரியும். நீயும் என்னோடு வருகிறாயா?” என்று கேட்டான்.

நீங்கள் ஊகித்தது சரிதான். புதிய விசயங்கள் எதுவானாலும் எப்போதானாலும் மிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸ் தயார்தான்.

தன் வளையிலிருந்து அவள் வெளியே வந்தாள். புதிய நண்பர்கள் இருவரும் ஒரு குறுகலான மண்பாதையில் நடைபோட்டுத் தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.

அது குளிர்காலம் என்பதால் காடு உலர்ந்தும் மொட்டையாகவும் காணப்பட்டது. தரையில் வலையைப் போலப் படர்ந்திருந்த இலைகளற்ற மரங்களின் மெல்லிய நிழல்கள் காற்றில் நடுங்கின.

மிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸ் ஒரு நிழலிலிருந்து மற்றொன்றுக்கு மெல்லத் தாவினாள்.

ஒளி மற்றும் நிழலாலான வடிவங்களைக் கலைத்துவிடாமலிருக்க, கவனமாக குதிகாலால் தரையிறங்குவாள்.

அவ்வப்போது மரங்களின் வடிவங்களில் மறுபடி மண்ணில் தோன்றிவிட்டதை உறுதிசெய்துகொள்ளத் திரும்பிப் பார்ப்பாள்.

குளிரான காலைத் தென்றல் அவர்களை வருடிச் செல்லும். ஒரு இருவாய்ச்சிக் குருவி சோடிகள் ஒன்றாகப் பாடும் குரல் அந்த அமைதியைக் குலைத்துச் செல்லும். அந்த சாலை மேலேறிக்கொண்டே போனது, அவர்களும் ஒரேசீராக நடந்துகொண்டே இருந்தார்கள்.

வலதுபக்கம் மெல்லிய சலசலப்பு கேட்டு அவர்கள் நின்றார்கள்.

ஒரு வினோதமான விலங்கு அவர்கள் பாதையைக் கடந்துசென்றது; கொஞ்சம் மாட்டைப் போலவும் கொஞ்சம் மானைப் போலவும் இருந்தது. உயரமாகவும் பார்க்க பலசாலியாகவும் தோன்றியது. அதன் தோல் ஒரு நீல-சாம்பல் நிறத்திலிருந்தது. காதுகளை ஒட்டி இரு வளைந்த கொம்புகளும் தொண்டையிலிருந்த தனித்துத்தெரியும் வெள்ளைப் பகுதியும் அதன்கீழே சிறிய கருப்பு தாடியும் இருந்தன.

"என்னதது?” என்று மிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸ் கிசுகிசுத்தாள்.

"நீலான் மான்” என்று சொன்ன டிக்கூவின் கண்கள் மினுமினுத்துக் கொண்டிருந்தது.

மிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸ் மேலும் கேள்விகள் கேட்பதற்குள் அந்த நீலான் தோன்றியது போலவே சட்டென மறைந்துவிட்டிருந்தது.

வனத்தின் நிசப்தம் கிளைகள் முறியும் சத்தத்தால் முரட்டுத்தனமாக குலைக்கப்பட்டது. கூடவே இரைச்சலும்.

திடுக்கிட்டு, வரப்பெலியும் பையனும் தயங்கிநின்றனர். பின் கவனமாக முன்னேறினர்.

அந்த இரைச்சல் அருகிலிருந்துதான் வந்திருந்தது. சொல்லப்போனால், அவர்களுக்கு மேலிருந்து வருவதுபோலிருந்தது!ஒரு காட்டு பழமரம்தான் அந்த இரைச்சலின் மையமாயிருந்தது.

அந்த சாய்ந்து தொங்கிய கிளையில் பெரிய உருண்டையான பழங்கள் நிறைந்திருந்தன.

கீழிருந்த நிலம் இன்னும் நிறைய மஞ்சள்-பச்சை பழங்களால் மூடப்பட்டிருந்தது. பல தெரித்துத் திறந்திருந்தன. மென்மையான சதைப்பகுதி பளிச்சென்ற காவி நிறத்திலிருந்தது.

ஒரு இனிய வாசம், மரங்களால் மூடப்பட்டிருந்த அப்பகுதியை நிறைத்திருந்தது.

“என்ன மரம் இது?” என்று மிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸ் சத்தம் போட்டுக்கொண்டிருந்த மந்திகளிடம் கேட்டாள்.

“இதுதான் விளாம்பழ மரம். உனக்குத் தெரியாதா?” என்று வயதான தோற்றமுடைய மந்தியொன்று ஆச்சரியமாகக் கேட்டார். “இந்திய மந்திக்களான நாங்கள் இப்பழத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ருசித்து வருகிறோம்” என்றும் சொன்னார்.

மிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸ்   இல்லையெனத் தலையாட்டினாள். அவள் விளாம்பழம் தின்றதேயில்லை.

“சரி! அதைவிடுங்க, வாங்க சாப்பிடலாம்! எல்லோருக்கும் இருக்கிறது!” என்று அழைத்தார் அந்த மந்தி.

மிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸ் பாய்ந்து உற்சாகமாக உடைந்திருந்த மர ஓட்டைப் பிரித்துத் திறந்தாள்.அவள் பழத்தைத் தின்கையில் டிக்கூ காய்ந்த இலைகளை சேகரித்துக் கொண்டிருந்தான்.இடைவெளி விட்டதில் புத்துணர்ச்சியடைந்திருந்தமிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸும் டிக்கூவும் மலைப்பாதையில் புதிய சுறுசுறுப்போடு ஏறினர். மேலே ஏற ஏற காட்டின் அடர்த்தி குறைந்தது.

முன்னே செல்லச் செல்ல, அப்பாதை மணற்கற்களும் படிமப்பாறைகளும் நிறைந்திருந்த ஒரு பாறைப்பகுதி வழியாகச் சென்றது.

வளைவில் ஒரு பெரிய பாறை ஒட்டில் நின்றுகொண்டிருந்தது. ஒற்றை முள் இலவ மரமொன்று பின்னாலிருந்து அதன்மேலே விரிந்திருந்தது. அதன் முள்நிறைந்த நடுப்பாகத்திலிருந்து கொழுந்து வெள்ளிக் கிளைகள் பரந்திருந்தன. அது பெரும்பாலான இலைகளை உதிர்த்திருந்தது. கருஞ்சிவப்புப் பூக்கள் அப்போதுதான் பூக்கத் தொடங்கியிருந்தன.

“என் சேகரிப்பில் ஒரு புதிதாய்ப் பூத்த முள் இலவம்பூ சேர்க்கவேண்டும்” என்று அறிவித்தான் மிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸின் ஆய்வாள நண்பன்.

இருப்பதிலேயே கீழிருந்த கிளையைப் பிடிக்க டிக்கூ எக்கியபோது, அவன் வழுக்கி கூடவே மிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸையும் தள்ளிவிட்டான். அவர்கள் பாறையிலிருந்து மண்சரிவில் உருண்டார்கள்.

டம்... டம்... டமால்... டம்.

பாவம் அந்தப் பையன், முட்டியில் சிராய்த்துக் கொண்டு வலியில் காலைப் பிடித்துக்கொண்டிருந்தான்.

மிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸ் உடனடியாக ஒரு ஒட்டும் பாண்டேஜை தயாராக எடுத்துக்கொண்டு அவனிடம் வந்தாள்.

அதை ஒட்டியபடியே டிக்கூ அவளுக்கு நன்றிசொன்னான். தூசைத் தட்டிக்கொண்டு இருவரும் அந்த வேடிக்கை விபத்தை நினைத்து சிரித்தபடியே எழுந்தார்கள்.

மிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸ் சாலைப் பக்கம் திரும்பியபோது திகைக்கச்செய்யும் ஒரு அற்புதக் காட்சியைக் கண்டாள்.

”பார்! நாம் உலகிலேயே மிகப்பெரிய வளையைக் கண்டுபிடித்துவிட்டோம்” என்று அவள் வாயைப்பிளந்தாள்.

டிக்கூ பாசமாக சிரித்துக்கொண்டே மிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸ் முதுகில் தட்டிக்கொடுத்தான்.

“பீம்பேட்கா குகைகள் உன்னை வரவேற்கிறது!”

அவளால் உற்சாகத்தை அடக்கவே முடியவில்லை. அந்த மர்மக் குகைகளை ஆராயும் விருப்பத்தையும்தான்.

எல்லாவற்றையும்விட, அவளிடம் கேள்விகள் பொங்கிவழிந்தன - “யார் இந்த குகைகளை உருவாக்கியது? இவற்றை எப்படி உருவாக்கினார்கள்? இவற்றில் யார் வாழ்கிறார்கள்?”

அவர்கள் குகைக்குள் நுழைகையில், ”ஒவ்வொண்ணா கேளு, என் அருமை நண்பா”  என்றபடி டிக்கூ சிரித்தான்.

உள்ளே அவர்களுக்கு இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. சுவர்களில் வினோதமான மிருகங்களின் குச்சிபோன்ற மனிதர்களின் ஓவியங்களிருந்தன. அவை முன்னொரு காலத்தில் நடந்த கதையொன்றைச் சொல்வது போலிருந்தது.

மறுபடியும் மிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸ் தன் நண்பனைக் கேள்வியுடன் பார்த்தாள்.

எனவே அவன் அந்தப் பழைய குகைகளின் கதையை அவளுக்கு சொல்லத் தொடங்கினான்.

”மிக மிக நீண்ட காலத்துக்கு முன்ன, லட்சக்கணக்கான ஆண்டுகளாக சுண்ணாம்புக்கல்லும் மணற்கல்லும் அடுக்கடுக்காக ஒன்றின்மேல் ஒன்று படிந்திருக்கின்றன. அவையே விந்திய மலைத்தொடரை உருவாக்கின. விந்திய மலைத்தொடரின் வடக்கு எல்லையில் உள்ள உயரமான மலைகள்தான் பீம்பெட்கா மலைகள்.பல லட்சம் ஆண்டுகள் வெயிலும் காற்றும் மழையுமாக தேய்த்து பல அற்புதமான வழிகளில் செதுக்கி இந்தக் குகைகளை உருவாக்கியுள்ளன.பீம்பெட்கா குகைகளில் முதலில் நுழைந்தது திரு. ஹோமோ எரெக்டஸின் குடும்பத்தினர்தான் என சில தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தோராயமாக லட்சம் ஆண்டுகளுக்கு முன் அவர்கள்  இக்குகைகளை பாறையாலான உறைவிடங்களாக பயன்படுத்தியிருக்க வேண்டும்.இன்றும் நாம் இக்குகைகளில் காணும் சிறிய கோப்பைகள், ஓட்டைகளை அவர்களே நோண்டியிருக்க வேண்டும். பின்னர் நமது முன்னோர் பீம்பெட்கா குகைகளை தங்கள் இல்லமாக்கிக் கொண்டனர்.”

”மான், காட்டுக்கோழி போன்றவற்றை உண்டு வாழ்ந்தனர் அவர்கள். வில் அம்பு, ஈட்டிகள் போன்றவற்றை ஆயுதங்களாகக் கொண்டு விலங்குகளை வேட்டையாடியும் காட்டில் தங்களைப் பாதுகாத்துக்கொண்டும் வந்தனர்.

அவர்களுடையது சாகசமும் ஆபத்தும் நிறைந்த வாழ்க்கையாக இருந்திருக்கவேண்டும், ஆனால் அவர்களுக்கு வேறுவழிகள் தெரிந்திருக்கவில்லை. காட்டுப்பன்றி, யானை போன்ற ஆபத்தான விலங்குகளால் அடிக்கடித் தாக்கப்பட்டனர். சிலசமயம் வீரமாக சண்டையிட்டனர். சிலசமயம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினர்.”

”விலங்குகளை வேட்டையாடி எடுத்து வரும்போதெல்லாம், அந்த வெற்றியை இசையும் ஆட்டமுமாகக் கொண்டாடினர்.இந்த வேட்டைக்காரர்களில் சிலர் ஓவியர்களும்கூட. அவர்கள் தங்கள் கதைகளை, தங்கள் வீட்டுச் சுவர்களில் வரைந்துவைத்திருப்பதால், பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னான அவர்களது சாகசங்களை நாம் இப்போது அறிகிறோம்.”

மிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸ் அந்தப் படங்களைப் பார்த்தபடி நின்றாள். அந்தப் பழைய குகைகளின் கதை உயிர்பெற்று வருவதைப் போலிருந்தது.

இரு ஆய்வாளர்களும் இன்னொரு குகைக்குப் போனார்கள். அதன் சுவர்கள் நூற்றுக்கணக்கான விலங்குகளின் படங்களால் நிரப்பப்பட்டிருந்தது. மிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸ் அவற்றை ஆர்வத்துடன் தன் பூதக்கண்ணாடியால் ஆராய்ந்தாள்.

அதேநேரம் அவள் நண்பன் தன் கையேட்டில் அவற்றை வரைந்துகொண்டிருந்தாள். படங்களில் ஒன்றைக்காட்டி அவன் கேட்டான், “இது என்ன விலங்கு?”

மிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸ் உற்றுப் பார்த்தாள். பின் அவனைப் பார்த்து, உற்சாகம் பொங்க சொன்னாள், “இதைப் பார்த்தா வரப்பெலி போல தெரியுதே!”

ஒரு பகல் முழுக்க புதியவற்றைக் கற்றபிறகு,   மிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸ் அந்த பாறை வீடுகளுக்குள் ஓடித் திரிந்தாள். அவை நூற்றுக்கணக்கில் இருந்தன. சில குறுகலாக, சில அகலமாக, சில பெரிதாக, சில வெறும் பிளவுகளாக, மொத்தத்தில் வளைகளைப் போலவே!

சில மணிநேரங்கள் கழித்து, அவள் இன்னும் விர்ரென்ற ஒலியெழுப்பியபடி சுற்றிக்கொண்டிருக்க, அவள் நண்பன் அவசரமாக அழைத்தான். “வேகமா வா. பீம்பெட்கா மலைகளில் இருப்பதிலேயே ஸ்பெஷலான பாறைய காமிக்கிறேன். எனக்காக என் அப்பா அங்க காத்துகிட்டு இருக்கார்.”

மிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸ் கிடுகிடுவென ஓடி அவனோடு சேர்ந்துகொண்டாள். இருவருமாக குன்றின் நுனிக்குச் சென்றனர்.

"அந்த ஆமை மாதிரி இருக்கும் பாறை பக்கம் பார் மிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸ். பேட்வா நதிப் படுகை தெரியும்.”அவள் அந்தக் காட்சியை தன் தொலைநோக்கியால் ரசித்துக் கொண்டிருந்தபோது டிக்கூ தன் அப்பாவிடம் ஓடினான்.

இதமான மதியத் தென்றல் குன்றின்மீது வீச, அவளுக்கு தூக்கம் வந்தது. அந்த ஆமைப் பாறையின் அடியில் ஒரு இடுக்கில் வசதியாக அடைந்துகொண்டாள். அவள் கண்ணிமைகள் மூடும்போது, தன் நண்பன் “நாளைக்கும் ஆராய்ச்சி செய்யப்போக இங்க இருப்பியா?” என்று கத்துவதைக் கேட்டாள்.

ஒரு மென் தென்றல் அவள் தூங்குமூஞ்சி பதிலை அவனிடம் கொண்டு சென்றது: “இன்றிரவு, நானொரு புதிய வளையைத் தோண்டுவேன்... நாளை ஒரு புதிய இடத்தை ஆராய்வதற்காக...”

இப்போ என்ன செய்யலாம்?

மிஸ் பண்டிகோட்டாவோடு சேர்ந்து, டிக்கூ வரைந்திருக்கும் இந்த விலங்குகளைக் கண்டுபிடியுங்கள். இவை எல்லாமே இந்தியாவைச் சேர்ந்தவைதான். உங்களுக்கு உதவ சில குறிப்புகளும் இருக்கின்றன.

*இதன் ஆப்பிரிக்க உறவினர்தான் நிலத்தில் வாழும் மிகப்பெரிய பாலூட்டியாகும்.

*பறவைகளிலேயே ஆடம்பரமானவற்றில் ஒன்று, அதன் மழை நடனத்துக்காக புகழ்பெற்றது.

*பூனைக் குடும்பத்தின் வரிவரியான மிகப்பெரிய உறுப்பினர்.

*இதன் அறிவியற் பெயர், இதன் ஒற்றைக் கொம்பைக் குறிப்பது.

மத்திய இந்தியாவின் மரங்கள்

மத்திய பிரதேசத்தில், விந்திய மலைத்தொடருக்கு அருகிலிருக்கும் ஒரு காட்டின் நடுவேதான் மிஸ் பண்டிகோட்டா பெங்காலென்ஸிஸ் பீம்பெட்காவின் பழங்கால குகைகளைக் கண்டுபிடிக்கிறாள்.

இந்த மாநிலம்தான் நாட்டிலேயே அதிகமான வனப்பரப்பைக் கொண்டது. அதன் தேக்கு, குங்கிலியம் மற்றும் மூங்கில் காடுகளுக்காகவும் பரந்துவிரிந்திருக்கும் கலவையான வெப்பமண்டலக் காடுகளுக்காகவும் புகழ்பெற்றது.

நமது முன்னோர் மரங்களுடன் பல ஆண்டுகளாக வாழ்ந்து, அவற்றின் பல பயன்களையும் அறிந்து வைத்திருந்தனர்.1. பலாசம் மத்தியப் பிரதேசத்தின் மாநில மலராகும். செம்மஞ்சள் மற்றும் ரத்தச் சிவப்பு நிறங்களில் கொத்துக் கொத்தாகப் பூப்பதால் இம்மரம் காட்டின் தழல் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் விதைகள், இலைகள், பிசின் அனைத்தும் மருத்துவப் பயனுடையவை.

2. நெல்லி மரத்தின் மென் பச்சை-மஞ்சள் நிறக் கனியையே நாம் இந்திய நெல்லி என்கிறோம். அது விட்டமின் சி-க்கான நன்கு அறியப்பட்ட இயற்கை ஆதாரமாகும்.

3. கருவேல மரம் இந்தியாவைச் சேர்ந்தது. அது உலர்ந்த, மணலான பகுதிகளில் தானாக வளரக்கூடியது. வறட்சியையும் வெள்ளத்தையும் தாங்கக்கூடிய உறுதியான, முள்நிறைந்த மரமாகும். கருவேல மரத்தின் கொழுந்துக் குச்சிகள் பல்துலக்க பயன்படுத்தப்படுகின்றன.

4. இலுப்பை மரம் நம் மண்ணின் மரங்களில் ஒன்று, மத்திய மற்றும் வடக்கு இந்தியாவின் காடுகளில் பல இனக்குழுவினரால் புனிதமாகக் கருதப்படுகிறது. அதன் மலர் உணவாகக் கூடியது, அது தேன், பாகு, ஜாம் செய்யவும் பயன்படுகிறது.