moidhoottikku maambazham

மொய்தூட்டிக்கு மாம்பழம்

மாலுவும் மொய்தூட்டியும் மாயாஜாலத்தின் உதவியோடு சுவையான மாம்பழங்களை அடைய முனைகின்றனர். ஆனால் மாயாஜாலம் ஓர் ஆபத்தான விஷயம். இப்பொழுது அவர்கள் அதிபயங்கரமான ஆமாசுரனை விரட்டி அடித்தாக வேண்டும். இந்த சங்கடத்திலிருந்து அவர்களை மீட்க வருகிறார் அவர்களுடைய செல்லப் பாட்டி!

- Bhuvana Shiv

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அப்பொழுது கோடை விடுமுறை நடந்து கொண்டிருந்தது.

"அதோ பார், மாலு!" கத்தினான் மொய்தூட்டி.

"எவ்வளவு பெரிய, கனிந்த மாம்பழங்கள்! எனக்கு அதில் கொஞ்சமாவது கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!" பெருமூச்சு விட்டான் மொய்தூட்டி.

"ஹ்ம்ம்..." யோசித்தாள் மாலு. "நமக்குத் தேவை ஒரு அசுரன். அவன் மரத்தை உலுக்கி மாம்பழங்களைக் கீழே விழச்செய்வான்!"

உடனே அவர்கள் வீட்டிற்கு ஓடி, பாட்டியின் மந்திர மாயாஜாலப் புத்தகத்தில் அசுரர்களை  வரவழைப்பதற்கு ஏதேனும் குறிப்பு இருக்கிறதா என்று பார்த்தனர்.

"இதோ பார்! நமக்கு வேண்டிய மந்திரம்," கூச்சலிட்டாள் மாலு.

"ஆணியுடன் சாவிகளும் இடுவாய் கொதிக்க

காசுகளும் சேர்ப்பாய் மந்திரம் சிறக்க...

"அரிசியும் பகடையும் மேலிட்டுக் கண்மூட,

அசுரனும் வருவானே அனைவரும் பயந்தோட!"

தீடீரென ஒரு பெரிய சத்தம் வீட்டையே உலுக்கியது. மாலுவும் மொய்தூட்டியும் வெளியே ஓடினர். வானம்  பச்சையாகவும் சூரியன் வெளிரியும் போயிருந்தது!

ஒரு பெரும் மின்னல் வானைப் பிளந்தது. அதனைத் தொடர்ந்து ஒரு பயங்கரமான குரல், மேகக்கூட்டத்தின் நடுவிலிருந்து ஒலித்தது.

"இந்த ஆமாசுரனை எழுப்புமளவிற்கு யாருக்கு இங்கே துணிச்சல்?!" என்று கர்ஜித்தான். " ஆஹா! மாம்பழ வாசனை வருகிறதே! எத்தனையோ நூற்றாண்டுகளாக நான் மாம்பழங்களைத் தொடக்கூட இல்லை! இப்பொழுது கிடைக்கும் அத்தனையும் சாப்பிடாமல் விடுவதில்லை!"

ஆமாசுரன் வாயை அகலத் திறந்து தன்னைச் சுற்றி இருந்த அத்தனையையும் விழுங்கத் தொடங்கினான். வானத்திலிருந்த மேகங்களையும் கூட உண்டுவிட்டான்!

"அடடா! நாம் ஏன் இந்த மந்திர தந்திரங்களோடு விளையாடினோம்? ஆமாசுரன் மேகங்களையெல்லாம் தின்றுவிட்டான். அடுத்து மரத்திலிருக்கும் அத்தனை மாம்பழங்களையும் விழுங்கிவிடுவான். பிறகு..."

"அதோ பார் அம்மும்மா! அவள் நமக்கு உதவுவாள்!" கத்தினாள் மாலு. பாட்டியிடம் ஓடி, நடந்த அத்தனையும் அவளிடம் கூறினர் சிறுவர்கள்.

அம்மும்மா பெரிதாக சிரித்தாள். "ஆமாசுரன் பார்க்கப் பயங்கரமானவன்தான். ஆனால் அசுரர்களுக்கு தண்ணீரென்றால் பயம்! அவர்களுக்கு சுத்தமாக  இருப்பதே பிடிக்காது!"

அம்மும்மா தன் நீல நிறப் புடவையை வானை நோக்கிச் சுண்டிவிட்டாள்.

உடனே மழை மேகங்கள் தோன்றின.

மழை பொழியத் துவங்கியது!

"ஆஆஆஆஆஆ!! குளிர்கிறதே! நன்றாக நனைந்து சுத்தம் வேறு ஆகிவிட்டேன்! என்ன கொடுமை!!"

பூம்! ஆமாசுரன் திடீரென்று தோன்றிய  ஒரு வெள்ளொளிக் கடலில் காணாமல் போனான்.

மொய்தூட்டி மரத்திலிருந்து விழுந்துகொண்டிருந்த மாம்பழங்களை நோக்கி உற்சாகமாக ஓடினான்.