mongal stole pongal

மொங்கல் சுட்ட பொங்கல்

மொங்கல் ஒரு சிடு மூஞ்சி பூதம். வண்ணங்களோ ஆனந்தமான சத்தங்களோ தனக்கு அறவே பிடிக்காது. அதுவும் சூரிய வெளிச்சம் என்றால் பிடிக்கவே பிடிக்காது! பொங்கல் வரும் சயமாய் பார்த்து, மொங்கல் சூரியனை திருடி ஒரு மலை குகையில் ஒளித்து வைத்துவிடுகிறது. அய்யய்யோ! வானில் சூரியன் இல்லாமல் என்ன ஆகும்? மொங்கல் தன் தவற்றை உணர்ந்து சரி செய்யுமா?

- Abhi Krish

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பூமியின் அடியே

புழுதியின் நடுவே

வாழ்ந்தது பூதம்

மொங்கல்.

“போதும் வண்ணம்!

போதும் சத்தம்!”

கேட்குதா அதுவின்

முனங்கல்?

“வறண்டு இருண்டு இருக்க வேண்டும்!

சாம்பல் நிறம்

தான் பிடிக்கும்!

புழுவோ பூச்சியோ

ஊ-ர்ர்ர்-ந்து

போனால்

லபக்கு!

சாப்பிட பிடிக்கும்!”

அழகிய

உழவர் கிராமம் ஒன்று வயல்களின் அருகே வசித்தது.

ஆடு, மாடு,

கோழி உலாவ

காய்கறி பழங்கள் நிறைந்தது.

ஒவ்வொரு வருடமும்

மூன்று நாட்கள்

மக்கள் ஒன்று சேர்ந்தனர்.

“பொங்கலோ பொங்கல்!”

கூவி ஆடிப் பாடி

சிரித்து மகிழ்ந்தனர்.

கொண்டாட்டத்தை

வெறுத்த மொங்கல்

முடியை இழு-த்த்த்-து

உறுமியது!

"சூரியன் திருடி,

பொங்கலை நிறுத்தி,

முடிவு கட்டுவேன்!”

என்றது.

கல்லெறிக் கருவியில் பெரிய வலையைப்

பொருத்தி மொங்கல் காத்தது.

சூரியன் மறையும் சமயமாய் பார்த்து

டபக்கு! என்று பிடித்தது!

லக! லக!

என்று சிரித்துக் கொண்டே

மொங்கல் துள்ளிக் குதித்தது.

சூரியன் ஓட வழி இல்லாமல்

மலைக்குள் பொந்தில் அடைத்தது.

தினமும் பொழுது விடிந்து சாய்ந்தும்

இருள் மட்டுமே தங்கியது.

மனிதன், மிருகம், செடிகள், கொடிகள்,

ஒன்று விடாமல் வாடியது.

மாநகரத்தில் குழந்தைகள் பசியில்

அலறும் கூச்சல் பரவியது.

"பனியாரம்! பீசா!

பரோட்டா எங்கே?"

என்று கண்கள் தேடியது.

"பேரங்காடி

அனைத்தும் காலி!

எதுவும் அடுக்கவில்லையே?

நம் உணவு

அங்கு தானே வளரும்?

சாப்பிட

ஒன்றுமே இல்லையே?

“சூரிய வெளிச்சம் இயற்கையை வளர்க்கும்.”

என்று ஆசிரியர் சொன்னார்.

“உழவர் உழைத்து அறுவடை செய்வது

உணவாய் மாறும்.” என்றார்.

“உடனே கிளம்பு! சூரியனை தேடு!”

வயல்களை நோக்கி விரைந்தனர்.

ஆனால் அங்கே வந்தால் அதிர்ச்சி!

தோள்வரை தண்ணீரில் மிதந்தனர்!

மலைகளிலிருந்து பனிக்கட்டி உருகி

வெள்ளம் திரண்டு ஓடுகிறது!

மலைக்குள் என்ன?

சூரிய கதிரா?

குபு குபு என்று எரிகிறது?

மலைக்கு படகில்

செல்லும் பொழுது

பார்த்தனர்

மொங்கல் அழுவதை.

தன் வீட்டை

வெள்ளம்

அடித்துச் சென்றதில்

உணர்ந்தது

தவறு செய்ததை.

"பூச்சிகள் இல்லை... குளிரில் நடுக்கம்..."

தவற்றை மன்னிக்கக் கெஞ்சியது.

"சரி செய்வோம், மொங்கல்!"

குழந்தைகள் தூண்ட,

ஆர்வமாய் பூதமும் கிளம்பியது.

சூரியனை

பதுக்கி

வைத்த

குகைக்கு

மொங்கல்

அழைத்துச் சென்றது.

ஆனால்

குகையின் வாசல்

இறுக்கி அடைந்து

திறக்க மறுத்தது.

"கல்லெறிக் கருவியை ஓங்கி வீசுவோம்!"

சிறுவர்கள் துணிந்துப் பேசினர்.

"மீண்டும்! மீண்டும்!"

கற்களை எறிந்து வாசலை உடைத்துச் சிதைத்தனர்!

சூரியன்

டொய்ங்! என

வானில் குதித்தது.

மந்திரக் கோல் போல்

கதிர்களை அசைத்தது.

ஹஸ்ஸா!

புஸ்ஸா!

எல்லாம் மாறி,

உலகமே மீண்டும்

அருமையாய் செழித்தது.

வெளிச்சத்தை கொண்டாட  மக்கள் பானையில்

அரிசி, சர்க்கரை நிறைத்தனர்.

புன்னகை மலரப்

"பொங்கலோ பொங்கல்!"

மொங்கலும்

பாடக் கண்டனர்.

நன்றி சூரியன்!

உன்னால் தானே

உலகம் அழகாய்

இருக்கிறது!

நம்மை காத்து,

உணவு கொடுத்து,

எங்கும் மகிழ்ச்சியைச் சேர்க்கிறது!