muchkund enum theyn priyan

முச்குந்த் எனும் தேன் பிரியன்

இந்தக் கதையில், முச்குந்தும் அவனது ஆவிக் கூட்டமும் சேர்ந்து காட்டில் அட்டகாசம் செய்பவர்களை அடக்க ஒரு வழி கண்டுபிடிக்கின்றனர்.

- K. R. Lenin

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இது முகுந்த் என்கிற புத்திகூர்மை உடைய ஓர் இளவயதுப் பேயைப் பற்றிய கதை. அவன் வேதாள் பாபாவின் ஆவிகள் கூட்டத்தைச் சேர்ந்தவன். அவன் ஒரு முன்ஜ்யா ஆவி, தன் சகாக்களை விடவும் அறிவாற்றல் மிக்கவன்; பிறருக்கு உதவும் சுபாவம் கொண்டவன். பூனா பல்கலைக்கழக வளாகத்திலிருக்கும் ஒரு மிகப்பெரிய அரசமரத்தில் அவன் வசிக்கிறான். முகுந்த் அடிக்கடி ஒரு மாணவனைப் போன்ற தோற்றத்தில் பல்கலைக்கழக வகுப்புகளுக்குச் செல்வான். சில சமயங்களில், தன்னை ஒரு சிட்டுக்குருவியாக மாற்றிக்கொண்டு ஜன்னலில் உட்கார்ந்து விஞ்ஞானப் பரிசோதனைக் கூடத்தில் நடக்கும் ஆய்வுகளைக் கவனிப்பான்.

எப்போதும் அறிவை மேலும் மேலும் வளர்த்துக் கொள்வதிலேயே அவன் நாட்டம் இருந்தது. பேராசிரியர்கள் சில சமயம் அறிவுக் கூர்மையுடைய ஒரு மாணவன் அடிக்கடி வகுப்புகளில் காணப்படுகிறான். ஆனால் சில வகுப்புகளுக்குப் பிறகு அவன் காணப்படுவதே இல்லையே, எப்படி என்று வியந்தார்கள்.

ஒருநாள், தொலைதூரத்திலிருக்கும் நாடுகளைப் பற்றி ஒரு பேராசிரியர் சொல்வதைக் கேட்ட முச்குந்திற்கு தானும் ஒரு குறுகிய விடுமுறை எடுத்துக்கொண்டு அந்நாடுகளைப் போய்ப் பார்த்துவர வேண்டும் என்று ஆசை வந்தது. அதே சமயத்தில் அவனுடைய மாமா ஜாம்பவானிடமிருந்து அவனுக்குக் கடிதம் வந்தபோது அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.

“தீபாவளி விடுமுறைக்கு எட்ஜருக்கு வா. இங்கு உயரமான மரங்களில் நிறைய தேன்கூடுகள் இருக்கின்றன. உன் ஒன்றுவிட்ட சகோதரர்கள் நீல், அங்கத், சுஷெனுக்கும் இங்கிருக்கும் மற்ற சிறுவர்களுக்கும் மரங்களில் தட்டுத்தடுமாறி ஏறித் தேன் கூடுகளை எடுத்துவந்து தேனைச் சாப்பிடுவதில் விருப்பம் அதிகம். உனக்கும் இனிப்பு பிடிக்கும்தானே? நீ இங்கே மகிழ்ச்சியாக இருப்பாய். இரண்டு வாரங்களாவது இங்கு தங்கும்படி வா” என்று மாமா எழுதியிருந்தார்.

பேய்களின் கூட்டம்இந்தியப் புராணக் கதைகளில், வேதாள் பாபா பூதங்களின் அல்லது ஆவிகளின் அரசன் எனச் சொல்லப்படுகிறது – ஆவிகள் நிழல் போலத் தோன்றுபவை, சிறப்பான சக்திகளை உடையவை, நம்மைச்சுற்றி எங்கும் இருப்பவை. வேதாள் பாபா பூனா நகரின் மிக உயரமான மலையுச்சியில் உட்கார்ந்திருப்பாராம். அவரது கூட்டத்தில் பிசாசு, முன்ஜ்யா, ஸோட்டிங், காவிஸ், சமன்தா எனப் பல விதமான ஆவிகள் இருந்தன. அவை எல்லாம் பழமையான ஆலமரங்களிலும் அரசமரங்களிலும் புனிதமாகக் கருதப்படும் பிற மரங்களிலும் வாழ்கின்றன. சிவபெருமானின் நடன நிகழ்ச்சிகளுக்கு அவருடன் போவது அவற்றுக்கு மிகவும் பிடித்தமான விஷயம். அவற்றைப் பற்றிய பிரபலமான கதைகள் பல இருக்கின்றன, அவற்றுள் வேதாளமும் விக்கிரமாதித்திய ராஜாவும் பற்றிய இருபத்தைந்து கதைகள் எல்லோரும் அறிந்தவை.முன்ஜ்யாக்கள் எதைப்பற்றியும் நிறையத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவல் உள்ள வித்தியாசமான ஆவிகள். அவற்றால் தாங்கள் விரும்பும் எந்த உருவத்திற்கும் மாற முடியும். எந்த விலங்குடனும் மனிதர்களுடனும் அவரவர் மொழியில் பேச முடியும்.

முச்குந்த் விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்குச் செல்ல வேதாள் பாபாவின் அனுமதி பெற்றான். முன்ஜ்யாக்கள் நீண்ட தூரத்தை தாவிக் கடந்துவிடும். அதேபோல முச்குந்தும் ஒரே தாவலில் மகாராஷ்டிர மாநிலத்தில், கட்சிரோலி மாவட்டத்தில், மெந்த லேகாவின் எல்லையிலிருக்கும் எட்ஜர் காட்டில் இறங்கினான். எட்ஜர் காடு இந்தியத் துணைக்கண்டத்தின் மையத்தில் அமைந்திருக்கிறது. இம்முறை அவன் ஒரு கரடிக் குட்டியின் உருவத்துக்கு மாறியிருந்தான். அடர்ந்த காட்டை சுற்றிலும் பார்த்தான். அர்ஜுன், இலவு, அரசு, கும்பாதிரி மரங்களின் பெரிய கிளைகளிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த மலைத்தேனீக்களின் மிகப் பெரிய கூடுகளைப் பார்த்து அவன் பரவசத்தில் திளைத்தான்.

விரைவில் நீல், அங்கத், சுஷென் ஆகியோரோடு நட்பாகிவிட்டான். அவர்களோடு சேர்ந்து ஐம்பதடி உயர மரங்களையும் எளிதில் ஏறித் தேனீக்கூடுகளைத் தாக்கினான். மலைத்தேனீக்கள் மாபெரும் உருக்கொண்டவை. ஒவ்வொரு தேனீயும் ஓர் அங்குலத்திற்கும் மேல் நீளமிருக்கும்.

மலைத்தேனீக்கள் கூட்டின் மேற்பகுதிகளில் தேனைச் சேமித்து வைக்கும். முச்குந்தும் மற்றவர்களும் கூட்டின் அருகே வந்ததும் தேனீப் படைகள் தங்கள் உயிரைப் பற்றிய கவலையில்லாமல் அவர்களைத் தாக்கும்.

முச்குந்த் சொர்க்கத்தில் இருந்தான். அவன் அடிக்கடி இனிப்பான தேன் சாப்பிடுவதற்காகப் பறந்து கீழே வருவான். அவனுக்கு நாட்கள் பறப்பது போலிருந்தது. பிறகு ஒரு நாள் நிறையத் தேன் சாப்பிட்டபிறகு அவனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது: ‘தேன் எடுத்து சாப்பிடும்போது நமக்கு நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் தேன் எடுக்கும்போது ஆயிரக்கணக்கான தேனீக்களைக் கொல்கிறோமே, இது தேவைதானா?’

இனிப்புச் சுவை மேல் அளவிலா விருப்பம்உயிரினங்களின் வாழ்வில் இனிப்புச் சுவை சிறப்பிடம் பெற்றிருக்கிறது. தாவரங்கள் சூரிய ஒளியின் உதவியுடன் கரியமில வாயு, நீர் இவற்றிலிருந்து தயாரிக்கும் முதல் உணவுப்பொருள் சர்க்கரை மூலக்கூறுதான். மற்ற சிக்கலான மூலக்கூறுகள் அதன் பிறகே தயாரிக்கப்படும். உயிரினங்களால் சர்க்கரைகளில் இருந்து சக்தியை விரைவில் தயாரித்துக்கொள்ள முடியும். அதனால்தான் விளையாட்டு வீரர்கள் விளையாட்டிற்கு இடையில் புத்துணர்ச்சி பெறுவதற்காக க்ளுகோஸ் சாப்பிடுகிறார்கள். இயற்கையாகவே விலங்குகள் இனிப்புச் சுவையால் ஈர்க்கப்படும். மா, பலாப் பழங்களைப்போலத் தேனும் சர்க்கரையின் இயற்கை மூலங்களில் ஒன்று. ஜிலேபியிலும் குலாப் ஜாமூனிலும் நாம் சர்க்கரைப் பாகைச் சேர்க்கிறோம், உங்களுக்கும் அவை மிகவும் பிடிக்கும்தானே?

ஜாம்பவான் மாமாவிடம் இதுபற்றிக் கலந்து பேச வேண்டும் என்று முச்குந்த் முடிவெடுத்தான். அமாவாசை நாளான தீபாவளியன்று, ஒரு நீரோடைக் கரையிலிருந்த பாறையில் உட்கார்ந்து ஜாம்பவானோடு பேசிக் கொண்டிருந்தான். அவன் யோசித்தபடியே சொன்னான், “தேன்கூட்டின் ஒரு பகுதியில் மட்டுமே தேன் சேமித்து வைக்கப்படுவதை கவனித்தேன். நாம் கூட்டின் மற்ற பகுதியைச் சிதைக்காமல் விட்டுவிடக் கூடாதா?” ஜாம்பவான் அதிச்சியடைந்தார். “முச்குந்த், உன் மனதில் நிறைய வினோதமான எண்ணங்கள் இருக்கின்றன! இங்கே பார்! கரடிகளும் தேனீக்களும் பிறவி எதிரிகள். தேன்கூடுகளை அழிப்பது எங்கள் சுபாவத்தில் ஆழப் பதிந்திருக்கிறது.” முச்குந்த் ஜாம்பவான் மாமாவை உற்றுப் பார்த்துகொண்டிருந்தான். சற்று நேரம் கழித்து ஜாம்பவான், அவர் மேல் உட்கார்ந்து தொந்தரவு செய்து கொண்டிருந்த ஈயைத் தட்டிவிட்டு, மெதுவாகச் சொன்னார், “நீ சொல்வது எனக்கும் புரிகிறது. தேன் கிடைப்பதும் நாளுக்கு நாள் அரிதாகிக்கொண்டு வருகிறது என்பது உண்மைதான்.”

”ஆகையால், தேனீக்களைக் காப்பாற்றினால் நமக்கு நற்பெயர் கிடைக்கும், அதே சமயம், தேனும் அதிகம் கிடைக்கும். ஆனால் தேனை கூட்டின் மேற்பகுதியிலிருந்து மட்டும் எப்படி எடுப்பது? கூட்டின் மேற்பகுதியை மட்டும் பிரித்தெடுக்க நேரமாகும். அதற்குள் தேனீக்கள் காது, கண், மூக்கில் எல்லாம் கொட்டிவிடுமே!” என்றார் ஜாம்பவான்.

“ஆ! நான் ஒரு முன்ஜ்யா என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களா? நீங்கள் சம்மதித்தால், நான் ஓர் ஆண் தேனீ உருவத்தில் போய் தேனீக்களுடன் பேசுகிறேன். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்” என்றான் முச்குந்த்.

எண்ணற்ற சாவுகள்

தேனீயின் கொடுக்கு எதிரியின் உடலில் குத்தியதும் கொடுக்கு, தேனீயின் உடலிலிருந்து உடைந்து தேனீயின் குடற்பகுதியோடு சேர்ந்து எதிரியின் உடலில் மாட்டிக்கொள்ளும். அதனால் தேனீ இறந்துவிடும். தேனீ கொட்டினால் மிகவும் வலிக்கும் என்பதால் பெரும்பாலான விலங்குகளுக்கு மலைத்தேனீக்களின் கூட்டைத் தாக்கும் துணிவு இருப்பதில்லை. கரடிகளுக்குத் துணிவு அதிகம். தேனீக்களின் கொடுக்கு கரடிகளின் அடர்ந்த, நீண்ட முடிகளைத் தாண்டி கரடியின் தோலை எட்டமுடியாது. ஆனால் கரடிகள் தங்கள் காதுகள், கண்கள், மூக்கின் நுனி ஆகியவற்றைக் காத்துக்கொள்ள வேண்டும்! தேனீக்கள் தாக்கும்போது, கரடிகள் தம் முகத்தை நீண்ட முன் கால்களால் மூடிக்கொண்டு சுருண்டு கொள்ளும். நிறைய தேனீக்களின் கொடுக்குகள் கரடியின் சிக்கலான முடியில் மாட்டி ஒடிந்து இறந்துவிடும். மெல்ல தேனீக்கூட்டம் தைரியத்தை இழந்து அமைதியாகி விடும். கரடிகள் அதன்பின் வேகமாக மரத்தில் ஏறி தேன் கூட்டைப் பிய்த்து எடுத்துக்கொள்ளும். கூட்டிலிருக்கும் தேனையும் முட்டைகள், புழுக்கள், கூட்டுப் புழுக்களின் சத்து நிறைந்த சாற்றையும் சாப்பிடும்.

முச்குந்த் பிரார்த்தனை செய்தான், ‘வேதாள் பாபா வாழ்க! என்னை ஓர் ஆண் மலைத் தேனீயாக மாற ஆசீர்வதியுங்கள்.’

அமாவாசை இருளில், அவன் பறந்து, ஒரு செழுமையான, நிறைய மலைத் தேனீக்களைக் கொண்ட ஒரு கூட்டின் அருகே சென்று இறங்கினான். அன்று தேனீக்கள் அமைதியாக இருந்தன. மலைத் தேனீக்கள் அமாவாசை இரவில் நீண்ட நேரம் ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும். நல்ல தூக்கத்துக்குப் பின் அவை காலையில் புத்துணர்ச்சியுடன் விழிக்கும். எனவே, முன்பின் தெரியாத ஓர் ஆண் தேனீயை கூட்டுக்குப் பக்கத்தில் பார்த்து அவை திடுக்கிட்டன. உடனே, ஒரு தேனீப்படை முச்குந்தைச் சூழ்ந்து கொண்டது. அவன் அவற்றைப் பார்த்துக் கும்பிட்டு அமைதியாக இருந்தான். தேனீக்களும் அமைதியடைந்து, “யார் நீ? இங்கு ஏன் வந்தாய்?” என்று விசாரித்தன.

முச்குந்த் பதில் சொன்னான், “நான் சமாதானத் தூதுவன். உங்கள் ராணியைப் பார்த்து அவருக்கு முச்குந்த் மரத்தின் மகரந்தத் தூள் ஒரு கூடை பரிசாகக் கொடுக்க வந்திருக்கிறேன். மேன்மை தாங்கிய ராணியை நான் பார்க்கலாமா?” அனுமதி வழங்கப்பட்டது, முச்குந்த் எல்லாத் தேனீக்களையும் போல நடனத்தின் வழியாக விவரிக்கத் தொடங்கினான்.

“மேன்மை தாங்கிய மதுராணி அவர்களே, நான் இயற்கையை விரும்புபவன், வேதாள் பாபாவின் சீடன். நீங்கள் இயற்கையின் ஓர் ஒப்பற்ற படைப்பு. நான் உங்களை ஆராதிப்பவன். ஆனால் தேனீக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருவதைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். இதற்கு முக்கிய காரணம் மனிதர்கள் முன்யோசனையின்றிப் பயன்படுத்தும் பூச்சிகொல்லிகளாகும். ஆனால் கரடிகளுக்கும் இதில் முக்கிய பங்கு உண்டு. கரடிகளின் தலைவரான ஜாம்பவான் ஒரு திட்டத்தைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர என்னை அனுப்பியிருக்கிறார். நான் மேலே பேசலாமா?”

நடனமாடும் தேனீக்களா அல்லது வாயாடிகளா?

தேனீக்கள் தொடர்ந்து கூட்டிலிருக்கும் மற்ற தேனீக்களுடன் பேசிக்கொண்டே இருக்கும். தேனும் மகரந்தமும் இருக்கும் இடங்களைப் பற்றிய விவரங்களை எப்போதும் பரிமாறிக்கொண்டே இருக்கும். அவை கருத்துகளைப் பரிமாறிக்கொள்வது நடனத்தின் வழியாக. உடல் இருக்கும் கோணம் உணவு இருக்கும் திசையைக் குறிக்கும். நடனம் ஆடும்போது வயிறு நெளிந்து அசையும் வேகம் உணவின் தன்மை, இருக்கும் தூரம் ஆகியவற்றைத் தெரியப்படுத்தும்.

அரசியான மதுராணி இப்படிப்பட்ட வினோதக் கதைகளைக் கேட்கும் மனநிலையில் இல்லை. அவருக்குக் கோபம் வந்தது. “அந்தக் கொடூரமான மிருகங்களின் பெயரைக்கூட என்முன் சொல்லாதே. அவர்களுடைய தூதுவனிடம் எதுவும் பேச விரும்பவில்லை. இந்தக் கணமே இங்கிருந்து போய்விடு.”

“சமாதானம்” என்று முச்குந்த் கெஞ்சினான். “கரடிகள் உங்களுடைய எதிரிகள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் என்னை இங்கிருந்து விரட்டுவதால் உங்களுக்கு என்ன லாபம்? உங்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. தேனீக்கள் அழிந்து போகாமலிருக்க இந்த சமாதான திட்டத்தைக் கேட்டால் என்ன?” மதுராணி வேறு வழியின்றி, “உண்மை! உன்னுடைய திட்டம்தான் என்ன?” என்று கேட்டார்.

“கரடிகளும் அழிவைத் தவிர்க்கவே விரும்புகின்றன. ஆதலால் அவற்றுக்கு அமைதியாகத் தேனைச் சாப்பிட அனுமதி வேண்டும்” என்று முச்குந்த் பதிலளித்தான். “அவற்றின் திட்டம் என்னவென்றால், அவையும் முட்டைகள், புழுக்கள், கூட்டுப் புழுக்கள் ஆகியவற்றை அழிப்பதை நிறுத்திக் கொள்ளும். அவை முழுக் கூட்டையும் பிய்த்தெடுக்க வேண்டிய தேவையும் இல்லை. அதற்குப் பதிலாக அவை தேன் சாப்பிடும்போது நீங்களெல்லொரும் அவற்றின் மூக்கையும் காதுகளையும் கண்களையும் கொட்டாமல் அமைதியாக இருக்கவேண்டும்.”

மலைத்தேனீக்களின் கூடுகள்

தேன்கூடு ஆயிரக்கணக்கான மெழுகு அறுகோண அறைகளைக் கொண்டது. தேனீக்கள், நீட்டவாக்கில் இருக்கும் பெரிய மரக்கிளைகளிலும் பாறை முகப்புகளிலும் இக்கூடுகளைக் கட்டும். கூட்டின் மேற்பகுதியில் இருக்கும் இரண்டு விதமான அறைகளில் தேன் நிரப்பப்பட்டிருக்கும். இவற்றுள் மூன்றில் இரண்டு பங்கு அறைகளில் இருக்கும் தேன், தேனீக்களின் அன்றாடத்தேவைக்காக. இந்த அறைகள் திறந்தே இருக்கும், கூட்டில் இருக்கும் மொத்தத் தேனில் நான்கில் ஒரு பங்கே இது. இந்தத் தேன் மிகவும் நீர்த்திருக்கும். மற்ற, மூன்றில் ஒரு பங்கு அறைகளில் அடர்த்தியான தேன் நிரப்பப்பட்டு அவை மூடப்பட்டிருக்கும். இந்தத் தேன் பூக்கள் இல்லாத காலங்களில் பயன்படுத்துவதற்காக. இவற்றின் கீழ் இருக்கும் அறைகளுள் ஒரு பக்கம் மகரந்தத் தூள் இருக்கும், அவற்றுக்கும் கீழே உள்ள அறைகளில் முட்டைகளும் புழுக்களும் இருக்கும். இவை வேலைக்காரத் தேனீக்களாக வளரும். பூக்கள் மலரும் பருவத்தில், எல்லாவற்றுக்கும் கீழே ராணித் தேனீயாக வளரக்கூடிய முட்டைகளும் புழுக்களும் இருக்கும்.

மதுராணி பதில் கூறினார், “நல்ல திட்டம்தான், ஆனால் ஒவ்வொருவரையும் சம்மதிக்க வைப்பது கஷ்டம். ஜாம்பவானிடம் போய் எங்கள் நம்பிக்கையை மோசம் செய்துவிடக் கூடாது என்று சொல். நாங்கள் அவர்களை நிம்மதியாகத் தேன் சாப்பிட விடும்போது அவர்கள் ஒருபோதும் எங்களுடைய முட்டைகளையும் புழுக்களையும் தாக்கக்கூடாது!”

“நல்லது, ராணியாரே. நம்பிக்கைதான் நம்பிக்கையை வளர்க்கிறது. நாம் இதை நல்ல முறையில் செயல்படுத்துவோம். இப்போதே நான் ஜாம்பவானிடம் போகிறேன்” என்றான் முச்குந்த். மதுராணி நம்பமுடியாமல் கண்ணிமைக்காது பார்த்துக் கொண்டிருக்க, முகுந்த் ஆண் தேனீ உருவத்தைவிட்டு இளம் கரடியின் உருவத்திற்கு மாறினான். வெகு ஜாக்கிரதையாக, தேன்கூட்டைத் தொடாமல் அமைதியாக மரத்தைவிட்டு இறங்கினான். மதுராணி எட்ஜர் காட்டிலிருந்த ஒவ்வொரு மலைத்தேனீக் கூட்டிற்கும், ’புதுமையான திட்டம் ஒன்று நம் சம்மதத்திற்காக வந்திருக்கிறது. நாம் என்ன பதிலளிப்பது?’ என்று செய்தி அனுப்பினார்.

தீவிரமான சர்ச்சைகள் நடந்தன. பல ராணித்தேனீக்கள் மறுப்புத் தெரிவித்தன. ஆனால் கடைசியில், எல்லோரும் திட்டத்தை நடைமுறைப்படுத்திப் பார்க்கலாம் என்று ஒத்துக் கொண்டார்கள்.

இதற்கிடையில் கரடிகளும் இதைப் பற்றிக் கலந்து பேசின. “ஏன் தேன் மட்டும். எங்களுக்கு முட்டை, புழுக்களில் இருக்கும் சாறும் பிடிக்கும். சில சமயம் கொட்டப்படுவதும் ஒரு விறுவிறுப்பான அனுபவம்தான். சிலசமயம் ஒரு கண் போய் விடுகிறது. ஆனால் அது ஒரு கரடியின் வாழ்க்கையில் சகஜம். ஒரு கூட்டிற்குப் போய், அமைதியாகத் தேனீக்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டு கொஞ்சம் தேனை நக்கிவிட்டுத் திரும்புவதில் என்ன விறுவிறுப்பு இருக்கிறது? கரடிகளுக்கு இது அவமானமாகும்.”

இறுதியில் ஜாம்பவான் எல்லோரையும் தன் பக்கம் கொண்டுவந்துவிட்டார். காலம் மாறிவிட்டது. தேன்கூடுகளும் உயர்ந்த மரங்களும் அழிந்துவருகின்றன. நாமும் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதுதான் நல்லது என்பதை அவர்களுக்கு உணர்த்தினார். ஆனால், எப்போதும் பிரச்சினை செய்பவரான வாலி, கடைசிவரை ஒத்துக்கொள்ளவே இல்லை. “நீங்கள் என்ன வேண்டுமோ செய்துகொள்ளுங்கள். தேன்கூடுகளைக் கலைப்பது கரடியின் வேலை. அதை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்.”

ஜாம்பவான் கூறினார். “கவனமாகக் கேள், முச்குந்த் சாதாரணமானவன் இல்லை. நீ ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அவன் வேதாள் பாபாவிடம் சொல்லிவிடுவான். பிறகு வேதாள் பாபா ஒரு ஸோட்டிங் ஆவியை உன்னைப் பின்தொடர அனுப்புவார். பிறகு உன் கதை முடிந்துவிடும்.” வாலி மசியவில்லை, “நான் காவிஸ்கள், ஸோட்டிங், அல்லது வேறெந்த ஆவியையும் கண்டு பயப்படுகிறவன் இல்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்.” வாலியின் இந்த விரும்பத்தகாத நடத்தையால் எல்லோரும் சலிப்படைந்தனர். இவ்வளவு பிடிவாதம் கூடாது, மற்றவர்களோடு ஒத்துப்போகாவிட்டால்பின்னர் வருத்தப்பட வேண்டியிருக்கும்என்று அறிவுறுத்தினர்.

முச்குந்த் மீண்டும் ஒருமுறை தன்னை ஓர் ஆண் தேனீயாக மாற்றிக்கொண்டு மதுராணியின் கூட்டுக்கு வந்தான். “தேனீக்களெல்லாம் என்ன முடிவு செய்திருக்கிறீர்கள்?” என்று கேட்டான். “கரடிகள் சமரசத்திற்குத் தயாராக இருக்கிறார்கள்.”

மதுராணி சொன்னார், “மிகவும் நல்ல திட்டம்தான். இந்தப் புது ஒப்பந்தத்தில் எங்களுக்கு என்ன லாபம் கிடைக்கிறது என்று பார்ப்போம்.”

மதுராணி காடு முழுவதற்கும் செய்தி அனுப்பினார். “தேனீக்களுக்கும் கரடிகளுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை அறிவிக்கப்பட்டுவிட்டது. இனி, கரடிகள் எந்தக் கூட்டிலும் இருந்து தேனை மட்டும்தான் சாப்பிடுவார்கள், முட்டைகளையும் புழுக்களையும் சாப்பிடமாட்டார்கள். அதுவும் மாதத்தில் ஒருநாள் மட்டும்தான். எந்தக் கூட்டையும் கலைக்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக, நமது தேனீக்கள் கரடிகளைத் தாக்கக் கூடாது. அவற்றின் கண்களிலும் மூக்கிலும் காதுகளிலும் அவை மறைக்கப்படாமல் இருந்தாலும் கொட்டக்கூடாது.”

இந்தப் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது. கரடிகள் பயமின்றி கூட்டிற்கு ஏறின. தேனீக்களும், தற்கொலைக்குச் சமமான தாக்குதல் செய்யத் தேவையில்லை என்று சந்தோஷமாக இருந்தன. கொஞ்சம் தேனை இழந்தாலும் கூடுகள் சேதமடையாமல் இருந்ததில் அவற்றுக்கு மகிழ்ச்சி. வாலியும் இந்த ஒப்பந்தத்தை ஏற்று நடந்து கொண்டான். மெந்த லேகா காடு முழுவதும் அமைதி நிலவியது.

முச்குந்துக்கும் மகிழ்ச்சி. அவனுக்கு இது ஒரு நல்ல, பயனுள்ள தீபாவளி விடுமுறையாக இருந்தது. மன நிம்மதியோடு பூனாவிற்குத் திரும்பினான்.

மாதங்கள் உருண்டோடின, ஹோலிப் பண்டிகை வந்தது. தேன்கூடுகள் எல்லாம் நல்ல நிலையில் இருந்தன. வாலி அவனுக்குப் பிடித்த தண்டாய் பானத்தைக் குடித்தான். ஆனால் சமாதான உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்னால் அனுபவித்த வேடிக்கைகளுக்காக ஏங்கினான். ‘ஹோலிப் பண்டிகையின் போதாவது, கட்டுப்பாடுகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு தேனீக்களின் முட்டைகளையும் புழுக்களையும் வேண்டுமளவு சாப்பிடவேண்டும்!’ என்று நினைத்தான்.

வாலி இருப்பதிலேயே பெரிய கூட்டைத் தேர்ந்தெடுத்தான். அது மதுராணியினுடையது. உயரமான அந்த மரத்தில் ஏறினான். அந்தப் பெளர்ணமி இரவில் எல்லாத் தேனீக்களும் மகரந்தமும் தேனும் சேகரிக்கப் போயிருந்தன. வாலியை யாரும் பார்க்கவில்லை. ஒரே வீச்சில் கூடு முழுவதையும் கீழே விழச் செய்தான். தரைக்கு இறங்கி வந்து முட்டைகளும் புழுக்களும் இருந்த பகுதியில் ஒரு மிகப் பெரிய பகுதியைத் தின்றான். முகத்தை முன் கால்களால் மூடிக்கொண்டு வாயில் தேனீ முட்டைகள், புழுக்களின் சாற்றின் சுவையோடு ஆழ்ந்து தூங்கிப் போனான்.

நம்பிக்கைத் துரோகத்தினால் கோபடைந்த மதுராணி, மற்ற தேனீக்களுக்குக் கட்டளை இட்டாள், “நேராக ஜாம்பவான் இருக்கும் இடத்துக்குப் போங்கள். நீல், அங்கத், சுஷென் எல்லோரையும் தாக்குங்கள். உங்கள் வலிமையெல்லாம் சேர்த்து அவர்களின் முகங்களில் கொட்டுங்கள்!”

இள வயதுக் கரடிகள் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தன, ஹோலியன்று இரவு மிகுந்த சந்தோஷத்தில் இருந்தன. அப்போது திடீரென நெருப்புப் பட்டதுபோல் எரிச்சல்! அவை கிரீச்சிட்டு அலறின, “எந்தக் காரணமும் இல்லாமல் நாம் தேனீகளால் தாக்கப்பட்டிருக்கிறோம்!”

ஜாம்பவான் உரக்கக் கத்தினார், “தேனீக்கள் ஹோலியன்று போர் அறிவிக்க நினைத்தால், அப்படியே இருக்கட்டும். நாம் இந்த சவாலைக் கண்டு ஓடமாட்டோம்.” எல்லோரும் மதுராணியின் கூட்டுக்கு விரைந்தனர். அங்கே கூட்டின் மீதமுள்ள பிய்ந்த பகுதிகள் இறைந்து கிடந்தன. பக்கத்தில் விழுந்து கிடந்த வாலி குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான்.

ஜாம்பவான் சொன்னார், “இவன்தான் பிரச்சினையா? இவனுக்கு என்றென்றும் மறக்க முடியாத பாடம் கற்பிக்க வேண்டும். தேனீக்களுடனான நம் ஒப்பந்தப்படி அவை நமது மூக்குகள், காதுகள், கண்கள், இவை மூடப்படாமல் இருந்தாலும் அங்கெல்லாம் கொட்டக்கூடாது. நாம் அவற்றை ஒப்பந்தப்படி நடந்துகொள்ளச் சொல்லிக் கேட்போம். இருப்பினும் இந்தத் துரோகி வாலி மீது பழிதீர்த்துக் கொள்ளட்டும்! இவன் இப்போதைக்கு எழுந்திரிக்க மாட்டான்.ஹோலிக்காகப் பற்றவைக்கப்பட்ட நெருப்பிலிருந்து எரியும் கட்டைகளைக் கொண்டுவந்து அதன் தணலால் அவன் பிட்டத்திலும் பின்னங்கால்களிலும் உள்ள முடியைப் பொசுக்கி விடுவோம். பிறகு தேனீக்களிடம் இக்கொடியவனைத் தாக்கச்சொல்வோம்! அவன் முகத்தை மூடிக்கொள்ளலாம், ஆனால் தேனீக்கள் அவன் பின்புறத்தில் கொட்டி அவன் என்றென்றைக்கும் மறக்கமுடியாத பாடத்தைக் கற்பிக்கட்டும்.” கரடிகள் ஹோலி தீயிலிருந்து எரியும் கட்டைகளைக் கொண்டு வந்து வாலியின் பின்புறத்தைப் பொசுக்கின. வாலி குடிபோதையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.

பிறகு ஜாம்பவான் பிரார்த்தனை செய்தார், ‘ஓ, வேதாள் பாபா! நாங்கள் ஓர் இக்கட்டில் இருக்கிறோம். தயவு செய்து முச்குந்தை இந்த வினாடியே எட்ஜர் காட்டுக்கு அனுப்பி வையுங்கள்.’

முச்குந்த் ஹோலி பண்டிகையை நன்றாகக் கொண்டாடியபின் வேதாள் பீடபூமியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு உடனே எட்ஜர் காட்டுக்குப் பறந்து செல்லும்படி கட்டளை வந்தது. ஒரே பாய்ச்சலில் அவன் எட்ஜர் காட்டை அடைந்தான். ஜாம்பவானின் இருப்பிடத்தில் இறங்கியதும், நீல், அங்கத், சுஷேன் மூவரும் தாங்கமுடியாத வலியில் அவதிப்படுவதையும் அவர்கள் முகமெல்லாம் வீங்கியிருப்பதையும் பார்த்தான். “என்ன நடந்தது?” அவன் கேட்டான்.

ஜாம்பவான் அவனை உட்காரச் சொல்லி அவனுக்கு முழுக் கதையையும் சொன்னார். முச்குந்த் சொன்னான், “நீங்கள் செய்தது சரிதான். நான் இப்பொழுதே போய் மதுராணியைப் பார்த்துப் பேசுகிறேன்.”

தன்னை ஓர் ஆண் தேனீயாக மாற்றிக் கொண்டு மதுராணியைத் தேடிக் கிளம்பினான். அவர் ஒரு பெரிய அர்ஜுன் மரத்தின் மீது தன் கூட்டத்தில் எஞ்சியிருந்தவர்களுடன், புதுக் கூடு கட்டத் தயராகிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

மதுராணி, முச்குந்தைப் பார்த்ததும் கட்டுகடங்காத கோபத்தில் கத்தினார், “உன்னைப் போன்றவர்களின் பேச்சைக்கேட்டு இப்போது எங்கள் கூட்டையும் முட்டைகள் புழுக்களையும் இழந்து நிற்கிறோம். நாங்கள் உன்னைத் துண்டு துண்டாகப் பிய்த்துப் போடும் முன் நீ எங்கள் கண் முன்னாலிருந்து போய்விடு.”

“மேன்மை தாங்கிய ராணியாரே, தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள். ஒரு கூடைப் பழத்தில் ஓர் அழுகிய பழம் இருக்கும். ஆனால் நாங்கள் அவனுக்குரிய தண்டனையைக் கொடுத்து விட்டோம். நம் ஒப்பந்தத்தைத் தொடர அனுமதியுங்கள். கரடிகளின் கால்களிலும் பின்புறத்திலும் தேனீக்கள் கொட்டக்கூடாது என்பது ஒப்பந்தத்தில் இல்லை. கரடிகளுக்குள் ஒரே ஒரு துரோகி இருக்கிறான், நாங்கள் அவனுடைய பிட்டத்திலும் பின் கால்களிலும் இருந்த முடிகளைப் பொசுக்கி விட்டோம். நீங்கள் அவனைப் பார்த்த மாத்திரத்தில் வேண்டுமளவு அவனைக் கொட்டுங்கள். அவனை ஒரு சொட்டுத் தேன்கூட சாப்பிட விடாதீர்கள்” என்றான் முச்குந்த்.

மதுராணி, “சரி, நான் எல்லா ராணிகளுக்கும் சொல்லிவிடுகிறேன். ஆனால் இது மாதிரி இன்னொரு முறை நடக்கக் கூடாது” என்றார்.

பொழுது விடிவதற்கு முன், ஒவ்வொரு தேன்கூட்டிலும் வாலியின் துரோகம், அவனுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை பற்றிய செய்திகள் பரவி பரபரப்பாக காணப்பட்டது.

சூரியனின் கதிர்கள் மேலே பட்டவுடன் வாலி கண் விழித்தான். இரவு அவன் சாப்பிட்ட முட்டைகள், புழுக்களின் சுவையை இன்னமும் வாயில் உணர்ந்தான். ‘எவ்வளவு சிறப்பான ஹோலி!’ என்று நினைத்துக் கொண்டான். ‘இனி எந்தக் கட்டுப்பாட்டுக்கும் பணிய மாட்டேன். என் பழைய போக்கிலேயே போகப் போகிறேன்.’சோம்பல் முறித்துக் கொண்டு காலை உணவிற்குத் தேன் சாப்பிடலாம் என்று பெரிய தேன்கூட்டைத் தேடிச் சென்றான். ஓர் இலவ மரத்தில் பதினைந்து பதினாறு கூடுகள் இருப்பதைப் பார்த்தான். ‘ஜெய் ஹோ!’ என்று கத்திக் கொண்டே மரத்தில் ஏறினான், காவல் தேனீக்கள் அவனைக் கண்டுகொண்டன.

“இந்தக் கயவன்தான்!” தேனீக்கள் எல்லாம் கத்திக் கொண்டே வாலியைத் தாக்கின. வாலி சுருண்டு படுத்து, வழக்கமான முறையில் முகத்தை மூடிக் கொண்டான். அந்தோ பரிதாபம், அவனுடைய பின்பக்கம் முழுதும் நெருப்புப் பட்டதுபோல் ஒரே எரிச்சல்! அனிச்சையாக அவன் கைகள் பின் பக்கத்தை மறைக்க முயல, தேனீக்கள் அவன் காதுகள், மூக்கு, கண்களைத் தாக்கின. வலியில் கத்திக் கொண்டே ஓடிப் பக்கத்திலிருந்த நீரோடையில் குதித்தான். குளிர்ந்த நீர் அவன் பிட்டத்தில் பட்டதும்தான் அவன் தன் பின் பக்கத்திலும் பின் கால்களிலும் இருந்த முடிகளை நிரந்தரமாக இழந்திருப்பதை உணர்ந்தான்.இனி அவன் தேனீ முட்டைகளையும் புழுக்களையும் ருசிக்கவே முடியாது. தேன் சாப்பிடுவது பற்றிக் கனவிலும் நினைக்க முடியாது.

கரடிகளுக்கும் தேனீக்களுக்கும் இடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. பழைய ஒப்பந்தத்தைத் தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. வாலி இதில் சேர்க்கப்படவில்லை. என்றென்றைக்கும் அவன் தேன் சாப்பிடத் தடை விதிக்கப் பட்டது. முச்குந்த் மெந்த லேகாவில் இன்னொரு வாரம் தங்கினான்.

ஒரு விஷயம் அவனுக்குப் புதிராக இருந்தது – தேனீக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க விதத்தில் அதிகரித்திருப்பது கரடிகளோடு அவை செய்துகொண்ட சமாதான ஒப்பந்தத்தால் மட்டுமா, அல்லது மனிதர்களும் தேனீக்கள் பெருக வேண்டிய அவசியத்தை உணர்ந்து நடந்து கொள்கிறார்களா? இது பற்றிக் கேட்க, மதிநுட்பம் கொண்ட கிராமத் தலைவர், மணிராம் காகாவைச் சந்திக்கச் சென்றான்.

வார்தாவிலிருக்கும் விஞ்ஞானிகள் தேன் சேகரிக்க ஒரு அகிம்சை வழிமுறையைக் கண்டறிந்திருப்பதைத் தெரிந்துகொண்டான் முச்குந்த். அதையே மெந்த லேகா கிராமத்தாரும் பின்பற்றத் தொடங்கியிருந்தனர்.மேலும், அவர்கள் இயற்கை உரங்கள், பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்திப் பயிரிடுவதால், தேனீக்கள் நச்சுத்தன்மை கொண்ட ரசாயனப் பூச்சிகொல்லிகளைப் பற்றி அஞ்சத் தேவையில்லை. ஆகையால் இப்போது காடுமுழுவதும் தேனீக்களின் ரீங்காரம் கேட்கிறது, மற்ற உயிரினங்களும் பெருகி இருக்கின்றன!

அகிம்சைத் தேன் மகாராஷ்டிர மாநிலம், வார்தாவில் இருக்கும் தேனீக்கள் வளர்ச்சிக்கான ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்ட இயற்கைத் தொழில்நுட்ப முறை, கூட்டின் இருபுறமும் கூட்டிற்குப் பலமாக இருக்கும் அமைப்புகளை அப்படியே விட்டுவிட்டு, தேன் அடைகளில் அடர்ந்த தேன் நிரப்பி மூடி ‘சீல்’ வைக்கப்பட்ட அறைகளில் இருந்து மட்டும் கூர்மையான உபகரணம் கொண்டு தேனை எடுத்துக் கொள்ளும் முறையை அறிவுறுத்துகிறது.

இம்முறையில் கூட்டிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தாமல் கூட்டிலிருக்கும் தேனில் 70-80 சதவீதம் தேனை நாம் எடுத்துக்கொள்ள முடியும். தேனீக்கள் வெகு சீக்கிரம் தேன் சேமிக்கும் பகுதியைக் கட்டி அங்கு தேன் சேமிக்கத் தொடங்குகின்றன. ஓரிரு மாதங்களில் நாம் மீண்டும் தேன் எடுக்கமுடியும், சென்ற முறை எடுத்ததைவிடவும் அதிகமான தேன் கிடைக்கும்.

ஆனால், தேனெடுக்கும் பழைய முறையில் கூடுகள் எரிக்கப்பட்டன. தேனீக்கள்  அழிந்தன. இப்புதிய முறை தேனீக்களின் இறப்பைத் தவிர்க்கிறது. எந்தக் காட்டுப் பகுதியிலும் தேன் தயாரிப்பைக் கணிசமான அளவு அதிகரிக்கச் செய்யும்.

இம்முறையில் இருண்ட இரவிலேயே தேன் எடுக்க முடியும். இதற்கு சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட உடைகள், முகமூடிகள், கயிற்று ஏணிகள், கை மின் விளக்குகள் தேவை.

நமது தேனீக்கள்

அறிவியற் பெயர்: ஏபிஸ் ஃப்லோரி தமிழ்ப் பெயர்: குள்ளத் தேனீ நிலப்பரப்பில் தேனீக்கள் காணப்படும் பகுதிகள்: உயர் வெப்ப மண்டலத்தில் கடல்மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரம் வரையுள்ள சமவெளிகள் அல்லது தாழ்வான பகுதிகள்

இந்தியாவில் காணப்படும் இடங்கள்: சமவெளிகளில் இயற்கையிலேயே கூடுகள் கட்ட ஏதுவாக அமைந்துள்ள இடங்கள்: புதர்கள், மரங்கள், இலைகள், சுவர்களில் இருக்கும் இடைவெளிகள் கூடுகள் கட்டத் தகுந்த இடங்கள்: திறந்த வெளி வளர்க்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள்: இல்லை

அறிவியற் பெயர்: ஏபிஸ் ஸெரானா தமிழ்ப் பெயர்: ஆசியத் தேனீ நிலப்பரப்பில் தேனீக்கள் காணப்படும் பகுதிகள்: வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் கடல்மட்டத்திலிருந்து 3000 மீட்டர் உயரம் வரை. இந்தியாவில் காணப்படும் இடங்கள்: எல்லா இடங்களிலும் இயற்கையிலேயே கூடுகள் கட்ட ஏதுவாக அமைந்துள்ள இடங்கள்: பாறைகள், சுவர்கள், அடிமரங்களில் இருக்கும் பொந்துகள் கூடுகள் கட்டத் தகுந்த இடங்கள்: இருண்ட இடங்கள் வளர்க்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள்: இருக்கிறது

அறிவியற் பெயர்: ஏபிஸ் மெலிஃபெரா தமிழ்ப் பெயர்: இத்தாலியத் தேனீ நிலப்பரப்பில் தேனீக்கள் காணப்படும் பகுதிகள்: மிதவெப்ப ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியாவில் வளர்க்கப்படுகிறது இந்தியாவில் காணப்படும் இடங்கள்: வடஇந்தியா முழுவதும் வளர்க்கப் படுகிறதுஇயற்கையிலேயே கூடுகள் கட்ட ஏதுவாக அமைந்துள்ள இடங்கள்: பாறைகள், சுவர்கள், அடிமரங்களில் இருக்கும் பொந்துகள் கூடுகள் கட்டத் தகுந்த இடங்கள்: இருண்ட இடங்கள் வளர்க்கப் படுவதற்கான சாத்தியக் கூறுகள்: இருக்கிறது

அறிவியற் பெயர்: ஏபிஸ் டார்ஸடா தமிழ்ப் பெயர்: மலைத்தேனீ நிலப்பரப்பில் தேனீக்கள் காணப்படும் பகுதிகள்: மிதவெப்ப, வெப்ப மண்டலங்களில் காடுகள் மற்றும் சமவெளிகளில் கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரம் வரை இந்தியாவில் காணப்படும் இடங்கள்: எல்லா இடங்களிலும் இயற்கையிலேயே கூடுகள் கட்ட ஏதுவாக அமைந்துள்ள இடங்கள்: பெரிய மரங்களின் கிளைகள், பாறைகள், கட்டிடங்கள், கோபுரங்கள், பாலங்களுக்கு அடியில் கூடுகள் கட்டத் தகுந்த இடங்கள்: திறந்த வெளி வளர்க்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள்: இருக்கிறது