mum mum yumm yumm

மம் மம்! யம் யம்ம்! வயிற்றுக்கு நல்லவை எல்லாம்!

நாம் உணவு உண்பதனால் உயிர் வாழ்கிறோம். எதைச் சாப்பிட வேண்டும் என்று நமக்குத் தெரியுமா? மேலும் எப்படிச் சாப்பிடுவது என்பது நமக்குத் தெரியுமா? சிந்தனைக்குத் தீனி....குஷியான வயிற்றுக்கு!

- Sudha Thilak

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பெரிய யானையிலிருந்து சிறிய எறும்பு வரை, நம் எல்லாருக்கும் ஒன்று தேவை.

தேவை முடிந்ததும், வயிறு சொல்லும், "யம்! யம்! யம்ம்ம்ம்!"

அது என்னவென்று தெரியுமா? அதுதான் உணவு!

ஆம்! உணவு என்னைச் சொல்ல வைக்கும், மம், மம், யம், யம்ம்!

உணவு என்பது என்ன?

உணவு இன்றி யானையால் காடு முழுவதும் சுற்றித் திரிய முடியுமா? துளி உணவு இல்லாமல் ஒரு எறும்பால் அதன் கூட்டை விட்டு வெளியே வர முடியுமா? உணவு இன்றி சுவாசிக்கத்தான் இயலுமா?

நம் எல்லோருக்கும் படிக்க, விளையாட, சாப்பிட, உயிர் வாழ போன்ற எல்லாவற்றுக்கும் சக்தி தேவை. இந்தச் சக்தி எதிலிருந்து வருகிறது?

தாவரங்கள் சூரியனிடமிருந்து

சக்தியைப் பெறுகின்றன.

விலங்குகள் தங்கள் சக்தியை தாவரங்கள்

அல்லது மற்ற விலங்குகளிடமிருந்து பெறுகின்றன.

மனிதர்கள் பல விதமான உணவுகளைச் சாப்பிடுகிறார்கள்.

பிற ஜீவராசிகள் சாப்பிடும் சில இயற்கையான உணவுகள் மனிதர்களுக்கு உணவாகாது.

நானேதான் என் சமையலறை!  ஹூம்ம்ம்!

யாருமே எனக்காக உணவு சமைப்பதில்லை!

அய்யய்யே! நான் புழுவை

விழுங்கி விட்டேனா, என்ன?

அந்த மான் மிக ஒல்லியாக உள்ளது.

அது நிச்சயம் சரியாகச் சாப்பிடுவதில்லை.

பற்களைப் பற்றிய உண்மை

நீ உணவை மெல்லும்போது, பற்கள் அதை சிறிய துகள்களாக்கித் தந்து விழுங்குவதை சுலபமாக்குகின்றன. இது, உணவிலிருக்கும் சத்துகளை கிரகித்து சக்தியாக மாற்றுவதற்கு வயிற்றுக்கும் சுலபமாக்குகிறது. இதனை ‘செரிமானம்‘ என்பார்கள்.

நன்றாக மெல்லும் போது வாயில் அதிகமான உமிழ் நீர் சுரக்கும். உமிழ் நீர் உணவு செரிக்க உதவுகிறது. மேலும், பற்களைத் தூய்மைப்படுத்தி ஆரோக்கியமாக வைக்கிறது.

ஆனால், உன் உடலை ஆரோக்கியமாய் வைத்திருக்க நீ உதவ வேண்டும். நீ உணவு அல்லாத சூவிங் கம், பென்சில் போன்றவற்றை மெல்லும்போது, வாய் ‘நான் உணவை அனுப்பப் போகிறேன்’ என்னும் சமிக்ஞையை வயிற்றுக்கு அனுப்பும். உடனே வயிறு தயாராகிவிடும்.

உணவு வரவில்லை என்றால், வயிறு கோபித்துக்

கொண்டு வேதனைப்படும்!அடடா!

பற்கள் இல்லாவிட்டால் நம்மால் நன்றாக சாப்பிட முடியுமா? உன்னைப் புகைப்படம் எடுக்கும் போது, பற்கள் அத்தனையும் காட்டி உனக்கே உரியதான ஒரு சிரிப்பைக் காட்டுவாய், அல்லவா?

உனக்கு எத்தனைப் பற்கள் உள்ளன? பெரியவர்களது பற்களை பக்கத்தில் சென்று கவனித்துப் பார். நான்கு விதங்களில் மொத்தம் 32 பற்கள் இருக்கும்.

1. முன்வாய்ப் பற்கள்: நடுவில் இருக்கும் தட்டையான நான்கு பற்கள் - உணவைக் கடிக்க

2. கோரைப் பற்கள் - உணவைக் கிழிக்க

3. இரண்டு முன் கடைவாய்ப் பற்கள் மற்றும் மூன்று குண்டான பின் கடைவாய்ப் பற்கள் - உணவை மென்று அரைக்க

சரியாக மெல்லுங்கள்!

உணவைக் கடித்தோ, கையாலோ சிறுசிறு துகள்களாக உடையுங்கள். இது மெல்வதை சுலபமாக்கும். அக்கறையுடனும், மெதுவாகவும், எப்படி உணவு மசிக்கப்படுகிறது என்று கவனித்துக் கொண்டே மெல்லுங்கள். உணவை நன்கு கூழாக்கி விழுங்கிய பின்னரே அடுத்த கவள உணவை எடுக்க வேண்டும்.

சாப்பிடும்போது முடிந்தவரை பேசாதீர்கள். இல்லையெனில் சாப்பாடு தொண்டையில் அடைத்துக் கொள்ளக் கூடும்.

வேடிக்கையான சில உண்மைகள்

• தவளைக்கு பற்கள் இல்லாததால், உணவை அப்படியே முழுதாக விழுங்கி விடும்!

• ஆப்பிரிக்க யானைக்கு நான்கு கடைவாய் பற்கள் உள்ளன.

• 'சுருப்பி' எனப்படும் இமாலயப் பாலாடைக்கட்டி(Himalayan cheese) மெல்லும் அளவுக்கு மிருதுவாக ஆவதற்கே சில மணி நேரங்கள் பிடிக்கும்.

• பூனைகள் தங்கள் உணவை மென்று சாப்பிடுவதில்லை. ஆனால் நீ பூனையில்லை! அதனால், நீ உன் உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

உங்களுக்குத் தெரியுமா?

• உணவை மென்று சாப்பிடுவது, உங்கள் தாடை, நாக்கு, ஈறுகளை வலுவாக்கும் நல்ல பயிற்சி.

• சூவிங் கம்மை வாயின் ஒரு பக்கமாகவே மெல்வது, மறு பக்கத்தை வலுவற்றதாக்கும். வலியையும் தரலாம்.

•கரும்பு போன்றக் கடினமானவற்றை மென்று சாப்பிடுவது காதுகளுக்கு நல்லது. காது வழியைச் சுத்தமாக வைத்திருக்கவும் உதவும்.

உணவு வகைகள்

விளையாட்டு வீரர்களுக்கு என்னை மிகவும் பிடிக்கும். ஏனென்றால், என்னிடம் இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சத்துகள் உள்ளன.

கால்சியம் மற்றும் இரும்புச் சத்து என்னைச் சிறந்த பலசாலியாக்கும்!

வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், மாவுச்சத்து என எங்களிடம் எல்லாமே உள்ளன!

மாங்கனீஸ், மெக்னீசியம் மற்றும் கொழுப்பு சேர்ந்து எங்களை சுவையான ‘மொறு மொறு’ உணவாக்கும்!

புரதம் + மாவுச்சத்து என்பது சுவையான கூட்டணி!

புரதம், வைட்டமின்கள், கொழுப்புகள் எல்லாம் எங்களிடம் உள்ளன!

தாதுக்கள்(Minerals) என்பவை இயற்கையில் கிடைக்கும் தனிமங்கள். இவை நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லின் ஆரோக்கியத்திற்கும் அவசியம் தேவை.

வைட்டமின்கள் என்பவை நம் உடலால் உருவாக்க முடியாத வேதிப்பொருட்கள். ஆனால் இவை நமது கண்கள், சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. வௌவால், நாய், சீமப்பெருச்சாளி(guinea pig) போன்ற சில பிராணிகள் தங்களுக்குத் தேவையான சில வைட்டமின்களைத் தாங்களே உருவாக்கிக் கொள்ள முடியும்.

கொழுப்புச்சத்து(Fats) நம்மை ஆரோக்கியமாகவும், சக்தியோடும் வைத்திருக்க அவசியமானது. இது சில வைட்டமின்களை நமது உடல் கிரகித்துக் கொள்ள உதவுகிறது. ‘பர்கர்’, ‘சிப்ஸ்’ போன்ற உணவு வகைகளில் உள்ள கொழுப்புச் சத்து நமது உடலுக்கு தீங்கு செய்பவை. மாமிசம், பால் கட்டி, கொட்டைகள், எண்ணைகள் ஆகியவற்றில் நல்ல கொழுப்புச் சத்து உள்ளது. உடல் நலத்தோடும், ஆற்றலோடும் இருக்க ஓரளவு கொழுப்புச்சத்து அனைவருக்கும் அவசியம்.

புரதம் (proteins) என்பது வீட்டிற்கு செங்கல் போல உனது உடலுக்கு கட்டுமானப் பொருளாகும். விரல் நகத்திலிருந்து தலைமுடி வரை எல்லாவற்றிலும் புரதம் காணப்படும். சோயா பீன்ஸ், துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, காராமணிப் பயறு இவை எல்லவற்றையும் கலந்து செய்யும் பருப்பு சாம்பார் புரதம் நிறைந்தது. பால், தயிர், பால் கட்டி, மாமிசம், பீன்ஸ், விதைகள், கொட்டைகள், கோதுமை, ஓட்ஸ், சிவப்பரிசி, பார்லி என எல்லாவற்றிலும் புரதம் உள்ளது! அடேயப்பா!

மாவுச் சத்து(carbohydrates) , நாம் ஆற்றலுடன் இருப்பதற்கு அவசியம். பசையோடு இனிப்புக் கூடிய பொருட்களான அரிசி, சர்க்கரை, உருளைக் கிழங்கு போன்றவை நமக்கு மாவுச்சத்து கொடுப்பவை. அதிகமான அளவு மாவுச்சத்து ஆரோக்கியத்திற்குக் கெடுதல் செய்பவை. ஆகவே, நீ கேக்கு வகைகள், ஜாம் வகைகள், பிட்ஸா போன்றவைகளைக் குறைவாகச் சாப்பிடு!

பச்சை: முட்டைக்கோஸ், கீரை: குடலைச் சுத்தம் செய்ய நார்ச்சத்து, எலும்புகளுக்கு கால்சியம்

சிவப்பு: தர்பூசணிப்பழம், தக்காளி : எலும்புகளுக்கு வலு, புற்று நோய் போன்றவற்றை எதிர்த்துப் போராட

ஆரஞ்சு: காரட், பூசணிக்காய் :கண்களுக்கும், சருமத்திற்கும் நல்லது

ஊதா: கத்தரிக்காய்: இதயத்தை ஆரோக்கியமாக வைக்க, இளமையாகத் தோற்றமளிக்க, நோய்வாய்ப் படாமல் காக்க

ஒரு யோசனை

சுவையாகவும், ஆரோக்கியமாகவும் ஏதாவது சாப்பிட வேண்டும் போல் உள்ளதா? கொய்யா, பப்பாளி, வாழைப்பழம், தர்பூசணி அல்லது உன் வட்டாரத்தில் அந்தந்தப் பருவத்தில் கிடைக்கும் பழங்கள் எல்லாவற்றையும் சேர்த்துப் பழக்கலவை தயார் செய்யவும். துளி உப்பைத் தூவி சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கினால் சுவையும், ஆரோக்கியமும் மிக்க உணவு தயார்.

சமவிகித உணவு

எல்லா விதச் சத்துக்களும் நம் உடலுக்குத் தேவை. ஆனால், ஒரே உணவில் எல்லாச் சத்துக்களும் இருப்பதில்லை. ஆகவே தான், ஒவ்வொரு வேளை உணவின் போதும் நீ பன்னீர் சாப்பிட விரும்பினாலும், தானியங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், எண்ணை, வெண்ணை போன்ற எல்லா வித உணவுகளையும் உண்ண வேண்டும். பழங்கள், பச்சைக் காய்கறி கலவை போன்ற சமைக்கப் படாத உணவுகளையும் உண்ண வேண்டும். உன் தட்டில் உணவு வானவில்லை அமைத்தால், ஒவ்வொரு உணவின் வண்ணமும் உனக்காக அதில் என்ன சத்தைக் கொண்டுள்ளது என்று சொல்லிவிடும்.

நன்மை தரும் உணவு,

நன்மை தராத உணவு

சில உணவுகள் உனக்கு நன்மை தருபவை.

சில உணவுகள் உனக்கு அப்படி ஒன்றும் நன்மை

தருபவை அல்ல. நமக்கு நன்மை தரும் உணவுகளை

அதிகமாகவும், நமது உடலை சோர்வாக்கும்

உணவுகளை குறைவாகவும் சாப்பிடுவது முக்கியம்.

பாட்டிக்குத் தேவையான அளவை விட அதிகமான

அளவு புரதச்சத்து வளரும் குழந்தைகளுக்குத் தேவை.

சரி விகித உணவைச் சாப்பிட்டால்,

உன் உடல் பாடும், மம்! மம்! யம்! யம்ம்!!

வயிற்றுக்கு நல்லவை எல்லாம்!

நண்பர்களோடு ஒரு விளையாட்டு:

ஒருவர் பத்து வரை எண்ண வேண்டும். மற்றவர் இந்தப் பக்கத்தில் காட்டப்பட்டுள்ள படங்களிலிருந்து, ‘நன்மை தரும் உணவு’களின் பெயர்களை மட்டும் சொல்ல வேண்டும். யார் குறைந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பெயர்களைச்

சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.இனிமையும், சுவையும்

ஒவ்வொரு வேளை உணவையும் ஆரோக்கியமாகவும், மகிழ்வோடும் தயாரியுங்கள். உங்கள் வட்டார உணவு வகைகளையும் சேர்த்துக் கொள்ள விரும்புகிறீர்களா? பெரியவர்களின் ஆலோசனைகளை மறவாமல் கேட்டுக் கொள்ளுங்கள். அவர்கள் தெரிந்து வைத்திருக்கும் சுவைமிக்க உள்ளூர் உணவு வகைகளின் எண்ணிக்கையைக் கேட்டு ஆச்சரியப்படுவீர்கள்.

காலைப் பலகாரம்

இட்லி

சாட்டு லிடி

டலியா

அவல் உப்புமா

மதிய உணவு

கைக்குத்தல் அரிசி

ராஜ்மா

கம்புக் கிச்சடி

குட்டு மாவு சப்பாத்தி

சிற்றுண்டி/பானங்கள்

டோக்ளா

மோர்

வறுத்த பயறு/பாப் கார்ன்

பொரி/பச்சைக்

காய்கறிக் கலவை

இரவு உணவு

பல தானிய சப்பாத்தி

முளைக்கட்டிய பயறுக் கலவை

பட்டாணிஅடைத்த சப்பாத்தி

வெந்தயக்கீரைச் சப்பாத்தி

நீ மிக்கப் பசியோடு இருந்து, ஐம்பது ரூபாயை எடுத்துக் கொண்டு கடைக்குச் செல்கிறாய் என்றால், என்ன வாங்குவாய்?

1. வெந்தயக்கீரை போட்ட சப்பாத்தி, மோர், கொய்யாப்பழம்

2. இட்லி, பாதாம் பருப்பு, வாழைப்பழம்

3. ராகிக் களி, கீரையும் முளைக்கட்டிய பயறும் போட்ட சாம்பார், அப்பளம்

4. உருளைக்கிழங்கு அடைத்த சப்பாத்தி, பொடியாக நறுக்கிய

வெள்ளரிக்காய்,வெங்காயம், தக்காளி போட்ட சாலட், கடைந்த தயிர்

5. உளுந்த வடை, வற்றக்காய்ச்சிய பால், பனங்கற்கண்டு

6. காய்கறி அல்லது மாமிசம் அடைத்த மைதாக் கொழுக்கட்டை

உங்கள் வட்டாரத்தில் புழங்கும் வெவ்வேறு சுவையான உணவு சேர்க்கைகளை நினைத்துப் பார்க்கிறாயா? சுவையுள்ள, ஆரோக்கியமான உணவு வகைகளைக் கொண்ட ஒரு உணவுத் திருவிழாவை உங்கள் பள்ளியில் ஏற்பாடு செய்வது, ஒரு நல்ல யோசனையாக இல்லையா என்ன?

மம்!மம்!யம்! யம்ம்!

வயிற்றைத் தடவ நினைவில் வையுங்கள்!