“பள்ளிக்கூடத்திற்கு ஒரு புதிய ஆசிரியர் வந்திருக்கிறார். நீ இன்று வருகிறாயா?” திறந்திருந்த கதவின் வழியாக சோனு அழைத்தாள். “இல்லை” சம்பா கட்டிலில் இருந்தபடியே உறுமினான். பள்ளிக்கூடம் போகும் திட்டமே அவனுக்குக் கிடையாது, எப்போதும்!
“முட்டாள்கள்” என்று முனங்கியபடி சம்பா படுக்கையில் சுருண்டு கொண்டான். பள்ளிக்கூடத்தில் அவர்கள் வாய்ப்பாடுகளையும் எழுத்துகளையும் திரும்பத் திரும்ப சொல்வார்கள். மேலும் வகுப்பில் அசையாமல் உட்கார்ந்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஆசிரியர் திட்டுவார். சம்பாவுக்கு வெளியே சுற்றுவது பிடித்திருந்தது. சில சமயம் வயலில் அப்பாவுக்கு உதவுவான். பல நாட்கள் மரங்களில் பழங்களைப் பறிப்பான், இல்லை திருடுவான். பறவைகளைக் கவனிப்பான். ஓடைகளில் மீன் பிடிப்பான். தேன்கூடுகள், கரையான் புற்றுகளை நோட்டமிடுவான். ஆனால், அவனுக்கு புதிய ஆசிரியர் மீது ஆர்வமாக இருந்தது.
அந்த ஆசிரியர் ஊர் பேருந்தில் வந்திறங்கி நடப்பதைக் கற்பனை செய்தான்... முதலில் தார்ச்சாலையில் நடக்க வேண்டும். பிறகு மேலும் கீழும் வளைந்து செல்லும் மண்பாதையில் நடக்க வேண்டும். அவருடைய புடவை காட்டுப் புதரிலும் முட்செடிகளிலும் சிக்கக் கூடும். சிறிய ஜீவராசிகள் அவர் கால்களைச் சுற்றி குதிக்கக்கூடும். பாதையில் பாம்பு கடந்து செல்லலாம். ஆசிரியர் அலறிக் கத்தியபடி வந்த வழியே திரும்பிப் போய்விடுவார். சம்பா வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தான்.
“நீதானே சம்பாஜி பிஸே?” சம்பா துணுக்குற்று நிமிர்ந்து உட்கார்ந்தான். “நீ என்னோடு இப்போது பள்ளிக்கூடத்துக்குப் புறப்படுகிறாய்!” கதவினருகே நின்றிருந்த பெண் கூறினார்.
சுனிதா டீச்சர், சம்பாவின் கையைப் பிடித்து பள்ளிக்கூடம் நோக்கி அழைத்துச் சென்றார். “காலையில் சாப்பிட்டாயா?” என்று கேட்டார். பதில் சொல்வது போல் சம்பாவின் வயிறு முனங்கியது. சம்பா குழந்தையாக இருந்தபோதே அவன் அம்மா இறந்துவிட்டார். அவன் அப்பா வீட்டில் இருப்பதே அரிது. வழியில் சம்பா தன் நண்பன் ரஹீமைப் பார்த்தான். ரஹீமும் பள்ளிக்கூடத்துக்குப் போவதில்லை. சம்பா மான் போல இருமி ஆசிரியர் வருகிறார் என்று எச்சரித்தான். ரஹீம் வயல்வெளிக்குள் தவழ்ந்து சென்று மறைந்துகொண்டான். ரஹீம் “மியாவ்” என்று ஒலி எழுப்பினான். அவன் என்ன சொல்கிறான் என்று சம்பாவுக்குத் தெரியும். “இப்படிப் போய் மாட்டிக்கொண்டாயே, பாவம்!”
பள்ளிக்கூடத்து குழாயில் சம்பா வேகமாக ஒரு குளியல் போட்டான். பிறகு சுனிதா டீச்சர் அவனுக்கு ஒரு புதிய சீருடையை கொடுத்தார். தன் உணவு டப்பாவிலிருந்து ரொட்டியும் காய்கறியும் எடுத்துக் கொடுத்தார்.
வகுப்பில் சோனு இருப்பதைக் கண்டு அவளுக்கு அருகே சென்று அமர்ந்து கொண்டான். கணக்கு வகுப்பு துவங்கியது. ஒரு குழுவுக்கு நான்கு பேர் வீதம் சிறுவர்கள் பிரிந்தனர்.அலமாரியிலிருந்து சீட்டுக்கட்டுகளை டீச்சர் எடுத்து வந்தார். “நேற்று விளையாடிய அதே விளையாட்டா, டீச்சர்?” சிறுவர்கள் கேட்டார்கள்.
“ஆமாம். நாம் இன்னொரு முறை பயிற்சி செய்ய வேண்டும்” என்றார். சம்பா வாயைப் பிளந்தான். இது கணக்குப் பாடம்தானா? சுனிதா டீச்சர் ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு சீட்டுக்கட்டையும் சில சாக்பீஸ் துண்டுகளையும் கொடுத்தார். சம்பா திறமையாக சீட்டுகளைக் குலுக்கியபடி இளித்தான். பின் சுனிதா டீச்சர் சீட்டுக்கட்டை அவனிடம் இருந்து வாங்கி குழுவின் மத்தியில் வைத்தார்.
“ஒவ்வொருவரும் ஒரு சீட்டைத் தேர்வு செய்ய வேண்டும். அதிலிருக்கும் எண்ணைத் தரையில் எழுத வேண்டும். பின்னர் அடுத்த சீட்டை எடுத்து அதன் எண்ணை முந்தைய எண்ணோடு கூட்ட வேண்டும். யார் முதலாவதாக கூட்டுத்தொகை 200ஐ அடைகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள். ஒருவர் எண்களைக் கூட்டும்போது மற்றவர்கள் அந்தக் கூட்டுத்தொகையை சரிபார்க்க வேண்டும். யாரும் ஏமாற்றக்கூடாது!” சம்பா தவறுகள் செய்தான். ஆனால் மற்றவர்களின் தவறுகளைக் கண்டுபிடிப்பதில் திறமையானவனாக இருந்தான். புத்திசாலி வனிதா ஏமாற்றியதைக்கூட கண்டுபிடித்துவிட்டான்!
“முட்டாள்கள்தான் போவார்கள்!” மறுநாள் கட்டிலில் திரும்பிப்படுத்தபடி சம்பா முனங்கினான். வனிதா, ரகு, சோனுவுடன் இன்னும் சிலரும் பள்ளிக்கூடத்துக்கு நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். சம்பா ஓரக்கண்ணால் சூரியனைப் பார்த்தான். பள்ளிக்கு அழைத்துச் செல்ல சுனிதா டீச்சர் வரும் நேரமாகிவிட்டது என்று நினைத்தான். வயல்களில் ஒளிந்துகொள்வதுதான் நல்லது!
நாவல் பழ மரத்தடியில் கேட்ட பூங்குருவியின் நீண்ட சீழ்க்கையொலி அவனை மேலே பார்க்க வைத்தது. அங்கே ரஹீம் உட்கார்ந்திருந்தான். சம்பா மரத்திலேறி அவனுக்கு அடுத்த கிளையில் அமர்ந்து கொண்டான். அங்கிருந்து பள்ளிக்கூடத்தைப் பார்க்க முடிந்தது.
“அந்த மஞ்சள் புடவை டீச்சர் வருகிறாரா என்று கண்காணிக்க வேண்டும்” என்று ரஹீமிடம் கூறினான். பள்ளித் திடலைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். வகுப்பில் எல்லோரும் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்று அவனால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
தலைக்கு மேல் ஒரு விமானம் பறந்து சென்றது. நண்பகல் வெளிச்சத்தில் அதன் இறக்கைகள் பளிச்சிட்டன. “நான் விமானம் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். யாராவது ஒரு ஆசிரியர் அதைக் கற்றுக் கொடுத்தால் நான் பள்ளிக்கூடம் செல்வேன்!” என்றான் ரஹீம். “ஆனால் முட்டாள்கள்தான்...” என சம்பா தொடங்கினான். “....பள்ளிக்கூடம் போவார்கள்!” ரஹீம் சிரித்துக்கொண்டே முடித்தான்.
அடுத்த நாள் சம்பா பள்ளிக்கூட வாசலில் நின்று கொண்டிருந்தான். மதிய உணவுக்கான வரிசையில் மற்றவர்களோடு சேர்ந்து நின்று கொண்டான். மதிய உணவுக்குப் பிறகு எல்லோரும் பந்து பிடித்தும் கண்ணாமூச்சியும் ஆடினார்கள். திடீரென்று தூரத்தில் யாரோ “பாம்பு பாம்பு!” என அலறும் குரல் கேட்டது. சம்பாதான் அங்கு முதலில் போய்ச்சேர்ந்தான். “நானேடி” என்று அதற்கு பெயர் வைத்தான். அது ஒரு கண்டங்கண்டை நீர்க்கோலி.
கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னேறி வந்தார் சுனிதா டீச்சர். “ஜாக்கிரதை” என்று எச்சரித்தார். அவர் கண்கள் பாம்பைவிட்டு அகலவில்லை. டீச்சரின் கைகள் அச்சத்தில் சற்றே நடுங்கின. “இது விஷப் பாம்பில்லை” என்று சம்பா கூறினான். செடித்தண்டிலிருந்து பாம்பைத் தூக்கி லாவகமாக பிடித்துக் கொண்டான். மற்ற சிறுவர்கள் அவனைச் சூழ்ந்துகொண்டனர். “நான் இதுவரை பார்த்ததிலேயே மிக நீளமான நானேடி இதுதான்!”“ப்ச்! அரையடி நீளம்தான் இருக்கிறது!”
எச்சரிக்கை
சிறப்புப் பயிற்சி இல்லாமல் பாம்பைப் பிடிப்பது ஆபத்தில் முடியலாம்.
“கணக்கு வகுப்பில் இதை அளந்து பார்க்கலாமா?” சம்பா கேட்டான்.
“ஆபத்து எதுவுமில்லை என்று நீ உறுதியாக நினைத்தால்” கண்களில் கேள்வியோடு சுனிதா டீச்சர் சம்பாவைப் பார்த்தார். பாம்பின் தலையை டீச்சரிடமிருந்து தள்ளிப் பிடித்தான். டீச்சர் கவனமாக பாம்பின் உடலில் விரலை வைத்து பார்த்தார். அவர் சம்பாவை நம்பினார்.
“பாம்பை ஒட்டி ஒரு நூலையோ கயிறையோ வைத்துப் பார்ப்போம்” என்றார். “பாடம் முடிந்ததும் அதை விட்டுவிடலாம்.”
“உடும்பைக் கூட நாம் அளக்கலாமா?” என்று சம்பா கேட்டான். வெயிலில் காய்ந்தபடி உடும்புகள் தங்கியிருக்கும் இடம் அவனுக்குத் தெரியும். “நாம் ஏன் ராமுவின் வாலையும் அளந்து பார்க்கக்கூடாது?” என்று ரகு கிண்டலாக கேட்டான். எல்லோரும் இவ்வளவு உற்சாகம் அடையுமளவு அந்தப் பெட்டியில் என்ன இருக்கிறதென்று பார்ப்பதற்காக பள்ளிக்கூட நாய் ராமுவும் அங்கு வந்திருந்தது.
“ஆபத்து இல்லாத எதை வேண்டுமானாலும் அளந்து பார்க்கலாம்!” என்றார் சுனிதா டீச்சர்.
“வெட்டுக்கிளியை?” “கன்றுக்குட்டியை?”
அப்போதுதான் சம்பாவுக்கு ஞாபகம் வந்தது. “டீச்சர்! ரஹீமுக்கு விலங்குகள் பற்றி எல்லாமே தெரியும். ஆனால் அவனுக்கு அவற்றை அளக்கத் தெரியாது. அவன் பள்ளிக்கூடத்துக்கு வந்து படிக்கவேண்டும்...”
அப்போதுதான் ஒருநாள் அவன் விமானத்தை ஓட்டலாம். “ரஹீம் ஒருபோதும் வரமாட்டான்” என்று வனிதா ஏளனமாகக் கூறினாள். “முட்டாள்கள்தான் பள்ளிக்கூடம் போவார்கள் என்று சொல்வான்!”
“போய் உன் நண்பனை அழைத்து வா” என்றார் சுனிதா டீச்சர். ஒரு சிறிய வெட்கச் சிரிப்பை உதிர்த்துவிட்டு, மின்னும் கண்களோடு சம்பா ரஹீமைக் கண்டுபிடிக்க ஓடினான்.