நல்லதொரு காலைப்பொழுது. பசியோடு இருந்த மைனா, துள்ளி எழுந்தது. அதற்குப் பிடித்தமான உணவான சூரியனை சாப்பிட வேண்டிய நேரம் இது.
சூரியனையா? சூரியனை எப்படி சாப்பிட முடியும்?
ரொம்ப பெரியதாக
இருக்குமே…
ரொம்ப சூடாக இருக்குமே…
ரொம்ப தூரத்தில் இருக்குமே…
மைனாவிடம் ஒரு திட்டம் இருந்தது.
அந்தத் திட்டம் பொன்னிற சூரியக்கதிர்களை இலைகளின் வழியாக விழுங்கும் செடிகளிடமிருந்து ஆரம்பமாகிறது. அதிகாலை குளிர் காற்றோடும், சில்லிட வைக்கும் தண்ணீரோடும் சேர்ந்து சூரிய வெளிச்சம் இலைகளுக்கு சுவையான உணவாகிறது. கூடவே, மண்ணுக்கடியிலிருந்து தின்பண்டங்களும் கிடைக்கும்.
முட்கள் நிறைந்த கம்பளிப்பூச்சி ஒன்று முட்டையிலிருந்து வெளியேறி மெல்ல ஊர்ந்து வந்தது. ஒட்டுமொத்த செடியையும் தின்றுவிடுமளவுக்கு அது பசியோடு இருந்தது.ஒவ்வொரு இலையாக கடித்து, வாயில் திணித்துத் தின்று அது முட்கள் நிறைந்த பெரிய உருவமாக மாறியிருந்தது. கசப்புடன் கூடிய காரமாக இருந்த ஊதா நிற இலைகள்தான் அதற்கு மிகவும் பிடித்தமானவை.
கம்பளிப் பூச்சிக்கு வயிறு நிரம்பியதும் இலைக்கு அடியில் ஒளிந்துகொண்டு, உடலையும் சுருட்டிக் கொண்டது. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, இறக்கைகளுடன் வெளியே வரத் தயாராக இருந்துது! ஒரு அந்துப் பூச்சியாக மாறி!
அதன் பக்கத்தில் ஒரு கெக்கோ பல்லி, கண்களை நக்கி சுத்தமாக்கிக்கொண்டு உற்று பார்த்தது. அந்துப் பூச்சியின் இறக்கைகள் பார்க்க மிகவும் மென்மையாக இருந்தன!
இப்போதெல்லாம் அந்துப்பூச்சிகளால் இரவில் நிலவையும் நட்சத்திரங்களையும் பார்க்கமுடிவதில்லை. எனவே, அவை மின்விளக்குகளைச் சுற்றி கூடிவிடுகின்றன.
நிழலுக்கு நடுவே ஒளிந்திருக்கும் கெக்கோ பல்லிகள் எதற்காகவும் காத்திருக்கத் தேவையில்லை. அதன் நீளமான, பசையுள்ள நாக்குகளின் மூலம் அந்துப்பூச்சிகளை எளிதாகப் பிடித்துவிடுகின்றன.
இறக்கைகள், பல்லியின் வாய்க்குள் கரைய ஆரம்பிக்கின்றன. அடர்த்தியான கொம்புகள் தொண்டைக்குள் இறங்கும்போது உற்சாகத்தைத் தருகிறது. என்னவொரு ருசி!
மிருதுவான, மொறுமொறுப்பான, இழுவையான அத்தனை விதமான இறக்கைகளையும் காலைப்பொழுதுக்குள் பல்லி ருசி பார்த்துவிட்டது. சாப்பிட சாப்பிட அது பெரிதாகவும் உருண்டையாகவும் ஆகிவிட்டது. நகர முடியாமல் குட்டித் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டது.
மைனா தன்னுடைய மூக்கை உயர்த்தி அலகுகளை விரித்தது. அந்த பல்லியின் கால்கள் பார்க்க நல்ல மொறுமொறுப்பாக இருந்தன!
மொறுமொறுப்பான கால்கள்
மிருதுவான இறக்கைகள்
சாறு நிரம்பிய இலைகள்
சுவையான சூரிய ஒளிக்கீற்று
பட்டென்று பாய்ந்து பல்லியை அலகுகளில் கவ்வியது மைனா.
பல்லியின் வாலை மட்டும் கடைசியாக விழுங்க, அது சுழன்று, சிணுங்கியபடியே மைனாவின் வயிற்றுக்குள் இறங்கியது.
சூரியனை சாப்பிடும் மைனாவின் திட்டம் நிறைவேறியது.
ஆனாலும், பசி இன்னும் அடங்கவில்லை...
மைனாவுக்குப் பின்னால், பசியோடிருந்த ஒரு பூனையின் மீசை துடித்துக் கொண்டிருந்தது. அதுவும் சூரியனை சாப்பிடுவதற்கான நேரம் வந்துவிட்டது.
உணவுச் சங்கிலி
நீங்கள் எதைச் சாப்பிட்டாலும், அது சூரியனை சாப்பிடுவது போன்றதுதான். மனிதர்கள் உள்ளிட்ட எல்லா உயிரினங்களுக்கும் வளர்வதற்கு ஆற்றல் தேவை. ஆற்றல் உணவின் மூலமாகவே கிடைக்கிறது.
தாவரங்கள் தங்களுக்குத் தேவையான உணவை சூரிய ஒளியிலிருந்து பெற்றுக் கொள்கின்றன. நாம் காய்கறிகளையும், கம்பளிப்பூச்சி போன்றவை செடிகளின் இலைகளையும் சாப்பிடும்போதும் சூரிய ஆற்றலானது உயிரினங்களுக்குக் கிடைத்து விடுகிறது. நாம் மீன்களை சாப்பிடுவது போல், பல்லி அந்துப்பூச்சியை சாப்பிடுகிறது. ஒரு சில உயிரினங்கள் உணவுக்காக மற்ற உயிரினங்களைச் சார்ந்து இருக்கவும் வேண்டியிருக்கிறது.
ஆற்றலானது உணவின் மூலமாக உயிரினங்களுக்கு கடத்தப்படும் முறைதான் உணவுச் சங்கிலி என்று அழைக்கப்படுகிறது. இது சூரிய ஒளியிடமிருந்தே தொடங்குகிறது!
பசி என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. இலைகளை கம்பளிப் பூச்சிகளும், கம்பளிப் பூச்சிகளை பறவைகளையும், பல்லிகளை பூனைகளும் சாப்பிட விரும்புவது போல் சிலந்திகளும் அந்துப்பூச்சிகளை சாப்பிட விரும்புகின்றன. உணவுச் சங்கிலியானது ஒருங்கிணைக்கப்படும்போது கிடைப்பதுதான் உணவு வலை. உங்களைச் சுற்றியிருக்கும் விலங்குகளுக்கான உணவு வலையை வரையுங்களேன்!
உணவுச் சங்கிலியோ அல்லது உணவு வலையோ எங்கே முடிவடைகிறது? உணவுச் சங்கிலி தொடரில் கடைசியில் உள்ள உயிரினத்தின் வாழ்க்கை நிறைவடையும்போது அதன் உடலானது புழுக்களுக்கும் காளான்களுக்கும் மண்ணுக்கு அடியில் வாழும் பாக்டீரியாக்களுக்கும் உணவாகிறது. அவர்களுக்கு கிடைத்தது போக மிச்சத்தை தாவரங்கள் எடுத்துக்கொள்கின்றன. இயற்கையில் எதுவும் வீணாவதில்லை!
மாமரம்
ஆமணக்குச் செடி
வெட்டுக்கிளி
அந்துப் பூச்சி
பச்சை முட்கால் சிலந்தி
பல்லி
மைனா
காட்டுப் பூனை
மனிதர்கள்