naamatu super herokal

நமது சூப்பர் ஹீரோக்கள்

சூப்பர் ஹீரோக்கள், எப்போதும் தொப்பி அணிந்திருப்பதில்லை, அல்லது வாள் வைத்திருப்பதில்லை. எப்போதும் பறந்துகொண்டிருப்பதில்லை. சில சூப்பர் ஹீரோக்கள், முகக்கவசமும் பாதுகாப்பு அங்கியும் அணிந்திருக்கிறார்கள். சிலர், நாடிமானியும் வெப்பமானியும் வைத்திருக்கிறார்கள். சிலர், நுண்ணோக்கிகளால் பார்த்து ஆய்வுக்கூட அறிக்கையைச் சோதிக்கிறார்கள். நோய்த்தொற்று பரவும் காலத்தில், நாள்தோறும் ஹீரோக்களாக வலம்வருவோர் பற்றிய புத்தகம்.

- கொ.மா.கோ. இளங்கோ

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

உலகம் வித்தியாசமாகத் தெரிகிறது.

பெரியவர்கள் பலர் வேலைக்குச் செல்வதை நிறுத்திக்கொண்டனர்.

சிறுவர்கள் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திக்கொண்டனர்.

சிறுவர்கள், பூங்காக்களில் விளையாடுவதோ, நண்பர்களைச் சந்திப்பதோ இல்லாமல் போனது.

நோய்க்கிருமி ஒன்று காற்றில் கலந்திருந்தது.

அது, நாவல் கொரோனா வைரஸ் என்று அழைக்கப்பட்டது.

அதனால் பலர் கடும் நோய்வாய்ப்பட்டனர்.

அப்போது இந்த உலகைக் காப்பாற்ற

சூப்பர் ஹீரோக்கள் எழுந்து வந்தார்கள்.

சிலர் தீர்வு தேட முயன்றனர்.

சிலர் நோயாளிகளைக் கவனித்துக்கொண்டனர்.

மற்றும் சிலர், நோய்ப்பரவலைத் தடுக்க முயன்றனர்.

சூப்பர் ஹீரோக்கள் தொப்பி அணியவில்லை.

அவர்கள் பறக்கவில்லை.

அவர்கள், வாளும் சுருக்குக் கன்னியும் வைத்திருக்கவில்லை.

முகக்கவசமும் பாதுகாப்பு அங்கியும் அணிந்திருந்தனர். நாடிமானியும் வெப்பமானியும் வைத்திருந்தனர்.

அவர்கள், நுண்ணோக்கியால் பார்த்து ஆய்வுக்கூட  அறிக்கையைச் சோதித்தனர்.

பொதுமக்களின் இல்லங்கள்,

அண்டை வீடுகள், ஆய்வுக்கூடங்கள்,

மருத்துவமனைகள் என

எல்லா இடங்களிலும் அவர்கள் காணப்பட்டனர்.

சமூகநலப் பணியாளர்கள் அதிகாலையிலேயே பணிகளைத் துவங்கினர்.

அவர்கள், நகரங்களிலும் சிற்றூர்களிலும் வீடு வீடாகச் சென்றனர்.

அடிக்கடி கைகளைக் கழுவவும், வீட்டிலேயே பத்திரமாக இருக்கவும்,

வெளியில் செல்வதானால் முகக்கவசம் அணியவும்,

மற்றவர்களிடமிருந்து 2 மீட்டர் இடைவெளிவிட்டு நிற்கவும்

பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்கள்.

ஆய்வகப் பணியாளரும் மூலக்கூறு உயிரியலாளரும், நோயாளிகளின் உடல் திரவ மாதிரிகளைச் சேகரித்து சோதனை செய்தனர்.

ஆய்வக உபகரணங்கள், கணினி நிரல்கள் உதவியால் சோதனை முடிவுகளைப் பகுப்பாய்ந்தார்கள். அவற்றை முறையாகப் பதிவுசெய்து மருத்துவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

செவிலியர்கள்,  சிலநேரங்களில் வீட்டுக்குச் சென்றும், சிலநேரங்களில் மருத்துவமனைகளிலும் நோயாளிகளைக் கவனித்துக்கொண்டனர். நோயாளிகளுக்கு சரியான மருந்துகளைத் தந்தனர். நாடித் துடிப்பு, உடல் வெப்பநிலை, உடலில் உயிர்வாயுவின் அளவுகளைப் பரிசோதித்தனர். நோயாளிகள் சீக்கிரம் குணமடைய உதவினார்கள்.

நோய்க்கிருமி நுரையீரலைத் தாக்கியதாகத் தெரிந்தால், நுரையீரல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். நுரையீரல் நோய், சுவாசப் பிரச்சனைகள் உள்ள நோயாளிகளுக்குச் சிறப்பு சிகிச்சை அளித்தனர்.

மருத்துவ அறிக்கைகளைப் பார்த்து, சிகிச்சை முறையை முடிவு செய்தனர்.

வைராலஜிஸ்டுகள், மருத்துவர்களோடு இணைந்து ஆய்வு செய்தார்கள்.

நோய்க்கிருமி குறித்த ஆய்வுகள் நடந்தன. சிகிச்சைக்கான புதிய மருந்துகளை உருவாக்கினார்கள். மக்களை,

நோய்ப் பாதிப்பிலிருந்து காக்க தடுப்பூசிகளைக் கண்டுபிடித்தனர்.

நோய்க்கிருமி கண்டறியப்பட்ட நாள் முதல், தொற்றுநோய் நிபுணர்கள் துப்பறிவாளரைப் போல ஆய்வு நடத்தினர். தொற்று தொடங்கியது எங்கே?

தொற்று எப்படிப் பரவியது? போன்ற பல கேள்விகள் எழுந்தன.தொற்று வேகமாகப் பரவுவது ஏன்? அதனால் யாருக்கு அதிக ஆபத்து?

நோய்த் தொற்று பரவாமல் தடுப்பது எப்படி? என்றெல்லாம்  ஆராய்ச்சி செய்தனர்..

எதிர்காலத்தில் தொற்று பரவலைத் தடுக்க, அவர்களது ஆராய்ச்சி  பயனுள்ளதாக இருக்கும்.

பொதுமக்கள், பயம், கவலை, குழப்பம், கோபம், அல்லது சோர்வு அடைந்தபோதுஉளவியலாளர்கள் அவர்களிடம் பேசி சரியாக வழிநடத்தினர்.

நோயாளிகளைக் கவலையிலிருந்து மீட்கவும் மனப்பதட்டத்தை தணிக்கவும்

மனநல மருத்துவர்கள் மருந்தளித்தனர்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், தங்கள் அவசர ஊர்திகளில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

விநியோகப் பணியாளர்கள், உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று பட்டுவாடா செய்தனர்.

செய்தியாளர்கள், உலகம் முழுவதிலும் இருந்து நோய்த் தொற்று பற்றிய தகவல்களைச் சேகரித்துத் தந்தார்கள்.

தூய்மைப் பணியாளர்கள், குடியிருப்புப் பகுதியில் உள்ள கழிவுகளைச் சேகரித்தனர்.

சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் நீண்ட நேரம்வரை உழைத்தனர்.

பொதுமக்களைப் பாதுகாக்க, தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள்.

அவசர காலங்களில் நேரம் பாராமல் உதவ முன்வந்தார்கள். அவர்கள், நாள் தோறும் நமது சூப்பர் ஹீரோக்களே.