naan enge irukkiraen kandupidi

நான் எங்கே இருக்கிறேன்? கண்டுபிடி!

ஊர்வன மற்றும் பூச்சிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, சுற்றியுள்ள சூழலுக்குள், பார்வைக்குத் தெளிவாகத் தெரியாத வகையில் தம்மை மறைத்துக்கொள்கின்றன. "உருமறைப்பு" செய்யும் இவைகளை கண்டுபிடிக்கும் உத்தியை சொல்லும் புத்தகம் இது.

- Malarkody

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நான் காட்டுக்குள் இருக்கிற பெரிய மரங்களுக்கு நடுவில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பறக்கும் பாம்புகளைப் பார்த்தால் எனக்குப் பயம் – அவை என்னை விழுங்கி விடும் என்று!

நான்தான் பறக்கும் பல்லி. நான் எங்கே இருக்கிறேன்? கண்டுபிடி!

நான் மிக வேகமாக ஓடுவேன். எனக்குக் கொஞ்சம் கூச்ச சுபாவம். உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? என்னுடைய கழிவை நானே சாப்பிட்டுவிடுவேன்.

நான்தான் கருப்புக்கழுத்து முயல். நான் எங்கே இருக்கிறேன்? கண்டுபிடி!

என் உடம்பு மிகவும் சிறியது. ஆனால் கால்களோ மிகமிக நீளமானது. எனது வால் நடுவில் வெட்டி விட்டது போல் இருக்கும்.

நான் ஒரு இரட்டை வால் சிலந்தி. நான் எங்கே இருக்கிறேன்?

கண்டுபிடி!

தரையில் விழுந்து கிடக்கும் இலைச் சருகுகளுக்கு நடுவில் நான் ஒளிந்திருப்பேன். எனது இறக்கைகளில் விதவிதமான வடிவங்கள் உண்டு.

நான் ஒரு அந்துப்பூச்சி. நான் எங்கே இருக்கிறேன்? கண்டுபிடி!

என் முழு வாழ்க்கையையும் தோட்டத்து மரங்களில்தான் கழிப்பேன். சிறு பூச்சிகள் என் பக்கத்தில் வந்தால், தாவிப் பாய்ந்து அவற்றைப் பிடித்துத் தின்றுவிடுவேன்.

நான் ஒரு மரப்பட்டை பல்லி. நான் எங்கே இருக்கிறேன்? கண்டுபிடி!

பசுமையான சாறுமிகுந்த இலைகளைத் தின்ன எனக்கு விருப்பம். ஒரு இலை மட்டும் வினோதமான வடிவத்தில் இருக்கிறதா? அது நானாகவும் இருக்கலாம்.

நான் ஒரு வெட்டுக்கிளி. நான் எங்கே இருக்கிறேன்? கண்டுபிடி!

எனக்கு எட்டு கால்கள் உண்டு. ஆனால் நான் வலை பின்னுவதில்லை. நான் குடியிருக்கும் பூவின் நிறம் என் நிறத்தை ஒத்தே இருக்கும்.

நான்தான் நண்டு சிலந்தி. நான் எங்கே இருக்கிறேன்? கண்டுபிடி!

என்னால் மணிக்கணக்காக ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்திருக்க முடியும். என்னுடைய சத்தத்தை அதிகாலையிலும் அந்திசாயும் நேரத்திலும் கேட்கலாம்.

நான்தான் காட்டுப்பக்கி. நான் எங்கே இருக்கிறேன்? கண்டுபிடி!

நான் சாமி கும்பிடுவதைப் போல் எப்பொழுதும் எனது முன்னங்கால்களைத் தூக்கி மடக்கி வைத்திருப்பேன். ஏதோ அசைந்தாடுவது போலத் தெரிகிறதா? அது நானேதான்.

நான்தான் கும்பிடுப்பூச்சி. நான் எங்கே இருக்கிறேன்?

கண்டுபிடி!

நான் பெரும்பாலும் தண்ணீர் இருக்கும் இடத்திற்கு அருகில் இருப்பேன். ‘கொர்...கொர்…’ என்று நான் போடும் சத்தத்தைக்கேட்டாலே மழைக்காலம் வந்துவிட்டது என்று தெரிந்துகொள்ளலாம்.

நான் தான் தவளை. நான் எங்கே இருக்கிறேன்?

கண்டுபிடி!