ஓர் அழகான மாலை வேளையில் ஒரு ஆட்டு மந்தை* வீடு திரும்பிக் கொண்டிருந்தது. என்றும் போல் இன்றும் எல்லா ஆடுகளும் குதூகலமாக இருந்தன,
மட்கோ-வைத் தவிர.
*மந்தை - ஆடு/ மாடுகளின் கூட்டத்தை குறிக்கும்
அவள் இன்றும் வெளியே தான் படுக்க வேண்டும்.
ஒரு வாரமாக இதே கொடுமை தான் !
அவர்களுடைய பட்டியின்* புதிய வாசல் அவள் நுழைய
முடியாத அளவு குறுகலாக இருந்தது.
*பட்டி - பண்ணையில் ஆடுகள் இருக்குமிடம்
யோகி நண்பன்,
"நீ யோகா செய்து பாரேன்!
சீக்கிரம் மெலிந்திடுவே"
என்றான்.
மறுநாளே மட்கோ யோகா பயிற்சி செய்ய ஆரம்பித்தாள்.
பல நாட்கள் கடந்தன...
ஆனால் எந்த பலனும் இல்லை. மட்கோ அப்படியே தான் இருந்தாள்.
ஓட்டப்பயிற்சி செய்பவள், "நீ ஓடத் தொடங்கு. கண்டிப்பாக வேகமாக மெலிந்திடுவே." என்று யோசனை சொன்னாள்.
சரியென்று மட்கோ தினமும் ஓடிப் பார்த்தாள்.
நாட்கள் கடந்தனவே தவிர எந்த பலனும் இல்லை. அவள் அப்படியே தான் இருந்தாள்.
நீச்சலடிப்பவன் கூட தன் பங்குக்கு அறிவுரை தந்தான்.
"நீ நீந்திப் பழகு! இதில் மெலியாதவங்க உலகத்திலேயே இல்லை."
அவளும் நீந்தத் தொடங்கினாள்..
இந்த முறையும் ஏதும்
பலன் இல்லை. அவள் அப்படியே தான் இருந்தாள்.
தன் சைக்கிளை பகட்டாக ஓட்டிக்கொண்டு வந்த மின்னி, "சைக்கிள் ஓட்டு, மட்கோ! நீ மட்டும் மெலியலேன்னா நான் என் பேரை (பெயரை) மாத்திக்கறேன் " என்று சவால் விட்டாள்.
மட்கோ மனம் நொந்து போயிருந்தாள்.
"ஆளை விடுங்கப்பா! எல்லாம் செஞ்ச (செய்த) வரை போதும். எனக்கு வீட்டுக்குள்ளே போகணும்" என்று மனத்துக்குள் சலித்துக் கொண்டாள்.
வெகுநேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள்.
சிறிது நேரத்தில் தன் புதிய திட்டத்துடன் வீடு திரும்பினாள்.
அவளிடம் ஒரு பை இருந்தது.
அதனுள்...
....சில கருவிகள்!
மறுநாள் விடிந்த போது அவள் தனக்கு பிடித்த இடத்தில் ஆனந்தமாக தூங்கிக் கொண்டிருந்தாள்.
மற்ற ஆடுகளுக்கோ ஆச்சரியம் தாளவில்லை.
"நீ எப்படி உள்ளே வந்தே?" "உடம்பும் மெலிந்தது போலவும் தெரியலையே?" "என்னடா இது அதிசயம்?! எப்படி முடிந்தது?" என்றெல்லாம் மாறி மாறி கேட்டன.
அதற்கு மட்கோ,
"கதவு தான் கொஞ்சம் அகலமாகிவிட்டது. நான் நல்லாத்தான் (நன்றாகத்தான்) இருக்கேன். இப்படியே இருக்கத்தான் எனக்கு பிடிச்சிருக்கு"
என்று அமைதியாக கூறினாள்.