naanum parakkiren

நானும் பறக்கிறேன் !

சீனு தன் கனவில் பறக்கிறான் ! யாருடன் பறக்கிறான் ?

- Kirthiga Ravindaran

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இரவு நேரம் வந்தது.

அம்மாவின் இனிமையான தாலாட்டை கேட்ட சீனு, மெல்ல உறங்கினான்.

கனவுலகத்தை அடைந்தான்.

கனவுலகத்தை அடைந்த சீனு, ஒரு தோட்டத்தை அடைந்தான்.

அங்கே ஒரு அழகான பட்டாம்பூச்சியைக் கண்டான்.

"வணக்கம் சீனு !  வா, என்னுடன் பறந்து வா !" என்றது பட்டாம்பூச்சி.

சீனுவும், பட்டாம்பூச்சியுடன் பறந்தான் !

சிறு தொலைவு பறந்த சீனு, ஒரு பறவையைக் கண்டான்.

“வணக்கம் சீனு ! வா, என்னுடன் பறந்து வா !” என்றது பறவை.

சீனுவும் பறவையுடன் பறந்தான் !

இன்னும் சிறு தொலைவு பறந்த சீனு, ஒரு பெரிய பருந்தைக் கண்டான்.

“வணக்கம் சீனு ! வா, என்னுடன் பறந்து வா !” என்றது பருந்து.

சீனுவும் பருந்துடன் பறந்தான் !

சீனு உயரமாக பறந்தான். வானத்தை நோக்கி பறந்து, மேகங்களைத் தொட்டான். அங்கே, ஒரு விமானத்தைக் கண்டான்.

“வணக்கம் சீனு ! வா. என்னுடன் பறந்து வா !” என்றது விமானம்.

சீனுவும் விமானத்துடன் பறந்தான் !

இப்போது, சீனு வெகு உயரமாக பறந்தான் !

அங்கே, ஒரு ராக்கெட்டைப் பார்த்தான்.

“வணக்கம் சீனு ! வா, என்னுடன் பறந்து வா !” என்றது ராக்கெட்.

சீனுவும் ராக்கெட்டுடன் பறந்தான் !

மேலும் பறந்த சீனு, வானத்தில் பல நட்சத்திரங்கள் மின்னுவதைப் பார்த்தான்.

“வணக்கம் சீனு !” என்றது ஒரு நட்சத்திரம்.

“வா, எங்களுடன் பறந்து வா !” என்றது இன்னொரு நட்சத்திரம்.

திடீரென்று, நட்சத்திரங்கள் எல்லாம் ஆடத் தொடங்கின.

சீனு, திடீரென எழுந்தான். அவன் அம்மாவின் மடியில் தான் இருந்தான் !

“என்ன நடந்தது, சீனு ?”

“அது ஒரு நீண்ட கதை, அம்மா !”