பூமிமேல் ஒரு சிறுவன் நின்றுகொண்டிருக்கிறான். அவன் பெயர் மாதவ். அவன் இந்தியாவில் இருக்கிறான். அது நண்பகல். நல்ல வெளிச்சமாக இருக்கிறது. வெப்பமாகவும் இருக்கிறது. சூரியன் அவன் தலைக்கு நேர் மேலே இருக்கிறது.
மேலே, மேலே தலைக்கு ரொம்ப மேலே!
மாதவின் காலுக்குக் கீழே, நிலத்தைக் கடந்து, பூமியின் மறுபக்கத்தில்...
பூமத்திய ரேகை
தென் துருவம்
ஒரு சிறுமி நிற்கிறாள். அவள் பெயர் யாரெட்சி. அவள் மெக்சிகோவில் இருக்கிறாள். அது நள்ளிரவு நேரம். எங்கும் இருள். ஆனாலும் வெப்பமாக இருக்கிறது.
வட துருவம்
பூமியில், மாதவ் இருக்கும் பகுதியில் சூரியன் ஒளிர்கிறது.
யாரெட்சி பூமியின் மறுபக்கத்தில் இருக்கிறாள். அங்கே இருட்டாக இருக்கிறது.
யாரெட்சி ஏன் இன்னும் தூங்கவில்லை?
“மீ குஸ்தா மூச்சோ மிரார் லாஸ் எஸ்த்ரெயாஸ்*.”
*‘மீ குஸ்தா மூச்சோ மிரார் லாஸ் எஸ்த்ரெயாஸ்’ என்றால் ஸ்பானிய மொழியில் ‘எனக்கு விண்மீன்களைப் பார்ப்பதற்குப் பிடிக்கும்’.
சுழலும் திசை
மேற்கு
கிழக்கு
சுழற்சி அச்சு
ஆனால், இந்த பூமி எப்பொழுதும் சுற்றிச் சுற்றி சுழன்றுகொண்டே இருக்கிறது.
ஆறு மணிநேரம் கழித்து...
இந்தியாவில் மாதவின் தலைக்கு மேலே சூரியன் இல்லை. மேற்கில் சூரியன் மறைந்துகொண்டிருக்கிறது. விண்மீன்கள் மெல்ல எட்டிப்பார்க்கின்றன.
அதே நேரம், மெக்சிகோவில் யாரெட்சி கிழக்கில் சூரிய உதயத்தைக் காண்கிறாள். மெல்ல வானம் வெளுக்க, விண்மீன்கள் மறையத் தொடங்குகின்றன.
மாதவ், யாரெட்சியை தொலைபேசியில் அழைக்கிறான்.
“மாலை வணக்கம் யாரெட்சி! இல்லை, உனக்கு காலை வணக்கம்!”
“புவெனஸ் தியோஸ்*, மாதவ்! அதாவது உனக்கு புவெனஸ் நோச்சஸ்**! சூரியன் மறைவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயா?”
“ஆமாம்! அற்புதமான காட்சி! நீ, சூரியன் உதிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயா?”
“ஆமாம்! அற்புதமான காட்சி!”
*‘புவெனஸ் தியோஸ்’ என்றால் ஸ்பானிய மொழியில் ‘காலை வணக்கம்’ **‘புவெனஸ் நோச்சஸ்’ என்றால் ஸ்பானிய மொழியில் ‘மாலை வணக்கம்’
ஆறு மணிநேரம் கழித்து...
இந்தியாவில் நள்ளிரவு! மாதவ் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான்.
மெக்சிகோவில் நண்பகல். தலைக்கு மேலே சூரியன் ஒளிர்கிறது.
யாரெட்சி, இப்பொழுது இரவாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறாள்.
“எக்ஸ்த்ரான்யோ லாஸ் எஸ்த்ரெயாஸ்*.”
*‘எக்ஸ்த்ரான்யோ லாஸ் எஸ்த்ரெயாஸ்’ என்றால் ஸ்பானிய மொழியில் ‘நான் விண்மீன்களை நினைத்து ஏங்குகிறேன்.’
யாரெட்சி மாதவை தொலைபேசியில் அழைக்கிறாள். “ஹாய் மாதவ்” என்கிறாள். “யா... யாரு இது? நடுராத்திரியில்!” என்று தூக்கக் கலக்கத்தில் மாதவ் குழறுகிறான். “உனக்கு நள்ளிரவுதான், தெரியும். எனக்காகக் கொஞ்சம் வெளியே போய் வானத்தில் உள்ள விண்மீன்களைப் பார்க்கிறாயா?” “என்னது... என்ன பண்ணணும்?” “வெளியே சென்று விண்மீன்களுக்கு ஹாய் சொல்லு! அவர்களை நான் சீக்கிரமே பார்ப்பேன் என்று சொல்லு!” மாதவ் பால்கனிக்குச் சென்று வானத்தைப் பார்க்கிறான். “ஹாய் விண்மீன்களே! சீக்கிரமே உங்களைப் பார்ப்பேன் என்று யாரெட்சி சொல்லச் சொன்னாள்” என்கிறான். சொல்லிவிட்டு, மீண்டும் தூங்கச் செல்கிறான்.
ஆறு மணிநேரம் கழித்து...
மாதவ் தூங்கி எழுகிறான். கிழக்கில் சூரியன் எட்டிப்பார்க்கிறது. மெல்ல வானம் வெளுக்க, விண்மீன்கள் மறைந்து கொண்டிருக்கின்றன.
“டாட்டா!” என்றான் மாதவ்.
மெக்சிகோவில் யாரெட்சியின் தலைக்கு மேலே சூரியன் இல்லை. அது மேற்கில் மறைந்து கொண்டிருக்கிறது. மெல்ல விண்மீன்கள் எட்டிப் பார்க்கத் தொடங்குகின்றன.
“லாஸ் எக்ஸ்த்ரான்யே ஆ தோடோஸ்*” என்கிறாள் யாரெட்சி.
“உன்னுடைய செய்தி கிடைத்தது” என்று விண்மீன்கள் கண் சிமிட்டுகின்றன.
*‘லாஸ் எக்ஸ்த்ரான்யே ஆ தோடோஸ்’ என்றால் ஸ்பானிய மொழியில் ‘உங்களைக் காணாது ஏங்கிப் போனேன்!’
மாதவ், யாரெட்சி இருவராலும் ஒரே நேரத்தில் விண்மீன்களைக் காணமுடிவதில்லையே, ஏன்?
பூமி எப்போதும் தன் அச்சில் சுழன்றுகொண்டிருக்கிறது. அப்படிச் சுழலும்போது பூமியின் வெவ்வேறு பகுதிகள் சூரியனைப் பார்த்தபடி, அதன் ஒளியைப் பெறும். எந்தப் பகுதியில் சூரிய ஒளி விழுகிறதோ அங்கே பகல், மற்ற பகுதியில் இரவு. மெக்சிகோவும் இந்தியாவும் ஏறக்குறைய நேரெதிர் பகுதிகளில் இருக்கின்றன. அதனால்தான் மாதவுக்கு பகலாக இருக்கும்போது, யாரெட்சிக்கு இரவாக இருக்கிறது.