natpu paalam

நட்புப் பாலம்

மேரியும், ஜோசனாவும் அடுத்தடுத்த வீட்டில் வசிக்கும் உயிர்த்தோழிகள். அவர்களுக்கிடையே சண்டை வந்தபோது, எப்படி தன் தோழியை சமாதானப்படுத்துவது என்று மேரி யோசிக்கிறாள்.

- Rajam Anand

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் மேரி சங்மாவும், ஜோசனா மாரக்கும் உயிர்த்தோழிகள்.

ஒரு நாள் ஜோசனா பல நாட்களாக தானே முனைந்து செய்தஒரு இடுப்புப்பட்டியை, மேரியிடம் காட்டினாள்.

“இதை நான் என் அம்மாவுக்காகச் செய்தேன்.எப்படி இருக்கிறது? பார்” என்று ஆர்வத்தோடு கேட்டாள்.

“உன் அம்மா இதை அணிந்துகொள்வார் என்று தோன்றவில்லை. நானாக இருந்தால், இதையெல்லாம் அணியமாட்டேன்,” என்றாள் மேரி.

ஜோசனா விருட்டென்று எழுந்து அங்கிருந்து சென்றாள்.

அடுத்த நாள் காலை, ஜோசனாவுக்காக மேரி காத்திருந்தாள். தினமும் இருவரும் சேர்ந்துதான் பள்ளிக்கு நடந்து செல்வார்கள்.

ஆனால், ஜோசானா அன்று தனியாகப் போய்விட்டிருந்தாள்.

மதிய உணவாக, ஜோசனாவுக்குப் பிடித்த கருவாட்டுக் குழம்பு கொண்டுவந்திருந்தாள் மேரி.

ஆனால், ஜோசனா அன்று கரோலினுடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டாள்.

அன்று மாலை, மேரி ஜோசனாவுக்காக அவளது வீட்டில் காத்திருந்தாள். அவர்கள் இருவரும் மேரியின் தந்தையுடன் சேர்ந்து உருவாக்கியிருந்த பொம்மைக் கார்களோடு ஜோசனாவுடன் விளையாட விரும்பினாள்.

ஆனால், ஜோசனா வரவேயில்லை.

தோட்டத்தில் அவளும் ஜோசானாவும் சேர்ந்து செய்த பொருட்களை எல்லாம் மேரி கவனித்தாள்: ஒரு புல்லாங்குழல்,ஒரு பறவை வீடு மற்றும் ஒரு இரயில்வண்டிப் பாதை.

பொம்மைக் கார்களை ஓரமாக ஒதுக்கினாள் மேரி. இரண்டு பருமனான மூங்கில் துண்டுகளை எடுத்து, சிறிது இடைவெளிவிட்டு அவற்றை இணையாக வைத்தாள்.

பின்னர், ஒரு மெல்லிய மூங்கில் துண்டை அவற்றின் குறுக்கே சாய்வாக வைத்து, அதைத் தனது அப்பா செய்வது போல, ஒரு பிரம்பு நாரால் கட்டினாள்.

அதே போன்ற இன்னொரு துண்டை எடுத்து, முதலில் வைத்ததின் எதிர் திசையில் சாய்வாக வைத்துக் கட்டினாள்.

பின்னர், பருமனான மூங்கில்களின் குறுக்கே பல சிறிய மூங்கில் துண்டுகளை, ஒன்றை  அடுத்து  ஒன்றாக  சீரான இடைவெளி விட்டு அடுக்கி வைத்துக் கட்டினாள்.

பிறகு, கைகளில் இருந்த தூசியைத் தட்டிவிட்டு, தான் செய்த அமைப்பைப் பார்த்தாள். அங்கே இருந்ததோ, நேர்த்தியற்ற ஒரு நீண்ட செவ்வக வடிவம்! ஜோசனா இருந்திருந்தால், அதைச் செய்வதில் மகிழ்ச்சி அடைந்திருப்பாள் என நினைத்தாள்.

மேரி அந்த செவ்வக அமைப்பைத் தூக்கித் தோளில் வைத்துக்கொள்ள முயன்றாள்.

ஆனால் அவள் தடுமாறினாள்.

மீண்டும் முயற்சித்தாள். இப்பொழுது எளிதாக இருந்தது.

“எங்கே போகிறாய்?” என்று மேரியின் அண்ணன் சாமுவேல் கேட்டான்.

“ஜோசனாவின் வீட்டுக்கு,” என்றாள் மேரி.

ஜோசனா அவளது வீட்டில் தனது வழக்கமான வழக்கமான இடத்தில் அமர்ந்திருந்தாள்.

மேரி, ஜோசனா அமர்ந்திருந்த மரத்தின் அருகேயிருந்த ஒரு மரத்தில் தொற்றி ஏறினாள்.

“இங்கே வராதே, போ!” என்று முகம் சுளித்தாள் ஜோசனா!

சாமுவேலும் அம்மரத்தில் ஏறி, மேரியின் அருகில் அமர்ந்து கொண்டான். அவளிடம் ஒரு கயிற்றைக் கொடுத்துப் பிடித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, தானும் ஒரு கயிற்றைப் பிடித்துக்கொண்டான்.

சாமுவேலும் மேரியும் மூச்சையிழுத்துக்கொண்டு தங்கள் பலத்தையெல்லாம் திரட்டி அந்தச் செவ்வக அமைப்பை மேலே இழுத்தனர்.

கிர்ர்ர்‌ரிக்-கிர்ர்ர்‌ரிக் அப்பாடா! இப்பொழுது அதை படுக்கைவசமாக இரு மரங்களுக்கிடையே கிடத்தினர்.

மேரி அந்தப் பக்கத்திற்கு வந்து சேர்ந்தபோதும், ஜோசனா முகத்தைச் சுளித்துக்கொண்டேயிருந்தாள்.

அவளது கண்கள் மட்டும் மேரியையும், அந்தச் செவ்வக அமைப்பையும் மாறி மாறிப் பார்த்தன.

பின்னர், “நாம் இதன்மீது ஓடுவதற்கு ஒரு இரயில் வண்டி செய்யலாமா?”  என்று கேட்டுப் புன்னகைத்தாள் ஜோசனா.

இங்கிருந்து அங்கே

தனது தோழி ஜோசனாவிடம் செல்ல மேரி ஒரு பாலம் கட்டுகிறாள். அவர்களது பாலம் இருபுறமும் மரங்களில் பொருத்தப் பட்டிருப்பதால் அது கட்டை பாலம் அல்லது விட்ட பாலம் எனப்படும். இதுவே மிகவும் எளிதாக வடிவமைக்கக்கூடிய பாலமாகும். இத்தகைய பாலங்களை, இரும்புக்கம்பி மற்றும்சிமெண்ட் கான்கிரீட் பயன்படுத்திப் பெரியதாகவோஅல்லது  மரம் மற்றும் கற்களைக் கொண்டுச் சிறியதாகவோகட்டலாம்.

நீங்கள் ’கட்டை பால’த்தைப் பார்த்திருக்கிறீர்களா?